2013/11/30

மாதச் சிறப்பு


    லைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள். காதலும் ப்லாக்வலியும் அந்த வகையில் சேரும் என்பது என் அனுபவம். அதிலும் ப்லாக்வலி...

பூத்தூரிகை காலத்தில் முதல் அனுபவம். மூன்றாம் சுழியில் சமீப அனுபவம். தொலைத்த பதிவுகளை மெள்ளச் சேர்க்கப் போகிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.

ஒரு சில கதைகள் கட்டுரைகள் தவிர மற்றவை என்னிடம் சேமிப்பில் உள்ளன. கவிதைகள் முற்றிலும் தொலைந்து போயின என்பது உலகத்துக்கே மகிழ்ச்சியைத் தரும் செய்தி. பதிவுகளைத் தனியாகச் சேமித்து வைத்திருக்கிறேன் என்றாலும் முறையாகச் செய்யவில்லை. சேமித்தவை அந்தந்தக் காலக்கட்டத்து கணினிகளில் இருப்பதால் எல்லாவற்றையும் தனித்தனியாக எடுத்து மீண்டும் சேர்க்க வேண்டியிருக்கிறது. பெரிய விஷயம் ஒன்றுமில்லை. இருந்தாலும் செய்யப் பொறுமையும் முனைப்பும் போதவில்லை. இந்த வருடம் அக்டோபர் நவம்பரில் நிறையப் படுத்துவிட்டேன். ஆள் விழுங்கி நவம்பர் என்னையும் விழுங்கிவிடுமோ என்று ஒருகணம் தோன்றியது உண்மை. நிலமை இப்படி இருக்கையில் ப்லாக் போனதைப் பற்றிக் கவலைப்பட்டாலும் எதுவும் செய்ய முடியவில்லை. பயணம், வெறுப்பு, சோம்பல் எல்லாம் கலந்து.. எத்தனையோ இழப்புகளில் மனம் சலித்த நிலையில் பதிவுகள் எப்படிப் போனாலென்ன என்று ஒரு கணம்.. ஒரு கணம் எண்ணியதை ஒப்புக்கொள்கிறேன்.

பதிவுகள் காணாமல் போனதை விசாரித்து எனக்கு வந்த இமெயில்கள் என்னைக் கலங்க வைத்தன. நெஞ்சைத் தொட்டன. 'உங்கள் பதிவுகள் ஒரு பரிசு' என்று ஒருவர் எழுதியிருந்தார். இன்னொருவர், 'I feel I am missing something' என்று எழுதியிருந்தார். ஒரு பின்னூட்டம் கூட இதுவரை இடாதவர்கள் பலர் இப்படி எனக்கு எழுதி விசாரித்த போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கர்வமாகவும். ஒரே ஒரு இமெயில் மட்டும் கொஞ்சம் சுவாரசியமாக உறுத்தியது. பெயர் மறைத்த அவர் நெஞ்சில் சிறிய அக்கினிக் குஞ்சு சில நாள் சிறகடிக்கட்டும்.

ப்லாக் நலம் விசாரித்த அத்தனை பேரின் அன்புக்கும் நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். மிகவும் நன்றி. ஐந்து வருடத்துக்கு மேற்பட்ட உழைப்பை(?) அனாவசியமாக எறிய வேண்டாம் என்றும் தோன்றியதால் நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவிடுகிறேன்.

யாண்டும் எவர்க்கும் கடவுச்சொல் கொடற்க எனும் அரியநெறி இதனால் அறியற்பாலது.

    வேலையில்லை. பொழுது போக என்ன செய்யலாம்? காழ்ப்புடன் அல்பமாகப் புலம்பலாம். உலகம் கெட்டுவிட்டது என்று அடுத்த தலைமுறையைத் திட்டலாம். அல்லது இந்தியக் கொலை வழக்குகள் படிக்கலாம்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கின் தீர்ப்பைப் படித்ததும் இன்னும் தேடத் தோண்டியது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் இதுவரை விவரங்கள் எதுவும் தெரியாதிருந்தேன். தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷணன் இருவரும் கொலை செய்து சிறை சென்றார்கள் என்றே இதுவரை அறிந்திருந்தேன். இந்த வழக்கின் விவரங்களைப் படிக்கையில், இருவரும் கொலை செய்திருக்கச் சாத்தியமில்லை என்ற கருத்தும் வழக்கில் சந்தேகத்துக்கிடமின்றி (சந்தேகத்துடன்?) கிளப்பியிருப்பதைப் படித்தேன். ஜூரிகளில் 6 பேர் ஆதரவாகவும் 3 பேர் எதிர்த்தும் தீர்ப்பு சொல்லி இருவருக்கும் கொலை குற்றத்துக்கானத் தண்டனை வழங்கினார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு ஜூரி எதிர்த்தாலும் தீர்வு காண முடியாது என்ற வரைமுறை இந்த வழக்குக்கோ அல்லது அந்தக் காலத்திலோ புழக்கத்தில் இல்லையா? அல்லது மரண தண்டனைக்கு மட்டும் தான் அந்த வரைமுறையா? என்எஸ்கே, எம்கேடி பற்றி எழுதிய நேரத்தில் இந்தக் கொலை நடந்ததால் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது என்ற கருத்தை கோர்ட்டுகளிலும் ப்ரிவி கவுன்சிலிலும் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நிறைய சந்தேகம் வருகிறது. தோண்டித் தோண்டிப் படித்ததில்... கொலை செய்தவர்களாகக் கருதப்பட்டவர்களில்.. அந்த நாளில் வளர்ந்து வந்த ஒரு மூன்றெழுத்து நடிகர், மூன்றெழுத்து நான்கெழுத்து பெயர் கொண்ட இரண்டு அரசியல் தலைவர்கள், ஒரு இசைக்குயில், பிரபல தொழிலதிபர், ஒரு சினிமா நடிகையின் 'சமூக அந்தஸ்துள்ள' கள்ளக்காதலன்... என்று நிறைய பேர் அடங்கியிருப்பது சுவாரசியம்.

இதைப் புத்தகமாக யாராவது எழுதியிருக்கிறார்களா? ரண்டார் கய் இதைப் பற்றிப் புத்தகம் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். யாருக்காவது விவரம் தெரிந்தால் சொல்லுங்கள். இந்த வழக்கின் காலக்கட்ட விவரங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் இந்தியா வரும்பொழுது சுவாரசியமாக அரட்டை அடிக்கலாம். காஸ்யபன் ஐயாவுக்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்கும் என்று கௌளி சொல்கிறது. சூரி மற்றும் ஜிஎம்பி அவர்கள்? சென்னைப் பித்தன் அந்த நாட்களில் மயிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் இதை யாராவது புத்தகமாக எழுத வேண்டும். ஜெயமோகனைத் தவிர. குறைந்த பட்சம் இதை யாராவது சினிமாவாக எடுக்க வேண்டும். ஹிஹி.. ரைட்.. அவரைத் தவிர.

உபரி: 'எம்கேடி'யின் 'எம்' மாயவரமாம்.

    க்ஷ்மிகாந்தன் பற்றிப் படிக்கையில் எம்எஸ்வி பற்றி ஒரு துக்கடா தெரிந்து கொண்டேன். எல்லாம் அறிந்த ஈசனின் திருவிளையாடலில் மீனாக்ஷி மாதிரி தீவிர எம்எஸ்வி ரசிகர்கள் நெகிழ்ந்து போகலாம் என்பதற்காக இங்கே சேர்க்கிறேன்.

சினிமா சான்ஸ் தேடுவதற்கு முந்தைய காலம். ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் வைர நெக்லஸ் திருடினார் என்று குற்றம் சாட்டி எம்எஸ்வியைக் கைது செய்து சிறையிலடைத்தார்களாம். எம்எஸ்வி சரியாகப் பேசத்தெரியாமல் தவித்ததாலோ அல்லது அவர் பேசியதைப் புரிந்து கொள்ள இயலாமல் போனதாலோ அவர் மேல் வழக்கு தொடர்ந்தார்களாம். தீர்ப்புக்காகக் காத்திருக்கையில் அசல் திருடன் பிடிபடவே எம்எஸ்வியை விடுதலை செய்தார்களாம். அசல் திருடன் பிடிபடாதிருந்தால் எம்எஸ்வி திரையுலகுக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்.

திக்கெனவில்லை?

    ள் விழுங்கி நவம்பர் முடியப்போகிறது. நன்று.

நவம்பர் மாதத்தின் மிகப் பெரிய சிறப்பு ஒன்று உண்டு. அத்தனை இழப்புகளையும் ஈடுகட்டும் சிறப்பு. ஆர்கிமிடீஸ் கோரிய லெவர் மாதிரி ஒரு பிடிப்பைத் தரும் சிறப்பு. என் தம்பி பிறந்த மாதம்.

எங்கள் குடும்பத்தில் சகோதர-ரிகளிடத்தே போலித்தனம் கொஞ்சம் கூட இல்லை. எங்கள் அம்மா ஒரு முக்கியக் காரணம். நாங்களும் சில்லரைக் காரணங்கள். என்னை விட என் சகோதர-ரிகளுக்குப் பண்பு அதிகம் என்று சிலர் சொல்வார்கள். (சொல்பவர்கள் நேரில் வந்து சொன்னால் அவர்கள் பல்லை உடைக்கத் தயாராக இருக்கிறேன்).

சிறுவயதில் நானும் என் தம்பியும் எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வோம். அடிதடி என்றால் அ டி த டி. கட்டிப்புரண்டு கழுத்தை நெறித்துச் சண்டை போடுவோம். 'கொன்னுடுறா.. துரப்பா.. அவனைக் கொன்னு போட்டுரு.. உன்னைவிட சின்னவன்னு பாக்காதே.. கொன்னுடு' என்று பதறுவார் என் பாட்டி. அப்படி ஒரு மாட்டடி அடித்துக் கொள்வோம். ஆளுக்கொரு க்ரிகெட் டீமின் பெயர் கொண்டு எங்கள் வீட்டு ஹாலில் க்ரிகெட் விளையாடி ஏற்கனவே விரிந்திருக்கும் தரையை இன்னும் உடைத்திருக்கிறோம். வீட்டின் தட்டி வேலிக்குள் ஆடு மாடு பன்றிகள் வந்தால் தட்டிவேலிக்கதவை அடைத்து, எங்கிருந்து அடி விழுகிறது என்று புரியாமல் ஆடு மாடுகள் மிரண்டு ஓடும் வகையில் மறைந்திருந்து பெரிய செங்கல்களாகப் பொறுக்கி எடுத்து அடித்திருக்கிறோம். மாதம் மூன்று வாரம் வந்தால் ஒரு ரூபாய் இனாம் தருவார்கள் என்பதற்காக சம்ஸ்கிருத வகுப்புக்குப் போவோம். அம்மா திட்டுவார் என்பது இன்னொரு லேசான காரணம். அவன் ஒரு ரூபாய்க்காக மட்டுமே வருவான். எனக்கு இரண்டு அழகான காரணங்கள் இருந்தன. நாங்கள் இருவரும் ஒரே பள்ளிக்கூடம் தொடர்ந்து ஒரே கல்லூரியில் படித்தோம். நேரத்தில் பள்ளிக்கூடம் போக வேண்டுமென்று மூன்று வருடங்கள் போல் தினம் அவனைப் பின்னால் உட்காரவைத்து காட்டு வேகத்தில் சைக்கிள் மிதித்திருக்கிறேன். அது மட்டுமே அவனுக்கு நான் செய்திருக்கும் உருப்படியான பணி என்று நினைக்கிறேன். அதுவும் நான் பள்ளிக்கூடம் போகிற சாக்கில். ஒரே ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் அவனை யாரோ மிரட்டினார்கள் என்பதற்காக அவனுக்காகச் சண்டை போட்டிருக்கிறேன். எனக்குப் பாதுகாப்பு தரும் அளவுக்கு அவன் பம்மலில் படா ஆளானது வேறு கதை. இன்றைக்கும் தொடர்கிறது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது என் மட்டில் வேதம். எங்கள் குடும்பத்தின் பீமன். பல்லாண்டு பலமோடு வாழட்டும்.

