2013/12/28

கோமதி என்றொரு அழகி


    சீராகச் சென்று கொண்டிருக்கையில் எதிர்பாராமல் எங்கோ இடறுகிறது. எங்கே எப்போது இடறி எல்லாம் தலைகீழாக மாறுகிறது என்பது மாறும்போது தெரிவதில்லை. மாறியது புரிந்தும் ஏதும் செய்ய முடியாத நிலையில் மனம், கதவிடுக்கில் சிக்கிய விரலாகப் பதறித் துவண்டு போகிறது. உடல், முன்னிரவு படுத்தெழுந்தப் பாயாகச் சுருண்டு போகிறது.

எல்லாம் இந்த வாழ்க்கையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

என் பெயர் சதாசிவம். எண்பத்து நான்கு வயதாகிறது. ரிடையர்ட் பி.எஸ்.ஹைஸ்கூல் கணக்கு வாத்தியார். சப்ஸ்டிட்யூட் இங்லிஷ் நான்டீடெயில் மற்றும் பி.டி டீச்சர். எனக்கு இரண்டு பையன், ஒரு பெண். முதல் பையன் தில்லியில் மினிஸ்டரி ஆப் கம்ப்யூனிகேஷனில் யுடிசி. இளையவன் ஐஐஎம் கொல்கத்தாவில் புரபசர். ஒரே பெண் இலைலிலி என்று ஒரு அமெரிக்க மருந்து கம்பெனியில் ஆரகிள் டிபிஏ எனும் சித்து வேலை பார்க்கிறாள். மாப்பிள்ளை சொந்தமாக சிகாகோ அருகே வின்ட்மில் கன்சல்டிங் என்று சுயமாக என்னவோ செய்கிறார். என் மனைவி பெயர் கோமதி. எழுபத்தொன்பது வயது ஆகிறது. அறுபது வருடங்களாக என்னுடன் ஒட்டிகொண்டு சரியான சள்ளை.

நை நை என்று இந்த வயதிலும் எதையாவது சொல்லிக் கழுத்தறுப்பாள். "..இதைச் சாப்பிடுங்க.. அதை விடுங்க.. ஸ்வெட்டர் போடலியா.. டிவி என்ன வேண்டிக்கிடக்கு.. சின்ன குழந்தை மாதிரி என்ன பிடிவாதம்.. சட்டுபுட்டுனு குளிச்சு வந்தா சாப்பிடலாமில்லையா.. தினம் பத்து நிமிஷம் உள்ளுக்குள்ளயே வாக்கிங் போகக் கூடாதா.. சாமி கும்பிட்டா என்ன கொறஞ்சா போயிடும்.. கணக்கு வாத்தினா கடவுள் நம்பிக்கை இல்லாம போயிடுமா.. அய்யோ போகட்டும் விடுங்க.. உங்க பசங்கனு அவங்களுக்கு எல்லாம் செஞ்சீங்க அதுக்காக இப்ப உங்களை யாரும் கவனிக்கறதில்லேனு புலம்பறது அசிங்கம்.. வயசுக்கேத்த மாதிரி நடக்க வேண்டாமா.. அப்படி என்ன மறதி.. தேவையில்லாம அவங்க விஷயத்துல ஏன் தலையிடுறீங்க.. தொண்ணூறு வயசாகப் போகுது, இன்னும் என்ன சென்டர் ஆப் அடென்ஷன் வேண்டிக்கிடக்கு... போற காலம் வந்தாச்சுனு தெரிய வேண்டாமா.. அவ சொல்றபடி தான் கேளுங்களேன்.. உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்னு ஏன் கண்டதுல கையை வச்சு உடைக்கறீங்க.. வயசானா கணக்கு வாத்தியார் கம்ப்யூடர் மெக்கானிக்காயிட முடியுமா.. ப்ளட் ப்ரஷர் கொலஸ்டிரால்னு கெடந்து வியாதிப் பட்டணமா இருக்கீங்க.. காது வேறே மந்தமாயிட்டு வருது.. மாத்திரை மருந்து சாப்பிட்டு அடுத்தவங்களுக்குத் தொந்தரவு இல்லாம இருந்தா என்ன.." இப்படி வினாடிக்கு மூன்று முறையாவது புலம்புவாள்.

பாருங்கள்.. நேற்றிரவு இரண்டு மணிக்கு மேல் உறக்கம் வராமல் டிவியில் ஒலிகுறைத்துப் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஆசையில் கொஞ்சம் ஒலி கூட்டினேன். காது சரியாகக் கேளாது என்பதால் அதிகமாகக் கூட்டிவிட்டேன் போலிருக்கிறது. பக்கத்தில் படுத்திருந்த கோமு சட்டென்று விழித்து என்னை இடித்தாள். "என்ன இப்படி சத்தமா வச்சிருக்கீங்க? மாப்பிளை முழிச்சிக்கப் போறாரு.. காலைல அவங்க வேலைக்குப் போக வேண்டாமா? இது என்ன படம் இது.. ரெண்டு வெள்ளைக்காரன் ஆம்பளைக்கு ஆம்பளை முத்தம் கொடுத்திட்டிருக்கான்.. கண்றாவி.. இந்த வயசுல இதையா பாக்கறது?" என்று சிடுசிடுத்தாள். "பிலடெல்பியா.. நல்ல படம்டி.. உனக்கென்ன தெரியும்.. இங்லிஷ்ல அவன் சொல்றது சரியா கேட்க மாட்டேங்குது.. அதான் வால்யூம் வச்சேன்" என்றேன். "போதும் போதும்.. படுத்துத் தொலைங்க.. அமெரிக்கா வந்தா.. உடனே இங்லிஷ் படம் பீத்துணி பாட்டுனு என்ன போலித்தனம் வேண்டிக்கிடக்கு?" என்றாள். "பீத்துணி இல்லேடி.. பீதோவன்.. பட்டிக்காடு உனக்கு என்னடி தெரியும்?" என்றேன். "எனக்கொண்ணும் தெரிய வேண்டாம்.. டிவியை அணைச்சுட்டு படுங்க.. வயசு ஏறிட்டே போகுது, புத்தி இறங்கிட்டே போகுது" என்று எரிந்து விழுந்தாள். "சரிதான் போடி கிழவி" என்றேன். மனதுள். பிறகு டிவியை அணைத்துவிட்டுப் படுத்தேன். தூங்க முடியவில்லை. அரைமணியில் கோமு விதிர்த்து எழுந்தாள். என்னை உலுக்கி, "மூச்சு முட்டுது" என்றாள். என் கைகளை இறுகப் பிடித்தாள்.

    அமெரிக்காவில் ஒரு வசதி. இரவு மூன்று மணியானாலும் எமர்ஜென்சி என்றால் போன் செய்து கீழே வைக்குமுன் உடனே வந்துவிடுகிறார்கள். ஆக்சிஜன், டிபிப் என்று அத்தனை வசதியுடனும் வந்தார்கள் பேராமெடிக்ஸ் ஆசாமிகள். கிழவியை அலாக்காக வண்டியில் தூக்கிக் கிடத்தினார்கள். தேவைப்படுகிறதா இல்லையா என்று சிந்திக்காமல் ஆக்சிஜன் குழாய் பொருத்தினார்கள். ஒரு நர்ஸ் கோமதியின் நாடித்துடிப்பு, கண், மார்பு, வயிறு, கால்விரல் என்று சடுதியில் வரிசையாகச் சோதனை செய்தாள். யாருக்கோ போன் செய்தாள், என் மாப்பிள்ளையிடம் ஒரு கையெழுத்து வாங்கினாள். அவ்வளவு தான், வண்டி கிளம்பிவிட்டது. எல்லாம் இரண்டு நிமிடங்களுக்குள்ளாக.

"அம்மாவுக்கு ஹார்ட் அடேக்.. நீ இங்கயே இருப்பா.. நாங்க ஆஸ்பத்திரி போய்ட்டு வந்துடறோம்" என்றாள் மகள்.

"அவ என் வொய்ப்"

"அட.. எனக்குத் தெரியாதாப்பா? சும்மா இருப்பா.. மணி மூணாகுது.. நீ அங்கே வந்தா கஷ்டமாயிடும்.. வீட்டுல பசங்களைப் பாத்துக்கப்பா.. ஆம்புலன்ஸ் எல்லாம் பாத்து பயந்து போயிருக்காங்க.. நாய் வேறே விடாம குலைக்குது.. இவங்களைப் பாத்துக்கப்பா.. நாங்க ஆஸ்பத்திரி போய் பார்த்துட்டு உடனே வந்துடறோம்.. இந்தா இந்த செல்போனை வச்சுக்க.. கூப்பிட்டு விவரம் சொல்றேன், ஓகே?"

"நானும் வரேனேடி.."

"அடம் பிடிக்காதப்பா ப்லீஸ்.. ஆக்ட் யுர் ஏஜ். வந்து உன்னைக் கூட்டிப் போறேன்".

மாப்பிள்ளையைப் பார்த்தேன். சங்கடமாகப் புன்னகைத்தார். என் பெண்ணுடன் காரில் புறப்பட்டுப் போனார்.

விழித்துப் பயந்திருந்த என் பேரப்பிள்ளைகளைப் பார்த்தேன். "யு ஹெவ் டு லிசன் டு மாம் அன்ட் டேட்" என்றான் மூத்த பேரன். இரண்டாமவன் என்னைத் தள்ளாத குறையாகத் தள்ளினான். "ஐ வான்ட் டு கோ டு பெட் க்ராம்பா". நாய் கூட என்னை வாலாட்டாமல் முறைத்தது.

பேரப்பிள்ளைகளைப் படுக்கையில் கிடத்திப் போர்த்துகையில், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் என் மகளிடம் நான் சொன்னது தெளிவாக நினைவுக்கு வந்தது. "சும்மா அடம் பிடிக்கக் கூடாது ரம்யா. அப்பாம்மா சொல்றபடி நடந்து சமத்தா படுத்து தூங்கினா எல்லாம் சரியாயிடும். சாயந்திரம் மெக்ரெனட் கேக் வாங்கிட்டு வருவேன்".

அரை மணிக்குப் பிறகு பெண் போன் செய்தாள். "அப்பா... ஹார்ட் அடேக் கொஞ்சம் மேஸிவ். ஆஞ்சியோ பண்ணப் போறாங்க.. அப்புறம் சரியாகலேன்னா சர்ஜரி.. பசங்களைப் பாத்துக்கப்பா. ரெண்டு பேருக்கும் மால்டோவா கொடு. ஆர்கேனிக் மில்க் இருக்கு பார். உனக்கு வச்சிருக்குற சாதாரண பாலில் கலந்துடாதே. கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க வந்துருவோம்".

"வந்து கூட்டிப் போறியா?". போனை வைத்துவிட்டாள்.

அரை மணிக்குப் பிறகு மாப்பிள்ளை மட்டும் அவசரமாக வந்தார். உடனே குளிப்பதற்காக மாடிக்குப் போனார். உடையணிந்து திரும்பி வந்து கிச்சன் பேன்ட்ரியிலிருந்து புரோடீன் பார் ஒன்றை எடுத்துக் கடித்தபடி ஆரஞ்சு ஜூஸ் குடித்தார். "தேங்க்ஸ் பார் டேகிங் கேர் ஆப் த கிட்ஸ் அங்கிள். நான் போய் ரம்யாவை அனுப்புறேன். எனக்கு ஏழு மணிக்கு மீடிங் இருக்கு"

"கோமதிக்கு எப்படி இருக்கு?"

"ஓ.. ஐ டோனோ.. ஷிஸ் ஃபைன் ஐ கெஸ்.. டாக்டருங்க பாத்துட்டிருக்காங்க.. ரம்யாக்கு விவரம் தெரியும்.. வரட்டுமா?".

'உனக்கு என் நிலை வரக்கூடாது மாப்பிள்ளை' என்று நினைத்துக் கொண்டது எனக்கே அசிங்கமாக இருந்தது.

    மூன்று நாட்களுக்கு மேலாக இன்டென்சிவ் கேரில் கிடக்கிறாள் கோமதி. தினம் அரை மணி நேரம் பார்வைக்கு அழைத்துப் போகிறாள் மகள். கோமதி இயற்கையில் அப்படியொன்றும் அழகில்லை. வாய்க்குள் ஒரு நீலக்குழாய் பொருத்தியிருந்தார்கள். புக் புக் என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். முகமெல்லாம் வீங்கியிருந்தது. அழுக்குச் சுருணை போல் எதையோ அவள் உடலில் போர்த்தியிருந்தார்கள். கால்களிலும் கைகளிலும் ட்யூப் செருகியிருந்தார்கள். முடியை வெட்டியிருந்தார்கள். கண்களை மூடியிருந்தாள். வாய் கோணியிருந்தது. என் கோமதி இப்போது அழகாகத் தோன்றினாள்.

ஆஞ்சியோ பலனளிக்கவில்லை. சர்ஜரி செய்தார்கள். ஸ்டன்ட் என்றார்கள், என்ன ஸ்டண்டோ! அடுத்த நாள் கிட்னி வேலை செய்யவில்லை என்றார்கள். ப்லூயிட் எல்லாம் உள்ளுக்குள்ளே தேங்கத் தொடங்கிவிட்டது என்றார்கள். அன்று சாயந்திரம் வலுவில் டயூரிஸிஸ் செய்வோம் என்றாகள். "அப்படின்னா?" என்றேன் மகளிடம். "மூத்திரம் உண்டாக்கணும்பா. நாட் எ பிக் டீல்" என்றாள்.

அன்று இரவு ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்தது. அவசரமாக ஓடினார்கள் மகளும் மாப்பிள்ளையும். "அப்பா.. ப்லீஸ் வீட்டுல இருப்பா. பசங்களைப் பாத்துக்க. நீ வேறே கிடந்து டென்சன் தராதே".

ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பினார்கள். "அப்பா.. அம்மாவுக்கு மிட்றல் வேல்வ் பழுதாயிருக்குப்பா. ஹார்டுலந்து ரத்த ஓட்டம் சரியா இல்லே. அதனால வேறே வேல்வ் பொருத்தப் போறாங்க"

"பிழைப்பாளா?" என்றேன், குரலில் நடுக்கத்தை மறைத்து.

"இதெல்லாம் சகஜம்பா. ஷி இஸ் ஃபைன்" என்றாள் மகள். "எதுக்கும் அண்ணா ரெண்டு பேத்துட்டயும் சொல்லிடுபா".

தில்லிக்கும் கொல்கத்தாவுக்கும் போன் செய்தாள். விவரம் சொன்னாள். இரண்டு மகன்களும் என்னுடன் பேசினார்கள். "நீ அமெரிக்கா போயிருக்கவே கூடாது. இந்த வயசுல உனக்கு அப்படி என்ன ஆசை? ஊர் ஒலகத்துல நான் அமெரிக்கா போய்ட்டு வந்தேன்னு பீத்திக்கணும்.. இப்ப பாரு.. யாரு அவஸ்தைப்படறது?" என்றான் மூத்தவன். அவனுக்கே அறுபது வயதாகப் போகிறது. எண்பது வயதுக்காரனை விரட்டினான். "அப்பா.. உனக்கு எதுவுமே தெரிய மாட்டேங்குது. வயசாயிடுச்சே தவிர அறிவு? இப்ப உன்னை அங்கே போகணும்னு யார் கேட்டாங்க?"

"அப்பா.. கவலைப்படாதே. அம்மாவுக்கு சரியாயிடும். அப்படியில்லேன்னா அங்கேயே எல்லாத்தையும் முடிச்சுடுபா. பாடியை இந்தியா எல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம். வேஸ்ட்" என்றான் இளையவன். எப்போதும் நேரடியாகப் பேசுகிறவன். "அப்பா, அம்மா.. நான் ஷிரீனைக் கல்யாணம் பண்ணிக்கபோறேன். ஜாதி லொட்டுன்னு சொல்லிட்டிருந்தா ரெண்டு பேரும் என் கல்யாணத்துக்கு வர வேண்டாம். வி டோன்ட் நீட் யூ பீபில்" என்று எங்களை ஐந்து வருடங்கள் புறக்கணித்தவன். "அப்பா.. உனக்கு எதுவுமே ஆவல பாரு.. நீ ஸ்ட்ராங்கா இருக்கே. அம்மாவுக்கு எல்லா சிக்கலும் வருது. குட். ஷி லிவ்ட் ஹர் பார்ட். ஜஸ்ட் செலப்ரேட் ஹர் லைப். பிழைச்சா சந்தோஷப்படுவோம்.. இல்லாட்டி இன்னும் சிரமப்படலியேனு நிம்மதியாயிருப்போம்".

எனக்குத் தைரியம் சொல்ல முன்வந்தார்கள் என்பது மட்டும் புரிந்தது. பள்ளி நாட்களில் இவர்களுக்கு நான் கணக்கு சொல்லிக் கொடுத்தால் அனியாயத்துக்குக் கோபப்படுகிறேன் என்று என்னைத் தடுத்து, கோமதி பாடம் சொல்லிக் கொடுப்பாள். "ஊர்ல தான் வாத்தி. வீட்டுல பசங்களுக்குச் சொல்லித் தரத் தெரியலே. என்ன பெரிய உத்தியோகம்?". அவள் தப்பாகச் சொல்லிக் கொடுத்ததை நான் திருத்துவேன். ஒரு முறை கணக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுத்தாள் பாருங்கள்.. தப்பாகச் சொல்லிக் கொடுப்பதிலும் உழைப்பு இருப்பதை அன்று புரிந்து கொண்டேன். விடுங்கள். எத்தனை தப்பாக இருந்தாலும் அவளைத்தான் கொண்டாடுவார்கள் பிள்ளைகள்.

அண்ணன்களுடன் நெடு நேரம் பேசிவிட்டு வந்தாள் மகள். தயங்கி, "அப்பா.. உன்னோட கேஷ் ஸிசுவேஷன் எப்படி இருக்குபா?" என்றாள். "அம்மாவோட மெடிகல் செலவு நிறைய ஆயிரும் போலிருக்குப்பா. உனக்காக வாங்கின இன்டர்நேஷனல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் செல்லாதுன்னுட்டாங்க. அண்ணா ரெண்டு பேர்கிட்டயும் அதிகம் பணம் இல்லே. பொண்ணு பிரசவத்துக்கு இப்பத்தான் செலவழிச்சேன்னு சொல்றான் பெரியண்ணா. த்ரீ லேக்ஸ் தரதா சொல்றான் சின்னண்ணா. இவருக்கும் பிசினஸ்ல கொஞ்சம் முடக்கம்பா. எங்கிட்டயும் அவ்வளவா பணமில்லே.."

விழித்தேன்.

"கவலைப்படாதப்பா.. உங்கிட்டே விஷயத்தை சொல்லணும்னு தான். பட்..எப்படியாவது பாத்துக்கலாம்.. இப்ப போய் படுத்து தூங்குப்பா" என்று அறைக்குள் ஒதுங்கினாள். நான் இரவு முழுதும் உறங்கவில்லை. "சம்பாதிச்சது எல்லாம் எதுக்குங்க. பசங்களுக்குத் தானே? பையன் டில்லிலே வீடு வாங்கறதுனா சும்மாவா? அம்பதாயிரம் உதவி பண்ணக் கூடாதா? கிறுஸ்தவளா இருந்தா என்ன? நம்ம மருமக. அவளுக்கு ஒண்ணுன்னா நம்ம பொண்ணுக்கு வந்த மாதிரி தானே? ஒரு லட்சம் தானே? வீட்டை வச்சுக் கொடுங்க.. இருந்திருந்து நம்ம பொண்ணுக்கு நல்ல வரன் வந்திருக்கு.. பத்து பவுன் இருவது பவுன்னு பாக்காதீங்க.. நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்.. வீடு போனா என்ன, வாடகை வீட்டுல இருந்துக்கலாம்.. பிஎப் எல்லாம் எதுக்கு வச்சிருக்கீங்க. எல்லாத்தையும் எடுத்துப் போட்டு கல்யாணத்தை முடிப்போம்".

    எட்டு நாட்களாக மாலை தவறாமல் பதினைந்து நிமிடம் என்னை அழைத்துப் போகிறாள் மகள். கோமதி கண் விழிக்கவில்லை. இன்னமும் இன்டென்சிவ் கேர். மிட்றல் வேல்வ் மாட்டினார்கள். பிறகு இன்டர்னெல் இன்பெக்சன் என்றார்கள். மூளை தசையெடுத்து சோதனை செய்தார்கள். எதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை என்று டாக்டர்கள் கன்னத்தில் விரல் தட்டிப் போலியாகக் கவலைப்பட்டார்கள். கிட்னி மறுபடி வேலை செய்யவில்லை என்றார்கள். ஜூனியர் மருத்துவர்களுக்கு வகுப்பெடுத்தார்கள். கோமதியை இஷ்டத்துக்குக் கோரப்படுத்தியிருந்தார்கள். எனக்கு இப்போது தான் அழகாகத் தெரிந்தாள்.

"பிழைப்பாளானு கேளேன்?"

"என்னப்பா இது? நாகரீகமே இல்லையா உனக்கு? பொழுது போகாமலா இத்தனை நாளா இத்தனை வைத்தியம் பாக்குறாங்க?"

"இல்ல ரம்யா.. கோமதியைப் பாரு. புக்கு புக்குனு பம்புல மூச்சு விடறாளேனு பாக்காதே. மனசுக்குள்ள இன்னமும் என்னைப் பத்தி நெனச்சுப் புலம்பிட்டிருக்கா. ஷி நீட்ஸ் ஸாலஸ்".

    பத்தாம் நாள் எங்களை அனுமதிக்க மறுத்தார்கள். "உங்க மனைவிக்கு இன்பெக்சன் த்ரெட். அவங்களோட இம்யூன் சிஸ்டம் கொலேப்ஸ் ஆகியிருக்கு. அதனால இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு பார்வையாளர் அனுமதி கிடையாது".

வீடு திரும்பியதும், "ஹார்ட் அடேக்னா.. இத்தனை நேரம் விஜயா ஆஸ்பத்ரிலே எல்லாம் சரி பார்த்து வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்கடி" என்றேன்.

மாப்பிள்ளை கிண்டலாக, "வயித்து வலின்னு போனா கூட விஜயாஸ்பத்ரிலே ஹார்ட் அடேக்னு வைத்தியம் பாத்து அனுப்பியிருப்பாங்க மாமா" என்றார்.

"ஏம்பா.. இவ்ளோ சின்சியரா எல்லாம் பாக்கறாங்க.. உனக்கு வேலிட் இன்ஷூரன்ஸ் கூட இல்லே.. அப்படியும் தே ஆர் கிவிங் ப்ரிமியம் கேர்.. கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம பேசுறியே?" என்றாள் மகள்.

"இட் இஸ் ஓகே அங்கிள். உங்க மனநிலை புரியுது" என்றார் மா. "ரம்யா, ஹி இஸ் ஜஸ்ட் வென்டிங். லெட் ஹிம்".

சாப்பிட்டபின் வழக்கம் போல் இந்தியாவில் பிள்ளைகளுடன் பேச்சு.

    மூன்று வாரங்களாகியும் கோமதி விழிக்கவில்லை. இப்போது பல்மொனெரி ஹைபர் என்று ஏதோ சொன்னார்கள். நுரையீரலில் மறுபடி ஏதோ திரவம் சேர்வதாகச் சொன்னார்கள். "ஹார்ட் அடேக் என்றால் வேஸலின் தடவி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் எங்கள் இந்தியாவில்.. எல்லாம் சரியாயிடும்.. இத்தனை வசதி படிப்பு என்று இருந்தும் கிட்டத்தட்ட ஒரு மாசமா இப்படி வறுத்தியெடுக்கறீங்களே.." என்றேன் தமிழில்.

"வாட் டஸ் ஹி ஸே?" என்றாள் நர்ஸ் என் மகளிடம். சிரித்தவாறே என்னை முறைத்தாள் ரம்யா.

வீடு திரும்பியதும், "அப்பா.. உனக்கு ஒண்ணுமே தெரியலே. சின்ன குழந்தையாட்டம் நடந்துக்குறே. அம்மாவுக்கு இப்படி ஆச்சுன்னா டாக்டருங்க என்ன செய்வாங்க? தெ ஆர் டூயிங் தெர் பெஸ்ட்"

"தெரியும்.. என்னை மன்னிச்சுரு செல்லம்" என்றேன்.

அருகில் வந்து என் தோளை அணைத்தாள் மகள். "அப்பா.. தப்பா நெனக்காதப்பா.. வீ ஆர் ரனிங் அவுட் ஆப் மனி.."

"யெட்.. ஷி இஸ் நாட் ரனிங் அவுட் ஆப் டைம்.." என்றேன் மெதுவாக.

"டோன்ட் பி எ சைல்ட்" என்றாள். என் மகள், என்னைக் குழந்தை என்கிறாள். "அப்பா, நிதி நிலவரம் எப்படி இருக்குனு கணக்கு போடலாம்பா. கடன் வாங்கணும்னாலோ எதையாவது விக்கணும்னாலோ அண்ணாவுக்கு போன் செய்யலாம்.. உங்கிட்டே பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு?"

