2013/11/22

மெல்லிசை சல்யூட்    சில வருடங்களுக்கு முன் அவரை சிகாகோவில் சந்தித்தேன்.

தம்பதிகள் இருவரும் பெண் வீட்டுக்கு வந்திருந்தார்கள். மனைவியின் இணைய அறிமுகம் இருந்தாலும் இருவரையும் முதல் முறையாக நேரில் சந்தித்தது அப்போது தான். கணவரை அறிமுகப்படுத்தினார்.

முகப் புன்னகைக்கும் புன்னகை முகத்துக்கும் என்ன வேறுபாடு?

சிலருக்கு புன்னகை இயல்பாக வரும். சிலருக்கு புன்னகை எளிதாக வரும். சிலருக்கு புன்னகை சற்று முயற்சி செய்தால் வரும். சிலருக்கு புன்னகை என்ன விலை என்றும் தெரியாது (இதயம் சொன்ன விலை என்றால் என்ன? இன்னொரு பதிவுக்கான கரு).

என்னை அறிமுகப் படுத்திக்கொண்ட போது கவனித்தேன். அவருடைய முகமே புன்னகையைச் சுற்றிப் படைக்கப்பட்டிருந்தது. கண்களின் நட்புக் காந்தம் தற்காலிகமாக மறக்க வைத்தாலும் அவருடைய முகப் புன்னகை அகத்திலிருந்து வருவதை உடனே உணர்த்தியது. புன்னகை முகம்.

புன்னகை முகங்களிடம் ஒரு சிறிய சிக்கல். பொதுவாகவே எதையும் மறைத்துப் பேசத் தெரியாமல் திண்டாடும். (எனக்குப் புன்னகை முகம் கிடையாது).

புன்னகை முகங்களிடம் ஒரு வசதி. அவர்கள் எதுவுமே பேச வேண்டியதில்லை, அமைதியாக இருந்தாலே போதும். அப்படி வாயைத் திறந்து ஏதாவது பேசினால் இன்னும் ஈர்ப்பாக அமைந்து விடும்.

அதனால் அவர் புன்னகை முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதா ஏதாவது கேட்பதா என்று எண்ணி முடிக்குமுன் அவரே பேசத் தொடங்கினார். சிகாகோவின் சுற்றுப்புறம், சென்னையின் சுற்றுப்புறம், தொலைக்காட்சி, பிடித்த சினிமா, நடிகை, பத்திரிகை, பொழுதுபோக்கு.. என்று நிறைய விஷயங்களைக் கொஞ்சமாகப் பேசினார். அதுவே போதுமானதாக இருந்தது.

அதற்குப் பிறகு சென்னையில் இரண்டு முறை சந்தித்தோம் என்று நம்புகிறேன். சுவாரசியமான உரையாடல்கள். அவருடைய தெருவில் ஒரு பிரபலத்தின் வீடு பூட்டிக் கிடந்தது. குடும்பச் சண்டை. பூர்வீக வீட்டை விற்கத் தீர்மானித்திருந்தார்கள். என் கையில் நாலு காசு கிடையாது.. இருந்தாலும் என்ன விலையிருக்கும் என்று கேட்டேன். 'நாப்பது சொல்றாங்க' என்றார். 'நாப்பது லட்சமா பரவாயில்லையே?' என்றேன். 'ல இல்லை கோ' என்றார். புன்னகைக்குத் தேவையிருக்கவில்லை. நான் மனதுள் பல படிகளும் வெளியே நாற்காலியிருந்தும் தடுமாறி விழுந்தேன். அரசியல் பேசினோம். அம்பேத்கர் பற்றிப் பேசினார். இந்தி சினிமா பற்றிப் பேசினோம். குரு தத் பற்றிப் பேசினார். நூதன் பற்றிப் பேசினார். மயிலையின் வளர்ச்சி, தெருமுனை பெரிய ஆஸ்பத்திரியின் (பெயர் மறந்து போனதே!) வளர்ச்சி, பிரமுகர்கள் என்று பலவாறு பேசுகையில் இருவருக்கும் பொதுவான ஒரு கனவை அறிந்து கொண்டோம். அவருக்கு ஆடோமோடிவ் தொழில்நுட்ப ஞானம் அபரிமிதம். எனக்கு ஞானம் பெரும் ஆசை அபரிமிதம். நான் சென்னையில் ஒதுங்கத் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். வசதி கிடைக்கும் பொழுது இருவரும் இணைந்து ஒரு hotrod project செய்ய வேண்டும் என்றேன். பலமாக ஆமோதித்தார். புன்னகைக்குத் தேவையிருக்கவில்லை.

