2011/09/24

ஒருமனம்
1 2 3 4 5 6 7 ◀◀ முன் கதை

எப்போது தூங்கினேனென்று தெரியாது. "எந்திரிங்க சார்... இதா எடம் வந்தாச்சு" என்று டிரைவர் என்னை எழுப்பியதும் விழித்தேன். அவசரமாக எழுந்தேன். வாயோர ஈரம் கையில் பட்டதும் ஏற்பட்ட அருவருப்பைப் பொருட்படுத்தாமல் சட்டையை உயர்த்தி முகம் துடைத்தேன். "இந்தா சார், மொகங்கழுவிக்க.." என்று டிரைவர் கொடுத்த பிஸ்லெரியால் தெருவில் நின்று முகம் கழுவினேன். விலாசத்தைச் சரி பார்த்துவிட்டு, வேகமாக நடந்து படியேறிக் கதவைத் தட்டினேன்.

பதிலில்லை. மீண்டும் தட்டினேன். யாருமில்லையா? ஏன் பதிலில்லை? மறுபடியும் தட்டினேன். பொறுமையில்லையென்றால் வினாடிகள் கூட வருடக்கணக்காகத் தோன்றுகிறது. அமைதி திடீரென்று அச்சமூட்டியது. இது நிலா வீடுதானோ? ஒருவேளை நிலாவும் எங்கேயாவது போயிருந்தால்? வேலைக்குப் போயிருப்பாரோ ஒருவேளை? அவர் வேலை செய்யும் இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? அடுத்த வீட்டில் விசாரிக்கலாம் என்று படியிறங்கி நடந்த போது கதவு திறந்தது. "யார் வேணும்?" என்ற குரலைக் கேட்டுத் திரும்பினேன்.

அப்பொழுது தான் குளித்திருந்த பொலிவு முகத்திலும், உடையிலும் தெரிந்தது. தலையில் சுற்றியிருந்த ஈரத்துண்டு அவசரப் பார்வைக்கு பூச்சரம் போல் தோன்றியது. லேசாகத் தீட்டியிருந்த மை, முகச்சுருக்கங்களை கண்னியமாக மறைத்து அவருடைய கண்களைப் பார்க்கச் செய்தது. நெற்றியில் மிக மெல்லிய சாந்துப் பொட்டு. அதன் கீழே சந்தனத்தில் தெப்பக்கீற்று.

"யார் நீங்க?"

பட்டுச் சேலை மெல்லிய உடலைச் சற்றுப் பூசிக் காட்டியது. வெளிர்நீலப் புடவையில் அங்கங்கே தாராளமாகத் தெறித்திருந்த கருநீலம் சிவப்பு பச்சை வண்ணப் பூக்கள். அகண்ட வார் வைத்தத் தோல் செருப்பு, அவர் உயரத்தை இன்னும் கூட்டியது.

".. யார் வேணும்?"

மீண்டும் கேட்கத் தூண்டும் குரல். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலினிமையில் முதிர்ச்சியும் கம்பீரமும் இருப்பதாக என் அம்மா அடிக்கடி சொல்வார். ஏனோ நினைவுக்கு வந்தது. மை காட்! கும்பிட வைக்கும் அழகு. இவர் தான் நிலாவா? 'கண்டேன் சீதையை' என்றது மனம், காரணமில்லாமல்.

"நீங்க நிலாவா? நிலான்றவங்களைத் தேடிட்டு வந்தேன்" என்றேன்.

"யெஸ்" என்று ஆங்கிலத்துக்கு மாறினார். "என்ன வேணும் உங்களுக்கு, யார் நீங்க?"

"மேடம்.. நான் பொன் சார் கிட்டேயிருந்து வரேன்" என்றேன். சட்டென்று தவறை உணர்ந்து, "மனோகர்.. மனோகர்.. அவர் கிட்டேயிருந்து வரேன் மேடம்.. உங்க கிட்டே அவசரமா பேசணும்".

    "ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. குளிச்சப்பிறகு கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கு... சுடுதண்ணியில்லாம குளிச்சதே இல்லை.." என்றேன். உடல் லேசாக நடுங்கினாலும் நன்றாக விழித்திருந்தேன். காபி கொடுத்தார். "ஏதாவது சாப்பிடறீங்களா?" என்றார்.

