2014/07/28

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    



லுக்ரீசின் சாபம் [6-15]

6
அடங்கியும் அடங்காத
அந்தப்புறக் கிசுகிசுப்பென
அசை போட்டு நடந்தது
அரசினத் தளிர்.

துணை வந்தக் காவலரும்
ஆவலரும் ஏவலரும்
அணைகட்டிய ஆறென
எல்லையில் நின்றனர்.

ஏவல் பேடிகள்4 இருவரை
சேவகராய் வரச்சொல்லி
அஞ்சாமல் முன் சென்றான் செஸ்டஸ். அவனை
ஒட்டிப் பின் தொடர்ந்தான் கொலாடின். விடாமல்
விட்டுத் தொடர்ந்தனர் விடலையர் பிறர்.

நடுவில் நடந்த
ஜூனியஸின் மனதில்
படிந்தது ஒரு கேள்வி.
வலையில் சிக்கியப் பூச்சியை நோக்கிக்
கலையாத கவனம் கொண்ட சிலந்தியின் பயணமாய்
நிலையாக. மெள்ள. தெளிவாக.
ஒரே ஒரு வரம்.

உடன் வந்தோரின்
தீப்பந்தங்கள்
அருகில்
கொள்ளிவாயென எரிந்து
தொலைவில்
மின்மினியாய் மறைந்தன.

நகரம்
கடந்த கிராமம்
கடந்தக் கா
கடந்த காடு
எனச் சுற்றி
பல நாட்கள் நடந்தபின்
பனிமலையின் காலடியில்
காளையரின் காலடி.

நிலவை விழுங்கிய இரவு.
சலவை செய்தத் தரையில்
படர்ந்த வெண்பனி
பரப்பிய வெளிச்சம்.
சிறுத்தைத் தோல் போர்த்தினாற்போல்
கருவானமெங்கும் ஒளிப் புள்ளிகள்.

அடிவாரத்தை
நோட்டமிட்டான் கொலாடின்.
'இங்கே தங்கலாம்' என்றான்.

'ஆகட்டும்!' என்ற
செஸ்டஸின் ஆணையில்
அஞ்சி நடுங்கிய
அடிமை அலிகள்
பள்ளம் வெட்டி
விறகுத்தூள் பரப்பி
அகண்ட தீ மூட்டி
அத்தர் திரவியம் தூவி
அமைதியாய் ஒதுங்கினர்.

படுத்தது தீயைச் சுற்றிப்
பதின்ம வயதுக் கூட்டம்.

உறக்கம் வரவில்லை.
உற்சாகத்தின் எல்லை.

'விடியுமுன் மேலேறி
வேண்டிய குறி கேட்போம்.
பொழுதைக் கழிக்கச் சற்றுப்
பழங்கதை பேசுவோம்'
என்றான் கொலாடின்.

7
'கிரேக்கப் பித்தியாவில்5
தொடங்கியது குறி தேவதை.
சரியாகக் குறி கேட்கத் தவறினால்
கண்களைக் குதறிடுமாம் தேவதை'
என்றான் ஒரு அரசின இளைஞன்.

'என் பாட்டனார்
குறி கேட்டக் கதை கேளீர்.
தூணில் இருந்த மண்டையோடு6
துடிப்போடு அசைந்திறங்கி
தன்முன்னே வந்ததென்றார்'
என்றான் செஸ்டஸ்.
'ஆ!' என்று
அலறியோரை அடக்கி,
'கேளீர்.
அசைந்து வந்த மண்டையோடு
முகத்தை உரசி நகைத்தது.
என் பாட்டனார்
வீரர்களில் உயர்ந்தவர்.
மண்டையோட்டை அழுத்தி
வலது காலில் நசுக்க
அடுத்த மண்டையோடு
அலறியபடி இறங்கியது.
அவரைச் சுற்றி
தீப்பொறியாய்த் துப்பியது.
கலங்காத வீரரான என் பாட்டன்
அடங்காத மண்டையோட்டை
இடது கையால் ஓங்கியடித்து
இடது காலில் இட்டு அழுத்தினார்'
என்றான்.
'மேலும் சொல், மேலும் சொல்' என
நெருங்கியக் கூட்டம் கண்டுப்
பெருமையுடன் செருமினான் செஸ்டஸ்.
'இரு காலால் இரு ஓடுகளை அழுத்தி
நின்ற என் பாட்டனைப் பார்த்து
பெருங்கோபத்துடன் இறங்கியது
மூன்றாவது மண்டையோடு.
முறைத்தது. முன்கோபத்தில் முரண்டது.
'என் நண்பர்களை விடு,
உன்னை உயிருடன் விடுகிறேன்' என்றது.
பாட்டன் சிரித்தார்.
'நீ குறி சொன்னால், அதிலும்
நல்ல குறி சொன்னால்,
உன் நண்பர்களை விடுவேன்.
அன்றேல் அழுத்திப் பொடி செய்வேன்'
என்று பாட்டனார் மேலும் அழுத்தினார்.
மண்டையோடுகள் அஞ்சிக் கெஞ்சின.
'விடியப் போகிறது.
குறி சொன்னால் உன் நண்பர்கள்
பிழைத்துப் போவர்.
தவறினால் விடிந்ததும்
உன்னையும் என் கைகளால்
அழுத்திக் கொல்வேன்'
என்று அஞ்சாநெஞ்சன்
என் பாட்டன்
உறுதியாக நிற்க,
இளகி வந்தது
மூன்றாவது மண்டையோடு.
உயிர்ப் பிச்சை கேட்டு
உன்மத்தமாய் ஓலமிட்டது
குறி தேவதை.
மூன்று மண்டையோடுகளையும்
விடுதலை செய்தார் பாட்டனார்.
ஓடுகளும்
தப்பினால் போதுமெனத்
தூண்களில் ஏறின.
குறிதேவதையின் குரல்
இங்குமங்கும் ஓலமிட்டது.
பின்னர் தெளிவாக,
மூன்று திங்கள் பொறுத்து
மன்னராவாய் என்றது.
தொடர்ந்தது
என் பாட்டனாரின் வரலாறு'
என முடித்தான் செஸ்டஸ்.

'வீரப் பரம்பரை!' என்றுப்
புகழ்ந்தது அரசினம்.

'வீரப் பரம்பரை ஒரு நாள்
விதிப்படி அழியும் என்றும்
விவரமாகக் குறி சொன்னது'7
என்றான் ஜூனியஸ்.
மெள்ள.

'என்ன உளறுகிறாய்?' அரற்றினான் செஸ்டஸ்.

'ஆமாம் சகோ,
பாட்டன் பேச்சை மறந்தாயா?'
என்ற ஜூனியஸைச்
சுற்றியது அரசினக் கூட்டம்.
'அப்படியா? நீ சொல்லு.
அரச பரம்பரை அழியுமா?'.

ஜூனியஸ் அமைதியாகப் பேசினான்.
'ஆம். தேவதையின் குறிப்படி
பைரவன் பேசிடும் கட்டம்
பரம்பரை அழியும் திட்டம்'.8

சொல்லி முடித்த ஜூனியஸை
தயங்கிப் பார்த்தது கூட்டம்.
ஓகோவெனச் சிரித்தது.
'முட்டாள்களின் அரசன்
மூடர்களின் தலைவன்' எனத்
தலையிலும் வயிற்றிலும்
தரையிலும் வானிலும்
அடித்துத் தாளாமல் சிரித்தனர்.
'நாய் பேசினால்
பரம்பரை அழியுமா?
முட்டாள்.
எனில் அழிய வாய்ப்பே
இனியிலையென்று பொருள்.
இதையறியாத நீ
முட்டாள். மூடன்.
உனக்கெதற்கு குறி தேவதை?'
என்று
செஸ்டஸ் இளப்பம் காட்ட
அனைவரும் ஜூனியஸை
வேடிக்கை பாதி வேதனை மீதியெனக்
கூடிக்கூடிக் கேலி செய்தனர்.
கேலியின் களைப்பில்
கண் சாய்த்தனர்.

8
எங்கோ ஊளையிட்ட ஒநாய் ஒன்று
எழுப்பியது அனைவரையும் அவசரமாய் நன்கு.
களைப்பாற
மூலிகை நீர் கொணர்ந்தனர்
அலிகள்.
முகங்கழுவி முடிசீவி
முறையாக உடையணிந்து
குறிகேட்கத்
தயாரானது அரசினம்.
அலிகளை
அடிவாரத்தில் அமரச்செய்து
குருடர் போல் கோல் பிடித்து
இருளில் மலையேறினர்
மன்னர் மக்கள்.

உச்சிக்கு வந்த
கொலாடின்
சுற்றிலும் பார்த்துச்
சமாதானமானான்.
எதிரே தெரிந்த
குறி தேவதைக் கோயிலைக் கண்டான்.
'வாருங்கள்' என்று
மற்றவரை அழைத்தான்.
வந்தனர்.
வாய் பிளந்த குகையைக் கண்டு
வாய் பிளந்தனர்.

9
முப்பெரும் தூண்கள்.
தூண்களிடைப் பாறைச்சுவர்.
சுவற்றுக்குப் பின்புறம் எரிதணல் ஒளி.
மேலெழுந்தப் புகை
தூண்களைச் சுற்றியக் கொடி போல் படர்ந்தது.
தூண்களின் உச்சியில் மேடை.
மேடைகளில் மண்டையோடு.
வாய் பிளந்த மண்டையோடுகளின் வழியே
பேய் நுழைவது போல் வெளியேறிய புகையும் ஒளியும்
பிள்ளைகள் மனதில் பயமூட்டின.
அமைதியாக ஒவ்வொருவரும்
ஒரு காணிக்கையைச்
சுவற்றுக்குப் பின்புறம்
எரிகின்ற தணலில் எறிந்தனர்.
'குறிதேவதைக்கு வணக்கம்' என்றனர்.
அமைதியாகக் காத்திருந்தனர்.

மெள்ள வீசியக் காற்றுடன்
மோக விளையாட்டு ஆடியது புகை.
இங்கொரு தழுவல். அங்கொரு சீண்டல். பின்னொரு விலகல். மீண்டும் தழுவல்.
ஒட்டிவந்தத் தணல் ஒளியில் புகையின் காமம்.
திட்டமின்றிப் பிள்ளைகள் பார்க்கையில் திடுமென
வெட்டறிவாள் விழுந்த கன்று போல்
ஓரகில் தேவதை ஓலமிட்டாள்.
சிங்கத்தின் வாயில் சிக்கிய சிறுநரி.
இறந்து பிறந்த பிள்ளையைக் கண்டத் தாய்.
பிறந்த காரணம் புரியாதப் பிள்ளை.
பாலுக்கு அழும் சேய்.
நூலுக்கு அழும் அறிஞன்.
பொங்கியெழும் பெண்ணின் சீற்றம்.
வெற்றிக் கெக்கரிப்பு.
பற்றறுத்தப் பரதேசியின் மௌனம்.
நீண்ட ஆயுளின் வலி.
நிறைந்த கலவியின் ஆனந்தம்.
அத்தனையும் கலந்து
பித்தியா தேவதை ஓலமிட்டாள்.
மேடையில் ஓடுகள் தாளமிட்டன.

'அரசாளும் தகுதியோடு வந்திருக்கிறேன்.
தரமானக் குறி சொல்ல வேண்டும்' என்றான் செஸ்டஸ்.

