2013/07/07

கண்பிடுங்கி நீலன்


    ணலில் இறங்கிய விமலா, தன்னைப் பார்த்துக் கையசைத்தபடி கரையோரம் காத்திருந்தக் கணவனைக் கண்டாள். பேயறைந்தாற்போல் திடுக்கிட்டாள்.

ஆள் விழுங்கி அலை ஒன்று திடீரென்று உயர்ந்து வேகமாக அடித்துக் கொண்டு வருகிறதே? கவனித்து ஒதுங்காமல் ரகு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே? "ரகு!". குரல் எழவில்லை. "பின்னால பாரு.. ஓடு!". குரலே வரவில்லையே? தவித்தாள். அவசரமாக அவனை நோக்கி ஓட.. இதென்ன கால்களை யாரோ சிமென்ட் ஊற்றிக் கட்டி வைத்திருக்கிறார்களே? அடிவயிற்றிலிருந்து அலறினாள். ஓசையில்லை. சிலை போல் கணவன் தன்னையே பார்த்தபடி.. ஒருவேளை அவன் கால்களிலும் சிமென்ட் ஊற்றி... "ரகு! லுக்! போதும் கையசைச்சது.. பின்னால பாரு.. ராட்சச அலை.. ஓடு!". விமலா அலற அலற அவள் குரலோ இன்னும் அடங்கியது. ஆ! இதென்ன? திரண்டு வந்த அலையிலிருந்து திடீரென்று வெளிவந்த பருத்த கையைப் பார்த்து அலறினாள். முடியும் நகமும் வளர்ந்த வலிய பெரிய கை! சட்டென்று ரகுவின் கழுத்தை வளைத்து அலைக்குள் இழுத்தது. "யாராவது காப்பாதுங்க.. ஹெல்ப்!". அலறினாள். ரகுவைக் காணோம். "ரகு.. ரகு.. என்ன ஆச்சு உனக்கு.. எங்கே இருக்கிறாய்.. அலைக்குள் விழுந்தாயா?". திடீரென்று ரகுவின் அலறல் பெருங்கூச்சலாக, தெளிவாகக் கரையெங்கும் எதிரொலித்தது. "ஐயோ! கண் தெரியலியே.. கண்ணெல்லாம் எரியுதே.. விமி! விமலா!". நிச்சயம் ரகுவின் குரல். அலைக்குள் சிக்கியிருக்கிறான். அந்தக்கை! "ரகு.. இதோ வரேன்!" சிமென்ட் கால்களை இழுத்து ஓடினாள் விமலா. அலை மேலும் வளர்ந்து, கணங்களில் வெடித்து, சிவந்த ரத்தமும் சிதைந்த உடலும் கரையெங்கும் தெறித்தது. ரகுவின் கைவிரல் துண்டு ஒன்று அவள் மேல் வந்து விழுந்தது.

துடித்துப் போய் விழித்தாள் விமலா.

மூச்சு முட்டியது. வியர்த்தது. அருகில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரகுவை வெறி வந்தாற் போல் பற்றியிழுத்தாள். "ரகு.. ரகு.."

ரகு எழுந்தான். "என்ன விமி? என்னடா ஆச்சு? ஏன் இப்படி பதட்டப்படுறே?" என்றான்.

திணறலும் அழுகையும் கலந்து, கனவைச் சொல்லி முடித்தாள். அவள் கண்முன் அலை இன்னும் ஆடியது. அந்த இடமும் காட்சியும் எங்கோ கண்டாற்போல்.

ரகு ஆதரவாக அணைத்தான். "ஈஸி விமி" என்றபடி அவளின் பருத்திருந்த இளவயிற்றை வருடினான். "பாப்பா பயந்திருக்கும்னு நினைக்கிறியா?"

விமலா சில நொடிகளில் சற்று அமைதியானாள். "நான் துடிக்கிறது தெரியலே? பாப்பா பயந்திருக்குமானு கவலைப்படுறதப் பாரு?"

"சாரிடா பட்டு. டின்ட் மீன் இட். நீ தான் எனக்கு முக்கியம். எத்தனை பாப்பா வந்தா என்ன?" என்றபடி அவளை நெருக்கமாக அணைத்தான். "கெட்ட கனவுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. முக்கியமா ஸ்ட்ரெஸ். பாப்பா பிறக்குறதுக்கு முன்னே புது வீடு வாங்கி குடி போகணும்னு நீ தானே துடிச்சே? வீடு தேடல், மெடிகல் செக்கப், பேங்க் லோன் கிடைக்குமோ கிடைக்காதோனு டென்ஷன், அப்புறம் காய்கறி, பேபி பர்னிசர், யோகா, அங்கே இங்கேனு நீ அலையுறே.. டு டாப் இட் பதினேழு வார கர்ப்பம். துணைக்கும் ஆளில்லே. சரியா டயத்துக்கு புஷ்டியா சாப்பிட்டியோ என்னவோ.. இல்லே மசக்கைனு கண்டதையும் தின்னியோ என்னவோ.. எல்லாம் சேர்ந்து கெட்ட கனவு.."

விமலா பதிலேதும் சொல்லாமல் ரகுவின் தோள்களில் சாய்ந்து அவன் கைகளை இன்னும் இறுக்கமாக இழுத்துக் கொண்டாள். "ரகு.. அந்த பீச்.. அந்த இடத்தை எங்கயோ பாத்த மாதிரி.."

