2011/09/03

ஒருமனம்




1 2 ◀◀ முன் கதை

    றுமைக் கோட்டுக்குக் கீழே விழுந்தது முதல் நிகழ்ச்சி.

ஏறக்குறைய இருபது வருடத் திருமணத்திற்குப் பிறகு மனோவின் தந்தை யாரோ இளவயதுக்காரியுடன் ஓடிவிட, மனோவும் அவன் தாயும் தினங்களில் தெருவுக்கு வந்துவிட்டனர். வீட்டுச் செலவை சமாளிக்கவும் மனோகரனைப் படிக்க வைக்கவும் வேண்டி, அவன் தாய் தெருக்கோடி பாலகணபதி மளிகையில் கணக்கு எழுத வேலைக்குச் சேர்ந்தாள். காலை எட்டரை மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை, இருநூறு ருபாய் மாதச் சம்பளத்திற்கு அவள் கஷ்டப்பட்டது, அவனைக் குடைந்தெடுக்கத் தொடங்கியது. ஓடிப்போன அப்பாவைப் பழிவாங்கத் துடித்தான்.

நிலாவை முதன் முதலாய் முத்தமிட்டது இரண்டாவது நிகழ்ச்சி.

பெரிய தாசிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கியிருந்த நிலாவின் தந்தை, வியாபாரத்தில் எதிர்பாராத விதமாய் மிகுதியான லாபம் சம்பாதித்தார். லாபம் பெருகத் தொடங்கியவுடன் ஊரின் மேற்குப் பகுதியில் பெரிய வீடு கட்டிக் கொண்டு குடியேறினர். தாஸ் குடும்பத்தாருடன் நிலாவின் குடும்பமும் நெருங்கிப் பழகத் தொடங்கினர்.

எதிர் வீட்டிலிருந்த நிலா, எங்கோ போய்விட்டாள் என்பதை மனோகரனால் ஏற்கமுடியவில்லை. அவளை அடிக்கடி பார்க்க முடியாமல் போனதே என்று எரிச்சலும் ஆத்திரமும் பட்டான். தன் குடும்பத்தின் வறுமையையும், 'ஓடிப்போன அப்பா' என்ற கறையையும் எண்ணி ஒருவேளை நிலா தன்னை விட்டு விலகிவிடுவாளோ என்று பயந்தான்.

ஒரு சில வாரங்களுக்கு அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நிலா, மெள்ள அவனைப் பார்க்க வருவதை நிறுத்தினாள். பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது சந்தித்துப் பேசினாலும் மனோகரனுக்கு நிலா தன்னை விட்டு விலகுவது போல் தோன்றியது. ஒரு நாள் அவளைக் கேட்டுவிட்டான். "நிலா, ஏன் முன் போல என்னோட பழகுறதில்லே?"

"எப்பவும் போலத்தான் பழகுறேன்? ஏன் இப்படிக் கேக்குறே?"

"இல்லே. இப்ப நீ பணக்காரியாயிட்டே இல்லே, என்னைக் கண்டா இளப்பமாயிடுச்சு. அடிக்கடி பன்னீருடன் நீ பேசுறதை நான் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். எனக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்கலே"

நிலா சிரித்தாள்.

"என்னோட காதல் உனக்கு சிரிப்பா இருக்கா?"

"சாரி, சிரிக்கலே. தூயக் காதலா? அப்ப என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்குவியா?"

"நான் ரெடி"

"ஜெயிலுக்குத் தான் போவே. ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு உளறாதே. நாம் ரெண்டு பேரும் இன்னும் படிச்சு முடிக்கலே. சட்டப்படித் திருமண வயது என்னனு தெரியுமா காதலரே?"

"அப்ப ஏன் எங்கூட முன்மாதிரி பழக மாட்டேங்குறே? மத்தவங்க கூட சிரிச்சு நல்லா பழகுறியே?"

"எப்பவும் போலத்தான் இருக்கேன். அனாவசியமா பொறாமைப் படாதே. படிப்புல கவனமா இரு. உங்கம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க. நெனச்சுப் பார். இந்த டயத்துல அனாவசியமா உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுக் குழம்பி எதிர்காலத்தை வீணடிச்சுக்காத, புரியுதா?"

"சரி, பாட்டி"

"டேய்!" என்று பொய்யாக அவனை அடித்தாள்.

    மனோவின் பதினெட்டாவது பிறந்த நாள்.

விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தான். நிலா வந்து வாழ்த்து சொல்வாளென்று நாளெல்லாம் காத்திருந்தான். அவள் வீட்டுக்குச் சென்று பார்த்தான். நிலாவைக் காணோம். "பன்னீரோட எங்கயோ கார்ல போயிருக்கா, மனோகர்" என்றார் நிலாவின் அப்பா.

