2013/04/23

சரிகைச் சாயம்
    ன் 1980களின் இரட்டைபாத் வட்டம்.

    நேன்ஸ்: குடும்பத்தின் ஒரே வாரிசு. அப்பா வடபழனி ஆண்டவரை வைத்துப் பணம் பண்ணிய சினிமாத் தயாரிப்பாளர். இறந்து பிறந்த முதல் பிள்ளைக்குப் பிறகு வந்தவன் நேன்ஸ் என்பதால் வீட்டில் செல்லமோ செல்லம். டான் பாஸ்கோ, லயோலா, லன்டன் பிசினஸ் ஸ்கூல் என்று சுறுசுறுப்பாகப் படித்தவன். இடையே, அப்பாவின் சின்னவீட்டுக் கதாநாயகி பெரிய வீட்டுக்கு வந்ததும் அவளுடன் சுலபமாகப் பழகி, தள்ளி வைக்கப்பட்ட முதல் தார அம்மாவின் 'புத்திர புருஷ விவாக சோக'க் கோழைத்தனத்தை வெறுப்பது போல் நடந்துகொண்ட, பிழைக்கத் தெரிந்தவன். இருபத்தொரு வயதானதும் சொத்துக்களைப் பிரித்தளிக்க அப்பன் மீது வழக்கு போட்டவன். மறுத்த அப்பனையும் சின்னவீட்டையும் ஆள் வைத்து ரகசியமாகக் கடத்திப் போய் அடித்து நொறுக்கியவன். வழக்கில் வெற்றி பெற்றதும் அம்மாவுக்கு லட்சக்கணக்கில் பணமும் திருப்பரங்குன்றத்தில் வீடும் கொடுத்து, 'இனியாவது உனக்காக வாழ்ந்து ஒழிந்து போ' என்று உறவைத் துறந்தவன். விரும்பிக் காதலித்த 'தானைத் தலைவர்' பெண்ணைக் கடைசி நிமிடத்தில் கைவிட்டத் துணிச்சல்காரன். சினிமாப் பக்கமே போகாமல் தனக்கெனப் பாதை வகுத்துக் கொண்டத் தீவிர உழைப்பாளி. இன்றைக்கு இந்தியாவில் பெரிய கை. அத்தனை வெற்றியிலும் ஒரு ஊனம். சாபம் போல்.

    உமேஷ்: பெருஞ்செல்வந்தப் புத்திரன். நகரின் பாதி ஹோட்டல்கள் அவன் குடும்பத்துக்குச் சொந்தம். அவன் பெற்றோரின் பேகம்பேட் வீட்டில் இல்லாத வசதி இல்லை. கிடைக்காத லாகிரி இல்லை. அவனும் அவன் சகோதரர்களும் அடிக்காதக் கூத்து இல்லை. உருதும் இந்தியும் கலந்து அவன் பேசும் தமிழ், கேட்கப் போதையாக இருக்கும். கஜல் பாடல்களின் நுண்மையை எங்களுக்கு அறிமுகம் செய்தவன். ஹூக்கா பிடிக்கச் சொல்லித் தந்தவன். அம்ஜத்தின் 'ஜன்னத் யஹிஹை யஹிஹை' இரட்டைக்கிளவிக் கவிதையை இரட்டைப் பொருளுடன் படித்தவன். ஹோலி நாட்களில் பாங்க் அருந்தும் லாவகத்தைச் சொல்லித்தந்த குரு. வாரங்கல் RECன் தலைசிறந்த மாணவன். ஸ்விட்சர்லேந்தில் மேற்படிப்புப் படித்தவன். என் வட்டத்திலேயே அதிகம் முன்னேறக்கூடியவன் என்று நம்பப்பட்டவன். மிக நொறுங்கிப் போன ஒரு தருணத்தில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று நம்பி ஒரு வாரம் என்னை நிழல் போலத் தொடர்ந்து, இரவு தூங்கும் பொழுதும் என்னருகே விழித்தபடி இருந்த லட்சுமணன். பின்னாளில் அவன் தற்கொலை செய்து கொள்வான் என்றுத் தெரிந்திருந்தால் அவனை விட்டு விலகி வந்திருக்க மாட்டேன்.

    ரங்கன்: மாரட்பல்லி வாசி. தீவிரத் தென்கலை. நாற்பது வயதுக் காலத்தில் திருமணம் செய்து கொண்டப் பெற்றோருக்கு, பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்தவன். அப்பாவின் பெற்றோர் தெற்கே காஞ்சிபுரம். அம்மாவின் பெற்றோர் கிழக்கே புருலியா. தமிழ், தெலுங்கு, உருது, பெங்காலி என்று சரளமாகத் திட்டத் தெரிந்தவன். வீட்டில் அவனுடைய அறை தவிர எங்கும் விஷ்ணு மயம், விஷ்ணு மணம். ஸ்ரீவித்யாவுக்கே தெரியாத ஸ்ரீவித்யா படங்கள் சில அவனுடைய அறைச் சுவற்றில் தொங்கின. "ப்ச்.. என்னுடைய சோல் மேட், காலம் குலம் மாறிப் பொறந்துட்டா" என்பான். இடது கையால் சிகரெட் பிடித்தபடி வலது கையால் அவன் விஸ்கியருந்தும் அழகைப் படம் வரையலாம். போதையேறியதும் அச்சாகப் பிபிஸ்ரீ குரலில் பாடுவான். 'ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து?' என்று ஸ்ரீவித்யா போஸ்டரைப் பார்த்துப் பாடும் பொழுது நெகிழ்ச்சியாக இருக்கும். சில நேரம் சேக்சபோன் வாசிப்பான். 'கண்ணே... தேடி வந்தது யோகம்..' என்று அனேகமாக யாரும் கேட்டேயிருக்க முடியாத மெல்லிய ஜேஸ் மெட்டு. முதுகலை பிலாசபி படித்துவிட்டு எங்களுடன் அநியாய விலைக்கு fmcg கேஸ் கணக்கில் விற்றுத் திரிந்தான். காதலில் அரங்கனுக்கும் ஆசான். சுலபமாகச் சிரிக்க முடிந்த இவன் வாழ்வில் விழுந்த மகத்தான இடி.. என்றைக்கும் நெஞ்சைப் பிளக்கும்.

