skip to main |
skip to sidebar
1 | 2 ◄◄இதற்கு முன்
    "ஆச்சரியம் தான். ஆனா இப்படியெல்லாம் யோசிக்கறீங்களேனு வருத்தமாவும் இருக்கு. இப்படிக் கூச்சல் போட்டீங்களே, என்னாச்சோ ஏதாச்சோனு வந்தா தியாகப்பிரம்மம் பூனை ரூபத்துல நம்ம வீட்டுக்கு வந்திருக்காருனு சொல்லிக்கிட்டு.. பத்து நாள் முந்தின மழைல முறிஞ்ச கிளையும் புதரும் வெயில்ல காஞ்சு சுள்ளியும் முள்ளுமா கிடக்கு.. காலெல்லாம் குத்துது.. அதை எடுத்துப் போடுங்கனு ரெண்டு நாளா கத்தறேன்.. தியாகப்பிரம்மம் பூனைனு.. வேறே வேலையில்லையா?"
"க்லீன் பண்ண ஆள் அழைச்சுண்டு வரதா சொன்னியே மாலி? ஓகே.. இன்னிக்குப் பண்ணிடறேன் ஜெயா.. சரி இதைக் கவனி.." என்று மறுபடி என் சோதனைகளில் இறங்கினேன். தியாகராஜர் க்ருதி ஒலித்த போது ஒன்றி என்னருகே வந்தமர்ந்த பூனை, ஒவ்வொரு முறை வேறே எந்தப் பாடல் ஒலித்தாலும் அசுவாரசியமாகவோ அல்லது அவசரமாகவோ இடத்தை விட்டு அகன்றது. "இப்ப என்ன சொல்றே ஜெயா?"
"தப்பா நினைக்காதீங்க. அமெரிக்கால நாய் "ஸிட்"னா உட்காரும். நம்ம பசங்க பாட்டு டான்சுனு ஏதாவது கூத்தடிச்சா தானும் சேர்ந்து உக்காரும். அதுக்காக பாப் ம்யூஸிக் தெரிஞ்ச நாய்னா அர்த்தம்? உங்களுக்கு ஞாபகம் இருக்கா? டுலுத் சம்மர் ஹவுஸ்ல ஒரு தடவை நம்ம வீட்டுக்குள்ள தவறி நுழைஞ்ச நாய்.. நீங்க என்ன சொல்லியும் கேட்கலே.. வாலை ஆட்டிக்கிட்டே இருந்தது.. ஆனா அதைத் தேடி வந்த ரோபர்டோ ஸ்பேனிஷ்ல ஏதோ சொன்னதும் ஒரே ஓட்டமா தாவியோடிச்சே... ஸ்பேனிஷ் தெரிஞ்ச நாய்னா அதுக்கு அர்த்தம்? இல்லே. பழக்கம். இது யார் வீட்டுப் பூனையோ? தியாகராஜர் க்ருதி கேக்குற வீடா இருந்திருக்கலாம். சாப்பாட்டு டயத்துல இது மாதிரி பாட்டுக்களைப் போட்டிருக்கலாம். சாப்பாட்டு வேளை... ஏதாவது சாப்பாடு கிடைக்குமோனு கூட இந்தப் பூனை உங்க பக்கத்துல வந்திருக்கலாம்.."
"உன்னை கன்வின்ஸ் பண்ணவே முடியாது. இது பழக்க வழக்கம் இல்லே. இப்ப பாரு" என்று எழுந்தேன். தியாகய்யரிலிருந்து எப்எம் ரேடியோவுக்கு மாற்றினேன்.
..தில்லானா தில்லானா நீ திக்கு திக்கு தேனா...
பூனை திடுக்கிட்டு எழுந்தது. புன்னகையுடன் ரேடியோவில் அலைவரிசை மாற்றினேன்.
..ஊத்த பல்ல வெளக்காமே சோத்த தின்னுங் காமாச்சி...
அலறியடித்து இடத்தை விட்டு அகன்ற பூனை சமையலறைப் பொந்துக்குள் அடைக்கலம் புகுந்தது.
ஜெயாவைப் பார்த்தேன். பிறகு சமையலறையிலிருந்த சாதம், பால், அப்போது செய்து வைத்திருந்த சாம்பார், வாழைக்காய்க் கூட்டு, கேரட் பச்சடி, கல்கண்டு, திராட்சைப்பழம் என்று கண்ணில் பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் சிறிதாகத் தட்டுக்களில் எடுத்துப் பூனையருகில் வைத்தேன். பத்து நிமிடங்களாகியும் பூனை எதையும் மோப்பம் பிடிக்கக் கூட எழவில்லை. என்னுடன் வந்த ஜெயாவும் மாலியும் கவனித்தபடி இருந்தனர். சமையலறையிலிருந்து வெளியே வந்து பத்து நிமிடங்கள் பொறுத்து மீண்டும் உள்ளே சென்றோம். பூனை தூங்கிக் கொண்டிருந்தது. தட்டுக்களில் உணவு அப்படியே.
வரவேற்பறைக்குத் திரும்பி இசையைத் தியாகய்யருக்கு மாற்றி மிக மிக மென்மையான ஒலிக்குக் குறைத்தேன்.
..ந்யாய அந்யாயமு தெலுசுனு ஜெகமுலோ...
பூனை வரவில்லை. சற்றே ஒலி கூட்டினேன்.
..ராம நீ சமானம் எவரு..
பூனை வரவில்லை.
"கொஞ்சம் செவிட்டுப் பூனையா இருக்குமோ அத்திம்பேர்? தியாகய்யருக்கு ஆயிருக்குமே நானூறு வயசு.." என்றார் மாலி.
மாலியை முறைத்தபடி எழுந்து சமையலறைக்குள் சென்றேன். பூனையைக் காணோம். சற்றுக் கலங்கி அங்குமிங்கும் பார்த்து மீண்டும் வரவேற்பறைக்கு வந்தபோது சோபாவின் கைப்பிடிக்குக் கீழே தியாகய்யர் பாட்டைக் கேட்டபடி மறைவாக மெய்மறந்து நின்று கொண்டிருந்தது பூனை. ஜெயாவையும் மாலியையும் சைகையில் அழைத்துக் காட்டினேன். பிறகு சமையலறையிலிருந்து உணவுத் தட்டுக்களை எடுத்து வந்து பூனையின் முன் வைத்தேன். அலட்சியம் செய்வது போல் பூனை எந்தத் தட்டையும் கொஞ்சமேனும் கவனிக்கவில்லை.
"இப்ப என்ன சொல்றே?" என்றேன்.
"அசைவப் பூனையோ அத்திம்பேர்? எலி மீஞ்சுரு மீன் ஏதாவது சாப்பிட்டுப் பழக்கமோ?"
"மாலி.."
"ஒருவேளை ஒசத்தியா கோழிக்குஞ்சு வேணுமோ என்னமோ?"
"சும்மா இரேன்.. பூனை கோழிக்குஞ்சு சாப்பிட்டுப் பாத்திருக்கியா எங்கயாவது?"
"பார்த்ததில்லேத்தே. ஆனா பூனைக்குக் கோழிக்குஞ்சுனா தேன்பாகு மாதிரி தெரியுமோ? டிவிலே இப்பல்லாம் டாமஜரினு.. சின்னக் கொழந்தைகளுக்கான ப்ரோக்ராம்னு சொல்றா.. ஆனா அதுல ஒரு பூனை சான்சு கிடைச்சா லபக்னு லபக்னு ஒரு கோழிக்குஞ்சை முழுசா முழுங்கிடறது.."
"அது கோழிக்குஞ்சில்லே" என்றபடி மாலியைக் கோபமாக முறைத்தேன்.
"அப்டியா? மஞ்சள் மஞ்சேள்னு மொழுக்காட்டம் இருந்ததே பாக்கறதுக்கு? யார் கண்டா? அமெரிக்க தேசத்துல பன்னிக்குட்டி கூட நல்ல வெளுப்பா கலரா இருக்குங்கறா. பாக்கறதுக்குப் பன்னி மாதிரியே இருக்காதுங்கறா"
"நிறுத்து மாலி"
"மாலி சொல்றது சரியாயிருக்கலாமே? பிராமண வீட்டுப் பூனையா இருந்தா பருப்பு சாதம் போட்டிருக்கலாம். மத்தவா மீனும் கறியும் தானே போடுவா? வாழைக்காய்க் கூட்டும் பருப்பு சாம்பாரும் வச்சா இந்தப் பூனைக்கு நாத்தம் குடலைப் பிடுங்குதோ என்னமோ யார் கண்டா?" என்றாள் ஜெயா. "அதுக்காக நாம மீன் வாங்கிட்டு வந்தா போட முடியும்? வேறே வேலை இல்லே?"
"அத்திம்பேர்.. இப்பல்லாம் பிராமணா சிக்கன்65 மட்டன்95னு ஒரு கட்டு கட்டி வெளுத்து வாங்கறா. அய்யருங்க கறி திங்கறதால் மாமிச விலைவாசி ஏறிப்போச்சுனு ஊர்ல புலம்பறா.. அதான் தியாகய்யர் பூனையா வந்து.."
சைகை காட்டி மாலியை அடக்கிக் கடுப்புடன் அமர்ந்தேன்.
"சரி சரி.. நீங்க சொல்றாப்புல சங்கீத ரசனையுள்ள பிராணினே வச்சுப்போம். ஆனா எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க?! இந்தப் பூனை தியாகய்யர்னு தானே சொல்றீங்க? இப்பப் பாத்துடலாம்" என்றாள் ஜெயா. அலமாரியிலிருந்த விக்கிரகங்களை எடுத்துக் கோபமாக எறிவது போல் பாவம் காட்டித் தரையில் வீசினாள். விக்கிரகங்கள் மூலைக்கொன்றாக சிதறி உருண்டன. நான் அதிர்ந்து "ஜெயா!" என்றேன்.
அந்தக் கணத்தில் நாங்கள் யாருமே எதிர்பாராதது நடந்தது. விபரீதங்களின் முதல் அடையாளமென அப்போதே தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஒரு காட்டுப்புலியின் உறுமலுடன் பூனை ஜெயாவின் மேல் பாய முற்பட்டது.
ஜெயா சட்டென்று விலகி அலறினாள். அந்தக் கணத்தில் நான் கண்ட ஜெயாவின் முகம்! திடுக்கிட்டேன்! அவளுடைய முகம்.. என்னை என்னவோ செய்தது. தலை மழுங்கச் சிரைத்து, காதில் குண்டலங்களும் நெற்றியில் விபூதியும் அணிந்த ஒரு பிராமணரின் முகம் போல் சில கணங்களுக்கு மாறியது.
பூனையை ஒரு கையால் வேகமாகத் தள்ளிவிட்டாள் ஜெயா. பாசித்தரையில் கால் வழுக்கியது போல் அறை மூலைக்குக் கத்தியபடி வழுக்கிச் சென்ற பூனை, அதே வேகத்தில் உடனே எழுந்து விக்கிரகங்களின் அருகே வந்தது. ராம விக்கிரகத்தைத் தேடிப் பார்த்து அதனருகே உட்கார்ந்தது. ஜெயாவைப் பார்க்க அஞ்சி நடுங்கியது போல் என்னைப் பார்த்தது.
பதைத்து ஜெயாவிடம் சென்றேன். கைகளிலும் முகத்திலும் சிராய்ப்பு. பூனை நிச்சயம் அவளை நிறையக் கீறியிருந்தது. "வா.. முதல்ல சுத்தம் செஞ்சு மருந்து போடறேன்"
"இந்தப் பூனையை முதல் வேலையா காவேரில கடாசிட்டு வாங்க. என்னை நான் பார்த்துக்கறேன். நான் திரும்பி வரப்போ பூனை இங்கே இருக்கக் கூடாது.." என்றபடி ஜெயா படுக்கையறைக்குள் சென்றாள்.
"நான் வேணும்னா நாளைக்கு வரேன் அத்திம்பேர்.. கொஞ்சம் வேலையிருக்கு" என்றபடி மாலி சமயோசிதமாகப் புறப்பட்டார்.
நான் பூனையின் அருகே சென்றேன். என்னைக் கண்டு அஞ்சி ஓடவில்லை. மாறாக என்னை நேராகப் பார்த்தது. அறிவுக்கப்பாற்பட்டக் கடவுளின் அடையாளமென்று சொல்லப்படும் ஆறறிவு அவதாரமான ராமனின் விக்கிரகத்தைத் தன் இரண்டு கால்களால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஐந்தறிவு அவதாரமான தியாகய்யப் பூனையைப் பற்றி நான் என்ன நினைப்பது? என்ன புரிந்து கொள்வது? என்ன செய்வது?
    மறுநாள் அதிகாலையில் எழுந்துவிட்டேன். உறக்கம் வரவில்லை. விக்கிரகங்களை வீசியதைக் கண்டு கோபத்தில் பூனை பாய்ந்தது.. ஜெயாவின் முகம் மாறியது.. நிச்சயம் நான் கற்பனை செய்யவில்லை. ஜெயாவின் முகம் ஒரு அந்தணரின் முகமாக.. சில கணங்கள் என்றாலும்.. மாறியதைக் கண்ணால் கண்ட அதிர்ச்சி அடங்கவேயில்லை. ஜெயாவிடம் இதைப் பற்றிச் சொல்லாதது வதைத்தது. மேலும் பூனையை விரட்டாமல் வைத்திருந்தக் காரணத்தால் ஜெயாவை மிகவும் கோபப்பட வைத்துவிட்டேன் என்றக் குற்ற உணர்ச்சி மிகத் தொந்தரவு செய்தது.
எழுந்ததும் முகம் கழுவி முற்றத்தின் ஓரத்தில் எனக்காக ஒதுக்கியிருந்த மேசைக்கு வந்தேன். உதய வேளையின் அரைகுறை இருட்டும் வெளிச்சமும் கண்ணாடிக்கூரை வழியாகப் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. பழைய மேகின்டாஷ் கணினியைத் தட்டியெழுப்பி, எண்ணத்தில் உதித்தவற்றைச் சற்றுத் தீர்மானமாகத் தெரிந்துகொள்ள, இணைய ஆராய்ச்சியில் இறங்கினேன். எம்எல்வி, மணி அய்யர், எம்எஸ், ராதா ஜெயலக்ஷ்மி, பாலமுரளி, நிஷா ராஜகோபால் என்று பல குரலில் தியாகராஜர் க்ருதிகள் மென்மையாக இசைத்துக்கொண்டிருக்க, பூனை வழக்கம் போல் என்னருகே அமர்ந்து என்னைக் கவனியாமல் இசையையும் ராம விக்கிரகங்களையும் கவனித்துக் கொண்டிருந்தது.
