2011/09/24

ஒருமனம்




1 2 3 4 5 6 7 ◀◀ முன் கதை

எப்போது தூங்கினேனென்று தெரியாது. "எந்திரிங்க சார்... இதா எடம் வந்தாச்சு" என்று டிரைவர் என்னை எழுப்பியதும் விழித்தேன். அவசரமாக எழுந்தேன். வாயோர ஈரம் கையில் பட்டதும் ஏற்பட்ட அருவருப்பைப் பொருட்படுத்தாமல் சட்டையை உயர்த்தி முகம் துடைத்தேன். "இந்தா சார், மொகங்கழுவிக்க.." என்று டிரைவர் கொடுத்த பிஸ்லெரியால் தெருவில் நின்று முகம் கழுவினேன். விலாசத்தைச் சரி பார்த்துவிட்டு, வேகமாக நடந்து படியேறிக் கதவைத் தட்டினேன்.

பதிலில்லை. மீண்டும் தட்டினேன். யாருமில்லையா? ஏன் பதிலில்லை? மறுபடியும் தட்டினேன். பொறுமையில்லையென்றால் வினாடிகள் கூட வருடக்கணக்காகத் தோன்றுகிறது. அமைதி திடீரென்று அச்சமூட்டியது. இது நிலா வீடுதானோ? ஒருவேளை நிலாவும் எங்கேயாவது போயிருந்தால்? வேலைக்குப் போயிருப்பாரோ ஒருவேளை? அவர் வேலை செய்யும் இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? அடுத்த வீட்டில் விசாரிக்கலாம் என்று படியிறங்கி நடந்த போது கதவு திறந்தது. "யார் வேணும்?" என்ற குரலைக் கேட்டுத் திரும்பினேன்.

அப்பொழுது தான் குளித்திருந்த பொலிவு முகத்திலும், உடையிலும் தெரிந்தது. தலையில் சுற்றியிருந்த ஈரத்துண்டு அவசரப் பார்வைக்கு பூச்சரம் போல் தோன்றியது. லேசாகத் தீட்டியிருந்த மை, முகச்சுருக்கங்களை கண்னியமாக மறைத்து அவருடைய கண்களைப் பார்க்கச் செய்தது. நெற்றியில் மிக மெல்லிய சாந்துப் பொட்டு. அதன் கீழே சந்தனத்தில் தெப்பக்கீற்று.

"யார் நீங்க?"

பட்டுச் சேலை மெல்லிய உடலைச் சற்றுப் பூசிக் காட்டியது. வெளிர்நீலப் புடவையில் அங்கங்கே தாராளமாகத் தெறித்திருந்த கருநீலம் சிவப்பு பச்சை வண்ணப் பூக்கள். அகண்ட வார் வைத்தத் தோல் செருப்பு, அவர் உயரத்தை இன்னும் கூட்டியது.

".. யார் வேணும்?"

மீண்டும் கேட்கத் தூண்டும் குரல். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலினிமையில் முதிர்ச்சியும் கம்பீரமும் இருப்பதாக என் அம்மா அடிக்கடி சொல்வார். ஏனோ நினைவுக்கு வந்தது. மை காட்! கும்பிட வைக்கும் அழகு. இவர் தான் நிலாவா? 'கண்டேன் சீதையை' என்றது மனம், காரணமில்லாமல்.

"நீங்க நிலாவா? நிலான்றவங்களைத் தேடிட்டு வந்தேன்" என்றேன்.

"யெஸ்" என்று ஆங்கிலத்துக்கு மாறினார். "என்ன வேணும் உங்களுக்கு, யார் நீங்க?"

"மேடம்.. நான் பொன் சார் கிட்டேயிருந்து வரேன்" என்றேன். சட்டென்று தவறை உணர்ந்து, "மனோகர்.. மனோகர்.. அவர் கிட்டேயிருந்து வரேன் மேடம்.. உங்க கிட்டே அவசரமா பேசணும்".

    "ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. குளிச்சப்பிறகு கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கு... சுடுதண்ணியில்லாம குளிச்சதே இல்லை.." என்றேன். உடல் லேசாக நடுங்கினாலும் நன்றாக விழித்திருந்தேன். காபி கொடுத்தார். "ஏதாவது சாப்பிடறீங்களா?" என்றார்.

"நீங்க எல்லாம் வேணாம் மேடம்... சும்மா நீனே சொல்லுங்க" என்றபடி அவர் நீட்டிய காபி கப்பை வாங்கினேன். இன்னொரு கப் காபி கொடுத்தார். "உன் டிரைவரையும் கூட்டிட்டு வந்து கொடு" என்றார். அடச்சே! மறந்தே போனேன். டிரைவரிடம் கொடுத்து விட்டு வந்தேன்.

"வாங்க மேடம்.. நீங்க உடனே வந்தாகணும்" என்றேன்.

"இல்லைபா.. எனக்கு வர விருப்பமில்லே. நீ போய்ட்டு வா. மனோகர்கிட்டே என்னோட அன்பை மட்டும் சொல்லிடு" என்றார்.

"என்ன மேடம் இது?! எல்லா விவரத்தையும் கேட்ட பிறகு இப்படி சொல்றீங்க? அவர் மாரடைப்பால அவதிப்பட்டுட்டிருக்காரு மேடம். நீங்க தான் அவர் குடும்பம். நீங்க மட்டும் தான் அவரோட குடும்பம்.. இந்த டயத்துல நீங்க அவரைப் பார்க்க வரலின்னா எப்பவுமே பார்க்க முடியாம போயிறலாம்" என்று பதறினேன்.

"இந்த டயத்துல தான் குறிப்பா மனோவை பார்க்க விருப்பமில்லே. என் மனோ என் நெஞ்சுல எப்பவுமே இருப்பான். அதை அழிக்க முடியாது. அவனை இந்த நிலையில பாத்தா எனக்கும் ஏதாவது ஆயிடும். அது மனோவுக்கு பிடிக்காது. பொறுக்க மாட்டான்"

"மேடம்..இங்கே பாருங்க" என்று நான் கையோடு கொண்டு வந்திருந்த புகைப்படத்தைக் காட்டினேன். "நீங்க ரெண்டு பேரும் எடுத்துகிட்ட போட்டோ.. இதை இன்னும் எங்கே போனாலும் எடுத்துகிட்டுப் போறாரு. அவர் ரூம்ல ஒரு சாமி படம் கூடக் கிடையாது மேடம். உங்க படம் தான். உங்க கடிதங்கள் தான். அப்படிக் காதலிக்கறாரு மேடம்.. உங்களையே நினைச்சு உருகிட்டிருக்காரு.. ப்லீஸ்.. கெளம்புங்க"

"இல்லப்பா.. என்னைத் தொந்தரவு செய்யாதே... என்னோட நிலமையை உன்னால புரிஞ்சுக்க முடியாது.. நான் வர விருப்பப் படலேனு மனோகர் கிட்டே சொல்லு... அவனுக்குப் புரியும்"

"மேடம்.. இங்கே பாருங்க.." என்று அவர் எழுதிய கடிதத்தைக் காட்டினேன். 'தேயும் நிலா' என்ற வரிகளின் கீழே பொன் சார் எழுதியிருந்ததைக் காட்டினேன். 'ஓயும் மனோ'.

"மேடம்... வேணாம் மேடம்.. நீங்களும் தேய வேண்டாம், அவரும் ஓய வேண்டாம்... இதை அவருக்குக் கொடுக்குற உயிர்ப்பிச்சையா நெனச்சுக்குங்க... உடனே கிளம்புங்க"

நிலாவின் குரலில் எரிச்சல் தொனித்தது. "நீ யாருப்பா எங்க வாழ்க்கைல குறுக்கிடறதுக்கு? எங்க காதலைப் பத்தி எங்களுக்குத் தெரியும்.. உயிர்ப்பிச்சையாவது.. என்ன உளறல்.. சினிமா பாத்து இது மாதிரி டயலாக்கெல்லாம் கத்துக்கிடறீங்க.. உண்மையான உணர்வைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சுக்க மாட்றீங்க... என்னைப் பாக்கணும்னா மனோவுக்கு தெரியாதா?"

எனக்குக் கோபம் வந்தது. "மேடம்... விவரம் தெரியாம பேசாதீங்க.. எனக்கு உணர்வெல்லாம் உங்க அளவுக்கு தெரியாம இருக்கலாம்.. காதல்னா கிசுகிசு.. பத்தோட பதினொண்ணா நெனக்கலாம்.. ஆனா ஒண்ணு தெரியும் மேடம்.. ஒரு உயிரோட துடிப்பு எனக்குத் தெரியும் மேடம். பஸ் ஸ்டேன்டுல உங்களைப் பாக்க வரக் காத்திட்டிருந்தாரு.. எவனோ ஒரு பரதேசி காதலிக்குறதா சொன்னப்ப, பொன் சார் தன் கையிலிருந்த டிகெட்டையும் பணத்தையும் கொடுத்து, என்னோட பர்சையும் பிடுங்கிட்டு அந்தாளு கிட்டே கொடுத்தாரு. என்ன சொன்னாரு தெரியுமா? உலகத்துக்கு காதல் தேவை... சேரப்பாருங்கனு ரொம்ப உணர்ச்சிகரமா சொன்னப்ப எனக்கு கடுப்பா இருந்துச்சு மேடம்.. ஆனா அவரோட உள் மனோகர் கதையைச் சொல்லி அப்புறம் அவர் ரூம்ல உங்க நினைவுகளைப் பாத்ததும்.. அது தான்.. உங்க நினைவு தான்.. உங்க ரெண்டு பேரோட காதல் தான்... அவரை இத்தனை நாளும் உயிரோட வச்சிருக்குனு புரிஞ்சுது மேடம். அவர் அங்கே இறந்தாருன்னா அந்தக் கணமே நீங்க இங்கே இறந்துடுவீங்கன்னும் எனக்குத் தெரியும் மேடம்.. டயலாக்னு நெனச்சாலும் சரி.. அது உணர்வுன்றது எனக்கு நல்லா தெரியும் மேடம்..

நீங்க ரெண்டு பேரும் சந்திக்காமலே இறந்து போனா ஒண்ணும் குறைஞ்சிடாது மேடம்... எத்தனையோ உண்மைக் காதல்கள் செத்துத்தான் போயிருக்கு. அது போல இதுவும்னு ரெண்டு நாள் துக்கம் கொண்டாடிட்டு மறந்துடுவேன். வருஷத்துக்கு ஒருதடவை உங்க நினைவுல பூ வச்சு ரெண்டு வார்த்தை பேசுவேன். என் தலைமுறையோட அதுவும் நின்னுடும். ஆனா, நீங்க ரெண்டு பேரும் இணைஞ்சா காதலுக்கே சக்தி உண்டாகும். எத்தனையோ பேருக்குக் காதல் எவ்வளவு முக்கியம்ன்றது புரியும்.. காதலிக்குறேன்னு டயலாக் விடுறவங்க உங்க ரெண்டு பேரையும் பாத்து, காதலை வாழ வைக்க முயற்சி செய்வாங்க.. தலைமுறையா தலைமுறையா புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு. உங்க காதலோட வெற்றியை எங்களுக்குப் பாடமா கொடுங்க.. தோல்வியையும் மரணத்தையும் பாடமா கொடுக்காதீங்க. நான் வரேன் மேடம்... உங்களைச் சந்திச்சதுல சந்தோஷம்.. இந்த லெட்டரையும் போட்டோவையும் நீங்களே வச்சுக்குங்க" என்றேன்.

ஆத்திரத்தோடு வெளியேறினேன்.

"வண்டியைக் கிளப்பு... நேரா ஆஸ்பத்திரிக்கே ஓட்டு.. ஏண்டா வந்தோம்னு ஆயிருச்சு" என்று டிரைவரை எழுப்பி பின்னிருக்கையில் விழுந்தேன்.

வண்டியைக் கிளப்பிய டிரைவர் நிறுத்தினான். "சார்.. சார்" என்றான்.

"என்னப்பா?" என்று எழுந்தேன். கார் கதவைப் பிடித்தபடி நின்றிருந்தார் நிலா.

கதவைத் திறந்தேன்.

"என்னை மன்னிச்சிரு" என்ற அவர் குரலிலும் கண்களிலும் ஈரம். "எனக்கு மனோவைப் பாக்கணும். உடனே கூட்டிட்டுப் போறியா?" என்றார்.

திரும்பி வந்தபோது மாலை ஐந்து மணியாகிவிட்டது. மலர் மருத்துவமனையில் இருந்த நான்கு ஏசி ரூம்களில் ஒன்றைப் பொன் சாருக்குக் கொடுத்திருந்தார்கள். ஐசியூவிலிருந்து வெளிவந்து நாலைந்து மணி நேரமாகியிருந்தது. நாங்கள் போன போது என் செட்டு மக்கள் எல்லாரும் அவரைச் சுற்றி அமைதியாக இருந்தார்கள். நிலாவைப் பார்த்ததும் வாய் பிளந்து வழி விட்டார்கள். "மேடம்.. நீங்க பேசிட்டிருங்க.. நாங்க வெளியே நிக்கறோம்" என்றேன். "வாங்கடா".

    மனோவின் கைவிரல்களைப் பிணைத்தபடி அவனருகே கட்டிலில் அமர்ந்தாள் நிலா. மனோவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனோவின் முகத்தில் புன்னகை.

'நீ வருவேன்னு எனக்கு நம்பிக்கையில்லே நிலா.. இப்போ என் பக்கத்துல உக்காந்திருக்கறதும் நம்ப முடியலே'

'காதலைப் பத்தி நீ பெரிசா பேசினதா கேள்விப்பட்டேன்.. அதான் பேச்சாளரை நேரில பாத்துறலாம்னு வந்தேன்'

'நானா?'

'ஆமாம்.. நீ தான். என்னவோ கதையெல்லாம் சொன்னியாம்.. பஸ் ஸ்டேன்டுல யாருக்கோ உதவி செஞ்சியாம்.. காதலை வாழவைக்கணும்னு உபதேசம் எல்லாம் செஞ்சியாம்..'

'எப்படித் தெரியும்?'

'அதான் அனுப்பி வச்சியே வானரம்.. அவன் தான் சொன்னான்'

'வானரமா?'

'ஆமாம்.. என்னைப் பாத்ததும் பேந்த பேந்த முழிச்சான்.. அப்புறம் நீ கொடுத்தனுப்பின படத்தையும் லெட்டரையும் காட்டினான்.. கணையாழி மாதிரி'

'நான் கொடுக்கலை.. அவனா எடுத்துக்கிட்டது..'

'இருந்தாலும் ராமன் கொடுத்த கணையாழியை விட இதுக்கு மதிப்பு அதிகம், இல்லையா?'

'நீ எந்த ராமனுக்கும் கிடைக்காத சீதையில்லையா?'

'அப்ப ஏன் என்னைத் தேடி வரலையாம்?'

'உன்னைத் தேடாத இடமே இல்லை.. இப்ப நீ இருக்குற இடம் தெரிஞ்சதும்... உன்னைப் பாக்க வரும் பொழுது இன்னொரு காதலை வாழ வைக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதும்..'

'நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. எனக்கு எல்லாம் தெரியும்'

'நீ எப்படி இருக்கே?'

'உன்னோட இருக்கும் பொழுது எப்படி இருந்தா என்ன?'

'இனிமேலாவது ஒண்ணா இருப்போமா?'

'ஏன்? மறுபடி உன்னை ஏமாத்திட்டு ஓடிடுவேன்னு நெனச்சியா?'

'நீ ஓடினா உன்னைத் தேடி வர.. நெஞ்சுல வலு இருந்தாலும் உடம்புல வலு இல்லியே?'

