2015/05/30

ஜபேஷ்1 | 2 ◄◄இதற்கு முன்    "ஆச்சரியம் தான். ஆனா இப்படியெல்லாம் யோசிக்கறீங்களேனு வருத்தமாவும் இருக்கு. இப்படிக் கூச்சல் போட்டீங்களே, என்னாச்சோ ஏதாச்சோனு வந்தா தியாகப்பிரம்மம் பூனை ரூபத்துல நம்ம வீட்டுக்கு வந்திருக்காருனு சொல்லிக்கிட்டு.. பத்து நாள் முந்தின மழைல முறிஞ்ச கிளையும் புதரும் வெயில்ல காஞ்சு சுள்ளியும் முள்ளுமா கிடக்கு.. காலெல்லாம் குத்துது.. அதை எடுத்துப் போடுங்கனு ரெண்டு நாளா கத்தறேன்.. தியாகப்பிரம்மம் பூனைனு.. வேறே வேலையில்லையா?"

"க்லீன் பண்ண ஆள் அழைச்சுண்டு வரதா சொன்னியே மாலி? ஓகே.. இன்னிக்குப் பண்ணிடறேன் ஜெயா.. சரி இதைக் கவனி.." என்று மறுபடி என் சோதனைகளில் இறங்கினேன். தியாகராஜர் க்ருதி ஒலித்த போது ஒன்றி என்னருகே வந்தமர்ந்த பூனை, ஒவ்வொரு முறை வேறே எந்தப் பாடல் ஒலித்தாலும் அசுவாரசியமாகவோ அல்லது அவசரமாகவோ இடத்தை விட்டு அகன்றது. "இப்ப என்ன சொல்றே ஜெயா?"

"தப்பா நினைக்காதீங்க. அமெரிக்கால நாய் "ஸிட்"னா உட்காரும். நம்ம பசங்க பாட்டு டான்சுனு ஏதாவது கூத்தடிச்சா தானும் சேர்ந்து உக்காரும். அதுக்காக பாப் ம்யூஸிக் தெரிஞ்ச நாய்னா அர்த்தம்? உங்களுக்கு ஞாபகம் இருக்கா? டுலுத் சம்மர் ஹவுஸ்ல ஒரு தடவை நம்ம வீட்டுக்குள்ள தவறி நுழைஞ்ச நாய்.. நீங்க என்ன சொல்லியும் கேட்கலே.. வாலை ஆட்டிக்கிட்டே இருந்தது.. ஆனா அதைத் தேடி வந்த ரோபர்டோ ஸ்பேனிஷ்ல ஏதோ சொன்னதும் ஒரே ஓட்டமா தாவியோடிச்சே... ஸ்பேனிஷ் தெரிஞ்ச நாய்னா அதுக்கு அர்த்தம்? இல்லே. பழக்கம். இது யார் வீட்டுப் பூனையோ? தியாகராஜர் க்ருதி கேக்குற வீடா இருந்திருக்கலாம். சாப்பாட்டு டயத்துல இது மாதிரி பாட்டுக்களைப் போட்டிருக்கலாம். சாப்பாட்டு வேளை... ஏதாவது சாப்பாடு கிடைக்குமோனு கூட இந்தப் பூனை உங்க பக்கத்துல வந்திருக்கலாம்.."

"உன்னை கன்வின்ஸ் பண்ணவே முடியாது. இது பழக்க வழக்கம் இல்லே. இப்ப பாரு" என்று எழுந்தேன். தியாகய்யரிலிருந்து எப்எம் ரேடியோவுக்கு மாற்றினேன்.

..தில்லானா தில்லானா நீ திக்கு திக்கு தேனா...

பூனை திடுக்கிட்டு எழுந்தது. புன்னகையுடன் ரேடியோவில் அலைவரிசை மாற்றினேன்.

..ஊத்த பல்ல வெளக்காமே சோத்த தின்னுங் காமாச்சி...

அலறியடித்து இடத்தை விட்டு அகன்ற பூனை சமையலறைப் பொந்துக்குள் அடைக்கலம் புகுந்தது.

ஜெயாவைப் பார்த்தேன். பிறகு சமையலறையிலிருந்த சாதம், பால், அப்போது செய்து வைத்திருந்த சாம்பார், வாழைக்காய்க் கூட்டு, கேரட் பச்சடி, கல்கண்டு, திராட்சைப்பழம் என்று கண்ணில் பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் சிறிதாகத் தட்டுக்களில் எடுத்துப் பூனையருகில் வைத்தேன். பத்து நிமிடங்களாகியும் பூனை எதையும் மோப்பம் பிடிக்கக் கூட எழவில்லை. என்னுடன் வந்த ஜெயாவும் மாலியும் கவனித்தபடி இருந்தனர். சமையலறையிலிருந்து வெளியே வந்து பத்து நிமிடங்கள் பொறுத்து மீண்டும் உள்ளே சென்றோம். பூனை தூங்கிக் கொண்டிருந்தது. தட்டுக்களில் உணவு அப்படியே.

வரவேற்பறைக்குத் திரும்பி இசையைத் தியாகய்யருக்கு மாற்றி மிக மிக மென்மையான ஒலிக்குக் குறைத்தேன்.
..ந்யாய அந்யாயமு தெலுசுனு ஜெகமுலோ...

பூனை வரவில்லை. சற்றே ஒலி கூட்டினேன்.
..ராம நீ சமானம் எவரு..

பூனை வரவில்லை.

"கொஞ்சம் செவிட்டுப் பூனையா இருக்குமோ அத்திம்பேர்? தியாகய்யருக்கு ஆயிருக்குமே நானூறு வயசு.." என்றார் மாலி.

மாலியை முறைத்தபடி எழுந்து சமையலறைக்குள் சென்றேன். பூனையைக் காணோம். சற்றுக் கலங்கி அங்குமிங்கும் பார்த்து மீண்டும் வரவேற்பறைக்கு வந்தபோது சோபாவின் கைப்பிடிக்குக் கீழே தியாகய்யர் பாட்டைக் கேட்டபடி மறைவாக மெய்மறந்து நின்று கொண்டிருந்தது பூனை. ஜெயாவையும் மாலியையும் சைகையில் அழைத்துக் காட்டினேன். பிறகு சமையலறையிலிருந்து உணவுத் தட்டுக்களை எடுத்து வந்து பூனையின் முன் வைத்தேன். அலட்சியம் செய்வது போல் பூனை எந்தத் தட்டையும் கொஞ்சமேனும் கவனிக்கவில்லை.

"இப்ப என்ன சொல்றே?" என்றேன்.

"அசைவப் பூனையோ அத்திம்பேர்? எலி மீஞ்சுரு மீன் ஏதாவது சாப்பிட்டுப் பழக்கமோ?"

"மாலி.."

"ஒருவேளை ஒசத்தியா கோழிக்குஞ்சு வேணுமோ என்னமோ?"

"சும்மா இரேன்.. பூனை கோழிக்குஞ்சு சாப்பிட்டுப் பாத்திருக்கியா எங்கயாவது?"

"பார்த்ததில்லேத்தே. ஆனா பூனைக்குக் கோழிக்குஞ்சுனா தேன்பாகு மாதிரி தெரியுமோ? டிவிலே இப்பல்லாம் டாமஜரினு.. சின்னக் கொழந்தைகளுக்கான ப்ரோக்ராம்னு சொல்றா.. ஆனா அதுல ஒரு பூனை சான்சு கிடைச்சா லபக்னு லபக்னு ஒரு கோழிக்குஞ்சை முழுசா முழுங்கிடறது.."

"அது கோழிக்குஞ்சில்லே" என்றபடி மாலியைக் கோபமாக முறைத்தேன்.

"அப்டியா? மஞ்சள் மஞ்சேள்னு மொழுக்காட்டம் இருந்ததே பாக்கறதுக்கு? யார் கண்டா? அமெரிக்க தேசத்துல பன்னிக்குட்டி கூட நல்ல வெளுப்பா கலரா இருக்குங்கறா. பாக்கறதுக்குப் பன்னி மாதிரியே இருக்காதுங்கறா"

"நிறுத்து மாலி"

"மாலி சொல்றது சரியாயிருக்கலாமே? பிராமண வீட்டுப் பூனையா இருந்தா பருப்பு சாதம் போட்டிருக்கலாம். மத்தவா மீனும் கறியும் தானே போடுவா? வாழைக்காய்க் கூட்டும் பருப்பு சாம்பாரும் வச்சா இந்தப் பூனைக்கு நாத்தம் குடலைப் பிடுங்குதோ என்னமோ யார் கண்டா?" என்றாள் ஜெயா. "அதுக்காக நாம மீன் வாங்கிட்டு வந்தா போட முடியும்? வேறே வேலை இல்லே?"

"அத்திம்பேர்.. இப்பல்லாம் பிராமணா சிக்கன்65 மட்டன்95னு ஒரு கட்டு கட்டி வெளுத்து வாங்கறா. அய்யருங்க கறி திங்கறதால் மாமிச விலைவாசி ஏறிப்போச்சுனு ஊர்ல புலம்பறா.. அதான் தியாகய்யர் பூனையா வந்து.."