'அரசனைக் கேட்டால் ஆண்டி மேலென்பான்
ஆண்டியைக் கேட்டால் அரசு வேண்டுமென்பான்.
ஆண்டியாகும் வலிமையிருந்தால்
அரசையாளும் பொலிவும் பெறலாம்'
என்றுச் சிரித்தது ஓரகில்.

சீறினான் செஸ்டஸ்.
'ஏய்! பிணந்தின்னும் பிசாசே!
நல்ல குறி சொல். இல்லை உன் மண்டையோடுகளை
நான் மண்ணில் புதைப்பேன்!'.

பயமின்றி இளித்தது ஓரகில்.
'பாட்டனின் பேரனா? வந்தாயா?
சொல்கிறேன். குறி சொல்கிறேன்.
முகத்தைப் பார்த்துச் சொல்கிறேன். கேள்.
முத்தத்தில் உள்ளது மகுடம்'.
பித்தச் சிரிப்பு.
பேய்ச் சிரிப்பு.
மண்டையோடுகள் ஆட
மனதை உலுக்கும் சிரிப்பு.
'முத்தமிடு முடிசூடு முத்தமிடு முடிசூடு'.
தணல் தீடீரென்று திக்கெங்கும் தீயாக
அணலைக் கூட்டும் எக்காளச் சிரிப்பு.
கழிந்த ஊழியின் அமைதி.

பழிக்கும் தேவதை குறி கேட்டு
விழித்தான் கொலாடின்.
வெருண்டான் செஸ்டஸ்.
குழம்பினான் ஜூனியஸ்.
தயங்கினர் பிறர்.

முயலின் குட்டி போல்
முனகிய தேவதை
மெள்ளக் குரலுயர்த்தியது.
'ஆம். முத்த மகுடம்.
முடியாளு முன்னே
முத்தமிட வேண்டும்.
தாயைத் தழுவியவள் கட்டியவள்
வாயிலே முத்தமிடுவோன்
விடியலில் உலகை வென்று
துடிப்புடன் தரணியாள்வான்.
உங்களில் ஒரு தங்கம்
முத்தமிடுவார், முடியாள்வார்'.

குறி நின்றது.
தீயும் தணலும் அணைந்தன.
தூணசைய மண்டையோடுகள் மறைந்தன.
அயர்ந்துறங்கும் கிள்ளையின்
மூச்சொலி போல்
முனகல் மட்டும்.
தீயில் வேகும் இறைச்சியின் வாடை
மேவிய காற்றின் ஓசை.
செவிடரின் அமைதி.

அரசினப் பிள்ளைகள்
விரசலாய் விலகினர்.

10
மலையிறங்க முனைந்த
மன்னர் மக்கள்
முத்தக் குறியில்
சித்தம் குழம்பினர்.
'முத்தத்தில் உள்ளது மகுடம்'
பித்தியாவின் குரல் முனகலாய்.

'நானிடுவேன் என் தாயை முத்தம்!' என்று
பதவி வேகத்தில் ஓடத்தொடங்கிய
செஸ்டசைத்
தொடர்ந்தனர் பிறர்.
நடுவில் நடந்த
ஜூனியசைத் தள்ளினர்.
இடறி விழுந்த ஜூனியஸ்
தடுமாறிப் புரண்டு உருண்டான்.
கலங்காமல் அவனை மிதித்து ஓடினர்
அலட்சிய அரசினர்.
ஒருமணி பொறுத்துத்
திரும்பிய கொலாடின்
மண்ணில் கவிழ்ந்து
புண்பட்டுக் கிடந்த
நண்பனைக் கண்டான்.
மேலேறி வந்து
கோல் கொடுத்து கைத்தாங்கலாய் எழுப்பினான்.

ஜூனியசின்
கை ஒடிந்திருந்தது.
முடி குலைந்திருந்தது.
முகம் சிவந்திருந்தது.
முகமெல்லாம் மண்.
மண் மறைத்தப் புண்.
ரத்தக்காயங்கள் நிரவியிருந்தன.

'வா' என்றழைத்த
கொலாடினின் கைபிடித்துக்
காலெடுத்தான்
ஜூனியஸ்.

11
அரச மருத்துவர்
அமைதியாக
விவரம் கேட்டார்.
ஓய்ந்திருந்தப் பிள்ளையின்
காயங்களைக் கட்டினார்.
தாயைத் தனிமையில் அழைத்தார்.

'என்னருமை யூரிதி!
உன் பிள்ளை உன்மத்தனல்ல' என்றார்.
'என்ன சொல்கிறீர் மருத்துவரே?'
என்று கேட்ட அன்னையை அடக்கினார்.
'அமைதி. யூரிதி, அமைதி.
தேவதையின் குறியைக் கேட்டாயா?
தாவி வந்துத் தாயை முதலில்
முத்தமிட ஓடியவர்கள்
மத்தியிலே உன் பிள்ளை மட்டும்
புத்தியினால் பயன் பெற்றான் யுரீதி
புத்தியினால் பயன் பெற்றான்!
அனைவருக்கும் தாயாவாள் பூமி.
அசல் தாய் அவள் ஒருத்தியே.
புவனம் அத்தனையும் ஈன்றெடுத்தாள்.
அவளை இவன் முத்தமிட்டான்.
முகத்தின் காயம் முத்தத்தின் காயம்.
விழுந்தவன் தொழுதவன்.
இவன்
உதட்டின் ரத்தம் நம்
தாயின் முத்தம்'.

திடுக்கிட்டாள் யூரிதி.
திடமாய்ச் சொன்னார் மருத்துவர்.
'ஆம் மகளே!
நீதியின் வேகம்
நத்தையின் வேகம்.
நீண்ட விரல்களின் நிற்காத பொம்மலாட்டம்.
வேண்டியபடி உன் மகன் முடியாளலாம்.
இது நீயும் நானும் நம் தாயும் அறிந்த ரகசியம்.
முத்தமிட்ட இவனை இனி
பித்தனாகவே இருக்கச் சொல்.
சத்தியம் இவனைச் சந்திக்கும் வரையில்
பித்தனுக்குப் பெரும் பாதுகாப்பு'
நன்றுரைத்து மருத்துவர்
சென்று மறைந்தார்.

12
காற்றானது காலம்.
வளர்ந்தனர் பிள்ளைகள்.
வாலிப வேகமும்
வாழ்க்கையின் வேகமும்
நண்பர்களை நெருக்கியது. விலக்கியது.

வளர்ந்து இளவரசான செஸ்டஸ்
பெருமுடி பெறுமுன்
ஒருமுடி அனுபவம் பெறக்
குறுநில மன்னன் ஆனான்.
தந்தையைத் தொடர்ந்து
முடிசூடத் தயாரானான்.
மதுவும் மாதும் மன்னருக்கழகென
புதுப் புதுக் கலைகள் பழகினான்.

இளவலின் தளபதி கொலாடின்.
இணைபிரியா நண்பனுமானான்.
அழகுத் தேவதைக் குழம்பு
இளம் பூக்களின் பிழம்பு
லுக்ரீஸ் என்னும்
இனிமைப் பெண்ணின் இதயக்கனி.
இதய அதர உரிமையாளன்.

மக்களுக்காக மக்களால் மன்னனேயன்றி
மன்னனுக்காக மன்னனால் மக்களல்ல
என்னும் பகுத்தறிவுத்
தத்துவங்கள் பேசித் திரியும்
பித்தனென்று ஊர் சிரித்தாலும்
மன்னர் குலமென்ற மரியாதையுடன்
தன்னந்தனியே வாழ்ந்தான் ஜூனியஸ்.

13
பதவி மோகம்
புறக்குருடனாய் பகை வளர்க்கும்
அகக்குருடனாய் அமைதி கெடுக்கும்
புதைகுழி
பரம்பரையை அழிக்கும்
தீராப்பிணி
நாராசம்
தனிமையின் விதை
மனிதத்தின் விழல்.

சிற்றப்பன் லூசியஸ் பதவி மோகத்தின் அதிபதி.
ஒட்டு மொத்தக் குத்தகையாளன்.

மாபெரும் எனும் அடைமொழி
விளக்காது தன்னை,
அளவிற் சிறியதென்னும்
அகந்தையுடையோன்.

அங்கிருந்தும் இங்கிருந்தும்
நாடுகளை இணைத்து
பெருஞ்சீசரின் கனவில்
இருமாந்திருந்தான்.

அடுத்தவர் நாடும் அடுத்தவர் மனையும்
எடுத்தவர் என்றும் கெடுத்தவர் ஆவர்.

தலைவனை மீறிய நெறிகள் இல்லையென
செருக்குடன் நடந்த லூசியஸ் மன்னன்
இருக்கும் நாடுகள் போதாதென்று
இன்னொன்றன்மேல் ஆசை கொண்டான்.

யுரீதியின் தந்தை மேல் போர் தொடுத்தான்.

முறையிட்டாள் யுரீதி.
மறையோதினான் லூசியஸ்.
'மாறுகிறது காலம்.
ஒரு குடையின் கீழ்
நாடுகள் இருக்க வேண்டும்.
மக்களை அடக்க முடியாமல்
சிக்கித் தவிக்கிறான் உன் தந்தை.
அவனுக்கு இது விடுதலை'.

மனம் வெறுத்த யுரீதி
மகன் நினைவில் ஒதுங்கினாள்.

கடுமையான போர்.
மகன் செஸ்டஸ் முன் நின்று போரிட்டான்.

போர் முடியும் தறுவாயில்
அரிதியா நகருக்கு
இளவலை அனுப்பிய லூசியஸ்
'மகனே, இது உன் பேரரசின் துவக்க விழா.
அரிதியா நகர ஆக்கிரமிப்பு.
இங்கிருந்து தொடங்கு உன் அரசை.
அரிதியாவில் அரியணை அமை.
சுற்றிலும் சீராக்கு.
வெற்றியுடன் திரும்பி வா.
பேரரசின் முடிசூட வா'
என்று ஆசி கூறித் திரும்பினான்.

14
அரிதியா தலைநகர்.
ஆயிரம் வீரர்களுடன் போர்.
அரிதியாவை அசர வைத்தான் கொலாடின்.
யுரீதியின் தந்தையை வென்றான்.

சிறை பிடித்த மன்னவனின்
கறை படிந்த சிரத்தைக் கொய்து
'இந்த வெற்றி உனக்கான என் பரிசு' என்று
முந்தி வழங்கினான் இளவலிடம்.

உயிர் நண்பனின் செய்கையில்
உவகை கொண்ட செஸ்டஸ்
உலகறியக் கூவினான்.
'என் நண்பன்!
என் உயிர்!
இனியவன் இனியிவன்
என் பேரரசின் பெருந்தளபதி!'.
தன் விரலையும் கொலாடின் விரலையும் கீறிக் குருதி கலந்தான்.
உன்னுயிர் என்னுயிரென்றான்.
நட்பின் சங்கமம் என்றான்.
'என் பேரரசின் தலைநகர்
உன் பெயரில் இனி
கொலாடியம் என வழங்கும்'.
நண்பனைக் கட்டினான்.
நாடு காணக் கட்டினான்.