'அதான் நான் உன்னைத் தேடி வந்தாச்சுல்ல..?'

    நான் உள்ளே நுழைந்த போது ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருந்தார்கள். "என்ன இது... வாயைத் தொறந்து பேச மாட்டீங்களா? அப்பல்லந்து ஒருத்தரையொருத்தர் பாத்துட்டே இருக்கீங்க.. ஒண்ணும் பேச மாட்டீங்களா?"

"பேசிட்டுத் தானே இருந்தோம்? காதுல விழலையா?"

"எங்க மேடம்.. ஒரு சத்தமும் காணோம்.. நீங்க எதுனா பேசுவீங்கன்னு நாங்கள்ளாம் ஒட்டுக் கேட்டுட்டிருக்கோம்.. சத்தமே காணோமேனு பயந்து போய் உள்ளே வந்தேன்.." என்றேன்.

"பேசிட்டு இருந்தோம்.. நாங்க பேசுறது..அது உனக்குப் புரியாது. நீ தொந்தரவு செய்யாம இருந்தா நல்லா இருக்கும்" என்றார் நிலா புன்னகையுடன்.

"சாரி.. உங்க ரெண்டு பேருக்கும் எதுனா சாப்பிட வாங்கி வரேன்னு சொல்லத்தான் வந்தேன்... பேசுங்க பேசுங்க" என்றபடி வெளியேற முயன்றேன்.

'இங்க வாடா' என்றார் சைகையால் பொன். அருகே சென்றதும் என் கைகளை அழுத்திப் பிடித்து சில நொடிகள் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டார். எனக்குக் குறுகுறுத்தது. நிலா என்னை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். "நீ நல்லா இருக்கணும்" என்றார். நிச்சயமாக அழுது கொண்டிருந்தார்.

எனக்கு முதன் முறையாகக் கண்களில் நீர் முட்டியது.


முற்றும்.


2011/09/17

ஒருமனம்



1 2 3 4 5 6 ◀◀ முன் கதை

வீடு திரும்பியபோது நிலா எழுதி வைத்திருந்த இரண்டு கடிதங்களைப் பார்த்தார்கள்.

ஒன்று அவளுடைய அப்பாவுக்கு. கடிதமும் வங்கிச்சேமிப்புக் கணக்குப் புத்தகமும் இருந்தது. "அப்பா, இந்த கணக்கில் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பணம் இருக்கிறது. என்னைத் தேட வேண்டாம்" என்று சுருக்கமாக எழுதியிருந்தாள்.

மனோவுக்காக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தாள். "காரணங்கள் சொல்லி நம் காதலைக் கொச்சைப் படுத்த விரும்பவில்லை மனோ. முடிந்தால் என்னை மன்னித்துவிடு" என்று இரண்டே வரிகள்.

நிலாவின் தந்தை துடித்தார். மனோவைப் பிடித்து உலுக்கினார். "உன்னால தானே என் பொண்ணு காணாம போயிட்டா... இப்ப நான் அனாதையா இந்த நிலமையிலே என்ன செய்யப் போறேன்? நீ நல்லா இருப்பியா?" என்று பலவாறு ஆத்திரப்பட்டார்.

திடுக்கிட்டுப் போயிருந்த மனோவுக்கு எப்படி நடந்து கொள்வது என்று புரியவில்லை. நிலா ஓடிப்போனதற்குத் தானெப்படிக் காரணமானோம் என்று குழம்பியிருந்தான். தந்தையையும் தன்னையும் தனியாக விட்டு ஓடுமளவுக்கு ஏன் இந்த முடிவு?

சுற்று வட்டாரங்களில் எங்கு தேடியும் நிலாவைப் பற்றியத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. திருமணத் தேதிக்கு பத்து நாட்கள் முன்பே வேலையிலிருந்து விலகியிருந்தாள். திட்டமிட்டு செய்திருக்கிறாளா? சே! நிலாவின் மேல் கோபமும் ஆத்திரமும் வந்தது. விலகியிருந்த காதல் அருகில் வந்து மறுபடியும் விலகிப் போனதில் முற்றிலும் உடைந்து போயிருந்தான்.

சிவாவின் உதவியால் அடுத்த சில மாதங்களில் நிலாவின் தந்தை அமைதியானார். மனோவுடன் சுமுகமாகப் பழகத் தொடங்கினார். மனோ பழையபடி ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினான்.

    வேலையிலிருந்து ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகளே இருக்க, சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்திருந்தான் மனோ.

சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு நண்பரைச் சந்திக்கத் திருத்தணி போனவனுக்கு, அவர் தங்கியிருந்தக் குடியிருப்பு மிகவும் பிடித்துவிட்டது. கோவிலிலிருந்து ஒரு மைல் தொலைவில் திருப்பதி ரோட்டையொட்டி இருந்தது அந்தக் குடியிருப்பு. முப்பது ஏக்கர் பரப்பில் எல்லையெங்கும் கம்பிச்சுவர் கட்டி, எழுநூறிலிருந்து ஆயிரம் சதுரடி வரையிலான கிட்டத்தட்ட முப்பது வீடுகள். எங்கே பார்த்தாலும் மரம், செடி, செயற்கைக்குளம் என்று பசுமையும் செழிப்பும். குடியிருந்தவர்கள் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டவர்களாகவே இருந்தனர். நண்பர் குடியிருந்த வீடு மிகவும் பிடித்துப் போய், விவரம் கேட்டான்.

"நானும் இது போல ஒரு இடத்தை வாங்கிப் போட்டு சீக்கிரமே ரிடையராயிடலாம்னு தோணுது"

"இது அருமையான இடம், மனோ. சின்ன இடம் தான். ரெண்டு ரூம், கிச்சன், பாத்ரூம். நல்ல வசதியா கட்டியிருக்காங்க. முதியோர் குடியிருப்புன்றதுனால எல்லாமே ஒரு மாடிக் கட்டிடம் தான். ஒரு பில்டிங்குக்கும் இன்னொரு பில்டிங்குக்கும் பாலம் மாதிரி நடைபாதை. யார் வீட்டுக்காவது போவணும்னா இறங்கி இறங்கி ஏற வேண்டியதில்லை. பாலத்துக்கு கீழே கார் பார்கிங்க், தோட்டம்னு அழகா வசதி பண்ணியிருக்காங்க.

ஒரு பிரச்னையும் இல்லை. மாசம் நாநூறு ரூபாய் கட்டறேன். மளிகை, தண்ணி, காய்கறி வாங்குறதிலிருந்து, செடி கொடிக்கு தண்ணீர் பாய்ச்சுறது, குப்பை அள்ளுறது, எல்லாத்தையும் வீட்டுக் கமிட்டியில் ஆள் போட்டுப் பாத்துக்கறாங்க. காம்பவுன்டுக்குள்ளாறயே ஒரு பிள்ளையார் கோவில் இருக்குது. இங்கே வந்த நாலு மாசமா தினம் கோவிலுக்கு வாகிங் போகிறேன். வாரத்துல ஒரு நாள் திருத்தணி போக முடியுது, மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குபா.

சாப்பாடு கூட நாங்க நாலஞ்சு குடும்பங்க முறை போட்டு தினம் ஒரு வீட்டுல சமையல் பண்ணிக்கிறோம். பழைய புக்ஸ் எல்லாம் படிக்கிறேன். கூட்டமில்லே. நெரிசல் இல்லே. தினமும் பகல் தூக்கம். தொல்லையில்லாத நிம்மதி" என்று சிரித்தார் நண்பர்.

"பிரமாதமா இருக்கு இடம்.. ஹௌ கேன் ஐ கெட் இன்?"

"இங்கயா? ரொம்ப கஷ்டம். இங்கே முப்பது வீடு கூட இல்லை. கட்டுப்பாடு வேறே. வாடகைக்கு விடக்கூடாது. வித்தாலும் கமிட்டி அனுமதி வாங்கித்தான் விக்கணும். அடுத்த வாரம் கமிட்டிலே கேட்டுப் பார்க்கறேன், யாராவது விக்கறாங்களானு. நாங்களே இங்க வந்தது குருட்டு அதிர்ஷ்டம் தான். இந்த வீட்டுல எங்களுக்கு முன்னாடி இருந்தவங்க, என் மனைவிக்கு உறவு.." என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் மனைவி காபியும் பலகாரமும் எடுத்து வந்தார். மனோவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, "என்னோட உறவுக்காரங்களைப் பத்தி இன்னும் குறை சொல்றாரு பாருங்க" என்றார்.

"இல்லமா, மனோகர் இங்க எப்படி வீடு வாங்கறதுனு கேட்டாரு. நம்ம நிலாவைப் பத்திச் சொல்ல வந்தேன்" என்று அவர் சொன்னதும், மனோவின் அடி வயிற்றில் முகம் தெரியாத யாரோ முள்ளால் கீறியதை உணர்ந்தான்.

"நிலாவா?" என்றான் மனோ தன்னையுமறியாமல்.

"ஏம்பா, என் பெண்டாட்டியோட உறவுபா.."

"கொஞ்சம் சுத்தின தூரத்து உறவு தான்" என்றார் அவர் மனைவி. "நிலா எங்க அப்பாவோட பெரியம்மா பேத்தி" என்று தொடங்கி, அவர்கள் சொல்லச் சொல்ல மனோவின் தலையும் நிலையும், முழு வேகத்தில் வைத்த மின்விசிறியானது.

"அதுல பாருங்க மனோ... கல்யாணத்துக்குத் தயாரா இருந்தவ, கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் முன்னாடி முதல் முறையா அதைப் பார்த்திருக்கா. மார்ல சின்னக் கட்டி. அவங்க அம்மாவுக்கு கேன்சர் அப்படித்தான் ஆரம்பமாச்சு. அவ காதலனுக்கோ அப்பாவுக்கோ யாருக்குமே பாரமா இருக்கக் கூடாதுனு யார் கிட்டேயும் சொல்லிக்காம அவங்க காதலனுக்கும் அப்பாவுக்கும் ஒரு சீட்டு எழுதி வச்சுட்டு, அடுத்த முடிவு எடுக்கும் வரை தனியா இருக்கணும்னு கோவா போயிட்டா. அந்தப் பையனும் அங்கே இங்கே தேடிப் பார்த்துட்டு ஊரை விட்டே போயிட்டான்.

ரெண்டு வருசம் கழிச்சு நிலா மட்டும் அவ அப்பாவுக்கு அப்பப்போ கடிதம் போட்டுக்கிட்டு இருந்தா. கோவாவிலிருந்து கொஞ்ச நாள் கழித்து மும்பை போய் அங்கே ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா. கேன்சர் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிச்சுட்டதால அவளுக்கு குணமாயிட்டுது. அஞ்சாறு வருஷம் போனதும் எந்தவித பாதிப்போ மறுபடி கேன்சர் திரும்புவதற்கான அறிகுறிகளோ இல்லைனு தெரிஞ்சதும் பத்து வருஷம் அங்கே இங்கே வேலை பார்த்துட்டு, பிறகு அந்த வேலையையும் விட்டு, இந்த வீட்டை வாங்கி இங்கே தங்கியிருந்தா.

இடையில அவ அப்பா இறந்து போனதால அவளுக்கு வேறு யாருமே இல்லை. அவ காதலிச்ச அந்தப் பையனை ஏமாத்திட்டமேனு குற்ற உணர்வுலயும், சேரும் நேரத்துல பிரிய நேர்ந்த துரதிர்ஷ்டத்தையும் நினைச்சு ரொம்ப நொடிஞ்சு போயிட்டா"

மனோவுக்கு தரை பிளந்துத் தன்னை விழுங்காதா என்று தோன்றியது. இங்கேயா இருந்திருக்கிறாள்? இந்தத் தரை என் நிலா நடந்தத் தரையா? இந்த ஜன்னல் என் நிலா கண்கள் பட்ட ஜன்னலா? இந்தக் காட்சி என் நிலாவின் பார்வையில் பட்டக் காட்சியா?

"பாருங்க மனோ, வாட் ஹேபன்டிஸ்... இந்தப் பொண்ணு ... தனக்கும் உடம்பும் முடியாம அப்பாவையும் காப்பாத்த முடியாம போயிடுமோனு பயந்து போய் அவசர முடிவெடுத்துட்டா.." என்றார் நண்பர்.

நண்பரின் மனைவி தொடர்ந்தார். "நான் அவளை கடைசியா எங்க கல்யாணத்துல பார்த்தது. ஆளே ரொம்ப மாறிட்டா. இவர் ரிடையரானதிலிருந்து மாதா மாதம் திருப்பதி வந்தமா, வழியில இங்க வந்து தங்கி அவளோட நெருக்கமாயிட்டோம். மனசுல வருத்தம் இருந்தா அது சிமென்டு மாதிரி, இறுகிக்கிட்டே எல்லாத்தையும் நசுக்கிடும்னு சொல்வாங்க. அது போலத்தான் நிம்மதியில்லாம ஏதோ வாழ்ந்துக்கிட்டிருந்தா. அவளைப் பார்த்துட்டுப் போறப்பெல்லாம் உங்களை மாதிரியே நாங்களும் இந்த வீட்டைப் பத்திக் கேட்போம்.."

நண்பர் குறுக்கிட்டுத் தொடர்ந்தார். "திடீர்னு ஒரு நாள் நான் இந்த வீட்டை விக்கப்போறேன், வாங்கறீங்களானு கேட்டா. அவ குருவாயூர்ல ஏதோ ரிசர்ச் பண்ற குழுவுல சேரணும்னு ஆசைப்பட்டா. அது சம்பளமில்லாத வேலையாம், வீடும் சாப்பாடும் கொடுப்பாங்களாம். இந்த வீட்டை வித்துட்டு அந்தப் பணத்துல அங்கே போறதா திட்டம் போட்டிருந்தா. நாங்க இங்க வந்த நேரம் சரியா அமையவும், இந்த வீட்டை நாங்களே வாங்கிட்டோம்", மனோவின் நண்பர் சொல்லி முடித்தார். "எதுக்குச் சொல்றேன்னா, இந்த மாதிரி யாராவது வித்தா மட்டுந்தான் இங்கே இடம் கிடைக்கும். எல்லாம் சோல்ட் அவுட்".

மனோவுக்குத் தலை சுற்றியது. "கொஞ்சம் தண்ணி குடுங்களேன்" என்று தடுமாறிக் கேட்டான்.

"மனோ என்ன ஆச்சு?"

".. ஒரு மாதிரி இருக்கீங்களே?"

"என்னப்பா ஆச்சு? ..அந்தப் பலகாரத்தைக் குடுக்காதேனு சொன்னா கேட்டியா?" என்று மனைவியிடம் கிண்டலடித்தார் நண்பர்.

"எனக்கு ஒன்றுமில்லை. அந்த குருவாயூர் முகவரியும் தொலைபேசி நம்பரும் இருக்கா?" பதட்டத்துடன் கேட்டான் மனோ.

"ஏன்?"

"முப்பது வருஷமா அதையே தான் நானும் கேட்டுக்கிட்டிருக்கேன்..ப்லீஸ், குடுங்களேன்"" என்றான் மனோ.

"பாத்துபா... என் மனைவியோட சொந்தம்ன்றதுனால சொல்லலே... கொஞ்சம் அராத்தான பொண்ணு.." என்றபடி தன்னிடமிருந்த டைரியிலிருந்து ஒரு தொலைபேசி எண்ணும் முகவரியும் எழுதிக் கொடுத்தார் நண்பர்.

திருத்தணியிலிருந்து திரும்பியதும் குருவாயூர் முகவரிக்குக் ஒரு வரியில் கடிதமெழுதினான்: 'அதே எள், அதே மனோ.'