கூகிலுக்கும் அத்தனை விவரங்களைக் கொட்டிக் கொடுத்திருக்கும் விகிபீடியாவுக்கும் பகிர்ந்து கொண்ட இணைய நுகர் எந்தரோ மகானுபவர்கள் அந்தருக்கும் என் வந்தனங்களை மானசீகமாகத் தெரிவித்தபடி, கட்டுப்படுத்த முடியாத வியப்போடு விவரங்களைச் சேகரித்தேன். சுமார் ஏழரை மணிக்கு ஜெயா சமையலறைக்குள் வருவதற்குள் ஏறக்குறைய ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு விவரங்கள் சேகரித்துவிட்டேன்.
காபி கொண்டுவந்த ஜெயா, "காபி சாப்பிடறீங்களா?" என்றாள். மஞ்சள் பீங்கான் கோப்பையில் நுரை பொங்கக் கொடுத்தாள்.
நன்றியுடன் "நல்லா தூங்கினியா?" என்றேன்.
பூனையை வெறுப்புடன் பார்த்த ஜெயா, "இந்தப் பூனையைக் கிளப்புற வரைக்கும் தூக்கம் வராது" என்றாள்.
"இந்த வாரம் நாம ஸ்ரீரங்கம் போறப்போ திருச்சி எஸ்பிஸிஏல சேர்த்துடறேன்னு சொல்லியிருக்கேன்ல?"
"சனியனைப் பாருங்க.. என்னமோ இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் மாதிரி கம்பீரமா உக்காந்துட்டு.. வாட் எ ராட்"
"பாவம் ஜெயா.. பிராணியைப் போய் சனியன் கினியன்னுட்டு.." என்று காபியை அருந்தினேன். எனக்குப் பிடித்த வகையில் சூடாக சர்க்கரை குறைவான டிகாக்ஷன் அதிகமான ஸ்ட்ராங் காபி. சற்று இளைப்பாறினேன். "அதை விடு.. நெட்ல தெரிஞ்சுக்கிட்ட விவரங்களைக் கேட்டா நீ மனசு மாறினாலும் மாறுவே.."
"நானே கேக்கணும்னு நினைச்சேன்.. புஸ்தகம் ஏதாவது எழுதுறீங்களா?"
"சமீபத்துல நடந்ததெல்லாம் என்னை ரொம்ப பாதிச்சுது ஜெயா" என்றேன், முழு விவரங்களைச் சொல்லாமல். "தூக்கம் வரலே. இங்க நம்மளைச் சுத்தி ஏதோ பிரம்மாண்டமா நம்ம அறிவுக்குப் புலப்படாத விஷயங்கள் நடக்கிறதா எனக்குத் தோண ஆரம்பிச்சுது. ப்லீஸ்.. நான் சொல்றதைக் கேளு.. நானும் ரேஷனல் தான். இருந்தாலும் சில வாரங்களா.. குறிப்பா நேத்து ராத்திரி நடந்தது.. என்னை நிறையவே அசைச்சிருக்கு ஜெயா. இது என்னை நானே ஆத்திக்குறதுக்கான என்னோட தேடல்னு வச்சுக்கோ.."
"என்ன தேடுனீங்க?"
"மறுபிறவி சித்தாந்தங்கள்.. மறுபிறவினு பார்த்தாலும் சரி.. கொஞ்சம் தீவிரமா ஆன்மாவின் உடல்மாற்றம்னு பார்த்தாலும் சரி.. நான் தெரிஞ்சுக்கிட்டது என்னை நிச்சயமா உலுக்கியிருக்கு. எனக்கென்னவோ இந்தப் பூனை தியாகய்யர்னு நிரூபிக்குற அளவுக்கு விவரங்கள் கிடைச்சிருக்குனு நினைக்கிறேன்.. ஆனா எதுக்காக வந்ததுனு தான் புரியலே"
ஜெயா சிரித்தாள். சத்தியமாக ஆணின் சிரிப்பு.
திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன். வெண்கல டவரா டம்ளரில் காபியை உதட்டில் படாமல் உயர்த்தி அருந்திக் கொண்டிருந்தார் நேற்றிரவு பார்த்த அந்தணர். என் வாழ்நாளில் ஜெயா அப்படிக் காபி.. எந்த பானத்தையுமே குடித்ததில்லை. ஆச்சரியம் அடங்குமுன் சட்டென்று மாறித்திரும்பிய அவள் முகம்.. தூக்கிவாரிப் போட்டது! "என்ன கண்டுபிடிச்சீங்க?" என்றாள் இயல்பாக. காபியை உதட்டில் வைத்து அருந்தி முடித்து பீங்கான் கோப்பையை என் முன் வைத்தாள். குழம்பினேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டதா?
சுதாரித்தேன். "நிறைய கண்டுபிடிச்சேன்.. மறுபிறவி கிடையாதுனு நாம சொன்னாலும்.. கிழக்குலயும் மேற்குலயும் சரி அந்தக் காலத்துலந்து சொல்லியிருக்கறதெல்லாம் வேறே மாதிரி இருக்கு.. நிறைய உதாரணங்கள் கொடுத்திருந்தாலும் இதுக்கெல்லாம் அடிப்படையான சித்தாந்தம் ஆழமானதுனு நினைக்கிறேன். இந்த உலகத்துல இயற்கையா நடக்குறதெல்லாம் நிரந்தர அழிவில்லாம திரும்பத் திரும்ப உருவெடுக்குதுனு நம்புறியா?"
"எப்படிச் சொல்றீங்க?"
"உதாரணமா.. விதைச்சா செடி மரம் பூ பழம் விதைனு மறுபடி ஒரு வட்டம் உருவாகித் தொடருது.. சரியா? எவ்ரிதிங் இன் நேசர்.. தண்ணி நிலத்துல விழுந்து ஆவியா எழும்பி மேகமா மழையா மறுபடி விழுந்து மறுபடி எழுந்து.. பிராணி மனுஷன்லந்து எல்லாமே இயற்கையின் இந்த விதிக்கு உட்பட்டு நடக்குறதாவே தோணுது. ரிக் வேதத்துல புனர்ஜென்மம் புனர்ம்ருத்யுனு ரெண்டைப் பத்தியும் எழுதியிருக்குறதைப் படிச்சு அசந்துட்டேன் ஜெயா. நாம எல்லாமே இது போல இயற்கையின் விதிக்குட்பட்டு கலந்து பிறந்து இறந்து பிறந்து கலந்து பிறந்து இறந்து.. ஆன்மாவின் ட்ரேன்ஸ்மைக்ரேஷன் சாத்தியம்னு தோணுது.. பிறப்பு எப்படி ஏற்பட்டது? வாழ்வின் ஆதாரம் என்ன? எங்கே எப்படி எல்லாம் தொடங்கியது? நம்ம வேதாந்தமும் சரி மேற்கத்திய வேதாந்தமும் சரி.. ஒண்ணைத்தான் சொல்லுது.. ஆம்னி விவம் எ விவோ.. வாழ்விலிருந்தே வாழ்வு.. இதுக்கு என்ன அர்த்தம்?"
"உங்களுக்குப் பொழுது போகாம இதையெல்லாம் படிச்சுக் குழம்பியிருக்கீங்கனு அர்த்தம்.."
"இரு.. வாழ்விலிருந்து வாழ்வுனா ஒவ்வொரு பிறவியும் இன்னொரு பழைய பிறவியின் தொடர்ச்சினு ஆகுது இல்லையா? இதை நீ நம்பாவிட்டாலும் இப்போதைக்கு ஏத்துக்கிட்டு நான் சொல்றதைக் கேட்டா பிரமிச்சுப் போயிடுவே. ஹென்ரி டிஷ்னர்னு ஒருத்தர் கிழக்கு மேற்கு அத்தனை சித்தாந்தங்களையும் புரட்டி மறுபிறவி பத்தி எழுதியிருக்கார். நாம எல்லாருமே ஒரு முடிவின்மையிலிருந்து இன்னொரு முடிவின்மைக்குப் பயணம் செய்கிறோம். இதில் பிறப்பும் வாழ்வும் இறப்பும் இயற்கையின் விதிக்குட்பட்டு நடந்துகிட்டே இருக்கு. அத்தனை அணுக்களும் எப்படியாவது எங்கேயாவது அமைந்தும் அழிந்தும் தானே ஆக வேண்டும்னு அவர் எழுதியிருக்கிறது பிரமிப்பா இருக்கு. தியாகய்யரின் அணுக்கள் இந்தப் பூனையில் ஏன் கலந்திருக்கக் கூடாது?"
"இப்படிச் சொல்வீங்கனு எனக்குத் தெரியும்.. பூனைக்குப் பதிலா உங்களோட ஏன் கலந்திருக்கக் கூடாது? பூனை ஒரு காரணம் தான். தியாகய்யர் ராமர் விக்கிரகம்னு நீங்க தான் பிடிச்சிட்டிருக்கிறதா எனக்குத் தோணுது.."
"எக்ஸாக்ட்லி.. ஒரு விஷயத்தை முதலில் மனதில் பதிச்சுக்குறப்பவோ.. ஒரு முதல் சந்திப்பை ஏத்துக்குறப்பவோ.. எதையுமே செய்யுறப்பவோ.. மனம் தனக்குத்தானே ஒரு தீர்மானத்தையும் செய்யுது இல்லையா? திஸ் ஜட்ஜ்மென்ட்.. இதுக்குக் காரணம் என்னனு கேட்டின்னா.. இதுக்கு முன்னால நாம் எடுத்த பிறவிகளின் ஒட்டு மொத்த அனுபவம்.. அதான் நம்மையறியாமலே நம்மை தீர்ப்புக்குட்படுத்துது.. முன்பின் தெரியாதவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயமோ கெட்ட அபிப்பிராயமோ ஏற்படுதுனா அதை அறிவு பூர்வமா எப்படி விளக்குவே சொல்லு?"
"மை குட்னஸ்! பூனை உங்களை பைத்தியமாவே ஆக்கிடுச்சு போலிருக்கே? ப்லீஸ். விட்டுருங்க. இந்தப் பூனையும் வேண்டாம். இந்த முட்டாள்தனமும் வேண்டாம். உங்க தியரிப்படியே வச்சுப்போம். இதுக்கு முந்தி என்னவா இருந்தீங்கனு தெரியாது. இதுக்குப் பிறகு என்னவா இருப்பீங்கனு தெரியாது. இப்ப இருக்குற பிறவிலே உங்களுக்கு நீங்களே நேர்மையா நடந்துக்குங்க அது போதும்.."
"இதுக்கு முன்னால நீ யாரா இருந்தேனு ஒரு ஐடியா இருக்கு" என்றேன் மென்மையாக. ஏன் அப்படிச் சொன்னேன்? சொல்லியிருக்கக் கூடாது.
"என்ன சொன்னீங்க?"
"நீ மட்டுமில்லே நான் கூட இதுக்கு முன்னால யாரா இருந்திருப்போம் எதுவா இருந்திருப்போம்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் உண்டாகுது இல்லையா?" என்று சமாளித்தேன். "இன்னொரு கப் காபி சாப்பிடுவோம்" என்றபடி சமையலறைக்குச் சென்று இரண்டு கப் சன்ரைஸ் காபி கலந்து கொண்டு வந்தேன்.
"நெட்ல தேடினப்போ மில்டன் வில்லிஸ்னு ஒருத்தர் கிட்டத்தட்ட நூறு வருஷத்துக்கு முன்னால எழுதின 'மறுபிறவி, ஏன், எப்படி?'ங்கற புத்தகம் கிடைச்சுது. அதுல யார் யார் எப்போ மறுபிறவி எடுப்பாங்கனு ஒரு கணக்கே போட்டுக் கொடுத்திருக்காரு. ரொம்ப சுவாரசியமா இருக்கு. இதோ பாரு.." என்று ஒரு குறிப்பைத் தேடியெடுத்துப் படித்தேன்.
...ஒரு பிறவி முடிந்ததும் உயிர் ஆத்மா என்று அழைக்கப்படும் பிறவியின் ஆணிவேர் இயற்கையின் ரசாயனத்துடன் கலந்துவிடுகிறது. அணுக்கள் அணுக்களுடன் கலந்து உலவுகின்றன. வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏற்றபடி இந்த அணுக்கள் கலந்தும் பிரிந்தும் உலவுகின்றன. மேன்மையாக வாழ்ந்தவர்களின் அணுக்கள் மரணமடைந்ததும் சற்று உயரே சென்று கலக்கின்றன. கேவலமாக வாழ்ந்தவர்களின் அணுக்கள் மேலெழுந்தவாரியில் உடனே கலந்து தாழ்வாகவே இருக்கின்றன. இயற்கையின் சுழற்சிக்குட்பட்டே இவை மீண்டும் கலந்து பிறப்பில் முடிந்து இறப்பில் தொடங்குகின்றன...
"சுவாரசியமா இல்லே?" என்றேன். "பிறப்பு என்பது ஆரம்பம், இறப்பு என்பது முடிவுனு தானே நாம நினைச்சிட்டிருக்கோம்.."
ஜெயா பதில் சொல்லாமல் காபி சாப்பிட்டாள். "இங்க தான் சுவாரசியம் அதிகமாகுது" என்றேன். குறிப்பை எடுத்துத் தொடர்ந்து படித்தேன்.
...குடிகாரர்கள், சோம்பேறிகள், பழி சொன்னவர்கள், ஊழல் பேர்வழிகள், பொய்யான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் அணுக்கள் ஐம்பது வருடங்களுக்குள்ளாகவே மறுபிறவி எடுத்து விடுகின்றன...
...அறிவில்லாமல் நடந்து கொள்பவர்கள், தன்னைப் பற்றியே நினைப்பவர்களின் அணுக்கள் நூறு வருடங்களுக்குள் பிறவி எடுக்கின்றன...
...பணத்திமிர் பிடித்தவர்கள், கண்மூடிகள், படித்தவர்கள், உலகாயதமாய் வாழ்ந்தவர்களின் அணுக்கள் இருநூறு வருடங்களுக்குள்..
...தன்னலம் குறைத்துப் பிறர் நலம் கருதி ஒரு பொதுவுணர்வோடு வாழ்ந்தவர்களின் அணுக்கள் ஐநூறு வருடங்களுக்குள்...
...பொதுமையிலிருந்து விலகி உயர்ந்த குறிக்கோளோடு வாழ்ந்த அபூர்வப் பிறவிகளின் அணுக்கள் ஆயிரம் வருடங்களுக்குள்...
...எப்படி வாழ்வதென எடுத்துக்காட்டிப் பண்போடு வாழ்ந்த அதிசயப்பிறவிகளின் அணுக்கள் இரண்டாயிரம் வருடங்களுக்குள்...
ஜெயா மறுபடி சிரித்தாள். மறுபடியும் ஆணின் சிரிப்பு. "நீங்க சொல்றாப்புல சொல்லியிருக்காரா? இல்லே உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்களா?"