சைகை காட்டி மாலியை அடக்கிக் கடுப்புடன் அமர்ந்தேன்.

"சரி சரி.. நீங்க சொல்றாப்புல சங்கீத ரசனையுள்ள பிராணினே வச்சுப்போம். ஆனா எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க?! இந்தப் பூனை தியாகய்யர்னு தானே சொல்றீங்க? இப்பப் பாத்துடலாம்" என்றாள் ஜெயா. அலமாரியிலிருந்த விக்கிரகங்களை எடுத்துக் கோபமாக எறிவது போல் பாவம் காட்டித் தரையில் வீசினாள். விக்கிரகங்கள் மூலைக்கொன்றாக சிதறி உருண்டன. நான் அதிர்ந்து "ஜெயா!" என்றேன்.

அந்தக் கணத்தில் நாங்கள் யாருமே எதிர்பாராதது நடந்தது. விபரீதங்களின் முதல் அடையாளமென அப்போதே தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஒரு காட்டுப்புலியின் உறுமலுடன் பூனை ஜெயாவின் மேல் பாய முற்பட்டது.

ஜெயா சட்டென்று விலகி அலறினாள். அந்தக் கணத்தில் நான் கண்ட ஜெயாவின் முகம்! திடுக்கிட்டேன்! அவளுடைய முகம்.. என்னை என்னவோ செய்தது. தலை மழுங்கச் சிரைத்து, காதில் குண்டலங்களும் நெற்றியில் விபூதியும் அணிந்த ஒரு பிராமணரின் முகம் போல் சில கணங்களுக்கு மாறியது.

பூனையை ஒரு கையால் வேகமாகத் தள்ளிவிட்டாள் ஜெயா. பாசித்தரையில் கால் வழுக்கியது போல் அறை மூலைக்குக் கத்தியபடி வழுக்கிச் சென்ற பூனை, அதே வேகத்தில் உடனே எழுந்து விக்கிரகங்களின் அருகே வந்தது. ராம விக்கிரகத்தைத் தேடிப் பார்த்து அதனருகே உட்கார்ந்தது. ஜெயாவைப் பார்க்க அஞ்சி நடுங்கியது போல் என்னைப் பார்த்தது.

பதைத்து ஜெயாவிடம் சென்றேன். கைகளிலும் முகத்திலும் சிராய்ப்பு. பூனை நிச்சயம் அவளை நிறையக் கீறியிருந்தது. "வா.. முதல்ல சுத்தம் செஞ்சு மருந்து போடறேன்"

"இந்தப் பூனையை முதல் வேலையா காவேரில கடாசிட்டு வாங்க. என்னை நான் பார்த்துக்கறேன். நான் திரும்பி வரப்போ பூனை இங்கே இருக்கக் கூடாது.." என்றபடி ஜெயா படுக்கையறைக்குள் சென்றாள்.

"நான் வேணும்னா நாளைக்கு வரேன் அத்திம்பேர்.. கொஞ்சம் வேலையிருக்கு" என்றபடி மாலி சமயோசிதமாகப் புறப்பட்டார்.

நான் பூனையின் அருகே சென்றேன். என்னைக் கண்டு அஞ்சி ஓடவில்லை. மாறாக என்னை நேராகப் பார்த்தது. அறிவுக்கப்பாற்பட்டக் கடவுளின் அடையாளமென்று சொல்லப்படும் ஆறறிவு அவதாரமான ராமனின் விக்கிரகத்தைத் தன் இரண்டு கால்களால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஐந்தறிவு அவதாரமான தியாகய்யப் பூனையைப் பற்றி நான் என்ன நினைப்பது? என்ன புரிந்து கொள்வது? என்ன செய்வது?

    மறுநாள் அதிகாலையில் எழுந்துவிட்டேன். உறக்கம் வரவில்லை. விக்கிரகங்களை வீசியதைக் கண்டு கோபத்தில் பூனை பாய்ந்தது.. ஜெயாவின் முகம் மாறியது.. நிச்சயம் நான் கற்பனை செய்யவில்லை. ஜெயாவின் முகம் ஒரு அந்தணரின் முகமாக.. சில கணங்கள் என்றாலும்.. மாறியதைக் கண்ணால் கண்ட அதிர்ச்சி அடங்கவேயில்லை. ஜெயாவிடம் இதைப் பற்றிச் சொல்லாதது வதைத்தது. மேலும் பூனையை விரட்டாமல் வைத்திருந்தக் காரணத்தால் ஜெயாவை மிகவும் கோபப்பட வைத்துவிட்டேன் என்றக் குற்ற உணர்ச்சி மிகத் தொந்தரவு செய்தது.

எழுந்ததும் முகம் கழுவி முற்றத்தின் ஓரத்தில் எனக்காக ஒதுக்கியிருந்த மேசைக்கு வந்தேன். உதய வேளையின் அரைகுறை இருட்டும் வெளிச்சமும் கண்ணாடிக்கூரை வழியாகப் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. பழைய மேகின்டாஷ் கணினியைத் தட்டியெழுப்பி, எண்ணத்தில் உதித்தவற்றைச் சற்றுத் தீர்மானமாகத் தெரிந்துகொள்ள, இணைய ஆராய்ச்சியில் இறங்கினேன். எம்எல்வி, மணி அய்யர், எம்எஸ், ராதா ஜெயலக்ஷ்மி, பாலமுரளி, நிஷா ராஜகோபால் என்று பல குரலில் தியாகராஜர் க்ருதிகள் மென்மையாக இசைத்துக்கொண்டிருக்க, பூனை வழக்கம் போல் என்னருகே அமர்ந்து என்னைக் கவனியாமல் இசையையும் ராம விக்கிரகங்களையும் கவனித்துக் கொண்டிருந்தது.

கூகிலுக்கும் அத்தனை விவரங்களைக் கொட்டிக் கொடுத்திருக்கும் விகிபீடியாவுக்கும் பகிர்ந்து கொண்ட இணைய நுகர் எந்தரோ மகானுபவர்கள் அந்தருக்கும் என் வந்தனங்களை மானசீகமாகத் தெரிவித்தபடி, கட்டுப்படுத்த முடியாத வியப்போடு விவரங்களைச் சேகரித்தேன். சுமார் ஏழரை மணிக்கு ஜெயா சமையலறைக்குள் வருவதற்குள் ஏறக்குறைய ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு விவரங்கள் சேகரித்துவிட்டேன்.

காபி கொண்டுவந்த ஜெயா, "காபி சாப்பிடறீங்களா?" என்றாள். மஞ்சள் பீங்கான் கோப்பையில் நுரை பொங்கக் கொடுத்தாள்.

நன்றியுடன் "நல்லா தூங்கினியா?" என்றேன்.

பூனையை வெறுப்புடன் பார்த்த ஜெயா, "இந்தப் பூனையைக் கிளப்புற வரைக்கும் தூக்கம் வராது" என்றாள்.

"இந்த வாரம் நாம ஸ்ரீரங்கம் போறப்போ திருச்சி எஸ்பிஸிஏல சேர்த்துடறேன்னு சொல்லியிருக்கேன்ல?"

"சனியனைப் பாருங்க.. என்னமோ இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் மாதிரி கம்பீரமா உக்காந்துட்டு.. வாட் எ ராட்"

"பாவம் ஜெயா.. பிராணியைப் போய் சனியன் கினியன்னுட்டு.." என்று காபியை அருந்தினேன். எனக்குப் பிடித்த வகையில் சூடாக சர்க்கரை குறைவான டிகாக்ஷன் அதிகமான ஸ்ட்ராங் காபி. சற்று இளைப்பாறினேன். "அதை விடு.. நெட்ல தெரிஞ்சுக்கிட்ட விவரங்களைக் கேட்டா நீ மனசு மாறினாலும் மாறுவே.."

"நானே கேக்கணும்னு நினைச்சேன்.. புஸ்தகம் ஏதாவது எழுதுறீங்களா?"

"சமீபத்துல நடந்ததெல்லாம் என்னை ரொம்ப பாதிச்சுது ஜெயா" என்றேன், முழு விவரங்களைச் சொல்லாமல். "தூக்கம் வரலே. இங்க நம்மளைச் சுத்தி ஏதோ பிரம்மாண்டமா நம்ம அறிவுக்குப் புலப்படாத விஷயங்கள் நடக்கிறதா எனக்குத் தோண ஆரம்பிச்சுது. ப்லீஸ்.. நான் சொல்றதைக் கேளு.. நானும் ரேஷனல் தான். இருந்தாலும் சில வாரங்களா.. குறிப்பா நேத்து ராத்திரி நடந்தது.. என்னை நிறையவே அசைச்சிருக்கு ஜெயா. இது என்னை நானே ஆத்திக்குறதுக்கான என்னோட தேடல்னு வச்சுக்கோ.."

"என்ன தேடுனீங்க?"

