2011/09/08

ஒருமனம்
1 2 3 4 ◀◀ முன் கதை

"மனோ.. எப்படி இருக்கே?" என்றாள் நிலா, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல். "உன்னை மாதிரியே இருந்திச்சு பார்த்தப்போ...எங்கே அந்தப் பொண்ணு?" என்றாள்.

"போயிட்டா" என்றான். "வெறும் நட்பு தான்" என்றான் அவசரமாக, ஏதோ நினைவுக்கு வந்தவன் போல்.

"மனோ, இது என் நண்பர் சிவா" என்று உட்கார்ந்திருந்தவனை அறிமுகம் செய்து வைத்தாள். "சிவா, இவர் மனோ. சின்ன வயசுல நாங்க ரொம்ப நெருக்கம்" என்றாள்.

"ஹலோ" என்ற சிவா, பழச்சாறுக் கோப்பையை கீழே வைத்தான். சட்டென்று நிலாவிடம், "டின்னருக்கு நேரமாச்சு, போலாமா?" என்றான் சிவா.

"எட்டு மணிக்குப் போனா போதும்னு சொன்னியே சிவா? டைம் இருக்கில்லே?" என்றாள் நிலா.

"இல்லை நிலா. ப்ளூமூன்ல சீக்கிரம் சாப்பிட்டு எட்டு மணிக்கு எனக்கு ஒரு வேலை இருக்குனு சொன்னேன்.." என்றான். நிலாவை அவசரப்படுத்துவது போல் தோன்றியது மனோவுக்கு.

"உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் மனோ" என்றாள் நிலா. சிவா நிலாவைத் தள்ளாத குறையாக அவளுடன் நடந்தான்.

அவர்கள் இருபதடி போகும் வரை ஒன்றும் சொல்லாமலிருந்த மனோ உரக்க அழைத்தான். "நிலா".

நிலா நின்றாள். மனோ விரைந்தான். "உன்னோடு பேசணும்" என்றான்.

அவனைக் ஆச்சரியம் கலந்த கேள்வியோடு பார்த்தாள் நிலா. "மனோ, எங்களுக்கு டின்னருக்கு நேரமாச்சு. நாளைக்கு வேணும்னா என் ஆபிசுக்கு வாயேன், பேசலாம். எக்சிம் பேங்க். அபிட்ஸ்ல இருக்கு ஆபீஸ்" என்றாள்.

மறு நாள் லீவ் எடுத்துக்கொண்டு காலை எட்டு மணிக்கெல்லாம் அபிட்ஸ் ரோடு எக்சிம் பேங்கிற்குப் போய்விட்டான். பத்து மணிக்குத்தான் திறப்பார்களாம். அலுவலகம் திறப்பதற்குள் பக்கத்து டீக்கடையில் நாலைந்து டீயாவது குடித்திருப்பான். சரியாகப் பத்து மணிக்கு பேங்க் திறந்ததும் உள்ளே போனான். நிலாவைக் காணோம். ரிசெப்சனில் இருந்த ஸ்லீவ்லெஸ் பெண்ணிடம் "இங்க வேலை பார்க்கற நிலா.. அவங்களோட பேசணும்" என்றான்.

"மேனேஜர் ஆபீஸ் மாடில இருக்கு, அங்கே" என்று மாடியை நோக்கி விரலைச் சுட்டிக்கொண்டிருந்த ஸ்லீவ்லெஸ் முடிக்குமுன்னர் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மாடியேறினான். மாடியில் வழியை மறைத்து நின்று கொண்டிருந்தவரிடம் "சார், மேனேஜர் ஆபிஸ் எங்கே இருக்கு?" என்றான்.

"நான்தான் மேனேஜர்.. என்ன வேணும் உங்களுக்கு?"

"சார், இங்கே வேலை பாக்கிற நிலா... அவங்க எங்க இருக்காங்க?"

"அவங்க இன்னிக்கு வரமாட்டாங்க சார், லீவு. நீங்க யாரு?"