"நான் வேணும்னா யாருக்கும் தெரியாம கோமதியோட ட்யூப் ரெண்டை நாளைக்குப் பிடுங்கி விட்டுறட்டுமா?" என்றேன் இயல்பாக.

"அப்பா.. என்ன உளறல் இது. ஆர் யூ டிமென்டெட்?

"இல்லடி.. இத்தனை செலவு பண்ணி வைத்தியம் பாத்து இவ எழுந்து வந்தா எப்படி இருப்பா? இப்பவே போன வார பஜ்ஜி மாதிரி இருக்கா. பிழைச்சு வந்தாலும் இவளோட லைப் எப்படி இருக்கும்? அதான்.. நான் வேணும்னா சட்டுனு யாருக்கும் தெரியாம ஒரு ட்யூபை இழுத்து விட்டுடறேனே..?"

"ஷடிட் டேடி. என்ன பேச்சு இது?"

"இல்லம்மா.. அவளுக்கும் நிம்மதி. காசுக்கேத்த வைத்தியம் பாத்தா போதும்"

"ஸ்டாப் இட் டேட். உனக்குத் தான் பைத்தியம் பிடிச்சிருக்கு" என்று விருட்டென்று எழுந்து போனாள் மகள். அண்ணன்களுடன் கதவடைத்து ஏதோ காரசாரமாகப் பேசுவது காதில் விழுந்தது.

    கோமதியை நினைத்துக் கொண்டேன். 'சனியன், சாக மாட்டியோ? கிடைச்ச சான்சுல போய்த் தொலையாம இழுத்துப் பிடிச்சிட்டிருக்கியே? எதுக்கு? பிழைச்சு வந்து மறுபடி புலம்பி என் உயிரை வாட்டப் போறியா? ஹ்ம்.. கவலைப்படாதே. எதையோ சொல்லி எதையோ செய்து எப்படியோ புரட்டி உன் பிள்ளைகள் உனக்கு வைத்தியம் பார்ப்பார்கள். அப்பா அம்மா என்ற கடமை அவர்களுக்கு. இன்னும் இரண்டு வாரமோ ஒரு மாதமோ அமெரிக்க டாக்டர்கள் வைத்தியம் பார்ப்பார்கள். ஒரு வேளை நீ பிழைத்து வரலாம். ஒரு வேளை நாம ரெண்டும் பேரும் இந்தியா கூடத் திரும்பலாம். அங்கே உன்னை என்னால் பார்த்துக் கொள்ள முடியாமல் போனால்? அட, அங்கே போனதும் எனக்கு ஏதாவது ஆகி.. விஜயாஸ்பத்ரி கூட போக முடியாது போனால்?'

திடீரென்று உறைத்தது. எங்கள் விருப்பம் என்று இனி எதுவும் வாழ்வில் இல்லை. என் வாழ்வில் எனக்கிருந்த பிடிப்பு, என்று எந்தக் கணத்தில் இளகி விலகியது என்று நினைத்துப் பார்க்கிறேன். சரியாகப் புரியவில்லை. மங்கலாகவே இருக்கிறது.

உறக்கம் வராமல் அன்றும் படுத்த போது, தினம் கோமதி கரைந்தது.. இல்லை, தேனொழுகப் பாடியது.. நினைவுக்கு வந்தது.
..மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்..

2013/12/26

சந்தேகம் - தீராத நோய்


    ன் நோயைத் தீர்த்து வைக்க யாருமேயில்லையா..?

1. காட்சியில் நின்றுகொண்டிருக்கும் சீருடைச் சிப்பந்திகளை அசைந்தால் சுட்டுவிடுவதாக மிரட்டியிருப்பார்களோ?
2. ஏறக்குறைய ஒரே கலர், டிசைனில் புடவை அணிய இரண்டு பெண்களும் எப்படிச் சம்மதித்தார்கள்?
3. காட்சியின் இறுதியில் ஒரு பெண்மணி ஏதோ தேடுகிறாரே, டிபன் ரெடியாகவில்லை என்ற கலக்கமா?
4. சிவப்பு சாக்ஸ் அணிந்து அதை உயர்த்திக் காட்டும் துணிச்சல் எம்ஜிஆருக்கு மட்டும் தான் வருமா?
5. நிர்மலா ஆடுவது டான்ஸா உடான்ஸா?
6. பாடலுக்கான குரல் ஜானகியுடையது என்று வருடக்கணக்கில் நினைத்திருந்தேனே.. இப்போது என்ன செய்வது?




2013/12/24

பேயாள்வான் புராணம்

2

1





    தி என் கைகளைப் பிடிக்க விரைந்தான். அவன் முகம் வெளிறிப் போயிருந்தது, இருளில் தெளிவாகத் தெரிந்தது.

"ஓ, நோ!" என்று ஒதுங்கினான். குதறப்பட்டுச் செத்துக் கிடந்த ஏதோ மிருகத்தின் மேல் கால் பதித்து, அந்தக் கரடுமுரடான வழுக்கலில் தடுமாறினான். "வாட் இஸ் திஸ் ப்லேஸ்? எப்படி இங்கே வந்தேன்? ஹேய் மேன்.. யார் நீ?". என்னைப் பிடிக்க முயன்றான்.

"நானும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.."

"சிரிக்காதே சூனியக்காரா.. இது என்ன இடம்? யாருடைய கனவு?"

"எல்லாமே நம் கனவு. எல்லாமே நம் நனவு. இந்தக் கணத்தின் இந்த அனுபவம் மட்டுமே நம் நிஜம்"

"வாட் டு யூ மீன்?"

"மாயாமயம் இதம் அகிலம்"

"அப்படினா?"

"சொல்லிக் கொடுக்கலியா? உங்கப்பாம்மா என்னதான் செஞ்சாங்க?"

"எங்கம்மா சாப்பாடு போட்டாங்க... எங்கப்பா சத்தம் போட்டாரு... ஸ்டுபிட்.. ஸே..அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? லெட் மி அவுட்"

"உட்புகுந்தவன் வெளியேறத் தவிக்கிறான்.. வெளிவந்தவன் உட்புகத் துடிக்கிறான்.. இது கவிதையா நீதியா?"

ஆதி பதில் சொல்லவில்லை. வயதுக்கு மீறிய கேள்வியோ என்று நான் எண்ணுகையில் அவன் திடுக்கிட்டுத் தொடர்ந்து அலறினான். எங்களுக்கு அண்மையில் ஒரு உருவம் வெறியுடன் ஓடியது. உருவத்தின் கையில் வீச்சறிவாள். உருவத்தின் முகம் மனித முகமல்ல. கழுதை முகம். ஹீர்ஹீர் என ஆவேசமாக ஊளையிட்டவாறு அறிவாளை ஓங்கியபடி ஓடியது. எனினும் எதிர்விசை போல் அதன் வேகம் எனக்கும் ஆதிக்கும் மிகத் தாமதமாகப் பட்டது. எங்களைக் கவனிக்காமல் ஓடிக்கொண்டிருந்த உருவத்தை நாங்கள் துல்லியமாகக் கவனிக்க முடிந்தது. வெறித்தனமான அதன் மூச்சொலி பஞ்சழுத்திய இடியாக ஒலித்தது.

ஆதி நடுங்கினான். "யாரிது.. கண்ணெதிரே தெரிந்தும் நம்மைக் கவனிக்காமல் ஓடுகிறதே..றானே?"

"கண் இருக்குங் காரணத்தால் எல்லாரும் பார்க்கிறார்கள் என்ற பொருளில்லை"

"உன்னுடைய புதிர்ப் பேச்சில் பன்றிகள் மூத்திரம் போகட்டும்.. ப்லீஸ் ஆன்ஸர் மி. இவன் முகம் இத்தனை குரூரமாக இருக்கிறதே.. கழுதை முகம்.. அதில் இத்தனை ஆத்திரம்.. எங்கே ஓடுகிறான்..? ஓடுகிறது..?"

"வா.. பின் தொடர்ந்து பார்க்கலாம்"

"நோ. இருக்கட்டும், உருவத்தின் வேகம் நமக்கு ஏன் உறைக்கவில்லை?"

"உருவம் யுகக்கணக்கில் ஓடுகிறது.. நீ நொடிக்க்கணக்கில் பார்க்கிறாய்.. இணையுலகங்களின் நாற்சந்தி.. புரிகிறதா..? உன் எஞ்சினியரிங் மூளைக்கு இதெல்லாம் விளங்க வேண்டுமே?"

"திஸ் இஸ் சர்ரியல்.. என் மனதை கெடுத்திருக்கிறாய்.. யூ ஹவ் ஃபக்ட் மை மைன்ட் வித் தட் டோப்.. யூ பீஸ்ட்.. என்ன கலந்தாய் அதில்?". என் மேல் எரிச்சலோடு பாய்ந்தான். நான் நகர்ந்து சிரித்தேன். அவன் தடுமாறி விழுந்து மண்ணின் மிருக ரத்தக் கலப்பில் நனைந்தான். நெருப்பில் விழுந்தது போல் எழுந்தான். உடலெங்கும் ஒட்டிப் பரவிய ரத்தம், அவன் தட்டத் தட்டத் தெறித்தது. படபடத்தான். ஆத்திரத்துடன் மறுபடி என் மேல் பாய்ந்து விழுந்தான். இந்த முறை எழுந்த போது அவன் உடலில் ஆங்காங்கே பூரான்களும் அட்டைகளும் நட்டுவாக்களிகளும் தேள்களும் சிறு பாம்புகளூம் ஒட்டியிருந்தன. சரசரவென ஊர்ந்தன. பயத்தின் உச்சத்தில் துள்ளிக் குதித்து தட்டியெறிய முற்பட்டான்.

"ஆதி!" என்று உறுமினேன். "உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது. என் சொற்படி நடந்தால் உனக்கு நல்லது.. இந்தப் பிரதேசத்தில் என்னை விட்டால் உனக்கு நாதி கிடையாது" என்றேன், குரலில் காட்டத்துடன். நடுங்கிவிட்டான். குழந்தை. பாவம். பூ என்று ஊதினேன். அவன் உடலில் ஒட்டிய ஜந்துக்கள் விலகிச் சிதறின. அவன் கண்களின் பீதி அடங்கியது. என்னை நன்றியுடன் பார்த்தான். அவனைக் கனிவுடன் பார்த்தேன். பாவம், எனக்கும் இவனைத் தவிர யார் இருக்கிறார்கள்?!

"இந்த மிருகம் யாரென்றாயே? இவன்.. உன் தந்தை" என்றேன்.

"ஸ்டாப் இட்.. ப்லீஸ்.. இந்த மிருகம் எப்படி என் தந்தையாகும்?" என்றான் தயங்கி.

"உருவங்கள் உருவகங்கள். உருவகங்கள் உருவங்கள்"

"வாட் த ஃபக் ஸபோஸ்டு மீன்?"

"தந்தை மிருகமானால் மிருகம் தந்தையாவதில் என்ன அதிர்ச்சி?"

"ஸ்டாப் இட். ஸ்டாப் இட். ஸ்டாப் ஃப்கிங் வித் மை மைன்ட்.. ப்லீஸ் உன்னைக் கெஞ்சுகிறேன்.. நான் மிகவும் இளையவன்.. ஆள் இப்படி வளர்ந்திருக்கிறேனே தவிர எனக்குப் பயம் அதிகம்.. என் அம்மாவின் துணையில்லாமல் நிறைய நாள் எனக்கு தூக்கமே வராது.. ப்லீஸ்.. என்னை என் இடத்துக்கு அழைத்துப் போ" என்று அழத் தொடங்கினான்.

சட்டென்று அவன் கால்களில் விழுந்தேன். "அழாதீர்கள் தலைவா! என் விக்ரமரா அழுவது? என்னை மன்னியுங்கள்.. போய்விடலாம் வாருங்கள்" என்றேன் நடுக்கத்துடன்.

விக்கிரமனுக்கு ஆத்திரம் வந்தால் காடு தாங்காது. பார்த்திருக்கிறேன். இந்த அழுகை எல்லாம் நடிப்பு. அவனுடைய அம்மாவிடம் கற்றது. சாகசம். விக்கிரமனுக்காவது பயமாவது? அவனை நன்கறிவேன்.

சொகுசு நாற்காலியில் சரிந்து வசதியாக உட்கார்ந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். "இது உன் வீடா?"

"உன் வீடாகவும் இருக்கலாம்"

"உனக்கு நேராக பதில் சொல்ல வராதா, தெரியாதா? சாதாரணக் கேள்வி. உன் வீடானு கேட்டா ஆமா இல்லேனு ஒரு பதில் சொல்லக் கூடாதா?"

"சாதாரண பதிலைப் பெறக் கேள்விகள் தேவையில்லை. சாதாரணக் கேள்வி என்று எதுவுமே இல்லை விக்ரமா.. மறந்து விட்டாயா?"

"என்னை ஏன் விக்ரமானு கூப்பிட்டிருக்கே? ஹூ இஸ் தட் பர்சன்? என்னைப் பார்த்தா உனக்கு விக்ரமா போல இருக்கா? ஹூ இஸ் ஹி? உன் காணாமல் போன மகன் யாராவது"

"காணாமல் போன என்பது உண்மை.. எனக்கு நானே மகன், நானே தந்தை.. உன்னை விக்கிரமன் என்பதன் காரணம் நீ விக்கிரமன் என்பதே"

"தேர் யு கோ எகெய்ன். ஸ்பெகெடி ஸ்டேட்மென்ட்ஸ். என்னை ஏன் தொடர்ந்து வரே? நான் ஏதோ என் கவலைகளை மறக்கக் கொஞ்சம் குடி சிகரெட்னு இருந்தா யு ஹவ் டேகன் ஓவர் மி.. மை மைன்ட்..யு" என்றபடிச் சரிந்தான்.

தேநீரில் சிறிது எலுமிச்சை சாறும் ஒரு சொட்டு இஞ்சிச்சாறும் கலந்து கொடுத்தேன். பார்த்துக் கொண்டிருந்தான். "குடி" என்றேன்.

"லுக்ஸ் ஓகே. ஆபத்தில்லையே?" என்றபடி மெள்ள அருந்தினான். அவன் தோள்களைப் பிடித்து விட்டேன். "உனக்கு என்ன கவலை?"

"உன் கிட்டே எதுக்கு சொல்லணும்? ஹூ ஆர் யூ?"

"நீ யாரோ நான் யாரோ.. இன்னொரு பார்வையில் நீ வேறோ நான் வேறோ?"

என்னை ஆழமாகப் பார்த்தான். "ஓகே.. சொல்றேன். உன்னைப் பார்த்தால் என் மனதைக் கொட்டத் தோணுது. நீ என்ன எனக்கு உறவா முறையா எதுவும் இல்லே.. ஸ்டில் யு இன்ஸ்பைர் ட்ரஸ்ட்.. உன்னை நம்ப முடியுது" என்றபடி எழுந்து என்னருகே வந்து நின்றான். "யு ஸீ.. மைன் இஸ் எ டிஸ்பங்ஷ்னல் பேமிலி.. எல்லாத்தையும் போல எங்க வீட்லயும் அப்பா அம்மா தாத்தா பாட்டி மாமா அத்தை அண்ணா அக்கா தம்பி எல்லாம் உண்டு. பட் வி வேர் நெவர் எ பேமிலி. எதுக்கு ஒண்ணா இருக்கோம்னு தெரியாம இருந்தோம். ஒரு நாள் எங்கப்பாவுக்கு திடீர்னு பைத்தியம் பிடிச்சிருச்சா என்னான்னு தெரியலே.. எங்களை அம்போனு விட்டுக் காணாமப் போயிட்டாரு. ஏற்கனவே எங்கப்பா ஒரு எக்சன்ட்ரிக், இதுல என்னவோ அவருடைய மேனேஜர் மேலே இருந்த இனம் புரியாத கோவத்துல வேலைய விட்டு.. எங்களை விட்டு.. ஏதோ கோவிலுக்கு சாமியாராப் போறேன்னு கிளம்பினதும்..

..எங்கம்மா எங்களைப் படிக்க வைக்க ஏறக்குறைய மூட்டை சுமக்குற நிலமையாயிடுச்சு. எங்கம்மாவுக்கு சல்லிக் காசு கிடையாதுனு காரே பூரேனு கத்திட்டு ஓடிட்டாரு அப்பா. வி ஹட் நோ மனி. "பிச்சைக்கார நாயுங்க. பசிச்சா பீத்தின்ன வரும்"னு எங்க தாத்தா எங்களைப் பத்தியே சொன்னதா கேள்விப்பட்டதும் எனக்கு அந்த ஆள் மண்டையை ஆணியாலக் குடையணும்னு வெறி. ஸச் அன்கல்சர்ட் ப்ரூட். பட், ஐ லெட் ஹிம் கோ. நான் இங்கே காலேஜில் படிச்சிட்டிருந்தேன். என் கர்ல் ப்ரன்ட் ந்யூயோர்க்ல படிச்சா. அவளுக்காகத்தான் நான் இங்கே தங்கினேன். இல்லையின்னா எங்கம்மாவுக்கு ஹெல்ப் பண்ண அவங்க கூட தங்கியிருந்திருப்பேன்..

..படிக்குறப்ப அவ அடிக்கடி இங்கே வருவா, நான் அடிக்கடி அவ இடத்துக்குப் போவேன். வி வர் இன் லவ். கடைசி வருஷம் முடிச்சு வால் ஸ்ட்ரீட்ல இன்டர்னுக்காக போறேன். அவ கிட்டே சர்ப்ரைசா சொல்லணும்னு போனா.. அவ ரூம்ல ரெண்டு ஆம்பிளைங்களோட அம்மணமா.. ஐ வாஸ் ஹார்ட் ப்ரோகன். பள்ளிக்கூட நாள்லந்து என்னோட வளந்தவ, ஷி ஸ்லெப்ட் வித் மி லாயலி, எப்படி என்னை ஏமாத்த முடிஞ்சுது...? எனக்கு வால் ஸ்ட்ரீட் வேலைல இஷ்டம் இல்லே.. திரும்ப பி எச்டி பண்ண இங்கயே வந்துட்டேன்..

..எங்கப்பா அம்மா குடும்பத்தோட தொடர்பு அறுத்துக்கிட்டேன்.. எல்லோரையும் வெறுத்தேன்.. என் ஆராய்ச்சிகளில் தடுமாறத் தொடங்கினேன்.. புரபசருடன் பழகியதில் லேசாக கஞ்சா பழக்கம் உண்டானது.. சில்லறையாகத் தொடங்கிய கடன் பழக்கம் கணிசமான தொகைகளாக மாறி என்னை நெருக்கத் தொடங்கியது" என்றவன், சற்றுத் தயங்கி அழத் தொடங்கினான். "நேற்று முதல் முறையாகத் திருடினேன்.. லுக் அட் மி.. பி எச்டி கேன்டிடேட், மேல்கம் மன்ரோ ஸ்காலர், நான் ஒரு சில்லறைத் திருடன்.. என் வாழ்க்கை ஏன் இப்படி மாறியது? எனக்கு இருந்த கர்வம், துணிச்சல், அறிவு, தன்னம்பிக்கை எல்லாம் எங்கே போனது? யாரைப் பார்த்தாலும் கோபம் வருகிறது.. என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை.. சிறு குப்பை சமாசாரங்களுக்கும் என் அப்பாவைப் போல் கொலை ஆத்திரம் வருகிறது.. என்னுடைய ஆத்திரமும் இயலாமையும் என்னை ஒரு கோழையாக்கி வருகின்றன.. இந்த நிலையில் எனக்கு அவளைக் கொலை செய்ய ஒரு வெறி.. அடங்காத வெறி.. என்னை ஏமாற்றிய அவள் புழுத்து நெளிய வேண்டும்.. அவளை என் கையால்.. கடன் கொடுத்தவர்கள் நெருக்குகிறார்கள்.. திருடியது தெரிந்துவிட்டால்.. ஐ'ம் ஸ்கேர்ட்.. மை லைப் இஸ் ரூயின்ட்.. எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டேன்!" என்று அழுதான். வெட்கமில்லாமல் என்னிடம், "ஒரே ஒரு சிகரெட் இருந்தா தரியா, ப்லீஸ்?" என்று கெஞ்சினான்.

"இந்தா!" என்று அவன் முகத்துக்கு எதிரே கை நீட்டினேன். அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் கண்களில் என் விரல்களால் குத்தினேன். "ஐயோ! உன்னை நம்புறேன்னு சொன்னதுக்கா?" என்று முகத்தைப் பிடித்தபடி அலறினான். அவன் இடுப்பை ஒரு சுழற்று சுழற்றிக் காற்றில் உயர எறிந்தேன். அந்தரத்தில் தாறுமாறாகச் சுற்றி விழுந்தான். "ஏய்.. சிகரெட் கேட்டால் ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று அலறினான். "ஐயோ.. அம்மா.. என்னைக் காப்பாத்தும்மா!"

"சீ! கோழை!" என்று அவன் மேல் எஞ்சியிருந்த சுடு தேனீரை எறிந்தேன். மறுபடி அலறினான். "என்னைப் போக விடு.. எனக்கு சிகரெட் வேண்டாம். ப்லீஸ்.. அம்மா.." என்று எழுந்து வாயிலை நோக்கி ஓடினான். "ஆதித்யா!" என்று கர்ஜித்தபடி அவன் மேல் மோதினேன். நிலைகுலைந்தான். "உனக்கு உன்னை அடையாளம் காட்டுவதே எனக்குப் பிறவி வழக்கமாகி விட்டது" என்றேன். "ப்லீஸ்.. என்னைத் துன்புறுத்தாதே.. நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்" என்ற அவன் கேவலில் எனக்கு ஒரு பரிதாபமும் பிறக்கவில்லை. அவனை இழுத்துக் கொண்டு முப்பது மைல் வேகத்தில் எதிர் சுவற்றில் மோதினேன்.

"ஷ்!" என்று என்னை அடக்கினான். "அதோ பார்.. அதே கழுதை முக உருவம்!"

"என்னால் நான்கு திசைகளிலும் பார்க்க முடியும்" என்றேன்.

"நோ ஷிட்!" என்றான். அவன் கண்கள் சற்று அண்மையில் எதிரே தெரிந்த காட்சியில் பதிந்தன.

எங்கள் எதிரே ஆசிரமம் போல் ஒரு அமைப்பு. ஒன்றிரண்டு குடிலகள். ஒரு யாக மண்டபம். ஆங்காங்கே மூங்கில் கழிகளைச் சுற்றிய பூங்கொடிகள். காட்டின் அடர்த்தி நிலவின் வெளிச்சத்தைக் கட்டியது. யாக மண்டபத்தின் முகப்பில் ஒரு மூங்கில் பாயில் ஒருவர் தியானத்தில் போல் அமர்ந்திருந்தார். எதிரே இருந்த குடிலில் சிறு அகல் விளக்குகள். மண்டபத்தின் பின்னால் ஒரு இளங்கன்றின் இடைவிடாத தலையசைப்பின் மணியொலி. விட்டெழுந்த மாஆவ். பொழுது விடியப் போகிறதா? ஆ! சுற்றிலும் பார்த்தேன். எதிரே ஆலமரத்தில் தொங்கிய சடலம் ஒன்றின் கண்கள் பசுமையாக மின்னின.

இவை எல்லாவற்றையும் என்னுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ஆதி. "ஏனோ எனக்கு இப்போது பயம் இல்லை!" என்றான்.

அவன் சொன்ன அதே கணத்தில் வேகமாக உள்ளே ஓடி வந்த கழுதை முக உருவம், தியானத்தில் இருந்தவரின் தலைமுடியை ஒரு கையால் இழுத்து உயர்த்தியது. இன்னொரு கையில் இருந்த வீச்சறிவாளால் கழுத்திலிருந்து தலையைச் சீவியெறிந்தது. சீவிய வேகத்தில் சுற்றத் தொடங்கிய தலை கீழே விழுந்தும் சுற்றிப் புரண்டு சில நொடிகள் துடித்து நின்றது. உருவமோ ஹீர்ஹீர் என்று ஊளைக்கும் அலறலுக்கும் இடையிலான ஒலியெழுப்பி, எதிரே இருந்த குடிலுக்குள் நுழைந்தது. கூரையிலிருந்து மிக வேகமாக வெளியே வந்த அழகான அலங்காரம் மிகுந்த ஒரு பெண், அலட்சியமாகக் காற்றில் பறந்து சென்றாள். சற்றுப் பொறுத்து கழுதைமுக உருவம் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்து வெறியோடு ஓடத் தொடங்கியது. குடில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. திடீரென்று கேட்கத் தொடங்கிய ஒரு குழந்தையின் அழுகை ஒலி, மெள்ளத் தீயுடன் அடங்கியது.

"என்ன விக்கிரமரே.. இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றேன்.

"மை குட்னெஸ்.. ரெண்டு நிமிஷத்துக்குள்ள என் இதயமே நின்னுடுச்சு" என்றான். "இது என்ன இடம்? யார் இந்த கழுதை முக உருவம்? அடிக்கடி தென்படுவானேன்?"

"கழுதை முகம் கொண்டவர் உன் தந்தை"

"நோ. இதை நீ முதலில் சொன்ன போதும் நம்பவில்லை. என் அப்பா ஒரு கழுதையா?"