கடும் கோபத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். அம்மா கடையிலிருந்து வேலை முடிந்து வரவில்லை. மனோகரனுக்குப் பசி, கோபம் என்று எல்லாம் கலந்து பொறுமிக் கொண்டிருந்தான். மாலை ஏட்டு மணிக்கு மேலாகிவிட்டது. தண்ணீர் குடிக்கலாமென்று பானையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்த போது, வாசலில் பன்னீர் செல்வதாசின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தாள் நிலா. அவள் கையில் ஒரு சிறு டிபன் பெட்டி இருந்தது. பன்னீர் அங்கிருந்தே கையசைத்தான். "இன்னும் அரைமணிலே திரும்பி வந்து கூட்டிப் போறேன், சரியா?" என்றபடி காரைக் கிளப்பி மறைந்தான்.

உள்ளே வந்த நிலா, "பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்றாள்.

மனோகரன் கோபமாக, "ஒரு இழவும் தேவையில்லை" என்றான். கையிலிருந்த தண்ணீரை மேசை மீது வைத்தான்.

"ஏன் இப்படி பிறந்த நாளதுவுமா நாராசமா பேசுறே?" என்றாள் நிலா.

"நான் பேசினா நாராசமா இருக்கும். அதான் அரைமணிலே திரும்பி வரதா சொல்லிட்டு கார்ல போறானே, அவன் பேசுறது நாதமா இருக்குதோ?"

"அவன் இப்படி பேசினாலும் நாராசம் தான்"

"உனக்கு வெட்கமா இல்லை, இப்படி நடக்க?"

"ஏன், டிரஸ் போட்டுத்தானே இருக்கேன்? எதுக்கு வெட்கப்படணும்?"

"என் பிறந்த நாளுக்கு என்ன திமிர் இருந்தா அவன் கூட வந்து இறங்குவே?"

"அவனையும் உள்ளே வரச்சொன்னேன்.. அவன் தான் வேலை இருக்குதுனு..."

"நிலா.. ஸ்டாப் இட். என்னை அவமானம் செய்யறதுக்காகவே என் பிறந்த நாளன்னிக்கு இங்கே அவனோட வந்து... அதுவும் நாள் முழுக்க அவனோட சுத்திட்டு வந்து நிக்கறே...நீ தயவுசெஞ்சு போயிடு. உன்னைப் பாக்கவே வெறுப்பா இருக்கு" என்று கத்தினான் மனோ.

"பாக்க வெறுப்பா இருக்குதுனா, கண்ணை மூடிக்க சிடுமூஞ்சி. நான் உன்னைப் பாக்கறேன்"

"ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்யுறே?"

"நான் செஞ்சிட்டு வந்ததை இன்னும் சாப்பிடக்கூட இல்லை, அதுக்குள்ளே சித்திரவதைன்றியே?" என்றபடி, டிபன் பெட்டியைத் திறந்து உள்ளிருந்த இரண்டு லட்டுகளில் ஒன்றை அவனிடம் கொடுத்தாள்.

ஆத்திரத்தில் மனோ அதைத் தட்டிவிட்டான். தட்டிய வேகத்தில் லட்டுடன் சேர்த்து டிபன் பெட்டியும் பறந்து விழுந்தது. டிபன் பெட்டி கையிலிருந்து பறந்த வேகத்தில் நிலாவின் விரலில் கீறிச் சிவப்பாய்க் கோடு போட்டுப் போனது.

"ஸ்" என்று விரலைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கினாள் நிலா. தரையில் இன்னும் டிபன் பெட்டி உருண்டு கொண்டிருந்தது. செய்த தவறை உணர்ந்து நிலைக்கு வந்த மனோகரன், "ஐம் ஸோ சாரி... நிலா, என்னை மன்னிச்சுடு" என்றான். அவளருகே சென்றான். "காலைலந்து உனக்காகவே காத்திட்டிருந்தேன்.. உன் வீட்டுக்குப் போனப்ப நீ பன்னீரோட போயிருக்கறதா சொன்னாரு உங்கப்பா.. அதுவும் நீ கார்ல அவனோட வந்து இறங்கினதும் என்னால அதை ஏற்க முடியாம... ரொம்ப அசிங்கமா நடந்துகிட்டேன்... ஐம் வெரி வெரி சாரி.. ஏன் இப்படி பொறாமைப்படுறேன்னு தெரியலே.."

"உனக்கு வெட்கமா இல்லை, இப்படி நடக்க?" என்றாள் நிலா.

