'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?', 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்றெல்லாம் படிக்கும் போது இப்படித் தன்னை மறந்து நேசிக்க முடியுமா என்று தோன்றும். எந்தக் காலக் கட்டத்திலும் சரி, சுய மற்றும் சமுதாயக் கண்ணோட்டத்தில் இது போன்ற உணர்வுகள் ஒரு சிலருக்கேனும் இயற்கையாகத் தோன்றுமா? அல்லது கற்பனை வளமா?
தாயன்பு பற்றிப் படித்திருக்கிறேன், அறிந்திருக்கிறேன். காதலி மனைவி நெருக்கம் பற்றிப் படித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். பிள்ளைப் பாசம் பற்றிப் புரிந்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். சுற்றம் நட்பு நேசம் பற்றிப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன், தெரிந்திருக்கிறேன். ஆனாலும், என்னளவில், இவை எல்லாமே புலப்படாத ஒரு வட்டத்துக்குள் இயங்கியவை போலவே தோன்றுகிறது. அளவுகோல் வைத்து அளந்தளித்தது போல் பட்டிருக்கிறது. எங்கே குறைந்தது எங்கே நிறைந்தது என்று சுட்டிக்காட்டும்படி இருந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளின் எல்லைகளுக்குள்ளே புழங்கியதாகப் பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை போல் கண்மூடித்தனமாகச் செயல்படுத்தத் தோன்றியதேயில்லை. காற்றைப் போல் எதிர்பார்ப்புகளில்லாமல் பரவியதே இல்லை.
வாழ்நாளில் ஒரு முறை, ஒரே ஒரு முறையாவது இப்படிக் கண்மூடித்தனமாக அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காதா என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன். கற்பனையில் தான் நிகழுமென்று சலித்து அடங்கியிருக்கிறேன்.
சமீபத்தில் அந்த எண்ணம் மாறியது.
சில மாதங்களுக்கு முந்தைய இந்தியப் பயணத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்து அப்படி இப்படி பேசிக்கொண்டிருந்த போது எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். நண்பரின் தந்தை எழுதிய புத்தகம். நண்பரின் தாய் நினைவாகத் தந்தை எழுதியது. அஞ்சலி எழுத்துக்கள். ஆனால் மறைந்த மனைவியைப் பற்றி எழுதவில்லை. தங்கள் வாழ்வின் இனிமைகளையும் சிக்கல்களையும் பற்றி எழுதவில்லை. மாறாக, தங்களின் இனிமையான உலகத்துக்கு வெளியே நடைபெற்ற/பெறும் சாதாரண நிகழ்வுகளைத் தொட்டு எழுதிய அசாதாரணக் கருத்துக்கள்.
ஷா ஜெகான் மும்தாஜை சிலையாக வடித்துத் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கலாம். மும்தாஜைப் பற்றிக் கவிதை வடிக்கச் சொல்லியிருக்கலாம், வடித்திருக்கலாம். தாஜ்மகாலைக் கட்டுவானேன்? இந்தப் புத்தகத்தைப் படித்த போது புரிந்தது.
Abstract manifestation of uninhibited love. சிலருக்குத்தான் தெரியும். மிகச் சிலருக்குத்தான் புரியும். இன்னும் சிலரால்தான் உணர முடியும். அதை விடக் குறைவான சிலருக்குத்தான் வெளிப்படுத்த வரும்.
சிலையை ஒரு முறை ரசிக்கலாம். அது மும்தாஜ் என்று தெரிந்து விடுவதால், அடுத்த ரசனையின் தரம் குறைந்துவிடுகிறது. தாஜ்மகால் அப்படி அல்ல. காரணம், அதைப் பார்க்கும் பொழுது நினைவில் நிற்பது, அன்பின் ஆழம். கட்டிடத்தின் அழகு, கண் பார்வைக்கு மட்டும்தான். மனம், அன்பின் ஆழத்தை அழகை சிரிப்பை சோகத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவதால், நம்மை நாமே அடையாளம் கண்டு மகிழவும் ஏங்கவும் முடிவதால், தாஜ்மகாலைத் திரும்பப் பார்த்து அனுபவிக்க முடிகிறது. அதிசயிக்க முடிகிறது.