தன்னுடைய நிலாவாக இருக்க வேண்டுமென்றுத் துடித்தான். சில வாரங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை. போன் செய்துப் பார்த்தான். பதிலில்லை.

நேரில் சென்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கிளம்பும் தினத்தில், சுருக்கமான பதில் கடிதம் வந்தது: 'தேயும் நிலா'.

    "என்ன சார் எழுந்துட்டீங்க? முழுக்க சொல்லிட்டுப் போங்க.. இப்ப நிறுத்தாதீங்க சார்" என்று ஒரே குரலில் அனைவரும் கெஞ்சினர்.

பொன் சார் நீண்ட கொட்டாவி விட்டு, "இல்லபா, ரொம்ப டயம் ஆய்டுச்சு..அப்புறம் பார்க்கலாம். கடையடைக்க காத்துக்கிட்டிருக்கான் பார், அவன் வீட்டுக்குப் போக வேணாமா?" என்றார். பக்கத்தில் இருந்தவனிடம் "இந்தா, ஒரு அம்பது ரூபா கொடு" என்று பிடுங்கி, கடை மூடாமல் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனிடம் கொடுத்தார்.

அங்கிருந்து கிளம்பினார்.

என்னிடம் திரும்பி "என் ரூம் நம்பர் என்னடா?" என்றார்.

"நூத்திப்பத்து சார். முதல் மாடி" என்றேன்.

பொன் சார் நடக்கத் தொடங்க, கூட்டம் விடாமல் "சார், அந்த லெட்டருக்கு என்ன அர்த்தம்? குடையுது சார், கதையை முடிக்காம போவாதீங்க சார்" என்றபடி பின் தொடர்ந்தனர். "ஒரு லார்ஜுக்குப் பத்து வருசம்னு கணக்கு போட்டு சொல்றீங்க.. இன்னொரு விஸ்கி வேணும்னா வாங்கியாந்துடறோம் சார்... கோடித்தெரு பாதர் வீட்ல இருக்கும் சார். திருடிட்டாவது வந்துடறோம் சார்... சார்..சார்.."

பதில் சொல்லாமல் நடந்த பொன் சார், மாடிப்படி ஏறும் போது தடுமாறிக் கீழே விழுந்தார்.

"ஐயோ! சார்...!"

    மணி காலை நாலரை. பொன் சாரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பினேன். இரவு முழுவதும் யாரும் தூங்கவில்லை. எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

"மாரடைப்பு. பைபேஸ் பண்ணப் போறாங்களாம். பிழைக்க சான்சு இருக்குன்றாங்க. ஆனா சர்ஜரி முடிஞ்ச பிறவுதான் முடிவா சொல்வாங்களாம். அவர் குடும்பத்துக்கு உடனே தகவல் சொல்லச் சொன்னாங்க. பொன் சார் குடும்பம் யாரு என்னானு யாருக்காவது தெரியுமா? காலைல ஆபீசுக்குப் போன் பண்ணிக் கேக்கணும்" என்று நான் தலைப்புச் செய்தி கொடுத்தவுடன், அவரவர் அறைக்குச் சென்றனர்.

பொன் சார் அறைச்சாவி என்னிடம் இருந்தது. மருத்துவமனையில் என்னிடம் கொடுத்திருந்த ஒரு பையில் அவருடைய பேன்ட், ஷ்ர்ட், பேனா, பர்ஸ் எல்லாமிருந்தது. பையை அவருடைய அறையில் போட்டுவிட்டுப் போக எண்ணித் திறந்தேன்.

கட்டிலருகே இருந்த நாற்காலி மேல் அந்தப் பையைப் போட்ட போது கவனித்தேன். அருகே மேஜை மேல் இருந்தக் கடிதத்தைக் கவனித்தேன். பழுப்பேறிய பேப்பரில், பழைய கடிதம். ஏதோ தோன்ற, எடுத்துப் படித்தேன். படித்துவிட்டு அதிர்ந்து போய் பைக்குள்ளிருந்த பர்சைத்திறந்து அவருடைய டிரைவிங் லைசென்சைப் பார்த்தேன்.

பொன்மனோகர் ராமசாமி லேசாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

பர்சுள் தேடியபோது இன்னொரு புகைப்படம். சற்றே வெளிறியப் புகைப்படம். முகத்தோடு முகமிணைத்த டீனேஜ் ஆணும் பெண்ணும். புகைப்படத்தைத் திருப்பிப் பார்த்தேன். நினைத்தபடியே இருந்த வரிகளைப் படித்ததும் எனக்கே நெஞ்சையடைத்தது.

என் அதிர்ச்சியை அடக்கிக்கொண்டு அறையெங்கும் தேடித் பார்த்தேன், ஏதாவது போன் நம்பர் இருக்கிறதா என்று.

பொன் சார் பெட்டியில் அவருடைய டைரி இருந்தது. முதல் பக்கத்தில் ஒருவரிக் கடிதம். "தேயும் நிலா". கூடவே இருந்த உறையில் விலாசம்.

    மணி காலை ஏழரை. வாடகைக் காரில் குருவாயூர் போய்க் கொண்டிருக்கிறேன். வேகமாகப் போகும்படி டிரைவரை அடிக்கடி தூண்டிக் கொண்டிருக்கிறேன்.

பொன் சாருடைய குடும்பம் யாரென்றுப் புரிந்துவிட்டது. குருவாயூர் சென்றால் தீர்மானமாகத் தெரிந்து விடும்.

இருங்கள், ஒரு வேளை இந்தக் கதைக்கும் ஒரு முடிவு தெரியலாம்.



தொடரும் ►►


2011/09/15

ஒருமனம்




1 2 3 4 5 ◀◀ முன் கதை

"ஆசையிருக்கானு கேட்டினா இருக்குனு சொல்வேன். இல்லேனா உன்னைப் பாக்க வந்திருப்பேனா? ஆசைப்படுறதுக்கும் அது நிறைவேறதுக்கும் நடுவுல ஒரு நதியே ஓடுது மனோ"

"நீந்தி வந்துட வேண்டியது தானே? முடியாதா?"

"முடியாதாங்கற கேள்விக்கு விடையே கிடையாது. தேவையாங்கிறது தான் கேள்வி"

"சரி, தேவையா?"

"தேவைங்கறது மாறிட்டே வருதே? இப்போதைய தேவையா இன்னொரு நாளைய தேவையா?"

"எனக்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை.. இந்தா.. இதான் என் தலை.. இது பெஞ்சு.. என் தலையைப் பிடிச்சுட்டு இப்படித் தள்ளித்தள்ளி இடிச்சின்னா கேள்வியே கேக்க மாட்டேன்.. இந்தா.."

நிலா சிரித்தாள். கணம் பொறுத்து, "உன்னோட தேவை என்ன?" என்றாள்.

"இரண்டெழுத்து. அது இல்லாட்டி மூணெழுத்தும் நாலெழுத்தும் தேவையில்லை"

"அப்படின்னா?"

"தங்களுக்கு மட்டுமே சூனியம் பேச வருமென்று நினைத்தீர்களோ மகாராணி?"

"டேய்.." என்று அதட்டி, அவனுடைய இடது கைவிரல்களைப் பிடித்திழுத்துச் சொடுக்கிட்டாள் நிலா. "நீ சொல்லாட்டிப் போயேன்.. சரி, என்னோட நாலெழுத்துத் தேவையைச் சொல்றேன். நி ம் ம தி"

"எனக்கும் தான்.." என்ற மனோ, வலது கையை நீட்டினான்.

"நான் தேடுற நிம்மதி.. " என்ற நிலா, அவன் கையைத் தட்டிவிட்டாள். பிறகு வலிய இழுத்து வைத்துக்கொண்டாள். "..என் அப்பா அம்மாவுக்கு"

"போச்சுடா!" என்ற மனோ தன் கைகளை இழுத்து நெற்றியில் அழுத்திக்கொண்டான். "ஆமா, நீ காலையில எதுனா சாப்பிட்டியா? தலை சுத்துதா? மயக்கமா வருதா?"

"சீரியசா பேசறேன் மனோ" என்ற நிலா, அவனுடன் இறுக்கமாக நெருங்கியமர்ந்தாள். "மனோ... இந்தப் பத்து பதினைந்து வருஷத்துல எவ்வளவோ நடந்து போச்சு, அதெல்லாம் இப்பப் பேச நேரமுமில்லை, பேசிப் பலனுமில்லை. சிவா நல்லவர். நான் சிவாவைக் கல்யாணம் செய்துகிட்டா என்னைப் பெத்தவங்களுக்கு நிம்மதியாயிருக்கும்"

"நான் உங்க அம்மாகிட்ட பேசட்டுமா?"

"அதுக்கு நீ செத்தா முடியும்... இத்தனை நாள் கழிச்சு சந்திச்சிருக்கோம், அதுக்குள்ளே ஏன் சாகப் பாக்குறே?"

"இப்ப மட்டும் நான் என்ன செஞ்சிட்டிருக்கேன்னு நினைக்கிறே?"

"மனோ, எங்கம்மா இறந்து போய் ஒரு வருஷமாகுது. பத்து வருஷத்துக்கு மேலே கேன்சர்ல ரொம்பக் கஷ்டப்பட்டாங்க... சர்ஜரி, ரேடியேஷன், கீமோ... பிறகு ரிலேப்ஸ்... கை, கால், வயிறுனு பரவி, வலி தாங்க முடியாம...ஷி வாஸ் டெவஸ்டேடட். என்னால நினைச்சுப் பார்க்கக்கூட முடியலை. என் வாழ்க்கை நாசமானதுக்கு அவங்களுக்குக் கிடைச்ச தண்டனைனு.. தானே ஏதோ நினைச்சுக்கிட்டு.. சைகலாஜிகலா வேறே ரொம்ப சித்திரவதைப் பட்டாங்க" என்றபடி தன் தோளில் சாய்ந்த நிலாவை அணைத்து அழுத்திக் கொண்டான் மனோ.

சற்று அமைதியான நிலா தொடர்ந்தாள். "எங்கப்பாவைப் பத்தி நீ என்ன கேள்விப்பட்டியோ தெரியாது. தாஸ் குடும்பத்துக்கிட்டே நிறையத் திருடிட்டாரு. பன்னீர் எல்லாத்தையும் மன்னிச்சு என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதா சொன்னான்.. என்னால முடியலே. எங்கப்பா கிட்டே போய் பெரிய தாஸ் வற்புறுத்தினாரு என்னைக் கல்யாணம் செஞ்சு வக்கச் சொல்லி. நான் தீர்மானமா முடியாதுனு சொன்னதும் எங்கப்பாவுக்கு என் மேலயும் உன் மேலயும் ரொம்பக் கோபம்..

ஜெயிலுக்குப் போக வேண்டிய நிலமை வந்ததும் நான் பன்னீர் கிட்டே கெஞ்சி, அவர் மேலே இருந்த கேசைக் கைவிடச் செஞ்சேன். எங்க வீட்டை அவங்க கிட்டே கொடுத்துட்டு ஊரை விட்டே ஓடிறதா சொன்னேன். மிச்ச பணத்தை மாசா மாசம் கொடுத்துடறதா சொன்னேன்.. பன்னீர் என் மனசைப் புரிஞ்சுக்கிட்டு எங்கப்பாவோட சொத்து.. இருந்த பணம்.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கொஞ்சநஞ்ச மானத்தோட ஊரை விட்டு ஓட வழி செஞ்சான்..

அதுக்குப் பிறகு ஊர்ல விஷயம் பரவி ரொம்ப அவமானமாயிடுச்சு.. கொஞ்ச நாள் பேங்குல ட்ரேன்ஸ்பர் வாங்கிட்டு என் வேலையை வச்சுகிட்டு அங்க இங்க சுத்தினோம்.. எங்கப்பாவோட கோவம் மெள்ள உள்கோபமா மாறி தன்னையே வெறுக்கத் தொடங்கினாரு. அப்பத்தான் எங்கம்மாவோட வியாதி முத்தினது தெரிய வந்துச்சு.. தாஸ் குடும்பக் கடன், எங்கம்மாவோட மருத்துவம்னு நான் பணம் சேர்க்கறதுல குறியா இருந்துட்டேன் மனோ.. பணம் சேக்குறதா சொன்ன உன்னைப் புண்படுத்திப் பேசின பேச்சை நான் மறக்கவே இல்லை..

சிவா பத்து வருஷமா எங்களுக்கு நண்பராகவும், துணையாகவும் இருந்துட்டு வரார். அவரோட செல்வாக்குலதான் இந்த பேங்க் வேலையும் கிடைச்சுது.. என் கடனை சீக்கிரமா அடைக்க முடிஞ்சுது.. எங்கம்மா சாகறப்ப சினிமா பாணியில என் கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டாங்க, நான் சிவாவைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு.."

"சிவாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?" என்றான் மனோ.

"பின்னே? சாகற சமயத்துல சத்தியம் செய்துட்டு சும்மா இருக்கலாமா? எங்க அம்மாவோட ஆத்மா வருத்தப்படாதா?"

"அப்ப இந்த ஆத்மா?" என்று அவள் கையை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான் மனோ.

"ஐயே.. ஆம்பிளைங்களுக்கு ஆத்மா அங்கயா இருக்கு?" என்று அவனைச் சீண்டினாள் நிலா. "உன்னை யாரு இப்ப திடீர்னு என் முன்னால வரச்சொன்னது? ஒண்ணு செய்வோம்.. நீ இத்தனை நாள் பொறுமையா இருந்திருக்கே, இன்னும் கொஞ்சம் பொறுத்துக்க. நான் சிவாவைக் கல்யாணம் செய்துகிட்டு ஒண்ணு ரெண்டு வருஷம் ஜாலியா இருந்துட்டு.. அப்புறம் டிவோர்ஸ் பண்ணிட்டு.. உன்னைக் கல்யாணம் செஞ்சுக்குறேன்... என்ன சொல்றே?"

"உனக்கு விளையாட்டா இருக்கா?"

"சரி, வேண்டாம்.. நான் சிவாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உன்னை வேணா... வச்ச்ச்சுக்கட்டுமா?" என்று கண் சிமிட்டினாள்.

மனோ கோபத்துடன் பதில் பேசாமலிருந்தான்.

நிலா வேண்டுமென்றே பொறுத்திருந்தாள். பிறகு, "கோவமா? ஏய், இதோ பார், உனக்குப் பிடிக்குமேனு பட்டுப்புடவைக் கட்டிக்கிட்டு வந்தேன். முன்னெல்லாம் பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்தா புடவையைத் தொட்டுப் பாக்கற மாதிரி நைசா என் இடுப்பைக் கிள்ளி.. எது பட்டு எது இடுப்புனு புரியல..பட்டு மாதிரியே வழவழனு இருக்குனு சொல்லுவியே நினைவிருக்கா? ஐ மிஸ் தட், யு நோ?" என்றாள்.

மனோ தொடர்ந்து எதுவும் சொல்லாமலிருந்தான்.

நிலா அவன் கைகளை மீண்டும் இணைத்துக்கொண்டு, "மனோ.. நமக்கு சிவா ஒரு பிரச்னையே இல்லை. நாம கல்யாணம் செய்துக்க எங்கப்பா சம்மதிக்க மாட்டார், அதனால்தான்..." என்றாள்.

"ஏன்?"

"நீ என்னை ஏமாத்திட்டதா நினைச்சு உன்னை தினம் சபிச்சுக்கிட்டே இருக்கார். எங்கம்மாவும் உன் மேலே ரொம்ப வெறுப்பா இருந்தாங்க. வியாபாரம், பணம் எல்லாம் போய், இதெல்லாம் சேர்ந்து அவருக்கு நாலஞ்சு வருசமா உடம்பும் சரியில்லை, மனசும் சரியில்லை"

"புரியலையே.."

