◀ 1
    "வாங்க அண்ணே" என்று மல்லியை மீண்டும் வரவேற்றார் கனகவல்லி. தன் இடது கையில் இருந்த ஜபமாலையை அருகிலிருந்த வட்டத்தட்டில் வைத்தார். "இப்படி உட்காருங்களேன்?" என்று வலது கையால் எதிரே இருந்த சோபாவைச் சுட்டினார். அவர் விரல்களில் இரண்டு மோதிரங்கள் மின்னின. சோபாவின் பின்புறம் இருந்த மர வடிவ மெழுகுவர்த்தி அடுக்கின் கிளைகளில் மென்மையாக எரிந்து கொண்டிருந்த மினி டீ கப் வாசனை மெழுகுவர்த்திகள். சோபாவின் எதிரே வட்டமேசை மீது சிகப்பு வெல்வெட்டில் ஒரு சக்கரம். அதையொட்டி கிழக்குமுக சுவரலமாரியில் துத்தனாகத் தகடுகள், ஆமையோடு, சிறிய துவஜஸ்தம்பச் சிற்பம், சங்குகள், பொன்சய் மரம் என்று அலங்காரப் பொருட்கள். மேல்தட்டின் வடக்கு, தெற்கு முனைகளில் துவாரபாலகர் சிலைகள். இடையே ஒரு சதுரத் தாமிரக் கிண்ணத்தில் தண்ணீரை மூடிய உதிரிப் பூக்கள். உள்ளிருந்து வந்த விசித்திரமான சமையல் மணம். அனைத்தையும் உள்வாங்கிய மல்லி, சோபாவை நோக்கி நடந்தார்.
"கனகம், நானும் இங்க உட்காரவா?" என்ற ராஜசிங்கத்தைப் புன்னகையுடன் முறைத்த கனகவல்லி, "இப்படி உக்காருங்க சிங்கம்" என்று வலதுபுறம் இருந்த தெற்குமுக நீல நிற நாற்காலியில் உட்காரச் சொன்னார்.
"என்ன இவன்? பெண்டாட்டி பர்மிசன் கேட்டுத்தான் உக்காருவானா?" என்று கிசுத்த தயாவை அடக்கிய மல்லி, மீண்டும் கனகவல்லிக்கு உரக்க வணக்கம் சொன்னார். "கல்யாணத்தப்ப பார்த்தது.. நல்லா இருக்கியாம்மா? நீங்கள்ளாம் இந்த ஊர்ல இருக்குறதே தெரியாம போச்சே! சிங்கம் இப்பத்தான் சொன்னான்..உனக்கு வாஸ்து பெங்சூய் சமாசாரங்கள்ள ஈடுபாடுனு சொன்னதும்.. உடனே பாத்துட்டு போவணும்னு வந்துட்டோம்.. எனக்கு வாஸ்துல அபார நம்பிக்கை.."
"அப்படியா! உங்களுக்கும் வாஸ்து நம்பிக்கையா!" என்ற வல்லியின் கண்கள் விரிந்தன. "ரொம்ப சந்தோசம்ணே.."
"தயாவுக்கு வாஸ்து சாஸ்திரம்னா என்னை விட அதிக நம்பிக்கை, ஈடுபாடு.."
மல்லி சொன்னதைக் கேட்டதும் சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்த தயா அதிர்ச்சியில் வழுக்கித் தரையில் விழுந்தார்.
"அப்படியா?" என்ற கனகவல்லியின் பார்வையில் அவநம்பிக்கை. மூன்று வேளை சாப்பாட்டைத் தவிர வேறெதிலும் நம்பிக்கையற்றவரைப் பார்ப்பது போல் ஒரு கீழ்ப்பார்வை பார்த்தார். வல்லியின் முகத்தைப் பார்க்காமல் மெள்ள சோபாவில் ஏறி உட்கார்ந்த தயா, மல்லி அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று உள்ளூர நடுங்கினார்.
"ஆமாமா.. எனக்கு வாஸ்து நம்பிக்கை வந்ததே இவனால தான்..!" என்றார் மல்லி.
'ஐயையோ!' என்று கூவிய தயா சுதாரித்து.. "அய்யய்யே.. அப்படியெல்லாம் இல்லே.. ஏதோ நம்பிக்கை அவ்வளவு தான்" என்றார். சட்டென்று எழுந்து ஓட முடியாத அவஸ்தையுடன் வாசலைப் பார்த்தார்.
"ஏதோ நம்பிக்கையா? என்னப்பா இப்படிச் சொல்றே! உன் வாஸ்து குருநாதர் தானே என்னை நம்ப வச்சாரு?!"