"சரியாப் பாருங்க சார், என்னை இன்னிக்கு இங்க வரச்சொன்னதே நிலா தான்"

"நான் எங்கேயும் பார்க்க வேண்டாம். நிலா மேடம் எங்க ஜிஎம். அதோ எதிர்ல பாருங்க, அதான் அவங்க ஆபீஸ். போனை வச்சுட்டு இப்பத்தான் வரேன். ஏதோ முக்கியமான வேலை இருக்கறதா சொல்லி லீவ் போட்டிருக்காங்க சார். நீங்க யாரு, உங்களுக்கு என்ன வேணும்?"

"அவங்க வீட்டு அட்ரெஸ் குடுக்க முடியுமா?"

"அட்ரெஸ் குடுக்கணுமா? விளையாடறீங்களா? யாரு நீங்க? கிடுகிடுனு படியேறி வந்து... வம்பு பண்றீங்களே?"

"நாளைக்கு வருவாங்களா?"

"என்னங்க இது, நான் கேட்ட எதுக்கும் பதில் சொல்ல மாட்றீங்க... யார் சார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?"

மனோ அழாக்குறையாக, "சார், நான் நிலாவோட ரொம்ப வருசமா பழக்கம் சார். எத்தனையோ வருசத்துக்குப் பிறகு நேத்து டேங்க்பன்ட்ல சந்திச்சோம்... இன்னிக்கு காலைல இங்கே வரச்சொன்னதே நிலாதான்... ப்லீஸ் சொல்லுங்க சார், நாளைக்கு வருவாங்களா?"

"என்ன சார் இப்படி கேக்குறீங்க? நாளைலந்து நாலு நாள் தசரா லீவாச்சே? இனி செவ்வாக்கிழமைதான் ஆபீஸ். நிலா மேடம் செவ்வாய் புதன் டில்லி போறாங்க. வியாழக்கிழமை மதியம் தான் ஆபீஸ் வருவாங்க"

மனோவின் முகம் உடனே வாடிப்போனதைக் கவனித்த மேனேஜர், "உங்க பேர் குடுங்க, வந்துட்டுப் போனதா சொல்றேன்" என்றார்.

பதில் சொல்லாமல், பெரும் ஏமாற்றத்துடனும் கனத்த மனத்துடனும் கீழே இறங்கி வந்தான். வாசலைத் தாண்டிக் கீழே படியிறங்கத் தொடங்கியவன் நின்றான். எதிரே கீழ்ப்படியில் நிலா.

தானணிந்த பட்டுப்புடவைக்கு அழகூட்டியபடி நின்றுகொண்டிருந்த நிலா, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

அவளைப் பார்த்ததும் ஆத்திரமும் ஆனந்தமும் கலந்து உடலெங்கும் ஓட, விரைந்தான். அவளை அள்ளியணைத்துக் கொள்ளத் தோன்றினாலும் பத்து வருடங்களுக்கு மேற்பட்டப் பிரிவினால் உண்டான அன்னியம் குறுக்கே வந்து தடுத்தது.

"எத்தனையோ பேச வேண்டுமென்று உனக்காக லீவ் போட்டு வந்தா... நீ இல்லைன்னதும் கடுப்பாயிட்டேன்" என்றான்.

"நானும் உனக்காகத்தான் லீவ் போட்டேன். பேசணும்னு சொன்னியே? வெளியே போய் பேசலாம்னுதான்" என்றாள். "என்ன சொன்னார் மேனேஜர்? அவரைக் கோபிக்காதே. நான்தான் உன்னை வேணும்னே காய்ச்சச் சொன்னேன்..."

"நீ உருப்படுவியா?" என்றான் மனோ.

"எல்லாம் உன் தயவுதான்" என்ற நிலா அவனிடம், "சரி, வேறே எங்கயாவது போகலாம் வா" என்றாள். காத்திருந்த வெள்ளை அம்பேசடர் கதவைத் தட்டி, "அமர், ஆப் ஜாவ்.. ஹமே பாஹர் ஜானா.."