"உனக்குக் கடிதம் எழுதினேனில்லையா? எழுதச்சொன்னது எங்க அப்பா அம்மாதான். நீ கடிதத்தைப் படிச்சு ஓடி வந்ததும் உங்கிட்டே உண்மையைச் சொல்ல முடியாம ஏதோ சொல்லி மழுப்பினேன்.. கடைசியா ஒரு கடிதம் போடச்சொன்னதும் அப்பா தான்.. அதுக்குள்ளே விவகாரம் தீவிரமாயிடுச்சு.. நீ வந்த உடனே என்னை உனக்குக் கல்யாணம் செய்து வைக்க நினைச்சுக்கிட்டிருந்தாங்க. நல்லவேளை நீ வரலை"

"நல்லவேளையா? ஏன் அப்படிச் சொல்றே?"

"வந்திருந்தா நம்ம கல்யாணத்துக்குப் பிறகு எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே தற்கொலை பண்ணிக்கிட்டிருப்பாங்க. ரொம்ப நாள் கழிச்சு எங்கம்மா தான் சொன்னாங்க.. தாஸ் திருட்டு அவமானம் அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப பாத்திச்சு.. எனக்கு ஒரு வழி செஞ்சுட்டு அவங்க சாகத்துணிஞ்சிட்டாங்க" என்றாள்.

மனோவுக்குக் கோபம் வந்தது. "நான் ஏன் உடனே வரலைனு உனக்குத் தெரியாதா? நீ என்னை மறுபடி வரச் சொல்லவேண்டியது தானே? எங்கம்மா கிட்டேயாவது நிலமையைச் சொல்லியிருக்கலாமே?"

"உன் வீட்டுக்கு வந்தேன் மனோ. அப்பத்தான் உங்கம்மா உன்னை எவ்வளவு நம்பியிருக்காங்கனு புரிஞ்சுது. வோக் மி அப். எங்க அப்பா அம்மாவுக்கு மட்டும் என்னை விட்டால் யார் இருக்கா? அவங்களை விட்டு உன்னோட என்னால எப்படி வரமுடியும்? அதுவும் கைல காலணா இல்லாமல் அவமானத்தோடு தெருவுக்கு வந்த பிறகு? போதாக்குறைக்கு வியாதி வேறே. நான் போன பிறகு அவங்க ஏதாவது செய்துக்கிட்டாங்கனா? அப்படி எனக்கே தோணிச்சு.. நான் நெனச்ச மாதிரியே அவங்களும் நெனச்சிருக்காங்க பாரேன்..

உங்க வீட்டுக்கு வந்து உங்கம்மாவோட கொஞ்ச நேரம் இருந்தது, என்னைச் சரியாக சிந்திக்க வச்சுது. உன் ரூம்ல ராத்திரி முழுக்க தனியா இருந்தேன். ரொம்ப நிம்மதியான இரவு. நீ அங்கே என் கூடவே இருந்த மாதிரி ஒரு உணர்வு. அந்த நினைப்போட கிளம்பிட்டேன்.."

"அதுக்குப் பிறகாவது என்னைத் தேடியிருக்கலாமே?"

"நீ வேலைலயும் ஊர்லயும் இருந்தால் தானே?" என்று அவன் கண்களை நேராகப் பார்த்தாள். "நீ மட்டும் தான் உன் காதலைத் தேடிக் கொண்டிருக்கிறதா நினைப்பா?"

இருவர் கணகளிலும் கலக்கம்.

"நான் உங்கப்பாவைப் பாத்துப் பேசுறேனே?"

"வேண்டாம் மனோ. இப்ப நீ மறுபடி என் வாழ்க்கையில் வந்திருக்கேனு தெரிஞ்சா எங்கப்பா கோபமும் வருத்தமும் படுவாரு. அந்த அதிர்ச்சியினால அவரைக் கொல்ல விரும்பலை. கொஞ்சம் டயம் கொடு. இன்னிக்கு ஒரு நாள் சந்தோஷமா இருப்போம். இனிமே இதைப்பத்தி பேச வேண்டாமே?" என்றாள்.

இருவரும் அமைதியாக இருந்தார்கள். மெள்ள மனோ அவள் இடையில் கை வைத்து, புடவையுடன் சேர்த்து அவள் இடுப்பை வலிக்காமல் கிள்ளினான். "தேங்க்ஸ்" என்றான்.

"அப்புறம் எப்ப பேசுறது?"

"நாலு நாள் வேலை விஷயமா வெளியூர் போறேன் மனோ... வந்த பிறகு பேசலாமா?"

    மோன்டா மார்கெட் அருகே இரானிய டீக்கடையில் சிவாவும் மனோவும் நுழைந்து ஆளில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்தார்கள். "நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி சிவா" என்றான் மனோ.

"தட்ஸ் ஆல் ரைட்... ஆனா நிலாவுக்குத் தெரிஞ்சா வம்பாயிடும்"

அங்கே வந்த டீக்கடை சிப்பந்தியிடம் "பை டூ" என்றான் சிவா.

"நிலா ஒண்ணும் சொல்லமாட்டானு நெனக்கிறேன்" என்றான் மனோ.

அதற்குள் சிப்பந்தி ஒரு கப் டீயும் இரண்டு கண்ணாடி டம்ளரும் கொண்டு வைத்தான்.

சூடான டீயை அருந்திக் கொண்டிருந்தபோது, வேகமாக உள்ளே வந்தாள் நிலா. நேராக மனோ அருகே சென்று அவன் குடித்துக்கொண்டிருந்த டம்ளரைத் தட்டிவிட்டாள். டீ சிதறித் தெளிக்க டம்ளர் விழுந்து உருண்டது.

"அடடா.. நல்ல டீயை இப்படி வேஸ்ட் பண்றியே நிலா.. பாதிதான் குடிச்சிருந்தேன்.." என்றான் மனோ.

"எங்கப்பா கிட்டே பேசவேணாம்னு படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டியா?"

"நிலா நான் சொல்றதைக் கேள்.."

"தேவையில்லை.. எங்கப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும். என்னோட பேச்சுக்குக் கொஞ்சமாவது மரியாதை குடுக்க வேணாமா? இன்னும் இருபது வயசுக்காரன் மாதிரியே நடந்துகிட்டா எப்படி?"

"நிலா.."

"ஸ்டாப் இட். என் வாழ்க்கையை நாசம் பண்றதே உனக்கு வேலையா போச்சு இல்லே?"

அந்தச் சொற்களைக் கேட்டு அதிர்ந்த மனோவுக்குக் கோபம் வந்தது. 'கொஞ்சம் பேசாம இருங்க மனோ' என்று ஜாடை காட்டினான் சிவா.

நிலா தொடர்ந்து பொறிந்தாள். "நாலு நாள் நான் வெளியே போயிட்டு வரதுக்குள்ள இப்படி செய்யுறியே? எங்கப்பா கிட்டே நம்மளைப் பத்திப் பேச வேணாம்னு சொன்னா கேக்க மாட்டியா? இப்ப நான் இல்லே அவரை வச்சுகிட்டுத் திண்டாடணும்?"

"ஏன் நிலா? நானும் உன் கூட சேர்ந்து திண்டாடுறேனே? எனக்கு உன்னோட திண்டாட்டத்துல பங்கு தரச்சொல்லித் தானே தவமிருக்கேன்?" என்றான் மனோ.

சிவா இடையில் புகுந்தான். "நீங்க ரெண்டு பேரும் அனாவசியமா சண்டை போடுறீங்கனு தோணுது. உயிருக்குயிரா காதலிக்கறதா சொல்றீங்க... இந்த சின்ன விஷயத்தை இப்படி பெரிசு பண்றீங்களே? நான் உங்கப்பா கிட்டே பேசி எல்லாம் சமாதானமாயிடுச்சே நிலா.. இன்னும் ஏன் கோவப்படுறே? நிலா... மனோ அப்படி என்ன தப்பு செஞ்சுட்டாரு? நீ இல்லாதப்ப உங்கப்பா கிட்டே பேசியிருக்க வேணாம்.. ஆனா அதோட உள்ளர்த்தம் உனக்குப் புரியாமலா போகும்?"

"என்னால இவளை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலே சிவா.. அதான் பொறுக்க முடியாம அவ அப்பா கிட்டயே போய் அனுமதி கேட்டேன்.." என்றான் மனோ.

"ஆமா... இப்ப எங்கப்பா இந்தக் கல்யாணம் நடந்தா வீட்டுல பொணம் விழும்னு கத்திட்டிருக்காரு"

"அதெல்லாம் டிராமா நிலா" என்றான் சிவா.

"டிராமாவோ என்னவோ.. தேவையில்லாத சிக்கல். எங்கப்பா அனுமதியில்லாம கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொன்னேனா? எதுக்குத் தேவையில்லாம வயசான மனுஷனைப் போட்டு சித்திரவதை செய்யணும்? கொஞ்சம் பொறுத்துக்கனு சொன்னேன்.. அதுக்கு மதிப்புக் கொடுக்க வேணாமா? இந்த வயசுலயும் இம்பல்சிவா நடந்துகிட்டா? மூஞ்சியைப் பாரு.. பென்சில் தொலைச்சப் பிள்ளையாட்டம்.." என்று சற்றே தணிந்தாள். "இப்ப பாரு.. சிவாவைத்தான் கல்யாணம் கட்டிப்பேன்னு சத்தியம் செஞ்சு குடுக்கச் சொல்றாரு.."

"அவ்வளவுதானே? லீவ் இட் டு மி.. உங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்க வேண்டியது என்னோட ப்ளஷர். உங்கப்பா கிட்டே நானே பேசுறேன்.." என்றான் சிவா. நிலாவிடம், "டீயைத் தட்டி விட்டதுனால நீதான் பணம் கொடுக்கணும். வாங்க போவலாம்" என்றான்.

    அடுத்த மூன்று மாதங்களில் சிவாவின் தலையீட்டினால், நிலாவின் தந்தைக்கும் மனோவுக்குமிடையே இருந்த குழப்பமும் கோபமும் நீங்கியது. மனோ தினமும் நிலாவின் தந்தையோடு அரை மணியாவது செலவழித்தான். தன் வாழ்வின் தேடல்களைச் சொன்னான். மெள்ள இருவருக்குமிடையே நேசம் மலரத் தொடங்கியது. நிலாவின் தந்தையே அவர்கள் திருமணப் பேச்சை எடுத்தார். "நிலா... நீ மனோவையே கல்யாணம் செஞ்சுக்கமா" என்றார் ஒரு நாள்.

அடுத்த மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துப் பதிவுத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்கள்.

    தாலுகா அலுவலகத்தில் தயாராகக் காத்துக்கொண்டிருந்தான் மனோ. எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். நிலாவை மணக்கப்போகிற உற்சாகமும் உவகையும் அவன் முகத்தில் தெரிந்தன. பதினொரு மணிக்குப் பதிவுத் திருமணம். பத்தரை மணிக்கு சிவாவும் நிலாவின் தந்தையும் வந்தனர்.

நிலா மட்டும் வரவில்லை.

    ணி இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. சாம்ராட் மதுக்கூடத்தில் எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சாப்பாட்டிற்கு பிறகு எல்லோருக்கும் ஐஸ்க்ரீம், ரசமலாய், பாசந்தி கொண்டு வரச்சொல்லி அதுவும் காலியாகியிருந்தது. பொன் சார் மட்டும் இனிப்பு சாப்பிடவில்லை. பதிலுக்கு இன்னொரு விஸ்கி கொண்டு வரச்சொல்லி மெள்ள அருந்திக் கொண்டிருந்தார். சிறிய ஏப்பம் ஒன்றை விட்டு நெஞ்சைக் கைகளால் குத்திக்கொண்டார். "சிக்கன்ல ரொம்ப மசாலா...புர்ஜீல பெருங்காயம் தூக்கல்... அதான் அஜீரணம்" என்றார்.

"மசாலாவை விடுங்க சார், மனோவைப் பத்தி சொல்லுங்க... அப்புறம் என்ன ஆச்சு?" என்றான் குழுவில் ஒருவன்.

"நிலா வரவேயில்லை, அவ்வளவு தான். வீட்டுலயும் இல்லை, ஊர்லயும் இல்லை. தேடிப் பார்த்துட்டு பழையபடி வெறுத்துப் போனான் மனோ"

"என்ன சார் இது? அவ்ளோதானா? அதுக்குப் பிறகு மனோவும் நிலாவும் சந்திக்கவேயில்லையா?"

"பத்து வருஷத்துக்குப் பிறகு மறுபடி அவளைப் பத்தித் தகவல் கிடைச்சுது அவனுக்கு" என்றபடி எழுந்தார்.

"எங்க சார் போறீங்க? மிச்சத்தையும் சொல்லிட்டுப் போங்க"

வயிற்றையும் நெஞ்சையும் தட்டிக்கொண்டு "இதா வரேன்" என்று கழிவறைப் பக்கம் போனார்.

"சீக்கிரம் வாங்க சார், பனிரெண்டு மணிக்கு கடை மூடிடுவாங்க. இப்ப யாகம் எல்லாம் பண்ண வேண்டாம்"

எங்களுக்குள் அரட்டையடித்தோம். மூன்றாவது சிகரெட் முடிந்துபோகும் நேரத்தில் பொன் சார் திரும்பி வந்தார். களைத்துப் போயிருந்தார். கூட்டம் அவரை விடவில்லை. நாலைந்து முறை பெருமூச்சு விட்டார். "சிகரெட் பிடிக்காதீங்கன்னு சொன்னா கேளுங்கடா, தடிப்பசங்களா" என்றார். தொண்டையைப் பல முறை கனைத்துக் கொண்டே தொடர்ந்தார்.


தொடரும் ►►

2011/09/08

ஒருமனம்




1 2 3 4 ◀◀ முன் கதை

"மனோ.. எப்படி இருக்கே?" என்றாள் நிலா, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல். "உன்னை மாதிரியே இருந்திச்சு பார்த்தப்போ...எங்கே அந்தப் பொண்ணு?" என்றாள்.

"போயிட்டா" என்றான். "வெறும் நட்பு தான்" என்றான் அவசரமாக, ஏதோ நினைவுக்கு வந்தவன் போல்.

"மனோ, இது என் நண்பர் சிவா" என்று உட்கார்ந்திருந்தவனை அறிமுகம் செய்து வைத்தாள். "சிவா, இவர் மனோ. சின்ன வயசுல நாங்க ரொம்ப நெருக்கம்" என்றாள்.

"ஹலோ" என்ற சிவா, பழச்சாறுக் கோப்பையை கீழே வைத்தான். சட்டென்று நிலாவிடம், "டின்னருக்கு நேரமாச்சு, போலாமா?" என்றான் சிவா.

"எட்டு மணிக்குப் போனா போதும்னு சொன்னியே சிவா? டைம் இருக்கில்லே?" என்றாள் நிலா.

"இல்லை நிலா. ப்ளூமூன்ல சீக்கிரம் சாப்பிட்டு எட்டு மணிக்கு எனக்கு ஒரு வேலை இருக்குனு சொன்னேன்.." என்றான். நிலாவை அவசரப்படுத்துவது போல் தோன்றியது மனோவுக்கு.

"உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் மனோ" என்றாள் நிலா. சிவா நிலாவைத் தள்ளாத குறையாக அவளுடன் நடந்தான்.

அவர்கள் இருபதடி போகும் வரை ஒன்றும் சொல்லாமலிருந்த மனோ உரக்க அழைத்தான். "நிலா".