"நீங்க எல்லாம் வேணாம் மேடம்... சும்மா நீனே சொல்லுங்க" என்றபடி அவர் நீட்டிய காபி கப்பை வாங்கினேன். இன்னொரு கப் காபி கொடுத்தார். "உன் டிரைவரையும் கூட்டிட்டு வந்து கொடு" என்றார். அடச்சே! மறந்தே போனேன். டிரைவரிடம் கொடுத்து விட்டு வந்தேன்.

"வாங்க மேடம்.. நீங்க உடனே வந்தாகணும்" என்றேன்.

"இல்லைபா.. எனக்கு வர விருப்பமில்லே. நீ போய்ட்டு வா. மனோகர்கிட்டே என்னோட அன்பை மட்டும் சொல்லிடு" என்றார்.

"என்ன மேடம் இது?! எல்லா விவரத்தையும் கேட்ட பிறகு இப்படி சொல்றீங்க? அவர் மாரடைப்பால அவதிப்பட்டுட்டிருக்காரு மேடம். நீங்க தான் அவர் குடும்பம். நீங்க மட்டும் தான் அவரோட குடும்பம்.. இந்த டயத்துல நீங்க அவரைப் பார்க்க வரலின்னா எப்பவுமே பார்க்க முடியாம போயிறலாம்" என்று பதறினேன்.

"இந்த டயத்துல தான் குறிப்பா மனோவை பார்க்க விருப்பமில்லே. என் மனோ என் நெஞ்சுல எப்பவுமே இருப்பான். அதை அழிக்க முடியாது. அவனை இந்த நிலையில பாத்தா எனக்கும் ஏதாவது ஆயிடும். அது மனோவுக்கு பிடிக்காது. பொறுக்க மாட்டான்"

"மேடம்..இங்கே பாருங்க" என்று நான் கையோடு கொண்டு வந்திருந்த புகைப்படத்தைக் காட்டினேன். "நீங்க ரெண்டு பேரும் எடுத்துகிட்ட போட்டோ.. இதை இன்னும் எங்கே போனாலும் எடுத்துகிட்டுப் போறாரு. அவர் ரூம்ல ஒரு சாமி படம் கூடக் கிடையாது மேடம். உங்க படம் தான். உங்க கடிதங்கள் தான். அப்படிக் காதலிக்கறாரு மேடம்.. உங்களையே நினைச்சு உருகிட்டிருக்காரு.. ப்லீஸ்.. கெளம்புங்க"

"இல்லப்பா.. என்னைத் தொந்தரவு செய்யாதே... என்னோட நிலமையை உன்னால புரிஞ்சுக்க முடியாது.. நான் வர விருப்பப் படலேனு மனோகர் கிட்டே சொல்லு... அவனுக்குப் புரியும்"

"மேடம்.. இங்கே பாருங்க.." என்று அவர் எழுதிய கடிதத்தைக் காட்டினேன். 'தேயும் நிலா' என்ற வரிகளின் கீழே பொன் சார் எழுதியிருந்ததைக் காட்டினேன். 'ஓயும் மனோ'.

"மேடம்... வேணாம் மேடம்.. நீங்களும் தேய வேண்டாம், அவரும் ஓய வேண்டாம்... இதை அவருக்குக் கொடுக்குற உயிர்ப்பிச்சையா நெனச்சுக்குங்க... உடனே கிளம்புங்க"

நிலாவின் குரலில் எரிச்சல் தொனித்தது. "நீ யாருப்பா எங்க வாழ்க்கைல குறுக்கிடறதுக்கு? எங்க காதலைப் பத்தி எங்களுக்குத் தெரியும்.. உயிர்ப்பிச்சையாவது.. என்ன உளறல்.. சினிமா பாத்து இது மாதிரி டயலாக்கெல்லாம் கத்துக்கிடறீங்க.. உண்மையான உணர்வைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சுக்க மாட்றீங்க... என்னைப் பாக்கணும்னா மனோவுக்கு தெரியாதா?"

