2014/12/27

தகாதவர்


இதற்கு முன்



    ரை மணிக்கு மேலாக வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"உங்களை என்னால் நம்ப முடியலே" என்றாள் ரமா.

"ஏன்? நான் இயல்பா நடந்துக்குறதாலா?"

"இயல்பா நடக்கறீங்களா? லெட்ஸீ. ஸ்டேஷன் ப்லேட்பாரத்துல ஒரே சட்டையை ஒரு மாசமா போட்டுக்கிட்டு வெளியை வெறிச்சுப் பாத்துட்டு உக்காந்திருந்த ஒருத்தரோட தெனம் பேசிட்டு வரீங்க. அந்தப் பெரியவர் யாருன்னு கூடத் தெரியாது. எங்கேயோ பாத்த ஞாபகம்னு சொல்லி அவருக்கு உதவி செய்ய நினைக்கறீங்க. அஞ்சோ பத்தோ கொடுத்து உதவுறதா? இல்லையே? நகை வாங்கினப்ப வாங்கின பரிசுச்சீட்டை அவருக்குத் தர முடிவு செஞ்சீங்க.. அப்புறம் இப்ப.. பரிசு விழுந்ததும் பல்டி அடிக்கிறீங்க. அவருக்கு நகையோ பணமோ தேவையில்லை, அதனால பரிசு சீட்டை பகிர்ந்துக்க அவசியமில்லைனு சொல்றீங்க.. இதுல எதை இயல்பு நடத்தைனு சொல்றீங்க ரகு?"

"எல்லாமே தான். நானும் ஒரு சராசரி மனிதன் தானே ரமா?"

ரமா முகம் சுளித்தாள். "உங்க பரிசுச்சீட்டு, உங்க பரிசு. டு எஸ் யு லைக். ஆனா ஒரு பாரத்தை சுமக்குற அவசியத்தை ஏற்படுத்திக்காதிங்க.."

"எதுக்கு காம்ப்லிகேட் பண்றே? பரிசுச்சீட்டு வெறும் சீட்டா இருந்தப்ப அதை சுலபமா தானம் செய்யத் தோணிச்சு. இப்ப நிஜமாவே பரிசு விழுந்ததும் இதை அவர்கிட்டே கொடுக்க விரும்பலே. அவரு இதை ஏத்துக்குவாரோனு கூடத் தெரியாது.. நிராகரிச்சார்னா?"

"கொடுத்துப் பார்த்தா தானே தெரியும்?"

"லெட்ஸ் லுக் அட் திஸ் ஒப்ஜெக்டிவ்லி. ப்லேட்பாரத்துல இருக்குற ஒரு ஹோம்லெஸ்... அவர் கிட்டே திடீர்னு போய் இருபது பவுன் தங்கத்தைக் கொடுத்தா அவர் நிலை என்ன ஆகும்?"

"ஏன்? எத்தனையோ ஏழைங்களுக்கு லாட்டரி விழுதில்லையா? அது போலத்தான்"

"நோ.. இட்ஸ் நாட். முதல்ல இந்தப் பரிசுச்சீட்டு தனக்கு தானமா கிடைச்சுதுனு சொன்னா, ஜாயலுகாஸ்காரன் இவரைத் திருடன்னு பிடிச்சுப் போடலாம். இல்லே இவருக்கு திடீர்னு இத்தனை தங்கம் கிடைச்ச அதிர்ச்சியிலே எதாவது ஆகலாம். இல்லின்னா தங்கம் கிடைச்சது தெரிஞ்சு திருட்டுப் பசங்க இவரை அடிச்சுப் போடலாம்.. இந்த பரிசுச்சீட்டு அவரை ஆபத்துக்கு உட்படுத்தும்னு நினைக்கிறேன்"

"ரியலி? அதே ஆபத்து உங்களுக்கும் வரலாமே?". ரமா அவனை ஏற இறங்கப் பார்த்தாள். "மை குட்னஸ்! எப்படியெல்லாம் யோசிக்கிறிங்க! இந்த இருபது பவுனா உங்களை இப்படிப் பேச வைக்குது? பரிசுச்சீட்டைக் குடுத்துட்டு நீங்களே அவரை அடிச்சுப் போட்டுருவீங்க போலிருக்கே?"

"ஸ்டாப் இட்" எரிச்சலானான் ரகு. "நான் பரிசுச்சீட்டைத் தரதா சொன்னப்ப உனக்கு சம்மதமில்லேனு சொல்லலியா? நீ மட்டும் இப்ப எப்படி மனம் மாறினே?"

பதில் சொல்லத் தயங்கி ஒரு கணம் ரகுவை நேராகப் பார்த்த ரமா, "எனக்குத் தினம் தூங்க விருப்பம் ரகு" என்றாள். அருகே வந்து அவன் தோள் தொட்டு, "அதைவிட நீங்க தினம் நிம்மதியா தூங்க விருப்பம் ரகு" என்றாள் சற்றே கலங்கி.

"லெட்ஸ் பி ரேஷனல் ஓகே? பெரியவரோட இன்றைய தேவை இருபது பவுன் தங்கமா?"

"அதே போல யோசிச்சா உங்களுக்கு எதுக்கு இருபது பவுன் தங்கம் இப்போ? வாட் வில் யு டூ?"

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னைத் திருப்பிக் கேட்டு என்ன பலன்?"

"ஏற்கனவே தீர்மானிச்ச பதிலை நியாயப்படுத்துறதுக்கான கேள்வியைக் கேட்டு என்ன பலன்?"

"பதில் சொல்லேன்..?"

"ஓகே. அவருடைய இன்றைய தேவை இருபது பவுன் தங்கம் இல்லைதான். அவருடைய இன்றைய தேவை ஒரு கடுகளவு சமூக அங்கீகாரம். ஒரு சின்ன வெற்றி. குளிருக்கு இதமா மூட்டைப்பூச்சி இல்லாத ஒரு போர்வை. சூடா ஒரு வாய் கஞ்சி. அப்பப்போ யாராவது சிந்துற எதிர்பார்ப்பில்லாத கனிவான புன்னகை.. தன் விழுதுகளின் பிடிப்பு.. ஒரு அரவணைப்பு.. சொல்லிட்டே போகலாம்.. இருந்தாலும் ஒரு அடிப்படை கேள்வி.. அந்தப் பெரியவரோட தேவை என்னனு தீர்மானிக்கிற தகுதி நமக்கு இருக்கா?"

"ஏன் இல்லை? அவருக்கு உதவி செய்யுற தகுதி நமக்கு இருக்கறப்ப, அவர் தேவையைத் தீர்மானிக்கிற தகுதி இல்லையா? ஆத்துல போட்டாலும் அளந்து போடுனு படிச்சதில்லையா?"

"உங்களுக்கு எது சரினு தோணுதோ அதைச் செய்ங்க". ரமா சட்டென்று வெளியேறினாள்.

விவாதத்தைத் தவிர்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ரகு வாளாதிருந்தான்.