"மறுபிறவி சித்தாந்தங்கள்.. மறுபிறவினு பார்த்தாலும் சரி.. கொஞ்சம் தீவிரமா ஆன்மாவின் உடல்மாற்றம்னு பார்த்தாலும் சரி.. நான் தெரிஞ்சுக்கிட்டது என்னை நிச்சயமா உலுக்கியிருக்கு. எனக்கென்னவோ இந்தப் பூனை தியாகய்யர்னு நிரூபிக்குற அளவுக்கு விவரங்கள் கிடைச்சிருக்குனு நினைக்கிறேன்.. ஆனா எதுக்காக வந்ததுனு தான் புரியலே"

ஜெயா சிரித்தாள். சத்தியமாக ஆணின் சிரிப்பு.

திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன். வெண்கல டவரா டம்ளரில் காபியை உதட்டில் படாமல் உயர்த்தி அருந்திக் கொண்டிருந்தார் நேற்றிரவு பார்த்த அந்தணர். என் வாழ்நாளில் ஜெயா அப்படிக் காபி.. எந்த பானத்தையுமே குடித்ததில்லை. ஆச்சரியம் அடங்குமுன் சட்டென்று மாறித்திரும்பிய அவள் முகம்.. தூக்கிவாரிப் போட்டது! "என்ன கண்டுபிடிச்சீங்க?" என்றாள் இயல்பாக. காபியை உதட்டில் வைத்து அருந்தி முடித்து பீங்கான் கோப்பையை என் முன் வைத்தாள். குழம்பினேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டதா?

சுதாரித்தேன். "நிறைய கண்டுபிடிச்சேன்.. மறுபிறவி கிடையாதுனு நாம சொன்னாலும்.. கிழக்குலயும் மேற்குலயும் சரி அந்தக் காலத்துலந்து சொல்லியிருக்கறதெல்லாம் வேறே மாதிரி இருக்கு.. நிறைய உதாரணங்கள் கொடுத்திருந்தாலும் இதுக்கெல்லாம் அடிப்படையான சித்தாந்தம் ஆழமானதுனு நினைக்கிறேன். இந்த உலகத்துல இயற்கையா நடக்குறதெல்லாம் நிரந்தர அழிவில்லாம திரும்பத் திரும்ப உருவெடுக்குதுனு நம்புறியா?"

"எப்படிச் சொல்றீங்க?"

"உதாரணமா.. விதைச்சா செடி மரம் பூ பழம் விதைனு மறுபடி ஒரு வட்டம் உருவாகித் தொடருது.. சரியா? எவ்ரிதிங் இன் நேசர்.. தண்ணி நிலத்துல விழுந்து ஆவியா எழும்பி மேகமா மழையா மறுபடி விழுந்து மறுபடி எழுந்து.. பிராணி மனுஷன்லந்து எல்லாமே இயற்கையின் இந்த விதிக்கு உட்பட்டு நடக்குறதாவே தோணுது. ரிக் வேதத்துல புனர்ஜென்மம் புனர்ம்ருத்யுனு ரெண்டைப் பத்தியும் எழுதியிருக்குறதைப் படிச்சு அசந்துட்டேன் ஜெயா. நாம எல்லாமே இது போல இயற்கையின் விதிக்குட்பட்டு கலந்து பிறந்து இறந்து பிறந்து கலந்து பிறந்து இறந்து.. ஆன்மாவின் ட்ரேன்ஸ்மைக்ரேஷன் சாத்தியம்னு தோணுது.. பிறப்பு எப்படி ஏற்பட்டது? வாழ்வின் ஆதாரம் என்ன? எங்கே எப்படி எல்லாம் தொடங்கியது? நம்ம வேதாந்தமும் சரி மேற்கத்திய வேதாந்தமும் சரி.. ஒண்ணைத்தான் சொல்லுது.. ஆம்னி விவம் எ விவோ.. வாழ்விலிருந்தே வாழ்வு.. இதுக்கு என்ன அர்த்தம்?"

"உங்களுக்குப் பொழுது போகாம இதையெல்லாம் படிச்சுக் குழம்பியிருக்கீங்கனு அர்த்தம்.."

"இரு.. வாழ்விலிருந்து வாழ்வுனா ஒவ்வொரு பிறவியும் இன்னொரு பழைய பிறவியின் தொடர்ச்சினு ஆகுது இல்லையா? இதை நீ நம்பாவிட்டாலும் இப்போதைக்கு ஏத்துக்கிட்டு நான் சொல்றதைக் கேட்டா பிரமிச்சுப் போயிடுவே. ஹென்ரி டிஷ்னர்னு ஒருத்தர் கிழக்கு மேற்கு அத்தனை சித்தாந்தங்களையும் புரட்டி மறுபிறவி பத்தி எழுதியிருக்கார். நாம எல்லாருமே ஒரு முடிவின்மையிலிருந்து இன்னொரு முடிவின்மைக்குப் பயணம் செய்கிறோம். இதில் பிறப்பும் வாழ்வும் இறப்பும் இயற்கையின் விதிக்குட்பட்டு நடந்துகிட்டே இருக்கு. அத்தனை அணுக்களும் எப்படியாவது எங்கேயாவது அமைந்தும் அழிந்தும் தானே ஆக வேண்டும்னு அவர் எழுதியிருக்கிறது பிரமிப்பா இருக்கு. தியாகய்யரின் அணுக்கள் இந்தப் பூனையில் ஏன் கலந்திருக்கக் கூடாது?"

"இப்படிச் சொல்வீங்கனு எனக்குத் தெரியும்.. பூனைக்குப் பதிலா உங்களோட ஏன் கலந்திருக்கக் கூடாது? பூனை ஒரு காரணம் தான். தியாகய்யர் ராமர் விக்கிரகம்னு நீங்க தான் பிடிச்சிட்டிருக்கிறதா எனக்குத் தோணுது.."

"எக்ஸாக்ட்லி.. ஒரு விஷயத்தை முதலில் மனதில் பதிச்சுக்குறப்பவோ.. ஒரு முதல் சந்திப்பை ஏத்துக்குறப்பவோ.. எதையுமே செய்யுறப்பவோ.. மனம் தனக்குத்தானே ஒரு தீர்மானத்தையும் செய்யுது இல்லையா? திஸ் ஜட்ஜ்மென்ட்.. இதுக்குக் காரணம் என்னனு கேட்டின்னா.. இதுக்கு முன்னால நாம் எடுத்த பிறவிகளின் ஒட்டு மொத்த அனுபவம்.. அதான் நம்மையறியாமலே நம்மை தீர்ப்புக்குட்படுத்துது.. முன்பின் தெரியாதவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயமோ கெட்ட அபிப்பிராயமோ ஏற்படுதுனா அதை அறிவு பூர்வமா எப்படி விளக்குவே சொல்லு?"

"மை குட்னஸ்! பூனை உங்களை பைத்தியமாவே ஆக்கிடுச்சு போலிருக்கே? ப்லீஸ். விட்டுருங்க. இந்தப் பூனையும் வேண்டாம். இந்த முட்டாள்தனமும் வேண்டாம். உங்க தியரிப்படியே வச்சுப்போம். இதுக்கு முந்தி என்னவா இருந்தீங்கனு தெரியாது. இதுக்குப் பிறகு என்னவா இருப்பீங்கனு தெரியாது. இப்ப இருக்குற பிறவிலே உங்களுக்கு நீங்களே நேர்மையா நடந்துக்குங்க அது போதும்.."

"இதுக்கு முன்னால நீ யாரா இருந்தேனு ஒரு ஐடியா இருக்கு" என்றேன் மென்மையாக. ஏன் அப்படிச் சொன்னேன்? சொல்லியிருக்கக் கூடாது.

"என்ன சொன்னீங்க?"

"நீ மட்டுமில்லே நான் கூட இதுக்கு முன்னால யாரா இருந்திருப்போம் எதுவா இருந்திருப்போம்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் உண்டாகுது இல்லையா?" என்று சமாளித்தேன். "இன்னொரு கப் காபி சாப்பிடுவோம்" என்றபடி சமையலறைக்குச் சென்று இரண்டு கப் சன்ரைஸ் காபி கலந்து கொண்டு வந்தேன்.

"நெட்ல தேடினப்போ மில்டன் வில்லிஸ்னு ஒருத்தர் கிட்டத்தட்ட நூறு வருஷத்துக்கு முன்னால எழுதின 'மறுபிறவி, ஏன், எப்படி?'ங்கற புத்தகம் கிடைச்சுது. அதுல யார் யார் எப்போ மறுபிறவி எடுப்பாங்கனு ஒரு கணக்கே போட்டுக் கொடுத்திருக்காரு. ரொம்ப சுவாரசியமா இருக்கு. இதோ பாரு.." என்று ஒரு குறிப்பைத் தேடியெடுத்துப் படித்தேன்.