"குருநாதரா?" என்றனர் கனகவல்லியும் தயாவும் ஒரே நேரத்தில். கனகவல்லி வியப்புடனும், தயா திடுக்கிட்டும். அடங்காத திகிலுடன் மல்லியைப் பார்த்தார் தயா. 'சிங்கத்துக்கு உதவி பண்ணுடானு வந்தா என்னைக் கவுக்கிறானே கிராதகன்!'
"உன் குருநாதரைத்தான் சொல்றேன்" என்று மீண்டும் சொன்ன மல்லியின் கழுத்தை நெறிக்கத் தோன்றியது தயாவுக்கு.
புது மரியாதையுடன் தயாவைப் பார்த்தார் கனகவல்லி. அழுக்குச் செருப்புடன் ஓடி வந்த பிள்ளை, வாசலில் நின்று செருப்பைக் கழற்றி வைத்து உள்ளே நுழைவதைப் பாராட்டும் பார்வை. கடக் மடக் கர் புர் என்று பெருத்த ஓசையுடன் சுற்றிலும எச்சில் விழச் சாப்பிடும் பழக்கமுள்ளவர், திடீரென்று அடக்கி வாசித்து வாய் திறவாமல் அசை போடுவதைப் பாராட்டும் பார்வை. "நமக்குத் தெரியாததை குருமாருங்க கிட்டே கத்துக்குறது தான் முறை" என்றார். "தயாண்ணே.. உங்க குரு.. அவருக்கு எதுல ஈடுபாடு? மய சாஸ்திரமா விஸ்வகர்மாவா?"
'இதென்ன கர்மமோ தெரியலியே? எனக்கு கோழி குருமா தானே தெரியும்?' என்று திணறிய தயா, "அது வந்து.. சரியா தெரியலே.. ரெண்டும் தான். சில நேரம் மய சாஸ்திரம் நல்லதுனுவார்.. திடீர்னு குருமா தான் பெஸ்டும்பாரு"
"குருமாவா?"
"விஸ்வகர்மா.." என்று மறித்தார் மல்லி. "சாப்பாட்டு டைம் இலையா? கிச்சன்லந்து குருமா மணம் வேறே தூக்குது.. அதான் குருமாக்கு போயிட்டான்.."
"ஹிஹி" என்றார் தயா. "ஆமாம்.. விஸ்வகர்மா தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்னு தோணுது.. அடடா.. இந்தக் கேள்வி எங்களுக்குத் தோணவேயில்லே பாருமா.. குரு ஏதோ வாஸ்துன்னாரு நானும் இவனும் எருமையாட்டம் தலையாட்டினோம்" என்ற தயா, எருமையை அழுத்திச் சொன்னார். "உனக்கு என்னா ஞானம்! சட்னு விவகாரத்தை புட்டு வச்சுட்டம்மா"
"எங்கே இருக்காரு உங்க குரு? அவரை நான் பார்க்கணுமே?" என்றார் கனகவல்லி.
"அது வந்து" தயா நெளிந்தார். மல்லியை மனதுள் முள்சாட்டையால் அடித்தபடி, வெளியே பரிதாபமாகப் பார்த்தார். உதவிக்கு வந்த மல்லி, "அதுக்கென்னம்மா.. அவர் உங்க வீட்டுக்கு வந்து வாஸ்து ஆசீர்வாதம் செஞ்சுட்டு போவாருமா.. ஏற்பாடு செஞ்சுறலாம்.. வீட்டுக்கு வரதுனால.. கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான்.. அஞ்சாயிரம் பத்தாயிரம்.." என்றார்.
"செலவைப் பத்திக் கவலையில்லே" என்றார் கனகவல்லி. "அவசியம் ஏற்பாடு செய்யுங்கண்ணே.. தடைபட்டுக்கிட்டே போவுற என் பையன் கல்யாண விஷயமா வாஸ்து சாந்தி எதுனா சொல்வாரா பார்க்கணும்.."
"வெள்ளிக்கிழமையே வரச் சொல்லிடறோம்.. வார பூஜைக்கு இந்தப் பக்கம் சாயிபாபா கோவிலுக்கு வருவாரு.. அப்படியே இங்கே வந்து ஒரு சின்ன பூஜையும் சாந்தியும் செஞ்சுடலாம்மா.. அப்ப நாங்க கிளம்புறோம்" என்றார் மல்லி.
"நான் அவங்களை காமதேனுல விட்டு வந்துடறேன்" என்ற கணவரிடம், "ப்ச.. பார்த்துங்க.. தென்முக நாற்காலிக்கு குறுக்கே போவாதீங்க.. சுத்திப் போங்கனு சொல்லியிருக்கனே, மறந்துட்டிங்களா? உட்கார்ந்து பத்து எண்ணிட்டுக் கிளம்புங்க" என்றார் கனகவல்லி. "தயாண்ணே.. உங்க குரு.. அவர் பேரு சொல்லவேயில்லியே நீங்க?".
