2018/06/10

புள்ளி - 2

    .
  .


◄◄ 1


        தாம்பரம் பட்ஸ் ஓட்டல் வெளிச்சுவற்றில் ஒரு சிறிய பிள்ளையார் சிலை பதித்து வைத்திருப்பார்கள். ஒரு கதர் துண்டை உடுக்கையாகவும் பட்டையாக விபூதியும் ஒரு எருக்க மாலையும் அணிவித்து பிள்ளையாரை அவர் பாட்டுக்கு விட்டிருப்பார்கள். நான் சென்ற போதெல்லாம் ஒருவராவது கும்பிட்டோ தேங்காய் உடைத்தோ பார்த்ததில்லை. யார் இவருக்கு உடையும் அலங்காரமும் செய்கிறார்கள் என்பதும் அறிந்து கொண்டதில்லை.

என் அப்பாவின் கொலை வழக்கு தொடர்பாக அடிக்கடி செங்கல்பட்டு போவேன். அப்படியே சில நேரம் புதுப்பட்டினத்திலிருந்த என் மாமா வீட்டுக்குப் போய் ஒரு நாள் தங்கிவிட்டு வருவதுண்டு. வரும் வியாழனன்று முக்கியமான திருப்பம் என்று என்னை ஒரு நாள் முன்பே வரச்சொல்லியிருந்தார் வக்கீல். நான் போவது தெரிந்து நண்பன் ஸ்ரீதர் உடன் வருவதாகச் சொன்னான். செங்கல்பட்டில் அவன் அத்தை வீடு இருந்தது. அவனுக்கு திருக்கழுகுன்றம் போகப் பிடிக்கும். எனக்கு அவன் அத்தை மகளைப் பார்க்கப் பிடிக்கும். எங்களை விட நாலு வயதோ என்னவோ மூத்தவள், பார்க்க அட்டகாசமாக இருப்பாள். இதான் சாக்கு என்று வீட்டில் கொஞ்சம் அதிகம் சில்லறை வாங்கிக் கொண்டு புதன் மதியமே தாம்பரத்துக்கு நடை கட்டினோம். வெயிலாவது கியிலாவது? பொருட்படுத்தியதே இல்லை. பட்ஸ் ஓட்டலில் வெட்டிவிட்டு அங்கிருந்து வண்டலூரில் மாலை சுப்ரமணிய ராஜுவின் பேச்சு ஒன்றைக் கேட்டுவிட்டு அங்கிருந்து செங்கல்பட்டுக்கு பஸ் பிடிக்கத் திட்டம். ஸ்ரீதருக்கு இந்த எழுத்தாளர் வட்டம் கிட்டம் எல்லாம் ரொம்ப இட்டம். பட்ஸ் ஓட்டலில் பணம் கட்டுவதாக வேறே சொல்லியிருந்தானா, குஷியாகக் கிளம்பினேன்.

தாம்பரம் சேனடோரியம் அருகே நடந்து வந்த போது என்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பது போலிருந்தது. என் நண்பன் ரவியின் மாமா பையன் பாலுவைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். இதே சேனடோரியம் மருத்துவமனையில் தான் கொடூரமாக இறந்தான். 'என்ன இது.. பாலுவின் குரல் மாதிரி இருக்கிறதே?' என்று எண்ணியபடி ஸ்ரீதரைப் பார்த்தேன். பாலு விவகாரத்துக்குப் பிறகு ஸ்ரீதர் என்னுடன் நட்பைத் துண்டித்துக் கொண்டு சமீபத்தில் தான் ராசியாகி இருந்தான். அதுவும் ஒரே கல்லூரயில் சேர்ந்ததே காரணம். பாலுவைப் பற்றிப் பேச்செடுக்கத் தயக்கமாக இருந்தது. நடந்தேன். தொடர்ந்து யாரோ அழைப்பது போலவே இருந்தது. ராமர் கோவில் அருகே வந்ததும் ஸ்ரீதர் சட்டென்று என்னை இழுத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான். பதட்டத்துடன், "டே.. என்னை யாரோ தொட்டு தொட்டுக் கூப்பிடுறாப்புல இருந்துதுடா" என்றான். "கோவில்ல கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போவோம்"

"என்னையும் யாரோ கூப்பிடுறாப்புல இருந்துச்சுடா.. நான் தான்.."