"எல்லா பீச்சும் ஒரே மாதிரி தான் இருக்கும்.. டோன்ட் வொரி. நீ ரொம்ப டென்சனாயிருக்கே. எல்லாம் சரியாயிடும். உனக்குப் பிடிச்ச வீடு அடம்பிடிச்சு வாங்கிட்டே.. நான் பார்ட் டைம் பிச்சை எடுக்கணும் மாசப்பணம் கட்ட.." என்றபடி அவள் முகத்தைத் தொட்டான். உதடுகளை மெள்ள வருடி, "எத்தனை கஷ்டப்பட்டாலும் நீ எங்கூட இருந்தா எங்கருந்தோ துணிச்சல் வந்துடுது.. நீ பக்கத்துல இருந்தா உலகத்தை எட்டி உதைக்கலாம் போல ஒரு தைரியம். நீ எனக்குத் தர தைரியத்துல பாதியாவது நான் உனக்குத் தரமாட்டேனா? கவலைப்படாதே. எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். விமி, ஐ லவ் யூ ஸோ மச்"

"ம்க்கும்.. சொன்னா போதுமா.. செயல்ல காட்ட வேணாமா?

தலையைச் சாய்த்து அவளைப் பார்த்தான். "ஏய்.. நீ தானே வேணாமுன்னே?" என்றபடி அவளோடு ஒட்டினான். "ஆமா.. கர்ப்பமா இருந்தா எத்தனை நாள் வரைக்கும் ஆபத்தில்லாம செய்யலாம்?"

"ம்? யார் கண்டா? லேபர் வரைக்கும் பார்ப்போம், என்ன சொல்றே?" சிரித்தாள். தன் முதுகில் அவன் மார்பு அழுந்தும் இதத்தில் மயங்கினாள். கைகளைப் பின்னால் நீட்டி அவன் கைகளை இழுத்துத் தன் வயிற்றோடு பிணைத்துக் கொண்டாள். "ஐ லவ் யு ரகு" என்றாள் மென்மையாக.

    வீடு வாங்கல் தொடர்பான பதிவு வேலைகள் எதிர்பார்த்ததை விட சுலபமாகவும் சீக்கிரமாகவும் முடிந்ததில் ரகுவுக்கும் விமலாவுக்கும் சந்தோஷம். பத்திரம் கையெழுத்தான கையோடு வீட்டில் அன்றிரவு தங்க முடிவு செய்தார்கள். எத்தனை தடுத்தும் கேட்காமல் விமலா வண்டியோட்டுவதாகச் சொல்ல, ரகு அவளருகே உட்கார்ந்தான். நெரிசலை அலட்சியமாகக் கடந்து வேகமாகக் காரோட்டிய மனைவியைப் பெருமையுடன் பார்த்தான். பதினைந்து மைல் பயணத்தை பத்து நிமிடங்களில் முடித்து விடுவாள் போல. கண்களை மூடி வண்டியின் வேகத்தையும் ஏசி காற்றையும் அனுபவித்தவன், திடீரென்று மெலிதாகச் சிரித்தான்.

    ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்ற ரகு, அசாதாரண விளம்பரக் கம்பெனி ஒன்றில் கிடைத்த சாதாரண வேலையில் நீடிக்க மனம் ஒப்பாமல் எதையோ இழப்பது போல் தவித்தான். சமீபத்தில் வெளியான தனது குழந்தைகள் புத்தகம் பெற்ற சுமாரான வரவேற்பில் மனம் லயித்து.. தொடர்ந்து சிறார் காவியங்கள் எழுத விரும்பி வேலையை ராஜிநாமா செய்ய எண்ணி, அன்றைக்குப் புதிதாக வந்திருந்த மேனேஜரின் அறைக்குச் சென்றபோது விமலாவைச் சந்தித்தான்.

"உங்களுக்கு என் வாழ்த்துக்கள் விமலா.. என் பெயர் ரகு. காபி ரைடிங் க்ரூப். சிட்ரஸ் ப்ராஜக்ட் டீம் லீட்"

"தெரியும். உங்களைப் பத்தி நிறைய படிச்சிருக்கேன் கம்பெனி ரிபோர்ட்ல.. எல்லாம் ஏ ப்லஸ். என்ன விஷயமா வந்தீங்க?"

"வேலையை ராஜிநாமா செய்யப்போறேன். இமெயில் நோடீஸ் அனுப்பிட்டேன். சொல்லிட்டுப் போலாம்னு.."

"வாட்.. என் முதல் நாளிலா? ராட்சசி மேனேஜர்னு என்னைப் பத்தி யாராவது உங்க கிட்டே சொல்லிட்டாங்களா அதுக்குள்ளே? நான் அவ்ளோ மோசமில்லே ரகு.. ஐ ஹேவ் எ ஹார்ட், மே நாட் பி சைசபில், யெட் டிசர்னபில் யு நோ?"

சிரித்தான். "இல்லை. ஒரு மாதமாகவே வேலையிலிருந்து விலக நினைத்திருந்தேன். எனக்கு இந்த வேலையில் மனமில்லை"

"வேலையில் மனசு இல்லாட்டிப் போனா என்னா? பணம் வருதே? வேலை என்ன காதலியா?"

"ஐ காட் டு கோ"

"என்ன செய்யப் போறே?"

"குழந்தைகள் புத்தகம் எழுதப் போறேன். சாகசக் கதைகள், மொழிபெயர்ப்புகள், சித்திரக் கதைகள்.. நிறைய ஐடியா இருக்கு. சின்னஞ்சிறு மனசுகள் நிறைய படிக்கணும். சோஷலி ரெலவென்ட் அன்ட் இம்பார்டென்ட். இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாழ்க்கை வசதிகளினால் ஏற்பட்டிருக்குற ஒரு பெரிய சமூக இழப்பு, புத்தக வாசிப்பு. வளரும் மனதுகள் நிறைய படிக்க வேண்டும். அதுக்கு என்னால ஆனதை செய்யப் போறேன். ஐ நீட் எ.."

"மீனிங்புல் லைப்?"

