2012/03/27

பாலுவின் கோடை



    ம்மலில் நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டிருந்தக் காலம். என் தாத்தா 'நிறைய வீடு கட்டியிருக்கிறேன் பேர்வழி' என்று தனக்குத் தானே தலைமை மேஸ்திரி சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டு தினம் வெயில் வீணாகாமல் மேற்பார்வைக்குப் போய்விடுவார். நெருங்கிய நண்பன் ஸ்ரீதரின் அம்மா சிமெந்ட் வியாபாரம் செய்து வந்தவர். கடனுக்கு சிமெந்ட் கொடுத்து உதவியதோடு தானும் மேற்பார்வை பார்ப்பார். நானும் ஸ்ரீதரும் சைக்கிளில் சுற்றுவோம். சைக்கிள் சுற்று போரடித்தால் வீட்டுப் பக்கம் போவோம். சித்தாள்களை சைட் அடிக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருந்த வயது. வீட்டு வாசலில் துர்கையம்மன் கோவில். கோவிலின் தென்கிழக்கு மூலையில் ஒற்றைப் பனைமரம். பனைமரத்தில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு, கோவில் சுவரில் உட்கார்ந்து சைட் அடிப்போம்.

அப்படி சைட் அடிக்கும் சாக்கில் பல புது நட்புக்களைப் பெற்றேன். எல்லோரும் என்னைப் போல் ரகசியமாக சைட் அடிக்க வந்தவர்கள். ரவி, தேசி, சுரேஷ், ஜேம்ஸ், சாம்பா என்று எங்கள் கூட்டம் சேர்ந்தது. சில நாள் கோவில் வெளியறையில் உட்கார்ந்து கேரம் ஆடுவோம், சீட்டாடுவோம், அதுவும் இல்லையென்றால் 'புக் க்ரிகெட்' என்று புத்தகத்தைப் புரட்டி ரன் எடுக்கும் கேனத்தனமான ஆட்டம் ஒன்றை டீம் கட்டி ஆடுவோம்.

அப்படி ஒரு நாள் சேர்ந்தக் கூட்டத்தில் பாலுவைச் சந்தித்தேன். ரவியின் மாமா பையன் என்று அறிமுகம் செய்து கொண்டான். "பாஞ்சு நாள் லீவுக்கு வந்திருக்கான்" என்றான் ரவி. எங்களை விட சற்றே மூத்தவன் என்றாலும் பத்தே நிமிடங்களில் எங்களுடன் நெருங்கிப் பழகியவன் போல் ஆகிவிட்டான் பாலு.

தினம் வந்தான். "கூமுட்டைங்களா! சும்மா கொலுசுங்களையே பாத்துட்டிருந்தா எப்படி?" என்றபடி, சித்தாள் செங்கல் சுமக்கும் பொழுது நாங்கள் கவனிக்க வேண்டிய உடற்பகுதிகளையும் அசைவுகளையும் துல்லியமாகக் கற்றுக் கொடுத்தான். கொலுசு என்பதற்கான மெய்ப்பொருளும் எனக்கு அன்றைக்குத்தான் தெரிந்தது. பாலு பேரில் இருந்த மதிப்பு ஏகத்துக்கு உயர்ந்து போனது.

சரோஜாதேவி புத்தகம் நாலைந்து எடுத்து வந்து கைக்கிரண்டாக வைத்துக்கொண்டு வானில் உயர்த்துவான் பாலு. அதைப் பணிந்துப் பெறும் பாவனையுடன், "குருவே!" என்று பரவசமடைந்து விளிப்பான் சாம்பா. விளித்ததும் நாங்கள், "பாலுவே! ப்ராண வல்லபே! ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேகி!" என்று வணங்குவோம். கருணையே வடிவான பாலு, படம் வரைந்து பாகங்களைக் குறிக்காதக் குறையாக விவரங்களைப் படிப்பான். தன்யமாவோம்.

மதியத்தில் கோவில் பூசாரி தணிகாசலம் வாசனைக்குச் சாராயம் கலந்த நீர் மோர் அருந்திவிட்டு ஓரமாகப் புரண்டுப் படுப்பார். பாலு அவருடைய வேட்டியை உருவிவிட்டு அமைதியாக எங்களுடன் வந்து உட்கார்ந்து விடுவான். மதிய நேரங்களில் கோவிலுக்கு வரும் 'பெண்டுகள்' கிசுகிசுத்தபடி தலையை எங்கள் பக்கமாகத் திருப்பி நடப்பதைப் பார்த்து ரசிப்பான்.