"விவரமாகச் சொல்கிறேன். அந்தரத்தில் பறந்து ஓடியவள் உன் தாய். தியானம் செய்து கொண்டிருந்தவருடன் கள்ளத்தனமாக உறவு கொள்ள வந்தாள். அது தெரிந்து உன் தந்தை இருவரையும் கொல்ல வந்தார். உன் தாய் தப்பித்து விட்டாள்"

"கெட் அவுட். இதென்ன பிதற்றல்? ஏன் இப்படிச் செய்கிறாய்? என்ன காரணத்துக்காக என்னை இங்கே அழைத்து வந்தாய்?"

"உன் பாட்டனாரை நீ சந்திக்க வேண்டாமா விக்கிரமா?"

"வாட்? என் பாட்டனாரா? யு மீன் தாத்தா? உனக்கு அவரை எப்படித் தெரியும்?" அவன் கேள்வியின் குழப்பம் கண்களிலும்.

"யக்ஞேந்திரனைத் தெரியாதவர் உண்டா?" என்றேன்.

2013/12/21

அஞ்சாத சிங்கம்


    ந்யூயோர்க் கவர்னர் என்றால் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது யார்?

நினைவுக்கு வந்தவரை அங்கேயே சற்று நிறுத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்களேன், ப்லீஸ்.

இவன் பெரோஸ்பூரில் பிறந்த பிள்ளை. இரண்டு வயதில் அப்பா அம்மாவோடு அமெரிக்கா வந்தான்.

ந்யூஜெர்சியில் நடுத்தரமாக வளர்ந்த சாமானியன். இளைய வயதிலேயே குறிக்கோள் என்றால் என்னவென்று ஆசிரியர்களுக்குச் சொன்னவன். மிகச் சிறந்த மாணவர்களில் மிகச் சிறந்த ஒருவருக்கே கிடைக்கக்கூடிய பட்டமளிப்பு விழாவின் முதன்மை கௌரவத்துடன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தான். வேலடிக்டூரியன். ஆனால் இந்தக் கௌரவம் எல்லாம் சாதாரணம் என்பது உலகத்துக்குத் தெரியாது. ஹார்வர்டில் பட்டப்படிப்பு, தொடர்ந்து கொலம்பியா சட்டக்கல்லூரியில் மேல்படிப்பு முடித்து பிரபல ந்யூயோர்க் செனெடர் சக் சூமருக்கு உதவியாகத் தொடங்கி படிப்படியாக முன்னேறினான்.

தொடக்கத்தின் கேள்விக்கு வருகிறேன். இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் ரூடி ஜூலியானி என்ற பதிலே கிடைக்கும். அதற்குக் காரணம் உண்டு. ரூடி ஜூலியானி, ந்யூயோர்க் மட்டுமல்ல அமெரிக்காவின் சிறந்த கவர்னர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கருதப்படுவார். கவர்னராக இருந்த போது அவர் மக்களுக்கு செய்தது என்னவோ சாதாரணம். ஆனால் அயோக்கிய அல்கேதா, செப்டெம்பர் 2011ல் ந்யூயோர்க்கை நாசமாக்க முனைந்த போது தன் மேலாண்மை தலைமை எல்லாவற்றையும் பட்டை தீட்டி ந்யூயோர்க் நகரம் மீண்டும் தன் காலில் மீண்டும் நிற்க முன்மாதிரியாக இருந்தவர். அதைத் தொடர்ந்து ந்யூயோர்க் நகரில் தீவிரவாதிகளின் அடாத தொந்தரவுகள் இருந்தாலும் தீவிரவாதத்துக்குப் பணிய மாட்டோம் என்ற விடாத தீர்மானத்தையும் தன்னம்பிக்கையையும் நகர கலாசாராமாக்கியவர். இதான் ஜூலியானி.

பெரோஸ்பூர் பிள்ளை ஒன்றும் லேசுபட்டவனல்ல.

இத்தாலிய மாபியா பற்றி எல்லாருமே அறிவார்கள். அமெரிக்காவின் கேம்பினோ மாபியா குடும்பம் பற்றிப் படித்தால் குலை நடுங்கும். நூறு வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு அமெரிக்காவை ஆட்டிவைத்த கொலைகார குற்றவாளிக் குடும்பம். அதன் அட்டூழியம் அடங்கிவிட்டது என்று இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நிறைய பேரை உள்ளே தள்ளி கேஸ் மேல் கேஸ் போட்டாலும் இழுத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். நம்ம பெரோஸ்பூர் பிள்ளை, வெளியே இருந்து உதவி வந்த இருபத்தாறு சக்தி வாய்ந்த மாபியா ஆசாமிகளை உள்ளே தள்ளினான். புது அரெஸ்டையும் பழைய அரெஸ்டையும் இணைத்து அத்தனையும் ஒட்டு மொத்தமாக உள்ளே தள்ளினான். கேஸ் வெற்றிகரமாக முடிந்து குற்றவாளிகள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து யாரும் பெரோஸ்பூர் பிள்ளைக்கு ஒரு வாழ்த்து சொல்லவில்லை.

"நான் என்ன கோலி விளையாடறவனையா பிடிச்சு வந்து போட்டிருக்கேன்? சாராயம் காய்ச்சுறவனை பிடிச்சு உள்ளே போட்டிருக்கேன்.. கள்ளச் சாராயம் மேன்?"

ரஜத் குப்தா. உலகப் புகழ் பெற்ற மெகின்ஸி நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர். மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சேக்ஸின் போர்ட் மெம்பர். சில்லறைக் காசுக்கு ஆசைப்பட்ட நிழல் ஊழல் பேர்வழி. யாராலும் தொடமுடியாது என்று நினைத்து சின்னதும் பெரியதுமான ஊழல்கள் செய்தவரை பச்சக் என்று பிடித்து உள்ளே போட்டான் பெரோஸ்பூர் பிள்ளை.

அனில் குமார் என்று மிகப்பெரிய பொறுப்பில் இருந்த இன்டெல் விஞ்ஞானி. நம்ம நாட்டு ஆசாமி. பொன், பெண் என்று இரண்டு ஊழலுமே உண்டாம். பங்கு மார்கெட்டில் செய்த ஊழலைக் கண்காணித்து அவனையும் உள்ளே தள்ளினான் பெரோஸ்பூர்.

இலங்கையின் சூது மன்னன் தமிழன் ராஜரத்னம். பிலியன் கணக்கில் ஊரை ஏமாற்றியவன். அவனை உள்ளே தள்ளுவதில் குறியாக இருந்து வெற்றி பெற்றான் பெரோஸ்பூர் பிள்ளை. ரஜத் குப்தா, அனில் குமார் மற்றும் கூட்டாளி ராஜரத்னம் எல்லாரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தர்மம் வெல்லும் என்ற பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவில் இருந்து யாரும் வாழ்த்து அனுப்பவில்லை.

மடியிலேயே கை வைக்குமா பிள்ளை? வைத்தது. தவறாக இருந்தால் எந்த மடியாக இருந்தால் என்ன? ந்யூயோர்க் மாநில செனெடர்கள் மூவரை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து நிரூபித்து மக்களை ஏமாற்றியக் குற்றத்துக்காக ஏழு வருடம் உள்ளே தள்ளினான் பிள்ளை. தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் என்ற பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவில் இருந்து யாரும் ஒரு வாழ்த்து கூட அனுப்பவில்லை.

அபுதுல்வாலி, பெய்சல் ஷசாத் போன்ற அல்கேதா ஹெஸ்புல்லா தீவிரவாதிகளைக் கொஞ்சம் கூட பிசகாமல் விவரங்களை வரிசையாக அடுக்கி வழக்கு போட்டு உள்ளே தள்ளினான் பெரோஸ்பூர்.

"தீப்பெட்டிக்கு ஒரு பக்கம் உரசினாத்தான் தீப்பத்தும். இந்த பெரோசுக்கு எந்தப்பக்கம் உரசினாலும் பத்திக்கும்"

வேலியே பயிர் மேய்வதைப் பார்த்து நிற்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. நமக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது. நாம் இந்தியர்கள். பெரோஸ்பூர் கொஞ்சம் வித்தியாசமானவன். ந்யுயோர்க் போலீஸ்காரன் ஒருவன் பெண்களைக் கடத்தி அவர்களை வெட்டித் துண்டு போட்டு சமைத்து சாப்பிடப் போவதாகப் பொதுவில் அறிவித்ததும் ஊரெல்லாம் பீதி. அவனை மிகச் சாதுரியமாக மிக விரைவில் பிடித்து உள்ளே தள்ளியவன் நம்ம பெரோஸ்பூர். பிடிபட்ட போலீஸ்காரன், "நான் சொன்னது எல்லாம் சும்மா ஸ்டன்ட். எனக்கு செல்வாக்கு இருக்கு.. வெளில வந்து உன்னை ரெண்டு பண்ணிடுவேன்" என்றபோது பெரோஸ்பூர் பிள்ளை லேசாகச் சிரித்து அவனை 'சரிதான் போடா' என்று நிரந்தரமாக உள்ளே தள்ளினான். "பொது மக்களுக்கு ஊழல் பேர்வழிகளால் ஆபத்து.. தீவிரவாதிகளால் ஆபத்து.. உன் போன்ற முட்டாள்களாலும் ஆபத்து" என்றான். இந்தியாவில் இருந்து அவனுக்கு ஒரு வாழ்த்தும் வரவில்லை.

பெரும் பணமுதலையான பேங்க் ஆப் அமெரிக்கா, வீட்டுக்கடன் ஊழலில் பிலியன் கணக்கில் திருடியதை கொஞ்சம் கொஞ்சமாக அடுக்கி நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்தான் பெரோஸ்பூர். இந்த ஒரு வழக்கில் மட்டும் இவன் உயிருக்கு எத்தனை ஆபத்து வந்திருக்கும் என்று என்னால் சுமாராகக் கணிக்க முடிகிறது. பெரோஸ்பூரா பயப்படுவான்? அஞ்சாத சிங்கம் என் காளை. அத்தனை பேரையும் உள்ளே தள்ளி பிலியன் கணக்கில் அபராதம் வசூலித்தான். இந்தியாவிலிருந்து ஒரு வாழ்த்து கூட.. இல்லை, வரவில்லை.

அப்பேற்பட்ட ரூடி ஜூலியானியின் இடத்தில் இருந்து கொண்டு இத்தனை சாதனைகளையும் வரிசையாக ரஜினிகாந்த் கண்ணாடி சுழற்றுவது போல் சர்வ சாதாரணமாக செய்து வருகிறான் பெரோஸ்பூர் பிள்ளை. ரூடியைப் போலவே இவனும் அடுத்து ந்யுயோர்க் கவர்னராகலாம் என்கிறார்கள். ஆகட்டும்.

ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் பற்றி ந்யூஜெர்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். உலக இசை ரசிகர்களுக்கும் தெரியும். இது ப்ரூஸ் பாடிய பாட்டு:Send the robber barons straight to hell. ஒரு நிகழ்ச்சியில், பாடலை பெரோஸ்பூர் பிள்ளைக்கு சமர்ப்பணம் செய்தார் ப்ரூஸ். கூட்டம் பித்தானது. ரஜினிகாந்த் படத்துக்குக் கூட இத்தனை விசில் கிடைத்திருக்காது. அமெரிக்காவின் பெருமை இந்தப் பெரோஸ்பூர் பிள்ளை.

ஊழலும் குற்றமும் புரிந்தால் தப்பிப்பது கடினம் என்று சமீபமாக நினைக்க வைத்த நகரம் ந்யூயோர்க். அதற்குக் காரணம் நம்ம பெரோஸ்பூர் பிள்ளை. சிகாகோ வாசிகள் தங்களுக்கு ஒரு பெரோஸ்பூர்க்காரன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கினார்கள். ஏங்குகிறார்கள். ஏங்குகிறார்.

Times பத்திரிகையின் 100 most influential people in the world பட்டியலில் இடம்பெற்ற பிள்ளை. இன்டியா அப்ராட் பத்திரிகையின் person of the year விருது பெற்ற பிள்ளை.

எதற்குச் சொல்கிறேன் என்றால்..

ஒருவனுடைய செயலில் அவனுடைய சரித்திரமே வெளிப்படும். எனில், பெரோஸ்பூர் பிள்ளை ஒன்றைச் செய்தால் அதன் பின்னே குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள். பிடிபட்டிருக்கிறார்கள். இந்த சரித்திரம் ஒரு முறை கூட பிறழாமல் வெளிப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் ஏதும் வாராது போனாலும்... ஒரு வாரமாக பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவிலிருந்து கேலிகளும் கண்டனங்களும் சரமாரியாக வந்து கொண்டிருக்கின்றன.

ஏன்?

ந்யூயோர்க் இந்தியத் தூதரகத் துணைத்தலைவர் தேவயானியைக் கைது செய்தான் பெரோஸ்பூர் பிள்ளை.

இந்தியாவின் பல கீழ்த்தரங்கள் உடனே ஆ ஊ என்று கூச்சல் போடுகின்றன. ஒரு பெண்ணை துகிலுரித்துத் தேடுவதா அப்படியா இப்படியா என்று பெரிய கூச்சல். எல்லாம் அரசியல் மத ஆதாய ஊழல் குரல்கள்.

இங்கே ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. அதை ஒரு சட்டத்தின் காவலன் பிடித்திருக்கிறான். அதைவிட்டு, என்னவோ "அவங்களை நிறுத்தச் சொல்லு நிறுத்தறேன்.. இவங்களை நிறுத்தச் சொல்லு நிறுத்தறேன்" என்று மயில் குரலில் வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்கள் அல்பங்கள்.

இங்கே ஒரு சட்டம் மீறப்பட்டிருக்கிறது. தெரிந்தே ஒரு தப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆணவத்தின் அடிப்படையில் ஒரு ஏழைத் தொழிலாளியின் உரிமை பறிக்கப் பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்படிருப்பவர் செல்வாக்குள்ளவர், செல்வந்தர். ஒரு பெண். இந்தியாவில் பிறந்தவர். இந்தியக் குடிமகளான இந்தப் பெண் இந்தியாவின் தாரகமான தர்மத்தை மீறியவர்.

இங்கே ஒரு சட்டமீறல் பிடிபட்டிருக்கிறது. சட்டத்தின் காவல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு உண்டு என்ற சாதாரண நிம்மதி மீண்டும் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. வலியுறுத்தியவர் செல்வந்தரல்ல. ஒரு ஆண். இந்தியாவில் பிறந்தவன். இந்தியக் குடிமகனல்லாத இந்த ஆண் இந்தியாவின் தாரகமான தர்மத்தை நிலைநிறுத்தியவன்.

இவனை நான் வாழ்த்துகிறேன்.

பெரோஸ்பூர் சிங்கமே, ப்ரீத் பராரா.. உன்னை எண்ணிப் பெருமையாக இருக்கிறதடா. இந்தியாவிலிருந்து எவரும் உன்னை வாழ்த்தப் போவதில்லை. அவை உனக்குத் தேவையில்லை. போகட்டும்.

உன் கொள்கையை விட்டுக் கொடுக்காதே. சற்றும் மனம் தளறாதே. பண முதலைகளும் செல்வாக்குப் பச்சோந்திகளும் குரல் கொடுப்பார்கள். மிரட்டுவார்கள். பணியாதே. உனக்கு என் வாழ்த்துக்கள் என்றைக்குமே உண்டு. வாழ்க நீ எம்மான்.

தயவுசெய்து தடுமாறி விழுந்துவிடாதே. நீயும் ஊழலில் இறங்கிவிடாதே. இதுவே என் வேண்டுகோள். என்ன செய்ய, எம் போன்றவர்களுக்கு நம்பிக்கை தந்தவர்களெல்லாம் உடன் குழியும் பறித்திருக்கிறார்கள்.. அதான்!

2013/12/15

பேயாள்வான் புராணம்




    ஸ்.

என்ன அது? எதுவாகவும் இருக்கலாம்.

ஓசையாக இருக்கலாம். ஒரு அளவையாக இருக்கலாம். உணர்வாக இருக்கலாம். ஒரு வெளிப்பாடாக இருக்கலாம். மூச்சாக இருக்கலாம். காத்திருப்பின் வலியாக இருக்கலாம். வலிகளின் காத்திருப்பாக இருக்கலாம். இதோ அதோ உதோ எனப் பரவியிருக்கும் காலச்சுவடுகளின் ஒட்டுமொத்தக் கணக்காக இருக்கலாம். அண்ட அசைவுகளின் அதிர்வாக இருக்கலாம். நான் யாரென்பதன் அடையாளமாகவும் இருக்கலாம்.

நான் யார்?

விசித்திரமான கேள்வி. நான் யார் என்பதை எப்படி அடையாளப்படுத்துவது? என் பெயரை வைத்தா? என் நடத்தையை வைத்தா? என் குணாதிசயங்களை வைத்தா? என் பெயர் இன்னது என்றால் என்னை உங்களுக்குத் தெரிந்துவிடுமா? நான் ஒரு அயோக்கியன் என்றால் என் அடையாளம் வெளிப்படுமா? நான் என்பதே ஒரு குறுகிய விளக்கமாகப் படுகிறதே? ஆன்மாவைத் தெரிந்தவர்களுக்கு ஆள் பற்றிய அக்கறையில்லை. வேண்டுமானால் ஆன்மாவைத் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்களேன்? நான் நீ அவன் அவள் அது எல்லாமே... எல்லாமே உண்டு. அனைத்துமே இல்லை. ஒரு பிறவி ஒரு வாழ்க்கை என்று சொன்ன பலர், தங்கள் முதுகெலும்பு ஒடிந்து மடங்கி ஆலவிழுதுகளில் பரிணாமங்கள் மாறும் காலத்துக்குத் தொங்கிச் சுருங்கி இன்று வௌவால்களாகப் பறந்து கொண்டிருப்பதை அறிவேன். பாதுகாக்கப்பட்ட அறிவு. சர்வம் யக்ஞேன கல்பதாம். அறிதலே வேள்வி. ஆன்மாவை உடைத்தால் அதில் எத்தனை நான்கள்? இதில் நான் என்று எந்த நானைச் சொல்லிக் காட்டுவேன்?

நான் செய்யப் போவதை வைத்து என்னை அடையாளம் காணுங்கள். நடக்கப் போவதில் மட்டுமே எனக்கு நம்பிக்கை. நடந்தவை பற்றி எனக்கு அக்கறையில்லை. உங்களுக்குக் கண்கள் முன்புறம் இருப்பதன் காரணம் அதுதான் தெரியுமா? 'முன்புறம் என்றால் என்ன?' என்று என்னைப் போல் குதர்க்கமாகக் கேட்பீர்களானால் உங்கள் தலையைச் சுக்கு நூறாகச் சிதற வைக்க முடியும் என்னால். செய்ய வேண்டியதில்லை. நான் அப்படிச் சிந்தித்தாலே போதும். உங்கள் தலை ஆயிரம் சுக்கலாக ரத்தம் தெறிக்க வெடிக்கும்.

நீங்கள் யாராக இருந்தாலும் சரி. மூன்று வயதுக் குழந்தையாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கலாம். பனிரெண்டு வயதில் சமர்த்தாக தாத்தாவின் கால்களை சோர்வு தீர விளையாட்டாகப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கலாம். இருபது வயதில் அப்பா பேச்சைக் கேட்டு அம்மாவை அழவைத்துக் கொண்டிருக்கலாம். முப்பது வயதில் காதலனுடன் மூச்சுமுட்டும் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். நாற்பது வயதில் கனவுகளைத் தொலைத்து ஏங்கிக் கொண்டிருக்கலாம். ஐம்பது வயதில் உடல் இளைக்க நடந்து கொண்டிருக்கலாம். அறுபது வயதில் மனம் ஆறத் தவித்துக் கொண்டிருக்கலாம். எழுபது வயதில் போலியாக மனிதத்தைத் தேடிக் கொண்டிருக்கலாம். எண்பது வயதில் மூச்சை நிறுத்த முயன்று கொண்டிருக்கலாம். எல்லாமே உங்கள் சுமைகள். நீங்கள் சீவ வேண்டியப் பேய்த்தலைகள். நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. எனினும், நான் நினைத்தால் அத்தனையும் ஸ்ஸ்ஸ்ஸ். அவ்வளவுதான்.

சில நேரம் தலை வெடித்துச் சிதறாமல் இருக்கவும் சிந்தித்திருக்கிறேன். ஓரிரு பேய்வெட்டிகளைக் கண்டெடுக்க. பராமரிக்க.

அந்தக் குழப்பக் கணத்தில் தான் இப்போது காத்திருக்கிறேன். காத்திருக்கிறேன் என்றால் காலம் பரிமாணம் எல்லாவற்றுக்கும் அடங்காத ஒரு காத்திருப்பு. பரீக்ஷித்துக்கான சுகரின் காத்திருப்பு. ஏறக்குறைய. இது ஒரு பேயாள்வானுக்கான காத்திருப்பு எனும் இம்மி வித்தியாசம். உங்களுக்குப் புரியாமல் இதை விளையாட்டாக எடுத்துக் கொண்டால், உங்கள் தலை வெடிக்கிறார்போல் எனக்குச் சிந்தனை தோன்றட்டும். என் குழப்பக் காத்திருப்புக்கு வருகிறேன்.

இதோ இருக்கிறானே இளைஞன், இவன் பெயர் ஆதி.

இப்போது இளைஞனாக இருக்கிறானே தவிர, இவன் முதியவனாக இருந்த காலத்திலிருந்தே இவனையறிவேன். குழம்பித் தலை வெடிக்காதீர்கள். என் சிந்தனைக்கு வேலையில்லாமல் போய்விடும்.

இளைஞன் தான், எனினும் தற்கொலை செய்து கொள்வது பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆதியின் மனதில் நிறைய பேய்கள் இருப்பது அவனுக்குத் தெரியும். எனக்கும். இவனுடைய அம்மா ஒரு.. என்ன வார்த்தை அது?.. தற்காலச் சொல்... அ.. இவனுடைய அம்மா ஒரு லோலாயி. இவனுடைய அப்பா ஒரு மிருகம். இவனுடைய பாட்டன் பற்றிக் கேட்கவே வேண்டாம். பெரும் பாட்டன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. இவனுடைய மாமன் ஒரு உதவாக்கரை. இவனுடைய ஒரு சகோதரன் தற்கொலை செய்து கொண்டவன். எனக்குத் தெரியும். இன்னொரு சகோதரனோ இவனையே கொலை செய்யத் துணிந்தவன். இதைவிடக் கொடுமைகளைப் பார்த்திருக்கிறான். எப்படியோ போகட்டும், எதையும் தவிர்க்க முடியாது.

எனக்கு ஆதி பற்றிய கவனம் இப்போதைக்கு.

தன்னம்பிக்கை குறை, ஏமாற்றம், நம்பிக்கை துரோகங்கள், சொந்த ஆணவத் திமிரின் விளைவுகள், இளவயதுத் துயரங்கள், தகாத உறவுகள்... என்று மனச்சுமையின் அழுத்தத்தில் தவித்துக் கொண்டிருக்கிறான். தன் மனதை ஆக்கிரமித்த அரக்கர்களை அழிக்க வழி தெரியாமல் துடித்துக் கொண்டிருக்கிறான். இவன் துடிப்பதும் நான் முடிப்பதும் ஒன்றும் புதிதல்ல. ஆன்மா நம்பிகளைக் கேட்டுப் பாருங்கள். பாழ் தரும் ஊழ், அறிவீரோ?

இவன் தலையை வெடிக்க வைத்து இவனைக் காப்பாற்றலாம். அல்லது இந்தச் சுமைப்பேய்களை வெட்டியொடுக்க வழி காட்டலாம். ஓ.. நான் யாரென்று இப்போது அடையாளம் காட்டத் தெரிந்துவிட்டது.

நான் ஒரு வழிகாட்டி. எமக்குத் தொழில் வழிகாட்டல்.

ஆதிக்கு வழிகாட்டப் போகிறேன். என் வழிகாட்டலையும் மீறி அவன் தலை வெடித்தால் வெடிக்கட்டும். எல்லாவற்றுக்கும் நான் பொறுப்பாக முடியாது. இதற்கு முன் ஆதிக்கு நிறைய வழி காட்டியிருக்கிறேன். என்னைப் போல் ஒரு வழிகாட்டி ஆதிக்குக் கிடைக்கப் போவதில்லை. புரிந்து கொள்கிறானா பார்ப்போம்.

நான் அவனுக்கு வழிகாட்டி என்றால், அவன் எனக்கு ஒரு வகையில் தலைவன் போல. ஒரு நேர்மையானத் தொண்டனாக இருக்கப் போகிறேன்.

மெள்ள அவனை நெருங்கினேன். "ஹாய்" என்றேன். "மே ஐ?"

தலையாட்டினான். அருகில் அமர்ந்தேன். "வாட் ஆர் யு ஹேவிங்?"

"கின்னஸ்" என்றான். வாய் குழறியது. நிறையக் குடித்திருப்பான் போலிருக்கிறது. எதிரே சிறிய கஞ்சா சிகரெட்டுகள் வைத்திருந்தான்.

