2018/06/23

புள்ளி - 4

    .
  . . .
. . . . .



◄◄ 1 2 3

        ந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவிலுக்கு போய் வருகிறேன். ஒவ்வொரு சனிக்கழமையும் நெடியோனைப் பார்த்து உள்ளுக்குள் உருகி வருகிறேன். என்னைச் சுற்றி இருக்கும் பிறரைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்கும். இத்தனை பக்தர்களில் எத்தனை பேர் அச்சுதனை அமரர் ஏறை பச்சை மேனியனை புருஷோத்தமனை நேரில் சந்தித்திருக்கப் போகிறார்கள்?

ஐம்பத்தாறு சனிக்கிழமைகள் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஐம்பது வாரங்கள்.

புள்ளி.

"என்னடா இது? வந்ததும் வராததுமா இப்படிப் பண்றே? எல்லாத்தையும் திருப்பி எடுத்து வந்துட்டே?" என்றார் அம்மா. எனக்காகக் கொடுத்திருந்த சாமி படங்கள்.. பரம்பரையாக வந்த சிவன் பார்வதி படம்.. குலதெய்வம் வெங்கடாஜலபதி படம்.. அம்மா பூஜை செய்த வெள்ளி கிருஷ்ணர் மகாலக்ஷ்மி குட்டி விக்ரகங்கள்.. தாத்தா வீட்டு திருநாங்கூர் பெருமாள் அச்சு.. ஸ்ரீசக்ரம்.. ருத்ராக்ஷம்.. என்று எல்லாவற்றையும் திருப்பினேன். அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது.. "என்ன இப்படி பண்றான் இவன்?" என்று பூஜையறை சுவற்றைப் பார்த்துக் கேட்டார்.

சுவரில் காஞ்சிப் பெரியவர் படம். ஜெயேந்திரர். "அந்தாளையே புடிச்சு உள்ளே போட்டாச்சு. அவரைக் கேட்டு என்ன பிரயோஜனம்?" என்றேன். அம்மாவுக்கு இன்னும் அழுகை வந்துவிட்டது. கோபமும்.

"என்னடா இது? இப்படிப் பண்றே? உனக்கே நல்லாருக்கா?" என்று அதட்டினாள் அக்கா.

"நான் என்ன பண்றேன்? எனக்கு நம்பிக்கையில்லை. நீங்களாவது உபயோகிக்கலாம்னு அமெரிக்காலந்து மூட்டை கட்டி எடுத்துட்டு வந்தேன்.. இல்லைன்னா அங்கயே குப்பைனு தூக்கிப் போட்டிருப்பேன்"

அம்மாவுக்கு என்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அந்த நிலையிலும் "இவனை ஒண்ணும் செஞ்சிடாதே அபிராமி" என்றாள்.

நான் குளிக்கத் தயாரானேன். "துண்டு இருக்கா.. குளிக்கணும்.. ப்ளைட்ல வந்து ட்ரெயின்ல வந்து பஸ்ல வந்து.. ரொம்ப களைப்பா இருக்கு.. உடம்பெல்லாம் நாறுது" என்று நான் குளியலறைக்குப் போனேன்.

"பயப்படாதம்மா.. அவனை இந்த மாதிரி பண்ண வச்சதே அபிராமி தான்.. " என்று என் அக்கா சொன்னது தெளிவாகக் கேட்டது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

புள்ளி.

லன்டனில் விமானம் தரை தொட்டதும் பைலட் ஒருவர் என்னைத் தேடி வந்தார். "உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. விமானம் நின்றதும் உங்கள் மனைவியுடன் பேசுங்கள்" என்று தொலை பேசியைக் காட்டினார். என்னிடம் செல்போன் இருக்கிறது என்றேன்.

"பதட்டப்படாமல் சொல்லு" என்றேன் மனைவியிடம்.

அவள் மறுமுனையில் அழுது கொண்டே சொன்னபோது திக்கென்றது. என் பெண்ணைக் காணோம். இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்துத் தேடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து நான் பயணத்தில்.. ஐயோ என்று அடித்துக் கொண்டேன்.

"என்ன ஆச்சு?" இப்போது நான் பதறினேன்.