எனக்குக் கோபம் வந்தது. "மேடம்... விவரம் தெரியாம பேசாதீங்க.. எனக்கு உணர்வெல்லாம் உங்க அளவுக்கு தெரியாம இருக்கலாம்.. காதல்னா கிசுகிசு.. பத்தோட பதினொண்ணா நெனக்கலாம்.. ஆனா ஒண்ணு தெரியும் மேடம்.. ஒரு உயிரோட துடிப்பு எனக்குத் தெரியும் மேடம். பஸ் ஸ்டேன்டுல உங்களைப் பாக்க வரக் காத்திட்டிருந்தாரு.. எவனோ ஒரு பரதேசி காதலிக்குறதா சொன்னப்ப, பொன் சார் தன் கையிலிருந்த டிகெட்டையும் பணத்தையும் கொடுத்து, என்னோட பர்சையும் பிடுங்கிட்டு அந்தாளு கிட்டே கொடுத்தாரு. என்ன சொன்னாரு தெரியுமா? உலகத்துக்கு காதல் தேவை... சேரப்பாருங்கனு ரொம்ப உணர்ச்சிகரமா சொன்னப்ப எனக்கு கடுப்பா இருந்துச்சு மேடம்.. ஆனா அவரோட உள் மனோகர் கதையைச் சொல்லி அப்புறம் அவர் ரூம்ல உங்க நினைவுகளைப் பாத்ததும்.. அது தான்.. உங்க நினைவு தான்.. உங்க ரெண்டு பேரோட காதல் தான்... அவரை இத்தனை நாளும் உயிரோட வச்சிருக்குனு புரிஞ்சுது மேடம். அவர் அங்கே இறந்தாருன்னா அந்தக் கணமே நீங்க இங்கே இறந்துடுவீங்கன்னும் எனக்குத் தெரியும் மேடம்.. டயலாக்னு நெனச்சாலும் சரி.. அது உணர்வுன்றது எனக்கு நல்லா தெரியும் மேடம்..

நீங்க ரெண்டு பேரும் சந்திக்காமலே இறந்து போனா ஒண்ணும் குறைஞ்சிடாது மேடம்... எத்தனையோ உண்மைக் காதல்கள் செத்துத்தான் போயிருக்கு. அது போல இதுவும்னு ரெண்டு நாள் துக்கம் கொண்டாடிட்டு மறந்துடுவேன். வருஷத்துக்கு ஒருதடவை உங்க நினைவுல பூ வச்சு ரெண்டு வார்த்தை பேசுவேன். என் தலைமுறையோட அதுவும் நின்னுடும். ஆனா, நீங்க ரெண்டு பேரும் இணைஞ்சா காதலுக்கே சக்தி உண்டாகும். எத்தனையோ பேருக்குக் காதல் எவ்வளவு முக்கியம்ன்றது புரியும்.. காதலிக்குறேன்னு டயலாக் விடுறவங்க உங்க ரெண்டு பேரையும் பாத்து, காதலை வாழ வைக்க முயற்சி செய்வாங்க.. தலைமுறையா தலைமுறையா புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு. உங்க காதலோட வெற்றியை எங்களுக்குப் பாடமா கொடுங்க.. தோல்வியையும் மரணத்தையும் பாடமா கொடுக்காதீங்க. நான் வரேன் மேடம்... உங்களைச் சந்திச்சதுல சந்தோஷம்.. இந்த லெட்டரையும் போட்டோவையும் நீங்களே வச்சுக்குங்க" என்றேன்.

ஆத்திரத்தோடு வெளியேறினேன்.

"வண்டியைக் கிளப்பு... நேரா ஆஸ்பத்திரிக்கே ஓட்டு.. ஏண்டா வந்தோம்னு ஆயிருச்சு" என்று டிரைவரை எழுப்பி பின்னிருக்கையில் விழுந்தேன்.

வண்டியைக் கிளப்பிய டிரைவர் நிறுத்தினான். "சார்.. சார்" என்றான்.

"என்னப்பா?" என்று எழுந்தேன். கார் கதவைப் பிடித்தபடி நின்றிருந்தார் நிலா.

கதவைத் திறந்தேன்.

