2013/01/27

காணாமல் போன காலம்



         ஸ் சர்ச்சுக்கும் முசிறி சுப்ரமணியத்துக்கும் இடையில் ஓடிய வாகனப் பிரளயத்தை எப்படிக் கடப்பது என்று திகிலுடன் தவித்துக் கொண்டிருந்தேன். ஒரு பத்து வயது அரைடிராயர் வடிவிலே இறைவன் தோன்றி வழிகாட்டினார். அவசரமாக அரைடிராயரைப் பின் தொடர்ந்துக் கரையேறினேன். என்னே ஈசனின் விளையாட்டு!



         காயிதே மில்லத் வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடந்த போது, அந்த நாள் காதலியோடு போனது - பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அந்நாள் காதலியும் இல்லை, இந்நாள் காதலியும் இல்லை துணைக்கு இந்த முறை.. அதுவல்ல ஏமாற்றம்.



         தே மின்வண்டி. அதே குப்பை. அதே வெற்றிலைக்காவி. அதே மலமூத்திரம். என் எதிர்பார்ப்பில் தவறு என்றாலும் சென்னை மின்ரயில்களில் கொஞ்சமாவது சுத்தம் சுகாதாரம் உண்டாக எல்லாம் வல்ல ஈசன் அருள் செய்தால் பரவாயில்லை. குறைந்தபட்சம் அசுத்தம் செய்வோரின் கண்களைக் குத்தினாலாவது நன்றாக இருக்கும்.



         டைமேடை(!) கடந்து, தடம் தாண்டி, சுவரிடித்தக் குறுக்கு வழியில் மந்தையோடு மந்தையாக வேளச்சேரி மெட்ரோ ஸ்டேஷன் வெளியே வந்த என் முகத்தில் நிதானமாக சிகரெட் ஊதிப் போன முக்கால் ஜீன்ஸ் காலரைக்கால் நீலச்சட்டை சுந்தரிக்கு, அந்தத் திருமயிலை திருகபாலீசுவரன் திருவருளால் விரைவில் டியோடரன்ட் ஞானம் பிறக்கட்டும். பெண்மணம் இத்தனை மோசமா! தாங்கமுடியலப்பா!



         புத்தகக் காட்சியரங்கின் குண்டுகுழிகளில் தடுக்கியோ கம்பளிகளில் தடுமாறியோ விழுந்து அடிபட்டோர் எவரேனும் பபாசிக்காரர்கள் மேல் வழக்கு தொடுத்தால் என் செலவில் ஆதரவுச் சாட்சி சொல்ல நான் தயார். அழகாக இல்லாவிட்டால் போகிறது, ஆபத்திலாத பாதை போடும் அளவுக்குக் கூட மக்கள் மீது மதிப்பு கிடையாதா பபாசிக்காரர்களுக்கு? சீ!



         ஸ் முனையில் ரத்னா கபே இருந்ததாக நினைவு. சினிமா தியேடருக்கு மறுபிறவி உண்டென்பதைப் புரிய வைத்தது மயிலை காமதேனு. பல்லாவரம் லட்சுமி தியேடர் என்னாகுமோ தெரியவில்லை. மக்கள் சினிமா பார்ப்பதை விட்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள் போல.



         பொங்கல் விடுமுறைக்கு டாஸ்மாக் கடைகள் அடைத்திருந்தாலும் ஸ்டார் ஹோட்டல்காரர்கள் 'ட்ரிங்சுக்கு பில் தரமாட்டோம் பரவாயில்லையா?' என்று பணிவோடு அனுமதி கேட்டு, குளிர்ந்த சாராய பானங்களை ஓசைப்படாமல் இன்முகத்துடன் வினியோகம் செய்தார்கள்.



