2013/11/20

மெல்லிசை நினைவுகள்    ன்டர்வேரு கோடு தெரிய லுங்கி கட்டு போன்ற சொல்லாடலும் கருத்தாழமும் கொண்ட சமீபத் தமிழ்ச் சினிமா பாடல்கள் பற்றிய எங்கள் ப்லாகின் புலம்பலை.. பதிவைப் படித்ததும் இந்தப் பாடல் என் நினைவுக்கு வந்தது. உடனே பதினைந்து முறையாவது கேட்டிருப்பேன். இந்தப் பாடலின் எளிய இனிய தமிழ்க்காதல் வரிகள் எனக்கு அந்தக்கணமே தேவைப்பட்டது.

அன்புக்கனிச் சாறெடுத்து
அந்திவெயில் சூடேற்றி
இன்பமென்று நீ கொடுத்தால்
என் மயக்கம் தீராதோ...?

ஆகா! தமிழில் காதலிப்பது எத்தனை இதம்! எத்தனை இன்பம்!

என் டாப் 10 காதல் பாடல்களில் இது ஒன்று. எனினும் கேட்ட புதிதில் இந்தப் பாடலை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பாடல் அவ்வப்போது வானொலியில் ஒலிபரப்பானாலும் ஆணின் குரலைக் கேட்டதும் மாற்றிவிடுவேன். ஏனோ இவரின் காதல் டூயட்கள் என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை.

இந்தப் பாடலை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியது அரசன் ஆவார்.

என் ஆசிரிய நண்பர் அரசனின் எழுத்தாக்க வகுப்புகள் பற்றி எழுதியிருக்கிறேன். 'சினிமாவில் காதல் பாடல்கள்' பற்றி ஒருமுறை வகுப்பில் உரையாடல் நிகழ்ந்த போது அரசனின் உள்வட்டமான எங்கள் நால்வரில் மூவர் இந்தப் பாடலைப் பற்றிச் சொன்னார்கள். நான் கிண்டல் செய்தேன். பதிலுக்கு சாவியும் அரசனும் என்னை ரசனை கெட்ட எமவாகனம் என்று ரொம்பவே படுத்திவிட்டார்கள்.

உள்ளம் என்ற ஊஞ்சலிலே
பள்ளிகொண்ட ஆருயிரே
மெல்ல மெல்ல நான் தொடவா
அல்லிமலர் தேன் தரவா?

'மெள்ள மெள்ள நான் தொடவா?' என்று ஏன் எழுதவில்லை கவிஞர்?

இதுதான் அரசனின் கேள்வி. இதை நான் விளக்குவது அரசனுக்குச் செய்யும் துரோகம் என்றாலும் அந்த நாள் நினைவுகளால் அவ்வப்போது வலிக்கும் என் மனவீக்கத்துக்கு நானே தரும் தமிழ் ஒத்தடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சாவியைப் பற்றி நான் எழுதியவற்றை நீங்கள் படிக்கத் தவறியிருந்தால்.. வெட்கம் கூச்சம் எல்லாம் பொதுவில் சற்றுக் குறைவாகவே வெளிக்காட்டுவாள் சாவி. 'உங்களுக்கு மட்டும் வெக்கம் எல்லாம் கிடையாது.. நாங்க மட்டும் பொத்திக்கிட்டு இருக்கணுமா? போடா மயிரு' என்பாள் சர்வ சாதாரணமாக. 'மெல்ல நான் தொடவா' என்ற இந்த வரியை அரசன் ரசித்து அனுபவித்து விவரித்த விதம் கேட்டு சாவிக்கும் கூச்சம் வந்துவிட்டது.