"என்னை மன்னிச்சிரு" என்ற அவர் குரலிலும் கண்களிலும் ஈரம். "எனக்கு மனோவைப் பாக்கணும். உடனே கூட்டிட்டுப் போறியா?" என்றார்.

திரும்பி வந்தபோது மாலை ஐந்து மணியாகிவிட்டது. மலர் மருத்துவமனையில் இருந்த நான்கு ஏசி ரூம்களில் ஒன்றைப் பொன் சாருக்குக் கொடுத்திருந்தார்கள். ஐசியூவிலிருந்து வெளிவந்து நாலைந்து மணி நேரமாகியிருந்தது. நாங்கள் போன போது என் செட்டு மக்கள் எல்லாரும் அவரைச் சுற்றி அமைதியாக இருந்தார்கள். நிலாவைப் பார்த்ததும் வாய் பிளந்து வழி விட்டார்கள். "மேடம்.. நீங்க பேசிட்டிருங்க.. நாங்க வெளியே நிக்கறோம்" என்றேன். "வாங்கடா".

    மனோவின் கைவிரல்களைப் பிணைத்தபடி அவனருகே கட்டிலில் அமர்ந்தாள் நிலா. மனோவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனோவின் முகத்தில் புன்னகை.

'நீ வருவேன்னு எனக்கு நம்பிக்கையில்லே நிலா.. இப்போ என் பக்கத்துல உக்காந்திருக்கறதும் நம்ப முடியலே'

'காதலைப் பத்தி நீ பெரிசா பேசினதா கேள்விப்பட்டேன்.. அதான் பேச்சாளரை நேரில பாத்துறலாம்னு வந்தேன்'

'நானா?'

'ஆமாம்.. நீ தான். என்னவோ கதையெல்லாம் சொன்னியாம்.. பஸ் ஸ்டேன்டுல யாருக்கோ உதவி செஞ்சியாம்.. காதலை வாழவைக்கணும்னு உபதேசம் எல்லாம் செஞ்சியாம்..'

'எப்படித் தெரியும்?'

'அதான் அனுப்பி வச்சியே வானரம்.. அவன் தான் சொன்னான்'

'வானரமா?'

'ஆமாம்.. என்னைப் பாத்ததும் பேந்த பேந்த முழிச்சான்.. அப்புறம் நீ கொடுத்தனுப்பின படத்தையும் லெட்டரையும் காட்டினான்.. கணையாழி மாதிரி'

'நான் கொடுக்கலை.. அவனா எடுத்துக்கிட்டது..'

'இருந்தாலும் ராமன் கொடுத்த கணையாழியை விட இதுக்கு மதிப்பு அதிகம், இல்லையா?'

'நீ எந்த ராமனுக்கும் கிடைக்காத சீதையில்லையா?'

'அப்ப ஏன் என்னைத் தேடி வரலையாம்?'

'உன்னைத் தேடாத இடமே இல்லை.. இப்ப நீ இருக்குற இடம் தெரிஞ்சதும்... உன்னைப் பாக்க வரும் பொழுது இன்னொரு காதலை வாழ வைக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதும்..'

'நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. எனக்கு எல்லாம் தெரியும்'

'நீ எப்படி இருக்கே?'

'உன்னோட இருக்கும் பொழுது எப்படி இருந்தா என்ன?'

'இனிமேலாவது ஒண்ணா இருப்போமா?'

'ஏன்? மறுபடி உன்னை ஏமாத்திட்டு ஓடிடுவேன்னு நெனச்சியா?'

'நீ ஓடினா உன்னைத் தேடி வர.. நெஞ்சுல வலு இருந்தாலும் உடம்புல வலு இல்லியே?'

'அதான் நான் உன்னைத் தேடி வந்தாச்சுல்ல..?'

    நான் உள்ளே நுழைந்த போது ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருந்தார்கள். "என்ன இது... வாயைத் தொறந்து பேச மாட்டீங்களா? அப்பல்லந்து ஒருத்தரையொருத்தர் பாத்துட்டே இருக்கீங்க.. ஒண்ணும் பேச மாட்டீங்களா?"

