2013/04/20

என்னவோ நடக்குது


    நாயகன் அமெரிக்க ராணுவ அதிகாரி. அவனுக்கு ஒரு விஞ்ஞானி நண்பன். வி.ந ஒரு பெரிய நுட்பத்தைக் கண்டுபிடிக்கிறான். உலக நகரங்கள் மக்கள் அனைத்தையும் அனைவரையும் இணைக்கும் நுட்பம். திடீரென்று விஞ்ஞானியைக் காணவில்லை. சந்தேகம் கொண்ட போலீசார் விஞ்ஞானியின் வீட்டில் தேடிய போது, சலவைக்கணக்கில் வராத ரத்தக்கறையும் போராட்டத்துக்கான தடயங்களும் நாயகனின் உடைமைகளும் கிடைக்கின்றன. நண்பனைக் கொலை செய்ததாக நாயகன் மீது வழக்கு தொடரப்படுகிறது. சாட்சி விசாரணை எல்லாம் முடிந்து, குற்றவாளி என்றத் தீர்ப்பும் வழங்கப்படுகிறது. தான் வடிகட்டின நிரபராதி என்கிறான் நாயகன். அவனுடைய குரலை அழுத்தி ஒதுக்கி மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.

நாயகனின் நெருங்கிய நண்பன் ஒருவன் இதை நம்பவில்லை. நுட்பத்தைப் பயன்படுத்த நீதிபதியிடம் அனுமதி பெற்று அதை வைத்துக் கொண்டே நாயகன் நிரபராதி என்று நிரூபிக்க முனைகிறான். நுட்பத்தின் துணையுடன் உலகம் முழுதும் இராப்பகலாகத் தேடுகிறான். தண்டனை நிறைவேற்றப்பட சில நிமிடங்களுக்கு முன் சைனாவிலிருந்து ஒரு செய்தி கிடைக்கிறது. கொலையுண்டதாகக் கருதப்பட்ட விஞ்ஞானி ஷேங்ஹாயில் குஜாலாக இருப்பதாக. படமும் விடியோவும் எடுத்து அங்கிருந்தே தகவல் பரவுகிறது.

நீதிபதி வாயைப் பிளக்கிறார். அசல் குற்றவாளியை விட்டு நாயகனைச் சிறைப்படுத்தி தண்டனை வழங்கியதற்காக மன்னிப்பு கேட்கிறார். நாயகனுக்கு ஆகஸ்டு பதினைந்து. சுபம்.
   
    மேற்சொன்னது கதைச்சு.

விருது பெற்ற கதை. இன்றைய இந்டர்னெட் யுகத்தின் வசதிகளில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பிறகு இந்தக் கதைக்கு ஏன் பொன்னாடை பணமுடிப்பெல்லாம்?

புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆகவில்லை. டெலிபோன் கண்டுபிடிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகவில்லை. 'ஓடும் படம்' கண்டுபிடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகவில்லை. விடியோ கண்டுபிடிக்க இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும். இணையம் கண்டுபிடிக்கப்பட இன்னும் எழுபது ஆண்டுகள் ஆகும். இணையம் பரவ இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும். உலக மக்கள் அனைவரையும் கனகாலத்தில் இணைக்கும் நுட்பம் பற்றிய விவரம் செறிந்த கற்பனைக்கான விருது பெற்றச் சிறுகதை வெளிவந்தது 1898ல்.

முழுச் சிறுகதையை இணையத்திலோ நூலகத்திலோ படிக்கலாம்.
கேள்வி 1: சிறுகதை எழுதியவர் யார்?    சுசேனாவுக்கு வயது நாற்பத்து மூன்று. அவருடைய மகள் மரியாவுக்கு வயது இருபத்து மூன்று. மரியாவின் மகள் மிகேலாவுக்கு வயது மூன்று.