         பாசிக்காரர்கள் என் இரண்டு நாள் நுழைவுக்கட்டணத்தைத் திருப்பினால் நன்றாக இருக்கும். பொதுநல அக்கறையோ, பொருட்காட்சி அறிவோ இல்லாமல் தொடர்ந்து கண்காட்சி நடத்தும் பபாசிக்காரர்கள் உடனடியாக மூன்று காரியங்கள் செய்ய வேண்டும். 1- இது வரை மக்களை ஏமாற்றியதற்கு வெட்கமும் வேதனையும் படவேண்டும். 2-புத்தகம் வாங்க வருவோரின் எதிர்பார்ப்புகளை அரைகுறையாகவாவது புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். 3-இனி வரும் காட்சிகளில் புத்தகம் வாங்குவோரையும் சுலபமாகக் கிடைக்கும் சமகாலத் தொழில்நுட்பங்களையும் மனதில் வைத்து அரங்கை அமைக்க வேண்டும்.



         தாழ்தள மிதவைப் பேருந்தில் கிண்டி தொழிற்பேட்டையிலிருந்து குரோம்பேட்டை போகையில் கூடவே பயணம் செய்த, தார்தள ஹீரோ ஹான்டாவின் வலது ஹேன்டில் பாரில் தொங்கிய ஒரு புடவைக்கடைத் துணிப்பையிலிருந்து அவ்வப்போது தலையை மட்டும் நீட்டி அலுக்காமல் ஆச்சரியங்களை உள்ளிழுத்து வந்தது வெள்ளை நிறத்தொரு பாமரேனியன் குட்டி. எப்போது வெளியே துள்ளிக் குதிக்குமோ என்று வழி மேல் விழி வைத்துக் கதிகலங்கினேன். அருமையான photo opportunity தவறிப்போனது.



         ஞ்சாவூர் பெரியகோவில் பார்த்தேன். முதல் முறையாகப் பார்த்த இன்ப அதிர்ச்சி தணிய நாளாகும். பேலஸ், கலைக்களஞ்சியம், சரஸ்வதி மஹால் எல்லாம் நாள் நேரமெடுத்துப் பார்க்க வேண்டும். actually, கலைக்களஞ்சியம் பார்க்கப் போவதில்லை. சுவாரசியமாக அமைத்தால் ஒழிய.



         புத்தக அரங்கின் கடைகளை 'வீதி'களில் அமைத்திருந்தார்கள். முதல் வீதி 'ஜவர்ஹர்லால் நேரு' பெயரில். புத்தகத்துக்கும் இவருக்கும் என்னய்யா சம்பந்தம் பிரிய பபாசிக்காரரே? காண்டேகர், அகிலன், லக்ஷ்மி, கல்கி, தாஹூர், கம்பன், பாரதி.. அட ஒரு ஜூஜாதா, வைரமுத்து.. பெயரா கிடைக்கவில்லை? இந்த முறை சுஜாதாவுக்கு பேனர் வைத்திருந்தார்கள். ..ம்.. பேனர் வைத்து விற்கவேண்டியிருந்தால் இனி சுஜாதா புத்தக விற்பனையின் இறங்குமுகமா?



         குறுங்காலப் பயணமாக இந்தியா வரும் உள்ளூர் அடையாளமற்ற அனாதைகளுக்கு இன்டர்னெட் வசதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கலாமா என்று தோன்றுகிறது. அல்லது குரோம்பேட்டை ஆனந்த பவனில் சாப்பிடலாமா என்று தோன்றுகிறது. இரண்டும் ஒன்று தான். 'இங்கே உட்காராதே, அங்கே உட்காராதே' என்று உண்ண வந்த வாடிக்கையாளர்களை விரட்டியடிக்கும் குரோம்பேட்டை ஆனந்த பவன் இதே ரீதியில் தொடர்ந்தால், விரைவில் உட்கார ஆளில்லாமல் துண்டு போட்டு மூடும். சந்தேகமே இல்லை.