தொடர்ந்து அழுதாள் மனைவி. "என் பெற்றோரை எனக்குப் பிடிக்கவில்லை" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்டாள் பெண். பதிமூன்று வயது. எங்கே போயிருப்பாள்? நண்பர்கள் வீட்டில் தேடியாகி விட்டது. அவளால் கார் ஓட்ட முடியாது. சைக்கிள் ஒட்டக்கூடத் தெரியாது. எங்கே போயிருப்பாள்? மறுமுனையில் போலீஸ் வந்தது. அவள் எழுதியிருந்த கடிதம் பற்றி கேட்டார்கள். துன்புறுத்தினோமா கொடுமைப்படுத்தினோமா.. என்று என்னிடம் விசாரித்தார்கள். முதல் நாளிரவு மைகேல்ஸ் காய்கறி மார்கெட் பக்கம் என் பெண்ணின் அடையாளங்களுடன் ஒரு சிறுமி வெள்ளை நிற பிக்கப் டிரக் ஒன்றில் ஏறியதாக யாரோ சொல்ல அதைப் பற்றி விசாரித்தார்கள். என் உறவினர் நண்பர்கள் யாரிடமாவது அப்படி பிக்கப் டிரக் இருக்கிறதா என்று கேட்டார்கள். பகீரென்றது. இல்லை இல்லை. என் பெண்ணைப் கண்டுபிடியுங்கள் என்று கெஞ்சினேன். அழுகை தொண்டையை அடைத்தது. உடனே திரும்பி வருவதாகச் சொன்னேன். "தைரியமாக இருங்கள்" என்றார்கள்.

பெண்பிள்ளை கடத்தலில் முதல் இருபத்து நாலு மணி நேரம் மிக முக்கியம். அதற்குள் முக்கிய திருப்பங்களோ தடயங்களோ கிடைக்கவில்லை என்றால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண்பிள்ளை கடத்தலில் உடனடியாக தொலைவாக இடம் மாற்றுவார்கள். பெண்பிள்ளை கடத்தலில் முதல் நாலைந்து நாட்கள் போல் அனேகமாக உள்ளூர் சுற்று வட்டாரத்தில் தனியிடத்தில் அடைத்து வைப்பார்கள். பனிரெண்டு வயதுக்கு மேலான சிறுமிகளுக்கு சுய நினைவுகள் சுத்தமாக அழியும் வரை தொடர்ந்து நாலைந்து நாட்களும் போதைப் பொருள் கொடுத்து... அதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்தைத் தீர்மானிப்பார்கள். பெரும்பாலும் வெளியூர் ஆசாமிகளுக்கு விற்று விடுவார்கள். இதைப் பற்றி ஆராய்ந்து கதை கதையாக எழுதியிருக்கிறேன். எல்லாம் இப்போது வந்து அச்சுறுத்தியது. அதுவும் என் பெண் எங்களைப் பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருக்கிறாள். அவளைக் கண்டுபிடித்தாலும் DCFS காரர்கள் பிடித்துக் கொள்வார்கள்.

லன்டன் ஏர்போர்ட்டில் தாறுமாறாக ஓடினேன். என் லக்கேஜ் கூட எடுக்கவில்லை. எப்படியோ போகிறது. எனக்கு என் பெண் வேண்டும். பத்திரமாக ஆபத்தில்லாமல் வீடு திரும்ப வேண்டும். அடுத்த இரண்டு அமெரிக்கன் விமானங்களில் சிகாகோவுக்கு இடமில்லை. நிலையை எடுத்துச் சொன்னேன். முதல் வகுப்பில் இரண்டு இடம் இருக்கிறது என்றார்கள். ஒரு டிக்கெட் ஆறாயிரம் டாலர். முதல் வகுப்பு டிக்கெட் எடுக்க காசில்லை. பெண் காணாமல் போய்விட்டாள் என்பதற்காக டிக்கெட் விலை குறைக்க முடியாது என்று சொல்லாமல் சொன்னார்கள். எனக்குத் தலை சுற்றியது. யுனைடெட் பிரிடிஷ் டெல்டா லுப்தான்சா என்று மாறி மாறித் தேடி கடைசியில் மறு நாள் காலை ஏர் லிங்கசில் எழுநூறு டாலருக்கு இடம் பிடித்தேன். பெண் காணாமல் போய்விட்டாள் என்றாலும் உடனடியாகக் கிடைத்த விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்க மனமில்லாமல் சுற்றியது மிக உறுத்தியது. பெண்ணை விட ஆறாயிரம் டாலர் பெரிதா? ஆறாயிரம் போகிறது என்று கிரெடிட் கார்ட் கொடுத்து எடுத்திருக்க வேண்டுமோ? இந்நேரம் சிகாகோ சேர்ந்திருக்கலாமோ? ஆறாயிரம் டாலர் என்றதும் என் தயங்கினேன்? என் பெண் முக்கியமில்லையா? 'என் பெற்றோர்களை எனக்குப் பிடிக்கவில்லை' என்று பெண் எழுதி வைத்தது நினைவுக்கு வந்தது. இத்தகைய உணர்வுச் சிக்கல்கள் யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