"பேத்தியைப் பார்த்துக்கொள், டாக்டரிடம் போய் வருகிறேன்" என்று சொல்லிப்போன மரியா வீடு திரும்பவில்லை. திடுக்கிட்டு நடுங்கிப் போன சுசேனா எல்லா இடங்களிலும் தேடுகிறார், போலீசிடம் சொல்கிறார், தெரிந்தவர்களிடம் உதவி கேட்கிறார் - பயனில்லை. மரியாவைக் காணோம்.

தானே தேடத் தீர்மானித்தார். மரியாவை அழைத்துச் சென்ற டேக்சி டிரைவரைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறார். மரியாவைக் காசுக்காக ஒரு சிவப்பு விளக்குத் தரகன் கடையில் இறக்கி விட்டதாகச் சொல்கிறான் டிரைவர். 'உன்னால் இப்ப அவளை எதுவும் கண்டுபிடிக்க முடியாது கிழவி' என்கிறான்.

சுசேனா விடவில்லை. பேத்தியைக் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு பெண்ணைத் தேடும் படலத்தில் இறங்கினார். இளம்பெண்களை விலைக்கு வாங்கி விபரீதப் பாலியல் குற்றங்களை வற்புறுத்தி செய்யச் சொல்லும் கொடுமையான உலகத்தை அறிந்து வெலவெலத்துப் போனார். 'ஐயோ! என் மரியா இங்கே, இவர்கள் கையில், எங்கோ இருக்கிறாளே! என்ன செய்வேன்!' என்றுத் துடித்துப் போனார்.

தாயின் மனம் துருப்பிடிக்காத இரும்பிலானது என்ற ரகசியம் பலருக்குத் தெரியாது. அடிபட்டத் தாயின் மனமோ இரும்புச் சுரங்கம். வெளியிலிருந்து தேடினால் பயனில்லை என்பது புரிந்து, குற்றவாளிகளுடன் கலந்து தேடத் தீர்மானித்தார். இளம்பெண்களை வாங்கி விற்பது போலத் துணிச்சலோடு நடிக்கத் தொடங்கினார். அந்தப் பாவனையில் நாட்டின் அத்தனை சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கும் ஒவ்வொரு இடமாகச் சென்றார். கிடைத்த இளம்பெண்கள் சிலரை வாங்கி, எவருக்கும் தெரியாமல் நல்வழியில் போக உதவி செய்தார்.

தன் தூய நிழல் தன்னைக் காட்டிக் கொடுத்து விடாதபடி மிகக் கவனமாக இருந்த சுசேனா, இருபது வருடங்களாக தன் பெண் மரியாவைத் தேடித் தேடி இளைத்தாலும் அந்தத் தேடலின் விளைவாக நூற்றுக்கணக்கான இளம்பெண்களை மீட்டு நல்வழியில் திருப்பினார். இந்தத் தேடலில் தன் சொத்துக்கள் அத்தனையும் விற்று ஓட்டாண்டியானதைப் பற்றிச் சிறிதும் வருந்தவில்லை. எத்தனையோ மரியாக்கள் மீட்கப்பட்டனர் என்ற நிறைவை எந்த சொத்தும் ஈடுசெய்யமுடியாது என்கிறார்.

சுசேனாவுக்கு இப்போது அறுபது வயது. இன்னும் மகள் மரியாவைத் தேடிக்கொண்டிருக்கிறார். படித்த வாலிபரான பேத்தி மிகேலாவின் உதவியோடு. 'என் மரியா.. என் செல்வம் இன்னும் உயிரோடு எங்கோ இருக்கிறாள்' என்று, பால் ஈந்தத் தன் மார்புகளில் அடித்துக்கொண்டு இன்னும் தேடுகிறார்.

    'Women of Courage' எனும் அமெரிக்க அரசின் விருதைப் பெற்ற சுசேனா, 2012ல் நொபெல் அமைதிப் பரிசுக்காக நியமிக்கப்பட்டார். கிடைக்கவில்லை. (ஒபாமாவுக்கு விருது கொடுத்த பிறகு, இனி அசல் சாதனையாளர்களுக்கு விருது வழங்குவதில்லை என்றத் தீர்மானத்துக்கு நொபெல் நொண்டிகள் வந்திருக்கலாம்).