கல்கத்தாவிலிருந்து திரும்பி மூன்று நாட்களாயிருந்தாலும் பெரியவரை சந்திக்க நேரிடுமோ என்ற உறுத்தலில் ரயில்வே ஸ்டேஷன் பக்கமே போகவில்லை. பரிசு விழுவதும் விழாததும் ஒரு விபத்து தானே? பரிசு விழுமுன் இருந்த பரந்த மனமும் தாராள குணமும், பரிசு விழுந்ததும் பயந்து ஒளிவானேன்? இதென்ன சிக்கல்? யாரோ கொடுத்த பரிசை யாருக்கோ தானம் தருவதில் ஏன் இத்தனை அழுத்தம்? இது நமக்குக் கிடைக்காமலே போயிருக்கலாமே? இல்லாத இருபது பவுன், இல்லாமலே போக மனம் ஏன் அடங்க மறுக்கிறது? தெரியாத்தனமாக வாய்க்கொழுப்பில் தந்த வாக்குறுதியின் எரிச்சலா? இந்தப் பரிசு தன்னைவிட இன்னொருத்தருக்கு அதிகம் பயன்படும் என்ற உண்மை புரிந்தாலும் தன் ஆளுமைக்குட்பட்டது என்ற உரிமையா? எப்படி தன்னுடையதாகும்? இலவசமாகக் கிடைப்பது தன்னுடையதாகுமா? இலவசமாகக் கிடைத்ததை இலவசமாகக் கொடுத்தால் மனம் ஆற மறுப்பதேன்? ஆயுசுக்கும் இதே போல் இருதலை கொள்ளி எறும்பு வாழ்க்கை எல்லோருக்குமேவா இல்லை மத்யமருக்கேயான சாபக்கேடா? சே! இந்தப் பரிசு எதற்காக விழுந்து தொலைக்க வேண்டும்? இன்னும் பின்னோக்கினான். எதற்காக இந்தப் பெரியவரைப் பார்த்துத் தொலைக்க வேண்டும்? சாதாரணமாக இயங்கிக் கொண்டிருந்த வாழ்வில் எதற்கு இப்படியொரு திருப்பம்? தேவையில்லாத ஒழுக்கச் சிக்கல்?

ரகு பலவாறு சிந்தித்தபடி ரமாவை நெருங்கினான். "யு ஆர் ரைட்" என்றான். மௌனமாக நின்ற ரமாவின் கைகளைப் பிடித்தான். "நீ சொன்னது சரிதான் ரமா. என் மனம் மாறினதுக்குக் காரணம் புரியலே. பரிசு சீட்டைக் கொடுனு நான் தான் முதல்ல சொன்னேன். பிறகு நானே மனம் மாறுவேன்னு நினைக்கலே" என்றான்.

"இருபது பவுன் தங்கம்.. உங்க கண்ணை மறைக்குது"

"இருக்கலாம்.. பரிசை அப்படியே கொடுக்க மனசு கேக்கலே. நான் ஒரு சாதாரண மனுஷன். மகான் இல்லை ரமா."

ரமா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கொஞ்சம் வெட்கமா இருந்தாலும் நான் செய்யுறது தப்பில்லைனு தோணுது. ஒரு ஹோம்லெஸ் மனிதர், வயதானவர், இருபது பவுன் தங்கத்தை வச்சுகிட்டு என்ன செய்வாருனு தோணிச்சு.. ஐ மீன்.. பரிசுச்சீட்டு வாங்கினது நாம தானே? வேணுமானா பாதியைப் பகிர்ந்துக்கலாம். பத்து பவுன் தங்கத்தையோ அதுக்கான ரொக்கத்தையோ அவர் கிட்டே குடுக்கலாம். என்ன சொல்றே?"

ரமா புன்னகைத்தாள். ரகுவின் தோளில் தட்டி, "மிடில் க்லாஸ் மகராஜா?" என்றாள். "உங்க நிலமை புரியுது. விருப்பம் போல் செய்யுங்க" என்றாள்.

    கு ஸ்டேஷன் வந்த போது காலை பத்து மணியிருக்கும். பெரியவர் தென்படுகிறாரா என்று பார்த்தான். காணவில்லை. கடற்கரை ரயில் வந்ததும் ஏறிக் கொண்டான். ஏதோ வெறித்தபடி இருந்தவன் வண்டி மெள்ள வேகம் பிடிக்கத் தொடங்கியதும் தற்செயலாகக் கவனித்தான். அதிர்ந்தான். பல்லாவரத்தில் இறங்கி அடுத்த ரயிலைப் பிடித்துக் குரோம்பேட்டை வந்தான். அவசரமாக இறங்கி எதிர்புறம் ஓடினான். பெரியவர் தான். ப்லேட்பாரம் கடந்து பாலத்தினடியில் சுருண்டு படுத்திருந்தார். நாடி பிடித்துப் பார்த்தான். அங்கிருந்து கூவி எதிர்புறமிருந்த சிலரை அழைத்தான். ஒரு ஆட்டோ டிரைவர் வந்தார். "என்னா சார், வண்டியா?"

"ஏம்பா.. இங்க ஒருத்தர் இப்படி சுருண்டு படுத்திட்டிருக்காரு.. என்ன ஏதுனு கவனிக்க மாட்டீங்களா?"

"தோடா.. ஏன் சார்.. எத்தினியோ பேரு படுத்திருக்காங்க.. எல்லாரையும் கண்டுக்கவா முடியும்? பெர்சுக்குப் போற வயசு... வூட்ல கள்டி வுட்றுப்பாங்க.. நாதியில்லே.. இங்க வந்து படுத்திருக்காரு.. உனக்கு என்ன சார் வந்திச்சு? உனக்கென்ன அப்பனா பாட்டனா? எதுனா சவாரி கேக்கறீங்கனு வந்தா இன்னாவோ டயலாக் வுட்னுகிறீங்க?"

டிரைவர் பேச்சின் யதார்த்தம் உறுத்த, ரகு அமைதியானான். "தெரிஞ்சவர்பா. இந்தா ஒரு சோடா வாங்கிட்டு வா" என்று இருநூறு ரூபாயைக் கொடுத்தான். "அப்படியே ஒரு பாட்டில் தண்ணி வாங்கிட்டு வாப்பா. இவரை எழுப்பி வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகணும். ந்யூகாலனி. வரியாப்பா?"

    "ரொம்ப தேங்க்ஸ், ரெண்டு பேருக்கும்" என்றார் பெரியவர். "குளிப்பாட்டி வேட்டி சட்டை கொடுத்து சாப்பாடு போட்டு.. அமர்க்களப் படுத்திட்டிங்களே? மறுபடி ப்லேட்பாரத்துக்குப் போக வேண்டியவன் தானே? இன்னிக்குக் கூட்டிட்டு வந்து குளிப்பாட்டி வேஷ்டி சட்டை கொடுத்து சாப்பாடு போட்டீங்க. தினப்படிக்கு நான் என்ன செய்வேன்? வீண் ஜம்பத்தோடு பேசலே.. உங்க உதவிக்கு நன்றி, ஆனா தயவுசெஞ்சு இனிமே இப்படி உதவாதீங்க"

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லின்னா எங்க கூடவே இருக்கலாம் சார்" என்றான் ரகு.

ரகுவை முறைத்த ரமாவைக் கவனிக்கத் தவறவில்லை பெரியவர். "பயப்படாதமா.. உன் புருஷனுக்கு அறிவில்லைனா எனக்கும் அறிவில்லைனு ஆயிடுமா?"

பெரியவரின் நேர்மையை வியந்து சுதாரித்த ரமா, "தப்பா நினைக்காதிங்க சார். இந்த மாதிரி ஏதாவது விவரம் புரியாம உளறித் தானும் கஷ்டப்பட்டு அடுத்தவரையும் கஷ்டப்படுத்துறது அவரோட சுபாவம். இருந்தாலும் என் காதலர் இல்லையா? விட்டுக் கொடுக்க மாட்டேன்... அவரோட மனம் எனக்குப் புரியும்"

"கணவரைக் காதலர்னு சொல்ற லட்சத்துல ஒருத்திமா நீ.. நல்லா இரு.. நான் வரட்டுமா?" என்று எழுந்த பெரியவரைத் தடுத்தாள் ரமா. "உக்காருங்க சார். விவரம் புரியாம உளறிக் கஷ்டப்படுவார்னு சொன்னனே. அந்த மாதிரி ஒரு கஷ்டத்துல இருக்கோம்.. நீங்கதான் உதவி செய்யணும்"

"நானா? நான் எப்படி..."

"உங்களால தானே சார் கஷ்டமே..?" என்று அன்புடன் அழகாகச் சிரித்த ரமா, பரிசுச்சீட்டு விவரங்களைச் சொன்னாள்.