"யெஸ். என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணும்"

"அப்ப நாங்கள்ளாம் என்ன புடுங்குறோமோ ரகு? இந்த வேலை எத்தனையோ பேருடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொண்டு வருது. ஸ்டில், உன் விருப்பம் எதுவோ அதுல உன் திறமையைக் காட்டுறதுல தவறே இல்லை. யு மஸ்ட் பர்ஸ்யு யுர் பேஷன். குழந்தைகள் புத்தகம் எழுதுறது பிச்சைக்கார வேலையாச்சே.. பார்டன் மை ஹிட்"

"பணம் அதிகம் இல்லைதான், பட் லாங் டர்ம்.. எல்லாம் சரிவரும்"

"ரகு. உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அதிலும் இன்னைக்கு என் முதல் நாள். உன்னை இந்தக் கம்பெனி இழப்பதை நான் விரும்பவில்லை. உன் எழுத்து உனக்கு வசதிகளைத் தரும் வரையில், எனக்கு பார்ட் டைம் வேலை பாரேன்? நீ ஆபீசுக்கு வரவேண்டாம். ஐ'ல் கிவ் யு வர்க்.. நூறு டாலர் வார ரிடெயினர்.. கான்ட்ராக்ட் வேலைக்கு கம்பெனி குடுக்குற மணிக்கூலி. என்ன சொல்றே?"

விமலாவை ரகுவுக்கு உடனே பிடித்தது. "டீல். ரொம்ப நன்றி".

தொழில் முறை தொடர்பு நாட்பட மெள்ளக் காதலாகி ஒரு நிமிடம் கூடப் பிரிந்திருக்க முடியாத ஏக்கவெறியில் முடிய, திருமணம் செய்து கொண்டார்கள். இடையில் ரகுவின் எழுத்துக்கு மதிப்பு உண்டாகி ஆறு புத்தகங்கள் சுமாராகவும் இரண்டு புத்தகங்கள் பெருமளவும் விற்று, அவற்றில் ஒன்று ந்யூபரி விருதும் பெற்றுவிட, தனி ஏஜன்ட் வைக்குமளவு வளர்ந்திருந்தான். கருவுற்ற நான்கு மாதங்களில் கர்ப்பநாள் விடுமுறையாக எட்டு மாதங்கள் எடுத்து வீட்டிலிருந்தாள் விமலா.

    "எதுக்குடா சிரிக்கிறே?" என்றாள் விமலா. அறுபத்துமூன்று மைல் வேகத்தில் சீராகச் சென்றது வண்டி. இரண்டாவது எக்சிட்டில் விலகி தனிப்பாதையில் ஆறு மைல் சென்றால் மிகச் சிறிய கடலோரக் கிராமத்தில் வீடு வந்துவிடும். முதல் சொந்த வீடு. நூறு வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதி போர்டின் குடும்பத்தார் இருந்த கட்டிடம் என்றாலும், அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, நன்றாகப் பராமரிக்கப்பட்ட பிரமாண்டமான வீடு. ஏழு பெட்ரூம், ஐந்து பாத்ரூம், கெஸ்ட் ஹவுஸ், டீ ரூம், கீழே ஒரு வரவேற்பரை, மாடியில் ஒரு வரவேற்பரை, லைப்ரெரி, இரண்டு ஆபீஸ்கள், கீழே ஒரு சமையலறை, மாடியில் ஒரு சமையலறை, ஸ்டீமர், சானா, நீச்சல்குளம், ஒரு ஏக்கருக்கு சற்று அதிகமான நிலம், பூந்தோட்டம்.. எல்லாம் கடந்து கால் மைல் சரிவில் சொந்தமான தனி பீச். நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ந்தாள். அருகே இருந்த ஆசைக் கணவன் ரகுவைப் பார்த்தாள். "எதுக்குடா சிரிச்சே?" என்றாள் மறுபடி.

"நம்ம முதல் சந்திப்பை நினைச்சு சிரிச்சேன். நல்ல வேளை நான் உன்னை நேரில் பார்த்து சொல்லிட்டு போகத் தோணிச்சேனு எத்தனை நாள் என்னை நானே பெருமையா நினைச்சுக்குறேன் தெரியுமா?"

"ஐயே.. அன்னிக்கே உன்னை பிச்சையெடுரா போடானு விட்டிருக்கணும். ஏதோ பார்க்க ஹேன்ட்சமா இருக்கானே ஒரு தனிமையான மாலை நேரத்துக்கு உதவுமேனு கணக்கு பண்ணி வச்சேன்.. ஆனா இப்படி கல்யாணம் பண்ணிக்கும்படி ஆவும்னு நினைச்சுக்கூட பார்க்கலே"

"நானா கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்? நீதான் துரத்தித் துரத்தி கல்யாணம் செஞ்சுக்க வற்புறுத்தினே?"

"வெல்.. எல்லாம் காரணமாத்தான். என் காரியம் முடிஞ்சுடுச்சு. உன் பேர்ல கடன் வாங்கி, எனக்குப் பிடிச்ச ப்ரைவேட் பீச் ஹவுஸ் என் பேர்ல வாங்கியாச்சு. என்னோட சொந்த பேங்க் அகவுன்ட்ல நான் சேத்த பணம் அத்தனையும் அப்படியே இருக்கு. உன்னை மாதிரியே அழகா ஒரு குழந்தையும் பெத்துக்கப் போறேன். இனிமே உன்னால எனக்கு எந்த பயனும் இருக்குறதா தெரியலியே, மிஸ்டர் வாட் இஸ் யுர் நேம்? வேணும்னா அடுத்த ஸ்டாப்புல இறங்கிக்கயேன்? லெட்ஸ் பார்ட் எமிகப்லி" என்று ரகுவின் இடுப்பில் வலது கையால் இடித்தபடி வண்டியை நெடுஞ்சாலையிலிருந்து விலக்கி வேகம் குறைத்து, தனிப்பாதையில் திருப்பினாள்.

