2014/07/19

லுக்ரீசின் சாபம்[1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]        கொடுமைக்குள்ளான/ஆகும் பெண்களை அறிவோம். தனக்கோ தன்னைச் சார்ந்தவருக்கோ ஏற்பட்ட அவமானத்தைக் கண்டுப் பொங்கி எழுந்து ஊரழித்த/அழிக்கும் பெண்களையும் அறிவோம்.

ஏதோ ஒரு வகையில் தன் ஆளுமைக்குட்பட்ட பெண்களை, ஆளுமையின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சொல்லொணாக் கொடுமைக்குள்ளாக்கியதுடன் நில்லாமல் கொடுமைக்குள்ளான பெண்ணையே அவமானப்படுத்தி, அத்தனையையும் பிடுங்கிக்கொண்டு அனாதரவாகத் தெருவில் நிறுத்தி, அவமானத்துக்கு மேல் இன்னும் அவமானப்படுத்துவதாக அச்சமூட்டி அந்த அச்சத்தில் தன் வீறாப்பை எழுப்பி சுய இன்பம் கண்ட/காணும் ஆண்களை அறிவோம். பெண்களைக் கண்களாகப் போற்றி பாசம் மற்றும் காதல் உணர்வுகளில் ஒளிகூட்டி பேரன்பின் உச்சத்தில் வைத்து ஆராதித்த/ஆராதிக்கும் ஆண்களையும் அறிவோம்.

எழுதப்பட்ட சரித்திரங்கள் சில, இரு தரப்பினரையும் அடையாளம் காட்டி வந்துள்ளன. எழுதப்படாத சரித்திரங்கள் பல, தினசரி வாழ்வின் புழுதியில் அடையாளமின்றிப் புதைந்தும் போகின்றன.

தினசரி தேவதைகளின் சரித்திரங்கள் எழுதப்படாமலே போவதன் அநீதியை மறக்கவோ மறவாதிருக்கவோ, சில எழுதப்பட்ட சரித்திரங்கள் துணைக்கு வருகின்றன.

இது அத்தகைய ஒரு பெண்ணின் கதை. அல்ல, சரித்திரம்.

கொடுமைக்குள்ளான பெண்ணின் சாபம் சாம்ராஜ்ஜியத்தையே அழிக்க வல்லது. ஒரு சாதாரண ஆண் எம்மாத்திரம்? பணமோ பதவியோ எதுவுமே அந்த ஆணைக் காப்பாற்றப் போவதில்லை. பெண்ணின் சாபம் தீயாக மாறுகையில் அக்கிரமக்காரர்கள் அழிகிறார்கள். சில பெண்களின் சாபம் அடங்கியிருக்கும் தீபமாவதும் உண்டு. அதைத் தீயாக்கி, அக்கிரமங்களை அழிக்க ஏதுவானவர்களும் உண்டு. இந்தக் கதையிலும், அல்ல சரித்திரத்திலும், அத்தகைய நபர்கள் உண்டு.

சரித்திரம் ஒரு சாகரம். மிகச் சுலபமாக மூழ்கிப் போகலாம். மிகச் சுலபமாக மூழ்காமலும் நீந்தலாம். முத்தெடுக்கலாம்.

இது அத்தகைய முத்து.

சேக்ஸ்பியர் எழுதிய 'லுக்ரீசின் கற்பழிப்பு'.

சேக்கு எழுதியவற்றுள் நான் படித்த அத்தனையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஐந்து: ஹேம்லெட், மெர்சென்ட் ஆஃப் வெனிஸ், மேக்பெத், மெரி வைஃப்ஸ் ஆஃப் வின்ட்ஸர், ரேப் ஆஃப் லுக்ரீஸ். எத்தனையோ காவியங்கள் எழுதிய சேக்கு இரண்டை மட்டும் வசன நடையில் எழுதினார். ஒன்று லுக்ரீசின் கற்பழிப்பு. சேக்கு கையாண்டிருக்கும் உவமைகளும் உருவகங்களும் அற்புத ஆகாயத்துக்கும் உயரே.

கற்பழிப்பு என்பதும் ஒருவகையில் உருவகம். தன்மானத்துடன் சுய மரியாதையுடன் வாழ முடியாமல் ஏச்சுக்கும் பேச்சுக்கும், வெளிப்படையான அல்லது மறைமுக வன்முறைக்கும், அடங்கிப் போகும் எந்தப் பெண்ணும் ஏதோ ஒரு வகையில் கற்பழிக்கப்பட்டவளாகிறாள். ஆணாதிக்கம் என்பது கணவன் காதலன் தகப்பன் தனயன் என்ற உருவத்தில் மட்டுமே காணப்பட வேண்டியதில்லை. சமூகத்தின் எந்தத் தட்டிலும், உள்ளும் புறமும், காணப்படுகிறது. எளிமைக்கும் கீழே அழுத்தப்பட்டவர்கள் மௌனமாக அழும்பொழுது அது கற்பழிப்பைப் போன்றக் கொடுமையானதொரு வலியின் வெளிப்பாடாகும். இது பரவலாகப் புரியாமலே போவதில் புதைந்துள்ள அபத்தமும் அநீதியும் எத்தனை காவியங்கள் யார் எழுதினாலும் வெளி வாரா.