...ஒரு பிறவி முடிந்ததும் உயிர் ஆத்மா என்று அழைக்கப்படும் பிறவியின் ஆணிவேர் இயற்கையின் ரசாயனத்துடன் கலந்துவிடுகிறது. அணுக்கள் அணுக்களுடன் கலந்து உலவுகின்றன. வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏற்றபடி இந்த அணுக்கள் கலந்தும் பிரிந்தும் உலவுகின்றன. மேன்மையாக வாழ்ந்தவர்களின் அணுக்கள் மரணமடைந்ததும் சற்று உயரே சென்று கலக்கின்றன. கேவலமாக வாழ்ந்தவர்களின் அணுக்கள் மேலெழுந்தவாரியில் உடனே கலந்து தாழ்வாகவே இருக்கின்றன. இயற்கையின் சுழற்சிக்குட்பட்டே இவை மீண்டும் கலந்து பிறப்பில் முடிந்து இறப்பில் தொடங்குகின்றன...

"சுவாரசியமா இல்லே?" என்றேன். "பிறப்பு என்பது ஆரம்பம், இறப்பு என்பது முடிவுனு தானே நாம நினைச்சிட்டிருக்கோம்.."

ஜெயா பதில் சொல்லாமல் காபி சாப்பிட்டாள். "இங்க தான் சுவாரசியம் அதிகமாகுது" என்றேன். குறிப்பை எடுத்துத் தொடர்ந்து படித்தேன்.

...குடிகாரர்கள், சோம்பேறிகள், பழி சொன்னவர்கள், ஊழல் பேர்வழிகள், பொய்யான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் அணுக்கள் ஐம்பது வருடங்களுக்குள்ளாகவே மறுபிறவி எடுத்து விடுகின்றன...
...அறிவில்லாமல் நடந்து கொள்பவர்கள், தன்னைப் பற்றியே நினைப்பவர்களின் அணுக்கள் நூறு வருடங்களுக்குள் பிறவி எடுக்கின்றன...
...பணத்திமிர் பிடித்தவர்கள், கண்மூடிகள், படித்தவர்கள், உலகாயதமாய் வாழ்ந்தவர்களின் அணுக்கள் இருநூறு வருடங்களுக்குள்..
...தன்னலம் குறைத்துப் பிறர் நலம் கருதி ஒரு பொதுவுணர்வோடு வாழ்ந்தவர்களின் அணுக்கள் ஐநூறு வருடங்களுக்குள்...
...பொதுமையிலிருந்து விலகி உயர்ந்த குறிக்கோளோடு வாழ்ந்த அபூர்வப் பிறவிகளின் அணுக்கள் ஆயிரம் வருடங்களுக்குள்...
...எப்படி வாழ்வதென எடுத்துக்காட்டிப் பண்போடு வாழ்ந்த அதிசயப்பிறவிகளின் அணுக்கள் இரண்டாயிரம் வருடங்களுக்குள்...


ஜெயா மறுபடி சிரித்தாள். மறுபடியும் ஆணின் சிரிப்பு. "நீங்க சொல்றாப்புல சொல்லியிருக்காரா? இல்லே உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்களா?"

"நான் புரிஞ்சுகிட்டதுதான். நூறு வருஷத்துக்கு முன்னால மில்டன் வாழ்ந்த காலத்துல விவசாயிங்க அதிகம். சர்வாதிகாரிகள் அதிகம். கலைஞர்கள் குறைவு. அரசினம் ஏறக்குறைய அழிந்திருந்தது. விவசாயிகளை அவர் பொதுவுணர்வோடு வாழ்ந்தவர்கள்னு சொல்றாரு.. அரசர்களை பண்புள்ளவர்கள்னு சொல்றாரு.. சர்வாதிகாரிகளை திமிர் பிடித்தவர்கள் கண்மூடிகள்னு சொல்றாரு.. கலைஞர்களை குறிக்கோள் கொண்டவர்கள்னு சொல்றாரு. இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் என் கருத்தோட ஒட்டுற மாதிரி எடுத்துக்கிட்டேன்.. மில்டன் கருத்தின் அடிப்படை தான் முக்கியம். அதுல மாத்தமே இல்லே. அறிவார்ந்த அடுத்தவங்க கருத்துக்கு இடம் தராமல், தான் நம்பினதையே நம்பி ஏமாந்து போறவங்க கண்மூடிகள் தானே? சர்வாதிகாரிகள் திமிர் பிடித்தவர்கள் தானே? தன் விருப்பபடி எல்லாம் நடக்கணும்னு குடும்பத்துல பெண்டாட்டி பிள்ளைங்களை திமிரோடு ஏறக்குறைய அடிமையா நடத்துறவங்க சர்வாதிகாரிங்க தானே? மில்டன் சொன்னதையே நானும் சொல்றேன்.. தன் கருத்துக்கு ஆதரவா மில்டன் சொல்லியிருக்குறதைக் கவனி". தொடர்ந்தேன்.

...எபிக்டீடஸ், உனக்கும் எனக்கும் மிகவும் பிடிச்ச பிலாஸபர் இல்லையா, அவர் கவிஞர் எமர்ஸனா திரும்பி வந்தார்...
...இந்தியாவின் அசோக மகாராஜா அமெரிக்காவின் வீர வக்கீலான ஹென்ரி ஆல்காட்டாகத் திரும்பி வந்து அடையார் தியஸாபிகல் சொசைடி தொடங்கி வைக்கக் காரணமாயிருந்தார்..
...ஹரப்பா மொகஞ்சதாரோவுக்கு குடியேறியவர்களின் மூதாதையரான கெல்டியத் தலைவராக இருந்தவரே ஹிட்லரை ஒடுக்கிய அமெரிக்க அதிபரான ரூஸவெல்ட்.. அதுக்கு முன்னால அவரும் சீஸரும் கணவன் மனைவியா இருந்தவங்க...
...ஆங்கில அரசுக்கு அடித்தளம் போட்ட ஆல்ப்ரெட் தி கிரேட் தான் விக்டோரியா அரசியா திரும்பி வந்தது...


"இதையும் கேளு..நெட்ல கிடைச்ச விவரம்.." தொடர்ந்தேன்.

..ஏப்ரகம் லிங்கனோட போர்க்கால அமைச்சர் தான் இந்திரா காந்தியா மறுபிறவி எடுத்தார்..
..ஏப்ரகம் லிங்கன் அமைச்சர்கள்ல ஒருத்தர் தான் இப்போதைய ஒபாமா..
..திப்பு சுல்தான் அப்துல் கலாமா மறுபிறவி எடுத்திருக்கார்..
..அமிதாப் பச்சன் பழைய அமெரிக்க நடிகர் எட்வர்ட் பூத்..


ஜெயா மறித்தாள். "இதை வச்சு தியாகய்யர் திரும்பி வந்திருக்காருனு சொல்றீங்க.. சரி.. பூனையா வருவானேன்? மறுபிறவி எடுத்தா நீங்க சொன்ன நாலஞ்சு மனுஷ வகைல ஒருத்தரா இல்லை எடுக்கணும்?"

"அதைத்தான் சொல்றேன்.. இத்தனை வருடங்களுக்குள்னா சரியா இத்தனையாவது வருடத்தில் இந்த வடிவத்தில் வரணும்னு ஏதும் இல்லையே? மில்டனின் கணிப்பு ஒரு சுவாரசியமான அனுமானம். இப்ப இதைக் கேளு... அஷ்டலக்ஷ்மிகள் சேர்ந்து ஜெயலலிதாவா அவதாரம் எடுத்திருக்காங்கனு ஞானி ரஜனிகாந்தே சொல்லிட்டாரு.. பெசன்ட் நகர் கோவில்ல இனிமே கூட்டம் வருமானு தெரியலே.. அதைவிடு.. ஜவர்ஹர்லால் நேரு ஸ்வீடன்ல ஒரு நாயா மறுபிறவி எடுத்தார்னு நெட்ல விவரம் இருக்கு.."

இருவரும் சிறிது சிரித்தோம்.

"ஜெயா.. எல்லாமே ஒரு அனுமானம்னு வச்சுக்கிட்டாலும் இத்தனை ஆராய்ச்சி.. இத்தனை விவரம்.. இதுல ஏதோ ஒண்ணு இருக்கலாம்னு தோணுது. இந்து மதத்துலயே எத்தனை மறுபிறவிக் கருத்துக்கள்! நசிகேதன் கதை என்னை எங்கேயோ கொண்டு போயிடுச்சு. சிவன் ஆதிசங்கரரா வந்தார்னு சொல்றாங்க. வால்மீகியே தியாகய்யரா வந்தார்னு சொல்றாங்க. த்வைத மத்வாச்சாரியாரும் அத்வைத சங்கராச்சாரியாரும் ஒவ்வொரு பிறவியிலும் எதிரிகளாகவே பிறந்தார்கள்னும் ஒரு கருத்து.. ஸ்ரீரங்கத்துல நடந்துதுனு சொல்வியே.. கஜேந்திர மோட்சத்து யானையும் முதலையும் முற்பிறவியில் வேறே பிறவிகளா இருந்தாங்கனு புராணம் சொல்லுது இல்லையா? தசாவதாரத்தின் தாத்பர்யமே இது தானே? மீனாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் பிறந்து இறந்து பிறந்து வாழும் இயற்கை நியதியை அப்படியே சொல்லாம கடவுள் மகாத்மியம்னு தலைமுறை தலைமுறையா கதை வடிவுல சொல்லப்படும் மறுபிறவிச் செய்தி.. அவ்வளவுதான்.. அப்படியிருக்குறப்ப தியாகய்யர் பூனையா ஏன் வந்திருக்கக் கூடாது?"