         'இதற்குக் கீழ் தரங்கெட முடியாது' என்று சென்ற முறை வந்த போது நினைத்தேன் - ஆட்டோக்காரர்கள் வியக்க வைத்தார்கள். தரங்கெட்டவர்கள் என்றால் அது ஓரளவுக்கு பாராட்டாகத் தோன்றுமளவுக்கு, தொழில் முறை மட்டுமல்ல குறைந்த அளவுப் பண்பு கூட இல்லாமல் இப்படிக் கேடு கெட்டக் கூட்டமாக பெரும்பாலான சென்னை ஆட்டோக்காரர்கள் மாறியிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சென்னை ஆட்டோக் கிருமிகள் பெங்களூர் ஹைதராவிலும் பரவத் தொடங்கியிருக்கின்றன. சென்னை அளவுக்கு மோசமில்லை என்றாலும் பெ, ஹை நகரங்களில் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போடுவதை நிறுத்தியதோடு அல்லாமல் சென்னை போலவே அடாவடியாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.



         மைப்பாளர்கள் அப்படியென்றால் கடை விரித்தவர்கள் இன்னும் மோசம். எத்தனை தொழில் நுட்பம் கிடைக்கிறது இந்த நாளில்! ஒரு புத்தகக் கடையிலாவது புத்தகத் தேடலுக்காக ஒன்றிரண்டு கியாஸ்க் வைக்கக்கூடாதா? காய்கறி போல் அப்படியே புத்தகங்களைக் கொட்டி வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளரையும் மதிக்கவில்லை, புத்தகங்களையும் மதிக்கவில்லை, எழுத்தாளர்களையும் மதிக்கவில்லை - பணத்தை மட்டுமே மதிக்கிறார்க்ள் என்பது புரிந்தது. பணம் பண்ணுவதில் தப்பே இல்லை - இது வியாபாரம் தான், புரிகிறது. பொறுப்பாகச் செய்தால் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாமே?



         பிறந்த ஊர் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. எத்தனை முறை காரணமேயில்லாமல் கும்பகோணம் போயிருக்கிறேன்! கணித மேதை வாழ்ந்த ஊர் என்பது தெரியாமல் போனதே! இந்த முறை ராமானுஜம் நினைவில்லத்தைப் பார்த்தேன். என்னைச் சேர்த்து அந்த நாளைய விசிடர்கள் மொத்தம் மூன்று பேர்.



         பெரிய கோவிலில் ஈ காக்கா இல்லை. கோவிலில் வேலை செய்வோரைத் தவிர அனேகமாக யாரையும் காணோம். இலவசக் கோவில் என்பதாலா? விடுமுறை நாளாக இருப்பதால் அப்படி என்றார்கள். அன்று மாலை ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தபோது, சிவப்பு உடையணிந்த ஒரு லட்சம் பேர் திடீரென்று கோவிலுக்குள் நுழைய நானும் வெங்கட் நாகராஜூம் (actually நான் தான்) பதறியடித்து வெளியே வந்தோம். தரிசனம் செய்ய 2500ரூபாய்க்கு தனிச்சீட்டு இருப்பதாகச் சொன்னார். ஏனோ பெரிய கோவில் நினைவுக்கு வந்தது.



         கிழக்குப் பதிப்பகம் எத்தனையோ விதங்களில் 'முன்னோடி' என்று பெயர் வாங்கியிருக்கிறது. இந்த முறை புத்தகக் காட்சியில் அவர்கள் கடையைப் பார்த்தவர்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். அனேகமாக எல்லாக் கடைகளுமே கடைக்கு வெளியே ஒன்றிலிருந்து இரண்டடி டேபிள் போட்டு ஆக்கிரமித்திருந்தார்கள் எனினும், கிழக்கு அக்கிரமத்துக்கு ஆக்கிரமித்திருந்தார்கள். அது போதாமல், கடை வாசலில் காகிதக் குப்பை. வாடிக்கையாளரின் வாசிப்பு, தேடல், வாங்கல் அனுபவத்தை மேம்படுத்த எதுவும் செய்ய வேண்டாம், குறைந்த பட்சம் எரிந்து விழாத ஆட்களையாவது நியமிக்க வேண்டாமா? கடையில் வேலை பார்த்த மூவரும் வெளிப்படுத்திய திமிரும் ஆணவமும் பார்த்தவருக்கு மட்டுமே புரியும். வாடிக்கையாளரால் கிழக்கு உருவானது. கிழக்கினால் வாடிக்கையாளர் உருவாகவில்லை என்பதை இத்தனை சீக்கிரம் மறந்து விட்டார்களே! புத்தகக் காட்சியின் மிக மோகமான அனுபவத்தைக் கொடுத்தது கிழக்கு.