    வெங்கட்: சென்னையின் புகழ்பெற்ற டாக்டர் தம்பதிகளின் இரண்டாவது மகன். (முதல் மகனும் இப்போது புகழ் பெற்ற சாதனையாளர்). வெங்கட் அதி புத்திசாலி. நெடிதுயர்ந்த வலிமையான அழகன். உயர்தர உள்ளாடை மேலாடைகள் அணிவான். டேக் ஹைர் கைக்கடிகாரம் அணிவான். பைப் பிடிப்பான். வாட்கா அருந்துவான். சுத்த சைவம். முட்டையைப் பார்த்தாலும் அவனுக்குக் குமட்டும். வாட்காவுக்கு காய்ந்த நார்த்தங்காய் கடித்த ஒரே ஆசாமி. சைவம் என்று பார்த்தால் ஒரு நாள் மீன் சாப்பிட்டான். கேட்டால், "மீன் சைவம் தானே?" என்றான். எங்களோடு நெருங்கிப் பழகுவானே தவிர அதிகம் பேசமாட்டான். ஜெனடிக் ரிசர்ச் புத்தகங்கள் படிப்பான். தினம் ஒரு பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபாய் தருவான். காதல் விஷயத்தில் ஆண்களை விரும்புவான். அம்மாவை அணைத்தபடி நின்ற ஒரு புகைப்படத்தை தன் அறையில் வைத்திருப்பான். ஜமுனா பருவா சாயலில், இன்னும் அழகாக இருப்பார். தன் homosexual சார்புக்கும் விருப்பங்களுக்கும் அம்மாவே காரணம் என்று நம்பினான். freudian epitomy. வேறே கதை.

    விஜய்: அதிகமாக விளிம்பைத் தள்ளும் நபர் எங்கள் வட்டத்தில் உண்டென்றால் அது விஜய். அந்த நாளிலேயே நீலச் சாயமடித்த முடியோடு மார்கெட் விசிட் வருவான். கடுக்கண் அணிந்திருப்பான். விரைவில் அமெரிக்கா குடியேறப் போவதால் அவனை எல்லோரும் ஆவென்று பார்ப்போம். lovedaleல் படித்த பிள்ளை. ஆங்கிலத்தில் பிளந்து கட்டுவான். IIFT பந்தா காட்டுவான். sharp wit. இந்தி மலையாளம் தெலுங்கு என்று பாடுவான். அவ்வப்போது அவனுடைய இளவயது அத்தையை யாருக்கும் தெரியாமல் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து என் அறையைக் கடன் வாங்கி, உரத்தக் காமத்தில் ஈடுபடுவான். "என்னடா இது.. உங்க அத்தையைப் போடுறியே?" என்று அருவருப்போடு கேட்பான் ரங்கன். "சும்மா இருடா ஸ்ரீரங்கம். இவ ஒண்ணு விட்ட அத்தை.. என்னை விட மூணு வயசுதான் பெரியவ.." என்று ஒருமுறை அவன் உறவை விளக்கியபோது எங்களுக்குத் தலை சுற்றியது. செயல்வீரன். எனினும், நிறைய கனவுகளைக் கவிதையாக எழுதி வைத்திருந்தான். ஒரு தவறான திருப்பத்தில் அவன் வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாகிப் போனது.

    வத்சன்: மங்களூரின் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். கலெக்டர் அப்பா, கைனகாலஜிஸ்ட் அம்மா. ஒரே பிள்ளை. வீட்டில் வேலைக்கிருந்த க்ரேஸ் லட்சுமி அவனுக்கு எல்லா விதத்திலும் குரு. பதினாறு வயதில் க்ரேஸ் லட்சுமியின் ரவிக்கையைக் கழற்றி ப்ரா தழுவிய மார்பைத் தொட்டதை இன்னும் சிலாகிப்பவன். டாக்டருக்குப் படிக்கச் சொன்ன பெற்றவர்களை "வற்புறுத்தினால் கொலை விழும்" என்று மிரட்டித் தன் விருப்பப்படி ஆங்கில இலக்கியம் படித்தவன். மணிப்பூர் கல்லூரியில் தங்க மெடல் மாணவன். ஐஏஎஸ் எழுதித் தோற்ற சோகத்தில் தற்கொலை செய்யத் துணிந்து, தெளிந்து, வாழ்க்கையின் விரிந்து பரந்த வாய்ப்புக்களின் நியாய பேதங்களைக் கண்டறிந்தவன். அவனுடைய இருபதாவது வயதில் அப்பா அம்மா இருவரும் ஒப்பந்தம் செய்தாற்போல் இறந்ததும், அத்தனை சொத்துக்களையும் விற்றுக் காசாக்கி வங்கியிலும் வணிகத்திலும் முதலீடு செய்து பணக்கவலையைத் துறந்தவன். ஆண்கள், பெண்கள் இருவரையும் பட்சம் பாராது விரும்பியவன். அசாத்தியத் துணிச்சல்காரன். எதையும் செய்யக்கூடியவன். அதில் தான் நெருடல்.

    நான்: இளகிய மனதுடையவன். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவன். மனித நேயத்தில் நம்பிக்கை வைத்தவன் - இப்படியெல்லாம் எதுவும் சொல்ல முடியாதவன். என் வாழ்வின் போக்கிற்கு என்னைத் தவிர யாரையும் எதையும் நம்பாதவன். சாதிக்க நினைத்த எதையும் தவற விடாதவன். குறிக்கோள்களை அடையும் வரை உழைக்க அஞ்சாதவன். என் வெறுப்புகளை பெரும்பாலும் என்னுள்ளே அடக்கினாலும், மறக்காதவன். வெளிப்படுத்துகையில் கொடுமையானவன். என் எட்வர்ட் ஹைடை இளமையிலேயே அறிந்தவன். சாகும்வரை வெளியிடாமல் பிடித்திருக்க நினைப்பவன். மேலாண்மைப் படிப்பினால் கிடைத்த பல சமூக மேம்பாட்டு வேலைகளை ஒதுக்கி, பன்னாட்டு நிறுவனம் வழங்கிய பணப்பெட்டி வேலையை எடுத்துக் கொண்டவன். என் வகுப்பிலேயே அதிக சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்த பெருமையில் நான் கொடுத்த பார்ட்டி, ஜோகாவின் வரலாற்றில் இடம்பெறும். பார்ட்டிக்கு வந்த என் வருங்கால மேனேஜருடன் கஞ்சா அடித்தும் கலவி புரிந்தும் ஏற்படுத்திக் கொண்ட நட்பை, மேனேஜர் சமீபத்தில் HIV நோயில் சாகும் வரைத் தொடர்ந்தவன். நட்புக்களின் நாணயமான காதலன். சில கூடா நட்புக்களின் முகம் மறைத்ததைக் கண்டறியாதது என்னுடையப் பேதமை.

    நாங்கள் அனைவருமே ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்து பயிற்சி முகாமில் எதிரெதிர் அறையில் தங்கி நண்பர்களானோம். பயிற்சி முடிந்து நானும் வத்சனும் இரட்டைபாதின் தற்காலிக வாசிகளானதும், முஷிராபாத் நாற்சந்தியருகே உயரமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அனைத்து வசதிகளும் பொருந்திய பெரிய அபார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தோம். நேன்சும் வெங்கட்டும் மாதத்தில் பத்து நாள் தங்குவார்கள். அவர்களைத் தவிர உள்ளூர் வாசிகளான உமேஷ், விஜய், ரங்கன் மூவரும் கொட்டமடித்தது எங்கள் வீட்டில் தான். மாமிசம் மதுபானங்களிலிருந்து அவ்வப்போது மதனசுக மயக்கசுக சமாசாரங்களும் எங்கள் வீட்டில் கிடைக்கும்.