தடுமாறிய தயாவை மறித்த மல்லி, "சுவாமி சுந்தர்ஜி" என்றபடி வாசலை நோக்கி வேகமாக நடந்தார். தயாவும் ராஜசிங்கமும் திரும்பிப் பார்க்காமல் மல்லியை அவசரமாகப் பின்தொடர்ந்தனர்.
    வெளியே வந்து மூவரும் பேசவில்லை. லஸ் முனை வந்ததும் தெருவோர டீக்கடையில் மூன்று மசாலா டீ ஆர்டர் செய்தார் மல்லி.
"நீயே அதுல பாஷாணம் கலந்து குடுத்துருடா" என்றார் தயா கடுப்புடன். "மல்லி டேய்.. உன்னை மாதிரி நண்பன் இருக்குறப்ப எனக்கு எதிரியே தேவையில்லே.. விளங்குவியாடா நீ?"
"சும்மா இருப்பா" என்றார் மல்லி கடைக்காரனிடமிருந்து டீயை வாங்கியபடி. "உன் பிரச்சினை தீந்துருச்சுனு வச்சுக்க, சிங்கம்"
"எப்படிரா? குழியில விழுந்தவனை பாம்பு கடிச்ச கதையா இல்லே ஆயிருச்சு?" என்று பொருமினார் தயா. "இவன் பெண்டாட்டியை மாத்தி இவங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைனு சொன்னா எங்கந்தோ குருநாதரை கொணாந்து.. என்னை வச்சுல்லே காமெடி செஞ்சிருக்கே? இப்ப சாமியாரை எங்கிருந்துரா கூட்டியாறது? சுவாமி சுந்தர்ஜியாமில்லே? யாருடா அது?"
    அன்புமல்லி எல்லாவற்றையும் பொறுமையாகச் சொன்னார். சிங்காரம் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டான். தயாவும் ராஜசிங்கமும் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்கள். இருவர் பார்வையிலும் எதிர்பார்ப்பு. அன்புமல்லியின் பார்வையில் ஆவல். சிங்காரத்தின் பார்வையில் அதிர்ச்சி.
சிங்காரத்துக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. தவறு. கை ஒரு பக்கமும் கால் ஒரு பக்கமும் ஓட முயற்சி செய்தன என்பதே சரி. ஜெயமோகனும் மணிரத்னமும் சேர்ந்து கடல்2 கதையை உரக்கப் படிக்க, நடுவில் உட்கார்ந்து கேட்க நேர்ந்தது போல் நடுங்கினான். விஜய் படத்தை ஓடவிட்டு தியேடரில் கதவடைக்கப்பட்டது போல் குலை நடுங்கினான். வியர்த்தது. கைகள் இரண்டும் குளிர் ஜுரத்தில் நடுங்குவது போல் உணர்ந்தான். காலிரண்டும் குடுகுடுப்பை உடுக்கு போல் குலுங்கின. வயிற்றில் இட்லி கிரைன்டர் ஓடியது. துந்ழிபி தைத்ழப ப்னஞா என்று ரகுமான் இசையில் பனிரெண்டு கட்டையில் கேபி சுந்தராம்பாள் அசுர வேகத்தில் தமிழ்ப்பாட்டு பாட, பத்து பேருடன் பழைய உசிலைமணி குத்தாட்டம் ஆடுவதை, கேட்கவும் பார்க்கவும் நேர்ந்தது போல் தலை சுற்றியது. போன வருடக் காவிரி நதியாய் வரண்டது நாக்கு. இந்த வருட ரெய்டில் சிக்கிய சரவணபவன் முதலாளி போல் நெஞ்சம் துடித்தது. தலைமுதல் கால் வரை பரவிய நடுக்கத்தை அளக்க கைவசம் ரிக்டர் இருந்திருந்தால் பதினெட்டு காட்டியிருக்கும்.
"என்னப்பா சிங்காரம்.. எல்லாம் ஒகே தானே?" என்றார் தயா பொறுமையிழந்து.
டேபிள் மேலிருந்த மொத்தத் தண்ணீரையும் குடித்தான் சிங்காரம். "என்னை விட்ருங்கய்யா" என்றான் மல்லியிடம். "இப்பத்தான் உங்க நண்பர் பொண்ணு மைத்து விவகாரத்துலந்து மெள்ள மீண்டு வந்திருக்கேன்.. அதுக்குள்ளாற.. அதும் சாமியாரு கீமியாரு வேசம் எல்லாம் எனக்கு ஒத்து வராது சார்.. எதுனா உளறிருவேன்.. எசகுபிசகாயிரும்"
"இதோ பாரு சிங்காரம். நீ இதை செஞ்சே ஆவணும்.. இல்லின்னா இந்தாளு தினம் இங்க வருவாரு.. அப்புறம் இந்த மூஞ்சியை நாம தெனம் பாக்கணும்.."