15
எரிந்தது அரிதியா.
போரின் வெப்பம் தணியவில்லை.
மன்னனை இழந்த அரசு
மானத்தை இழக்க மறுத்தது.
இன்னும் போர் என்று இழுத்தது.

செஸ்டஸும் படையும்
இறுதி வெற்றிக்காக
உறுதியாகக் காத்திருந்தனர்.

களைப்பகலக் கூடாரத்தில்
மதுவும் மங்கையும் இருந்தாலும்
மன்னனும் நண்பனும் மக்களும்
மனம் சோர்ந்திருந்தனர்.

போருக்குத் துணைவந்த
ஓரூர் சிற்றரசன்
மாறுதலுக்கு இன்று நம்
மனைவி பற்றிப் பேசுவோமென்றான்.
'இனிமைகளைப் பேசுவோம்.
தனிமையினைப் போக்குவோம்' என்றான்.

வரிசையாகப் பேசினார்கள் வீரர்கள்.
மதுவின் போதையிலே
தத்தம் மனைவியரின்
அழகையும் அறிவையும் கற்பையும் பற்றி
பொழுதெல்லாம் பேசினார்கள்.

அள்ளவியலா லுக்ரீஸின் அழகைச் சொல்ல
மெள்ளத் தொடங்கினான் கொலாடின்.


லுக்ரீசின் சாபம் [16-18]


4 இளவல்களையும் இராணிகளையும் பாதுகாக்கப் பேடிகளை நியமிப்பது எகிப்து, கிரேக்க, ரோம் அரசினர் வழக்கமாக இருந்தது.

5 கிரேக்க வரலாற்றில் பித்தியா எனும் குறிதேவதை ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பின் உடலில் புகுந்தவள். பாறைகளுக்குப் பின்னால் அருவமாகவும் உருவமாகவும் இருந்து பித்து பிடித்தாற்போல் குறி சொன்னவள்.

6 குறி தேவதையின் இருப்பிடம் பொதுவாக ஒரு குகை வாயில், மூன்று தூண்கள், தூண்களை இணைக்கும் பாறைச்சுவர், மற்றும் தூண்களின் தலைமேடையில் ஒரு மண்டையோடு எனச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

7 நல்ல குறி சொல்லும் தேவதை, சொன்ன வேகத்தில் கெடுதலும் சொல்லும். குறி கேட்டு வந்ததும் நல்லதை அல்லது சாதகமானதை பொதுவில் அறிவிப்பதும், தீய குறிகளை மிக நெருங்கியவர்கள் தவிர யாருக்கும் தெரிவிக்காதிருபப்தும் அரச வழக்காக இருந்தது.

8 ரோம் மன்னரகளின் அழிவை இரண்டு தீய குறிகள் முன் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
    - நாய் மனிதக் குரலில் பேசும்
    - தாய் உதட்டில் தனயன் முத்தமிடுவான்
இரண்டும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சொன்னதாகவும் நடந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. இடறி விழுந்து அழுந்தி முகத்திலும் உதட்டிலும் அடிபட்டு ரத்தக்காயம் பெற்ற நிகழ்வு, பூமித் தாயைத் தொட்டு முத்தமிட்டதன் குறி. ஷேக்ஸ்பியர் கதையில் இது மட்டுமே வருகிறது. கூடுதல் சுவைக்காக தமிழ்க் கதையில் இரண்டையும் இணைத்துள்ளேன். மனிதக் குரல் நாய் பின்னால் வரும்.

2014/07/26

ஆயிரம் தடவை சொன்ன மாதிரி


    ந்தப் படங்கள் கார்னெகி மெலன்/பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகச் சுற்றுப்புறக் காட்சிகள். (சில படங்களை ஜூலை PITக்காக எடுத்தேன். அனுப்ப வேண்டிய தேதி மறந்து போயி. வயக்கம் போல).

வலது முனை நகல். எதிரேயிருந்த கட்டிடக் கண்ணாடி ஜன்னலில் தெரிந்த பிம்பம்.

தெருவுக்கொரு தீயணைப்புக் குழாய். தலைக்கொரு வண்ணத் தொப்பி.

பெயரறியாப் பூக்கள். (ஸ்ரீராம் கமென்டியதும் ராமலக்ஷ்மி அருளுவார் :-)

வரிப்பூ. இல்லை, வண்ணத்துப்பூச்சி.

அம்மம்அ உணவகம்.

இரவும் பகலும் - நெருங்கினாய் விலகினாய் நெருங்கினாய் விலகினாய். நினைவுகளின் சல்லடை.

இரவும் பகலும் - தொங்கும் தீ.

இரவும் பகலும் - திண்டுக்கல் வேலி.

ஏன் கண்ணை மூடினீர் அம்மா?

நல்ல வேளை சொன்னார்கள். u talk flang bro?

எழுத்தறிவிப்பது டைனொசராகும்.

பல்மேன் பேட்மேன்.

மஞ்சள் வண்டி. மாமியார் வீடு.

முன்னேற்றத்துக்கு வருந்துகிறோம்.
கமல் கேள்வி:
எலக்ட்ரிக் காரை
தண்ணில ஓட்னா
ஷாக் அடிக்குமா?

வானமும் பூமியும்.

காணக் கண் ஒரு கோடி வேண்டும். எது மெய்? ஜன்னலா சுவரா?

இரு கோடி வேண்டும். உடனே தொலைந்து போக வரம் கொடு தாயே.

பல கோடி வேண்டும். என்றும் தொலையாதிருக்க வரம் கொடு தாயே.

2014/07/21

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    



லுக்ரீசின் சாபம் [2-5]

2
சிங்கங்கள். சிறுத்தைகள். நரிகள். நாகங்கள்.
சில பசுக்கள். புறாக்கள்.
அரசினப் பிள்ளைகள் கூட்டம்.

பனிமலை தேவதையிடம்1
தனிமையில் குறிகேட்கச் செல்லும்
பனிரெண்டாம் வயதுப் பருவம்.

'நான் குறிகேட்டு ஆளாகும்
அவசியம் இல்லை' என்றான் செஸ்டஸ்.
'நான் கேட்பேன். நல்லதொரு குறி சொல்ல' என்றான் ஜூனியஸ்.
'மூளை வளருமா என்றா?'
பதிலுக்கு செஸ்டஸ் வாய்திறக்க
பக்கமெல்லாம் பஞ்சுவெடிச் சிரிப்பு.
'என்ன கேட்கப் போகிறாய்?' ஆவல் பூசிய கேலி.
'வளர்ந்தொரு நாள் புவியாள்வேன் எனும் நம்பிக்கை மெய்யாகுமா?' என்றான் ஜூனியஸ்.

தகர உருளை தரையில் ஓடும் சிரிப்பு.
கட்டிவைத்தப் பசுவின் மேல் கல்லெறியும் வீரம்.
'கோமாளிகளின் தலைவனாவாய்'
'புவியாளும் ஆசையைப் பார். காலொடிந்தவன் ஓடலாமா?'
'ஜூனியஸ் ஓ ஜூனியஸ். சிரித்துச் சிரித்து எமக்கு நெஞ்சு வலி'
'கோமாளிகளின் தலைவன் ஜூனியஸ்'
சிறகொடிந்தப் புறாவைச் சுற்றிக் கெக்கலிக்கும் பருந்து.
'ஓ. நிச்சயம்'. குரல் மாற்றிக் குறி சொன்னான் செஸ்டஸ். 'முட்டாள்களின் அரசனாவான் இந்த மூடன்'.
பாசிக்குளத்தில் தவளைகள் இரைச்சல். இடையே
பாறையில் மோதும்
பேரலையோசை.
'அறியாது பேசுகிறான். பொறுங்கள்'.
கொலாடினின் வெண்கொடி.
'அறியாமையறிவது அறிந்தவர் கடமை.
சுற்றம் பகைப்பது சூரியனைப் பகைப்பது.
இவன் நம் நண்பன்.
நட்பறிந்து நடப்போம்'.
நகையாட்டம் நின்றது. ஜூனியசைப் பிரித்தான்.

'ஆ! நண்பா!
இன்று நீ மட்டும் இல்லையெனில்
இவனுக்கு மூளைகுறை என்பது உலகறியாது போயிருக்கும்'
செஸ்டஸ் உறுமினான்.
'என் வருங்காலத் தளபதி கொலாடின்!
ஆருயிர் நண்பன்!
நீயும் அரசினம். அதற்காக அரியணை விரும்புவாயா?
இவனுக்கு ஏன் அந்தப் பகற்கனவு?'

'கனவு கண்களுக்குப் பொதுவன்றோ?
ஏன்? எனக்கென்ன குறை?'
ஜூனியஸ் வெம்பினான்.
மழை ஓய்ந்தாலும் மரங்களின் சாரல்.
வெப்பம் தணிந்த சூடு.

'ஜூனியஸ்! உன் வாயே உனக்கு வியாதி' சிரித்தான் செஸ்டஸ்.
'முட்டாள். அறிந்து கொள். என் தந்தையைத் தொடர்ந்து அரியணை ஏறுவது நானடா'.

'ஏன் நான் ஆளக் கூடாதா? உன் தந்தை என் சிற்றப்பா. வயதில் உன்னை விட மூத்தவன் நான்'

'வயதுக்குப் பதவியென்றால் இங்கே மரங்களன்றோ அரசாளும்?'

உடனிருந்தோர் சிரித்தார்கள்.
'வானத்தைச் சுட்டினால் விரலைப் பார்க்கிற வீணன்' என்றார்கள்.
'முட்டாள்' என்றார்கள். 'மூடன்' என்றார்கள்.
'நீ அரசினம். அரச பரம்பரை.
அறிவில் பெருங்குறை. ஆற்றலோ அதில் பாதி.
முட்டாள் குழியின் அடிமண்.
குலத்தின் அவமானக் கொடி' என்றார்கள்.
'எடைக்கு எடை பொன் கொடுக்கும் விழாவில் உன் மூளையைக் கொண்டு போகாதே' என்றார்கள்.
கைகொட்டிச் சிரித்தார்கள்.

அரசினப் பிள்ளைகள் கூட்டம்.
ஆணவச் சோற்றின் ஊட்டம்.

3
'அம்மா அம்மா!' என்றழுத ஜூனியஸை
அணைத்தாள் அன்னை யூரிதி.
விவரம் கேட்டாள்.
அன்னையின் அணைப்பும் ஆதரவு மொழியும்
வாடிய பயிருக்கு உரமும் நீரும்.
தேடிய கண்களுக்குத் தேவனின் உருவம்.

'மேதகு ஜூனியஸ் ப்ரூடஸ்2 - எனக்கு நீ என்றும் அரசன் தானே?
மழைக்கேது எல்லை மகனே?
காலம் ஒரு கருமேகம். காத்திரு'
மார்போடு அணைத்தவள்
மனதோடு மூட்டினாள் தீ.

4
கிண்டல் செய்தான் சிற்றப்பன். அசல் மன்னன் லூசியஸ் டார்க்வின்.
'யூரிதி.. உன் மகன் கருவான நேரம்
கடவுள் மூளைக் கடையை மூடிவிட்டார்'.
குலுங்கிச் சிரித்தான்.
மகன் செஸ்டஸ் சொன்ன விவரம் சொன்னான்.
'யூரிதி.. உன் மகன் உன்மத்தன்..
ஜூனியஸ் புவியாளக் குறி கேட்பானாம். ஏன் இந்தப் பேராசை?'