ப்ப்பெரிய கம்பெனியின் அதிகாரிகள் என்பதால் எங்களுக்கு நகரில் கணிசமான செல்வாக்கு இருந்தது. போதாக்குறைக்கு நானும் வத்சனும் 'வெளியுறவு அரசர்கள்' எனலாம். extrovertக்கும் கொஞ்சம் extraவாகவே இருந்தோம். ஸ்டாக்கிஸ்ட் தயவில் தினம் யாராவது பெரிய ஆசாமி, நவாப் வம்சாவளி, பெத்த ரெட்டிகாரு, விளையாட்டு வீரர், மாடல், இரண்டாம் தட்டு சினிமா நடிகை, முக்கியமாக இரண்டாம் தட்டு சினிமா நடிகை, என்று ஏதோவொரு நட்பு கிடைக்கும். கையில் ஐநூறு ரூபாயாவது சில்லறையாக இருக்கும். தெலுங்குப் படப்பிடிப்புக்கு அவ்வப்போது வந்த ஒரு பூமகள் நடிகை, அந்த நாளில் ஒரு இரவுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் என்றக் கணக்கில், கணக்கிலாத படுக்கையறை இனிமைகளை வழங்க வசப்படுவார். பெற்றுக் கொண்டிருக்கிறோம். ménage à trois, group grope, you name it.

எங்களுக்கிடையே போலித்தனம் வேஷம் எதுவும் இல்லாத 'வாழு, வாழ விடு' வகைப் பந்தம் இருந்தது. ரத்தம் கலந்த நட்பு இருந்தது. நாங்கள் எல்லாருமே work hard, play hard ரகம். intellectual type வேறே. ஓய்வுபெற்ற மிலிடெரித் தாத்தாக்களின் வம்சாவளிப் பெண்கள், இரட்டைபாத் க்ளப் உறுப்பின அந்தஸ்தினரின் படாடோப வாரிசுகள், வசதி படைத்த ரெட்டிகாருகளின் பொழுது போகாத இல்லத்தரசிகள், தம் மாரோ தம் கலாசாரத்தை இன்னும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்த சூபி ஹிப்பிகள், social eliteகள்... என்று யாவரும் கேளிராவதற்கு எங்கள் intellect சுலபமாக தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க, எங்கள் வயதும் துடிப்பும் வேலையற்ற மதியங்களும் அத்தொடர்புகளை கவர்ச்சியாக வலுப்படுத்தின.

    காதலில் கொடுத்த முத்தங்கள் போல் கரைந்து போன வருடக் கணக்கு.

மறந்து போன வாசனைகளாய்.. வெட்டுப்பட்டு துடிக்கும் பூரான்களாய்.. சல்லடை கிழிந்து கொட்டிய மாவாய்.. மின்னலாய்க் கிழிக்கும் கனமான நினைவுகள்.

எங்களின் கண்ணாடி நகரம் கல்லடியிலும் காற்றிலும் மாறிவிட்டது. கலவியின் இடையே வந்த மாரடைப்பாய் திடீரென்று எல்லாம் நின்று, நிலைமாறி, போர்ப் பதட்டத்தில் இழுத்தெறியப்பட்டக் குடும்பம் போல் சிதறினோம்.

என் வட்டத்தில் மூவர் இன்றைக்கு உயிரோடு இருக்கிறோம்.

இப்போது இரட்டைபாத் எங்கும் ஒளிரும் புதுச்சாயம்.. சாயத்தின் நடுவே எங்கள் வட்டம், குறுக்கே வந்து போன கோடுகளின் சுவடுகளாய்.. சுமையாய்.. ரணம் காய்ந்து.. மங்கிய சாயங்கள் இன்னும் நிழலாய் புகையாய் அணுவாய் நிறைந்திருப்பதை.. தினம் வெளுத்துப் பழுக்கும் சாயங்களின் இடையே சரிகைகளின் முன்னாள் பளபளப்பு அவ்வப்போது நெருடித் தரும் சோகமும் இதமும் வலியும் நிறைவும்.. மறுக்கமுடியாது. மறக்கமுடியாது. சொல்லி மாளாது.

      யாழ்     

2013/04/20

என்னவோ நடக்குது


    நாயகன் அமெரிக்க ராணுவ அதிகாரி. அவனுக்கு ஒரு விஞ்ஞானி நண்பன். வி.ந ஒரு பெரிய நுட்பத்தைக் கண்டுபிடிக்கிறான். உலக நகரங்கள் மக்கள் அனைத்தையும் அனைவரையும் இணைக்கும் நுட்பம். திடீரென்று விஞ்ஞானியைக் காணவில்லை. சந்தேகம் கொண்ட போலீசார் விஞ்ஞானியின் வீட்டில் தேடிய போது, சலவைக்கணக்கில் வராத ரத்தக்கறையும் போராட்டத்துக்கான தடயங்களும் நாயகனின் உடைமைகளும் கிடைக்கின்றன. நண்பனைக் கொலை செய்ததாக நாயகன் மீது வழக்கு தொடரப்படுகிறது. சாட்சி விசாரணை எல்லாம் முடிந்து, குற்றவாளி என்றத் தீர்ப்பும் வழங்கப்படுகிறது. தான் வடிகட்டின நிரபராதி என்கிறான் நாயகன். அவனுடைய குரலை அழுத்தி ஒதுக்கி மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.

நாயகனின் நெருங்கிய நண்பன் ஒருவன் இதை நம்பவில்லை. நுட்பத்தைப் பயன்படுத்த நீதிபதியிடம் அனுமதி பெற்று அதை வைத்துக் கொண்டே நாயகன் நிரபராதி என்று நிரூபிக்க முனைகிறான். நுட்பத்தின் துணையுடன் உலகம் முழுதும் இராப்பகலாகத் தேடுகிறான். தண்டனை நிறைவேற்றப்பட சில நிமிடங்களுக்கு முன் சைனாவிலிருந்து ஒரு செய்தி கிடைக்கிறது. கொலையுண்டதாகக் கருதப்பட்ட விஞ்ஞானி ஷேங்ஹாயில் குஜாலாக இருப்பதாக. படமும் விடியோவும் எடுத்து அங்கிருந்தே தகவல் பரவுகிறது.

நீதிபதி வாயைப் பிளக்கிறார். அசல் குற்றவாளியை விட்டு நாயகனைச் சிறைப்படுத்தி தண்டனை வழங்கியதற்காக மன்னிப்பு கேட்கிறார். நாயகனுக்கு ஆகஸ்டு பதினைந்து. சுபம்.
   
    மேற்சொன்னது கதைச்சு.