இந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பத் திரும்பப் படிக்க முடிகிறது. படிக்கும் பொழுது என்னையும் என் சுற்றுப்புறத்தையும் வியக்கத்தக்க அளவில் அடையாளம் காண முடிகிறது. தெரியாத விஷயமென்றோ புதுச்செய்தியோ எதுவும் இல்லை. சொல்லியிருக்கும் விதத்தை ரசிக்க முடிகிறது. ஒரு வரித் தத்துவங்களின் ஆழம் பிரமிக்க வைக்கிறது. ஒரு சுமைதாங்கியின் உரத்த வெளிப்பாடு என்றே இதை வைத்துக் கொண்டாலும், சில உண்மைகளை அவர் எடுத்துக் காட்டியிருக்கும் விதம் இந்தத் தம்பதிகளினிடையே இருந்த நெருக்கத்தைத் தாமரை இலை நீர் போல் பட்டும் படாமல் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தப் புத்தகத்தைப் படித்ததும் அடங்கியிருந்த எண்ணம் மறுபடி குற்றுயிராய் எழுந்து விட்டது. அன்பை வெளிப்படுத்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, அதை இயற்கையாக வெளிப்படுத்தத் தெரிந்த மனிதர்களிடையே நானும் வாழ்கிறேன் என்ற நிறைவே இப்போதைக்கு அந்தக் குற்றுயிரைப் பேணி வருகிறது.
இதுவும் தாஜ்மகால் பார்வை. நண்பரின் தந்தை கட்டியிருக்கும் எண்ணத் தாஜ்மகாலுக்குள், நான் கண்டு பிரமித்தவை:
2010/04/29
தாஜ்மகால் பார்வை
2010/04/22
திட்டம்
சிறுகதை
    கள்ளக்காதல் இப்படி ஒரு கொலையில் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரே தெருவில் வசித்த காரணத்தால் என் கணவரின் தம்பியுடன் திருமணத்துக்கு முன்பிருந்தே எனக்குப் பேச்சுப் பழக்கம் உண்டென்றாலும், நெருக்கமேற்பட்டது சமீபத்தில் தான். ஏறக்குறைய ஒரே வயது ஏறக்குறைய ஒரே ரசனை என்று தொடங்கிய பழக்கம், ஏறக்குறைய ஒரே படுக்கை என்றளவுக்கு வந்து விட்டது.
எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் நடந்த திருமணம் ஒரே வருடத்தில் ஏமாற்றமாகிவிட்டது. கணவர் நல்லவர் தான். இனிமையாகப் பேசுகிறவர் தான். என்னை மதித்து நடத்துகிறவர் தான். ஆனால் விஸ்கி, மூணு சீட்டு, குதிரைப் பந்தயம், நண்பர்களுடன் பேச்சு, கிரிகெட் போட்டி சினிமா என்று இறங்கிவிட்டால் பெண் துணை தேவையில்லை அவருக்கு. அப்படியே நெருங்கினாலும் ஒரு நிமிடத்தில் ஓய்ந்து விடுவார். தொட்டவுடனே பட்டென்று முடிந்து விடும் எம்டிஆர் புணர்ச்சியை நான் எதிர்பார்க்கவேயில்லை.
முப்பத்திரண்டு இருபத்தெட்டு முப்பத்தாறு என்று நான்காம் வாய்ப்பாடாக எல்லாவற்றையும் அளந்து வளர்த்ததெல்லாம் வீணாகிப் போனதில் எனக்கு வருத்தம் இருக்காதா? உடலுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கணவர் படும் போது பட்டு வாழும் பல பெண்களைப் போலில்லை நான். 'என் வாழ்வு என் உணர்ச்சி' என்று இப்போதில்லை, இள வயதிலிருந்தே இருந்தவள் நான். திருமணத்தை முறித்துக் கொள்ளலாமா என்று நினைத்து அம்மாவிடம் அறிவுரை கேட்ட போது, "பொம்பளையா நீ? இதுக்காகக் கட்டுனவரை விட்டு ஓடுறியா? பத்து நாள் பொத்தலுக்கா படி தாண்டுறே? செருக்கினு சிரிக்குமடி" என்று வெறுப்பும் வேதாந்தமும் பேசினார்.
எல்லாமே அநீதியாகப் பட்டது.
