2011/10/24

மெல்லிசை நினைவுகள்

வெத்து வேலை


                சினிமா-12 | 2011/10/24 | மெல்லிசை நினைவுகள்
சில பாடல்களின் ஒளி/ஒலிக் குறைகளுக்கு மன்னிக்கவும்
     
    பிடித்தக் காதல் டூயட் தேர்வுகளை எழுதியனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி. (ஸ்ரீராம் கவனிக்க :)

(அறிந்திருந்தாலும்) நான் இதுவரை கேட்டிராத பாடல், 'இதய வானின் உதய நிலவே'. நம்பவே முடியவில்லை. வேதா இப்படி இசையமைத்திருக்கிறாரா? Rafiயின் சுகானி ராத்? குலாம் முகமது, நௌஷத் பாணியை நினைவுபடுத்தும் மெட்டும் இசையும் அற்புதம். இந்தப் பாடலின் இசை மிக மிக இனிமை. சுசீலா கொஞ்சுகிறார். நன்றி, ஸ்ரீராமின் உறவினருக்கு. (பாட்டுக்காக பார்த்திபன் கனவு படத்தையே இப்போது பார்த்தேன்).

'என்னப் பார்வை' - அருமையான இசையுடன் கூடிய காதல் டூயட். இந்தப் பாடலில் வரும் சேக்ஸபோன் பிட், குளுமை. ஜேசுதாசின் தூக்கக் கலக்கக் காதல் தொனிக்கு ஏற்ற மாதிரி காஞ்சனாவின் முகத்தில் காதல் ரசம் சொட்டுகிறது. பாடலின் இறுதியில் வரும் படகுக்கார் ஊர்வலம் பொருந்தவில்லை. அதுவும், 'ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்' வரிகளைக் காரோட்டம் அமுக்கிவிட்டது அநியாயம். எம்ஜிஆருக்குக் கிடைத்திருக்க வேண்டிய வரிகள்? பொதுவாக ஸ்ரீதரின் பாடல் படப்பிடிப்பு அருமையாக இருக்கும். இந்தப் பாடலை அப்படிச் சேர்த்துச்சொல்ல முடியவில்லை. அதே போல், தேன் தேன் என்று இனிமை சொட்டும் 'நிலவும் மலரும் பாடுதே' பாடலின் படப்பிடிப்பும் சுமார் சுமார்.

ரசமான இன்னொரு தூக்கக் கலக்கக் காதல் பாடகர் பிபிஸ்ரீ (அடிக்க வராதீங்க). 'போகப் போகத் தெரியும்' பாடலில் சுசீலாவின் கெஞ்சல் கொஞ்சல் புரட்டலுக்கு இடையே பிபிஸ்ரீ தாக்குப் பிடிக்கிறார் என்று சொல்ல வேண்டும். பாடலின் இடையில் வரும் குழல்-வயலின் துள்ளல் பிட் கேட்கையில் ஒன்றையொன்றுத் துரத்திச் செல்லும் கடல் அலைகள் போலவே இல்லை? கடல் அலைகளுக்கேற்ப விஜயாவின் மூவ்மென்டை அமைத்தது ரசிக்க முடிகிறது. 'பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்' - அசல் காதல் வரி. சுசீலா துணையுடன் விஜயா விளையாடுகிறார். இந்தப் பாடலும் 'குயிலாக நானிருந்தென்ன' பாடலும் ஒரே கடற்கரையில் எடுத்திருப்பது, சற்றுக் கவனித்தால் புரியும். மெரினாவோ, கோவளமோ, என்னவோ. 'குயிலாக' பாடலில் கும்மியடிக்கிறார்கள். நடுவே ஜெய்சங்கர் நடனமாடுகிறாரா அல்லது 'ரைட்டா கொய்ட்டா' விளையாடுகிறாரா தெரியவில்லை. ஜெய்சங்கர்-ராஜஸ்ரீ-இயக்குநர் காம்பினேஷனில் முத்தான பாடல் சித்திரவதைப்படுகிறது.

சித்திரவதை என்றதும், எம்ஜிஆருக்குக் கிடைத்திருக்க வேண்டிய இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது. 'மதன மாளிகையில்' பாடலும் இசையும், காதல் காதல் என்று அடித்துக் கொள்ள வைக்கும். படமாக்கம், கஷ்டம் கஷ்டம் என்று கதற வைக்கும். கதாநாயகி, சிவாஜியைப் பார்க்கும் பார்வையில் இருப்பது என்னவோ தெரியாது, நிச்சயம் காதல் இல்லை. 'மதன மாளிகையில்' அருமையான காதல் டூயட். டிஎம்எஸ்-சுசீலா எப்படிக் கொஞ்சுகிறார்கள்! காதல் பாட்டு என்றால் இவர்களை அடித்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். 'என் கேள்விக்கென்ன பதில்' பாட்டில் சொக்குப்பொடி தூவுவார்கள், கேளுங்கள்.

'இயற்கையென்னும் இளைய கன்னி' எஸ்பிபியின் முதல் தமிழ்ப்பாடல் என்றும், வெளிவந்தது அடிமைப்பெண் படப்பாடல் என்றும் சொல்வார்கள். சரியாகத் தெரியவில்லை. காதல் வரிகளை உணர்ந்து பாடியிருக்கிறாரா அல்லது கடமைக்காகப் பாடியிருக்கிறாரா என்பது, ஹ்ம்ம்ம்ம்ம்..., 'பாரதி கண்ணம்மா' பாட்டைக் கேட்டால் தெரிந்துவிடும். பாரதி கண்ணம்மாவில் எஸ்பிபி கொஞ்சல் இல்லையென்றால் கேட்கச் சிரமமாக இருந்திருக்கும். 'இயற்கையென்னும்' பாட்டில் ஜெமினி, கடைசியில் காஞ்சனாவை அலட்சியமாகத் தூக்கிச் சுற்றுகிறாரே? டூப்பா? சமீபத்தில் நான் இதுபோல் தூக்கப்போய்.. வேறு கதை.

'எங்கிருந்தோ ஆசைகள்' ரொம்ப நாள் கழித்துக் கேட்ட பாடல். ஜெயலலிதா எத்தனை அழகாக இருக்கிறார்! ரமணியின் நினைவு வருகிறது. அவனுடைய favorite கதாநாயகி. காதல் பாட்டு என்றில்லை, பொதுவாகப் பாடல் காட்சிகளில் எம்ஜிஆர் படங்களில் மட்டும் முழு frameஐயும் பயன்படுத்துகிறார்கள். எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா அல்லது மற்றவர்கள் frameன் வலது பக்கத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்களா? 'இதுவரை நீங்கள்' பாட்டிலும் முழு frameஐப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'இதுவரை' பாட்டு, காதல்ரச நீச்சல்குளம். டிஎம்எஸ்-சுசீலாவின் குரலில் இன்னொரு தேன்குடம். சரோஜாதேவி அழகாக இருப்பார் பாடலில். 'மழையில் படமெடுக்கிறோமே, இப்படி மேக்கப்போடு பளபளவென்று இருந்தால் பொருந்துமா?' என்று யாருமே நினைக்கவில்லை :) மீனாக்ஷிக்குப் பிடித்த பாடகர்கள் யார் என என்னால் உடனே சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

'பௌர்ணமி நிலவில்' பாடலின் தொடக்கத்தில் வரும் லொட்டு லொட்டு ஒலி. கடிகார ஒலி என்பதைக் கடைசியில் அறிக. பாடலில் நிர்மலா கஞ்சா அடித்துவிட்டு நடித்திருப்பாரோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. சிவகுமார் அழகாக இருக்கிறார். நெருக்கமான காதல் காட்சியில் சிரமப்படுவது கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்தது.