அவன் பிறந்தநாளன்று உடனிருந்து இருபத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும். இந்த நவம்பரில் வாய்ப்பு கிடைத்தது. இது அவனுக்காக.


    சினுக்கு பாரத் ரத்னா கொடுத்தது தவறா என்று என்னிடம் ஒருவர் கேட்டார். 'ஒபாமாவுக்கு நொபெல் தரவில்லையா?' என்று உடனடியாக மனதில் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். வித்தியாசம் இருக்கிறது. ஒபாமாவுக்குக் கொடுத்ததால் நொபெல் பரிசுக்குத் தீராதக் களங்கம் உண்டானது. ஸசினுக்குக் கொடுத்ததால் பாரத ரத்னாவுக்கு ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இல்லையென்றால் என் போன்றவர்களுக்கு பாரத ரத்னா பற்றி என்ன தெரியப் போகிறது - எம்ஜிஆருக்குக் கொடுத்தார்கள் என்றா?

ஸசின் க்ரிகெட் விளையாடி அவ்வளவாகப் பார்த்ததில்லை. அதிலும் அவர் சிறப்பாக விளையாடிய பதினைந்து இருபது வருடங்களில் ஒரு முறை கூட பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான செஞ்சுரிகளில் ஒன்றைக் கூடப் பார்த்த நினைவில்லை. இருந்தாலும் அவரை அறிய முடிந்தது அவர் விளையாட்டின் சிறப்பினால் என்பது எனக்குத் தெரியும். ஸசின் ஓய்வு விழா (?) தொலைகாட்சியில் பார்த்தேன். 'இந்த பாரத ரத்னா என் அம்மாவுக்கு' என்றார். அதற்காகவே.. அந்தப் பண்புக்காகவே.. பாரத ரத்னா கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது. 'பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக எத்தனையோ செய்கிறார்கள்.. அவர்களைப் பொறுத்தவரை அவை தியாகங்கள் அல்ல.. இந்த நாள் வரை என் பெற்றோர்கள் உனக்காக இதைச் செய்தேன் அதை இழந்தேன் என்று சொன்னதில்லை..' என்றார். இந்த வரிகளுக்காக அடுத்த வருட பாரத ரத்னாவையும் அவருக்கே வழங்கவேண்டும்.

ஸசினை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. எப்படிப்பட்ட பெற்றோர்கள்! 'இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை நான் வாங்கிக் கொடுத்தது.. இன்னிக்கு நீ சம்பாதிக்கிற வேலை படிச்ச படிப்பு நான் போட்ட பிச்சை.. இன்னிக்கு நீ கட்டியிருக்கிற புடவை என் ரத்தத்தைக் கொட்டி சம்பாதிச்சது..' என்ற பாணியில் புழங்கும் பெற்றோர்களையே இன்றளவும் சந்தித்துச் சந்தித்து.. ஸசின் பேச்சைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. ஸசினுடைய பெற்றோர்களுக்கும் பாரத ரத்னா தரவேண்டும்.

2013/11/25

நவம்பர் 24, 2014    னக்கும் செவ்வாய் தொடும் விருப்பம் உண்டு. செவ்வாய்க்குச் சொந்தக்காரர் கோபித்துக் கொள்வாரோ என்ற கலக்கமும்.

இஸ்ரோ காரர்கள் செவ்வாயைத் தொடப் போகிறார்களாம். கொடுத்து வைத்தவர்கள்.

செய்தியைப் படித்ததும் அமெரிக்காவின்... இல்லை.. உலகின் அத்தனை பேரையும் போல் நானும் வியந்து அசந்தேன். சில சைனாக்காரர்கள் போல் பொறாமையில் வேகவில்லை. சில அமெரிக்கர்கள் போல அல்பமாக யாஹூவில் கமென்ட் போடவில்லை. நம்பள்கி குடியுரிமை நஹி ஹை என்றாலும் பாரதியைக் கொண்டாடும் பாத்தியதை உண்டு என்ற தைரியத்தில் எங்கள் பாரத தேசமென்று கொஞ்சம் தோள்கொட்டினேன்.

இதுவரை பழுதில்லாமல் இயங்கி வரும் மங்கல்யான் (சரியா?) தொடர்ந்து அப்படியே இயங்கி பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி பல விதங்களில் இந்தியாவை மேம்படுத்தும். செவ்வாய்ப் பயணத்தில் ஆசியாவில் முதலிடம், உலகின் நான்காவது இடம் போன்ற சாதா சாதனைகள் ஒரு புறம் இருக்க, நிறைய நெய் மசாலா சாதனைகளுக்கான வாய்ப்பு நாக்கைச் சப்புக் கொட்ட வைக்கிறது.

அமெரிக்க நாசா இயக்கம் ஒரு செவ்வாய்ப் பயணத்துக்கு இரண்டாயிரத்தைனூறு மிலியன் டாலர் செலவழிக்கையில் இந்தியாவின் இஸ்ரோ எழுபத்தைந்து மிலியன் டாலர் செலவழித்ததாகப் படித்ததும் தூக்கிவாரிப் போட்டது. இரண்டு பேத்துல யாரோ சில சைபருங்களை சாப்ட்டாங்களா?. இது உண்மையா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இது உண்மையாக இருந்தால் இந்தியாவின் மங்கல்யான் எப்படி இருக்கும் என்ற கிண்டல்கள் இன்னொரு புறம் இருக்க.. இது உண்மையாக இருக்குமா என்ற ஸ்ட்ரடீஜிக் கேள்வி எழுகிறது.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சைனா 'ஏழை' நாடாக இருந்தது. தொழில்நுட்பம் எல்லாம் பெரிதாக ஏதும் இல்லை. வசதியும் இல்லை. ஆனால் கனவு மட்டும் இருந்தது. அமெரிக்கத் தொழில் நுட்பங்களை மிகச் சுலபமாகவும் மிகக் குறைவான செலவிலும் சைனாவில் செயல்படுத்த முடியும் என்று மார்தட்ட வைக்கும்படி ஒரு கப்பல், ஒரு கார், ஒரு சூபர் கம்ப்யூடர், ஒரு ஏவுகணை, ஒரு ட்யூப் ரயில், ஒரு விமான நிலையம், ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் (ஆமாம்.. அதற்கான தொழில் நுட்பம் கூட சிக்கலாக இருந்த காலம்) என்று வரிசையாக பத்தில் ஒரு பங்கு ஐந்தில் ஒரு பங்கு என்ற செலவில் செய்து காட்டியது.. அமெரிக்காவை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தது. 'கம்யூனிஸ்ட் என்றால் செருப்பை எடு' என்றிருந்த நாட்டின் முதலாளிகள் திடீரென்று மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அசலில் சைனா எத்தனை செலவழித்தது என்று இப்போது பல கருத்துகள் நிலவினாலும், சீன அரசாங்கத்துக்கு மட்டுமே உண்மை தெரியும். ஆனால் அந்தத் தந்திரம் அவர்களுக்கு முழுப் பலனையும் அளித்திருக்கிறது. 'கம்யூனிஸ்டாக இருந்தால் என்ன?' என்று தங்களுக்குள்ளேயே சமாதானக் கேள்விகளை எழுப்பிய அமெரிக்க வர்த்தக உலகம், திடீரென்று தங்கள் தொழிற்சாலைகளை ஒட்டு மொத்தமாக சைனாவுக்கு மாற்றத் தொடங்கியது.

2007ல் நாற்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சீன-அமெரிக்க வர்த்தக சங்கம் வெளியிட்டிருக்கும் சில 'கவலை'களில் சைனாவில் தயாராகும் பொருட்கள், சீன தொழில் நுட்பம்.. இவை ஏறக்குறைய அமெரிக்காவின் செலவு உயரங்களை எட்டிவிட்டது என்றும், நாற்பது வருட டாலர் மற்றும் தொழில் நுட்ப முதலீட்டின் பலமிருந்தும் சைனா இன்றைக்குக் கூட புதிதாக எதையும் செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் திட்டங்களை மட்டுமே செயல்படுத்துகிறது என்றும், அமெரிக்க நிறுவனங்களுக்கு முழு சலுகை தராமல் உள்ளூர் வணிகத்தை சைனா கட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது என்றும் நிறைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இனி இந்தத் தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டு போகவும் முடியாது. ஆக, சைனா முதலீட்டால் அமெரிக்கர்களுக்கு என்ன பயன் என்று நிறைய பேர் கேட்டார்கள். அமெரிக்க கேபிடலிசத்தை மெள்ளப் பழிவாங்கிய சீன கம்யூனிசம் என்று ஜாடையாகச் சொல்லவும் தவறவில்லை. சீன பொருளாதாரம் இன்றைக்கு உலகின் இரண்டாவது இடத்தைப் பிடித்து சில வருடங்களில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் அபாயத்தை எடுத்துச் சொல்லிப் புலம்பினார்கள். சைனா தும்மினால் அமெரிக்காவுக்கு இன்றைக்கு நிமோனியா வரும் நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி ஆளுக்காள் வயிற்றில் அடித்துக் கொண்டார்கள்.

'உற்பத்தி மையப் பொருளாதாரத்திலிருந்து அறிவாக்க மையப் பொருளாதாரத்துக்கு அமெரிக்கா மாறி வருகிறது, இன்னும் வேகமாக மாறவேண்டும்' என்று பில் கேட்ஸ், ஜேக் வெல்ச், வாரன் பபட், ரஜினிகாந்த் (ஹிஹி.. யாருனா இதுவரைக்கும் படிக்கிறாங்களானு பார்க்கத்தான்) போன்றவர்கள் இருபது வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள். ஓரளவுக்கு அமெரிக்காவும் மாறியிருக்கிறது என்றே சொல்வேன். எனினும் அறிவாக்கத்தின் பயன்பாடு என்று வரும்பொழுது உற்பத்தியை நம்ப வேண்டியிருக்கிறது. அதற்கு சைனாவை நம்பி இறங்க வேண்டியிருக்கிறது என்பதையும் மறக்கவோ மறைக்கவோ இயலவில்லை.