ரவி சங்கடப்பட்டாலும், ரவியின் அக்காவைப் பற்றி எங்களுடன் பேசுவான். "அத்தைப் பெண் இருக்குறதே தொட்டுப் பாக்கத்தாண்டா!" என்பான். ஒரு முறை, "டேய் துரை.. உங்க தாத்தா ஏண்டா ஜட்டி கூடப் போடாம வேட்டியைக் கட்டிகிட்டு உயரத்துல ஏறி நிக்கறாரு? கோவணமாவது கட்டச் சொல்லுரா. கண்றாவி.. சித்தாளுங்கல்லாம் பயப்படுறாங்கடா" என்று சபையில் கேட்டு என்னைத் திடுக்கிட வைத்தான்.

அத்தனை சித்தாள்களின் பெயரையும் வயதையும் தெரிந்து வைத்துக் கொண்டுக் கிண்டலடிப்பான். வீட்டுப் பின்புறத்தில் இருந்த சண்முகா கொட்டகையில் ஒரு மதியம் எங்கள் அனைவரையும் இரண்டு சித்தாளுடன் சினிமா பார்க்க வைத்தது எங்களுக்கு அன்று எட்டாவது அதிசயமாக இருந்தது. ஜெய்சங்கர் படம். சத்தியமாக பாலு சினிமா பார்க்கவில்லை என்று எந்த நீதிமன்றத்திலும் சொல்வேன்.

பீடி வலிக்கக் கற்றுக் கொடுத்தவன். முழங்கை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த சொல்லுக்கு வேறு பொருள் அறியக் காரணமான ஆசான். கேரம் ஆடும்பொழுது சிவப்புக் காயினை திருடிக்கொண்டு விடுவான். ட்ரம்ப் விளையாடும் பொழுது எப்படியோ அவனிடம் மட்டும் ஐந்து துருப்பு எப்போதும் இருக்கும். புக் க்ரிகெட்டில் கூட ஏமாற்றுவான்.

பாலு ஊரில் இருந்த பதினைந்து நாட்களும் துர்கையம்மன் கோவிலில் சந்தித்துக் கொட்டமடித்தோம் என்பேன்.

பதிமூன்று நாட்கள் என்று திருத்தி விடுகிறேன். ஏனென்றால் பதிமூன்றாம் நாள் நள்ளிரவில் வாயிலிருந்து ரத்தம் கக்கத் தொடங்கினான் பாலு. வலது கண் மட்டும் தையல் தெறித்தது போல் பிதுங்கிப் பிளந்தது என்றார்கள். தாம்பரம் சேனடோரியம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனார்கள். பதினாலாம் நாள் காலை டெம்ப்ரசர் எடுக்க வந்த டாக்டரின் இடது கைக் கட்டை விரலை ஒரே கடியில் கடித்து மென்றுச் சப்புக் கொட்டிச் சாப்பிட்டு விழுங்கினான் என்பதற்காக நர்சுகள் அலறி அடித்துப் போட்ட அமைதி ஊசியில், பாலு கோமா வந்தது போலானான். அன்றிரவு இரண்டு மணிக்கு ஆஸ்பத்திரி அமைதியாக இருந்த வேளையில், திடீரென்று விழித்து, ஆஸ்பத்திரியே நடுங்கும்படிப் பத்து நிமிடம் போல் சிரித்துச் செத்தான்.

தொடர்வது பாலுவுடன் பதிமூன்று நாள் கதை.

22 கருத்துகள்:

  1. பெயரில்லாமார்ச் 27, 2012

    pachai pachai aana samacharam naasookkaaka sollum technik unkalukku therinthirukku

    பதிலளிநீக்கு
  2. "அழியாத கோலங்கள்" படம் பார்த்த மாதிரி இருந்தது கதை. பதின்ம பருவம் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் வாய்க்கிறது. எதிர்பாராத திருப்பம் முடிவில். புக் கிரிக்கெட் என்கிற கேணத்தனமான விளையாட்டை விளையாடி உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. //வாசனைக்குச் சாராயம் கலந்த நீர் மோர்...//

    நீர்மோர் கலந்த சாராயம்?

    பின் நவீனத்துவம்+ திகில் சப்ஜெக்ட்?..
    :))

    பதிலளிநீக்கு
  4. எப்படிச் செத்தார் அந்த பாலு?? திகிலான செய்திகளுக்கு வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  5. திடீர்னு ரத்தம் கக்கினார் என்றால்??? கூட இருந்த உங்களுக்கெல்லாம் எதுவும் ஆகலையா?? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!!!!!!!!!!!!!!!! :P:P:P

    பதிலளிநீக்கு
  6. அது ஏன் இந்த மாதிரி கேரக்டர்களுக்கு உடனடி மரணம் வாய்க்கிறது? அல்லது உடனடி மரணம் வாய்க்கப் போகும் கேரக்டர்கள்தான் இப்படி அதகளம் பண்ணுவார்களோ?!