ராஜசிங்கம் சிங்காரத்தைப் பார்த்து விழித்தார்.
சிங்காரம் சட்டென்று எழுந்தான். "நான் எளியவன்யா. என்னை இப்படியெல்லாம் மிரட்டலாமா நீங்க? ரைட்டுங்கய்யா. இந்த ஏற்பாட்டுக்கு நான் தயார். ஆனா முவத்தை தினம் பாக்கணுமுன்னு மட்டும் இனி பயம் காட்டாதீங்க".
"உனக்கு மட்டுந்தானா அந்தப் பயம்?" என்று முணுத்தார் மல்லி. பிறகு உரக்க, "மிச்ச ஏற்பாடெல்லாம் தயா பாத்துக்குவாரு. எல்லாம் திட்டப்படி நடக்கும், கவலைப்படாதீங்க சுவாமிஜி" என்றுச் சிரித்தார்.
    மஞ்சளும் சிவப்பும் கலந்தப் பட்டுப் புடவையில் கம்பீரமாக இருந்தார் வல்லி. தீர்க்கமான பார்வையை இன்னும் எடுத்துக்காட்டிய பெரிய கண்ணாடி, சுந்தர்ஜியின் உள்ளே இருந்த சிங்காரத்தை உற்றுப் பார்த்தது. அவர் பார்வையைத் தவிர்க்க முயன்ற சிங்காரம் நெற்றிப் பொட்டைப் பார்த்துப் பயந்து, பார்வையே பரவாயில்லையென்று நெளிந்தான். எங்கே இந்த நாடகம் வல்லிக்குத் தெரிந்து உள்ளதும் கெட்டுப் போகுமோ என்று நடுங்கிய ராஜசிங்கம், ரத்த அழுத்தம் அதிகமாகிச் சற்றுத் தடுமாறியபடி இருந்தார். தயா வழக்கம் போல் மல்லியின் பின்னே பதுங்க முயன்றார். மல்லி மட்டும் நிதானமாகவும் புன்னகையோடும் வல்லிக்கு வணக்கம் சொன்னார். கனகவல்லி அனைவரையும் வரவேற்றார். "ரொம்ப நன்றி தயாண்ணே.. சுவாமிஜியை கூட்டி வந்ததுக்கு"
"இவர் தான் சுவாமி சிங்காரம்" என்றார் தயா பெருமையாக, சிங்காரத்தைக் காட்டி.
"சிங்காரமா? சுந்தர்ஜினு சொன்னீங்க?" என்றார் வல்லி. தயா நாக்கைக் கடித்துக் கொண்டார். ராஜசிங்கத்துக்கு மூச்சு முட்டியது.
சட்டென்றுத் திரும்ப முயன்ற சிங்காரத்தைத் தடுத்து நிறுத்திய மல்லி, "அது அவரோட பூர்வீகம். காசியிலும் கேதார்நாத்திலும் குருகுலம் முடிஞ்சதும் இவரோட குருவே இவருக்கு சுந்தர்ஜிங்கற பேரைக் கொடுத்து அருள் செஞ்சாரு.. ஆனாலும் நெருங்கினவங்களுக்கு இவர் என்னிக்குமே சிங்காரம் தான்" என்றார்.
"ரைட்டு" என்றான் சிங்காரம். "நீங்க இங்கயே இருங்கம்மா" என்றான் வல்லியிடம். "வீட்டுல வாஸ்து ஓட்டம் எப்படி இருக்குதுனு பார்க்கணும்" என்று வேகமாக தயாவை இழுத்துக் கொண்டு அறையின் நடுவே சென்று நின்றான். மேலும் கீழும் பார்த்தான். கைகளை அலை போல் அசைத்தான். "பிரம்மஸ்தானம்" என்றான் உரக்க. சற்று ஆழ்ந்து சிந்திப்பது போல் நின்றான். மல்லியும் ராஜசிங்கமும் கனகவல்லியுடன் பேசினர்.
"என்ன செய்றாரு சுவாமி?" என்றார் வல்லி. "என்னவோ பிரம்மஸ்தானம்னு சொல்றாரே? அது ஹால்ல இல்லே இருக்குது இந்த வீட்டுல?"
"சுவாமி பெரிய ஞானிம்மா. ஒருவேளை வாஸ்து ஓட்டத்தை கையால அளக்குறாரோ என்னவோ?"
"நமக்கு முதுகைக் காட்டிக்கிட்டு தயாவோட என்னவோ செய்றாரே?"