"பேசிட்டுத் தானே இருந்தோம்? காதுல விழலையா?"

"எங்க மேடம்.. ஒரு சத்தமும் காணோம்.. நீங்க எதுனா பேசுவீங்கன்னு நாங்கள்ளாம் ஒட்டுக் கேட்டுட்டிருக்கோம்.. சத்தமே காணோமேனு பயந்து போய் உள்ளே வந்தேன்.." என்றேன்.

"பேசிட்டு இருந்தோம்.. நாங்க பேசுறது..அது உனக்குப் புரியாது. நீ தொந்தரவு செய்யாம இருந்தா நல்லா இருக்கும்" என்றார் நிலா புன்னகையுடன்.

"சாரி.. உங்க ரெண்டு பேருக்கும் எதுனா சாப்பிட வாங்கி வரேன்னு சொல்லத்தான் வந்தேன்... பேசுங்க பேசுங்க" என்றபடி வெளியேற முயன்றேன்.

'இங்க வாடா' என்றார் சைகையால் பொன். அருகே சென்றதும் என் கைகளை அழுத்திப் பிடித்து சில நொடிகள் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டார். எனக்குக் குறுகுறுத்தது. நிலா என்னை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். "நீ நல்லா இருக்கணும்" என்றார். நிச்சயமாக அழுது கொண்டிருந்தார்.

எனக்கு முதன் முறையாகக் கண்களில் நீர் முட்டியது.


முற்றும்.


24 கருத்துகள்:

 1. வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கிய நிகழ்வு நடந்தால் எத்தனை சந்தோஷப்படுவோமோ அத்தனை சந்தோஷம் இந்த பாகம் படிக்கும்போது அப்பாதுரை....

  கதை யார் வேண்டுமானாலும் எழுதிடலாம் தானே... ஆனால் உணர்வுகளை இப்படி உருக்கி மனதை கரையவைத்து அடுத்து என்னாகும்னு ஒரு பயத்தை மனதில் தேக்கிவெச்சுக்கிட்டு அடுத்த பாகம் தான் இறுதி பகுதி அதிலாவது :( நிலாவும் மனோவும் சேர்ந்துடுவாங்களான்னு காத்திருக்கும்படி செய்த கதாசிரியரை என்ன சொல்லலாம்பா??

  வியாழன் வரை காத்திருக்கவைக்கலை அதுக்கு முதல் நன்றி...

  ஹை நான் தான் முதல் பின்னூட்டம் அதுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு இன்னுமொரு நன்றி....

  சினிமா பார்ப்பது போலவோ கதை படிப்பது போலவோ இல்லாம என்னவோ என் குடும்பத்திலேயே என் அருகிலியே ரெண்டு உயிர் இப்படி பரிதவிப்பது போல உணரவைக்கிறதே கதையின் வரிகள்...

  இந்த நிலா ஏன் இப்படி பிடாரியாக இருக்கிறாள் மனோவின் உணர்வுகளை மதிக்கமாட்டேங்கிறாள் என்ற சிறு எரிச்சல் கூட வரவைத்தது சில சமயம்... ஆனால் எல்லாத்துக்குமே ஒரு வாலிட் ரீசன் இருந்திருக்கு நிலா கிட்ட....

  கடைசி பாகத்தில் கூட நிலாவின் பிடிவாதம் வென்றிருக்கும், ஆனால் கதாசிரியர் அப்பாதுரையின் கருணையினால் முதுமையில் காதல் ஜெயிக்க வெச்சிட்டீங்க.. அப்பப்பா எத்தனை காதல் இருவருக்குள்ளும்....

  உடலுக்கு தானே வயதாகிவிட்டது. ஆனால் இருவரின் மனசு இன்னமும் அப்படியே பழைய நினைவுகளுடனே புதுமையாய் இன்னும் இளமையாய் கண்டேன் சீதையை என்றது போல் மனோ பழையபடி கூக்குரலிடாம முடியாம.... ஆனாலும் மனோ நிலாவை அருகே வரச்சொல்லி நெற்றியில் கொடுத்த அந்த அழுத்தமான முத்தம் ஒன்றில் அவன் மனம் சாந்திப்பெற்றிருக்கும் நிலாவையே அடைந்த அந்த திருப்தி அவன் முகத்தில் தெரிந்திருக்கும்..