திடுக்கிட்டார் பெரியவர். "நிஜமாவா சொல்றீங்க ரெண்டு பேரும்? இல்லே இது ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?"

"உண்மை சார். இதோ பரிசுச்சீட்டு" என்று பரிசுச்சீட்டைக் காட்டினான் ரகு. "பரிசு விழறதுக்கு முன்னால இதை உங்களுக்குத் தரலாம்னு தாராளமா சொன்னவன், பரிசு விழுந்ததும் மனம் மாறிட்டேன்.. மன்னிக்கணும்"

"ஏன்.. இது உன்னோட பரிசு தானே?"

"இருக்கலாம். ஒரு விசித்திரமான.. தார்மீகச் சவால்னு வைங்களேன்?"

"என்னப்பா.. பெரிசா என்னவோ பேசுறே? நான் எளியவன்பா. அந்தாலத்து சிக்ஸ்த் பார்ம்.."

"சார்.. எனக்கோ ரமாவுக்கோ வாழ்க்கைல எந்தப் பரிசும் கிடைச்சதில்லே சார். அந்தக்காலத்துல லாட்டரி வாங்குவோம். ஒரு நம்பர் கூட விழாது சனியன். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எங்க ரெண்டு பேருக்கும். அன்னிக்குப் பாருங்க.. உங்களுக்கு இந்தப் பரிசுச்சீட்டைத் தரணும்னு சொன்னப்போ சத்தியமா பரிசு விழாதுனு ஒரு நம்பிக்கைல சொன்னேன். ஏன்னா, இது என்னோட சீட்டு. தனக்குப் பரிசு விழாதுனு ரமாவுக்கும் தெரியும். அதனாலதான் என்னோட சீட்டுனு இதைத் தனியா எழுதி வச்சா. நாட் தட் ஷி விஷ்ட் டு பி லக்கி. அவளோட சீட்டை நம்பினா சுத்தமா வராதுனு அவளுக்குத் தெரியும். ஆனா அதே நேரம் அவ ரொம்ப யதார்த்தமான பெண். முன்பின் தெரியாத ஒருத்தருக்கு உதவி செய்யறதுக்கு பதிலா பரிசுச்சீட்டைக் குடுத்துட்டுப் போற அகஸ்மாத்தான தர்மத்தில் அவளுக்கு ஒரு ஆட்சேபணையுமில்லே. ஒத்துக்கிட்டா..."

"கொஞ்சம் இருப்பா. எனக்குனு ஒதுக்கினதால தான் பரிசு விழுந்திருக்குனு சொல்றாப்ல இருக்கே?"

"கண்டிப்பா சார். இதை நாங்க ரெண்டு பேருமே நம்பறோம்" என்றாள் ரமா.

"ஆமாம் சார்" என்றான் ரகு. "எனக்கு ஆயுள்ல இது வரை ஒரு சின்ன பென்சில் இரேசர் கூட பரிசு விழுந்ததில்லை சார். எனக்கு மட்டுமில்லே என் பரம்பரையே அப்படித்தான். எங்கப்பா ஒவ்வொரு மாநில லாட்டரி சீட்டுனு வாங்கி வாங்கி எத்தனை வேஸ்ட் பண்ணியிருக்காருனு நினைக்கறீங்க! ஐ டெல் யு. ஐயம் பேங்க்ரப்ட் இன் லக். உங்களுக்குத் தரலாம்னு நினைச்சதால மட்டுமே இந்த சீட்டுக்குப் பரிசு விழுந்திருக்கு"

பெரியவர் சந்தேகத்தோடு பார்த்தார். "என்ன சொல்றீங்க ரெண்டு பேரும்?"

"இது உங்க பரிசுச்சீட்டு சார். என் கைல கிடைச்சது அவ்வளவுதான். எனக்குக் கிடைச்ச உரிமை ஒரு விபத்து. ஆனா என் மனசு பாருங்க, இப்ப இதை உங்க கிட்டே முழுசுமா தரத் தயங்குது. ஆனா உங்க கூட பாதியைப் பகிர்ந்துக்க ஆசைப்படுறேன் சார். முழு மனசா ஆசைப்படுறேன். பாருங்க, அதனாலதான் இன்னும் இதை கேஷ் பண்ணாமலே இருக்கேன். பணத்தையோ தங்கத்தையோ பார்த்ததும் மனசு மறுபடி மாறிடக் கூடாது பாருங்க. இன்னிக்கே போய் ரெண்டு பேரும் இதை பகிர்ந்துக்கலாம் சார். உங்களுக்கும் இப்போ இது உதவியா இருக்கும் இல்லையா?"

சற்று நேரம் அமைதியாக இருந்தார் பெரியவர். "கொஞ்சம் குடிக்கத் தண்ணி தரியாப்பா?" என்றார்.

"நீ சொன்னது கேட்டு என் நாக்கு வரண்டு போச்சுபா" என்றார் டம்ள்ரை அவனிடம் தந்தபடி. "ரொம்ப தேங்க்ஸ். தண்ணிக்கு" என்றார்.

மூவரும் பேசாதிருந்தனர். பெரியவர் மெள்ளத் தொடங்கினார். "பத்து பவுன்னா ரெண்டு லட்சமாவது தேறுமில்லையா?"

ரகு ஆமோதித்தான்.

"ஹ்ம்ம்ம்.. ரெண்டு லட்ச ரூபாயை அப்படியே எனக்கு அன்கன்டிஷனலா தானம் பண்றதா சொல்றே? அதுக்கான புண்யத்தைக் கட்டிக்கலாம்னு ஒரு ஐடியா.."

"அய்யய்யோ.. அப்படியெல்லாம் இல்லை. எங்க ரெண்டு பேருக்கும் பாவ புண்ணியத்துல நம்பிக்கை கூட கிடையாது சார். எங்களுக்குக் கிடைச்ச வெற்றியை உங்களோட பகிர்ந்துக்கறோம். ட்ரூலி, நாங்க விளையாடின காரணத்துக்காக உங்க வெற்றியை நாங்க பகிர்ந்துக்கறோம்னு சொல்றேன்.."

"நான் யாரோ.. நீங்க யாரோ.. எதுக்கப்பா.. இதென்ன உறவா பங்காளியா..."

"அப்படிப் பார்த்தா எல்லாருமே யாரோதான்.. எல்லாருமே உறவுதான் சார். நீங்க நான் ரமா எல்லாருமே ஏதோ ஒரு வட்டத்தில் இணைஞ்சிருக்கறதுனால தான் இப்ப இப்படிச் சந்திக்கிறோம்... ஹ்யுமேனிடி இஸ் எ பிக் சர்கில், ஹ்யூமெனிசம் இஸ் இட்ஸ் சென்டர்"

"இது அந்த மொள்ளமாறிங்களுக்குத் தெரியலியே" என்று முணுத்தார் பெரியவர்.

"என்ன சொல்றீங்க சார்?"

"ஒண்ணுமில்லேமா" என்றவர் திடீரென்று உற்சாகத்துடன், "ஏம்பா.. பரிசு தரப்ப போட்டோ எடுப்பாங்க இல்லே? வா, போகலாம். என் இஷ்டத்துக்கு விடணும், வற்புறுத்தக் கூடாது, சம்மதமா?" என்றார்.

    கைக்கடையில் பரிசுச்சீட்டைக் கொடுத்து ரொக்கமாக வாங்கிக் கொண்டார்கள். நாலு லட்சத்து சொச்சத்துக்கான காசோலையைப் பிடித்தபடி படம் எடுத்துக் கொண்டார்கள். ரமாவின் போலராய்டில் உடனடியாகப் படம் வந்துவிட, பெரியவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார்.

"நாளைக்கு வருமானவரி எடுத்துட்டு மிச்சத்தை என் பேங்க்ல போடுவாங்க சார்..."