ஆனால் அவருடைய நாட்டின் மிகப்பெரிய விருதும் பணமுடிப்பும் சுசேனாவுக்குக் கிடைத்தது. பாலியல் தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் சிறுமிகளை மீட்கும் பணியில் பணத்தைச் செலவிட அப்படியே கொடுத்துவிட்டார்.
கேள்வி 2: சுசேனா எந்த நாட்டவர்?    டைலரின் நெருங்கிய நண்பன் மூர் திருமணத்தை நடத்தி வைக்க, டைலரும் பெதனியும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்ததும் டெக்சஸ் வந்தார்கள். புதுமனை குடிபுகுந்தார்கள். புகுந்ததும் பார்த்தால் வீட்டில் இருபது முப்பது ஆண்கள். ஐந்தாறு பெண்கள்.

கேள்வி கேட்ட பெதனியிடம், "நாமெல்லோரும் சேர்ந்திருக்கப் போகிறோம். இது கடவுளின் ஆணை" என்றான் டைலர். "ஆமாம், என் நண்பனின் மனைவியே" என்று அவளை அணைத்தான் மூர்.

சில மாதங்களுக்குள் பெதனி இறந்தாள். அவள் படுக்கையருகே இருந்தத் தூக்கமாத்திரைப் புட்டிகளை வைத்துத் தற்கொலை என்று தீர்மானித்தார்கள். அவள் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, பெதனியைக் கொலை செய்ததாகச் சொல்லி மூர் போலிசில் சரணடைந்தான்.

டைலரும் மூரும் கிறுஸ்தவ மதத்தின் ஒரு தனிப்பிரிவைச் சேர்ந்தவர்கள். International House of Prayers என்றக் குழுமம். இந்த IHOPல் 'பரமபிதா பரமபிதா' என்று ஜபித்தபின், இருந்த ஆறேழு பெண்களை இருபது முப்பது ஆண்கள் 'படுக்கவா படுக்கவா' என்றுக் கூட்டமாக ஜபித்திருக்கிறார்கள். இது ஒரு மதச் சார்புள்ள குழு என்பதால் யேசுவின் அருள் கிடைக்கும் என்ற சாக்கில், சாக்கடையில் விரும்பி விழுந்திருக்கிறார்கள். பெதனியையும் மற்ற பெண்களையும் போதை மருந்து கொடுத்து, தினசரி மூன்று வேளை ஜபம் முடிந்ததும் அத்தனை ஆண்களும் கூட்டுப் பிரசாதமாக ஏற்பார்களாம்.

டைலருக்கும் மூருக்கும் என்ன சண்டையோ, மூர் எல்லாவற்றையும் சொல்லிச் சரணடைந்தான். மற்றவர்களும் பிடிபட்டார்கள்.

'கடவுளை நம்பினார் கைவிடப்படார்' என்ற நம்பிக்கையோடு சிறையிலிருக்கிறான் மூர். 'நான் கடவுளின் ஆணைப்படி நடந்தேன். இது குற்றமென்றால் யேசுவின் கருணை மழையில் அது கழுவப்படும்' என்கிறான் டைலர் கூசாமல். 'ஆமென்' என்கிறார்கள் IHOPகாரர்கள்.

    சென்ற ஆண்டின் ஆத்திக அசிங்கங்களில் ஒன்று. அமெரிக்காவில் இப்படியெல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் வசதியாக 'அமுக்கி வாசிக்கப்பட்ட' வழக்கு.

சிறையில் வாடும் (?) ஆண்களுக்காக ஒரு மாதா கோவில் அமைத்துக் கொடுத்திருக்கிறதாம் IHOP அமைப்பு. இருவரும் அன்னை மேரியிடம் தினம் பிரார்த்தனை செய்கிறார்களாம். புனித மகனின் அருளுக்காக. இவர்களுக்கு ஆதரவாக, IHOP சார்ந்த 'பரிசுத்த ஆவித் தோத்திர மையம்' ஒன்று கிளம்பியிருக்கிறது.

