2016/05/03

பல்கொட்டிப் பேய்        முப்பது வருட கொசுவர்த்தி எரிந்து தீர.. தற்சமயத்துக்கு வந்தேன்.

பல்கொட்டி இன்னும் இஸ்திரிப் பெட்டி மேலிருந்து தலைகீழாக என்னைக் கேமராப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. விளக்கை இயக்க எண்ணித் தவிர்த்தேன். குடும்பம், வட்டம் பற்றிச் சொல்லவில்லை.. பொதுவாகச் சொல்கிறேன்.. மூப்பை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் நான் பேய் பிசாசு பற்றி இத்தனை வருட அனுபவத்தில் உணர்ந்தது ஒன்று உண்டு என்றால் அது பேய் பிசாசு அறைக்குள் இருப்பது தெரிந்தால் உடனே விளைக்கை ஏற்றகூடாது என்பதே. விளக்கு வெளிச்சத்தில் நம் கண்ணுக்குப் பேய் தெரியாதே தவிர, பேய்க்கு நம்மை நன்றாகத் தெரியும். எதற்கு வீணாக பேய்க்கு உதவ வேண்டும்?

என் கூட்டாளிகள் பற்றி நினைத்தேன். பிரம்மபுத்ரா நதிக்கரை பக்கம் ஏதோ ஒரு இடத்தில் புத்தபிட்சுக்களுடன் இருப்பதாக ஒரு முறை கேள்விப்பட்டதைத் தவிர ரகுவைப் பற்றி அதிகம் தெரியாது. அதனால் அவனைக் கூப்பிட முடியாது. ரமேஷ் சில வருடங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்ததாகவும் அவனை மாம்பலம் அகோபில மடம் பக்கம் சிலர் பேயாகப் பார்த்ததாகவும் கேள்விப்பட்டேன். ஒருவேளை அவன் பல்கொட்டியாக இருந்து இந்த சமயத்தில் நட்புக்காக உதவலாம் என்றாலும் எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் என்ன செய்ய? அவனையும் தவிர்த்தேன். ஆக, இருப்பது அங்கதன் மட்டும். அவனைத்தான் கூப்பிட வேண்டும்.

ஸ்ரீராம் இப்போது மைசூர் பக்கம் அயோக்கியப் பரதேசி மால்யாவின் பழைய பீர் கம்பெனி ஒன்றை வாங்கி சாராய விருத்தியில் இறங்கி அமோகமாகக் கொழிக்கிறான். அதைத் தவிர உபரி வியாபாரங்கள் செய்வதாகவும் சொல்லியிருக்கிறான். இப்ப கூப்பிட்டா போதையில் இருப்பானோ? இருந்தாலும் போனை எடுப்பானா தெரியாதே? நான் மும்பை வந்ததே அவனுக்குத் தெரியாது.. இப்போ பல்கொட்டி விவரத்தை வேறே சொல்லணுமா? சொல்லித்தான் ஆகவேண்டும்.

பல்கொட்டியைப் பார்த்தேன். திறந்த வாயில் குட்டித்தலை இல்லாமல் பல்கொட்டி களையே போய்விட்டது போல் தோன்றியது. என்ன செய்வது? பேச்சு கொடுக்கலாமா? 'என்ன சௌக்கியமா? முப்பது வருஷமிருக்குமா பாத்து?' என்று ஏதாவது கேட்டு வைப்போமா? நினைக்கும் போது பல்கொட்டியின் கை பேசியது. அதாவது கைவாய். "வந்திருக்கேன்.. தலையை வாங்க வந்திருக்கேன்.." என்றது.

'என் தலையையா குட்டித் தலையையா?' என்று கேட்கத் தீர்மானித்து தவிர்த்தேன், குட்டித் தலையை வாங்க வந்திருந்தால் .. அப்புறம் என் தலையையும் சேர்த்துக் கேட்டு.. நாமாக சூன்யம் வைத்துக் கொள்வானேன்?

"ஒ..ஒ.. ஒரு போன் பண்ணிக்கட்டுமா?" என்றேன்.

ஸ்ரீராமை அழைத்தேன். ஐந்தாவது தடவை கூப்பிட்ட போது போனை எடுத்து "எவண்டா அது?" என்றான். நான் என்று சொல்லியும் நம்பவில்லை. "பொறம்போக்கு நாயே.. சேல்ஸ் கால் பண்றதுக்கு வரைமுறை கிடையாதா? குடும்பத்துல ஒருத்தன்னு சொல்லிட்டு ராத்திரி மூணு மணிக்கு போன் பண்றியே? எருமைக்குப் பொறந்தவனே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா? போனை வைடா பன்னி". பயந்து வைத்து விட்டேன். எனக்கும் சேல்ஸ் தான் தொழில் என்பதால் பழக்க தோஷம் வேறே.