நிலா நின்றாள். மனோ விரைந்தான். "உன்னோடு பேசணும்" என்றான்.

அவனைக் ஆச்சரியம் கலந்த கேள்வியோடு பார்த்தாள் நிலா. "மனோ, எங்களுக்கு டின்னருக்கு நேரமாச்சு. நாளைக்கு வேணும்னா என் ஆபிசுக்கு வாயேன், பேசலாம். எக்சிம் பேங்க். அபிட்ஸ்ல இருக்கு ஆபீஸ்" என்றாள்.

மறு நாள் லீவ் எடுத்துக்கொண்டு காலை எட்டு மணிக்கெல்லாம் அபிட்ஸ் ரோடு எக்சிம் பேங்கிற்குப் போய்விட்டான். பத்து மணிக்குத்தான் திறப்பார்களாம். அலுவலகம் திறப்பதற்குள் பக்கத்து டீக்கடையில் நாலைந்து டீயாவது குடித்திருப்பான். சரியாகப் பத்து மணிக்கு பேங்க் திறந்ததும் உள்ளே போனான். நிலாவைக் காணோம். ரிசெப்சனில் இருந்த ஸ்லீவ்லெஸ் பெண்ணிடம் "இங்க வேலை பார்க்கற நிலா.. அவங்களோட பேசணும்" என்றான்.

"மேனேஜர் ஆபீஸ் மாடில இருக்கு, அங்கே" என்று மாடியை நோக்கி விரலைச் சுட்டிக்கொண்டிருந்த ஸ்லீவ்லெஸ் முடிக்குமுன்னர் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மாடியேறினான். மாடியில் வழியை மறைத்து நின்று கொண்டிருந்தவரிடம் "சார், மேனேஜர் ஆபிஸ் எங்கே இருக்கு?" என்றான்.

"நான்தான் மேனேஜர்.. என்ன வேணும் உங்களுக்கு?"

"சார், இங்கே வேலை பாக்கிற நிலா... அவங்க எங்க இருக்காங்க?"

"அவங்க இன்னிக்கு வரமாட்டாங்க சார், லீவு. நீங்க யாரு?"

"சரியாப் பாருங்க சார், என்னை இன்னிக்கு இங்க வரச்சொன்னதே நிலா தான்"

"நான் எங்கேயும் பார்க்க வேண்டாம். நிலா மேடம் எங்க ஜிஎம். அதோ எதிர்ல பாருங்க, அதான் அவங்க ஆபீஸ். போனை வச்சுட்டு இப்பத்தான் வரேன். ஏதோ முக்கியமான வேலை இருக்கறதா சொல்லி லீவ் போட்டிருக்காங்க சார். நீங்க யாரு, உங்களுக்கு என்ன வேணும்?"

"அவங்க வீட்டு அட்ரெஸ் குடுக்க முடியுமா?"

"அட்ரெஸ் குடுக்கணுமா? விளையாடறீங்களா? யாரு நீங்க? கிடுகிடுனு படியேறி வந்து... வம்பு பண்றீங்களே?"

"நாளைக்கு வருவாங்களா?"

"என்னங்க இது, நான் கேட்ட எதுக்கும் பதில் சொல்ல மாட்றீங்க... யார் சார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?"

மனோ அழாக்குறையாக, "சார், நான் நிலாவோட ரொம்ப வருசமா பழக்கம் சார். எத்தனையோ வருசத்துக்குப் பிறகு நேத்து டேங்க்பன்ட்ல சந்திச்சோம்... இன்னிக்கு காலைல இங்கே வரச்சொன்னதே நிலாதான்... ப்லீஸ் சொல்லுங்க சார், நாளைக்கு வருவாங்களா?"

"என்ன சார் இப்படி கேக்குறீங்க? நாளைலந்து நாலு நாள் தசரா லீவாச்சே? இனி செவ்வாக்கிழமைதான் ஆபீஸ். நிலா மேடம் செவ்வாய் புதன் டில்லி போறாங்க. வியாழக்கிழமை மதியம் தான் ஆபீஸ் வருவாங்க"

மனோவின் முகம் உடனே வாடிப்போனதைக் கவனித்த மேனேஜர், "உங்க பேர் குடுங்க, வந்துட்டுப் போனதா சொல்றேன்" என்றார்.

பதில் சொல்லாமல், பெரும் ஏமாற்றத்துடனும் கனத்த மனத்துடனும் கீழே இறங்கி வந்தான். வாசலைத் தாண்டிக் கீழே படியிறங்கத் தொடங்கியவன் நின்றான். எதிரே கீழ்ப்படியில் நிலா.

தானணிந்த பட்டுப்புடவைக்கு அழகூட்டியபடி நின்றுகொண்டிருந்த நிலா, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

அவளைப் பார்த்ததும் ஆத்திரமும் ஆனந்தமும் கலந்து உடலெங்கும் ஓட, விரைந்தான். அவளை அள்ளியணைத்துக் கொள்ளத் தோன்றினாலும் பத்து வருடங்களுக்கு மேற்பட்டப் பிரிவினால் உண்டான அன்னியம் குறுக்கே வந்து தடுத்தது.

"எத்தனையோ பேச வேண்டுமென்று உனக்காக லீவ் போட்டு வந்தா... நீ இல்லைன்னதும் கடுப்பாயிட்டேன்" என்றான்.

"நானும் உனக்காகத்தான் லீவ் போட்டேன். பேசணும்னு சொன்னியே? வெளியே போய் பேசலாம்னுதான்" என்றாள். "என்ன சொன்னார் மேனேஜர்? அவரைக் கோபிக்காதே. நான்தான் உன்னை வேணும்னே காய்ச்சச் சொன்னேன்..."

"நீ உருப்படுவியா?" என்றான் மனோ.

"எல்லாம் உன் தயவுதான்" என்ற நிலா அவனிடம், "சரி, வேறே எங்கயாவது போகலாம் வா" என்றாள். காத்திருந்த வெள்ளை அம்பேசடர் கதவைத் தட்டி, "அமர், ஆப் ஜாவ்.. ஹமே பாஹர் ஜானா.."

"மை சோட்தா மேம்சாப்"

"நக்கோ" என்றாள். "ஆப் ஜாவ்" என்று அம்பேசடர் டிரைவரை விரட்டினாள். வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மனோவிடம், "ஆபீசுக்கு வந்து போகத்தான் ஆபீஸ் கார். சொந்த விஷயத்துக்குப் பயன்படுத்துறதில்லே.. ஆட்டோல போனா பரவாயில்லையா?" என்றாள். சற்றுப் பொறுத்து வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள். "நீயும் தான் எங்கூட வாயேன்..?" என்றாள் மனோவிடம். ஏறிக்கொண்டதும், "சிகந்த்ரபாத் க்ளப்" என்றாள். ஆட்டோ கிளம்பிய வேகத்தில் சற்று அதிர்ந்தனர் இருவரும்.. "ஹல்லு" என்றாள் அவசரமாக.

எதுவும் பேசாமலிருந்த மனோவிடம் "திடீர் மௌனவிரதமா?" என்றாள்.

"இல்லே... ஹைதராபாத் இந்திலே இப்படி வெளுத்து வாங்குறியேனு ஆச்சர்யத்துல நாக்கு ஒட்டிக்குச்சு.." என்றான்.

"ஹ்ம்ம்ம்... ரோடாந் மே பஸ்சாந் ஜாதானு இந்தப் பசங்க பேசுறத இந்தினு நீதான் சொல்லணும். நல்ல உருது கேக்கணும்னா சார்மினார் போகணும், போவோமா?" என்றாள்.

"வேற வேலை இல்லே? எவ்வளவு வருஷம் கழிச்சுப் பாக்கறோம்.. சார்மினார் முக்கியமில்லை நிலா" என்றான்.

"அப்ப எது முக்கியம்னு நீ சொல்லு, கேட்டுக்குறேன்"

கால் மணி போல் இருவரும் அமைதியாக இருந்தார்கள். வண்டி அதற்குள் சுதிர் க்ளினிக்கைத் தாண்டி, பப்லிக் ஸ்கூல் தாண்டி, பேகம்பேட் ஏர்போர்ட் அருகே வந்துவிட்டது.

"ஏன்?" என்றான் மனோ.

"புரியலியே?" என்றாள்.

"ஏன் என்னை விட்டு விலகினாய்?"

"நீதான் சொல்லேன்?"

கண நேர அமைதிக்குப் பின், "என்னை எப்படி நீ மறக்கலாம் நிலா?" என்றான்.

"நான் மறந்தேனா?"

"பின்னே ஏன் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடினே?"

நிலா பதில் சொல்லவில்லை. மனோவின் எதிர்ப்புறம் திரும்பி ஆட்டோவின் வெளியே பார்த்தாள். சில நிமிடங்களில் சிகந்த்ரபாத் க்ளப் வந்துவிட்டது. உள்ளே செல்லத் தயங்கிய ஆட்டோவை, "லோபகெல்லு" என்றாள். ஆட்டோ மெள்ள உள்ளே சென்று நின்றது.

"அடேங்கப்பா.. தெலுங்கானா தெலுங்கு வேறயா?" என்றபடி இறங்கிப் பணம் கொடுக்க முனைந்த மனோவைத் தடுத்தாள் நிலா. "நான் குடுக்கறேன்" என்றாள்.

ஆட்டோ போனதும், "கொஞ்சம் வெளியவே இருப்போமே? என்றாள். சற்றுத் தொலைவில் ஒதுங்கி இருந்த மரத்தடிக்கு நடந்தார்கள். அகண்ட சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தார்கள். "நான் கேட்ட கேள்விக்கு பதில் காணோமே நிலா? ஏன் எங்கிட்ட கூட சொல்லாம ஊரை விட்டு ஓடினே? என்னை ஒதுக்க உனக்கு மனம் எப்படி வந்துச்சு?"

"உனக்குக் கடிதம் போட்டேனே, உடனே வரும்படி... நீதான் வரவில்லை" என்றாள்.

"சரி, அதற்குப் பிறகாவது ஒரு கடிதம் போட்டிருக்கலாமே?"

"போட்டிருக்கலாம்"

"அவசரமா வானு இன்னொரு தந்தியாவது கொடுத்திருக்கலாமே?"

"கொடுத்திருக்கலாம்"

"பிடி கொடுத்து பேசு நிலா... உனக்கும் எனக்கும் இருந்த உறவுக்கு மதிப்பு கொடுத்தாவது நேராகப் பேசு. ஏழு பிறவிக்கும் என் உயிர் உனக்கு சொந்தம்னு சொன்னது உனக்கு நினைவிருக்கா?"

"உனக்குத்தான் மறந்து போச்சுனு நினைச்சேன். அதனால உன் உயிருக்கு நானே விடுதலை கொடுத்துட்டேன்"

"சே..." ஆத்திரப்பட்டான் மனோ.

"சண்டை போடுவதாயிருந்தா இங்கே வேண்டாம்.. உள்ளே போகலாம் வா".

"யார் அந்த சிவா?" என்றான் மனோ.

"வேண்டப்பட்டவர்னு வச்சுக்கியேன்"

"அப்படின்னா?"

"பொறாமையா?"

"பதில் சொல்லு"

"தேவையில்லை"

சிறிது நேரம் அமைதியாக இருந்த மனோ, "நிலா" என்றான் குரல் கரகரக்க. "உன்னை என்னால் மறக்க முடியவில்லை" என்று அழத் தொடங்கினான். சிறு பிள்ளைபோல் தேம்பியழுதுவிட்டு, பிறகு அவளைத் தேடியலைந்த விவரத்தையெல்லாம் சொன்னான்.

"எனக்காகக் காத்திருக்கக் கூடாதா நிலா?" என்றவன், நிமிர்ந்து நிலாவைப் பார்த்தான். அவள் கண்களிலும் நீர்.

"பின்னே யாருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேனென்று நினைக்கிறாய்?" என்று கணகளைத் துடைக்காமல், அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"யார் சிவானு இன்னும் சொல்லவில்லையே நீ?" என்றான் மெல்ல.

"சொல்லாவிட்டால்?"

"தோளில் சாய்ந்து கொள்ளக்கூடாது போ!"

"சரி" என்று எழுந்தவளை உடனே கையைப் பிடித்து நிறுத்தினான்.

"நீதானே.." என்று சொல்லத் தொடங்கியவளைத் தடுத்து, "தோளில் சாய்ந்து கொள்ளக்கூடாதுனு தானே சொன்னேன்... மடியில தலை வச்சுக்கலாமே" என்று அருகில் இழுத்தான். "இத்தனை வருஷத்துக்குப் பிறகு உன்னைப் பார்த்ததிலே எனக்கு சந்தோஷம், வருத்தம், கோபம், நன்றி, ஆத்திரம், அவசரம் எல்லாம் கலந்து நொந்து போயிருக்கேன் நிலா... நான் ஏதும் தவறா சொன்னா பெரிசு பண்ணாதே".

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு "உன்னைப் பார்த்ததில் எனக்கு எத்தனை சந்தோஷமென்று உனக்கென்ன தெரியப் போகுது?" என்றாள்.

"உன்னை நினைச்சு ஏங்காத கணமே இல்லை நிலா"

"நீ இன்னும் என்னையே நினைச்சு ஏங்கிட்டிருக்குறது உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுதே..." என்று அவன் கன்னங்களை இரு கைகளாலும் ஏந்தி அவன் முகத்தருகே நெருங்கி, "அதே எள் வெடிக்கும் மூஞ்சி.." என்றபடி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

மனோ அவள் கைகளைத் தன் முகத்திலிருந்து விலக்கி, விடாமல் பிடித்தபடியே அவளை ஒரு சுற்று திருப்பி, தன் மடிமேல் அமர்த்தி அணைத்துக்கொண்டான். "இதோ பார்" என்று தன் பர்சுக்குள்ளிருந்து சிறிய புகைப்படத்தை எடுத்துக்காட்டினான்.

பிறந்தநாளன்று நிலா எடுத்த புகைப்படத்தின் பிரதி. கோபம் பொங்கும் அவன் முகத்தருகே குதூகலம் பொங்கும் அவள் முகம். "நினைவிருக்கா?" என்றான்.

"இல்லாம என்ன?" என்று அவன் கையிலிருந்து பிடுங்கிப் புகைப்படத்தைத் புரட்டிப் பார்த்தாள். பின்புறம், "எள்ளானாலும் என் மனோ" என்று அவள் எழுதியிருந்தது அப்படியே இருந்தது.

தன் கைப்பையிலிருந்து பேனாவை எடுத்து அதன் கீழே அன்றைய தேதியிட்டு 'அதே எள், அதே மனோ' என்று எழுதினாள். "இந்தா" என்றாள்.

படித்துவிட்டு, "என்னிக்கும் நான் அதே மனோ தான்" என்றவனை நெருங்கி மறுபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

கண அமைதிக்குப் பிறகு, "கண்டிப்பா சொல்லியாகணுமா? சிவா என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறவர்"

"கல்யாணமா?" அதிர்ந்தான்.

"ம்" என்றாள். மேலே சொல்வாளென்று எதிர்பார்த்துக் காத்திருந்தவனிடம் "வேறே ஏதாவது பேசலாமே?" என்றாள்.

"இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்றான், தொலைக்காட்சி நிருபர் பாணியில்.

"கிண்டலா?"

"பின்னே? பூகம்பத்தைக் கிளப்பிட்டு வேறே ஏதாவது பேசலாம்னு சாதாரணமா சொல்றியே?" என்றான். "சொல்லு நிலா. நம்ம உறவு விட்ட இடத்துலந்து தொடர ஆசைப்படுறேன். உனக்கு அந்த ஆசையில்லையா?"