கடவுள் மதம் என்று கண்மூடித்தனமாக அடித்துக் கொண்டாலும் அடிப்படையில் இந்தியர்கள் அறிவாக்கப் பேர்வழிகள். சந்தேகமேயில்லை. சமீப காலமாக அறிவாக்கத்தை வணிகப்படுத்தவும் முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இதற்காகக் கொஞ்சம் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது என்பதை, ஐஐடி படித்து ஜாவா கோபால் என்று முடங்கியக் கூட்டத்தைப் பார்த்தால் தெரியும். ஐடி துறை இந்தியாவுக்கு பல சலுகைகளையும் சில ஏணிகளையும் வழங்கியது. இந்தியாவுக்கு ஐடி வேலைகளை மாற்றினால் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்று அடித்துப் பிடித்து இறங்கிய மேற்கத்தி நிறுவனங்கள், இன்றைக்கு யோசிக்கத் தொடங்கியிருக்கின்றன. 'இந்தியா ஒன்றும் அத்தனை சீப் இல்லை' என்று சொல்லும் அமெரிக்க அதிகாரிகள், அதே நேரம் தங்கள் தொழில் நுட்பம் மற்றும் பட்டறிவை இந்தியாவுக்குப் பறிகொடுத்து விட்டோம் என்ற கலங்க வைக்கும் உண்மையையும் உணர்ந்திருக்கிறார்கள். எதுவும் செய்ய முடியாது. ஐடி துறையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும். ஐடியைத் தொடர்ந்து பிபிஓ, எஞ்சினியரிங் டிசைன், மெடிகல் ரிசர்ச் என்று பலவகை அறிவாக்க சேவைகளை இந்தியா வழங்கத் தொடங்கி, இன்றைக்கு அந்தத் துறைகளிலும் இந்தியாவின் கொடி மெல்லப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் டிசைன் செய்யப்பட்ட அமெரிக்கக் கார் சைனாவில் தயாரிக்கப்படுவதை இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் இந்தியாவின் டிசைன் சம்பாத்தியம் சைனாவின் உற்பத்திச் சம்பாத்தியத்தில் ஏறக்குறைய பாதி என்பது குறிப்பிடத்தக்கது! இந்த டிசைன் வியாபாரத்தில் இந்தியர்கள் ஒரு மணி நேரத்தில் சைனாக்காரர்களை விட ஏறக்குறைய மூன்று மடங்கு சம்பாதித்தார்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது (per capita revenue comparison).

விடுங்கள், செவ்வாய் தொடலுக்கு வருகிறேன்.

அடுத்த ஐம்பதாண்டுகளின் வணிக வளர்ச்சிக்கான ஆதார மையமென்று வரிசைப்படுத்தினால் செயற்கை உணவு (புரதம்), போர்க்கருவிகள், தகவல், உலகக் கல்வி, விண்வெளிச் சாகுபடி.. இவை முதல் ஐந்தில் அடங்கும். கொஞ்சம் கவனித்தால் இவை ஐந்துக்கும் பொதுவான ஒரு நரம்பு இருப்பது புலப்படும்.

விண்வெளிச் சாகுபடி.

கண்ணுக்கெட்டும் சந்திரனாகட்டும் கண்ணுக்கெட்டாத சனியனாகட்டும் இடைப்பட்ட ஆஸ்டிராய்ட் பட்டியாகட்டும்.. விண்வெளியில் சாகுபடி செய்ய நிறைய இருக்கிறது. செய்ய நிறைய பேர் போட்டியிடுகிறார்கள்.. இடுவார்கள். இந்தியா சாகுபடி செய்கிறதோ இல்லையோ சாகுபடிக்கான நுட்பமும் கருவியும் செய்ய முன்வந்திருப்பதாகவே நினைக்கிறேன். மீன் பிடிக்கும் போட்டியில் கலந்து கொள்வதை விட, போட்டியாளர்களுக்குத் தூண்டில் விற்கும் வேலையில் இறங்கியிருப்பதன் சாமர்த்தியம் கொஞ்சம் பிரமிக்க வைக்கிறது. செவ்வாய் தொடல் ஒரு தூண்டில். தூண்டில் சாம்பிள்.

உண்மையில் இருநூறு மிலியன் செலவழித்து விட்டு அதை அமுக்கி வாசிக்கிறார்களோ என்று ஒரு சின்ன சந்தேகம். அது உண்மையானால் அந்த தந்திரத்துக்கு ஒரு ஜே. அல்லது செலவழித்தது எழுபத்தைந்து தான் என்றால் அந்தத் திறமைக்கு டபுள் ஜே. அடுத்த பத்து ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் அத்தனையும் உன்னைப்பிடி என்னைப்ப்பிடி என்று செயற்கைக் கோள்களையும் இன்னும் பல விண்வெளிச் சாகுபடி வேலைகளையும் இந்தியாவுக்கு வழங்கும். எழுபதுக்கும் குறைவாகச் செலவழித்து ஐநூறு மிலியன் வரை இந்தியா சம்பாதிக்கக் கூடும். வல்லரசாவதற்கான ஏணி. சந்தேகமேயில்லை.

சாத்தியங்களை என் கற்பனையால் கட்ட முடியவில்லை. இன்னும் அறுபது வருடங்களில் ஒரு பெரிய ஆஸ்டிராய்ட் பூமியைத் தாக்கும் என்கிறார்கள். அதை விண்ணில் அடித்து நொறுக்க கணைகள் ஏவ வேண்டும் என்கிறார்கள். அதற்கான முனைப்பில் இறங்க வேண்டும் என்கிறார்கள். யாருனா சீப்பா விண்வெளிக் கப்பல் விடுறாங்களா பார்த்துச் சொல்லுங்ணே.

இந்த செவ்வாய் தொடலின் பக்க விளைவுகளில், வணிக சாத்தியத்தை விட இந்தியாவின் அறிவுத்திறன் சிறப்பாகப் பயன்படுத்தபட ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது விலைமதிப்பில்லாத ஒன்றாகும். பொறியியல் மேற்படிப்பு படிப்பவர்கள் டெஸ்டிங் டிவலெப்மென்ட் சப்போர்ட் என்று ஜாவாவிலும் லினக்சிலும் இறங்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஒரு இனிமையான சாத்தியம்.

திடீரென்று lbw ஆகும் சாத்தியமும் இருக்கிறது. அடுத்த ஐம்பதாண்டுகளைப் பார்க்காமல் வல்லபபாய் படேல் சிலை திறப்பு விழாவைக் கொண்டாடி சென்ற ஐம்பதாண்டுகளின் குழிகளில் விழுந்தால் எழுவது கடினம். இந்திய இளமை கவனமாக இருக்க வேண்டும்.

அதற்கும் முன்னால் செவ்வாய் தொடுவதில் குறியாக வேண்டும். (க்கும்.. நீ பக்கத்துல வந்தாத்தானே பட்டு?)

2013/11/22

மெல்லிசை சல்யூட்    சில வருடங்களுக்கு முன் அவரை சிகாகோவில் சந்தித்தேன்.

தம்பதிகள் இருவரும் பெண் வீட்டுக்கு வந்திருந்தார்கள். மனைவியின் இணைய அறிமுகம் இருந்தாலும் இருவரையும் முதல் முறையாக நேரில் சந்தித்தது அப்போது தான். கணவரை அறிமுகப்படுத்தினார்.

முகப் புன்னகைக்கும் புன்னகை முகத்துக்கும் என்ன வேறுபாடு?

சிலருக்கு புன்னகை இயல்பாக வரும். சிலருக்கு புன்னகை எளிதாக வரும். சிலருக்கு புன்னகை சற்று முயற்சி செய்தால் வரும். சிலருக்கு புன்னகை என்ன விலை என்றும் தெரியாது (இதயம் சொன்ன விலை என்றால் என்ன? இன்னொரு பதிவுக்கான கரு).

என்னை அறிமுகப் படுத்திக்கொண்ட போது கவனித்தேன். அவருடைய முகமே புன்னகையைச் சுற்றிப் படைக்கப்பட்டிருந்தது. கண்களின் நட்புக் காந்தம் தற்காலிகமாக மறக்க வைத்தாலும் அவருடைய முகப் புன்னகை அகத்திலிருந்து வருவதை உடனே உணர்த்தியது. புன்னகை முகம்.

புன்னகை முகங்களிடம் ஒரு சிறிய சிக்கல். பொதுவாகவே எதையும் மறைத்துப் பேசத் தெரியாமல் திண்டாடும். (எனக்குப் புன்னகை முகம் கிடையாது).

புன்னகை முகங்களிடம் ஒரு வசதி. அவர்கள் எதுவுமே பேச வேண்டியதில்லை, அமைதியாக இருந்தாலே போதும். அப்படி வாயைத் திறந்து ஏதாவது பேசினால் இன்னும் ஈர்ப்பாக அமைந்து விடும்.

அதனால் அவர் புன்னகை முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதா ஏதாவது கேட்பதா என்று எண்ணி முடிக்குமுன் அவரே பேசத் தொடங்கினார். சிகாகோவின் சுற்றுப்புறம், சென்னையின் சுற்றுப்புறம், தொலைக்காட்சி, பிடித்த சினிமா, நடிகை, பத்திரிகை, பொழுதுபோக்கு.. என்று நிறைய விஷயங்களைக் கொஞ்சமாகப் பேசினார். அதுவே போதுமானதாக இருந்தது.

அதற்குப் பிறகு சென்னையில் இரண்டு முறை சந்தித்தோம் என்று நம்புகிறேன். சுவாரசியமான உரையாடல்கள். அவருடைய தெருவில் ஒரு பிரபலத்தின் வீடு பூட்டிக் கிடந்தது. குடும்பச் சண்டை. பூர்வீக வீட்டை விற்கத் தீர்மானித்திருந்தார்கள். என் கையில் நாலு காசு கிடையாது.. இருந்தாலும் என்ன விலையிருக்கும் என்று கேட்டேன். 'நாப்பது சொல்றாங்க' என்றார். 'நாப்பது லட்சமா பரவாயில்லையே?' என்றேன். 'ல இல்லை கோ' என்றார். புன்னகைக்குத் தேவையிருக்கவில்லை. நான் மனதுள் பல படிகளும் வெளியே நாற்காலியிருந்தும் தடுமாறி விழுந்தேன். அரசியல் பேசினோம். அம்பேத்கர் பற்றிப் பேசினார். இந்தி சினிமா பற்றிப் பேசினோம். குரு தத் பற்றிப் பேசினார். நூதன் பற்றிப் பேசினார். மயிலையின் வளர்ச்சி, தெருமுனை பெரிய ஆஸ்பத்திரியின் (பெயர் மறந்து போனதே!) வளர்ச்சி, பிரமுகர்கள் என்று பலவாறு பேசுகையில் இருவருக்கும் பொதுவான ஒரு கனவை அறிந்து கொண்டோம். அவருக்கு ஆடோமோடிவ் தொழில்நுட்ப ஞானம் அபரிமிதம். எனக்கு ஞானம் பெரும் ஆசை அபரிமிதம். நான் சென்னையில் ஒதுங்கத் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். வசதி கிடைக்கும் பொழுது இருவரும் இணைந்து ஒரு hotrod project செய்ய வேண்டும் என்றேன். பலமாக ஆமோதித்தார். புன்னகைக்குத் தேவையிருக்கவில்லை.