'நான் பேச நினைப்பதெல்லாம்' எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை - எனக்கு. காட்சி அமைப்பா, சிவாஜி கெட்டப்பா என்னவோ தெரியவில்லை, இந்தப் பாடலை ரசித்துக் கேட்டாலும் பிரமாத காதல் உணர்வோடு கூடிய பாட்டென்று சொல்லமுடியவில்லை. 'ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இலை' என்று ஆறுதல் அளித்துக் கொள்ளும் ஜோடியைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பொறாமை வருகிறது. காதலைவிட நிம்மதி வெளிப்படும் காட்சி என்று நினைக்கிறேன். 'சொல்லென்றும் பொருளென்றும்' வரிகளை ரசிக்காத நாளில்லை. இந்தப் படத்தை இந்தியில் எடுத்த போது, இசையமைப்பாளர் மிகவும் சிரமப்பட்டு எம்எஸ்வியிடமே அறிவுரை கேட்டதாகப் படித்திருக்கிறேன்.

தமிழ்ச் சினிமாவின் சிறந்த ஊடல் பாட்டு, 'கண்ணில் கண்டதெல்லாம்' என்று நினைக்கிறேன். 'என் பெண்மைக்கு லாபம்' என்று விஜயா காலை உயர்த்தும் காட்சி அன்றைக்கும் சிரிப்பைக் கொடுத்தது. மெரினா நீச்சல்குளம் போல் தெரிகிறது. அங்கே நீச்சலென்று கூத்தடித்தப் பதின்ம நினைவுகள் ஏராளம். விஜயா அட்டகாசமாக நீந்துகிறார். ஜெய் அட்டகாசமாக நீந்துவது போல மோசமாக நடிக்கிறார். சுகமான மெட்டு. கௌதமரா கொக்கா?

'ராகம் தன்னை மூடிவைத்த வீணை அவள் சின்னம்' - இளவயதில் நினைத்து நினைத்துப் பிரமித்த வரி. படமாக்கத் தெரியாமல் கழுத்தறுத்துவிட்டார் கேபி. எத்தனை அருமையான பாடல்! பாலராஜன்கீதா பரமரசிகர்.

இந்தப் பாடலில் கழுத்தறுத்தார் என்றால் சேர்த்துவைத்து பின்னிவிட்டார் கேபி இன்னொரு பாட்டில். பாரதி கண்ணம்மா. ஸ்டில் ஷாட்களை பாட்டில் இணைத்திருப்பதை இன்றைக்கும் ரசிக்கிறேன். அருமையான இசை. அருமையான படப்பிடிப்பு. கமலகாசன் (ஹ்க்கும்) ஜெயப்ரதா (ஆகா!) ஜோடியைப் பலமுறை பார்க்கவைத்தது, படத்தின் இசை. மிகச் சாதாரண பாடல் வரிகள். கவியரசுக்கு ஒழியவில்லையோ என்னவோ.

ஒன்றைக் கவனித்தேன். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், சிவகுமார், ஜெய்சங்கர், கமல்காசன்... அட என்ன இது? சூப்பரைக் காணோமே? சிகரெட் தூக்கிப் போடுவதோடு சரியோ?

தேர்வுகளை அனுப்பியதற்கு மீண்டும் நன்றி. உங்கள் தயவில் நல்ல பாடல்களை நானும் கேட்டு நினைவுகளை மெல்ல முடிந்தது.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.



2011/10/12

தந்தைசொல்




    "அப்பா.. நீயும் அம்மாவும் திடீர்னு செத்துப் போயிட்டா எங்க கதி என்ன ஆகும்?"

இரவின் தனிமையில் கார் ஓட்டிக் கொண்டிருந்த ரகுவுக்கு, பதிமூன்று வயது வேதாவின் கேள்வி நினைவுக்கு வந்துத் தாக்கியது.

வருமான வரி இலாகாவிற்கு எதிரான வழக்கில் கம்பெனிக்கு ஆதரவாக வெளிவந்தத் தீர்ப்பைக் கொண்டாடும் வகையில், மாலை டின்னரின் போது ரகுவை எல்லோரும் பாராட்டிப் புகழ, வழக்கத்தை விட அதிகமாகக் குடித்திருந்தான். விருப்பமான ஸ்டர்லிங் கேபர்னே. நறுமணமும், சுவையும் சரியாகக் கலந்த 1998ம் வருட அறுவடையின் திராட்சை மது. உடன் வேலை பார்த்த வக்கீல்களுக்கும் மற்றவருக்கும் நன்றி சொல்லி, க்ரீன்விச்சிலிருந்து விடைபெற்றுக் கிளம்பும் போது மாலை மணி ஏழுக்கு மேலாகிவிட்டது. தானியங்கி வேகக் கட்டுப்பாட்டு விசையை ஐம்பத்தேழு மைலுக்குப் பொருத்திவிட்டு, காரை நிதானமாகச் செலுத்திக்கொண்டிருந்தான். காரின் எம்பி3 இணைப்பிலிருந்து அசரீரியாய் வந்தப் பழைய தமிழ்ப்பாடல் இதமாய் நெஞ்சைப் பிடித்துவிட்டது. இரவின் அமைதி, தனிமை, மதுவின் போதை எல்லாம் கலந்த நிலையில் பழைய சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது ரகுவுக்கு உலகமே மறந்துவிடும். என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும் இன்பநிலை வெகு தூரமில்லை...

இந்த வேகத்தில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாஸ்டன் போய்விடலாம். அவசரமே இல்லை. வார விடுமுறைக்கு மூன்று குழந்தைகளையும் நேன்டகட் தீவுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லியிருந்தான். அவர்களைப் பற்றி நினைத்தபோது, மூத்தவள் வேதா முதல் நாளிரவு கேட்டக் கேள்வி மீண்டும் நினைவுக்கு வந்து வாட்டியது.

பதிமூன்று வயதுச் சிறுமி கேட்கும் கேள்வியா இது? அது போல் தனக்கு ஏன் தோன்றவில்லை பதிமூன்று வயதில்?