"விமி.. வாச் அவுட்!" ரகு அலறினான். விமலா வண்டியைத் துரிதமாக இடப்புறம் ஒடித்தாள். சட்டென்று மறைவிலிருந்து வந்த ஒரு கிழவியைத் தவிர்த்தாலும், வண்டி லேசாக மோதி கிழவி ஐந்தடி பக்கவாட்டில் எகிறி விழுந்தாள்.

"மை காட்!" என்று வண்டியை நிறுத்தினாள் விமலா. ரகு கதவைத் திறந்து அவசரமாக ஓடினான். கிழவியை கைத்தாங்கலாக எழுப்பினான். கிழவிக்கு அடிபடாததில் அவனுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும். "ஐம் சாரி.. வி ஆர் சாரி" என்று பலமுறை மன்னிப்பு கேட்டான். விமலாவும் மெள்ள அருகில் வந்தாள். மன்னிப்பு கேட்டாள். ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போவதாகச் சொன்னாள். கிழவி மறுத்தாள், "ஐ'ம் ஆல்ரைட்". ரகு தந்தப் பணத்தை வாங்கிய கிழவி, அப்படியே விமலாவிடம் கொடுத்தாள். "மை கிப்ட் பார் யுவர் சைல்ட். செவ்வானமா சிவப்புல பட்டுச் சட்டையும் பொம்மையும் வாங்கி கொடு" என்றாள் சிரித்தபடி. வீட்டில் கொண்டு விடுவதாக எத்தனை சொல்லியும் கேட்காமல், "ஹேபி டு மீட் யு போத்" என்று சாலையின் குறுக்கே நடந்தக் கிழவி, எதிர்புறம் இருந்த கடைகள் ஒன்றினுள் நுழைந்தாள். இன்னும் அதிர்ச்சி அடங்காத விமலாவை பின்னிருக்கையில் வசதியாக அமர்த்திவிட்டு வண்டியைக் கிளப்பினான் ரகு. "நல்ல வேளை எதுவும் ஆகலே. உனக்கு எப்படி இருக்கு? ஆர் யு நெர்வஸ்?"

"என்னைப் பத்தியே கவலைப்படு.. பாவம் அந்தக் கிழவி.. மை காட்.."

"உன்னைப் பத்தி நான் கவலைப்படாம? நல்ல வேளை கிழவிக்கு எதுவும் ஆகலே.. வேர் டிட் ஷி கம் ப்ரம்?"

"ஆச்சரியமா இருக்கு.. நம்ம கிட்டே எதையுமே வாங்கிக்கலே.."

"ஆனா உன் வயித்தையே வெறிச்சுப் பாத்தாபுல எனக்குத் தோணிச்சு. சிவப்பு கலர்ல ட்ரெஸ்சும் பொம்மையும் வாங்கிக் கொடுனு வேறே சொல்லிட்டுப் போறா. வியர்ட்"

அதற்குள் கிராமத்தின் மையத் தெருவைக் கடந்து, மேட்டுத் தெருவில் ஊர்ந்து வளைந்து, உடன் தொடர்ந்த மலையையும் கடலையும் பார்த்து ரசித்தபடி வீட்டுக்கு வந்தார்கள். "வெல்கம் ஹோம் டார்லிங்" என்றான் ரகு, காரை போர்டிகோவில் நிறுத்தி. விமலாவை நடக்க விடாமல் அப்படியே இரு கைகளாலும் அள்ளிக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து இறக்கினான். கதவைத் திறந்தான். "உனக்காக என் உயிர்க்காதலியே. எல்லாம் உனக்காக".

ரகுவை முத்தமிட்ட விமலாவின் கண்களில் லேசாக ஈரம். "ஐ'ம் ஸோ ஹேபி ரகு. என்னை விட்டு எங்கயும் போயிடாதே" என்றபடி அவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு உள்ளே நடந்தாள்.

"அப்போ எமிகபலி பார்ட்னு சொன்னதெல்லாம்?"

"ஷ்!" என்று அவன் உதடுகளைப் பொத்தி மறுபடி முத்தமிட்டாள். "ஒரு தடவை சொன்னதுக்கே என்ன ஆச்சு பாத்தியா. இனிமே அப்படி விளையாட்டுக்குக் கூட சொல்லமாட்டேன்"

"ஓ.. யுர் கெடிங் முஷி. போகுது விடு பட்டு. கிழவியோட அஜாக்கிரதை. நீ என்ன செய்வே? இன் ஸ்பைட்.. நீ சட்னு வண்டியை ஒடிச்சது நல்ல ப்ரசென்ஸ் ஆப் மைன்ட்" என்றான் ரகு. "புது பர்னிசர் நாளைக்கு வந்துருமா? இன்னிக்கு நைட் எங்கே படுக்குறது?"

அவனை குறும்புடன் பார்த்த விமலா "பெட்ரூம், சோபா, ஹால், கிச்சன், மாடிப்படி, பாத்ரூம், கராஜ் எல்லாம் நிறையப் படுத்தாச்சு.. தரையில படுத்து நாளாச்சுல்ல?" என்றாள்.

அறைகளைக் கடந்து பின்கட்டுக்கு வந்தார்கள். "சரிவு வரை நடந்து பீச் பார்க்கலாம் வரியா விமி? சன்செட் டைம்" என்றான் ரகு.