விருது பெற்ற கதை. இன்றைய இந்டர்னெட் யுகத்தின் வசதிகளில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பிறகு இந்தக் கதைக்கு ஏன் பொன்னாடை பணமுடிப்பெல்லாம்?

புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆகவில்லை. டெலிபோன் கண்டுபிடிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகவில்லை. 'ஓடும் படம்' கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகவில்லை. விடியோ கண்டுபிடிக்க இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும். இணையம் கண்டுபிடிக்கப்பட இன்னும் எழுபது ஆண்டுகள் ஆகும். இணையம் பரவ இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும். உலக மக்கள் அனைவரையும் கனகாலத்தில் இணைக்கும் நுட்பம் பற்றிய விவரம் செறிந்த கற்பனைக்கான விருது பெற்றச் சிறுகதை வெளிவந்தது 1898ல்.

முழுச் சிறுகதையை இணையத்திலோ நூலகத்திலோ படிக்கலாம்.
கேள்வி 1: சிறுகதை எழுதியவர் யார்?    சுசேனாவுக்கு வயது நாற்பத்து மூன்று. அவருடைய மகள் மரியாவுக்கு வயது இருபத்து மூன்று. மரியாவின் மகள் மிகேலாவுக்கு வயது மூன்று.

"பேத்தியைப் பார்த்துக்கொள், டாக்டரிடம் போய் வருகிறேன்" என்று சொல்லிப்போன மரியா வீடு திரும்பவில்லை. திடுக்கிட்டு நடுங்கிப் போன சுசேனா எல்லா இடங்களிலும் தேடுகிறார், போலீசிடம் சொல்கிறார், தெரிந்தவர்களிடம் உதவி கேட்கிறார் - பயனில்லை. மரியாவைக் காணோம்.

தானே தேடத் தீர்மானித்தார். மரியாவை அழைத்துச் சென்ற டேக்சி டிரைவரைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறார். மரியாவைக் காசுக்காக ஒரு சிவப்பு விளக்குத் தரகன் கடையில் இறக்கி விட்டதாகச் சொல்கிறான் டிரைவர். 'உன்னால் இப்ப அவளை எதுவும் கண்டுபிடிக்க முடியாது கிழவி' என்கிறான்.

சுசேனா விடவில்லை. பேத்தியைக் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு பெண்ணைத் தேடும் படலத்தில் இறங்கினார். இளம்பெண்களை விலைக்கு வாங்கி விபரீதப் பாலியல் குற்றங்களை வற்புறுத்தி செய்யச் சொல்லும் கொடுமையான உலகத்தை அறிந்து வெலவெலத்துப் போனார். 'ஐயோ! என் மரியா இங்கே, இவர்கள் கையில், எங்கோ இருக்கிறாளே! என்ன செய்வேன்!' என்றுத் துடித்துப் போனார்.

தாயின் மனம் துருப்பிடிக்காத இரும்பிலானது என்ற ரகசியம் பலருக்குத் தெரியாது. அடிபட்டத் தாயின் மனமோ இரும்புச் சுரங்கம். வெளியிலிருந்து தேடினால் பயனில்லை என்பது புரிந்து, குற்றவாளிகளுடன் கலந்து தேடத் தீர்மானித்தார். இளம்பெண்களை வாங்கி விற்பது போலத் துணிச்சலோடு நடிக்கத் தொடங்கினார். அந்தப் பாவனையில் நாட்டின் அத்தனை சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கும் ஒவ்வொரு இடமாகச் சென்றார். கிடைத்த இளம்பெண்கள் சிலரை வாங்கி, எவருக்கும் தெரியாமல் நல்வழியில் போக உதவி செய்தார்.

தன் தூய நிழல் தன்னைக் காட்டிக் கொடுத்து விடாதபடி மிகக் கவனமாக இருந்த சுசேனா, இருபது வருடங்களாக தன் பெண் மரியாவைத் தேடித் தேடி இளைத்தாலும் அந்தத் தேடலின் விளைவாக நூற்றுக்கணக்கான இளம்பெண்களை மீட்டு நல்வழியில் திருப்பினார். இந்தத் தேடலில் தன் சொத்துக்கள் அத்தனையும் விற்று ஓட்டாண்டியானதைப் பற்றிச் சிறிதும் வருந்தவில்லை. எத்தனையோ மரியாக்கள் மீட்கப்பட்டனர் என்ற நிறைவை எந்த சொத்தும் ஈடுசெய்யமுடியாது என்கிறார்.

சுசேனாவுக்கு இப்போது அறுபது வயது. இன்னும் மகள் மரியாவைத் தேடிக்கொண்டிருக்கிறார். படித்த வாலிபரான பேத்தி மிகேலாவின் உதவியோடு. 'என் மரியா.. என் செல்வம் இன்னும் உயிரோடு எங்கோ இருக்கிறாள்' என்று, பால் ஈந்தத் தன் மார்புகளில் அடித்துக்கொண்டு இன்னும் தேடுகிறார்.

    'Women of Courage' எனும் அமெரிக்க அரசின் விருதைப் பெற்ற சுசேனா, 2012ல் நொபெல் அமைதிப் பரிசுக்காக நியமிக்கப்பட்டார். கிடைக்கவில்லை. (ஒபாமாவுக்கு விருது கொடுத்த பிறகு, இனி அசல் சாதனையாளர்களுக்கு விருது வழங்குவதில்லை என்றத் தீர்மானத்துக்கு நொபெல் நொண்டிகள் வந்திருக்கலாம்).

ஆனால் அவருடைய நாட்டின் மிகப்பெரிய விருதும் பணமுடிப்பும் சுசேனாவுக்குக் கிடைத்தது. பாலியல் தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் சிறுமிகளை மீட்கும் பணியில் பணத்தைச் செலவிட அப்படியே கொடுத்துவிட்டார்.
கேள்வி 2: சுசேனா எந்த நாட்டவர்?    டைலரின் நெருங்கிய நண்பன் மூர் திருமணத்தை நடத்தி வைக்க, டைலரும் பெதனியும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்ததும் டெக்சஸ் வந்தார்கள். புதுமனை குடிபுகுந்தார்கள். புகுந்ததும் பார்த்தால் வீட்டில் இருபது முப்பது ஆண்கள். ஐந்தாறு பெண்கள்.

கேள்வி கேட்ட பெதனியிடம், "நாமெல்லோரும் சேர்ந்திருக்கப் போகிறோம். இது கடவுளின் ஆணை" என்றான் டைலர். "ஆமாம், என் நண்பனின் மனைவியே" என்று அவளை அணைத்தான் மூர்.

சில மாதங்களுக்குள் பெதனி இறந்தாள். அவள் படுக்கையருகே இருந்தத் தூக்கமாத்திரைப் புட்டிகளை வைத்துத் தற்கொலை என்று தீர்மானித்தார்கள். அவள் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, பெதனியைக் கொலை செய்ததாகச் சொல்லி மூர் போலிசில் சரணடைந்தான்.