"நான் புரிஞ்சுகிட்டதுதான். நூறு வருஷத்துக்கு முன்னால மில்டன் வாழ்ந்த காலத்துல விவசாயிங்க அதிகம். சர்வாதிகாரிகள் அதிகம். கலைஞர்கள் குறைவு. அரசினம் ஏறக்குறைய அழிந்திருந்தது. விவசாயிகளை அவர் பொதுவுணர்வோடு வாழ்ந்தவர்கள்னு சொல்றாரு.. அரசர்களை பண்புள்ளவர்கள்னு சொல்றாரு.. சர்வாதிகாரிகளை திமிர் பிடித்தவர்கள் கண்மூடிகள்னு சொல்றாரு.. கலைஞர்களை குறிக்கோள் கொண்டவர்கள்னு சொல்றாரு. இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் என் கருத்தோட ஒட்டுற மாதிரி எடுத்துக்கிட்டேன்.. மில்டன் கருத்தின் அடிப்படை தான் முக்கியம். அதுல மாத்தமே இல்லே. அறிவார்ந்த அடுத்தவங்க கருத்துக்கு இடம் தராமல், தான் நம்பினதையே நம்பி ஏமாந்து போறவங்க கண்மூடிகள் தானே? சர்வாதிகாரிகள் திமிர் பிடித்தவர்கள் தானே? தன் விருப்பபடி எல்லாம் நடக்கணும்னு குடும்பத்துல பெண்டாட்டி பிள்ளைங்களை திமிரோடு ஏறக்குறைய அடிமையா நடத்துறவங்க சர்வாதிகாரிங்க தானே? மில்டன் சொன்னதையே நானும் சொல்றேன்.. தன் கருத்துக்கு ஆதரவா மில்டன் சொல்லியிருக்குறதைக் கவனி". தொடர்ந்தேன்.
...எபிக்டீடஸ், உனக்கும் எனக்கும் மிகவும் பிடிச்ச பிலாஸபர் இல்லையா, அவர் கவிஞர் எமர்ஸனா திரும்பி வந்தார்...
...இந்தியாவின் அசோக மகாராஜா அமெரிக்காவின் வீர வக்கீலான ஹென்ரி ஆல்காட்டாகத் திரும்பி வந்து அடையார் தியஸாபிகல் சொசைடி தொடங்கி வைக்கக் காரணமாயிருந்தார்..
...ஹரப்பா மொகஞ்சதாரோவுக்கு குடியேறியவர்களின் மூதாதையரான கெல்டியத் தலைவராக இருந்தவரே ஹிட்லரை ஒடுக்கிய அமெரிக்க அதிபரான ரூஸவெல்ட்.. அதுக்கு முன்னால அவரும் சீஸரும் கணவன் மனைவியா இருந்தவங்க...
...ஆங்கில அரசுக்கு அடித்தளம் போட்ட ஆல்ப்ரெட் தி கிரேட் தான் விக்டோரியா அரசியா திரும்பி வந்தது...
"இதையும் கேளு..நெட்ல கிடைச்ச விவரம்.." தொடர்ந்தேன்.
..ஏப்ரகம் லிங்கனோட போர்க்கால அமைச்சர் தான் இந்திரா காந்தியா மறுபிறவி எடுத்தார்..
..ஏப்ரகம் லிங்கன் அமைச்சர்கள்ல ஒருத்தர் தான் இப்போதைய ஒபாமா..
..திப்பு சுல்தான் அப்துல் கலாமா மறுபிறவி எடுத்திருக்கார்..
..அமிதாப் பச்சன் பழைய அமெரிக்க நடிகர் எட்வர்ட் பூத்..
ஜெயா மறித்தாள். "இதை வச்சு தியாகய்யர் திரும்பி வந்திருக்காருனு சொல்றீங்க.. சரி.. பூனையா வருவானேன்? மறுபிறவி எடுத்தா நீங்க சொன்ன நாலஞ்சு மனுஷ வகைல ஒருத்தரா இல்லை எடுக்கணும்?"
"அதைத்தான் சொல்றேன்.. இத்தனை வருடங்களுக்குள்னா சரியா இத்தனையாவது வருடத்தில் இந்த வடிவத்தில் வரணும்னு ஏதும் இல்லையே? மில்டனின் கணிப்பு ஒரு சுவாரசியமான அனுமானம். இப்ப இதைக் கேளு... அஷ்டலக்ஷ்மிகள் சேர்ந்து ஜெயலலிதாவா அவதாரம் எடுத்திருக்காங்கனு ஞானி ரஜனிகாந்தே சொல்லிட்டாரு.. பெசன்ட் நகர் கோவில்ல இனிமே கூட்டம் வருமானு தெரியலே.. அதைவிடு.. ஜவர்ஹர்லால் நேரு ஸ்வீடன்ல ஒரு நாயா மறுபிறவி எடுத்தார்னு நெட்ல விவரம் இருக்கு.."
இருவரும் சிறிது சிரித்தோம்.
"ஜெயா.. எல்லாமே ஒரு அனுமானம்னு வச்சுக்கிட்டாலும் இத்தனை ஆராய்ச்சி.. இத்தனை விவரம்.. இதுல ஏதோ ஒண்ணு இருக்கலாம்னு தோணுது. இந்து மதத்துலயே எத்தனை மறுபிறவிக் கருத்துக்கள்! நசிகேதன் கதை என்னை எங்கேயோ கொண்டு போயிடுச்சு. சிவன் ஆதிசங்கரரா வந்தார்னு சொல்றாங்க. வால்மீகியே தியாகய்யரா வந்தார்னு சொல்றாங்க. த்வைத மத்வாச்சாரியாரும் அத்வைத சங்கராச்சாரியாரும் ஒவ்வொரு பிறவியிலும் எதிரிகளாகவே பிறந்தார்கள்னும் ஒரு கருத்து.. ஸ்ரீரங்கத்துல நடந்துதுனு சொல்வியே.. கஜேந்திர மோட்சத்து யானையும் முதலையும் முற்பிறவியில் வேறே பிறவிகளா இருந்தாங்கனு புராணம் சொல்லுது இல்லையா? தசாவதாரத்தின் தாத்பர்யமே இது தானே? மீனாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் பிறந்து இறந்து பிறந்து வாழும் இயற்கை நியதியை அப்படியே சொல்லாம கடவுள் மகாத்மியம்னு தலைமுறை தலைமுறையா கதை வடிவுல சொல்லப்படும் மறுபிறவிச் செய்தி.. அவ்வளவுதான்.. அப்படியிருக்குறப்ப தியாகய்யர் பூனையா ஏன் வந்திருக்கக் கூடாது?"
ஜெயா விருட்டென்று எழுந்தாள். "போறும் உங்க ஆராய்ச்சி. மழையில முறிஞ்ச கிளையும் புதரும் காய்ஞ்சு கிடக்கு.. எடுத்து வெளில போடுங்கனு ரெண்டு நாளா அடிச்சுக்குறேன். இந்தப் பூனையும் விக்கிரகங்களும் உங்களைப் பைத்தியமாத்தான் அடிச்சிருக்கு"
இங்கே தான் விபரீதங்கள் உக்கிரமாகத் தொடங்கின என்று நினைக்கிறேன்.
"உக்காரு ஜெயா.. நான் பைத்தியம்னே வச்சுக்கோ. இந்தப் பூனையின் கழுத்துல ஒரு மாலையிருக்குனு சொன்னேனே.. இன்னிக்குக் காலைல என்னமோ தோணிச்சு.. பூனைக் கழுத்துல இருந்த மாலையை மறுபடி நல்லா ஆராய்ஞ்சு பார்த்தேன். வழவழனு முடிச்சு மாதிரி இருக்கே தவிர அது முடிச்சு இல்லே ஜெயா. ருத்ராட்சம். பூனை கழுத்துல ருத்ராட்சம் எப்படி வந்தது?"
ஜெயா என்னை வெறுப்புடன் பார்த்தாள். "என்னைக் கேட்டா?"
"அதுக்கு மேலே இன்னொண்ணும் சொல்றேன்.. எப்படிச் சொல்றதுனு தெரியாம இருந்தேன்.. தப்பா நினைக்காதே. நேத்து நீ விக்கிரகங்களை வீசினதும் பூனை பாஞ்சுது இல்லையா.."
நான் சொல்லும் பொழுதே ஜெயாவின் முகம் இறுகத் தொடங்கியதைக் கவனித்தேன். தொடர்ந்தேன். "தியாகராஜருக்கு ஒரு அண்ணன் இருந்தார். தனக்கு இல்லாத திறமை தம்பிக்கு இருக்கேனு பொறாமை..."
ஜெயாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏதோ முனகத் தொடங்கினாள். விடாமல் தொடர்ந்தேன். "தன் முன்னே தியாகராஜர் பாடியதைக் கேட்டு மெய்மறந்த குரு வெங்கடராமையா, தஞ்சாவூர் அரசர் சரபோஜி மகராஜாவிடம் தியாகய்யரைப் பற்றிப் பெருமையாக எடுத்துச் சொன்னார். இதைக்கேட்ட மகாராஜா, தியாகய்யரைத் தன் ஆஸ்தானத்தில் சேரும்படி கேட்டு தியாகய்யர் வீட்டுக்குச் செய்தி அனுப்பினார். தியாகய்யர் இல்லாத நேரத்தில் வந்த அரச தூதர்கள் அண்ணனிடம் இந்தச் செய்தியைச் சொன்னார்கள். தம்பிக்கு வந்த வாய்ப்பைக் கண்டு பொறாமைப்பட்டாலும் இதனால் குடும்ப வறுமை நீங்கி பெரும் அந்தஸ்தும் கிடைக்கும் என்ற ஆசையில் அண்ணன் ஜபேசன்.."
ஜெயா சடாரென்று எழுந்து உட்கார்ந்தாள். பூனை நடுங்கி என்னருகே ஒண்டியது. தொடர்ந்தேன். "..தியாகய்யரிடம் அரசச் செய்தியை சொன்னார். தியாகய்யர் எந்தவிதச் சலனமும் இல்லாமல் தன் சீதாராமலட்சுமண விக்கிரகங்கள் முன் அமர்ந்து 'நிதி சால சுகமா.. ராமா.. நி சன்னதி சேவா சுகமா?' என்று தமிழில் சுலபமாகப் புரிகிற மாதிரித் தெலுங்கில் பாடத்தொடங்கினார்"
"ஏய்!" என்றாள் ஜெயா. சந்தேகமில்லாமல் கோபமான ஆண் குரல்.
நான் சுதாரிப்பதற்குள் வேகமாக எழுந்து விக்கிரகங்களை அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டு பின்கட்டுக்கு ஓடினாள். என்னருகே இருந்த பூனை ஒரு கணமும் தாமதிக்காமல் அவள் பின்னே உறுமிப் பாய்ந்து ஓடியது.
ஜெயாவின் உருவம்.. ஜெயா அல்ல.. ஜபே..சபே..ஜெயே.. எனக்கு தலை சுற்றியது.. பூனையின் பின்னே ஓடினேன்.
பின்கட்டில் மரக்கிளை ஒன்றில் தடுக்கி விழுந்தேன். எழுவதற்குள் ஜெயா படித்துறையில் நின்றபடி விக்கிரகங்களை வீச.. பூனை பாய.. ஜெயா அலறியது கேட்டது. எப்படியோ எழுந்து.. மிகவும் வலித்த இடுப்பையும் கால்களையும் இழுத்துப் பிடித்துப் படித்துறைக்கு வந்தேன். ஜெயா படித்துறையில் வழுக்கி விழுந்து அடிபட்டுக் கிடந்தாள். நெற்றியில் ரத்தம் வேகமாகக் கசிந்து கொண்டிருந்தது. அவள் முகத்திலும் கைகளிலும் கீறல்கள். பதறியபடி அவளை நெருங்க முனைந்ததில் தடுமாறி அவளருகே விழுந்தேன். விக்கிரகங்களைக் காணவில்லை. பூனையையும். வலியில் கண்கள் இருண்டன. தலை சுற்றியது. வலி தாளாமல் புரண்ட போது கவனித்தேன். எதிர்க்கரையில் முன்னர் பார்த்த பெரியவர். அவர் கைகளில்...
மாலி எப்போது வந்தார்.. எப்படி எங்களை மருத்துவமனையில் சேர்த்தார் என்பது எதுவும் தெரியாது.
    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பிறகு எங்களுக்குத் தெரிந்த டாக்டர் விசாலம் மருத்துவமனையிலும் சில வாரங்கள் தங்கவேண்டியிருந்தது.
எனக்கு இடுப்பு ஒடிந்துவிட்டதால் செயற்கை இடுப்புப் பொருத்தியிருந்தார்கள். இன்னும் ஒரு மாதமாவது மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
ஜெயாவுக்கு நெற்றியில் இரண்டு தையல், முகத்தில் ஒரு தையல், கை கால்களில் அங்கங்கே பேண்டேஜ் சுற்றியிருந்தார்கள். அவளை இன்றைக்கு டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள். விவரம் சொன்ன மாலி, "கவலைப்படாதீங்கோ அத்திம்பேர். நான் கூடமாட இருந்து அத்தையைக் கவனிச்சுக்கறேன். நீங்க நிதானமாத் தேறி வாங்கோ. அதான் முக்கியம்" என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றார். "சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணி ஆத்துக்கு அனுப்பிடுவா. நாளைக்கு மறுபடி வரேன்" என்று என்னை விட்டு விலகிப் போனார். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.
அறை அமைதியாக இருந்தது. எனக்கு ஒரு விவரம் தெளிவாகப் புரிந்துவிட்டது.
இயற்கையின் சுழற்சியைப் புரிந்து கொள்ள முடியாது. விக்கிரகத்தை நான் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தியாகய்யர்.. பூனை.. வரவில்லை. விக்கிரகம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கட்டும் என்ற முனைப்புடனேயே பூனை வந்திருக்கிறது. விக்கிரகம் மண்ணுக்குள்ளேயே கிடக்கவேண்டுமென்ற விதி. தியாகய்யர் வேறு பிறவியில் திரும்ப நேர்ந்தால் திரும்பி வரும் காலம் வரையில் மண்ணில் புதைந்து கிடக்கட்டும் என்பதற்காகவே.. விக்கிரகங்களை வீசி எறியக் கூடியவர் வீட்டில்.. நடந்தவை எதுவும் தற்செயல் இல்லை.. நான் என்னவோ வேண்டாத ஆராய்ச்சியெல்லாம் செய்து சுழற்சியைத் தற்காலிகமாக நிறுத்தி.. ஜெயா சொன்னது போல் அன்றைக்கே விக்கிரகங்களை கோவிலில் கொடுத்திருந்தாலோ நீரில் எறிந்திருந்தாலோ பூனை எங்கள் வீட்டுக்குள் வந்தே இருக்காது.. அதைத்தான் மதில் மேல் நின்றபடி என்னிடம் சொல்ல முற்பட்டதோ தியாகய்யப் பூனை? ராம விக்கிரகங்களைப் பராமரிக்கும் தகுதி எனக்கில்லை என்பது புரியாமல் ஏதோ செய்துவிட்டேன். ஜெயாவைப் போல் எனக்கும் முற்பிறவித் தொடர்புகள் இருக்க வேண்டும். அதனால் என்னிடம் பூனை வந்திருக்கிறது. தெரியாது போன எனக்கும் தியாகய்யருக்குமான தொடர்பு தெரியாமலே இருக்கட்டும். விபரீதமாகத் தோன்றினாலும்.. விக்கிரகங்களை இருக்க வேண்டிய இடத்தில் வைக்கவே ஜெயா முற்பட்டாள் என்பது மட்டும் புரிந்து அவள் மேல் எனக்குப் புது மதிப்பு உண்டானது. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றதும் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆ! அசையும் பொழுதெல்லாம் வலித்தது.
