2013/07/03

அந்தக்கடை


ஒப்பாரி யால்சோகம் போகாது போனவுயிர்
இப்பாரில் கண்ணீரால் வாராது - துப்பார்க்குச்
சிக்காத உண்மையிது போனது வருமெனில்
துக்கத்திற் கீடில்லை பொன்.
-அருளரசன்
('இயன்ற வரையிலும் இனிய தமிழில்' வலைப்பதிவிலிருந்து*)


    கரின் மையச் சாலையை ஆக்கிரமிக்கும் வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் கிழக்கோரக் கடை.

அச்சமா கூச்சமா என்றுத் தெளிவாகப் புலப்படாத பாவனையுடன் சுற்றிலும் நோட்டமிட்டுத் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவர், சட்டென்றுத் திரும்பி கடைப்பெயரை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு, உள்ளே வந்தார்.

தரையில் இரானியக் கம்பளம் விரித்த சிறிய நூறு சதுரடி அறையின் ஒரு மூலையில் மரமேசை. மேசையின் பின்னே நாற்காலியில் புத்தகத்தலை மனிதன். இல்லை, புத்தகம் தலை மறைத்த மனிதன். எதிரே இரண்டு நாற்காலிகள். மேசையின் இடப்புறம் நாலடி உயரத்துக்கு இளம்பச்சை வண்ணமடித்த ப வடிவ மரச்சுவர்த் தடுப்பு. தடுப்புக்குள் இருந்தது தெரியவில்லை. மற்றபடி, குறிப்படும்படி எந்தவித அலங்காரமோ, விற்பனைக்கான பொருளோ தென்படவில்லை.

எல்லாவற்றையும் நோட்டம் விட்டபடி உள்ளே வந்தவர், மேசையின் பின்னே நாற்காலியில் உட்கார்ந்திருந்தவனை நெருங்கினார். "சார்.."

"வாங்க" என்ற குரலுடன், புத்தகம் துறந்து தலை காட்டினான் கடைக்காரன்.

"உங்க கடை... தினுசா இருக்குது" என்றார் வந்தவர்.

"ஏன்?"

"இல்லே... 'அந்தக்கடை'னு பேர் வச்சிருக்கீங்களே?"

"ஆமாம்"

"எந்த வியாபாரம் பண்றீங்க?" என்று வியப்புடன் கேட்டார்.

"அந்த வியாபாரம் தான்" என்றான்.

"இப்படி வெளிப்படையா செய்றீங்களே தம்பி?"

"இதுல என்ன ஒளிவு மறைவு? தெரிஞ்ச சமாசாரம் தானே? எல்லா இடத்திலயும் எல்லாருக்கும் நடக்கிறது தானே?"

"அது சரி. ஆமா.. 'நூறு சதவிகிதம் உத்தரவாதம்'னு வேறே போட்டிருக்கீங்களே?"

"கண்டிப்பா. காரியம் நடக்கலின்னா காசு வாபஸ்"

"காலம் எப்படி மாறிடுச்சுனு ஆச்சரியமா இருக்கு தம்பி! எதுக்குத்தான் உத்தரவாதம்னு ஒரு முறையே இல்லாம போச்சு. சரி, இதில ஒண்ணும் ஆபத்தில்லையே?"

"இல்லை சார்"

"எவ்வளவு பணம் வாங்குறீங்க?"

"ஒருத்தருக்கு இரண்டாயிரம் ரூபாய்"

"அதிகம் தான்.. இருந்தாலும் இந்த நாள்ல கால் சென்டர் முக்கா சென்டர்னு பசங்க எக்கச்சக்கமா சம்பாதிக்குதுங்க. சரி. எங்கே இடம்?"

"இங்கதான். பக்கத்து மறைவுல"

"என்ன சார் இது? இங்கேயா? கதவு கூட இல்லையே? நாலடி உயரம். எட்டிப் பாத்தா எல்லாம் தெரியும் போலிருக்குது? போலீஸ்.."

