2017/09/28
நோற்றான்
        என் எதிரே இருந்த இருவரின் பார்வையில் தெரிந்தது என்ன? விடை அ)வெறுப்பு ஆ)கோபம் இ)ஆத்திரம் ஈ)கனிவு - என்ற கேள்வியை என்னிடம் யாராவது கேட்டால் விடை சொல்வது கடினம்.
விடை ஈ)கனிவு அல்ல என்பது மட்டும் நிச்சயம். வெறுப்பு, ஆத்திரம், கோபம், அருவருப்பு, இயலாமை எல்லாம் கலந்த பார்வையை என்னை நோக்கி தாராளமாக வீசினார்கள் இருவரும்.
"எப்படி உங்களுக்கு இது போலக் கேட்கத் தோணுது சார்?" என்றார் இளையவர். அவரை அடக்கிய மூத்த பெண்மணி, "கொஞ்சம் இருங்க ராதிகா, நான் பேசுறேன்" என்று என்னைப் பார்த்தார். "சார்.. தயவு செய்து இங்கருந்து போயிடுங்க.. போய் கோர்ட் ஆர்டரோட வாங்க.. இதுக்கு மேலே உங்களோட பேச எங்களுக்கு விருப்பம் இல்லே".
நான் விடவில்லை. "மேடம்.. எனக்குச் சேரவேண்டியதைக் குடுத்து நீங்க போகச் சொன்னா தாராளமா போயிருவேன்.. ஆனா எனக்குச் சொந்தமானதை நீங்க எடுத்து வச்சுக்கிட்டு தர மறுக்குறீங்க.. கேட்டா சட்டம் பேசுறீங்க.. சட்டமே என் பக்கத்துல இருக்குதுனு ஆதாரத்தோட வந்திருக்கேன்.. அப்பவும் என்னவோ உங்க சொத்தை நான் கேக்குற மாதிரி பேசுறீங்க.. பீ தொடச்ச துணியாட்டம் என்னைப் பாக்குறீங்க.. போவுது.. உங்க பார்வையைப் பத்தியெல்லாம் எனக்கு அக்கறையில்லே.. என் சொத்தை.. எனக்கு உரிமையானதை எங்கிட்ட கொடுத்துடுங்க.. நான் போயிட்டே இருக்கேன்.. இங்க தங்கி உங்க ரெண்டு பேத்தையும் பாத்துட்டு இருக்க எனக்கு மட்டும் முடையா என்ன?"
ராதிகாவுக்கு கோபம் வந்துவிட்டது. "சார்.. நீங்க கிளம்புறீங்களா.. இல்லை போலீசை கூப்பிடவா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசுறீங்களே? நீங்கள்ளாம்.."
"நீங்கள்ளாம் மனுசனானு கேக்கப்போறீங்களா? கேளுங்க. நீங்களும் மனுசன் தான். நானும் மனுசன் தான். என்ன நம்ம நிறம் வேறே அவ்வளவு தான். தகாதது அப்படி என்ன கேட்டுட்டதா கடுப்பாறீங்க. நாலு வருசத்துக்கு முந்தி நீங்க எடுத்துக்கிட்டுப் போன என் பிள்ளையைத் திருப்பிக் குடுங்கனு கேக்குறேன்.. அந்தப் பிள்ளைக்கு அப்பன் நான் தான், எனக்குப் பொறந்தது தான் அந்தப் பிள்ளைனு அத்தாட்சியோட வந்திருக்கேன்.. என் பிள்ளையை எங்கிட்ட குடுங்கனு கேட்டா மனசாட்சி மாங்கா இஞ்சின்றீங்களே?"
"மிஸ்டர்.. நாங்க உங்க பிள்ளையை எடுத்துக்கிட்டமா?" என்றார் மூத்தவர்.
"ஆமாம் மேடம்.. இந்தம்மா தானே சொன்னாங்க.. என் பிள்ளையை போலீஸ் ஸ்டேசன்லந்து கூட்டியாந்து இங்கே வளக்குறதா?"
"ஆமாங்க.. உங்க பிள்ளைக்கு அப்ப ஒரு வயசு கூட ஆவலே.. போலீஸ் ஸ்டேசன் வாசல்ல விட்டுப் போயிட்டீங்க.. அதுவும் ஒரு கை ஊனமான குழந்தை.. கொஞ்சம் கூட இரக்கமில்லாம குழந்தையை விட்டு ஓடிட்டீங்க.. இரக்கம் உள்ள ஆசாமிங்க சிலர் போலீஸ் ஸ்டேசன் வாசல்ல கிடந்த குழந்தையைப் பார்த்துட்டு போலீஸ்ல சொல்லி.. இன்ஸ்பெக்டர் கலெக்டர் வரைக்கும் போய் பிறகு எங்க கிட்டே வளர்ப்பு ஆணையோட ஒப்படைக்கப்பட்ட பிள்ளைக்குழந்தை.. இப்ப உங்களுதுனு உரிமை கொண்டாடிட்டு வரீங்களே?"
"ராதிகாதானம்மா உம் பேரு? நல்ல பேரு.. அழகா பேர் வச்சிருக்கே.. ஆனா ஆத்திரமா பேசுற.. பரவாயில்லே.. ராதிகா.. இதுல பாரும்மா.. நீ ஆணை கீணைனு நாலு வச்சிருந்தாலும் சட்டம் உரிமைனு ரெண்டு இருக்கு பாரு.. அது என் பக்கம். நீ எடுத்து வளக்குறது என்னுடைய குழந்தைன்றதுக்கு மறுக்க முடியாத கோர்ட் ஆதாரங்களைக் காட்டியிருக்கேன்.. பதினெட்டு வயசு வரைக்கும் பெற்றவருக்குத்தான் உரிமை.. நான் என் பிள்ளையை அடிக்கிறேனா கொல்றேனா..? அதுக்கு சாட்சியும் கிடையாது.. என் போறாத வேளை.. பிள்ளை பொறந்து நாலே மாசத்துல பெண்டாட்டி செத்துட்டா.. பச்சைப் பிள்ளையை நான் எப்படி காப்பாத்துவேன்னு நொந்து போயி ரொம்ப வேதனையோட மனசுருகி வேறே வழியில்லாம போலீஸ் ஸ்டேசன் வாசல்ல விட்டுப் போனேன்.. எத்தனை துக்கம் தெரியுமா.." எனக்குத் தொண்டை அடைத்தது.. கண்களில் நீர்.
"ஆமாம்.. கேள்விப்பட்டோம்.. உங்க பெண்டாட்டி தண்ணீல மூழ்கி செத்துட்டாங்களாம்.. கொலையா தற்கொலையானு போலீஸ் முடிவெடுக்க முடியாம கேஸை மூடிட்டாங்கனு சொன்னாரு இன்ஸ்பெக்டர்.. இன்சூரன்சு பணம் கிடைச்ச ஆறு மாசத்துல ஊரை விட்டே ஓடிட்டீங்க.. எல்லா விவரமும் குழந்தை ரெகார்டுல கூட இருக்கு.. போங்க சார்.. இடத்தை காலி பண்ணுங்க.. கோர்ட் ஆர்டரோட வாங்க.. நாங்களும் கோர்ட் போகத் தயாரா இருக்கோம்"
"விளையாடுறியா? அப்போ நான் எதுக்குத் தயார்னு காட்டவா?"
"சார்.. போலீஸை கூப்பிட்டிருக்கேன்.. போலீஸ் வர வரைக்கும் அமைதியா இருங்க" என்றார் மூத்தவர். சுசீலாவோ என்னவோ பெயர். நினைவுக்கு வரவில்லை. எதுவாக இருந்தால் எனக்கு என்ன? கிழம்.. பார்க்கச் சகிக்கவில்லை.
"இதென்னம்மா இது.. என் பிள்ளையை நான் கேட்டா போலீஸ் வரட்டும்ன்றீங்க? போலீஸ் வந்து என்ன புடுங்கிடப் போவுது?"
"மிஸ்டர் மரியாதையில்லாம பேசாதீங்க.. படிச்சவரா இருந்துட்டு"
"இதென்னம்மா அடாவடியா இருக்குதே? பெண்களாச்சேனு பாக்குறேன்.. வாயுல வந்தபடி பேசிருவேன்.. அனாதை ஆசிரமம்னு பேர்ல மத்தவங்க குழந்தைகளை திருடி வச்சுக்கிட்டு காசு பண்ணிட்டிருக்கீங்க.. உங்களுக்கு நான் எந்த விதத்துல குறைஞ்சவன்? என்ன மரியாதை வேண்டிக்கிடக்குது திருட்டு களவானிகளுக்கு? அனாதை ஆசிரமம்னு பேர் வச்சிட்டு ஊரை ஏமாத்துறீங்க ரெண்டு முண்டைகளும்.."
ராதிகா அழத்தொடங்கினார். "சார்.. அப்படியெல்லாம் பேசாதீங்க சார்.. இந்த ஆசிரமம் உயர்ந்த நோக்கம் கொண்டது சார்.. இங்க இருக்குற குழந்தைகள்ல ஒரு குழந்தைக்குக் கூட கண் முழுதும் தெரியாது.. உடல்ல வேறே ஊனம்.. ஆனா யாரும் அநாதை இல்லை சார்.. அநாதை என்கிற வார்த்தையே நாங்க பயன் படுத்துறதில்லே.. இந்த வார்த்தையெல்லாம் இங்க பேசி பிள்ளைங்களுக்கு கத்துக் குடுத்துறாதீங்க.. இந்தக் குழந்தைகளுக்கு நாங்க இருக்கோம்.. இங்க வேலை பாக்குற அத்தனை பேரும்.. எங்க ரெண்டு பேர் உள்பட.. ஒரு நயா பைசா சம்பளம் வாங்கறதில்லே.. கிடைக்கிற அரசாங்க மற்றும் தனியார் உதவி அத்தனையும் பிள்ளைங்களுக்கே போவுது.."
"என்ன சொன்னீங்க? என் பிள்ளைக்குக் கண் தெரியாதா?" என்றேன், வேறெதையும் காதில் வாங்காதது போல. இவர்கள் நயா பைசா சம்பளம் வாங்கினால் எனக்கென்ன.. அனாதைகளை அனாதையெனக் கூப்பிடாவிட்டால் எனக்கென்ன..
"தெரியாத மாதிரி பேசாதீங்க சார்.. உங்க பிள்ளைன்றீங்க..மெடிகல், பர்த் சர்டிபிகெட் எல்லாம் காட்டுனீங்க.. அதுல இரிடோகோர்னியல் டிபெக்ட் போட்டிருக்குதுனு படிக்க முடியலியா? கண் சரியா தெரியாத ஊனக் குழந்தைனு தானே விட்டு ஓடினீங்க? பெண்டாட்டி செத்தது வேறே வசதியாப் போச்சு.. இன்சூரன்சு பணம் கிடைச்சதும் செங்கல்பட்டுல யாரையோ கல்யாணம் கட்டிக்கிட்டு மும்பை ஓடிட்டதா போலீஸ்ல சொன்னாங்க.. இத்தனைக்கும் மேலே இது உங்க பிள்ளையே இல்லனு போலீஸ்லயும் கோர்டுலயும் வக்கீல மூலமா பிராக்ஸி வாக்குமூலம் கொடுத்திருக்கீங்க.. எல்லாம் ரெகார்டுல இருக்கு"
"ராதிகா.. ப்லீஸ்.. வேணாம்.. போலீஸ் வர வரைக்கும் அமைதியா இருப்போம்" என்றார் மூத்தவர். இந்த முகத்தை எத்தனை நேரம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லையே.. எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!
"இல்லே மேடம்.. எல்லா அயோக்கியத்தனமும் செஞ்சிட்டு நாலு வருசம் கழிச்சு பிள்ளையைக் கொண்டான்றாரு.. அதுக்கு மேலே நாக்குல நரம்பில்லாம.."
"சரி மேடம்.. மன்னிச்சுருங்க.. நாலு வருசத்துக்கு என்ன செலவு செஞ்சிருக்கீங்க.. அதுக்கு மேலே அம்பதாயிரம் செக் எழுதிக் கொடுத்துடறேன்.. கணக்கை தீர்த்துக்குவோம்.. சரியாப் போச்சா?"
ராதிகா சீறியது அழகாக இருந்தது. "வாட் நான்சென்ஸ்? உங்க பிள்ளை உயிரோட இருக்குறதுக்கு என்ன சார் விலை? செத்தா என்னனு எங்கியோ ரோட்டுல விட்டுட்டு ஓடினீங்க.. இப்ப கணக்கா கேக்குறீங்க? லஞ்சமா கொடுக்கறீங்க.."
"ராதிகா.. ப்லீஸ்.. இதோ போலீஸ் வந்துரும்"
"என்ன்ன்ன்ன்ன்னங்ங்ங்கடி.." என்று எழுந்தேன். எனக்குக் கோபம் வந்துவிட்டால் அடுத்தவர் வேட்டியை உருவிய பின்னரே நிற்பேன். இந்தப் பெண்களை என்ன செய்வது என்று பார்த்தேன். "என்னை என்ன அக்குள் மசிருனு நெனச்சிங்களா? பணிவா கேட்டேன் நயமா கேட்டேன் மசியமாட்றீங்க.. அதுவும் திருட்டுத்தனம் பண்ணி நாடகமாடறீங்க.. இன்னொருத்தர் மகவை திருடி வச்சுகிட்டு ஆசிரமம்னு கூத்தா அடிக்குறீங்க? அஞ்சு எண்றதுக்குள்ற என் பிள்ளையை இங்கே கொண்டுவாங்க.. இல்லின்னா நானே உள்ளாற வந்து ஒண்ணுக்கு ரெண்டா தூக்கிட்டுப் போயிருவேன்.. அஞ்சு எண்ணுவேன்.. புரியுதா?"
எண்ணத் தொடங்கினேன். ஐந்து எண்ணி முடிக்கையில் போலீஸ் வண்டி வந்தது. ஒரு இன்ஸ்பெக்டரும் ஏட்டும் வந்தனர். பெண் இன்ஸ்பெக்டர். போச்சுடா. பெண்ணுரிமைனு நாடு குட்டிச்சுவராயிட்டிருக்குது.