தொடரும் ►►

2011/09/05

ஒருமனம்




1 2 3 ◀◀ முன் கதை

    னோகரன் சென்னைக்குத் திரும்பி வந்த ஒன்றிரண்டு மாதங்களில் மறுபடி நிலாவிடமிருந்து சுருக்கமாய் ஒரு கடிதம் வந்தது:
'உடனே வா, எதுவும் சொல்ல முடியாத நிலை. உடனே வராவிட்டால், நீ வரும் போது நானிருக்க மாட்டேன். தேட வேண்டாம். உன் எதிர்காலம் ஒளியுடன் விளங்கட்டும்'

கடிதத்தைக் கடுப்புடன் ஒதுக்கி வைத்தான். என்ன சொன்னாலும் தெரியவில்லையே இந்தப் பெண்ணுக்கு? நிலாவுக்கு எதுவும் நேர்ந்திருக்காது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேலையிலும் பணம் சேர்ப்பதிலும் கவனமாக இருந்தான்.

அதற்குப் பிறகு அவளிடமிருந்து கடிதமோ தந்தியோ வரவில்லை. இடையே அவனுக்குப் பதவி உயர்வு வரும் போலிருக்க, வேலையில் கவனமாக இருந்தான். அவன் எழுதிய கடிதங்கள் எதற்கும் நிலாவிடமிருந்து பதில் வராததால் கோபமாக இருக்கிறாள் என்றிருந்து விட்டான். பதவி உயர்வுக்கான குறிக்கோளுடன் வேலையில் கவனமாக இருந்தான். ஒன்றரை வருடங்களில் அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து, ஊரருகில் அவனது நிறுவனத்தின் கிளைக்கு மேலதிகாரியாக மாற்றலாகி வந்தான்.

சேர்த்த பணத்தில் நிலாவுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் அவளுக்குப் பிடித்த நீல நிறத்தில் ஒரு பட்டுச் சேலையும் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போனான். ஊரில் இறங்கியதும் நேராக நிலாவின் வீட்டுக்குப் போனான்.

தலையில் இடி விழுந்தாற்போலிருந்தது. நிலாவைக் காணோம். அவள் வீடு பூட்டியிருந்தது. வீட்டுக்கு வந்து விவரம் கேட்டான் அம்மாவிடம்.

"அவ அம்மாவுக்கு கேன்சர் வந்திருச்சாம். அவள் அப்பாவும் வியாபாரத்தில் எக்கச்சக்க கடன் வாங்கி எல்லாம் நஷ்டமாம்.. என்ன விவரம்னு தெரியலைபா.. ஏதோ தில்லுமுல்லு செஞ்சார்னும் சொல்லிக்கிறாங்க.. போலீஸ்காரங்களும் கடன்காரங்களும் ஒரு நாள் வந்திருந்தாங்களாம்.. நம்ம பாலகணபதி மவன் சொன்னாரு. அவமானம் தாங்காம ஊரை விட்டே போய்ட்டதா சொல்றாங்கபா"

மனோகரன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். மயக்கம் வரும் போலிருந்தது. 'நிலா! நிலா!' என்று அவன் மனம் அலறியது.

"ஒரு வருஷமாகவே எல்லாம் தெரியுமாம், நிலா தான் எதுவும் சொல்லாம இருந்திருக்கா. ஒரு நாள் ராத்திரி இங்கே வந்தா. ராத்திரி முழுதும் உன் ரூமிலே இருந்துட்டு.. அப்பப்ப விசும்பி விசும்பி அழுதுகிட்டே இருந்தாப்பா, பாவம்.. காலையில போயிட்டா. என்ன கேட்டாலும் பதில் சொல்லாம போயிடுச்சுபா. அதுக்குப் பிறகு அவங்களை குடும்பத்தோட காணோம்பா"

மனோவுக்குப் பொறி தட்டியது. நிலா தன்னை அடிக்கடி அழைத்தது இதற்காகத்தானா? ஆறுதல் துணை தேடி அழைத்தவளை ஒதுக்கிவிட்டதற்காகத் துடித்தான். "இல்லம்மா. நிலா என் கிட்ட சொன்னா. நான் தான் புரியாம இருந்துட்டேன். இப்ப எங்கே போனா தெரியலியே?" அவனுக்கு அழுகை வந்தது. அடக்கிக் கொண்டான்.

"அந்த தாஸ் கிட்டே போய்க் கேள், அவங்க கிட்டதான் கடன் வாங்கியிருந்தாங்க. அவன் கூட நிலாவைக் கட்டிக்கிறதா சொன்னானாம்".

வெறியுடன் பன்னீர் வீட்டுக்கு ஓடினான். பன்னீரிடம் நிலாவைப் பற்றிக் கேட்டான்.

பன்னீர் நிதானமாகச் பேசினான். "மனோ, நான் நிலாவை விரும்பியதென்னமோ உண்மை தான். ஆனா அவள் உன்னைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட மறுத்துவிட்டாள். விருப்பமில்லாத அவளுடன் எனக்கென்ன வேலை? நிலாவோட அம்மாவுக்கு வியாதி முத்திப் போகத் தொடங்கிடுச்சு.. அவங்கப்பா செஞ்சது பெரிய ப்ராடு. எங்க குடும்பத்துல கடன் வாங்கி எங்களையே ஏமாத்தப் பாத்தாரு.. மாட்டிக்கிட்டாரு. அது முக்கியமில்லே. நிலா அப்பா அம்மாவோடு எங்கே போனாளோ யாருக்குத் தெரியும்? நான் உதவி செய்றதா எவ்வளவோ சொல்லியும் என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்துட்டா" என்றான்.

மனோகரன் நிலாவுடன் ஏற்பட்ட ஊடல்களைச் சொல்லி, பணம் சேர்ப்பதில் கவனமாக இருந்ததைச் சொல்லி வருந்தினான். "பன்னீர்... ஏதாவது அட்ரெஸ் இருந்தா... தயவு செஞ்சு.. கொடுத்து உதவி செய்.. நிலா இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை". மனோகரனின் குரல் நடுங்கியது.

பன்னீர் அவனை சற்றுப் பரிதாபமாகப் பார்த்தான். "இவ்வளவு காதல்னு சொல்லுறே, அவளைப் பாதுகாக்கத் தெரியலையே உனக்கு... அவ எங்கே போனானு எனக்குத் தெரியாது. உண்மையிலேயே எனக்கு ஒரு அக்கறையும் இல்லை. உன்னைத் தவிர யாரையும் மனசுல கூட வர விடமாட்றா நிலா.. தப்பா நினைக்காதே மனோ, நீ அவளுக்குத் தகுதியானவன் தானானு உன்னையே கேட்டுக்க. என்னை மன்னிச்சுரு. காலம் போனா திரும்பி வராது மனோ. காதலும் அப்படித்தான்"

தன் இதயத்தைத் துளைத்தெடுத்து, பருந்துக்குத் தீனி போட்டிருக்கலாம் போலிருந்தது மனோகரனுக்கு. அந்தச் சொற்கள்!

நிலா தன்னிடம் உதவிக்கும் வராமல் விவரமும் சொல்லாமல் மறைந்தது,வேலை நிமித்தமாக சுய நலத்தோடு தான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதனாலென்று உணர்ந்து மனம் நொந்தான் மனோ. நிலாவைத் தேடிப் பிடிக்கத் தீர்மானித்தான். தன் வேலை மேல் வெறுப்பாக இருந்தது. வேலையை உதறித் தள்ளினான். ஒன்றிரண்டு மாதங்கள் அவள் வேலை பார்த்த வங்கி, பக்கத்து ஊர்கள் என்று பல இடங்களில் சுற்றித் தேடினான்.

சொல்லி வைத்தாற்போல் அம்மாவும் அடுத்த சில மாதங்களில் நோய் வந்து காலமானதும், வெறுத்துப் போய் ஊரை விட்டுக் கிளம்பினான். பல நகரங்களுக்குச் சென்று தேடினான். செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தான். விவித்பாரதியில் விளம்பரம் கொடுத்தான்.

கடைசியில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழிந்து, நிலாவையும் எங்கேயும் சந்திக்க முடியாமல் போய் வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கிய நேரத்தில் அவனுடைய நண்பர் ஒருவர் அவனுக்கு பிரபல கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தார். விற்பனைக்காக ஊர் சுற்றும் வேலை என்றதால் நிலாவைத் தேட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டான். கோவை, சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, தில்லி, ஸ்ரீநகர் என்று எங்கெங்கோ சுற்றினான். எங்கேயாவது எப்பொழுதாவது நிலாவைப் பார்க்க மாட்டோமா என்கிற தணியாத ஏக்கம்.

பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தற்செயலாய் நிலாவைப் பார்த்தான்.

    சாம்ராட் மதுக்கூடத்தில் அக்கம்பக்க மேசைகளில் இருந்த நாலைந்து பேரும் கதை கேட்கக் கூடிவிட்டார்கள். பொன் சார் கண்கள் சிவக்கக் கதை சொல்லிக் கொண்டிருந்தார்..

"நிலாவை எங்கே சார் பார்த்தான் மனோ?" என்று நான் கேட்டதும் "இன்னும் இரண்டு ஸ்காச் சொல்லு" என்றார்.

"போதும் சார்" என்ற என்னை முறைத்தார். "ஸ்காச் சொல்லுடா, எனக்குத் தெரியும் போதுமா வேண்டாமா என்று".

"இல்ல சார், எதாவது சாப்பாடு சாப்பிடலாம் சார்" என்றேன்.

"டேய், நான் எப்ப சாப்பிடணும்னு எனக்குத் தெரியும்டா.. போடா, போய் விஸ்கி கொண்டுவரச் சொல்லு போ" என்று அதட்டினார்.

ஸ்காச்சும், கூடவே இருக்கட்டும் திட்டினாலும் பரவாயில்லை என்று முட்டை புர்ஜி, சப்பாத்தி, கோழி தக்காளி குருமா, தயிர்சாதம் என்று எல்லாருக்கும் சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தேன். சாப்பிடாமல் ஒரேயடியாகக் குடித்துக் கொண்டிருந்தால் வயிறு என்னாவது?

"அப்புறம் என்ன சார் ஆச்சு? சொல்லுங்க" என்றான் குழுவில் ஒருவன்.

விஸ்கியை ஒரே வாயில் விழுங்கிவிட்டு முகத்தைப் பத்து கோணலாக்கியபடியே கனைத்தார் பொன். பிறகு சப்பாத்தியில் புர்ஜியைப் போட்டுச் சுருட்டி, கோழி குருமாவில் தோய்த்துச் சாப்பிட்டுக் கொண்டே தொடர்ந்தார். இடையே என்னைப் பார்த்து "டேய், நீ நல்லா இருக்கணும்டா" என்றார்.

    மனோவுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேலாகிவிட்டது. இன்னும் ஊர் ஊராய்ச் சுற்றும் வேலை. நிலாவை மறக்க முடியாத நிலையில், ஊர் சுற்றும் வேலை கொஞ்சம் உதவியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. புது இடங்கள். புது மனிதர்கள்.

சிகந்தராபாதில் வேலையாயிருந்த போது உடன் வேலை பார்த்த சிமியுடன் பழகத் தொடங்கினான். பத்து வருடங்களுக்கு மேலாக எந்தப் பெண்ணுடனும் பழகாத மனோகரனுக்கு சிமியின் நட்பு ஆறுதலாயிருந்தது. ஆறேழு மாதங்களாகப் பழகினாலும், நட்புக்கு மேல் போக மனம் வரவில்லை. மனோகரனால் நிலாவை மறக்க முடியவில்லை. ஆனால், சிமி நட்பைத் தாண்டி மேலே செல்ல விரும்பினாள்.

ஒரு நாள் மாலை டேங்க்பன்ட் பாலத்தில் இருவரும் பொழுது போக்காக மேலும் கீழும் நடந்தபடிப் பேசிக்கொண்டிருந்து விட்டு, பழச்சாறுக் கடையெதிரே புல்தரையில் கீழிறங்கிச் சரிவில் அமர்ந்தார்கள். மனோ சிமியிடம் நிலாவைப் பற்றிய விவரம் எல்லாம் சொல்லிவிட்டு, தன்னால் நண்பனாக மட்டுமே இருக்க முடியும் என்றான்.

"மனோ, எவ்வளவு நாள்..நாள் கூட இல்லே.. எவ்வளவு வருஷமா.. இப்படி தனிமையில் வருத்தப்பட்டுக்கிட்டிருப்பே? வி நீட் டு மூவ் ஆன்.."

மனோ அவள் மனம் புண்படாமல் சிரித்தான். "அதான் சொன்னேனே, இன்னும் ஏழு பிறவிக்கு என் உயிர் நிலாவுக்கு சொந்தம்" என்றான் விரக்தியுடன்.

"முட்டாள்தனம்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா?" என்று அவன் கன்னத்தில் தட்டினாள்.

"இருக்கலாம். அந்த முட்டாள்தனத்தில் ரெண்டு உயிர்கள் மூச்சு விட்டது எனக்கு நல்லா தெரியும். அவளுக்குக் கொடுத்த இடத்தை இன்னொருவருக்குக் கொடுக்க முடியல சிமி. என்னை மன்னிச்சுடு. நாம நண்பர்களாக இருப்போமே?"

"என்னை இந்த மாதிரி ஒருத்தர் காதலிக்க மாட்டாரானு ஆசைப்படத் தோணுது. குட்லக் அன்ட் குட்பை... என் இனிய.. நண்பரே" என்று எழுந்த சிமி அவன் கன்னத்தில் சிக்கனமாய் முத்தமிட்டபோது, நிலாவைத் தற்செயலாகப் பார்த்தான் மனோகரன்.

பாலத்தையொட்டி, சற்றுத் தள்ளி இருந்த கூரை வேய்ந்த இன்னொரு பெரிய பழச்சாறுக்கடை வாசலில் நின்றபடி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.

உயரே தெரிவது நிலாவா? சுனாமியில் சிக்கியது போல் உணர்ந்தான் மனோ. உயரே தெரிவது தன்னுடைய உயிரே தான்!

நிலைக்கு வந்தபோது சிமி அருகில் இல்லை. எழுந்து ஓடினான். நிலாவுக்கு வெகு அருகே வந்ததும் சட்டென்று நின்றான். இரண்டு கைகளிலும் பழச்சாறுடன் கடையுள்ளிருந்து வந்த ஒருவன், நிலாவிடம் ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். "உக்காரு நிலா" என்று நிலாவின் கையைப் பிடித்து இழுத்தான்.

ஏமாற்றத்துடனும் என்ன சொல்வதென்று புரியாமலும் நின்றான் மனோ. "நிலா" என்றான் தீனமாக.



தொடரும்

►►

2011/09/03

ஒருமனம்




1 2 ◀◀ முன் கதை

    றுமைக் கோட்டுக்குக் கீழே விழுந்தது முதல் நிகழ்ச்சி.

ஏறக்குறைய இருபது வருடத் திருமணத்திற்குப் பிறகு மனோவின் தந்தை யாரோ இளவயதுக்காரியுடன் ஓடிவிட, மனோவும் அவன் தாயும் தினங்களில் தெருவுக்கு வந்துவிட்டனர். வீட்டுச் செலவை சமாளிக்கவும் மனோகரனைப் படிக்க வைக்கவும் வேண்டி, அவன் தாய் தெருக்கோடி பாலகணபதி மளிகையில் கணக்கு எழுத வேலைக்குச் சேர்ந்தாள். காலை எட்டரை மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை, இருநூறு ருபாய் மாதச் சம்பளத்திற்கு அவள் கஷ்டப்பட்டது, அவனைக் குடைந்தெடுக்கத் தொடங்கியது. ஓடிப்போன அப்பாவைப் பழிவாங்கத் துடித்தான்.