"வரி பிடிப்பாங்களா? என்னப்பா சொல்லவேயில்லையே? அவ்வளவும் போச்சா?"

ரகு சிரித்தான். "இல்லை சார். உங்க ரெண்டு லட்சத்துக்கு வரி கிடையாது, கவலைப்படாதீங்க" என்றான். ரமாவின் முறுவலைக் கவனித்தான்.

"என்னவோ.. உங்க ரெண்டு பேருனால நான் இன்னிக்கு இந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதுக்கு எந்தப் பரிசும் ஈடு கிடையாதுப்பா. எனக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபாய் கொடு, நாளைக்கு மிச்சத்தை வந்து வாங்கிக்கறேன். ஒரு மொள்ளையைப் பாத்துட்டு வந்துடறேன்.."

ரகு இரண்டாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தான். "சார், நான் கொண்டு விடறேனே?"

"நோ.. நோ.. இது என்னோட தனி வெற்றிக்கான டைம். அலோ மி. ஆனா நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஊரை விட்டு ஓடிற மாட்டிங்களே?"

ரமா சிரித்தாள். "இல்லே சார். மாட்டோம். இன்னிக்கு உங்க உதவியால நிம்மதியா தூங்கப் போறோம்".

பெரியவர் அவர்களை அருகிலழைத்தார். "ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே? ஒரு பென்சில் கூட பரிசு விழாத அதிர்ஷ்டக்கட்டைனு அடிச்சுக்கறிங்களே ரெண்டு பேரும்? உங்க ரெண்டு பேருக்கு எதுக்கு பரிசு? நீங்கதான் ஒருத்தருக்கொருத்தர் பரிசு! கோடிப்பொன் கொடுத்தாலும் ஈடாகாத பரிசு! எப்பேற்கொத்த ராமசீதையாட்டம் இருக்கிங்க?! எத்தனை முனிவரும் தர்மாத்மாவும் ஆசீர்வாதம் செஞ்சாலும் இப்படியொரு பிணைப்பு கிடைக்குமா? வாழ்க்கையில இதைவிட பரிசு என்னய்யா வேண்டிக்கிடக்கு? இதைப் புரிஞ்சுக்காத எத்தனையோ தம்பதி சனியன்கள் வாழ்க்கையை நாசமாக்கிட்டுத் திரியறதை தினம் பாக்குறேன். இப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்குறீங்க, இதுதான் மகத்தான பரிசு, மகோன்னத பரிசு. ஞாபகம் வச்சுக்குங்க. பி குட். நாளைக்குப் பார்ப்போம், சரியா?" என்றார். இரண்டாயிரம் ரூபாயையும் போட்டோவையும் வாங்கிக்கொண்டு நடந்தார்.

    வீடு திரும்புகையில், "எனக்கென்னவோ அவர் நாளைக்குத் திரும்புவாரா என்னனு தெரியலே ரமா" என்றான்.

"அதனால என்ன? இன்னிக்கு ஹி வாஸ் ஹேப்பி. நம்மளையும் சந்தோஷப்படுத்தினாரு..."

"இல்லே.. இன்னிக்கே நான் ஒரு செக் கொடுத்திருக்கலாம்.. தோணாம போயிடுச்சே?!"

"வருவாரு வருவாரு.. எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதிங்க" என்று ரகுவின் கைகளை இறுக்கினாள். "அவர் நம்மளைப் பத்தி சொன்னது எத்தனை அழகு இல்லே?"

"நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்.. இத்தனை நாள் தெரியாமப் போச்சே!"

"ஆமா..ம்.." என்று இழுத்தாள். "மொள்ளைனு சொன்னாரே? கெட்ட வார்த்தை தானே? என்ன அர்த்தம்?"

சற்று யோசித்த ரகு, "அவர் யாருனு எனக்குத் தெரியப்படுத்தினாருனு அர்த்தம்" என்றான்.

2014/12/02

தகாதவர்



    ட்டையில் கொஞ்சம் புதுக்களை ஒட்டிக் கொண்டிருந்தது போலிருந்தது. போன வாரம் சட்டை சற்றுப் புதிதாகத் தென்பட்டது. அதற்கு முந்தைய வாரம் நிச்சயம் புதிதாக.. அதற்கும் முந்தைய வாரம் அப்போது தான் கடையிலிருந்து எடுத்து வந்தது போல் தெளிவாக...

அணிந்திருந்தவர் முகம் மட்டும் அணிந்திருந்த சட்டையை விட வேகமாகக் களையிழந்து கொண்டிருந்தது வெள்ளைத் தாளில் வரைந்த கரும்பொட்டு போல் தெளிவாக...

    ரகு இந்தியா திரும்பி சில மாதங்கள் ஆகியிருந்தன. ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பி புது வீடு, புது வேலை, புதுத் தலைமுறை, புது விதிகள், புது வலிகள் என வித்தியாசமான உணர்வுகளை ஏற்கப் பழகிக் கொண்டிருந்தான். விட்டுப் போன உறவுகளை வரிசையிட்டுப் புதுப்பிக்கும் மும்முரத்தில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த மனைவி ரமாவை அவ்வப்போது கவனித்தாலும், தினம் அவரைக் கவனிக்கத் தவறவில்லை. சட்டையணிந்திருந்த பெரியவரை.

காசுக்காக அல்லாமல் ஆசைக்காகச் சேர்ந்த புது லெக்சரர் வேலை ரகுவுக்குப் பிடித்திருந்தது. நேரத்தோடு அடித்துப் பிடித்துப் போக வேண்டிய அவசியம் இல்லாமல் நிதானமாகத் தினம் நுங்கம்பாக்கத்துக்குப் பயணம். குரோம்பேட்டையில் அகலப்பாதை ரயில் வந்ததே ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முதன் முதலாக அகலவழி மின்ரயிலை பார்த்து அசந்து போனவன், தற்செயலாக எதிர் ரயில் நிலைய இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். பளிச்ச்ச்ச்ச்சென்றப் புதுச்சட்டை, புதிதென்று சொல்ல முடியாத பேன்ட். ஆளில்லாத அகலவழி நடைமேடை பெஞ்சில் ஏறக்குறையாக அனாதையாக உட்கார்ந்திருந்தார். நிமிர்ந்த நெஞ்சுடன் நேராக எதையோ பார்த்தபடி. பக்கத்தில் ஒரு சிறிய தோல் பை. அருகே தரையில் ஒன்றிரண்டு நாய்கள் இரவு முழுதும் குரைத்த அசதியில் தூங்கிக் கொண்டிருந்தன. பெரியவரின் தலைக்கு மேல் தொங்கிய விளம்பரப் பலகையில், 'உங்கள் எதிர்காலம் - எங்கள் பாதுகாப்பு' என்ற ஏதோ வங்கியின் அர்த்தமில்லாத விளம்பர வாசகம். அவருடைய நேர்ப் பார்வையில் வந்து விழுந்து விட்டிலானவை நினைவுகளா அல்லது வெற்றுக் காலவரிகளா என்று சொல்ல முடியாதபடி சலனம் துறந்த முகம்.

காலத்தைக் கட்டும் புகைப்படத் தருணம் என்று எண்ணினான். நல்ல கேமரா இல்லாது போனதேயென்று நொந்தான். அதற்குள் தாம்பரம் மின்ரயில் வந்து அவரைப் பார்வையிலிருந்து மறைத்தது. ரயில் விலகியதும் அவரைப் பார்க்க முனைகையில் கடற்கரை ரயில் வந்துவிட, ஆள் குறைவான பெட்டியைத் தேடி ஏறிக்கொண்டான். அப்போது தான் சட்டென்று நினைவு தட்டியது. 'நிச்சயம் இவரைப் பார்த்திருக்கிறேன்!'. அடையாளம் காணும் முயற்சியை தினத்தின் பிற தேடல்களில் தொலைத்தான்.