         த்தனையோ நாள் கழித்து 'ஒரே மூச்சில்' படித்த புத்தகம் ராகிரவின் 'நான், கிருஷ்ணதேவராயன்'. இரண்டு பாகமும் படித்தேன். ராகிர எழுதியதில் மோசமான புத்தகம் இதுவாக இருக்கும். ஏன் தொடர்ந்து படித்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. என்னதான் எழுதியிருக்கிறார் பார்ப்போம் என்று படித்து வைத்தேன். இதைப் படித்ததும் யார் வேண்டுமானாலும் சரித்திரக் கதை எழுதலாம் என்று தோன்றிவிட்டது. ராகிர மேல் எனக்கிருக்கும் அபிமானத்தால் அதிகமாக விமரிசிக்க மனம் மறுக்கிறது.



         'நான் ஒரு கம்யூனிஸ்ட்' என்றுக் கலைஞர் சொன்னதாகப் படித்ததும் 'ஆகா! தமிழக மார்க்சிசம் செயத நல்வினையின் பயனல்லவோ இது!' என்று வியந்தேன். பொங்கல் பரிசாகக் கிடைத்த இந்தப் புதுப் பெருமையில் நிச்சயம் நெகிழ்ந்து நெக்குருகிப் போயிருக்கும் தமிழக மார்க்சிசம். எனினும், மார்க்சிச சான்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.



         புத்தகக் காட்சியின் இனிமையான அனுபவம் அலையன்ஸ் பதிப்பகம். கடையமைப்பும் புத்தகங்களைக் கொட்டியிருந்த விதமும் (கவனித்தீர்களா - அடுக்கி வைத்ததாக ஒரு கடையைக் கூடச் சொல்ல முடியவில்லை) பிற கடைகளைப் போலவே இருந்தாலும், கடை வாசலில் அமர்ந்திருந்த வெள்ளைச் சட்டைப் பெரியவர் made all the difference. பெயர் கேட்க மறந்தது என்னுடைய பெரும்பிழை. யார் என்ன புத்தகம் கேட்டாலும் 'இருக்கிறது - இல்லை' என்ற விவரம் சொல்வதோடு, புத்தகம் இருந்தால் அவரே தேடியெடுத்துக் கொடுத்தார் அல்லது விவரங்களைச் சொல்லி வேலையாட்களை எடுத்துத் தரச் சொன்னார். நாகேஷின் 'சிரித்து வாழ வேண்டும்' வாங்க நினைத்து எங்கேயும் கிடைக்கவில்லை என்று அவரிடம் சொன்னேன். தன்னிடம் இல்லை என்றும், வானதி பதிப்பகம் வெளியிட்டது என்றும் கேட்காத விவரங்களைச் சொல்லி வானதி பதிப்பக கடையெண்ணைச் சொல்லி என்னை அங்கே அனுப்பி வைத்தார்.