சேக்குவின் லுக்ரீஸ். தமிழில் என் முயற்சி. தொடராக எழுதத் தொடங்கினால் முடிப்பதற்குள் சில சபலங்கள் குறுக்கிடுகின்றன. அல்லது சோம்பல். அப்படியே நின்று போவதில் எனக்கு விருப்பமில்லாததால் லுக்ரீஸ் என் மனதுள் கிளறிய சிந்தனைகளை எனக்கு மட்டுமே வைத்திருந்தேன். எழுதுவதா வேண்டாமா என்ற கேள்விப் பென்டுலம் அடங்க சில ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.

சில ஆக்க உரிமைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொன்றிலக்கியத் தீவிரவாதிகள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். மன்னிக்க இயலாவிட்டால் அருகில் வரவும் - மண்டையில் ரெண்டு போடுகிறேன். எச்சரிக்கை: சேக்குவும் என்னுடன் சேர்ந்து இரண்டு போடுவார். அமானுஷ்ய மண்டையடி.

என் வசன கவிதை புரியாமல் போகும் சாத்தியத்தில், இதோ கதைச் சுருக்கம்:

(தற்காலத்துக்கு முந்தைய) த.மு 500ம் வருடவாக்கில் ரோம் நகரப் பின்னணியில் நடைபெறும் கதை.

மன்னன் மகன் செஸ்டஸ் டார்க்வினும் அவன் உயிர் நண்பனும் தளபதியுமான கொலாடினும் ஒரு போர் நாள் மாலையில் உரையாடுகிறார்கள். கொலாடின் தன் மனைவி லுக்ரீசின் பிரிவைப் பொறுக்க இயலாமல் அவளைப் பற்றி நண்பனான இளவரசனிடம் விவரிக்கிறான். லுக்ரீசின் அழகையும் அங்க அடையாளங்களையும் சீண்டல்களையும் காதலையும் கொலாடின் ஏக்கத்துடனும் தாபத்துடனும் விவரமாக எடுத்துச் சொல்லச்சொல்ல, இளவரசன் செஸ்டஸ் மனமிழக்கிறான். மனைவிகளின் நடத்தையைப் பார்வையிடும் சாக்கில் போர்க்களத்திலிருந்து விலகி லுக்ரீசைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செஸ்டஸ் போதையேறி எப்படியாவது லுக்ரீசை அடையத் தீர்மானிக்கிறான். நண்பன் என்ற சாக்கில் அவள் வீட்டுக்குப் போகிறான். இரவின் மயக்கத்தில் அவளை நெருங்குகிறான். பேதை வெருண்டு ஒதுங்குகிறாள். இளவரசன் என்ற ஆணவத்தில் அவளை அடங்கச் சொல்லி, மறுத்தால் அவள் மேல் பழி சுமத்துவதாக மிரட்டுகிறான். கருணை காட்டும்படி கதறியவளைக் கற்பழித்துக் குதறுகிறான். பிறகு இரவின் போர்வையில் மறைந்து போர்க்களத்துக்கு வருகிறான். அவனுடைய குற்றம் இரவிலும் நிழலாகத் தொடர்வதை அறியாமல். பொழுது விடியக் காத்திருக்கும் லுக்ரீசுக்கு இனிப் பொழுதே விடியாதென்பது புலப்படுகிறது. மனதுக்கினியவனைத் தழுவியவள் மரணத்தைத் தழுவத் துடிக்கிறாள். அதற்கு முன் மன்னர் வம்ச முகத்திரையைக் கிழிக்கத் தீர்மானிக்கிறாள். நடந்தவற்றை எழுதி வைக்கிறாள். நடத்தியவன் விவரத்தை மட்டும் மறைத்து வைக்கிறாள். தனிமையில் ஒதுங்கித் தினம் தன்னைச் சித்திரவதை செய்து கொள்கிறாள். இடையே கணவன் கொலாடின் திரும்பி வருகிறான் - ஆசை மனைவியைப் பிரிந்திருக்க முடியவில்லை. ரகசியமாக வந்தவன் ரணகளத்தைப் பார்க்கிறான். போர்க்கணைகள் தொடுத்தவன் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான். மனைவியின் கையெழுத்தைப் படித்துத் தலையெழுத்தைப் புரிந்து கொள்கிறான். நெஞ்சிலே ஈட்டி நுழைந்தாற் போல் துடிக்கிறான். யார் யார் என்று ஆத்திரத்தில் வெடிக்கிறான். தனக்கிழைக்கப்பட்ட துரோகத்துக்கு பழி வாங்கியே தீரவேண்டும் என்ற சபதத்தைப் பெற்றுக் கொண்டதும் பேதை, கோழையின் பெயரைக் கணவனிடம் சொல்கிறாள். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியினால் தன் உயிருக்கு விடுதலை கொடுக்கிறாள்.