இதே கேள்வியை அவன் கேட்டிருந்தால் அப்பா என்ன செய்திருப்பார் என்று நினைத்துக்கொண்டான். "அதிகப் பிரசங்கி" என்று கன்னத்திலும் முதுகிலும் இரண்டு விழுந்திருக்கும். ஏதோ உந்துதலில் கன்னத்தைத் தடவிக் கொண்டான். வேதா கேட்ட கேள்வி அவனை உறுத்தினாலும், தன்னால் அப்படி அதிகப்பிரசங்கி என்று சொல்லிக் கண்டிக்க முடியாமல் போனது அவனுக்கு வியப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது.

தனிமையில் கார் ஓட்டிச் செல்லும் போது வேண்டாத எண்ணங்கள் இப்படித் தோன்றி வாட்டும். தலையைக் குலுக்கி எண்ணங்களை உதறினான். பெட்ரோல் குறைந்திருப்பதைக் கவனித்து, அடுத்து வந்த பிரிவில் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஷெல் பயணிகள் நிலையத்த்துள் நுழைந்தான். எதிரே ஒரு பதினெட்டு சக்கர மேக் டிரக் வேகமாக வந்து அவனைத் தாண்டிச் சென்றது.

காபி சாப்பிடலாமென்று ஷெல் நிலையத்துள் இருந்த டங்கின் டோனட்ஸ் கடைக்குள் நுழைந்தபோது முதல் முறையாக அவரைப் பார்த்தான்.

அப்பாவா? இங்கேயா? ரகுவால் நம்ப முடியவில்லை. இதெப்படி சாத்தியம்? அவனுடைய அப்பா விபத்தில் இறந்து போய் முப்பது வருடங்களுக்கு மேலாகியிருந்தது.

அப்பா இறந்த போது ரகுவுக்கு வருத்தமேற்படவில்லை. இனிமேல் அடி, உதை கிடையாது என்கிற மிகையான விடுதலை உணர்ச்சி கலந்த, எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, ஒருவித மகிழ்ச்சி இருந்ததே தவிர, வருத்தம் கொஞ்சம் கூட இல்லை.

அப்பா இறந்த செய்தி கிடைத்த அன்று இரவு,
    இந்த வருடத்தின்
    இரண்டாவது சுதந்திர தினம்
என்று தன் கவிதை நோட்டுப் புத்தகத்துக்குள் தேதியிட்டு எழுதி வைத்தான்.

ஆடாப்சி முடிந்து, பாதுகாப்புக்காக எம்பாம் செய்யப்பட்டு, தலையிலிருந்து கால்வரை துணிச்சுற்றிக் கட்டிவந்த உடலில் ஒன்றும் சரியாகத் தெரியாததால், அப்பா ஒருவேளை இறக்கவில்லையோ என்று அவனுக்கு அடிக்கடி தோன்றும். விபத்தை சுயநலத்துக்கு உபயோகித்து அவர்களைவிட்டு ஓடிப் போன ஒரு கோழை என்றுகூட அப்பாவைப் பற்றிப் பலநாள் நினைத்திருந்தான். அவன் வாங்கிய அடி உதை மட்டும் நினைவுகளில் தேங்கியிருந்ததே தவிர, அப்பாவைப் பெரும்பாலும் மறந்து விட்டிருந்தான்.

காபி வாங்க நகர்ந்தபோது மறுபடியும் பார்த்தான். மூலையில் உட்கார்ந்திருந்தவர் அவனுடைய அப்பாவே தான்! சந்தேகமில்லை.

அப்பாவைப் பார்த்ததும் குலை நடுங்கியது என்றாலும், வயதாகி விட்ட தைரியத்தில் அவரைக் கவனித்தான். உண்மையாகவே அப்பாதானா பார்த்துவிடலாம் என்று எண்ணி, காபி வாங்காமலே அவரெதிரில் சென்று உட்கார்ந்தான். அவனை ஏறிட்டுப் பார்த்தவர், எழுந்து, இடத்தை விட்டு நகர்ந்தார். அடையாளம் தெரியவில்லையா, இல்லை நடிக்கிறாரா? முப்பது வருஷமாகிறதே, ஒரு வேளை அடையாளம் தெரியவில்லையோ என்னவோ... அவரை மட்டும் எனக்கு நினைவிருக்கிறதே?

ஒன்றிரண்டு முறை திரும்பிப் பார்த்தபடி, கடையை விட்டு வெளியேறியவரைக் கவனித்துக் கொண்டிருந்தான் ரகு. அவரைப் பின்தொடர்ந்து பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தான். அப்பா சிகரெட் கடைக்குள் நுழைவதைக் கண்டு வேகமாகப் பின்தொடர்ந்தான்.

அவனுக்குப் பனிரெண்டு வயது இருக்கும் போது, வேலையை விட்டு வீட்டிலிருந்த அப்பா, தன்னைப் பல்லாவரம் போய் அவருக்கு வழக்கமான கடையில் சிகரெட்டும் கால்புட்டி விஸ்கியும் வாங்கிவரச் சொன்னது நினைவுக்கு வந்தது.

"ரொம்ப தூரம்பா, ட்ரெயின் ஏறிப் போகணும்"

"போடா நாயே. போய் வாங்கிட்டு வா"

"சரி, பைசா குடுப்பா" என்றான் பொங்கிவந்த கண்ணீரை அடக்கியபடி.

"கணக்குல எழுதிக்கச் சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லி வாங்கிட்டு வா"

"கடைக்காரன் தர முடியாதுனு சொன்னா?" என்று அவன் முடிக்குமுன் கன்னத்தில் விழுந்தது அறை. "எதிர்த்தா பேசறே?" என்றார் அப்பா. "போடா, சிகரெட்டும் விஸ்கியும் இல்லாம இந்தப் பக்கம் வராதே"

அழுதுகொண்டே சமையலறையிலிருந்த அம்மாவிடம் போனான். "ஏம்மா, பார்த்துக்கிட்டே இருக்கியே, தடுக்கத்தான் முடியலை, ஏதாவது சொல்லக் கூடாதா? கடனுக்கு விஸ்கியும் சிகரெட்டும் வாங்கிட்டு வரச்சொல்லி, பனிரெண்டு வயசுப் பையனை அனுப்புறாரே, இதைப் பார்த்துக்கிட்டு உன்னால சும்மா எப்படி இருக்க முடியுது?" என்று அவனால் கேட்க முடியவில்லை. "அப்பா பல்லாவரம் போய் சிகரெட்டும் விஸ்கியும் வாங்கிட்டு வரச்சொன்னார்" என்றான். அலமாரியில் லட்சுமி விக்கிரகக் குங்கும அர்ச்சனைத் தட்டிலிருந்து எட்டணா சில்லறையைத் தேடி எடுத்துத் துடைத்துக் கொடுத்தார் அம்மா. டிக்கெட் வாங்கக் காசு. "கவனமா போய் வா" என்றார்.
தெருக்கோடியின் பள்ளிக்கூட பஸ் நிறுத்தத்திற்குக்கூட வேதாவைத் தனியாக அனுப்பிய நினைவில்லை. ஒரு முறை ஷாஸ் சூபர் மார்கெட்டில் மளிகை வாங்கச் சென்ற போது, இரண்டு கையிலும் நாலைந்து பைகள் இருந்ததால், வேதாவிடம் ஒரு டாலர் கொடுத்து சில்லறை வாங்கி வா என்று சொல்லி, கண் பார்வையிலேயே நின்றுகொண்டிருந்தவனை எல்லார் முன்னிலையிலும் கடிந்து கொண்ட மனைவியின் வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. "அவ குழந்தையில்லையா? உன் கைல நாலு பை இருந்தா என்ன? கீழே வச்சுட்டுப் போக வேண்டியது தானே? அவளைப் போய் வேலை வாங்கறியே, வாட்ஸ் ராங் வித் யூ?"