வேறு வழியில்லாமல் பெண் இன்ஸ்பெக்டரிடம் எல்லா விவரமும் சொன்னேன். "இன்ஸ்பெக்டர் மேடம்.. நான் செஞ்சது தவறு தான். பெத்த பிள்ளையை நடுத்தெருவுல அனாதையா விட்டுப் போனது பெரிய பாவம்னு உணர்ந்ததால தான் இப்ப இங்கே வந்திருக்கேன். பழைய வக்கீலை விசாரிசசு.. போலீஸ் ஸ்டேசன்ல விசாரிச்சு.. இந்த இடத்துல இருக்குறதா சொன்னாங்க.. ஆண்டவன் புண்ணியத்துல நல்ல அனாதை ஆசிரமமா கிடைச்சுதேனு சந்தோசம்.. ஆனா பாருங்க.. என் பிள்ளையை எங்கிட்டே ஒப்படைங்க.. என்ன இருந்தாலும் தாய் தகப்பன் மாதிரி வருமா? பிள்ளையக் கொடுங்கனு கேட்டா சட்டம் பேசுறாங்க.. மனசை ரொம்ப நோகடிக்கிறாங்க மேடம்" என்றேன். ஆதாரங்களைக் காட்டினேன். "இது என் பிள்ளைதான்.. பாருங்க. ஏதோ என் போறாத வேளை வாக்குமூலம் கொடுத்தேன்.. இப்ப அதை சாக்கா வச்சுக்கிட்டு என்னை ஏமாத்தப் பாக்குறாங்க"
ராதிகா குறுக்கிட்டு ஆசிரம ஆதாரங்களைக் காட்டினார். "இன்ஸ்பெக்டர்.. இவர் நல்லவரில்லே.. இந்தக் குழந்தையை மும்பைல வித்துப் பணம் செய்ய வந்திருக்காருனு எனக்கு நம்பத்தகுந்த தகவல் இருக்கு.. ப்லீஸ்.. இவரை இந்த இடத்துலந்து விலகச் சொல்லுங்க.. பிள்ளையை தர முடியாதுனு சொல்லிடுங்க"
இன்ஸ்பெக்டர் எல்லா ஆவணங்களையும் பார்த்தார். ராதிகாவைப் பார்த்து "மேடம்.. தேவையில்லாம வதந்தி பொய் பிரசாரங்களை நம்பாதிங்க.. உண்மையான தகப்பன் உணர்வோட இவரு இங்க வந்திருக்காரா இல்லையானு இவருக்கு மட்டும் தான் தெரியும்.. தகவல்களை நம்பி நாம எந்த முடிவும் எடுக்க முடியாது" என்றவர், என்னிடம் "மிஸ்டர்.. இது உங்க பிள்ளையா இருக்கலாம்.. ஆனா சட்டப்படி இவங்க வளக்கலாம்னு கோர்ட் சொல்லியிருக்குது. அதையும் மதிக்கணும்" என்றார்.
"அதெப்படி? என் பிள்ளையை இவங்க எதுக்கு வளக்கணும்? நான் வக்கீல் கோர்ட்னு போய் லட்சம் செலவானாலும் கேஸ் போடுவேன்"
"எத்தனை செலவழிப்பிங்களோ உங்க விருப்பம்.. கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு வந்து பிள்ளையைத் தாராளமா கூட்டிப் போங்க.. நானே வந்து உதவி செய்யுறேன்.. இப்ப கிளம்புங்க.. கலாட்டா செய்யாதிங்க"
"கலாட்டா இல்லிங்க.. இவங்க தான் தாறுமாறா பேசுறாங்க.. என் பிள்ளையைக் குடுத்துட்டா நான் போயிருவேன்.. இன்ஸ்பெக்டர் நீங்க வந்து நியாயம் காட்டுவிங்கனு பார்த்தா.. என்னவோ என்னை நெருக்குறீங்க.. இவங்க செலவை நான் குடுத்துடறேன் இன்ஸ்பெக்டர்.. அதுக்கு மேலே இவங்க செய்யுற இந்த நல்ல காரியத்துக்கு நன்கொடையா ஒரு லட்சம் வேணும்னாலும்.."
"சார்.. கிளம்புங்க" என்றார் இன்ஸ்பெக்டர் என்னைத் தள்ளாத குறையாக. ஏட்டை அழைத்து ஜீப்பை ஸ்டேசனுக்கு ஓட்டிவரச் சொன்னார். என் வாடகைக் காரில் என்னுடன் ஏறிக்கொண்டு பயணம் செய்தார். போலீஸ் ஸ்டேசன் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி என்னிடம் "சார்.. கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு என்னை வந்து பாருங்க.. இதே போலிஸ் ஸ்டேசன்ல தான் இருப்பேன்.. கோர்ட் உத்தரவும் போலீஸ் துணையும் இல்லாம ஆசிரமம் பக்கம் போவாதிங்க.. புரியுதா?" என்றபடி இறங்கிக் கொண்டார்.
வண்டியைக் கிளப்பச் சொன்னேன். அழுது மிரட்டி பிள்ளையை வாங்கிவிடலாம் என்று வந்தால்.. இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. முதல் பெண்டாட்டி சாவு போல சுலபமாக முடியாது போலிருக்கிறதே? மும்பைக்காரனிடம் பேரம் பேசியது அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரிந்தது? சும்மா கிளப்பி விட்டாளா? என்னைப் போல் ஆசாமிகளைப் பார்த்திருக்கிறாள். விவரம் தெரிந்த பெண்ணாக இருக்கிறாள். குருட்டு ஊனப் பிள்ளைக்கு ஐந்து லட்சம் வரை தருவதாகச் சொல்லியிருந்தான் மும்பை புரோக்கர். முழுக்குருடாக இல்லாவிட்டால் நல்லது தான்.. வேறு ஏதாவது பாலியல் அடிமை வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள்.. ஒன்றுக்கும் உதவாத பிள்ளையைப் பெற்றதற்கு ஐந்து லட்சம் நல்ல லாபம் என்று நினைத்திருந்தேன். பிள்ளை கைக்கு வந்தால் அவனைக் காட்டி புரோக்கரிடம் கொஞ்சம் அதிகமாகவே கறந்து விடலாம்.. ம்ம்ம்... வேலை வைத்துவிட்டாள் ராதிகா. அவளைப் பிறகு கவனிக்கலாம். இப்போதைக்கு இந்தப் பிள்ளையைப் பிடுங்கி ஐந்து ல பார்க்கவேண்டும். கோர்ட்டுக்கு போனால் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. என்னுடைய பழைய வக்கீலும் அதைத்தான் சொல்லியிருந்தார். டிஎன்ஏ சோதனை என்று பணம் பிடுங்காமல் இருந்தால் சரி.
எப்படியிருந்தாலும் கேஸ் முடிகிற வரையில் பொறுப்புள்ள தகப்பனாக நடக்க வேண்டும். வக்கீல் செலவுக்கு எத்தனை ஆகும் என்று யோசிக்கத் தொடங்கினேன்.
2017/08/25
பல்கொட்டிப் பேய்
13◄
        பலிமேடைக்கு எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். எனக்கு எதிரே ஸ்ரீராம். அவன் பின்னால் ரமேஷ். அவனைச் சுற்றி ஜாமக்கூழ் மக்கள். ரமேஷுக்குப் பின்னால் விளக்கு விசை. ஸ்ரீராமையும் ரமேஷையும் கவனித்தபடி ஏட்டு வாசலில் நின்றிருந்தார். ஸ்ரீராமின் சைகை தொடர்ந்து நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். மனதுள் இரண்டு அவசர ப்ளேஷ்பேக்.
ப்ளேஷ்பேக் ராமு: ஸ்ரீராம் எங்களைக் கூட்டிப் பேசினான் என்றேனே, இதான் விஷயம். உக்கிராசலத்தின் திடீர் மறுப்பும் ஏட்டு காதுபட அவனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லாத மாதிரி பேசியதும் நாடகம் என்றான். உக்கிராசலம் ஏற்கனவே தலைப்பல்லை பெயர்த்து வைத்துவிட்டான் என்றும் சமயம் பார்த்து ஜாமக்கூழ் கூட்டத்தில் தலைபல்லை தட்டிக்கொண்டு போகலாம் என்றும் அன்று காலையே சொல்லிவிட்டதாகச் சொன்னான். “இந்தாடா” என்று ரமேஷிடம் கொடுத்தான். மஞ்சள் குங்குமம் பூசிய பெரிய உருளைக்கிழங்கு. “உக்கிராசலம் கொடுத்தான். தலைப்பல் அபேஸ் பண்ணிட்டு அந்த இடத்துல இதை வச்சுரு” என்றான்.
“ஏன்.. நீ செய்யேண்டா?” என்றான் ரமேஷ்.
“உனக்குத்தானே பேய் பிடிக்கும் அடிக்கடி? அதனால நீ செஞ்சா நாம மாட்டிக்கிட்டாலும் சாக்கு சொல்லிடலாம்ல?”
“எவண்டா சொன்னது எனக்கு அடிக்கடி பேய் பிடிக்கும்னு?”
“உக்கிராசலம் தான். ஏட்டு கிட்ட அப்படிச் சொல்லிருக்கான்.. நீ பேய் பிடிச்சு அன்னிக்கு அவரைப் பளார்னு அறைஞ்சேனு அவர்ட்ட சொன்னதா சொன்னான்.. அட்ஜஸ்ட் பண்ணிக்க.. பல் திருட்டுக்கும் வசதியாப் போச்சு..”
“அடப்பாவிகளா.. நீங்க இருக்குறப்ப எனக்கு எதுக்குடா எதிரிங்க?”
ப்ளேஷ்பேக் சோமு: மசாலா பால் சாப்பிடும் பொழுது தலைப்பல் திருடுவது பற்றித் திட்டமிட்டோம். மேடைக்கு எதிரெதிரே உட்கார்ந்து ஒருவர் ஏட்டைக் கவனிக்க வேண்டுமென்றும், ரமேஷ் பேய் வந்தாற்போல் ஆடத்தொடங்கியதும் ஸ்ரீராம் ஐந்து நொடிகளுக்கு விளைக்கை அணைக்க வேண்டுமென்றும், நான் அந்த சந்தடியில் உருளைக்கிழங்கை வைத்துவிட்டுத் தலைப்பல்லை எடுக்க வேண்டுமென்றும் திட்டம். “நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றது பல்கொட்டி. “ஏட்டு எதுக்கும் மசியாம நம்மளைத் துரத்தவோ தடுக்கவோ வந்தா அவர் தலையில ரெண்டு போடு” என்றான் ரமேஷ் கடுப்புடன்.
“ஏ பல்கொட்டி.. பல் கிடைச்சதும் எங்களை பழி கிழி வாங்கணும்னு நினைச்சே நாங்களே செத்து வந்து உன்னைப் பழி வாங்குவோம்.. எப்பவுமே பல் இல்லாம கிடக்க வேண்டியதுதான்” என்றான் ஸ்ரீராம்.
“அய்ய்ய்ய்ய்ய்யோ.. வேணாம்.. இல்லையில்லை” என்றபடி மசாலா பால் க்ளாசைக் கீழே வைத்தது பல்கொட்டி. கல்லாக்காரர் எங்கள் பேச்சைக் கேட்டு நடுங்கினாரா அல்லது அந்தரத்தில் ஆடி வந்த பால் க்ளாசை கண்டு நடுங்கினாரா தெரியவில்லை. “பழி வாங்குற எண்ணமே இல்லே.. வயசான பேய் பாவம்பா.. கருணை காட்டுப்பா.. ஏட்டைக் கவனிக்கணும் அவ்ளோ தானே?”.
        திட்டமிட்டபடி ரமேஷ் மெள்ள முனகத் தொடங்கினான். பிறகு “ஆத்தா” என்று விட்டு விட்டு உறுமத்தொடங்கியதும் கூழ்மக்கள் அவனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். எத்தனை பேயோட்டம் பார்த்திருப்பான்? அசத்தலாக நடித்தான். தோளைக் குலுக்கி ஆத்தா ஆத்தா என்று ஆடத்தொடங்கினான்.. மக்கள் கொஞ்சம் பீதியுடன் பரவி விலகத் தொடங்கினார்கள். உட்கார்ந்தபடியே நான் பீடத்தின் அருகில் சென்றேன். உருளைக்கிழங்கை கையிலெடுத்துத் தயாரானேன்.
ஸ்ரீராம் சட்டென்று விளக்கை அணைத்தான். ஐந்து நொடிகள். விளக்கு எரிந்தது. என் கையில் உருளைக்கிழங்கு இருப்பதைப் பார்த்து ரமேஷ் ஓவென்று கூச்சலிட்டு ஆடினான். ஸ்ரீராம் மறுபடி விளைக்கை அணைத்தான். ஐந்து நொடிகள். விளக்கு திரும்பியது. என் கையில் மறுபடி உருளைக்கிழங்கு. ரமேஷுக்கும் ஸ்ரீராமுக்கும் கடுப்பு. ஒரு சின்ன விஷயத்தை செய்யமுடியலியா என்று ஸ்ரீராம் என்னைக் கண்ணால் எரித்தான்.
என் கஷ்டம் எனக்குத் தானே தெரியும்? ஸ்ரீராம் சொன்னபடி உக்கிராசலம் தலைப்பல்லைப் பெயர்த்திருப்பான் என்று நம்பி அதை எடுத்தால்.. வந்தால் தானே? கை வழுக்கி வழுக்கிப் போனதே தவிர பல் அசையவில்லை. நாலைந்து முறை வழுக்கியதும் புரிந்தது. தலைப்பல்லைப் பெயர்த்து வைப்பதற்கு பதில் பீடத்தின் மேல்தட்டையே பெயர்த்து வைத்திருக்கிறான் மடையன். பீடத்தை தூக்கி எடுக்கவும் முடியவில்லை. அப்படியே எடுத்தாலும் அந்த இடத்தில் உருளைக்கிழங்கையா வைக்க முடியும்?
ரமேஷ் ஆடிக்கொண்டிருந்தான். “ஆத்தா பல்லைப் பிடுங்கித்தரச் சொல்லுதுடா பேராண்டி..” என்றான் என்னை இடித்தபடி.
நானும் ஆடத்தொடங்கினேன். “பல்லுக்குப் பதில் பீடத்தை பேத்து வச்சிருக்காண்டா பேராண்டி..”
“பீடத்தைத் தூக்கிப் பாரேண்டா பேராண்டி..”
“கிண்டலா இருக்குதாடா பேராண்டி..”
ஏட்டு அவசரமாக கூட்டத்தைப் பிரித்து உள்ளே வரத் தொடங்கியதைப் பார்த்த ரமேஷ் ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டு பக்கத்தில் இருந்தவர்களை இடித்து வேகமாக ஆடத்தொடங்கினான். ஆனால் ஏட்டு எங்கள் அருகே வந்து நின்று விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு விட்டார். பீடத்தின் தலை நகர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்தார். தன் கையிலிருந்த விசிலை எடுத்து ஊத முற்பட்டபோது திடீரென்று ஆகாயத்தில் உயர்ந்தார். பிறகு பொத்தென்று விழுந்தார். மீண்டும் ஆகாயத்தில் எழுந்தார். மறுபடி பொத்தென்று விழுந்தார்.
உக்கிராசலம் சட்டென்று கோதாவில் இறங்கி ஏட்டை ஒரு வேப்பிலைக் கொத்தால் ஓங்கி அடித்தான். “மலையேறு ஆத்தா மலையேறு.. மலையேற ஆத்தா என்னா கேக்குது?”
“பல்லு கேக்குதுடா பேராண்டி ஆத்தா பல்லு கேக்குதுடா” என்று ரமேஷ் குத்தாட்டம் ஆடினான்.
நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஏட்டு பீடத்தை அப்படியே தூக்கினார். கூட்டம் அலறி விலகியது. ரமேஷ் ஆத்தா ஆத்தா என்று உணர்ச்சிவசப்பட, ஏட்டு தரையிலிருந்து நாலடி எழும்பி பீடத்தை தூக்கிக் கொண்டு வெளியே போனார். உக்கிராசலம் வேப்பிலைக் கட்டோடு ஏட்டைத் துரத்தினான். தொடர்ந்து ரமேஷ். தொடர்ந்து நான். ரயில்பெட்டி போல் என்னைத் தொடர்ந்த மக்கள் பக்தி வெறியில் மெய்மறந்து ஆத்தா ஆத்தா என்றனர்.