பூந்தோட்டத்தைக் கடந்து புல்தரை நடுவில் இருந்த சிமென்ட் நடைபாதையில் மெள்ள நடந்தார்கள். வீட்டு எல்லையோரமாக இருந்த பாறை வேலியில் சாய்ந்து நின்றார்கள். மாலைச் சிகப்பு வானமெங்கும். சற்றுத் தொலைவில் மிதமான அலைகளுடன் கடல். யாருமற்ற தனி பீச். விமலா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ரகுவைப் பிடித்திருந்த அவள் கை இறுகி இறுகி.."அவுச்!" என்றான் ரகு. "என்ன பட்டு, என்ன ஆச்சு? ஒய் ஆர் யு டென்ஸ்?"

"ரகு.. நேத்து கனவுல வந்துச்சே கடற்கரை.. எங்கயோ பாத்திருக்கேன்னு சொன்னனே.." என்றுச் சுட்டினாள். சொந்த வீட்டின் பின்புறம்! "திஸ் இஸ் இட்" என்ற விமலா நடுங்கினாள். பாறைமேல் உட்கார்ந்தாள்.

ரகு அவளைச் சமாதானப்படுத்தினான். "ரிலேக்ஸ் பேபி. அதெல்லாம் எதுவும் கிடையாது. திஸ் ப்லேஸ் இஸ் ப்யூடிபுல். கனவுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. பயப்படாதே"

"ரகு.. மறுபடி பாரு.. தி ஸ்கை இஸ்.."

"செவ்வானம். உன்னழகுல பாதிதான்.. பட் ப்ரிடி ஸ்டில்"

"ப்ச.. அந்த கிழவி என்ன சொன்னா? ஞாபகம் இருக்கா?"

"அதனால? எல்லாத்தையும் போட்டுக் குழப்புறியே பட்டு?"

"இல்லே ரகு. சம்திங் ஹியர். அந்தக் கிழவி நம்மகிட்டே ஆங்கிலத்துல பேசினா. சிவப்பு கலர்ல துணியும் பொம்மையும் வாங்கிக் குடுன்றது மட்டும் தமிழ். கவனிச்சியா? இப்பத்தான் எனக்கும் உறைக்குது. அதுவும் 'செவ்வானமா சிவப்புல பட்டுச்சட்டையும் பொம்மையும்'னு இந்தக் காலத்துல நம்ம ஊர்லயே யாரும் பேசுறதில்லே.. இந்த நாட்டுல, இந்த ஊர்ல, எங்கேயோ இருக்குற மூன் பே கிராமத்துல.. தமிழ் பேசுறக் கிழவி எப்படி வந்தா? அதுவும் சரியா நம்ம கார் முன்னால விழுந்து.. சம்திங் ஹியர். சம்திங் சினிஸ்டர்."

"டேக் இட் ஈஸி டியர்.. எல்லாத்துக்கும் விளக்கம் இருக்கு..". ரகுவுக்கு அவள் கலவரம் புரியாவிட்டாலும், கிழவி விமலாவின் வயிற்றை வெறித்துப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

"ரகு" என்று திகிலுடன் கூவினாள் விமலா. "வயிறு என்னவோ செய்யுது ரகு.. ரொம்ப வலிக்குது.. ப்லீஸ் ஹெல்ப் மி. கெட் ஹெல்ப்".

(தொடரும்) ▶2

38 கருத்துகள்:

 1. என்னங்க இப்படி திக்'ன்னு தொடரும் போட்டுட்டீங்க...?

  பதிலளிநீக்கு
 2. கனவு நனவா...?அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று திகிலாகத்தான் இருக்கிறது...!

  பதிலளிநீக்கு
 3. அங்கே டி.வி.லே கடல் குளியல்ன்னா சுறாக்கள் தொடை வரை விழுங்கி சிவப்பு ரத்தம் கடல் நீரோடு கலக்கும் காட்சிகள் இல்லாம இருக்காது, இல்லையா?

  ஒரு பகுதிலேயே கொஞ்ச கொஞ்சமா அங்கங்கே பிச்சுப் போட்ட ரசனைகள் நிறைய.

  //"நான் துடிக்கிறது தெரியலே? பாப்பா பயந்திருக்குமானு கவலைப்படுறதப் பாரு?"

  "என்னைப் பத்தியே கவலைப்படு.. பாவம் அந்தக் கிழவி.." //

  ஒரு கேரக்டர் ஒளிந்திருப்பது தெரிந்தது.

  //"திஸ் இஸ் இட்" என்ற விமலா நடுங்கினாள். //

  என்ன நடக்கப்போறதுன்னு கோடி காட்டிட்டு, அது எப்போ நடக்கப் போறதோன்னு எதிர்பார்க்க வைப்பதும் நல்ல உத்தி தான். அந்த எதிர்பார்ப்பை பொய்க்க வைப்பதும்..
  வேண்டாப்பா, சாமி!
  பதிலளிநீக்கு
 4. இப்படியா திகில் அடைய வச்சு முடிப்பங்க. ப்ளீஸ் அடுத்த பதிவை சீக்கிரம் போட்டுடுங்கோ

  பதிலளிநீக்கு
 5. ஜீவிக்கு முதலில் ஒரு சபாஷ்.

  நான் சுட்ட வந்த இடத்தை முதலிலேயே சுட்டிய நுணுக்கமான ரசனைக்கு.

  சபாஷ் அப்பாதுரை. கதை நெடுகிலும் ஒரு அமானுஷ்யமான சூழல் பரவ விட்டிருப்பதில் வெற்றி உங்களுக்கு.

  தொடர்வதில் ஆர்வமாயிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. ஐய்யய்யோ... தொடருமா...

  ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கேன்...

  பதிலளிநீக்கு
 7. The next part is still pending for the story "Andha Kadai". Crime Thriller should be told at one go. Do not make us to wait for long. Suspense cannot be tolerated. Please come out with the second part soon.

  பதிலளிநீக்கு
 8. More than your story, the titles are quite odd : andhakadai, kanpudungi neelan. No idea from where you got these titles and how it struck your mind.