சென்னை எத்தனை மாறிவிட்டது! குரோம்பேட்டை எத்தனை மாறிவிட்டது!

ந்யூகாலனியில் ஆறாவது குறுக்குத் தெருவின் ஒண்டுக் குடித்தனக் குடியிருப்பு ஒன்றில் இருந்த காலம் இதோ நேற்றிரவு போல் தோன்றுகிறதே! விளையாட்டாகத் துரத்தி வந்த உயிர்நாய் டைகருக்குப் பயப்படுவது போல் மரத்தில் ஏறி உட்கார, நாய் எம்பி எம்பிக் குதித்து தடுமாறி விழுந்ததைப் பார்த்துச் சிரித்துக் கீழே இறங்கி நாயுடன் கட்டிப் புரண்டக் குதூகலம்.. இப்போது நடந்தது போல் தோன்றுகிறதே? இருந்தாலும் உடலிலும் மனதிலும் ஏன் இத்தனை சோர்வு? ஏன் இத்தனை அயர்ச்சி?

அசோக் மணிவண்ணன் சாய் மகேந்திரன் பாபு ரங்கன் ஸ்ரீமதி வேதா மாலதி சுந்தர் விஜி கண்ணன் மனோகர் ஸ்ரீனிவாசன் துரை என்று வேகமாக வளர்ந்த நட்புக் கூட்டத்துடன் வெவ்வேறு தருணங்களில் நடத்திய கூத்துகள்..

க்ரிகெட் விளையாடக் கற்றுக் கொண்டது.. முதல் மேச்சில் அசோக் தன்னை ஓபனிங்க் பேட் செய்ய அனுமதித்ததும் களத்தில் இறங்கி அஸ்தினாபுரம் இஸ்மாயில் எறிந்த பந்துகளை விளாசியது.. தவறாக நோ பால் அறிவித்த அம்பயர் பாபுவுடன் இஸ்மாயில் சண்டை போட உடனே எல்லோரும் மேட்சை மறந்து சண்டையில் இறங்க.. கையிலிருந்த ஸ்டம்பினால் இஸ்மாயில் முதுகில் ஓங்கி அடித்துவிட்டு ஓடியது.. பிறகு இஸ்மாயில் போலீஸ்காரனுடன் வீட்டுக்கு வந்ததும் அங்கேயே பயத்தில் ஒன்றுக்குப் போனது..

தோல் கம்பெனி மைதானத்தில் ஹாக்கி விளையாடிவிட்டு லெதர் கம்பெனி ரோடில் இருந்த சைவ ஓட்டலில்... பத்து பைசாவுக்கு ஒரு தோசை என்றாலும் ரூபாய்க்கு பனிரெண்டு தோசை தருவார்கள்.. அதை டீமில் அத்தனை பேரும் பகிர்ந்து சாப்பிட்டு சாம்பாரைக் குடம் குடமாகக் குடித்து.. "சார்.. பதினொரு தோசை தான் கொடுத்தீங்க" என்று அழிச்சாட்டியம் செய்து.. கடைக்காரர், "ஏம்பா.. வாரா வாரம் இதையே சொல்றீங்களே? ஒரு வாரமாவது நான் எண்ண மாட்டேனா?" என்று சிரித்தபடி இன்னொரு தோசையைத் தயாராக வைத்துக் கொடுத்தது..

தாம்பரத்திலிருந்து பூந்தமல்லிக்கு பஸ் விட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து அப்பா அம்மாவுடன் முதன் முதலாகக் குன்றத்தூர் முருகன் கோவிலுக்குப் போனது.. தேவர் படம் போலவே கோவில் இருந்ததில் வியந்தது..

வாடர் டேங்க் திடலில் விளையாடிய போது ஏற்பட்ட இன்னொரு சண்டையில் சாய், மணிவண்ணனுடன் சேர்ந்து ரத்தக்காயங்களுடன் திரும்பிய போது.. கண்ணன் கடைக்காரர் சிகரெட் பிடித்தால் வலி தெரியாது என்று ஆளுக்கொரு பில்டரில்லாத சார்மினார் சிகரெட் தர, முதல் முதலாக சிகரெட் பிடித்தது.. எக்கச்சக்கமாக இழுத்து இருமி ஏறக்குறைய இறந்து போன சாயை அங்கேயே விட்டு அவன் வீட்டுக்கு ஓடி "சாய்க்கு என்னவோ ஆயிடுச்சு.. என்னனு தெரியலே" என்று புளுகி குடும்பத்துடன் சாயை ஆளவந்தார் க்ளினிக் கூட்டிப் போனது..

பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்த தொலைபேசி வீட்டுக்கு வந்ததும் அப்பா என்னவோ சந்திரனில் இறங்கியது போல் அலட்டிக் கொண்டது..

வயதுக் கோளாறில் மாலதியை வேறு விதமாகப் பார்க்கத் தொடங்கி அவள் வீட்டுக்கு அடிக்கடி போனது.. விவரம் புரிந்து கொண்ட மாலதியின் அப்பா அவனைத் தனியாகக் கூப்பிட்டு 'வயசுல இப்படித்தான் இருக்கும், படிப்புல கவனமா இரு.. எல்லாத்துக்கும் காலம் வரும்' என்று அறிவுரையும், 'மொள்ளமாறியா இருந்தே, ஜோடு பிஞ்சிடும்' என்று கொஞ்சம் அதட்டலும் கலந்து பேசியது.. அதை ஒட்டுக் கேட்ட மாலதியின் சொந்தக்காரப் பையன் மறுநாள் காரணமில்லாமல் தன்னுடன் வம்புக்கு வந்து 'டேய்.. மாலதி வீட்டுக்கு வந்தே.. தொலைச்சுடுவேன்' என்று மிரட்டிக் கன்னத்தில் அறைந்தது.. உடனிருந்த மகேந்திரன் துரை அசோக் மூவரும் அவனுடன் சண்டைக்குப் போனது.. 'டேய்.. எங்கிருந்தோ இங்க வந்துகிறே.. எங்க செட்டு ஆள் மேலயா கை வைக்குறே?' என்று மகேந்திரன் அவன் மூக்கைப் பிளந்தது.. அதைக் கேட்டு ஆத்திரத்துடன் வந்த மாலதியின் அப்பாவிடம் மகேந்திரன். "நான் இல்லிங்க.. ரகு தான் அடிச்சான்.. வேணும்னா துரையைக் கேட்டுப் பாருங்க" என்று புளுக.. "ஆமாம்.. ரகு தான் அடிச்சான்" என்று துரை நம்பிக்கை துரோகம் செய்து, பிறகு "டேய் மன்னிச்சுக்கடா.. விஷயம் தெரிஞ்சா மகேந்திரனோட அப்பா பெல்டை உருவி பின்னிடுவாருடா.. அதான் பொய் சொன்னேன்.. வேணும்னா உங்கூட வந்து மாலதி கிட்டயே பேசிடறேன்.." என்று எத்தனை சொல்லியும் அவனுடன் சில நாட்களுக்குப் பேச்சை வெட்டியது.. தொடர்ந்து பல நாட்கள் மாலதியின் இரண்டு அண்ணன்களும் அந்தத் தெரு பக்கமே வரவிடாமல் தொந்தரவு கொடுத்தது..