"பாலு தானே? எனக்குத் தெரியும்டா"

"சீ சீ.. அதெல்லாம் இல்லடா.. அவன் போய் மூணு நாலு வருஷம் இருக்குமா? சரி. சரி.. நீ வேணா கும்பிட்டு வாடா.. போவோம்.. பசிக்குது."

கோவிலில் நடை சார்த்தியிருந்தார்கள். ஐந்து மணிக்கு மேல் தான் திறப்பார்கள். அவன் அவசரமாக பிரபந்தப் பாசுரம் நாலைந்து சொல்லிவிட்டு 'வாடா' என்று என் தோள் மேல் கை வைக்கப் போனவன் திடுக்கிட்டு "என்னடா இது?" என்றான். என் சட்டை தோள்பட்டை அருகே சிவப்பு நிறத்தில்.. சட்டையைக் கழற்றினேன்.. வில் போல ஒரு வடிவம்.

"நீ பிரகாரம் சுத்துறப்ப இங்க சாஞ்சிட்டிருந்தனா.. ஒட்டியிருக்கும்" என்று ஒரு தூணைக் காட்டினேன்.

ஸ்ரீதர் மசியவில்லை. "அடப்போடா.. தோராயமா சாஞ்சா இப்படி தெளிவா சித்திரம் வருமாடா? இது அசல் கோதண்டம்டா. ஞாபகம் இருக்கா.." என்று ஒரு கணம் என் வாயைப் பொத்தி விலகி, "பேர் சொல்லாதே.. இப்பத்தானே பேசிட்டிருந்தோம்..? பதட்டப்பட்டோம்ல? இது ராமர் கோவில்.. நான் பாசுரம் சொல்லி முடிச்சதும் பாருடா.. துணைக்கு அனுப்பியிருக்கார்டா"

நான் நெளிந்தேன். "என்னடா இது.. ராமராவது.. கோதண்டமாவது.. இது அழுக்கு சட்டைடா டேய்.."

"லூசு.. சட்டையைக் கசக்காதடா.. இதப்பாரு இன்னும் அப்படியே இருக்கு. இது ஒரு குறி.. அப்படியே போட்டுக்க.. துணைக்கு கோதண்டம் வரும்"

"இல்லடா.. நீயே வச்சுக்க" என்று அவனிடம் கொடுத்தேன். பையிலிருந்த மாற்றுச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன். ஸ்ரீதருக்கு என் செயல் பிடிக்கவில்லை. சட்டையை வாங்கிக் கவனமாக இடுப்பில் சுற்றிக் கொண்டான் - வில் வெளியே தெரியும் படி. தாம்பரம் வரை என்னுடன் அதிகம் பேசவில்லை. பட்ஸ் ஓட்டல் வந்ததும் என்னைப் பார்த்தான். சிரித்தான். "சாரிடா.. நீ சொல்றது சரிதான்.. எனக்குத்தான் குழப்பம்.. கோதண்டமாவது.." என்று என்னிடம் சட்டையைத் திருப்பினான்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே வந்த ஒரு அரை டிராயர் பிச்சைக்காரச் சிறுவன் எங்களிடம் கையேந்தினான். என்னிடமிருந்த சில்லறையிலிருந்து கவனமாக மூன்று பைசா நாணயம் ஒன்றைப் பொறுக்கி எடுத்து அவனிடம் கொடுத்தேன். என்னிடம் இருந்த சட்டையை.. என்ன தோன்றியதோ.. அவனுக்குத் தரப் போனேன்.. "இந்தாப்பா சட்டை போட்டுக்குறியா? பெரிய சட்டை.. பரவாயில்லையா?"