நான் சென்னையில் ஒதுங்கும் வரை அவரால் காத்திருக்க முடியவில்லையா.. அல்லது என்னை நம்பி ஒரு பயனும் இல்லை என்பதை அவரும் சுலபமாகப் புரிந்து கொண்டுவிட்டாரா தெரியவில்லை (எனக்குப் புன்னகை முகம் கிடையாது என்று சொன்னேனே.. அகத்தில் இருப்பது என் முகத்தில் மறைக்கப்படும்).. அவராகவே ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.

இவரின் குணாதியசங்களை என்னுடைய இரண்டு கதை மாந்தர்களிடத்தே வெட்கமில்லாமல் புகுத்தியிருக்கிறேன். தம்பதியரை வைத்து ஒரு முழுக்கதையும் உரிமையுடன் புனைந்திருக்கிறேன்.

எந்தப் பிரிவுமே கொஞ்சம் வருந்த வைக்கும். அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் பிரிந்தால் வருத்தம் தீவிரமாகிறது. சில மணி நேரங்களே தெரிந்தவரைச் சில காலம் புரிந்தவராய்க் காணுமுன்னே பிரிந்தால் வருத்தத்துடன் ஏமாற்றமும் கூடுகிறது.

பிரிவில் வருந்துவதே வாடிக்கையாகி வருகிறது எனக்கு. அதுவும் அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஆள் விழுங்கி மாதங்களாகி விட்டன.

நவம்பர் விழுங்கிய இன்னொரு தங்கம், இந்தச் சிங்கம்.

பிரிவுகள் சோகங்கள். நினைவுகளோ ராகங்கள். கொடிய சோகங்களும் தற்காலிகம். இனிய ராகங்கள் நிரந்தரம்.

வல்லிசிம்ஹனுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், என்னுடன் வரும் அத்தனை பதிவர்களின் அளவிலா அன்பும். சிங்கத்துக்கு ஒரு மெல்லிசை சல்யூட்.

இது ஒரு ஆங்கில கிராமிய மெட்டின் இந்தி வார்ப்பு. திகட்டாத இனிப்பு வகை. இனிய சந்திப்புகளின் நினைவில் மலரும் நூதனின் முகம். எளிய கவிதை வரிகளுக்குத் துள்ளும் இசை. உயிரை வருடும் ஆஷாவின் குரல். இந்த இனிய ராகம், சிங்கத்தின் நினைவில்.


2013/11/20

மெல்லிசை நினைவுகள்    ன்டர்வேரு கோடு தெரிய லுங்கி கட்டு போன்ற சொல்லாடலும் கருத்தாழமும் கொண்ட சமீபத் தமிழ்ச் சினிமா பாடல்கள் பற்றிய எங்கள் ப்லாகின் புலம்பலை.. பதிவைப் படித்ததும் இந்தப் பாடல் என் நினைவுக்கு வந்தது. உடனே பதினைந்து முறையாவது கேட்டிருப்பேன். இந்தப் பாடலின் எளிய இனிய தமிழ்க்காதல் வரிகள் எனக்கு அந்தக்கணமே தேவைப்பட்டது.

அன்புக்கனிச் சாறெடுத்து
அந்திவெயில் சூடேற்றி
இன்பமென்று நீ கொடுத்தால்
என் மயக்கம் தீராதோ...?

ஆகா! தமிழில் காதலிப்பது எத்தனை இதம்! எத்தனை இன்பம்!

என் டாப் 10 காதல் பாடல்களில் இது ஒன்று. எனினும் கேட்ட புதிதில் இந்தப் பாடலை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பாடல் அவ்வப்போது வானொலியில் ஒலிபரப்பானாலும் ஆணின் குரலைக் கேட்டதும் மாற்றிவிடுவேன். ஏனோ இவரின் காதல் டூயட்கள் என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை.

இந்தப் பாடலை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியது அரசன் ஆவார்.

என் ஆசிரிய நண்பர் அரசனின் எழுத்தாக்க வகுப்புகள் பற்றி எழுதியிருக்கிறேன். 'சினிமாவில் காதல் பாடல்கள்' பற்றி ஒருமுறை வகுப்பில் உரையாடல் நிகழ்ந்த போது அரசனின் உள்வட்டமான எங்கள் நால்வரில் மூவர் இந்தப் பாடலைப் பற்றிச் சொன்னார்கள். நான் கிண்டல் செய்தேன். பதிலுக்கு சாவியும் அரசனும் என்னை ரசனை கெட்ட எமவாகனம் என்று ரொம்பவே படுத்திவிட்டார்கள்.

உள்ளம் என்ற ஊஞ்சலிலே
பள்ளிகொண்ட ஆருயிரே
மெல்ல மெல்ல நான் தொடவா
அல்லிமலர் தேன் தரவா?

'மெள்ள மெள்ள நான் தொடவா?' என்று ஏன் எழுதவில்லை கவிஞர்?

இதுதான் அரசனின் கேள்வி. இதை நான் விளக்குவது அரசனுக்குச் செய்யும் துரோகம் என்றாலும் அந்த நாள் நினைவுகளால் அவ்வப்போது வலிக்கும் என் மனவீக்கத்துக்கு நானே தரும் தமிழ் ஒத்தடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சாவியைப் பற்றி நான் எழுதியவற்றை நீங்கள் படிக்கத் தவறியிருந்தால்.. வெட்கம் கூச்சம் எல்லாம் பொதுவில் சற்றுக் குறைவாகவே வெளிக்காட்டுவாள் சாவி. 'உங்களுக்கு மட்டும் வெக்கம் எல்லாம் கிடையாது.. நாங்க மட்டும் பொத்திக்கிட்டு இருக்கணுமா? போடா மயிரு' என்பாள் சர்வ சாதாரணமாக. 'மெல்ல நான் தொடவா' என்ற இந்த வரியை அரசன் ரசித்து அனுபவித்து விவரித்த விதம் கேட்டு சாவிக்கும் கூச்சம் வந்துவிட்டது.

காற்று மெல்ல வீச வேண்டும். கைகளை மெள்ள வீச வேண்டும். நன்றியை மெள்ளச் சொல்ல வேண்டும். காதலை மெல்லச் சொல்ல வேண்டும். நாணம் மெள்ள விலக வேண்டும், முத்தம் மெல்ல வலிக்க வேண்டும், மோகம் மெள்ளத் துடிக்க வேண்டும்.. இங்கே ஒரு பெண் தன் காதலனை மெல்லத் தொடவா என்று கேட்பது காதல் போதையின் உச்சம். மெல்லத் தொடும் காதலி உடனிருந்தால் அல்லிமலர் தேன் யாருக்கய்யா வேண்டும்.. தொடவா தரவா சொற்களின் 'தொட வா' 'தர வா' மறுபொருள் பிரித்து.. இந்த ரீதியில் போன அரசனின் 'மெல்ல மெள்ள' விளக்கம், என் போன்றவர்களை நாக்கைத் தொங்கப் போட வைத்தது என்றாலும் சாவியின் கன்னம் சிவந்ததை அன்றைக்குப் பார்த்தேன். அறிவு தெறிக்கும் பெரிய கண்களை இமைப்போர்வையினால் தாழ்த்தி குப்பென்று சிவந்திருந்தாள்.

அதற்குப் பிறகு 'மெல்ல மெள்ள' பற்றிய குழப்பமே எனக்கு வந்ததில்லை.. ஹிஹி.

அந்நாட்களில் இந்தப் பாடலை இரண்டாம் தட்டுக்கும் கீழே வைத்திருந்தேன். பின்னாளில் ஒருமுறை அரசனுடன் செய்த கார் பயணத்தில் இந்தப் பாடலை மீண்டும் முதல்முறையாகக் கேட்டு மனதைப் பறிகொடுத்தேன். பாடல் பற்றிய அரசனுடனான உரையாடல்களோ பறிகொடா தேன்.

மின்னல் வரும் மேகத்திலே
உன் கூந்தல் போனதென்று
மெல்லிடையைத் தூதுவிட்டு
தள்ளாடி வந்தாயோ..?

வரிக்கு வரி போட்டி போடும் நளினம். சுத்தமானத் தமிழ்க்காதல். உடனே இப்படிப் பாடி யாரையாவது காதலிக்கத் தூண்டவில்லை?

இந்த வரிகளின் கவிதையை அரசன் உணர்ச்சி பொங்க ரசிப்பார். கூந்தல் ஏனய்யா மேகத்தோட போவுது? தன்னோட இனமாட்டம் இருக்குதேனு நிறத்தை வச்சுப் போச்சா? இல்லே இந்தப் பெண்ணோட முகம் மேகத்தில் வந்த மின்னலின் ஒளி போல் இருக்குதேனு ஏமாந்து ஓடிப்போச்சா? அப்படிப் போனாலும் இந்தப் பொண்ணு கிட்டே வேறு ஆயுதங்கள் இருக்குதய்யா.. மின்னலை நம்பி மேகத்தோட போன கூந்தலை எப்படிப் பிடிக்கிறது? அவளோட இடுப்பு மின்னலை விட வேகமா ஒடிக்குமே? 'மின்னலைத் துரத்திக்கிட்டு போய், மெல்லிடையே, என் கூந்தலை என்னிடம் கொண்டு வா'னு தூது அனுப்புறா.. என்னா பாட்டுய்யா! இதைப் போய் இரண்டாம் தட்டுனு சொல்லுறியே? நீயெல்லாம் ஏன்யா தமிழ் படிச்சே? ரசனை கெட்ட நண்பரய்யா.. அதான் தமிழ் மறந்து தள்ளாடுறே... என்று கவிதை ரசனையிலிருந்து என் தமிழ் மறதியைப் பிடித்து கொண்டுவிடுவார். அந்தப் பயணத்தில் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டோம் என்று கணக்கு வைக்கவில்லை.

அரசனும் சாவியும் இன்றில்லை.

இந்தப் பாடல் தொட்ட நினைவுகள் மாத்திரம் என்னுடன்.. எங்கள் நட்பின் பச்சை முத்திரையாய்.

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்... என்றாலும் இந்தப் பாடலின் மண்வாசனை என்னை இன்றைக்கும் கட்டிப்போடுகிறது.

காதலி மடிமேல் மெல்லத் தலைவைத்து அவளை மெள்ள அள்ளும் செய்கையாக ஓசைப்படாமல் உள்ளத்தில் பரவும் மெட்டு, இசை. ஈஸ்வரியின் அள்ளிக்கோ ப்லீஸ் என்னை அள்ளிக்கோ கெஞ்சல். சீர்காழியைத் தவிர இந்தப் பாடலை வேறு யார் பாடியிருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று இப்போது தோன்றுகிறது.

வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்களென்று சொல்லலாகுமோ...?

சோகங்களை மறக்க சில நேரம் இசை தேவைப்படுகிறது.. சில நேரம் தமிழ்.. சில நேரம் காதல்.
மறந்த சந்தோஷங்களை மீட்க மூன்றுமே தேவைப்படுகிறது.