இன்னொன்றும் புரிந்தது என்பேன்.
வலிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது 'ராமா' என்று சொல்லத் தொடங்கியிருக்கிறேன்.
[முற்றும்].
இக்கதை Roald Dahl 1950 வாக்கில் எழுதிய 'Edward, the Conqueror' எனும் சிறுகதையின் தழுவல். என் எழுத்தில் நிறைய உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நிறைகள் அத்தனையும் டாலுக்குச் சொந்தம். குறைகள் ஒட்டுமொத்தமாக என்னுடையவை.
1 ◄◄இதற்கு முன்
    வெளியே மழை மீண்டும் வலுக்கத் தொடங்கியது. டிவியில் கவனமில்லாமல் வீட்டைப் பற்றியும் படித்துறையில் பார்த்த உருவம் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இடியோசை அடங்கியதும் தொலைவில் குழந்தை அழுவது போல் ஒலிக்க, சற்றுத் தயங்கினேன். டிவியில் தாலாட்டு பாட்டு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானமானேன். மறுபடி குழந்தை அழுகை ஒலிக்க, டிவியில் கவனித்தேன். குழந்தை எதுவும் காணோம். எங்கிருந்து வருகிறது அழுகை? அல்லது அழுகை போன்ற ஓலம்? இத்தனை ஏக்கம் தோய்ந்த ஓலம்? படித்துறை பக்கம் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. அழுகையொலியை உன்னித்த போது அது குழந்தையின் அழுகையில்லை என்றுத் தெளிவானது. நாய்? பூனை? மழையில் சிக்கித் தவிக்கிற ஏதோ பிராணி என்று புரிந்து வருந்தி அமைதியானேன்.
உறக்கம் வரவில்லை. பசித்தது. சிறிது வயிற்றுக்கு ஈயலாம் என்று எழுந்து சமையற்கூடம் செல்லும் பொழுது மின்னல் பளீரிட்டது. சரியான இடி விழப்போகிறது என்று எண்ணியது வீணாகவில்லை. ஜெயா எழுந்திருக்கப் போகிறாளே என்று எண்ணியபடி ஒரு அப்பளத்தை மைக்ரோவேவில் வைத்து, பத்து நொடி பித்தானைத் தட்டினேன். ஜெயாவின் குரலைக் காணோம். அப்பளத்தைப் புரட்டிப் போட்டு மறுபடி பத்து நொடிப் பித்தான். முறுகலாகச் சுட்டிருந்த அப்பளத்தில் ஒரு ஸ்பூன் நெய்யைத் தடவி, உள்ளறைக்கு வந்து உட்கார்ந்தக் கணத்தில் மின்வெட்டு. இன்வர்டர் இயங்கி ஒரு விளக்கு மட்டும் எரியத்தொடங்கிய சில நொடிகளில் ஜெயாவின் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தேன்.
"என்னங்க இது, தூங்கலியா?"
"சுட்டப்ளம் நெய். சாப்பிடுறியா?"
"சரிதான். இடி சத்தம் வயித்தைக் கலக்குதேனு ஓடி வந்தா, தூங்காம அப்பளமா சாப்பிட்டுருக்கீங்க?" என்றபடி அருகே வந்து கொஞ்சம் அப்பளத்தைப் பிட்டு நெய் தொட்டுத் தின்றாள். கையோடு கொண்டு வந்திருந்த கம்பளிச் சால்வையைப் போர்த்துக் கொண்டு என் தோளில் சாய்ந்தபடி இரண்டு கால்களையும் சோபாவில் உயர்த்திச் சிறு குழந்தை போல் ஒருக்களித்துக் குறுக்கிக் கொண்டாள். "தூக்கம் வருது" என்றபடி தோளிலிருந்து மெள்ளச் சரிந்து என் மடியில் படுத்தாள். இப்பொழுது மின்னலும் இடியும் அதிகரித்திருந்தன. "ப்லீஸ்.. எழுந்து போகாதீங்க. இடின்னா எனக்கு பயம்னு தெரியுமில்லையா?" என்றாள்.
சில நொடிகளில் அவளிடமிருந்து வெளிப்பட்ட மெல்லிய குறட்டை, அந்த ஓசையிலும் தூங்கிவிட்டாள் என்றது. நான் அப்பளத்தை ஓசை வராமல் பிட்டுத் தின்றபடி இன்னமும் படித்துறை நினைவாகவே இருந்தேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாது. உட்கார்ந்த நிலையிலேயே தூங்கியிருக்கிறேன். திடீரென்று ஜெயாவின் முனகல் கேட்டு விழித்தேன். "தூக்கம் வரலேனு பாடுறீங்களா? எனக்குத் தூக்கம் வருது" என்று என் முதுகை அணைத்தபடி புரண்டு படுத்தாள். பாடுகிறேனா? என்ன சொல்கிறாள்?
அப்பொழுதுதான் கவனித்தேன். இது ஓலம். இல்லை, கானம். நிச்சயமாக யாரோ முணுக்கும் ஒலி.. இனிமையான ஆலாபனை.. கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் தொலைவாக வந்தாலும் தெளிவாகக் கேட்டது.
என்று காண்பேனோ?
பாதங்களை என்று காண்பேனோ?
பெருஞ் சனகனே பாலூற்றிக் கழுவியப் பாதங்களை என்று காண்பேனோ...
பாறையிற் பட்டுப் பெண்ணுயிர்த்தப் பாதங்களை என்று காண்பேனோ...
என்று காண்பேனோ?
கரங்களை என்று காண்பேனோ?
காதலுடன் சீதைக்குக் கல்யாணப் பொட்டிட்டக் கரங்களை என்று காண்பேனோ...
கருணையுடன் முனிவரைக் காத்தக் கரங்களை என்று காண்பேனோ...
எங்கே கேட்டிருக்கிறேன்? சட்டென்று பொறி தட்டியது. இது.. இது.. நான் சிலிர்த்து உட்கார்ந்ததில் ஜெயா எழுந்து விட்டாள்.
"என்னங்க ஆச்சு? நல்லா ஹம் பண்ணிட்டிருந்தீங்களே? தாலாட்டு மாதிரி சுகமா இருந்துதே?"
"நான் பாடலே ஜெயா. பாடுறீங்களானு நீ கேட்டதும் என்னைத் தட்டி எழுப்பினாப்புல இருந்தது.. எழுந்தா..". சட்டென்று ஜன்னலோரமாக விரைந்துப் படித்துறையைப் பார்த்தேன். இருளிலும் மழையிலும் எதுவும் தெரியவில்லை. ஜெயா நிச்சயமாகக் கலங்கியிருந்தாள். "என்னங்க ஆச்சு? எதுக்கு அப்படி திடீர்னு ஓடினீங்க? நான் உருண்டு விழுந்துட்டேன் பாருங்க. அப்படி யாரு வெளியில? திருடனா?"
"ஆமாண்டி. திருடன்னு சொல்லிண்டு ஒருத்தன் வருவானாக்கும்.." என்று அவளைக் கிண்டல் செய்தபடி உட்கார்ந்தேன். நடந்தவற்றை அவளிடம் சொன்னேன். "இப்ப கேட்டியே இந்தப் பாட்டு.. இது தியாகராஜர் க்ருதி"
"அதனாலே?"
"தெரியலே. குழப்பமா இருக்கு. எனக்கென்னவோ நான் பார்த்த அந்தப் பெரியவர் தியாகப்பிரம்மம்னு தோணுது"
"யாரு? அசல் தியாகராஜரா?"
"அசலில்லாத ரூபத்துல.."
ஜெயா திடீரென்று என் நெற்றியைப் பிடித்துவிட்டாள். "மோர் காய்ச்சிக் கொண்டு வரட்டுமா? சுவாமிமலை விபூதினு மாலி கொஞ்சம் கொடுத்தான். அதையும் கொண்டு வரேன். எதையோ பார்த்து பயந்திருக்கீங்க."
"பாட்டு.. நீயும் தானே கேட்டே?"
"நீங்க ஹம் பண்றீங்கனு நெனச்சேன். இல்லேன்னா அடிச்ச காத்துல ஏதாவது விசித்திரமா இருக்கலாம். சில சமயம் தெருநாய் ராத்திரில ஊளையிடறதும் இப்ப வர சினிமா பாட்டு மாதிரியே இருக்கு.. நடக்கக் கூடியது தான். அதுக்காக தியாகராஜராவது? நாழிகை நலிய ஊழியென உலுக்கும் இசைனு நீங்க ஏதோ சொல்வீங்களே அடிக்கடி.. அதுமாதிரிதான். ஏதோ திருடன் வந்திருக்கான்.. உங்களைப் பார்த்ததும் டபக்னு காவேரில குதிச்சு ஓடியிருப்பான்...வயசான காலத்துல எதுக்கு வெளில தனியா போறீங்க? ராத்ரில அதுவும் மழைல? காலம்பற எழுந்து பின்கட்டுல எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கலாம். படுங்க பேசாம"
காலையில் எழுந்த போது எட்டு மணிக்கு மேலிருக்கும். ஜெயா எழுந்துவிட்டிருந்தாள். "தூங்கினீங்களா? கரன்டு இன்னும் வரலே. காபி சாப்பிட்டு ஜெனரேட்டரை ஆன் பண்ணுங்க. இன்வர்டரும் போயிடும் போலருக்கு"
காபி சாப்பிட்டபடி பின் கட்டுக்குச் சென்றேன். வெளியே இன்னும் கசகசவென்று தூறலும் இல்லாமல் மழையும் இல்லாமல் பெய்து கொண்டிருந்தது. நிச்சயமாக நேற்றிரவு கேட்டது ஊழியின் வேடிக்கையில்லை. பின் கட்டைத் தாண்டிப் படித்துறையைப் பார்த்தேன். ஏதோ உந்துதலில் ஒரு குடையுடன் படித்துறைக்குச் சென்றேன். நீருக்குள் இறங்கியப் படித்துறையில் மொத்தம் பத்துப் படிகளாவது இருக்கும். மண்மேல் தெரிந்த ஐந்தாறு படிகளில் ஐந்தாவது படியின் விரிசலில் கிடந்தவற்றைப் பார்த்து... என்னையறியாமல் "ஜெயா!" என்று கூவினேன். அவசரமாக ஓடி வந்த ஜெயாவிடம் நான் கண்டதைக் காட்டினேன். "இங்கே பார்!".
அரையடி உயர விக்கிரகங்கள் மூன்று படித்துறைப் படியிலும் பக்கவாட்டுச் சேற்றிலும் காவிரி நீரிலும் பட்டும் படாமல் கிடந்தன. அவசரமாக எடுத்துப் பார்த்தேன். இலேசாக சேறு நீக்கிப் பார்த்த போது.. ராமன்... இல்லை இலட்சுமணன். இன்னொன்றை எடுத்துப் பார்த்ததும்... படித்துறையில் கிடந்தவை வெண்கலத்தாலான ராமன், சீதை, மற்றும் லட்சுமணன் விக்கிரகங்கள் என்பது புரிந்தது. மழையில் மறுபடி நீரில் விழுந்து விடக்கூடாதென அஞ்சி சேற்றுடன் அப்படியே மூன்று விக்கிரகங்களையும்... என்னைத் தடுத்த ஜெயா, எதிரே மதில் சுவரைச் சுட்டினாள்.
மதில் மேல் ஒரு பூனை. எங்களையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. பாய்வதற்குத் தயாராக இருந்த புலி போல் பூனை பயமூட்டுவதாகவே இருந்தது. அதன் கண்கள் எங்களை உற்றுக் கவனித்தன.
நான் விக்கிரகங்களைத் தொட்ட போது ஒரு காலை முன்வைத்து அலறியது. பின் வாங்கினேன். பிறகு பூனை அமைதியாக என்னையே பார்த்தது. குட்டிப்பூனை என்றாலும் அந்தத் தருணத்தில் கொஞ்சம் பயமாகவே இருந்தது. தெப்பலாக நனைந்திருந்த எங்கள் நடுவே மழையில் கொஞ்சமும் நனையவில்லை அந்தப் பூனை என்பது இன்னும் ஆச்சரியமாகவும் அச்சமாகவும் இருந்தது.
பூனையைப் பார்த்தபடி மெள்ள விக்கிரகங்களைத் தொட்டேன். இப்பொழுது பூனை அலறவில்லை. மென்மையாகக் குரல் கொடுத்தது. பசித்த குழந்தை போல். விக்கிரகங்களை ஒவ்வொன்றாக மண்ணோடு சேர்த்தெடுத்து என் மேற்சட்டையில் சுருட்டிக் கொண்டேன். மதிலைப் பார்த்தேன். பூனை எங்களை வெறித்துப் பார்த்தது.
ஜெயா பூனையை அழைத்தாள். "மியாவ்.. இங்க வா.." என்று ஏதோ சொன்னாள். பூனை ஜெயாவை விட்டு என்னை மட்டும் பார்த்தது. சட்டென்று தாவியோடி மறைந்தது. விக்கிரகங்களுடன் உள்ளே நடந்தேன். ஜெயா என்னைக் கட்டிக்கொள்ளாதக் குறையாக ஒட்டிக்கொண்டு வேகமாக வந்தாள்.
    நான் சென்னையிலிருந்து திரும்பி வர ஐந்து நாட்களாயின. ஜெயாவின் உறவினர் மாலியும் உடன் வந்திருந்தார். தியோசாபிகல் சொசைடி, கிங் இன்ஸ்டிட்யூட், ஐஐடியின் கெமிகல் எஞ்சினியரிங் மற்றும் மெடலர்ஜி துறைகள், பழைய ப்ரெசிடென்ஸி ஆர்கியாலஜி ப்ரொபசரான என் நண்பரின் வீடு, கனிமரா மற்றும் தாம்பரம் கிறுஸ்தவக் கல்லூரி நூலகம் என்று ஒரு ரவுண்டு அடித்துத் திரும்பியிருந்தேன். நான் இல்லாத நாளில் கும்பகோணம் போய்த் திரும்பியிருந்தாள் ஜெயா.
"அத்திம்பேர் தயவுல மெட்ராஸ் நன்னா சுத்திப் பாத்தாச்சு" என்றார் மாலி.
"என்ன கண்டுபிடிச்சீங்க? விக்கிரகங்களுக்கு மதிப்புண்டா? போய்ட்டு வந்த செலவுக்காவது தேறுமா?" என்றாள் ஜெயா.