'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
என் மகனின் அறிவு
ஆயிரம் சூரியனை அடக்கும்
எனினும்
அறியாது பேசியிருந்தால்
அன்போடு பொறுத்திடுங்கள்' என்றாள் யூரிதி.
அச்சம் கொண்ட அன்னை.

'சிறகைக் கடன்வாங்கிப் பறந்தாலும்
சிறுபுறா கழுகாமோ?
என் மகன் நாளைய அரசன்.
உன் மகன் அவனுக்குப் பணியாள்.
இது குலவறம்.
மீறினால் கலவரம்'
எக்காளச் சொல் பேசினார்.
எள்ளல் முள் வீசினார்.
'உன் மகனை வெயிலில் அனுப்பாதே.
பித்தம் சற்றுப்
பிறருக்கும் பிடிக்கட்டும்!'.

பத்தாண்டுகளுக்கு முன்
பித்தாண்டவன் இந்த லூசியஸ்.
ஒரு வயிற்றில் ஒரு குருதியில் ஒரு உணர்வில் உடன்பிறந்த
அண்ணனை
அவன் இளம் மனைவியும்
இரண்டு வயதுக் குழவியும்
கதறுகையில்,
அவர்கள் கண்ணெதிரே கொன்று
அவன் சிற்றரசைச் சேர்த்தவன்.
நாடாளும் வெறியன்.
பெருமானின்3 பிறவியென்று
பெரிதாக எண்ணுபவன்.
குருதியில் ஆணவக் கேணி.
மனிதத்தோல் மிருகம்.

'யூரிதி!'
லூசியஸ் பொங்கினான்.
'உன் கணவனுக்கு நானளித்த வரம்
உம்மிருவர் உடலின் உரம்.
உயிர் பிச்சை.
நினைவில் வை'.
புயல் கண்ட கடலின் சீற்றம்.
'குறிகேட்கப் பிள்ளைகள்
பனிமலை போகட்டும்.
உன் மகனும் அரசினம்.
என் மகனுக்கு
சில மாதங்கள் முன்னவன்.
அனுமதிக்கிறேன்.
ஆனால் என்
நா கொடுத்த உயிரை
உன் மகனின்
நா கெடுக்கச் செய்யாதே!'
குடிகாரக் குரங்கின் சிரிப்பு.
'ஆயிரம் சூரியன் அறிவெல்லாம்
அகத்துள்ளே இருக்கட்டும்.
வெளியே அந்த அறிவொளி
வெட்க வெளிச்சமாக இருக்கிறது.
ஆயிரம் சூரியனும்
அவன் மூளையை
உருக்கி விட்டதோ?
தாங்க முடியவில்லை
உன் மகனின் அறிவு வெப்பம்!'.
இடியெனச் சிரித்தான்
தடியன்.

5
நள்ளிரவில் குறிகேட்க
நாள் குறித்துச் சொன்னார்கள்.

பண்டிதரும் ஜோசியரும்
பாவலரும் ஏவலரும்
பொதுமக்கள் பலபேரும்
வழியனுப்பி வைத்தார்கள்.

செஸ்டஸைச் சுற்றி
அரசினப் பிள்ளைகள்.

பின்னிரவில் குறிகேட்க
முன்னிரவில் புறப்பட்டது
பன்னிருவயதுக் கூட்டம்.

உச்சிமுகர்ந்த நினைவூறக்
கண்மறைவில் வாழ்த்தினாள்
யூரிதி.
ஜூனியஸின்
பேதைத் தாய்.
கண்மூடி
மனந்திறந்து
மகனுக்காக வேண்டினாள்.
'கடவுளே!
என் உயிரின் கண்களுக்கு
காட்சிகள் கடந்த
பார்வையைக் கொடு'.

லுக்ரீசின் சாபம் [6-15]


1 ஓரகில் எனப்படும் தேவதையிடம் குறி கேட்கும் கிரேக்க அரசர்களின் பழக்கம், ரோம் அரசர்களுக்கும் இருந்தது. பெருஞ்சீசர் என்று வழங்கப்பட்ட ஜூலியஸ் சீசர் மற்றும் அவரைத் தொடர்ந்த சில அரசர்கள் இதைக் கடைபிடிக்காவிட்டாலும், பின்னாள் அரசர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். ஆண்களுக்குப் பனிரெண்டு வயதானதும் தொலைதூரப் பனிமலைக்கு அவர்களைத் தனிமையில் அனுப்பிக் குறி கேட்கச் சொல்வார்கள். வாலிபப் பருவத்தை எதிர் நோக்க ஒரு பயிற்சியாகவும் இதைக் கருதினார்கள்.

2 ஜூலியஸ் சீசரைக் கத்தியால் குத்திய ப்ரூடஸ் வேறு நபர்.

3 பெருமான் என்பது இங்கே கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட ஜூலியஸ் சீசரைக் குறிக்கிறது. பெரும் வல்லமை படைத்த சீசரின் மறுபிறவியாகவே தன்னைக் கருதினான் லூசியஸ்.

2014/07/19

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    


லுக்ரீசின் சாபம் [1]

1
விதியின் கைகளில்
வண்ணக் கலவை.
எறிவதற்கான சுவர்
எதிர்வரும் எதிர்பார்ப்பில்.
எறிந்த வண்ணக்குழம்பு
ஓவியமாகுமா
என்பதில் விதிக்கு அக்கறையில்லை.
ஓவியமாக்குவது அதன் வேலையில்லை.

வெற்றி தோல்வியில்
அக்கறையில்லாது
எறியும் பகடையில் குறியாயிருக்கும்
விதி.

வெற்றியும் தோல்வியும்
மனிதரின் வலி.
விளையாட்டு மட்டும்
விதியின் வழி.

இரும்பும்
துரும்பும்
சந்தித்தால்
எது வெல்லும்?

விதியின் பகடை எப்படி உருளும்?

சந்திப்பவை மட்டும்
இரும்பும் துரும்பும்.
சந்திக்கும் களத்தையும் சந்திப்பையும்
உருவாக்குவது
விதி.

அலையடர் பெருங்கடலில் சந்தித்தால்
காணாமல் பயணம் போகும் இரும்பு.
கோணாமல் பயணம் போகும் துரும்பு.
கடற்களப் போரில்
இரும்பை வெல்லுமே
சிறுமரத் துரும்பு.

பெருங்கடலில்
துரும்பின் சாகசம் தெளிவாவது
துரும்பினாலா இரும்பினாலா?
விதியினாலா?

வாழ்க்கை
ஒரு பெருங்கடல்.
விதி
பெருங்கடற்ப் பேரலை.

அலையின்றிக் கடலில்லை.
கடலின்றி அலையில்லை.
அலைகடலுள் உறங்கும் கடலலை.
கடலலையில் விளங்கும் அலைகடல்.

இங்கே துரும்புகளின் பயணங்கள்
சில நேரம்
சாகசங்களின் அரிச்சுவடியாகின்றன.

துரும்புடன் மோதி இரும்படையும் காயம்.
வலியோரை எளியோர் வெகுண்டடக்கும் மாயம்.


லுக்ரீசின் சாபம் [2-5]

2014/07/17

லுக்ரீசின் சாபம்


[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    


லுக்ரீசின் சாபம் [அறிமுகம்]

    கொடுமைக்குள்ளான/ஆகும் பெண்களை அறிவோம். தனக்கோ தன்னைச் சார்ந்தவருக்கோ ஏற்பட்ட அவமானத்தைக் கண்டுப் பொங்கி எழுந்து ஊரழித்த/அழிக்கும் பெண்களையும் அறிவோம்.

ஏதோ ஒரு வகையில் தன் ஆளுமைக்குட்பட்ட பெண்களை, ஆதிக்கத்தின் பிடியில் சொல்லொணாக் கொடுமைக்குள்ளாக்கி, பின் கொடுமைக்குள்ளான பெண்ணையே அவமானப்படுத்தி, அனாதரவாகத் தெருவில் நிறுத்தி, இன்னும் அவமானப்படுத்துவதாக அச்சமூட்டி அந்த அச்சத்தில் தன் வீறாப்பை எழுப்பி... கேவலமான சுய இன்பம் கண்ட/காணும் ஆண்களை அறிவோம். பெண்களைக் கண்களாகப் போற்றி பாசம், காதல் மற்றும் கடவுள் உணர்வுகளில் ஒளிகூட்டி பேரன்பின் உச்சத்தில் வைத்து ஆராதித்த/ஆராதிக்கும் ஆண்களையும் அறிவோம்.

எழுதப்பட்ட சரித்திரங்கள் சில, இரு தரப்பினரையும் அடையாளம் காட்டி வந்துள்ளன. எழுதப்படாத சரித்திரங்கள் பல, தினசரி வாழ்வின் புழுதியில் அடையாளமின்றிப் புதைந்தும் போகின்றன. தினசரி தேவதைகளின் சரித்திரங்கள் எழுதப்படாமலே போவதன் அநீதியை மறக்கவோ மறவாதிருக்கவோ, சில எழுதப்பட்ட சரித்திரங்கள் துணைக்கு வருகின்றன.

இது அத்தகைய ஒரு பெண்ணின் கதை. அல்ல, சரித்திரம்.

கொடுமைக்குள்ளான பெண்ணின் சாபம் சாம்ராஜ்ஜியத்தையே அழிக்க வல்லது. ஒரு சாதாரண ஆண் எம்மாத்திரம்? பணமோ பதவியோ எதுவுமே அந்த ஆணைக் காப்பாற்றப் போவதில்லை. பெண்ணின் சாபம் தீயாக மாறுகையில் அக்கிரமக்காரர்கள் அழிகிறார்கள். சில பெண்களின் சாபம் அடங்கியிருக்கும் தீபமாவதும் உண்டு. அதைத் தீயாக்கி, அக்கிரமங்களை அழிக்க ஏதுவானவர்களும் உண்டு. இந்தக் கதையிலும், அல்ல சரித்திரத்திலும், அத்தகைய நபர்கள் உண்டு.

சரித்திரம் ஒரு சாகரம். மிகச் சுலபமாக மூழ்கிப் போகலாம். மிகச் சுலபமாக மூழ்காமலும் நீந்தலாம். முத்தெடுக்கலாம்.

இது அத்தகைய முத்து.

சேக்ஸ்பியர் எழுதிய 'லுக்ரீசின் கற்பழிப்பு'.

சேக்கு எழுதியவற்றுள் நான் படித்த அத்தனையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஐந்து: ஹேம்லெட், மெர்சென்ட் ஆஃப் வெனிஸ், மேக்பெத், மெரி வைஃப்ஸ் ஆஃப் வின்ட்ஸர், ரேப் ஆஃப் லுக்ரீஸ். எத்தனையோ காவியங்கள் எழுதிய சேக்கு இரண்டை மட்டும் வசன நடையில் எழுதினார். ஒன்று லுக்ரீசின் கற்பழிப்பு. சேக்கு கையாண்டிருக்கும் உவமைகளும் உருவகங்களும் அற்புத ஆகாயத்துக்கும் உயரே.