அரசனின் நினைவில் இது. அவளின் நினைவிலும்.2013/11/08

ஓட்டி சொன்ன கதை    "சும்மா நீங்க ஏதோ பத்து நாளைக்கு ஆட்டிகிட்டு வந்து ஆட்டிகிட்டு போறதுனால அக்கறையிருக்காப்புல இதெல்லாம் கேக்குறீங்க.. விடுங்க, உங்களுக்கும் பொழுது போவுது.. எங்களுக்கும் பேச்சுத் துணை.. இல்லாதபோனா எங்ககூட மொவம் கொடுத்து யாரு பேசுறா? அதேன். இவங்கள்ள பலவேரு நாயிங்க...செலவேரு பன்னாடையிங்க.. இன்னுஞ் செலவேரு பீ சாக்கடை புளு மூத்திரம்.. ஐயோ நெசமாத்தாங்க.. மத்தவங்களைப் போல இவிங்களும் ஆறு வேள தொளுவானுங்க... மதம்பானுங்க.. ஆனா உள்ள கெட்டவளக்கம் ஒட்டும் மனசாலயும் உடம்பாலயும் செஞ்சுத் தீத்துருவானுங்க.. அரசாங்கமா? போலீஸா? என்னா சொல்றீங்க நீங்க? ஐயா.. உங்களுக்கு ஒண்ணு தெரியுங்களா? ஒரு தப்பு நடந்துச்சுனு வையுங்க.. அட.. இப்ப கார்ல போயிட்டிருக்காங்க.. ஆக்சிண்டு ஆயிருச்சுனு வையுங்க.. இடிச்சவன், இடிவாங்குனவன், ரெண்டுவேரும் இந்த நாட்டாளுங்களா இருந்தா போலீஸ் வராது.. அவனுங்களே தீத்துக்குவானுங்க.. அப்படியில்லாம இடிச்சவன் இந்த நாட்டாளா இருந்தா, எதிராளி யாராருந்தாலும் அவன் மேலதான் பளினு சொல்லிருவானுங்க போலீஸ்காரனுங்க.. இடிச்சவனோ இடிவாங்குனவனோ ரெண்டுத்துல யாருமே இந்த நாட்டு ஆளில்லேனு வைங்க.. இப்ப நியாயம் கிடைக்குற டெக்குனிக்கு இருக்குது பாருங்க.. இந்த சூச்சுமம் உலகத்துல வேறெயெங்கியும் கிடையாதுங்க.. கேளுங்க சொல்றேன்.. இடிச்சவன் எதிராளி ரெண்டு பேத்தையும் பாப்பானுங்க.. ரெண்டும் ஒரே சனமாருந்தா அடிச்சுட்டு சாவுங்கறானு விட்டுருவாங்க.. அதில்லாம ஒருத்தன் அமெரிக்கனா இருந்தா அவன் மேலே பளி வராது.. அமெரிக்கன் இல்லின்னா இங்கிலிஸ்காரனா இருக்கணும்.. அதில்லின்னா ஏதோ வெள்ளைத்தோலா இருக்கணும்.. அதுக்குப் பிறவு இந்தியனா இருக்கணும்.. அதுக்குப் பிறவு மத்த அரபியில்லாத முஸ்லிம் ஆளுங்க மலேசியா, பாகிஸ்தானி இப்படி யாராவதா இருக்கணும்.. அப்படியில்லின்னா பிலிப்பினோ.. இருக்குறதுல மோசம் பங்லாதேசு ஆளுங்கதான்.. வண்டில அடிவட்டு செத்துக் கிடப்பான் பங்லாதேசி.. இருந்தாலும் அவன் மேலேதான் பளி.. செத்துட்டு வந்து மோதிட்டான்னு சீட்டு எளுதிருவானுங்க. சில நேரம் ஆக்சிண்டுல கலக்காத ஆனா அந்தப் பக்கமா வந்து வண்டிய நிறுத்தின பங்லாதேசியைப் பிடிச்சு அவன் மேலே பளி போட்டுருவாங்க.. இதான் நியாயம் இங்கே. இங்க கிடைக்குற நியாயமெல்லாம் தோல் நெறம், பாஸ்போர்ட்டு பாத்து கிடைக்குற படிக்கட்டு நியாயம்.. அதனால போலீஸையெல்லாம் யாரு கூப்புடறாங்கய்யா? ஆனா நியாயத்துக்கெல்லாம் நேரமில்லிங்க போலீஸ்காரனுங்களுக்கு.. அவனுங்களுக்கு நிறைய சோலியிருக்குதுங்க பாவம்.. பொதுசன நியாயத்தைப் பாத்துட்டிருந்தா சீமைச் சாராயம் விக்குறது, பொண்ணுங்களைக் கூட்டிக் கொடுக்குறது.. இதையெல்லாம் யாரு செய்வாங்க? ஐயோ நிசமாத்தாங்க.. இப்படித்தேன் ஒரு தடவை என்னாச்சு.. ஒரு புருசன் பொஞ்சாதி.. கொளந்தைங்க இல்ல.. அவங்க மட்டுந்தேன்.. ரெண்டு பேரும் ஹம்ராஸ்பத்திரிலே பெரிய தபீபு கிட்டே நர்சா இருந்தாங்க.. பொண்ணு அளகா தளதளனு இருக்கும் முஸ்லிம் பொண்ணு, ஆனா அரபி கிடையாது.. ரெண்டு போலீஸ்காரனுங்க அந்த வீட்டை நோட்டம் பாத்துட்டே இருந்திருக்காங்க.. தீடீர்னு ஒரு நா சாயந்திரம் அவங்க வூட்டுல புவுந்துட்டாங்க.. புருசங்காரன் பொஞ்சாதியை உள்ளாற போவச் சொல்லிட்டு என்னா விசயம்னு அவங்களைக் கேட்டிருக்கான்.. நாயிங்க ரெண்டும் அவங்கிட்டே டேய் ஒம்பொஞ்சாதியை எங்ககூட ராப் படுக்கவிடுனு கேட்டிருக்காங்க... அவன் திகைச்சுப் போனதும் இவங்க விடாம டேய் எப்படியிருந்தாலும் இன்னிக்கு அவளை ஆண்டுருவோம் ஒங்க ரெண்டு பேத்தையும் கொன்னுருவோம்னு மெரட்டியிருக்காங்க.. புருசங்காரன் நிதானமா, கொஞ்சம் இருங்கய்யா எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லே.. எம்பொஞ்சாதிக்கும் பிரச்சினையில்லே.... ஆனா தயவுசெஞ்சு ஒத்தொத்தரா அனுபவியுங்க.. அவ ஏற்கனவே ஒரு மாச கெர்ப்பமா இருக்கா.. கொஞ்சம் கண்ணியமாப் போவும்னு கெஞ்சியிருக்கான்.. நாயிங்க சரின்னதும் புருசங்காரன் ஐயா நான் போயி பொஞ்சாதிகிட்டே பக்குவமா சொல்லி படுக்கையை சுத்தம் செஞ்சிட்டு ஓடியாறேன்னு உள்ளாற போய்.. பொஞ்சாதி கிட்டே விவரம் சொல்லி எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டு வந்தான்.. சொல்றேன்.. ரூம்புல ஒரு விடியோ கேமராவை செட் பண்ணிட்டு, கோளி சீவுற கத்தி ஒண்ணை கட்டில் தலைமாட்டுல மறைவா மாட்டி வச்சுட்டுப் போயிருக்கான் புருசங்காரன். ஐயா நாய்மாருங்களே.. போங்க எம் பொஞ்சாதி தயாரா இருக்கா.. கொஞ்சம் பக்குவமா நடந்து கருணை காட்டுங்க.. புள்ளத்தாச்சினு சொல்லி நாயிங்களை அனுப்பியிருக்கான்.. மொத நாயி உள்ளாற போயிருக்கான்.. பொண்ணு போத்திப் படுத்திருக்கா.. அளுதுகிட்டே ஐயா வேணாங்கனு கெஞ்சுறாப்புல கெஞ்சியிருக்கா.. இதைப் பாத்த போலீஸ்காரனுக்கு கோவம் வந்து புருசங்காரனையும் உள்ளாற வரச்சொல்லி என்னங்கடா ரெண்டுவேரும் வெளையாடறீங்களா ஒளுங்கா படுத்தா உயிரோட விடுவோம் அப்படி இப்படினு கத்தியிருக்கான்.. புருசங்காரன் சமாதானம் சொல்றாப்புல பொஞ்சாதிட்ட தாஜாவா பேசுறாப்புல பேசி வெளியே போய் கதவடைச்சான்.. பொஞ்சாதி அமைதியா போலீஸ்காரங்கிட்ட ஐயா வாங்கனு சொல்லி போர்வைய வெலக்குனா.. பாத்தா அம்மணமா படுத்திருக்கா.. ஒட்டுத் துணியில்லாத தக்காளி அம்மணத்தைப் பார்த்ததும் கெறங்கிப் போய் எல்லாத்தையும் களட்டிப் போட்டு கெடாவாட்டம் பாஞ்சிருக்கான் நாயி.. அவ வெரசலா நவுந்து, ஐயா போலீசு நீ கீள படுத்துக்கய்யா, நான் கெர்ப்பமா இருக்குறதால மேல ஏறி வரேன்னு சொல்லியிருக்கா.. அவனும் சந்தோசமா தலைமாட்டுல ரெண்டு தலையாணி அடுக்கி வச்சு வசதியா அகண்டு நல்லா நெட்டுகிட்டுப் படுத்திருக்கான்.. இவ மொள்ள அவன் வயித்து மேலே கால் மாத்திப் போட்டுக் குந்தி.. அந்தால ஏறுறாப்புல அவன் முகம் பாத்துக் குனிஞ்சு.. சட்டுனு மறைவா இருந்த வெட்டுக்கத்திய எடுத்து அவன் வாயிலயே நச்சு நச்சு நச்சு நச்சுனு நாலு தரம் குத்திக் கொன்னுட்டா.. ஊடால புருசங்காரன் கடப்பாரையால மத்த போலீசை மார்ல குத்தி, வெறி வந்தாப்புல சதையைக் கிண்டிக் கிண்டிக் குடைஞ்சுக் கொன்னுட்டான்.. வெறியடங்கின புருசன் பொஞ்சாதி ரெண்டுவேரும் விடியோவையும் அங்கருந்த எல்லாத்தையும் நாலஞ்சு போட்டாவும் எடுத்துட்டு வெளில வந்து கிடைச்ச மொத டாக்சியைப் பிடிச்சு தூதரகம் போனாங்க.. அவசர உதவி முறையில தூதர் கிட்டே பேசி விவரம் எல்லாம் சொன்னாங்க.. தூதர் அவங்களை அங்கயே தங்கச் சொல்லி யார் கிட்டேயும் எதுவும் பேசக் கூடாதுன்னுட்டாரு.. உள்ளூர் போலீஸ் பெரியதிகாரிகிட்டே விவரம் சொன்ன தூதரு, நாசூக்கா மிரட்டியிருக்காரு.. இதப்பாரு இந்த விசயத்தை இப்படியே விட்டா யாருக்கும் தெரியாம அமுக்கிறலாம், எங்க ஜனங்களை நாளைக்கே நாட்டை விட்டு அனுப்பிடறேன்.. அதைவிட்டு நீ கேஸ் போட்டு தொந்தரவு கொடுத்தீன்னா எல்லா விவரத்தையும் எங்க நாட்டு டிவியிலே போட்டுருவோம்ன்ருக்காரு.. விசயம் வெளிய வரவேயில்லே.. எனக்கு எப்படித் தெரியுங்களா.. என்ன இப்படிக் கேக்குறீங்க? விடுங்க.. இந்த ஊர்ல நெறய பேத்துக்கு இந்த விவரம் தெரியுங்க.. தா வந்திருச்சு ஐயா.. சரிங்கய்யா, போயிட்டு வாங்க. இருக்கட்டும்யா.. ரொம்ப நன்றிங்க