சிரிப்பதா, அழுவதா, எழுவதா?
கேள்வி 3: பரிசுத்த ஆவியினால் பலனுண்டா?    காதல் என்றாலே கிளுகிளுதான். இந்த வயதில் எனக்கே இப்படியென்றால் இளவயது அலெக்ஸ், லீசாவுக்கு எப்படி இருக்கும்?!

அலெக்சும் லீசாவும் ஹைஸ்கூலில் பழகத்தொடங்கி, பிரிந்து மறந்து, ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் பழகத்தொடங்கிக் காதல் வயப்பட்டார்கள். கல்லூரி, கடன், வேலை என்று பத்து வருடங்களுக்கு மேல் இருவரும் வெவ்வேறு இடங்களில் அல்லாடினாலும், காதல் திரட்டுப்பால் போல் கெடாமல் இனிப்பாகவே இருந்தது. படிப்புக் கடன் அடைத்ததும் இருவரும் வழக்கமாகச் சந்திக்கும் ரெஸ்டாரென்டில் சாப்பிடுகையில், லீசாவுக்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது. விளையாட்டு எரிச்சலோடு அலெக்சைக் குடைந்தாள். "ஆமா, என்னைக் காதலிச்சுகிட்டே இருந்தா எப்படி? ஒரு கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்னவாம்? அடுத்த மாசம் எனக்கு முப்பது வயசாப் போகுது"

"ஒரு கல்யாணம் தானே?" என்ற அலெக்ஸ், திடீரென்று மிக நெருங்கி வந்து அவளைக் கட்ட்ட்டிப் பிடித்தான், பொதுப் பார்வையில். சற்றே வியந்து வெட்கப்பட்டுக் குனிந்த லீசாவின் முகத்தை நிமிர்த்திக் கண்களைப் பார்த்தான். "உன்னோட முப்பதாவது பிறந்த நாளன்னிக்கு கல்யாணம் செஞ்சுக்குவோம். ஆனா ஒரு கல்யாணமில்லே.. முப்பது கல்யாணம்.. என்ன சொல்றே?" என்றான்.

திக்குமுக்காடிப் போனாள் லீசா. "முப்பது கல்யாணமா?"

"ஆமாம்.. உன் மேலே எனக்கு அவ்வ்வ்வளவு காதல்! உன் முப்பதாவது வயது முழுக்க உலகம் சுத்துவோம். முப்பது கலாசாரங்களில் நம்ம கல்யாணத்தைச் செஞ்சுக்குவோம்.. சரியா?"

"இந்த செலவுக்கெல்லாம் காசு?"

"சேத்து வச்சிருக்கேண்டி என் செல்லமே" என்ற அலெக்ஸ், பட்ஜெட் போட்டுக் காட்டினான்.

"இதென்ன? உதட்டுலயா பட்ஜெட் போடுவாங்க?" என்று சிணுங்கினாள் லீசா.

    உலகம் சுற்றிய வாலிபர்கள் இருவரும் முப்பது கல்யாணங்கள் செய்துகொண்டு, லன்டன் அருகே சுபமாகப் பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

கல்யாணத்துக்குக் கல்யாணம். தேனிலவுக்குத் தேனிலவு.

(அலோ.. உங்களைத்தான்..போட்டோவையே பாத்துட்டிருக்க வேண்டாம்..)

கேள்வி 4: இந்தப் படத்தில் இருக்கும் அலெக்சும் லீசாவும் எந்த நாட்டுக் கலாசாரத்தைப் பற்றியிருக்கிறார்கள்?
    ன்னொரு குடும்பம் இந்தியா போகிறது. சில வருடங்களாகவே திட்டம் போட்டு வந்தாலும் 'இப்போ போறேன் அப்போ போறேன்' என்று இழுத்துக் கடைசியில் இந்த வருடம் அமெரிக்காவுக்கு டாட்டா சொல்லத் தீர்மானித்திருக்கிறார்கள். தற்காலிக டாட்டாவா என்பது போகப் போகத் தெரியும்.