பனைமரம் அருகே ஏட்டு படாலென்று பீடத்தைத் தரையில் எறிந்தார். சுக்கலாக உடைந்த பீடத்தைச் சுற்றி வந்து ஆடினார். மயங்கி விழுந்தார். ஜாமக் கூழ் மக்கள் பரவசத்தில் தங்களை மறந்தனர். ஏட்டைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.
“வாங்க போவோம்” என்று பல்கொட்டி என்னை அவசரமாக இடித்தது. ரமேஷை இழுத்துக் கொண்டு கூட்டத்திலிருந்து விலகினேன். ஸ்ரீராம் ஏற்கனவே தெருமுனையிலிருந்தான்.
        “என்னடா ஆச்சு?” என்றான் ஸ்ரீராம்.
“பல்லைப் பேத்து வைடானா பீடத்தைப் பேத்து வச்சிருக்கான் பீடை” என்றான் ரமேஷ்.
“என்னால அதை நவுத்தக் கூட முடியலிடா.. ஏட்டு வேறே வந்துட்டான்.. அதான் பல் கொட்டியைக் கூப்பிட்டேன்.. அது என்னடானா ஏட்டை ஒரு அடி அடிச்சு கவுத்திடுச்சு” என்றேன்.
“நீங்க தானேப்பா சொன்னீங்க.. ஏட்டை அடிக்கணும்னு..? அதான் மொதல்ல அடிச்சேன்.. அப்புறம் தான் கவனிச்சேன் நீ என்ன சொல்றேனு.. உடனே ஏட்டு கைல பீடத்தை வச்சு அவரை அப்படியே அந்தரத்துல தூக்கிட்டு சுத்தினேன்.. உங்களை நம்பினா எனக்குப் பல் கிடைச்ச கதைதான்.. பீடத்தைப் பேத்துட்டதினால எனக்கும் சிக்கல் இல்லாம போச்சு.. வெளில போனதும் நொறுக்கிட்டேன்.. பல்லை எடுத்துக்கிட்டேன்..”
“இருந்தாலும் போலீஸை அடிக்கறதுனா பல்கொட்டிக்கு ரொம்ப இஷ்டம்..ஆளை ஒரு தட்டு தட்டச்சொன்னா இப்படியா துணி மாதிரி துவைக்கிறது? ஏட்டுக்கு மயக்கம் தெளிஞ்சதும் நம்மளைப் பிடிக்க வருவான்.. அதுக்குள்ள நாம ஓடிறணும்.. ” என்றான் ரமேஷ்.
“எதுக்கு ஓடணும்?” என்றான் ஸ்ரீராம். “பீடத்தைத் தூக்கிட்டுப் போய் உடைச்சது ஏட்டுதான்னு எல்லாரும் சாட்சி சொல்வாங்க.. பரவாயில்லே பல்கொட்டி.. உனக்கும் கொஞ்சம் மூளை இருக்குது போல. குட். காரியம் ஆயிடுச்சில்லே? நடையக் கட்டு”.
        மறுநாள் காலை நானும் ரமேஷும் மும்பை கிளம்பினோம். ஸ்ரீராம் பெங்களூர் கிளம்பினான். பல்கொட்டி எங்களை விமான நிலையத்தில் வழியனுப்பி “நான் உங்களை மறக்கவே மாட்டேன்” என்றது.
“அய்யயோ..நீ வேறே... மொதல்ல எங்களை மறந்து தொலை.. இனிமே எங்க பக்கமே திரும்பிப் பார்க்காதே” என்றான் ரமேஷ்.
என் பாஸ்போர்ட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த செக்யூரிடி திடீரென்று பாஸ்போர்ட் காற்றில் பறப்பதைப் பார்த்து அலறினான். தாவிப் பிடித்து என் கையில் கொடுத்து “மாப் கீஜியே” என்றான். விமானத்தில் கூட்டம் இல்லை. உள்ளே நுழைந்து என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தேன். பக்கத்து இருக்கை ஆசாமி அடிக்கடி நெளிந்து தன்னைத் தானே கன்னத்தில் அடித்துக் கொண்ட அதிர்ச்சியில் கலங்கிப் போயிருந்தான். நான் அவனைக் கவனிப்பது தெரிந்ததும் நெளிந்து “வயித்துவலி.. ஐ வில் கோ தேர்” என்றபடி எழுந்து பின்னால் போனான்.
பல்கொட்டி என் பக்கத்தில் இருப்பதை உணர்ந்தேன். “நீ எங்க பக்கமே வரக்கூடாதுனு சொன்னேன் இல்லே?” என்றேன். பல்கொட்டி பதில் சொல்லவில்லை.
முற்றும் - படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க!
2017/08/05
பல்கொட்டிப் பேய்
இது வரை: காஞ்சிபுரம் போயிருந்தனர் எங்கள் பெற்றோர். கோடை வெயிலை வீணாக்காமல் டெனிஸ் பந்தில் க்ரிகெட் விளையாடிக் கொண்டிருந்தோம் நான், என் தம்பி ஸ்ரீராம், என் பெரியம்மா மகன் ரகு, எதிர் வீட்டு நண்பன் ரமேஷ் நால்வரும். கீழே கிடந்த பந்தை எடுத்து நான் எறிய அதை ரமேஷ் பிடிக்கத் தொட்டதும் பந்து விர்ரென்று உயர்ந்து விரிந்து பேயாகச் சிரித்தது. எங்கள் வீட்டு வாசலையொட்டிய அம்மன் கோவில் பூசாரி தணிகாசலம் விவரம் கேட்டு 'அது பல்கொட்டிப் பேய்.. உங்களை விடாது' என்றார். கண்டிப்பாக அன்றிரவே பேய் எங்களைக் கடத்திச் சென்று தலைகீழாகத் தொங்கவிட்டு பல்லால் கொட்டி பலி வாங்கும் என்றார். அம்மனுக்கு பலி கொடுத்த ஆட்டு ரத்தம் தடவிய கயிற்றால் சுற்றி எங்களைக் காப்பாற்ற ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார். அதன்படி நடந்து என் தம்பி ஸ்ரீராம் பல்கொட்டியின் வாயிலிருந்த தலைப்பல்லை தட்டி எடுத்துவிட்டான். உக்கிரமாக ஆர்ப்பரித்த பேயிடம் விடியும் வரை பல்லைத் தராதிருந்து முன்னூறு வருடம் கழித்து வந்தால் தருவதாகச் சொல்லச் சொல்லியிருந்தார் பூசாரி. மறதியிலோ பயத்திலோ முன்னூறுக்கு பதில் முப்பது என்று சொல்லிவிட்டான் ஸ்ரீராம். கறுவிக்கொண்டே எங்களை விட்டு விலகிய பல்கொட்டி சரியாக முப்பது வருடங்கள் காத்திருந்து நான் தங்கியிருந்த மும்பை ஹோட்டல் அறையில் விடிகாலை என்னைத் தட்டி எழுப்பியது. முப்பது வருடங்களில் பல்கொட்டி சோர்ந்தும் நொந்தும் போயிருந்தது. வரும் ஆடி அமாவாசைக்குள் நாங்கள் கூட்டாக அதனிடம் தலைப்பல்லைத் திருப்பாவிட்டால் பெருங்கேடு நேரும் என்றது.
12◄
        என்னதான் அனுசரித்து பழக்க மரியாதையுடன் நடந்துகொள்வோம் என்று நினைத்தாலும் பல்கொட்டியின் பேய்க்குணம் மாறாது என்று புரிந்துவிட்டது. கெட்ட கனவை உருவாக்கியதுடன் நில்லாமல் இப்போது தலைகீழாகத் தொங்கியபடி இடியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது. கெட்ட கனவே மேல்.
கூகில் ட்ரைவில் சேமித்திருந்த என் பழைய தொடர்பு விவரங்களிலிருந்தும் லிங்க்டின் தேடலிலும் ஒருவழியாக ரமேஷைக் கண்டுபிடித்தேன். பல்கொட்டியைத் திட்டினாலும் ஒருவழியில் சந்தோஷம் தான். நட்பைப் புதுப்பிப்பது ஒரு புறம், பல்கொட்டியின் வருகையைச் சொன்னதும் அவன் எப்படி நடந்துகொள்வான் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இடுக்கண் கொடுப்பதாம் நட்பு.
குடும்ப நலத்திலிருந்து பக்கத்துத் தெரு வெறிநாய் மாரடைப்பில் இறந்தது வரை பேசிய ரமேஷ் பல்கொட்டி வருகையைச் சொன்னதும் ‘ராங் நம்பர்’ என்று வைத்துவிட்டான். மறுபடி முயற்சித்தபோது பெண்குரலில் மராத்தியில் பேசினான். பிறகு நாய் குரைப்பது போல். அதற்குப்பிறகு எடுக்கவே இல்லை. “இப்ப என்ன செய்ய? ரமேஷ் வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சுப் போவுறது?” என்றேன்.
“இங்கதான் பைகலாவில் இருக்குது, எனக்குத் தெரியும் வா போகலாம்” என்றது பல்கொட்டி.
“உனக்குப் பல்லுதான் இல்லே, மூளையுமா இல்லே? இதை மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல?”
“நீ மொதல்லயே கேட்டிருக்கலாம்ல? முப்பது வருசமா உங்களைப் பேயா சுத்தி சுத்தி வரேன்ல? எனக்குத் தெரியாதா?”
“அடப்பேவி!”
ரமேஷ் வீட்டுக்குப் போனபோது அவன் வேலைக்கார வேஷத்தில் “ரமேஷ் சாப் கா கர் நஹி.. பொலிஸ் இன்ஸ்பெக்டர் கா மகான்.. அப் ஆனேவாலா ஹை.. சலே ஜா” என்றான். பத்து நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு உள்ளே அனுமதித்தான். தலைப்பல் மீட்பு பற்றிச் சொன்னேன். பல்கொட்டியின் தலைப்பல் ஓட்டையில் விரல் விட்டு விளையாடிக்கொண்டிருந்த ரமேஷின் நாலு வயது பேரனை இழுத்து இழுத்து அருகில் வைத்தபடி மறுத்தான். பிறகு சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன் கனவில் வந்து வசனம் பேசி நடிப்பார்கள் என்றதும் முகம் வெளிறிப் பதறி நடுங்கி அலறியடித்து ஒப்புக்கொண்டான்.
ஸ்ரீராம் சிரிக்கத் தொடங்கினான். “கெட்ட கனவு தானே? ஜமாய் மச்சி” என்று பல்கொட்டியைத் தட்டிக் கொடுத்தான். என் தம்பி எதற்குமே அலட்டாத வகை. அதுவும் தூக்கம் என்றால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியாது. பக்கத்து வீட்டில் இடி விழுந்து கருகும். இவன் சுகமாகத் தூங்குவான். கனவா? கனவில் வந்தவர்களுடன் பேசியபடியே தூங்குவான். கடைசியில் அவன் காலில் விழுந்தோம். வேறு வழியே இல்லை. மூத்தவர்கள் மூவர் (பேயை மூவரில் சேர்க்கலாமா?) அவன் காலில் விழுவதைப் பார்த்து மனம் மாறினான்.
      ஞாயிறு மாலை பம்மல் வந்தோம். கோவில் வெளிப்புறம் நன்கு மாறியிருந்தாலும் உட்புறம் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முந்தைய தோற்றத்திலிருந்து மாறவில்லை. கோவிலில் இருந்த ஒன்றிரண்டு பெண்கள் எங்களைச் சந்தேகத்துடன் விசித்திரமாகப் பார்த்தபடி வெளியேறினார்கள். “ரமேஷ். வேஷம் போடாம வாடானு சொன்னா கேட்டியா? அதும் ஒரு முழத்துக்கு தாடி ஒட்டி வச்சிருக்கே.. பாரு, ஆடிக்காத்துல ஆடிக்காட்டுது” என்று இடித்தேன்.
பூசாரி வெளியே வந்து எங்களைப் பார்த்து சிரித்தான். “வாங்க.. என் பேரு உக்கிராசலம். கோவில் பூசாரி”
தணிகாசலத்தின் பேரனாக இருக்க வேண்டும். விவரம் சொன்னோம். கோவில் பின்புறம் இருந்த அவன் வீட்டுக்கு அழைத்தான். உள்ளே நுழைந்ததும் ஒருவித வேப்பிலை நடனமாடி எங்களைச் சுற்றி குங்குமம் தூவினான். ஒரு எலுமிச்சையை அசால்டாக கையால் திருகி எறிந்து வெளியே வீசினான். “பல்கொட்டி உங்க கூட இருக்குதா?” என்றான்.
“உக்கிராசலம்.. அது ஒண்ணும் பண்ணாதுபா” என்றேன். உடனடியாகத் தலைப்பல்லை எடுத்துக் கொடுக்கச் சொன்னான் ரமேஷ். “அடுத்த ப்ளைட்ல போவணும்பா..”
“முடியவே முடியாது. தாத்தா சாவுறப்ப விவரம் எல்லாம் சொன்னாரு. முப்பது வருசம் பொறுத்து வருவீங்கனாரு. பல்லைத் திருப்பினா பலி வாங்கும்னாரு.. அதான் அவுரே கோவில் பூசைபலி மேடைல பொதச்சு வச்சுட்டாரு. எடுக்க முடியாது.. பாருங்க இதைப்பத்திப் பேசுறப்பவே வெளில நிழலாடுறாப்புல இருக்குது”
"பொதைக்கலபா, பதிச்சு வச்சிருக்காரு.. சரியாச் சொல்லணும்" என்றான் ரமேஷ் தேவையில்லாமல்.
“உக்ரம்.. இங்க வாங்க” என்றான் ஸ்ரீராம். “அஞ்சாயிரம் பணம் தரேன்.. அப்புறம் இதையும் அன்பளிப்பா வச்சுக்குங்க” நேராக விஷயத்துக்கு வந்தான். தன் பையிலிருந்த இரண்டு அரை லிடர் ஷிவஸ் புட்டிகளை எடுத்துக் கொடுத்தான்.
தணிகாசலம் பரம்பரை அல்லவா? உக்கிராசலம் உடனே விழுந்தான். “புதன்கிழமை தானுங்க அமாவாசை? நீங்க போயிட்டு செவ்வா நைட்டு வாங்க. பேத்து எடுத்துருவம். அதுக்குள்ளாற எங்க பேயாத்தா கிட்டே ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்”
“பேயாத்தாவா? அது உங்க தாத்தாவுக்கு ஆத்தாவுக்கு ஆத்தாவாச்சேபா?” என்றான் ரமேஷ். “இன்னுமா சாவலே?”
“பேயாத்தாவுக்கு சாவு கிடையாது. செத்து தானே பேயாச்சு?” என்று நுட்பத்தை விளக்கினான் உக்கிராசலம்.
“போய்ட்டு வாங்க” என்று எங்களுடன் அவனும் வெளியே வந்தான். வீட்டு வாசலில் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஒரு ஏட்டு நின்றிருந்தார். “என்னா உக்கு? கோவில் சிலை திருட்டா? எல்லாம் கேட்டுட்டு இருந்தேன்.”