சற்றும் தாமதிக்காமல், ""ஏன், டிரஸ் போட்டுத்தானே இருக்கேன்? எதுக்கு வெட்கப்படணும்?" என்றான் மனோகரன்.

சட்டென்று சிரித்தாள் நிலா.

"ஐம் ஸாரி... இதை உன் காலா நெனச்சுக்க.. மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று அவள் கைகளைப் பிடித்தான்.

"முடியாது.. கால் இங்கே இருக்கு" என்று காலை அசைத்தாள் நிலா.

சட்டென்று தரையிறங்கிக் குனிந்தான் மனோ.

"ஏய், ஏய, ஏய்... என்ன பண்ணுறே? எதுக்கு புடவையை உயர்த்துறே?" என்று பதட்டமானாள் நிலா.

"கால் இருக்குதுனு சொன்னியே.. காணமே.. புடவை மறைச்சிட்டிருக்கு.. அதான்"

"சீ" என்று அவளும் தரையில் உட்கார்ந்தாள். "திமிரைப் பாரு"

"என்னை மன்னிப்பியா நிலா? சத்தியமா இனி பொறாமைப் பட மாட்டேன். உங்கிட்டே எடுத்தெறிஞ்சு பேசமாட்டேன்"

"உன்னால முடியாத சமாசாரம். சத்தியமெல்லாம் செய்யாதே"

சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். அவளுடையக் கைகளை வருடிக்கொண்டிருந்தான். "சரி, மறுபடி சொல்லு" என்றான்.

"என்ன சொல்லணும்?"

"அதான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"சொல்ல மாட்டேன்"

"ஏன்? அதான் மன்னிப்பு கேட்டேனே நிலா?"

அவனுடைய கண்களைச் சந்தித்துக் குறும்புடன், "ஹேபி பர்த்டே" என்றாள்.

"நீ எடுத்துட்டு வந்த லட்டை நான் இப்ப சாப்பிடப்போறேன்" என்றபடி கீழே உதிர்ந்து கிடந்த லட்டுத்துண்டுகளை எடுத்தான்.

"சரியான பொறுக்கி" என்றாள். சிரித்து, "கீழே கிடந்ததை சாப்பிடாதேடா, லட்டுப் பொறுக்கி" என்று அவன் கையிலிருந்து பிடுங்கி குப்பைக் கூடையில் எறிந்தாள். "நான் கொண்டு வந்தது தான் இப்படி ஆயிடுச்சு. சரி.. உன் பிறந்த நாளுக்கு நீ எனக்கு ஏதாவது கொடுப்பியா?" என்றாள்.

கேட்டு முடிக்குமுன் அவள் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டான் மனோகரன்.

திகைத்தவள் சுதாரித்து, "இதென்ன, சின்னப் பிள்ளைக்குத் தர மாதிரி? இதெல்லாம் ஒரு முத்தமா?" என்று சீண்டினாள்.

அவள் இடுப்பைப் பற்றி அருகே இழுத்தணைத்தான். குடிப்பதற்காக மேசை மேல் வைத்திருந்த தண்ணீர், அவளை இழுத்த வேகத்தில் தவறிக் கீழே விழுந்து அவர்கள் மேல் சிதறியதைக் கவனிக்காமல் முத்தமிட்டான்.

சிக்கனமற்ற முத்தம். நேரம், காலம், பரிமாணம் கடந்த முத்தம். அவள் கண்ணிலிருந்து நீர் வழிந்து அவர்கள் உதட்டில் கலந்ததும் விலகினார்கள். "எதுக்கு அழறே?" என்றான்.

"ஒண்ணுமில்லே" என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"உன்னைக் கைவிட மாட்டேன் நிலா". எதுவும் சொல்லத்தோன்றாமல் திரைப்பட வசனமொன்றைப் பொருத்தமில்லாமல் உளறினான். அவளை இறுக அணைத்தான்.

உள்ளே நுழைந்த மனோகரனின் அம்மா கலங்கி, "என்னடா இது மனோ? வயசுப்பொண்ணைக் கட்டிப்பிடிச்சுட்டு இப்படி.. என்னம்மா நிலா இதெல்லாம்?" என்றார்.

"நான் தாம்மா வயசுக்கு வந்தாச்சு.. உங்க பையன் பாருங்க இன்னும் எட்டு வயசுப்பிள்ளையாட்டமா தான் இருக்கான்.. பிடிவாதமும் கோபமும்... எப்படி இந்த மாதிரி சிடுமூஞ்சியைப் பெத்தீங்க?" என்றபடி அவனிடமிருந்து விலகினாள். மனோகரனின் அம்மாவைக் கட்டிப்பிடித்தாள். "நான் வரட்டுமா அம்மா?"