  காட்சிகள் கண்முன் அப்படியே நடப்பது போலவே கதை அமைத்தது அபாரம் அப்பாதுரை....

  ” நீ தான் எந்த ராமனுக்கும் கிடைக்காத சீதையாச்சே “

  “நீ ஓடிப்போனா தேடி ஓடி வருவேன்.. ஆனால் மனசுல வலு இருந்தாலும் உடலில் வலு இல்லையே “

  இந்த வரி ஒன்று நிலாவின் மனதை கரைத்துவிடாதா...

  இது தான் காதல்....
  காதலுக்கு ஒரே உதாரணமா இனி நிலா மனோவை சொல்லலாம்..

  காலத்துக்கும் மறக்காத ஒரு சில நிகழ்வுகளில் இனி இதுவும் இந்த ஒரு மனசு கதையும் நிலைத்து இருக்கும் என் மனதில்...

  கதைகளில் அலங்காரம் இல்லை... ஆடம்பரம் இல்லை... அசிங்கம் இல்லை.. சொகுசு இல்லை...

  நிறைந்த மனதுடன் என் வீட்டு சொந்தம் ஒன்று இதோ இணைந்துவிட்டது இறக்குமுன் தன் இணையுடன். இனி காதலிக்க காதலிக்க இருவருக்கும் வயது குறைந்துக்கொண்டே போகும், ஆயுள் நீண்டுக்கொண்டே போகும், தேக ஆரோக்கியம் வளமாய் இருக்கும்....

  உனக்கு நான் எனக்கு நீ என்ற நிலாமனோவின் குட்டி குட்டி க்யூட் சண்டையில் செல்லக்கொஞ்சலில் நாட்கள் எல்லாம் மலர்ந்து மணம் வீசும்..

  இன்றைய நாள் எனக்கு அழகிய காலையாய் விடிந்தது இந்த கதை படித்து....

  அன்பு நன்றிகளும் வாழ்த்துகளும் அப்பாதுரை....

  இனி அடுத்த கதை சீக்கிரமா தருவீங்க தானே??

  எப்டிப்பா இப்படி இத்தனை அருமையா எழுதுறீங்க?? இன்னமும் எனக்கு டவுட் தான் இது கதை போலவே இல்லை... மனோ இல்லை நிலா இருவரில் யாரோ உங்களுக்கு நல்லா தெரியும்.... அவங்க இருவரின் உணர்வுகளை இப்படி இத்தனை தத்ரூபமா தர இயலுமா இல்லைன்னா???

  பதிலளிநீக்கு
 2. தலைவரே! சூப்பர் ஹிட்!

  கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம். :-)))

  பதிலளிநீக்கு
 3. கண்ணீர் வர வைத்த கதை. காதல் என்பது வெறும் உடல் சார்புடையது என்றில்லாமல் மனம் பிரதிபலிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டிய கதை. ஒருவர் மனம் இன்னொருவருக்குக் கண்ணாடி போல் இப்படித் தான் தெரியவேண்டும். இதுதான் காதல். இது தான் அன்பு. இது தான் நேசம், பாசம். இன்னும் என்னவெல்லாமோ! கொடுத்து வைத்தவர்கள்.

  பதிலளிநீக்கு
 4. மறந்துட்டேனே. எல்லாத்தையும் சேர்த்து இன்னிக்குத் தான் படிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப அருமை அப்பாதுரை! இந்த தடவை மனோவைத் தேடி நிலா வர மாதிரி எழுதினது நல்ல closure. touching finale!