“அய்யயோ அப்படியெல்லாம் இல்லிங்க இன்ஸ்பெக்டர்” என்றான் ரமேஷ். இலவசமாக் கிடைத்த பதவி உயர்வுக்கு மயங்காத கான்ஸ்டபிள் நேர்மையுடன் ரமேஷைப் பார்த்து “நீ யார்யா? ஐசிஸா? தாடி வச்சிட்டு ஒருத்தன் கோவில்ல திரியறானு அந்த பொம்பளிங்க சொன்னது உன்னியத்தானா?”
“ஏட்டய்யா.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?” ஸ்ரீராம் நேராக விஷயத்துக்கு வந்தான்.
ஏட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. ஆதிகால ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன் போல் குதிக்கத் தொடங்கினார். தொடங்கிய வேகத்தில் படாரென்று மயங்கி விழுந்தார்.
“ஓடுங்க.. ஓடிருங்க.. என்னாச்சு தெரியலே.. அவரு எழுந்ததும் நான் பேசிக்கிறேன்” என்று எங்களை முடுக்கினான் உக்கிராசலம். “செவ்வா நைட்டு மறந்துறாதிங்க”.
விரைந்தோம். “இப்பத்தான் மொதல் தடவையா போலீசை அடிச்சிருக்கேன்” என்றது பல்கொட்டி உடன் விரைந்தபடி.
      ஆளே இருக்காது என்று நினைத்து செவ்வாய் இரவு பத்து மணிக்கு கோவிலுக்கு வந்தோம். ஆண் பெண் பிள்ளைகள் என்று மக்கள் கூட்டம். உள்ளே அம்மனுக்கு பூ அலங்காரம். சாம்பிராணிப் புகை. வெளியே இரண்டு இடங்களில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். உக்கிராசலம் எங்களைப் பார்த்ததும் வெளியே வந்தான். “மன்னிச்சுக்குங்க.. அர்த்தஜாமக் கூழ் காய்ச்சணுமின்னு காலைல வந்து பணம் கொடுத்தாங்க. இல்லேன்னு சொல்ல முடியாது.. நேந்துக்கிட்ட சமாசாரம்..” என்றான்.
“ஏய்யா யோவ்.. எங்க கிட்ட பணம் வாங்கிட்டு ஜாமத்துல கூழ் ஊத்தவும் காசு வாங்கிட்டியா?” என்றேன் கடுப்பில்.
“அதில்லாம பேயாத்தா கூடாதுன்னுடிச்சு.. தலைப்பல் கிடைச்சதுமே பல்கொட்டி பழி வாங்கிடுமாம்.. எதும் செய்ய முடியாது..” என்றான் தீர்மானமாக. “அந்த ஏட்டு வேறே இங்கயே ரோந்து சுத்திட்டிருக்காரு.. பாருங்க”
“அடேய்.. நாளைக்கு அமாவாசை.. இன்னிக்கு எடுக்கலேனா பெருங்கேடு பெருங்கேடு” என்றான் ரமேஷ் பாலையா பாணியில்.
ஸ்ரீராம் எங்களைத் தனியாக வெளியே அழைத்துப் பேசியதும், “சரி உக்ரம்.. வந்ததோ வந்துட்டம்.. சும்மா ஒரு ரவுண்டு அடிச்சுட்டு நாங்களும் ஜாமக்கூழ் பூசைல கலந்துக்கறோம்.. எங்களுக்கு உள்ளாற எடம் போட்டு வை” என்றோம். பல்லில்லாமல் போவதில்லை என்று தீர்மானித்திருந்தோம்.
அங்கே இங்கே சுற்றி மெயின் ரோடு டீக்கடையில் மசாலா பால் வாங்கினோம். அகண்ட வாணலியில் சுண்டக்காய்ச்சிய பால் எடுத்து கிளாசில் ஊற்றி அதன் மேல் ஏடு போட்டு முந்திரி பாதாம் பிஸ்தா ஏலக்காய் பொடியைத் தூவிக் கொடுத்தார் டீ மாஸ்டர். மூன்று பேர் நான்கு பால் வாங்குவதையும் நாலாவது கிளாஸ் அந்தரத்தில் நிற்பதையும் பார்த்து எதுவும் பேசாமல் நடுங்கிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர். மசாலா பாலை அனுபவித்துக் குடித்தோம். கோவிலுக்குத் திரும்பியபோது மணி இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கோவில் வாயிலில் எங்களைப் பார்த்த ஏட்டு கையிலிருந்த லட்டியை சுழற்றிக் காட்டியபடி தலையசைத்தார்.
கூட்டத்துடன் கலந்து உள்ளே நுழைந்து பார்த்தோம். ஜாமக் கூழ் பூசை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
எங்களுக்காக பலிமேடை அருகே பரவலாக இடம் ஒதுக்கியிருந்தான் உக்கிராசலம். உட்கார்ந்தோம். பலிமேடை நடுவே அலங்காரங்களுக்கு இடையே துல்லியமாகத் தெரிந்தது தலைப்பல்.
நான் பல்கொட்டியைப் பார்த்தேன். தணிகாசலமும் பேயாத்தாவும் சொன்னது போல் ஒருவேளை தலைப்பல் கிடைத்ததும் பழிவாங்குமோ என்ற எண்ணம் அச்சமாகப் பரவத் தொடங்கியது.
பனிரெண்டு மணியாகிவிட்டது என்று சைகை செய்தான் ஸ்ரீராம்.
12◄ ►14
2017/08/04
பல்கொட்டிப் பேய்
11◄
        பல்கொட்டியைக் காணாது திகைத்தேன். காலருகே ஏதோ புசுபுசுவென்று உணர்ந்தேன். ஹோடல் ரூமில் ஏது மரவட்டை? ஒருவேளை பல்லியாக இருக்குமோ என்று அச்சத்தில் துள்ளினேன். துள்ளிய வேகத்தில் படுக்கையில் விழுந்தபோது கவனித்தேன். பல்கொட்டிப் பேய் நான் நின்றிருந்த இடத்தில் முழுதுமாக கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருந்தது. அரை நிமிடத்தில் இருநூறு நமஸ்காரம் செய்திருக்கும். “ஏய்.. என்ன இது.. கால்ல விழுந்திட்டிருக்கே? அதுவும் இத்தனை வேகமா?”
எழுந்து தரையில் உட்கார்ந்த பல்கொட்டி “என் தலைப்பல்லை நீ தான் எப்படியாவது மீட்டுக் குடுக்கணும்.. இந்த முப்பது வருஷமா நான் பட்ட கஷ்டம் ஒரு மனுசனுக்குக் கூட வரக்கூடாது.. அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்..” ஏறக்குறைய அழுதுவிட்டது. “என்னை இப்ப எந்தப் பேயும் மதிக்குறதில்லே.. காட்டேரிங்க கூட என்னைக் கண்டா வாய்ல கையப் பொத்திக்கிட்டு ஒதுங்கும்.. இப்ப பல்லிழந்த செல்லாப் பேயா அலையுறேன்…”
எனக்கே பாவமாகிவிட்டது. என்னதான் இருந்தாலும் முப்பது வருசத்துக்கு முந்தைய பழக்கம் இல்லையா? “பல்கொட்டி.." என்றேன் கருணை பொங்க. "இதப்பாரு.. அந்த தலைப்பல் யார் கிட்டே இருக்குனு கூடத் தெரியாதே? அந்த தணிகாசாலம் ஞாபகம் இருக்குதா? அந்தாளு எடுத்துட்டுப் போயிட்டாரு.”
“தெரியும்.. முப்பது வருசமா பாத்துட்டு இருக்கேன்ல? அம்மன் சிலைக்கு கீழே பூசை மேடையில பதிச்சு வச்சிருக்காரு”
“அப்ப எடுக்க வேண்டியது?”
“வாக்கு குடுத்திட்டேன் இல்லே? முப்பது வருசம் கழிச்சு வருவேன்னு. தொடமுடியாது”
“ஆமாம்.. பொல்லாத வாக்கு.. நீ எங்க ஊர் அரசியல்வாதிங்களைப் பாக்கலே?”
பல்கொட்டி நடுங்கியது. “ஐயோ.. அரசியல்வாதிங்களா.. இப்பல்லாம் கோழித்தலை காட்டேரிங்க கூட தமிழ்நாடுனா ஒரே ஓட்டமா ஓடுதுங்க.. நான் எம்மாத்திரம்?”
“அதென்ன கோழித்தலை காட்டேரி?”
“அந்தக் கதை இன்னொருக்கா சொல்றேன்.. ரத்தக்காட்டேரிக்கு மூத்த தலைமுறை… மின்னூறு மனுச வருசத்துக்கு ஒருக்கா எந்திரிக்கும்.. கண்ணு முளிச்ச எடமெல்லாம் காவுதான்.. அப்படித்தான் ஆறு மாசம் மின்னே சென்னைல மகாபலிபுரம் பக்கத்துல முளிச்சுக்கிச்சு.... சரி.. இனி ரத்த ரகளைதான்.. நாம இந்த சாக்குல தலைப்பல்லை ராவிக்குவம்னு நினைச்சு பின்னால போனா.. கோழித்தலை அலறி அடிச்சுனு ஓடுது.. என்னத்த சொல்ல..”
“ஏன்?”
“யாரு கண்டா என்னா நடக்குதோ தமிள்நாட்டுல.. கோழித்தலையே ஓடுறப்போ நாங்க என்ன சுத்திக்கிட்டா இருப்போம்? நாங்களும் மறைஞ்சுட்டோம். இப்பல்லாம் தமிழ்நாட்டுப் பக்கம் போவுறதுனாலே பேயுங்க பயப்படுதுங்க”
“அப்ப என்னதான் செய்யுறீங்க?”
“அந்தக் கொடுமையை ஏன் கேக்குற? வடநாட்டுல போய் முடி வெட்டுறோம்”
“களுத நீங்கதானா?” எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“எடுத்தவங்களே பல்லை வைக்கணும்.. உன் தம்பிக்குத்தான் அதிகாரம் இருக்குது.. பேய்ச் சாபம் உன் குடும்பத்துக்கு வேணாம்.. பல்லை எடுத்துக் குடுத்துறச் சொல்லு”
“இதப்பாரு பல்கொட்டி.. நானாச்சும் உனக்கு பயப்படுவேன்.. என் தம்பி ஸ்ரீராம் இப்ப பெரிய ஆளு.. கோளித்தலையே அவனுக்கு பயப்படும் வேணாப்பாரு.. நீ இன்னா ஜுஜுபி.. பேய்சாபம்னா பேயாட்டம் சிரிப்பான்.. உனக்கு இந்த ஜன்மத்துல பல் கிடைக்காது.. ஆமா, உனக்கு ஜென்மம் எல்லாம் உண்டா?”
பல்கொட்டி தலை குனிந்தது. “அப்பல்லாம் வெட்டு குத்து கொலை விபத்துனு அல்பாயுசா போயி பேயாவோம்.. இப்ப எல்லாம் மாறிடுச்சு.. அஞ்சாம்பு பெயிலு ப்ள்ஸ்டூ பெயிலு லவ் பெயிலு கடன் பாக்கி காலேஜுல இடம் இல்லே காவேரில தண்ணி இல்லே நாய்க்கு தலைவலி ஜல்லிக்கட்டு வெளாடலேனு எதுக்கெடுத்தாலும் திட்டம் போட்டு தூக்குல தொங்கிட்டு பேயா வந்து அலையுறாங்க.. பேஸ்புக்கு வாட்சப்புனு என்னென்னவோ தெரிஞ்சுகிட்டுவந்து கூத்தடிக்குதுங்க.. மிச்ச பேயுங்களும் அவங்களை கொண்டாடுதுங்க.. எங்க காலத்துல காட்டேரி கொள்ளிவாய் குட்டிசாத்தான் கொம்பேறினு பேரு வச்சுக்கிட்டோம்.. இப்ப தெர்மாகோல் பேய்னு ஒரு லேட்டஸ்டு வகை கேட்டிருக்கியா? தூங்குறப்ப மூச்சுக்காத்து வெளிய போவாம ஒரு தெர்மகோல் அட்டையை வச்சுக் கொல்லுமாம் குடாக்குங்க.. எல்லா முட்டாப் பேய்ங்களும் தெர்மகோல் அட்டையை கட்டிக்கிட்டு அலையுதுங்க. பேய்த்தொகை கணக்கு வேறே கூடிக்கிட்டே போவுது.. என்னிய மாதிரி பழம்பெரும் பேய்ங்களை யாரும் மதிக்குறதில்லே.. மனுசங்களும் மாறிட்டாங்க. சாமியும் பொய் பூதமும் பொய்யின்றாங்க.. அட பூதத்தையாவது நம்புவாங்கனு பார்த்தா..”
“சரி.. சரி புலம்பாதே.. இதப்பாரு.. எங்க நாலு பேர்ல ரகு போயிட்டான்.. ஒருவேளை அவன் உன்னாட்டம் பேயா இருந்தாலும் இருக்கலாம் பாத்துக்க.. ரமேஷ் பய எங்க இருக்கானு தெரியாது.. தேடிப்பாக்கணும்.. அதும் நீ திரும்பிட்டனு தெரிஞ்சா பேரை சுரேசுனு மாத்தி வச்சுக்கிட்டாலும் சொல்றதுக்கில்லே.. ஆக நானும் என் தம்பியும் தான்..”
“வர ஆடி அமாவாசைக்குள்ள நீங்க மூணு பேரும் கூட்டா வந்து தலைப்பல் சேக்கலினா பெரும் கேடு விளையும்”
“யாருக்கு உனக்கா? களுத பொறுமையா இரு.. எல்லாம் கிடைக்கும்.. சாபம் கீபம் கொடுத்துராத.. காலைல ரமேசு நம்பரத் தேடி போன் பண்ணுறேன்.. இப்ப அந்த ஓரமா போய் உக்காரு.. இல்லே வவ்வாலா தொங்கு” என்று படுத்தேன். பல்கொட்டிக்குப் பயப்படுவதா பரிதாபப்படுவதா என்ற குழப்பத்தில் தூங்கிவிட்டேன். ரமேஷ் என் கழுத்தை நெறிப்பதாகக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தேன்.
பல்கொட்டி மென்மையாகச் சிரித்துக் கொண்டிருந்தது. "நீ எனக்கு பயப்படாம போனினா கூட கனவுக்கு பயந்து ஆவணுமே? என் தலைப்பல் எடுத்துத் தரலின்னா உனக்கு தினம் இது போல கனவுதான்" என்றது.
11◄ ►13
2017/07/28
மீண்டும் சுழி
        யாருடைய கெட்ட கனவோ, எனக்கு திடீரென்று மீண்டும் எழுதத் தோன்றியது. தொடர்ந்து எழுதும் பொழுது தோன்றாத பாரம் விட்டு மீளும் பொழுது உறைக்கிறது. சுழியைச் சுற்றிவந்த ஐம்பது தெரிந்த வாசகரை ஏமாற்றி விட்டது போலவும் ஒரு உணர்வு. எழுத்து ஒரு பொழுதுபோக்கு, சோர்வகற்றி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். எழுத்து ஒரு போதை, புலிவால் என்றும் புரிந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு மறுபடி பற்றியிருக்கிறேன். ஒரு வருடம் போல் காணாமல் போனதைப் பொருட்படுத்தாமல், என்னை மறந்துவிடாமல், மீண்டும் வந்து படிப்பதற்கு மனமார்ந்த நன்றி.