................. அட, எல்லாரும் மனுசங்க தானே சாமி? நாலு கடலை எடுத்து வாயில போட்டோம்னா ரெண்டு அவிசலா கடிபடுறப்ப என்ன செய்யுறோம்? மொத்தத்தையும் தானே துப்புறோம்? அது போலத்தான் சாமி.. ரெண்டு பன்னிங்க இருந்தா மொத்தமும் பன்னிப் பண்ணைனு சொல்லிடறோம்.. மன்னிச்சுருங்க. இந்த ஜிசிசி ஏரியாவுல பன்னின்ற வார்த்தையே ஆவாது.. நாயின்னே வச்சுக்குவோம்.. பாவம் வாயில்லாப் பிராணியை அடையாளமா வச்சுத்தான் கேடுகெட்ட மனுசங்களைப் பாக்குறோம்.. நம்ம மனசோட விகாரம் அப்படி.. இவங்க என்ன செய்வாங்க? ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? எவன் மதம் கடவுள்னு ரொம்ப மூடி மூடிக் கும்பிடுறானோ, அவந்தான் இருக்குற அட்டூழியம் அத்தனையும் செய்றான். இத்தனை கட்டுப்பாட்டோட இருக்குற இவங்க என்ன செய்றாங்க? வியாழக்கிழமைனா துபாய்க்கு ஓடிறானுங்க. அங்கே இருக்குற கொட்டம் அத்தனையும் அடிச்சுட்டு.. கொட்டம்னா அப்படி இப்படி லேசுபட்ட கொட்டம் இல்லிங்க.. அடிச்சுட்டு ஞாயித்துக்கிழமை ஊருக்கு வந்துருவாங்க.. கடவுளுக்கு நெருக்கமாப் போகப்போக கச்சடாத்தனம் அதிகமாயிட்டே இருக்கும்னு நினைக்கிறேன். இந்த ஊர் தாடி, நம்ம ஊர் காவி, அதா அந்தப்பக்க அங்கி எல்லாரும் அப்படித்தான். இந்த ஊர்ல மட்டும் கொஞ்சம் பரவாயில்லை சாமி. இருக்குற அரபி நாடுகள்ள இது கொஞ்சம் ஏழை நாடுனு சொல்வாங்க அதனாலயோ என்னவோ.. நம்ம ஊர் அரசியல்வாதிங்களுக்கு ஆசான் யாருனு நினைக்கிறீங்க? எல்லாம் இந்த மதகுருங்க தான். மதமும் சாமியும் என்ன சொல்லுது? எங்கே போறோம்னு சொல்ல மாட்டோம். போற இடம் நல்லாவும் இருக்கலாம் கெடுதலாவும் இருக்கலாம். இந்த மதத்து சாமியைக் கும்பிட்டா நல்ல இடத்துக்குப் போவலாம். கும்பிடாம இருந்தாலோ இன்னொரு சாமியைக் கும்பிட்டாலோ கெட்ட இடத்துக்குக் கேரன்டியா போவலாம். இதானே சொல்லுது? அரசியல்ல பாருங்க.. தலைவரு மட்டும் பதவிக்கு வந்தா நாட்டை எங்கேயோ கொண்டு போயிடுவாருனுவாங்க.. எப்படிக் கொண்டு போவாரு, அட அந்த எங்கியோன்றது எங்கே எப்படி இருக்கும்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா தலைவருக்கு மட்டும் ஓட்டுப் போடலின்னா நிச்சயம் அழிவுதான்னு சொல்லிருவாங்க. ஜனங்களைப் பயமுறுத்திக் தன்னோட கட்சிக்கு ஆதரவா மாத்துறதுல அரசியல்வாதியும் மதகுருவும் ஒண்ணுதான் சாமி.. ரைட்டுங்க.. நாலு மணிக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க, வந்துர்றேன்.

............... ராயப்பேட்டை பிரதர். வச்சிருக்குற இந்தத் தாடியெல்லாம் வேஷம்னாலும் ஒரு நன்றிக்கடன் பிரதர். ஊர்லந்து வந்தப்ப எம்பேரு அழகரசன்னு நல்ல தமிழ்ப்பேரு. சவுதி வந்து அகமது ரியாசுனு மாத்தியாச்சு.. ஏன்னா எப்படி பிரதர்? மின்னூத்தம்பது ரியால் சம்பளம்னு வீட்டு டிரைவர் வேலைக்கு வந்த எத்தினியோ ஆளுங்கள்ள நானும் ஒருத்தன்.. மதம் மாறினா நூறு ரியால் சம்மானமும் அம்பது ரியால் கூடுதல் சம்பளமும் கொடுக்குறப்ப விடுவானேன்? அதில்லாம இந்தூர்ல முஸ்லிமா இருந்தா கொஞ்சம் மதிப்பாங்க... என்ன கேட்டீங்க? இல்லே பிரதர். என்னை யாரும் கட்டாயப்படுத்தலே. என்னைக் கூட்டிவந்த பெரியவரு உண்மையிலயே பெரிய மனுசன் பிரதர். மதம் மாற சம்மதமானு அவரா கேட்டாரு. நான் சரின்னேன். தங்கமான மனுசன் பிரதர். ஹஜ்ஜு போய் வந்தவங்க பெரும்பாலும் உயர்ந்த குணமா இருப்பாங்க பிரதர். நான் மொதொ வேலைக்கிருந்த வீட்டுல என்னை டிரைவர் போல நடத்தாம வீட்டுல ஒருத்தராத்தான் நடத்துனாங்க. வருசத்துக்கு ரெண்டு செட் துணி, மாசா மாசம் சம்பளம், மூணு வேளை கறிசோறு, தங்குறதுக்கு இடம், ரெண்டு வருசத்துக்கு ஒருக்கா டிக்கெட்டு, நூறு ரியால் போனசு.. இதெல்லாம் போக.. பெரியவரு காலமாயிட்டப்ப வீட்டுக்காரங்க எனக்கு மெட்ராசுல பீடர்ஸ் ரோடு பக்கமா வீடு வாங்கித் தானமாக் கொடுத்தாங்க. அதெல்லாம் குறை சொல்லவே மாட்டேன் பிரதர். இன்னிக்கு என் பெண்டாட்டி பிள்ளைங்க ஊர்ல நல்லா இருக்காங்கனா அந்த முஸ்லிம் பெரியவங்க குடும்பம் தான் காரணம் பிரதர். என்ன.. இது போல ஆளுங்க கம்மி. நெறய பேரு..ஆமாமா.. பாஸ்போர்ட்டை பிடுங்கி வச்சுக்கிட்டு அடிப்பாங்க பிரதர்.. அதும் பொம்பிளங்க வேலைக்கு வந்தா செக்சுலந்து எல்லாப் பிரச்சினையும் கொடுப்பாங்க பிரதர்.. பெத்தவங்க பெத்துப் போட்டு வேலைக்காரி தான் பதிமூணு வயசு வரைக்கும் வளத்திருப்பா.. இருந்தாலும் வளந்ததும் வயசுக்கோளாறுல தொட்டுப் பார்ப்பான்.. ஓசியில கிடைக்குற முலையாச்சே பிரதர்? வேலைக்காரி முரண்டா அப்பங்கிட்ட சொல்லி அடிச்சு நொறுக்குவான்.. மெய்யாலும் பிரதர். அது சரி.. நீங்க கேள்விப்பட்டதும் உண்மைதான்.. நம்மூர்லந்து வேலைக்கு வந்த சிலபேரு அக்காமா வாங்கிக் கொடுத்தவங்க வீட்டுலயே ரெகளை பண்ணுவாங்க.. ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாத்தீங்கன்னா அதுல இருக்குற ஒருதலை நியாயம் புரிஞ்சுரும்.. அக்காமா எடுத்து வேலைக்கு வக்குற அளவுக்கு வசதியிருக்குறவங்க புலம்புறதுக்கும், வழியே இல்லாம எல்லாத்தையும் பறிகொடுத்து நாதியில்லாமப் புலம்புறவங்களுக்கும் வித்தியாசம் இல்லியா பிரதர்? வேலைக்கு வந்தவங்களைக் கொடுமைப்படுத்துற முதலாளிங்க தான் அதிகம் பிரதர். தம்மாமுல இன்னிக்கு கெடந்து நாறுது பிரதர் நம்ம நிலமை.. நம்ம அரசாங்கம் எல்லாம் எதுவும் செய்யாதுங்க.. நானா? நான் ஓரளவுக்கு லக்கி பிரதர். பெரியவரு போன பிறவு மத்த இடத்துல வேலைக்குப் போனப்ப எனக்கும் இந்த செக்சு தொல்லைங்க இருந்திருக்கு.. வீட்டுக்கு ரெண்டு மூணு பெண்டாட்டிங்களைக் கட்டிப்போட்டு பத்தாதுனு வாரக்கடைசில பஹ்ரெய்ன் ஓடிறுவாங்க.. பொண்ணுங்க என்ன செய்வாங்க? அவங்களும் மனுசங்க தானே? வீட்டு வேலை செய்யறவங்க அக்கம் பக்கம்னு யாருக்கும் தெரியாம கசமுசா நடக்கும்.. பொண்ணுங்க தப்பா நடந்தாத்தான் சொல்லடியும் கல்லடியும் சவுக்கடியும் பிரதர்.. ஆம்பிளங்க என்ன வேணா செய்யலாம்.. ஆனா இதெல்லாம் தப்புனு ஆண்டவன் சொல்லியிருக்காருனு அப்பப்போ வெளிப்படையா பேசிக்குவாங்க.. என்ன செய்ய.. இவங்க மதத்துல பெண்ணுங்களை அடக்கி வைக்க அலோ பண்ணியிருக்குது.. எஞ்சாய் பண்றாங்க.. நாமெல்லாம் பொறாமை பிடிச்சு அலைய வேண்டியது தான்.. மதம் மாத்துறதா? அது நடந்துட்டு தான் இருக்கு பிரதர்.. இன்னிக்கு உலகத்துல இஸ்லாம் வேகமா வளறுதுன்றாங்க.. வளரட்டும்.. இஸ்லாம் அல்லாத மதக்காரங்க நரகத்துக்குப் போவாங்க, அதனால அவங்களை மதம் மாத்தி சொர்க்கத்துக்கு கொண்ட்டு போய் சேக்குறோம்பாங்க.. தனக்கும் சொர்க்கம் கிடைக்கும்னு நம்புறாங்க.. ஹஹ.. ஆமா பிரதர்.. இவங்க இதே இஸ்லாத்து சியாக்காரங்களை லச்சக்கணக்குல கெமிகல் ஊத்தி வெடி வச்சுக் கொளுத்தி சாகடிப்பாங்க.. ஆனா அதுல தப்பே இல்லை.. ஒரு பாவமும் இல்லேன்னுறுவாங்க.. மதமே இப்படித்தான் பிரதர். இப்ப பாருங்க.. அடுத்த வருசம் இந்தியாவுல தேர்தல் வருதுல்ல. ஆட்சிக்கு வந்தா முஸ்லிம்களை விரட்டுவாருன்றதுக்காகவே பெரிய கூட்டம் மோடிக்கு ஓட்டுப் போடக் காத்துட்டிருக்குதுன்றாங்க பிரதர்.. வெக்கக்கேட்டை என்னானு சொல்ல.. ஹஹ.. இவங்களுக்காவது ஆண்டவன் எண்ணையக் கொட்டிக் கொட்டிக் கொடுத்திருக்கான், காசை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கான், நூத்தாண்டுக் கணக்கா ஒட்டகம் ஓட்டுனவங்க இன்னக்கு காரு பங்களானு வசதியா இருக்காங்க.. இருக்கட்டும்.. ஆண்டவன் கொடுத்தான்னு ஒரு சின்ன நன்றியோட இருக்காங்க மதத்தைக் கொண்டாடுறாங்கன்னு வச்சுக்குவோம்.. ஆனா நம்ம ஊர்லந்து வந்தவங்களைக் கவனிச்சீங்களா? நம்மளைப் போலவே காசுக்காக சொந்த பந்தம் பொறந்த மண்ணை விட்டு இங்க வந்தப் பிறவு.. நம்மகிட்டயே உங்க நாட்டுல முஸ்லிம் நிலமை இப்படி இருக்குதுனு இந்தியாவைப் பத்திப் பேசுவானுங்க ஒட்டுவாரொட்டிப் பல்லிங்க.. என்னவோ இவங்க இங்கியே பொறந்து வளந்தாப்புல கட்சி கட்டி இந்தப் பொறம்போக்குங்க அடிக்குற கூத்து இருக்குதே பிரதர்.. டூ மச்.. என்ன செய்யுறோம்னு கூடத் தெரியாம கூத்தடிப்பாங்க பிரதர். நம்மூர்க்காரன் கூத்தைக் கேளுங்க பிரதர். ஆமா.. நம்ம ஊர் ஆளு தான். ஊர்ல ஒரு கல்யாணம் கட்டி மூணு கொழந்தைங்க இருக்கு. இங்க வீட்டுக்குத் தெரியாம ஒரு பிலிபினோ பொண்ணைக் கட்டி வச்சிருக்கான். எல்லாம் அரேஞ்சுமென்டு. ரெண்டு மாசத்துக்கொருக்கா ஊருக்குப் பணம் அனுப்புவான். என்ன எழவோ திடீர்னு அவனுக்கும் அந்தப் பிலிபினோ பொம்பளக்கும் சண்டை. போட்டுத் தள்ளிட்டான். ரெண்டு நாள் தலமறைவா இருந்து போலீஸ்ல சரணடைஞ்சான். அப்புறம் என்ன செஞ்சான் தெரியுமா பிரதர்? அவ இஸ்லாம் மதத்துக்கு விரோதமா நடந்தா அதான் கொன்னு போட்டேன்னு கூசாம சொல்லிட்டான்... ஜட்ஜுங்க கிட்டே அய்யா என்னை இந்தியா அனுப்பிறாதீங்க.. முஸ்லிமுன்னு பாக்காம என்னை கொலைகாரன்னு அடிச்சுப் போட்டுருவாங்க அப்படி இப்படினு ஒப்பாரி வச்சான்.. என்ன ஆச்சா.. ஒரு வருசம் ஜெயிலு பிறகு வெளில வந்துட்டான்.. இன்னொரு கல்யாணம் செஞ்சுட்டு இன்னிக்கு வண்டி ஓட்டிட்டுருக்கான். இடையில போன வருசம் ஊர்ல வெவரம் தெரிஞ்சு போச்சு. அங்க ஒரு குடும்பம். இங்க ஒரு குடும்பம். என்ன செய்வாங்க.. அவங்களுக்கு சோறு வீடு எல்லாம் தேவையாச்சே.. இத்தனை வருசம் பொறுத்தவங்க அப்படியே இருந்துட்டுப் போறோம்னு விட்டுட்டாங்க. இந்தாளு எஸ்கேப்பு. நிம்மதியா இருக்கான். ஆக எல்லாரும் ஒரே குட்டைல ஊறின மட்டைங்க தான். இந்த ஊர்க்காரங்க வெளிப்படையா செய்றாங்க.. திருட்டுத்தனம் இல்லாம.. அதைப் பாக்குறப்ப இவங்களே மேல் ..யார் சொன்னது? துபாய்லாம் ஒண்ணுமில்லே பிரதர்.. அய்யய்யே.. பஹ்ரெய்ன் ஈசிடில பாருங்க.. தாய்லந்து கெட்டுது.. சாவான் போட்டுவறதுக்காகவே உருவாக்குன இடம் பிரதர் ஈசிடி.. இவனுங்க மட்டுல்ல இங்க்லிஸ்காரனுங்க நம்மூராளுங்க எல்லாம் வாரக்கடைசியானாப் போதும் கைல பிடிச்சுட்டு பஹ்ரெய்ன் ஓடிருவாங்க..ஹஹ.. நீங்களும் போயிருக்கலாம்ன்றீங்களா? அட, முன்னாலயே சொல்லாட்டிப் போனா என்னா? இப்பக்கூட போவலாம்.. அழகா பாலம் கட்டியிருக்காங்க.. சல்லுனு போயிட்டு வந்துறலாம்.. சூப்பரா எஞ்சாய் பண்ணிட்டு வரலாம்.. வேலையை முடிச்சுட்டு வந்து வேணும்னா சொல்லுங்க பிரதர்