"எதையாவது மறக்க விரும்புறியா?"

"என் வாழ்க்கையில் நான் மறக்க விரும்புவதற்கு.. இந்த உலகின் மதுவும் கஞ்சாவும் போதாது"

"ட்ரபிள்?"

"டிபென்ட்ஸ்"

"ஆன் வாட்?"

"பெர்ஸ்பெக்டிவ்" என்றான்.

"ஹா!" என்றேன். என்னைப் போல சிந்திக்கிறான். தேவையில்லையென்றாலும் என்னுள் சிறு நம்பிக்கை பிறக்கிறது. நம்பிக்கை எல்லாம் கோழைகளுக்கு. வழிகாட்டிகளுக்குத் தேவையில்லை.

"கேன் ஐ பை யு எ ட்ரிங்க்?" என்றேன்.

"ஏன்?" என்றான்.

"டு ரிகனெக்ட். உன்னை மறுபடி சந்திப்பதைக் கொண்டாட. உன்னை எனக்கு நன்றாகத் தெரியும்" என்றேன். "உன் சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறேன். ஐ கென் ஹெல்ப் யு ஸ்லே யுர் இன்னர் டீமன்ஸ்"

சிரித்தான். "வாட் த ஃபக் டு யு னோ அபவ்ட் மை டீமன்ஸ்?"

சிரித்தேன். "மோர் தென் யு திங்க்"

"என்னுடைய மனப்பேய்கள் கொடுமையானவை. ரத்தம் குடிப்பவை"

"இதை விடக் கொடுமையான பேய்களை நீ ஒடுக்கியிருக்கிறாய். நான் உதவியிருக்கிறேன்"

திடீரென அழத் தொடங்கினான். "சாக விரும்புகிறேன். என் சிறு வயது முதலே வாழ்க்கை என்னை வெறுத்து வருகிறது. இப்போது நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்"

காத்திருந்தேன். அழுகை நின்றதும், "ஐ'ம் ஆதி" என்றான். கை நீட்டினான்.

"மீதி?" என்றேன், கை பிடித்து.

"வாட்?"

"உன்னுடைய மீதிப் பெயர்?" புன்னகைத்தேன்.

"நீங்க என்ன சொல்றீங்க?"

"உனக்கு அப்படிப் பெயர் வரக் காரணமிருக்கிறது. உன் பெற்றோர்களின் அறிவார்ந்த தேடலில் உதித்த பெயர் என்று நினைத்துவிடாதே. அவர்களை நான் நன்கறிவேன். உன் தாய் கபடநடிகை. உன் தந்தையோ மடக்கழுதை. மறந்து விட்டாயா?". பலமாகச் சிரித்தேன்.

நான் பலமாகச் சிரித்தால் சங்கடம். ஆயிரம் பேய்களின் அழுகை. உலக மரங்களின் அத்தனை கிளைகளும் வரிசையாக முறியும் சத்தம். உலகின் அத்தனை பிணங்களும் எரியும் படபடப்பு. உலகின் அத்தனை காற்றும் ஒரே கணத்தில் அடங்கும் அமைதி. அத்தனையும் கலந்தாற்போல் ஒரு ஓசை. என் சிரிப்பைக் கேட்ட அதிர்ச்சியில் சில உயிர்கள் நின்றுவிடுவதையும் பார்த்திருக்கிறேன்.

இவன் அதிரவில்லை. "ஏன் சிரிக்கிறீர்கள்? என் பெற்றோர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை.. அவர்கள் பற்றிய உங்கள் கருத்தில் எனக்கு அக்கறையில்லை" என்றான் சாதாரணமாக. "எனி வே, யார் நீங்க? என் பெற்றோர்களை எப்படித் தெரியும்?"

இவன் என் ஆதித்யனே. சந்தேகமில்லை. மறுபடி சிரித்தேன். "உன் பாட்டனுக்குப் பாட்டனையும் தெரியும்". கஞ்சா சிகரெட்டை எடுத்துக் கொடுத்தேன். "என்னைத் தெரியவில்லை?"

விழித்தான். "தெரியவில்லை"

"கிடக்கட்டும்.. நீ யார் தெரியுமா?"

"அதான் சொன்னேனே.." கஞ்சா சிகரெட்டை உள்ளிழுத்தான்.

சட்டென்று அவன் முகத்துக்கு நேராக முகம் வைத்தேன். "என்னை நன்றாகப் பார்".

என்னை உற்றுப் பார்க்கத் தொடங்கினான். அவன் முக ரேகைகள் பரந்து விரிந்து தேய்ந்து வெடித்துப் பரவின. கண்களின் தீவிரத்தில் காலத்தைக் கடந்த பக்குவம். பார்வையின் தேடலில் பயண வேகம். அடர்ந்த காட்டில் மேகம் மறைத்த நிலா. எங்கோ புலப்பட்ட ஒற்றையடிப் பாதை. அரையிருளின் இலை நிழலில் அமைதியின் அழிவு. ஆல் வேல் புளி நாகம் என்று மரப்பேதமில்லாமல் ஆங்காங்கே தொங்கும் பிணங்களின் கண் பிதுங்கல். அரையாடையுடன் காற்றில் வழுக்கிச் செல்லும் அழகி. சிதையில் எரியும் பிணங்களின் புகையுடன் கலக்கும் மிருகங்களின் சடலமணம். உயிரைப் பிழியும் ஓலம். இவற்றினூடே தந்தையின் கை பிடித்து நடக்கும் சிறுவன்...

பயந்து குழம்பினான். "யோகி...?" அவன் குரல் நடுங்கியது. என்னைப் பார்த்தப் பார்வையில் அடக்கமும் கலக்கமும். "குரு?"

"ஆமாம்.. நீ யாரென்று தெரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நீயும் நானும் நெடும்பயணம் செய்யப் போகிறோம்"

"பயணமா.. எங்கே?"

"பயப்படாதே. தலைவனாகிய உனக்கு பயமே கிடையாது. நீ விரட்டிய பேய்களைப் பற்றி அறிந்து கொள். என்னுடன் வா, விக்ரமா" என்றேன்.

2013/12/06

நசி நினைவுகள்


    சிகேத வெண்பா காலம் ஒரு பொற்காலம். எத்தனை பின்னூட்டங்கள்! கணக்கிலடங்கா பின்னூட்டங்கள் என்று சொல்ல முடியாது. கருத்திலடங்கா பின்னூட்டங்கள் என்பது பொருத்தம். எத்தனை வித சிந்தனைகள்! மிகவும் சிறப்பான பரிமாற்றங்கள். புத்தகமாகும் இரண்டாம் படியில் நிற்கும் நசிகேத வெண்பாவின் தனிச்சிறப்பு, ஒவ்வொரு பதிவுக்கும் வந்த அறிவார்ந்தப் பின்னூட்டங்கள். எதையோ அறிந்து கொள்ள ஒரு குழுமமாகப் பயணித்ததின் தடங்கள்.. சிந்தனைச் சுவடுகள். இவை புத்தகத்தில் இடம் பெற வாய்ப்பில்லை என்பது என் கைகளை வெட்டியது போன்ற வலியைத் தருகிறது.

சிந்தனைச் சுவடுகளை இலவச இணைப்பாகவாவது வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். பார்ப்போம். பின்னூட்டங்களைத் தனியாகத் தொகுத்து வருகிறேன். படிக்கையில் எனக்குள் உண்டான உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடியாமல் தவிக்கிறேன். நினைவுகளைக் கிளறும் கரண்டிகளில் தான் எத்தனை வகை!

பின்வரும் கேள்வி-பதில், உரையாடல், பின்னூட்டமாடல், மடலாடல்.. ஏதோ ஒண்ணு.. நீங்கள் இவற்றை நசிகேத வெண்பாவில் படித்திருக்கக் கூடும். இல்லையெனில் இப்போது ஒரு வாய்ப்பு.

நீலவண்ணத்தில் வரும் சிந்தனை/கேள்விகளின் நாயகன் அல்லது நாயகியின் பெயர்களை நீக்கியிருக்கிறேன். யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்களேன்?

*****

"சிசுவினால் ஒரு பொறியையும் அதிகம் உபயோகிக்க இயலாது. உபயோகித்தாலும் அறிவு வளராத நிலையில் உபயோகத்தின் பலன் புரியாது" என்று கூறுகிறீர்கள். 'அறிவு' என்பதற்கு பதிலாக 'மூளை' என்று நீங்கள் கூறியிருந்தால் அதை வரவேற்றிருப்பேன்.

சில விஷயங்களை so-called "முற்போக்கு" என்று கூறப்படுகிற மேற்கத்தீய விஞ்ஞான ரீதியாக பார்த்தால் விடை கிடைப்பது கடினமே. ("பகுத்தறிவு" என்று நம்மூர் திராவிட குஞ்சுகள் கூறிக்கொண்டு திரிவது போல). என்ன செய்வது, இன்றைய யுகத்தில் 'எதுவாக இருந்தாலும் அது விக்கிபீடியாவில் இல்லை என்றால் பொய்' என்று கூறும் அளவுக்கு நமது மனம் 'பக்குவப்பட்டிருக்கிறது(tuned).

நூற்றுக்கணக்கான பசுமாட்டு கும்பலில் தனது கன்றை மட்டும் எப்படி ஒரு தாய் பசு கண்டு கொள்கிறது? இது "பகுத்தறிவு" என்பதையும் தாண்டிய‌ விஷயம் அல்லவா? அதே போல, மின்சாரம் என்கிற விஷயத்தை யாருமே கண்களால் பார்த்ததில்லை. மின்சாரத்தினால் ஓடும் மோட்டர், மின்விசிறி, விளக்கு போன்றவற்றை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் மின்சாரமே இல்லை என்று கூறிவிட முடியுமா? மின்சாரம் என்பதே கப்ஸா என்று கூற முடியுமா?

வயிற்றில் வளரும் குழந்தை கண்டிப்பாகவே தாயின் சுக/துக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறது என்று மேற்கத்திய விஞ்ஞானிகளே ஏற்றுக்கொள்ள‌ ஆரம்பித்து விட்டனர் (என்ன செய்வது, வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்மூரில் மதிப்பு, இதையே நம் வீட்டு பாட்டி சொன்னால், கிழவி உளறுகிறாள் என்போம்). ஆகையால், 'கப்ஸா' என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. அதே போல, புலன்களை அடக்கி, கூடு விட்டு கூடு பாயும் வித்தையை நமது முன்னோர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் நமது "பகுத்தறிவு" அதை ஏற்க மறுக்கிறது. என்ன செய்வது, ஆதி சங்கரர் காவி உடுத்தி விட்டாரே!


சிசுவுக்கு மூளை உண்டு; அறிவு வளர்ச்சி தான் குறை என மறுபடியும் சொல்ல அனுமதியுங்கள். மூளை என்பது உறுப்பு - பிற உறுப்புகளைப் போலவே அந்தக் கட்டத்துக்கான வளர்ச்சியைப் பெறுகிறது. உணர்வுகளை வளர்த்துத் தேக்குவது அறிவு. கருவிலிருக்கும் சிசுவுக்கு அது கிடையாது, தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

பசுமாட்டை விடுங்க, ஒரு அம்மாவுக்கு பல ஆயிரம் குழந்தைகளில் தன் குழந்தையை எப்படி அடையாளம் தெரியும்? சிதம்பர ரகசியம் சொல்கிறேன். பழக்கம்.

பிறந்த குழந்தையை ஒரு முறை கூடக் காணாத தாயை நூறு பச்சிளம் குழந்தைகள் முன்னே விட்டு தன் குழந்தையை அடையாளம் சொல்லி அணைக்க முடியுமா? முடியாது. சிலவற்றை நாம் 'மகத்துவ'க் கண்ணோட்டத்தில் கண்டு பழகி நம் dnaவில் கலந்து விட்டது. என்ன செயவது!

தற்செயலின் மறுபக்கம் மகத்துவம். பார்வை மட்டும் அவரவருக்குச் சொந்தம்.

தவறாக எண்ணாதீர்கள். கருவிலிருக்கும் குழந்தை தன் தாயின் சுக/துக்கங்களை 'பகிர்ந்து' கொள்ளவே முடியாது. அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை நான் அறிந்ததில்லை. சுகம் துக்கம் என்றால் என்னவென்றே அறிய வாய்ப்பில்லாத நிலையில் அச்சிசுவை அப்படிப் பார்ப்பது நமக்கு என்னவோ பெருமையாக இருக்கலாம், சிசுவுக்கு இல்லை. வெளியே வரும் வரை சிசு is a lump of flesh with a heartbeat. சற்று குரூரமான பார்வை எனினும் உண்மைக்கு அண்மையென்று நம்புகிறேன். கருவில் இருக்கும் சிசுவுக்குக் கொடுக்கும் மகத்துவத்தை பெற்ற பிள்ளைக்குக் கொடுத்து மதிப்புடன் நடந்து கொண்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும் :) கருவைச் சுமக்கும் தாய்க்குக் கொடுத்தால் இன்னும் மகத்தானதாக இருக்கும். கருவைச் சுமந்த காலத்தில் எத்தனை பெண்கள் தாங்கள் மதிப்புடன் அன்புடன் அதீத ஆதரவுடன் நடத்தப்பட்டதாகச் சொல்வார்கள்? நம் கலாசாரத்திலேயே இல்லையே? கருவான சில வாரங்களில் பிறந்த வீட்டுக்கு அல்லவா அனுப்புகிறோம்? இல்லாத மகத்துவத்தைப் பிடித்துக் கொண்டு அலைவதே நமக்கு வழக்கமாகிவிட்டது :)

பகுத்தறிவு எல்லாருக்கும் உண்டு (shockingly, சில மிருகங்கள் உட்பட). பொதுவில் வைக்கிறேன். பயன்படுத்துகிறோமா இல்லையா என்பதும் கூட அவரவர் விருப்பம்/முனைப்பைப் பொறுத்தது. பகுத்தறிவு என்பது மேற்கோளுக்குட்பட்டக் கேலிக்குரிய சொல்லானதன் காரணம் சில கடவுள் மறுப்புக்காரர்களின் அறிவின்மை. வருந்துகிறேன்.

வழக்கம் போல காவிகளை சாடியிருக்கிறீர்கள். உண்மையிலேயே க‌டோவில் இப்ப‌டி உள்ள‌தா அல்ல‌து இது உங்க‌ளுடைய‌ க‌ருத்தா என்று தெரிய‌வில்லை! காவிக‌ளில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் உள்ளார்க‌ள் ஐயா! இதை நீங்க‌ள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது தான் நித‌ர்ச‌ன‌ம். தாடிகளின் அட்டூழியம் நீங்கள் இருக்கும் இடத்தில் தெரிய வாய்ப்பு இல்லை தான். நேரில் அனுபவப்பட்டதனால் கூறுகிறேன். அதனால் தானோ கெட்டவர்கள் அனைவருமே காவிகள் என்று பொருள்பட கூறுகிறீர்களோ!

ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே கேட்க‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆன்மா, பேரான்மா என்றெல்லாம் கூறியிருக்கிறீர்க‌ள். இதில் எம‌ன் என்ப‌வ‌ன் யார்? எம‌ன் ஆன்மாவா, பேரான்மாவா? அல்லது எமனுக்கு ஆன்மாவே கிடையாதா? எம‌ன் ஆசான் என்றால் எம‌னுக்கு ஆசான் யார்?


காவிகள் என்று வரும் இடங்களில் தாடிகள் என்று படித்துக் கொள்ளுங்களேன்?

பற்றறுப்பை ஒருதலையாகப் பேசும் பொய்யர்களை நான் சாடி என்ன பயன்? காவி என்றாலோ தாடி என்றாலோ பேதஜோதியில் கலந்து நானும் பொய்யனாவேனே? சாடுவதையே விட்டொழிக்கத்தான் இதை எழுதுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் :)

எல்லோரும் பிறப்பால் ஓரினமே. இறப்பால் ஈரினம் எனலாம்: அறிவுள்ள இனம், அறிவற்ற இனம்.

இறக்கும் பொழுது (தன்னை) அறிந்தவராக இறக்கிறோமா, அறியாதவராக இறக்கிறோமா? அது தான் கேள்வி.

மனிதத்தை அறியவொட்டாமல் இருப்பதும் தடுப்பதும் அறிவற்றவர் வேலை. இதில் தாடி என்ன காவி என்ன? தன்னை நம்பினாலும் சரி, காவியை.. க்குக்கும் தாடியை.. நம்பினாலும் சரி, இந்தக் கேள்வியைப் புறக்கணிக்கும் அத்தனை பேரிலும் தாடி காவி அங்கி லுங்கி இன்னபிற உண்டு என்று நினைக்கிறேன்.

நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை, ஒரே ஒரு வாய்ப்பை - 'ஒரே ஒரு வாய்ப்பு' என்பதில் மறைந்திருக்கும் மகத்துவம், my goodness, கோடியில் ஒருவருக்குக் கூடப் புரியாமல் போவது எத்தனை கொடுமை என்று நினைத்துப் பார்த்தால் இதன் தாக்கம் புரியும் - அப்படிப்பட்ட ஒரே ஒரு வாய்ப்பை மறந்து வாழ்நாள் முழுதும் அறியாமையில் மூழ்கியிருப்பது வறுமையிலும் பிணியிலும் கொடுமை இல்லையா? அப்படி மூழ்கியிருப்போரை மூழ்கியே இருக்க வைப்பது இன்னும் கொடுமையில்லையா? அப்படிச் செய்வோர் காவிகளாயிருந்தாலென்ன தாடிகளாயிருந்தாலென்ன நானாகவிருந்தாலென்ன நீங்களாகவிருந்தாலென்ன?

கடோவில் இந்தக் கருத்துக்கள் உள்ளதா இல்லையா என்பதைப் படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும் :) if it matters, தமிழில் எழுதியுள்ள செய்யுட்களுக்கு கடோவில் வேர் உண்டு. ஒரு சொல் விடாமல், அத்தனை விளக்கங்களுக்கும் விளக்கம் தொட்ட உரையாடல்களுக்கும் நானே பொறுப்பு. கடோவில் செங்கல் அடுக்கிய ஹோமகுண்டம் அக்னிஹோத்திரம் யாகம் பிராமணம் விராட் புருஷம் என்று வருகிறது. நான் நற்குணங்களை செங்கல் என்கிறேன். உளத்தூய்மையை வேள்வி என்கிறேன். புருஷமாவது பிராமணமாவது என்கிறேன். மற்றபடி கடோவின் சாரத்தை தமிழில் கொடுத்திருக்கிறேன்.

எமன் யார், எமனுக்கு ஆசான் யார் என்பதற்கு எனக்குப் பதில் தெரியாது. கடோ வசதியாக எமனைக் கடவுள் என்கிறது. மூச் பேச் கூடாத். எனினும், எமன் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதிலிருப்பதாக நினைக்கிறேன். எமனும் பேரலையின் அம்சம் என்பதே. இங்கே நசிகேதன் எனும் ஒரு விடாமுயற்சிச் சிற்றலையைத் தன்னுள் சேர்த்தப் பேரலையின் அம்சமாவான் எமன்.
*****

கருவிலிருக்கும் சிசுவை விடுவோம். பிறந்தபின் பகுத்தறியும் அறிவு வளர்ந்தபின் நடப்பதுதானே நம் நினைவில் நிற்கிறது? நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைப் பருவத்தில் எந்த நாள் வரை நினைவுக்குக் கொண்டுவர முடியும்?
கருப்பையிலிருந்து பிறக்கும்நாள் வருமுன்பு ஒரு விபத்தாக கை மட்டும் வெளியில் நீட்டிய குழந்தையை மறுபடி கருப்பைக்குள்ளே செலுத்த என்ன வழி என்று எல்லோரும் குழம்ப, ஒரு புகழ்பெற்ற மருத்துவர் 'சட்'டென சிகரெட்டைக் கொளுத்தி சிசுவின் கையில் வைத்ததும் அது கையை கருப்பையின் உள்ளே இழுத்துக் கொண்டது என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.


".. எந்த டாக்டர்னு தெரிஞ்சா கொஞ்சம் ஒதுங்கி நிற்கலாம். அறிவு ஜோதி நம்மளை எரிச்சுடக் கூடாது பாருங்க.

விபத்தா எல்லாம் கை வராது. வந்தாலும் சிகரெட் சுட்டா உள்ளே இழுக்காது. உள்ளே இழுத்துக்கொள்ள கருப்பை என்ன ஜன்னலா?

கருப்பை ரொம்பப் பாதுகாப்பானது. நீரணை. அணை உடைந்தால் தான் சிசு வெளியே வர வாய்ப்பே உண்டு. அப்படி (அசம்பாவிதமா) வெளியே வந்தா வந்தது தான். திரும்ப உள்ளே போக முடியாது. நல்ல வேளை, இந்த செய்தியை நான் படிக்கவில்லை - படிச்சிருந்தா அன்றிலிருந்தே நொந்திருப்பேன் :) எவ்வளவு மோசமா ஜனங்களை ஏமாத்துறாங்கனு நினைக்குறப்போ நடுக்கமா இருக்கு.

இதையெல்லாம் நம்பமாட்டாங்கனு நம்புறேன் :)
*****

(கேள்விக்கான) பதிலே சொல்லாமல் இருப்பதுதான் தப்பு. தப்பாகச் சொல்வது அதைவிட பரவாயில்லை என்று ஆசிரியராக இருக்கும் என் தோழி சொன்னது. கடோபநிஷத்தை எழுதியவர் அத்வைதத்தைப் பின்பற்றுபவரோ?

உங்கள் தோழி சொன்னது மிக அருமையான அறிவுரை. விளைவு பிழையாகிவிடுமோ என்று அஞ்சிச் செயலில் இறங்காமல் இருப்பதுதான் நம் வாழ்வின் மிகக் கொடுமையான சாபம். எல்லோருமே வாழ்வின் ஒரு அல்லது பல காலக்கட்டங்களில் இந்த சாபத்துக்கு ஆளாகிறோம்.

கடோபநிஷத்தை எழுதியவர் அத்வைதத்தைப் பின்பற்றுபவரோ..தெரியாது. நல்ல கேள்வி (பதில் தெரியாவிட்டால் உடனே கேள்வியை நல்ல கேள்வி என்று சொல்லிவிட வேண்டும்:-).

அத்வைதம் என்ற தத்துவம் எத்தனையோ காலம் தொட்டே இருந்து வந்திருந்தாலும் அதற்குப் பெயர் கொடுத்து தத்துவத்தின் ஆசிரியராகப் பரிசைத் தட்டிக் கொண்டு போனவர் ஆதிசங்கரர். (ஆக்சிஜன் கண்டுபிடித்ததாக ப்ரீஸ்ட்லி/ஷீல் சொன்னது போல).

கடோவின் காலம் சங்கரருக்கு முந்தையது. அத்வைத சிந்தனை இருந்திருக்கலாம் ஆனால் அதற்கு வேறு பெயர் இருந்திருக்க வேண்டும்.

கடோவை எழுதியவர் யாரென்று தெரியாததும் துரதிர்ஷ்டம். ஒருவரா பலரா என்று தெரியவில்லை. முதல் மூன்று பகுதிகளை எழுதியது ஒருவராக இருக்கும் என்கிறார்கள். பின் மூன்று பகுதிகள் பிற்சேர்க்கை என்கிறார்கள். முதல் மூன்று பகுதிகளிலும் பிற்சேர்க்கை இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. பல உபநிஷதுகளின் கதியும் இதே. எழுதியவர் யாரென்று எந்த விவரமும் இல்லை. ஒருவேளை பின்னால் வந்தவர்கள் நைசாக முதலில் எழுதியவர் பெயரை நீக்கிவிட்டார்களோ என்னவோ!
*****

மனித மனங்களே பெருஞ்சக்தி. முற்றிலும் உண்மை. மனிதம் என்றவுடனேயே என் மனம் கருணை, கருணை என்று உருகிவிட்டது. அடுத்து கடவுள் என்றவுடன் மனதில் தோன்றியது சில உருவங்கள்தான். கருணை என்ற உணர்வை மனம் உடனே உணர்ந்தது. ஆனால் கடவுள் என்றவுடன் உருவங்கள்தான் மனதில் தோன்றியது.

எல்லாமே அதன் இயல்பில் இருந்தால்தான் அமைதி அடையும். வாழும் வாழ்கையில் அமைதியை அடைய முடியாத மனங்கள் மரணத்தில் நிச்சயம் அமைதி அடையும். மரணம்தான் எல்லோருக்குமே நிலையான அமைதி தரும், இல்லையா!


'மனிதம்' 'கடவுள்' என்ற சொற்கள் உங்கள் மனதில் உண்டாக்கிய படிமங்கள்.. இதுவே பெரிய வெற்றியாக நினைக்கிறேன். மரணத்துக்குப் பின் அமைதி தேவையா? மரணம் அமைதியைத் தரும் என்றால் பிறவியும் அப்படித்தானே? மரணத்தில் அமைதி கிடைக்கும் என்பது அறியாமையோ? 'யாருக்கு அமைதி?' என்று எண்ணும் பொழுது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது :) ஹிட்லர் மரணத்தில்.. ஒசாமா மரணத்தில்.. சிலருக்கு அமைதி ஏற்பட்டது உண்மையே.
*****

புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு, வாலறிவு ---எங்கேயோ ஒரு நெரடல் தெரிகிறது. பளிச்சென்று பின்னூட்டமிடமுடியாத இடுகை. உங்கள் வாதத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை...