மறுபடி அழைத்தேன். அவன் அன்பைப் பொழியுமுன் தடுத்து நிலைமையைச் சொன்னேன். சில நிமிடங்கள் மௌனம் காத்துவிட்டு சிரித்தான். "கரெக்டா வந்துடுச்சேடா! நியாயமா பாத்தா நீயும் ரகுவும் தான் கவலைப் படணும். எனக்கென்ன.. பல்கொட்டி முடியாச்சுனு இருக்கலாம்.. ஏற்கனவே உங்களுக்கு உதவி பண்ணி உயிர் பிச்சை போட்டாச்சு..". என் வாழ்நாளில் ஸ்ரீராம் இதை எழுநூற்று நாற்பத்து இரண்டாவது முறையாகச் சொன்னாலும் முதல் தடவை போல் ஒலித்தது. அது ஸ்ரீராம் சுபாவம். தொடர்ந்தான். "கவலைப்படாதே.. எல்லாமே டீல் மேகிங்ல இருக்கு.. குட்டித்தலை உன்கிட்ட இல்லே.. கொண்டு வந்து தர பத்து வாரம் ஆகும்னு சொல்லு.. அது வரைக்கும் சும்மா வந்து தொந்தரவு தரக் கூடாதுன்னு சொல்லு."

"இப்பவே வேணும்" என்ற கர்ஜனை கேட்டு போனைத் தவற விட்டேன்.

பல்கொட்டியின் கைவாய் நீ...ண்டு என் காதருகே வந்து கர்ஜித்தது. "இப்பவே.. வேணும்னு சொல்லு ". அந்தரத்தில் தொங்கிய அதன் மற்ற கை, கீழே கிடந்த போனை எடுத்துக் கொடுத்தது.

ஸ்ரீராம் போனில் அதட்டியது கேட்டது. "ஏய்.. பல்கொட்டிப் புடுங்கி.. உனக்கு தில் இருந்தா எங்கிட்ட வா. எங்கண்ணனை விட்டுரு. நான்தானே உன் பல்தலையைப் பிடுங்கினேன்? நியாயமா பார்த்தா நீதான் எனக்கு நஷ்ட ஈடு தரணும். எத்தனை யுகமா பல் தேய்க்காம நாறிக் கிடந்த பல்லைத் தொட்டு என் கையெல்லாம் இன்னும் நாறுது.. ரொம்ப மிரட்டுனா தலை கிடைக்கவே கிடைக்காது.. தலையில்லாத வாயா நீ சுத்திட்டிருக்க வேண்டியது தான்.. தெரிதா?". போனை வைத்து விட்டான்.

எனக்கு சங்கடமானது. பொறுமையா இருந்த பேயை உசுப்பி விட்டானே லட்சுமணன்? இப்ப நான் இல்லே மாட்டிக்கணும்? பல்கொட்டியைப் பார்த்து வழிந்தேன்.. "சின்னப் பையன் தெரியாம சொல்லிட்டான்.. தூக்கக் கலக்கம் இல்லியா? ஹிஹி.. வந்து.. இந்த தலை இருக்கே தலை.."

அடுத்த கணம் பல்கொட்டி செய்ததை நான் எந்தப் பிறவியிலும் எதிர்பார்த்திருக்க முடியாது.

10◄ ►12

18 கருத்துகள்:

 1. //பொறுமையா இருந்த பேயை உசுப்பி விட்டானே லட்சுமணன்? //

  அதானே !

  //அடுத்த கணம் பல்கொட்டி செய்ததை நான் எந்தப் பிறவியிலும் எதிர்பார்த்திருக்க முடியாது.//

  அப்படி அது என்னதான் செய்ததோ .... ஆவலுடன் ! :)

  பதிலளிநீக்கு
 2. அடக் கடவுளே .இதுக்கு வயசாகாதா. அப்படியே மேலோகம் போக வேண்டியதுதானே.

  பதிலளிநீக்கு
 3. அத்தனை பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.சுவாரசியம்.பல்கொட்டி பேரே வித்தியாசம்.சுந்தர் சி படித்தால் இன்னொரு பேய்ப்படம் எடுத்துவிடுவார்.

  பதிலளிநீக்கு
 4. தடாலென்று காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்ததா. ஏன் என்றால் மிஞ்சினால் கெஞ்சத்தானே வேண்டும்

  பதிலளிநீக்கு
 5. இன்றிரவு எப்படியும் உறங்கப் போவதில்லை. பல்கொட்டிப் பேயைப் பார்த்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. சு.தா. சொன்னார் நீங்க பல்கொட்டியோட பேசறதா! இங்கே வந்தா பயந்து நடுங்கிட்டில்லை இருக்கீங்க! என்ன போங்க, இதுக்கு உங்க தம்பி ஶ்ரீராம் பரவாயில்லை! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. he is not nadunging. He is only negotiating and bargaining. may be he is purusading palkotti Pey to visit Srirangam and worship the Lord to mitigate his past life evils, so that he may get back its manushya roopam once again.
   There is a clear way out. Padukaa Sahasram or Saranagathi Gadhyam (one of the three gadhya thrayams) may show the way to Palkotti pey.

   subbu thatha.