................. நானா சார்? மன்னம்பந்தல் ஏவிசி காலேஜுல பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கேன் சார். இந்த நாட்டுல வண்டியோட்டுறதா? அது ஒரு கதை. மாயரம் திருச்சி மதுரை மெட்ராசு பக்கம் எங்கயும் வேலை கிடைக்கலே சார்.. அப்புறம்.. உங்ககிட்டே சொல்றதுக்கு என்ன சார்.. ஒரு அவசரத்துல இங்க வர வேண்டியதாப் போச்சு. இந்தப் படமா..? என்னோட காதலி. இல்லே சார், நான் கல்யாணம் பண்ணாத காதலி.. சொல்றேன் சார்.. வேணும்னுதான் கண்ணை வெள்ளைத்தாள் ஒட்டி மறைச்சிருக்கேன். என்னோட தோள்ல சாஞ்சுக்குறதுனா அவளுக்கு ரொம்ப பிடிக்கும் சார். சாஞ்சுகிட்டே இருப்பா. அப்பல்லாம் தோள் நல்லா உரமேறி கெத்தா இருக்கும்.. சின்னய்சுலந்தே கர்லா சுத்துவேன்.. இப்படி கழுத்துலந்து இறங்குறப்ப தோள்சதை மாம்பழக் கதுப்பாட்டம் இருக்கும்.. அவ அந்த சதைல வாய் முழுக்க வச்சு, ஆனா கடிக்காம அப்படியே விளையாட்டா உறிஞ்சுவா.. சட்டுனு கடிச்சுருவா.. யம்மா ராச்சசி ஏண்டி இப்படி கடிக்குறேம்பேன்.. உன்னை அப்படியே கடிச்சு சாப்பிட்டுறலாம் போல இருக்கும்பா.. உண்மையில அவளால அழுத்திக் கடிக்கவும் முடியாது.. அவ கடிச்சா தோள் லேசாத்தான் வலிக்கும்,. ஆனா நிறுத்தினா நெஞ்சு நல்லா வலிக்கும் சார். பல்லு பட்டாலே சில்லுனு இருக்கும். அதனால அவ எச்சிலும் பல்லும் பட்டுக்கிட்டே இருக்கட்டும்ணு விட்டுறுவேன்.. ஒரு தடவை அப்படி எடுத்த படம்.. இல்லே சார்.. எல்லாத்தையும் விட்டு வந்துட்டேன்.. எங்கே இருக்கான்னே தெரியாது சார்.. அவ எங்க எதிர்வீட்டுப் பொண்ணு. சின்ன வயசுலந்தே ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கும்னாலும் நான் காலேஜ் செகன்ட் இயர் போன பிறகுதான் காதலிக்கத் தொடங்குனோம். அவ பக்கத்துல பாலிடெக்னிக்குல படிக்க வருவா. ரெண்டு பேரும் ப்ரெண்டா பழகறாங்கன்ற அளவுக்குத்தான் வீட்டுல தெரியும். மொதல்லியே சொல்லியிருந்தா கல்யாணம் செஞ்சு வச்சிருப்பாங்களோ என்னவோ. எங்களுக்கு பயம். இதுல என்னாச்சு பாருங்க அவளுக்குப் பொண்ணு பாத்தாங்க. பெண் பாக்க வந்த ஆளு இவகூட ஒரு வார்த்தை கூட பேசலியாம். பின்னால சொன்னா. என்ன புண்ணியம் சார்? அந்தாளுக்கு அவளைப் பிடிச்சு போச்சு. ரெண்டு வீட்டுக்கும் பிடிச்சுப் போச்சு. இவளுக்குப் பிடிக்குதானு யாரும் கேட்கக்கூட இல்லை. எங்கிட்ட சொல்லி அழுதா. எங்க வீட்டுல சொல்லிக் கல்யாணம் செஞ்சுக்கலாம்னேன்.. பயந்தா. ஓடிப்போயிறலாம்பேன்.. அதுக்கும் அவளுக்கு அனியாயத்துக்கு பயம். வேணாம்.. இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ என்னை சந்திக்காதே.. தேவைப்பட்டா நானே உன்னை வந்து சந்திக்கிறேன் அப்படி இப்படினு அறிவில்லாம உளறுவா.. இன்னிக்கு ஒண்ணு சொல்லுவா, மறுநாள் அதுக்கு நேர்மாறா எதுனா செய்வா.. ஏண்டி சனியனே, காதலிக்க மட்டும் தெரியுதானு எரிச்சலோட கேப்பேன். அதுக்கு என் தோளைக் கடிச்சுகிட்டு அழுவா. என்ன செய்யுறது சார்? சிக்கல் காதல்கள்ல பாருங்க... காதலி காதலனை நம்பணும்.. இவன் நம்மளைக் கைவிட மாட்டான்னு நம்பணும்.. யார் என்ன சொன்னாலும் இவனை மட்டும் ஒதுக்கக் கூடாது.. இவன் சொன்னதை மட்டும் மறக்கக் கூடாது, வார்த்தை பிசகக் கூடாதுனு இருக்கணும்.. ஆனாப் பாருங்க, நம்ம ஊர்ப் பெண்ணுங்க கடவுளை நம்புவாங்களே தவிர காதலனை நம்பமாட்டாங்க.. ஒரு எதிர்ப்பு சிக்கல்னு எதுனா ஆச்சுனா காதலனைத்தான் மொதல்ல மண்டையில அடிப்பாளுங்க.. தூக்கி எறிஞ்சிருவாங்க.. துரோகிங்க.. இவளும் அப்படித்தான்.. என்னாச்சு.. அவளுக்குக் கல்யாணமாச்சு வேறென்ன? தூக்கம் வருதா சார்.. தம்மாம் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆவும் சார்.. வேணா படுங்க.. சரி சொல்றேன்.. அவ கல்யாணம் செஞ்சுகிட்ட அந்தாளு குடிகாரன் சார். மொந்தைக்குடி. அதான் அவன் பெண் பார்க்க வந்தப்ப வாயே தொறக்கலே. அரசாங்க உத்யோகத்துல இருக்குற திமிர். சீட்டாட்டம் சினிமா ரேஸுனு சம்பளத்தை விட்டுறுவான்.. இவகிட்டே வந்து நகையக் கொண்டா, பணத்தைக் கொண்டானு அடிப்பான் சார்.. ரொம்ப அடிப்பான் சார்.. என் செல்லத்தை ரொம்பத் துன்புறுத்திட்டான் சார்.. வாயை வீசினா தேவடியா முண்டை கையை வீசினா கன்னிப் போறாப்புல அடி! ரொம்பக் கொடுமைப்படுத்திட்டான் சார்.. இப்பவும் எனக்கு எரியுது. நான் அப்ப ஒரு டீலர் கிட்டே வேலைல இருந்தேன் சார். மார்கெட்ல போய் சரக்கு போட்டு பணம் வாங்கிட்டு வரணும். அவ வீடு என் ரூட்லதான் இருந்துச்சு சார். ஒரு நாள் பாக்குறேன், வீட்டு வாசல்ல நின்னு அழுதிட்டிருக்கா. என்னாடின்னேன். புருசன் கோவத்துல வெளில தள்ளிக் கதவை அடைச்சுட்டான்றா. எவ்வளவு நேரமா நிக்குறேன்றேன்.. காலையில ஆபீஸ் போறப்ப என்னை வெளியே தள்ளி கதவைப் பூட்டிக்கிட்டு போயிட்டாருன்றா.. இதென்ன கூத்துனு கேட்டா மெள்ள விவரம் எல்லாம் சொன்னா. வெளில வந்துருன்னேன். சும்மா இருந்தப்பவே பயந்து செத்தவ இப்ப வருவாளா சார்? பாருங்க.. ஏற்கனவே அடிபட்டு விளாறாக் கிடப்பா சனியன்.. பத்தாதுனு பதட்டத்துல அடிக்கடி சமையல் அடுப்புல தானே சுட்டுக்கிட்டு கஷ்டப்படுவா.. புருசங்காரன் சிகரெட்டால சுட்டானானு கேப்பேன்.. கிழக்கு மேற்கா நல்லா மண்டைய ஆட்டுவா.. மறை கழண்டாச்சு.. பாத்து.. மண்டையும் கழண்டுறப்போவுது.. உனக்கென்ன வெக்கம் மானம் ரோஷம் சுயமரியாதை அறிவு கிறிவு எதுவும் இல்லையானு கடுப்பா கேப்பேன் சார்.. இல்லேனு சொல்வா சார்.. அப்ப