11◄
பல்கொட்டியைக் காணாது திகைத்தேன். காலருகே ஏதோ புசுபுசுவென்று உணர்ந்தேன். ஹோடல் ரூமில் ஏது மரவட்டை? ஒருவேளை பல்லியாக இருக்குமோ என்று அச்சத்தில் துள்ளினேன். துள்ளிய வேகத்தில் படுக்கையில் விழுந்தபோது கவனித்தேன். பல்கொட்டிப் பேய் நான் நின்றிருந்த இடத்தில் முழுதுமாக கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருந்தது. அரை நிமிடத்தில் இருநூறு நமஸ்காரம் செய்திருக்கும். “ஏய்.. என்ன இது.. கால்ல விழுந்திட்டிருக்கே? அதுவும் இத்தனை வேகமா?”
எழுந்து தரையில் உட்கார்ந்த பல்கொட்டி “என் தலைப்பல்லை நீ தான் எப்படியாவது மீட்டுக் குடுக்கணும்.. இந்த முப்பது வருஷமா நான் பட்ட கஷ்டம் ஒரு மனுசனுக்குக் கூட வரக்கூடாது.. அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்..” ஏறக்குறைய அழுதுவிட்டது. “என்னை இப்ப எந்தப் பேயும் மதிக்குறதில்லே.. காட்டேரிங்க கூட என்னைக் கண்டா வாய்ல கையப் பொத்திக்கிட்டு ஒதுங்கும்.. இப்ப பல்லிழந்த செல்லாப் பேயா அலையுறேன்…”
எனக்கே பாவமாகிவிட்டது. என்னதான் இருந்தாலும் முப்பது வருசத்துக்கு முந்தைய பழக்கம் இல்லையா? “பல்கொட்டி.." என்றேன் கருணை பொங்க. "இதப்பாரு.. அந்த தலைப்பல் யார் கிட்டே இருக்குனு கூடத் தெரியாதே? அந்த தணிகாசாலம் ஞாபகம் இருக்குதா? அந்தாளு எடுத்துட்டுப் போயிட்டாரு.”
“தெரியும்.. முப்பது வருசமா பாத்துட்டு இருக்கேன்ல? அம்மன் சிலைக்கு கீழே பூசை மேடையில பதிச்சு வச்சிருக்காரு”
“அப்ப எடுக்க வேண்டியது?”
“வாக்கு குடுத்திட்டேன் இல்லே? முப்பது வருசம் கழிச்சு வருவேன்னு. தொடமுடியாது”
“ஆமாம்.. பொல்லாத வாக்கு.. நீ எங்க ஊர் அரசியல்வாதிங்களைப் பாக்கலே?”
பல்கொட்டி நடுங்கியது. “ஐயோ.. அரசியல்வாதிங்களா.. இப்பல்லாம் கோழித்தலை காட்டேரிங்க கூட தமிழ்நாடுனா ஒரே ஓட்டமா ஓடுதுங்க.. நான் எம்மாத்திரம்?”
“அதென்ன கோழித்தலை காட்டேரி?”
“அந்தக் கதை இன்னொருக்கா சொல்றேன்.. ரத்தக்காட்டேரிக்கு மூத்த தலைமுறை… மின்னூறு மனுச வருசத்துக்கு ஒருக்கா எந்திரிக்கும்.. கண்ணு முளிச்ச எடமெல்லாம் காவுதான்.. அப்படித்தான் ஆறு மாசம் மின்னே சென்னைல மகாபலிபுரம் பக்கத்துல முளிச்சுக்கிச்சு.... சரி.. இனி ரத்த ரகளைதான்.. நாம இந்த சாக்குல தலைப்பல்லை ராவிக்குவம்னு நினைச்சு பின்னால போனா.. கோழித்தலை அலறி அடிச்சுனு ஓடுது.. என்னத்த சொல்ல..”
“ஏன்?”
“யாரு கண்டா என்னா நடக்குதோ தமிள்நாட்டுல.. கோழித்தலையே ஓடுறப்போ நாங்க என்ன சுத்திக்கிட்டா இருப்போம்? நாங்களும் மறைஞ்சுட்டோம். இப்பல்லாம் தமிழ்நாட்டுப் பக்கம் போவுறதுனாலே பேயுங்க பயப்படுதுங்க”
“அப்ப என்னதான் செய்யுறீங்க?”