இந்தியா திரும்பி நன்றாக வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். "இந்தியாவா.. சனியன்.. அங்கே மனுசன் இருப்பானா?" என்று, போன வேகத்திலேயே திரும்பியவர்களுக்கும் இருக்கிறார்கள் (உதாரணத்துக்கு எங்கேயும் தேட வேண்டியதில்லை. 2003ல் நானும் அப்படி முயன்றவன்). இவர்கள் எப்படியோ?

இந்தியாவில் இடம், பள்ளிக்கூடம், கல்லூரி, வங்கிக்கணக்கு எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டார்கள். செட்டிலானதும் வேலை தேடப் போகிறார்களாம். எனக்குத் தெரிந்தவரையில் இங்கிருந்து போகிறவர்கள் வேலை தேடுவது பெரும் போராட்டம் என்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் நல்லபடியாக அமையட்டும்.

இங்கே வீட்டுப் பொருட்களை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். "பழைய நகை பணம் ஏதாவது இருந்தால் பாதி விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். சிரித்தார்கள். சிரிப்பானேன், இங்கே என்ன ஜோக்கா சொல்லிட்டுத் திரியறாங்க?

    "இந்தியாவில் சுலபமாக வேலை கிடைக்குமா தெரியவில்லை. கிடைத்தாலும் இங்கே இருந்துப் பழகிய உங்களுக்குப் பொருந்தி வருமா தெரியாது, அதனால் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கி நடத்துங்கள்" என்றேன்.

நாளைக்கு அவர்கள் அப்படித் தொடங்கினால் எனக்கும் ஒரு வேலை போட்டுக் கொடுங்கள் என்று கேட்கலாம் பாருங்கள் :-)
கேள்வி 5: யார் இவர்கள்?


பிபிஸ்ரீக்கு சிறிய அஞ்சலி.


1. மார்க் ட்வெய்ன். (telectroscope என்றக் கற்பனைக் கருவியை உருவாக்கி அதன் நுட்பத்தையும் விளக்கியிருக்கிறார் ட்வெய்ன். இதனை அடிப்படையாகக் கொண்டு அசல் telectroscope ஒன்றை லன்டனில் நிறுவியிருக்கிறார்கள். அங்கிருந்து ந்யூயோர்க் நகரை பைனாகுலர் போலப் பார்க்க முடிகிறதாம்!)
2. அர்ஜன்டீனா. (சமீபத்தில் சுசேனாவுக்கு 'உலக மனித உரிமை காவலர்' விருதை வழங்கியிருக்கிறார் அர்ஜன்டீனா நாட்டு அதிபர். மரியாவை இன்னமும் தேடினாலும், அவளைக் கடத்திய குற்றத்துக்காக, டிரைவர் உட்பட, பதிமூன்று பேரைக் கோர்ட்டில் நிறுத்தியிருக்கும் சுசேனாவுக்கு ஜே!)
3. உண்டு. உதாரணத்துக்கு.. இட்லி வேக பரிசுத்த ஆவி தேவை.
4. கொலம்பியா. (ம்ம்ம்.. கல்யாண ஆசை வந்தக் காரணத்தைச் சொல்லவா?)
5. நான் சொல்லமாட்டேம்பா. (க்ளூ: எனக்குத் தெரிஞ்சு, புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் டிஎம்எஸ் பைத்தியம்!)


21 கருத்துகள்:

 1. உண்மை கதைகளும் பொருத்தமான பாடல்களும் அருமை.
  பி.பி.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. முப்பது கல்யாணமா ? அழகான காதல் வரிகள்...பாடல்களை என்னால் சரியாக கேட்க இயலவில்லை.