"பொறுமையா இருப்போம்.. பிறகு நம்ம சந்தேகத்தை அவர் கிட்டயே கேட்போம்" என்ற மல்லி, சோபாவில் உட்கார்ந்தார். "இப்படி உக்காரும்மா.. அவரு வரட்டும்". வல்லி தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து ராஜசிங்கத்தையும் அருகே உட்காரச் சொன்னார்.
அதற்குள் சிங்காரம் வீட்டின் பல மூலைகளுக்கு தயாவுடன் சென்று காற்றில் கையை அங்கேயும் இங்கேயும் ஆட்டினான். சில நிமிடங்களுக்குப் பிறகு தயாவுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தான். ஐந்து நிமிடங்கள் போல் கண்களை மூடி அமைதியாக இருந்தான்.
"கனகம், தியானம் பண்றாரு போலிருக்கு சுவாமிஜி" என்றார் ராஜசிங்கம் மெள்ள.
"அபாரம்!" என்றான் சிங்காரம். "உங்க வீட்டுல வாஸ்து ஓட்டம் தெளிவாக இருக்கும்மா. வாஸ்து சாஸ்திரம் இங்கே சரியா அமைஞ்சிருக்கு.. ஒண்ணு ரெண்டு எடத்துல ஓட்டம் லேசா தடைபடுது. அதனால உங்க வீட்டுல நல்ல காரியங்கள் நடந்தாலும் கொஞ்சம் தடைபட்டே நடக்கும்" என்றான்.
வல்லி அசந்து போனார். "ஆமாம் சுவாமிஜி! நானே கேட்கணும்னு இருந்தேன்.. நல்லது நடந்தாலும் தடங்கல் இருந்துகிட்டே இருக்கு.."
வல்லியை சைகையால் அடக்கினான் சிங்காரம். "எல்லாம் சரியாயிரும். பிரம்மஸ்தானத்துலந்து ஓட்டம் சரியா இல்லாம போனதுக்கும், குபேர ஸ்தானத்துக்குக் குறுக்கே நிக்குற தடைக்கும் காரணம் ரொம்ப சிம்பிள்.. ஆனா அது வாஸ்துல ஊறினவங்களுக்குக் கூட சரியா தெரியாம போயிடும்.."
வல்லி பிரமித்தார். "என்ன சுவாமி அது?"
"பல்லி"
"வல்லி சுவாமி, வல்லி.. நீங்க என் பெண்டாட்டியை பல்லின்னெல்லாம் கூப்பிடக்கூடாது.." என்றார் சிங்கம்.
"இல்லிங்க. நான் சொன்னது க்ளிக்ளிக்ளிக்ளிக்ளிக்னு சப்தம் செய்யும் பிராணி. இங்லிஷ்ல லிசர்டுனு சொல்வாங்க. அசல் பல்லி"
"அசல் பல்லியா?" வல்லியின் வெள்ளை முகம் திடீரென வெளிறியது.
"மூஞ்சுரு"
சட்டென்று கால்களை உயர்த்தினார் கனகவல்லி. "என்னது, மூஞ்சுரா.. எங்கே?"
"கடைசியா கரப்பான்"
"என்ன சுவாமி.. என்னென்னவோ சொல்றீங்களே.. இந்த பல்லி கரப்பான் மூஞ்சுரு பேரைக் கேட்டாலே என் பெண்டாட்டிக்கு நடுங்கும். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, பயங்காட்டாதீங்க" என்றார் சிங்கம்.
"பிரம்மஸ்தானத்துக்கு பல்லி, குபேர ஸ்தானத்துக்கு கரப்பான், ஈசான மூலைக்கு மூஞ்சுரு" என்ற சிங்காரம் திடீரென்று துள்ளி எழுந்தான். அறையை வேகமாகச் சுற்றிவிட்டு வந்து உட்கார்ந்தான்.
"என்ன சுவாமிஜி.. பல்லி கரப்பான்னு என்னவோ சொல்லிட்டு நீங்களே சுண்டெலியாட்டம் ரூமை சுத்திட்டு வந்து உட்கார்ந்துட்டீங்க?" என்றார் மல்லி நிதானமாக.
சிங்காரம் வல்லியை நேராகப் பார்த்தான். "அம்மா.. உங்க வீட்டுல தடங்கல் எல்லாம் நீங்கி இப்ப எல்லாம் சரியாயிடுச்சுனு வச்சுக்குங்க. விஸ்வகர்ம வியாக்கியானப்படி கரப்பான். மய சாஸ்திரப்படி மூஞ்சுரு. ரெண்டு பேருக்குமே பொருத்தமான பல்லி.."
"புரியறாப்புல சொல்லுங்க சுவாமிஜி.." என்றார் மல்லி. "யாரு அந்த ரெண்டு பேரு? ஏன் பல்லிப் பொருத்தம் பாக்குறானுவ?"