மற்றப் பெண்களைப் போல் குழந்தை குட்டி மாமியார் பக்கத்து வீடு என்று உபரித் தொல்லைகளில் நேரத்தைக் கழிக்கவும் எனக்கு வாய்ப்பில்லை. நோ குழந்தை. நோ குட்டி. நோ மாமியார். நோ பக்கத்து வீடு.
கடைசியில் சொன்னது தவறு. எஸ் பக்கத்து வீடு. அங்கே தான் தொடங்கியது விவகாரம்.
நான்கு வருடங்களுக்கு முன் வேலை மாற்றத்தில் ஊர் திரும்பிய கணவரின் தம்பி, பக்கத்து வீட்டில் குடியேறினான். "வரட்டும் வரட்டும்.. நம்ம வீட்டிலயே இருடானு சொன்னா கேக்க மாட்டுறான். தனி வீட்டுல இருக்குறதும் நல்லது தான். ஒரு பொண்ணைப் பாத்து கட்டி வச்சுருவோம்" என்று கணவர் உற்சாகமானார். இருக்கிற கூட்டம் போதாதென்று தம்பியும் சீட்டாட்ட விஸ்கி விளையாட்டுக்களில் கலந்து கொள்ள, கணவருக்கு ஒரே கொண்டாட்டம். 'ஒரே ரத்தம் தானே, வேறெப்படி இருக்கும்?' என்று நானும் விட்டிருந்த போது, தொட்டான். நெஞ்சைத் தான்.
திடீரென்று ஒரு மாலை, "உன்னாண்ட ஒண்ணு கேக்கணும். எப்பவும் சோகமா இருக்க.. கல்யாண உறவெல்லாம் சரியாத் தானே இருக்கு?" என்றான்.
"சேச்சே.. நல்லாத்தானே இருக்கேன்?" என்று பதில் சொன்ன என்னை அவன் பார்த்த பார்வை! மெள்ளப் பேசத்தொடங்கி நாளாக நாளாக உள்ளத்தைக் கொட்டினேன். அவ்வப்போது ஒன்றாகச் சாப்பிடுவோம். சில திரைப்படப் பாடல்களைக் கேட்போம். பேச்சோடு சரி. இருந்தாலும் மனதளவில் ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். உணர்ந்தோம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் திடீரென்று அவன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டான். "அண்ணே, எனக்கு மறுபடி மாத்தலாயிடுச்சு. பக்கத்து ஊரு தான், இருந்தாலும் இங்கெருந்து தெனம் போய்வர நேரமாகும். அங்கியே ஒரு வீடு பாத்துக்குறேன்" என்று என் கணவரிடம் சொன்ன வார்த்தைகளில் பொய் முலாம் பூசியிருந்ததைக் கவனித்தேன்.
ஒரு வாரம் பொறுத்துத் தொலைபேசினான். "எதுக்கு இப்படிப் பெட்டி படுக்கையோடு கெளம்பிட்டே? இங்கியே இருந்திருக்கலாமே? என் புலம்பல் பிடிக்கலையா?" என்றேன்.
"சொன்னா தப்பா நெனக்காத.. அங்க இருந்தா உன்னை நெருங்கித் தொட்டுறுவனோனு பயம் வந்துடுச்சு. இருந்தாலும் அங்க இருக்குறப்ப, நின்னா உக்காந்தா படுத்தா உன் நெனவு தான். ஒண்ணு ரெண்டு முறை உன்னைத் தொட்டுக் கட்டிடணும்னு கூட நெனச்சேன்... ஆனா உனக்கு இது போல ஏதாவது எண்ணம் இருக்குதா தெரியல... அதுவுமில்லாம அண்ணண் பெண்டாட்டியாச்சே? முறை தவறலாமா? ரெண்டு பேருமே விரும்பினாலும் ஊரு உலகம்னு விவரம் மோசமாயிடுமே? அதனால தான்"
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நொடிகள் மௌனம் காத்துவிட்டு, உண்மையைச் சொல்லி விட்டேன்.