    பதிலளிநீக்கு
  7. அதிரடியான ஒரு கேரக்டர் (பாலு) அறிமுகமும், அதிரடியான முடிவும் ‘சுஜாதா’வை நினைவுபடுத்தியது. டாக்டரின் விரலை மென்று சப்புக் கொட்டிச் சாப்பிட்டு விழுங்குதல்... Is it possible Sir? சரோஜாதேவி புத்தகத்தை அவன் எடுத்து வந்ததும்... ‘பாலு வணக்கம்’ செய்ய, படித்துக் காண்பித்ததும்... ஆக, மொத்தக் கதையிலும் உங்களின் சரளமான எழுத்து நடையை வியக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. என்னப்பா ஜாலியா ஆரம்பிச்சு மிரட்டலா முடிச்சிருக்கீங்க. சிறுகதைக்கு பிரேக்கா? நீங்க ப்ரேக்குக்கு போனா ரொம்ப நாள் கழிச்சு தானே திரும்ப வருவீங்க :))

    பதிலளிநீக்கு
  9. //கொலுசு என்பதற்கான மெய்ப் பொருள்//
    //முழங்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும்சொல்லுக்கு //
    இதற்கெல்லாம் வேறு பொருள் இருக்கிறதா என்னா.? எனக்குத் தெரியாது. நான் எப்படித் தெரிந்து கொள்வதாம்.?

    பதிலளிநீக்கு
  10. அடக்கடவுளே....... இப்டீல்லாமா...? சரி அந்த பையன் ஏன் அப்படி வித்தியாசமா செத்தான்.. இது கதையா நிஜமா?

    பதிலளிநீக்கு
  11. பம்மல் நினைவுகள் எப்பவும் கொஞ்சம் பயமுறுத்துவதாகவே இருக்கே!! மேலும் என்ன சொல்லப் போறீங்கன்னு ஆவலாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  12. பம்மல் நினைவுகள் எப்பவும் கொஞ்சம் பயமுறுத்துவதாகவே இருக்கே!! மேலும் என்ன சொல்லப் போறீங்கன்னு ஆவலாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  13. பம்மல் நினைவுகள் எப்பவும் கொஞ்சம் பயமுறுத்துவதாகவே இருக்கே!! மேலும் என்ன சொல்லப் போறீங்கன்னு ஆவலாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  14. அழுத்தம் திருத்தமாய் தன் கருத்துகளைப் பதிவு செய்தல் என்பது இதுதானோ...!

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அசத்தலான எழுத்து நடை!

    //"பாலுவே! ப்ராண வல்லபே! ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேகி!" என்று வணங்குவோம். // சூப்பர்!

    கடைசில படிச்ச போது கொஞ்சம் பயமா இருந்துது.

    பதிலளிநீக்கு
  16. வாசிச்சு முடிச்சு பாலுவை நினைச்சு பாவப்பட்டு மனசு படபடக்க...அப்புறம்தான் லேபிளைப் பார்த்தேன்.அப்பாடா இது சிறுகதை !

    பதிலளிநீக்கு
  17. //அழுத்தம் திருத்தமாய் தன் கருத்துகளைப் பதிவு செய்தல் என்பது இதுதானோ...!//
    ஹா ஹா ஸ்ரீராம், நான் ஒரு தடவை தானே அனுப்பினேன்; ஒரு வேளை பம்மல் பதிவு என்பதால் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி விளையாடுகிறதோ?

    பதிலளிநீக்கு
  18. //ஸ்ரீராம். சொன்னது…
    அழுத்தம் திருத்தமாய் தன் கருத்துகளைப் பதிவு செய்தல் என்பது இதுதானோ...!//

    Super

    பதிலளிநீக்கு
  19. // "டேய் துரை.. உங்க தாத்தா ஏண்டா ஜட்டி கூடப் போடாம வேட்டியைக் கட்டிகிட்டு உயரத்துல ஏறி நிக்கறாரு? கோவணமாவது கட்டச் சொல்லுரா. கண்றாவி.. //

    பாவம் அவர், பண்ணையார் ஆக அமோகம இருந்து பண்டாரமா / பரதேசியாய் ஆனவர் !!

    அப்படியே இருந்திருந்தால் நானும் என் அண்ணனும் "மைனர் குஞ்சுமணி" போல் திம்மராஜபுரத்தில் அலைந்திருப்பேன் !!

    பதிலளிநீக்கு
  20. பம்மல் தேவர்கள் என்று ஒரு புத்தகம் எழுதுகிறீர்களாம்/???
    திகிலே உன் பெயர் துரையா:)

    பதிலளிநீக்கு
  21. க்ளைமாக்ஸ் மட்டும் கற்பனையோ ?

    இந்தக் கதை எனக்கு என் சித்தப்பா சுந்தர பாரதி எழுதிய ஒரு கவிதையை ஞாபகப் படுத்தியது.
    "நாங்கள்
    பெரிய மனுஷியாகி
    பல வருசமாகியும்
    இன்னும் எங்களுக்கு
    பெயர் என்னவோ
    சித்தாளுதான்."

    பதிலளிநீக்கு