தொலைக்காட்சி வந்ததும் நட்பு ஆதாரங்களே அடியோடு மாறி, இதுவரை பழகாதிருந்த டேவிட் அழகுசாமி வீட்டுக்கு டிவி இருந்த ஒரே காரணத்தால் வாரா வாரம் போய் அவருடைய எட்டு வயது மகனுடன் வேண்டா வெறுப்பாகப் பழகியது.. பிறகு ஏதோ கடுப்பில் அழுக்குசாமி என்று அவர் வீட்டுச் சுவரில் எழுதியது.. கிறுஸ்துவர்கள் எல்லாரும் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யவே வந்தவர்கள் என்ற தீர்மானமான நம்பிக்கையுடன் வளர்ந்தது. சில மாதங்களில் மணிவண்ணன் அசோக் சாய் என்று எல்லோர் வீட்டிலும் டிவி வந்துவிட 'எங்க வீட்டுல வெஸ்டன் எங்க வீட்டுல டெலிரேட் எங்க வீட்ல க்ரௌன் எங்க வீட்டுல கோனார்க்' என்று அவரவர் பீற்றிக்கொள்ள, தன் வீட்டில் மட்டும் டிவி பெட்டி வராத காரணத்தைக் கேட்டு அழுதது...

வகுப்பில் அடித்தார் என்ற கடுப்பில் நண்பர்களுடன் இரவு பதினொரு மணிக்கு மேல் எத்திராஜ் டீச்சர் வீட்டு வாசலில் நின்றபடி அவர் வீட்டுக் கதவு மேல் மூத்திரம் போனது.. அதையெல்லாம் மௌனமாக கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் எத்திராஜ் என்பது தெரிந்து ரத்தம் உறைந்து ஓடிப்போனது.. மறுநாள் வகுப்பில் ஏதாவது சொல்வார் என்று தினம் பயந்து நடுங்கி உட்கார்ந்திருக்க எத்திராஜ் அதைப் பற்றிப் பேசவில்லை, பேசப்போவதில்லை என்பது புரியத் தொடங்கி.. திடீரென்று வாலிப முறுக்கு மனதுள் நிரந்தரமாகக் கட்டியது..

'ஸ்ரீமதிக்கும் துரைக்கும் இது, என் கண்ணால பார்த்தேன்' என்று கட்டிவிட்டது.. ஸ்ரீமதியின் மாமாவுக்குக் கோபம் வந்து 'இந்த மாதிரி உதவாக்கரைப் பிள்ளையை பெற்றது' பற்றி அப்பாவிடம் சண்டை போட்டது.. பிறகு ஸ்ரீமதி தன்னிடம் மாமாவைப் பற்றி ரகசியமாகச் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் பயந்து கொஞ்சம் வியந்து.. இதை துரையிடம் சொல்வதா கூடாதா என்று அவதிப்பட்டது.. மூன்று வருடங்களுக்குப் பின் ஸ்ரீமதி காணாமல் போனதும்..கடைசிவரை துரையிடம் சொல்லாமலே போனது எத்தனையோ வருடங்களுக்கு உறுத்தி, ஒரு வேளை அன்றைக்கே சொல்லியிருக்கலாமோ என்று வருந்தியது..

மாலதியின் பெரிய அண்ணனுக்கு டைனோரா என்று ஒரு டிவி கம்பெனியில் வேலை கிடைத்திருப்பது பற்றி ந்யூகாலனியே அதிர்ந்தது..

மணிவண்ணன் அம்மாவிடம் ஒரு முறை "மாமி, தயவு செஞ்சு மணியை எங்கூட அனுப்புங்க.. நாளைக்குக் கணக்கு பரீட்சை.. நான் பாஸானா அது மணிக்குத்தான் புண்ணியம்.." என்று சரடுவிட்டு மணியின் அம்மா உச்சி குளிர்ந்து மணியிடம் "போடா.. போய் சொல்லிக் கொடுறா.. தானத்துல பெரிசு ஞானதானம்" என்று ஏதோ சொல்ல.. வேண்டுமென்றே தடுத்த மணியிடம் "என்னடா பிகு பண்றே? உனக்கு படிப்பு நன்னா வரும்னு தானே அவன் கேட்கறான் பாவம்? போடா.. போய் ஒரு ரெண்டு மணி நேரம் சொல்லிக்கொடு போ" என்று தள்ள.. "இவனுக்கெல்லாம் படிப்பே வராதுமா.. எப்பவும் விளையாடினா படிப்பு எப்படி வரும்?" என்று மணி இன்னும் முறைக்க.. "போடா.. போய் சொல்லிக்குடுறா.. கெஞ்சறான் பாரு ரகு" என்று அவன் அம்மா எங்களை வெளியே தள்ள.. நாங்கள் நேராக லட்சுமிபுரம் ஓடி க்ரிகெட் மேட்ச் விளையாடியது தெரிந்து மணியின் அப்பா என் வீட்டுக்கு வந்து முறையிட.. 'அப்பா.. பேஸ் போலிங்க் போட ஆளில்லை மணியைக் கூட்டிட்டு வானு இந்த ஐடியா கொடுத்தது துரையும் மகேவும் தான்" என்று அவர்களை மாட்டி விட்டது.. பிறகு மணியின் அப்பா தன்னை எங்கே பார்த்தாலும் தெருவில் காறித் துப்பியது பிடிக்காமல் தானும் அவரைப் பார்த்ததும் துப்பத் தொடங்கியது..

ப்ளஸ் டூ என்று புதிதாகக் கல்வி முறை திருத்தம் வந்து என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று குழம்பியது.. தொடர்ந்து காமர்ஸ் சயன்ஸ் என்று பிரிந்தது.. நட்பு வட்டம் குறுகி விரிந்து குறுகி விரிந்து.. எங்கேயோ பட்டப் படிப்பு என்று மறைந்தது.. எங்கேயோ சுற்றி என்னவோ செய்து மீண்டும் குரோம்பேட்டைக்கே வந்தது..

சென்னையின் மாற்றங்களினூடே தன் வாழ்க்கை மாறியதை தினம் வியப்பது ரகுவுக்கு வாடிக்கையாகிப் போனது. எத்தனை நினைவுகள்! ஒவ்வொன்றிலும் ஒரு கதையெழுதலாம் என்று நினைத்துக் கொள்வான். பெரியவரின் கதை என்ன? நினைவுகளில் பெரியவரைத் தேட முயன்றுத் தோற்றான்.

    அன்று ரயில் நிலையத்துக்கு சற்று சீக்கிரமே வந்துவிட்டான் ரகு. பெரியவர் வழக்கம் போல் உட்கார்ந்து கொண்டிருந்தார். இன்று பேசி விடுவது என்று தீர்மானித்து, ப்ளேட்பாரம் கடந்து அவர் அருகே சென்றான். "ஹலோ சார்" என்றான். பெரியவர் பதில் சொல்லவில்லை.

ரகு விடாமல், "சார், நான் உங்களை தினம் இந்த இடத்துல பார்க்கிறேன். தப்பா நினைக்காதீங்க. நீங்க எங்க இருக்கீங்க? எதுக்காக இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க தினம்?" என்றான். பெரியவர் பதில் சொல்லவில்லை.

சற்றுப் பொறுத்த ரகு தயங்கி, "சார்.. உங்களை நாலஞ்சு வாரமா பாத்துட்டிருக்கேன். இன்னிக்கு என்னவோ உங்களோட பேசியாகணும்னு தீர்மானிச்சு இங்கே வந்தேன். தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்று விலகி நகர்ந்தான்.

"இங்கே தான்" என்றக் குரல் கேட்டுத் திரும்பினான்.

பெரியவர் அவனை நேராகப் பார்த்தார். "ஸ்டேஷன்ல தான் இருக்கேன். எந்த இடம்னு சொன்னா யாரானும் ஏதானு செஞ்சு எனக்குக் கஷ்டமாயிடும்.."

"என்ன சார் சொல்றீங்க? ஸ்டேஷன்லயா இருக்கீங்க?" ரகு திடுக்கிட்டான்.

"நான் சீனியர் சிடிசன். முதியவன். தீண்டத்தகாதவன். பழகத்தகாதவன். வாழத்தகாதவன். போகுற வயசாகியும் போகாத வயசுக்காரன். எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம். எனக்கு எல்லாமும் வீடு. எல்லாமும் காடு"

"மன்னிச்சுருங்க.. உங்களை பாத்தா.. நெவர் மைன்ட்.."