"இந்த விக்கிரக வெண்கலத்தோட தரம், வடிவம், வேலைப்பாடு, மேலே படிந்திருந்த மண் எல்லாம் நாலஞ்சு இடத்துல சோதிச்சுப் பாத்தோம். இந்த விக்கிரகங்கள் முன்னூறு வருஷத்துக்கு முன்னால உருவானவைனு தீர்மானமா சொல்றாங்க. நான் என்ன சொன்னேன் உங்கிட்டே?"
"தியாகராஜர் ஆராதிச்சுத் தொலைச்ச விக்கிரகங்களா இருக்கும்னீங்க. தியாகராஜர் பொறந்தே முன்னூறு வருஷமாகலியே இன்னும்.."
"அதனாலென்ன.. தியாகராஜருக்கு இந்த விக்கிரகங்கள் கிடைச்சிருக்கலாமே? பரம்பரைல வந்திருக்கலாம். அவரோட அப்பா பெரிய ராமபக்தர் தெரியுமோ?"
"சரிதான்.. எனக்கென்னவோ சாதாரணமாப்படுது.. பிடிக்கலேனு கூட சொல்வேன். உள்ளே வைக்கறதா இருந்தா சுத்தம் பண்ணி வைங்க"
"அடியே. இந்த மண்ணுக்கும் மவுசிருக்குடி. முன்னூறு வருஷத்துக்கு முந்தின சேறு. சாயில் கம்பொசிசன் அப்புறம் அசிடிடி டெஸ்ட் பண்ணித்தான் தொன்மையைக் கண்டுபிடிச்சோம். விக்கிரகத்தோட சேர்ந்தது மண்.. மண்ணோட சேர்த்துத்தான்.."
"இந்த சேத்து மண்ணோட எல்லாம் உள்ளே வைக்காதீங்க. கறாரா சொல்லிட்டேன். ஏதாவது கோயிலுக்குத் தானமா கொடுங்க.. இல்லின்னா பழையபடி மண்ணோட மண்ணா போகட்டும், ஆத்துலயே விட்டுறுங்க"
"ஜெயா!" இரைந்தேன். "இது எவ்வளவு புராதனமானதுனு தெரிஞ்சுமா இப்படிப் பேசுறே?"
"ரைட். நாம கூடத்தான் புராதனமானவங்க. நம்ம ரெண்டு பேத்துக்கும் இடையே நூத்தம்பது வருஷமாகப் போகுது. யார் நம்மளைத் தலைல தூக்கி வச்சுட்டிருக்காங்க? ஏதோ ஆத்து மண்ணுல புதைஞ்சு அந்த மழைல மேலே வந்திருக்கலாம்னு சொல்றத ஏத்துக்கிட்டாலும் ஒரேயடியா லெப்டுல போறீங்களே?"
"ஏன் இருக்கக் கூடாது ஜெயா? பெரியவர் மாதிரி நான் பார்த்த உருவம்.. கைல ஏதோ வச்சிருந்தார்னு சொன்னனே.. விக்கிரகங்கள் தான்.."
"ஆவி மாதிரி மறைஞ்சுட்டார்னு சொன்னீங்க.. விக்கிரகங்கள் கரைஞ்சா போச்சு?"
"அப்புறம் அந்த ஹம்மிங்.. எத்தனை ஏக்கத்துடன் கூடிய இனிமையான பாட்டு! அந்த பாட்டோட வரிகளைச் சொன்னேன் இல்லையா? உலகத்தைக் காக்கும் பராக்கிரம ராமனை என்றைக்குப் பார்ப்பேன்னு தியாகராஜர் ஏக்கத்தோடு பாடின பாட்டு..."
"இப்ப என்னதான் சொல்றீங்க?"
"அந்த விக்கிரகங்களை என்னிடம் சேர்க்க தியாகராஜர் வந்து பாடியிருக்கலாமே? அரூபத்துல வந்தது ஒரு ஸிம்பாலிக்... அடையாள நிகழ்வா இருக்கலாம். ராம விக்கிரகங்கள் மேலெழுவது தெரிந்து இந்த விக்கிரகங்களைப் பராமரிக்க முடியாமல் போன ஏக்கத்தில் இதை என்னிடம் தந்திருக்கலாமே?"
"உங்க கிட்டே ஏன் தரணும்? இத்தனை வருசமா இந்தக் கவலை வரலியா தியாகய்யருக்கு?"
"தெரியலியே!"
"என்னமோ காரணமாத்தான் அத்திம்பேருக்கு இந்த விக்கிரகங்கள் கிடைச்சிருக்கு" என்றார் மாலி.
"நீ என்ன சொல்றே?"
"இல்லே அத்தே.. தியாகய்யர் பாரத்வாஜ கோத்ரம்.. நீங்க பொறந்ததும் பாரத்வாஜ கோத்ரம்.."
"அப்போ எங்கிட்டே இல்லே கொடுத்திருக்கணும்? அத்திம்பேர் கண்ல படுவானேன்? விக்கிரகங்களைத் தருவானேன்?"
"இப்ப நீங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டாலும் பொறந்த கோத்ரம்.. ஒரே வம்சாவளிக் குடும்பம்னு ஆறதில்லையா?"
"உங்க ரெண்டு பேர் உளறலுக்கு ஒரு அளவேயில்லைனு ஆறது" என்று ஜெயா கடுப்புடன் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.
"உளறலா இருந்தா என்ன? ரெண்டு நாளா தொடர்ந்து என் கண்ணுல பட்ட பெரியவர்.. அப்புறம் நம்மளையே முறைச்சுட்டு இருந்த அந்தப் பூனை... நான் விக்கிரகங்களை எடுத்துச் சுருட்டி உள்ளே கொண்டு போறதை பாத்துட்டுதானே தாவிப் போச்சு? நம்ப முடியாம இருந்தாலும் நடந்துச்சா இல்லையா? பூனைலந்து எதுவுமே அதுக்குப் பிறகு நம்ம கண்ல படலே இல்லையா?" என்றேன்.
ஜெயாவின் வீறல் கேட்டு அலறிப்புடைத்து அடுக்களைக்கு ஓடினோம்.
சமையல் மேடைக்கும் அலமாரிக்கும் இடையே இரண்டடி இடைவெளி உண்டு. தண்ணீர் அல்லது அரிசிப்பானை வைப்பதற்காக இருந்திருக்கலாம் அந்தக்காலத்தில். அந்த இடத்தில் மரச்சட்டங்களை வைத்துக் குறுக்கே பலகை போட்டு ஷெல்ப் போல் வைத்திருந்தோம் நாங்கள். சில வாசனைப் பொருட்கள், சமையல் புத்தகங்கள் என்று சிறிதாக அடுக்கி வைத்திருந்தோம். குனிய முடியாதென்பதற்காகக் கீழே எதுவும் வைக்கவில்லை. அங்கே சுவரோரமாக சுருட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தது பூனை. நாங்கள் முன்பு பார்த்த அதே பூனை!
ஜெயா மறுபடி அலறினாள். "இது இங்கே எப்படி வந்தது?"
"கதவைத் திறந்து வச்சிருப்பே.."
"கிடையவே கிடையாது. நேத்து சாயந்திரம் காபி கலந்து சாப்பிட்டேன். இன்னிக்கு காலைல நீங்க வருவீங்கன்னு இட்லி மாவு கரைச்சு வச்சேன். அப்பல்லாம் இந்தப் பூனை இங்க இல்லவே இல்லை" என்றாள் ஜெயா.
"கண்ல படலேனு அத்திம்பேர் சொன்னதுமே பூனை ப்ரத்யக்ஷமாறதே? விசித்ரமா இல்லே இருக்கு?!"
இம்முறை நான் அவர்களை அடக்கினேன். "சும்மா இருங்க ரெண்டு பேரும். பூனையாவது தீடீர்னு தோண்றதாவது! பாரு. இட் இஸ் ரியல். நிஜப்பூனை. அஞ்சறிவுப் பிராணி. கதவைத் திறந்து வச்சிருப்பே. இல்லின்னா ஜன்னல். ஏதாவது ஒரு வழியில வந்திருக்கும். விரட்டிட்டா போச்சு" என்றபடி அருகே சென்று பூனையை விரட்டினேன்.
பூனை பாய்ந்து ஓடவில்லை. மாறாக எழுந்து சோம்பல் முறித்தது. பிறகு எங்களைப் பார்த்து நின்றது. கம்பீரமான, அழகான பூனை. ஏறக்குறைய தங்கக்கலரில் இருந்தது. இடையே மண் கலரில் சிறு திட்டுக்கள் அதன் தோலழகுக்கு மெருகு சேர்த்தது. மஞ்சளும் கறுப்பும் கலந்த கண்கள். தீவிரமான பார்வை. அருகே சென்றேன். மெள்ளத் தடவிக் கொடுத்தேன். கழுத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் முடிச்சு முடிச்சாக ஒரு மாலை, ஏறக்குறைய புதைந்திருந்தது. "இதோ பாரு.. மாலை. யார் வீட்டுப் பூனையோ.. இடம் தெரியாம ஓடி வந்திருக்குனு நினைக்கிறேன்.. பக்கத்துல தான் இருக்கணும்.. தேடிப்பார்த்துக் கொடுத்துடலாம்" என்றேன்.
ஜெயா இப்போது அமைதியாக இருந்தாள். "பார்க்க நல்லாத்தான் இருக்கு பூனை. ஒரு தட்டுல பால் தரேன். குடிச்சதும் வெளில கொண்டு விட்டுறுங்க". ஒரு சிறு குழித்தட்டில் கொஞ்சம் பால் ஊற்றினாள். பூனையருகே வைத்தாள்.
பூனை பாலைக் குடிக்கவில்லை. ஒரு முறை தட்டை வாசனை பார்த்துவிட்டு பழையபடி இடுக்கிலேயே உட்கார்ந்துவிட்டது.
"நாம இருக்கோம்னு சங்கோஜமா இருக்கோ என்னமோ?" என்றார் மாலி.
சிரித்தேன். "சரி சரி.. அங்கயே இருக்கட்டும். யாராவது வந்து கேட்டா பூனையைக் குடுத்துறலாம்" என்றபடி ஹாலுக்கு வந்தேன்.
ராம விக்கிரகங்களை ஒரு ப்லேஸ்டிக் பைக்குள் வைத்து கண்ணாடி அலமாரிக்குள் தற்காலிகமாக இருக்கட்டும் என்று வைத்தேன். பிறகு எதிரேயிருந்த சோபாவில் உட்கார்ந்தேன். ஜெயா கொண்டு தந்த இட்லியை சாப்பிடலாம் என்று தட்டை எடுக்கத் திரும்பினால்... பக்கத்தில் சோபா ஓரமாகப் பூனை உட்கார்ந்திருந்தது. எதிரே இருந்த விக்கிரகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.
"ஏய்.. பூனை இங்க வந்துடுத்து பாரு!" என்றேன். ஜெயா கவனிக்கவில்லை. மாலியுடன் ஏதோ பேசியபடி இருந்தாள்.
பூனையைப் பார்த்தேன். மறுபடி மெள்ளத் தடவிக்கொடுத்தேன். "உம் பேரென்ன தெரியலியே? யார் வீட்டுப் பூனையோ இங்க வந்து டேரா போடப் பாக்கறியே?" என்றேன்.
எழுந்து சமையலறையிலிருந்து பால்தட்டை எடுத்து வந்து அதன் முன் வைத்தேன். பூனை கவனிக்கவேயில்லை. பொதுவாக நாய்களை விட பூனைகளிடம் பிகு செய்து கொள்ளும் பழக்கம் அதிகம் என்று எனக்குத் தெரியும். என்னவோ மகாராஜா வீட்டு செல்லப்பிள்ளை போல் பூனைகள் நடந்து கொள்ளும். நாயானால் சாப்பாட்டைப் பார்த்ததும் வாலட்டி ரகளை செய்து சுற்றிவர அசிங்கம் செய்து சாப்பிடும். பூனை அப்படியல்ல. அலுங்காமல் குலுங்காமல் சோம்பேறித்தனமாகவும் அதே நேரம் அதிகாரத் தோரணையுடனே எதுவும் செய்யும். வேன்கூவரில் எங்களிடம் ஒரு பூனை சில நாட்கள் இருந்தது. அந்தப் பூனை எங்களை அடிமையாக நடத்தியது என்றால் உண்மை. நினைவு வந்து மறுபடி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
பூனையைத் தடவி "ஏ பொறம்போக்குப் பூனை! போனாப் போறதுனு இடம் கொடுத்து பாலும் கொண்டு வந்தா என்னவோ பிகு பண்ணிக்கிறியே?" என்றேன் உரக்க. என் பேச்சு என்னவோ பூனைக்குப் புரிவது போல்.
பூனை சிலிர்த்துச் சட்டென்று என்னை ஏறிட்டுப் பார்த்த பார்வையில் அதிர்ந்து போனேன்! சட்டென்று கைகளை எடுத்துக் கொண்டேன். பூனை மறுபடி அமைதியானது. எதிரே இருந்த விக்கிரகங்களைப் பார்த்தபடி அமைந்தது.
மறுபடி சோபாவில் அமர்ந்தேன். பூனையைப் பார்த்தேன். விக்கிரகங்களையே பார்த்துக் கொண்டிருந்தது. பால் தட்டை அருகே நகர்த்தினேன். சீண்டவில்லை. விக்கிரகத்தின் மேலேயே பார்வை படிந்திருந்தது.
மென்மையாகப் பாடினேன். நிதி சால சுகமா.. ராமு நி சந்நிதி சேவ சுகமா..
பூனை சட்டென்று எழுந்து உட்கார்ந்தது. என்னைப் பார்த்தது. தலையசைப்பது போல் பாவனை செய்தது.
மனதில் தோன்றியதை அடக்க முடியவில்லை. சட்டென்று எழுந்தேன். என் சேம்சங் நோட்புக்கில் சேமித்திருந்த எம்பி3 ஒலிவடிவ தியாகராஜர் க்ருதிகளை ஸ்பீக்கரில் ஓடவிட்டேன்.
அனுபம குணாம்புதியனி நின்னு...
ப்ரோசேவாரு எவரே...
"நல்ல கீர்த்தனை அத்திம்பேர்" என்றபடி அருகே வந்த மாலியை சைகை காட்டி உட்காரச் சொன்னேன். "என்ன பண்றீங்க?" என்று கேட்ட ஜெயா, நான் மாலியை அடக்குவதைப் பார்த்து "எனக்கு அடுக்களைல வேலை இருக்கு.. நீங்க பூனையைப் பிடிச்சு என்ன வேணா பண்ணுங்க" என்று மறைந்தாள். நான் பொருட்படுத்தவில்லை. பாட்டில் கவனமாக இருந்தேன்.
தயரா நி தயரா நி தாசரதி ராமா...
எவரி மாட வின்னாவோ...