நினைத்துக் கொண்டிருக்கையில் அப்பா கடையிலிருந்து வெளியே வந்தார். அவனைப் பார்த்தும் பாராதது போல் நடந்து, ஷெல் நிலையம் தாண்டி, வென்டீஸ் உணவகம் தாண்டி, பின்னாலிருந்த ஹாலிடே இன் ஹோட்டலுக்குள் நுழைவதைப் பார்த்தான். விரைந்தான்.

ஹோட்டல் வரவேற்பறையில் யாருமில்லை. சிறிது நேரம் காத்திருந்து விட்டு, பொறுமையிழந்து உள்ளே நடந்தான். வரவேற்பறையைத் தொடர்ந்து சாப்பாட்டுக்கூடம், அதைத் தொடர்ந்து உடற்பயிற்சியறை, சிறுவர்களுக்கான விளையாட்டறை, நீச்சல்குளம். எங்கேயும் காணவில்லை. எங்கே போயிருப்பார்? வரவேற்பறையில் விசாரிக்கலாமென்று திரும்பி வந்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

சாப்பாட்டுக்கூட மையத்தில் சப்பளமாக உட்கார்ந்திருந்திருந்த அப்பா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். "நீ என்னைப் பின்தொடர்வது எனக்குத் தெரியும்" என்றார்.

ரகுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இறந்து போய்விட்டாரென்று நினைத்த ஒரு மனிதரை சரியாக முப்பத்தாறு வருடங்களுக்குப் பின் பார்த்தால், என்ன கேட்பது? நல்லா இருக்கீங்களா என்றா? இத்தனை வருடங்களுக்குப்பின் முதன் முறையாகக் கேட்ட அந்தக் குரல், அவனைத் தலை முதல் கால் வரை உபரி வோல்டெஜ் மின்சாரமெனத் தாக்கியது. என்ன பதில் சொல்வது? அன்றிருந்த வேகமும் ஆத்திரமும் அவர் குரலில் இல்லாதது போல் தோன்றியதற்குக் காரணம், உண்மையிலேயே அவர் குரலில் ஆத்திரமும் வேகமும் மறைந்திருந்ததாலா, அல்லது அவன் வளர்ந்து விட்டதாலா? நெஞ்சிலும் வயிற்றிலும் சூடு போட்டாற்போல் வலி. அப்பா! இத்தனை வருடம் பொறுத்துச் சந்திக்கிறோம், ஏன் சுமுகமில்லை? ஒன்றும் சொல்லத் தோன்றாமல், "அப்பா" என்றான்.

"நானேதான்!" என்றார். "என்னை எதிர்பார்க்கவில்லை இல்லையா நீ? ஆனால், நான் உன்னை எப்போதாவது சந்திப்போம்னு எதிர்பார்த்துட்டுத் தான் இருக்கேன்"

நலமா என்று கேட்கவில்லை. வளர்ந்துவிட்டாயே.. திருமணமாகிவிட்டதா, குழந்தைகள் உண்டா.. அட... அம்மா எப்படி இருக்கிறாள் என்று கூட விசாரிக்கவில்லை. நேரே விஷயத்துக்கு வருகிறாரே? உன்னை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். எதற்கு? "எப்படி இருக்கே, அப்பா?" என்றான், மிகவும் தயங்கி.

"எப்படி இருந்தா என்ன இப்போ? ஒருத்தரை ஒருத்தர் பார்த்திருக்கக் கூடாது. பார்த்துட்டோம். இனி நடக்க வேண்டியதைக் கவனிப்போம். உன்னால எனக்கு எத்தனை கஷ்டம்னு புரிஞ்சா சரிதான்"

அவனுக்கு எரிச்சல் வந்தது. என்னால் இவருக்கென்ன கஷ்டம்? என்னுடைய வசனத்தை இவர் பேசுவானேன்? "என்ன சொல்றே நீ? புரியலையே?"

"நாளைக்குச் சொல்றேன். இன்னிக்கு நீ தயாராயில்லை. இதே இடத்துக்கு வா" என்றார்.

"சரிப்பா". பழகிவிட்ட பதில். அவரைக் கடந்து சென்றதற்குத் தன் மீதே ஆத்திரம் வந்தது ரகுவுக்கு. யார் இந்த ஆள், இன்று போய் நாளை வா என்று என்னிடம் சொல்ல? திரும்பினான். "நாளைக்கு எல்லாம் வர முடியாது. எனக்கு வேறே வேலை இருக்கு. இப்பவே சொல்லு, என்னால் உனக்கு என்ன கஷ்டம்?" என்றான் கடுமையாக.

"சொன்னாக் கேளுடா, நாளைக்குப் பேசலாம். போடா. நான் இங்கேயே உனக்காகக் காத்துட்டு இருப்பேன்" என்றார்.

மறுபடியுமா?

ரகுவுக்குப் பத்து வயதிருக்கும். ஒரு நாள் இரவு படுத்துக் கொண்டிருந்தவனை எழுப்பி, "டேய், கடைக்குப்போய் தலைவலித் தைலம் வாங்கிக்கிட்டு வாடா" என்றார் அப்பா.

"கண்ணன் கடை மூடியிருக்கும்பா, மணி பத்தாச்சு" என்றான் ரகு.

"வேறே எங்கேயாவது போய் வாங்கிக்கிட்டு வா, போடா. எனக்கு விக்ஸ் இல்லாமத் தூக்கம் வராது"

"ராதாநகர் போகணும்பா, நாயெல்லாம் துரத்தும்பா" என்றான். சொல்லியிருக்கக் கூடாது.

"நாய் துரத்துமா? உனக்கு என்ன வயசாகுது? ப்லேக்கார்ட், எழுந்திருடா. பெத்த அப்பன் தூக்கம் இல்லாம கஷ்டப்படுறான், உனக்கு நாய் துரத்துமேனு கவலையா? போய் வாங்கிட்டு வா, போடா" என்று முதுகில் ஓங்கி அறைந்தார். எழுந்து கொண்டிருந்த ரகு, குப்புற விழுந்தான். அடுத்த அடி விழுமுன் எழவேண்டுமென்று பயிற்சி சொன்னாலும், முயற்சி தோற்றது. ரகு எழுமுன் மறுபடியும் அறைந்தார் அப்பா. அவன் முகத்தில் ஒரு ரூபாயை வீசியெறிந்து, "இன்னொரு அறை விழுறத்துக்குள்ள இங்கேயிருந்து கிளம்பிடு" என்றார்.