"என்னைப் பாத்தா என்ன? ஹோம்லெஸ்னு தோண மாட்டேங்குதா? வெல்கம் டு த ந்யூ வொர்ல்ட்... அதை விடுப்பா.. உன் பேர் என்ன? உன்னைப் பாத்தா அம்பது வயசிருக்கும் போலிருக்கு. இருந்தாலும் உன்னை நீ வானு சொன்னா கோவிச்சுப்பியா? ஐயம் செவன்டி செவன், யு ஸீ"

"அய்யோ.. அதெல்லாம் இல்லே சார்.. எனக்கு அம்பத்தஞ்சு... என்னை விட நீங்க ரொம்பப் பெரியவர்.. என்னை டா போட்டு வேணாலும் கூப்பிடுங்க" ரகு சற்று நெகிழ்ந்தான். "உங்களை இந்த நிலைல.."

"என் நிலைக்கென்னப்பா..?"

"இல்லே சார்.. நாலஞ்சு வாரத்துக்கு முன்னால புதுச்சட்டை போட்டுக்கிட்டு இங்க உக்காந்திருந்தீங்க.."

"சட்டை இப்போ பழசாப் போச்சுப்பா. உடம்பும் மனசும் என்னிக்கோ பழசாப் போயிடுச்சு. சில சமயம் பழைய சட்டையைக் கழட்ட முடியுது. சில சமயம் நாம கழண்டுக்கணும். அதுவரை பழைய சட்டை மாட்டிக்க வேண்டியது தான். எஸன்ஸ் ஆஃப் லைப்.. வாழ்க்கையின் சாரம்"

ரகு எதுவும் பேசாதிருந்தான். பெரியவர் தொடர்ந்தார். "பாவமெல்லாம் படாதேப்பா. இது நிதர்சனம். திஸ் டிபைன்ஸ் மி. இதோ இந்த அழுக்கான ஏகாந்தம் என்னை நான் விளக்கும் விளக்கம். யார் மேலாவது பாவப்படணும்னா தினம் கண்ணாடிலே பார்த்து பட்டுக்கப்பா.."

"என் பெயர் ரகு"

"அப்ப ரகுனே கூப்பிடறேன் சுருக்கமா" என்ற பெரியவரின் கண்களின் நக்கல் தொக்கியிருப்பதை இருப்பதைக் கவனித்தான். சற்று இருமலாகச் சிரித்தார். "ஊருக்குப் புதுசாப்பா?"

"இல்லே சார்.. இங்கேதான் வளர்ந்தேன்.. படிச்சு வெளியூர் போய்ட்டு பல வருஷம் கழிச்சுத் திரும்பி வந்தேன்.."

"ரொம்ப மாற்றம்... இல்லையா?"

"ஆமாம்" தலையாட்டினான். "உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்.. ஆனா ஞாபகம் வர மாட்டேங்குது"

பெரியவர் தயங்காமல், "நீ யாருனு எனக்குத் தெரிஞ்சு போச்சுப்பா" என்றார்.

"சொல்லுங்க சார்.. என்னைத் தெரியுமா? ஐ ஹவ் பீன் ட்ரையிங் ஹார்ட் டு ப்லேஸ் யு"

"கீப் ட்ரையிங்"

கைக்கடிகாரத்தைப் பார்த்த ரகு, "சார்.. மறுபடி கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க.. உங்களுக்கு வீடு இல்லையா? பிள்ளை பெண் யாரும்..."

"எதுக்கப்பா அதெல்லாம்? அவசியம்னா இன்னொரு நாள் பேசலாம்.. உன் ட்ரெயின் வருது பார்" என்று சுருக்கென்று எழுந்து கொண்டார் பெரியவர்.

"தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிருங்க சார்.. கண்டிப்பா இன்னொரு நாள் பேசலாம் சார்.. நான் அடுத்த ரயிலைப் பிடிச்சுக்குறேன்" மெள்ள நகர்ந்தான் ரகு.

    அதற்குப் பிறகு அடிக்கடி அவருடன் பேசத் தொடங்கினான் ரகு. எதையும் நேராகச் சொல்லாவிட்டாலும் பெரியவர் நிறைய விவரங்களைப் பகிர்ந்து கொண்டதே ரகுவுக்குப் போதுமென்றிருந்தது.

பெரியவர் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர். பெரிய வேலையில் இருந்தவர். ந்யூ காலனியிலோ ராதா நகரிலோ வீடு இருந்தது. பிள்ளைகள் நன்கு படித்து பெரிய வேலைக்குப் போனவர்கள். பெண் சில வருடங்களுக்கு முன் மார்பில் புற்று நோய் வந்து இறந்து விட்டாள். பெண் வயிற்றுப் பேரனின் ஒரு சிறிய கசங்கிய போட்டோ காட்டினார். ரகுவுக்கு ஏதோ பொட்டிலடித்தாலும் பிடிபடவில்லை. ஓய்வு பெற்ற அடுத்த வருடமே மனைவி இறந்து விட, சில வருடங்கள் காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், மானசரோவர், கைலாஷ் என்று சுற்றிவிட்டு வீடு திரும்பினால்... தன் அறையை ஒழித்து விட்டிருந்தான் மகன். பதிலுக்கு ஹாலில் ஒரு தடுப்பு போட்டு படுக்கை போட்டிருந்தான். பெரியவர் எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார். குரோம்பேட்டையில் வீட்டு விலைகள் ஆகாயத்தைக் கிழிக்க, பையன்களின் தொந்தரவின் பேரில் வீட்டை விற்றுக் காசாக்கி மகன்களுக்கு வீடோ மனையோ வாங்கப் பகிர்ந்து கொடுத்தார். ஒவ்வொரு மகனுடனும் சில மாதங்கள் தங்குவதாக ஏற்பாடு. சில வருடங்களுக்குள் மகன்கள் தத்தம் குடும்பக் கவனத்தில் இவரைக் கவனிக்காமல் விட்டனர். மனைவியிழந்து தனிமையில் இருந்தவரை ஒதுக்க இவருக்கு ஏற்பட்ட வெறுப்பில் உடனிருந்தவர்களுக்கும் வெறுப்பூட்டினார். மகன்கள் இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். திடீரென்று மாப்பிள்ளை ஒரு விபத்தில் இறந்து விட, முதியோர் இல்லத்திலிருந்து விலகிப் பெண் வீட்டில் பெண்ணுக்கும் வளரும் பேரனுக்கும் துணையாகத் தங்கினார். வாழ்க்கை மிதமான மகிழ்ச்சியுடன் துளிர்விட, பெண்ணுக்கு மார்புப் புற்று நோய் வந்த நிலையில் பேரப்பிள்ளையைக் கவனிக்கும் வேலையில் முனைப்பாக இருந்தார். நான்கு வருடங்கள் போல் அவதிப்பட்ட பெண் இறந்துவிட, வளர்ந்த பேரனுடன் சில காலம் இருந்தார். பேரன், "க்ரேம்ப்ஸ்.. நான் படிக்க வெளிநாடு போறேன்.. இந்த வீட்டை விற்கப் போறேன். நீ எங்கயாவது மாமாவுடன் போய்த் தங்கிக்கயேன்? ஐ வில் கிவ் யு சம் மனி" என்று சொல்ல.. மறுபடி ஒவ்வொரு மகன் வீட்டுக்கும் போனவர் அதிக நாட்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை. சென்னையிலிருந்த ஒரே மகன் அவரை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள.. மறுபடி முதியோர் இல்லம். இடையில் முதியோர் இல்லத்துக்கு யார் பணம் கட்டுவது என்று மகன்களுக்குள் சச்சரவு வந்து ஒரு மாதம் பணம் கட்டாமல் தவறிப் போக... இரண்டாம் இரவில் முதியோர் இல்லத்திலிருந்து நழுவி குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

"ஸ்டேஷன்ல தங்கியிருக்காருனு சொல்றாரே தவிர விவரம் சொல்ல மாட்டேங்கறாரு ரமா" என்றான் ரகு மனைவியிடம். "பாவமா இருக்கு"

"சும்மா இருங்க. இதெல்லாம் பாவம்னு பாக்க முடியாது. அவங்கவங்க வாழ்க்கை அவங்களுக்கு. ஹி குட் ஹெவ் லிவ்ட் வித் ஹிஸ் சில்ரன். "

"என்ன இப்படி பேசுறே ரமா? அவரோட பசங்க அவரை எப்படி ட்ரீட் பண்ணினாங்க பாத்தியா?"