  பதிலளிநீக்கு
 3. ஞான் வளரெ ரசிச்சு ஸாரே! கடைசில நீங்க பதில்கள் தராட்டா ‘ழே’ன்னுதான் முழிக்க வேண்டியிருந்திருக்கும்!3ம் கேள்விக்கான பதில்... டிபிகல் அப்பா ஸார்!

  பதிலளிநீக்கு
 4. எல்லா செய்திகளும் சுவையானவை. மரியா கிடைக்கட்டும். பிபிஎஸ் பாடல் அமிர்தம்.

  பதிலளிநீக்கு
 5. என்னடா இது, அப்பாதுரையும் புதிர்க்கேள்விகள் கேட்க ஆரம்பிச்சுட்டாரேனு நினைச்சேன். நல்லவேளையாக் கடைசிக் கேள்வியைத் தவிர மத்ததுக்கு பதிலைச் சொல்லிட்டீங்க.

  அது சரி, இந்தியா வந்த அந்த உங்கள் நண்பர்கள் குடும்பம் இந்தியாவில் நல்லா மனம் பதிஞ்சு குடும்பம் நடத்தறாங்களா? ஹிஹி, அவங்க யார்னும் தெரிஞ்சுக்க ஆசை. :))))

  பதிலளிநீக்கு
 6. ஒவ்வொன்றையும் ரசித்தேன். விடை நீங்கள் சொல்ல வில்லையெனில் கணேஷ் போல முழித்திருப்பேன்... :)

  பதிலளிநீக்கு
 7. பதில்கள் இருக்காதோ என்று நினைத்தேன்... முடிவில்... நன்றி...

  'ழே' என்று முழிப்பதெப்படி என்று மின்னல் அவர்களிடம் கேட்க வேண்டும்... ஹிஹி...

  பதிலளிநீக்கு
 8. //ழே' என்று முழிப்பதெப்படி என்று மின்னல் அவர்களிடம் கேட்க வேண்டும்... ஹிஹி...//


  ஹிஹிஹி, டிடி, ஆமா இல்ல?


  நானெல்லாம் "ஙே" என்று தான் முழிப்பேன். :))))))

  பதிலளிநீக்கு
 9. தெரியாத பல புதிய விசயங்களை அறிந்து கொண்டேன் சார்.. மூன்றாம் கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 10. சுசேனா மனதைக் கவர்ந்து, நெகிழ வைத்து விட்டார்.

  கடைசி நிஜக் கதைக்குப் பாடல் மிகவும் பொருத்தம்!

  @கீதா! மின்னல் வரிகளின் சரிதாயணம் படிக்கலையா? அவர் ஏன் 'ழே' என்று முழிக்கிறார் என்று அதை படித்தால் புரியும்.

  மார்க்ட்வைன் எழுதிய கதையின் பெயர் குறிப்பிடப்பட வில்லையே? நான்தான் பார்க்கவில்லையா?
  (இணையத்தில்/நூலகத்தில் தேடிக் கண்டுபிடிக்க)

  எனக்குத் தெரிந்த குடும்பம் கூட இந்தியா வருகிறார்கள். ஆனால் இளம் வயதினர். நீங்கள் குறிப்பிடுபவர்களாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

  சுவாரஸ்யமான பதிவு!


  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் சுவாரசியம்.
  நீங்கள் குறிப்பிட்டவர் இங்கே பின்னூட்டம் இட்டிருக்கிறார் தானே?

  பதிலளிநீக்கு

 12. பல கண்டுபிடிப்புகளின் ஆதாரமே கற்பனையே.சில அகஸ்மாத்தாக.

  யாருக்குக் கல்யாண ஆசைவந்த காரணம்.?

  பிறக்கும்போதே முட்டாள்களாக யாராவது பிறக்கிறார்களா.?

  பதிலளிநீக்கு
 13. First is Suspense Story.
  Second one is Sentimental Story.
  Third is Divine Story.
  Fourth is True Love Story.
  Fifth one - I do not know whether it is a tragic story or comedy as it depends upon the climax.