நான் சென்னையில் ஒதுங்கும் வரை அவரால் காத்திருக்க முடியவில்லையா.. அல்லது என்னை நம்பி ஒரு பயனும் இல்லை என்பதை அவரும் சுலபமாகப் புரிந்து கொண்டுவிட்டாரா தெரியவில்லை (எனக்குப் புன்னகை முகம் கிடையாது என்று சொன்னேனே.. அகத்தில் இருப்பது என் முகத்தில் மறைக்கப்படும்).. அவராகவே ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.

இவரின் குணாதியசங்களை என்னுடைய இரண்டு கதை மாந்தர்களிடத்தே வெட்கமில்லாமல் புகுத்தியிருக்கிறேன். தம்பதியரை வைத்து ஒரு முழுக்கதையும் உரிமையுடன் புனைந்திருக்கிறேன்.

எந்தப் பிரிவுமே கொஞ்சம் வருந்த வைக்கும். அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் பிரிந்தால் வருத்தம் தீவிரமாகிறது. சில மணி நேரங்களே தெரிந்தவரைச் சில காலம் புரிந்தவராய்க் காணுமுன்னே பிரிந்தால் வருத்தத்துடன் ஏமாற்றமும் கூடுகிறது.

பிரிவில் வருந்துவதே வாடிக்கையாகி வருகிறது எனக்கு. அதுவும் அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஆள் விழுங்கி மாதங்களாகி விட்டன.

நவம்பர் விழுங்கிய இன்னொரு தங்கம், இந்தச் சிங்கம்.

பிரிவுகள் சோகங்கள். நினைவுகளோ ராகங்கள். கொடிய சோகங்களும் தற்காலிகம். இனிய ராகங்கள் நிரந்தரம்.

வல்லிசிம்ஹனுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், என்னுடன் வரும் அத்தனை பதிவர்களின் அளவிலா அன்பும். சிங்கத்துக்கு ஒரு மெல்லிசை சல்யூட்.

இது ஒரு ஆங்கில கிராமிய மெட்டின் இந்தி வார்ப்பு. திகட்டாத இனிப்பு வகை. இனிய சந்திப்புகளின் நினைவில் மலரும் நூதனின் முகம். எளிய கவிதை வரிகளுக்குத் துள்ளும் இசை. உயிரை வருடும் ஆஷாவின் குரல். இந்த இனிய ராகம், சிங்கத்தின் நினைவில்.


16 கருத்துகள்:

 1. அந்த சிங்கத்திற்கு எனது அன்பையும் வணக்கத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. பிரிவுகள் சோகங்கள். நினைவுகளோ ராகங்கள். கொடிய சோகங்களும் தற்காலிகம். இனிய ராகங்கள் நிரந்தரம். //

  பலமுறை அவர் வீட்டிற்கு மிக அருகில் சென்ற போதிலும் பல தடவைகள் நான் வருகிறேன்,வரப்போகிறேன் என்று தொலை பேசியில் பயமுறுத்திக்கொண்டிருந்த போதிலும்,

  துளசி கோபால் அவர்கள் அறுபது திருமண ஆண்டு விழாவில் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த அக்கார அடிசல், புளியோதரை உண்ணும் சமயத்திலே அந்த சிங்கத்தை சந்திக்கும் அளவளாவும் வாய்ப்புக்குப்பின் ஏதும் ஒரு தடவை கூட அவர் வீட்டுக்கு செல்லவில்லை.

  அன்று நாச்சியார் அவர்கள் சகோதரர் மனைவியிடம் என் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன் . அது போதுமா...