         மிதாப் ரஜினி படங்களில் பார்த்திருந்தாலும் ஒரு போலீஸ்காரரை ஒரு பாமரர் பளார் இலக்கண வழுவின்றிக் கன்னத்தில் அடித்து நேரில் பார்த்தது இதுவே முதல் அனுபவம். சோமாஜிகுடாவில் அதிகாலை நடந்த போது காணக் கிடைத்தக் கண்கொள்ளாக் காட்சி. பிற ஹைதராக்காரர்களைப் போலவே ராங் சைடில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பணம் கேட்டார் துரத்தி வந்தப் போலீஸ்காரர். 'கையூட்டு தரமுடியாது. சலான் எழுது, அபராதம் கட்டுகிறேன்' என்ற பாமரரின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல் அவருடைய சாவியை மோட்டார்சைக்கிளிலிருந்து பறித்தார் போலீஸ்காரர். என் வயிறு பந்தாய்ச் சுருள நடுங்கினேன். பாமரர் அலட்சியமாகப் பாய்ந்து போலீஸ்காரரின் பைக் சாவியைப் பறித்தார். ஐயோ, என்ன ஆகுமோ என்றுப் பதறினேன். இவர் சாவியை அவர் எறிய, அவர் சாவியை இவர் எறிய, தொடர்ந்தக் கணங்களில் 'காரே மூரே' என்று ஹைதரா இந்தியில் தெருச்சுப்ரபாதம் சொல்லிக் கொண்டார்கள். திடீரென்று போலீஸ்காரர் பாமரரைத் தரையில் தள்ளினார். துடித்துப் போனேன் நான். துள்ளி எழுந்தார் பாமரர். அப்பொழுது தான் நான் முன்சொன்ன அதிசயம் நிகழ்ந்தது.



         கிழக்குப் பதிப்பகத்தில் 'க்ருஷ்ணகுமார்' எழுதியப் புத்தகங்கள் இருக்கிறதா என்றுக் கேட்டபோது, 'அப்படி ஒரு எழுத்தாளர் தமிழில் இருந்ததில்லை, இல்லை' என்று என்னை அடிக்காத குறையாகச் சொல்லி விரட்டியடித்தார்கள். அலையன்சில் வெள்ளைச் சட்டைப் பெரியவர் 'இப்போ க்ருஷ்ணகுமார் புத்தகங்கள் அசல் ரா.கி.ரங்கராஜன் பெயரிலே' வருவதாகச் சொல்லி மூன்று தலைப்புகளைத் தேடித் தந்தார். நான் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கியது அலையன்சில் தான்.



         ரு கிசு. கள்ளிக்காட்டு கவிஞர் 'நொபெல்' பரிசு பெறவேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக அறிந்தேன். யார் யார் சிபாரிசு வேண்டும், என்ன செய்தால் பரிசு கிடைக்கும் என்று பட்டியல் போட்டு விடாப்பிடியாக முயற்சி செய்கிறாராம். ஒபாமாவிடம் கேட்கக் கூடாதோ? ஒன்றுமே 'புடுங்காமல்' நொபெல் பரிசு பெற்றவராச்சே? கிண்டல் aside, கவிஞருக்கு இலக்கிய நொபல் பரிசு கிடைக்கட்டும். அவருக்கும் பெருமை, தமிழுக்கும் பெருமை.



         புத்தகக் காட்சியின் வணிகக் கசப்பை மறக்கடித்தது பதிவுலக நட்புக் கூட்டம். போகனைச் சந்தித்தேன் (மீனாட்சி: போகன் அசலாக இருக்கிறார், confirmed). ராஜகுமாரனைச் சந்தித்து உரையாடியது சுவாரசியம். ஜீவி சந்திப்பு பல விதங்களில் இனிமை. சந்திக்க இயலாத பலருடன் தொலைபேசினேன். சந்திப்பதாகச் சொல்லி சந்திக்க முடியாமல் போனவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். திருச்சியில் ரிஷபன், ராமமூர்த்தி, வெங்கட், கோவை2தில்லி, வைகோ, கீதா சாம்பசிவம் பதிவர்களைச் சந்தித்தேன். எவருடனும் அதிக நேரம் உரையாட முடியவில்லை. அடுத்த முறை. ஓ..மீண்டும் திருச்சி வந்தால் வைகோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வைகோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். காணக் கண் கோடி வேண்டும்.



         வர்கட் புலம்பல். மாமா.. நம்ம டிவியில படம் தெரியலேனா கேபிள்காரங்க கிட்டே புலம்பலாம்.. கேபிள் கம்பெனியிலயே பவர் கட்டுனா அவங்க யாரைப் பாத்து புலம்பி ஆறுதல் அடைவாங்க மாமா?