"இரு நான் உன் கூட வரேன்.." என்றபடி வாசலில் இருந்த சைக்கிளை எடுத்தான் மனோ. "இரண்டு சக்கரக் கார்ல போவலாம், வாங்க மகாராணி".

    சென்னையில் பொறியியல் படித்துவிட்டுத் திரும்பினான் மனோ. படித்திருந்தும் மனோவுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. நிலா உள்ளூர் கல்லூரியில் படித்துவிட்டு அருகே வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் நேரு பூங்காவில் மனோவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த நிலாவைப் பார்த்துவிட்ட நிலாவின் அப்பா, அருகில் வந்து அமைதியாய்ப் பேசினார். "மனோகர், இத்தனை வருஷமா கேள்விப்பட்டதை இப்போ கண்ணால் பார்த்து விட்டேன். நீங்க ரெண்டு பேரும் காதலிப்பதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால், வசதியாய் வாழும் என் பெண்ணைக் கலங்காமல் காப்பாற்ற, ஒரு வேலை கூட இல்லாமல் இருக்கும் நீ என்ன செய்யப் போறே? என் பெண் சம்பளத்தில் வாழப் பாக்கிறயா?"

"இல்லை சார்"

"அப்படியென்றால் முதலில் ஒரு வேலை தேடிக்கொண்டு என் வீட்டுக்கு வா. அது வரை என் பெண்ணை விட்டு விலகியிரு". நிலாவின் அப்பா, மனோகரனின் பதிலுக்குக் காத்திராமல் விலகிச் சென்றார்.

மனோ அதற்குப் பிறகு நாலைந்து மாதங்களுக்கு நிலாவைப் பார்க்கவில்லை. சென்னையில் ஒரு கட்டிட நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டான். வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் ஒரு நாள் நிலாவிடமிருந்து செய்தி வந்தது. அடிபட்டுக் கிடப்பதாக, உடனே வரச்சொல்லி. அவசரமாக ஓடினான்.

சிரித்தாள். "உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதான்" என்றாள்.

திரும்பி வந்த சில வாரங்களில் இன்னொரு தந்தி. "உடனே வரவும், அப்பா கல்யாணம் பேசுகிறார்". விடுமுறை கிடைக்காமல் பொய் சொல்லிவிட்டு ஓடினான்.

அதே கதை. "உன்னைப் பார்க்க வேணும் போலிருந்தது. அதான். கோபப்படாதடா கண்ணா" என்றபடி, அவன் முகத்தருகே முகம் வைத்து ஒரு புகைப்படம் எடுத்தாள். "உன் மூஞ்சியைப் பார், எள் வெடிக்கிறது".

இது போல் பலமுறை காலில் அடியென்றும், அப்பாவுக்கு மார் வலியென்றும் அம்மாவுக்கு நோயென்றும் ஏதோ சாக்கு சொல்லி, மாதம் ஒரு தடவையாவது அவனை வரவழைத்தாள். ஒவ்வொரு முறையும் அதே பதில். "உன்னைப் பார்க்க வேணும் போலிருந்தது".

மனோவுக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன நிலா? பொறுப்பில்லாம நடக்கலாமா? எங்கிட்ட பணமும் நேரமும் என்ன கொட்டியா கிடக்கு, நீ கூப்பிட்ட உடனே ஓடி ஓடி வர? எனக்கு வேறே வேலை இல்லையா? இப்படி அடிக்கடி ஓடி வந்து எனக்கு வேலை போயிடுச்சுனா நீயா வேலை கொடுப்பே? படிச்ச பெண் தானே நீ?"

கலங்கிப் போய் விலகியவளைத் தடுத்து நிறுத்தினான். "நிலா, நீ நல்லா இருக்கத்தானே இத்தனையும் செய்றேன்?"

"நான் நல்லா இருக்கத்தான் இதெல்லாம் செய்றியா?" என்று அவனை ஆத்திரத்தோடு பார்த்தாள் நிலா. "நான் நல்லா இருக்க என்ன செய்யணும்னு உனக்குத் தெரியாமப் போயிடுச்சே?"

"ஓகே.. நான் சொன்னது சரியில்லை. நீயில்லாம நானும் நொந்துதான் போயிருக்கேன். இந்த வேலையும் சம்பளமும் இப்ப அவசியம். நாம ரெண்டு பேருமே நல்லா இருக்கத்தான்னு வச்சுக்கயேன். ஒரு வேலையைத் தேடிக்கிட்டு வானு உங்கப்பா சொன்னது மறந்து போயிடுச்சா? கொஞ்சம் தவணை கொடு. பிறகு இங்கே வந்து நம் கல்யாணம், அது வரை இப்படிப் பொய்த் தூது அனுப்பாதே". சொல்லும்போது மனோவுக்கு மனம் வலித்தாலும் கண்டிப்பாக இருந்தான்.