“அந்தக் கொடுமையை ஏன் கேக்குற? வடநாட்டுல போய் முடி வெட்டுறோம்”
“களுத நீங்கதானா?” எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“எடுத்தவங்களே பல்லை வைக்கணும்.. உன் தம்பிக்குத்தான் அதிகாரம் இருக்குது.. பேய்ச் சாபம் உன் குடும்பத்துக்கு வேணாம்.. பல்லை எடுத்துக் குடுத்துறச் சொல்லு”
“இதப்பாரு பல்கொட்டி.. நானாச்சும் உனக்கு பயப்படுவேன்.. என் தம்பி ஸ்ரீராம் இப்ப பெரிய ஆளு.. கோளித்தலையே அவனுக்கு பயப்படும் வேணாப்பாரு.. நீ இன்னா ஜுஜுபி.. பேய்சாபம்னா பேயாட்டம் சிரிப்பான்.. உனக்கு இந்த ஜன்மத்துல பல் கிடைக்காது.. ஆமா, உனக்கு ஜென்மம் எல்லாம் உண்டா?”
பல்கொட்டி தலை குனிந்தது. “அப்பல்லாம் வெட்டு குத்து கொலை விபத்துனு அல்பாயுசா போயி பேயாவோம்.. இப்ப எல்லாம் மாறிடுச்சு.. அஞ்சாம்பு பெயிலு ப்ள்ஸ்டூ பெயிலு லவ் பெயிலு கடன் பாக்கி காலேஜுல இடம் இல்லே காவேரில தண்ணி இல்லே நாய்க்கு தலைவலி ஜல்லிக்கட்டு வெளாடலேனு எதுக்கெடுத்தாலும் திட்டம் போட்டு தூக்குல தொங்கிட்டு பேயா வந்து அலையுறாங்க.. பேஸ்புக்கு வாட்சப்புனு என்னென்னவோ தெரிஞ்சுகிட்டுவந்து கூத்தடிக்குதுங்க.. மிச்ச பேயுங்களும் அவங்களை கொண்டாடுதுங்க.. எங்க காலத்துல காட்டேரி கொள்ளிவாய் குட்டிசாத்தான் கொம்பேறினு பேரு வச்சுக்கிட்டோம்.. இப்ப தெர்மாகோல் பேய்னு ஒரு லேட்டஸ்டு வகை கேட்டிருக்கியா? தூங்குறப்ப மூச்சுக்காத்து வெளிய போவாம ஒரு தெர்மகோல் அட்டையை வச்சுக் கொல்லுமாம் குடாக்குங்க.. எல்லா முட்டாப் பேய்ங்களும் தெர்மகோல் அட்டையை கட்டிக்கிட்டு அலையுதுங்க. பேய்த்தொகை கணக்கு வேறே கூடிக்கிட்டே போவுது.. என்னிய மாதிரி பழம்பெரும் பேய்ங்களை யாரும் மதிக்குறதில்லே.. மனுசங்களும் மாறிட்டாங்க. சாமியும் பொய் பூதமும் பொய்யின்றாங்க.. அட பூதத்தையாவது நம்புவாங்கனு பார்த்தா..”
“சரி.. சரி புலம்பாதே.. இதப்பாரு.. எங்க நாலு பேர்ல ரகு போயிட்டான்.. ஒருவேளை அவன் உன்னாட்டம் பேயா இருந்தாலும் இருக்கலாம் பாத்துக்க.. ரமேஷ் பய எங்க இருக்கானு தெரியாது.. தேடிப்பாக்கணும்.. அதும் நீ திரும்பிட்டனு தெரிஞ்சா பேரை சுரேசுனு மாத்தி வச்சுக்கிட்டாலும் சொல்றதுக்கில்லே.. ஆக நானும் என் தம்பியும் தான்..”