ஆதியில் விட்ட சில: பேயாள்வான் புராணம், அந்தக்கடை, பெத்தாபுர மலர்
பாதியில் விட்ட சில: லுக்ரீசின் சாபம், திரவியம், கண்பிடுங்கி நீலன்
மீதியில் விட்ட சில: பல்கொட்டிப் பேய்
இன்னும் இருக்கலாம். மேற்சொன்னவை என் நினைவிலிருந்து.
கர்மயோகிகளிடம் ஒரு சிக்கல். கர்மமே யோகமாகப் பழக வேண்டியவர்கள் அப்படி இருக்கத் தவறினால் கர்மச்சுமை கரையும் வரை மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதே சுமையைக் கரைப்பார்களாம். என்று அந்தக் கிஸ்டப்பிரபு சொன்னதாக என் சகோதரி தன்னுடைய ‘பேட்ட கீதை’யில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறாள். நாம் எல்லோருமே கர்மயோகிகளே என அடித்து வேறு சொல்லிவிட்டாள்.
ஆத்தாடி! இதுக்கு இன்னொரு பிறவியா? வேணாம்மா ஈஸ்வரி! சுழியில் எத்தனை விட்டுப் போயிருக்குதோ அத்தனையும் சட்டு புட்டு ப்ளைட்டுக்கு டயமாச்சுனு மஞ்சு பாணில முடிச்சுர வேண்டியதுதான்.
கானல் புகழுக்குக் கண் இழந்து திரவியம் கண்பிடுங்கி இரண்டையும் நேரே சினிமாவுக்கும் டிவிக்கும் கொடுத்து விட்டதால் ஏவெகோகோகோ. வேறு வழியில்லை. இதில் கண்பிடுங்கி மீண்டு வர கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. பெத்தாபுர மலர் ஏன் தடைபட்டுக் கொண்டே போகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. லுக்ரீசின் சாபம் ஆதர்சம், முடிக்க வேண்டும். அந்தக்கடை, பல்கொட்டி விரைவில். பேயாள்வான் புராணம் பெரிய ப்ராஜக்ட், தொடரும் சாத்தியம் இல்லை. அதுக்காக இன்னொரு பிறவி வேணாம்மா.. படிக்கிறவங்க பாவம் இல்லையா? அவங்களை நினைச்சு ஒண்ணு ரெண்டை டீல்ல விட்டுருவம், என்ன சரியா?
கர்மச்சுமை, பிறவி என்ற பாதையில் சிந்தனை ஓட, சட்டென்று நினைவுக்கு வந்த பாடல்:
    மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
    இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் சேராமற் கா.
'வாழாமற் கா' என்று பட்டினத்தார் பாடியதாகச் சொல்கிறார்கள். எனகென்னவோ 'சேராமற் கா' பொருத்தமாகத் தோன்றுகிறது. சமீபத்தில் இந்த பாடலை ஒருவருக்கு விளக்க நேர்ந்தது. 'வேதாவும் கைசலித்த'தை விளக்கும் போதுதான் இந்த பாடலின் எளிமை - ஏறக்குறைய அலட்சிய அற்புதம் - என்னைத் தாக்கியது. பட்டினத்தாருக்கே கர்மச்சுமை என்றால் ‘புட்டி’னத்தார் ஆசாமி கேவலம் நான் குறைபட்டுக் கொள்வானேன்? போனால் போகட்டும் போடா. சரி, இருப்பையூர் எங்கிருக்கிறது? கோமதி அரசுக்குத் தெரிந்திருக்கும். புனுகீஸ்வரர் மாதிரி கோவில்களை பிடித்தவருக்கு இருப்பையூர் தெரிந்திருக்காதா? :-)
இத்தனை புலம்புகிறேனே, ஏதாவது உணர்ந்து உருப்படப் பார்க்கிறேனா? இல்லை. வலை நண்பர்கள் சிலருடன் இணைந்து கணிசமான ப்ராஜக்ட் செய்யலாம் (எழுதலாம்) என்ற நப்பாசையில் சில ஐடியாக்களைச் சேர்த்து வருகிறேன். பிரசவ வைராக்கியம் என்பது இதானா?
        இணையம் விசித்திரமானது. ஒன்றைத் தேட ஒன்று கிடைக்கிறது. என் வீட்டைப் போலத்தான். பாருங்கள்.. கசிந்து ஒழுகிக் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இறுக்க வேண்டி முறுக்கியைத் தேடினால் என்றைக்கோ தேடிக்கொண்டிருந்த கையுறை கிடைத்தது.. பர்சைக் காணோமே என்று தேடினால் என் மகளின் நூலக உறுப்பினரட்டை கிடைத்தது.. இணையத்தில் ஏதோ ஒன்றைப் பற்றிய விவரம் தேடினால் இந்தத் தேவாரப் பாடல் கிடைத்தது . பாடலின் நயத்தில் தேடலை மறந்தேன்.
    கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
    கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
    கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
    கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.
'கிடந்த'வை நீக்கிப் படித்தால் சட்டென்று புரிந்துவிடும். எதுகை மோனைக்காக கிடக்க விட்டிருக்கிறார் நாவுக்கரசர். வாகீசர் இல்லையா? அவருக்கு எல்லாவித உரிமையும் உண்டு. நீங்களும் நானும்.. சரி.. நானெல்லாம் இப்படி ஏதாவது எதுகைக்காக சேர்த்து கவி எழுதினால் 'அதெல்லாம் நல்லா தமிழ் தெரிஞ்சவங்க எழுதணும்.. உனக்கு எதற்கப்பா வேண்டாத வேலை?' என்பார்கள். எப்படியிருந்தாலும் நாவுக்கரசர் நயத்துக்கு என்னை அவர் காலில் கட்டி அடிக்கலாம், விடுங்கள். பொருள் நயம் முக்கியம்.
இதே வி.கே.ராமசாமியா இருந்தா 'கிடந்து கிடந்துனா? களுத என்னா புரியுது?'னு கேட்டிருப்பாரு. அதுபோல நீயும் கேட்டுகினா வாய் மேல ரெண்டு போட்டு அர்த்தம் சொல்றேன் கெவுனி. நம்ம சிவம் யாரு? உமையொரு பாகன்.. அதாம்பா.. சிவன் பாதி சக்தி பாதி.. ஒரே பாடி.. லெப்டுல சிவன்.. ரைட்டுல சக்தி.. எப்டினு கேக்காதே.. கம்னு கேளு. இந்த சிவனோட தலைல பாம்பு கீதுல்ல.. அதுக்கு வந்த லொள்ள பாரு.. சொம்மா தலைலயோ கயுத்துலயோ குந்திகினு கீராம பாம்பு இன்னா பண்ணுதுனு கேளு.. நைசா சிவனோட மார்புல எறங்கி ரோந்து வுட்டுகுனு வருது.. நம்ம பார்வதிம்மா அதாம்பா சக்தி.. பாடில ரைட்டு ஆப்லக்குதுல? அது பாம்பைக் கண்டுகினதும் டர் ஆவுது.. இன்னாடாது.. பாம்பு ஊந்துகினே வருது.. நம்ம பார்டருல வருதுள்ளாற எஸ் வுடுவம்னா இந்தாளு புர்சங்காரன் பாதி உடம்பை வேறே புட்ச்சி வச்சிங்கிறான்.. பேஜாரா போச்சேனு மெய்யாலுமே பயந்துடிச்சிபா.. இந்தப் பொம்பள பாம்பைப் பாத்து டர் ஆவுதா? அந்தப் பாம்பு கதையை கேட்டுகினியா? அதுக்கும் பேதியாவுது.. ஏன்னு கேளு.. பாம்பு இந்தப் பொம்பள கலரையும் அயகையும் பாத்து மயில்னு நினைச்சுகிச்சுபா.. அட.. பாம்புக்கு மயில்னா பயமாச்சே.. இன்னாடா.. இந்த மன்சன்.. நம்மளை தலைல தூக்கி வச்சுகினானேனு அல்டாப்பா இருந்தா இந்த மயிலுக்கு காவு குட்த்துருவான் போலக்குதேனு அப்படியே ஷாக்காயிடுச்சு.. இங்க பார்வதியும் பாம்பும் மெர்சலாயினிருக்க சொல்ல இன்னொரு கூத்து கேளு.. சிவன் தலைல சந்திரன் இருக்குதுல்ல.. அதும் நடுங்குது.. ஏன்னு கேளு.. தோடா.. ஏற்கனவே ஒட்ச்சி போட்ட முறுக்காட்டம் இந்தாள் தலையில குந்தினுகுறோம்.. பாம்பு வேறே பயந்தாப்புல இருக்குது.. கபால்னு ரூட் மாறி நம்மளை முயுங்கிடுச்சுனா இன்னாவும் கெதினு அதுக்கு ஒரே பெஜாரு.. ஆத்தங்கரைல குந்திகினு இத்தையெல்லாம் பாத்துகினே சொம்மா சிரிச்சினிகுதுபா இந்த சிவம்..! இதான் அர்த்தம் பிரியுதா? அதான் படிக்க சொல்ல ஒயுங்கா தமிளு படின்றது.. அத்தவுட்டு இன்னாத்தையோ படிச்சினிகிறீங்கோ இந்தக்காலத்துப் புள்ளிங்கோ..
அப்படி என்ன இணையத் தேடல் என்கிறீர்களா? நண்பர் ஒருவர் சமீபத்தில் மயில் கறி சாப்பிட்டதாகச் சொன்னார். மயில் மாமிசம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் நம்ப முடியவில்லை. தேசியப் பறவை, முருகன் வாகனம் என்று ஒருபக்கம் இருந்தாலும் - என்னவோ மயில் கறி பரிமாறுவார்கள் என்று நினைக்கவில்லை - மயில் மாமிசம் ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இல்லையாம். சரி, மயில் கறி எப்படியிருக்கும்.. கோழி போலவா வான்கோழி போலவா எப்படிச் சுவைக்கும் என்று அறிய விரும்பி கூகிலில் தேடினால் முதல் வரிசையிலேயே மேற்சொன்ன தேவாரப் பாடல் வருகிறது!
மயில் கறியை மறந்து தேவாரப்பாடலில் லயித்து முடித்தால் இரண்டு வரிசை கீழே டாக்டர் கன்னியப்பன் என்பார் மயில்கறி பற்றி நேரிசை வெண்பா எழுதியிருப்பதைக் கண்டேன். 'அட! என்னே என் தமிழ்த்தேடலின் பாக்கியம்' என்று அதையும் படித்தேன்.
    சூலைப் பிடிப்புகளைச் சோரிவளி யைப்பித்த
    வேலைச்சி லேட்டுமத்தை வீட்டுங்கால் – நூலொத்த
    அற்பவிடை மாதே அனலா மயிலிறைச்சி
    நற்பசியுண் டாக்கு நவில்.
பொருள்:
நூல் போன்ற சின்னஞ்சிறு இடையை உடைய பெண்ணே! மயில் இறைச்சியை உண்பவர்களுக்கு உஷ்ணத்தைக் கிளப்பும். நல்ல பசியை உண்டாக்கும். வலி தரும் மூட்டுப் பிடிப்பு, சோரிவளி, பித்தம், அதிக கபம் இவைகளை விரட்டும்.
மயில் கறிக்கும் அற்ப இடைப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு?
        செவிக்குணவு போதும். இனி கண்ணுக்கு. சமீபத்தில் இரண்டு நாள் கொட்டித் தீர்த்தது மழை. அக்கம்பக்க விளையாட்டுத் திடல்கள் எல்லாம் குட்டைகளாக அவதாரம் எடுத்திருந்தன. ஒரு மாலைப் பொழுதில்:
இவர்களுடன் நடந்த போது | இவற்றைக் கண்டேன் | |
---|---|---|
2017/07/21
வந்தவள்
        இப்போதெல்லாம் இரவில் தூக்கம் சரியாக வருவதில்லை தவறி வந்தாலும் மூன்றரை மணிக்கே விழிப்பு வந்துவிடுகிறது. உதவியில்லாமல் படுக்கையை விட்டு எழுந்து நடமாடக்கூடாது என்று விதியிருப்பதால் படுத்திருப்பேன். ராம ராம என்று ஏதாவது சொல்வேன். சரியாக ஆறு மணிக்குச் செவிலிப்பெண் வந்து எழுப்புவது போல் எழுப்பி, நான் காலைக்கடன் முடிக்க உதவி செய்து, சிறிய டம்ளரில் சொட்டுப் பால் கலந்து சர்க்கரையில்லாத காபி கொடுப்பாள். இரண்டு பிரிட்டானியா பிஸ்கெட் கொடுத்து என்னை சாய்நாற்காலியில் உட்காரவைத்துப் போவாள். சில நேரம் பெரிய எழுத்து பாகவதம் படிப்பேன். கண்ணன் கதைகள் பிடிக்கும். அலமாரியில் வரிசையாக இருக்கும் மெடல்களைப் பார்ப்பேன்.. என் நேர்மைக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசுகள்.. சில நேரம் ஆல்பத்தைப் புரட்டிப் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் படங்களையோ அவர்களனுப்பிய கடிதங்களையோ பார்ப்பேன். படிக்க முடிவதில்லை. பல நேரம் கண்மூடியிருப்பேன். அன்றைக்கும் அப்படியே.
சலசலப்பு கேட்டு விழித்தேன்.
விழித்தேன் என்பது சரியான சொல்லா தெரியவில்லை. கண் திறந்தேன் எனலாமா? அப்படித்தான் வைத்துக் கொள்ளவேண்டும். விழிப்பது புறச் செய்கையெனில் நான் தூங்கினால் தானே விழிப்பதற்கு? அகத்தைப் பற்றியதெனில் விழிப்பதற்கான வாய்ப்பே இல்லை. மூன்று வருடங்கள் முன்பு தூங்கிய அகம் இனி விழிக்கப் போவதில்லை.
வெளியே சலசலப்பு பெரிதாகக் கேட்டது. அவளாகவே இருக்க வேண்டும். யாருக்கு அதிர்ஷ்டமோ? இன்றைக்கு என்னைப் பார்க்க வந்தால் நன்றாக இருக்குமே என்று உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்…. சரி வரும் போது வரட்டும்… என்று நினைக்கும் போதே அறைக்கதவைத் தட்டும் ஓசை. தொடர்ந்து உள்ளே வந்தாள். அவள்தான்.
பதினைந்து பதினாறு வயதிருக்குமா? தினமும் பதினாறாகவே இருக்கிறாளே? இன்றைக்குப் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். குழந்தைத்தனமும் விலகாமல் குமரித்தனமும் பரவாமல் ஒருவிதக் குதூகலமான முகம். வெகுளியும் விவேகமும் கலந்த அறிவார்ந்த முகம். நெற்றியில் கருங்கீற்று. அதன் கீழே சிறிய குங்குமப் பொட்டு. கருணைக் கடலாய் கண்கள். கழுத்தில் ஒரு கண்ணாடி மாலை. இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள். ஒரு கையில் சிறிய துணிப்பை. பளிச்சென்று இருந்தாள். பார்வைக்குப் பரவசம் தந்தாள். ஆறேழு மாதங்களாக அவ்வப்போது வருகிறாள். எப்போது வந்தாலும் அதே தோற்றம். அதே முகம். அதே பரவசம்.