நிலாவை முதன் முதலாய் முத்தமிட்டது இரண்டாவது நிகழ்ச்சி.

பெரிய தாசிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கியிருந்த நிலாவின் தந்தை, வியாபாரத்தில் எதிர்பாராத விதமாய் மிகுதியான லாபம் சம்பாதித்தார். லாபம் பெருகத் தொடங்கியவுடன் ஊரின் மேற்குப் பகுதியில் பெரிய வீடு கட்டிக் கொண்டு குடியேறினர். தாஸ் குடும்பத்தாருடன் நிலாவின் குடும்பமும் நெருங்கிப் பழகத் தொடங்கினர்.

எதிர் வீட்டிலிருந்த நிலா, எங்கோ போய்விட்டாள் என்பதை மனோகரனால் ஏற்கமுடியவில்லை. அவளை அடிக்கடி பார்க்க முடியாமல் போனதே என்று எரிச்சலும் ஆத்திரமும் பட்டான். தன் குடும்பத்தின் வறுமையையும், 'ஓடிப்போன அப்பா' என்ற கறையையும் எண்ணி ஒருவேளை நிலா தன்னை விட்டு விலகிவிடுவாளோ என்று பயந்தான்.

ஒரு சில வாரங்களுக்கு அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நிலா, மெள்ள அவனைப் பார்க்க வருவதை நிறுத்தினாள். பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது சந்தித்துப் பேசினாலும் மனோகரனுக்கு நிலா தன்னை விட்டு விலகுவது போல் தோன்றியது. ஒரு நாள் அவளைக் கேட்டுவிட்டான். "நிலா, ஏன் முன் போல என்னோட பழகுறதில்லே?"

"எப்பவும் போலத்தான் பழகுறேன்? ஏன் இப்படிக் கேக்குறே?"

"இல்லே. இப்ப நீ பணக்காரியாயிட்டே இல்லே, என்னைக் கண்டா இளப்பமாயிடுச்சு. அடிக்கடி பன்னீருடன் நீ பேசுறதை நான் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். எனக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்கலே"

நிலா சிரித்தாள்.

"என்னோட காதல் உனக்கு சிரிப்பா இருக்கா?"

"சாரி, சிரிக்கலே. தூயக் காதலா? அப்ப என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்குவியா?"

"நான் ரெடி"

"ஜெயிலுக்குத் தான் போவே. ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு உளறாதே. நாம் ரெண்டு பேரும் இன்னும் படிச்சு முடிக்கலே. சட்டப்படித் திருமண வயது என்னனு தெரியுமா காதலரே?"

"அப்ப ஏன் எங்கூட முன்மாதிரி பழக மாட்டேங்குறே? மத்தவங்க கூட சிரிச்சு நல்லா பழகுறியே?"

"எப்பவும் போலத்தான் இருக்கேன். அனாவசியமா பொறாமைப் படாதே. படிப்புல கவனமா இரு. உங்கம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க. நெனச்சுப் பார். இந்த டயத்துல அனாவசியமா உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுக் குழம்பி எதிர்காலத்தை வீணடிச்சுக்காத, புரியுதா?"

"சரி, பாட்டி"

"டேய்!" என்று பொய்யாக அவனை அடித்தாள்.

    மனோவின் பதினெட்டாவது பிறந்த நாள்.

விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தான். நிலா வந்து வாழ்த்து சொல்வாளென்று நாளெல்லாம் காத்திருந்தான். அவள் வீட்டுக்குச் சென்று பார்த்தான். நிலாவைக் காணோம். "பன்னீரோட எங்கயோ கார்ல போயிருக்கா, மனோகர்" என்றார் நிலாவின் அப்பா.

கடும் கோபத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். அம்மா கடையிலிருந்து வேலை முடிந்து வரவில்லை. மனோகரனுக்குப் பசி, கோபம் என்று எல்லாம் கலந்து பொறுமிக் கொண்டிருந்தான். மாலை ஏட்டு மணிக்கு மேலாகிவிட்டது. தண்ணீர் குடிக்கலாமென்று பானையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்த போது, வாசலில் பன்னீர் செல்வதாசின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தாள் நிலா. அவள் கையில் ஒரு சிறு டிபன் பெட்டி இருந்தது. பன்னீர் அங்கிருந்தே கையசைத்தான். "இன்னும் அரைமணிலே திரும்பி வந்து கூட்டிப் போறேன், சரியா?" என்றபடி காரைக் கிளப்பி மறைந்தான்.

உள்ளே வந்த நிலா, "பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்றாள்.

மனோகரன் கோபமாக, "ஒரு இழவும் தேவையில்லை" என்றான். கையிலிருந்த தண்ணீரை மேசை மீது வைத்தான்.

"ஏன் இப்படி பிறந்த நாளதுவுமா நாராசமா பேசுறே?" என்றாள் நிலா.

"நான் பேசினா நாராசமா இருக்கும். அதான் அரைமணிலே திரும்பி வரதா சொல்லிட்டு கார்ல போறானே, அவன் பேசுறது நாதமா இருக்குதோ?"

"அவன் இப்படி பேசினாலும் நாராசம் தான்"

"உனக்கு வெட்கமா இல்லை, இப்படி நடக்க?"

"ஏன், டிரஸ் போட்டுத்தானே இருக்கேன்? எதுக்கு வெட்கப்படணும்?"

"என் பிறந்த நாளுக்கு என்ன திமிர் இருந்தா அவன் கூட வந்து இறங்குவே?"

"அவனையும் உள்ளே வரச்சொன்னேன்.. அவன் தான் வேலை இருக்குதுனு..."

"நிலா.. ஸ்டாப் இட். என்னை அவமானம் செய்யறதுக்காகவே என் பிறந்த நாளன்னிக்கு இங்கே அவனோட வந்து... அதுவும் நாள் முழுக்க அவனோட சுத்திட்டு வந்து நிக்கறே...நீ தயவுசெஞ்சு போயிடு. உன்னைப் பாக்கவே வெறுப்பா இருக்கு" என்று கத்தினான் மனோ.

"பாக்க வெறுப்பா இருக்குதுனா, கண்ணை மூடிக்க சிடுமூஞ்சி. நான் உன்னைப் பாக்கறேன்"

"ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்யுறே?"

"நான் செஞ்சிட்டு வந்ததை இன்னும் சாப்பிடக்கூட இல்லை, அதுக்குள்ளே சித்திரவதைன்றியே?" என்றபடி, டிபன் பெட்டியைத் திறந்து உள்ளிருந்த இரண்டு லட்டுகளில் ஒன்றை அவனிடம் கொடுத்தாள்.

ஆத்திரத்தில் மனோ அதைத் தட்டிவிட்டான். தட்டிய வேகத்தில் லட்டுடன் சேர்த்து டிபன் பெட்டியும் பறந்து விழுந்தது. டிபன் பெட்டி கையிலிருந்து பறந்த வேகத்தில் நிலாவின் விரலில் கீறிச் சிவப்பாய்க் கோடு போட்டுப் போனது.

"ஸ்" என்று விரலைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கினாள் நிலா. தரையில் இன்னும் டிபன் பெட்டி உருண்டு கொண்டிருந்தது. செய்த தவறை உணர்ந்து நிலைக்கு வந்த மனோகரன், "ஐம் ஸோ சாரி... நிலா, என்னை மன்னிச்சுடு" என்றான். அவளருகே சென்றான். "காலைலந்து உனக்காகவே காத்திட்டிருந்தேன்.. உன் வீட்டுக்குப் போனப்ப நீ பன்னீரோட போயிருக்கறதா சொன்னாரு உங்கப்பா.. அதுவும் நீ கார்ல அவனோட வந்து இறங்கினதும் என்னால அதை ஏற்க முடியாம... ரொம்ப அசிங்கமா நடந்துகிட்டேன்... ஐம் வெரி வெரி சாரி.. ஏன் இப்படி பொறாமைப்படுறேன்னு தெரியலே.."

"உனக்கு வெட்கமா இல்லை, இப்படி நடக்க?" என்றாள் நிலா.

சற்றும் தாமதிக்காமல், ""ஏன், டிரஸ் போட்டுத்தானே இருக்கேன்? எதுக்கு வெட்கப்படணும்?" என்றான் மனோகரன்.

சட்டென்று சிரித்தாள் நிலா.

"ஐம் ஸாரி... இதை உன் காலா நெனச்சுக்க.. மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று அவள் கைகளைப் பிடித்தான்.

"முடியாது.. கால் இங்கே இருக்கு" என்று காலை அசைத்தாள் நிலா.

சட்டென்று தரையிறங்கிக் குனிந்தான் மனோ.

"ஏய், ஏய, ஏய்... என்ன பண்ணுறே? எதுக்கு புடவையை உயர்த்துறே?" என்று பதட்டமானாள் நிலா.

"கால் இருக்குதுனு சொன்னியே.. காணமே.. புடவை மறைச்சிட்டிருக்கு.. அதான்"

"சீ" என்று அவளும் தரையில் உட்கார்ந்தாள். "திமிரைப் பாரு"

"என்னை மன்னிப்பியா நிலா? சத்தியமா இனி பொறாமைப் பட மாட்டேன். உங்கிட்டே எடுத்தெறிஞ்சு பேசமாட்டேன்"

"உன்னால முடியாத சமாசாரம். சத்தியமெல்லாம் செய்யாதே"

சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். அவளுடையக் கைகளை வருடிக்கொண்டிருந்தான். "சரி, மறுபடி சொல்லு" என்றான்.

"என்ன சொல்லணும்?"

"அதான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"சொல்ல மாட்டேன்"

"ஏன்? அதான் மன்னிப்பு கேட்டேனே நிலா?"

அவனுடைய கண்களைச் சந்தித்துக் குறும்புடன், "ஹேபி பர்த்டே" என்றாள்.

"நீ எடுத்துட்டு வந்த லட்டை நான் இப்ப சாப்பிடப்போறேன்" என்றபடி கீழே உதிர்ந்து கிடந்த லட்டுத்துண்டுகளை எடுத்தான்.

"சரியான பொறுக்கி" என்றாள். சிரித்து, "கீழே கிடந்ததை சாப்பிடாதேடா, லட்டுப் பொறுக்கி" என்று அவன் கையிலிருந்து பிடுங்கி குப்பைக் கூடையில் எறிந்தாள். "நான் கொண்டு வந்தது தான் இப்படி ஆயிடுச்சு. சரி.. உன் பிறந்த நாளுக்கு நீ எனக்கு ஏதாவது கொடுப்பியா?" என்றாள்.

கேட்டு முடிக்குமுன் அவள் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டான் மனோகரன்.

திகைத்தவள் சுதாரித்து, "இதென்ன, சின்னப் பிள்ளைக்குத் தர மாதிரி? இதெல்லாம் ஒரு முத்தமா?" என்று சீண்டினாள்.

அவள் இடுப்பைப் பற்றி அருகே இழுத்தணைத்தான். குடிப்பதற்காக மேசை மேல் வைத்திருந்த தண்ணீர், அவளை இழுத்த வேகத்தில் தவறிக் கீழே விழுந்து அவர்கள் மேல் சிதறியதைக் கவனிக்காமல் முத்தமிட்டான்.

சிக்கனமற்ற முத்தம். நேரம், காலம், பரிமாணம் கடந்த முத்தம். அவள் கண்ணிலிருந்து நீர் வழிந்து அவர்கள் உதட்டில் கலந்ததும் விலகினார்கள். "எதுக்கு அழறே?" என்றான்.

"ஒண்ணுமில்லே" என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"உன்னைக் கைவிட மாட்டேன் நிலா". எதுவும் சொல்லத்தோன்றாமல் திரைப்பட வசனமொன்றைப் பொருத்தமில்லாமல் உளறினான். அவளை இறுக அணைத்தான்.

உள்ளே நுழைந்த மனோகரனின் அம்மா கலங்கி, "என்னடா இது மனோ? வயசுப்பொண்ணைக் கட்டிப்பிடிச்சுட்டு இப்படி.. என்னம்மா நிலா இதெல்லாம்?" என்றார்.

"நான் தாம்மா வயசுக்கு வந்தாச்சு.. உங்க பையன் பாருங்க இன்னும் எட்டு வயசுப்பிள்ளையாட்டமா தான் இருக்கான்.. பிடிவாதமும் கோபமும்... எப்படி இந்த மாதிரி சிடுமூஞ்சியைப் பெத்தீங்க?" என்றபடி அவனிடமிருந்து விலகினாள். மனோகரனின் அம்மாவைக் கட்டிப்பிடித்தாள். "நான் வரட்டுமா அம்மா?"

"இரு நான் உன் கூட வரேன்.." என்றபடி வாசலில் இருந்த சைக்கிளை எடுத்தான் மனோ. "இரண்டு சக்கரக் கார்ல போவலாம், வாங்க மகாராணி".

    சென்னையில் பொறியியல் படித்துவிட்டுத் திரும்பினான் மனோ. படித்திருந்தும் மனோவுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. நிலா உள்ளூர் கல்லூரியில் படித்துவிட்டு அருகே வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் நேரு பூங்காவில் மனோவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த நிலாவைப் பார்த்துவிட்ட நிலாவின் அப்பா, அருகில் வந்து அமைதியாய்ப் பேசினார். "மனோகர், இத்தனை வருஷமா கேள்விப்பட்டதை இப்போ கண்ணால் பார்த்து விட்டேன். நீங்க ரெண்டு பேரும் காதலிப்பதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால், வசதியாய் வாழும் என் பெண்ணைக் கலங்காமல் காப்பாற்ற, ஒரு வேலை கூட இல்லாமல் இருக்கும் நீ என்ன செய்யப் போறே? என் பெண் சம்பளத்தில் வாழப் பாக்கிறயா?"

"இல்லை சார்"

"அப்படியென்றால் முதலில் ஒரு வேலை தேடிக்கொண்டு என் வீட்டுக்கு வா. அது வரை என் பெண்ணை விட்டு விலகியிரு". நிலாவின் அப்பா, மனோகரனின் பதிலுக்குக் காத்திராமல் விலகிச் சென்றார்.

மனோ அதற்குப் பிறகு நாலைந்து மாதங்களுக்கு நிலாவைப் பார்க்கவில்லை. சென்னையில் ஒரு கட்டிட நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டான். வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் ஒரு நாள் நிலாவிடமிருந்து செய்தி வந்தது. அடிபட்டுக் கிடப்பதாக, உடனே வரச்சொல்லி. அவசரமாக ஓடினான்.

சிரித்தாள். "உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதான்" என்றாள்.

திரும்பி வந்த சில வாரங்களில் இன்னொரு தந்தி. "உடனே வரவும், அப்பா கல்யாணம் பேசுகிறார்". விடுமுறை கிடைக்காமல் பொய் சொல்லிவிட்டு ஓடினான்.

அதே கதை. "உன்னைப் பார்க்க வேணும் போலிருந்தது. அதான். கோபப்படாதடா கண்ணா" என்றபடி, அவன் முகத்தருகே முகம் வைத்து ஒரு புகைப்படம் எடுத்தாள். "உன் மூஞ்சியைப் பார், எள் வெடிக்கிறது".

இது போல் பலமுறை காலில் அடியென்றும், அப்பாவுக்கு மார் வலியென்றும் அம்மாவுக்கு நோயென்றும் ஏதோ சாக்கு சொல்லி, மாதம் ஒரு தடவையாவது அவனை வரவழைத்தாள். ஒவ்வொரு முறையும் அதே பதில். "உன்னைப் பார்க்க வேணும் போலிருந்தது".