  பதிலளிநீக்கு
 9. அப்பா ஒரு அமானுஷ்ய கதையா... சீக்கிரம் அடுத்த பார்ட் போஸ்ட் பண்ணுங்க... செம டயலாக்ஸ்... காமம் கூட காம் இல்லாம எழுத உங்களால தான் முடியுது அப்பா சார் ...

  பதிலளிநீக்கு
 10. இது அமானுஷ்ய கதையா இல்லை ரகு ஏதாவது ... ம்ம்ம்.... அப்ப கனவு!

  பதிலளிநீக்கு
 11. முதல் பாராவிலேயே முடிவைச் சொல்லிட்டீங்க, அந்த முடிவுக்கு எப்படி கதையை கொண்டு போறீங்கங்கறதுதான் சஸ்பென்ஸ்!
  ஜீவி வேறு ஏதோ யுகிக்கிறாரே, அப்படியா?
  (எனக்கு மட்டும் draft மெயில் பண்ணுங்க, யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்)

  பதிலளிநீக்கு
 12. லேசா அமானுஷ்ய வாசனை அடிக்குதே.... அமானுஷ்யம்னா உடனே ரகு ஆஜர்! ரகு உங்களுக்கு ரொம்ப ஆ(வி)கி வந்த பெயரா?

  பதிலளிநீக்கு
 13. கண் பிடுங்கி நீலன் தலைப்புக்கும் கதைக் கருவுக்கும் என்ன சம்பந்தம்??? ரகுவின் கண்களைப் பிடுங்கப் போறாங்களா? அந்த அமானுஷ்யக் கிழவி யார்? அவள் சொன்னதுக்கு என்ன அர்த்தம்?? ஏகப்பட்ட கேள்விகள்! எல்லாத்துக்கும் அடுத்ததில் பதில் வருமா?

  சரியான நேரத்தில் நிறுத்திட்டீங்க.

  எங்கேருந்து கதைக்கருவையும் தலைப்பையும் தேர்ந்தெடுக்கறீங்களோ! ஒண்ணைப் பார்க்க இன்னொண்ணு இன்னும் அதிகமான ரசனையோடும், த்ரில்லிங்கோடும்!! சுஜாதா எல்லாம் ஒண்ணுமே இல்லை! :))))))

  பதிலளிநீக்கு
 14. ஶ்ரீராம் சொல்லி இருப்பதை இப்போத் தான் கவனிச்சேன். ஆமாம் இல்ல, அமானுஷ்யத்துக்கும் ரகுவுக்கும் என்ன சம்பந்தம்??

  பதிலளிநீக்கு
 15. பயமாகத்தான் இருக்கு

  பதிலளிநீக்கு
 16. அச்சோ! பயம்ம்மா இருக்கே... படம்னா கண்ணை மூடிக்கலாம். கதைக்கு என்ன பண்றது?

  பதிலளிநீக்கு
 17. எப்போது அடுத்த பாகம்???????????????????????????
  க்ராம தேவதை எதுக்காவது பிரார்த்தனை விட்டுப் போச்சா. குழம்பியாச்சு.

  பதிலளிநீக்கு
 18. அடடா.... இப்படி சஸ்பென்ஸ் வைச்சு எங்களை அலைக்கழிக்கறீங்களே துரை.....

  உங்கள் வார்த்தைகளில் சொக்கிப் போய் காத்திருக்கிறேன் - அடுத்த பகுதிக்குத்தான்....

  பதிலளிநீக்கு
 19. பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  @mohan: neelan/neeli are, as you may know, folk deities followed in chengalpattu-kanchipuram area. there is a variety of neelan/neeli tales.

  @ஜீவி: என் மகனுக்கு இந்தக் கதையை கொஞ்சம் மாற்றிச் சொல்லித் தூங்க வைத்த போது, his comment:"you are a sick person, dad"

  @ஸ்ரீராம்: எதையோ கண்டுபிடிச்சு.. இப்போ எனக்கே பயமாயிருக்குதே?

  பதிலளிநீக்கு
 20. கண்பிடுங்கி தலைப்பு.. சாமி கண்ணைக் குத்துறாப்புல தான்.. ஹிஹி.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சப்தம் கேட்குதே

  பதிலளிநீக்கு
 21. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன்

  பதிலளிநீக்கு
 22. எந்த சாமியும் யார் கண்ணையும் குத்தாது அப்பாதுரை. அப்படிச் சொல்லிச் சொல்லியே ஒரு காலத்தில் சில பெரியவங்க கடவுளுக்கும், நமக்கும் இடைவெளியை உருவாக்கிட்டாங்க. நல்லவேளையா எங்களுக்கெல்லாம் அப்படிச் சொல்லித் தரலை. ஆனால் கல்யாணம் ஆகி வந்து என் மாமியார் பயமுறுத்தல் நீங்க சொல்வதுக்கெல்லாம் மேலே இருந்தது என்பதையும் சொல்லியாகணும்.

  கடவுளரிலேயே வித்தியாசம் பார்ப்பார். இந்த சாமியைத் தான் கும்பிடணும், அவருக்குத் தான் செய்யணும், மத்த சாமிகளை நினைக்கிறதே தப்பு என்ற எண்ணமெல்லாம் உண்டு. சாமி வந்து தண்டனை கொடுக்கும்னு எல்லாம் சொல்லுவாங்க. அவங்களோட பார்வையிலே நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவள்.

  ஹிஹிஹி, பின்னே! அவங்களுக்குத் தமிழில் நான் தினம் தினம் கந்த சஷ்டி கவசம் படிக்கிறது, துளசி பூஜை பண்ணறதும், பாரதியாரின் பாடல்களைப் படிக்கிறது பார்த்து இது தேறாத கேஸ்னு முடிவே கட்டிட்டாங்க.