ஜெயா விருட்டென்று எழுந்தாள். "போறும் உங்க ஆராய்ச்சி. மழையில முறிஞ்ச கிளையும் புதரும் காய்ஞ்சு கிடக்கு.. எடுத்து வெளில போடுங்கனு ரெண்டு நாளா அடிச்சுக்குறேன். இந்தப் பூனையும் விக்கிரகங்களும் உங்களைப் பைத்தியமாத்தான் அடிச்சிருக்கு"

இங்கே தான் விபரீதங்கள் உக்கிரமாகத் தொடங்கின என்று நினைக்கிறேன்.

"உக்காரு ஜெயா.. நான் பைத்தியம்னே வச்சுக்கோ. இந்தப் பூனையின் கழுத்துல ஒரு மாலையிருக்குனு சொன்னேனே.. இன்னிக்குக் காலைல என்னமோ தோணிச்சு.. பூனைக் கழுத்துல இருந்த மாலையை மறுபடி நல்லா ஆராய்ஞ்சு பார்த்தேன். வழவழனு முடிச்சு மாதிரி இருக்கே தவிர அது முடிச்சு இல்லே ஜெயா. ருத்ராட்சம். பூனை கழுத்துல ருத்ராட்சம் எப்படி வந்தது?"

ஜெயா என்னை வெறுப்புடன் பார்த்தாள். "என்னைக் கேட்டா?"

"அதுக்கு மேலே இன்னொண்ணும் சொல்றேன்.. எப்படிச் சொல்றதுனு தெரியாம இருந்தேன்.. தப்பா நினைக்காதே. நேத்து நீ விக்கிரகங்களை வீசினதும் பூனை பாஞ்சுது இல்லையா.."

நான் சொல்லும் பொழுதே ஜெயாவின் முகம் இறுகத் தொடங்கியதைக் கவனித்தேன். தொடர்ந்தேன். "தியாகராஜருக்கு ஒரு அண்ணன் இருந்தார். தனக்கு இல்லாத திறமை தம்பிக்கு இருக்கேனு பொறாமை..."

ஜெயாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏதோ முனகத் தொடங்கினாள். விடாமல் தொடர்ந்தேன். "தன் முன்னே தியாகராஜர் பாடியதைக் கேட்டு மெய்மறந்த குரு வெங்கடராமையா, தஞ்சாவூர் அரசர் சரபோஜி மகராஜாவிடம் தியாகய்யரைப் பற்றிப் பெருமையாக எடுத்துச் சொன்னார். இதைக்கேட்ட மகாராஜா, தியாகய்யரைத் தன் ஆஸ்தானத்தில் சேரும்படி கேட்டு தியாகய்யர் வீட்டுக்குச் செய்தி அனுப்பினார். தியாகய்யர் இல்லாத நேரத்தில் வந்த அரச தூதர்கள் அண்ணனிடம் இந்தச் செய்தியைச் சொன்னார்கள். தம்பிக்கு வந்த வாய்ப்பைக் கண்டு பொறாமைப்பட்டாலும் இதனால் குடும்ப வறுமை நீங்கி பெரும் அந்தஸ்தும் கிடைக்கும் என்ற ஆசையில் அண்ணன் ஜபேசன்.."

ஜெயா சடாரென்று எழுந்து உட்கார்ந்தாள். பூனை நடுங்கி என்னருகே ஒண்டியது. தொடர்ந்தேன். "..தியாகய்யரிடம் அரசச் செய்தியை சொன்னார். தியாகய்யர் எந்தவிதச் சலனமும் இல்லாமல் தன் சீதாராமலட்சுமண விக்கிரகங்கள் முன் அமர்ந்து 'நிதி சால சுகமா.. ராமா.. நி சன்னதி சேவா சுகமா?' என்று தமிழில் சுலபமாகப் புரிகிற மாதிரித் தெலுங்கில் பாடத்தொடங்கினார்"

"ஏய்!" என்றாள் ஜெயா. சந்தேகமில்லாமல் கோபமான ஆண் குரல்.

நான் சுதாரிப்பதற்குள் வேகமாக எழுந்து விக்கிரகங்களை அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டு பின்கட்டுக்கு ஓடினாள். என்னருகே இருந்த பூனை ஒரு கணமும் தாமதிக்காமல் அவள் பின்னே உறுமிப் பாய்ந்து ஓடியது.

ஜெயாவின் உருவம்.. ஜெயா அல்ல.. ஜபே..சபே..ஜெயே.. எனக்கு தலை சுற்றியது.. பூனையின் பின்னே ஓடினேன்.

பின்கட்டில் மரக்கிளை ஒன்றில் தடுக்கி விழுந்தேன். எழுவதற்குள் ஜெயா படித்துறையில் நின்றபடி விக்கிரகங்களை வீச.. பூனை பாய.. ஜெயா அலறியது கேட்டது. எப்படியோ எழுந்து.. மிகவும் வலித்த இடுப்பையும் கால்களையும் இழுத்துப் பிடித்துப் படித்துறைக்கு வந்தேன். ஜெயா படித்துறையில் வழுக்கி விழுந்து அடிபட்டுக் கிடந்தாள். நெற்றியில் ரத்தம் வேகமாகக் கசிந்து கொண்டிருந்தது. அவள் முகத்திலும் கைகளிலும் கீறல்கள். பதறியபடி அவளை நெருங்க முனைந்ததில் தடுமாறி அவளருகே விழுந்தேன். விக்கிரகங்களைக் காணவில்லை. பூனையையும். வலியில் கண்கள் இருண்டன. தலை சுற்றியது. வலி தாளாமல் புரண்ட போது கவனித்தேன். எதிர்க்கரையில் முன்னர் பார்த்த பெரியவர். அவர் கைகளில்...

மாலி எப்போது வந்தார்.. எப்படி எங்களை மருத்துவமனையில் சேர்த்தார் என்பது எதுவும் தெரியாது.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பிறகு எங்களுக்குத் தெரிந்த டாக்டர் விசாலம் மருத்துவமனையிலும் சில வாரங்கள் தங்கவேண்டியிருந்தது.

எனக்கு இடுப்பு ஒடிந்துவிட்டதால் செயற்கை இடுப்புப் பொருத்தியிருந்தார்கள். இன்னும் ஒரு மாதமாவது மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

ஜெயாவுக்கு நெற்றியில் இரண்டு தையல், முகத்தில் ஒரு தையல், கை கால்களில் அங்கங்கே பேண்டேஜ் சுற்றியிருந்தார்கள். அவளை இன்றைக்கு டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள். விவரம் சொன்ன மாலி, "கவலைப்படாதீங்கோ அத்திம்பேர். நான் கூடமாட இருந்து அத்தையைக் கவனிச்சுக்கறேன். நீங்க நிதானமாத் தேறி வாங்கோ. அதான் முக்கியம்" என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றார். "சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணி ஆத்துக்கு அனுப்பிடுவா. நாளைக்கு மறுபடி வரேன்" என்று என்னை விட்டு விலகிப் போனார். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.

அறை அமைதியாக இருந்தது. எனக்கு ஒரு விவரம் தெளிவாகப் புரிந்துவிட்டது.

இயற்கையின் சுழற்சியைப் புரிந்து கொள்ள முடியாது. விக்கிரகத்தை நான் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தியாகய்யர்.. பூனை.. வரவில்லை. விக்கிரகம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கட்டும் என்ற முனைப்புடனேயே பூனை வந்திருக்கிறது. விக்கிரகம் மண்ணுக்குள்ளேயே கிடக்கவேண்டுமென்ற விதி. தியாகய்யர் வேறு பிறவியில் திரும்ப நேர்ந்தால் திரும்பி வரும் காலம் வரையில் மண்ணில் புதைந்து கிடக்கட்டும் என்பதற்காகவே.. விக்கிரகங்களை வீசி எறியக் கூடியவர் வீட்டில்.. நடந்தவை எதுவும் தற்செயல் இல்லை.. நான் என்னவோ வேண்டாத ஆராய்ச்சியெல்லாம் செய்து சுழற்சியைத் தற்காலிகமாக நிறுத்தி.. ஜெயா சொன்னது போல் அன்றைக்கே விக்கிரகங்களை கோவிலில் கொடுத்திருந்தாலோ நீரில் எறிந்திருந்தாலோ பூனை எங்கள் வீட்டுக்குள் வந்தே இருக்காது.. அதைத்தான் மதில் மேல் நின்றபடி என்னிடம் சொல்ல முற்பட்டதோ தியாகய்யப் பூனை? ராம விக்கிரகங்களைப் பராமரிக்கும் தகுதி எனக்கில்லை என்பது புரியாமல் ஏதோ செய்துவிட்டேன். ஜெயாவைப் போல் எனக்கும் முற்பிறவித் தொடர்புகள் இருக்க வேண்டும். அதனால் என்னிடம் பூனை வந்திருக்கிறது. தெரியாது போன எனக்கும் தியாகய்யருக்குமான தொடர்பு தெரியாமலே இருக்கட்டும். விபரீதமாகத் தோன்றினாலும்.. விக்கிரகங்களை இருக்க வேண்டிய இடத்தில் வைக்கவே ஜெயா முற்பட்டாள் என்பது மட்டும் புரிந்து அவள் மேல் எனக்குப் புது மதிப்பு உண்டானது. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றதும் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆ! அசையும் பொழுதெல்லாம் வலித்தது.