டைலரும் மூரும் கிறுஸ்தவ மதத்தின் ஒரு தனிப்பிரிவைச் சேர்ந்தவர்கள். International House of Prayers என்றக் குழுமம். இந்த IHOPல் 'பரமபிதா பரமபிதா' என்று ஜபித்தபின், இருந்த ஆறேழு பெண்களை இருபது முப்பது ஆண்கள் 'படுக்கவா படுக்கவா' என்றுக் கூட்டமாக ஜபித்திருக்கிறார்கள். இது ஒரு மதச் சார்புள்ள குழு என்பதால் யேசுவின் அருள் கிடைக்கும் என்ற சாக்கில், சாக்கடையில் விரும்பி விழுந்திருக்கிறார்கள். பெதனியையும் மற்ற பெண்களையும் போதை மருந்து கொடுத்து, தினசரி மூன்று வேளை ஜபம் முடிந்ததும் அத்தனை ஆண்களும் கூட்டுப் பிரசாதமாக ஏற்பார்களாம்.

டைலருக்கும் மூருக்கும் என்ன சண்டையோ, மூர் எல்லாவற்றையும் சொல்லிச் சரணடைந்தான். மற்றவர்களும் பிடிபட்டார்கள்.

'கடவுளை நம்பினார் கைவிடப்படார்' என்ற நம்பிக்கையோடு சிறையிலிருக்கிறான் மூர். 'நான் கடவுளின் ஆணைப்படி நடந்தேன். இது குற்றமென்றால் யேசுவின் கருணை மழையில் அது கழுவப்படும்' என்கிறான் டைலர் கூசாமல். 'ஆமென்' என்கிறார்கள் IHOPகாரர்கள்.

    சென்ற ஆண்டின் ஆத்திக அசிங்கங்களில் ஒன்று. அமெரிக்காவில் இப்படியெல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் வசதியாக 'அமுக்கி வாசிக்கப்பட்ட' வழக்கு.

சிறையில் வாடும் (?) ஆண்களுக்காக ஒரு மாதா கோவில் அமைத்துக் கொடுத்திருக்கிறதாம் IHOP அமைப்பு. இருவரும் அன்னை மேரியிடம் தினம் பிரார்த்தனை செய்கிறார்களாம். புனித மகனின் அருளுக்காக. இவர்களுக்கு ஆதரவாக, IHOP சார்ந்த 'பரிசுத்த ஆவித் தோத்திர மையம்' ஒன்று கிளம்பியிருக்கிறது.

சிரிப்பதா, அழுவதா, எழுவதா?
கேள்வி 3: பரிசுத்த ஆவியினால் பலனுண்டா?    காதல் என்றாலே கிளுகிளுதான். இந்த வயதில் எனக்கே இப்படியென்றால் இளவயது அலெக்ஸ், லீசாவுக்கு எப்படி இருக்கும்?!

அலெக்சும் லீசாவும் ஹைஸ்கூலில் பழகத்தொடங்கி, பிரிந்து மறந்து, ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் பழகத்தொடங்கிக் காதல் வயப்பட்டார்கள். கல்லூரி, கடன், வேலை என்று பத்து வருடங்களுக்கு மேல் இருவரும் வெவ்வேறு இடங்களில் அல்லாடினாலும், காதல் திரட்டுப்பால் போல் கெடாமல் இனிப்பாகவே இருந்தது. படிப்புக் கடன் அடைத்ததும் இருவரும் வழக்கமாகச் சந்திக்கும் ரெஸ்டாரென்டில் சாப்பிடுகையில், லீசாவுக்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது. விளையாட்டு எரிச்சலோடு அலெக்சைக் குடைந்தாள். "ஆமா, என்னைக் காதலிச்சுகிட்டே இருந்தா எப்படி? ஒரு கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்னவாம்? அடுத்த மாசம் எனக்கு முப்பது வயசாப் போகுது"

"ஒரு கல்யாணம் தானே?" என்ற அலெக்ஸ், திடீரென்று மிக நெருங்கி வந்து அவளைக் கட்ட்ட்டிப் பிடித்தான், பொதுப் பார்வையில். சற்றே வியந்து வெட்கப்பட்டுக் குனிந்த லீசாவின் முகத்தை நிமிர்த்திக் கண்களைப் பார்த்தான். "உன்னோட முப்பதாவது பிறந்த நாளன்னிக்கு கல்யாணம் செஞ்சுக்குவோம். ஆனா ஒரு கல்யாணமில்லே.. முப்பது கல்யாணம்.. என்ன சொல்றே?" என்றான்.

திக்குமுக்காடிப் போனாள் லீசா. "முப்பது கல்யாணமா?"

"ஆமாம்.. உன் மேலே எனக்கு அவ்வ்வ்வளவு காதல்! உன் முப்பதாவது வயது முழுக்க உலகம் சுத்துவோம். முப்பது கலாசாரங்களில் நம்ம கல்யாணத்தைச் செஞ்சுக்குவோம்.. சரியா?"

"இந்த செலவுக்கெல்லாம் காசு?"

"சேத்து வச்சிருக்கேண்டி என் செல்லமே" என்ற அலெக்ஸ், பட்ஜெட் போட்டுக் காட்டினான்.

"இதென்ன? உதட்டுலயா பட்ஜெட் போடுவாங்க?" என்று சிணுங்கினாள் லீசா.

    உலகம் சுற்றிய வாலிபர்கள் இருவரும் முப்பது கல்யாணங்கள் செய்துகொண்டு, லன்டன் அருகே சுபமாகப் பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

கல்யாணத்துக்குக் கல்யாணம். தேனிலவுக்குத் தேனிலவு.

(அலோ.. உங்களைத்தான்..போட்டோவையே பாத்துட்டிருக்க வேண்டாம்..)

கேள்வி 4: இந்தப் படத்தில் இருக்கும் அலெக்சும் லீசாவும் எந்த நாட்டுக் கலாசாரத்தைப் பற்றியிருக்கிறார்கள்?
    ன்னொரு குடும்பம் இந்தியா போகிறது. சில வருடங்களாகவே திட்டம் போட்டு வந்தாலும் 'இப்போ போறேன் அப்போ போறேன்' என்று இழுத்துக் கடைசியில் இந்த வருடம் அமெரிக்காவுக்கு டாட்டா சொல்லத் தீர்மானித்திருக்கிறார்கள். தற்காலிக டாட்டாவா என்பது போகப் போகத் தெரியும்.

இந்தியா திரும்பி நன்றாக வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். "இந்தியாவா.. சனியன்.. அங்கே மனுசன் இருப்பானா?" என்று, போன வேகத்திலேயே திரும்பியவர்களுக்கும் இருக்கிறார்கள் (உதாரணத்துக்கு எங்கேயும் தேட வேண்டியதில்லை. 2003ல் நானும் அப்படி முயன்றவன்). இவர்கள் எப்படியோ?