கோபத்தில் வெடிக்கிறான் கணவன். அவமானத்திலும் துடிக்கிறான். கொல்லத் துணிகிறான். சாகவும் துணிகிறான். நண்பனைக் கொன்றானா? தற்கொலை புரிந்தானா?

நீதிக்கு முக்காடா அல்லது மகுடமா? விதி உருட்டிய பகடையாட்டத்தில் வெற்றி பெற்றது யார்?லுக்ரீசின் சாபம் [1]

1
விதியின் கைகளில்
வண்ணக் கலவை.
எறிவதற்கான சுவர்
எதிர்வரும் எதிர்பார்ப்பில்.
எறிந்த வண்ணக்குழம்பு
ஓவியமாகுமா
என்பதில் விதிக்கு அக்கறையில்லை.
ஓவியமாக்குவது அதன் வேலையில்லை.
ஓவியன் மனிதன்.
ஓவியம் விதி.

வெற்றி தோல்வியில்
அக்கறையில்லாது
எறியும் பகடையில் குறியாயிருக்கும்
விதி.

வெற்றியும் தோல்வியும்
மனிதரின் வலி.
விளையாட்டு மட்டும்
விதியின் வழி.

இரும்பும்
துரும்பும்
சந்தித்தால்
எது வெல்லும்?

விதியின் பகடை எப்படி உருளும்?

சந்திப்பவை மட்டும்
இரும்பும் துரும்பும்.
சந்திக்கும் களத்தையும் சந்திப்பையும்
உருவாக்குவது
விதி.

அலையடர் பெருங்கடலில்
சந்தித்தால்
காணாமல் பயணம் போகும் இரும்பு.
கோணாமல் பயணம் போகும் துரும்பு.
கடற்களப் போரில்
இரும்பை வெல்லுமே
சிறுமரத் துரும்பு.

துரும்பின் சாகசம் தெளிவாவது
துரும்பினாலா இரும்பினாலா?
விதியினாலா?

வாழ்க்கை
ஒரு பெருங்கடல்.
விதி
பெருங்கடற்ப் பேரலை.

அலையின்றிக் கடலில்லை.
கடலின்றி அலையில்லை.
அலைகடலுள் உறங்கும் கடலலை.
கடலலையில் விளங்கும் அலைகடல்.

இங்கே துரும்புகளின் பயணங்கள்
சில நேரம்
சாகசங்களின் அரிச்சுவடியாகின்றன.

துரும்புடன் மோதி இரும்படையும் காயம்.
வலியோரை எளியோர் வெகுண்டடக்கும் மாயம்.


லுக்ரீசின் சாபம் [2-5]

20 கருத்துகள்:

 1. எக்ஸலண்ட் அப்பா ஸார்.... வசன கவிதை அல்ல... கவிதை என்றே தயங்காமல் சொல்லலாம். கவிதைக் காவியத்தில் முதல் பகுதியே முத்திரை பதித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. இரும்பும்
  துரும்பும்
  சந்தித்தால்
  எது வெல்லும்?//

  கரும்பென தித்திக்கும் நும்
  காவியம் வெல்லும்.

  சுப்பு தாத்தா.

  அது சரி. வெகு காலத்துக்கு முன் வந்த
  கமல் ஹாசன் படம் ஒரு கைதியின் டயரி கதையை
  சேக்ஷ்பியர் காப்பி அடித்து இருக்கிறாரோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா விஷயம்?! எனக்கு எப்பவுமே சேக்குபியர் மேலே ஒரு சந்தேகம் உண்டு.

   நீக்கு
 3. கதை பகிர்வும், கவிதையும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா.... ஆஹா......சூப்பர் சார் ("விஷ்ய்க்...வ்ஷ்ய்க்...வ்ஷ்ய்க்..."). தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்தான் சார். சேக்கு பெரிய இலக்கிய மேதை என்பது மட்டும் நல்லா தெரியும். அவரோட காவியத்தை நீங்க தமிழில் எழுதுவது என்னைப் போன்றவர்களுக்கு சந்தோசமளிக்கும் விஷயம். கொஞ்சம் வசதியானவங்க வீட்டு கல்யாணத்தில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்ததும் மனசு கல்யாண சாப்பாடு நல்லா இருக்கும் ஒரு பிடி பிடிக்கணும்னு நினைப்பது போல இப்பவே உங்க கவிதை விருந்து பெரிய எதிபார்ப்பை ஏற்படுத்துகிறது.