  எல்லோரும் இனிதாக வாழவேண்டும் என்று ஒவ்வொரு பதிவுலும்
  இறுதி வரியாக எழுதிய அவரது அகம், இன்று வெறிச்சோடி இருக்குமே ? அவருக்கு என்ன வார்த்தைகள் தான் ஆறுதலாக இருக்குமென அஞ்சுகிறேன்.

  அவர்களுக்கு நீங்கள் தந்த மெல்லிய சல்யூட் ஒரு துல்லிய சல்யூட்.

  சிங்கத்தை சந்திக்கும் க்யூவில் இருக்கிறேன். எப்போது சந்திப்பேன் எனத் தெரியவில்லை.

  //அகத்தில் இருப்பது என் முகத்தில் மறைக்கப்படும்,,//

  அகம் முகம் எல்லாமே நாம்
  ஜகத்தில் இருக்கும் வரை தானே.
  இருப்பினும்
  முகம் மாயை.
  அகம் மெய். ஏன் எனின்,
  அதில் அவன் இருக்கிறான்.  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 3. படிக்க ஆரம்பித்து சில வரிகளிலேயே நீங்கள் குறிப்பிடும் தம்பதியை அறிந்து கொண்டு விட்டேன். சிங்கம் ஸாரைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்பதும் புரிந்தது. அந்தச் சிங்கத்துடன் பழகிய நினைவு எனக்குள்ளும் ஆழ்ந்த வருத்தத்தை விதைத்துப் போனது. உங்களுடன் நானும் உணர்வுகளால் இணைந்து கொள்கிறேன் அப்பா ஸார்!

  பதிலளிநீக்கு
 4. நான் இதுவரை அவரை சந்திக்கவில்லை
  ஆனாலும் அவர் பல பதிவர்களிடன்
  ஏற்படுத்திப் போயிருந்த பாதிப்பைவைத்தே
  அவருடைய அளுமையைப் புரிந்து கொள்ளமுடிகிறது
  குறிப்பாக தங்கள் இந்தப் பதிவின் மூலமும்...
  அவர் ஆன்மா சாந்தியடைய பிராத்திக் கொள்வோமாக

  பதிலளிநீக்கு
 5. புன்னகை முகத்தின் விளக்கங்கள் அபாரம். தம்பதியரைச் சென்னையில் சந்தித்தேன் என்றபோது புரிந்தது. ஈடு செய்ய முடியாத இழப்பு அது. அம்மாவிடம் இன்னும் பேசும் தைரியம் வரவில்லை எனக்கு. எனக்கும் சூரி ஸார் சொல்வது போல 'எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்' வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

  பதிலளிநீக்கு
 6. சிலரின் கண்களே புன்னைகைக்கும்... நாம் பேசுவதற்கு திணறவும் வேண்டியிருக்கும்...!

  வல்லிசிம்ஹன் அம்மாவின் மனம் அமைதியடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 7. //நவம்பர் விழுங்கிய இன்னொரு தங்கம், இந்தச் சிங்கம். //

  அந்த புன்னகை முகத்தைப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.

  நெகிழ வைத்த நினைவாஞ்சலி. நாங்களும் கலந்து கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு

 8. திருமதி வல்லி சிம்மன் பதிவுகள் படித்த நினைவில்லை. ஓரோர் சமயம் என் பதிவில் பின்னூட்டம் கண்ட நினைவு. மூத்த பதிவர் என்று புரிகிறது. இந்த நினைவாஞ்சலி படிக்கும்போது நிறைய மிஸ் செய்து விட்டேன் என்று தெரிகிறது. வாழ்க்கையின் பாதையில் கூடவே வந்து கொண்டு இருக்குமொருவரைப் பிரிந்து இருப்பது நினைக்கவே அச்சமாயிருக்கிறது. தடுக்க முடியாத நிகழ்வை தாங்கிக் கொள்ள வல்லி அம்மாவுக்கு மனோதிடம் கொடுக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. வல்லிசிம்ஹனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  பதிலளிநீக்கு
 10. வல்லிசிம்ஹன் அம்மாவுகு ஆழ்ந்த அனுதாபங்கள்...