இந்தியாவில் இடம், பள்ளிக்கூடம், கல்லூரி, வங்கிக்கணக்கு எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டார்கள். செட்டிலானதும் வேலை தேடப் போகிறார்களாம். எனக்குத் தெரிந்தவரையில் இங்கிருந்து போகிறவர்கள் வேலை தேடுவது பெரும் போராட்டம் என்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் நல்லபடியாக அமையட்டும்.

இங்கே வீட்டுப் பொருட்களை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். "பழைய நகை பணம் ஏதாவது இருந்தால் பாதி விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். சிரித்தார்கள். சிரிப்பானேன், இங்கே என்ன ஜோக்கா சொல்லிட்டுத் திரியறாங்க?

    "இந்தியாவில் சுலபமாக வேலை கிடைக்குமா தெரியவில்லை. கிடைத்தாலும் இங்கே இருந்துப் பழகிய உங்களுக்குப் பொருந்தி வருமா தெரியாது, அதனால் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கி நடத்துங்கள்" என்றேன்.

நாளைக்கு அவர்கள் அப்படித் தொடங்கினால் எனக்கும் ஒரு வேலை போட்டுக் கொடுங்கள் என்று கேட்கலாம் பாருங்கள் :-)
கேள்வி 5: யார் இவர்கள்?


பிபிஸ்ரீக்கு சிறிய அஞ்சலி.


1. மார்க் ட்வெய்ன். (telectroscope என்றக் கற்பனைக் கருவியை உருவாக்கி அதன் நுட்பத்தையும் விளக்கியிருக்கிறார் ட்வெய்ன். இதனை அடிப்படையாகக் கொண்டு அசல் telectroscope ஒன்றை லன்டனில் நிறுவியிருக்கிறார்கள். அங்கிருந்து ந்யூயோர்க் நகரை பைனாகுலர் போலப் பார்க்க முடிகிறதாம்!)
2. அர்ஜன்டீனா. (சமீபத்தில் சுசேனாவுக்கு 'உலக மனித உரிமை காவலர்' விருதை வழங்கியிருக்கிறார் அர்ஜன்டீனா நாட்டு அதிபர். மரியாவை இன்னமும் தேடினாலும், அவளைக் கடத்திய குற்றத்துக்காக, டிரைவர் உட்பட, பதிமூன்று பேரைக் கோர்ட்டில் நிறுத்தியிருக்கும் சுசேனாவுக்கு ஜே!)
3. உண்டு. உதாரணத்துக்கு.. இட்லி வேக பரிசுத்த ஆவி தேவை.
4. கொலம்பியா. (ம்ம்ம்.. கல்யாண ஆசை வந்தக் காரணத்தைச் சொல்லவா?)
5. நான் சொல்லமாட்டேம்பா. (க்ளூ: எனக்குத் தெரிஞ்சு, புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் டிஎம்எஸ் பைத்தியம்!)


2013/04/12

புலம்பற்பா


யார் வேண்டுமானாலும் புலம்பலாம்.


பற்றியவன் பிள்ளைகள் உற்றவரைப் பேணியே
வற்றலாகிப் போகுதெம் பெண்ணினம் - சிற்றெலும்புப்
போடச் சிறுநாயும் காட்டுமே பன்றிகளாம்
ஆடவர் ஆளாத பண்பு.


ஆளாத: பெறாத, கொள்ளாத, பயன்படுத்தாத


சேயும் சகோதரியும் தாரமும் தாயுமிவர்
ஓயாப் புலம்பல் உயிர்ப்பிடுங்கி - பேயா
அறியும் அரைக்காசுத் தேடிவரும் ஆணின்
சொறிநாயும் பட்டிராதப் பாடு?


தீய்ந்துபோன ரொட்டியும் தின்றமிச்சச் சோறுமிவர்
வாயிலாதோர் என்றெறியுங் காரணத்தால் - காய்ப்புகளின்
சொல்லடியும் கல்லடியும் நாயா படவேண்டும்?
இல்லையோ எங்களுக்கு மாண்பு?

காய்ப்பு:வெறுப்பு

2013/04/08

(மெல்லிசை) நினைவுகள்
    ர் திரும்பியதும் சில பாடல்களைத் தேடிக் கேட்க வேண்டியிருந்தது. அவசரமாக. காரணம் பிறகு சொல்கிறேன். இது முதலாவது பாடல்.
உய்மா உய்மா எ க்யா ஹோகயா..


    றக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஜேசுதாஸ் கச்சேரிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. குவைத் மைத்துனர் அருள். ஜேசுதாசின் கர்நாடக இசை எனக்குப் பிடிக்கும். இன்றைக்கும் குரல் பிசிறில்லாமல் அதே இளமையோடு இருப்பது, பாடும் பொழுது தெரிந்தது. சிலிர்க்க வைத்தது. கொஞ்ச நேரம் தான். அப்புறம் வித்வான்களுக்கேயுள்ள குளறுபடி. கர்நாடக இசை என்று அறிவித்துவிட்டு கர்நாடக இசையுமில்லாமல், இந்துஸ்தானியுமில்லாமல், மலையாள பக்திப்பாடல்கள் என்றுமில்லாமல், ஹிந்தி சினிமாப்பாடல் என்றில்லாமல், ஐயப்பன் பாடல்கள் என்றில்லாமல் - உப்புச்சப்பில்லாத அவியல். குரல்வளத்தை வைத்துக்கொண்டு "தாண்டு ராமா" விளையாடுகிறாரே என்று வருந்தினேன். மனிதர் ஒரு தமிழ்ப்பாட்டு கூட பாடவில்லை தெரியுமோ?

நடுவில் சண்டை வேறே. பாதிப் பாட்டின் போது (சரஸ சாமதான, ஜேசுதாஸ் நன்றாகவே பாடினார்), வரிசையில் இருந்த ஒருவர் செல்போனில் பேசத் தொடங்கினார். என் தம்பி ஏதோ சொல்லப்போய் அந்த நபர், "பஷ்டபால், டு யூ அன்டர்ஸ்டேண்டு வாட்டு ஹி இஸ் சிங்கிங்கு?" என்றார். "பன்னாடை, மூதேவி, பொறம்போக்கு நாயே, இங்லிஷ் வேறயா? செவிட்டுப் பொணமே. உனக்குப் புரியலேனா அடுத்தவனை கேக்க விடுறா.. கசுமாலம் தரித்திரம் பன்னி பன்னி" என்று சொல்லப்போன என்னைத் தடுத்து, என் தம்பி பண்புடன் ஏதோ சொல்லவே நபர் செல் மூடி அடங்கினார்.. கச்சேரி முடிந்து வெளியே வரும்பொழுது சண்டையாவது போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

    ப்லூமிங்டன் பயணத்தில் படித்தப் புத்தகம். இரண்டு பதிவெழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஆனால் எழுதப் போவதில்லை, போரடிக்கும். பாருங்கள், இது போன்ற புத்தகங்களைப் படிப்பது சிரமம். ஓகே, எனக்கு சிரமமென்றேன்.