இது தான் அறிவு என்று prescribe செய்யும் அனுபவமோ தகுதியோ எனக்கு இல்லை. இது அறிவு என்று describe செய்யும் ஆசையில் எனக்குத் தோன்றியதை எழுதியதன் விளைவு, இந்தப் பதிவு.

வாலறிவு என்பது கடவுளுக்கு உரியது என்று இறையிலக்கியங்கள் சொல்லும் பொழுது, என்னைப் போல் கடவுள் நம்பிக்கையில்லாதவன் கத்தி மேல் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தனக்குள் கடவுள் என்ற படிமத்தை ஏற்றுக் கொண்டபோது, வாலறிவன் நிலை என்பது அறிவு முதிர்ச்சியில் ஒரு மைல்கல் என்று ஒரு எளிமையான கோணம் புலப்பட்டது. மெய்யறிவு என்பது தன்னை அடையாளம் காண வைக்கும் ஒரு நிலை என்பது எனக்குப் புரிந்தது. ஆனால், அதற்கு மேலும் ஒரு படி இருக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னை அறிந்து கொண்டு என்ன செய்வது? அதனால் என்ன பயன் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். புத்தன் யேசு காந்தியின் மரபணுவில் வாலறிவு ஒட்டிக்கொண்டிருப்பது போல் பட்டது.

நாலறிவு என்பது வேதங்களின் அறிவு மட்டுமே என்பதை ஏனோ என்னால் ஏற்க முடியவில்லை - இன்றைய நாளில் நான்கு வேதங்களின் அறிவு உருப்படாத அறிவு என்ற ஆணவ எண்ணம் தோன்றியது. அதே நேரம் கடோ என் கருவல்ல என்பதையும் உணர்ந்தேன். இதைப் படிக்கவும் இதைப்பற்றி எழுதவும் கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ந்து நன்றியுணர்வோடு.. அதே நேரம் என் பாணியில் சொல்ல எந்த அளவுக்குச் சுதந்திரம் எடுத்துக் கொள்வது என்ற சங்கடத்துடன் எழுதியதால் சற்று முரணாக வந்திருக்கலாம். எனக்குத் தோன்றிய இவை எல்லாவற்றையும் புரட்டி எழுதினேன். புலனறிவு...வாலறிவு எதுவுமே புதிதில்லை. பிற இறையிலக்கியங்களிலும் தத்துவ நூல்களிலும் எழுதப்பட்டவையே.

அறிவு என்பதற்கு முடிவு கிடையாது என்று நினைக்கிறேன். எனினும், ஒரு நிலையில் சாதாரண அறிவுகள் முடிந்து விடுவதால், முற்றறிவு என்பதும் பொருத்தமே.

வால் என்பதற்கு தூய்மை, வெண்மை, மிகுதி என்று பல பொருளுண்டு. அறிவுக்கு அடைமொழியாகும் பொழுது, முழுமையான, விளக்கத்திற்கப்பாற்பட்ட, தூய்மையான என்ற பொருளில் அறிவை அழகுப்படுத்திக் காட்டுகிறது. வெண்மை என்ற நிறம் சாதாரணம் என்று நினைக்கையில் சாதாரணம் தான். கண்ணுக்குப் புலப்படும் அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது என்று புரிந்ததும் வெண்மையின் அசாதாரணம் உறுத்துகிறது. அந்த வகையில் வால் என்பது பொருத்தமான அடைமொழி - தன்னறிவு வாலறிவோடு நிறைவு பெறுகிறது எனலாம்.

புலனறிவில் தொடங்கிப் படிப்படியாகப் போக வேண்டியதில்லை. ஒன்றை விட்டொழித்து இன்னொன்றைத் தக்க வைக்க வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு அறிவு நிலையில் இயங்கும் பொழுது அதற்கான வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்டு இயங்கலாம் என்பதே இங்கே செய்தி. புலனறிவை வைத்தே வெளியுலகின் தொடர்பு ஏற்படுவதால், நம் அறிவை வெளிப்படுத்த புலனறிவு ஒரு வாகனமாகிறது. மெய்யறிவு நிலையில் இயங்கும் மனிதன் புலனறிவின் உந்துதல்களை உடனே அறியத் தொடங்கி அதற்கேற்ப நடந்து கொள்ள முடியும். அப்படி நடக்காத பொழுது, புலனறிவில் மட்டுமே இயங்கும் பொழுது, அறிவில்லாதவர் போல் நடக்கத் தொடங்குகிறான்.

பலமரம் கண்ட தச்சன் ஒருமரத்தையும் அறுக்க மாட்டான் என்பார்கள். அறிவு பற்றி கீதாசாரியன் சொல்கிறான். அறிவு ஞானம் என்று விவாதிக்கும். அறிவு என்பது அனுபவத்தின் சாறு. அனுபவம்,அனுபவிப்பவன்,அனுபவிக்கப்படுவது என்ற மூன்றுமிருக்கவேண்டும்.

அனுபவிப்பவனும் நான் தான். அனுபவிக்கப்படுவதும் நான் தான்.அதனால் கிடைக்கும் அனுபவமும் நான் தான் என்கிறான் கிதாசாரியன். இது தான் உள்ளறிவா? இதுதான் வாலறிவா?

அப்பாதுரை என்று உம்மை அழைக்கிறேன். நீர் இருக்கிறீர். இருப்பதால் உம்மை அப்பாதுரை என்கிறேன். நீர் இல்லாவிட்டால் அழைக்கமாட்டேன். எது முக்கியம்? நீர் இருப்பதா? அப்பாதுரையா? நீர் மனிதர். மனிதர் என்ற பிரக்ஞை உள்ளது. யானைக்கு தான் யானை என்ற ப்ரக்ஞை இருக்குமா? இருக்கும், இருக்காது இரண்டுமே சரி தான். யானை தன் வம்ச விருத்திக்கு மற்றொரு யானையைத்தான் தேடும். மற்றப்படி...? அது தூண்டுதல் உணர்வுதானே? யானைக்கு யானை என்று பெயர் வைத்தது யார் ? மான்,புலி சிங்கம் என்று பெயர் வைத்தவன் மனிதனே. இந்தப் பாத்திரமிவனுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?

மற்ற உயிரினங்கள் இயற்கையோடு இயற்கையாக இருந்த போது மனிதன் இயற்கையோடு இருந்து கொண்டு இயற்கையிலிருந்து தனித்தும் இருக்க முற்பட்டான். he is a subject for himself and also an object for him also.. நாம் உலகத்த புரிந்து கொள்வது நம் புலனுணர்வால் மட்டுமே அதன் தீட்சண்யத்திற்கு ஏற்றபடி நம் புரிதல் சிறப்படைகிறது. உயிரினங்களில் கண்ணிலாத வொவ்வால் காதிலாத பாம்புகள் வாழ இயற்கை ஏற்பாடு செய்துள்ளது.மனிதனுக்குமட்டும் கூர்மையான புலன்கள் கிடைத்தன. காரனம் மற்ற உயிரினங்களுக்கு கிடைகாத ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் முன் கால்கள் கைகளாக மாறியது. அவன் உழைக்கலானான். இது அவனுடைய பரிணாம வளர்ச்சியில் மிகப்பெரிய பாய்ச்சலைகொடுதது. இந்த அனுபவம் அவன் அறிவை விருத்தி செய்தது. விசாலமாக்கியது. இறுதியில் ஒரு கேள்வி. Are you a being because you are a human being. Or, are you a human being because you are a being?


இதற்கான என் மறுமொழியில் எந்த சுவாரசியமும் இருப்பதாகத் தோன்றவில்லை.
*****

மெய் என்றால் என்ன? மெய்யை அறிதல் என்றால் என்ன? சுகம் என்றால் என்ன? அறியப்படுகிற மெய்யில் சுகம் அடங்கியதா இல்லையா ? இருப்பதெல்லாம் மெய் என்றால், சுகம் என்பது ....?

அடுத்து, லைப்ரரி போய் படித்து இன்பம் காணும் வாசக அன்பர்கள், எப்போது தங்கள் பரவச உணர்வை, வாவ்..ஆஹா, ஓஹோ வென, குழந்தைகள் முன் தங்கள், பரவசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்? படிப்பது சுகம் என உணர்த்துவார் யார் ? வீடியோ கேம் விளையாடும் ஒருவரின் பரவச உணர்வின் வெளிப்பாட்டுக்கு முன், நாவல் படிப்போரின் உணர்வு வெளிப்பாடு எம்மாத்திரம்? அதை பார்த்து வளரும் குழந்தைகள், எது சுகமென நினைப்பர்?


படிப்பது சுகம் என்று உணர்த்துவார் யாருமே இல்லை என்றே நினைக்கிறேன். (உரைப்பார் சிலர் உண்டு, உணர்த்துவார்?) சுகம் தேவையே; எனினும் புலன் தொட்ட சுகமும் மனம் தொட்ட சுகமும் வேறு எனும் பொழுது, ஒன்றில் காட்டும் தீவிரம் மற்றதில் இல்லாமல் போகும் போது, எப்படி திருத்துவது?

திருத்த வேண்டும் என்று நினைப்பது தவறு என்றான் என் மகன்: "if you think video games are for the stupid, then stay away daddy"

நன்மையையும் தீமையும் இல்லா இவ்வுலகில், அல்லது ஒன்றான இவ்வுலகில், நெறிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி. அவரவர் வாழ்வு அவரவர்க்கு.

உங்கள் மகனின் ஸ்மார்ட் ஆன பதில் கவர்கிறது. உண்மையில் வீடியோ கேம் விளையாட பொறுமையும், புத்திசாலித்தனமும் நமக்கில்லை என்பதே உண்மை. உங்களால் அதை அனுபவிக்க முடியாத தெரியாத தவிப்பே, அது நல்ல விஷயம் அல்ல என்ற முன்முடிவை உங்களிடம் உருவாக்குகிறது. பின்னாளில் எல்லா செயல்களுக்கும் கணினியையும், ரோபோக்களையும் பயன்படுத்தப் போகும் ஒரு தலைமுறை தன்னை இப்படித்தான் தகவமைத்துக் கொள்ள முடியும். துன்பங்கள் என கருதப்படும் எண்ண அலைகளை இன்ப உணர்வுகளாக மாற்ற சொல்லி கொடுப்பது மட்டுமே, அனுபவம் வாய்ந்த ஒரு பெற்றோரின் கடமை. குழந்தைகளின் வாழ்வில் குறுக்கிட நமக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் தன்னை பார்த்துக் கொள்ளும் வரை, வாழும் வசதிகள் செய்யலாம். வாழ்வில் குறுக்கிட முடியாது.

*****

வரம்புக்குள் அடங்காமல் வாழ்வியலை விவாதித்த காலம் அது. புத்தகம் உருவாக்கும் சாக்கில் பின்னூட்டங்களில் மீண்டும் புதைந்து போனேன். போகிறேன்.

ஏற்கனவே படித்திருக்கலாம் என்றாலும் சுவாரசியமாகத் தோன்றியதால் மீண்டும் படிப்பீர்கள் என்று பதிவிடுகிறேன். அடுத்து வரும் பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனேயே நழுவி விடுவீர்கள் என்ற அச்சமும் ஒரு காரணம் :-).

நீலவண்ணச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க முடிந்ததா?

2013/11/30

மாதச் சிறப்பு


    லைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள். காதலும் ப்லாக்வலியும் அந்த வகையில் சேரும் என்பது என் அனுபவம். அதிலும் ப்லாக்வலி...

பூத்தூரிகை காலத்தில் முதல் அனுபவம். மூன்றாம் சுழியில் சமீப அனுபவம். தொலைத்த பதிவுகளை மெள்ளச் சேர்க்கப் போகிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.

ஒரு சில கதைகள் கட்டுரைகள் தவிர மற்றவை என்னிடம் சேமிப்பில் உள்ளன. கவிதைகள் முற்றிலும் தொலைந்து போயின என்பது உலகத்துக்கே மகிழ்ச்சியைத் தரும் செய்தி. பதிவுகளைத் தனியாகச் சேமித்து வைத்திருக்கிறேன் என்றாலும் முறையாகச் செய்யவில்லை. சேமித்தவை அந்தந்தக் காலக்கட்டத்து கணினிகளில் இருப்பதால் எல்லாவற்றையும் தனித்தனியாக எடுத்து மீண்டும் சேர்க்க வேண்டியிருக்கிறது. பெரிய விஷயம் ஒன்றுமில்லை. இருந்தாலும் செய்யப் பொறுமையும் முனைப்பும் போதவில்லை. இந்த வருடம் அக்டோபர் நவம்பரில் நிறையப் படுத்துவிட்டேன். ஆள் விழுங்கி நவம்பர் என்னையும் விழுங்கிவிடுமோ என்று ஒருகணம் தோன்றியது உண்மை. நிலமை இப்படி இருக்கையில் ப்லாக் போனதைப் பற்றிக் கவலைப்பட்டாலும் எதுவும் செய்ய முடியவில்லை. பயணம், வெறுப்பு, சோம்பல் எல்லாம் கலந்து.. எத்தனையோ இழப்புகளில் மனம் சலித்த நிலையில் பதிவுகள் எப்படிப் போனாலென்ன என்று ஒரு கணம்.. ஒரு கணம் எண்ணியதை ஒப்புக்கொள்கிறேன்.

பதிவுகள் காணாமல் போனதை விசாரித்து எனக்கு வந்த இமெயில்கள் என்னைக் கலங்க வைத்தன. நெஞ்சைத் தொட்டன. 'உங்கள் பதிவுகள் ஒரு பரிசு' என்று ஒருவர் எழுதியிருந்தார். இன்னொருவர், 'I feel I am missing something' என்று எழுதியிருந்தார். ஒரு பின்னூட்டம் கூட இதுவரை இடாதவர்கள் பலர் இப்படி எனக்கு எழுதி விசாரித்த போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கர்வமாகவும். ஒரே ஒரு இமெயில் மட்டும் கொஞ்சம் சுவாரசியமாக உறுத்தியது. பெயர் மறைத்த அவர் நெஞ்சில் சிறிய அக்கினிக் குஞ்சு சில நாள் சிறகடிக்கட்டும்.

ப்லாக் நலம் விசாரித்த அத்தனை பேரின் அன்புக்கும் நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். மிகவும் நன்றி. ஐந்து வருடத்துக்கு மேற்பட்ட உழைப்பை(?) அனாவசியமாக எறிய வேண்டாம் என்றும் தோன்றியதால் நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவிடுகிறேன்.

யாண்டும் எவர்க்கும் கடவுச்சொல் கொடற்க எனும் அரியநெறி இதனால் அறியற்பாலது.

    வேலையில்லை. பொழுது போக என்ன செய்யலாம்? காழ்ப்புடன் அல்பமாகப் புலம்பலாம். உலகம் கெட்டுவிட்டது என்று அடுத்த தலைமுறையைத் திட்டலாம். அல்லது இந்தியக் கொலை வழக்குகள் படிக்கலாம்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கின் தீர்ப்பைப் படித்ததும் இன்னும் தேடத் தோண்டியது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் இதுவரை விவரங்கள் எதுவும் தெரியாதிருந்தேன். தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷணன் இருவரும் கொலை செய்து சிறை சென்றார்கள் என்றே இதுவரை அறிந்திருந்தேன். இந்த வழக்கின் விவரங்களைப் படிக்கையில், இருவரும் கொலை செய்திருக்கச் சாத்தியமில்லை என்ற கருத்தும் வழக்கில் சந்தேகத்துக்கிடமின்றி (சந்தேகத்துடன்?) கிளப்பியிருப்பதைப் படித்தேன். ஜூரிகளில் 6 பேர் ஆதரவாகவும் 3 பேர் எதிர்த்தும் தீர்ப்பு சொல்லி இருவருக்கும் கொலை குற்றத்துக்கானத் தண்டனை வழங்கினார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு ஜூரி எதிர்த்தாலும் தீர்வு காண முடியாது என்ற வரைமுறை இந்த வழக்குக்கோ அல்லது அந்தக் காலத்திலோ புழக்கத்தில் இல்லையா? அல்லது மரண தண்டனைக்கு மட்டும் தான் அந்த வரைமுறையா? என்எஸ்கே, எம்கேடி பற்றி எழுதிய நேரத்தில் இந்தக் கொலை நடந்ததால் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது என்ற கருத்தை கோர்ட்டுகளிலும் ப்ரிவி கவுன்சிலிலும் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நிறைய சந்தேகம் வருகிறது. தோண்டித் தோண்டிப் படித்ததில்... கொலை செய்தவர்களாகக் கருதப்பட்டவர்களில்.. அந்த நாளில் வளர்ந்து வந்த ஒரு மூன்றெழுத்து நடிகர், மூன்றெழுத்து நான்கெழுத்து பெயர் கொண்ட இரண்டு அரசியல் தலைவர்கள், ஒரு இசைக்குயில், பிரபல தொழிலதிபர், ஒரு சினிமா நடிகையின் 'சமூக அந்தஸ்துள்ள' கள்ளக்காதலன்... என்று நிறைய பேர் அடங்கியிருப்பது சுவாரசியம்.

இதைப் புத்தகமாக யாராவது எழுதியிருக்கிறார்களா? ரண்டார் கய் இதைப் பற்றிப் புத்தகம் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். யாருக்காவது விவரம் தெரிந்தால் சொல்லுங்கள். இந்த வழக்கின் காலக்கட்ட விவரங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் இந்தியா வரும்பொழுது சுவாரசியமாக அரட்டை அடிக்கலாம். காஸ்யபன் ஐயாவுக்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்கும் என்று கௌளி சொல்கிறது. சூரி மற்றும் ஜிஎம்பி அவர்கள்? சென்னைப் பித்தன் அந்த நாட்களில் மயிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் இதை யாராவது புத்தகமாக எழுத வேண்டும். ஜெயமோகனைத் தவிர. குறைந்த பட்சம் இதை யாராவது சினிமாவாக எடுக்க வேண்டும். ஹிஹி.. ரைட்.. அவரைத் தவிர.

உபரி: 'எம்கேடி'யின் 'எம்' மாயவரமாம்.

    க்ஷ்மிகாந்தன் பற்றிப் படிக்கையில் எம்எஸ்வி பற்றி ஒரு துக்கடா தெரிந்து கொண்டேன். எல்லாம் அறிந்த ஈசனின் திருவிளையாடலில் மீனாக்ஷி மாதிரி தீவிர எம்எஸ்வி ரசிகர்கள் நெகிழ்ந்து போகலாம் என்பதற்காக இங்கே சேர்க்கிறேன்.

சினிமா சான்ஸ் தேடுவதற்கு முந்தைய காலம். ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் வைர நெக்லஸ் திருடினார் என்று குற்றம் சாட்டி எம்எஸ்வியைக் கைது செய்து சிறையிலடைத்தார்களாம். எம்எஸ்வி சரியாகப் பேசத்தெரியாமல் தவித்ததாலோ அல்லது அவர் பேசியதைப் புரிந்து கொள்ள இயலாமல் போனதாலோ அவர் மேல் வழக்கு தொடர்ந்தார்களாம். தீர்ப்புக்காகக் காத்திருக்கையில் அசல் திருடன் பிடிபடவே எம்எஸ்வியை விடுதலை செய்தார்களாம். அசல் திருடன் பிடிபடாதிருந்தால் எம்எஸ்வி திரையுலகுக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்.

திக்கெனவில்லை?

    ள் விழுங்கி நவம்பர் முடியப்போகிறது. நன்று.

நவம்பர் மாதத்தின் மிகப் பெரிய சிறப்பு ஒன்று உண்டு. அத்தனை இழப்புகளையும் ஈடுகட்டும் சிறப்பு. ஆர்கிமிடீஸ் கோரிய லெவர் மாதிரி ஒரு பிடிப்பைத் தரும் சிறப்பு. என் தம்பி பிறந்த மாதம்.

எங்கள் குடும்பத்தில் சகோதர-ரிகளிடத்தே போலித்தனம் கொஞ்சம் கூட இல்லை. எங்கள் அம்மா ஒரு முக்கியக் காரணம். நாங்களும் சில்லரைக் காரணங்கள். என்னை விட என் சகோதர-ரிகளுக்குப் பண்பு அதிகம் என்று சிலர் சொல்வார்கள். (சொல்பவர்கள் நேரில் வந்து சொன்னால் அவர்கள் பல்லை உடைக்கத் தயாராக இருக்கிறேன்).

சிறுவயதில் நானும் என் தம்பியும் எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வோம். அடிதடி என்றால் அ டி த டி. கட்டிப்புரண்டு கழுத்தை நெறித்துச் சண்டை போடுவோம். 'கொன்னுடுறா.. துரப்பா.. அவனைக் கொன்னு போட்டுரு.. உன்னைவிட சின்னவன்னு பாக்காதே.. கொன்னுடு' என்று பதறுவார் என் பாட்டி. அப்படி ஒரு மாட்டடி அடித்துக் கொள்வோம். ஆளுக்கொரு க்ரிகெட் டீமின் பெயர் கொண்டு எங்கள் வீட்டு ஹாலில் க்ரிகெட் விளையாடி ஏற்கனவே விரிந்திருக்கும் தரையை இன்னும் உடைத்திருக்கிறோம். வீட்டின் தட்டி வேலிக்குள் ஆடு மாடு பன்றிகள் வந்தால் தட்டிவேலிக்கதவை அடைத்து, எங்கிருந்து அடி விழுகிறது என்று புரியாமல் ஆடு மாடுகள் மிரண்டு ஓடும் வகையில் மறைந்திருந்து பெரிய செங்கல்களாகப் பொறுக்கி எடுத்து அடித்திருக்கிறோம். மாதம் மூன்று வாரம் வந்தால் ஒரு ரூபாய் இனாம் தருவார்கள் என்பதற்காக சம்ஸ்கிருத வகுப்புக்குப் போவோம். அம்மா திட்டுவார் என்பது இன்னொரு லேசான காரணம். அவன் ஒரு ரூபாய்க்காக மட்டுமே வருவான். எனக்கு இரண்டு அழகான காரணங்கள் இருந்தன. நாங்கள் இருவரும் ஒரே பள்ளிக்கூடம் தொடர்ந்து ஒரே கல்லூரியில் படித்தோம். நேரத்தில் பள்ளிக்கூடம் போக வேண்டுமென்று மூன்று வருடங்கள் போல் தினம் அவனைப் பின்னால் உட்காரவைத்து காட்டு வேகத்தில் சைக்கிள் மிதித்திருக்கிறேன். அது மட்டுமே அவனுக்கு நான் செய்திருக்கும் உருப்படியான பணி என்று நினைக்கிறேன். அதுவும் நான் பள்ளிக்கூடம் போகிற சாக்கில். ஒரே ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் அவனை யாரோ மிரட்டினார்கள் என்பதற்காக அவனுக்காகச் சண்டை போட்டிருக்கிறேன். எனக்குப் பாதுகாப்பு தரும் அளவுக்கு அவன் பம்மலில் படா ஆளானது வேறு கதை. இன்றைக்கும் தொடர்கிறது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது என் மட்டில் வேதம். எங்கள் குடும்பத்தின் பீமன். பல்லாண்டு பலமோடு வாழட்டும்.

அவன் பிறந்தநாளன்று உடனிருந்து இருபத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும். இந்த நவம்பரில் வாய்ப்பு கிடைத்தது. இது அவனுக்காக.


    சினுக்கு பாரத் ரத்னா கொடுத்தது தவறா என்று என்னிடம் ஒருவர் கேட்டார். 'ஒபாமாவுக்கு நொபெல் தரவில்லையா?' என்று உடனடியாக மனதில் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். வித்தியாசம் இருக்கிறது. ஒபாமாவுக்குக் கொடுத்ததால் நொபெல் பரிசுக்குத் தீராதக் களங்கம் உண்டானது. ஸசினுக்குக் கொடுத்ததால் பாரத ரத்னாவுக்கு ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இல்லையென்றால் என் போன்றவர்களுக்கு பாரத ரத்னா பற்றி என்ன தெரியப் போகிறது - எம்ஜிஆருக்குக் கொடுத்தார்கள் என்றா?

ஸசின் க்ரிகெட் விளையாடி அவ்வளவாகப் பார்த்ததில்லை. அதிலும் அவர் சிறப்பாக விளையாடிய பதினைந்து இருபது வருடங்களில் ஒரு முறை கூட பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான செஞ்சுரிகளில் ஒன்றைக் கூடப் பார்த்த நினைவில்லை. இருந்தாலும் அவரை அறிய முடிந்தது அவர் விளையாட்டின் சிறப்பினால் என்பது எனக்குத் தெரியும். ஸசின் ஓய்வு விழா (?) தொலைகாட்சியில் பார்த்தேன். 'இந்த பாரத ரத்னா என் அம்மாவுக்கு' என்றார். அதற்காகவே.. அந்தப் பண்புக்காகவே.. பாரத ரத்னா கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது. 'பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக எத்தனையோ செய்கிறார்கள்.. அவர்களைப் பொறுத்தவரை அவை தியாகங்கள் அல்ல.. இந்த நாள் வரை என் பெற்றோர்கள் உனக்காக இதைச் செய்தேன் அதை இழந்தேன் என்று சொன்னதில்லை..' என்றார். இந்த வரிகளுக்காக அடுத்த வருட பாரத ரத்னாவையும் அவருக்கே வழங்கவேண்டும்.