காற்று மெல்ல வீச வேண்டும். கைகளை மெள்ள வீச வேண்டும். நன்றியை மெள்ளச் சொல்ல வேண்டும். காதலை மெல்லச் சொல்ல வேண்டும். நாணம் மெள்ள விலக வேண்டும், முத்தம் மெல்ல வலிக்க வேண்டும், மோகம் மெள்ளத் துடிக்க வேண்டும்.. இங்கே ஒரு பெண் தன் காதலனை மெல்லத் தொடவா என்று கேட்பது காதல் போதையின் உச்சம். மெல்லத் தொடும் காதலி உடனிருந்தால் அல்லிமலர் தேன் யாருக்கய்யா வேண்டும்.. தொடவா தரவா சொற்களின் 'தொட வா' 'தர வா' மறுபொருள் பிரித்து.. இந்த ரீதியில் போன அரசனின் 'மெல்ல மெள்ள' விளக்கம், என் போன்றவர்களை நாக்கைத் தொங்கப் போட வைத்தது என்றாலும் சாவியின் கன்னம் சிவந்ததை அன்றைக்குப் பார்த்தேன். அறிவு தெறிக்கும் பெரிய கண்களை இமைப்போர்வையினால் தாழ்த்தி குப்பென்று சிவந்திருந்தாள்.

அதற்குப் பிறகு 'மெல்ல மெள்ள' பற்றிய குழப்பமே எனக்கு வந்ததில்லை.. ஹிஹி.

அந்நாட்களில் இந்தப் பாடலை இரண்டாம் தட்டுக்கும் கீழே வைத்திருந்தேன். பின்னாளில் ஒருமுறை அரசனுடன் செய்த கார் பயணத்தில் இந்தப் பாடலை மீண்டும் முதல்முறையாகக் கேட்டு மனதைப் பறிகொடுத்தேன். பாடல் பற்றிய அரசனுடனான உரையாடல்களோ பறிகொடா தேன்.

மின்னல் வரும் மேகத்திலே
உன் கூந்தல் போனதென்று
மெல்லிடையைத் தூதுவிட்டு
தள்ளாடி வந்தாயோ..?

வரிக்கு வரி போட்டி போடும் நளினம். சுத்தமானத் தமிழ்க்காதல். உடனே இப்படிப் பாடி யாரையாவது காதலிக்கத் தூண்டவில்லை?

இந்த வரிகளின் கவிதையை அரசன் உணர்ச்சி பொங்க ரசிப்பார். கூந்தல் ஏனய்யா மேகத்தோட போவுது? தன்னோட இனமாட்டம் இருக்குதேனு நிறத்தை வச்சுப் போச்சா? இல்லே இந்தப் பெண்ணோட முகம் மேகத்தில் வந்த மின்னலின் ஒளி போல் இருக்குதேனு ஏமாந்து ஓடிப்போச்சா? அப்படிப் போனாலும் இந்தப் பொண்ணு கிட்டே வேறு ஆயுதங்கள் இருக்குதய்யா.. மின்னலை நம்பி மேகத்தோட போன கூந்தலை எப்படிப் பிடிக்கிறது? அவளோட இடுப்பு மின்னலை விட வேகமா ஒடிக்குமே? 'மின்னலைத் துரத்திக்கிட்டு போய், மெல்லிடையே, என் கூந்தலை என்னிடம் கொண்டு வா'னு தூது அனுப்புறா.. என்னா பாட்டுய்யா! இதைப் போய் இரண்டாம் தட்டுனு சொல்லுறியே? நீயெல்லாம் ஏன்யா தமிழ் படிச்சே? ரசனை கெட்ட நண்பரய்யா.. அதான் தமிழ் மறந்து தள்ளாடுறே... என்று கவிதை ரசனையிலிருந்து என் தமிழ் மறதியைப் பிடித்து கொண்டுவிடுவார். அந்தப் பயணத்தில் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டோம் என்று கணக்கு வைக்கவில்லை.

அரசனும் சாவியும் இன்றில்லை.

இந்தப் பாடல் தொட்ட நினைவுகள் மாத்திரம் என்னுடன்.. எங்கள் நட்பின் பச்சை முத்திரையாய்.

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்... என்றாலும் இந்தப் பாடலின் மண்வாசனை என்னை இன்றைக்கும் கட்டிப்போடுகிறது.