ஒவ்வொரு பாட்டிலும் அனுபல்லவியும் முதல் சரணமும் மட்டும் பாட விட்டு மாற்றினேன். பூனை நிமிர்ந்து உட்கார்ந்து அசைவேயில்லாமல் ஒன்றிப்போனது.
தொடர்ந்து ஒரு சினிமாப் பாடலை வைத்தேன்.
..என்னை விட்டு ஓடிப் போக முடியுமா, இனி முடியுமா?
பூனை சாதாரணமாகக் கீழே இறங்கி வாசலை நோக்கி நடந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தது. ஒரு வேளை சீர்காழி டூயட் பிடிக்கவில்லையோ? சமீபப் பாடல் ஒன்றை மாற்றினேன்.
.. தெரியாத பறவை அழைத்ததே. மனமும் பறந்ததே.. இதயமும்.. ஹோய்..
பூனை கண்டு கொள்ளவேயில்லை. மறுபடி மாற்றினேன்.
..ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள்.. அவள் வந்துவிட்டாள்
பூனை என்னைக் கோபமாக முறைப்பது போல் பார்த்து விட்டு வேகமாக நகரப் பார்த்தது. சட்டென்று மாற்றினேன்.
எந்த வேண்டுகொண்டு ஒ ராகவா.. பந்தமேலரா..
பூனை சடாரென்று திரும்பி ஒரே தாவலில் சோபாவில் ஏறி என்னருகே உட்கார்ந்தது. பாடலை சிறிது ஓடவிட்டு மாற்றினேன்.
ஸம்வேர்.. பியான்ட் த ஸீ.. ஸம்வேர்.. வெய்டிங் பார் மீ..
பூனை என்னைப் பரிதாபமாகப் பார்த்து மறுபடி கீழே இறங்கியது.
ஆஜ் மத்ஹோஷ் ஹுவா..
பூனை திரும்பிப் பார்க்கவில்லை.
பஜ கோவிந்தம்..
கந்தா வா வா..
பூனை சமையற்கட்டுப் பக்கம் ஓடி மறைந்தது.
"என்ன பண்றேள் அத்திம்பேர்? பூனையை விரட்டுறதுக்கு சிரமப்படறேள் போலருக்கே? ஒரு கட்டையால தட்டினா ஓடிட்டுப் போறது.."
"இல்லே மாலி. பூனையை வரவழைக்கறேன்.."
"என்ன சொல்றேள்?"
"பூனை இங்க இருக்கா?"
"இல்லையே.. ஓடிப்போச்சே.."
"இப்போ வரும் பாரு" என்றேன். மறுபடி தியாகராஜர் க்ருதி ஒன்றை ஒலிக்க விட்டேன்.
ஜெய ஜெய ஸ்ரீ ரகுராமா..
அரை நொடியில் சொல்லி வைத்தாற்போல் பூனை என்னருகே உட்கார்ந்தது கண்டு மாலி ஆடிப் போனார். நான் ஜெயாவை அழைத்தேன்.
"என்னத்துக்கு சத்தம் போடறிங்க?" என்றபடி வந்தாள்.
"இந்தப் பூனை யார் வீட்டுப் பூனையும் இல்லே"
"அதுக்காகவா ஜெயானு இத்தனை கூச்சல்?"
"இந்தப் பூனை யாரு, எதுக்காக வந்திருக்குனு எனக்குத் தெரிஞ்சு போச்சு.."
ஜெயா என்னை முறைத்தபடி நின்றாள்.
"இந்தப் பூனை.. இல்லை இல்லை.. இது பூனையில்லை.. பூனை வடிவத்துல நம்ம வீட்டுக்கு வந்திருக்கறது.. அசல் தியாகப்பிரம்மம். தியாகராஜரே தான்" என்றேன்.
[தொடரும்] ➤➤
    அசாதாரண நிகழ்வுகளை அதிசயங்கள் எனலாமெனில் ஒரு மாதமாக நிகழ்ந்து வருபவை நிச்சயம் அதிசயங்கள் தான். அதிசயத்துக்கும் அற்புதத்துக்கும் விபரீதத்துக்கும் இடையே எங்கோ பரிணமித்தவை. இவை, ஆட்கொண்ட சாதாரண மனங்களை உடனடியாக அசாதாரண பரவசங்களிலும் நம்பிக்கைகளிலும் தள்ளிவிடும் என்றாலும் கண்மூடி மதில்களில் பூனையாகத் திரியும் என்னையே கலங்க வைத்துவிட்டன என்பதும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
திருவையாறு வந்த ஆச்சரியம்... அடங்குமுன் எனக்குக் கிடைத்த சீதாராமலட்சுமண விக்கிரகங்கள் அசலில் தியாகய்யர் தொலைத்தவை என்ற சாத்திய மேலீட்டின் அதிர்ச்சி... அடங்குமுன் தியாகய்யரையே சந்தித்தப் பேரதிர்ச்சி... அடங்குமுன் நிகழ்ந்த விபரீதம்... எல்லாம் யாரைத்தான் அசைக்காது?
    வேலைக்காக ஐம்பது வருடங்களுக்கு மேல் உலகமெல்லாம் சுற்றிவிட்டு.. இந்தியாவின் பூரி, ராமேஸ்வரம், கன்யாகுமரி, குருவாயூர்... அல்லது இலங்கையின் மட்டக்களப்பு பகுதி.. என்று ஏதாவது ஒரு மூலையில் ஒதுங்க வேண்டும் என்று அவ்வப்போது எண்ணிக் கொண்டிருந்த நானும் என் மனைவி ஜெயாவும் சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பரின் அறுபதாம் திருமணத்திற்கு இந்தியா வந்து சுற்றிய பரவசத்தில், என் எழுபதாவது பிறந்த நாளில் ஓய்வுக்காக இந்தியா வந்துவிடுவது என்று முடிவு செய்தோம்.
போன கோடையில் ஓய்விடம் தேடி இந்தியாவின் பல இடங்களைச் சுற்றும் சாக்கில் கும்பகோணம் வந்திருந்தோம். காலையில் ராமஸ்வாமி கோவிலைச் சுற்றிவிட்டுக் களைப்பாறலாமென்று வெளியே வந்து ஒரு காபிக்கடையில் ஒதுங்கினோம். கோவிலைப் பார்த்தபடி காபி சாப்பிட்டிக் கொண்டிருந்த என்னை யாரோ லேசாகப் பின் மண்டையில் தட்டினாற் போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். காபி கொண்டு வைத்தவர் சற்றுத் தள்ளி இன்னொருவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். யாராக இருக்க முடியும் என்று வியந்து தலையைத் தடவிக்கொண்டே குடித்து முடித்தேன். திடீரென்று. "பக்கத்துல தானே இருக்கு திருவையாறு... போய் வரலாமே ஜெயா?" என்றேன். என் கேள்வி எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கேட்ட கணத்துக்கு முன், ஏன் பத்து நாள் வார மாதங்களோ அதற்கு முன் வரையிலோ இந்த எண்ணம் எனக்குத் தோன்றியதேயில்லை.
எனக்கு தியாகராஜர் க்ருதிகள் மிகவும் பிடிக்கும். என் கர்நாடக இசையறிவு குறுகியது என்றாலும் தியாகய்யரின் பாடல்களில் நூற்றுக்கு மேல் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் பாடல்களைச் சிறு பிள்ளைகளுக்கான நர்சரி ரைம்கள் போலவும் இறையுணர்வுக் கவிதைகளாகவும் ப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறேன். வியன்னாவில் இருந்த போது தியாகய்யரின் நௌகா சரிதத்தை இயக்கி அரங்கேற்றி ஒரு வாரம் தொடர்ந்து நடத்தியிருக்கிறேன். ஊழிக்காற்றில் நீரில் மூழ்கத் தத்தளிக்கும் ஓடக் காட்சியை விற்பன்னர்கள் துணையுடன் தத்ரூபமாகச் சித்தரித்திருந்தேன். க்ருஷ்ணனை முழுமையாக நம்பிய கோபிகைகள் தங்கள் உடைகளைக் களைந்து ஓடத்து ஓட்டைகளை அடைக்கும் காட்சியின் தத்துவத்தைப் புரிந்துகொண்ட வியன்னா மேயரின் மனைவி, கண்ணீர் சிந்த என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு தங்கக்கட்டியை எனக்குப் பரிசளித்ததை மறக்கவே முடியாது. பின்னாளில் பால்டிமோர், க்லீவ்லேந்ட், வேன்கூவர், பெர்லின், ம்யூனிக், ஆம்ஸ்டர்டேம் என்று பல இடங்களில் தியாகராஜ ஆராதனை முன்னின்று நடத்தியிருக்கிறேன். தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். அந்த நாளில் பெரிய வித்வான்கள் திருவையாறு வந்து நேரில் கலந்து கொண்ட ஆராதனைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். நாகய்யாவின் தியாகைய்யர் திரைப்படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். தியாகராஜர் க்ருதிகளை அவ்வப்போது பாடுவதும் முணுப்பதும் உண்டு. ஆனால் திருவையாறு ஒருமுறை கூடப் போனது கிடையாது.
"என்னங்க திடீர்னு? ராத்திரி ட்ரெயின் பிடிச்சு மதுரை போகணுமே?"
ஜெயாவின் விருப்பங்களும் என் விருப்பங்களும் அனேகமாக எதிலுமே சந்தித்ததில்லை. எங்களுக்குக்குள் பொதுவான விருப்பமோ செயலோ ஏதாவது உண்டாவென அடிக்கடி நாங்கள் கேட்டுக்கொண்டாலும் நாற்பத்து மூன்று வருடங்கள் தம்பதிகளாக இருந்திருக்கிறோம். எங்கள் பிள்ளைகளை நேசிப்பதை விட எங்களிடையே பொதுவாக வேறென்ன வேண்டியிருக்கிறது என்ற சமாதானத்தில் ஒருவரையொருவர் அனுசரித்தோ நேசித்தோ வாழ்ந்து வருகிறோம். "திருவையாறு போனா... ராத்திரி ட்ரெயின் மிஸ்ஸாயிடும்" என்று அவள் சொன்னது தொலைவாகக் கேட்டது.
"என்னவோ தெரியலே. திருவையாறு போகணும்னு மனசு சொல்லுது"
"மனசை சும்மா இருக்கச் சொல்லுங்க"
"ரெண்டு நாள் கழிச்சு மதுரை போலாம்மா" என்று நான் அவளைப் பார்த்ததும் உடனே இறங்கினாள். "ஒண்ணு செய்வோம். இப்ப மணி பதினொண்ணு கூட ஆகலே. திருவையாறு போய்ட்டு வந்துறலாம். பக்கத்துல தானே? சீக்கிரம் வந்துட்டா இன்னி ராத்ரி ட்ரெயின் தவறவிட வேண்டாம்" என்றாள்.
மாத வாடகைக்குச் சாரதியுடன் எடுத்திருந்த கரோலா காரில் திருவையாறு கிளம்பினோம். ஜெயா அதற்குள் கும்பகோணத்தில் அவள் தங்கையிடம் பேசி திருவையாறில் இருக்கும் பெரியப்பா மகன் உறவு வழி என்று யாரையோ தேடிப்பிடித்தும் விட்டாள். அசகாய ஜெயா. உலகாயத விஷயங்களில் ஜெயாவின் சாமர்த்தியம் யாருக்குமே வராது.
திருவையாறு உறவினர் வீட்டில் பேசிக்கொண்டிருந்து பின் காபி டிபன் முடித்துக் கோவிலுக்கு வந்தோம். நாங்கள் இறங்கிக்கொண்டதும் "நான் ஓடிப்போய்ட்டு வந்துடறேன் அத்தே" என்று உறவினர் சொல்ல, ஜெயா "மாலி..இருப்பா.. வண்டிலயே போய்ட்டு வந்துடு" என்று அனுமதித்ததும் மிகப் பெருமையுடன் காரின் பின்னிருக்கையில் உட்கார்ந்து "நடுக்கடைக்குப் போப்பா" என்றார். கார் மறைந்ததும் நாங்கள் இருவர் மட்டுமே அந்த வட்டாரத்தில். கோவிலும் சுற்றமும் விசாலமாகத் தோன்றியது. தியாகய்யர் சமாதியைக் கடந்த வெளியில் ஒரு பசுமாடு தோராயமாக அசை போட்டுக்கொண்டிருந்தது. கோவிலைச் சுற்றிவிட்டு சமாதியின் எதிரே ஒரு வேகத்தில் உட்கார்ந்து வித்வான் போல் பஞ்சரத்தினங்களைப் பாடத் தொடங்கினேன்.
நாட்டையில் க்ருதி முடித்ததும் "தியாகராஜர் பாட்டா இது? தெலுங்கு மாதிரியே இல்லையே?" என்றாள்.
"அது சம்ஸ்க்ருதம். உலகத்து சந்தோஷங்கள் அத்தனைக்கும் ஆதாரமானவன்னு ராமனைப் பத்திப் பாடினார் தியாகய்யர்."
"அப்போ உலகத்து அத்தனை துக்கங்களுக்கு யார் ஆதாரம்?.. சரி சரி பாடுங்க"
அடுத்தப் பாடலை முடித்து ஆரபியில் லேசாக ஒரு ஸ்வரம் பிடித்தேன். மூச்சு சீராக்க நிறுத்தினேன். "இப்ப பாடினிங்களே அதுவும் தியாகராஜர் பாட்டா? சம்ஸ்க்ருதம் மாதிரி இல்லையே?" என்றாள்.
"தெலுங்கு. குறிக்கோள் இல்லாத வாழ்வின் விரயம், தெளிவாகப் பேசவும் கேட்கவும் அறியவும் இயலாத மூடத்தனம், உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் புரியாதக் கண்மூடித்தனம், சுயபெருமை பேசும் பகட்டு இந்தமாதிரி பாவங்களை விடாமல் செய்து வரும் என்னைக் காப்பாத்து ராமானு.. பாடினார் தியாகய்யர்."
"பொய் சூது கொலை கொள்ளை இதெல்லாம் பாவமில்லையா? தனக்காக ஒரு குறிக்கோள் லட்சியம் இல்லாம அடுத்தவங்க சொல்றதுக்கு தலையாட்டி, தன்னையே நம்பி வந்தப் புதுப்பெண்டாட்டியை அம்போனு விட்டுட்டு காட்டுக்குப் போகத் துடிச்சவர் தானே ராமர்? உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியாம காட்டுல பெண்டாட்டியை விட்டு மானைப் பிடிக்க... சரி சரி பாடுங்க. எங்கே இவனைக் காணோம்?"
சாதிஞ்சனே பாடி முடித்தேன். அதற்கு மேல் ஜெயாவுக்குப் பொறுமையில்லை. "எத்தனை பாட்டுங்க? இன்னும் முடியலியா?" என்றாள்.