  பதிலளிநீக்கு
 23. பின்னர் அவங்களே துளசி பூஜையும் பண்ண ஆரம்பிச்சுக் கந்த சஷ்டி கவசமும் சொல்ல ஆரம்பிச்சாச்சு. நான் மட்டும் மாறவே இல்லை. :)))))எல்லா சாமியும் நண்பர்கள் தான் இன்னி வரைக்கும்.:))))

  இது பழையனூர் நீலி/நீலனாக மாறி இருக்கா? சரிதான்! :))) அமெரிக்காவுக்கெல்லாமா வந்துட்டாங்க???

  பதிலளிநீக்கு
 24. //இது பழையனூர் நீலி/நீலனாக மாறி இருக்கா?

  நீலி/நீலன் என்று இரட்டைப்பிறவி தமிழ்நாட்டுலயே உண்டே? (ஒரு தபா பம்மல் போய்ப் பாருங்க :-)

  கண்ணைக் குத்துறது சாமி; கண்ணைப் பிடுங்குறது நீலன். இரண்டும் ஒண்ணுதான்.

  எதுவும் மாறலிங்க. லேசுல மாறாது. சமீப பெங்களூர் பயணத்தில் கூட இதைப் பார்த்தேன். இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவனுடைய க்ளவுசோ என்னவோ இன்னொருவன் எடுத்துக் கொண்டுவிட்டான் என்று பறிகொடுத்தவனின் அம்மா வரிந்து கட்டிக் கொண்டு வந்தார். மற்ற பையன் அதைத் தான் எடுக்கவேயில்லை என்று சொல்ல, பறிகொடுத்தவன் அம்மாவிடம் 'அவன் பொய் சொல்றான்மா' என்று சொல்ல.. அம்மா மற்ற பையனிடம் என்ன சொன்னாருனு நினைக்கறீங்க? எக்சேக்ட்லி! அம்மாவுக்கு மிஞ்சிப் போனால் முப்பது வயதிருக்கும். ஜடம்.

  பதிலளிநீக்கு
 25. சுஜாதாவுக்கு ஆத்மா, நித்யாங்கற பேர்கள் ஸயன்ஸ் ஃபிக்ஷனுக்கு பேவரைட் போல உங்களுக்கு ரகு! வித்தியாசமான தலைப்பே இழுத்துருச்சு உள்ள! அமானுஷ்யம் கலந்து ஆரம்பிச்சிருக்கறது வெகு சுவாரஸ்யம். என் கற்பனையும் கூடவே பயணிக்க முடிவது மிக வசதி.

  பதிலளிநீக்கு
 26. கீதாம்மா.. நீங்க டங்கு டிங்கு டமுக்கு டிமுக்குனு தினம் சொன்னதும அவங்க பயந்தே போயிருப்பாங்க :) உங்க வழிக்கு வந்துட்டாங்க!

  பதிலளிநீக்கு
 27. Yeah. Now I remember one saying in my childhood : NEELIKKU NETHTHILA KANNU. This was often told in our house but I am not aware of the meaning even now. But from the title of your story, it seems that neelannkku kannumelaye kannu.

  பதிலளிநீக்கு
 28. //கீதாம்மா.. நீங்க டங்கு டிங்கு டமுக்கு டிமுக்குனு தினம் சொன்னதும அவங்க பயந்தே போயிருப்பாங்க :) உங்க வழிக்கு வந்துட்டாங்க!//

  ஹாஹா, காலம்பரவே இதைப் பார்த்துச் சிரிச்சுட்டேன். பதில் கொடுக்கிறச்சே மின்வெட்டு ஆரம்பிச்சுடுச்சு. :))) அவை சரவணனின் கால் சிலம்பின் ஓசை அப்படி எழுப்புவதைக் குறிப்பிடும் சொற்கள். கீழே உள்ளவற்றைத் தானே சொல்கிறீர்கள்? கால் சிலம்பு இப்படிஎல்லாம் சப்திக்கிறதாம்.

  //செககண செககண செககண செகண
  மொகமொக மொகமொக மொகமொக மொகென
  நகநக நகநக நகநக நகநக நகென
  டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
  ரரரர ரரரர ரரரர ரரர
  ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
  டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
  டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு//

  பதிலளிநீக்கு
 29. அடுத்து முதலிலேயே வரும் இந்த வரிகள் மிகவும் ஆழமான அர்த்தம் பொதிந்தவை அப்பாதுரை! :))))

  //ரஹண பவச ரரரர ரரர
  ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
  விணபவ சரஹண வீரா நமோ நம
  நிபவ சரஹண நிறநிற நிறென
  வசர ஹணப வருக வருக
  அசுரர் குடி கெடுத்த ஐயா வருக//

  சரஹணபவ என்னும் ஷடாக்ஷர மந்திரத்தின் உட்பொருளைச் சுட்டும் வரிகள் அவை. அதன் எழுத்துக்களைச் சிறிது முன்னும் பின்னுமாக மாற்றி உருவேற்றுவார்கள் தேர்ந்த யோகிகள். அதன் மூலம் வெவ்வேறு பலன்களையும் பெறுவார்கள். அவைதான் இங்கே குறிப்பிடுபவை. இதே போல் நமசிவாய என்னும் மந்திரமும் முன்னும், பின்னுமாக மாற்றிச் சொல்லப்படுவதுண்டு. இவ
  ற்றின் உட்பொருளை அறிவது எளிதன்று, யோகத்தில் எத்தனையோ படிகள் மேல்நிலைக்குப் போக ஆரம்பித்து விட்டால் குரு மூலம் நேரடியாக உபதேசம் கிட்டும். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். இதன் உட்பொருளை குரு மூலமே அறிந்து கொள்ள வேண்டும். நம் சித்தர்கள் பொருளற்ற சொற்களைச் சொல்லுவதில்லை. அவர்கள் குறிப்பிடும் பொருளைத் தெரிந்து கொண்டால் நாம் எங்கேயோ இருப்போம். :))))))))