"அதெல்லாம் எந்தப் பிரச்சினையும் கிடையாது. பர்மிட் வாங்கியிருக்கிறேன்.. சட்டப்படியே இந்த வியாபாரம் நடக்குது.. இதுக்காக தனிப்படிப்பு படிச்சிருக்கேன்"

"அடேங்கப்பா.. இதுக்கொரு படிப்பா? நாடு முன்னேறிடுச்சு தம்பி" என்று மரச்சுவரை எட்டிப் பார்த்தார். "உள்ளாற யாரும் காணோமே?"

"நானும் நீங்களும் தான்.. வேறே யாரும் தேவையில்லை"

"என்னாது? நானும் நீங்களுமா.. என்னா விபரீதம் தம்பி இது?"

"பயப்படாதீங்க சார். யாருக்கும் உங்க விவகாரம் தெரியாது. உங்க ஊர், பேர் எதுவும் கேட்க மாட்டேன். இதுல ஒரு கையெழுத்து போட்டு பாதிப் பணத்தைக் கொடுங்க. நீங்க பிறந்த தேதி, நேரம், இன்னும் சில விவரங்கள் தேவை. அப்புறம் இந்தக் குச்சியில் உங்க வாயிலிருந்து கொஞ்சம் எச்சிலைத் தொட்டுக் கொடுங்க. நாளைக்கு என்னை வந்து பாருங்க, விவரமெல்லாம் சொல்றேன். மிச்சப் பணத்தை அப்ப கொடுத்தா போதும்" என்றான்.

"எதுக்குங்க? அந்தக்கடைனு பேர் வச்சுக்கிட்டு குச்சி எச்சில்னு என்னென்னவோ கேக்கறீங்களே தம்பி?"

"உங்க உயிரணு விவரத்தை வச்சு நீங்க எந்த தேதியில இறந்து போவீங்கனு துல்லியமா கணிச்சு சொல்வேன் சார். அந்தம்னா முடிவு. அதான் அந்தக்கடை. நீங்க என்ன நினைச்சீங்க?"

"என்னாது? எனக்கு எப்ப சாவுனு சொல்வீங்களா? அத சொல்றதுக்கு, உனக்கு காசு வேறே தரணுமா தம்பீ? அந்தக்கடைனு பேர வச்சுகிட்டு நல்லா ஊரை ஏமாத்தறீங்கப்பா. அடப் போய்யா.." என்று நொடியில் காணாமல் போய்விட்டார் வந்தவர்.

    மூன்று மாதங்களாக இதே நிலை.

கல்லூரியில் படிக்கும் போது டிஎன்ஏ ஆய்வுப் பிரிவில் கல்லூரிப் பேராசிரியருக்குத் தெரியும்படி ஒரு ஆராய்ச்சியும், அவரறியாமல் இன்னொரு ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தான். மரணகாலக் கணிப்பு. டிஎன்ஏ ஆராய்ச்சித் திறன் மற்றும் பேஸ்கல் சி கணினி மொழிகளில் அவனுக்கு இருந்த தேர்ச்சியையும் வைத்துக் கொண்டு, ஒரு நாள் தற்செயலாகத் தோன்றிய எண்ணத்தைச் செயல்படுத்தி.. எலி, முயல், பன்றியில் தொடங்கி குரங்கு வரை பரிசோதனை செய்து பார்த்து விட்டான். குறித்த நேரத்தில் ஒவ்வொன்றும் இறந்தன. அருகே மருத்துவக் கல்லூரியில், இறக்கும் தறுவாயில் வந்தவர்கள் அல்லது இறந்து போனவர்களின் டிஎன்ஏ விவரங்களைத் திருடிக் கொண்டு வந்து வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, ஒரு முடிவுக்கு வந்தான்.