'என் பெண் கிடைக்க வேண்டும்.. கிடைக்க வேண்டும்.. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். யாரிடம் சொல்கிறேன்? அதைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுள் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

"கண்டிப்பாகக் கிடைப்பா. பயப்படாதீங்க" என்று ஸ்பஷ்டமாகத் தமிழில் குரல் வர, திரும்பினேன். பக்கத்தில் இருந்தவரை அதுவரை கவனிக்கவே இல்லை. "பயப்படாம போங்க.. எல்லாம் சரியாகிடும்" என்றார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

"உங்களுக்கு எப்படி?"

"எனக்கு எல்லாம் தெரியும்" என்றார். உடனே அமைதியுடன் சிரித்து "நீங்க அமெரிக்கன் ஏர்லைன் காரிகிட்டே நிலைமையை விவரமா சொன்னதை நானும் கேட்டேன்.. உங்க பின்னாடியே நின்னுட்டிருந்தேன்.. அதான்" என்று என் தோளை ஆதரவாகத் தொட்டு அழுத்தினார். சுரர்ர்ர்ரென்றது. "எல்லாம் சரியாகிடும்" என்றார் என்னை தீர்க்கமாகப் பார்த்து.

நிச்சயம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

புள்ளி.

"நாளைக்குப் பணத்தை ரிலீஸ் பண்ணுகிறோம்" என்றான் வசீம்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மூன்று வருடங்களாக சவுதியில் கைதி போல் வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிமமதி. ப்லாக் நண்பரை நம்பிப் பணம் கொடுத்துத் தொடங்கிய தொழில். என்னையும் எமாற்றி வாடிக்கைக் காரரையும் ஏமாற்றி... சவுதி அரசாங்கமே வாடிக்கை என்றால் சும்மா விடுமா? நண்பர் அவசரமாக என்னை அழைத்து நீங்கள் தான் எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பதற மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வந்தவன் ஏறக்குறைய கைதி போல் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றி இருக்கிறேன்.

உள்ளே காலடி வைத்ததும் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டுள் என்பது புரிந்தபோது தாமதமாகி விட்டிருந்தது. உள்ளே வந்து விட்டிருந்தேன். அமெரிக்க பாஸ்போர்ட் இருந்ததால் இரண்டு மாதங்களில் கொஞ்சம் கனிவுடன் நடத்தினார்கள், இல்லையெனில் நண்பர் செய்த மோசடிக்கு என்னை ஏதாவது செய்திருக்கலாம். என்னதான் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் பார்க்க இந்திய லட்சணம் தானே? அதுவும் தமிழ்க் கறுப்பு. சவுதியில் இந்தியருக்கு மதிப்பு பிலிபினருக்கு கொஞ்சம் உயர்வான மட்டில், அவ்வளவே. மத்தியக் கிழக்கு முழுதும் அப்படியே என்று நினைக்கிறேன்.

வீட்டுக்கு வந்தேன். டிரைவர் கண்ணன் மட்டும் இல்லையென்றால் எனக்கு இன்னும் கடினமாக இருந்திருக்கும். தினம் என்னை ரிபைனரி-வீடு என்று மேலும் கீழும் சாரதியாக இருந்து.. வெள்ளி சனியில் தயங்கி தயங்கிப் பழகி.. ஒரு பிடிப்பில் இருந்தான். "கண்ணன்.. எல்லாம் முடிஞ்சிருச்சு.. நாளைக்குப் பணம் வந்ததும் சவுதிக்கு ஒரு சலாம்" என்றேன். "நல்லது சார்.. ரொம்ப சந்தோசம் சார்" என்று சிரித்தான்.. கன்னத்தில் குழி விழ அவன் சிரிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.

உடனே சென்னையில் ப்லாக் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன். "என்னை மன்னிச்சிருங்க.. உங்களை இப்படி வம்புல மாட்டிவிட எண்ணியதேயில்லை.. நல்லவேளை முடிச்சிருச்சே.. ரொம்ப சாரி துரை.." என்றார்.