கற்பழிப்பு என்பதும் ஒருவகையில் உருவகம். தன்மானத்துடன் சுய மரியாதையுடன் வாழ முடியாமல் ஏச்சுக்கும் பேச்சுக்கும், வெளிப்படையான அல்லது மறைமுக வன்முறைக்கும், அடங்கிப் போகும் எந்தப் பெண்ணும் ஏதோ ஒரு வகையில் கற்பழிக்கப்பட்டவளாகிறாள். ஆணாதிக்கம் என்பது கணவன் காதலன் தகப்பன் தனயன் என்ற உருவத்தில் மட்டுமே காணப்பட வேண்டியதில்லை. சமூகத்தின் எந்தத் தட்டிலும், உள்ளும் புறமும், காணப்படுகிறது. எளிமைக்கும் கீழே அழுத்தப்பட்டவர்கள் மௌனமாக அழும்பொழுது அது கற்பழிப்பைப் போன்றக் கொடுமையானதொரு வலியின் வெளிப்பாடாகும். இது பரவலாகப் புரியாமலே போவதில் புதைந்துள்ள அபத்தமும் அநீதியும் எத்தனை காவியங்கள் யார் எழுதினாலும் வெளி வாரா.

இது சேக்குவின் லுக்ரீஸ். தமிழில் என் முயற்சி. தொடராக எழுதத் தொடங்கினால் முடிப்பதற்குள் சில சபலங்கள் குறுக்கிடுகின்றன. அல்லது சோம்பல். அப்படியே நின்று போவதில் எனக்கு விருப்பமில்லாததால் லுக்ரீஸ் என் மனதுள் கிளறிய சிந்தனைகளை எனக்கு மட்டுமே வைத்திருந்தேன். எழுதுவதா வேண்டாமா என்ற கேள்விப் பென்டுலம் அடங்க சில ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.

சில ஆக்க உரிமைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொன்றிலக்கியத் தீவிரவாதிகள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். மன்னிக்க இயலாவிட்டால் அருகில் வரவும் - மண்டையில் ரெண்டு போடுகிறேன். எச்சரிக்கை: சேக்குவும் என்னுடன் சேர்ந்து இரண்டு போடுவார். அமானுஷ்ய மண்டையடி.

என் வசன கவிதை புரியாமல் போகும் சாத்தியத்தில், இதோ கதைச் சுருக்கம்:

(தற்காலத்துக்கு முந்தைய) த.மு 500ம் வருடவாக்கில் ரோம் நகரப் பின்னணியில் நடைபெறும் கதை.

மன்னன் மகன் செஸ்டஸ் டார்க்வின். அவன் உயிர் நண்பனும் தளபதியுமான கொலாடின். இருவரும் ஒரு போர் நாள் மாலையில் உரையாடுகிறார்கள். கொலாடின் தன் மனைவி லுக்ரீசின் பிரிவைப் பொறுக்க இயலாமல் அவளைப் பற்றி நண்பனான இளவரசனிடம் விவரிக்கிறான். லுக்ரீசின் அழகையும் அங்க அடையாளங்களையும் சீண்டல்களையும் காதலையும் கொலாடின் ஏக்கத்துடனும் தாபத்துடனும் விவரமாக எடுத்துச் சொல்லச்சொல்ல, இளவரசன் செஸ்டஸ் மனமிழக்கிறான்.

மனைவிகளின் நடத்தையைப் பார்வையிடும் சாக்கில் போர்க்களத்திலிருந்து விலகி லுக்ரீசைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செஸ்டஸ் போதையேறி எப்படியாவது லுக்ரீசை அடையத் தீர்மானிக்கிறான். நண்பன் என்ற சாக்கில் அவள் வீட்டுக்குப் போகிறான். இரவின் மயக்கத்தில் அவளை நெருங்குகிறான். பேதை வெருண்டு ஒதுங்குகிறாள். இளவரசன் என்ற ஆணவத்தில் அவளை அடங்கச் சொல்லி, மறுத்தால் அவள் மேல் பழி சுமத்துவதாக மிரட்டுகிறான். கருணை காட்டும்படி கதறியவளைக் கற்பழித்துக் குதறுகிறான். பிறகு இரவின் போர்வையில் மறைந்து போர்க்களத்துக்கு வருகிறான் - அவனுடைய குற்றம் இரவிலும் நிழலாகத் தொடர்வதை அறியாமல்.

பொழுது விடியக் காத்திருக்கும் லுக்ரீசுக்கு இனிப் பொழுதே விடியாதென்பது புலப்படுகிறது. மனதுக்கினியவனைத் தழுவியவள் மரணத்தைத் தழுவத் துடிக்கிறாள். அதற்கு முன் மன்னர் வம்ச முகத்திரையைக் கிழிக்கத் தீர்மானிக்கிறாள். நடந்தவற்றை ஒரு ஓலையில் எழுதி வைக்கிறாள். நடத்தியவன் விவரத்தை மட்டும் மறைத்து வைக்கிறாள். தனிமையில் ஒதுங்கித் தினம் தன்னைச் சித்திரவதை செய்து கொள்கிறாள். இடையே கணவன் கொலாடின் திரும்பி வருகிறான் - ஆசை மனைவியைப் பிரிந்திருக்க முடியவில்லை. ரகசியமாக வந்தவன் ரணகளத்தைப் பார்க்கிறான். போர்க்கணைகள் தொடுத்தவன் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான். பேச மறுக்கும் லுக்ரீஸ் தான் எழுதிவைத்த ஓலையைத் தருகிறாள். கையெழுத்தைப் படித்துத் தலையெழுத்தைப் புரிந்து கொள்கிறான் கொலாடின். நெஞ்சிலே ஈட்டி நுழைந்தாற் போல் துடிக்கிறான். 'யார்? யார்?' என்று ஆத்திரத்தில் வெடிக்கிறான். தனக்கிழைக்கப்பட்ட துரோகத்துக்கு பழி வாங்கியே தீரவேண்டும் என்ற சபதத்தைப் பெற்றுக் கொண்டதும் பேதை, கோழையின் பெயரைக் கணவனிடம் சொல்கிறாள். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியினால் தன் உயிருக்கு விடுதலை கொடுக்கிறாள்.

கோபத்தில் வெடிக்கிறான் கணவன். அவமானத்திலும் துடிக்கிறான். கொல்லத் துணிகிறான். சாகவும் துணிகிறான். நண்பனைக் கொன்றானா? தற்கொலை புரிந்தானா?

நீதிக்கு முக்காடா அல்லது மகுடமா? விதி உருட்டிய பகடையாட்டத்தில் வெற்றி பெற்றது யார்?


லுக்ரீசின் சாபம் [1]


2014/07/16

ஆஸ்மா கிணறு


    நான் யார்?

நான் ஒரு வாசி. வாசி என்றால்? இருப்பதால் வாசியா? இயங்குவதால் வாசியா? குழப்பமாக இல்லை? பாருங்களேன். நாம் உயிராக, பிறவியாக அல்லது ஆன்மாவாக, எது வசதியோ எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு உடலுக்குள் இருப்பதால் உடல்வாசியாகிறோமா? உடல் ஒரு வீட்டுக்குள் இருப்பதால் வீட்டுவாசி? வீடு ஒரு ஊருக்குள் இருப்பதால் ஊர்வாசி.. இப்படி எத்தனை அடுக்குகள் போவது? அடுக்குவாசி? ஹ்ம். எதிலோ எங்கோ வசிப்பதால் மட்டுமே வாசியா? எனில் நான் ஒரு கிணற்று வாசி. பெரிய அகலமான ஆழமான கிணற்று வாசி. வாழ்க்கை, உலகம், அண்டம் எல்லாமே ஒரு கிணறு என்ற வேதாந்தப் பார்வையில் சொல்லவில்லை. உறவு, நெறி, ஒழுக்கம் எல்லாமே ஒரு கிணறு என்ற சித்தாந்தப் பார்வையிலும் சொல்லவில்லை. இது அசல் கிணறு. பிரம்மாண்டமான ஆழமான கிணறு. சுவர் இருக்கிறது. நீர் இருக்கிறது. இங்கிருந்து மேலே பார்த்தால் அகண்ட வானத்துண்டு தெரிகிறது. எனக்கென்னவோ இது கிணறு போலவே தெரிகிறது. எங்கோ மேலிருந்து சிறிய கீற்றாக ஒளி. அவ்வப்போது வந்து விழுந்து மறையும் நிழல் மின்னல். நான் நிச்சயமாக கிணற்றில் வசிக்கும் ஏதோ ஒரு இனம். எனில் நான் யார்? நீரா? நீரில் மிதக்கும் காட்டுக் கொடியா? கொடி படரும் சுவரா? சுவரிடுக்குத் தவளையா? நீர் மேல் படிந்த கறையா? சுவரோரம் படிந்த பாசியா? நிரவியிருக்கும் தூசியா? தூசியின் மணமா? ஒருவேளை.. எந்த வகை வாசி என்பதை விட, நான் வசிப்பது எந்த வகைக் கிணறு என்பது பொருத்தமான கேள்வியோ? எனில் எந்த வகைக் கிணறு? நீர் இருப்பதால் இதைக் கிணறு என்கிறார்களா? எனக்கென்னவோ இங்கு தேங்கியிருக்கும் நீரை விட, காற்றே அதிகம் என்று தோன்றுகிறது. காற்று தேங்கிய இடத்தைக் கிணறு என்பதில்லை - நீர் இருந்ததாலோ இருப்பதாலோ மட்டுமே இதைக் கிணறு என்கிறார்களோ? புரிந்தாற் போலிருக்கிறது. என்ன புரிந்தது என்பது மட்டும் புரியவில்லை. என்னைப் போல இன்னும் நிறைய வாசிகள் புரிந்து கொள்ளும் முயற்சியில் இருப்பதை உணர்கிறேன் ஆனால் என்னை அவர்களோ அவர்களை நானோ அடையாளம் காண முடியாததில் வியக்கிறேன். அருகில் இருப்பது திருநாவுக்கரசர் என்னும் பட்டாபி என்னும் நம்பியார் என்னும் எழிலரசியாக இருக்கும் சாத்தியத்தில், சாத்தியம் கடந்த வியப்பும் தொக்கி நிற்பது எத்தகைய முரண்?

நான் யார் என்ற கேள்விக்கே வருகிறேன். திரும்பத் திரும்பம்ருதிரும்பம்ருதிரும்ப. இதோ இதே இடத்தில் இங்கே இப்படியே இருந்தபடி காலங்காலமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் இதே கேள்வி. எனில் நான் வசிப்பது காலக்கிணறாக இருக்கவேண்டும். அல்லது கேள்விக்கிணறோ? வற்றாது கேட்டுக் கொண்டிருக்கிறேனே?

ஷ்! தொலைவில் காலடியோசை.. பேச்சுக்குரல்.

"யப்பா சீனூ.."

"என்னண்ணே?"

"அது யாருப்பா உனக்கு முன்னால போவுறது?"

"உஷாண்ணே"

"தெரியுதுபா.. நாங்கள்லாம் ஓட்டலுக்குப் போறப்ப நைசா நழுவுறியே? அதுவும் வயசுப்பொண்ணைக் கூட்டிட்டு.."

"ஸ்ஸு.. அண்ணே.. உஷா நான் கட்டிக்கப் போறவதாண்ணே.. சும்மா இருங்கண்ணே.. இப்படிக் கூவி ஊரைக் கூட்டாதீங்க.. பேசாத வேன்லயே போய் உக்காருங்க.."