   நீக்கு
  2. ஹாஹா, அதுக்கப்புறமா என்ன ஆச்சுனு சொல்லவே இல்லையே! அப்பாதுரை மறுபடி காணாமப் போயிட்டாரா? :)

   நீக்கு
  3. அப்பாதுரை சார் எங்கேயும் போகல்லை.
   பல் கொட்டிப் பேய் பார்த்து பயந்து போன அத்தனை பிரண்ட்ஸ் க்கும்
   தாயத்து கட்டி விட வந்துண்டு இருக்கார்.
   அவர் மட்டும் தனியா வல்லே..
   கூட யாருன்னு கேட்கறீங்களா ?

   நீங்களே பாத்துக்கோங்க..கதவைத் திறந்தா தெரியத்தானே போகுது.

   சுப்பு தாத்தா.

   நீக்கு
 7. முழுவதும் படித்து விடப்போகிறேன். பேய் கதையை அடுத்து என்ன என்று படிப்பதை விட மொத்தமாய் படிக்க வேண்டும். முன்பு சிறுவயதில் படித்த மாதிரி. கதை சுவாரசியத்தில் அம்மா கூப்பிட்டாலும் கேட்காது, வேறு எந்த சத்தமும் காதில் விழாது.

  பதிலளிநீக்கு
 8. அந்த ஸ்ரீராம்குதான் எவ்வளவு வாய்!

  பதிலளிநீக்கு
 9. 30 வருஷம் கழிச்சு மறுபடியும் பாக்குற பல்கொட்டி பேயுடனான டீலிங்க்ல நல்ல மாற்றம் தெரியுதே..(பயம் சுத்தமா கொறஞ்சிருக்கு) இதற்கு காரணம் வயதா...? இல்ல மணவாழ்க்கையில் பெற்ற அனுபவமா...?

  பதிலளிநீக்கு
 10. தினம்தினம் சஷ்டிகவசம் சொல்லவேணாமேன்னு ஒரு மூச்சில படிச்சேன் துர... என்னன்னு சொல்வேன்.
  சோத்துபருக்கை எல்லாம்கூட பல்லுபல்லா தெரியுதே. டெண்சனாவுது பாஸு. அடிக்கிற எனக்கே இப்பிடி நடுக்குதுன்னா யோசிச்சு எழுதற உங்களுக்கு எப்பிடி இருக்கும்?

  வேணா ஒரு ஜோக்கு போட்டுக்கவா?

  அண்மையிலே ஒரு பேய்படம் வந்தது. 'நான் ஒரு பேய்'ன்னு பேரு. ஒரு வூட்டுக்காரம்மா அதா பாக்கணும்னு ரொம்ப ஆசப்பட்டுச்சி.

  மனைவி: ஏங்க? நான் ஒரு பேய் சினிமா போகலாமாங்க?
  கணவன்: சரி! எந்த சினிமாவுக்கு போகலாம்நு சொல்லு.

  கொஞ்ச நேரம் முன்னே என் ஐபாடுலேருந்து கொஞ்சம் நீளமா ஒரு பின்னூட்டம் போட்டேன். போடுறதுக்கு தயாரா இருக்கிறப்போ சார்ஜ் காலியாகி மாயமாப் போச்சு.

  இப்பிடி அனாசாரமா கதைகள் எழுதாம குறளரசன் சுப்புத்தாத்தா கிட்ட ஒரு டீல் போட்டு குறளில் மிக்கு இருப்பது அறமா? இன்பமா?ன்னு ஒரு சீரீஸ் போடலாம் தானே?
  '

  பதிலளிநீக்கு
 11. //சுப்புத்தாத்தா கிட்ட ஒரு டீல் போட்டு குறளில் மிக்கு இருப்பது அறமா? இன்பமா?ன்னு ஒரு சீரீஸ் ///போடலாம் தானே? //


  "மோகன்ஜி , உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்றேன்.
  அந்த சுப்புக்கு இந்த பேயே பெட்டர் "

  " ஏன் துரை சார் ! அப்படி சொல்றீங்க?"

  "அதுனாச்சும் ராத்திரி மட்டும் தான் வருது"

  " அப்ப ..இவரு....?"""

  " எப்ப வருவார்னே தெரியலை . வந்தால் எப்ப போவார்னும் தெரியல்லையே"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
   அலகையா வைக்கப் படும்
   (பேய் வரும் குறள்)
   அலகைன்னா நம்ம ப.கொ.பே. தாங்க!

   நீக்கு
 12. //இப்பிடி அனாசாரமா .....//

  ஆரம்பிச்சுட்டான்யா...ஆரம்பிச்சுட்டான்யா...

  பதிலளிநீக்கு
 13. பல்கொட்டி என்ன செய்ததுனு மண்டையைப் பிச்சுக்கறேன். அப்பாதுரை எங்கே போனார்? பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு! :)

  பதிலளிநீக்கு