"விடுங்க.. விடுங்க.. மூணு வருசமாயிருச்சு விடுங்க.. ஏதோ செஞ்சுட்டீங்க.. ஐம் ஓவர் இட்" என்றேன்.

மறுநாள் பணம் கிடைக்கவில்லை. "நீங்க கடன் வாங்கினதா பேங்குல முடக்கிட்டாங்க" என்றான் வசீம்.

"வாட்?" அதிர்ந்தேன். "என்னமோ பிழை நடந்திருக்கு.. யார் கிட்டே கடன்?"

"அப்தப் சையத் பைசல்னு ஒருத்தர் புகார் கொடுத்திருக்கார். ஜட்ஜ்மென்ட் வாங்கி பேங்குல சமர்ப்பிச்சிருக்காரு. சவுதி நாட்டவருன்றதால அவருக்கு முன்னுரிமை இருக்கு"

விழித்தேன். வசீம் தொடர்ந்தான். "அது மட்டுமில்லே.. கடன் தொகைல மிச்சம் எட்டாயிரம் ரியால் நீங்க தர வரைக்கும் ட்ரேவல் பேன் பண்ணியிருக்காங்க.. நீங்க வெளியே போக முடியாது"

எனக்கு தலை சுற்றியது. நடுங்கினேன். என்ன இது, புதுக் கதை?

வசீமிடம் அப்தப் பற்றிய முழு விவரம் வாங்கிக் கொண்டு கண்ணனுடன் விரைந்தேன். அப்தப் விவரமாகச் சொன்னார். ப்லாக் நண்பர் இந்த கான்ட்ராக்ட்டைக் காட்டி லெட்டர் அப் கிரெடிட் பாணியில் சுத்தமாக வழித்து எடுத்து கடன் வாங்கியிருந்தார். தனிக் கடன். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்தப்பிடம் சொல்லி பார்த்தேன் "ஐயா.. இது நான் வாங்கின கடன் இல்லை.."

அப்தப் விடவில்லை. "இந்த கான்ட்ராக்ட் பேர்ல கடன் கொடுத்தேன்.. கான்ட்ராக்ட் பணம் கடன் திருப்பத்தான் எடுக்குறேன்"

ப்லாக் நண்பர் (?) மறுபடி மன்னிப்பு கேட்டார். இந்த முறை அழுதார். "உங்க கால் செருப்புக்கு கூட நான் சமானம் கிடையாது துரை.. உங்களை எப்படி ஏமாத்தியிருக்கேன்.. எனக்கு மன்னிப்பே கிடையாது.. எனக்கு வெட்கமா இருந்ததால உங்க கிட்டே மறைச்சுட்டேன்.. எனக்கு விமோசனமே கிடையாது.. ஆனா என்னை நம்புங்க.. நான் எப்படியாவது இந்தப் பணத்தைத் திருப்பிடுவேன்.."

"எப்படிங்க? எப்படித் திருப்புவீங்க? இதென்ன ஆயிரமா பத்தாயிரமா ஒரு லட்சமா திருப்பித் தரேன்னு நீங்க சொல்றதுக்கு? நானும் நம்புறதுக்கு?"

ஒரு வாரம் அலைந்தேன். பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைத்தால் போதுமென்றாகிவிட்டது. கண்ணன் என்னிடம் "சார்.. இந்த ஊர்ல வாஸ்தா இருந்தா எல்லாமே நடக்கும் சார்.. நான் ஒருத்தர் கிட்டே கூட்டிப் போறேன்.. நூறு இருநூறு ரியால் கொடுத்தா விஷயத்தை முடிச்சுக் கொடுத்துருவாரு.." என்றான். நம்பிக்கையில்லாமல் சரியென்றேன்.

எங்கேயோ சுற்றி கவனமாக என்னை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றான் கண்ணன். என்னை வரவேற்றவருக்கு அறுபது வயதாவது இருக்கும். முகம் நிறைய புன்னகைத்தார். உள்ளே அழைத்து உட்கார வைத்து டீ கொடுத்தார். சிறிய தட்டில் அல்வா போல் ஒரு இனிப்பு. "சாப்பிடுங்க" என்றார். "மஜ்தூல் பேரீச்சம். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும்.. நபிகள் கைப்பட விதைச்ச மரத்துலருந்து வந்தது.. மக்காவுக்கு பத்து கிலோமீடருல இருக்கு தோப்பு"