"வேன்ல யாருமில்லபா.. எல்லாம் ஓட்டலுக்குள்ள போயிட்டாங்க.. நாம ஒண்ணா வந்தது ஊர் சுத்திப் பார்க்க இப்படி தனியா நழுவ இல்லடே."

"அண்ணே.. போங்கண்ணே.. நாங்களும் பத்து நிமிசத்துல வந்துர்றோம்.. அதா பாருங்கண்ணே.. ஏதோ கிணறு போலருக்குது.. எவ்வளவு பெரிய கிணறு பாருங்கண்ணே.."

"அது ஆஸ்மா கிணறுடா.."

"ஆஸ்மா கிணறா? என்னண்ணே வாணம் விடுறீங்க?"

"ஆமடா. இங்க்லிஸ்காரன் காலத்துக்கு முன்னாலந்து இருக்குதுனு சொல்வாங்க. அந்தத் தண்ணியக் குடிச்சா ஆஸ்மா வியாதி வரும்னு ஊர்ல சொல்லிக் கேட்டிருக்கேன்.. எதுக்குடா வியாதின்னு அந்தப் பக்கமே போவலே.. இப்ப நாப்பது வருசம் கழிச்சு வந்தா ஊருக்கு கிணறு அப்படியே இருக்குது பாரேன்.."

"சரிண்ணே.. பெரிய கிணறுனா அதுல நிறைய வசதி இருக்குண்ணே. நாங்க கிணத்துக்கு அந்தாண்டையா ஒதுங்கிட்டு வந்துர்றோம்.. ஜல்தியா ஒரு ஜல்சாண்ணே.."

"ஜல்சா கில்மானு புதுசு புதுசா என்னவோ சொல்றீங்கடா.. கொஞ்சிட்டு வரேன்னு அழகா தமிழ்ல சொன்னா என்னா? சரி சரி சீக்கிரம் வந்து தொலைங்க.. மத்தவங்க வரப்ப துணியில்லாம நின்னிங்கன்னா அசிங்கமாயிரும்.. வெளியிலயே கொஞ்சுங்க புரியுதா? கிணத்துல இறங்கிறாதிங்க.. நான் தாண்டே டூர் கேப்டன்.. உங்களையெல்லாம் பொறுப்பா ஊர்ல சேக்க வேணாம்? எனக்கு நீச்சல் வேறே தெரியாதுடா.. ஏம்மா நீ தான் சொன்னா கேக்ககூடாதா? ஆம்பிளக்கு சமமா இறங்குறியே.. என்னடி பொண்ணே சிரிக்கிறே..? கல்யாணம் கட்டி ரூம் போட்டுக் கொஞ்சக்கூடாதா? சரி.. சீக்கிரம் வந்து தொலைங்க"

"வந்துர்றோம் பாலண்ணா".

.
.
.


அமைதி. அமை. அ.

யாரோ நெருங்கி வருகிறார் போல் அமைதியழிக்கும் ஓசை. மெள்ள அதிகரிக்கிறது. அலை போல் அங்கே இங்கே தாவுகிறது.

"உஷா.. நில்லு.. கிணத்தைச் சுத்தி ஓடாதே.. சொன்னாக் கேளு.."

"ஓடி வந்து என்னைப் பிடி பாக்கலாம்.. கையைப் பிடிச்சா பெறவு கட்டிப் பிடிக்கலாம்"

"இத்தாம் பெரிய கிணத்த சுத்தி ஓடிப் பிடிச்சாடவா வந்தோம்? மத்தவங்க வரதுக்குள்ளாற ஒரு தடவை என் நாக்கோட சேத்தாப்புல ஒரு கிஸ் தருவியா?"

"ஐ.. என் மூஞ்சிலயே முழிக்காதடி முண்டைனு வாய்ல நரம்பில்லாம பேசிட்டு.. இப்ப என்னவாம்?"

"நாக்குல நரம்பில்லாமனு சொல்லுடி. சரி, அதான் எத்தனை மன்னிப்பு கேட்டேன்?! சத்தியமா இனி உன் மேலே சந்தேகமே வராதுடி. என்னை மன்னிச்சுரு. உன் மேலே எனக்கிருந்த ஆசையும் பிடிப்பும் அப்படி சந்தேகமா மாறிடுச்சு. சத்தியமா சொல்றேன். உன்னைப் புரிஞ்சுக்காத நான் குருடன். தரித்திரம். கேனக்.."

"சரி சரி. இன்னொரு தடவை அப்படி எதுனா சந்தேகப்பட்டு கன்னாபின்னானு பேசினா இந்த மாதிரி கிணத்துல.."

"ஐயோ வேணாம்டி.. குதிச்சு வக்காதே.. நான் செஞ்சது தப்பு"

"ஐ.. நான் ஏன் குதிக்கணும்? உன்னைத் தள்ளிடுவேன்னு சொல்ல வந்தேன்.. ஆளைப்பாரு! என்னை என்ன இளிச்சவாயினு நினைச்சியா? நீ இல்லாம என்னால இருக்க முடியும் தெரியும்ல?"

"தெரியும்டி என் ராணி. உன்னை சந்தேகப்பட்ட எனக்கு உன் மூஞ்சியைப் பாக்கவே அருகதையில்லே.."

"அது.."

"அப்ப வேறே எதையாவது பாக்குறனே..?"

"ச்சீய்"

"ஓடாதடி. கிட்ட வாயேன்.. கிணத்தை சுத்தி ஓடுறப்ப இப்படி குலுங்குறியேடி.. தாங்கலியே.. என்னைக் கொஞ்சம் கட்டிக்கயேன்"

"ச்சீபே.. அதெல்லாம் மாட்டேன்"

"உஷா.. இங்கருந்து பார்த்தா இந்தக் கிணறு எவ்ளோ பெரிசா இருக்குது பாரேன்.. இங்கே வா.. கிட்ட வா"

"மாட்டேன்றன்ல? வந்தா நீ சும்மா இருப்பியா? எதுனா செய்வே.. அங்க இங்கே தொடுவே.. தடவுரேன்னு தொந்தரவு செய்வே.. அப்புறம் எனக்கு மாரெல்லாம் முறுக்கிக்கிட்டு பேஜாராயிடும்.."

"ஐயே.. என்னவோ இதெல்லாம் உனக்குப் பிடிக்காதது போல பேசுறே. உன்னைத் தொட்டா எனக்கு மட்டும் எல்லாம் அடங்கியா இருக்கப் போவுது? கிளப்பிவிட்டுக் கிளம்புற ஆளாச்சே நீ? இப்ப நீ பக்கத்துல வரலின்னா நான் கிணத்துக்குள்ள குதிச்சுருவேன்.. குதிச்சுரவா?"

"ஏய்.. இரிரு.. வேணாம் வரேன்.. அட.. அப்படி எட்டிப்பாக்காதே.. உள்ளே விழுந்துறப் போறே.."

"ஏன்? விழுந்தா என்னைத் தூக்கிட மாட்டியா?"

"எனக்கு நீச்சல் தெரியாது"

"கவலைப்படாதே.. நீ விழுந்தாலும் நான் காப்பாத்திருவேன்.. உஷா.. எத்தனை ஆழத்துல தண்ணி இருக்குது பாரேன்.. ஒரே பாசி.. காட்டுச்செடி.. இருந்தாலும் அழகா இருக்குது.. சிவப்புலயும் மஞ்சள்லயும் சின்னச் சின்னப் பூவா எத்தனை அழகா இருக்குது பாரேன்.. உனக்காகப் பறிச்சுட்டு வரவா?"

"வேணாம் சீனு.. லூசாட்டம் எதுனா செய்யாதே.. அப்படிக் கிணத்துள்ள குனியாதே.. ப்லீஸ்.. இது விளையாட்டுல்ல".

சட்டென்று மேலே பார்த்தேன். குனிந்து பார்த்துக் கொண்டிருந்த உருவத்தை.

"சீனூ.. ஏய்.. உள்ளே குனியாதன்னு சொன்னன்ல?.."

"சீனு.. அதான் பக்கத்துல வந்துட்டன்ல.. சும்மா கிணத்தைப் பாத்துட்டா இருக்கப் போறே?.. சீனு.. சீனா... என்ன ஆச்சு? ஏன் என்னை என்னவோ போல பாக்குறே?.."

"சீனு.. என்னாச்சு? ஏன் இப்படி நடுங்குறே? எனக்கு பயமாயிருக்கு.. வா.. போயிரலாம்.."

"சீனு.. சீனூ.. ஐயோ.. ஐயோ.. பேச்சு மூச்சு காணோமே.. யாராவது ஓடி வாங்களேன்.. பாலண்ணே.. சீனுவை பாருங்கண்ணே.. பொணமாட்டம் விழுந்துட்டான்.. ஐயோ.. பாலண்ணே.. சித்ரா.. சுப்பு.. யாராவது வாங்களேன்.. ஹெல்ப்! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! சீனு.. சீனு.. எந்திரிடா.. விளையாடேதாடா.. எந்திரிடா.. ப்லீஸ் எந்திரிடா.."

எழுந்தேன்.

என் பெயர் சீனுவா? நன்று.

எத்தனை காலமாக நான் யாரென்று தேடிக்கொண்டிருந்தேன்! இதோ இவன் தான் நானா? இரண்டு கைகள் இரண்டு கால்கள் சிறிய தொப்பை முடியடர்ந்த மார்பு என்ற அடையாளங்களுடன் கூடிய கண்ணாடியணிந்த பரட்டைத்தலை ஆணா நான்? நன்று. தொடர் கேள்வி கேட்காதிருப்பது மேலும் நன்று.

சுற்றிலும் பார்த்தேன். சேரன் கிணறு! சட்டென்று அடையாளம் தெரிந்தது. ஆ! இங்கே எப்படி வந்தேன்? ஷ்ஷ்ஷ்ஷு. இனிமேல் கேள்விகள் கேட்கப் போவதில்லை. உடனடியாக விலக எண்ணி நடந்தேன்.

போகிற போக்கில் ஒரே ஒரு கேள்வி.

என்னைத் தடுத்து நிறுத்தி, "தடிமாடு.. நான் எப்படி நடுங்கிட்டேன் தெரியுமா? இப்படியா பயங்காட்டுவாங்க? நீ செத்துட்டேன்னு நினைச்சேண்டா.." என்று என் மார்பில் வேகமாகக் குத்தும் இந்த இளம்பெண் யார்?

ஏதாவது பதில் சொல்லலாமென்றால் குரலே எழும்பவில்லை. ஏனோ மிகுந்த முயற்சியிலும் வெறும் கனைப்பு மட்டும் ஒலிக்கிறது. தவித்தேன்.

"என்ன குதிரையாட்டம் கனைக்கிறே? ஏண்டா அப்படி செஞ்சே? கேக்குறேன்ல? எதுனா சொல்லேன்?" என்று என் முகத்தை நேராகப் பார்த்தாள்.

வேண்டாம் பெண்ணே. என்னை நேராகப் பார்க்காதே.

"ரொம்ப மோசம்டா நீ. இப்படிக் கலங்கடிச்சுட்டல்ல? சீ.." என்னைக் கட்டிக் கொண்டாள்.

வேண்டாம் பெண்ணே. என்னைத் தொடாதே.

நடந்தேன்.

இருவர் என்னை நோக்கி ஓடி வந்தார்கள்.