இன்னொன்றும் புரிந்தது என்பேன்.

வலிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது 'ராமா' என்று சொல்லத் தொடங்கியிருக்கிறேன்.

[முற்றும்].


இக்கதை Roald Dahl 1950 வாக்கில் எழுதிய 'Edward, the Conqueror' எனும் சிறுகதையின் தழுவல். என் எழுத்தில் நிறைய உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நிறைகள் அத்தனையும் டாலுக்குச் சொந்தம். குறைகள் ஒட்டுமொத்தமாக என்னுடையவை.

34 கருத்துகள்:

 1. கதை Roald Dahl 1950 வாக்கில் எழுதிய 'Edward, the Conqueror' எனும் சிறுகதையின் தழுவல். என் எழுத்தில் நிறைய உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நிறைகள் அத்தனையும் டாலுக்குச் சொந்தம். குறைகள் ஒட்டுமொத்தமாக என்னுடையவை.////

  அசல் கதை என்ன என்பதை தங்களது வாசகப் பெருமக்கள்
  புரிந்து கொண்டு, அதில் இருந்து எந்த அளவிற்கு மாறுபட்டு எழுதி இருக்கிறீர்கள் என்பதற்காக அல்ல,
  அந்த கதையின் மையப்பொருளை
  மட்டும் வைத்துக்கொண்டு,
  தங்கள் கற்பனை உலகத்திற்கு
  எங்களை எல்லாம் எந்த அளவிற்கு
  இழுத்துச் சென்று
  ஒரு பதினைந்து நிமிட நேரம்
  பிரமிக்க வைத்து
  சாதனை படைத்து உள்ளீர்கள்
  என்பதை வாசகர் பெருமக்கள் தெரிந்து கொள்ள,
  இந்த வீடியோ வை இங்கு தொடர்பு தருகிறேன்.


  www.youtube.com/watch?v=CWQiqCI4pG

  ரியலி கிரேட்.

  சுப்பு தாத்தா.

  பி.கு.
  மத்த டிஸ்கஷன்ஸ் இஸ்யூஸ் எல்லாம் பிசாத்து.
  பின்னாடி பாத்துக்கலாம். அல்லது பேசலாம். எழுதலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Video is good. நான் இது வரையில் பார்க்கவில்லை. பொதுவாக புத்தகக் கதைக்கும் அதன் நாடக, திரை வடிவங்களுக்கும் வித்தியாசம் இருக்கும். கதையை கெடுக்காமல் படம் எடுத்திருக்கிறார்கள். thanks for the link.

   நீக்கு
  2. பூனை திரும்பி வருவதாக முடிவை ஏன் மாற்றினார்களோ!! mystic effect தொலைந்து போனதாக உணர்ந்தேன்.

   நீக்கு
 2. சுவாரசியம் அதிகம்... ரொம்பவும் அதிகம்...! அதுவும் அந்தக் குறிப்புகள் - இருக்கலாமோ...?

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுகளை படித்துக் கொண்டிருந்தேன்.. அபாரம் . வேற என்ன சொல்ல ??

  சில சம்பவங்களுக்கு நாம் விளக்கம் தேட முயலக் கூடாது

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான முடிவு. விக்ரஹங்களை மீண்டும் நீரில் எறிந்ததில் வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் உரிமையாளர் அதைத் தான் விரும்பினார் என்பது என்ன நிச்சயம்? விக்ரஹங்களைத் தன் வீட்டுப் பூஜை அறையில் அவை இருந்த இடத்திலேயே வைத்திருக்கவும் விரும்பியிருக்கலாமே! எனக்கென்னமோ இப்படித் தான் தோன்றுகிறது. ஜெயாவான ஜபேசன் ஆத்திரத்தில் மறுமுறையும் தூக்கி எறிந்து விட்டாரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பதிவின் பின்னூட்டத்துக்கு பதில் போடலாமென்றிருந்தேன்.. கதையின் முடிவுக்காகத் தயங்கினேன்.

   எனக்கு இந்த தொன்மையான விக்கிரகங்கள் கிடைத்திருந்தால் நிச்சயம் வைத்துக்கொண்டிருக்க மாட்டேன். ராமனை ஆராதிக்க அத்தனை கொள்ளை ஆசையிருந்தாலும் எனக்குப் பிறகு இந்த விக்கிரகங்களின் நிலை என்ன ஆகும் என்று ஒரு கணம் சிந்திப்பேன். பேரீச்சம்பழமா அல்லது பொது ரசனையா என்ற கேள்வியில் பொது ரசனை வெற்றி பெறும்.

   வீட்டில் அம்மாவுக்காக ஒரு பூஜையறை கட்டினோம். அதில் இருந்த சில விக்கிரகங்களும் படங்களும் பரம்பரை பரம்பரையாக வந்தவை. எல்லாவற்றையும் தூக்கி எறிய மனமில்லாமல் அத்தனையையும் மூட்டை கட்டி இந்தியாவில் சேர்த்தேன். ஒரு கிருஷ்ணர் விக்கிரகம் கிட்டத்தட்ட நூறு வருடங்களாக எங்கள் வீட்டில் இருப்பதாகச் சொல்வார்கள். பரமாரிப்பற்ற அதன் நிலை என்னவாகும் என்று நினைத்துப் பார்த்ததில் அதைத் திருப்புவதே சரியென்று பட்டது. சிவன் பார்வதி கணேசர் முருகர் ஒன்று வீட்டுக்கு அத்தனை ஆசீர்வாதம் அனுக்ரகம் என்று சொல்லிக் கொடுத்தார்கள். எழுபது வருடங்களாவது இருக்கும் படத்தின் வயது. எத்தனை சிறப்பானதானாலும் என்னால் படத்துக்குப் பயனில்லை, படத்தால் எனக்குப் பயனில்லை என்பது புரிந்து அதைத் திருப்பிவிட்டேன்.

   சரி தவறென்று எதுவும் இல்லை.எனினும் விக்கிரகங்களை வைத்து ஆராதிக்க/பராமரிக்க வக்கில்லாத மாந்தர் அதை மறுபடி தொலைப்பது தான் தர்மம். எப்படி வேண்டுமானாலும் தொலைக்கலாம். கோவிலுக்குக் கொடுத்தோ ஆற்றில் விட்டோ அல்லது பொதுவில் வைத்தோ எப்படி வேண்டுமானாலும்.

   ஆசைக்கும் கடமைக்குமான வித்தியாசம்?

   நீக்கு
  2. //ராமனை ஆராதிக்க அத்தனை கொள்ளை ஆசையிருந்தாலும் ......///

   அப்படி, அப்படி சொல்லுங்க..அப்பாதுரை சார்.

   இந்தக் கதை தோன்றுமுன்....???

   இந்த கதை இல்லை ஸ்வானுபவ வர்ணனை முடித்தபின்...!!!!

   இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன என்ன என்ன ???

   ///இராமனை ஆராதிக்க கொள்ளை ஆசை இருந்தாலும்...//

   காதை கண்ணை கொஞ்சம் தீட்டிக்கொண்டு கேட்டேன். பார்த்தேன்.
   சந்தேகமே இல்லை. சார் தான் சொல்றார். எழுதறார்.
   கீதா மேடம் நூறு பர் சென்ட் ரைட். எப்பவும் சாருக்கு ராம சிந்தனை தான். (பழைய பின்னூட்டம் பார்க்கவும்)

   இன்று காலை ஒரு பாட்டு கேட்டேன். அதுவும் தியாகபிரும்மத்தின் பாடல்தான்.
   www.youtube.com/watch?v=-ZTFi1EQS6Q
   நீ பலமா..நாமா பலமா...ஓ ராம ராம...

   ராம நாமமே ஒரு மிராகிள் செய்ய வல்லது போலும்.

   ராம நாமம்சதா நாவிலே சதா ஹ்ருதயத்திலே இருக்கையிலே
   ராம விக்ரஹம் எல்லாமே எதற்கு ?