என் விவரங்கள் எல்லாம் கேட்டார். உடனே நாலைந்து பேருக்கு செல் போன் செய்தார். பிறகு அமைதியாக "உங்க கான்ட்ராக்ட் கடன் பணம் திரும்ப வராது. ஆனா அந்த எட்டாயிரம் ரியாலை தள்ளுபடி செய்யுறதா சொல்லிட்டாரு அப்தப். உங்க பயணத் தடை நாளைக்கு நீக்கிடறதா பேங்குல சொல்லிட்டாங்க.. என்னால இதான் பண்ண முடியும்"

என்ன செய்வதென்று புரியவில்லை. மூன்று வருட உழைப்பு வீணான துடிப்பு. ப்லாக் எழுத்தின் திறனை வியந்து எந்தப் பொறுக்கியையோ நம்பிக் கடன் கொடுத்த அசட்டுத்தனம். அதைத் தொடர்ந்து ஏமாந்த முட்டாள்தனம். எல்லாம் என்னைப் புரட்டி எடுத்தது.

"போகுது விடுங்க.." என்றார் பெரியவர். "நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்" என்று ஆதரவாக என் தோளை அழுத்தினார். "இந்தப் பணம் உங்களது இல்லை.. யாருக்கோ நீங்க பட்ட கடன்"

"இல்லிங்க.. எப்படி.."

"உங்க நண்பரை மன்னிச்சு நிலைமையை ஏத்துக்கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் போங்க.. எல்லாம் உன்னதமா இருக்கும்"

நீண்ட பெருமூச்சு விட்டேன். ப்லாக் நண்பரை மன்னித்தேன். சட்டி சுட்டதடா. மெள்ள எழுந்தேன். பெரியவருக்குத் தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்தேன். சிரித்தபடி வாங்கிக் கொண்டார். "கொஞ்சம் இருங்க" என்று உள்ளே சென்றார். திரும்பி வந்து "நிறைய இழந்துட்ட வருத்தம் உங்க முகத்துல தெரியுது. இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செஞ்சவங்களை மன்னிச்ச பெரிய மனசு உங்களுக்கு நிம்மதியையும் உன்னதத்தையும் கொடுக்கும்" என்று ஒரு சிறிய உருள் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். "விலை மதிப்பில்லாத ஒன்றை உங்களுக்கு பரிசா கொடுக்க விரும்பறேன். எடுத்துக்குங்க"

பிரித்தேன். திடுக்கிட்டேன். என் மனைவியின் உறவினர் சாகும் தறுவாயில் எனக்குக் கொடுத்தப் பிள்ளையார். அதே வில்லேந்திய பிள்ளையார். எத்தனை வருடங்களுக்குப் பின்.. அதுவும் இங்கே..

திகைப்பு அடங்காமல் அவரை ஏறிட்டேன். "இது எப்படி உங்க கிட்டே? ஆச்சரியமா.. நம்பவே முடியலியே?"

பெரியவர் என்னை வழியனுப்பி "நம்ப முடியாதது எதுவுமே இல்லை.." என்றார். தயங்கி என்னை நேராகப் பார்த்து "..நம்பினால்" என்றார்.

என் மிக அருகே வந்து, "நம்புறீங்க இல்லையா?" என்றார் என் தோளை அழுத்தி. பிறகு கண்ணனை அழைத்து "இவரை ஜாக்கிரதையா சேர்க்க வேண்டிய இடத்துல கொண்டு போய் சேர்த்துடு" என்றார்,

வீட்டுக்கு வந்ததும் உறைத்தது. பெரியவர்.. சவுதியில் கால் வைத்த ஐந்தாம் நிமிடம் என்னுடன் உரையாடிச் சேர்ந்து தொடர்ந்து முடிவில் பெரியவரைப் பார்க்க அழைத்துச் சென்ற கண்ணன்.. திரும்பக் கிடைத்த வில்லேந்திய பிள்ளையார்.. "இவரை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துடு" என்ற பெரியவரின் சொற்கள்.. என் டிரைவரின் பெயர் கண்ணன் என்பது கூட ஒரு பெரிய விஷயமாக முதல் முறையாகத் தோன்றியது. எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நானென்றான்.

புள்ளி.


<இன்னும் உண்டு>


*DCFS: Department of Children and Family Services - பிள்ளை வளர்ப்பு முறைகேடுகளை விசாரணை செய்யும் அரசு மையம்.