ஸசினை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. எப்படிப்பட்ட பெற்றோர்கள்! 'இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை நான் வாங்கிக் கொடுத்தது.. இன்னிக்கு நீ சம்பாதிக்கிற வேலை படிச்ச படிப்பு நான் போட்ட பிச்சை.. இன்னிக்கு நீ கட்டியிருக்கிற புடவை என் ரத்தத்தைக் கொட்டி சம்பாதிச்சது..' என்ற பாணியில் புழங்கும் பெற்றோர்களையே இன்றளவும் சந்தித்துச் சந்தித்து.. ஸசின் பேச்சைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. ஸசினுடைய பெற்றோர்களுக்கும் பாரத ரத்னா தரவேண்டும்.

2013/11/25

நவம்பர் 24, 2014



    னக்கும் செவ்வாய் தொடும் விருப்பம் உண்டு. செவ்வாய்க்குச் சொந்தக்காரர் கோபித்துக் கொள்வாரோ என்ற கலக்கமும்.

இஸ்ரோ காரர்கள் செவ்வாயைத் தொடப் போகிறார்களாம். கொடுத்து வைத்தவர்கள்.

செய்தியைப் படித்ததும் அமெரிக்காவின்... இல்லை.. உலகின் அத்தனை பேரையும் போல் நானும் வியந்து அசந்தேன். சில சைனாக்காரர்கள் போல் பொறாமையில் வேகவில்லை. சில அமெரிக்கர்கள் போல அல்பமாக யாஹூவில் கமென்ட் போடவில்லை. நம்பள்கி குடியுரிமை நஹி ஹை என்றாலும் பாரதியைக் கொண்டாடும் பாத்தியதை உண்டு என்ற தைரியத்தில் எங்கள் பாரத தேசமென்று கொஞ்சம் தோள்கொட்டினேன்.

இதுவரை பழுதில்லாமல் இயங்கி வரும் மங்கல்யான் (சரியா?) தொடர்ந்து அப்படியே இயங்கி பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி பல விதங்களில் இந்தியாவை மேம்படுத்தும். செவ்வாய்ப் பயணத்தில் ஆசியாவில் முதலிடம், உலகின் நான்காவது இடம் போன்ற சாதா சாதனைகள் ஒரு புறம் இருக்க, நிறைய நெய் மசாலா சாதனைகளுக்கான வாய்ப்பு நாக்கைச் சப்புக் கொட்ட வைக்கிறது.

அமெரிக்க நாசா இயக்கம் ஒரு செவ்வாய்ப் பயணத்துக்கு இரண்டாயிரத்தைனூறு மிலியன் டாலர் செலவழிக்கையில் இந்தியாவின் இஸ்ரோ எழுபத்தைந்து மிலியன் டாலர் செலவழித்ததாகப் படித்ததும் தூக்கிவாரிப் போட்டது. இரண்டு பேத்துல யாரோ சில சைபருங்களை சாப்ட்டாங்களா?. இது உண்மையா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இது உண்மையாக இருந்தால் இந்தியாவின் மங்கல்யான் எப்படி இருக்கும் என்ற கிண்டல்கள் இன்னொரு புறம் இருக்க.. இது உண்மையாக இருக்குமா என்ற ஸ்ட்ரடீஜிக் கேள்வி எழுகிறது.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சைனா 'ஏழை' நாடாக இருந்தது. தொழில்நுட்பம் எல்லாம் பெரிதாக ஏதும் இல்லை. வசதியும் இல்லை. ஆனால் கனவு மட்டும் இருந்தது. அமெரிக்கத் தொழில் நுட்பங்களை மிகச் சுலபமாகவும் மிகக் குறைவான செலவிலும் சைனாவில் செயல்படுத்த முடியும் என்று மார்தட்ட வைக்கும்படி ஒரு கப்பல், ஒரு கார், ஒரு சூபர் கம்ப்யூடர், ஒரு ஏவுகணை, ஒரு ட்யூப் ரயில், ஒரு விமான நிலையம், ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் (ஆமாம்.. அதற்கான தொழில் நுட்பம் கூட சிக்கலாக இருந்த காலம்) என்று வரிசையாக பத்தில் ஒரு பங்கு ஐந்தில் ஒரு பங்கு என்ற செலவில் செய்து காட்டியது.. அமெரிக்காவை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தது. 'கம்யூனிஸ்ட் என்றால் செருப்பை எடு' என்றிருந்த நாட்டின் முதலாளிகள் திடீரென்று மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அசலில் சைனா எத்தனை செலவழித்தது என்று இப்போது பல கருத்துகள் நிலவினாலும், சீன அரசாங்கத்துக்கு மட்டுமே உண்மை தெரியும். ஆனால் அந்தத் தந்திரம் அவர்களுக்கு முழுப் பலனையும் அளித்திருக்கிறது. 'கம்யூனிஸ்டாக இருந்தால் என்ன?' என்று தங்களுக்குள்ளேயே சமாதானக் கேள்விகளை எழுப்பிய அமெரிக்க வர்த்தக உலகம், திடீரென்று தங்கள் தொழிற்சாலைகளை ஒட்டு மொத்தமாக சைனாவுக்கு மாற்றத் தொடங்கியது.

2007ல் நாற்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சீன-அமெரிக்க வர்த்தக சங்கம் வெளியிட்டிருக்கும் சில 'கவலை'களில் சைனாவில் தயாராகும் பொருட்கள், சீன தொழில் நுட்பம்.. இவை ஏறக்குறைய அமெரிக்காவின் செலவு உயரங்களை எட்டிவிட்டது என்றும், நாற்பது வருட டாலர் மற்றும் தொழில் நுட்ப முதலீட்டின் பலமிருந்தும் சைனா இன்றைக்குக் கூட புதிதாக எதையும் செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் திட்டங்களை மட்டுமே செயல்படுத்துகிறது என்றும், அமெரிக்க நிறுவனங்களுக்கு முழு சலுகை தராமல் உள்ளூர் வணிகத்தை சைனா கட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது என்றும் நிறைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இனி இந்தத் தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டு போகவும் முடியாது. ஆக, சைனா முதலீட்டால் அமெரிக்கர்களுக்கு என்ன பயன் என்று நிறைய பேர் கேட்டார்கள். அமெரிக்க கேபிடலிசத்தை மெள்ளப் பழிவாங்கிய சீன கம்யூனிசம் என்று ஜாடையாகச் சொல்லவும் தவறவில்லை. சீன பொருளாதாரம் இன்றைக்கு உலகின் இரண்டாவது இடத்தைப் பிடித்து சில வருடங்களில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் அபாயத்தை எடுத்துச் சொல்லிப் புலம்பினார்கள். சைனா தும்மினால் அமெரிக்காவுக்கு இன்றைக்கு நிமோனியா வரும் நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி ஆளுக்காள் வயிற்றில் அடித்துக் கொண்டார்கள்.

'உற்பத்தி மையப் பொருளாதாரத்திலிருந்து அறிவாக்க மையப் பொருளாதாரத்துக்கு அமெரிக்கா மாறி வருகிறது, இன்னும் வேகமாக மாறவேண்டும்' என்று பில் கேட்ஸ், ஜேக் வெல்ச், வாரன் பபட், ரஜினிகாந்த் (ஹிஹி.. யாருனா இதுவரைக்கும் படிக்கிறாங்களானு பார்க்கத்தான்) போன்றவர்கள் இருபது வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள். ஓரளவுக்கு அமெரிக்காவும் மாறியிருக்கிறது என்றே சொல்வேன். எனினும் அறிவாக்கத்தின் பயன்பாடு என்று வரும்பொழுது உற்பத்தியை நம்ப வேண்டியிருக்கிறது. அதற்கு சைனாவை நம்பி இறங்க வேண்டியிருக்கிறது என்பதையும் மறக்கவோ மறைக்கவோ இயலவில்லை.

கடவுள் மதம் என்று கண்மூடித்தனமாக அடித்துக் கொண்டாலும் அடிப்படையில் இந்தியர்கள் அறிவாக்கப் பேர்வழிகள். சந்தேகமேயில்லை. சமீப காலமாக அறிவாக்கத்தை வணிகப்படுத்தவும் முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இதற்காகக் கொஞ்சம் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது என்பதை, ஐஐடி படித்து ஜாவா கோபால் என்று முடங்கியக் கூட்டத்தைப் பார்த்தால் தெரியும். ஐடி துறை இந்தியாவுக்கு பல சலுகைகளையும் சில ஏணிகளையும் வழங்கியது. இந்தியாவுக்கு ஐடி வேலைகளை மாற்றினால் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்று அடித்துப் பிடித்து இறங்கிய மேற்கத்தி நிறுவனங்கள், இன்றைக்கு யோசிக்கத் தொடங்கியிருக்கின்றன. 'இந்தியா ஒன்றும் அத்தனை சீப் இல்லை' என்று சொல்லும் அமெரிக்க அதிகாரிகள், அதே நேரம் தங்கள் தொழில் நுட்பம் மற்றும் பட்டறிவை இந்தியாவுக்குப் பறிகொடுத்து விட்டோம் என்ற கலங்க வைக்கும் உண்மையையும் உணர்ந்திருக்கிறார்கள். எதுவும் செய்ய முடியாது. ஐடி துறையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும். ஐடியைத் தொடர்ந்து பிபிஓ, எஞ்சினியரிங் டிசைன், மெடிகல் ரிசர்ச் என்று பலவகை அறிவாக்க சேவைகளை இந்தியா வழங்கத் தொடங்கி, இன்றைக்கு அந்தத் துறைகளிலும் இந்தியாவின் கொடி மெல்லப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் டிசைன் செய்யப்பட்ட அமெரிக்கக் கார் சைனாவில் தயாரிக்கப்படுவதை இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் இந்தியாவின் டிசைன் சம்பாத்தியம் சைனாவின் உற்பத்திச் சம்பாத்தியத்தில் ஏறக்குறைய பாதி என்பது குறிப்பிடத்தக்கது! இந்த டிசைன் வியாபாரத்தில் இந்தியர்கள் ஒரு மணி நேரத்தில் சைனாக்காரர்களை விட ஏறக்குறைய மூன்று மடங்கு சம்பாதித்தார்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது (per capita revenue comparison).

விடுங்கள், செவ்வாய் தொடலுக்கு வருகிறேன்.

அடுத்த ஐம்பதாண்டுகளின் வணிக வளர்ச்சிக்கான ஆதார மையமென்று வரிசைப்படுத்தினால் செயற்கை உணவு (புரதம்), போர்க்கருவிகள், தகவல், உலகக் கல்வி, விண்வெளிச் சாகுபடி.. இவை முதல் ஐந்தில் அடங்கும். கொஞ்சம் கவனித்தால் இவை ஐந்துக்கும் பொதுவான ஒரு நரம்பு இருப்பது புலப்படும்.

விண்வெளிச் சாகுபடி.

கண்ணுக்கெட்டும் சந்திரனாகட்டும் கண்ணுக்கெட்டாத சனியனாகட்டும் இடைப்பட்ட ஆஸ்டிராய்ட் பட்டியாகட்டும்.. விண்வெளியில் சாகுபடி செய்ய நிறைய இருக்கிறது. செய்ய நிறைய பேர் போட்டியிடுகிறார்கள்.. இடுவார்கள். இந்தியா சாகுபடி செய்கிறதோ இல்லையோ சாகுபடிக்கான நுட்பமும் கருவியும் செய்ய முன்வந்திருப்பதாகவே நினைக்கிறேன். மீன் பிடிக்கும் போட்டியில் கலந்து கொள்வதை விட, போட்டியாளர்களுக்குத் தூண்டில் விற்கும் வேலையில் இறங்கியிருப்பதன் சாமர்த்தியம் கொஞ்சம் பிரமிக்க வைக்கிறது. செவ்வாய் தொடல் ஒரு தூண்டில். தூண்டில் சாம்பிள்.

உண்மையில் இருநூறு மிலியன் செலவழித்து விட்டு அதை அமுக்கி வாசிக்கிறார்களோ என்று ஒரு சின்ன சந்தேகம். அது உண்மையானால் அந்த தந்திரத்துக்கு ஒரு ஜே. அல்லது செலவழித்தது எழுபத்தைந்து தான் என்றால் அந்தத் திறமைக்கு டபுள் ஜே. அடுத்த பத்து ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் அத்தனையும் உன்னைப்பிடி என்னைப்ப்பிடி என்று செயற்கைக் கோள்களையும் இன்னும் பல விண்வெளிச் சாகுபடி வேலைகளையும் இந்தியாவுக்கு வழங்கும். எழுபதுக்கும் குறைவாகச் செலவழித்து ஐநூறு மிலியன் வரை இந்தியா சம்பாதிக்கக் கூடும். வல்லரசாவதற்கான ஏணி. சந்தேகமேயில்லை.

சாத்தியங்களை என் கற்பனையால் கட்ட முடியவில்லை. இன்னும் அறுபது வருடங்களில் ஒரு பெரிய ஆஸ்டிராய்ட் பூமியைத் தாக்கும் என்கிறார்கள். அதை விண்ணில் அடித்து நொறுக்க கணைகள் ஏவ வேண்டும் என்கிறார்கள். அதற்கான முனைப்பில் இறங்க வேண்டும் என்கிறார்கள். யாருனா சீப்பா விண்வெளிக் கப்பல் விடுறாங்களா பார்த்துச் சொல்லுங்ணே.

இந்த செவ்வாய் தொடலின் பக்க விளைவுகளில், வணிக சாத்தியத்தை விட இந்தியாவின் அறிவுத்திறன் சிறப்பாகப் பயன்படுத்தபட ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது விலைமதிப்பில்லாத ஒன்றாகும். பொறியியல் மேற்படிப்பு படிப்பவர்கள் டெஸ்டிங் டிவலெப்மென்ட் சப்போர்ட் என்று ஜாவாவிலும் லினக்சிலும் இறங்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஒரு இனிமையான சாத்தியம்.

திடீரென்று lbw ஆகும் சாத்தியமும் இருக்கிறது. அடுத்த ஐம்பதாண்டுகளைப் பார்க்காமல் வல்லபபாய் படேல் சிலை திறப்பு விழாவைக் கொண்டாடி சென்ற ஐம்பதாண்டுகளின் குழிகளில் விழுந்தால் எழுவது கடினம். இந்திய இளமை கவனமாக இருக்க வேண்டும்.

அதற்கும் முன்னால் செவ்வாய் தொடுவதில் குறியாக வேண்டும். (க்கும்.. நீ பக்கத்துல வந்தாத்தானே பட்டு?)

2013/11/22

மெல்லிசை சல்யூட்



    சில வருடங்களுக்கு முன் அவரை சிகாகோவில் சந்தித்தேன்.

தம்பதிகள் இருவரும் பெண் வீட்டுக்கு வந்திருந்தார்கள். மனைவியின் இணைய அறிமுகம் இருந்தாலும் இருவரையும் முதல் முறையாக நேரில் சந்தித்தது அப்போது தான். கணவரை அறிமுகப்படுத்தினார்.

முகப் புன்னகைக்கும் புன்னகை முகத்துக்கும் என்ன வேறுபாடு?

சிலருக்கு புன்னகை இயல்பாக வரும். சிலருக்கு புன்னகை எளிதாக வரும். சிலருக்கு புன்னகை சற்று முயற்சி செய்தால் வரும். சிலருக்கு புன்னகை என்ன விலை என்றும் தெரியாது (இதயம் சொன்ன விலை என்றால் என்ன? இன்னொரு பதிவுக்கான கரு).

என்னை அறிமுகப் படுத்திக்கொண்ட போது கவனித்தேன். அவருடைய முகமே புன்னகையைச் சுற்றிப் படைக்கப்பட்டிருந்தது. கண்களின் நட்புக் காந்தம் தற்காலிகமாக மறக்க வைத்தாலும் அவருடைய முகப் புன்னகை அகத்திலிருந்து வருவதை உடனே உணர்த்தியது. புன்னகை முகம்.

புன்னகை முகங்களிடம் ஒரு சிறிய சிக்கல். பொதுவாகவே எதையும் மறைத்துப் பேசத் தெரியாமல் திண்டாடும். (எனக்குப் புன்னகை முகம் கிடையாது).

புன்னகை முகங்களிடம் ஒரு வசதி. அவர்கள் எதுவுமே பேச வேண்டியதில்லை, அமைதியாக இருந்தாலே போதும். அப்படி வாயைத் திறந்து ஏதாவது பேசினால் இன்னும் ஈர்ப்பாக அமைந்து விடும்.

அதனால் அவர் புன்னகை முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதா ஏதாவது கேட்பதா என்று எண்ணி முடிக்குமுன் அவரே பேசத் தொடங்கினார். சிகாகோவின் சுற்றுப்புறம், சென்னையின் சுற்றுப்புறம், தொலைக்காட்சி, பிடித்த சினிமா, நடிகை, பத்திரிகை, பொழுதுபோக்கு.. என்று நிறைய விஷயங்களைக் கொஞ்சமாகப் பேசினார். அதுவே போதுமானதாக இருந்தது.

அதற்குப் பிறகு சென்னையில் இரண்டு முறை சந்தித்தோம் என்று நம்புகிறேன். சுவாரசியமான உரையாடல்கள். அவருடைய தெருவில் ஒரு பிரபலத்தின் வீடு பூட்டிக் கிடந்தது. குடும்பச் சண்டை. பூர்வீக வீட்டை விற்கத் தீர்மானித்திருந்தார்கள். என் கையில் நாலு காசு கிடையாது.. இருந்தாலும் என்ன விலையிருக்கும் என்று கேட்டேன். 'நாப்பது சொல்றாங்க' என்றார். 'நாப்பது லட்சமா பரவாயில்லையே?' என்றேன். 'ல இல்லை கோ' என்றார். புன்னகைக்குத் தேவையிருக்கவில்லை. நான் மனதுள் பல படிகளும் வெளியே நாற்காலியிருந்தும் தடுமாறி விழுந்தேன். அரசியல் பேசினோம். அம்பேத்கர் பற்றிப் பேசினார். இந்தி சினிமா பற்றிப் பேசினோம். குரு தத் பற்றிப் பேசினார். நூதன் பற்றிப் பேசினார். மயிலையின் வளர்ச்சி, தெருமுனை பெரிய ஆஸ்பத்திரியின் (பெயர் மறந்து போனதே!) வளர்ச்சி, பிரமுகர்கள் என்று பலவாறு பேசுகையில் இருவருக்கும் பொதுவான ஒரு கனவை அறிந்து கொண்டோம். அவருக்கு ஆடோமோடிவ் தொழில்நுட்ப ஞானம் அபரிமிதம். எனக்கு ஞானம் பெரும் ஆசை அபரிமிதம். நான் சென்னையில் ஒதுங்கத் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். வசதி கிடைக்கும் பொழுது இருவரும் இணைந்து ஒரு hotrod project செய்ய வேண்டும் என்றேன். பலமாக ஆமோதித்தார். புன்னகைக்குத் தேவையிருக்கவில்லை.

நான் சென்னையில் ஒதுங்கும் வரை அவரால் காத்திருக்க முடியவில்லையா.. அல்லது என்னை நம்பி ஒரு பயனும் இல்லை என்பதை அவரும் சுலபமாகப் புரிந்து கொண்டுவிட்டாரா தெரியவில்லை (எனக்குப் புன்னகை முகம் கிடையாது என்று சொன்னேனே.. அகத்தில் இருப்பது என் முகத்தில் மறைக்கப்படும்).. அவராகவே ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.

இவரின் குணாதியசங்களை என்னுடைய இரண்டு கதை மாந்தர்களிடத்தே வெட்கமில்லாமல் புகுத்தியிருக்கிறேன். தம்பதியரை வைத்து ஒரு முழுக்கதையும் உரிமையுடன் புனைந்திருக்கிறேன்.

எந்தப் பிரிவுமே கொஞ்சம் வருந்த வைக்கும். அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் பிரிந்தால் வருத்தம் தீவிரமாகிறது. சில மணி நேரங்களே தெரிந்தவரைச் சில காலம் புரிந்தவராய்க் காணுமுன்னே பிரிந்தால் வருத்தத்துடன் ஏமாற்றமும் கூடுகிறது.

பிரிவில் வருந்துவதே வாடிக்கையாகி வருகிறது எனக்கு. அதுவும் அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஆள் விழுங்கி மாதங்களாகி விட்டன.

நவம்பர் விழுங்கிய இன்னொரு தங்கம், இந்தச் சிங்கம்.

பிரிவுகள் சோகங்கள். நினைவுகளோ ராகங்கள். கொடிய சோகங்களும் தற்காலிகம். இனிய ராகங்கள் நிரந்தரம்.

வல்லிசிம்ஹனுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், என்னுடன் வரும் அத்தனை பதிவர்களின் அளவிலா அன்பும். சிங்கத்துக்கு ஒரு மெல்லிசை சல்யூட்.

இது ஒரு ஆங்கில கிராமிய மெட்டின் இந்தி வார்ப்பு. திகட்டாத இனிப்பு வகை. இனிய சந்திப்புகளின் நினைவில் மலரும் நூதனின் முகம். எளிய கவிதை வரிகளுக்குத் துள்ளும் இசை. உயிரை வருடும் ஆஷாவின் குரல். இந்த இனிய ராகம், சிங்கத்தின் நினைவில்.


2013/11/20

மெல்லிசை நினைவுகள்



    ன்டர்வேரு கோடு தெரிய லுங்கி கட்டு போன்ற சொல்லாடலும் கருத்தாழமும் கொண்ட சமீபத் தமிழ்ச் சினிமா பாடல்கள் பற்றிய எங்கள் ப்லாகின் புலம்பலை.. பதிவைப் படித்ததும் இந்தப் பாடல் என் நினைவுக்கு வந்தது. உடனே பதினைந்து முறையாவது கேட்டிருப்பேன். இந்தப் பாடலின் எளிய இனிய தமிழ்க்காதல் வரிகள் எனக்கு அந்தக்கணமே தேவைப்பட்டது.

அன்புக்கனிச் சாறெடுத்து
அந்திவெயில் சூடேற்றி
இன்பமென்று நீ கொடுத்தால்
என் மயக்கம் தீராதோ...?

ஆகா! தமிழில் காதலிப்பது எத்தனை இதம்! எத்தனை இன்பம்!

என் டாப் 10 காதல் பாடல்களில் இது ஒன்று. எனினும் கேட்ட புதிதில் இந்தப் பாடலை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பாடல் அவ்வப்போது வானொலியில் ஒலிபரப்பானாலும் ஆணின் குரலைக் கேட்டதும் மாற்றிவிடுவேன். ஏனோ இவரின் காதல் டூயட்கள் என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை.

இந்தப் பாடலை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியது அரசன் ஆவார்.

என் ஆசிரிய நண்பர் அரசனின் எழுத்தாக்க வகுப்புகள் பற்றி எழுதியிருக்கிறேன். 'சினிமாவில் காதல் பாடல்கள்' பற்றி ஒருமுறை வகுப்பில் உரையாடல் நிகழ்ந்த போது அரசனின் உள்வட்டமான எங்கள் நால்வரில் மூவர் இந்தப் பாடலைப் பற்றிச் சொன்னார்கள். நான் கிண்டல் செய்தேன். பதிலுக்கு சாவியும் அரசனும் என்னை ரசனை கெட்ட எமவாகனம் என்று ரொம்பவே படுத்திவிட்டார்கள்.

உள்ளம் என்ற ஊஞ்சலிலே
பள்ளிகொண்ட ஆருயிரே
மெல்ல மெல்ல நான் தொடவா
அல்லிமலர் தேன் தரவா?

'மெள்ள மெள்ள நான் தொடவா?' என்று ஏன் எழுதவில்லை கவிஞர்?

இதுதான் அரசனின் கேள்வி. இதை நான் விளக்குவது அரசனுக்குச் செய்யும் துரோகம் என்றாலும் அந்த நாள் நினைவுகளால் அவ்வப்போது வலிக்கும் என் மனவீக்கத்துக்கு நானே தரும் தமிழ் ஒத்தடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சாவியைப் பற்றி நான் எழுதியவற்றை நீங்கள் படிக்கத் தவறியிருந்தால்.. வெட்கம் கூச்சம் எல்லாம் பொதுவில் சற்றுக் குறைவாகவே வெளிக்காட்டுவாள் சாவி. 'உங்களுக்கு மட்டும் வெக்கம் எல்லாம் கிடையாது.. நாங்க மட்டும் பொத்திக்கிட்டு இருக்கணுமா? போடா மயிரு' என்பாள் சர்வ சாதாரணமாக. 'மெல்ல நான் தொடவா' என்ற இந்த வரியை அரசன் ரசித்து அனுபவித்து விவரித்த விதம் கேட்டு சாவிக்கும் கூச்சம் வந்துவிட்டது.