   ராம நாம மணி தாரகை, பாஹர் பீதர் உஜ்வல் ஹோயி,...என்கிறார் துளசி தாசர்.

   இனி அப்பாதுரை இல்லை.
   ராமதுரை .

   சர்வ மங்களானி பவந்து.

   சுப்பு தாத்தா.

   நீக்கு
  3. இதை எழுதும்போதே நினைச்சேன்.. இப்படி சொல்வீங்கன்னு. seriously!

   நீக்கு
  4. ம்ம்ம் எங்க வீட்டில் ஶ்ரீராமர் படமும், ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள், பிள்ளையார், சோமாஸ்கந்தர் ரிஷப வாஹனத்தில், தவழ்ந்த கிருஷ்ணன் எல்லாமும் என் மாமனாரின் அப்பா காலம் வரை ஒரே இடத்தில் ஒரே வீட்டில் வைத்து வழிபட்டிருக்கின்றனர். என் மாமனாரின் அப்பா காலம் ஆனதும் சொத்துப் பிரிக்கையில் எங்க மாமனாருக்கு ஶ்ரீராமப் பட்டாபிஷேஹப் படமும், என் பெரிய மாமனாருக்கு விக்ரஹங்கள் என்றும் பிரித்துக் கொண்டனர். பரவாக்கரையில் என் பெரிய மாமியார் இங்கே கருவிலியில் என் மாமனாரிடம் இருக்கும் ஶ்ரீராமரை நினைத்துக் கொண்டு வழிபாடுகள் செய்வதும், இங்கே என் மாமியார் பெரிய மாமியாரிடம் இருக்கும் பிள்ளையாரையும், மற்றவர்களையும் நினைத்துக் கொள்வதும், அந்தப் பிள்ளையாரை நினைத்து இங்கே கருவிலியில் (இரண்டு ஊருக்கும் இடையில் ஒரு கிலோ மீட்டர் அல்லது ஒன்றரை கிலோ மீட்டர் என்றாலும் தினம் போய் வர முடியாது) தேங்காய் உடைத்து நிவேதனம் செய்வதுமாக இருந்தது. எங்க பெரிய மாமனார் காலம் வரை அந்த விக்ரஹங்கள் அவர் பெண்ணிடம் கொடுப்பதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தார். பெரியமாமனாருக்குப் பிள்ளை இல்லை. அவர் காலம் ஆனதும் என் பெரிய மாமியார் விக்ரஹங்களைத் தஞ்சாவூரில் இருந்த பெண் வீட்டில் கொண்டு கொடுத்த போது அல்லது பெரியப்பா இருக்கும்போதே கொடுத்த போது அவங்க வீட்டில் என் பெரியமாமனாரின் பெண்ணுடைய மாமனார் உங்க வீட்டு சாமியெல்லாம் இங்கே கொண்டு வராதீங்கனு சொல்லி இருக்கார். அதையும் மீறி விக்ரஹங்களை அங்கே வைத்த மறுநாளே பெரிய மாமனாரின் மாப்பிள்ளை (நம்ம சுப்பு சாருக்கு அவரைத் தெரியும்) மாடியில் தண்ணீர்த்தொட்டி சுத்தம் செய்ய ஏறினார் கீழே விழுந்து பேச்சு மூச்சில்லாமல் போக உடனடியாக விக்ரஹங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. 2010 வருடம் வரைக்கும் என் பெரிய மாமியாரிடமே இருந்து வந்தது. 2010 ஆம் வருடம் தான் அவங்க தனியாக இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு முதியோர் இல்லம் போனப்போ எங்களிடம் கொடுத்தாங்க. இப்போது எங்களிடம் தான் இருக்கிறது. ஶ்ரீராமர் படமே என் மாமனார் என்னோட முதல் மைத்துனனுக்குத் (என் கணவரின் முதல் தம்பி) தான் கொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அதை வைத்துப் பராமரிக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடப் படம் எங்களிடம் வந்தது. இப்போது முன்னோர்கள் வைத்திருந்தாற்போல் மேலே ஶ்ரீராமர் படமும், கீழே விக்ரஹங்களுமாக வைத்திருக்கிறோம். எங்கள் காலத்துக்குப் பின்னர் பிள்ளை பார்த்துக்கொள்வார் என்னும் நம்பிக்கை! பெண் என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள். :) நானே ஒரு சில காரணங்களால் விக்ரஹங்களைக் கோயிலில் (ஊரிலேயே) கொடுத்துடலாம்னு சொல்லி இருக்கேன். ஆனால் அவர்களும் எங்களுடனே பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். போகிறவரை போகட்டும். பின்னால் அவங்களே அவங்களுக்கென ஒரு தனி இடம் தேடிப்பாங்க! :) என்றாலும் பிள்ளை உறுதி சொல்லி இருக்கார் தான் பார்த்துக் கொள்வதாக!

   நீக்கு
  5. ஆனாலும் அப்பாதுரை, சுப்பு சார் சொன்னது சரியே, உங்களுக்கு ராம நாம ஸ்மரணை கொஞ்சம் இல்லை, நிறையவே அதிகம்! :))) இந்த நாத்திகவாதிகள் தான் கடவுளுக்கு மிக அருகே இருக்கிறார்கள். அந்த ஒளியினால் அவர்களுக்குக் கண்கள் கூசும் போல! கண்களை நன்றாகத் திறந்து கொண்டு பார்க்க மாட்டாங்களோ! அப்படி மட்டும் பார்த்து விட்டால்! ஆஹா!

   நீக்கு
  6. //கீழே விழுந்து பேச்சு மூச்சில்லாமல் போக உடனடியாக விக்ரஹங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன

   இது இன்னும் திகிலா இருக்குதே?!

   நீக்கு
  7. ஆத்திகர்கள் தான் கண்ணை மூடிக் கும்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.
   நாத்திகர்கள் அருகில் ஏதாவது ஒளி கிளி இருந்தால் அது அறிவின் ஒளியாக இருக்கும் என்றே நம்புகிறேன். கடவுள் என்பதே இருட்டறை - அதுவும் காரணத்தோடு தானோ?

   நீக்கு
  8. //காதை கண்ணை கொஞ்சம் தீட்டிக்கொண்டு கேட்டேன். பார்த்தேன்

   ஹிஹி.. ராமனை ஆராதிக்க 'எத்தனை' கொள்ளை ஆசையிருந்தாலும்னு தான் எழுத நினைச்சேன். ஒரு எழுத்து மாறிப்போச்சு. பதிலைப் பார்த்ததும் தான் கவனிச்சேன். ப்ரஹஸ்பதி!

   நீக்கு
 5. கதைப் பகுதிகளை ஒன்றுக்கு குறைந்தது இரு முறைகளாவது படிக்க வைக்கும் உங்கள் திறமை அபாரம். நிறைய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்ய வேண்டுமோ( கதை எழுத)

  பதிலளிநீக்கு
 6. நிறைய யோசிக்க வைத்த கதை. அருமை !

  பதிலளிநீக்கு
 7. மூன்று பாகங்களையும் ஒன்றாக வாசித்து முடித்தேன். பிரமாதம். அற்புதம்.

  பதிலளிநீக்கு
 8. அணுக்கள் மாறி அடுத்தடுத்த பிறவிகள் எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியின் எண்ணங்கள், ஆசாபாசங்கள் மட்டும் தங்கி விடுவதேன்? தொடர்வதேன்? கல்லாய்ப் பார்ப்பவர்களுக்கு கல்லாகவும், கடவுளாய்ப் கடவுளாகவும் தெரியும் என்பது போல மனதில் பட்ட முற்பிறவியின் யாராய்ப் பார்க்கிறோமோ அந்த உருவம் கண்ணுக்குத் தெரிவதும் பிரமையோ?


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயமா இருக்கே ஶ்ரீராம் நீங்க சொல்றது. யாரை நினைத்து பார்க்கிறோமோ அவங்க உருவம் தெரிந்தால் சிக்கல். ஆனா நீங்க சொல்வதும் உண்மை.. ஆவியோட (ப்லாக் எழுதாத) பேசும் சங்கதிகள் இந்த வகையைச் சேர்ந்தவையே.