  பதிலளிநீக்கு
 6. முதலில் பெருசுகளை சேரவைத்து காதலை உயிரோடு வாழ வைத்ததற்கு நன்றி... காதலுக்கு பெருசாவது சிறுசாவது எனும் ஒரு செய்தி பெரிசிலிருந்து சிறுசுகள் வரை நம்பிக்கை கொடுக்கும்..
  கடைசியில் உரையாடலிலேயே கதையை நகர்த்தியது கதாபாத்திரங்களின் உள்ள கிடக்கை அழகாக வெளிப்படுத்தியது....
  கதை சொன்ன பாத்திரமும் ’’என்றேன்’’ ’’என்றார்’’ என்று உரையாடல்களை விடாமல் சொன்னதும் கதையில் புதுமை...
  படித்த காதல் சிறுகதைகளை வரிசைப் படுத்தினால் இக்கதை முதலில் நிற்கும் .. மனோவும் நிலா வும் காதல் தேவ தேவதைகளாக வலம் வருகிறார்கள்.....
  வாழவைக்கும் காதலுக்கு ஜே......
  வாழவைத்த காதலுக்கு ஜே.....

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி அப்பாதுரை. கதையின் முடிவு மனதிற்கு மிகவும் நிறைவாய் இருக்கிறது. இந்த அழகான காதல் கதை ஒரு திரைபடமாவதற்கு உண்டான எல்லா தகுதியையும் பெற்றிருக்கிறது என்பது என் கருத்து. அதற்கான வாய்புகள் ஏற்பட மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த கதையில் மனோ நிலாவின் உரையாடல்களை மிகவும் ரசித்தேன். கதையின் இறுதி பகுதி வரை அவர்கள் உரையாடலில் அதே இளமை, அதே குறும்பு, அதே மயக்கம் என்று அழகாய் கொண்டு சென்றிருப்பது மிகவும் சிறப்பு.
  சுகம்-சுபம்.

  பதிலளிநீக்கு
 8. நானும் கதைக்கு தகுந்த மாதிரி ஒரு காதல் பாடல் வரிகளை எழுதிடறேனே!

  "இன்று போக நாளை உண்டு, என்றும் இந்த காதல் உண்டு,
  நின்று போகும் வெள்ளம் அல்ல, நினைவு மாறும் உள்ளம் அல்ல."

  பதிலளிநீக்கு
 9. //எனக்கு முதன் முறையாகக் கண்களில் நீர் முட்டியது.//
  படித்த அனைவருக்கும்!
  காதல் வாழ்க!

  பதிலளிநீக்கு
 10. "பேசிட்டு இருந்தோம்.. நாங்க பேசுறது..அது உனக்குப் புரியாது. நீ தொந்தரவு செய்யாம இருந்தா நல்லா இருக்கும்" என்றார் நிலா புன்னகையுடன்.


  அழ்கான முடிவல்ல ... ஆரம்பம்..

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லாசெப்டம்பர் 26, 2011

  கண்ணீர்...முத்தாய்ப்பு...

  பதிலளிநீக்கு
 12. கதையின் போக்கில் நான் மிகுந்த ஆர்வமாக
  இருந்ததால் எங்கே ஒருவேளை படிப்பவர் மனதில்
  பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக
  ஏடாகூடமாக ஏதாவது முடிவில் செய்து விடுவீர்களோ
  என பயந்தபடி படித்து வந்தேன்.நிலா அவ்வளவு
  உறுதியாகப் பேசும்போது கூட அந்த எண்ணம் தொடர்ந்தது
  நல்ல வேளை சந்திக்கச் செய்து சுபமாக முடித்துவிட்டீர்கள்
  சமீபத்தில் படித்ததில் என்னை அதிகம் பாதித்த பதிவு
  தங்கள் பதிவுதான் .தரமான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. காதல் கதைகள் படிப்பதும் எழுதுவதும் எப்பவுமே இனிமையான அனுபவம். தொடர்ந்து படித்ததற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி மஞ்சுபாஷிணி, RVS, geethasmbsvm6, ஸ்ரீராம், ராமசுப்ரமணியன், பத்மநாபன், meenakshi, சென்னை பித்தன், இராஜராஜேஸ்வரி, ரெவெரி, Ramani, ...

  பதிலளிநீக்கு
 14. ப்ரிய அப்பாதுரை! ஒரு மூச்சில் படித்தேன் நிறைய மூச்சு வாங்கினேன்.