அழுதால் இன்னும் அடித்துவிடப் போகிறாரென்று அழுகையை அடக்கிக்கொண்டு எழுந்தான். "அப்பா, எனக்கு பயமா இருக்குப்பா. லெதர் பேக்டரி மைதானத்துல வெறி நாயெல்லாம் இருக்குபா" என்றான்.

"இன்னுமா நின்னுட்டிருக்கே?" என்று கையை ஓங்கியவரைப் பார்த்ததும் ஓடினான். "வேணாம்பா, அடிக்காதே. நான் போறேன்"

"இருடா, நானும் வரேன்" என்றார் அம்மா. அவனுக்கு ஆச்சரியமும், உள்ளுக்குள் நிம்மதியும் ஏற்பட்டது.

"அவன்தான் போகணும்னு நான் சொல்லலை?"

"நான் அவன் கூட போயிட்டு வரேன். வழியில் ஏதாவது ஆச்சுனா அவனுக்கும் கஷ்டம், உங்களுக்கும் தைலம் கிடைக்காது" என்ற அம்மாவை அந்த நிமிடம் வணங்கத் தோன்றியது ரகுவுக்கு.

என்ன தோன்றியதோ அப்பாவுக்கு, "சரி சரி, நானே துணைக்கு வரேன், இரு" என்றார். அவனுடன் தெருமுனை வரை வந்தவர், நின்றார். "என்னடா, நாய்னா பயமா?"

"ஆமாம்பா. இங்கேயிருந்து ஜிஎஸ்டி ரோட் வரைக்கும் தெரு நாயா இருக்கும்பா"

அப்பா திடீரென்று, "நான் இங்கேயே உனக்காகக் காத்துக்கிட்டு இருப்பேன், நீ போய் வாங்கிட்டு வா" என்றார்.

அதிர்ந்து போனான். "அப்பா" என்றவனைப் புறக்கணித்து, "போடா. போறியா, இல்லை ஒரு கல்லடிச்சு அந்த நாய்க் கூட்டத்தைக் கலைக்கட்டுமா?" என்றார்.

"வேணாம்பா, நான் போறேன்" என்ற ரகு, கெஞ்சினான். "நீ இங்கேயே இருப்பா, ப்ளீஸ்".

பத்தடி நடந்திருப்பான், திரும்பிப் பார்த்தால் அப்பாவைக் காணவில்லை. தனிமையில் போனால் நாய் கடி சாத்தியம். வெறும் கையுடன் திரும்பினால் அப்பா அடி சத்தியம். எதற்கு பயப்படுவது?

நாய் மேல் நம்பிக்கை மேலோங்க, வேகமாக நடந்தான். தைலம் வாங்கிக்கொண்டு ஓட்டமாகத் திரும்பி வந்தபோது, மூன்று நாய்கள் அவனை வழியில் விட்டுவிட்டுத் துரத்த, "முருகா, முருகா" என்று உரக்கச் சொல்லிக் கொண்டே மூச்சு வாங்கப் பத்து நிமிடத்துக்கு மேல் ஓடியவன், வீட்டு வாசல் வந்தபின் நின்றான். "ஏம்பா, சின்னப் பையனா இருக்கே, உங்க வீட்லந்து யாரும் வரக்கூடாதா? கவனமாப் போ, இருட்டுல" என்ற கடைக்காரரின் வார்த்தைகள் இன்னும் எதிரொலிக்க, அடக்க முடியாமல் அழுதான். கடவுளே, எனக்கு ஏன் இந்த மாதிரி ஒரு அப்பாவைக் கொடுத்தாய்?

"வேண்டாம், நீ எனக்காகக் காத்திருந்த கதை பத்து வயசுலயே தெரிஞ்சு போச்சு. என்ன விஷயம்? இப்பவே சொல்லு. நான் போகணும், எனக்கு வேலை இருக்கு" என்றான்.

"உன் கோபமும் ஆத்திரமும் அடங்கினாத்தான் உன்னுடன் பேச முடியும். நாளைக்குப் பேசலாம், சொன்னா கேளு"

"உன் மேலே இருக்கிற கோபமும் ஆத்திரமும் இந்தப் பிறவியில் அடங்காது" என்ற ரகுவை நிதானமாகவும் தீவிரமாகவும் பார்த்தார் அப்பா.

ரகுவுக்குத் தன் உடல் முழுவதும் ஒரே நேரத்தில் திடீரென்று தீப்பற்றினாற் போலிருந்தது.

"அதனால் தான் சொன்னேன், உன் கோபமும் ஆத்திரமும் அடங்கினாத்தான் நான் உன்னுடன் பேசுவேன்" என்றவரை முதல் முறையாக வேறு கோணத்தில் பார்த்தான். "எங்கே வந்திருக்கேனு நல்லா புரிஞ்சுக்க முதலில். நாளைக்குப் பேசலாம்" என்றபடி பொசுக்கென்று மறைந்துவிட்டார் அப்பா.

கை, கால், தலை, உடல் என்று தொட்டுப் பார்த்துத் தெளியத் தொடங்கினான். நானும் இறந்து விட்டேனா? எப்படி? என் குடும்பத்தை ஏமாற்றி விட்டேனா? அப்பனைப் போல் அல்பாயுசா? சே! ஏன்? நான் ஏன் இறக்க வேண்டும்?

    தனக்கு நேர்ந்த அநியாயத்திற்கு யார் பொறுப்பென்று புரியாமல் குழம்பி, ஆத்திரத்தில் புலம்பினான் ரகு. என் குழந்தைகள், மனைவி... இவர்களெல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்? எனக்கு ஏன் மரணம் அதற்குள்? ஐயோ, சின்னவளுக்கு எட்டு வயது கூட முடியவில்லையே! சாவு சொல்லிக்கொண்டு வராதுதான், அதற்காக இப்படியா? எத்தனை கடன், எத்தனை தொல்லை, எத்தனை பிரச்னைகள்... மனைவியும் குழந்தைகளும் எப்படிக் கடையேறப் போகிறார்கள்? காப்பீட்டிலிருந்தும், கம்பெனியிலிருந்தும், சேமிப்பிலிருந்தும் எத்தனை தேறும்? உயில் கூட எழுதவில்லையே நான்? இத்தனை வயதுக்குப் பிறகு அம்மாவுக்கு ஏன் இந்த தலையிடி? அம்மா? அம்மாவை நினைத்ததும் பொறுக்க முடியாமல், நெஞ்சுவலி வந்தது போல் துடித்தான்.

எத்தனை நேரம் புலம்பினானென்றோ, எப்பொழுது அமைதியானானென்றோ தெரியாமல், எதிரே மறுபடி அப்பா வந்து நின்றதும் ஒன்றும் பேசாமலிருந்தான்.

"எப்படி இருக்கே?" என்றார் அப்பா. "செத்த பிறகு கேட்கிறேனேனு பார்க்காதே. இங்கே நான்தான் உனக்குத் துணை. நீ எனக்குத் துணை".