  சேக்குவின் லூக்ரீசின் சாபம்.....உங்களால் எங்களுக்கு லாபம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி..
   //தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்தான் - ஆஹா.. இப்படிப் பின்றீங்களே?

   நீக்கு
 5. நல்ல ஆரம்பம், அப்பாதுரை. ஆனால் வசன நடையில் எழுதப்படும் கவிதையை என்னால் ஏனோ அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. அதற்கு உரைநடையாகவே எழுதிவிடலாமே.

  அது இருக்கட்டும். ஒரு கைதியின் டைரி, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் எங்கள் தானைத்தலைவன், பகுத்தறிவு செம்மல், தமிழனின் தன்மான சிங்கம், காதல் இளவரசன் (60 வயதானாலும் பரவாயில்லை) நடித்த திரைக்கதையை திருடிய ஷேக்ஸ்பியரை வன்மையாக கண்டிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லிட்டீங்களே.. ஒரே ஒரு ஓட்டுக்குத் தான் வெயிட் பண்ணினேன். உரைநடையா எழுதினாலும் எழுதிடுவேன்.

   'borne by trustless wings of false desire"னு வரிக்கு வரி கமல்பியர் பாட்டுக்கு நூத்துக்கணக்கா அனுபவிச்சு எழுதறாரு..அதை தமிழ்ல எழுத ரொம்ப கஷ்டமா இருக்குங்க (நான் என்ன ராமலக்ஷ்மியா?). உரைநடை தான் சரிஹி.. உரைநடையை ரெண்டு ரெண்டு வார்த்தையா பிச்சிப் போட்டா வசன கவிதை. (இல்லையா?)

   யாரங்கே.. அந்த அறுந்த ஹவாயை எடுத்தா.. கமல்பியராம்ல?

   நீக்கு
  2. சின்ன சாம்பார்னு சொல்வாங்களே... இப்பல்லாம் இல்லையா?

   நீக்கு
 6. பதில்கள்
  1. ஆ! நீங்க படிக்கறீங்களா..?!
   (ஒயுங்கா எயுதுரா டேய்.)

   நீக்கு
  2. அது சரி. கல்லூரி வயதில் வாசித்தது. உங்கள் பகிர்வின் மூலம் இன்னொரு வாய்ப்பு. பாருங்க, ஜூலியஸா ஜூனியஸான்னு வாசித்த உடனே சொல்லத் தெரியலை:).

   நீக்கு
 7. மறுபடியும் சுவற்றில் எறிந்த சாயமா?..

  விடாது, கறுப்பு?..

  பதிலளிநீக்கு
 8. ஆஹா அருமை... வாழ்த்துக்கள்...
  தொடருங்கள்....

  பதிலளிநீக்கு
 9. /எளிமைக்கும் கீழே அழுத்தப்பட்டவர்கள் மௌனமாக அழும்பொழுது அது கற்பழிப்பைப் போன்றக் கொடுமையானதொரு வலியின் வெளிப்பாடாகும். இது பரவலாகப் புரியாமலே போவதில் புதைந்துள்ள அபத்தமும் அநீதியும் எத்தனை காவியங்கள் யார் எழுதினாலும் வெளி வாரா./ நிலைமை இப்படி இருக்கும்போது நான் எழுதினால் மட்டும்வந்து விடுமா தீர்ந்து விடுமா?

  பதிலளிநீக்கு
 10. பொதுவாக அறியப் படாத கதைகளை, வசன கவிதையிலோ இல்லை கவிதையிலோ எழுதினால் புரியாது போக வாய்ப்பு இருக்கிறது என்னும் முன் எச்சரிக்கை கதைச் சுருக்கம் தருவதில் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 11. வண்ணம் உங்கள் கைகளில் ஓவியமாகட்டும். ...!முதல் பகுதி கதைக்கே வரவில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.
   மொழியாக்கத்துக்கு ஒரு வகையில் நீங்களும் காரணம் சார். (ஹிஹி.. தப்பிருந்தா நான் மட்டுமே பொறுப்பு).
   கதைக்கு வரும் கவிதை - கோவில் தேர் போலத்தான்.

   நீக்கு
 12. மிகவும் அருமை. வசன நடையில் இருந்தால் என் மாணவர்களை கொண்டு ஒரு நாடகம் நடத்தியிருக்காலம் என ஆசை கொண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மீண்டும் வருக.
   வரிகளைச் சேர்த்துப் போட்டால் வசனமாகிறது :-)

   நீக்கு