காதலி மடிமேல் மெல்லத் தலைவைத்து அவளை மெள்ள அள்ளும் செய்கையாக ஓசைப்படாமல் உள்ளத்தில் பரவும் மெட்டு, இசை. ஈஸ்வரியின் அள்ளிக்கோ ப்லீஸ் என்னை அள்ளிக்கோ கெஞ்சல். சீர்காழியைத் தவிர இந்தப் பாடலை வேறு யார் பாடியிருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று இப்போது தோன்றுகிறது.

வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்களென்று சொல்லலாகுமோ...?

சோகங்களை மறக்க சில நேரம் இசை தேவைப்படுகிறது.. சில நேரம் தமிழ்.. சில நேரம் காதல்.
மறந்த சந்தோஷங்களை மீட்க மூன்றுமே தேவைப்படுகிறது.

அரசனின் நினைவில் இது. அவளின் நினைவிலும்.10 கருத்துகள்:

 1. செய்தவன சில மனதை உறுத்துகையிலே அதற்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்ய நினைப்பது மனித இயல்பு.

  அதை செயல்படுத்துவது மனிதனின் துணிவு.

  இந்தப் பதிவும் அந்த வகையிலே ??? !!

  எண்ணுவன, சொல்வன, எழுதின எல்லாமே செய்வன ஆகுமாமே ?


  சுப்பு தாத்தா.

  மீண்டும் வருவேன்.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா இனிய நினைவுகள்! வெண்பளிங்கு மேடைகட்டி பாடலை ரொம்ப நாளைக்குப்பிறகு இன்று கேட்டேன்.. லிஸ்ட்டில் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் இருக்கிறதா?!

  பதிலளிநீக்கு
 3. எல்லா நேரங்களிலும் எனக்கு இசை தேவை... ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 4. Already five years have paased! You are remembering every year. I was in Thiruvanaikaaval last week. We talked about lot of things. V asked about you a lot.

  பதிலளிநீக்கு
 5. //சோகங்களை மறக்க சில நேரம் இசை தேவைப்படுகிறது.சில நேரம் தமிழ். சில நேரம் காதல்.மறந்த சந்தோஷங்களை மீட்க மூன்றுமே தேவைப்படுகிறது.//

  நிஜத்தையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து, மேற்கண்ட மஹா வாக்யத்தை இடம், பொருளை ஏவி மயக்கி விட்டீர்கள். இதுதான் போதையென அறியாதோர் பேதை.

  சபாஷ் அப்பாதுரை! ஒரு இடைவெளிக்குப் பின் வல்லினம், மெல்லினம், இடையினம் மூன்றையும் ஒன்றாய் உங்கள் எழுத்தில் சுவைக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு

 6. இசையுடன் கலந்த காதல்; அதுவும் தமிழ் இசையுடன் கலந்த காதல்; கூடவே காதலிக்கும் இரு உள்ளங்கள். நினைவுகளை நிகழ்வாக்கி எண்ணிப் பார்த்தால் இன்னும் சுகம்.உங்களுக்குத் தெரியுமா சில நேரங்களில் சோக கீதங்களே காதலுக்குத் துணைபோகும்.சோகங்களிலும் சுகம் காண்போர் உண்டு.

  பதிலளிநீக்கு
 7. உள்ளே ஊடுருவும் என்ற வார்த்தை நான் சரியாக இனம் கண்டு கொண்டதே இசையை ரசிக்கத் தொடங்கிய பொழுதே.

  பதிலளிநீக்கு
 8. இந்த பாடலை இது வரை கேட்ட நினைவில்லை.....

  நல்ல பாடல்.. பகிர்ந்தமைகு நன்றி.

  மெல்ல, மெள்ள விளக்கம் நன்று!

  பதிலளிநீக்கு
 9. இப்படி ஒரு பாடல் வந்திருப்பதே இன்னிக்குத் தான் தெரியும். :))) எந்தப் படம்?? இப்போக் கேட்க முடியலை; அப்புறமாக் கேட்டுக்கிறேன். எந்தப் படம்னு கண்டு பிடிக்கற அளவுக்கு சினிமா நிபுணி இல்லை. :)))))

  பதிலளிநீக்கு