“தாத்தா” என்று ஓடிவந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “எப்படி இருக்கீங்க தாத்தா? இந்தாங்க உங்களுக்காக..” என்று தன் பையிலிருந்து ஒரு பிடி பவழமல்லிப் பூக்களை எடுத்துத் தந்தாள். “பாவாடை தாவணி உங்களுக்காகக் கட்டிக்கிட்டேன். அழகா இருக்கா? பவளமல்லியும் உங்களுக்குத்தான் தாத்தா.. இன்னிக்கு உங்க பிறந்த நாள் இல்லியா? வாழ்த்துக்கள் தாத்தா”
“சந்தோஷம்”. புன்னகைத்தேன். “நாளைக்கு வருவியா?” என்ற என் கேள்விப் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் “அவசியம் இருந்தா வருவேன் தாத்தா..” என்ற வழக்கமான பதிலைச் சொல்லிக் கிளம்பி மறைந்து விட்டாள்.
ஆல்பத்தைப் புரட்டி மகன் பேரன் பேத்தி படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். பிறகு கண்களை மூடி பவழமல்லிப் பூக்களை என் முகத்தில் அப்படியே கவிழ்த்துக் கொண்டேன். மணம் மனத்தை இழுத்தது.
        என் மனைவி பூரணியின் எழுபதாவது பிறந்தநாள். பூரணி என் உயிர். என் அகம். என் எல்லாம். எங்களுக்கு ஆறு பிள்ளைகள். முதல் ஐந்தும் வரிசையாக ஆண், கடைசியில் ஒரு பெண். எல்லாரையும் வளர்த்து, படிக்க வைத்து முன்னேற்றப் பாதையில் வழியனுப்பிவிட்டு என்னுடய ஹைகோர்ட் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்த என் குடும்ப வீட்டில் என் மூன்றாவது மகன் குடும்பத்துடன் இருந்தோம். அங்கேதான் விழா. சிகாகோ, லசான், துபாய், டோக்கியோ, மும்பையிலிருந்து எங்கள் மற்றப் பிள்ளைகளும் குடும்பத்துடன் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். பூரணி பிறந்த நாளுக்கு ஹோமம், அன்னதானம், துணிதானம் என்று அமர்க்களப்படுத்தியிருந்தார்கள்.
மறுநாள் காலை சிற்றுண்டி முடித்ததும் பேரக்குழந்தைகள் அனைவரும் மருமகனுடன் வெளியே பிக்னிக் கிளம்பினார்கள். மருமகள் ஐவரும் அதிகாலையிலேயே மொத்தமாக வெளியே கிளம்பியிருந்தார்கள். மகன் ஐவரும் மகளும் நாங்களும் மட்டும் இருந்தோம். “அப்பா அம்மா.. உங்களுட பேசணும்" என்றார்கள்.
மூன்றாவது மகன் தொடங்கிவைத்தான். “அப்பா.. அம்மா.. நீங்க ரெண்டு பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தீங்க.. எங்களுக்கும் வழி செஞ்சீங்க.. இனி அடுத்த நிலையைப் பத்தி யோசிக்க வேண்டாமா.. அப்பா.. உங்களுக்கு எழுவத்தெட்டு வயசாகுது.. அம்மாவுக்கு எழுபதாயிடுச்சு.. எனக்கும் என் மனைவிக்கும் இருக்குற வேலை குழந்தை வளர்ப்பு சமூக ஈடுபாடுகள்ல உங்களைக் கவனிக்க முடியலே.. குழந்தைகளுக்கும் நீங்க கொஞ்சம் பழைய நடத்தைகளைக் காட்டுறது என் மனைவிக்குப் பிடிக்கலேபா.. எனக்கும் கஷ்டமா இருக்கு”.
“வீடு வேறே பழசாயிடுச்சுப்பா..” என்றான் இரண்டாமவன்.
“டேய்.. இது எங்க தாத்தா காலத்து வீடுரா”
“அதனாலதாம்பா..” என்றான் முதல்வன். “இதுல எங்களுக்கும் பங்கு இருக்குல்ல?”
“என்ன சொல்றே?” என்றாள் பூரணி.
“அம்மா. நீ கொஞ்சம் சும்மா இரும்மா” என்று அடக்கினாள் மகள்.
“உங்க ரெண்டு பேரையும் முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டா எல்லாருக்குமே வசதியா இருக்கும்னு தோணுதுபா” – இது நான்காவது மகன்.
“அதனாலதான் எல்லாரும் சேர்ந்து பேசலாம்னு ஒண்ணா வந்தோம்.. அம்மாவோட எழுபதாவது பொறந்த நாளையும் தவறவிடாம வந்துட்டோம்” கடைசி மகன்.
“ஆமாம்பா.. இந்த வீட்டை இடிச்சு ஆறு பேரும் ஜேவி போட்டு பனிரெண்டு ப்ளாட் கட்டுறதா திட்டம்.. ஜனாவே ஏற்பாடு செய்துடுவான்..” என்றான் மூத்தவன். ஜனா என் மூன்றாவது மகன். நகரின் மிகப்பிரபல கட்டிட நிறுவனம் ஒன்றின் முதலாளி. எங்களுடன் தினம் வாழ்ந்து வருபவன். “நாங்க ஆளுக்கு ஒரு ப்ளாட் எடுத்துக்குறோம். மிச்ச பிளாட்டை வித்து பணத்துலந்து ஒரு நல்ல முதியோர் இல்லத்துல வைப்புத்தொகை கட்டி உங்க ரெண்டுபேரையும் ஆயுசுக்கும் பாத்துக்கும்படி செய்துடறோம்.. மீதிப் பணத்துல உங்க பேரக் குழந்தைகளுக்கு ஒரு டிரஸ்ட் உருவாக்கிடறோம்”. அடப்பாவிகளா.. இதற்குத்தான் ஒன்றாக வந்தீர்களா எல்லாரும்?
“ஏண்டா.. எங்களை கவனிக்க கஷ்டமா இருக்குதா?” பூரணி மறித்தாள்.
“அம்மா.. சும்மா இருக்கியா? உங்க நனமைக்குத்தான் சொல்றோம். உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுனு வை, அவசரத்துக்கு நாங்க யாருமே இல்லியேமா? முதியோர் இல்லத்துல நல்லா கவனிப்பாங்க.. நாங்க யாராவது அப்பப்ப வந்து பார்ப்போம். உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டோம். பெத்தவங்க இல்லியா?” ஏறக்குறைய முடித்து வைத்தாள், என் செல்ல மகள். “என்னப்பா சொல்றீங்க?”
நான் என்ன சொன்னேன் என்று நினைவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்று நினைவில்லை. எதிலெதிலோ கையொப்பமிட்டேன். ஒரு வருடத்துக்குள் இங்கே பவானி பக்கம் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு எங்களுடன் சில நாட்கள் தங்கினார்கள். பிரிந்தார்கள்.
        அது நடந்தது பதினொரு வருடங்களுக்கு முன்பு.
எனக்கு இன்றைக்கு தொண்ணூறாவது பிறந்த நாள். பூரணி இருந்தால் ஏதாவது செய்வாள். இனிப்பு ஆகாது என்பதால் கொஞ்சம் தேன் எடுத்து என் நாவில் தடவி முத்தம் தருவாள். என் கைகளைப் பிடித்துக் கொண்டே ஏதாவது சினிமா பாட்டு பாடுவாள். எனக்கு சினிமாப் பாடல்கள் தான் பிடிக்கும்.
பூரணி இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் அதிகாலையில் பூரணி பூரணி என்கிறேன்…
என் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் யாரும் வரவில்லை. அவர்களுக்கு என்ன முடக்கமோ வேலையோ.. பாவம். ஒரு மாதம் பொறுத்து ஜனா வந்து பூரணிக்கான வைப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு போனான். “உனக்கு ஏதும் வேணுமாப்பா?” என்றான்.
அகம் தூங்கியது என்றேனே, அன்றைக்குத் தூங்கியது இனி விழிக்காது. மூன்று வருடங்களாக நானும் என் நலிந்து வரும் உடலும் மனமும் எதற்காகவோ காத்திருக்கிறோம். அவ்வப்போது செவிலிப்பெண் அக்கம்பக்கத்து முதியோர் பற்றிச் சொல்வாள். அனேகமாக எல்லார் கதையும் இப்படித்தான் போலிருக்கிறது.
சென்ற இரண்டு வருடங்களாகவே நான் வெளியே போவதில்லை. அனுமதியில்லை. எலும்புச் சேதம் என்கிறார்கள். அல்சைமர்ஸ் என்கிறார்கள். மயொபிஜியா பராக்சிஸ்மாலிஸ் என்கிறார்கள். பொடேசியப் பற்றாக்குறை என்கிறார்கள். என்னைப் பார்க்கவும் யாரும் வருவதில்லை. ஆக, அறைவாசம் சிறைவாசம்.
ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இரவு மிக அழுதேன். உடல்வலியை மிஞ்சும் மனவலி. மனவலியை மிஞ்சும் இயலாமை. இயலாமையை மிஞ்சும் உயிர்ப்பிடிப்பு. எத்தனை நேரம் அழுதேனோ?
மறு நாள் காலையில் திடீரென்று அறைக்கதவைத் தட்டி அவள் வந்தாள். முதல் முறை. “தாத்தா.. இந்தாங்க பிடிங்க” என்று ஒரு கை மல்லிகை மொட்டுக்களைத் தந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் அப்படி ஒரு களை முகத்தில். “யாரம்மா நீ?” என்று கேட்பதற்குள் கிளம்பிவிட்டாள்.
அதற்குப் பிறகு வந்தபோதெல்லாம் என் கைகளைப் பிடித்துக் கொள்வாள். இல்லையெனில் நெற்றியை வருடி விடுவாள். ஒரு பிடி உதிரி மலர் ஏதாவது கொடுத்து விலகுவாள். “நாளைக்கு வருவியா?” என்றால் சிரித்தபடி “அவசியம் இருந்தால் வரேன் தாத்தா..” என்பாள்.
ஒரு முறை செவிலியிடம் கேட்டேன் அவளைப் பற்றி. “என்னவோ அய்யா.. எங்க கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதே அந்தப் பொண்ணு?” என்று சிரித்தாள்.
“மாயப் பொண்ணா?”
“இல்லே ஐயா.. நான் வரப்ப அந்தப் பொண்ணு வரலேனு சொல்றேன்.. அக்கம்பக்கம் அந்தப் பொண்ணு வரான்னு சொல்றாங்க. நான் பார்த்ததே இல்லை. அதான்”.
"என்ன செய்யுது அந்தப் பொண்ணு மத்தவங்க கிட்டே?"
"என்னய்யா பொறாமையா?" சிரித்தாள் செவிலி. "உங்களைப்போலத்தான் ஐயா. யாரும் இல்லாதவங்க கிட்டே வந்து பேசுது. ஆறுதலா சிரிக்குது. ஏதோ பூவோ பழமோ குங்குமமோ தருதாம் சிலருக்கு.. கேள்விதான்.. நான் கண்டதில்லே.. ஆனா அந்தப் பொண்ணு வந்து போனா சந்தோசமா இருக்குதுனு சொல்றாங்க.. உண்மை தானே ஐயா.. நான் இங்க கூலிக்கு வேலை பாக்குறேன்னு இருந்தாலும் உங்க முதிய மனசுங்களோட வலி புரியுது ஐயா.. உங்களுக்கு எத்தினி ஆறு புள்ளைங்களா.. உங்க விருந்தாளி ரெஜிஸ்டர்ல அஞ்சு வருசத்துல ஒரே முறை பதிவாயிருக்கு அதும் அம்மா காணாத போன பிறகு.. பன்னீர் செல்வம் அய்யா பாருங்க.. மகன் எம்எல்எ மந்திரி ஆனா ஊழல் செய்யுறது பிடிக்கலேன்னு இங்க வந்து உக்காந்திருக்காரு.. ராகவனய்யா ஒரே பையனை பறிகொடுத்துட்டு.. ராமநாதன் சாருக்கு ரெண்டு பசங்க.. ரெண்டாமவனுக்கு கல்யாணம் கட்டின ஒரு மாசத்துல இங்க அனுப்பிட்டாங்க.. காலம் மாறிட்டு வருதே? இப்படி இங்க வந்த நாதியில்லாத மன்னிச்சுக்குங்க ஐயா வயசானவங்களை அப்பப்ப வந்து விசாரிச்சுட்டுப் போகவும் நல்ல மனசு வேணும்.. அந்தப் பொண்ணு நல்லாருக்கட்டும்".
        செவிலி சமீபமாக இல்லத்தில் முதியவர்கள் ‘காணாமல்’ போய்விடுவதாக அடிக்கடி சொல்லி வருகிறாள். “காணாம போறாங்களா?” என்று நான் அதிர்ந்தால் சிரிப்பாள். “இடக்கரடக்கல் ஐயா. கண் காணாத இடத்துக்கு போயிட்டாங்க”.
என் பூரணியும் காணாமல் போய் மூன்று வருடங்களாகின்றன. எனக்கும் காணாமல் போகும் துடிப்பு இருந்துகொண்டே...
ஏனோ அவளைப் பார்க்கும்பொழுது மட்டும் துடிப்பு சற்று அடங்குவது போல..
பார்த்திருந்தாலும் அவள் பெயரைத் தெரிந்து கொண்டதேயில்லை. ஏனோ கேட்கும் நினைப்பும் வரவில்லை. அவளைப் பார்ப்பதில் கிட்டும் குறுநேரப் பரவசத்தில் எல்லாமே மறந்துவிடும். அடுத்த முறை கேட்கவேண்டும்.
அடுத்த சில நாட்களுக்கு அவள் வரவில்லை. வாரங்களாகவும் இருக்கலாம். நேற்று முன்தினம் ராகவன் காணாது போனதாகச் செவிலி சொன்னாள். ராகவன் எங்களுக்கு ஐந்து வருடங்கள் பின்னால் வந்தவர். இன்று காலை பிஸ்கெட் தின்றுகொண்டே பன்னீர்செல்வம் காணாது போய்விட்டதாகச் சொன்னாள். வலித்தது. கண்களில் லேசாக நீர் திரையிடுவது தெரிந்தாலும் உணரமுடியாதது முரணாக இருந்தது. இன்று அந்தப் பெண் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.
வந்தாள். வந்த போது நான் கண் மூடியிருந்தேன். "தாத்தா" என்ற குதூகலக் குரல் கேட்டுக் கண் திறந்தேன். என் முன் நின்றாள். அதே பரவசமூட்டும் முகம். புன்னகைக்க முயன்றேன். என் கை விரல்களை மிக மிக மென்மையாகப் பிடித்தாள். "ரொம்ப முடியலியா தாத்தா?" என்றபடி என் நெற்றியைத் தடவினாள்.
"என்ன கொஞ்ச நாளா வரலே?"
"வந்தேனே தாத்தா? நீங்க கண்மூடியிருந்தீங்க.. பார்த்துட்டு போயிட்டேன்.. ஆனா இன்னிக்கு உங்க கண் திறந்து உங்களைப் பாத்து பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.." என்று இனிமையாகப் பேசினாள்.