மனோவுக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன நிலா? பொறுப்பில்லாம நடக்கலாமா? எங்கிட்ட பணமும் நேரமும் என்ன கொட்டியா கிடக்கு, நீ கூப்பிட்ட உடனே ஓடி ஓடி வர? எனக்கு வேறே வேலை இல்லையா? இப்படி அடிக்கடி ஓடி வந்து எனக்கு வேலை போயிடுச்சுனா நீயா வேலை கொடுப்பே? படிச்ச பெண் தானே நீ?"

கலங்கிப் போய் விலகியவளைத் தடுத்து நிறுத்தினான். "நிலா, நீ நல்லா இருக்கத்தானே இத்தனையும் செய்றேன்?"

"நான் நல்லா இருக்கத்தான் இதெல்லாம் செய்றியா?" என்று அவனை ஆத்திரத்தோடு பார்த்தாள் நிலா. "நான் நல்லா இருக்க என்ன செய்யணும்னு உனக்குத் தெரியாமப் போயிடுச்சே?"

"ஓகே.. நான் சொன்னது சரியில்லை. நீயில்லாம நானும் நொந்துதான் போயிருக்கேன். இந்த வேலையும் சம்பளமும் இப்ப அவசியம். நாம ரெண்டு பேருமே நல்லா இருக்கத்தான்னு வச்சுக்கயேன். ஒரு வேலையைத் தேடிக்கிட்டு வானு உங்கப்பா சொன்னது மறந்து போயிடுச்சா? கொஞ்சம் தவணை கொடு. பிறகு இங்கே வந்து நம் கல்யாணம், அது வரை இப்படிப் பொய்த் தூது அனுப்பாதே". சொல்லும்போது மனோவுக்கு மனம் வலித்தாலும் கண்டிப்பாக இருந்தான்.

"இல்லை. இனி உன்னைக் கூப்பிட மாட்டேன்" என்று, வந்த அழுகையை அடக்கி மறைத்தாள் நிலா. "உனக்கு உன் வேலை இப்ப முக்கியம். அசட்டுத்தனமா தொந்தரவு செஞ்சிருந்தா மன்னிச்சுடு"

"அப்படி இல்லடா. இன்னும் ஒரு வருஷத்துல எனக்கு ப்ரமோசன் கெடச்சு ஊர் பக்கத்துல ஒரு கிளை தொடங்கி நடத்த வாய்ப்பிருக்கு. உன்னைக் கண் கலங்காம பாத்துக்குவேன்னு சொல்லியிருக்கேன்ல? இப்பவே கண்கலங்கினா எப்படி?" என்று அவள் கண்ணீரைத் தொட்டு நாவில் வைத்துக் கொண்டான். "வேஸ்ட் பண்ண வேணாம்னு தான்" என்று சிரித்தான்.



தொடரும் ►►

2011/09/01

ஒருமனம்




1 ◀◀ முன் கதை

    னோகரனுக்குப் பதினைந்து வயதிருக்கும். வழக்கம் போல் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்து, அங்கே வரும் அவன் வயதுப் பெண்களை ஆளுக்கொருத்தியாக 'என் ஆள், உன் ஆள்' என்று மானசீகப் பொருத்தம் பார்த்து வம்பும் கேலியும் செய்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் அவளை முதன்முறையாகப் பார்த்தான்.

அத்தனை பேரையும் ஒதுக்கி அவனை மட்டும் தாக்கிய வேல்-வில் கூட்டணி. இதென்ன பார்வையா, ஆளை ஒட்டுமொத்தமாய் இழுத்து உள்ளத்துக்குள் போட்டு மூடிக்கொள்ளும் காந்த வலையா? யாரவள்? அவன் நண்பர்களுக்கும் அவள் யாரென்று தெரியவில்லை.

அதற்குப் பிறகு பல முறை அங்கே இங்கே பார்த்தாலும் பேச மட்டும் தைரியம் வரவில்லை. தன் நண்பர்களிடம் அவளைப் பற்றிச் சொன்னான். "சும்மா, போய் பேசுடா... பேரு கூடத் தெரிஞ்சுக்காம, என்னடா டேய்.. போடா பேசுடா" என்று எத்தனை பேர் ஊக்கம் தந்த போதும் அவனால் முடியவில்லை. அவனே எதிர்பாராமல் ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தது.

பள்ளிக்கூடம் அருகே மாணிக்கச்செட்டியார் புத்தகக்கடையில் அவளைப் பார்த்தவன், ஏதோ வேகம் வந்து உள்ளே நுழைந்தான். அவள் அருகே சென்று நின்று கொண்டான். அவள் மனோகரனைப் பார்த்துவிட்டு நகராமல், "எண்பது பக்க நோட்புக் ஒண்ணு கொடுங்க" என்றாள் கடைக்காரரிடம்.

"உனக்கு என்ன தம்பி வேணும்?" என்ற கடைக்காரருக்கு பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தான். கையில் காசு கிடையாது. யோசித்து பதில் சொல்வதற்குள் அவள் கேட்டதைக் கொடுத்த கடைக்காரர் "என்ன தம்பி, என்ன வேணும்?" என்றார் உரக்க.

மென்மையாய் மனோகரனுக்கு மட்டும் புரியும்படி புன்னகை செய்தவள், அவன் பக்கம் சட்டென்று திரும்பி அவன் கண்களைத் தீர்மானமாய்ப் பார்த்து, "பேனா இருக்கா?" என்றாள். பதில் பேசாமல் சட்டைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். அவனுக்காகவே செய்வது போல் அவள் அந்த நோட்டுப்புத்தகத்தைத் திறந்து முதல் பக்கத்தில் தன் பெயரை எழுதினாள்.

நிலா.

எழுதிய பெயரை அவன் படித்துப் பார்க்கும் வரைப் பொறுத்திருந்து, பேனாவை மூடி அவனிடம் தந்து "தேங்க்ஸ்..." என்று இழுத்தாள்.

"என் பெயர் மனோகரன்" என்றான், மூச்சு வந்தவனாய்.

"தேங்க்ஸ் மனோ" என்றபடி பணம் கொடுக்கப் போனாள் நிலா.

இதற்குள் பொறுமையிழந்த கடைக்காரர் அவனிடம், "என்ன தம்பி ஏதாவது வேணுமா? இல்லே சும்மா வம்பு பண்ணிட்டுத் திரியறியா?" என்றார்.

"அதோ, அவரு ஏதோ கேக்கறாரு பாருங்க?" என்று எதிர்ப்புறம் சுட்டினான். "யாரு?" என்று கடைக்காரர் திரும்பிப் பார்த்துச் சுதாரிப்பதற்குள் ஒரே ஓட்டமாகக் கடையை விட்டு ஓடினான். நிலாவின் சிரிப்பு அவனைத் தொடர்ந்து ஓடி வந்தது.

தன்னை அவள் மனோ என்று அழைத்தது பிடித்திருந்தது. மனோ என்று சொல்லிப் பார்த்துக்கொண்டான். அன்று முழுவதும் பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் அவனுக்கு நிலை கொள்ளவில்லை. மனோ-நிலா என்று காற்றிலும், வெளியிலும், நீரிலும், நெருப்பிலும், மரத்திலும், மண்ணிலும் மனதால் எழுதிப் பார்த்துக் கொண்டான். இரவு வானில் நட்சத்திரங்களை வரிசைப்படுத்தி அவர்களின் பெயரெழுத்திப் பார்த்தான்.

காலையில் எழுந்ததும் "மனோஓகர்ர்" என்று தினமும் தாராளமாய் அழைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம், "அம்மா, இன்னிலேந்து என்னை மனோ என்றே கூப்பிடுங்க" என்றான்.

அம்மா அவனை வியப்புடன் பார்த்தாள். "மனோகரை சுருக்கி மனோவா? ஏண்டா? உன் பேரென்ன வாயில நுழையாதபடியா இருக்கு? வச்சிருக்கணும் உனக்கு உங்க தாத்தா பேரை. சுப்புரத்தினமுருகேசப்பண்டிதர்னு. பேரைச் சுருக்கணுமாமுல்லே?" என்றாள். வேண்டுமென்றே, "மனோஓஓஓகரூஊ" என்று இழுத்தாள்.

    கோடை விடுமுறையின் போது இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்தன.

மனோவுக்குக் கடவுள் நம்பிக்கை பிறந்தது, முதல் நிகழ்ச்சி. காலியாயிருந்த எதிர் பிளாட்டில் நிலாவின் பெற்றோர் குடி வந்ததும், தெய்வம் இருப்பதைத் தீர்மானமாக நம்பத் தொடங்கினான்.

பன்னீர் செல்வதாசுடன் சண்டை போட்டு நிலாவுடன் நெருக்கமானது, இரண்டாவது நிகழ்ச்சி.

பணக்கார தாஸ் என்றுதான் அந்தக் குடும்பத்துக்குப் பெயர். பணத்துக்கும் படிப்புக்கும் ஒத்துவராது என்கிற பொது நம்பிக்கையைப் பொய்யாக்கப் பிறந்தவன் பன்னீர். மனோ, நிலா இருவருடன் ஒரே வகுப்பில் தான் படித்தான். படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி அவன்தான் முதல். வகுப்பிலிருந்தப் பத்து பெண்களுக்கும் பன்னீர் தான் சூபர் ஸ்டார். நிலாவைத் தவிர. இது பன்னீருக்கும் தெரியும்.

ஒரு முறை நிலாவைக் கிண்டல் செய்துவிட்டான். "நிலாவுக்கு நிலத்தில் என்ன வேலை?" என்று ஏதோ சொல்லப்போய், நிலாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டான்.

பதிலுக்கு, "உனக்கு வார்த்தையால தானே கட்டத் தெரியும்? என்னைப் பார்" என்று அவளைக் கட்டி முத்தமிட்டுவிட்டான்.

அன்றைக்குப் பார்த்து மனோ பள்ளிக்கூடம் போகவில்லை. ஏதோ காய்ச்சல். நண்பர்கள் வந்து விவரம் சொன்னதும் யாரிடமும் எதுவும் கேட்காமல், தன்னுடைய பழைய சைக்கிள் செயினை எடுத்துக் கொண்டு நேராகப் பன்னீர் வீட்டுக்குப் போய்விட்டான்.

செய்தி கேட்ட மனோவின் அம்மா அவசரமாக ஓடினாள். நிலாவும் கூடவே வந்தாள்.

அவர்கள் வருவதற்குள் சண்டை அனேகமாய் முடிந்துவிட்டது. அவர்கள் வரவில்லையென்றால் மனோ அன்றைக்கே இறந்து போயிருக்கலாம். மனோ கொண்டு வந்த சைக்கிள் செயினாலேயே அவனைப் புடைத்து விட்டிருந்தான் பன்னீர். வாய், மூக்கு, காது, கண், கை, கால் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லா இடத்திலேயும் சமத்துவ மனப்பாங்கோடு அடி உதை தந்திருந்தான். மனோவை கால்பந்து ஆடிக்கொண்டிருந்தவன், நிலாவைப் பார்த்தவுடன் ஓடினான்.

    மனோ இரண்டு மாதத்திற்குப் பள்ளிக்கூடம் போகவில்லை. மருத்துவமனை - வீடு - மருத்துவமனை என்று உடல் புண்ணும் மனப்புண்ணும் ஆறும் வரை ஒடுங்கிக் கிடந்தான். நிலா மட்டும் தினமும் காலையிலும் மாலையிலும் வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனாள். பன்னீரின் பெற்றோருடன் சணடை போட்டுப் போலீசில் புகார் கொடுப்பதாய் பயமுறுத்தி மருந்துக்கான செலவு எல்லாவற்றையும் அவர்களே ஏற்கும்படி செய்தாளென்று அம்மா சொன்னதும் மகிழ்ச்சியும் வெட்கமும் அடைந்தான் மனோ.

கட்டவிழ்ந்து நடக்கத் தொடங்கியதும், நிலா தினமும் அவனுடன் ஆதரவாய் நடந்தாள். நேரு பூந்தோட்டம் வரை நடந்துவிட்டு வருவார்கள். ஒரு நாள் நிலா, "இன்னும் எத்தனை நாள் இந்த மாதிரி ஏமாத்தலாம்னு இருக்கே?" என்றாள் லேசாகச் சிரித்தபடி.

அதிர்ந்து போனான் மனோ. "என்ன சொல்றே?"

"நீ தனியா இருக்குறப்ப புட்பால் ஆடறதாச் சொன்னாங்க உங்கம்மா, இங்க என்னடான்னா நீ தினம் என் தோளைப் பிடிச்சிக்கிட்டு நடக்கறே?"

"சாரி"

"எனக்காகத்தானே சண்டைக்குப் போனே? எது என்னனு கேட்கவேண்டாமா? பன்னீர் என்னைத் தொடவும் இல்லை, தொடவும் விட மாட்டேன். இது அனாவசியச் சண்டைதானே? உன்னோட ப்ரென்ட்சுக்கு விவஸ்தையே கிடையாது. எதுனா கட்டிவிட்டா நம்பிடுவியா?"

"சாரி" என்றான் மறுபடி.

"என்ன சாரி? முட்டாள்தனத்துக்கு மன்னிப்பே கிடையாது. என் மேல் உனக்கு அக்கறை இருந்தா, அதை எங்கிட்ட இல்லையா நீ காட்டணும்? அவன் உன்னைக் கொன்னிருந்தா நீ என் மேலே அக்கறை வச்சு என்ன பயன்?" என்றாள்.

மனோவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் நிலா. திடீரென்று நின்று, அவன் எதிர்பாரா விதமாய், "நெஞ்சைத்தொட்டுச் சொல்லு, என் மேல் உண்மையிலேயே அவ்வளவு அக்கறையா?" என்றாள்.

கேட்ட உடனே அலறினாள், "என்ன நீ, அங்கெல்லாம் தொட்டுகிட்டு..."

"நீ தானே நெஞ்சைத் தொட்டுச் சொல்லச் சொன்னே?" என்றான் மனோ. "சொல்றதுக்கு முன்னால அலறினா எப்படி?"

"சீ" என்றவள், விலகவில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்த மனோ, அவள் கையைப் பிடித்தபடி பேசினான். "நீ செய்த எல்லா உதவிக்கும் எத்தனை நன்றி சொன்னாலும், போதாது நிலா."

"அப்போ உன் உயிரை எனக்கு எழுதிக் கொடுத்துடேன்?" என்றாள்.

மனோ சிறிதும் தயங்காமல், "இந்தப் பிறவியிலும் இன்னும் ஏழு பிறவியிலும் என் உயிர் நிலாவுக்குச் சொந்தம்" என்று காற்றில் எழுதியபடி உரக்கக் கூவினான்.

"காற்றில் எழுதினால் நிலைக்குமா?" என்றாள் நிலா கிண்டலாய்.

"மகாராணி. இந்தக் காற்று உங்களையும் என்னையும் மீறி யுகம் யுகமாக இங்கே வீசிக் கொண்டிருக்கிறது. காற்றிருக்கும் வரை என் சாசனமும் இருக்கும்" என்று அவன் அடிமை போல் நடிக்க, பேரரசி போல் நடித்து ஏற்றுக்கொண்டாள் நிலா.

"நான் பன்னீர்தாசுக்கும் நன்றி சொல்லணும். இல்லேன்னா உன்னோட அன்பும் நெருக்கமும் கிடைச்சிருக்குமா?" என்றான். மனோவின் தினசரி வாழ்வில் ஒரு முக்கியப் பங்கானாள் நிலா.

அடுத்த இரண்டு வருடங்களில் அவன் கல்லூரிக்குப் போவதற்குள் மேலும் இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்தன.



தொடரும் ►►