காற்று மெல்ல வீச வேண்டும். கைகளை மெள்ள வீச வேண்டும். நன்றியை மெள்ளச் சொல்ல வேண்டும். காதலை மெல்லச் சொல்ல வேண்டும். நாணம் மெள்ள விலக வேண்டும், முத்தம் மெல்ல வலிக்க வேண்டும், மோகம் மெள்ளத் துடிக்க வேண்டும்.. இங்கே ஒரு பெண் தன் காதலனை மெல்லத் தொடவா என்று கேட்பது காதல் போதையின் உச்சம். மெல்லத் தொடும் காதலி உடனிருந்தால் அல்லிமலர் தேன் யாருக்கய்யா வேண்டும்.. தொடவா தரவா சொற்களின் 'தொட வா' 'தர வா' மறுபொருள் பிரித்து.. இந்த ரீதியில் போன அரசனின் 'மெல்ல மெள்ள' விளக்கம், என் போன்றவர்களை நாக்கைத் தொங்கப் போட வைத்தது என்றாலும் சாவியின் கன்னம் சிவந்ததை அன்றைக்குப் பார்த்தேன். அறிவு தெறிக்கும் பெரிய கண்களை இமைப்போர்வையினால் தாழ்த்தி குப்பென்று சிவந்திருந்தாள்.

அதற்குப் பிறகு 'மெல்ல மெள்ள' பற்றிய குழப்பமே எனக்கு வந்ததில்லை.. ஹிஹி.

அந்நாட்களில் இந்தப் பாடலை இரண்டாம் தட்டுக்கும் கீழே வைத்திருந்தேன். பின்னாளில் ஒருமுறை அரசனுடன் செய்த கார் பயணத்தில் இந்தப் பாடலை மீண்டும் முதல்முறையாகக் கேட்டு மனதைப் பறிகொடுத்தேன். பாடல் பற்றிய அரசனுடனான உரையாடல்களோ பறிகொடா தேன்.

மின்னல் வரும் மேகத்திலே
உன் கூந்தல் போனதென்று
மெல்லிடையைத் தூதுவிட்டு
தள்ளாடி வந்தாயோ..?

வரிக்கு வரி போட்டி போடும் நளினம். சுத்தமானத் தமிழ்க்காதல். உடனே இப்படிப் பாடி யாரையாவது காதலிக்கத் தூண்டவில்லை?

இந்த வரிகளின் கவிதையை அரசன் உணர்ச்சி பொங்க ரசிப்பார். கூந்தல் ஏனய்யா மேகத்தோட போவுது? தன்னோட இனமாட்டம் இருக்குதேனு நிறத்தை வச்சுப் போச்சா? இல்லே இந்தப் பெண்ணோட முகம் மேகத்தில் வந்த மின்னலின் ஒளி போல் இருக்குதேனு ஏமாந்து ஓடிப்போச்சா? அப்படிப் போனாலும் இந்தப் பொண்ணு கிட்டே வேறு ஆயுதங்கள் இருக்குதய்யா.. மின்னலை நம்பி மேகத்தோட போன கூந்தலை எப்படிப் பிடிக்கிறது? அவளோட இடுப்பு மின்னலை விட வேகமா ஒடிக்குமே? 'மின்னலைத் துரத்திக்கிட்டு போய், மெல்லிடையே, என் கூந்தலை என்னிடம் கொண்டு வா'னு தூது அனுப்புறா.. என்னா பாட்டுய்யா! இதைப் போய் இரண்டாம் தட்டுனு சொல்லுறியே? நீயெல்லாம் ஏன்யா தமிழ் படிச்சே? ரசனை கெட்ட நண்பரய்யா.. அதான் தமிழ் மறந்து தள்ளாடுறே... என்று கவிதை ரசனையிலிருந்து என் தமிழ் மறதியைப் பிடித்து கொண்டுவிடுவார். அந்தப் பயணத்தில் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டோம் என்று கணக்கு வைக்கவில்லை.

அரசனும் சாவியும் இன்றில்லை.

இந்தப் பாடல் தொட்ட நினைவுகள் மாத்திரம் என்னுடன்.. எங்கள் நட்பின் பச்சை முத்திரையாய்.

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்... என்றாலும் இந்தப் பாடலின் மண்வாசனை என்னை இன்றைக்கும் கட்டிப்போடுகிறது.

காதலி மடிமேல் மெல்லத் தலைவைத்து அவளை மெள்ள அள்ளும் செய்கையாக ஓசைப்படாமல் உள்ளத்தில் பரவும் மெட்டு, இசை. ஈஸ்வரியின் அள்ளிக்கோ ப்லீஸ் என்னை அள்ளிக்கோ கெஞ்சல். சீர்காழியைத் தவிர இந்தப் பாடலை வேறு யார் பாடியிருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று இப்போது தோன்றுகிறது.

வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்களென்று சொல்லலாகுமோ...?

சோகங்களை மறக்க சில நேரம் இசை தேவைப்படுகிறது.. சில நேரம் தமிழ்.. சில நேரம் காதல்.
மறந்த சந்தோஷங்களை மீட்க மூன்றுமே தேவைப்படுகிறது.

அரசனின் நினைவில் இது. அவளின் நினைவிலும்.



2013/11/08

ஓட்டி சொன்ன கதை



    "சும்மா நீங்க ஏதோ பத்து நாளைக்கு ஆட்டிகிட்டு வந்து ஆட்டிகிட்டு போறதுனால அக்கறையிருக்காப்புல இதெல்லாம் கேக்குறீங்க.. விடுங்க, உங்களுக்கும் பொழுது போவுது.. எங்களுக்கும் பேச்சுத் துணை.. இல்லாதபோனா எங்ககூட மொவம் கொடுத்து யாரு பேசுறா? அதேன். இவங்கள்ள பலவேரு நாயிங்க...செலவேரு பன்னாடையிங்க.. இன்னுஞ் செலவேரு பீ சாக்கடை புளு மூத்திரம்.. ஐயோ நெசமாத்தாங்க.. மத்தவங்களைப் போல இவிங்களும் ஆறு வேள தொளுவானுங்க... மதம்பானுங்க.. ஆனா உள்ள கெட்டவளக்கம் ஒட்டும் மனசாலயும் உடம்பாலயும் செஞ்சுத் தீத்துருவானுங்க.. அரசாங்கமா? போலீஸா? என்னா சொல்றீங்க நீங்க? ஐயா.. உங்களுக்கு ஒண்ணு தெரியுங்களா? ஒரு தப்பு நடந்துச்சுனு வையுங்க.. அட.. இப்ப கார்ல போயிட்டிருக்காங்க.. ஆக்சிண்டு ஆயிருச்சுனு வையுங்க.. இடிச்சவன், இடிவாங்குனவன், ரெண்டுவேரும் இந்த நாட்டாளுங்களா இருந்தா போலீஸ் வராது.. அவனுங்களே தீத்துக்குவானுங்க.. அப்படியில்லாம இடிச்சவன் இந்த நாட்டாளா இருந்தா, எதிராளி யாராருந்தாலும் அவன் மேலதான் பளினு சொல்லிருவானுங்க போலீஸ்காரனுங்க.. இடிச்சவனோ இடிவாங்குனவனோ ரெண்டுத்துல யாருமே இந்த நாட்டு ஆளில்லேனு வைங்க.. இப்ப நியாயம் கிடைக்குற டெக்குனிக்கு இருக்குது பாருங்க.. இந்த சூச்சுமம் உலகத்துல வேறெயெங்கியும் கிடையாதுங்க.. கேளுங்க சொல்றேன்.. இடிச்சவன் எதிராளி ரெண்டு பேத்தையும் பாப்பானுங்க.. ரெண்டும் ஒரே சனமாருந்தா அடிச்சுட்டு சாவுங்கறானு விட்டுருவாங்க.. அதில்லாம ஒருத்தன் அமெரிக்கனா இருந்தா அவன் மேலே பளி வராது.. அமெரிக்கன் இல்லின்னா இங்கிலிஸ்காரனா இருக்கணும்.. அதில்லின்னா ஏதோ வெள்ளைத்தோலா இருக்கணும்.. அதுக்குப் பிறவு இந்தியனா இருக்கணும்.. அதுக்குப் பிறவு மத்த அரபியில்லாத முஸ்லிம் ஆளுங்க மலேசியா, பாகிஸ்தானி இப்படி யாராவதா இருக்கணும்.. அப்படியில்லின்னா பிலிப்பினோ.. இருக்குறதுல மோசம் பங்லாதேசு ஆளுங்கதான்.. வண்டில அடிவட்டு செத்துக் கிடப்பான் பங்லாதேசி.. இருந்தாலும் அவன் மேலேதான் பளி.. செத்துட்டு வந்து மோதிட்டான்னு சீட்டு எளுதிருவானுங்க. சில நேரம் ஆக்சிண்டுல கலக்காத ஆனா அந்தப் பக்கமா வந்து வண்டிய நிறுத்தின பங்லாதேசியைப் பிடிச்சு அவன் மேலே பளி போட்டுருவாங்க.. இதான் நியாயம் இங்கே. இங்க கிடைக்குற நியாயமெல்லாம் தோல் நெறம், பாஸ்போர்ட்டு பாத்து கிடைக்குற படிக்கட்டு நியாயம்.. அதனால போலீஸையெல்லாம் யாரு கூப்புடறாங்கய்யா? ஆனா நியாயத்துக்கெல்லாம் நேரமில்லிங்க போலீஸ்காரனுங்களுக்கு.. அவனுங்களுக்கு நிறைய சோலியிருக்குதுங்க பாவம்.. பொதுசன நியாயத்தைப் பாத்துட்டிருந்தா சீமைச் சாராயம் விக்குறது, பொண்ணுங்களைக் கூட்டிக் கொடுக்குறது.. இதையெல்லாம் யாரு செய்வாங்க? ஐயோ நிசமாத்தாங்க.. இப்படித்தேன் ஒரு தடவை என்னாச்சு.. ஒரு புருசன் பொஞ்சாதி.. கொளந்தைங்க இல்ல.. அவங்க மட்டுந்தேன்.. ரெண்டு பேரும் ஹம்ராஸ்பத்திரிலே பெரிய தபீபு கிட்டே நர்சா இருந்தாங்க.. பொண்ணு அளகா தளதளனு இருக்கும் முஸ்லிம் பொண்ணு, ஆனா அரபி கிடையாது.. ரெண்டு போலீஸ்காரனுங்க அந்த வீட்டை நோட்டம் பாத்துட்டே இருந்திருக்காங்க.. தீடீர்னு ஒரு நா சாயந்திரம் அவங்க வூட்டுல புவுந்துட்டாங்க.. புருசங்காரன் பொஞ்சாதியை உள்ளாற போவச் சொல்லிட்டு என்னா விசயம்னு அவங்களைக் கேட்டிருக்கான்.. நாயிங்க ரெண்டும் அவங்கிட்டே டேய் ஒம்பொஞ்சாதியை எங்ககூட ராப் படுக்கவிடுனு கேட்டிருக்காங்க... அவன் திகைச்சுப் போனதும் இவங்க விடாம டேய் எப்படியிருந்தாலும் இன்னிக்கு அவளை ஆண்டுருவோம் ஒங்க ரெண்டு பேத்தையும் கொன்னுருவோம்னு மெரட்டியிருக்காங்க.. புருசங்காரன் நிதானமா, கொஞ்சம் இருங்கய்யா எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லே.. எம்பொஞ்சாதிக்கும் பிரச்சினையில்லே.... ஆனா தயவுசெஞ்சு ஒத்தொத்தரா அனுபவியுங்க.. அவ ஏற்கனவே ஒரு மாச கெர்ப்பமா இருக்கா.. கொஞ்சம் கண்ணியமாப் போவும்னு கெஞ்சியிருக்கான்.. நாயிங்க சரின்னதும் புருசங்காரன் ஐயா நான் போயி பொஞ்சாதிகிட்டே பக்குவமா சொல்லி படுக்கையை சுத்தம் செஞ்சிட்டு ஓடியாறேன்னு உள்ளாற போய்.. பொஞ்சாதி கிட்டே விவரம் சொல்லி எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டு வந்தான்.. சொல்றேன்.. ரூம்புல ஒரு விடியோ கேமராவை செட் பண்ணிட்டு, கோளி சீவுற கத்தி ஒண்ணை கட்டில் தலைமாட்டுல மறைவா மாட்டி வச்சுட்டுப் போயிருக்கான் புருசங்காரன். ஐயா நாய்மாருங்களே.. போங்க எம் பொஞ்சாதி தயாரா இருக்கா.. கொஞ்சம் பக்குவமா நடந்து கருணை காட்டுங்க.. புள்ளத்தாச்சினு சொல்லி நாயிங்களை அனுப்பியிருக்கான்.. மொத நாயி உள்ளாற போயிருக்கான்.. பொண்ணு போத்திப் படுத்திருக்கா.. அளுதுகிட்டே ஐயா வேணாங்கனு கெஞ்சுறாப்புல கெஞ்சியிருக்கா.. இதைப் பாத்த போலீஸ்காரனுக்கு கோவம் வந்து புருசங்காரனையும் உள்ளாற வரச்சொல்லி என்னங்கடா ரெண்டுவேரும் வெளையாடறீங்களா ஒளுங்கா படுத்தா உயிரோட விடுவோம் அப்படி இப்படினு கத்தியிருக்கான்.. புருசங்காரன் சமாதானம் சொல்றாப்புல பொஞ்சாதிட்ட தாஜாவா பேசுறாப்புல பேசி வெளியே போய் கதவடைச்சான்.. பொஞ்சாதி அமைதியா போலீஸ்காரங்கிட்ட ஐயா வாங்கனு சொல்லி போர்வைய வெலக்குனா.. பாத்தா அம்மணமா படுத்திருக்கா.. ஒட்டுத் துணியில்லாத தக்காளி அம்மணத்தைப் பார்த்ததும் கெறங்கிப் போய் எல்லாத்தையும் களட்டிப் போட்டு கெடாவாட்டம் பாஞ்சிருக்கான் நாயி.. அவ வெரசலா நவுந்து, ஐயா போலீசு நீ கீள படுத்துக்கய்யா, நான் கெர்ப்பமா இருக்குறதால மேல ஏறி வரேன்னு சொல்லியிருக்கா.. அவனும் சந்தோசமா தலைமாட்டுல ரெண்டு தலையாணி அடுக்கி வச்சு வசதியா அகண்டு நல்லா நெட்டுகிட்டுப் படுத்திருக்கான்.. இவ மொள்ள அவன் வயித்து மேலே கால் மாத்திப் போட்டுக் குந்தி.. அந்தால ஏறுறாப்புல அவன் முகம் பாத்துக் குனிஞ்சு.. சட்டுனு மறைவா இருந்த வெட்டுக்கத்திய எடுத்து அவன் வாயிலயே நச்சு நச்சு நச்சு நச்சுனு நாலு தரம் குத்திக் கொன்னுட்டா.. ஊடால புருசங்காரன் கடப்பாரையால மத்த போலீசை மார்ல குத்தி, வெறி வந்தாப்புல சதையைக் கிண்டிக் கிண்டிக் குடைஞ்சுக் கொன்னுட்டான்.. வெறியடங்கின புருசன் பொஞ்சாதி ரெண்டுவேரும் விடியோவையும் அங்கருந்த எல்லாத்தையும் நாலஞ்சு போட்டாவும் எடுத்துட்டு வெளில வந்து கிடைச்ச மொத டாக்சியைப் பிடிச்சு தூதரகம் போனாங்க.. அவசர உதவி முறையில தூதர் கிட்டே பேசி விவரம் எல்லாம் சொன்னாங்க.. தூதர் அவங்களை அங்கயே தங்கச் சொல்லி யார் கிட்டேயும் எதுவும் பேசக் கூடாதுன்னுட்டாரு.. உள்ளூர் போலீஸ் பெரியதிகாரிகிட்டே விவரம் சொன்ன தூதரு, நாசூக்கா மிரட்டியிருக்காரு.. இதப்பாரு இந்த விசயத்தை இப்படியே விட்டா யாருக்கும் தெரியாம அமுக்கிறலாம், எங்க ஜனங்களை நாளைக்கே நாட்டை விட்டு அனுப்பிடறேன்.. அதைவிட்டு நீ கேஸ் போட்டு தொந்தரவு கொடுத்தீன்னா எல்லா விவரத்தையும் எங்க நாட்டு டிவியிலே போட்டுருவோம்ன்ருக்காரு.. விசயம் வெளிய வரவேயில்லே.. எனக்கு எப்படித் தெரியுங்களா.. என்ன இப்படிக் கேக்குறீங்க? விடுங்க.. இந்த ஊர்ல நெறய பேத்துக்கு இந்த விவரம் தெரியுங்க.. தா வந்திருச்சு ஐயா.. சரிங்கய்யா, போயிட்டு வாங்க. இருக்கட்டும்யா.. ரொம்ப நன்றிங்க

................. அட, எல்லாரும் மனுசங்க தானே சாமி? நாலு கடலை எடுத்து வாயில போட்டோம்னா ரெண்டு அவிசலா கடிபடுறப்ப என்ன செய்யுறோம்? மொத்தத்தையும் தானே துப்புறோம்? அது போலத்தான் சாமி.. ரெண்டு பன்னிங்க இருந்தா மொத்தமும் பன்னிப் பண்ணைனு சொல்லிடறோம்.. மன்னிச்சுருங்க. இந்த ஜிசிசி ஏரியாவுல பன்னின்ற வார்த்தையே ஆவாது.. நாயின்னே வச்சுக்குவோம்.. பாவம் வாயில்லாப் பிராணியை அடையாளமா வச்சுத்தான் கேடுகெட்ட மனுசங்களைப் பாக்குறோம்.. நம்ம மனசோட விகாரம் அப்படி.. இவங்க என்ன செய்வாங்க? ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? எவன் மதம் கடவுள்னு ரொம்ப மூடி மூடிக் கும்பிடுறானோ, அவந்தான் இருக்குற அட்டூழியம் அத்தனையும் செய்றான். இத்தனை கட்டுப்பாட்டோட இருக்குற இவங்க என்ன செய்றாங்க? வியாழக்கிழமைனா துபாய்க்கு ஓடிறானுங்க. அங்கே இருக்குற கொட்டம் அத்தனையும் அடிச்சுட்டு.. கொட்டம்னா அப்படி இப்படி லேசுபட்ட கொட்டம் இல்லிங்க.. அடிச்சுட்டு ஞாயித்துக்கிழமை ஊருக்கு வந்துருவாங்க.. கடவுளுக்கு நெருக்கமாப் போகப்போக கச்சடாத்தனம் அதிகமாயிட்டே இருக்கும்னு நினைக்கிறேன். இந்த ஊர் தாடி, நம்ம ஊர் காவி, அதா அந்தப்பக்க அங்கி எல்லாரும் அப்படித்தான். இந்த ஊர்ல மட்டும் கொஞ்சம் பரவாயில்லை சாமி. இருக்குற அரபி நாடுகள்ள இது கொஞ்சம் ஏழை நாடுனு சொல்வாங்க அதனாலயோ என்னவோ.. நம்ம ஊர் அரசியல்வாதிங்களுக்கு ஆசான் யாருனு நினைக்கிறீங்க? எல்லாம் இந்த மதகுருங்க தான். மதமும் சாமியும் என்ன சொல்லுது? எங்கே போறோம்னு சொல்ல மாட்டோம். போற இடம் நல்லாவும் இருக்கலாம் கெடுதலாவும் இருக்கலாம். இந்த மதத்து சாமியைக் கும்பிட்டா நல்ல இடத்துக்குப் போவலாம். கும்பிடாம இருந்தாலோ இன்னொரு சாமியைக் கும்பிட்டாலோ கெட்ட இடத்துக்குக் கேரன்டியா போவலாம். இதானே சொல்லுது? அரசியல்ல பாருங்க.. தலைவரு மட்டும் பதவிக்கு வந்தா நாட்டை எங்கேயோ கொண்டு போயிடுவாருனுவாங்க.. எப்படிக் கொண்டு போவாரு, அட அந்த எங்கியோன்றது எங்கே எப்படி இருக்கும்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா தலைவருக்கு மட்டும் ஓட்டுப் போடலின்னா நிச்சயம் அழிவுதான்னு சொல்லிருவாங்க. ஜனங்களைப் பயமுறுத்திக் தன்னோட கட்சிக்கு ஆதரவா மாத்துறதுல அரசியல்வாதியும் மதகுருவும் ஒண்ணுதான் சாமி.. ரைட்டுங்க.. நாலு மணிக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க, வந்துர்றேன்.