பிஎச்.டி படிப்பும், போஸ்ட்-டாக்டர் பயிற்சியும் முடித்த பின், மற்றவர்கள் போல் துணைப் பேராசிரியராகவோ, மருந்து நிறுவன ஆராய்ச்சிக் குழுவிலோ வேலைக்குப் போகாமல், சொந்தமாக வேலை செய்ய வேண்டும் என்ற முனைப்போடு, தனக்குத் தெரிந்த துறையில், மரண நேரத்தைக் கணித்துச் சொல்லும் தொழில் தொடங்குவதென்று தீர்மானித்தான். மரணகாலத்தைத் தெரிந்து கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் கொள்வார்கள் என்று நம்பினான்.

கல்லூரி நிர்வாகத்துடன் தன்னுடைய டிஎன்ஏ பற்றிய ஆராய்ச்சிக்கான வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு, தொழில் தொடங்கி மூன்று மாதமாகி விட்டது.

கேலியும் கோபமும் ஏமாற்றமும் தான் மிஞ்சியதே தவிர, ஒரு வாடிக்கையாளர் கூட அமையவில்லை. பத்திரிகைகள் டிவி என்று எல்லோரும் கிண்டலடித்தார்கள். அப்பாவோ இவனைத் தன் மகனே இல்லை என்று சொல்லிப் புறக்கணித்துவிட்டார். அம்மா உள்ளூர் வெளியூர் என்று ஒரு கோவில் விடாமல் இவனுக்காகப் பரிகாரங்கள் தேடிக் கொண்டிருந்தார். கையில் இருந்த காசையெல்லாம் கடை வாடகைக்கும் வலைமனை அமைப்பிற்கும் செலவழித்தாகி விட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போவது மட்டுமில்லாமல், டிஎன்ஏ ஆய்வுத் தொழிலிலும் வேறு வேலை கிடைக்காமல் போய்விடும் என்கிற அச்சத்தில் கலங்கினான். சொந்தத் தொழிலை மூட்டை கட்டிவிட்டு, அரசாங்க வேலைக்குப் போகலாம் என்று தீர்மானித்தான்.

கடைசி நாளன்று, கதவடைக்கும் நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்தார். நல்ல உயரம். நரைத்த முடி. சுருள் மீசை விசித்திரமாகப் பொருந்தியது. "அந்தக் கடைனு இங்கே..."

"இது தான். ஆனால் வியாபாரம் வளரவில்லை சார். இப்பத்தான் பெயர் பலகையை எடுத்து உள்ளே எறிஞ்சேன். இழுத்து மூடப்போறேன்" என்றான்.

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால் பத்து நிமிஷம் பேசலாமா?"

"முதலிலேயே சொல்லிடுறேன். என்னால் மரணகாலத்தைக் கணிக்க முடியும், தேவைப்பட்டா சொல்லுங்க. இல்லாவிட்டால் இரண்டு பேர் நேரமும் விரயம்"

"அது தெரிஞ்சு தானே வந்தேன்? என் தொழிலுக்கும் உங்க தொழிலுக்கும் தொடர்பிருக்கு தம்பி. சின்னவரா இருக்கீங்க, உங்களைத் தம்பினு கூப்பிடலாமா? உங்க தொழில் வளர என்னால் உதவ முடியும் தம்பி"

"என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க. என் பெயர் சித்து. முழுப்பெயர் சித்ரஞ்சன். வாங்க, வந்து உட்காருங்க"

"உங்களை எனக்கு நல்லாவே தெரியும்.. சித்ரன்" என்ற பெரியவரைக் கேள்வியுடன் பார்த்தான் சித்து. "சித்ரஞ்சன், நாட் சித்ரன். என்னைப் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எல்லாருக்குமே தெரியும் போலிருக்குதே தம்பி? அதான் பேப்பரிலும் டிவியிலும் உங்களைப் பத்தி சொன்னாங்களே.. தற்கால எமன் என்று". இடியாகச் சிரித்தார் பெரியவர். மீசையை நீவினார்.

சித்துவின் முகம் வாடியதைப் பார்த்ததும் "வருத்தப்படாதீங்க தம்பி. அவங்களுக்கெல்லாம் உங்க திறமை புரிய ரொம்ப காலமாகும். புரியாமலே கூட போகலாம். நாம ஒருவருக்கொருவர் உதவினால், நம்ம இரண்டு பேர் தொழிலும் முன்னேறும்"

"உங்களுக்கு என்ன தொழில்? நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?"