   நீக்கு
  2. போன பிறவியில் நமக்கு யார் நெருங்கியவங்களோ அவங்க தான் இந்தப் பிறவியிலும் வேறு வகை உறவு அல்லது நட்போடு நெருங்குவாங்க என திரு பக்கிரிசாமி எழுதிய மொழிபெயர்ப்புப் புத்தகத்தில் சொல்கிறார்கள். அதன் சுட்டி தேடி எடுத்துப் போடுகிறேன். ஆங்கிலத்தில் இருப்பதைத் தான் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அப்பாதுரை படித்திருக்கலாம். :)

   நீக்கு
  3. அமெரிக்க ஏர்போர்ட் ஒன்றில் ஒருமுறை கும்பலோடு கும்பலாக என் நண்பருடன் அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த போது, கோட் சூட் அணிந்த வயதான நபர் ஒருவர் திடீரென்று என் நண்பரைத் தொடர்ந்து வந்து, "என் தம்பியைக் காப்பாத்துங்க.. எப்படியாவது உதவி செய்யுங்க" என்று விடாமல் கெஞ்சினார். 'பிச்சையா ஆள்மாறாட்டமா' என்று நாங்கள் வியந்து முடிப்பதற்குள் சாதாரணமாக நடந்து கூட்டத்தில் கலந்து சென்றார். அன்று மாலை நாங்கள் ஒரு பொது நண்பர் வீட்டுக்குப் போனபோது, பொது நண்பர் அவருடைய சமீபத் துயரங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மிக இக்கட்டான நிலையிலிருந்தார். என் நண்பருக்கு ஏனோ உதவி செய்யத் தோன்றியது. பொது நண்பர் நன்றி மிகுதியில், "என் பெரிய அண்ணன் மாதிரி உதவி செஞ்சீங்க" என்றார். "எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம்" என்று நண்பர் கூச்சப்பட்டதும், "உண்மையா சொல்றேங்க. எங்க அண்ணன் மட்டும் இப்ப உயிரோட இருந்தா எனக்கு பிரச்சினையே இருந்திருக்காது" என்றார். உடனே இடிக்காவிட்டாலும் சில மாதங்கள் பொறுத்து பொறி தட்டியது. இதை ஒரு கதையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். (இல்லையன்றால் எழுதிட வேண்டியது தான். நல்லா மாட்டினீங்க:-)

   நீக்கு
  4. அப்பாதுரை, கமென்ட் கொடுத்தால் அமாநுஷ்யம் ஆகுதே! என்ன விஷயம்? மேலே நீங்க சொல்லி இருப்பதை நான் நம்பறேன். ஆனால் உங்க கதை படிச்ச நினைவெல்லாம் இல்லை. அதனால் என்ன? மறுபடி எழுதுங்க இதே கதைக்கருவை வைச்சு. இப்போ நீங்க தான் மாட்டினீங்க! ஹையா, ஜாலி!

   நீக்கு
  5. சென்ற வாரம் நான் படித்த என் கணேசன் எழுதிய 'பரம(ன்) ரகசியம்' புத்தகத்தில் இதுபோன்ற காட்சிகள் வருகின்றன. மிக மிக சுவாரஸ்யமாகப்பல் படித்தேன்.

   நீக்கு
 9. கதையைத் தொடர்ந்து (பொறுமையாக) படித்து பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி. பாராட்டுக்களுக்கு மிக நன்றி (ரோல்ட் டாலுக்குத் தனியாகத் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன் :-).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //http://packirisamy.blogspot.com/2013_03_01_archive.html//

   சுட்டி கொடுத்திருக்கேன். முடிஞ்சால் படிங்க! :)

   நீக்கு
 10. மனதை வசியப்படுத்தும் உங்களது வழக்கமான நடையில் மற்றுமொரு அசத்தலான மொழிமாற்றக் கதை. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களை படிப்பது இன்னும் சுவாரசியமாக உள்ளது

  பதிலளிநீக்கு
 11. சுப்புத் தாத்தா கொடுத்த லிங்கில் வீடியோ டஸ் நாட் எக்சிஸ்ட் என்று வருகிறதே

  பதிலளிநீக்கு
 12. தியாகப்ரம்மத்தை கதையில் கொண்டு வந்து ஜெயாவுக்கு முன் ஜென்ம தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி பூனையின் கழுத்தில் ருத்ராட்சம் நிரடி... ஸ்ரீராமர் விக்கிரகங்களை ஜெயா மூலம் நீரில் எறியவிட்டு விழுந்து தடுக்கவும் இயலாமல் இறுதியில் சுபமாய் செயற்கை இடுப்பை பொருத்தி வலித்தால் ராமா என்று சொல்ல தொடங்கிய இந்த பாகம் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டதுப்பா அப்பாதுரை..

  ரசிக்க வைத்த கதைப்பகிர்வு.. கடைசி க்ளைமேக்ஸ் செம்மப்பா.. சீட் நுனியில் உட்காரவைத்து அடுத்து என்னாகுமோ என்று நகம் கடிக்க வைத்தது போல்...

  ரசித்தேன்.... நல்ல கதைப்பா...

  பதிலளிநீக்கு
 13. முடிவு நன்றாக இருக்கிறது....மிகவும் ரசித்தோம்...சார்..

  மறுபிறவி பற்றி சுஜாதா கற்றதும் பெற்றதும் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்...

  //செல்கள் அணுக்களால் ஆனது என்பதால் அந்த அணுக்களுக்கு ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை என்றுதான் பௌதீகம் சொல்லுகின்றது. இதைத்தான் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதும் என்ற தனது கட்டுரைகள் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அவர் எழுதிய ஆன்மா பற்றிய விளக்கம் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. “ப்ரைசனின் புத்தகத்தில் மறுபிறவி பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதற்கு சுவராஸ்யமான விடை கிடைக்கிறது.
  ப்ரைசன் சொல்கிறார்: நம் பிரபஞ்சம் முழுவதும் தனிமங்களின் அணுக்களால் ஆனது.மனித உயிர் என்பதே ஒரு மாலிகூல் நீண்ட கூட்டணு தொகுதிதான்.அணுக்களுக்கு அழிவே இல்லை.பிரபஞ்சம் ஆரம்பித்ததிலிருந்து அப்படியே இருக்கின்றன.ஒரு அணுவின் வாழ் நாள் குறைந்த பட்சம் 10^35. அதாவது 10க்கு பின் 34 சைபெர் போட்டுக் கொள்ளவும். அத்தனை வருஷங்கள்! நாம் இறந்து போய் எரித்தாலோ,புதைத்தாலோ கூட நம் உடலின் அணுக்கள் காற்றிலோ மண்ணிலோ கலந்து விடுகின்றன.இடமாற்றம் நிகழ்கிறது.. அவ்வளவுதான். அணு அளவில் அழிவதில்லை. ஒரு கண சென்டிமீட்டர் காற்றில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை 45 பில்லியன் பில்லியன். இத்தனை அணுக்களின் ஒரு பகுதி நாம் இறக்கும் போது மறு சுற்று வருகிறது.சில இலை தழை தாவரமாகவோ,பிராணிகளாகவோ மாறலாம்.சில மனிதர்களிடமே திரும்பி வரலாம்.எனவே, நம் முன்னோர்களின் புராதன அணுக்களில் சில பில்லியன்கள் நம்மிடம் இருந்தே தீரும். அணுக்களுக்கு அழிவில்லை என்றால், யாருமே இறப்பதில்லைமீண்டும் றக்கிறோம்..தாவரமாக,உயிரினமாக,மனிதராக பிரித்துக் கொடுக்கப் படுகிறோம் ..
  இதை எல்லாம் பார்ர்கும் போது விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தின் அருகில் வந்து விட்டதோ?
  சுஜாதா, உயிரின் ரகசியமும் மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும் போது விஞ்ஞானம் முற்று பெறும் என்று சொல்லி இருப்பார் கற்றதுப் பெற்றதும்.

  சுப்புத் தாத்தா கொடுத்திருந்த லிங்க் எரர் வருகின்றது வீடியோ நீக்கப்பட்டதாக அறிவிக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

   சுஜாதாவுக்கு முன்னால் நிறைய பேர் இதை (இதையே) சொல்லியிருக்கிறார்கள். முன்னால்னா நிறைய முன்னால். உபனிஷது காலத்திலிருந்து.. இங்கேயும் சொல்லியிருக்கிறார்கள். மேற்கேயும்.
   இருந்தாலும் ரத்தக்கறை படிய சுஜாதா சொல்வது நமக்குத் தேவைப்பட்டிருக்கிறது. புரிந்தால் சரிதான் என்று சொல்லத் தோணுது இல்லையா?

   சுப்பு சார் கொடுத்த லிங்க் யுட்யூபில் தேடினாலும் கிடைக்கும் "tales of the unexpected" என்று ஒரு சீரியலே இருக்கிறது. புத்தகம் இன்னும் சுவாரசியமானது.

   நன்றி. (மீண்டும் வருக)

   நீக்கு
  2. அணுக்கள் அழிவதில்லை (ரொம்ப நாளைக்கு) என்பதால் யாரும் இறப்பதில்லை என்ற முடிவுக்கு வரலாமோ? நிச்சயம் இறக்கிறோம். இறந்தது இறந்தது தான். அதே வடிவில் திரும்பி வருவதில்லை. அதே நிலையில் எந்த நாளிலும் எங்கேயும் எப்போதும் திரும்பப் போவதும் இல்லை. அதனால் இருக்கும் பொழுதே முடிந்தவரை மேன்மையாக வாழ்வது நல்லது. (இதான் கடோபனிஷது - நசிகேதன் கதையின் செய்தி)

   நீக்கு
  3. நல்ல கருத்து சார்...சுப்புத்தாத்தாவின் லிங்க் போய் பார்க்கின்றோம் சார்....நன்றி....

   நீக்கு