"யாரு அவரை வீட்டை வித்து பசங்களுக்கு தானம் பண்ணச் சொன்னது? ஹி ஷுட் னோ இல்லையா? இந்தக் காலத்துல எல்லாரும் அறுபது எழுபது வயசு சாதாரணமா இருக்குறப்ப அவங்க தானே அவங்க பராமரிப்புக்கான பாதுகாப்பைச் செய்யணும்? இந்தக் காலத்துலயும் பசங்க செய்யணும்னு எதிர்பார்க்க முடியுமா? அந்தக் காலத்துல அவங்க அப்பாம்மா கூட்டுக் குடும்பம்னு இருந்தாங்கனா வெல் அண்ட் குட். இன்னும அதையே எதிர்பார்த்தா எப்படி? அவரோட பசங்க அவரை ஒண்ணும் தப்பா ட்ரீட் செஞ்சாப்புல தோணலிங்க. யாருக்குத் தெரியும்? வயசானா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்காம ஹி மைட் ஹவ் பின் எ ப்பெஸ்ட். சும்மா தொணதொணனு எங்க தாத்தா பேசிட்டேயிருப்பாரு.. இது குத்தம்.. அது சொள்ளை.. அந்த மாதிரி ஆளா இருந்திருப்பாரு"

"பாவம் பார்க்கக் கூடாதுனு சொல்றியா?"

"இருக்குற பாவத்தைப் பார்க்கவே நேரமில்லே.. அடுத்தவங்களைப் பாவம் பார்த்து பயன் இல்லேனு சொல்றேன். அடுத்த ஜெனரேஷனுக்குக் கவலையில்லே. நம்ம ஜெனரேஷனும் எதிர்பார்ப்பில்லாம முதியோர் இல்லம் அப்படி இப்படினு போயிருவோம். நமக்கு முந்தைய தலைமுறைல அப்பா அம்மா மாமா அத்தைனு இருக்காங்க பாருங்க.. ரொம்ப கஷ்டம்., அதுக்காகப் பாவம் பார்த்தா நமக்குத்தான் கஷ்டம். பாவம்னு பார்த்து பார்த்து என்ன செய்வீங்க? ஹவ் லாங்க் வில் யு பி வொரீட்?"

"அவரை இதுக்கு முன்னால நான் நிச்சயமா பாத்திருக்கேன். யு னோ, ஹி ரெகக்னைஸ்ட் மி. எனக்குத்தான் அவரைப் பிடிபடலே? தெரிஞ்ச மனுஷன்னு உள்ளுக்குள்ள முள் குத்துது ரமா.. அவருக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நினைக்கறேன்"

"அதனால? சும்மா இருங்க ரகு. எதுனா செஞ்சு தெருக் குரங்கை தலையில ஏத்திக்காதிங்க""

"ஒரு மனிதம் இன்னொரு மனிதத்துக்கு செய்யுற உதவி.. சக மனிதர் மேல ஒரு அக்கறை.. அவ்வளவுதான்"

"வேர் வில் திஸ் ஸ்டாப்? உங்க உதவியை அவர் ஏத்துகிட்டு மேலே எதிர்பார்த்தாருனா? உங்களால தொடர்ந்து உதவ முடியுமா?"

"ஐ டெல் யு வாட். ஜாயலுக்காஸ் தங்கப் புதையல் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு ரெண்டு டிகெட் வாங்கச் சொன்னே இல்லே? என் பரிசுச்சீட்டை அவருக்குக் குடுத்தா உனக்குப் பரவாயில்லையா? இட் இஸ் நாட் மனி"

"வாட் நான்சென்ஸ்!. பரிசு விழுந்தா இருபது பவுன் தங்கம்! டேமிட், இட் இஸ் மனி. ஒரு டிகெட் ஆயிரம் ரூபாய்னு வாங்கியிருக்கோம். எனி வே, உங்க டிகெட்டை என்ன வேணும்னாலும் செஞ்சுக்குங்க. ஆனா, டிகெட் குடுக்கறதுக்கு பதிலா பணமா கொடுத்தா பிச்சைக்காரனுக்கு உதவியா இருக்கும்.."

"பி சென்சிடிவ் ரமா.. பிச்சைக்காரன்னு எப்படி கூசாம பேசுறே?"

"ஓகே, லெட் மி ஸி. வீடு வாசல் கிடையாது, பிள்ளைங்க துரத்திவிட்டாங்க, ஸ்டேஷன்ல படுக்குறாரு, ஒரே சட்டையை ஒரு மாசத்துக்கு மேலே போட்டிருக்காரு.. ஸ்மெல்ஸ் லைக் ஷிட். மஸ்ட் பி ஷிட்.."

"மை குட்னஸ்! நீயா இப்படி பேசுறே?" ரகுவுக்குக் கோபம் வந்தது. கோபம் வந்தால் தம்பதிகள் உடனே ஒருவரை விட்டு விலகி சிறிது தனிமை தேடுவது பழகிப்போய், சட்டென்று அறையை விட்டு விலகினான்.

சிறிது பொறுத்து அவனருகே வந்து, "புண்படுத்திட்டனா? சாரி" என்றாள். மனைவியின் இடுப்பை இழுத்துக் கொண்ட ரகு, "நீ ப்ரேக்டிலா பேசினது என்னோட ஐடியல் மனசுக்குப் பிடிக்கலே.. நீ சொல்றாப்புல இது தெருக் குரங்குனாலும்... ஏன்னு தெரியலே எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு"

"டெல் யு வாட்.. பரிசுச் சீட்டுக்குப் பதிலா பத்தாயிரம் பணம் கொடுப்போம்.. ஓகே?"

"இல்லே ரமா. பணம் கொடுத்தா வாங்க மாட்டாரு. பரிசுச் சீட்டைக் கூட வேண்டாம்னுவாரு. எனி வே, கல்கத்தா செமினார் போயிட்டு அடுத்த வாரம் திரும்பி வரேன்ல.. வந்தப் பிறகு அவர் கிட்டே பணமோ டிகெட்டோ கொடுக்கறேன்.. வாங்கிட்டா சரி, இல்லின்னாலும் சரி.."

"அதுக்குள்ளே குலுக்கல் முடிவு தெரிஞ்சுடும். ட்ரா ஒண்ணாம் தேதி. உங்க டிகெட்டை தான் தரதா சொல்லியிருக்கிங்க நினைவுல வைங்க" என்றாள். "இதோ, ரகுனு உங்க பெயரை பென்சில் செஞ்சிருக்கேன் பாத்துக்குங்க.."

    கல்கத்தா மேனேஜ்மென்ட் ஸ்கூல் செமினாரில் இந்தியப் பெண்களின் மேலாண்மைத் திறனை உயர்த்தும் வழிகள் பற்றி ரகு பேசுகையில் செல்போன் ஒலித்தது. பேச்சை முடித்துக் கொண்டு அழைத்தவரை அழைத்தான். "என்ன ரமா?"

"ரகு.. உங்க சீட்டுக்குப் பரிசு விழுந்திருக்கு. இருபது பவுன் தங்கம்".


[தொடரும் சாத்தியம்: 90-100%]