இரண்டாம் பகுதியில் புத்தர் தோத்திரம் மதம் என்று ஆழமற்ற விஷயங்கள். மணிமேகலை தவிர. முதல் பகுதியில் நிறைய ஆழமான விஷயங்கள். 'அருமையாக இருக்கிறதே படிக்க' என்று பத்து பக்கம் புரட்டினால் பொசுக்கென்று இனப்பகை. பிராமண இனத்தைத் தமிழின் எதிரிகள் போல் பாவித்து எழுதுவது ஏனென்று புரியவில்லை. 'என்னவோ இவர்கள்தான் தமிழ் வளர்த்தார்கள் போல.. யாரிந்த மயிலை சீனி வேங்கடசாமி?' என்று தேடிப்பார்த்தால்.. அய்யோடா, பெர்ர்ரிய சாதனையாளர்! அடக்கிக் கொண்டு படித்து முடித்தேன்.

ப்ரம்மி எழுத்துக்களிலிருந்து ஐம்பெருங்காப்பியங்கள் வரையில் தமிழ் வளர்த்த பௌத்த மதம் பற்றிய நிறையக் குறிப்புகள். தமிழில் பாலி (ஆதி பௌத்த மொழி - தமிழ் நாட்டில் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது) மொழிக் கலப்பு பற்றிய பகுதி சுவாரசியம். புத்தகத்தின் தயவால் குண்டலகேசி கதை கிடைத்தது. பெரிய பலன்.

அவ்வப்போது வசதிக்கேற்றார்போல் சமணமும் பௌத்தமும் ஒன்றே என்ற வாதம் இடிக்கிறது. தமிழ் நாட்டின் பல்வேறு ஊர்களில் இருக்கும் சமண பௌத்த இடங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பிள்ளையார் கோவில் பற்றிய விவரம் சுவாரசியம். பிள்ளையார் இந்துக் கடவுளே அல்ல என்ற பாணியில் விவரம் சொல்லியிருக்கிறார். சமண 'வினாயகர்' கோவில்களை இடித்து இந்துக்கள் பிள்ளையார் கோவில் கட்டியதாகச் சொல்கிறார். கோவில் இடிப்பு, பௌத்த சமண நினைவாலயங்கள், தடங்கள், இடிபாடுகள் என்று பக்கம் பக்கமாகப் போகிறது புத்தகம். இந்துமதம் இதை ஏற்றுக் கொண்டது அதைத் திருடியது என்றும் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்.

இதற்கும் தமிழ் வளர்ப்புக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்குத் தோன்றினால் - ஹிஹி.. நாம் ஒரே கட்சி.

பௌத்த மதம் தமிழ் வளர்த்தது என்று சொல்லட்டும் தவறேயில்லை, உண்மையும் கூட. ஆனால் இன்னொரு மொழியோ இனமோ தமிழைக் கெடுத்தது போல் எழுதுவதால் என்ன பயன்? பழைய புத்தகம். என்றைக்கோ எழுதியது. இப்போது விமரிசித்துப் பயனில்லை.

தமிழ் வளர்க்க விரும்பிய அத்தனை பேரும் வளர்த்தார்கள் என்றே நினைக்கிறேன். ஜாம்பஜார் ஜக்கு உட்பட. நிற்க, ஐம்பெருங்காப்பியங்கள் என்பதே பொருந்தாத, போலி அங்கீகாரம் என்பது என் கருத்து. சங்க இலக்கியங்கள் (குறுந்தொகை, புறநானூறு), இறையிலக்கியங்கள் (திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், தேவாரம்) எல்லாம் தமிழ் வளர்க்காமல் தயிரா கடைந்தன?

போகட்டும். ஐம்பெருங்காப்பியங்கள் மூன்று படித்திருக்கிறேன். மூன்றில் ஒன்று மட்டுமே தமிழ் வளர்க்க எழுதப்பட்டது. இது என் கருத்து. உதைக்க விரும்புவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

மொழி வரலாற்றில் விருப்பமுள்ளோர் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம். தையல் வெளியீடு. ரூ.100.

    ன்னுடன் வாஷிங்டனுக்குப் பனிரெண்டு மணி நேர விமானப்பயணம் செய்தவரைப் பற்றிச் சொல்லவேண்டும். ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஆறுமாத ஆராய்ச்சிக்காக வந்திருக்கிறார். 'இந்தியச் சமூகவளர்ச்சியில் திரையிசையின் பாதிப்பு' பற்றிய ஆய்வு. "இங்கே எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டேன். இந்தியாவில் இல்லாத அளவுக்கு இங்கே பாடல்களைக் குறிப்புகளுடன் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். ஆராய்ச்சிக்குப் பணமும் தருகிறார்களாம். நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் புலம்பலும் கலந்து சொன்னார். "நம்ம ஆளுங்களுக்கு இல்லாத அக்கறை பாருங்க சார்!".

இந்த ஆராய்ச்சி பற்றிய ஆர்வம் எப்படி வந்தது என்றுத் தொடங்கி நிறைய பேசினோம். இசையமைப்பாளர் வேதா இவருடைய உறவாம். "அடடே" என்றேன். வேதாவின் இசையில் நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். "அப்பட்டமான இறக்குமதி என்றாலும் கூச்சப்படாமல் வஞ்சனையில்லாமல் பாடல்கள் தந்திருக்கிறார் உங்கள் உறவினர்.." என்றேன். மனிதர் அமைதியானார். "இந்தியிலிருந்து யார் தான் தட்டவில்லை? எம்எஸ்வி எத்தனை பாடல்களைத் தட்டியிருக்கிறார் பாருங்கள்.." என்று ஒரு லிஸ்ட் கொடுத்தேன். ஒருவேளை வேதாவைக் கிண்டல் செய்வதாக நினைத்துவிடக்கூடாதே? மனிதர் அமைதியாக இருந்தார். "இந்தியிலிருந்து எடுத்தாலும் தமிழில் அட்டகாசமாகத் தந்திருக்கிறார் - அவர் இல்லையென்றால் நிறைய இந்திப்பாடல்களின் இனிமையான மெட்டுக்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.." என்றேன். மனிதர் எதுவும் சொல்லவில்லை. "சமீபத்தில் தெரிந்து கொண்ட 'இதய வானின் உதய நிலவே' அவருடைய உச்சப் பாடல்களில் ஒன்று.. மை மோஸ்ட் ரீசன்ட் பேவரிட்.." என்றேன். குளிர்ந்திருப்பார் என்ற நம்பிக்கையில்.