"டேய் சீனு.. என்னடா கூச்சல்? காப்பாத்துங்க காப்பாத்துங்கனு உஷா கூவினாப்புல இருந்துச்சே? என்னாச்சு? எங்க அவ?"

வேகமாக நடந்தேன். நான் இங்கிருந்து சடுதியில் விலக வேண்டும் அன்பர்களே. பேச்சு வராமல் கலங்கினேன்.

"டேய்.. சீனு.. எங்கடா போறே? உஷா எங்கடா?"

நின்றேன். என்னை மடக்கி நின்றவர்களைப் பார்த்தேன். தயங்கினேன். பேச முயன்றால் ஏதோ ஒலி வருகிறதே தவிர பேச்சைக் காணோம். என் சிந்தனைகளுக்கு சொல் வடிவம் கொடுக்க முடியாமல் திணறினேன். கிணற்றை நோக்கிய என் பார்வையைத் தொடர்ந்தார்கள். தடுமாறினேன். தலை சுற்றியது.

"பாலண்ணே.. அதா பாருங்கண்ணே.. கால் மட்டும் தெரியுறாப்புல கிணத்தோரமா கீழே விழுந்து கிடக்கே, அது உஷாவா? இவனைக் கவனிங்கண்ணே. இவனும் தள்ளாடுறான்.. டேய்.. என்னாடா ஆச்சு?"

"சுப்பு.. நீ இவங்கூட இரு.. இதா.. அவளைப் பாத்துட்டு வரேன்". பாலண்ணே எனும் சற்றே முதியவர் கிணற்றை நோக்கி ஓடினார்.

அவர் சற்று விலகியதும் சுப்பு என்னைப் பார்த்தான். "என்னடா செஞ்சே அவளை? கொன்னுட்டியா? அவ மேலே சந்தேகப் பட்டுட்டிருந்தியே? கொலை செய்யப் போறதா சொன்னப்ப விளையாட்டுன்னு நினைச்சேன்.. அவளைப் போய் சந்தேகப்பட்டியே? எல்லாத்தியும் மறந்து ஒண்ணா சேந்துட்டதா சொன்னப்ப நம்பினமேடா. துரோகி. கொலை செஞ்சுட்டு நிக்கிறியே? நல்லா இருப்பியாடா?"

"நான்.." அதற்கு மேல் குரலோ பேச்சோ வரவில்லை. காத்திருந்து காத்திருந்து கிடைத்த அடையாளத்தினால் சரளமாகப் பேச முடியாது என்ற ஏமாற்றத்தின் துவக்கம் உறுத்தியது.

"கேக்குறன்ல.. சொல்லுடா.. சந்தேகப்படுறதுக்கு அளவில்லியாடா? கேக்குறன்ல? சொல்லுடா. என்னைப் பாத்து சொல்லுடா.. அவளைக் கொலை செஞ்சியாடா?"

வேண்டாம் சுப்பு. என்னைப் பார்ப்பது தப்பு.

"படுபாவி. உண்மைய சொல்லுடா. உன்னை இங்கியே அடிச்சுக் கொன்னுறுவேன்". என்னைத் தள்ளினான்.

வேண்டாம் சுப்பு. என்னைத் தொடுவது தப்பு.

"டேய்.. டேய்.. எங்கடா போறே? சீனூ.. நில்லுடா" பின்னால் குரல் கேட்க நின்றேன். அருகில் வந்த பாலண்ணே என்னைப் பார்த்தார். கீழே கிடந்தவனைப் பார்த்தார்.

"என்னடா ஆச்சு சுப்புவுக்கு?"

"தெரீ..ய..ல". என் குரல் எனக்கு வியப்பாக இருந்தது.

"தெரியலியா? வாயெல்லாம் கக்கி விழுந்து கிடக்கான்.. என்னாச்சுடா.. என்னா செஞ்சே?"

"நான் எ.து.வு.ம் செ.ய்.ய.லே. அ.வ.ன் எ.ன்.னை.த் தொ.ட்.டா.ன்"

இதற்குள் இன்னும் சிலர் அங்கே வந்தனர். பாலண்ணே கத்தினார். "டேய்.. ரவி ரம்யா.. போலீஸைக் கூப்பிடுங்க.. ஆம்புலன்ஸை கூப்பிடுங்க.." என்று இரைய அவர்கள் அருகே இருந்த கட்டிடம் நோக்கி விரைந்தனர். "இவன் வேறே ஸ்லோ மோசன்ல பேசிட்டு நிக்கறான்" என்றார் என்னைப் பார்த்து. "என்னடா சொல்லுறே சீனு? தொட்டா இப்படி நுரை கக்கி விழுவானா? ஆமா நீ ஏன் ஒரு மாதிரி பாத்துட்டு நிக்குறே? அந்தக் கிணத்துல இறங்கி தண்ணியை கிண்ணியை குடிச்சிங்களா?"

"தொடாதேனு சொன்னாலும் கேட்காம.." என்றேன். என் பேச்சு வேகத்தின் முன்னேற்றம் எனக்குப் பிடித்திருந்தது.

"சரி சரி.. என் பின்னால வா.. ஒரு கை குடு. இந்தப் பொண்ணை அங்கிருந்து நவத்துவோம். கிணத்துல விழுந்துருவா போலிருக்கு. உசிர் போயிட்டாப்ல இருக்குதேடா.. இதென்ன திருகுவலியோ" என்றபடி கிணற்றுக்கு விரைந்தார்.

நின்றேன்.

"பின்னால வானு சொல்றேன்ல? சப்பாணியாட்டம் நிக்காதடா.. கூட வா"

சென்றேன்.

"அது ஆஸ்மா கிணறுனு சொன்னேன்ல? கிட்டே போவாதீங்கன்னு சொன்னேன்ல.." புலம்பிக் கொண்டே நடந்தார்.

"ஆத்மா கிணறு". அட, என் பேச்சு தெளிவாகிறதே!

"என்ன?"

"ஆத்மா கிணறு. சேரர் கட்டின கிணறு"

"இவரு கண்டாரு.. டேய்.. நான் பக்கத்தூர்ல பொறந்து வளந்தவன்.. ஆத்மா கிணறாம்.."

"ஆமாம்.. கிராமமெல்லாம் செத்துட்டிருந்தாங்க. திடீர்னு தொத்து வியாதி போல பரவி பதினேழு கிராம எல்லைவரை செத்துட்டிருந்தாங்க. அரச வைத்தியரும் ஜோசியரும் இதை பாவஜென்ம வியாதினு சொல்லி செத்தவங்களை இந்தக் கிணத்துல எறியச் சொன்னாங்க. ஆனா வியாதி தணியலே. கிணத்துல பாவ ஆத்மாக்கள் இருக்குறதால முகத்தை மூடிக்கிட்டு கிணத்துல பிணங்களை எறிய உத்தரவு போட்டாங்க. அப்படித் தவறிப் பாத்தவங்களை கிணத்துல இருந்த பாவாத்மாக்கள் தொத்திக்கிட்டு வந்து மறுபடி வியாதியா பரவுதுனு.. ஊர்ல இருந்த மத்தவங்களையும் கொன்னுட சொல்லி உத்தரவு போட்டாங்க...எல்லாரையும் கிணத்துல தள்ளி மொத்தமா கொளுத்தி.."

"டேய் என்னடா கதை வுடுறே?" என்ற பாலண்ணா நின்றார். "டேய்.. உன் ஸ்லோ மோசன் என்னாச்சு? சரளமா பேசுறியே? இதெல்லாம் உனக்கெப்படிரா தெரியும்?" என்று என்னைப் பார்த்தார். "ஆமா.. ஏன் ஒரு மாதிரி நிக்குறே? உண்மையை சொல்லுடா.. இவளை எதுவும் செய்யலியே? இவ செத்துக் கிடக்கா. விபத்தா இருந்தாலும் எதுவா இருந்தாலும் போலீஸ் வரதுக்குள்ளாற உண்மையை சொல்லு.. அங்கே அவன் வேறே விழுந்து கிடக்கான்.. லூசாட்டம் உளறாம உண்மையைச் சொல்லுடே" என்று என் நேரெதிரே நின்று முறைத்தார்.

வேண்டாம் பாலண்ணே. என்னைப் பார்க்காதீங்க.

"கேக்குறன்ல.. ஆத்மா கிணறுனு உனக்கெப்படி தெரியும்? யாருடே நீ? அறைஞ்சா முகறை பேந்துக்கும்.. சொல்லுடா"

வேண்டாம் பாலண்ணே. என்னைத் தொடாதீங்க.

ஊருக்குள் நடந்தேன்.




குறிப்பு [-]

இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1949ல் வெளியான 'The one who waits' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

கொசுறு:
கதையின் சுவாரசியம் தொட்டு எழுத்துக்களை உருக்களாக்கும் வித்தை 1940களில் ப்ரேட்பரி அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகு எத்தனையோ நகல்கள். என்னைப் போல்.

இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)

2014/07/02

மறப்போம்.. மன்னிப்போம்..


    ல்லது மண்டையில் ரெண்டு போடுவோம்.

மோகன்குமார் தன் சமீபப் பதிவொன்றில் ஒரு திரைப்பட விமரிசனம் எழுதியிருந்தார்.

படத்தில் ஒரு வசனம். “எதிரிகளை வெல்வதறகானத் தலைசிறந்த வழி அவர்களை மன்னிப்பதாகும்”. அதைத் தொடர்ந்து சில ‘ஹ ஹ ஹ ஹ’க்கள் வந்திருக்கலாம். மோகன்குமார் தெளிவுபடுத்தவில்லை.

இந்தச் சொல்லாடலை வசனமாக கோச்சடையான் ரஜினி தூய தமிழில் துப்ப, மன்னிக்கவும், செப்ப.. மெகாப்லெக்ஸ் சும்மா அதிர்ந்ததாக அறிந்தேன். விசிலொலி பறந்ததாகப் படித்தேன்.

இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. எழுதுவோரைப் பொறுத்தே எழுத்துக்கான வரவேற்பும் அமைகிறது என்று ஜிஎம்பி அவர்கள் ஒரு சமீபப் பின்னூட்டத்தில் எழுதியிருந்தார். நானும் உண்மை என்று ஜால்ரா அடித்திருந்தேன்.

உண்மையில் அது உண்மையாகும். (என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் சுற்றுகிறேன்). அதாவது, கருத்தை விட கருத்தாளர் முக்கியமாவது உண்மையென்கிறேன்.

இந்த… எதிரிகளை வெல்லும் வழியை எடுத்துக் கொள்வோம்.

இதே வசனத்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சென்ற நூற்றாண்டில் சொன்னதாகச் சென்ற நூற்றாண்டிலேயே படித்திருக்கிறேன். இளைய மார்டின் லூதர் கிங் சொன்னதாகப் படித்திருக்கிறேன். அண்ணாதுரை சொன்னதாகப் படித்திருக்கிறேன். சந்திரசேகர சரஸ்வதி சொன்னதாகப் படித்திருக்கிறேன். தாமஸ் ஜெபர்ஸன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சொன்னதாகப் படித்திருக்கிறேன். சேக்குபியர் பதினாறாம் நூற்றாண்டில் சொன்னதாகப் ப. சர்ரென்று அங்கிருந்து சுமார் ஆயிரத்தைநூறு வருடாஸ் பின்னோக்கிப் போனால் ஜெரூசலச் சந்தி ஒன்றில் தச்சன் ஜோசபின் தாடிக்கார மகன் சொன்னதாகப் படித்திருக்கிறேன். ஏறக்குறைய அதே காலத்திலோ அல்லது ஏழெட்டு நூற்றாண்டுகள் தற்காலத்தை நோக்கி வந்தாலோ கன்னியாகுமரி மகனான நம்மூர் ஞானவெட்டியான் சொன்னதாகவும் படித்திருக்கிறேன். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்று கொஞ்சம் கோனார் நாடும் பொய்யாமொழி, மற்றபடி அதே கருத்து.