"மை சோட்தா மேம்சாப்"

"நக்கோ" என்றாள். "ஆப் ஜாவ்" என்று அம்பேசடர் டிரைவரை விரட்டினாள். வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மனோவிடம், "ஆபீசுக்கு வந்து போகத்தான் ஆபீஸ் கார். சொந்த விஷயத்துக்குப் பயன்படுத்துறதில்லே.. ஆட்டோல போனா பரவாயில்லையா?" என்றாள். சற்றுப் பொறுத்து வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள். "நீயும் தான் எங்கூட வாயேன்..?" என்றாள் மனோவிடம். ஏறிக்கொண்டதும், "சிகந்த்ரபாத் க்ளப்" என்றாள். ஆட்டோ கிளம்பிய வேகத்தில் சற்று அதிர்ந்தனர் இருவரும்.. "ஹல்லு" என்றாள் அவசரமாக.

எதுவும் பேசாமலிருந்த மனோவிடம் "திடீர் மௌனவிரதமா?" என்றாள்.

"இல்லே... ஹைதராபாத் இந்திலே இப்படி வெளுத்து வாங்குறியேனு ஆச்சர்யத்துல நாக்கு ஒட்டிக்குச்சு.." என்றான்.

"ஹ்ம்ம்ம்... ரோடாந் மே பஸ்சாந் ஜாதானு இந்தப் பசங்க பேசுறத இந்தினு நீதான் சொல்லணும். நல்ல உருது கேக்கணும்னா சார்மினார் போகணும், போவோமா?" என்றாள்.

"வேற வேலை இல்லே? எவ்வளவு வருஷம் கழிச்சுப் பாக்கறோம்.. சார்மினார் முக்கியமில்லை நிலா" என்றான்.

"அப்ப எது முக்கியம்னு நீ சொல்லு, கேட்டுக்குறேன்"

கால் மணி போல் இருவரும் அமைதியாக இருந்தார்கள். வண்டி அதற்குள் சுதிர் க்ளினிக்கைத் தாண்டி, பப்லிக் ஸ்கூல் தாண்டி, பேகம்பேட் ஏர்போர்ட் அருகே வந்துவிட்டது.

"ஏன்?" என்றான் மனோ.

"புரியலியே?" என்றாள்.

"ஏன் என்னை விட்டு விலகினாய்?"

"நீதான் சொல்லேன்?"

கண நேர அமைதிக்குப் பின், "என்னை எப்படி நீ மறக்கலாம் நிலா?" என்றான்.

"நான் மறந்தேனா?"

"பின்னே ஏன் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடினே?"

நிலா பதில் சொல்லவில்லை. மனோவின் எதிர்ப்புறம் திரும்பி ஆட்டோவின் வெளியே பார்த்தாள். சில நிமிடங்களில் சிகந்த்ரபாத் க்ளப் வந்துவிட்டது. உள்ளே செல்லத் தயங்கிய ஆட்டோவை, "லோபகெல்லு" என்றாள். ஆட்டோ மெள்ள உள்ளே சென்று நின்றது.

"அடேங்கப்பா.. தெலுங்கானா தெலுங்கு வேறயா?" என்றபடி இறங்கிப் பணம் கொடுக்க முனைந்த மனோவைத் தடுத்தாள் நிலா. "நான் குடுக்கறேன்" என்றாள்.

ஆட்டோ போனதும், "கொஞ்சம் வெளியவே இருப்போமே? என்றாள். சற்றுத் தொலைவில் ஒதுங்கி இருந்த மரத்தடிக்கு நடந்தார்கள். அகண்ட சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தார்கள். "நான் கேட்ட கேள்விக்கு பதில் காணோமே நிலா? ஏன் எங்கிட்ட கூட சொல்லாம ஊரை விட்டு ஓடினே? என்னை ஒதுக்க உனக்கு மனம் எப்படி வந்துச்சு?"

"உனக்குக் கடிதம் போட்டேனே, உடனே வரும்படி... நீதான் வரவில்லை" என்றாள்.

"சரி, அதற்குப் பிறகாவது ஒரு கடிதம் போட்டிருக்கலாமே?"

"போட்டிருக்கலாம்"

"அவசரமா வானு இன்னொரு தந்தியாவது கொடுத்திருக்கலாமே?"

"கொடுத்திருக்கலாம்"

"பிடி கொடுத்து பேசு நிலா... உனக்கும் எனக்கும் இருந்த உறவுக்கு மதிப்பு கொடுத்தாவது நேராகப் பேசு. ஏழு பிறவிக்கும் என் உயிர் உனக்கு சொந்தம்னு சொன்னது உனக்கு நினைவிருக்கா?"

"உனக்குத்தான் மறந்து போச்சுனு நினைச்சேன். அதனால உன் உயிருக்கு நானே விடுதலை கொடுத்துட்டேன்"

"சே..." ஆத்திரப்பட்டான் மனோ.

"சண்டை போடுவதாயிருந்தா இங்கே வேண்டாம்.. உள்ளே போகலாம் வா".

"யார் அந்த சிவா?" என்றான் மனோ.

"வேண்டப்பட்டவர்னு வச்சுக்கியேன்"

"அப்படின்னா?"

"பொறாமையா?"

"பதில் சொல்லு"

"தேவையில்லை"

சிறிது நேரம் அமைதியாக இருந்த மனோ, "நிலா" என்றான் குரல் கரகரக்க. "உன்னை என்னால் மறக்க முடியவில்லை" என்று அழத் தொடங்கினான். சிறு பிள்ளைபோல் தேம்பியழுதுவிட்டு, பிறகு அவளைத் தேடியலைந்த விவரத்தையெல்லாம் சொன்னான்.

"எனக்காகக் காத்திருக்கக் கூடாதா நிலா?" என்றவன், நிமிர்ந்து நிலாவைப் பார்த்தான். அவள் கண்களிலும் நீர்.

"பின்னே யாருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேனென்று நினைக்கிறாய்?" என்று கணகளைத் துடைக்காமல், அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"யார் சிவானு இன்னும் சொல்லவில்லையே நீ?" என்றான் மெல்ல.

"சொல்லாவிட்டால்?"

"தோளில் சாய்ந்து கொள்ளக்கூடாது போ!"

"சரி" என்று எழுந்தவளை உடனே கையைப் பிடித்து நிறுத்தினான்.

"நீதானே.." என்று சொல்லத் தொடங்கியவளைத் தடுத்து, "தோளில் சாய்ந்து கொள்ளக்கூடாதுனு தானே சொன்னேன்... மடியில தலை வச்சுக்கலாமே" என்று அருகில் இழுத்தான். "இத்தனை வருஷத்துக்குப் பிறகு உன்னைப் பார்த்ததிலே எனக்கு சந்தோஷம், வருத்தம், கோபம், நன்றி, ஆத்திரம், அவசரம் எல்லாம் கலந்து நொந்து போயிருக்கேன் நிலா... நான் ஏதும் தவறா சொன்னா பெரிசு பண்ணாதே".

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு "உன்னைப் பார்த்ததில் எனக்கு எத்தனை சந்தோஷமென்று உனக்கென்ன தெரியப் போகுது?" என்றாள்.

"உன்னை நினைச்சு ஏங்காத கணமே இல்லை நிலா"

"நீ இன்னும் என்னையே நினைச்சு ஏங்கிட்டிருக்குறது உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுதே..." என்று அவன் கன்னங்களை இரு கைகளாலும் ஏந்தி அவன் முகத்தருகே நெருங்கி, "அதே எள் வெடிக்கும் மூஞ்சி.." என்றபடி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

மனோ அவள் கைகளைத் தன் முகத்திலிருந்து விலக்கி, விடாமல் பிடித்தபடியே அவளை ஒரு சுற்று திருப்பி, தன் மடிமேல் அமர்த்தி அணைத்துக்கொண்டான். "இதோ பார்" என்று தன் பர்சுக்குள்ளிருந்து சிறிய புகைப்படத்தை எடுத்துக்காட்டினான்.

பிறந்தநாளன்று நிலா எடுத்த புகைப்படத்தின் பிரதி. கோபம் பொங்கும் அவன் முகத்தருகே குதூகலம் பொங்கும் அவள் முகம். "நினைவிருக்கா?" என்றான்.

"இல்லாம என்ன?" என்று அவன் கையிலிருந்து பிடுங்கிப் புகைப்படத்தைத் புரட்டிப் பார்த்தாள். பின்புறம், "எள்ளானாலும் என் மனோ" என்று அவள் எழுதியிருந்தது அப்படியே இருந்தது.

தன் கைப்பையிலிருந்து பேனாவை எடுத்து அதன் கீழே அன்றைய தேதியிட்டு 'அதே எள், அதே மனோ' என்று எழுதினாள். "இந்தா" என்றாள்.

படித்துவிட்டு, "என்னிக்கும் நான் அதே மனோ தான்" என்றவனை நெருங்கி மறுபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

கண அமைதிக்குப் பிறகு, "கண்டிப்பா சொல்லியாகணுமா? சிவா என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறவர்"

"கல்யாணமா?" அதிர்ந்தான்.

"ம்" என்றாள். மேலே சொல்வாளென்று எதிர்பார்த்துக் காத்திருந்தவனிடம் "வேறே ஏதாவது பேசலாமே?" என்றாள்.

"இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்றான், தொலைக்காட்சி நிருபர் பாணியில்.

"கிண்டலா?"

"பின்னே? பூகம்பத்தைக் கிளப்பிட்டு வேறே ஏதாவது பேசலாம்னு சாதாரணமா சொல்றியே?" என்றான். "சொல்லு நிலா. நம்ம உறவு விட்ட இடத்துலந்து தொடர ஆசைப்படுறேன். உனக்கு அந்த ஆசையில்லையா?"தொடரும் ►►

8 கருத்துகள்:

 1. இனிமையா போகுதே கதை... சூடு குறைந்தவுடன் சிவா கதையை நிலா ஆரம்பிப்பாளா ..மனோ அதை எப்படி எடுத்துக்கொள்வான்.... சஸ்பென்ஸ் கூடுகிறது....

  பதிலளிநீக்கு
 2. Appaathurai sir, In patches the naration is brilient.The situations are contrived....kashyapan

  பதிலளிநீக்கு
 3. படபடப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, முடிவு என்ன ஆகும் என்று தெரியாததால். இவ்வளவு வருடம் கழித்து நிலாவை சந்திக்கும் சிவாவின் மனநிலையை மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள். வருடங்களும், வயதும் ஆனாலும் இருவரின் உரையாடலிலும் இன்னும் இளமை, அதே இனிமை, கொஞ்சல் என்று அசத்தலாக உங்கள் ஸ்டைலில் எழுதி இருப்பது மிகவும் அழகு.
  //ஆச்சர்யத்துல நாக்கு ஒட்டிக்குச்சு.."//, //அன்றைய தேதியிட்டு 'அதே எள், அதே மனோ' என்று எழுதினாள்//, வேறு ஏதாவது பேசலாமே என்றவளிடம் //"இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்றான்// மிகவும் ரசித்த வரிகள்.

  முடிவை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருப்பதால், விரைவிலேயே அடுத்த பதிவு ப்ளீஸ்.

  இந்த பாடலை நான் கேட்டதில்லை.

  பதிலளிநீக்கு
 4. கதை சுவையாகப் போகிறது. முக்கியமான இடத்தில் தொடரும் கார்டு போடறீங்களே நியாயமா?