"ரொம்ப காலமா ஏறக்குறைய உன் தொழிலைத்தான் செஞ்சுட்டிருக்கேன். என்னோட முறை வித்தியாசமானது, பழங்கால டைப். உங்கிட்ட இருக்குற வசதிகள் எல்லாம் இல்லை"

சித்து வியந்தான். தன் தொழிலறிந்தவரா? உற்சாகத்துடன், "இந்தத் தொழில்ல இருக்கீங்களா? உங்க முகம் எனக்கு அறிமுகமானதா தெரியலிங்க.. மன்னிச்சுருங்க சார்.. உங்க பேரென்ன? எங்கிருந்து வரீங்க?"

"என்னை ஒய்.டி.ஆர்னு கூப்பிடுவாங்க. முழுப்பெயர் எமதர்மராஜன். நேரா என் உலகத்துலந்து வரேன்" என்றார் பெரியவர்.

(தொடரலாம்)

*மூன்றாமடியின் நெருடலை அருளசரசன் தவிர்த்திருக்கலாம்; பெரிய விஷயமில்லை, என்ன.. எங்கள் சிவகுமாரனுக்குப் பிடிக்காது. அவர் இலக்கண நறுவசுக்காரர்.

17 கருத்துகள்:

 1. சொந்தக் கடையாக அந்தக்கடை வைத்தால் இந்தக் கடைக்கு யார் வருவார்? ஆஸ்பத்திரி பக்கத்தில் வைத்தால் கொஞ்சம் வியாபாரம் நடக்கும்! டாக்டர் இவர்களது சாம்பிள் எடுத்துப் பார்த்து விட்டு தைரியமாய் ட்ரீட்மென்ட் கொடுத்து 'என்னால்தான் பிழைத்தாய்' சொல்லலாம்! 'நாள்' நெருங்கியவர்களை தொழில்முறை எதிரி மருத்துவருக்கு ரெஃபர் செய்யலாம்!

  பதிலளிநீக்கு
 2. 'தொடரலாமா? முடித்த பின் எங்கே தொடர்வது?!!

  பதிலளிநீக்கு
 3. அந்தக் கடையை ‘அந்த’ விஷயங்களுக்கான கடை என்று தவறாகப் புரிந்து கொள்கிற ஆரம்பமே அசத்தல் சிரிப்பு. ஒருவேளை அந்திமக் கடைன்னு வெச்சிருந்தா பளிச்னு புரிஞ்சிருக்குமோ என்னவோ... கடைசில வர்ற நபரைப் பத்தின விவரணைகளும், பேச்சுமே அவரை எமதர்மராஜன் என்று சொல்லி விடுகின்றன அப்பா ஸார்! அதனால கடைசி வரி இல்லாட்டாக் கூட புரிஞ்சு ரசிசசிருக்க முடியும். வித்தியாசமான முடிச்சைப் பிடிச்சு சிறுகதை புனைஞ்சது வெகு சிறப்பு!

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹா, காலங்கார்த்தாலே நல்லாச் சிரிச்சேன்.

  ஹாப்பி லாங் வீக் என்ட்! :)))))

  பதிலளிநீக்கு
 5. இன்னொரு ஜோக் பாருங்க, இதைப் படிச்சுட்டு மெயில் இன்பாக்ஸுக்குத் திரும்பினால் தர்மராஜிடமிருந்து இன்றைய செய்தினு த்லைப்போட ஒரு மெயில். தூக்கி வாரிப் போட்டது! :))))))

  பதிலளிநீக்கு
 6. நல்ல நகைச்சுவை கதை.
  இறப்பு நாள் தெரியாத போதே மனிதர்கள் நடந்து கொள்வது தாங்க முடியவில்லை.