ஆனால் இதற்கெல்லாம் யாரும் சிலிர்த்ததாகவோ விசிலடித்ததாகவோ படிக்கவில்லை.

அந்நாள் மக்கள் ஒரு வேளை என்னைப் போலிருந்திருக்கலாம். எனக்கு விசிலடிக்க வராது.

பல்லாவரம் தெரசாவிலோ, குரோம்பேட்டை அரசுயரிலோ, க்வீன் ஸ்டெல்லா ப்ரெசிடென்ஸியிலோ வைஷ்ணவாவிலோ அழகழகாக அசைந்து போவார்கள். என் நண்பர்கள் விய்க் விய்க் என்று விசிலடிப்பார்கள். நான் பரிதாபமாக நிற்பேன். ஹ்ம்ம். முயன்று சலித்த சோகம்.

விசிலுக்கு.. அதாவது விஷயத்துக்கு வருகிறேன். இரண்டு விஷயங்கள்.

முதலாவது கொஞ்சம் சிரியஸ்.

ரஜினி ஏதாவது பஞ்சு மிட்டாய் வசனம் சொன்னால் கூட பஞ்ச்ச்சு என்று பிகில் பிய்த்துக் கொண்டு போகிறது. ‘ஆகா என்னா வசனம் என்னா டயலாக்’ என்று ரசிகர்கள் சிலிர்த்துப் போகிறார்கள். அந்தக் கருத்து ஏதாவது சிறிய அளவிலாவது பிகிலைக் கடந்து உள்ளே இறங்குகிறதா தெரியாது. அனேகமாக ரஜினி டயலாக்குகள் அவரது தமிழ்நாடு/தமிழ் மக்கள் பற்று போலவே பஞ்சு மிட்டாய் டயலாகோடு நின்று விடும் சாத்தியமே அதிகம்.

“நான் ஒரு தரம் சொன்னா பத்து தரம் சொன்னா மாதிரி.. (ஆள்காட்டி விரலுயர, பின்னணியில் ஷ்ய்ய்ப்).. நான் நாற்காலி தேட வேண்டியதில்லே.. அது என்னத் தேடி வரும் (ஷ்ய்ய்ப்).. ஹ ஹ ஹ.. கண்ணா.. இதெல்லாம் எனக்கு ஜு..ஜு..பி (ஷ்ய்ய்ப்)” போன்ற அர்த்தமுள்ள வசனங்களைக் கேட்டு கேட்டு.. தமிழ்ப் படத்துக்கு வசனமெழுதுவது சுலபம் என்று.. அப்படித்தான் நினைத்தேன்.

சில மாதங்களுக்கு முன் இரண்டு (குறும்)படங்களுக்கான வாய்ப்புகளை எடுத்துக் கொண்டேன். இரண்டும் இழுபறியாக இருப்பது வேறு கதை. ஒரு படத்துக்கான கூட்டு முயற்சி கதாசிரிய ப்லாக் நண்பர் சிறிது நோய்வாய்ப்பட்டதால் தடங்கலுக்கு வருந்திக் கொண்டிருக்கிறது. (எதற்காக நோய் வாய் பட வேண்டும் என்று யாராவது சொல்லுங்களேன்.. நோய் பட்டால் போதாதா?). இரண்டாவது படத்துக்கான திரைக்கதை வசனம் தகராறில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாருங்கள்.. தயாரிப்பாளர் முதலில் சொன்னது "அப்பாத்துர.. இது சூப்பரான ப்லாட்டு.. டயலாக் எய்தசொல்ல ரெம்ப எஞ்சாய் செய்வீங்க.. மஜாவான முல நீல நக்கசுவ கத்த..". அதை நம்பிச் சம்மதித்தேன். பலான கதையில் முனகலாக வசனம் எழுதினால் போதாதா? இப்போது என்னடாவென்றால் "முழு நீள நகைச்சுவை கதை" என்று சொன்னதாகச் சாதிக்கிறார். தமில் வால்க.

நிற்க, தமிழ்ப் பட வசனம் எழுதுவது சுலபமே அல்ல. தமிழ் தெரிந்தாலும் வழக்கு எனக்குப் பிடிபடவில்லை. முதல் படத்தில் ஒரு சுவாரசியமான கட்டத்தில் இப்படி ஒரு வசனம் எழுதியிருந்தேன்:

கான்ஸ்டபிள் (அறையை நோட்டமிட்டபடி, பையிலிருந்து எதையோ எடுக்கிறார்)
"இன்ஸ்பெக்டர் வந்துடுவாருமா.. என்ன விஷயமா கூப்பிட்டீங்கனு தயங்காம எங்கிட்ட சொல்லச் சொன்னாரு"

இதைப் படித்துப் பரவலாக ச்ச்ச்ச்ச்ச்ச் உதிர்த்த இயக்குனர் இப்படி மாற்றினார்.
"ஐபி வராப்ல.. மேட்டரு என்னானு கேட்டாப்ல..".

இப்படி ஒவ்வொரு வசனத்தையும் ஆப்புல ஆப்புல என்று மாற்றத் தொடங்கினார். சில வாரங்களுக்கு முன் அவரோடு தொடர்பை நிறுத்தினேன்.

டைரக்டரு என்னாச்சுனு இமெயில் போட்டாப்புல. ‘நான் எழுதி முடிச்சாப்புல.. நீங்க படம் எடுத்து விடிச்சாப்புல’னு நான் பதில் சொன்னாப்புல.

இரண்டாவது கொஞ்சம் சீரியஸ்.

மெட்ராஸ் தமிழன் சமீபப் பதிவில் எழுதியிருப்பது நிறைய நினைவுகளைக் கிளறியது. இருபது முப்பது வருடங்களுக்கு முன் தரக்குறைவாக நடந்து கொண்ட ஒருவர் சமீபத்தில் தன்னிடம் உதவி கேட்டு வந்ததைப் பற்றிய சுவாரசியமான பதிவு.

நம் எல்லோர் வாழ்விலும் இது போன்ற நிகழ்ச்சிகள் தூசு படிந்து உள்ளக் குகைக்குள் பல இடங்களில் புதைந்திருக்கும். என்னவோ பெரிய கொம்பென்று நினைத்து நம்முடைய சரிவில் நம்மை எள்ளுவார்கள். பிறகு சக்கரம் சுழன்று வருகையில் ‘பழசை மனசுல வைக்காம கொஞ்சம் தயவு பண்ணு’ என்று இளிப்பார்கள். அல்லது இன்னும் வறட்டாக 'எனக்கு இந்த உதவி செய்யுறது உன் கடமை’ என்று அதிகாரப் பிச்சை கேட்பார்கள். சில வருடங்களுக்கு முன் இதே நபரை எப்படி நடத்தினோம் என்ற நினைப்பே இல்லாமல் நடப்பார்கள்.

உங்களுக்கு எப்படியோ தெரியாது, எதிரிகளை மறப்பதா மன்னிப்பதா என்ற குழப்பம் எனக்கு வரும்.

எதிரிகள் இல்லை என்று சொல்ல நான் புத்தனல்ல. இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள்.

சிலர் எதிரிகள் என்று உடனே புரிவதில்லை. புரியும் போது காலம் கடந்திருக்கும். அந்நிலையில் 'மன்னித்தாலும் மறந்தாலும் ஒன்று தான்' என்ற கடப்பில் கிடப்பேன்.

எண்பதுகளில் எனக்கு மிகவும் பிரியமான ஒரு வேலையில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தேன். திடீரென்று சரிந்தேன். நான் செய்யாத, யார் செய்திருந்தாலும் குற்றமல்லாத, சாதாரணத் தவறுக்காகச் சரிந்தேன். என் மேனேஜரே எனக்கு டேமேஜரானது மிகப் பெரிய அதிர்ச்சியாக அந்நாளில் அவமானம் என்னைக் கொன்றது என்றே சொல்லலாம். வாலிபனாக இருந்தாலும் அப்போது அந்த டேமேஜரை எதுவும் செய்யாமல் என் ஆத்திரத்தையும் வெறுப்பையும் அடக்கிக் கொண்டு விலகினேன். பின்னாளில் அவரைச் சந்தித்த போது மிகக் குன்றியிருந்தார். என் மன்னிப்பைக் கெஞ்சியது எனக்கு வியப்பாக இருந்தது. நான் அதைக் கடந்து மிக வளர்ந்திருந்ததால் அதிகம் நினைக்கக் கூட இல்லை. அவர் மன்னிப்பு கேட்டது என் நினைவுகளைக் கிளறினாலும் அதிகமாகப் பாதிக்கவில்லை.

மறந்து விட்டால் ஒரு சிக்கல். மன்னித்தால் என்ன, மன்னிக்காவிட்டால் என்ன?

மன்னித்து விட்டால் ஒரு சிக்கல். ஏன் மன்னித்தோம் என்று குடைந்து கொண்டே இருக்கும். பிறகு எங்கிருந்து மறப்பது?

மன்னிப்பது மேலா, மறப்பது மேலா? அதான் குழப்பம்.

தொடர்பதிவின் எட்டாவது கேள்விக்கு வாழைப்பழ விளக்கெண்ணைப் பிசினாக வந்து கொண்டிருக்கும் பதில்களைப் போல்.

மண்டையில் ரெண்டு போடுவதே இப்போது சரியாகத் தோன்றுகிறது. அனாவசிய வம்பு வேண்டாமென்று சொல்லிப் பார்க்கலாம். மறக்கப் பார்க்கலாம். மன்னிக்க நினைக்கலாம். எதுவும் ஒத்துவரவில்லையெனில் மண்டையில் ரெண்டு. இது தான் மேலாகப்படுகிறது.

நேற்று மாலை ஒரு நண்பரிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். 'அப்படி நடந்தால் உங்கள் மண்டையும் ரெண்டு படுமே அன்பரே?' என்றார்.

"பரவாயில்லை" என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்தார். "எதையும் தாங்கும் இதயம் தமிழனுக்கு உண்டே?" என்றார்.

‘ஐயோ, இப்படி தமிழால் அடிக்கிறாரே!’ என்று நொந்தாலும் "ஹிஹி.. நம்பள் ஆதா ஆரியன் காதா?" என்றேன். தமிழன் மீது பழியேற மனம் மறுத்தது. அவர் என்னை மறுபடி ஏற இறங்கப் பார்த்தார். எதுவுமே சொல்லவில்லை.

மன்னிக்கும் குணமும் மறக்கும் மனமும் நிம்மதியைத் தரலாம். ஆனால் மண்டையில் இரண்டு போடுவது நிறைவைத் தரும்.

ஷ்ய்ய்ப்.