"நாளை வருவியா?"
"அவசியம் இருந்தா வருவேன் தாத்தா"
"அவசியம் உண்டா இல்லியானு எப்படி தெரியும்?"
மென்மையாகச் சிரித்தாள். "எனக்கு எல்லாம் தெரியும்" என்றபடி என் கைகளை விடுவித்தாள். "பயப்படாதீங்க தாத்தா". கிளம்பினாள்.
"ஏய்.. இரு.. இரு.." என்றேன்.
"என்ன தாத்தா?"
"கோவிலுக்குப் போவியா?"
ஆச்சரியத்தோடு பார்த்தாள். "ஏன் கேக்குறீங்க?"
"இந்தா" என்று என் ஆல்பத்தைக் கொடுத்தேன்.
"என்ன இது தாத்தா?"
"என் சந்ததி படங்கள்.. எனக்குத் தேவையில்லை.. ஏன் பிடிச்சு வச்சிட்டிருந்தேனோ.. அவங்க நல்லா இருக்கணும்னு அம்மன் கிட்டே நீ எனக்காக வேண்டிக்கிட்டு அங்கயே வச்சுடு.. அதோ அந்த பெட்டிக்குள்ள நிறைய காசும் பணமும் இருக்கு.. எடுத்து அர்ச்சனைக்குப் போக உண்டியல்ல போட்டுரு.. அந்த அலமாரியில என்னுடைய புத்தகங்கள்.. வந்தப்ப கொண்டு வந்தது.. யாருக்காவது கொடுத்துடு.. ஏன் இன்னும் இதையெல்லாம் பிடிச்சிட்டிருக்கேனோ.. இன்னொரு உதவி செய். அப்புறம்.. அதோ அந்த மெடல்கள்.. அப்புறம்.. அந்தப் பெட்டிய.. அதான்.. எடுத்துவா"
வந்தாள்.
"அம்மா.. நீ யாரோ எனக்குத் தெரியாது.. ஆனா நான் சோர்ந்த நேரத்திலெல்லாம் வந்திருக்கே.. எனக்கு இனம் புரியாத பிடிப்பைப் கொடுத்திருக்கே.. அதுக்கு நன்றினு நினைக்காதே.. இந்த மெடல்கள் அசல் தங்கம்.. என் திறமையே அவன் போட்ட பிச்சைனு மறந்துட்டு தங்க மெடல் கிடல்னு பிடிச்சிட்டிருந்தேன் பாரு.. இந்த பெட்டியில என் மனைவியோட நகைகள் இருக்கு.. மெடல்.. நகை.. இதை அத்தனையும் நீ எடுத்துக்க"
அவள் மறுக்கவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "வேறே ஏதாவது தாத்தா..?"
"ஆமாம்.. கேட்கணும்னு இருந்தேன்.. இங்க வா.. எல்லாம் தெரிஞ்ச பெண்ணே.. உன் பேரென்னம்மா?"
"என் பேரு ஈஸ்வரி" என் முகத்தருகே நெருங்கி "எனக்கு மெய்யாவே எல்லாம் தெரியும் தாத்தா" என்றாள்.
குறிப்பு [-]
இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதியதாக நம்பப்படும் "The dog in the red bandana" எனும் சிறுகதை. 'காணாமல்' போவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு ரே எழுதியதாகச் சொல்கிறார்கள். ஐம்பது சதவிகிதம் சாத்தியம் என்பேன். குறைந்த பட்சம் முடிவையாவது யாரோ மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கதை வெளியாகவில்லை எனினும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம் போல் அசைபோட்டுத் தமிழில் தழுவியதில் ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.
இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
கொலகார பேஷன்ட் | (The Murderer)
ஆஸ்மா கிணறு | (The one who waits)
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)
2017/07/14
கொலகார பேஷன்ட்
        “டாக்டர் குரு, உங்கள் நாலு மணி பேஷன்ட் தயார். பாதுகாப்பு அறை ஏழு, புது பேஷன்ட். கைதி. மேலாய்வுக்காக டாக்டர் ஸ்னேகா வித்யுத் அனுப்பி வைத்தார்” என்று ப்லூடூத் ஹெட்செட்டில் வந்த தேன்குரல் கேட்டு “ஓகே” என்றான். கணினியில் தெரிந்த விவரங்களைப் படித்தான். இரண்டு அவசர உதவி வாக்கி டாக்கி ரேடியோக்களை எடுத்துக் கொண்டான். ஒன்றை இடது கால் சாக்ஸில் மறைவாகப் பொருத்திக் கொண்டான். மற்றொன்றை கோட் பாகெட்டில் போட்டுக் கொண்டான். ஐபேடை கணினி முன் நீட்ட பேஷன்ட் விவரங்கள் தானாகவே நகலாகின. ஐபேடை பார்த்தபடி பாதுகாப்பு அறை ஏழுக்கு நடந்தான். பேஷன்ட் பெயர் பாதித்தது.
அறைக்குள் நுழையுமுன் பாதுகாப்பு ரேடியோக்களை இயக்கிக் கொண்டான். அறைக்குள் நுழைந்ததும் கதவு தானாகப் பூட்டிக்கொண்டது.
நீண்ட மேஜையின் எதிரெதிரே இரண்டு வசதியான சாய்வு நாற்காலிகள். ஒரு நாற்காலியில் ஒருவன் அமர்ந்திருந்தான். நாற்பது வயதிருக்கும். கைகள் கட்டப்பட்டிருந்தன. மறு நாற்காலிக்குச் சென்ற குரு மனம் மாறி ஆளிருந்த நாற்காலியருகே வந்தான். கோட்டிலிருந்த ரேடியோ, ஐபேட் இரண்டையும் மேஜை மேல் வைத்தான்.
லேசானப் புன்னகையுடன் பேஷன்ட் கைக் கட்டை அவிழ்த்தான். “என் பெயர் டாக்டர் குரு” என்றான். “நீங்க?”
“என் பெயர் கொலகாரன்”
“பார்த்தேன். உங்க நிஜப்பெயரா?”
“கொல செய்யுறவன் கொலகாரன் தானே? நாம எல்லாருமே கொலகாரங்க தான். இனி உங்களையும் கொலகாரன்னே கூப்பிடவா?”
“டாக்டர் குருனே கூப்பிடுங்க…. மிஸ்டர் கொலகாரன்” தயங்கினான் குரு.
“சரி” என்ற பேஷன்ட் சட்டென்று எழுந்து மேஜையிலிருந்த ஐபேடை எடுத்து சிதறு தேங்காய் போல் தரையில் ஓங்கி அடித்தான். சுக்கு நூறான ஐபேடைப் பார்த்துச் சிரித்தான். மேஜை மேலிருந்த ரேடியோவைப் பற்களால் கடித்துக் குதறி சின்னாபின்னமாக்கித் துப்பினான். நாற்காலியில் நிதானமாக அமர்ந்தான்.
திடுக்கிட்ட குரு மெள்ள சுதாரித்தான். எதிர்புறமிருந்த நாற்காலியைப் பலத்த ஒலியுடன் பேஷன்ட் அருகே இழுத்து வந்து உட்கார்ந்தான். “நீங்க உடைச்ச ஐபேடும் ரேடியோவும் எழுவத்தஞ்சாயிரம் ரூபாய்” என்றான்.
“சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்று உரக்கப் பாடினான் பேஷன்ட்.
கோட் பாகெட்டிலிருந்த குறிப்பேட்டையும் பென்சிலையும் எடுத்தான் குரு. “மன்னிச்சுக்குங்க.. மிஸ்டர் கொலகாரன்… உங்களுக்கு இந்த மாதிரி கருவிகள் எந்திரங்கள் பிடிக்காதுனு மறந்துடுச்சு..” என்றான். புன்னகைத்தான். “போன வெள்ளிக்கிழமை கைது ஆயிருக்கீங்க. டாக்டர் வித்யுத் உங்களை மேற்பரிசோதனைக்காக எங்கிட்டே அனுப்பியிருக்காங்க”
“தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தால்..” பாடினான் பேஷன்ட்.
“நல்லாருக்கு. அந்தக்காலத்து சினிமா பாட்டா?” தொடர்ந்தான் குரு. “நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்னு நம்பறேன். உங்க மனசிலிருக்குறதை தைரியமா சொல்லுங்க.. என் கிட்டே சொல்லுற எதுவும் உங்களுக்கு எதிரா கோர்ட்டுலயோ பொதுவிலயோ சாட்சியமா பயன்படாது. தைரியமா எதுவானாலும் சொல்லுங்க”
“தைரியமா எதுவானாலும் கேளுங்க” என்றான் பேஷன்ட். “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே..” பாடினான்.
“மிஸ்டர் கொலகாரன்… போன வெள்ளிக்கிழமை மட்டும் அறுபது செல்போனை உடைச்சிருக்கீங்க, முப்பது டிவி உடைச்சிருக்கீங்க, நூறு லேப்டாப்களை அடிச்சு நொறுக்கியிருக்கீங்க.. பதினேழு எக்ஸ்பாக்ஸ்.. முப்பது ப்லேஸ்டேஷன்.. இருநூறு ஹெட்செட்டைப் பிடுங்கி எறிஞ்சிருக்கீங்க..”
“சும்மாவா என்னைக் கொலகாரன்னு சொல்றாங்க?”
“செல்போன் மேலே உங்களுக்கு ஏன் வெறுப்பு? நீங்க போன் உபயோகிச்சிருக்கீங்க இல்லையா?””
“இருக்கேன்., போன் எதுக்கு? ஒரு அவசரத்துக்கு பேச. நேர்ல பேச முடியாதப்பவும் ரொம்ப தொலைவுல இருக்குறவங்க கூட அப்பப்ப இருக்கியா போயிட்டியானு விசாரிச்சுப் பேச. இப்ப பாருங்க.. யாரும் நேர்ல பேசிக்குறதே இல்லே.. மாடியிலிருந்து என் பையன் டெக்ஸ்ட் பண்ணுறான் “சாப்பாடு ரெடியா”னு கேட்டு. வந்து சாப்பிட்டதும் ரூமுக்கு ஓடி விடியோ விளையாடுறான். ஹெட்செட் மாட்டிக்கிட்டா எதுவுமே காதுல விழாது.. அப்புறம் வாட்சப் யூட்யூப்.. இப்படியே போகுது அவன் வாழ்க்கை.. வெளியில எத்தனை மரங்கள்.. எத்தனை குருவிகள்.. எல்லாம் காணாம போச்சு.. இவங்க செல்போன்ல வாழுறதுக்காக இயற்கை தினம் சாகுதய்யா…”
பார்வை விலக்காமல் குரு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். பேஷன்ட் தன்னை மறந்துப் பேசிக்கொண்டிருந்தான்.
“என் மனைவியைப் பாருங்க.. அந்த நாள்ல எங்கம்மா பாட்டி எல்லாம் சமையல் செய்து அன்போட குழந்தை கணவருக்குப் பரிமாறி சாப்பிடுறதைப் பார்த்து சந்தோஷப்படுவாங்க.. எங்க கூட விளையாடுவாங்க.. சாப்பிடுறப்ப கலகலப்பா இருக்கும். கதை பேசுவோம்.. வம்படிப்போம்.. இப்ப பாருங்க.. யாரும் ஒண்ணா சாப்பிடுறதே இல்லை.. என் மனைவி பசங்களோட சாப்பிட்டு நினைவேயில்லை.. பாதி நேரம் ஆனந்த பவன் கோணங்கி பவன்லந்து டேக் அவுட், ஸ்விக்கி பக்கினு யாரோ டிலிவரி பண்றாங்க.. அரிசி கூட வக்கறதில்லே பல நேரம்.. வாட்சப் ஃபேஸ்புக் ப்லாக்னு கலாய்ப்பா.. இல்லின்னா டிவி சீரியல்.. குடும்ப உணர்வே யாருக்கும் இல்லாமப் போனதுக்கு இந்தக் கருவிகளும் எந்திரங்களும் தானே காரணம்..”
“நீங்க சொல்றது ஒரு விதத்துல உண்மைனாலும் நாகரீகம் வளர்ச்சி இதெல்லாம் நமக்கு பல வசதிகளைக் கொடுக்குது இல்லையா மிஸ்டர் கொலகாரன்? இப்ப பாருங்க.. இணையம் வந்ததுலந்து நம்ம சமூக உணர்வுகள் எவ்வளவு விரிஞ்சிருக்கு? தொழில் நுட்பத்தினால எத்தனை முன்னேற்றங்கள். ஃபேஸ்புக் வாட்சப் வழியா புரட்சியெல்லாம் நடக்குதே? ஊழல் மந்திரிங்க மாட்டுறாங்க.. மதுரை மாணவர் அமெரிக்க எம்ஐடியில் இங்கிருந்தே படிக்க முடியுதே..” என்றான் குரு.
“ஆ.. என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாடினான் பேஷன்ட். “ஐயா.. முன்னாலயும் படிச்சிட்டுத்தான் இருந்தாங்க. அப்ப இல்லாத மேதைங்களா? போஸ், சிவிராமன், தாகூர், ராஜகோபாலாச்சாரி, பாரதி, அம்பேத்கர், காந்தி.. இவங்கள்ளாம் என்ன பாமரங்களா? செல்போனும் டிவியும் ஐபேடும் இணையமும் இல்லாம இவங்க புரட்சி செய்யலியா? புதுமை செய்யலியா? தொழில் நுட்பத்துக்கு என்ன விலை கொடுக்குறோம்னு யாருக்குமே தெரிய மாட்டேங்குதே..”
“அதுனால இதையெல்லாம் போட்டு உடைக்குறது சரினு நினைக்கறீங்களா?”
“தெரியாது. ஆனா அந்த அளவுக்கு எந்திரங்கள் புழக்கத்தில் இருக்காதே? அதான்..”
“இதனால எத்தனை சேதம்னு உங்களுக்குப் புரியுதா? அதுவுமில்லாம நீங்க உடைச்சிருக்குற பொருட்கள் பெரும்பாலும் அடுத்தவங்களுக்குச் சொந்தமானது. இது குற்றம்னு உங்களுக்குத் தோணலியா?”
“கொன்றவன் கண்ணன்.. கொல்பவன் கண்ணன்..” பாடினான் பேஷன்ட். “எது சேதம் டாக்டர்? இன்னிக்கு மகன் மனைவி நட்பு என்னும் அத்தனை உணர்வுகளும் மின்னணுவில் சிக்கிச் சின்னாபின்னமாகுதே அதானே சேதம்? பசுமை வரண்டு பில்டிங்கா வளர்ந்திருக்கும் சிமென்ட் காடு.. இதுவா வளர்ச்சி? யாராவது முன்னோடியா வரணும் இல்லையா? நான் தொடங்கி வைக்கிறேன் அவ்வளவு தான்.. பாருங்க.. இன்னும் ஒரு மாசத்துல ஆறு மாசத்துல வருசத்துல எத்தனை பேர் என்னைப் போல வராங்கனு பாருங்க.. இது ஒரு இயக்கம். இந்த எந்திர மோகம் அழியும் வரை விடமாட்டோம். உலகம் முழுதும் எங்க இயக்கம் பரவும். வீடு வீடா வருவோம். கட்டிடம் கட்டிடமா தேடுவோம்.. மனித நேயம் மறுபடி மலரும் வரை எந்திரங்களைத் தேடி அழிப்போம்..”