"இருடா.. எதுக்குடா" என்று ஸ்ரீதர் தடுத்தான். அதற்குள் என்னிடமிருந்து சட்டையைப் பிடுங்கிக் கொண்டு தாவி ஓடி பட்ஸ் ஓட்டல் சுவர் பிள்ளையார் இடுப்பில் இருந்த துண்டையும் உருவிக் கொண்டு சடுதியில் மறைந்து விட்டான் சிறுவன். திகைத்தோம். பட்ஸில் கணிசமாக வயிற்றுக்கு உணவீய்ந்து பிறகு சுப்ரமண்யராஜு தயவில் செவிக்கும் சற்று ஈய்ந்து முடித்து ஒன்பது மணி வாக்கில் நாங்கள் தாம்பரம்-செங்கல்பட்டு மொபசல் வண்டி ஏறிய நேரத்தில் எல்லாம் மறந்து விட்டோம். செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இறங்கிய போது இரவு பதினொரு மணியாவது இருக்கும். பழைய பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீதர் அத்தை வீடு பத்து நிமிட பொடி நடை. சுறுசுறுப்பாக நடந்தோம். பத்தடி நடந்திருப்போம். ஸ்ரீதர் என் கைகளைப் பிடித்து நிறுத்தினான். "டே.. அங்க பாருடா.." என்று தெருவின் எதிர்புறம் காட்டினான். "உன் சட்டையைப் பிடுங்கிக் கிட்டு ஓடின பையன்.."

பார்த்தேன். அப்படித்தான் தோன்றியது என்றாலும் மறுத்தேன். "அதெப்படிறா முடியும்? சின்னப் பையன்.. பிச்சைக்காரன் வேறே.."

"டே.. அவனே தான்.. நம்மளைப் பாத்து வரான்.. போவோம் வா" என்று வேகமாக நடக்கத் தொடங்கினான். நானும் விரைந்தேன். ஸ்ரீதர் வீட்டு முனையிலிருந்து திரும்பிப் பார்த்த போது அந்தப் பையன் போலவே உருவம் தொலைவில் நின்றபடி கை அசைத்தது. அடுத்த கணம் நானும் ஸ்ரீதரும் ஓட்டம் பிடித்து ஸ்ரீதர் வீட்டுக்குள் நுழைந்து நின்றோம். விவரம் சொன்னதும் சிரித்த ஸ்ரீதரின் அத்தை "இது கூட தெரியலியா? உனக்கு துணையா வீடு வரைக்கும் கொண்டு விட்டு டாடா காமிச்சுட்டும் போயிருக்கான் ஸ்ரீராமன். உள்ளே வந்து பெருமாளை சேவிச்சுட்டு படுங்கோ ரெண்டு பேரும்" என்றார். ஸ்ரீதரின் அத்தை மகளை சைட் அடிக்க முடியவில்லை.. தூங்கிவிட்டிருந்தாள். கை முகம் கழுவிக் கொண்டு அத்தை சொன்னபடி உள்ளேயிருந்த ராமர் படத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுப் படுக்கப் போனோம். ராமர் படத்திலிருந்த வில் உறுத்தியது. படத்தில் பளிச்சென்று வில் மட்டும் தெரிந்தது. சட்டையில் இருந்தாற்போல். அதே வடிவம். ஸ்ரீதரைக் கேட்க நினைத்து அடக்கிக் கொண்டு படுத்தேன்.

கோர்ட் விவகாரம் முடிந்து ஸ்ரீதர் வீட்டுக்கு நான் திரும்பிய போது மணி ஒன்றிருக்கும். "டே.. நான் எங்க மாமா வீட்டுக்குப் போறேன்.. திருக்கழுகுன்றம் வரை நடந்து அங்கிருந்து புதுப்பட்டினம் பஸ் பிடிப்பேன்.. வரேன்.." என்றேன்.