  ஆற்றொழுக்காக கதையை நகர்த்திய பாணி, அடிநாதமாய் அதிரும் காதலின் துடிப்பு, சிக்கலில்லாமல் சேர்த்த விதம் ரொம்ப நாளாச்சு இப்படி படிச்சு.. நானும் இன்று ஒரு நெடுங்கதையை துவக்கியிருக்கிறேன்.... இதைப் படித்ததும், நானும் எழுதணுமா என்று யோசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. //மோகன்ஜி சொன்னது…நானும் இன்று ஒரு நெடுங்கதையை துவக்கியிருக்கிறேன்.... இதைப் படித்ததும், நானும் எழுதணுமா என்று யோசிக்கிறேன்.//


  மோகன்ஜி,

  துரையின் எழுத்துக்களை படித்த பிறகு சீ இனிமேயும் எழுதணுமா என்று எனக்கும் தோணும். அதை எல்லாம் கண்டுக்கப்படாது. தில்லானா மோகனம்பாள் மனோரமா மாதிரி "அந்த மோகனாங்கி என்னத்தை தான் ஆடறான்னு...பொய்க்கால் வைச்சாவது ஆடுவேன்னு" சொல்லற மாதிரி !!

  - சாய்

  பதிலளிநீக்கு
 16. குணமாகித் திரும்பியிருக்கிறீர்கள்.. வருக மோகன்ஜி, சாய்,.. (ஜில்லு மாதிரி வருமா சாய்?)

  பதிலளிநீக்கு
 17. எழுதிட்டா போகுது மஞ்சுபாஷிணி!

  பதிலளிநீக்கு
 18. விண்ணுலக சொர்க்கமா? .. ரைட்டு. அடுத்த தடவை கும்பிட்டா ஸ்டேன்லி ஆஸ்பத்திரி குமாஅ சிகிச்சையகத்துக்கு வழி காட்டு கடவுளேனு வேண்டிக்கலாம் :)

  நம்மூர் மருத்துவமனை நல்ல பேர் வாங்கினால் கேக்க நல்லாயிருக்கு. எடுத்துச் சொன்ன உங்களுக்கும் நன்றி.

  அன்பு அப்பாதுரை,

  என் கட்டுரைக்கு இட்ட தங்களது இப்பின்னூட்டம் குமுதம் ஹெல்த் இதழில் ‘வாசகர் கடிதம்’ ப்குதியில் வெளியாகியுள்ளது. நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 19. அப்பாடா ஒரே மூச்சில் காதலுக்கு ஜே வை படித்து முடித்தேன். இடையில் நான் மூச்செல்லாம் கூட விட வில்லை.

  இதைத்தான் பல்துறை வல்லாணமை என்று கூறுவார்களோ? ஒரு பக்கம் அமானுஷ்யம்.. இப்ப அதை ஏன் நினைவு படுத்துகிறேன். சாரிப்பா...

  நம் ஊக்க வாத்தியார் பத்மநாபன் இக்கதையைப் பற்றி எனக்கு கூறினார். ஆனாலும் உடனே ஓடோடி வந்தேன் என்று கூற முடியவிலை. இன்று தான் படிக்க முடிந்தது. நல்ல வேளை. முதலில் பத்து சாருக்குத்தான் நன்றி.

  சுகமான அனுபவத்திற்கு காத்து... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 21. /பல்துறைவல்லாண்மை// சரியா சொன்னிங்க விரிவுரையாளர் ஆதிரா அவர்களே..

  பரவாயில்லை நீங்க முழுசா படிச்சிங்க..நாங்க சஸ்பென்ஸ் தாங்காம திக் திக்ன்னு படிச்சோம்.. ஆனாலும் அந்த கிக் தனிதான்..

  ஒவ்வொரு பாக முடிவிலேயும் ஒரு அருமையான பாட்டு போட்டு அசத்திட்டாரு.. ( என்ன
  இந்தி புரிஞ்சிருந்தா எல்லா பாட்டையும் ரசிச்சிருக்கலாம்)
  மனோவும் நிலாவும் கதையில் வயதேறினாலும் மனதில் இளமையாக இருக்கிறார்கள்...

  10/02/2011

  பதிலளிநீக்கு
 22. நன்றி ஆதிரா.
  டபுள் நன்றி பத்மநாபன்..

  பதிலளிநீக்கு