"வாஸ்து கலையில விஸ்வகர்மா, மயமுனி ரெண்டு பேரும் ஆதிகுருமாருங்க. அவங்க போட்டுக் குடுத்த சட்டத்துல தான் என்னை மாதிரி ஆளுங்களெல்லாம் படங்காட்டிக்கிட்டு வராங்க. கனகவல்லிம்மா.. நான் சொல்றதை கவனமாக் கேளுங்க.. உங்க வீட்டு வாஸ்து ஓட்டத்துல தடங்கல் வரக் காரணம் பல்லி, கரப்பான், மூஞ்சுரு இல்லாம போனது தான். பல்லின்றது பிராமண அடையாளம். நான் ஜாதியைச் சொல்லலிங்க. பிரம்மத்தைத் தெரிஞ்சுக்கிட்டவங்களோட அடையாளம் பல்லி. அதே போல குபேரனுடைய செல்வத்துக்கு அழிவில்லைனு கேள்விப்பட்டிருப்பீங்க. அழியாத செல்வத்துக்கு அடையாளமா அழிவில்லாத கரப்பான். பிறகு அதிதி ஈசான மூலைங்களுக்கு அடையாளமா சுறுசுறுப்பும் அமைதியுமான மூஞ்சுரு. பிள்ளையார் வாகனத்தை வச்சு சிவனை அடையுற உத்தி.." என்ற சிங்காரம் மல்லியைப் பார்த்தான்.
மல்லி சிங்காரத்தைப் பெருமையாகப் பார்த்தார். "சுவாமி.. இப்ப எதுக்கு பல்லி மூஞ்சுரு பத்திச் சொல்றீங்க?" வல்லியும் தலையாட்டியபடி சிங்காரத்தைப் பார்த்தார்.
"அதாவதுமா.. முறையா வாஸ்து ஓட்டம் இருந்தா இந்த மூணுத்துல ஒண்ணோ ரெண்டோ சில நேரம் மூணுமே அந்த வீட்டுல இருக்கும். உங்க வீட்டுல சில தடைகள் இருந்துச்சு.. அதை நான் தியானம் செஞ்சு நீக்கிட்டேன். பாருங்க.. சீக்கிரத்துல உங்க வீட்டுல நிறைய நல்ல காரியங்கள் தடையில்லாம நடக்கும். எல்லா உறவுகளும் சுமுகமா இருக்கும்"
"தடைகளை நீக்கிட்டீங்களா? என்ன சொல்றீங்க..?" என்ற வல்லியின் குரலில் பயமே தொனித்தது.
"ஆமாம்.. பல்லி கரப்பான் மூஞ்சுரு மூணுத்துக்கும் உங்க வீட்டை அடையாளம் காட்டினேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மூணும் உங்க வீட்டுல நடமாடும்.. அப்படி வரலின்னா என்னை மறுபடி கூப்பிடுங்க.. நான் வந்து ஒரு சாந்தி தியானம் செய்துட்டுப் போறேன்.. இப்ப எனக்கு நேரமாவுது.. வரட்டுமா?" என்று கிளம்பினான் சிங்காரம். மல்லியும் தயாவும் அவர் பின்னால் சென்றார்கள்.
மூவரையும் வழியனுப்பி ராஜசிங்கத்துடன் உள்ளே திரும்பி வந்தார் கனகவல்லி. "என்னங்க.. இந்தாளு இப்படி சொல்றாரு? பல்லி கரப்பான்லாம் நம்ம வீட்டுல இருக்கணுமா? அப்படி வரல்லின்னா மறுபடி இவரைக் கூப்பிடணுமா? சரிதான்.. எந்த ஊர்ல இந்தாளு வாஸ்து படிச்சாரு.. சரியான ஏமாத்தா இருப்பாரு போலிருக்கே? உங்க பிரண்டுங்க கூட்டியாந்தா இப்படித்தான் இருக்கும்" என்றபடி சோபாவில் உட்கார்ந்தார்.
"போகுது விடு கனகம்.. நீ உட்காரு.. டென்சனாவாதே. நான் உனக்கும் சேர்த்து டீ போட்டு வரேன்" என்றபடி சமையலறைக்குப் போனார் சிங்கம். சில நிமிடங்களில் இரண்டு கப் டீயுடன் வந்தவர், கனகவல்லியைப் பார்த்துத் திடுக்கிட்டார். "என்ன ஆச்சு கனகம்? பேயடிச்சாப்புல இருக்கே?"
சோபாவின் விளிம்பில் குந்தி உட்கார்ந்திருந்த கனகம், எதிரே சுவற்றைச் சுட்டிக் காட்டினார். ஜன்னலுக்கு மேலே அதிதி வாஸ்து மூலையில் ஒரு நீளமான பல்லி. மெள்ள நூற்று எண்பது டிகிரி திரும்பி, பித்ரு வாஸ்து நிலையைப் பார்த்து நின்றது.