"திருக்கழுகுன்றமா? இருடா நானும் வரேன்" என்று உடன் கிளம்பினான். அவன் வருவானென்று தெரியும். "அத்திம்பேர்.. உங்க சைக்கிளை எடுத்துண்டு போறேன்" என்று கூவினான். "வாடா, சைக்கிள்ள போவோம்"

கோவிலுக்கு அரை கிலோமீடர் கிழக்கே ஒரு பெரிய குளம்* உண்டு. சிறிய ஏரி எனலாம். கோவிலுக்கு வரும் கழுகு இந்தக் குளத்தின் நடுவில் மூழ்கிக் குளித்து விட்டு வரும் என்பார்கள். கரையில் நிறைய மரங்கள் உண்டு. மரத்தில் ஏறி அங்கிருந்து குளத்தில் தாவிக் குதிப்பது சுவாரசியமான குதூகலம். "குளிக்கலாம்டா" என்றான். ஆளுக்கொரு மரத்தைப் பிடித்துக் கொண்டு சர் சர்ரென்று மரமேறிக் குதித்தோம்.. ஸ்ரீதர் என்னை விட வேகமாக ஓடி நீந்துவான். நான் நாலாவது முறை மரம் ஏறுவதற்குள் அவன் குதித்து எழுந்து நீந்திக் கொண்டிருந்தான். நான் குதிக்கத் தயாராகும் நிலையில் திடீரென்று ஸ்ரீதர் நீரில் மூழ்குவதைக் கவனித்தேன். யாரோ அவனை உள்ளே இழுப்பது போல். இழுத்து இழுத்து அடிப்பது போல். ஸ்ரீதருக்கு எப்போதாவது வலிப்பு போல் வரும். கையில் ஒரு இரும்புக் கவசம் வைத்திருப்பான். ஒருவேளை.. சட்டென்று குதித்தேன். அவனை நோக்கி நீந்தினேன். அவனைப் பிடிக்கபோன என்னை உதறித் தள்ளினான். நான் எதிர்பாரா விதமாக என்னை உள்ளே இழுக்கத் தொடங்கினான். திமிறி வெளிவந்து அவனை மேலே இழுக்கப் போனேன். அதற்குள் ஸ்ரீதர் மயங்கி விடுவான் போல் தொய்ந்து போயிருந்தான். 'ராமா' என்று மனதுள் கூவினேன். . எனக்கு அவனை மேலே இழுக்கும் வலு குறைந்து கொண்டிருந்தது. தெரிந்த கடவுள் பெயரெல்லாம் அழைத்தேன். மூச்சு முட்டியது. கண்களில் தளர்ச்சி. ஒரு நிமிடம் போலிருக்கும். இரண்டு பேர் நீரிலிருந்து எங்களை மேலே இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

கரையில் கொஞ்சம் சுதாரித்த பின் எங்களைக் காப்பாற்றியவருக்கு நன்றி சொன்னோம். "ரெண்டு பேரு இழுத்தாப்புல இருந்துச்சே?"

அவர் சிரித்து "நீங்க ரெண்டு பேராச்சே? அப்படித்தான் இருக்கும்"

"சார்.. உங்களுக்கு ஏதாவது.. எங்க கிட்டே ரெண்டு ரூவா இருக்கு.."

"உங்கிட்ட வாங்க வேண்டியது நிறைய இருக்கு தேவையானா வாங்கிக்குவேன்.. ரெண்டு பேரும் பத்திரமா வீடு சேருங்க" என்று மரத்தடியில் இருந்த தன் சட்டையை அணியத் தொடங்கினார்.

எனக்குப் புரியவில்லை.

என் குழப்பத்தைப் படித்தது போல் "புரியும் போது புரியும்" என்று எங்களைப் பார்த்துத் திரும்பினார்.

திடுக்கிட்டோம். அது.. அது.. என் சட்டை. வில் படிமம் உட்பட அப்படியே..

"உங்களுக்கு இந்த சட்டை எப்படிக் கிடைச்சுது? இது என் சட்டை.."