  பதிலளிநீக்கு
 14. சுவாரஸ்யம். எவ்வளவோ முயற்சித்தும் எனக்குப் பாடல்கள் கேட்கவில்லை. க்ளிக் செய்துவிட்டுக் காத்திருந்ததுதான் மிச்சம்!

  பதிலளிநீக்கு
 15. பின்னூட்டங்களுக்கு நன்றி.

  @கோமதி அரசு: காணாமல் போன பின்னூட்டக்காரர் ஒருத்தர் எங்கிட்டே "நீங்க பிபிஸ்ரீக்கு அஞ்சலி பதிவு எதுவும் எழுதலியா? எழுதலின்னா அட்லீஸ்ட் எழுதுறவங்களை மதிக்கலாமுல்ல? காண்போமானு கேட்டா காண்போம்னு கமென்டுறீங்க.. என்னா நக்கல்?"னு கேட்டாரு. அவரு எங்கியானு அடிச்சு கிடிச்சு வச்சுறப்போறாருனு நாலு பாட்டுகளை சேர்த்தேன். கேள்வியோட விட்டுறதா இருந்த பதிவு.

  @geethasmbsvm6: பாலகணேஷ் விழிக்கறதுக்கு பின்னால பெரிய காப்புரிமை சமாசாரமெல்லாம் இருக்குங்க. Ranjani Narayanan சொன்னாப்புல.. விழிக்கிறதைக் கூட எழுத்தாளர் காபிரைட் செஞ்சிருக்காருனு இன்னொரு எழுத்தாளர் சொல்ல நம்ம பாலகணேஷ் பயந்து இப்ப வேறே மாதிரி விழிக்கிறாராம். எனக்குத் தெரிஞ்சு தஞ்சாவூர் ஜில்லாவுல எத்தனையோ வருசக்கணக்கா எல்லாரும் 'ஙே'னு தான் விழிச்சிருக்காங்க. நாட்டுல எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க/ஏமாறுராங்க பாருங்க. நான் கூட 'கெக்கே பிக்கே'யைக் காபிரைட் பண்ணலாமானு இருக்கேன். ஆளையே காணோம், தெரியவா போவுது? பாசுமதியைக் காபிரைட் பண்ணாப்புல தான். ஹ்ம்ம்.. ஒரு பதிவு எழுதலாம் போலிருக்குதே?

  @Ranjani Narayanan: கதையை நான் லைப்ரெரில தான் படிச்சேன். இணையத்துல தேடவில்லை. ஆனா கிடைக்கும்னு தோணுது. telectroscope, telectrophotoscope, mark twain என்று தேடினால் கிடைக்கலாம். கதை பல பெயர்களில் வந்திருக்கிறது. அசல் கதை 'From The Times of 1904' என்ற பெயரில் வந்தது. ஒரு வருங்காலச் செய்தித்தாளின் அறிவிப்பாளர் போல கதையைச் சொல்லியிருப்பார் mark. பின்னர் வந்த anthologyகளில் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. again, copyright சமாசாரம்! 'The collected works of Mark Twain' என்றப் புத்தகத்தில் 'telectrophotoscope' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இணையத்தில் கிடைக்கவில்லையென்றால் ஒரு இமெயில் அனுப்புங்கள், நான் pdf அனுப்புகிறேன். இல்லையின்னா உங்கள் ஊர்க்காரர் 'எங்கள்' கௌதமனை ஒரு பிடி பிடிங்க. அவருகிட்டே இருக்கும். அவருகிட்டே இல்லாத pdf கதைகள் ரொம்பக் கம்மி.

  @G.M Balasubramaniam: ரைட்டு. imagination comes before innovation. அகராதியிலும். நல்ல கேள்வி கேட்டீங்க. பிறக்கும் போதே யாராவது முட்டாள்களா பிறக்கிறாங்களானு தெரியாது, ஆனா பிறக்கும் போதே யாருமே புத்திசாலிகளாய் பிறப்பதில்லை என்பது தெரியும்.