"பொழுது விடிஞ்சுடிச்சா?" என்றான்.

"நாளாவது பொழுதாவது?" சிரித்தார் அப்பா. "முதலில் அப்படித்தான் இருக்கும். இனிமேல் நேரம், பொழுது, நாள், காலம் எதற்கும் அர்த்தமில்லைனு சீக்கிரமே புரிஞ்சுக்குவே. அடுத்த நிலைக்குத் தயாராகும் வரை அகோரமான தனிமையும்... நீ செய்த காரியங்களைப் பத்தி.. விடாமல் நினைத்துப் பார்கக நேரமும் தான் இனிமேல் உன்னிடம்".

"நீ... ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. என் முகத்திலே விழிக்க வேண்டாம்.. உன் துணை எனக்குத் தேவையில்லை.. இப்படியாகி விட்டதே என் நிலை!" என்று ஆத்திரத்தில் அருவியாய் அழுதான் ரகு. தேற்ற முனைந்த அப்பாவிடம் திடீரென்று ஆத்திரம் தாங்காமல், "எல்லாம் உன்னால் வந்த வினைதான். உன்னைப் பத்தி நினைச்சுக்கிட்டு வண்டியோட்டினதால வந்த விபரீதம்... என்னைக் கொஞ்ச நஞ்சமாவா சித்திரவதை செஞ்சிருக்கே? அப்பனா நீ? என் வாழ்க்கையைக் கெடுத்தப் பாவி. உன் மேலே இருக்குற கோபம் இன்னும் பத்து ஜென்மம் எடுத்தாலும் தீராது... வாழும்போது கொடுமைப்படுத்தினே... போதாதுனு செத்தப் பிறகுமா என்னை வாட்டணும்? நீ உருப்படுவியா? இன்னும் எத்தனை பிறவி எடுத்து நீ கஷ்டப்படுவியோ.." என்று சபிக்கத் தொடங்கியவன் நிறுத்தினான்.

எதிரே அப்பா ஆயிரம் கோணலாகிக் கடுமையான சித்திரவதைக்குட்பட்டுத் துடித்தார்.

பழைய நிலைமைக்கு வர நீண்ட நேரமானது.

சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. "இது மாதிரி அடிக்கடி நேருமா?" என்றான் மெள்ள. "ரொம்பத் துடிச்சது போல தோணிச்சு"

"அதை விடு. நான் செத்துப் போன நாளிலிருந்து ஒரு நாளைக்கு ரெண்டு மூணு முறையாவது நடந்துட்டிருக்கு. நீ மனசு வச்சு உதவி செஞ்சா நிறுத்தலாம்" என்றார்.

ரகுவுக்கு மீண்டும் எரிச்சல் வந்தது. "நான் ஏன் உனக்கு உதவி செய்யணும்? நீ எனக்கு என்ன உதவி செய்திருக்கே? உண்மையைச் சொல்லணும்னா, நீ செத்துப்போனது தான் பெரிய உதவி. உன் பிள்ளையாய்ப் பிறந்த பாவத்திற்கு இன்னும் என்னென்ன கொடுமையை நான் அனுபவிக்கணுமோ? நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன இனிமேல்? நாசமாய்ப் போ" என்று அவன் தொடர்ந்து நிந்திக்க, மறுபடியும் அப்பா இனம் புரியாத சித்திரவதைக்கு ஆளாகிக் கடூரமாக அலறினார். அவருடைய உருவம் சிதறிச் சிதறிச் சேர்ந்தது. ஆந்தையும் ஓனாயும் கோட்டானும் கலந்த அலறல், ரகுவை நடுங்க வைத்தது.

எத்தனை நேரமானதோ தெரியவில்லை, பழைய நிலைமைக்கு வந்த அப்பா அழுது கொண்டிருந்தார். அவர் கண்களில் பீதி. அப்பாவை அழுது பார்த்ததும் ரகுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. "அப்பா" என்று பேசத் தொடங்கியவனை நிறுத்தி, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். "வேணும்னா உன் காலில் விழறேண்டா, தயவு செய்து என் மேல் ஆத்திரமோ கோபமோ படாமல் இருக்க முயற்சி செய்.. தாங்க முடியலைடா, இந்தச் சித்திரவதை" என்றார்.

"இது..புரியலையே" என்றான்.

"புரிவது கஷ்டம்தான். செத்தபிறகு அடுத்த நிலை தீர்மானமாகிப் போவதற்கு முன்னால், இப்படி இந்த நிலைமையில் இருப்போம்"

"அடுத்த நிலையா? அப்படினா?"

"சொர்க்கமோ, நரகமோ, இன்னொரு பிறவியோ என்னவோ.. தெரியாது. ஆனா அந்த அடுத்த நிலைக்குப் போகும் வரைக்கும் இப்படித்தான் அலைஞ்சிட்டிருக்கணும். அடுத்த நிலைக்குப் போக அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும் போது தாவிடணும்"

"அப்போ, நீ ஏன் இத்தனை நாளா அடுத்த நிலைக்குப் போகவில்லை?"

"இன்னும் தயாராகவில்லை. இந்த நிலையிலிருக்குறப்போ நீ விட்டு வந்த தொடர்புகளில் யாராவது மனதார உன்னை வாழ்த்திக்கிட்டே இருந்தா, சீக்கிரம் அடுத்த நிலைக்குப் போகத் தயாராகலாம். மனசார வெறுத்திக்கிட்டிருந்தா இங்கேயே சித்திரவதை தான். எத்தனை கோவில் சுத்தினாலும், எத்தனை பூஜை செஞ்சாலும் உன்னோட வாழ்ந்தவங்க வாழ்த்தலைனா அதோகதி தான். அடுத்த நிலைக்குத் தயாராகக் கூட வழியில்லாம போயிடும்"

"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை" என்றான் ரகு.

"சதை எலும்போட இருந்தப்போ எனக்கு என்னைத் தவிர எதிலுமே நம்பிக்கை இருந்ததில்லை" என்றார் அப்பா.

"அப்ப உன் நிலைமைக்கு நான்தான் காரணம்னு சொல்றியா?"

"ஆமாம்டா. தயவு செய்து கோபப்படாதே. நான் இறந்து போன நாளிலிருந்து, நீ விடாமல் ஆத்திரமும் வெறுப்பும் கலந்து என்னை நினைக்கிற போதெல்லாம், நான் இப்படித்தான் சித்திரவதை அனுபவிக்கிறேன். இந்தச் சித்திரவதைகளுக்கு ஆளாகி, நான் அடுத்த நிலைக்குத் தயாராகவே இல்லை. நான் உனக்கு, நீ விரும்பினபடி நல்ல தகப்பனாக இல்லாமல் போனது தவறுதான்...என்னை மன்னிக்கக் கூடாதா? இந்தப் பிறவியில் உனக்கு அப்பாவாயிருந்த பனிரெண்டு வருசத்துல என்னைப் பற்றிய ஒரு நல்ல நினைப்பு கூட இல்லையா? இல்லாவிட்டாலும் உன்னால் என்னை வெறுக்காமல் இருக்க முடியாதா?"

அமைதியாயிருந்த ரகுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு மறுபடி அழுதார் அப்பா. "தினமும் இதே கொடுமைதான்டா. நீ என்னை இத்தனை வெறுத்ததற்குக் காரணமெல்லாம் கேட்டு உன்னை அவமதிக்க மாட்டேன். என்னுடைய அடுத்த நிலையில் எனக்கு நரகமோ, சொர்க்கமோ, இல்லை இன்னொரு பிறவியோ எதுவாக இருந்தாலும், நான் யாரோ நீ யாரோ தானே? நீ சொன்னது போல் நம்ம இரண்டு பேருக்குமிடையே இனி எந்தப் பிறவியிலும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக்கூடாது என்றுதான் எனக்கு முடிந்த போதெல்லாம் வேண்டிக்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்டா.. யாருக்கோ செய்த உதவியா நினைச்சு, எனக்கு இந்த உதவியைச் செய்யக்கூடாதா? இந்தச் சித்திரவதையை என்னால தாங்க முடியலைடா"

இன்னும் அமைதியாயிருந்தான் ரகு.

அப்பா தொடர்ந்தார். "என்னைப் பத்தின ஒரு சில நல்ல எண்ணங்கள் போதும்.. முடியுமாடா? நான் செத்துப் போனது மட்டுமே நல்லதுனு நெனச்சா, அதையே வாழ்த்தா சொல்லிட்டுப் போயேன்.. முடியாதா உன்னால?"

அவனுடைய கைகளை விட்டு, கீழே உட்கார்ந்தபடி அப்பா தொடர்ந்தார். "நீ மட்டுந்தான் என்னை விடாமல் வெறுத்துக்கிட்டு வரே. மத்தவங்க எல்லாம் என்னை எப்பவோ மறந்துட்டாங்கடா.. அப்படியே நினைத்தாலும் நல்ல நினைப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை" என்ற அப்பா திடீரென்று, "ரகு.. ரகு... எனக்குப் பயமாயிருக்குடா" என்று நடுங்கத் தொடங்கினார்.

"என்ன பயம்?" என்றான் ரகு. அவனுக்கு அப்பாவின் மேலிருந்த வெறுப்பை விடத் தன் மேல் வெறுப்பு அதிகமாகத் தொடங்கியது.

"ரகு.. உன் மனைவி, அம்மா, குழந்தைகளுக்கு நீ செய்த நல்ல காரியங்களுக்கு அவங்க உன்னை தினம் வாழ்த்திக்கிட்டிருந்தா, நீ சீக்கிரமே அடுத்த நிலைக்குத் தயாராகி வாய்ப்பு வரும்போது போய்விடுவாய். அடுத்த நிலைக்குத் தயார் செய்யக்கூட நல்லதோ கெட்டதோ இனி என்னைப் பத்தி நினைப்பாரில்லாமல் போய்டுமோனு பயமா இருக்குடா. செத்த பிறகும் சுயநலம் பார்க்கிறேனென்று நினைக்காதே. எனக்கு இந்தப் பிறவியின் கொடுமை போதும்டா, அடுத்த நிலையில் நரகமென்றாலும் பரவாயில்லை" என்றார். வலி வந்து சொல்லத் தெரியாதக் குழந்தை போல் அழுதார். மெள்ள அவனிடமிருந்து விலகிச் சென்றார்.

ரகுவின் மனதில் அப்பாவின் வார்த்தைகள் இடியாய் ஒலித்துக் கொண்டிருந்தன.

    அப்பா விலகிச் சென்றதைக் கவனிக்கவில்லை ரகு. பலவகை எண்ணங்களில் தன்னை மறந்திருந்தான். என்னுடைய அடுத்த நிலை என்ன? என் மனைவி, குழந்தைகள் என்னை வாழ்த்துவார்களா, வெறுப்பார்களா? நான் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் என்னென்ன கொடுமைகள் செய்தேன்? என் குடும்பத்தை முறையாகக் கவனித்தேனா? அடுத்த நிலைக்குப் போக வாய்ப்பு எப்போது வரும்? அடிக்கடி வரும் என்றாரே அப்பா? நான் அடுத்த நிலைக்குத் தயாரா? அப்பாவின் கதிதானா எனக்கும்? பலவாறாகச் சிந்தித்தவனுக்கு முதன் முறையாக அப்பாவின் மேல் பரிதாபம் வந்தது.

"இன்னும் இங்கேதான் இருக்கியா?" என்ற அப்பாவின் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்த ரகு புன்னகை செய்ய முயற்சித்தான். "ஆமாம்... நீ சொன்னதையே நினைச்சுட்டிருந்தேன். நீ சுயநலமாகச் சொன்னது போல் தோன்றினாலும், உன் கதி எனக்கு வரக்கூடும் என்கிற பயத்தை ஏற்படுத்தின உன் சாமர்த்தியத்தைப் பாராட்டணும்" என்றான்.

"நீ புத்திசாலி என்பது எனக்கு எப்பவுமே தெரியும்" என்றார். சிறிது அமைதிக்குப் பின், "உன் மனைவி, பிள்ளைகளைப் பற்றிச் சொல்லேன்" என்றார்.

"கல்லூரி முடிஞ்சதுமே அமெரிக்கா ஓடிட்டேன். அங்கேயே சந்திச்சுப் பழகின ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மாயா. அழகான, அறிவுள்ள, விவேகமான பெண். அற்புதமான தாய். நான் வக்கீல் வேலையில் பாதி நாள் வீட்டுக்கே வரமாட்டேன். மாயா மூணு குழந்தைகளையும் பாத்துக்கிட்டு, டீச்சர் வேலையும் பாத்துக்கிட்டு, என்னுடைய தவறுகளைப் பொருட்படுத்தாமல்.. அவளை மாதிரி யாராலும் முடியாது"

அப்பா அவன் தோள்களை இதமாகத் தொட்டார்.

"மூணும் பெண் குழந்தைங்க. மூத்தவ வேதா உன்னைப் போல் அழகாகப் படம் வரைவாள்."

"அப்படியா?"

"இரண்டாமவள் மீரா. எதுக்கெடுத்தாலும் கோபம். நினைச்சுப் பார்க்கிறப்போ அவளும் உன்னை மாதிரிதான், நினைத்த உடனே எல்லாம் நடந்தாக வேண்டும். இல்லையென்றால் விருட்விருட்னு கோபம். அபரிமிதமான மூளை. அழகான அழகு, பள்ளிக்கூடத்து ஆம்பிளைப் பசங்களையெல்லாம் இன்னும் நாலு வருஷத்துல பாடா படுத்தப்போறா."

"வேணாம்டா, என்னோட கோபம் என்னைக் கெடுத்தது. என்னோட போகட்டும். கோபம் எல்லாம் போய் நல்லா இருக்கட்டும்டா அவள். நல்லா இருப்பா, பாரு" என்ற அப்பாவின் குரலில் நடுக்கத்தை உணர்ந்தான் ரகு.