நெருங்கிப் பழகத் தொடங்கினோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொட்டுக்கொண்டோம். அண்ணனுக்கும் தம்பிக்கும் எவ்வளவு வித்தியாசம்! கண்ணதாசன் கவிதை போல என்னைப் படிக்கத் தெரிந்திருந்தது அவனுக்கு. சில சமயம் விறுவிறுப்பான சுஜாதா நாவலானேன் அவன் கையில். பல சமயம் ஏஆர்ஆரின் இலக்ட்ரிக் கிடார் போல் என்னை வாசித்தான். சின்னச் சின்ன மயக்கங்களிடையே நானும் அடிக்கடி டென்டுல்கரானேன்.
கணவருக்கு சந்தேகமேற்பட்டதா தெரியவில்லை. "என்ன நீ? இப்பல்லாம் சிரிச்சு பேசி சந்தோசமா இருக்கியே?" என்பார் என்னிடம். "ஏண்டா, மாத்தலாயிடுச்சுன்னுட்டு பக்கத்து ஊருக்குப் போனவன் தெனம் இங்க வரியே? இங்கியே இருந்திருக்கலாம்ல? இப்பப் பாரு, பக்கத்து வீட்டுல குடிவந்துட்டாங்க" என்பார் தம்பியிடம். "செல்போன் பில்லைப் பாத்தா அவன் போனுக்கு எப்பப் பாத்தாலும் கால் போட்டுப் பேசிட்டிருக்கியே?" என்பார் என்னிடம். "நீ என்னடா, என்னைப் பாக்க வந்தியா? இவளைப் பாக்க வந்தியா? சும்மா அவளையே சுத்திக்கிட்டிருக்கே? வாடா, வந்து ஒக்காந்து என்னாண்ட பேசு" என்பார் தம்பியிடம். திடீரென்று ஒரு நாள் என்னிடம், "அவன் எதுக்கு உன்னாண்ட எப்பவும் கிசுகிசுனு எதுவோ பேசிட்டிருக்கான்? சீட்டு வெளையாட வந்தவன் நிமிசத்துக்கொருக்கா எழுந்து என்னவோ சொல்றானே உன்னாண்ட?" என்றார்.
கவனமாக இருக்கத் தீர்மானித்தோம். கணவரில்லாத பொழுதும் நான் வெளியே கடைத்தெரு என்று கிளம்பிய பொழுதும் மட்டுமே சந்திப்பதென்று முடிவு செய்தோம். எப்படி ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக் கொள்வது? செல்போனைக் கண்காணிக்கிறார். வீட்டில் இமெயில் பார்த்தாலும் பின்னால் நின்று கண்காணிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால் பிளாக் உலகத்தில் சந்தித்து செய்தி தெரிவித்துக் கொள்வதென்று தீர்மானித்தோம். உங்கள் பிளாக், சாம்பார் வடை, கோலிசோடா, இதயம் சாத்துகிறது என்று இரண்டு பேருமே படிக்கும் சில தமிழ் வலைப்பூக்களில் கமென்ட் போடுகிற சாக்கில் மறைமுகமாகச் செய்தி சொல்லிக்கொள்ளத் தொடங்கினோம். மற்ற கருத்தாளர்களைக் கேட்கிற சாக்கில், "என்னங்க கொசுவத்தி? ரெண்டு நாளா ஆளையே காணோமே? வீட்டுல விசேசமா? கலக்கல் கமென்டு போட்டிங்க" என்று எழுதினால் இரண்டு நாளில் வீட்டில் கலக்கலாமென்பது செய்தி. "கல்யாணச் சாப்பாட்டையெல்லாம் பார்த்ததும் உடனே சாப்பிடத் தோணுது. இன்று மாலை காய்கறி வாங்கி நானே சமைக்கப் போகிறேன்" என்று கமென்ட் எழுதினால், காய்கறி வாங்கும் வழியில் மாலையில் சந்திக்கிறேன் என்று செய்தி. சில சமயம் அனானிகளாக கமென்ட் போடுவோம். இப்படி மறைமுகச் செய்தி தெரிவித்து சந்திப்பது வசதியாக இருந்தது. கணவரும் இந்த வலைப்பூக்களைப் படிப்பதால் வீட்டில் சிக்கலே இல்லை. செய்தி சொல்லி, கணவர் இல்லாத நேரத்தில் சந்தித்து மகிழ்ந்திருப்போம்.