"என்னுதுபா! எல்லாமே என்னுது.. அதான் சொன்னேன்ல? தேவையானா உங்கிட்ட வாங்கிக்குவேன்" என்று சிரித்து ஸ்ரீதரின் சைக்கிளில் ஏறிக் காணாமல் போனார்.

"யோவ் யோவ்.. வண்டி அவனுதில்லையா.. என்னுதுமில்லையா.." என்று தள்ளாடி எழுந்து அவர் பின்னே ஓடிய ஸ்ரீதரின் பின்னே நான் ஓடினேன். சன்னதித் தெரு முனையில் சைக்கிள் மட்டும் கிடந்தது.

புள்ளி.

<இன்னும் உண்டு> ►► 3
*இப்போது அங்கே அபார்ட்மென்ட் வரிசையாகக் கட்டியிருக்கிறார்கள். குளத்தைக் காணோம். மரங்களையும் காணோம். திருக்கழுகுன்றத்தைக் கூட விடவில்லை.


13 கருத்துகள்:

 1. it appears you have an obsession for writing abstract feelings I love that

  பதிலளிநீக்கு
 2. ஃப்லோ நல்லா போகுது. கொஞ்சம் வெயிட் செய்து முடிந்த பிறகு படிக்கலாம்னு நினைக்கறேன்.

  பதிலளிநீக்கு
 3. பூச்சாண்டி கதைகள் எப்பவுமே சுவாரசியம்.

  பதிலளிநீக்கு
 4. சுவாரஸ்யம் இன்னும் கூடிக்கொண்டே போகிறது.கதை போல ஒரு நிஜம் சொல்லவும் நிஜம் போல ஒரு கதை சொல்லவும் எல்லோராலும் நிச்சயம் முடியாது.வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 5. அட்டகாசமாகவும் மிகவும் சுவராஸ்யமாகவும் செல்லுகிறது. எல்லோரும் கதை என்ற பேரில் ஏதோ எழுதுகிறார்கள் நட்புக்காக நாம் அதை அருமை என்று சொல்லி செல்லுகிறோம். ஆனால் உங்கள் எழுத்து வசிகரிக்கிறது அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லும் திறமை உங்களிடம் இருக்கிறதுமேலும் ரமணி சார் சொன்னதை அப்படியே நான் ஆமோதிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. கதை மிக சுவாரசியம்.
  //
  "லூசு.. சட்டையைக் கசக்காதடா.. இதப்பாரு இன்னும் அப்படியே இருக்கு. இது ஒரு குறி.. அப்படியே போட்டுக்க.. துணைக்கு கோதண்டம் வரும்"//
  துணைக்கு கோதண்டம் தொடர்கிறதே !
  ஆவல் அதிகமாகிறது.

  பதிலளிநீக்கு
 7. திக் திக் கென இருந்தது. கடைசியில் ரெண்டு பேருக்கும் ஏதும் ஆகலைனதும் நிம்மதி! மீண்டும் எழுத ஆரம்பித்ததும் சந்தோஷமா இருக்கு. தொடரக் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 8. ஓஹோ.
  அமானுஷ்யம் வந்து விட்டதா. இன்னிக்கு என் தூக்கத்தில வில் வரப் போகிறது.
  சுறு சுறுவென்று கதை சுவாரஸ்யமாப் போகிறது.
  என்ன ஒரு கற்பனை.
  ராமன் வந்து காப்பாத்திட்டாரா.

  பதிலளிநீக்கு
 9. மீண்டும் பாலுவைப் பத்திப்படிச்சேன். உங்கள் திறமை வியக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. நிகழ்வுகள் கண் முன்னே தெரிகிறது போல்... அருமை...

  பதிலளிநீக்கு
 11. பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி

  பதிலளிநீக்கு
 12. தெளிவான நடை. திகிலான திருப்பங்கள்.

  பதிலளிநீக்கு
 13. மிக சுவாரசியமாகப் போகிறது. உண்மை சம்பவங்களா கற்பனையா என்ற மயக்கம் ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு