2011/09/15

ஒருமனம்
1 2 3 4 5 ◀◀ முன் கதை

"ஆசையிருக்கானு கேட்டினா இருக்குனு சொல்வேன். இல்லேனா உன்னைப் பாக்க வந்திருப்பேனா? ஆசைப்படுறதுக்கும் அது நிறைவேறதுக்கும் நடுவுல ஒரு நதியே ஓடுது மனோ"

"நீந்தி வந்துட வேண்டியது தானே? முடியாதா?"

"முடியாதாங்கற கேள்விக்கு விடையே கிடையாது. தேவையாங்கிறது தான் கேள்வி"

"சரி, தேவையா?"

"தேவைங்கறது மாறிட்டே வருதே? இப்போதைய தேவையா இன்னொரு நாளைய தேவையா?"

"எனக்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை.. இந்தா.. இதான் என் தலை.. இது பெஞ்சு.. என் தலையைப் பிடிச்சுட்டு இப்படித் தள்ளித்தள்ளி இடிச்சின்னா கேள்வியே கேக்க மாட்டேன்.. இந்தா.."

நிலா சிரித்தாள். கணம் பொறுத்து, "உன்னோட தேவை என்ன?" என்றாள்.

"இரண்டெழுத்து. அது இல்லாட்டி மூணெழுத்தும் நாலெழுத்தும் தேவையில்லை"

"அப்படின்னா?"

"தங்களுக்கு மட்டுமே சூனியம் பேச வருமென்று நினைத்தீர்களோ மகாராணி?"

"டேய்.." என்று அதட்டி, அவனுடைய இடது கைவிரல்களைப் பிடித்திழுத்துச் சொடுக்கிட்டாள் நிலா. "நீ சொல்லாட்டிப் போயேன்.. சரி, என்னோட நாலெழுத்துத் தேவையைச் சொல்றேன். நி ம் ம தி"

"எனக்கும் தான்.." என்ற மனோ, வலது கையை நீட்டினான்.

"நான் தேடுற நிம்மதி.. " என்ற நிலா, அவன் கையைத் தட்டிவிட்டாள். பிறகு வலிய இழுத்து வைத்துக்கொண்டாள். "..என் அப்பா அம்மாவுக்கு"

"போச்சுடா!" என்ற மனோ தன் கைகளை இழுத்து நெற்றியில் அழுத்திக்கொண்டான். "ஆமா, நீ காலையில எதுனா சாப்பிட்டியா? தலை சுத்துதா? மயக்கமா வருதா?"

"சீரியசா பேசறேன் மனோ" என்ற நிலா, அவனுடன் இறுக்கமாக நெருங்கியமர்ந்தாள். "மனோ... இந்தப் பத்து பதினைந்து வருஷத்துல எவ்வளவோ நடந்து போச்சு, அதெல்லாம் இப்பப் பேச நேரமுமில்லை, பேசிப் பலனுமில்லை. சிவா நல்லவர். நான் சிவாவைக் கல்யாணம் செய்துகிட்டா என்னைப் பெத்தவங்களுக்கு நிம்மதியாயிருக்கும்"

"நான் உங்க அம்மாகிட்ட பேசட்டுமா?"

"அதுக்கு நீ செத்தா முடியும்... இத்தனை நாள் கழிச்சு சந்திச்சிருக்கோம், அதுக்குள்ளே ஏன் சாகப் பாக்குறே?"

"இப்ப மட்டும் நான் என்ன செஞ்சிட்டிருக்கேன்னு நினைக்கிறே?"

"மனோ, எங்கம்மா இறந்து போய் ஒரு வருஷமாகுது. பத்து வருஷத்துக்கு மேலே கேன்சர்ல ரொம்பக் கஷ்டப்பட்டாங்க... சர்ஜரி, ரேடியேஷன், கீமோ... பிறகு ரிலேப்ஸ்... கை, கால், வயிறுனு பரவி, வலி தாங்க முடியாம...ஷி வாஸ் டெவஸ்டேடட். என்னால நினைச்சுப் பார்க்கக்கூட முடியலை. என் வாழ்க்கை நாசமானதுக்கு அவங்களுக்குக் கிடைச்ச தண்டனைனு.. தானே ஏதோ நினைச்சுக்கிட்டு.. சைகலாஜிகலா வேறே ரொம்ப சித்திரவதைப் பட்டாங்க" என்றபடி தன் தோளில் சாய்ந்த நிலாவை அணைத்து அழுத்திக் கொண்டான் மனோ.

சற்று அமைதியான நிலா தொடர்ந்தாள். "எங்கப்பாவைப் பத்தி நீ என்ன கேள்விப்பட்டியோ தெரியாது. தாஸ் குடும்பத்துக்கிட்டே நிறையத் திருடிட்டாரு. பன்னீர் எல்லாத்தையும் மன்னிச்சு என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதா சொன்னான்.. என்னால முடியலே. எங்கப்பா கிட்டே போய் பெரிய தாஸ் வற்புறுத்தினாரு என்னைக் கல்யாணம் செஞ்சு வக்கச் சொல்லி. நான் தீர்மானமா முடியாதுனு சொன்னதும் எங்கப்பாவுக்கு என் மேலயும் உன் மேலயும் ரொம்பக் கோபம்..

ஜெயிலுக்குப் போக வேண்டிய நிலமை வந்ததும் நான் பன்னீர் கிட்டே கெஞ்சி, அவர் மேலே இருந்த கேசைக் கைவிடச் செஞ்சேன். எங்க வீட்டை அவங்க கிட்டே கொடுத்துட்டு ஊரை விட்டே ஓடிறதா சொன்னேன். மிச்ச பணத்தை மாசா மாசம் கொடுத்துடறதா சொன்னேன்.. பன்னீர் என் மனசைப் புரிஞ்சுக்கிட்டு எங்கப்பாவோட சொத்து.. இருந்த பணம்.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கொஞ்சநஞ்ச மானத்தோட ஊரை விட்டு ஓட வழி செஞ்சான்..

அதுக்குப் பிறகு ஊர்ல விஷயம் பரவி ரொம்ப அவமானமாயிடுச்சு.. கொஞ்ச நாள் பேங்குல ட்ரேன்ஸ்பர் வாங்கிட்டு என் வேலையை வச்சுகிட்டு அங்க இங்க சுத்தினோம்.. எங்கப்பாவோட கோவம் மெள்ள உள்கோபமா மாறி தன்னையே வெறுக்கத் தொடங்கினாரு. அப்பத்தான் எங்கம்மாவோட வியாதி முத்தினது தெரிய வந்துச்சு.. தாஸ் குடும்பக் கடன், எங்கம்மாவோட மருத்துவம்னு நான் பணம் சேர்க்கறதுல குறியா இருந்துட்டேன் மனோ.. பணம் சேக்குறதா சொன்ன உன்னைப் புண்படுத்திப் பேசின பேச்சை நான் மறக்கவே இல்லை..

சிவா பத்து வருஷமா எங்களுக்கு நண்பராகவும், துணையாகவும் இருந்துட்டு வரார். அவரோட செல்வாக்குலதான் இந்த பேங்க் வேலையும் கிடைச்சுது.. என் கடனை சீக்கிரமா அடைக்க முடிஞ்சுது.. எங்கம்மா சாகறப்ப சினிமா பாணியில என் கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டாங்க, நான் சிவாவைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு.."

"சிவாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?" என்றான் மனோ.

"பின்னே? சாகற சமயத்துல சத்தியம் செய்துட்டு சும்மா இருக்கலாமா? எங்க அம்மாவோட ஆத்மா வருத்தப்படாதா?"

"அப்ப இந்த ஆத்மா?" என்று அவள் கையை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான் மனோ.

"ஐயே.. ஆம்பிளைங்களுக்கு ஆத்மா அங்கயா இருக்கு?" என்று அவனைச் சீண்டினாள் நிலா. "உன்னை யாரு இப்ப திடீர்னு என் முன்னால வரச்சொன்னது? ஒண்ணு செய்வோம்.. நீ இத்தனை நாள் பொறுமையா இருந்திருக்கே, இன்னும் கொஞ்சம் பொறுத்துக்க. நான் சிவாவைக் கல்யாணம் செய்துகிட்டு ஒண்ணு ரெண்டு வருஷம் ஜாலியா இருந்துட்டு.. அப்புறம் டிவோர்ஸ் பண்ணிட்டு.. உன்னைக் கல்யாணம் செஞ்சுக்குறேன்... என்ன சொல்றே?"

"உனக்கு விளையாட்டா இருக்கா?"

"சரி, வேண்டாம்.. நான் சிவாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உன்னை வேணா... வச்ச்ச்சுக்கட்டுமா?" என்று கண் சிமிட்டினாள்.

மனோ கோபத்துடன் பதில் பேசாமலிருந்தான்.

நிலா வேண்டுமென்றே பொறுத்திருந்தாள். பிறகு, "கோவமா? ஏய், இதோ பார், உனக்குப் பிடிக்குமேனு பட்டுப்புடவைக் கட்டிக்கிட்டு வந்தேன். முன்னெல்லாம் பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்தா புடவையைத் தொட்டுப் பாக்கற மாதிரி நைசா என் இடுப்பைக் கிள்ளி.. எது பட்டு எது இடுப்புனு புரியல..பட்டு மாதிரியே வழவழனு இருக்குனு சொல்லுவியே நினைவிருக்கா? ஐ மிஸ் தட், யு நோ?" என்றாள்.

மனோ தொடர்ந்து எதுவும் சொல்லாமலிருந்தான்.

நிலா அவன் கைகளை மீண்டும் இணைத்துக்கொண்டு, "மனோ.. நமக்கு சிவா ஒரு பிரச்னையே இல்லை. நாம கல்யாணம் செய்துக்க எங்கப்பா சம்மதிக்க மாட்டார், அதனால்தான்..." என்றாள்.

"ஏன்?"

"நீ என்னை ஏமாத்திட்டதா நினைச்சு உன்னை தினம் சபிச்சுக்கிட்டே இருக்கார். எங்கம்மாவும் உன் மேலே ரொம்ப வெறுப்பா இருந்தாங்க. வியாபாரம், பணம் எல்லாம் போய், இதெல்லாம் சேர்ந்து அவருக்கு நாலஞ்சு வருசமா உடம்பும் சரியில்லை, மனசும் சரியில்லை"

"புரியலையே.."

"உனக்குக் கடிதம் எழுதினேனில்லையா? எழுதச்சொன்னது எங்க அப்பா அம்மாதான். நீ கடிதத்தைப் படிச்சு ஓடி வந்ததும் உங்கிட்டே உண்மையைச் சொல்ல முடியாம ஏதோ சொல்லி மழுப்பினேன்.. கடைசியா ஒரு கடிதம் போடச்சொன்னதும் அப்பா தான்.. அதுக்குள்ளே விவகாரம் தீவிரமாயிடுச்சு.. நீ வந்த உடனே என்னை உனக்குக் கல்யாணம் செய்து வைக்க நினைச்சுக்கிட்டிருந்தாங்க. நல்லவேளை நீ வரலை"

"நல்லவேளையா? ஏன் அப்படிச் சொல்றே?"

"வந்திருந்தா நம்ம கல்யாணத்துக்குப் பிறகு எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே தற்கொலை பண்ணிக்கிட்டிருப்பாங்க. ரொம்ப நாள் கழிச்சு எங்கம்மா தான் சொன்னாங்க.. தாஸ் திருட்டு அவமானம் அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப பாத்திச்சு.. எனக்கு ஒரு வழி செஞ்சுட்டு அவங்க சாகத்துணிஞ்சிட்டாங்க" என்றாள்.

மனோவுக்குக் கோபம் வந்தது. "நான் ஏன் உடனே வரலைனு உனக்குத் தெரியாதா? நீ என்னை மறுபடி வரச் சொல்லவேண்டியது தானே? எங்கம்மா கிட்டேயாவது நிலமையைச் சொல்லியிருக்கலாமே?"

"உன் வீட்டுக்கு வந்தேன் மனோ. அப்பத்தான் உங்கம்மா உன்னை எவ்வளவு நம்பியிருக்காங்கனு புரிஞ்சுது. வோக் மி அப். எங்க அப்பா அம்மாவுக்கு மட்டும் என்னை விட்டால் யார் இருக்கா? அவங்களை விட்டு உன்னோட என்னால எப்படி வரமுடியும்? அதுவும் கைல காலணா இல்லாமல் அவமானத்தோடு தெருவுக்கு வந்த பிறகு? போதாக்குறைக்கு வியாதி வேறே. நான் போன பிறகு அவங்க ஏதாவது செய்துக்கிட்டாங்கனா? அப்படி எனக்கே தோணிச்சு.. நான் நெனச்ச மாதிரியே அவங்களும் நெனச்சிருக்காங்க பாரேன்..

உங்க வீட்டுக்கு வந்து உங்கம்மாவோட கொஞ்ச நேரம் இருந்தது, என்னைச் சரியாக சிந்திக்க வச்சுது. உன் ரூம்ல ராத்திரி முழுக்க தனியா இருந்தேன். ரொம்ப நிம்மதியான இரவு. நீ அங்கே என் கூடவே இருந்த மாதிரி ஒரு உணர்வு. அந்த நினைப்போட கிளம்பிட்டேன்.."

"அதுக்குப் பிறகாவது என்னைத் தேடியிருக்கலாமே?"

"நீ வேலைலயும் ஊர்லயும் இருந்தால் தானே?" என்று அவன் கண்களை நேராகப் பார்த்தாள். "நீ மட்டும் தான் உன் காதலைத் தேடிக் கொண்டிருக்கிறதா நினைப்பா?"

இருவர் கணகளிலும் கலக்கம்.

"நான் உங்கப்பாவைப் பாத்துப் பேசுறேனே?"

"வேண்டாம் மனோ. இப்ப நீ மறுபடி என் வாழ்க்கையில் வந்திருக்கேனு தெரிஞ்சா எங்கப்பா கோபமும் வருத்தமும் படுவாரு. அந்த அதிர்ச்சியினால அவரைக் கொல்ல விரும்பலை. கொஞ்சம் டயம் கொடு. இன்னிக்கு ஒரு நாள் சந்தோஷமா இருப்போம். இனிமே இதைப்பத்தி பேச வேண்டாமே?" என்றாள்.

இருவரும் அமைதியாக இருந்தார்கள். மெள்ள மனோ அவள் இடையில் கை வைத்து, புடவையுடன் சேர்த்து அவள் இடுப்பை வலிக்காமல் கிள்ளினான். "தேங்க்ஸ்" என்றான்.

"அப்புறம் எப்ப பேசுறது?"

"நாலு நாள் வேலை விஷயமா வெளியூர் போறேன் மனோ... வந்த பிறகு பேசலாமா?"

    மோன்டா மார்கெட் அருகே இரானிய டீக்கடையில் சிவாவும் மனோவும் நுழைந்து ஆளில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்தார்கள். "நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி சிவா" என்றான் மனோ.

"தட்ஸ் ஆல் ரைட்... ஆனா நிலாவுக்குத் தெரிஞ்சா வம்பாயிடும்"

அங்கே வந்த டீக்கடை சிப்பந்தியிடம் "பை டூ" என்றான் சிவா.

"நிலா ஒண்ணும் சொல்லமாட்டானு நெனக்கிறேன்" என்றான் மனோ.

அதற்குள் சிப்பந்தி ஒரு கப் டீயும் இரண்டு கண்ணாடி டம்ளரும் கொண்டு வைத்தான்.

சூடான டீயை அருந்திக் கொண்டிருந்தபோது, வேகமாக உள்ளே வந்தாள் நிலா. நேராக மனோ அருகே சென்று அவன் குடித்துக்கொண்டிருந்த டம்ளரைத் தட்டிவிட்டாள். டீ சிதறித் தெளிக்க டம்ளர் விழுந்து உருண்டது.

"அடடா.. நல்ல டீயை இப்படி வேஸ்ட் பண்றியே நிலா.. பாதிதான் குடிச்சிருந்தேன்.." என்றான் மனோ.

"எங்கப்பா கிட்டே பேசவேணாம்னு படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டியா?"

"நிலா நான் சொல்றதைக் கேள்.."

"தேவையில்லை.. எங்கப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும். என்னோட பேச்சுக்குக் கொஞ்சமாவது மரியாதை குடுக்க வேணாமா? இன்னும் இருபது வயசுக்காரன் மாதிரியே நடந்துகிட்டா எப்படி?"

"நிலா.."

"ஸ்டாப் இட். என் வாழ்க்கையை நாசம் பண்றதே உனக்கு வேலையா போச்சு இல்லே?"

அந்தச் சொற்களைக் கேட்டு அதிர்ந்த மனோவுக்குக் கோபம் வந்தது. 'கொஞ்சம் பேசாம இருங்க மனோ' என்று ஜாடை காட்டினான் சிவா.

நிலா தொடர்ந்து பொறிந்தாள். "நாலு நாள் நான் வெளியே போயிட்டு வரதுக்குள்ள இப்படி செய்யுறியே? எங்கப்பா கிட்டே நம்மளைப் பத்திப் பேச வேணாம்னு சொன்னா கேக்க மாட்டியா? இப்ப நான் இல்லே அவரை வச்சுகிட்டுத் திண்டாடணும்?"

"ஏன் நிலா? நானும் உன் கூட சேர்ந்து திண்டாடுறேனே? எனக்கு உன்னோட திண்டாட்டத்துல பங்கு தரச்சொல்லித் தானே தவமிருக்கேன்?" என்றான் மனோ.

சிவா இடையில் புகுந்தான். "நீங்க ரெண்டு பேரும் அனாவசியமா சண்டை போடுறீங்கனு தோணுது. உயிருக்குயிரா காதலிக்கறதா சொல்றீங்க... இந்த சின்ன விஷயத்தை இப்படி பெரிசு பண்றீங்களே? நான் உங்கப்பா கிட்டே பேசி எல்லாம் சமாதானமாயிடுச்சே நிலா.. இன்னும் ஏன் கோவப்படுறே? நிலா... மனோ அப்படி என்ன தப்பு செஞ்சுட்டாரு? நீ இல்லாதப்ப உங்கப்பா கிட்டே பேசியிருக்க வேணாம்.. ஆனா அதோட உள்ளர்த்தம் உனக்குப் புரியாமலா போகும்?"

"என்னால இவளை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலே சிவா.. அதான் பொறுக்க முடியாம அவ அப்பா கிட்டயே போய் அனுமதி கேட்டேன்.." என்றான் மனோ.

"ஆமா... இப்ப எங்கப்பா இந்தக் கல்யாணம் நடந்தா வீட்டுல பொணம் விழும்னு கத்திட்டிருக்காரு"

"அதெல்லாம் டிராமா நிலா" என்றான் சிவா.

"டிராமாவோ என்னவோ.. தேவையில்லாத சிக்கல். எங்கப்பா அனுமதியில்லாம கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொன்னேனா? எதுக்குத் தேவையில்லாம வயசான மனுஷனைப் போட்டு சித்திரவதை செய்யணும்? கொஞ்சம் பொறுத்துக்கனு சொன்னேன்.. அதுக்கு மதிப்புக் கொடுக்க வேணாமா? இந்த வயசுலயும் இம்பல்சிவா நடந்துகிட்டா? மூஞ்சியைப் பாரு.. பென்சில் தொலைச்சப் பிள்ளையாட்டம்.." என்று சற்றே தணிந்தாள். "இப்ப பாரு.. சிவாவைத்தான் கல்யாணம் கட்டிப்பேன்னு சத்தியம் செஞ்சு குடுக்கச் சொல்றாரு.."

"அவ்வளவுதானே? லீவ் இட் டு மி.. உங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்க வேண்டியது என்னோட ப்ளஷர். உங்கப்பா கிட்டே நானே பேசுறேன்.." என்றான் சிவா. நிலாவிடம், "டீயைத் தட்டி விட்டதுனால நீதான் பணம் கொடுக்கணும். வாங்க போவலாம்" என்றான்.

    அடுத்த மூன்று மாதங்களில் சிவாவின் தலையீட்டினால், நிலாவின் தந்தைக்கும் மனோவுக்குமிடையே இருந்த குழப்பமும் கோபமும் நீங்கியது. மனோ தினமும் நிலாவின் தந்தையோடு அரை மணியாவது செலவழித்தான். தன் வாழ்வின் தேடல்களைச் சொன்னான். மெள்ள இருவருக்குமிடையே நேசம் மலரத் தொடங்கியது. நிலாவின் தந்தையே அவர்கள் திருமணப் பேச்சை எடுத்தார். "நிலா... நீ மனோவையே கல்யாணம் செஞ்சுக்கமா" என்றார் ஒரு நாள்.

அடுத்த மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துப் பதிவுத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்கள்.

    தாலுகா அலுவலகத்தில் தயாராகக் காத்துக்கொண்டிருந்தான் மனோ. எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். நிலாவை மணக்கப்போகிற உற்சாகமும் உவகையும் அவன் முகத்தில் தெரிந்தன. பதினொரு மணிக்குப் பதிவுத் திருமணம். பத்தரை மணிக்கு சிவாவும் நிலாவின் தந்தையும் வந்தனர்.

நிலா மட்டும் வரவில்லை.

    ணி இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. சாம்ராட் மதுக்கூடத்தில் எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சாப்பாட்டிற்கு பிறகு எல்லோருக்கும் ஐஸ்க்ரீம், ரசமலாய், பாசந்தி கொண்டு வரச்சொல்லி அதுவும் காலியாகியிருந்தது. பொன் சார் மட்டும் இனிப்பு சாப்பிடவில்லை. பதிலுக்கு இன்னொரு விஸ்கி கொண்டு வரச்சொல்லி மெள்ள அருந்திக் கொண்டிருந்தார். சிறிய ஏப்பம் ஒன்றை விட்டு நெஞ்சைக் கைகளால் குத்திக்கொண்டார். "சிக்கன்ல ரொம்ப மசாலா...புர்ஜீல பெருங்காயம் தூக்கல்... அதான் அஜீரணம்" என்றார்.

"மசாலாவை விடுங்க சார், மனோவைப் பத்தி சொல்லுங்க... அப்புறம் என்ன ஆச்சு?" என்றான் குழுவில் ஒருவன்.

"நிலா வரவேயில்லை, அவ்வளவு தான். வீட்டுலயும் இல்லை, ஊர்லயும் இல்லை. தேடிப் பார்த்துட்டு பழையபடி வெறுத்துப் போனான் மனோ"

"என்ன சார் இது? அவ்ளோதானா? அதுக்குப் பிறகு மனோவும் நிலாவும் சந்திக்கவேயில்லையா?"

"பத்து வருஷத்துக்குப் பிறகு மறுபடி அவளைப் பத்தித் தகவல் கிடைச்சுது அவனுக்கு" என்றபடி எழுந்தார்.

"எங்க சார் போறீங்க? மிச்சத்தையும் சொல்லிட்டுப் போங்க"

வயிற்றையும் நெஞ்சையும் தட்டிக்கொண்டு "இதா வரேன்" என்று கழிவறைப் பக்கம் போனார்.

"சீக்கிரம் வாங்க சார், பனிரெண்டு மணிக்கு கடை மூடிடுவாங்க. இப்ப யாகம் எல்லாம் பண்ண வேண்டாம்"

எங்களுக்குள் அரட்டையடித்தோம். மூன்றாவது சிகரெட் முடிந்துபோகும் நேரத்தில் பொன் சார் திரும்பி வந்தார். களைத்துப் போயிருந்தார். கூட்டம் அவரை விடவில்லை. நாலைந்து முறை பெருமூச்சு விட்டார். "சிகரெட் பிடிக்காதீங்கன்னு சொன்னா கேளுங்கடா, தடிப்பசங்களா" என்றார். தொண்டையைப் பல முறை கனைத்துக் கொண்டே தொடர்ந்தார்.


தொடரும் ►►

12 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. ஆர் கே சண்முகம் யார் என்று ஒரு பதிவில் தாங்கள் கேட்டிருந்தீர்கள் .அதற்கு சிறிய விளக்கம் -- தமிழ்நாட்டில் கோவையில் 17/10/1892 ல் பிறந்து சென்னை சட்டமன்றம் முதல் பாராளுமன்றம் வரை இடைவிடாது பணியாற்றி ஆங்கிலேயர்கள் நம் நாட்டை சுரண்டி வறுமையில் விட்டுச் சென்ற போது நம் நாட்டை காப்பாற்ற பொருத்தமானவர் இவர்தான் என்று மகாத்மா காந்தியவர்களால் அடையாளம் கண்டு சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக திகழ்ந்த டாக்டர் ஆர் கே சண்முகம் செட்டியார் .சுதந்திர இந்தியாவினை உருவாக்குவதில் ஆங்கிலேயருக்கும் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கும் பாலமாகதிகழ்ந்து இந்தியா சுதந்திரத்தின் அவசியத்தை ஆங்கிலேயருக்கு உணர்த்தியவர்.தமிழிசைச்சங்கத்தை உருவாக்கியவர்.
  ஆர் கே எஸ், பெரியாருடன் இணைந்து திராவிட இயக்கத்தை வளர்த்த முன்னோடியாவார்.அவர் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதவை.அவர் தகுதிக்கு பிராமணராக பிறந்திருந்தால் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆகியிருப்பார்.
  ஆர் கே எஸ் அவர்களின் நாட்டுக்கு செய்த சேவைகளைப் பாராட்டி இதுவரை இந்தியா அரசாங்கம் மற்றும் தமிழக அரசும் ஒன்றும் செய்யவில்லை

  பதிலளிநீக்கு
 3. சிவா..மனோ..நிலா என கதை சுகமான ஓட்டம் ... மனோ வின் பிடிப்பான காதல்..நிலாவின் மெச்சூரிட்டி.. சிவா வின் பெருந்தன்மை என நடையழகு....கல்யாண ஏற்பாடு .. காட்சி மாற்றம் ..அந்த குழுவோடு சேர்ந்து படிக்கும் எல்லோரையும் பொன் சாரை பார்க்க வைத்து வீட்டீர்கள்..

  பதிலளிநீக்கு
 4. மீண்டும் சந்திச்சது பத்து வருஷம் கழிச்சா ?
  ரொம்ப சுவாரஸ்யம்
  புன்னகை சினிமாவிலே ஒரு காட்சி வரும்
  நாகேஷ் இப்படித்தான் சுவரஸ்யமாக முன்கதை
  சொல்லிக் கொண்டு வருவார்
  பின் புலக் காட்சியிலே ஒரு முக்கியமான
  முடிவெடுக்க வேண்டிய இடம்
  அந்தக் கதாபாத்திரம் ஒன்று இரண்டு என
  பத்துவரை எண்ணத் துவங்கும்
  இங்கே இடையில் புகுந்து கதை சொல்லுகிற
  நாகேசும் எண்ணிக்கையைத் தொடர்வார்
  குழப்பம் இல்லாது ரொம்ப ஸுவாரஸ்யமாக இருக்கும்
  அதே சுவாரஸ்யம் தங்கள் கதையிலும் தொடர்கிறது
  கதை கேட்பவர்களாக நாங்கள் இருப்பதுபோல் படுகிறது
  பதிவைப் படிப்பவர்கள் போல் இல்லை
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. பொறுமை பொன்.
  ஒரு லார்ஜுக்கு பத்து வருஷம் சொல்றார் பொன்.
  நிலா எங்கே, என்ன ஆனாள் அல்லது ஆனார்?
  இனிமையான பாடல் பிட் இறுதியில்.

  பதிலளிநீக்கு
 6. //ஒரு லார்ஜுக்கு பத்து வருஷம்
  அட்டகாசம் ஸ்ரீராம்... இந்த வரியையும் கதையுல சேத்துற வேண்டியது தான்.

  வருகைக்கு நன்றி ஸ்ரீராம், Ramani, பத்மநாபன், வாணியர் இநச.

  பதிலளிநீக்கு
 7. கதையின் இந்த பகுதியில் உங்கள் எழுத்து நடை வியக்க வைத்தது. பல வரிகள் மிகவும் ரசிக்க வைத்தது. அருமை! வாழ்த்துக்கள்!

  என்னங்க இது முதல்ல பதினஞ்சு வருஷம், இப்போ பத்து வருஷமா! போற போக்குல இவங்க ரெண்டு பேரும் ஒரேதடவையா அறுபதாம் கல்யாணம்தான் பண்ணிப்பாங்க போல இருக்கே.

  பதிலளிநீக்கு
 8. என்னவோ ஒரு பயம் நெருடுவதை தவிர்க்க இயலவில்லை இந்த பாகம் படிக்கும்போது...

  இந்த பாகம் போட்ட அன்னிக்கு நான் பாதி தான் படித்தேன்.. மீதி படிக்குமுன் சிடுமூஞ்சி மேனேஜரின் தாக்குதல்... இடைவிடாத தாக்குதலால் மனம் சோர்ந்து அதன்பின் வேலைகளில் மனம் செலுத்தமுடியாமல் அவஸ்தைப்பட்டேன். மனதை உற்சாகப்படுத்திக்கொள்ள நான் படிக்கும் ஒரு சில பகிர்வுகளில் உங்க கதையும் ஒன்று அப்பாதுரை சார்.....

  ஆனால் அன்று மேனேஜர் தான் மட்டும் இப்படி கடுமையான சொற்களால் என் மனதை புண்படுத்துவதை நியாயம் என்று வாதாடினதோடு நிறுத்தாமல் என்னையும் அதுபோல் இருக்கச்சொன்னது தான் என் மனச்சோர்வு அதிகரிச்சு என்னால் அன்று யாருடைய பகிர்வுக்கும் கருத்து சொல்லமுடியாமல் போனது....

  சிவா தான் ஒரு பண்பான மனிதன் மட்டுமல்ல ஒரு நல்ல தோழன் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதன் என்றும் உங்க வரிகளில் புரியவெச்சுட்டீங்க....

  இந்த குட்டி குட்டி சிலுமிஷங்கள் செய்யும் மனோவின் மனதில் எத்தனை அழுத்தமான காதல் இருக்கு என்பதையும் நீங்க குறிப்பிட மறக்கலை....

  நிலாவின் நிலை ஏன் அப்டி லூசு போல அத்தனை முறை கடிதம் போட்டு வரவெச்சு லூசு போல பேசி அனுப்பியதுன்னு நானும் நினைச்சேன். ஆனால் அதற்கு பின்னால் இத்தனை அழுத்தமான காரணம் இருந்தது என்று அறிந்தபோது ஐயோ பாவம் நிலா எப்படி ஒரு இக்கட்டான சூழலில் தன் பெற்றோரிடமும் சொல்லமுடியாம தன் மனம் கவர்ந்தவனிடமும் பகிர முடியாம எப்படி எல்லாம் துடிச்சிருப்பாங்க.....உணரமுடிகிறது பெண்ணானதால் பெண்ணின் உணர்வுகளை என்னால் உணரமுடிகிறது... ஆனா நீங்க எப்படி அதே போல் உணர்ந்து நிலாவின் அவஸ்தைகளை படமாக்கினது போல எழுதி இருக்கீங்க? ஆச்சர்யம் அதே சமயம் சந்தோஷம், இதோ இங்கும் ஒரு ஆண் உண்டு பெண்ணின் உணர்வுகளை மதித்து அதை படைக்கும் ஒரு மனம் இருக்கிறது என்று அறிய முடிகிறது....

  கதாசிரியர் எழுதும் படைப்புகளை தன் போக்கில் எழுதுவதை நான் காண்பதுண்டு.. எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை, உங்க இந்த கதை படிக்கும்போது எனக்கு அந்த காட்சிகள் அப்படியே கண்முன் தோன்றுகிறது.... இப்படி தானே படிப்பவர்கள் எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும்? அது தான் இந்த கதைக்கு கிடைத்த வெற்றியாகவும் நினைக்கிறேன் சார்....

  மனோவின் சின்ன சின்ன சீண்டல்களில் நிலாவின் மனம் லயித்து போனதை பட்டுப்புடவை எது இடுப்பு எதுனே தெரியலை, ரெண்டு எழுத்து மூன்றெழுத்து நான்கெழுத்து நி ம் ம தி நீ என்று காட்டுவது இதெல்லாம் ரசிக்கவைத்த குட்டி குட்டி காட்சிகள்....

  இந்த கதை படம் எடுத்தால் கண்டிப்பா ரொம்ப நல்லா ஹிட் படமா போகும் என்பதையும் உறுதியா சொல்லமுடிகிறது என்னால்....

  மிஸ் பண்ணி இருக்கேன் உங்க படைப்புகளை, இனி மிஸ் பண்ண மாட்டேன். என்ன ஒன்னு லேட்டாகும் படிக்கவும், படிச்சு கருத்திடவும்... ஆனால் கண்டிப்பா படிப்பேன்...

  நிலாவின் அம்மா சத்தியம் வாங்கிக்கிட்டு இறந்ததும், அப்பா இப்ப கோபமா இருப்பதும்... அதை எல்லாம் சரி செய்து சிவா மனோவை அவர் அப்பாவிடம் சிநேகமாக்கியதும்....

  எல்லாம் சரிப்பா....

  ஆனா என்ன அது நிலா ஏன் வரல :(
  என்னாச்சு.... மறுபடி பயமுறுத்தாதீங்க.... பிரிவை சொல்லி செல்வதே உங்களுக்கு பழக்கமாச்சுன்னு கோவம் வருது.. பின்ன என்னவாம். அதான் எல்லாம் சரியாச்சுல்ல? சுபம் சொல்லக்கூடாதா... கோவத்தில் குச்சி எடுத்து உங்களை அடித்தால் என்ன?? பிரிச்சிடாதீங்க அப்பாதுரை..... மனோ பாவம். நிலா பாவம் :( பயம்மா இருக்கு அடுத்த பகுதி படிக்கவே...

  ஏன்னா சொன்ன பொன் சார் திடிர்னு எழுந்து அந்த இடத்தில் இருந்து போனார்? காரணம் என்ன? அவராலயும் தாங்கமுடியாத சொல்லமுடியாத அந்த காரணம் என்ன?

  நிலா இல்லையா உயிரோடு :(
  இல்ல ஆக்சிடெண்ட் ஆகி கோமாவிலா? :(

  இல்ல என்ன தான் ஆச்சு.. சொல்லிடுங்களேன்...

  இப்படி புலம்ப விட்டு அமைதியா இந்த பகுதிய முடிச்சிட்டீங்களே :(

  உங்க எழுத்துகள் வரிகள் அது சொல்லும் நிஜங்கள் ( நிஜம் தானே? ஏன்னா இது கதை போல தெரியலையே ) அந்த பொன் சார் நீங்களா இருக்குமோ???

  அருமையா கதை எழுதுறீங்க. எந்த விஷயத்தையும் நீங்க விடலை... தெளிவான கதை... இது சினிமா எடுத்தால் கண்டிப்பா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை....

  அவ்ளோ தத்ரூபமா காட்சி கண்முன் தெரிவது போல எழுதுவது உங்க சிறப்பு அப்பாதுரை....

  அன்பு வாழ்த்துகள் அப்பாதுரை அருமையா கதை படிக்கும்படி தெளிவான நீரோட்டம் போல கொண்டு செல்வதற்கு....

  அடுத்த பகுதி படிக்க பரபரக்கிறது இருங்க போறேன் அடுத்த பகுதி படிக்க...

  பதிலளிநீக்கு
 9. //அவனுடைய இடது கைவிரல்களைப் பிடித்திழுத்துச் சொடுக்கிட்டாள் நிலா. "நீ சொல்லாட்டிப் போயேன்.. சரி, என்னோட நாலெழுத்துத் தேவையைச் சொல்றேன். நி ம் ம தி"
  "எனக்கும் தான்.." என்ற மனோ, வலது கையை நீட்டினான். //

  stunning visual appadurai. song bits are super.

  பதிலளிநீக்கு
 10. //இரண்டெழுத்து. அது இல்லாட்டி மூணெழுத்தும் நாலெழுத்தும் தேவையில்லை

  புதிர் போடம கதை எழுத மாட்டீங்களா? :)

  பதிலளிநீக்கு
 11. //நிலா சிரித்தாள். கணம் பொறுத்து, "உன்னோட தேவை என்ன?" என்றாள்.

  "இரண்டெழுத்து. அது இல்லாட்டி மூணெழுத்தும் நாலெழுத்தும் தேவையில்லை"//
  //புதிர் போடம கதை எழுத மாட்டீங்களா? :)//
  நிலா உயிர் நிம்மதி ?

  பதிலளிநீக்கு