எழுந்தேன். எஞ்சியதை மனதுள் பாடத் தீர்மானித்தேன். வெயில் தணிந்திருந்ததால் காவிரியை ஒட்டி நடக்கத் தொடங்கினோம். ஜெயாவுக்கும் இது பிடித்திருந்தது. ஒரு கட்டத்தில் மெள்ள என்னை இடித்தபடி என் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தாள். தெருச்சுற்றில் எங்கள் கார் வருவதைப் பார்த்து, கோவிலுக்குத் திரும்பினோம். காரைத் தொடர்ந்து வந்த ஸ்கூட்டரில் ஒருவர் இறங்கினார். காரிலிருந்து குதித்திறங்கிய மாலி ஸ்கூட்டர்காரரை இழுக்காத குறையாக அழைத்து எங்களை நோக்கி வந்தார். "மன்ன்ச்ச்ருங்கோ அத்திம்பேர்.. ரொம்ப நாழியாய்டுத்தா அத்தே?" என்றார்.
ஜெயாவின் உறவினர் மாலிக்கு ஐம்பது வயதிருக்கும். இத்தனை வருடங்களாக முன்பின் அறியாத எங்களை அத்தை அத்திம்பேர் என்று உறவு முறை வைத்து அழைத்தது விசித்திரமாகவும் வெகுளியாகவும் இருந்தது. எனினும் 'மாம் டேட்' என்று மட்டுமே கேட்டுப் பழகிய எங்கள் இருவருக்குமே இது பிடித்திருந்தது..
"விவரமெல்லாம் கேட்டியா?" என்றாள் ஜெயா.
"சாரிக்கிறதா? ஆளையே கூட்டிண்டு வந்துட்டேன் ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடுங்கோ. பிடிச்சிருந்தா கையோட முடிச்சுடலாம் அத்தே"
காரில் நாங்களும் எங்களைத் தொடர்ந்து ஸ்கூட்டர் ஆசாமியும் கிளம்பினோம். முன்னிருக்கையில் இருந்த மாலி சுத்தமாக முன்னூற்றறுபது டிகிரி திரும்பி எங்களைப் பார்த்துப் பேசிக்கொண்டே வந்தார். "இது பெரிய இடம் அத்தே. நடுக்கடைனாலும் காவேரிப் பாலம் தாண்டினதுமே நதிக்கரையோரமா அரை ஏக்கரால வீடும் தோட்டமும். ரொம்ப வருஷமா ஆளில்லாம இருக்கறாதால தூசி தும்பட்டை இருக்கும். எல்லாம் சரி பண்ணிடலாம். அந்தக்காலத்து செல்வாக்கான அக்கிரகார பிராமணா வீடு. நானூறு வருஷமா இதே இடத்துல இருந்த பாரம்பரியமான குடும்பத்து வீடு. மராமத்து பண்ணிப் பண்ணி முழுக்க முழுக்க தேக்குல இழைச்சிருக்கா. சரபோஜி மகாராஜால்லாம் வந்திருக்காளாம். அப்போ பத்து ஏக்கரால இருந்த வீடு இப்ப அரை ஏக்கராவுக்கு வந்திருக்கு. மத்த தலைமுறைலாம் வரவர முப்பது வருஷத்துக்கு முன்னாலயோ என்னவோ இவா கிட்டே காசுக்கு வித்துட்டு மெட்ராஸ் பக்கம் போயாச்சு. வீட்டுல ஆளில்லே. வீடும் தோப்பும் ஆத்துக்கு அந்தப்பக்கம்னாலும் இந்தப்பக்கம் ஒரு மண்டபமும் இருக்கு. அந்தக்காலத்துல கோவிலுக்கு வரவா தங்கறதுக்காக கட்டின மடமாம். அதுலயும் ஒரு ரூம், மித்தம், சமையக்கட்டு, ஔபாசன இடம்னு எல்லாம் அம்சமா கட்டியிருக்கா. இதுவும் வீட்டோட சேத்து வரது. கொஞ்சம் புதரா இருக்கும். வெட்டி சரி பண்ணிடலாம். எதுக்குச் சொல்றேன்னா வீட்லந்து பாத்தேள்னா மடம், மடத்துலந்து பாத்தா வீடு. நடுவுல காவேரி. படித்துறையோட கட்டியிருக்கா பொழக்கடைல. படித்துறை மகிழமரம் நூத்துக்கணக்கான வருஷமா இருக்கு. சாயந்தர வேளைல ரம்யமா இருக்கும். காவிரில தண்ணி வந்துடுத்துனு வச்சுங்கோ, இந்த்ரலோகம் தான். தென் கயிலைனா இது வாஸ்தவமான சமாசாரம். வீட்டைக் கொஞ்சம் சுத்தம் பண்ணி மொட்டை மாடியில கூரைப்பந்தல் போட்டுறுங்கோ. ரெண்டு ஈஸி சேர் வாங்கிப் போட்டுறுங்கோ. ஒரு மோடாவும் போட்டேள்னா ஏகாந்தமா உக்காந்த வாக்குல அய்யாறப்ப தரிசனம். நானும் அப்பப்போ வந்து உங்க தயவால பஞ்சநாத கோபுர தரிசனப் புண்ணியம் கட்டிக்கறேன். எல்லாம் சேத்து எண்பத்தஞ்சு சொல்றான். முப்பது ப்ளாக்ல கொடுத்துடணும்"
"உனக்கு எத்தனை கமிஷன்?" என்றேன். ஜெயா என்னை இடித்தாள்.
"அதனால் என்ன அத்தே? வெளிப்படையா கேக்கறார். சொல்லிடறேன். அத்திம்பேர், எனக்கு ஒயிட்ல கொடுத்தா அஞ்சு பர்செண்ட், ப்ளாக்குல கொடுத்தா எட்டு பர்சண்ட் தரதா சொல்லியிருக்கான். தந்தாத்தான் தெரியும். நீங்க ப்ளாக்ல ஜாஸ்தி கொடுத்தா நேக்கும் ஜாஸ்தி கிடைக்கும். அதெல்லாம் விடுங்கோ. மொதல்ல இடத்தைப் பாருங்கோ"
"ஏன் இத்தனை நாள் யாரும் வாங்கலியா?" என்றாள் ஜெயா.
"தெரியலே. ரொம்ப நாளா கேட்டுண்டிருக்கா. பாருங்கோ இங்கருந்து எல்லாரும் போறாளே தவிர ஊர்ப்பக்கம் திரும்பி வரவா கம்மியாயிருந்துது. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா திரும்பி வரவா கவனம் இப்படி விழுந்துண்டிருக்கு. அதுல கூட தஞ்சாவூர் சுவாமிமலை திருச்சினு முதியோர் இல்லத்துக்குத்தான் நெறய பேர் போறா. தனியா வீடு வாங்கி வயசான காலத்துல சிரமம் தானே?"
"எங்களுக்கு அப்படியென்ன வயசாயிடுத்துனு நினைக்கறே?" என்றேன். ஜெயாவை அணைத்துக் கொண்டதைப் பார்த்துக் கூச்சத்தோடு நெளிந்தார் உறவினர்.
"அப்படி சொல்லலே அத்திம்பேர். எந்தக் காலத்துலயும் வீட்டை வச்சு பராமரிக்கறது சிரமம் தான். அதை விடுங்கோ. இந்த வீடு பாரம்பரியமா பிராமணாள் இருந்து வந்த ராஜலட்சண வீடு. அத்தை கேட்டாப்புல இந்த வீட்டை யாரும் வாங்கறா மாதிரித் தெரியலே. இரண்டு வருஷம் போனா இதைக் கம்பெனிக்காரா யாராவது வாங்கி இடிச்சு கலர் கலரா பொட்டி வீடு கட்டுவா. இந்த வீட்டோட வேர் அடையாளம் தெரியாமப் போயிடும். இதுக்குப் பின்னால இருக்குற மகாத்மியம் மண்ணோட போயிடும். ம்ம்ம்னா போறும், கம்பெனிக்காரா தயாரா இருக்கா. அதுக்குப் பதிலா அந்தப் பாரம்பரியத்தை இன்னும் இருவது வருஷமோ அம்பது வருஷமோ காப்பாத்தலாம்னா.. நம்மளால முடியாட்டாலும் முடியறவாள் கிட்டே மனு போடலாம் இல்லையா? ராமர் பாலம் கட்ட சின்னக் கூழாங்கல் போட்டுச் சகாயம் பண்ற அணில் மாதிரி தான் என்னோட இந்த எண்ணம்லாம். பிராமண வீடு பிராமணாள் கிட்டே போனா நல்லது தானே?"
எனக்கு இலேசாக எரிச்சல் வந்தாலும் அடக்கிக் கொண்டேன். "நாங்கள்ளாம் பிராமணாளே இல்லை தெரியுமோ? கடல் கடந்தாச்சு. பூணல் கிடையாது. வேதம் படிக்கவேயில்லே. சந்தியாவந்தனம் பண்றது கிடையாது. அபிவாதயே கூட மறந்து போச்சு. சாராயம் குடிச்சாச்சு. மாம்ஸம் சாப்டாச்சு. ஈஸ்வரோ ரக்ஷதுங்க்றதுக்கே அர்த்தம் இருக்கானு கேட்டுண்டிருக்கோம். இவளைப் பாரு. பாதி நாள் கவுன் போட்டுக்கறா. ஒரு வ்ரதம் புனஸ்காரம் எதுவும் கிடையாது. எங்கூட அப்பப்போ மெர்லோ சாப்பிடுவா. உன்னையே பாரு.. கமிஷனுக்காக அதுவும் ப்ளாக்ல குடுத்தா உசிதம்னு சொல்லிண்டிருக்கே இல்லையா? யாரு பிராமணா இதுல?"
"ஸ்பீக் பார் யுவர்செல்ப்". ஜெயாவின் எதிர்பாரா சுருக் ஆங்கிலம் என்னைத் தைக்க அமைதியானேன்.
"பரவாயில்லே அத்திம்பேர். ஆத்து மனுஷா தானே? தாராளமா பேசுங்கோ. அதுவும் பெரியவா. உங்களுக்குத் தெரியாததா? பிராமணா இல்லே பக்தி இல்லே பரமேஸ்வரனே இல்லேனு கூட பேசுங்கோ. ஒண்ணு கவனிச்சேளா? இல்லைங்கறது தான் இருக்குறதோட தத்துவம். இருக்குங்கறது தான் இல்லைங்கறதோட தத்துவம். இப்போ ஐயாறப்பர் கோவில்ல பாத்தேளே.. ஆதி சங்கரர் கட்டின ஹோம குண்டம்னு சொன்னால்லியா? ஆதி சங்கரர் இந்த ஹோம குண்டத்தை கட்டினாரா கட்டலியாங்கறது வேறே விஷயம். ஆதி சங்கரர் கட்டின ஹோமகுண்டம் தான் இப்போ இருக்குங்கறதும் தெரியாது. இல்லைங்கறதும் தெரியாது. ஆனா அதை ஆதி சங்கரர் ஹோம குண்டமாத்தான் பாக்குறோம். பஞ்சபூதங்கள்ள அசல்லே எதுவுமே நம்ம கண்ணுல படுற ரூபத்துல இல்லே. ஆனா கண்ணுல படற ரூபத்தை வச்சு இருக்குன்னும் இதான் இந்த்ரியம் பூதம்னும் சொல்றோம். கண்ணுக்குத் தெரியாத அக்னினு தான் ருத்ரத்லயே சொல்லியிருக்கு. ஜலம்னும் எதுவும் கிடையாது. இப்ப எல்லாம் கண்டுபிடிச்சு சொல்றா. ரெண்டு வாயு சேந்தாத்தான் ஜலம்னு. இதை அப்பவே உபனிஷத்ல சொல்லியிருக்கா. இருக்கறது எதுவுமே இல்லை. இல்லாதது அத்தனையும் இருக்கு. அஜாதசத்ரு-பாலாகி வியாக்யானம் படிச்சிருப்பேள். உங்களுக்குத் தெரியாம இருக்குமா? ஏதோ என்னைக் கிண்டறேள். நெஜமா சொல்றேன் அத்திம்பேர்.. நீங்க பிராமணா இல்லை இல்லைனு சொல்றதெல்லாம் நேக்கு இருக்கு இருக்குனு தான் விழறது. இந்தாப்பா.. சித்த மெதுவா போப்பா.. கல்லுங்குழியுமா இருக்கு பாரு.. அத்திம்பேர்.. உங்களுக்கு இந்த வீடு வாச்சு நேரம் கிடைக்கறப்ப பேசுவோம். அத்வைத விசாரம் நேக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும்னு தோண்றது. விடுங்கோ. இருக்கு இல்லை ரெண்டுத்தையும் ஏதோ ஒண்ணு கட்டியிருக்குன்னாவது ஒத்துப்பேளா? இருக்குனு சொன்னா உடனே இல்லைனு சொல்ல வைக்கறது அந்தக் கட்டுதான். மதுரைக்கு ட்ரெயின் பத்திப் பேசிண்டு காபி சாப்பிண்டிருந்தவாளை தலைல தட்டி இங்க கூட்டிண்டு வந்தது என்னனு நினைக்கறேள்? ஏன் சொல்றேன்னா.. பிராமணாள் இல்லேனு நீங்க சொன்னாலும் உங்க பிராணன்ல கலந்திருக்குற பிராமண அணு அது நீங்க விரட்டினா ஓடிடுமோ? ஓடாது. அதைத்தான் சொல்றேன். சொன்னது பிடிக்கலேனா என்னை மன்னிக்கணும். வீடுகள்ளயும் ஒரு ப்ராணன், ஒரு ஆன்மா இருக்கு அத்திம்பேர். க்ருஹப்ரவேசம்னு பண்றது மனுஷாளுக்கு மட்டுமா? அந்த வீட்டையும், வீட்டு மனுஷாளையும் கூடவே இருந்து ரக்ஷிக்கிற அதிதேவதைகள் வசுக்களும் ப்ரவேசம் பண்ணட்டும்னு தானே? இந்த வீடு எத்தனை ஹோமங்கள் பார்த்திருக்கும் யோசியுங்கோ. வீட்டுக்கு ஆன்மா உண்டு. நான் அதை நன்னா உணர்ந்திருக்கேன். மரபணுனா மனுஷாளோ இல்லை வீடோ அது ஒட்டிண்டே தான் வரும். நான் சொல்றது தப்பா இருந்தா மறுபடி மன்னிக்கணும்"
"சேசே! அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா. சுவாரசியமா இருக்கு நீ சொல்றது"
அதற்குள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. தெருவோரமாக வண்டியை நிறுத்திக் கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. காவிரிக்கரை நோக்கிக் கீழிறங்கிய ஒற்றையடிப்பாதை. செப்பனிட வேண்டும் என்று தோன்றியதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். இது என்ன என் சொத்தா? மரத்தால் செய்த வெளிக்கதவை கீல் முனகத் திறந்து உள்ளே போனோம். மரங்களின் அடர்த்தியில் சரியாகத் தெரியாத கட்டிடம் உள்ளே நுழைந்ததும் முகத்தில் அடிப்பது போல் தெளிவாகத் தெரிந்தது. பிரம்மாண்டம்! கட்டிடத்தின் அளவு பெரிதாக இல்லாவிட்டாலும், நேர்த்தி பிரம்மாண்டம் என்று சொல்ல வைத்தது. நாலைந்து பேர் அவசரமாகச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
"நீங்க வரீங்கனு கொஞ்சம் க்லீன் செய்யச் சொன்னேங்க.. பாத்து வாங்க" என்றார் ஸ்கூட்டர்காரர்.