  பதிலளிநீக்கு
 11. அவரை முன்பின் சந்தித்திராத எனக்கும், உங்கள் வர்ணனையிலிருந்து அவரைப் பற்றித்தான் சொல்கிறீர்கள் எனப் புரிந்துவிட்டது. அந்தளவு வல்லிமாவின் பதிவுகளின் மூலம் அவரும் நம்முள் ஒருவர் ஆகிவிட்டார். வல்லிமாவின் மனம் மிகுந்த திடமும், அமைதியும் பெற வேண்டும் என்று பிரார்த்திக் கொண்டே இருக்கிறேன். தினமும் வல்லிமாவின் நினைவு...

  பதிலளிநீக்கு
 12. ஒரே ஒரு முறை சென்னைப் பயணத்தின் போது நானும் கணேஷும் அவர்களது வீட்டிற்குச் சென்று சந்தித்தோம்.... இனிமையான சந்திப்பு அது. அவர் வரைந்த ஓவியங்களைக் காண்பித்து எங்களை மகிழ்ச்சி அடையச் செய்தார் சிங்கம்.... எத்தனை திறமை.....

  சிங்கத்தினை இழந்து தவிக்கும் வல்லிம்மாவுக்கு மனோதிடத்தினை தர எனது வேண்டுதல்களும்....

  பதிலளிநீக்கு
 13. //அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஆள் விழுங்கி மாதங்களாகி விட்டன.

  நீங்கள் சொல்வது உண்மை.
  நவம்பர் வந்தாலே எனக்கு உற்ற உறவுகளின் பிரிவு துனபம் நினைவுக்கு வந்து விடும்.
  என் அப்பா, அம்மா. எல்லாம் நவம்பர் மாதம் தான் இழந்தேன்.

  /நவம்பர் விழுங்கிய இன்னொரு தங்கம், இந்தச் சிங்கம். //

  வல்லி அக்காவின் பதிவுகளில் சாரைப் பார்த்து இருக்கிறேன்.
  புன்னகை ததும்பும் முகத்துடன் பார்த்த படங்கள் அவர் மறைந்து விட்டார் என்று நம்ப மறுக்கிறது.
  ஊரிலிருந்து வந்தவுடன் இந்த செய்தி கிடைத்தது.
  அக்காவிடம், மெயிலிலும், போனிலும் பேசினேன்.

  பதிலளிநீக்கு
 14. வல்லி அக்காவின் கணவர் இறந்த தினம் மதுரையில் என் அண்ணன் பேரன் பிறந்தவுடன் இறந்து விட்டான் .
  அங்கு போய் வந்தேன்.
  நவம்பர் மாதம் ஆள் விழுங்கும் மாதம் என்று நீங்கள் சொல்வது உண்மை என நினைக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. மாறாத வருத்தம் தரும் நிகழ்வு. நானும் ஒரே முறை தான் பார்த்திருக்கேன். என்றாலும் கண்மட்டுமல்ல உடம்பே சிரிக்கும். அந்தச் சிரிப்பு நம்மையும் ஆறுதல் கொடுத்து அமைதிப் படுத்தும். தங்கமான சிங்கம்! :( எங்கோ தூர இருக்கும் எனக்கே கஷ்டமா இருந்தால், வல்லி மனசு படும் பாட்டை நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை! :(

  பதிலளிநீக்கு
 16. இதுவரை வல்லிசிம்மனை வாசித்ததில்லை. ஆனால் இந்தப் பதிவின் மூலம் அந்த வருத்தம் போனது. எழுத்தைக் காட்டிலும் மனிதர்களை அறிந்து கொள்வதுதான் எத்தனை உயர்வானது?

  முகநூலில் அவர் மறைவு குறித்து ரேவதிவெங்கட் பதிவிட்டிருந்தார்.

  எத்தனை கட்டுக்குள் இருந்தாலும் கலங்க வைக்கிறது மெல்லிசை சல்யூட்டின் பின்னிருக்கும் எழுத்து.

  அஞ்சலிகள் மீண்டும்.

  பதிலளிநீக்கு