............... ராயப்பேட்டை பிரதர். வச்சிருக்குற இந்தத் தாடியெல்லாம் வேஷம்னாலும் ஒரு நன்றிக்கடன் பிரதர். ஊர்லந்து வந்தப்ப எம்பேரு அழகரசன்னு நல்ல தமிழ்ப்பேரு. சவுதி வந்து அகமது ரியாசுனு மாத்தியாச்சு.. ஏன்னா எப்படி பிரதர்? மின்னூத்தம்பது ரியால் சம்பளம்னு வீட்டு டிரைவர் வேலைக்கு வந்த எத்தினியோ ஆளுங்கள்ள நானும் ஒருத்தன்.. மதம் மாறினா நூறு ரியால் சம்மானமும் அம்பது ரியால் கூடுதல் சம்பளமும் கொடுக்குறப்ப விடுவானேன்? அதில்லாம இந்தூர்ல முஸ்லிமா இருந்தா கொஞ்சம் மதிப்பாங்க... என்ன கேட்டீங்க? இல்லே பிரதர். என்னை யாரும் கட்டாயப்படுத்தலே. என்னைக் கூட்டிவந்த பெரியவரு உண்மையிலயே பெரிய மனுசன் பிரதர். மதம் மாற சம்மதமானு அவரா கேட்டாரு. நான் சரின்னேன். தங்கமான மனுசன் பிரதர். ஹஜ்ஜு போய் வந்தவங்க பெரும்பாலும் உயர்ந்த குணமா இருப்பாங்க பிரதர். நான் மொதொ வேலைக்கிருந்த வீட்டுல என்னை டிரைவர் போல நடத்தாம வீட்டுல ஒருத்தராத்தான் நடத்துனாங்க. வருசத்துக்கு ரெண்டு செட் துணி, மாசா மாசம் சம்பளம், மூணு வேளை கறிசோறு, தங்குறதுக்கு இடம், ரெண்டு வருசத்துக்கு ஒருக்கா டிக்கெட்டு, நூறு ரியால் போனசு.. இதெல்லாம் போக.. பெரியவரு காலமாயிட்டப்ப வீட்டுக்காரங்க எனக்கு மெட்ராசுல பீடர்ஸ் ரோடு பக்கமா வீடு வாங்கித் தானமாக் கொடுத்தாங்க. அதெல்லாம் குறை சொல்லவே மாட்டேன் பிரதர். இன்னிக்கு என் பெண்டாட்டி பிள்ளைங்க ஊர்ல நல்லா இருக்காங்கனா அந்த முஸ்லிம் பெரியவங்க குடும்பம் தான் காரணம் பிரதர். என்ன.. இது போல ஆளுங்க கம்மி. நெறய பேரு..ஆமாமா.. பாஸ்போர்ட்டை பிடுங்கி வச்சுக்கிட்டு அடிப்பாங்க பிரதர்.. அதும் பொம்பிளங்க வேலைக்கு வந்தா செக்சுலந்து எல்லாப் பிரச்சினையும் கொடுப்பாங்க பிரதர்.. பெத்தவங்க பெத்துப் போட்டு வேலைக்காரி தான் பதிமூணு வயசு வரைக்கும் வளத்திருப்பா.. இருந்தாலும் வளந்ததும் வயசுக்கோளாறுல தொட்டுப் பார்ப்பான்.. ஓசியில கிடைக்குற முலையாச்சே பிரதர்? வேலைக்காரி முரண்டா அப்பங்கிட்ட சொல்லி அடிச்சு நொறுக்குவான்.. மெய்யாலும் பிரதர். அது சரி.. நீங்க கேள்விப்பட்டதும் உண்மைதான்.. நம்மூர்லந்து வேலைக்கு வந்த சிலபேரு அக்காமா வாங்கிக் கொடுத்தவங்க வீட்டுலயே ரெகளை பண்ணுவாங்க.. ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாத்தீங்கன்னா அதுல இருக்குற ஒருதலை நியாயம் புரிஞ்சுரும்.. அக்காமா எடுத்து வேலைக்கு வக்குற அளவுக்கு வசதியிருக்குறவங்க புலம்புறதுக்கும், வழியே இல்லாம எல்லாத்தையும் பறிகொடுத்து நாதியில்லாமப் புலம்புறவங்களுக்கும் வித்தியாசம் இல்லியா பிரதர்? வேலைக்கு வந்தவங்களைக் கொடுமைப்படுத்துற முதலாளிங்க தான் அதிகம் பிரதர். தம்மாமுல இன்னிக்கு கெடந்து நாறுது பிரதர் நம்ம நிலமை.. நம்ம அரசாங்கம் எல்லாம் எதுவும் செய்யாதுங்க.. நானா? நான் ஓரளவுக்கு லக்கி பிரதர். பெரியவரு போன பிறவு மத்த இடத்துல வேலைக்குப் போனப்ப எனக்கும் இந்த செக்சு தொல்லைங்க இருந்திருக்கு.. வீட்டுக்கு ரெண்டு மூணு பெண்டாட்டிங்களைக் கட்டிப்போட்டு பத்தாதுனு வாரக்கடைசில பஹ்ரெய்ன் ஓடிறுவாங்க.. பொண்ணுங்க என்ன செய்வாங்க? அவங்களும் மனுசங்க தானே? வீட்டு வேலை செய்யறவங்க அக்கம் பக்கம்னு யாருக்கும் தெரியாம கசமுசா நடக்கும்.. பொண்ணுங்க தப்பா நடந்தாத்தான் சொல்லடியும் கல்லடியும் சவுக்கடியும் பிரதர்.. ஆம்பிளங்க என்ன வேணா செய்யலாம்.. ஆனா இதெல்லாம் தப்புனு ஆண்டவன் சொல்லியிருக்காருனு அப்பப்போ வெளிப்படையா பேசிக்குவாங்க.. என்ன செய்ய.. இவங்க மதத்துல பெண்ணுங்களை அடக்கி வைக்க அலோ பண்ணியிருக்குது.. எஞ்சாய் பண்றாங்க.. நாமெல்லாம் பொறாமை பிடிச்சு அலைய வேண்டியது தான்.. மதம் மாத்துறதா? அது நடந்துட்டு தான் இருக்கு பிரதர்.. இன்னிக்கு உலகத்துல இஸ்லாம் வேகமா வளறுதுன்றாங்க.. வளரட்டும்.. இஸ்லாம் அல்லாத மதக்காரங்க நரகத்துக்குப் போவாங்க, அதனால அவங்களை மதம் மாத்தி சொர்க்கத்துக்கு கொண்ட்டு போய் சேக்குறோம்பாங்க.. தனக்கும் சொர்க்கம் கிடைக்கும்னு நம்புறாங்க.. ஹஹ.. ஆமா பிரதர்.. இவங்க இதே இஸ்லாத்து சியாக்காரங்களை லச்சக்கணக்குல கெமிகல் ஊத்தி வெடி வச்சுக் கொளுத்தி சாகடிப்பாங்க.. ஆனா அதுல தப்பே இல்லை.. ஒரு பாவமும் இல்லேன்னுறுவாங்க.. மதமே இப்படித்தான் பிரதர். இப்ப பாருங்க.. அடுத்த வருசம் இந்தியாவுல தேர்தல் வருதுல்ல. ஆட்சிக்கு வந்தா முஸ்லிம்களை விரட்டுவாருன்றதுக்காகவே பெரிய கூட்டம் மோடிக்கு ஓட்டுப் போடக் காத்துட்டிருக்குதுன்றாங்க பிரதர்.. வெக்கக்கேட்டை என்னானு சொல்ல.. ஹஹ.. இவங்களுக்காவது ஆண்டவன் எண்ணையக் கொட்டிக் கொட்டிக் கொடுத்திருக்கான், காசை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கான், நூத்தாண்டுக் கணக்கா ஒட்டகம் ஓட்டுனவங்க இன்னக்கு காரு பங்களானு வசதியா இருக்காங்க.. இருக்கட்டும்.. ஆண்டவன் கொடுத்தான்னு ஒரு சின்ன நன்றியோட இருக்காங்க மதத்தைக் கொண்டாடுறாங்கன்னு வச்சுக்குவோம்.. ஆனா நம்ம ஊர்லந்து வந்தவங்களைக் கவனிச்சீங்களா? நம்மளைப் போலவே காசுக்காக சொந்த பந்தம் பொறந்த மண்ணை விட்டு இங்க வந்தப் பிறவு.. நம்மகிட்டயே உங்க நாட்டுல முஸ்லிம் நிலமை இப்படி இருக்குதுனு இந்தியாவைப் பத்திப் பேசுவானுங்க ஒட்டுவாரொட்டிப் பல்லிங்க.. என்னவோ இவங்க இங்கியே பொறந்து வளந்தாப்புல கட்சி கட்டி இந்தப் பொறம்போக்குங்க அடிக்குற கூத்து இருக்குதே பிரதர்.. டூ மச்.. என்ன செய்யுறோம்னு கூடத் தெரியாம கூத்தடிப்பாங்க பிரதர். நம்மூர்க்காரன் கூத்தைக் கேளுங்க பிரதர். ஆமா.. நம்ம ஊர் ஆளு தான். ஊர்ல ஒரு கல்யாணம் கட்டி மூணு கொழந்தைங்க இருக்கு. இங்க வீட்டுக்குத் தெரியாம ஒரு பிலிபினோ பொண்ணைக் கட்டி வச்சிருக்கான். எல்லாம் அரேஞ்சுமென்டு. ரெண்டு மாசத்துக்கொருக்கா ஊருக்குப் பணம் அனுப்புவான். என்ன எழவோ திடீர்னு அவனுக்கும் அந்தப் பிலிபினோ பொம்பளக்கும் சண்டை. போட்டுத் தள்ளிட்டான். ரெண்டு நாள் தலமறைவா இருந்து போலீஸ்ல சரணடைஞ்சான். அப்புறம் என்ன செஞ்சான் தெரியுமா பிரதர்? அவ இஸ்லாம் மதத்துக்கு விரோதமா நடந்தா அதான் கொன்னு போட்டேன்னு கூசாம சொல்லிட்டான்... ஜட்ஜுங்க கிட்டே அய்யா என்னை இந்தியா அனுப்பிறாதீங்க.. முஸ்லிமுன்னு பாக்காம என்னை கொலைகாரன்னு அடிச்சுப் போட்டுருவாங்க அப்படி இப்படினு ஒப்பாரி வச்சான்.. என்ன ஆச்சா.. ஒரு வருசம் ஜெயிலு பிறகு வெளில வந்துட்டான்.. இன்னொரு கல்யாணம் செஞ்சுட்டு இன்னிக்கு வண்டி ஓட்டிட்டுருக்கான். இடையில போன வருசம் ஊர்ல வெவரம் தெரிஞ்சு போச்சு. அங்க ஒரு குடும்பம். இங்க ஒரு குடும்பம். என்ன செய்வாங்க.. அவங்களுக்கு சோறு வீடு எல்லாம் தேவையாச்சே.. இத்தனை வருசம் பொறுத்தவங்க அப்படியே இருந்துட்டுப் போறோம்னு விட்டுட்டாங்க. இந்தாளு எஸ்கேப்பு. நிம்மதியா இருக்கான். ஆக எல்லாரும் ஒரே குட்டைல ஊறின மட்டைங்க தான். இந்த ஊர்க்காரங்க வெளிப்படையா செய்றாங்க.. திருட்டுத்தனம் இல்லாம.. அதைப் பாக்குறப்ப இவங்களே மேல் ..யார் சொன்னது? துபாய்லாம் ஒண்ணுமில்லே பிரதர்.. அய்யய்யே.. பஹ்ரெய்ன் ஈசிடில பாருங்க.. தாய்லந்து கெட்டுது.. சாவான் போட்டுவறதுக்காகவே உருவாக்குன இடம் பிரதர் ஈசிடி.. இவனுங்க மட்டுல்ல இங்க்லிஸ்காரனுங்க நம்மூராளுங்க எல்லாம் வாரக்கடைசியானாப் போதும் கைல பிடிச்சுட்டு பஹ்ரெய்ன் ஓடிருவாங்க..ஹஹ.. நீங்களும் போயிருக்கலாம்ன்றீங்களா? அட, முன்னாலயே சொல்லாட்டிப் போனா என்னா? இப்பக்கூட போவலாம்.. அழகா பாலம் கட்டியிருக்காங்க.. சல்லுனு போயிட்டு வந்துறலாம்.. சூப்பரா எஞ்சாய் பண்ணிட்டு வரலாம்.. வேலையை முடிச்சுட்டு வந்து வேணும்னா சொல்லுங்க பிரதர்

................. நானா சார்? மன்னம்பந்தல் ஏவிசி காலேஜுல பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கேன் சார். இந்த நாட்டுல வண்டியோட்டுறதா? அது ஒரு கதை. மாயரம் திருச்சி மதுரை மெட்ராசு பக்கம் எங்கயும் வேலை கிடைக்கலே சார்.. அப்புறம்.. உங்ககிட்டே சொல்றதுக்கு என்ன சார்.. ஒரு அவசரத்துல இங்க வர வேண்டியதாப் போச்சு. இந்தப் படமா..? என்னோட காதலி. இல்லே சார், நான் கல்யாணம் பண்ணாத காதலி.. சொல்றேன் சார்.. வேணும்னுதான் கண்ணை வெள்ளைத்தாள் ஒட்டி மறைச்சிருக்கேன். என்னோட தோள்ல சாஞ்சுக்குறதுனா அவளுக்கு ரொம்ப பிடிக்கும் சார். சாஞ்சுகிட்டே இருப்பா. அப்பல்லாம் தோள் நல்லா உரமேறி கெத்தா இருக்கும்.. சின்னய்சுலந்தே கர்லா சுத்துவேன்.. இப்படி கழுத்துலந்து இறங்குறப்ப தோள்சதை மாம்பழக் கதுப்பாட்டம் இருக்கும்.. அவ அந்த சதைல வாய் முழுக்க வச்சு, ஆனா கடிக்காம அப்படியே விளையாட்டா உறிஞ்சுவா.. சட்டுனு கடிச்சுருவா.. யம்மா ராச்சசி ஏண்டி இப்படி கடிக்குறேம்பேன்.. உன்னை அப்படியே கடிச்சு சாப்பிட்டுறலாம் போல இருக்கும்பா.. உண்மையில அவளால அழுத்திக் கடிக்கவும் முடியாது.. அவ கடிச்சா தோள் லேசாத்தான் வலிக்கும்,. ஆனா நிறுத்தினா நெஞ்சு நல்லா வலிக்கும் சார். பல்லு பட்டாலே சில்லுனு இருக்கும். அதனால அவ எச்சிலும் பல்லும் பட்டுக்கிட்டே இருக்கட்டும்ணு விட்டுறுவேன்.. ஒரு தடவை அப்படி எடுத்த படம்.. இல்லே சார்.. எல்லாத்தையும் விட்டு வந்துட்டேன்.. எங்கே இருக்கான்னே தெரியாது சார்.. அவ எங்க எதிர்வீட்டுப் பொண்ணு. சின்ன வயசுலந்தே ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கும்னாலும் நான் காலேஜ் செகன்ட் இயர் போன பிறகுதான் காதலிக்கத் தொடங்குனோம். அவ பக்கத்துல பாலிடெக்னிக்குல படிக்க வருவா. ரெண்டு பேரும் ப்ரெண்டா பழகறாங்கன்ற அளவுக்குத்தான் வீட்டுல தெரியும். மொதல்லியே சொல்லியிருந்தா கல்யாணம் செஞ்சு வச்சிருப்பாங்களோ என்னவோ. எங்களுக்கு பயம். இதுல என்னாச்சு பாருங்க அவளுக்குப் பொண்ணு பாத்தாங்க. பெண் பாக்க வந்த ஆளு இவகூட ஒரு வார்த்தை கூட பேசலியாம். பின்னால சொன்னா. என்ன புண்ணியம் சார்? அந்தாளுக்கு அவளைப் பிடிச்சு போச்சு. ரெண்டு வீட்டுக்கும் பிடிச்சுப் போச்சு. இவளுக்குப் பிடிக்குதானு யாரும் கேட்கக்கூட இல்லை. எங்கிட்ட சொல்லி அழுதா. எங்க வீட்டுல சொல்லிக் கல்யாணம் செஞ்சுக்கலாம்னேன்.. பயந்தா. ஓடிப்போயிறலாம்பேன்.. அதுக்கும் அவளுக்கு அனியாயத்துக்கு பயம். வேணாம்.. இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ என்னை சந்திக்காதே.. தேவைப்பட்டா நானே உன்னை வந்து சந்திக்கிறேன் அப்படி இப்படினு அறிவில்லாம உளறுவா.. இன்னிக்கு ஒண்ணு சொல்லுவா, மறுநாள் அதுக்கு நேர்மாறா எதுனா செய்வா.. ஏண்டி சனியனே, காதலிக்க மட்டும் தெரியுதானு எரிச்சலோட கேப்பேன். அதுக்கு என் தோளைக் கடிச்சுகிட்டு அழுவா. என்ன செய்யுறது சார்? சிக்கல் காதல்கள்ல பாருங்க... காதலி காதலனை நம்பணும்.. இவன் நம்மளைக் கைவிட மாட்டான்னு நம்பணும்.. யார் என்ன சொன்னாலும் இவனை மட்டும் ஒதுக்கக் கூடாது.. இவன் சொன்னதை மட்டும் மறக்கக் கூடாது, வார்த்தை பிசகக் கூடாதுனு இருக்கணும்.. ஆனாப் பாருங்க, நம்ம ஊர்ப் பெண்ணுங்க கடவுளை நம்புவாங்களே தவிர காதலனை நம்பமாட்டாங்க.. ஒரு எதிர்ப்பு சிக்கல்னு எதுனா ஆச்சுனா காதலனைத்தான் மொதல்ல மண்டையில அடிப்பாளுங்க.. தூக்கி எறிஞ்சிருவாங்க.. துரோகிங்க.. இவளும் அப்படித்தான்.. என்னாச்சு.. அவளுக்குக் கல்யாணமாச்சு வேறென்ன? தூக்கம் வருதா சார்.. தம்மாம் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆவும் சார்.. வேணா படுங்க.. சரி சொல்றேன்.. அவ கல்யாணம் செஞ்சுகிட்ட அந்தாளு குடிகாரன் சார். மொந்தைக்குடி. அதான் அவன் பெண் பார்க்க வந்தப்ப வாயே தொறக்கலே. அரசாங்க உத்யோகத்துல இருக்குற திமிர். சீட்டாட்டம் சினிமா ரேஸுனு சம்பளத்தை விட்டுறுவான்.. இவகிட்டே வந்து நகையக் கொண்டா, பணத்தைக் கொண்டானு அடிப்பான் சார்.. ரொம்ப அடிப்பான் சார்.. என் செல்லத்தை ரொம்பத் துன்புறுத்திட்டான் சார்.. வாயை வீசினா தேவடியா முண்டை கையை வீசினா கன்னிப் போறாப்புல அடி! ரொம்பக் கொடுமைப்படுத்திட்டான் சார்.. இப்பவும் எனக்கு எரியுது. நான் அப்ப ஒரு டீலர் கிட்டே வேலைல இருந்தேன் சார். மார்கெட்ல போய் சரக்கு போட்டு பணம் வாங்கிட்டு வரணும். அவ வீடு என் ரூட்லதான் இருந்துச்சு சார். ஒரு நாள் பாக்குறேன், வீட்டு வாசல்ல நின்னு அழுதிட்டிருக்கா. என்னாடின்னேன். புருசன் கோவத்துல வெளில தள்ளிக் கதவை அடைச்சுட்டான்றா. எவ்வளவு நேரமா நிக்குறேன்றேன்.. காலையில ஆபீஸ் போறப்ப என்னை வெளியே தள்ளி கதவைப் பூட்டிக்கிட்டு போயிட்டாருன்றா.. இதென்ன கூத்துனு கேட்டா மெள்ள விவரம் எல்லாம் சொன்னா. வெளில வந்துருன்னேன். சும்மா இருந்தப்பவே பயந்து செத்தவ இப்ப வருவாளா சார்? பாருங்க.. ஏற்கனவே அடிபட்டு விளாறாக் கிடப்பா சனியன்.. பத்தாதுனு பதட்டத்துல அடிக்கடி சமையல் அடுப்புல தானே சுட்டுக்கிட்டு கஷ்டப்படுவா.. புருசங்காரன் சிகரெட்டால சுட்டானானு கேப்பேன்.. கிழக்கு மேற்கா நல்லா மண்டைய ஆட்டுவா.. மறை கழண்டாச்சு.. பாத்து.. மண்டையும் கழண்டுறப்போவுது.. உனக்கென்ன வெக்கம் மானம் ரோஷம் சுயமரியாதை அறிவு கிறிவு எதுவும் இல்லையானு கடுப்பா கேப்பேன் சார்.. இல்லேனு சொல்வா சார்.. அப்ப என்னதான் இருக்குனு கேப்பேன்.. பயமா இருக்குனு அழுதுகிட்டே சிரிப்பா சார். என்னத்த செய்ய? எனக்குப் பாவமா இருக்கும்.. என்னால முடிஞ்சவரை ஆறுதலா எதுனா பேசிட்டு வருவேன். இடையில எனக்கு டீலர் கடை வேலை போயிடுச்சு. எனக்கு நல்லப் பழக்கமான ஊராட்சித் தலைவர் என்னை வீட்டுக்குக் கூட்டிவந்து சாப்பாடு போட்டாரு. இது போல மஸ்கட்ல டிரைவர் வேலையிருக்குறதாவும், கூடவே நாலஞ்சு டிரைவருங்களை மேய்க்கணும்னும் இன்னும் சில வேலைகளும் சொன்னாரு. பத்தாயிரம் ரூவா அட்வான்சா கொடுத்தாரு சார். வேலையும் இல்லாம இவளையும் நெனச்சு நொந்து நொந்து சாவுறதை விட கண்காணாமப் போயிறலாம்னு தோணிச்சு. யோசிச்சு சொல்றேன்னு பணம் வாங்காமக் கிளம்பின எங்கிட்டே அஞ்சாயிரம் சேர்த்துப் பதினஞ்சாப் பணத்தைக் கொடுத்து யோசிச்சு சொல்லு ஒண்ணும் அவசரமில்லேன்னாரு. ரெண்டு நாள்ல பம்பாய்க்கு டிகெட் வாங்கியிருக்குறதாவும் அங்கே நாப்பது நாள் தங்கி அக்காமா எல்லாம் கிடைச்சப்புறம் அங்கருந்தே மஸ்கட் போவலாம்.. ஆனா யோசிச்சு சொல்லுன்னாரு சார். பணத்தையும் டிக்கெட்டையும் கொடுத்து இவ்வளவு விவரமும் சொன்ன பிறகு என்னாத்தை யோசிக்குறது? எனக்கு எங்கம்மாவை விட்டா வேறே யாருமில்லே சார்.. பணத்தை அவங்ககிட்டே கொடுத்து பம்பாய் போற முடிவோடு வீட்டைப் பார்க்கப் போனேன். போனா அங்கே இவ அழுதுட்டிருக்கா சார்.. எங்கம்மா அவ தலையைத் தடவிக்கிட்டே நீ எதுக்கும் கவலைப்படாதே தங்கம்னு சொல்லிட்டிருக்காங்க சார். ஊர் உலகத்துல எத்தனையோ பேர் அவங்க அம்மாவைப் பத்தி பரந்த மனம், எல்லாத்தையும் புரிஞ்சுக்குற பாங்கு, அப்படி இப்படினு சொல்வாங்க இல்லிங்களா? நானும் நிறைய அம்மாக்களைப் பாத்திருக்கேன் சார். ஒரு சிக்கல்னு வந்ததும் தன் வட்டத்தைத் தவிர வெளில யாரையும் எதையும் சகிச்சுக்க முடியாத அம்மாங்க தான் அதிகம். நல்ல நிலைனாலும் சரி, தீவிர சிக்கல்னாலும் சரி, தன் குடும்பத்தைப் போலவே மத்த குடும்பத்தையும் நினைக்குற ஒரே மனம் உலகத்துல எங்கம்மாவுக்கு மட்டுந்தான் சார். சத்தியமான வார்த்தை. நேரில பாத்துப் புரிஞ்சுக்கிட்டவன் சார்.. அவளைச் சமாதானம் செஞ்சுகிட்டே எங்கம்மா எல்லா விவரமும் சொன்னாங்க. புருசன் மறுபடி சம்பளத்தைத் தொலச்சுட்டு அவளை அடிச்சு தொம்சம் பண்ணியிருக்கான். ஒரு கடை வைக்குறதா சொல்லி வீட்டுலந்து அஞ்சாயிரம் ரூவா வாங்கிட்டு வானு அனுப்பியிருக்கான். எங்கப்பா கிட்டே பணம் ஏதும் கிடையாதுனு இவ சொன்னதுக்கு அவனுக்கு வந்த கோவத்துல இவளை நல்லா புடைச்சுட்டான் சார். இனி பணம் இல்லாம திரும்பி வராதேனு சொல்லியனுப்பிட்டானாம். தன் வீட்டுக்கு வந்த இவ, இனிமே அவனோட வாழமாட்டேன்னு அடம் பிடிச்சாளாம். ஆனா அவங்க அப்பா வீட்டுல இருந்ததையெல்லாம் அடகு வச்சு பணம் வாங்கிட்டு வரதாவும் இல்லே பிச்சை எடுத்தாவது வாங்கிட்டு வரதாவும் சொல்லி.. வாழ்ந்தாலும் செத்தாலும் நீ உன் புருசனோட தான் இருக்கணும்னு கட்டாயப்படுத்தி.. இவளைப் பாத்துக்குங்கனு எங்க வீட்டுல விட்டுப் போயிருக்காரு.. எங்கம்மா விவரமெல்லாம் சொல்லச் சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள எரியுது சார். திடீர்னு அவளைப் பார்த்துக் கத்தினேன். எங்கூட வந்துருனு எத்தனை தடவை சொன்னேன் கேட்டியா உனக்கு நல்லா வேணும் நல்லா வேணும்னு கடுப்புல கண்மண் தெரியாம பேசிட்டேன். பேசின வேகத்துல வெளில போனவன் தான். மன உளைச்சலோட அங்க இங்க சுத்திட்டு அன்னிக்கு நைட்டே ஊராட்சித் தலைவர் கிட்டே பம்பாய் டிகெட் வாங்கிட்டு மெட்ராசுக்கு பஸ் ஏறிட்டேன். ஊர்ப் பக்கமே போவலே.. பார்டர் வந்துருச்சு சார்.. அக்காமா எல்லாம் எடுத்து தயாரா வச்சுக்குங்க.. அப்புறம் என்ன சார்.. மஸ்கட் வந்து ரெண்டு மாசம் பொறுத்து அம்மாவுக்கு போன் செஞ்சேன். அம்மா எல்லாம் சொன்னாங்க.. ஒண்ணும் ஆகலே சார்.. அவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாருங்க.. அவ புருசன் ரோட்டுல அடிபட்டு செத்துக் கிடந்தானாம்.. அதுவும் நான் மெட்ராசுக்குக் கிளம்பின அதே நாளில.. அது போதாம அவ வீட்டு அரிசிப் பானைக்குள்ள கத்தை கத்தையா ரூவா நோட்டாம் சார்.. பதினஞ்சாயிரமாவது இருக்கும்னாங்க அம்மா.. ஓசைப்படாம பணத்தை எடுத்துக்கிட்டு அவ எங்கம்மா கிட்டே ஓடி வந்து விவரம் சொல்லியிருக்கா.. திருட்டுப் பணமா இருக்கும் அதான் எவனாவது போட்டுத்தள்ளியிருப்பான்.. பணத்தை வச்சுக்க. உனக்கு விடுதலைனு நெனச்சுக்கனு அம்மா சொல்ல, இவ விட்டது சனினு எங்கம்மா கால்ல விழுந்து பணத்தை எடுத்துக்கிட்டுப் போயிட்டாளாம்.. இந்த மாதிரி ஒரு புருசனோட என்னை சேத்து வச்சியேனு அவ அப்பா மேலே ரொம்பக் கோவமாம்.. அதனால அவங்க வீட்டுல கூட சொல்லாமலே போயிட்டாளாம்.. எல்லாத்தையும் சொன்ன எங்கம்மா எங்கிட்டே அமைதியா டேய் அவ எங்கியோ நல்லா இருக்கா.. நீ எந்தக்காரணம் கொண்டும் இனி இந்தப்பக்கம் வராதடானுட்டாங்க.. அதனால நானும் ஊர்ப்பக்கமே போகலே சார். ஊருக்குப் போகலின்னாலும் அவ நினைவு அப்படியே இருக்கு.. அப்பப்ப அவ நினைவு தோள்ல கடிவலி மாதிரி வந்து போகும்.. போட்டோவைப் பார்த்துக்குவேன்.. அவ கண்ணைப் பார்த்தா எங்கே எல்லாத்தையும் விட்டு உடனே ஊருக்கு ஓடிருவேன்னு ஒரு பயம் சார்.. அதான் வெள்ளைத்தாள் ஒட்டி நிரந்தரமா மறைச்சுட்டேன். வந்தாச்சு சார்.. நீங்க உள்ளாற போய் விசா பாஸ்போர்டு காமிச்சு ஸ்டாம்ப் அடுச்சுட்டு வாங்க.. நான் இதா இங்க இருக்கேன்.