“வர ஆடி அமாவாசைக்குள்ள நீங்க மூணு பேரும் கூட்டா வந்து தலைப்பல் சேக்கலினா பெரும் கேடு விளையும்”
“யாருக்கு உனக்கா? களுத பொறுமையா இரு.. எல்லாம் கிடைக்கும்.. சாபம் கீபம் கொடுத்துராத.. காலைல ரமேசு நம்பரத் தேடி போன் பண்ணுறேன்.. இப்ப அந்த ஓரமா போய் உக்காரு.. இல்லே வவ்வாலா தொங்கு” என்று படுத்தேன். பல்கொட்டிக்குப் பயப்படுவதா பரிதாபப்படுவதா என்ற குழப்பத்தில் தூங்கிவிட்டேன். ரமேஷ் என் கழுத்தை நெறிப்பதாகக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தேன்.
பல்கொட்டி மென்மையாகச் சிரித்துக் கொண்டிருந்தது. "நீ எனக்கு பயப்படாம போனினா கூட கனவுக்கு பயந்து ஆவணுமே? என் தலைப்பல் எடுத்துத் தரலின்னா உனக்கு தினம் இது போல கனவுதான்" என்றது.
11◄ ►13
அட கனவு தான் கண்டீங்க போல)))
பதிலளிநீக்குஅரசியல் கனவு போல இருக்கே பாஸ்)))
பதிலளிநீக்குஅது மட்டும் வெறும் கனவாக இருந்தா உடம்புக்கு நல்லுதுங்க..:-)
நீக்குதிரைப்பட நடிகர் வி.கே ராமசாமி போல் அடிக்கடி களுத வருதே வார்த்தைகளில்.
பதிலளிநீக்குபாருங்க... சூட்டோடு சூடா தொடரை முடிக்கலைனா, தொடர்ல வந்தவர்களுக்கும் வயசாகிடுது, கதை நடக்கிற காலமும் எங்கேயோ போயிடுது. நான்கூட கோழித்தலைதான் 11மாடி கட்டடம் படுத்ததுக்குக் காரணமோன்னு நினைச்சேன். தொடருங்கள்.
பதிலளிநீக்குஹாஹா... வட நாட்டில் முடி வெட்டுதா! :)
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பல்கொட்டி பேய்... இந்த தடவை கடைசி வரைக்கும் சொல்லிடுங்க! கேப் விடாம!
//“வாக்கு குடுத்திட்டேன் இல்லே? முப்பது வருசம் கழிச்சு வருவேன்னு. தொடமுடியாது”
பதிலளிநீக்கு“ஆமாம்.. பொல்லாத வாக்கு.. நீ எங்க ஊர் அரசியல்வாதிங்களைப் பாக்கலே?”//
அரசியல்வாதிகளை இப்படி பேய்களோடு ஒப்பிட்டால் எந்த தொண்டன்தான் தூக்குப்போட்டு சாகமாட்டான் பிறகு கயிறோடு பேயாக கனவில் வருவான்.
நண்பரே தங்களது பதிவு வெளியாவது எனக்கு தெரிவதில்லையே..... - கில்லர்ஜி
என்ன செய்ய?
நீக்கு(எங்கள் ப்லாக்ல சுட்டின பிறகு தான் எனக்கும் தெரியுது :-)
பல்கொட்டி பேய்... பேரு புதுசா இருக்கு
பதிலளிநீக்குபழம்பெரும் பேய்ங்க இது.
நீக்குஅது சரி, பல்கொட்டிப் பேய் திகில் பேயிலிருந்து எப்போ நகைச்சுவைக்கு மாறினது? பதிவு வந்ததே தெரியலை.
பதிலளிநீக்குதமிழ்நாட்டு அரசியல்லே புகுந்து பல்கொட்டியும் ஒரு கலக்குக் கலக்குதோ? அல்லது வட நாட்டில் முடி வெட்டறது உண்மைதானா? :) இன்னிக்குத் தொலைக்காட்சியிலே கூடக் காட்டினாங்களே!
பொதுவா பேய்க்கதை சிவாஜி கணேசன் படம் இரண்டுக்குமான ஒற்றுமை நகைச்சுவை தான். அவுரு நடிச்சா டமாசு. இதைப் படிச்சா டமாசு.
நீக்குபல்கொட்டி ஒரு வருசமாவே நகைப் பேய் தானே?
நீங்கள் synopsis தராததால் பழைய பதிவைத் தேடணும்
பதிலளிநீக்குசேர்த்துட்டா போச்சு.. நன்றி சார்.
நீக்குமுடிவெட்டறதும் இவங்கதானாமா! தமாசு!
பதிலளிநீக்கு