புதிதாகக் குடிவந்த பக்கத்து வீட்டுக்காரர் கணவருடன் சீட்டாட்டத்தில் கலந்து கொள்ளும் போது ஒரு நாள் என்னிடம் வந்தார். அவர் சனி ஞாயிறுகளில் கணவருடன் தமிழ் பிளாக் படிப்பதும் கமென்ட் போடுவதும் உண்டு. அன்றைக்கு என்னிடம் தனிமையில் வந்து, "நீங்க கள்ளச்செய்தி தெரிவிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்" என்றார்.
அதிர்ந்தேன். வெளிக்காட்டாமல் "என்ன சொல்றீங்க?" என்றேன்.
"ஒரு யூகம் தான்" என்றவர், சென்ற மூன்று மாதங்களில் நான் இட்ட கமென்டுகளை விவரமாக எடுத்துக் காட்டி, அன்றைக்குக் கணவரின் தம்பி வந்ததையோ நான் வெளியே சென்றதையோ சுட்டிக் காட்டினார். "நீங்க வெளியே போறதைக் கவனிச்சு பின்னால கூட வந்தேன். நீங்க எங்கே போனீங்கனு தெரியும்" என்றார். நான் இன்னும் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தேன். "எனக்கு ஒரு இன்ட்ரெஸ்ட் வந்து துலக்கினேனே தவிர, இது உங்க லைப். நீங்க எப்படி வேணும்னாலும் வாழலாம்" என்றார். நான் பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்
அன்று மாலை கணவரின் தம்பியைச் சந்தித்த போது நடந்ததைச் சொன்னேன்.
"விடு, இதை ஒதுக்கிடறது பெடர்னு தோணுது. அந்த ஆள் இன்னொரு முறை எதுனா சொன்னா பாத்துக்குவோம், அதுவரை நெனைச்சுப் பாக்க வேண்டாம்" என்ற அவனைக் கட்டினேன்.
அவ்வப்போது என்னை ஒரு பொருளுடன் பார்ப்பது போல் தோன்றினாலும், அதற்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரரும் அதைப் பற்றிப் பேசவேயில்லை. என் கணவருடன் சீட்டாட்டம், சனி ஞாயிறு அரட்டை என்று அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து கணவருடனும் என்னுடனும் சிரித்துப் பேசி நன்றாகவே பழகினார். நானும் அவர் சொன்னதை மறந்து முன்னைவிட அதிக சந்தோஷத்துடன் இருந்தேன்.
கொலைக்கு வருகிறேன்.
கணவர் திரும்பி வர நேரமாகும் என்ற நம்பிக்கையில் தம்பியைச் சந்திக்க இருந்தவள், அன்றைக்கு அவன் சொன்ன நேரத்துக்கு முன்பே வருவானென்று எதிர்பார்க்கவில்லை. தன்னிடமிருந்த சாவியை வைத்துக் கதவைத் திறந்து உள்ளே வந்தவன், படுக்கறையில் என்னைப் பார்த்து விட்டான். பக்கத்து வீட்டுக்காரருடன்.
2010/04/04
மீன்
            மலை அருவி சுனாமியில் நீச்சல்
            முதலை சுறா பிரானாவுடன் போர்
            தொட்டிக்குள் குட்டிமீன் கற்பனை.
            எத்தனை நிறம்!
            எல்லாரும் இந்நாட்டு டின்னர்.
                                                            உயிரில்லை மணமுண்டு
                                                            நீர்ப்பூக்கள்.
            சுறாவுக்கும் எறாவுக்கும்
            என்ன வித்தியாசம்?
            காரம். நேரம்.
              கடல்மிராண்டித்தனம்
              மனித டிஎன்ஏ.
                                                                                        நேற்றைய மீனிலிருந்து பிறந்தவன்
                                                                                        இன்றைய மீனையழிக்கிறான்
                                                                                        நாளைய செய்தியில் நீதி.
மீனை உருவாக்கிய தேவன்
    கருணையுடன்
      தூண்டிலை உருவாக்கினார்.
  பற்களைக் காட்டும் சுறாவுக்கு
    உற்சாக வரவேற்பு.
      ஸ்க்ரீன் சேவர் மீன்கள்!
    நீரிருப்பீரோ நானிருப்பேனோ
      நீரிருக்கும் வரை
        நெத்திலி.
                                                                        உண்ட மீன்
                                                                                                                                              கயல்.