என்னதான் இருக்குனு கேப்பேன்.. பயமா இருக்குனு அழுதுகிட்டே சிரிப்பா சார். என்னத்த செய்ய? எனக்குப் பாவமா இருக்கும்.. என்னால முடிஞ்சவரை ஆறுதலா எதுனா பேசிட்டு வருவேன். இடையில எனக்கு டீலர் கடை வேலை போயிடுச்சு. எனக்கு நல்லப் பழக்கமான ஊராட்சித் தலைவர் என்னை வீட்டுக்குக் கூட்டிவந்து சாப்பாடு போட்டாரு. இது போல மஸ்கட்ல டிரைவர் வேலையிருக்குறதாவும், கூடவே நாலஞ்சு டிரைவருங்களை மேய்க்கணும்னும் இன்னும் சில வேலைகளும் சொன்னாரு. பத்தாயிரம் ரூவா அட்வான்சா கொடுத்தாரு சார். வேலையும் இல்லாம இவளையும் நெனச்சு நொந்து நொந்து சாவுறதை விட கண்காணாமப் போயிறலாம்னு தோணிச்சு. யோசிச்சு சொல்றேன்னு பணம் வாங்காமக் கிளம்பின எங்கிட்டே அஞ்சாயிரம் சேர்த்துப் பதினஞ்சாப் பணத்தைக் கொடுத்து யோசிச்சு சொல்லு ஒண்ணும் அவசரமில்லேன்னாரு. ரெண்டு நாள்ல பம்பாய்க்கு டிகெட் வாங்கியிருக்குறதாவும் அங்கே நாப்பது நாள் தங்கி அக்காமா எல்லாம் கிடைச்சப்புறம் அங்கருந்தே மஸ்கட் போவலாம்.. ஆனா யோசிச்சு சொல்லுன்னாரு சார். பணத்தையும் டிக்கெட்டையும் கொடுத்து இவ்வளவு விவரமும் சொன்ன பிறகு என்னாத்தை யோசிக்குறது? எனக்கு எங்கம்மாவை விட்டா வேறே யாருமில்லே சார்.. பணத்தை அவங்ககிட்டே கொடுத்து பம்பாய் போற முடிவோடு வீட்டைப் பார்க்கப் போனேன். போனா அங்கே இவ அழுதுட்டிருக்கா சார்.. எங்கம்மா அவ தலையைத் தடவிக்கிட்டே நீ எதுக்கும் கவலைப்படாதே தங்கம்னு சொல்லிட்டிருக்காங்க சார். ஊர் உலகத்துல எத்தனையோ பேர் அவங்க அம்மாவைப் பத்தி பரந்த மனம், எல்லாத்தையும் புரிஞ்சுக்குற பாங்கு, அப்படி இப்படினு சொல்வாங்க இல்லிங்களா? நானும் நிறைய அம்மாக்களைப் பாத்திருக்கேன் சார். ஒரு சிக்கல்னு வந்ததும் தன் வட்டத்தைத் தவிர வெளில யாரையும் எதையும் சகிச்சுக்க முடியாத அம்மாங்க தான் அதிகம். நல்ல நிலைனாலும் சரி, தீவிர சிக்கல்னாலும் சரி, தன் குடும்பத்தைப் போலவே மத்த குடும்பத்தையும் நினைக்குற ஒரே மனம் உலகத்துல எங்கம்மாவுக்கு மட்டுந்தான் சார். சத்தியமான வார்த்தை. நேரில பாத்துப் புரிஞ்சுக்கிட்டவன் சார்.. அவளைச் சமாதானம் செஞ்சுகிட்டே எங்கம்மா எல்லா விவரமும் சொன்னாங்க. புருசன் மறுபடி சம்பளத்தைத் தொலச்சுட்டு அவளை அடிச்சு தொம்சம் பண்ணியிருக்கான். ஒரு கடை வைக்குறதா சொல்லி வீட்டுலந்து அஞ்சாயிரம் ரூவா வாங்கிட்டு வானு அனுப்பியிருக்கான். எங்கப்பா கிட்டே பணம் ஏதும் கிடையாதுனு இவ சொன்னதுக்கு அவனுக்கு வந்த கோவத்துல இவளை நல்லா புடைச்சுட்டான் சார். இனி பணம் இல்லாம திரும்பி வராதேனு சொல்லியனுப்பிட்டானாம். தன் வீட்டுக்கு வந்த இவ, இனிமே அவனோட வாழமாட்டேன்னு அடம் பிடிச்சாளாம். ஆனா அவங்க அப்பா வீட்டுல இருந்ததையெல்லாம் அடகு வச்சு பணம் வாங்கிட்டு வரதாவும் இல்லே பிச்சை எடுத்தாவது வாங்கிட்டு வரதாவும் சொல்லி.. வாழ்ந்தாலும் செத்தாலும் நீ உன் புருசனோட தான் இருக்கணும்னு கட்டாயப்படுத்தி.. இவளைப் பாத்துக்குங்கனு எங்க வீட்டுல விட்டுப் போயிருக்காரு.. எங்கம்மா விவரமெல்லாம் சொல்லச் சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள எரியுது சார். திடீர்னு அவளைப் பார்த்துக் கத்தினேன். எங்கூட வந்துருனு எத்தனை தடவை சொன்னேன் கேட்டியா உனக்கு நல்லா வேணும் நல்லா வேணும்னு கடுப்புல கண்மண் தெரியாம பேசிட்டேன். பேசின வேகத்துல வெளில போனவன் தான். மன உளைச்சலோட அங்க இங்க சுத்திட்டு அன்னிக்கு நைட்டே ஊராட்சித் தலைவர் கிட்டே பம்பாய் டிகெட் வாங்கிட்டு மெட்ராசுக்கு பஸ் ஏறிட்டேன். ஊர்ப் பக்கமே போவலே.. பார்டர் வந்துருச்சு சார்.. அக்காமா எல்லாம் எடுத்து தயாரா வச்சுக்குங்க.. அப்புறம் என்ன சார்.. மஸ்கட் வந்து ரெண்டு மாசம் பொறுத்து அம்மாவுக்கு போன் செஞ்சேன். அம்மா எல்லாம் சொன்னாங்க.. ஒண்ணும் ஆகலே சார்.. அவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாருங்க.. அவ புருசன் ரோட்டுல அடிபட்டு செத்துக் கிடந்தானாம்.. அதுவும் நான் மெட்ராசுக்குக் கிளம்பின அதே நாளில.. அது போதாம அவ வீட்டு அரிசிப் பானைக்குள்ள கத்தை கத்தையா ரூவா நோட்டாம் சார்.. பதினஞ்சாயிரமாவது இருக்கும்னாங்க அம்மா.. ஓசைப்படாம பணத்தை எடுத்துக்கிட்டு அவ எங்கம்மா கிட்டே ஓடி வந்து விவரம் சொல்லியிருக்கா.. திருட்டுப் பணமா இருக்கும் அதான் எவனாவது போட்டுத்தள்ளியிருப்பான்.. பணத்தை வச்சுக்க. உனக்கு விடுதலைனு நெனச்சுக்கனு அம்மா சொல்ல, இவ விட்டது சனினு எங்கம்மா கால்ல விழுந்து பணத்தை எடுத்துக்கிட்டுப் போயிட்டாளாம்.. இந்த மாதிரி ஒரு புருசனோட என்னை சேத்து வச்சியேனு அவ அப்பா மேலே ரொம்பக் கோவமாம்.. அதனால அவங்க வீட்டுல கூட சொல்லாமலே போயிட்டாளாம்.. எல்லாத்தையும் சொன்ன எங்கம்மா எங்கிட்டே அமைதியா டேய் அவ எங்கியோ நல்லா இருக்கா.. நீ எந்தக்காரணம் கொண்டும் இனி இந்தப்பக்கம் வராதடானுட்டாங்க.. அதனால நானும் ஊர்ப்பக்கமே போகலே சார். ஊருக்குப் போகலின்னாலும் அவ நினைவு அப்படியே இருக்கு.. அப்பப்ப அவ நினைவு தோள்ல கடிவலி மாதிரி வந்து போகும்.. போட்டோவைப் பார்த்துக்குவேன்.. அவ கண்ணைப் பார்த்தா எங்கே எல்லாத்தையும் விட்டு உடனே ஊருக்கு ஓடிருவேன்னு ஒரு பயம் சார்.. அதான் வெள்ளைத்தாள் ஒட்டி நிரந்தரமா மறைச்சுட்டேன். வந்தாச்சு சார்.. நீங்க உள்ளாற போய் விசா பாஸ்போர்டு காமிச்சு ஸ்டாம்ப் அடுச்சுட்டு வாங்க.. நான் இதா இங்க இருக்கேன்.