  @mohan baroda: smart comment. i hope it ends in comedy.

  @ஸ்ரீராம்: க்ளிக் செஞ்சுட்டு எங்கே போய் காத்திருத்தீங்க? ஹிஹி. ஒரு பிரபல பின்னூட்டக்காரர் இப்படித்தான், "நீங்க பேசுறது காதுல சரியாவே விழலியே?"னு சொல்லிட்டிருந்தாரு. "போனை தலைகீழா பிடிச்சுப் பாருங்களேன்?"னேன். ஒரு நொடி விட்டு, "ஆ.. இப்ப நல்லாக் கேக்குது"னு சந்தோசப்பட்டாரு. போகட்டும், எல்லாம் நீங்க கேட்ட பாட்டு தான். ஓகே, ஒரே ஒரு பாட்டு மட்டும் நீங்க கேட்டிருக்க வாய்ப்பு கம்மி.

  பதிலளிநீக்கு
 16. //திக்குமுக்காடிப் போனாள் லீசா. "முப்பது கல்யாணமா?"

  "ஆமாம்.. உன் மேலே எனக்கு அவ்வ்வ்வளவு காதல்! உன் முப்பதாவது வயது முழுக்க உலகம் சுத்துவோம். முப்பது கலாசாரங்களில் நம்ம கல்யாணத்தைச் செஞ்சுக்குவோம்.. சரியா?"

  "இந்த செலவுக்கெல்லாம் காசு?"

  "சேத்து வச்சிருக்கேண்டி என் செல்லமே" என்ற அலெக்ஸ், பட்ஜெட் போட்டுக் காட்டினான்.

  "இதென்ன? உதட்டுலயா பட்ஜெட் போடுவாங்க?" என்று சிணுங்கினாள் லீசா. //

  ஹ! என்ன லாகவமான எழுத்து ஓட்டம்! காட்டில் காய்ந்த நிலா!
  என்ன செய்யறது?.. காடு, நாடு என்று பார்த்தா நிலவும் ஒளிவீச முடியும்?

  பதிலளிநீக்கு
 17. //நானெல்லாம் "ஙே" என்று தான் முழிப்பேன். :)))))) //

  இந்த "ஙே"-- க்குக்கூட ஒருத்தர் காப்பிரைட் வாங்கியிருக்கிற மாதிரி
  இந்த மாதிரி "ஙே" முழிப்பு வரும் பொழுதெல்லாம் அவர் பெயரை சிலர்
  குறிப்பிடுவார்கள். நல்ல வேளை, இங்கில்லை..

  பதிலளிநீக்கு
 18. //இங்கே வீட்டுப் பொருட்களை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். "பழைய நகை பணம் ஏதாவது இருந்தால் பாதி விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். சிரித்தார்கள். சிரிப்பானேன், இங்கே என்ன ஜோக்கா சொல்லிட்டுத் திரியறாங்க?//
  கேள்வி : ”இங்கே என்ன ஜோக்கா சொல்லிட்டுத் திரியறாங்க? என்று கேட்டவர் யார்?
  பதில் : பவுனையும் பணத்தையும் பாதி விலைக்கு கேட்டவர்.

  பதிலளிநீக்கு
 19. ஒரு கல்லில் எத்தனை மாங்காய்!

  ருசி அபாரம்.

  பதிலளிநீக்கு
 20. தாயின் மனம் துருப்பிடிக்காத இரும்பிலானது என்ற ரகசியம் பலருக்குத் தெரியாது. அடிபட்டத் தாயின் மனமோ இரும்புச் சுரங்கம்.//

  எத்தனையோ மரியாக்கள் மீட்கப்பட்டனர் என்ற நிறைவை எந்த சொத்தும் ஈடுசெய்யமுடியாது என்கிறார்.
  //

  சிலிர்ப்பும் துடிப்பும் ஒருசேர.

  பதிலளிநீக்கு