"பல்லியா?" என்று சாதுவாகக் கேட்ட சிங்கம், டீ கப்களை மேசை மீது வைத்தார். "எங்கிருந்து வந்துச்சு பல்லி?" என்று சாக்ரேட்ஸ் ப்லேடோவிடம் கேட்பது போல் கனகவல்லியிடம் கேட்டார். கனகவல்லி உள்ளூர நடுங்கியபடி பல்லியைப் பார்க்க, பல்லியின் நடவடிக்கைகளை இருவரும் கண்காணிக்கத் தொடங்கினர்.
வல்லி ஓரளவுக்கு ஆரோக்கியமானவர் என்றாலும் ஜிம்னெஸ்டிக் அத்லெடிக் பயிற்சிகள் எதுவும் பெற்றதில்லை. சிறுவயதில் எப்போதோ ஒரு முறை க்ரிகெட் விளையாடிய போது தானாகத் தேடி வந்து இவர் கையில் உட்கார்ந்த பந்தைத் தவிர, ராஜசிங்கமும் எதையும் கேச் பிடித்ததில்லை. ஆனால், உலக சாதனை புரிய இருவருக்கும் ஒரு வாய்ப்பு அடுத்த சில நொடிகளில் கிடைத்தது.
வாலை லேசாக உயர்த்திச் சுவற்றில் மெள்ள நகரத் தொடங்கியது பல்லி. பல்லி எங்கே போகிறது? கரப்பைத் தேடி. ஜன்னல் சட்ட விளிம்பில் ஒரு கரப்பான் பூச்சி! 'கண்டேன் கரப்பை' என்பது போல் இவர்களை ஒரு கணம் தலை உயர்த்திப் பார்த்தது. பூச்சியைப் பிடிக்க, பல்லி மிக மெதுவாக ஊர்ந்தது. பல்லி மிக அருகில் வந்ததும் கரப்பானுக்கு உணர்வு வந்து சர்ர்ர்ர்ர்ர்ரென்றுப் பறந்து சோபாவின் பின்புற இருளில் அடைக்கலம் தேடத் தொடங்கியது. எரியும் மெழுகுவர்த்திகளைப் பிடிக்காமல் ஒதுங்கிப் பறந்து வட்டமேசையின் சிவப்பு வெல்வெட்டில் அரக்குத் திட்டாக உட்கார்ந்தது. பிறகு மனம் மாறி, சட்டென்று வெர்டிகல் டேகாஃபில் எழுந்து, சுவரலமாரியின் ஆமை ஓட்டில் அமர்ந்தது. அதுவும் பிடிக்காமல் மறுபடி விர்ர்ர்ரிட்டு சங்குகளின் சிறிய ஓட்டைகளில் புகப் பார்த்தது. சங்கில் நுழைய எடை குறைய வேண்டும் என்று உணர்ந்து, அங்கிருந்து நகர்ந்து மேல்தட்டுக்கு ஏறியது. மெள்ள ஊர்ந்து, தாமிரத் தட்டின் உள்ளே நுழைந்து தண்ணீரைத் தொட்டும் தொடாமல், தாமரை போல் நின்றது.
கரப்பானின் இந்தப் பயண அனுபவங்களை முழுமையாகப் பார்க்க இருவரும் கொடுத்து வைக்கவில்லை. பல்லியிடமிருந்து தப்பிய கரப்பான், சிறகை ஓசையுடன் அசைத்துப் பறந்து வந்த அதே நொடியில்.. ஒரு அலறல், ஒரு ஹை ஜம்ப், இரண்டு குட்டிக்கரணம், ஒரு ஹர்டில் ஜம்ப், ஒரு லாங்க் ஜம்ப் என்று வரிசையாகவும் வேகமாகவும் - அதே நேரம் இருநூறு டெசிபலில் இரண்டாவது அலறலோடும் - வல்லி புரிந்த சாகசங்கள் எந்த ஒலிம்பிக் சேம்பியனையும் தோற்கடிக்கும் சாதனையாகும். ஜம்ப், கரணம், ஜம்ப், ஜம்ப் என்று அலறிக் கொண்டு வந்த மனைவியைப் பார்த்தார் சிங்கம். அடுத்த நொடியில் தாவி வந்த மனைவியைத் தாங்கிக் கேச் பிடித்தார்.
"வல்லி.. ஏம்மா உடம்பு இப்படி நடுங்குது?"