  தெரிந்தால் இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கலாம், என்று ஒரு கோஷ்டி., இருக்க போவது கொஞ்சநாள் அதற்குள் எல்லோருக்கும் நன்மைகள் செய்யலாம் என ஒரு கோஷ்டி உருவாகி இருக்கும். அதற்கு வழி இல்லாமல் ஒய்.டி.ஆர் சிதரனை அழைத்து போக வந்து விட்டாரே!

  பதிலளிநீக்கு
 7. அந்தக் கடைன்னால் எந்தக் கடை. அவருடைய திட்டமே பெயரில் பாழாகிவிட்டதே. சிதரகுப்தனே சித்ரனா வந்துவிட்டானோ:)தயவு செய்து தொடரவும் துரை.

  பதிலளிநீக்கு
 8. அந்தக்கடை மிக சுவாரஸ்யம்...

  பதிலளிநீக்கு
 9. சித்தரஞ்சன் காலம் முடிந்துவிட்டதால் எமன் வந்தாரா, இல்லை எமனுக்கே அறிவியல் தேவைப் படுகிறதா..!

  பேரு கூட சித்திரகுப்தன் மாதிரி சித்ரனஞ்சன் வச்சிருக்கீங்க, நல்ல காம்பினேசன் :-)

  பதிலளிநீக்கு
 10. அசத்தலான யோசனைங்க.. பாருங்க அந்தக்கடைக்கும் ஆட்கள் போகிறார்களே..

  பதிலளிநீக்கு
 11. ஹா....ஹா...
  அந்தக்கடைக்கு வந்த YDR என்ன செய்தார் என்று அறிய ஆவல்!தொடருங்கள் ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
 12. ஆரம்பத்தில் 'அந்தக் கடையை' இந்தக் கடையோன்னு சம்சயித்துத் தொலைக்க கொடுத்த விவரங்களில் குறும்புத்தனம் கொப்புளித்தது.
  முதிர்ந்த நகைச்சுவை!

  //அந்தம்னா முடிவு. அதான் அந்தக்கடை.//

  கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை அந்தக்கடைக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுத்து.. 'எங்கள் சிவகுமாரன்' இதை மட்டும் பாக்க மாட்டாருன்னா நெனைச்சீங்க.. :))

  //"உங்களை எனக்கு நல்லாவே தெரியும்.. சித்ரன்" //

  சித்ரன்! ஓ!..

  //(தொடரலாம்)//

  'லாம்'க்கு ஒரு 'லாமே'!

  பதிலளிநீக்கு
 13. Waiting for next part. Please do not delay much.

  பதிலளிநீக்கு
 14. பின்னூட்டங்களுக்கு நன்றி.

  (தொடரலாம் - கொஞ்சம் நிதானமாகத் தொடரலாம் என்று தான் :)

  //இன்பாக்ஸுக்குத் திரும்பினால் தர்மராஜிடமிருந்து..
  ஹஹா! வெண்பா எழுதினவரோட பெயரை கவனிச்சிங்களா? நானும் ஆடிப் போய் தான் இதில கதைல சேர்த்தேன்.

  பதிலளிநீக்கு
 15. சில வருடங்களுக்கு முன்னர் www.deathclock.com என்று ஒரு தளம் பார்த்த நினைவு. உங்கள் பிறந்த தேதியை சொன்னால் இறக்கும் தேதி என ஒன்றைச் சொல்வார்கள்.... இப்போது இருக்கிறதா தெரியவில்லை!

  அதை நினைவுபடுத்தியது உங்கள் கதை.....

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. முதலில் 50% பிறகு 50% . சொன்னது சரியென்று தெரிந்தபின்னால்தான் மிச்ச 50% தருவேன் என்று அடம் பிடிக்கலாமே.....! ஹ ஹ ஹ..! இறக்கும் நாளைக் குறிப்பவரானதால் சித்ர குப்தனோ...? ஐ யாம் சாரி.. சித்ரஞ்ச்னோ.? தொடரலாம் என்று தயக்கமாக ஏன்...?

  பதிலளிநீக்கு