"இல்லை. இனி உன்னைக் கூப்பிட மாட்டேன்" என்று, வந்த அழுகையை அடக்கி மறைத்தாள் நிலா. "உனக்கு உன் வேலை இப்ப முக்கியம். அசட்டுத்தனமா தொந்தரவு செஞ்சிருந்தா மன்னிச்சுடு"

"அப்படி இல்லடா. இன்னும் ஒரு வருஷத்துல எனக்கு ப்ரமோசன் கெடச்சு ஊர் பக்கத்துல ஒரு கிளை தொடங்கி நடத்த வாய்ப்பிருக்கு. உன்னைக் கண் கலங்காம பாத்துக்குவேன்னு சொல்லியிருக்கேன்ல? இப்பவே கண்கலங்கினா எப்படி?" என்று அவள் கண்ணீரைத் தொட்டு நாவில் வைத்துக் கொண்டான். "வேஸ்ட் பண்ண வேணாம்னு தான்" என்று சிரித்தான்.



தொடரும் ►►

6 கருத்துகள்:

  1. புலி வருது கதையாகாமல் சுபமானால் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  2. கதை சுவாரஸ்யமாகப் போகிறது
    "இனி உன்னைக் கூப்பிட மாட்டேன் என
    ஒரு கொக்கி போடுவதைப் பார்த்தால்
    பயமாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  4. //அவள் கண்ணீரைத் தொட்டு நாவில் வைத்துக் கொண்டான். "வேஸ்ட பண்ண வேணாம்னு தான்" என்று சிரித்தான்//

    இனிக்கும் காதல் உப்பு கரிக்கும் நாள் நெருங்குகிறதா...!

    பதிலளிநீக்கு
  5. மனோகரனின் பொசசிவ் மனம் ஏறி ஏறி இறங்குவதை உரையாடல்கள் நன்றாக வெளிப்படுத்துகிறது .... பாடல்கள் கல்மிஷமில்லா டென்ட் கொட்டகை நாட்களுக்கு அழைத்து செல்கின்றன ....

    பதிலளிநீக்கு
  6. உணர்வுப்பூர்வமான பகுதி இது...

    விடலைப்பருவ காதலாக தெரியவில்லை இது கண்டிப்பாக....

    காதலுக்காக வாழலாம் இல்ல சாகலாம் என்ற முடிவோடே இருவரும் இருப்பதை உணரமுடிகிறது...

    சின்ன சின்ன விஷயங்கள் கூட மிக அழகாக கதையில் சொல்லி இருப்பது சிறப்பு அப்பாதுரை....

    இந்த பகுதியை படிக்கும் எத்தனையோ பேர் தன் கடந்த காலத்துக்கு ஒரு முறை போகாம இருந்திருக்கமாட்டாங்கன்னு நம்புறேன் கண்டிப்பா....

    அருமையா போய்க்கிட்டு இருக்கு கதை...

    எல்லாரும் முதல் பகுதில இருந்து படிச்சிக்கிட்டு போவாங்க..

    நான் உல்டாவா கடைசி பகுதி படிச்சிட்டு முதலுக்கு வந்திருக்கேன்... இப்ப விடுபட்ட எல்லா பகுதியும் படிச்சிட்டேன்...

    எழுத்தாளருக்கென ஒரு தனி சிறப்பு உண்டு....

    கதை எழுதும்போது குட்டி குட்டி விஷயங்களை கூட சுவாரஸ்யமா எழுதிட்டு போகும் திறமை இருக்கு...

    உன்னிப்பா கவனிக்கும்போது தான் தெரியும்...

    இனி காதலர்களின் நிலை என்னாகுமோன்னு இப்பவே கவலைப்பட ஆரம்பிச்சிட்டேன் நான்...

    மனோவை பார்க்க நிலா சொல்லும் பொய்க்காரணங்கள் கூட அவன் மேல் கொண்ட அழுத்தமான காதலையே தான் உணர்த்துகிறது...

    ரொம்ப அருமையான அழகான கதை அப்பாதுரை....

    அடுத்த பாகம் படிச்சிட்டேன்...

    இனி தொடர்ச்சி எப்போ இதோடுப்பா?

    அன்பு வாழ்த்துகள் அப்பாதுரை...

    பதிலளிநீக்கு