மெள்ள, "யாரைச் சொல்றீங்க?" என்றார். புருவம் சுருக்கிப் பார்த்தேன். நமக்குத் தெரியாத வேதாவா? பிறகு என்னை நேராகப் பார்த்து, "பாச்சா பாட்டுங்க கேட்டிருக்கீங்களா?" என்றார். பாச்சாவாவது மூச்சாவாவது? என்ன சொல்கிறார் இவர்? "கேட்டதில்லையே? எந்த இந்திப்பாட்டு அது?" என்றேன். "இந்திப்பாட்டில்லிங்க.." என்று விவரம் எல்லாம் சொன்னார். நெளிந்தேன். "ஹிஹி.. நீங்க சொன்னது வேதானு காதுல விழுந்துச்சு.. அதான். மன்னிக்கணும்..." என்றேன்.

தரைதொடும் வரை அவர் பக்கமே திரும்பவில்லை. பாச்சா கேட்கணுமாமே? குலை நடுங்கியது. வீட்டுக்கு வந்ததும் கேட்ட பாடல்களில் அடுத்து வருவது முதலில் கேட்ட இந்திப்பாடலின் தமிழ்.
காவிரிக்கரையின் தோட்டத்திலே..

தமிழ் வடிவம் அட்டகாசம் என்று தோன்றுவதற்குக் காரணம் வேதா மட்டுமல்ல, சுசீலா மட்டுமல்ல, புரிவது மட்டுமல்ல, 00:56 - 01:01ம். தில்லையம்பலம் போற்றிஹி.

    ன் தங்கை மகன் ஹார்வர்டில் படிக்கப் போகிறான். செய்தி கேட்டதும் அவனிடம், "எனக்குப் பெருமையாக இருக்கிறது" என்றேன். "எல்லாம் அம்பாள் அருள்" என்றாள் என் தங்கை. ஆக இருவருமே அவன் செயலை, அவன் உழைப்பை, முதலில் பாராட்டவில்லை என்பது இடித்தது. என்னை விட என் தங்கை எவ்வளவோ மேல். அவளாவது அம்பாள் என்றாள், நான் அவன் உழைப்பில் குளிர்காயப் பார்த்தேன். உருப்படமாட்டேன், விடுங்கள். தவளைகளைத் தத்தித் துரத்தி "இதோ பார் மாமா" என்று எளிய சந்தோஷங்களைத் தேடியச் சிறுவன் கண்களில் நிற்க.. ஒரு மெய்யான சாதனையை சாதாரணப் புன்னகைக்குள் மறைத்து இயல்பாகப் போகும் இவனுக்கு.. இப்பொழுது இதைப் பற்றிப் பதிவிடும் நான் எப்படிச் சொந்தமானேன்? படிப்பிலும் வேலையிலும் காட்டுத்தனமாக உழைக்கிறான். முதியோர் வீட்டு நாய் பூனைகளை தினம் ஒரு மணியாவது பூங்காவில் நடக்க அழைத்துப் போகிறான். படித்து முடித்ததும் என்ன செய்யப்போகிறான் என்றத் திட்டத்தைக் கேட்டதும் அசந்து போனேன். எண்ணத்திலும் செயலிலும் தெளிவாக இருக்கிறான். எங்கிருந்து வந்தான் இவன்?! இந்தப் பரம்பரையின் அடுத்தத் தலைமுறைக்கான ஹீரோ தயாராகிறான் என்பது புரிந்தது. இன்னும் சாதிக்கட்டும். சிறப்போடு வாழட்டும்.

    ன்னொரு பெருமைக்குரிய செய்தி சமீபப் பயணத்தில் தெரிந்தது. என் நண்பன் மகளைச் சந்தித்தேன். என் முகவரியை நினைவாக வைத்திருந்து எனக்குச் செய்தி அனுப்பியிருந்தாள். அவளுடைய அனிமேசன் திறமையைப் பார்த்த டிஸ்னி நிறுவனம் அவளை உடனடியாக வரச்சொல்லி வேலை கொடுத்திருக்கிறதாம். மும்பையிலிருந்து ப்ரான்சுக்கு வந்திருந்தாள். இங்கே ஒரு படப்பிடிப்பில் ஆறு மாதங்கள் கலந்து கொண்டு பிறகு ஹாலிவுட் போவாளாம். வரப்போகும் ஒரு படத்துக்கான முழு வடிவமைப்புப் பொறுப்பையும் இவளிடம் கொடுத்திருப்பதாகச் சொன்னாள். "அப்படியா? நல்ல சம்பளம் கொடுப்பார்களா?" என்றேன். அல்பம், அல்பம்! தொகையைக் கேட்டதும் நடுங்கிப் போனேன் என்றால், அடுத்து சொன்னதைக் கேட்டு ஆடிப் போனேன். "ஒரு படம் அங்கிள், தட்ஸ் இட். நான் திரும்பிப் போறேன். seed money.. பணத்துக்காக இதை ஒத்துக்கிட்டேன். நான் படிச்சதன் காரணம் இது இல்லே.." என்று விவரம் சொன்னாள். ஒரு பெரிய கம்பெனியில் சில வருடங்கள் வேலை பார்த்து, சம்பாதித்தது போதும் என்று வேலையை விட்டவள். புவனேஸ்வர் அருகிலோ எங்கேயோ ஒரு corporate sponsored பயிற்சி முகாம் தொடங்கப் போகிறாளாம். பில் கேட்ஸை சந்தித்திருக்கிறாளாம். அறக்கட்டளையிலிருந்து உதவி கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு சொன்னாள். எட்டு முதல் பதினொரு வயது வரையிலான பின்தங்கிய வசதியற்ற பெண் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி வசதி செய்யப் போகிறாளாம். அவளுடையக் குறிக்கோள் நூறு பெண் குழந்தைகளை ஐஐடி ஐஐஎம் படிக்க வைப்பதாம்! எங்கிருந்து வந்தாள் இவள்?! அசல் ஹீரோ!

"அங்கிள்.. சின்னப்போ வீட்டுக்கு வந்து இஷ்டத்துக்கு மசாலா சேர்த்துப் புராணக் கதை சொல்வீங்களே, ஞாபகம் இருக்கா?" என்று நெகிழ்ந்து பேசினாள். இவளைத் தூங்கப் பண்ணியிருக்கிறேன். இவளுக்கு இப்போது இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்குமா? இருக்கும். இவளின் அப்பா ரங்கன், என் இரட்டைபாத் வட்டத்தில் ஒருவன். "அம்மா எப்படி இருக்காங்க?" என்றேன். "ஷிஸ் ஹேப்பி.." என்றாள். "அப்பா எப்படி இருக்கான்?" என்று கேட்கவில்லை. காரணம், இவள் பிறந்த அன்றைக்கு ரங்கன் இறந்தான்.

காதல் வயப்பட்டிருந்த காலத்தில் ரங்கன் இந்தப் பாட்டை அடிக்கடி முணுமுணுப்பான். அவனுடைய காதல் பற்றி இன்னொரு சமயம். இப்போதைக்கு.. ரங்கா, உன் பெண் சாதனையரசிடா!
சந்தா ஓ சந்தா..