  பதிலளிநீக்கு
 5. நல்லாப் போகுது...இனிமையான பாடல் 'பிட்'டுடன். சில காதல்கள் அடுத்த கட்டம் முன்னேறாமல் அங்கேயே நின்று விடுவது நல்லது என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
 6. அப்ப சரி நிலாவுக்கு கல்யாணம் ஆகலை
  ஏதோ கொஞ்சம் சிவாவுக்கு யோகம் இருக்கு பார்ப்போம்
  கதைக்குள் கதை என்பதெல்லாம் கூட
  சொல்லிப் போகும் விதத்தினாலே மற்ந்து போய்
  நிஜம் போலவே படுது.ஆகையால் கொஞ்சம்
  டென்சன் இருப்பது நிஜம்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  பதிலளிநீக்கு
 7. நிலாக்கு கல்யாணம் ஆகலை என்பதே கொஞ்சம் மன நிம்மதின்னு பார்த்தால் என்னப்பா இது சிவா என்னை கல்யாணம் செய்ய விரும்புறவர்னு கடைசில ஒரு செக் கொடுத்துட்டீங்க?

  குட்டி குட்டி விஷயங்கள் எல்லாம் ரொம்ப கதையை அழகு படுத்தி இருக்கு...

  அதே எள் அதே மனோ... :)

  இத்தனை கால பிரிவுக்குப்பின் பார்த்ததுமே ஏற்படும் அத்தனை உணர்ச்சிகளையும் அப்பப்பா அப்படியே எழுத்துல கொண்டுவந்துட்டீங்க.... இனி நான் கதை எழுதும்போது உங்களுடைய கதையில் நீங்கள் நுணுக்கமாக ரசிக்கும்படி எழுதின விஷயங்களை மனதில் கொள்வேன் கண்டிப்பாக....

  இத்தனை கால பிரிவில் கூட இன்னமும் மனோ அதே பொசசிவ் தான் யப்பா.....

  ஆசை ஆசையாக ஆபிசுக்கு நிலாவை தேடி ஓடியதும் அங்கே மேனேஜர் மனோவை உண்டு இல்லன்னு செய்ததும் அதன்பின் நிலா சிரித்தபடி நாந்தான் அப்படி காய்ச்ச சொன்னேன்னு சொன்னதும் ரொம்ப அருமை....

  இனி என்னாகும்? இப்படி நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா எழுதிட்டு வரும்போது சஸ்பென்ஸ்ல விட்டுட்டு ஒரு வாரம் காக்கவெச்சுடுவீங்களே :)

  அசத்தலா போகுது அப்பாதுரை கதை...ஆனா கடைசில மனோவையும்நிலாவையும் சேர்த்துடுவீங்க என்ற நம்பிக்கையுடன் நானும் தொடர்கிறேன்......

  எப்பப்பா அடுத்த பகுதி எழுதுவீங்க? சீக்கிரம் எழுதக்கூடாதா... சஸ்பென்ஸ் தாங்க முடியலை.... நல்லபடி சுபம்னு முடிச்சா நல்லாருக்குமே..

  தலைப்பு ரொம்ப அருமை.... ஒருமனம்...

  அன்பு வாழ்த்துகள் அப்பாதுரை...
  அன்பு நன்றிகள்பா என் தளம் வந்து கருத்து பதிந்தமைக்கு....

  பதிலளிநீக்கு
 8. அடடா சொல்லமறந்த ரெண்டு விஷயம்....

  ஹைதராபாத் தெலுங்கு அமோகம்... லோபலெக்கெல்லு :)

  ஹைதராபாத் ஹிந்தி நகோ படிச்சதும் எங்கப்பா பேசும் ஹைதராபாத் ஹிந்தி சட்டுனு நினைவுக்கு வந்தது....

  கதையின் முடிவில் என்னவோ இருக்கேன்னு ப்ளே க்ளிக் செய்தேன்...அட அட பழைய ஹிந்தி திரைப்படபாடல்...

  அன்பு வாழ்த்துகள் மீண்டுமொருமுறை அப்பாதுரை...

  பதிலளிநீக்கு