“மிஸ்டர் கொலகாரன்..” கால் சாக்ஸிலிருந்த ரேடியோ பித்தானை அழுத்தினான் குரு. “உங்களுக்கு ஓய்வு தேவை. அதுக்கு மருந்து தருகிறேன்”
“எல்லாத்துக்கும் மருந்து மாத்திரை. இயற்கையை நேசிச்சப்ப இதெல்லாம் தேவையே இல்லாம இருந்துச்சே? தூங்க மாத்திரை.. விழிக்க மாத்திரை.. யாருக்கு வியாதி டாக்டர்? உங்களுக்கா எனக்கா? என்ன வேடிக்கை உலகம்யா இது? எந்திரங்கள் நம்மை எந்திரங்களாக்கிடுச்சே.. எழுந்திருங்க டாக்டர்.. எப்ப விழிக்கப் போறீங்க?” என்று சட்டென்று குருவின் தோள்களைக் குலுக்கிக் கையிலிருந்த ஐவாச்சை அவிழ்க்கப் போனான். “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”
அதற்குள் உதவியாட்கள் வந்து பேஷன்டைக் கட்டுப்படுத்தி இழுத்துப் போனார்கள். சற்றே கலங்கியிருந்த குரு ஆயாசத்துடன் வெளியேறினான். உதவியாளரை அழைத்து, “நான் வீட்டுக்குப் போறேன். என் மிச்ச பேஷன்ட்களை இன்னொரு நாள் வரச்சொல்லுங்க”.
அலுவலகத்திலிருந்து வெளியேறி மூலைக்கு நடந்தான். கீழிறங்கிய நகர்படியில் பிறருடன் சேர்ந்து மூன்று மாடிகள் இறங்கி நடந்தான். பார்க்கிங் கராஜ் வந்ததும் கார்ச்சாவியின் பித்தானை அழுத்தினான். ஏழாம் வரிசையில் இருந்த கார் மின்னி பீப் என்றது. எஞ்சின் தானே விழித்தெழுந்து தயாரானது. ஏசியை இயக்கியது.
        வீடு வந்த போது ஆறு மணி. காரை நிறுத்திவிட்டு பதினைந்தாவது மாடி ப்ளாட்டிற்கு விரைந்தான். ஐவாச்சின் ப்லூடூத் இணைப்பில் உந்தப்பட்டுத் திறந்த துடிப்பூட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான். சலனமறிந்த அறை விளக்குகள் தானாக எறிந்தன. மேலே மாட்டியிருந்த சான்டலியர் துடிவிளக்கு இள நீலத்தில் ஒளிர்ந்தது. விளக்குள் பொருந்தியிருந்த ஒலிபெருக்கி ஐவாச்சுடன் தானாகவே ப்லூடூத்தில் இணைந்து கூகில் டிரைவிலிருந்து பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.
ஐவாச்சின் செயலி ‘900 காலொரி’ எனும் வரை யோகா ட்ரெட்மில் வெயிட்ஸ் என்று பயிற்சி செய்தான் குரு. குளியலறைக்குள் நுழைந்தான். சலனமறிந்த குளியலறை விளக்குகள் தானாக எரியத் தொடங்கின. மின்சாரத்தில் இயங்கிய பல்விளக்கியில் அவசரமாகச் சுத்தம் செய்துகொண்டான். முன்பதிவிலிருந்த கணக்கி இரண்டு நொடிகள் தயங்கி இயங்க, தானாக வெளிவந்த மிதமான சுடுநீர்ச்சாறலில் குளித்தான். வெளியே வந்து உடையணிந்து சமையலறைக் குளிர்பெட்டியிலிருந்து கின்வா பீன்ஸ் புலவ் எடுத்து மைக்ரோவேவில் சுடவைத்தான். ப்ரொடீன் ஷேக் ஒன்றை எடுத்துக் கோப்பையில் ஊற்றினான். சாப்பிட்டபின் ஐவாச்சின் ஹெல்த் செயலியைத் தட்டி 462 காலொரி என்றான்.
வரவேற்பறையின் சொகுசுத் துடி நாற்காலியில் சாய்ந்தான். மசாஜுக்கான பித்தான்களைத் தட்டினான். அரை மணி போல் சாய்ந்து டிவியில் சானல் புரட்டினான். மனைவியிடமிருந்து வாட்ஸப் செய்தி பார்த்தான். அம்மாவைக் கூகில் டுவோவில் கூப்பிட்டுப் பேசினான்.
ஒன்பது மணி. ஐவாச் “உறக்க நேரம்” என்றது. புதிதாக அறிமுகமான உப்பு கலந்த டூத்பேஸ்டில் மறுபடி பல்விளக்கி, புதிதாக அறிமுமான வேம்பும் கிராம்பும் கலந்த மவுத்வாஷில் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டான். படுக்கையில் விழுந்தான்.
அறை விளக்குகள் தாமாக அணைந்தன. ஐவாச் ப்லூடூத் இணைப்பில் படுக்கை தலைப்பக்க ஸ்பீக்கர்களில் இதமான மெல்லிசை ஒலிக்கத் தொடங்கியது. குருவுக்கு ஏனோ மாலையின் நினைவுகள் மீண்டன. “என்னோட வந்துருங்க டாக்டர்.. என் இயக்கத்துல சேர்ந்துடுங்க.. நான் உங்களைக் குணப்படுத்துறேன்..”. புரண்டு படுத்தான்.
குறிப்பு [-]
இக்கதையின் கரு, ரே ப்ரேட்பரி எழுதி 1953ல் வெளியான 'The Murderer' எனும் சிறுகதை. அசை போட்டுத் தமிழில் தழுவியதில் சில ஆக்க உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.
இன்னும் சில ப்ரேட்பரி கதைகள், என் எழுத்தில்:
ஆஸ்மா கிணறு | (The one who waits)
சிவப்பு வட்டம் | (The last night of the world)
பரணறையில் நன்னாரி மணம் | (A scent of sarasparilla)
மனதிற்கினிய மேரி டீச்சர் | (A story of love)
மகிழ்ச்சி எந்திரம் | (The happiness machine)
2017/07/10
பாத்திரம்
        “என்னிடம் பணம் இல்லை” என்று அன்றைக்கு மட்டும் பத்தாவது முறையாகச் சொன்னாள் லிசா.
“என்னம்மா இது.. அடுத்த வருசம் நான் காலேஜ் போக வேணாமா? ஸேட் பயிற்சிக்குத் தானே கேக்குறேன்? உன் புருஷன் டானி கிட்டே வாங்கிக் கொடேன்?” என்றாள் கேதரின்.
டானி லிசாவின் இரண்டாவது கணவன் என்பதாலும், வரும் ஆகஸ்டில் தான் பதினெட்டு வயதைத் தொடும் காரணத்தாலும் டானியை அப்பா என்றழைக்க மறுத்திருந்தாள் கேதரின். மேலும் லிசாவின் திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாததால் டானியுடன் அதிகமாகப் பழகவும் இல்லை. “ஏம்மா.. உன் புருஷன் டானி பணம் தரமாட்டானா? கடனா வாங்கித்தரியா?”
லிசா ஏற்கனவே டானியைக் கேட்டிருந்தாள். கேதரினைப் பற்றிய அத்தனை விவரங்களையும் அறிந்த டானி பணம் தர மறுத்துவிட்டான். “லிசா.. இதப்பாரு.. உன் பெண் கேட் படிக்குறதுக்காக பணம் கேக்கலே.. அவ காதலன் ப்ரையனுடன் பிறந்த நாள் கூத்தடிக்கக் கேக்குறா.. ஏற்கனவே இந்த எட்டு மாசத்துல ரெண்டு தடவை அப்பானு கையெழுத்து போட்டு அவளையும் ப்ரையனையும் ஜாமின்ல எடுத்திருக்கேன்.. இனி அவ பாடு.. அடுத்த முறை ஜாமினும் எடுக்க மாட்டேன்.. புத்தி சொல்லிவை.. பதினெட்டு வயசு கூட ஆவலே.. படிப்பு வரலேனா பர்கர்கிங்ல இறைச்சி புறட்டுலாம்ல? கூலியாவது கிடைக்கும்.. கவுரவத்தோட இருக்கலாமே? என்ன பொண்ணு வளத்திருக்கே?”.
டானி அத்துடன் நிற்கவில்லை. “லிசா.. உனக்கே இத்தனை கடன் இருக்குதுனு என் கிட்டே சொல்லாமலே கல்யாணம் கட்டியிருக்கே.. க்ரெடிட் கார்ட்ல எட்டாயிரம் கடன் வச்சிருக்கியே? இத நான் எப்படி கட்டுவேன்? உன் செலவையெல்லாம் பாக்குறப்ப ஏன் கல்யாணம் கட்டினோம்னு தோணிடுச்சு.. காசுக்குத்தான் என் பின்னாடி சுத்தி என்னை வளைச்சுப் போட்டியா? வேலைக்குப் போவியோ என்ன செய்வியோ நீயேதான் அடைக்கணும்.. எங்கிட்டே ஒரு டாலர் கூட எதிர்பார்க்காதே” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.
மகளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதாள் லிசா. “தினம் கலெக்சன் ஆசாமிங்க வராங்க கேட்.. இந்த சின்ன ஊர்ல எல்லாருக்கும் எல்லாம் தெரியுது இல்லே? காருக்குப் பணம் கட்டலேனு வந்த டீலர்காரன் நேத்து என்ன கேட்டான் தெரியுமா?” என்று கையைக் குவித்து வாயில் வைத்துக் காட்டினாள். “..செஞ்சா இந்த மாசம் தவணைப்பணம் கட்டுறதா சொன்னான்”. மறுபடி அழுதாள்.
“ஏம்மா.. டானிக்கு இன்சூரன்சு இருக்குதுல்ல?” என்றாள் கேட் நிதானமாக.
“ப்ரை.. எனக்காக இதை நீ செய்தே ஆவணும்” என்றாள் கேட்.
“என்ன பேபி இது.. உங்கப்பனைக் கொலை செய்யச் சொல்றியே?” அதிராமல் கேட்டான் ப்ரையன்.
“டானி எங்கப்பன் இல்லே, இடியட்! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே” சட்டென்று எழுந்த கேதரின் தணிந்து, “என் அம்மா நிறைய கடன்ல இருக்கு.. எனக்கும் பணம் வேணும்.. எங்கம்மா கிட்டே எல்லாம் பேசிட்டேன்..”
ப்ரையன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கேதரின் தொடர்ந்தாள். “டானிக்கு இருநூறாயிரம் இன்சூரன்சு இருக்கு.. அவன் செத்தா எங்கம்மாவுக்கு வரும். இருவத்தஞ்சாயிரம் எங்கம்மாவுக்கு, மிச்சம் எல்லாம் நமக்கு.. எங்கம்மா உடனே ஒத்துகிட்டா. அவளுக்கென்ன.. பணம் கிடைக்குது இல்லே? டானி போனா வேறே ஜானி கிடைப்பான்”. அவன் முழங்காலருகே குனிந்தாள். “கொஞ்சம் யோசிச்சுப் பாரு ப்ரை.. நாம இங்கிருந்து ஓடிறலாம்.. உனக்கும் கேனடா ஓடிறனும்னு ஆசை.. கைல பணத்தோடு ஓடிறலாம்.. ஒன் செவன்டி பை தௌ.. உனக்கு எழுவத்தஞ்சு.. எனக்கு நூறு.. என்ன சொல்றே?”
ப்ரையன் அசையாமல் “ரொம்ப ரிஸ்க் கேட்” என்றான்.
“உன்னால முடியும் ப்ரை.. லுக் அட் தி மனி..” ப்ரையன் கன்னத்தைத் தொட்ட கேதரின் “இதப் பாரு நீ ஒத்துழைச்சா நானும் ஒத்துழைப்பேன்” என்றாள்.
“என்ன சொல்றே?”
அவன் கைகளை இழுத்த கேதரின் சட்டென்று தரையில் குனிந்து நின்று தன் இடுப்பை இரண்டு கை விரல்களாலும் தட்டினாள்.
சிரித்தபடி எழுந்த பரையன் “ஸ்டுபிட்.. கொலை செய்வது பெரிசில்லே.. நம்ம மேலே பழி வராம தப்பிக்கணும்ல?” என்று கேதரினை இழுத்துத் தன் மடி மேல் அமர்த்தினான். “அடையாளம் தெரியாத துப்பாக்கி, நம்ம மேலே பழி வராதபடி சாட்சிகள், டானியைக் கூட்டி வர தூது.. எல்லாம் பத்துக்கு மேலே செலவாகுமே.. பணம் யார் கிட்டே இருக்கு?”
“என்னை நம்பி நீ செலவு செய்.. வேணுமுன்னா என் பங்குலந்து பத்து எடுத்துக்க.. இல்லின்னா எங்கம்மாவுக்கு பதினஞ்சு கொடுத்தா போதும்”
“நோ.. இந்த நம்பிக்கை விவகாரம் எல்லாம் வேண்டாம்.. இன்சூரன்சு பணத்துல எனக்கு நூறு.. உனக்கு எழுவத்தஞ்சு.. செலவெல்லாம் நான் பாத்துக்குறேன் சரியா?” என்றான் ப்ரையன்.
சேம்பர் சந்தையின் கழிவறையில் கழுத்திலும் இடுப்பிலும் சுடு காயங்களுடன் கிடந்ததாகப் போலீஸ் சொன்னதும் துடித்துப் போனாள் லிசா. அலறினாள். கதறினாள்.
விவரங்கள் கேட்டுக்கொண்ட இன்சூரன்சு அலுவலக கண்ணாடி ஆசாமி, “கொஞ்சம் இருங்க லிசா” என்று கணினியில் தட்டினான். “இனசூரன்சு பணம்.. அகால மரண போனஸ் சேர்த்து இருநூத்துப்பத்தாயிரம்.. பட்டுவாடா ஆயிருச்சே.. போன வாரம்.. முப்பதாம் தேதி..” என்றான் மெள்ள.
“இல்லியே.. எனக்கு அறிவிப்பு கூட வரலியே.. பணம் கட்டாயம் வரலே.. மறுபடி பாருங்க" பதைத்தாள் லிசா.
“இருங்க” கண்ணாடி ஆசாமி இம்முறை நிறைய கணினி தட்டினான். “ஆ.. விளங்கிருச்சு” என்றான். “பாருங்க.. டானி இன்சூரன்சு பாலிசில உங்க பேரை சேர்க்கவே இல்லே.. அவரு உங்க பேர்ல உரிமையை மாத்தாம விட்டதால பழைய மனைவியே இன்சூரன்சு பணத்துக்கு… அவங்களுக்குத்தான் பணம் போயிருக்கு.. இதப் பாருங்க... கொலராடோ பேங்க் கணக்குல பணம் போயிருக்கு பாருங்க…”
அசல் லிசா கேதரின் ப்ரையன் டானி கதை இன்னும் விவகாரமானது. விரும்பினால் ‘க்லீவ்லன்ட் யுலோமா’ என்று இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)