  பதிலளிநீக்கு
 30. //நீலி/நீலன் என்று இரட்டைப்பிறவி தமிழ்நாட்டுலயே உண்டே? (ஒரு தபா பம்மல் போய்ப் பாருங்க :-)//


  தமிழ்நாட்டிலே இருப்பது நல்லாவே தெரியும் அப்பாதுரை. விசா கிடைச்சு அமெரிக்காவுக்கு எப்போ வந்தாங்கனு தான் கேள்வியே! :)))))))

  பதிலளிநீக்கு
 31. ஒரு கனவு நிஜமாகிறதா?.. திகிலாத்தொடங்குதே.

  ஜூப்பர்..

  பதிலளிநீக்கு

 32. ஒன்று கவனிக்கிறேன். இந்தமாதிரி திகில் கதைகளைப் படிக்கும்போதே அவரவர் கற்பனையும் தறிகெட்டு ஓடுகிற்து. இன்னும் ஒன்று பின்னூட்டங்களைப் படிக்கும்போது நீங்களும் கீதாம்மாவும் நடத்தும் sparring. ஆமாம் இன்னொரு கை குறைகிறதே. ......!

  பதிலளிநீக்கு
 33. //பொருளற்ற சொற்களைச் சொல்லுவதில்லை..
  சொன்னாலும் தவறேயில்லை. வால்மீகியிலிருந்து சேக்குபியர் பாரதி வரை அத்தனை பேரும் அப்பப்போ ஓசையை அப்படியே சேர்த்திருக்கிறார்கள், பொருளுள்ள வரிகளுக்கு சுவை சேர்க்க.

  எனக்கு என்னவோ இந்தக் காட்சி தோணிச்சு, அதான்: நீங்க உங்க மாமியையும் சாமியையும் மாத்தி மாத்திப் பாத்தபடி டங்கு டிபுக்கு ராராரா ரீரீரீ ஹூஹூஹூனு தினம் அழுத்தி அழுத்தி சொல்ல, உங்க கிட்ட எதுக்கு அனாவசியமா வம்பு வச்சுக்குவானேன்னு அவங்க ஜகா வாங்கியிருக்கலாம். சும்மா காமெடி, தவறாக நினைக்கவேண்டாம் :)

  ஆசாமிக்குத் தான் விசா எல்லாம். சாமிக்கும் பூதத்துக்கும் விசா தேவையில்லை :)

  பதிலளிநீக்கு
 34. பல வருடங்களுக்கு முன் அடிக்கடி ஜபேன் போக வேண்டியிருந்தது. அங்கே யோகஹோமாவுக்கு அருகில் ஒரு பெரிய சமூகச் சமாதி இருக்கிறது. உலகப்போர்கள் காலத்து இறப்புகளுக்கு கல்லறைகளும் சில வழிபாட்டு (!) நினைவுச்சின்னங்களும் உள்ளன. இறந்தவர் நாள் என்று ஒன்று கொண்டாடுவார்கள். செரி ப்லாசம் காலத்தில் சமாதி முழுக்க மணக்கும் - பயமாகவும் இருக்கும். என் நண்பரின் பெற்றோர்கள் இருவரும் என்னை அடிக்கடி இறந்தவர் நாளைக் காண வற்புறுத்துவார்கள். நிறைய மொழிகளில் பேச்சுக்குரல் கேட்குமாம். ஆங்கிலம், பர்மி, தமிழ் எல்லாம் கேட்கும் என்று அடித்து (லேசாக) சொல்வார்கள். நான் போன அன்று ஆவிகளுக்கு மௌனவிரதம் போல, அல்லது என் காதுகள் அத்தனை தீர்க்கமாக இலையோ என்னவோ. ஏமாற்றத்துடன் திரும்புகையில்.. சமாதிக்கு வெளியே ஒரு கிழவி எனக்கு இரண்டு குறிகள் சொன்னார். ஒன்று அப்பட்டமாகப் பலித்தது. மற்றதற்கு இன்னும் காலமிருக்கிறது. சாகும்வரை தமிழ் மட்டும் பேசி, செத்தபின் ஸ்பேனிஷ் பேசும் ஆவிகளைப் பற்றி என்ன சொல்ல?!

  பதிலளிநீக்கு
 35. கதையை அதோட வேகத்தில படிச்சிக்கிட்டு வந்து டக்குன்னு தொடரும் போட்டுட்டிங்களே...

  அருமையா போகுது.

  பதிலளிநீக்கு
 36. "ஐயோ! கண் தெரியலியே.. கண்ணெல்லாம் எரியுதே.. விமி! விமலா!". நிச்சயம் ரகுவின் குரல். அலைக்குள் சிக்கியிருக்கிறான். அந்தக்கை! "ரகு.. இதோ வரேன்!" சிமென்ட் கால்களை இழுத்து ஓடினாள் விமலா. அலை மேலும் வளர்ந்து, கணங்களில் வெடித்து, சிவந்த ரத்தமும் சிதைந்த உடலும் கரையெங்கும் தெறித்தது. ரகுவின் கைவிரல் துண்டு ஒன்று அவள் மேல் வந்து விழுந்தது//
  கனவு பலிக்கும் என்று முடிக்க போகிறீர்களா?
  அருமையான் ஜோடிகள் பிரிப்பதில் என்ன் லாபம்?
  கதை நன்றாக திகில் ஊட்டுகிறது.

  பதிலளிநீக்கு