ஏறக்குறைய அரை மணி போல் சுற்றிப் பார்த்தோம். தேக்குத் தூண்கள், கதவுகள், அலமாரிகள் என்று இழைத்துக் கட்டியிருந்த வீடு. வாசலில் திண்ணை. உள்ளே அந்தக்கால அக்கிரகார வீட்டின் அமைப்பு. பாசி படிந்த முற்றம். சுற்றி அளவான உள்ளறைகள். சமையலறை. பின் கட்டில் தொழுவம். தொடர்ந்து பூச்செடிகள், மரங்கள். மா, எலுமிச்சை, கொய்யா, நார்த்தம் என்று வகைக்கு நாலைந்து மரங்களாவது இருந்தன. வீட்டின் முன்னாலும் பின்னாலும் இரண்டு பவழமல்லி மரங்கள். பின்னால் படித்துறை ஓரமாக ஒரு பெரிய வேப்ப மரம். இன்னொரு பெரிய மரம் என்னவென்று தெரியவில்லை. நிறைய புதர்கள். படித்துறை அழுக்காகவும் குப்பையாகவும் இருந்தது. இருந்தாலும் கொஞ்சமாக ஓடிய காவிரி பார்க்க அழகாகவே இருந்தது. உறவினர் சொன்னது போல் இங்கிருந்து இடையூறில்லாமல் கோவில் நன்றாகத் தெரிந்தது. ஜெயா கொஞ்சம் தடுமாறி நடந்து வந்தாள். இந்த வீடு அவளுக்கு ஒத்துவராது என்று நினைத்துக் கொண்டே நானும் உடன் சென்றேன். மறுபடி வீட்டுக்குள் திரும்பும் பொழுது என்னை யாரோ அழைப்பது போல் தோன்றத் திரும்பினேன். படித்துறையிலிருந்து வேப்ப மரத்துக்கு யாரோ வேகமாக ஓடுவது போல் தோன்ற, கொஞ்சம் நின்று கவனித்தேன். எதுவும் இல்லை. இந்த வீட்டுக்கு ஒரு குணச்சித்திரம் இருந்தாலும் மராமத்து அதிகம் தேவைப்படும் என்ற நினைப்போடு வீட்டுக்குள் சென்றேன்.
"பிடிச்சிருக்கா சார்?" என்றார் ஸ்கூட்டர்காரர்.
"எங்க ரெண்டு பேத்துக்கு இது ரொம்பப் பெரிசு.." என்று தொடங்கிய என்னை அடக்கினாள் ஜெயா. "ஐ லைக் இட்" என்றாள்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜெயா? சாப்பிட்ட தட்டை எடுத்து கிச்சன் டிஷ்வாஷரில் எறிய சோம்பல்படும் என் ஜெயா? அத்தனை வசதிகளும் தேவை என்று தினம் என்னிடம் வற்புறுத்திய என் ஜெயா? கொஞ்சம் அவளைத் தனியாக இழுத்து, "நிஜமாகவா சொல்றே?" என்றேன்.
"ஆமாம். என்னவோ தெரியலே. படித்துறைல இருந்து வீட்டைப் பாத்தப்போ இது என்னோட இடம்னு தோணிப் போச்சு"
எனக்கும் அந்த எண்ணம் இருந்ததை ஒப்புக்கொண்டேன். இந்த வீட்டின் ஏதோ ஒரு வசீகரம் எங்களைக் கட்டியது புரிந்தது. ஜெயாவின் உறவினர் சொன்னது போல் ஏதாவது ஆன்மா கீன்மாவாக இருக்கலாம்.
"ஊருக்குப் போய் கொஞ்சம் யோசிக்கலாமா ஜெயா?"
"உங்களுக்கு வேணும்னா யோசியுங்க. எனக்குப் பிடிச்சிருக்கு. இதுக்கு மேலே இடம் தேட வேண்டாம்னு தோணுது. ஆள் வச்சு இதையெல்லாம் க்லீன் பண்ணிடலாம். இந்த டிசைன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. புதுசாக்கிடலாம். கொஞ்சம் நல்லா நெகோஷியேட் பண்ணி வாங்கிடலாம். என்ன சொல்றீங்க?"
ஸ்கூட்டர்காரரிடம், "பிடிச்சிருக்குப்பா" என்றேன்.
"சார். எண்பத்தஞ்சு போகுது சார். முப்பந்தஞ்சு கேஷா கொடுத்துருங்க. ஐம்பதுக்கு பத்திரம் போட்டுறலாம்" என்றார் ஸ்கூட்டர்காரர்.
"அதெல்லாம் என்னால் முடியாதுப்பா. ரொம்ப அதிகம். மொத்தம் அறுபதுக்குள்ள வரதா இருந்தா சொல்லு. அதும் எல்லாம் ஒயிட் தான்" என்றேன்.
"நடக்கவே நடக்காது சார். தொண்ணூறுக்கு ஆள் இருக்காங்க சார். ஆனா வீட்டை இடிச்சு கைல நாப்பதும் கட்டி முடிச்சதும் ரெண்டு ப்ளாட்டும் கொடுப்பாங்கன்றதுனால வேணாம்னு பார்க்கறேன்"
ஜெயா என்னைத் தனியாக அழைத்துப் பேசிவிட்டுத் திரும்பினாள். "இதோ பாருப்பா. அம்பத்தஞ்சுக்கு மேலே ஒரு பைசா தரமாட்டோம். கேஷா கொடுத்துடறோம். பத்திரம் ஒழுங்கா இருக்கணும். எங்க சார்டர்டு அகவுன்டன்ட் வந்து பாத்து எல்லாம் செய்வாரு. வீடு கை மாறினதும் இதைச் சுத்தம் பண்ணி, மராமத்து வேலைங்களுக்கு காண்டிராக்டா கேஷ் கொடுத்துடறேன். அதையும் நீங்க கவனிச்சு எல்லாத்தையும் என் இஷ்டத்துக்குச் செஞ்சு தரணும்"
"மன்னிக்கணும்மா. தொண்ணூறு எங்கே அம்பத்தஞ்சு எங்கே? வரேம்மா" என்று கிளம்பினார் ஸ்கூட்டர்காரர்.
உறவினரிடம் சொல்லிக்கொண்டு நாங்களும் கிளம்பினோம். ஒரு மணி நேரம் போல் பயணம் செய்திருப்போம். மாலி அழைத்தார். "அத்திம்பேர். அந்தாளு அறுபத்தஞ்சுக்கு முடிச்சுடலாங்கறான். எல்லாத்தையும் சுத்தம் பண்ணியும் கொடுத்துடறதா சொல்றான். உடனே வாங்கோ".
    ஆறு மாதங்களுக்குப் பிறகுக் குடியேறினோம். ஜெயா சாகசம் செய்திருந்தாள். வீட்டின் வேர் அடையாளம் தொலையாமல் வீட்டை மாற்றியிருந்தாள். காம்பவுன்ட் சுவர், முன்பக்கமும் பின்பக்கமும் இரும்பு கேட், வீட்டுக்குள் ஏசி, வாஷர், டிரையர், டிஷ்வாஷர், டிவி, குளியல் தொட்டி என்று வசதிகள், மொட்டை மாடி முழுதும் சிமென்ட் குழாய் வைத்து மேலே பந்தல், சோலார் பேனல் வைத்த ஜெனரேட்டர், வீட்டைச் சுற்றி சிவப்புக்கல் தரை, பின் கட்டில் படித்துறை வரையில் நடந்து போக வசதியாகத் தரை, இரண்டு பக்கமும் சிறு பூச்செடிகள், படித்துறை ஓரமாக ஒரு பார்பக்யூ அமைப்பு, குளிர்காய ஒரு தீத்தொட்டி, சுற்றிலும் இரும்பு நாற்காலிகள் என்று முழுமையாகச் செப்பன் செய்திருந்தாள். ஒரு காலத்தில் நாங்கள் ஸ்யூரிக்கில் இருந்த வீட்டை நினைவில் வைத்து அமைத்திருந்தாள். பாலம் தாண்டிய மண்டபத்தை சுத்தமாக மாற்றியிருந்தாள். உள்ளே இருந்த அறையமைப்புகளை இடித்து பாத்ரூமுடன் கூடிய ஒரு அறை, பெரிய லைப்ரெரி என்று ஒரு சம்மர் ஹவுஸ் பாணியில் மாற்றியிருந்தாள். மினசோடாவில் இருந்தபோது டுலுத்தில் எங்களுக்கு இப்படி ஒரு கோடைவீடு இருந்தது. எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கட்டியிருந்த ஜெயாவைப் பாராட்டினேன்.
எங்கள் இருவரின் வங்கிக்கணக்குகள், வீடுகள், பங்குகள் எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிப் பாதியை அமெரிக்க சிடி வங்கியிலும் மீதியை கும்பகோணம் சிடி யூனியன் வங்கியிலும் சேமித்தோம். மாத வட்டி எங்கள் இருவருக்குப் போதுமானதாக இருக்க, ஓய்வு நாட்களை சுவாரசிய எதிர்பார்ப்புகளுடன் கழிக்கத் தொடங்கினோம்.
காலையில் வீட்டைச் சுற்றியோ, காவிரிக் கரையோரமாகவோ நடை. பிறகு சிற்றுண்டி. பாலத்தில் நடந்து லைப்ரெரிக்கு போய் கொஞ்சம் வாசிப்பு. அங்கேயே குட்டித்தூக்கம். கொஞ்சம் இசை. வீட்டுக்கு நடந்து வந்து ஐயர் சமையல்கார மாமி செய்த சாப்பாடு. மாலையில் கோவில் நதிக்கரை நடை. தினம் தவறாமல் தியாகராஜ க்ருதி. எனக்கு நன்றாகவே பாட வரத்தொடங்கியது. இடையே ஜெயா உள்ளூர் அக்கம்பக்கப் புள்ளிகளை அழைத்துக் கொடுத்த விருந்து... என்று ஐந்து வாரங்கள் போனதே தெரியவில்லை.
ஒரு வெள்ளிக்கிழமை மாலை. மழை வருவது போல் இருட்டிக்கொண்டு ஒன்றிரண்டு தூறல் விழத்தொடங்க சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டோம். வெள்ளிக்கிழமை இரவுச் சாப்பாடு நிறுத்திவிட்டதால் இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டு டிவி பார்த்து ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துவிட்டோம். இடி மின்னலுடன் சரியான மழை. இடி மின்னல் என்றால் ஜெயா என்னைக் கட்டிக் கொண்டு விடுவாள். அத்தனை பயம். அன்றைக்கு நன்றாகத் தூங்கிவிட்டாள். பின் கட்டில் ஏதோ ஓசை கேட்பது போல் இருக்க மெள்ள எழுந்து சென்று விளக்கை எரியச் செய்து சுற்றிலும் நோட்டமிட்டேன். மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. காற்றின் வேகத்தில் இரும்பு நாற்காலிகள் இடம் மாறியிருந்தன. சமாதானத்துடன் விளைக்கை அணைக்கப் போனபோது கவனித்தேன்.
படித்துறைக் கம்பிக்கதவருகே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இரண்டு கைகளிலும் ஏதோ வைத்திருந்தார். 'யாரோ பெரியவர்' என்று பதட்டப்பட்டு உதவி செய்யும் எண்ணத்துடன் ஒரு குடையை எடுத்துக் கொண்டு படித்துறைக்கு விரைந்தேன். காற்றில் கரைவது போல் என் கண்ணெதிரே கரைந்தது அந்த உருவம். கம்பிக்கதவருகே நின்று இரண்டு பக்கமும் பார்த்துக் குழம்பினேன். வேப்பமரம் என் கவனத்தைக் கவரத் திரும்பினேன். யாரும் இல்லை. எதுவும் இல்லை. மழையும் நின்றுவிட்டது. மறுபடி படித்துறைப் பக்கம் சென்று பார்த்தேன்.
வீட்டுக்குத் திரும்பி வெளி விளக்கை அணைத்துவிட்டு, சூடேறத் துடைத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. கொஞ்சம் ஹார்லிக்ஸ் நீர்க்கக் கலந்துகொண்டு டிவி பார்க்க உட்கார்ந்தேன். பற்றவைத்த மத்தாப்பு போல் பரபரவென்று எண்ணங்கள்.
படித்துறையில் யாரைப் பார்த்தேன்? கையில் நிச்சயம் ஏதோ வைத்திருந்தார். விக்கிரகங்கள்? இந்த வீட்டில் யார் இருந்திருப்பார்கள்? வீட்டுக்கு ஆன்மா உண்டு என்றாரே ஜெயாவின் உறவினர்? அப்படி ஏதாவது இருக்குமோ? வீட்டைப் பற்றிக் காரில் பேசிக்கொண்டு வருகையில் ஜெயாவின் உறவினர் சொன்னவை... இத்தனை மாதங்களாகத் தோன்றாதது இப்போது பொறியாகத் தோன்றியது: "மதுரைக்கு ட்ரெயின் பிடிக்கறதைப் பத்திப் பேசிண்டு காபி சாப்பிண்டிருந்தவாளை தலைல தட்டி இங்க கூட்டிண்டு வந்தது என்னனு நினைக்கறேள்?"
இவரிடம் இதைப் பற்றிப் பேசவேயில்லை. இதை நான் ஜெயாவிடம் கூடச் சொன்ன நினைவில்லை. இவருக்கு எப்படித் தெரிந்தது? ஏன் அப்படிப் பேசினார்?
இந்த வீடு என்னைப் பாதிக்கத் தொடங்கியது புரிந்தது. எனினும் அசாதாரண பயம் எதுவும் ஏற்படாதது ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்த நிகழ்வுகளுக்கு அன்றைய இரவு என்னைத் தயார் செய்தது என்பது புரிந்தபோது தாமதமாகிவிட்டிருந்தது.
[தொடரும்] ➤➤
சாத்தியம்:99.95% - இல்லையென்றால் பரோடாக்காரர் என்னைச் சும்மா விடுவாரா?
இக்கதை Roald Dahl 1950 வாக்கில் எழுதிய 'Edward, the Conqueror' எனும் சிறுகதையின் தழுவல். என் எழுத்தில் சில உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன் (ஹிஹி.. நிறைய உரிமைகள்). நிறைகள் அத்தனையும் டாலுக்குச் சொந்தம். குறைகள் ஒட்டுமொத்தமாக என்னுடையவை.