கனகவல்லி பேசவில்லை. கணவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். சிங்கத்துக்கு உள்ளூர இனித்தது. எனினும், வல்லியின் அடுத்த அலறலில் அவரைத் தவறவிட்டார். "ஐயையோ.. கனகம்.." என்று மனைவியைத் தூக்கி எழுப்பப் போனார். ஆனால் அதற்குள் படுத்த வாக்கிலேயே ஒரு ஹை ஜம்ப் செய்து சிங்கத்தின் கரங்களில் கேச் போல் விழுந்தார் வல்லி.
"என்னாச்சும்மா?" என்ற சிங்கத்துக்கு பதில் சொல்வதற்குப் பதில் தரையைச் சுட்டி அலறினார் வல்லி. வல்லியின் விரலைப் பார்வையால் தொடர்ந்த சிங்கம், சட்டென்று இடமிருந்து வலமாக ஐந்து முறை ஸ்கிப்பிங் குதித்தார், வல்லியைக் கீழே போடாமல் பிடித்தபடி. "ஐயையோ.. எலி எங்கிருந்து வந்துச்சும்மா நம்ம வீட்டுல?" என்றார்.
மெள்ளக் கீழே இறங்கிய வல்லி சுற்றுமுற்றும் பார்த்து மீண்டும் அலறத் தொடங்கினார். சுவற்றின் பல மூலைகளில் பல்லிகள் சிறு மாநாடு நடத்தின. மூஞ்சுரு சமையலறைக்கும் ஹாலுக்குமாய் ஓடியது. நின்றும் இருந்தும் நடந்தும் கிடந்தும் பறந்தும் காட்டியது கரப்பான்.
வாசலுக்கு ஓடிய சிங்கத்தை அழைத்தார் வல்லி. "ஏங்க.. எங்கே போறீங்க என்னை விட்டு.." கூவினார்.
"ஒண்ணுமில்லம்மா.. நீ அலறுதைக் கேட்டு நான் உன்னை அடிக்கிறதா யாரும் நினைச்சுறக் கூடாதில்லே? அதான் கொஞ்ச நேரம் வெளியில பொதுப் பார்வையில நின்னுட்டு வரலாம்னு..".
"அய்யோ.. என்னை விட்டுப் போவாதீங்க" என்று இரண்டு சமர்சால்ட், ஒரு ஹர்டில் ஜம்ப், ஒரு லாங் ஜம்ப் அடித்து மறுபடி சிங்கத்தின் கைகளில் கேச் ஆனார் வல்லி. "என்னை விட்டுறாதீங்க.." என்று சிங்கத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டார்.
"நிச்சயமா விடமாட்டேன்.. என் கனகமணி.." என்ற ராஜசிங்கத்தின் குரலில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காதலும் நிறைந்திருந்தது.
    "அப்புறம் என்ன.. வாஸ்தாவது போஸ்தாவது.. எந்தக் கண்றாவியும் வேணாம்னு எல்லாத்தையும் கலைச்சுப் போடச் சொல்லிட்டா கனகம். வாஸ்து பக்கமே இனி போகமாட்டேன்னு சொல்லிட்டா. பழைய கனகவல்லியா மாறிட்டா.." என்றார் ராஜசிங்கம். "எல்லாம் உன்னால தான். ரொம்ப நன்றி மல்லி"
"நான் ஒண்ணுமே செய்யலே.. எல்லாம் சிங்காரம் தான். அவனுக்கு நன்றி சொல்லு. சிங்காரமும் தயாவும் தான் பல்லி கரப்பான் மூஞ்சுரைப் பிடிச்சு உங்க வீட்டுல போட்டது.. அவங்களுக்கு நன்றி சொல்லு" என்று மல்லி சொல்லவும், சிங்காரம் மூன்று கிண்ணங்களில் பாஸந்தி எடுத்து வரவும் சரியாக இருந்தது.
"சிங்காரம்.. ரொம்ப நன்றிப்பா" என்றார் சிங்கம், முகமெல்லாம் புன்னகையாக.
"ஆகட்டும் சார்" என்று விலகிய சிங்காரத்தை நிறுத்தினார் மல்லி. "யப்பா.. ராஜசிங்கம்.. பல்லி மூஞ்சுரு கரப்பான் எல்லாம் சேர்த்து ஒரு அஞ்சாயிரம் ஆயிருச்சு.. சிங்காரத்துக்கு பத்தாயிரமா குடுத்துரு"
"இந்தா சிங்காரம்.. இருவதாயிரம்.. இதை வச்சுக்க. வாஸ்து சாயத்தை வெளுத்து என் வீட்டுல நிம்மதியையும் என் முகத்துல சந்தோஷத்தையும் கொண்டு வந்தே பாரு.. அதுக்கு விலையே இல்லப்பா" என்று சிங்காரத்திடம் ஒரு பணப்பொட்டலத்தைத் தந்தார் சிங்கம்.