"சின்னவள் தாரா. எப்பப் பார்த்தாலும் ஏதாவது படிச்சிக்கிட்டே இருப்பா. புது காமிக்ஸ் கதைப்புத்தகம் எது வந்தாலும் முதலில் படிப்பது அவதான். நீ எனக்கு ஒரு தடவை கதைப் புத்தகம் ஒன்று வாங்கிக் கொடுத்தது ஞாபகம் வருது..எனக்கு அப்பாவா நீ வாங்கிக் கொடுத்தது ஒரே ஒரு புக் தான்" என்றான்.

"அப்படியா?"

"ஆமாம். நாடி கோஸ் டு லன்டன். இன்னும் ஞாபகம் இருக்கு. பக்கத்து வீட்டு மலர் கிட்டே புத்தகம் கொடுனு கெஞ்சிட்டிருந்ததைப் பார்த்து உனக்கு என்ன தோணிச்சோ, என்னைக் கூட்டிப் போய் புத்தகம் வாங்கிக் கொடுத்து, சினிமாவுக்கும் கூட்டிப் போனே. வீட்டுக்கு வந்து உதைப்பியோனு பயந்தாலும் உன் கூட செலவழித்த அந்த இரண்டு மணி நேரம் நல்ல அனுபவம" என்று சிரித்தான்.

அமைதியாக இருந்தவரைப் பார்த்து, "சாரி.. உதைப்பியோனு வெறுப்பில் சொல்லலை.." என்றவன் தொடர்ந்தான். "சின்னவ என்னை மாதிரி... பேச்சுப் போட்டியில் வெளுத்து வாங்குறா. எட்டு வயசு கூட முடியலை, பதினாலு பதினஞ்சு வயசுப் பசங்க கூட போட்டி போடுறா."

"உன் பொண்ணுதானே, அப்படித்தான் இருப்பா" என்றார் அப்பா.

"இல்லைபா. நீ எனக்கு எழுதிக் கொடுத்த மாதிரியே அவளுக்கு நான் நிறைய எழுதி கொடுக்கிறேன். ஆனா, அது இல்லாமலே சில சமயம் நல்லாத்தான் பேசுறா. வயசுக்கு மீறின கருத்துகளை வச்சு நீ எனக்கு எழுதிக் கொடுப்பியே, நினைவிருக்கா?"

"நீ ஒரு பேச்சுப் போட்டில கூட முதல் பரிசைத் தவிர எதையும் வாங்கியதில்லைனும் ஞாபகம் இருக்கு" என்றார் அப்பா.

"உன் மேலே வெறுப்பா இருந்தாலும், உன்னை நான் நிறையவே பின்பற்றி இருக்கேன்னு இப்பத்தான் தோணுது. உன்னை மாதிரியே உடை, உன்னை மாதிரியே பேச்சு, உன்னை மாதிரியே குழந்தைகளுக்கு விகாரமான பேய்க்கதை சொல்வது, உன்னை மாதிரியே உலகத்தை வெல்லும் உருளைக்கிழங்கு கறி செய்வது..." ரகு சிரித்தான். "அப்பா, உன்னோட சுமுகமா, சமாதானமா பேசுவேனென்று நினைச்சது கூடக் கிடையாது" என்றவன், திடீரென்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதான்.

"எதுக்கு அழறே?" என்றார் அப்பா.

"இந்த மாதிரி பேச்சுப் போட்டி, காமிக்ஸ் புக், உருளைக்கிழங்கு கறியை விட்டா உன்னை வாழ்த்திச் சொல்ற மாதிரி எனக்கு எதுவுமே தோணலையே அப்பா? உன்னை மனமார வாழ்த்தாவிட்டாலும் வெறுக்காமலிருந்திருப்பேனே? என்னை மன்னிச்சுடு அப்பா"

"பரவாயில்லை... இதுவே நீ எனக்கு செய்த பெரிய உதவிதான்" என்றார் அப்பா.

"அப்போ, அடுத்த நிலைக்குப் போயிடுவியா?" என்றான்.

"தெரியாது. வாய்ப்பு வரும் போதுதான் தெரியும்" என்றார்.

"அப்பா... எனக்கும் உன் கதி வந்துடுமோனு பயமா இருக்கு" என்றான்.

அப்பா முதல் முறையாக அவன் தோள்களை அணைத்துப் பிடித்தபடி "கவலைப்படாதே. உன்னைப் பத்தி நல்லதா நினைக்கிறவங்க அதிகம். அப்படி இல்லாவிட்டாலும், உனக்கு என் கதி வராது. உயிரோடு இருக்கும் போது செய்யாத சத்தியம் இப்போ செய்யறேன்... உனக்கு என் கதி ..உனக்கு என் கதி வராது.. வரவிடமாட்டேன்" என்று அவன் தோள்களை இறுக்கி லேசாய் உலுக்கினார். முதல் முறையாகக் கிடைத்த அப்பாவின் ஆதரவான அணைப்பை, கண்களை மூடி இதமாய் அனுபவித்தான். கண் திறந்த போது அப்பா அங்கே இல்லை.

    "ஹலோ மிஸ்டர் ரகு..எப்படி இருக்கீங்க? என் பெயர் டாக்டர் தாஸ்" என்றப் பெண்ணை அடையாளம் தெரியாது விழித்தான் ரகு. மெதுவாக அறையைச் சுற்றிப் பார்த்தான். பக்கத்தில் இருந்த மாயாவின் கண்களில் அருவி. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவள், வாய் மூடி ஆயிரம் வார்த்தைகள் பேசினாள்.

அதற்குள் டாக்டர் தாசுடன் வந்தவர்கள் அவனைச் சுற்றி நின்றனர். டாக்டர் தாஸ் பேசினார். "இவங்க டாக்டர் ஷ்னைடர், நியூராலஜிஸ்ட். அவங்க டாக்டர் வில்சன், சைகியேட்ரிஸ்ட். அவங்க டாக்டர் உமர், டாக்டர் அரவிந்த்.. இரண்டு பேரும் மூளை அதிர்ச்சி பற்றி ஆய்வு செய்யறவங்க"

ரகுவின் கைகளை ஆதரவாகத் தொட்டுப் பேசினார் டாக்டர் ஷ்னைடர். "ரெண்டு வாரம் முன்னால், வூஸ்டர் பக்கத்தில் ஒரு விபத்தில் நீங்க சிக்கிக்கிட்டீங்க. வேகமாக வந்த மேக் டிரக் உங்க வண்டியை இருபதடி தூக்கிப்போட்டு.. அடிபட்டு.. நீங்க பிழைத்தது அதிசயம். ஒரு வாரமா கோமாவில் இருந்த நீங்க.. திரும்பி மெள்ள நிதான நிலைமைக்கு வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்" என்றார்.

"இன்னும் ஆய்வு பண்ணிட்டு இருக்கோம். உங்க கோமாவுக்குக் காரணம் மூளை அதிர்ச்சி. குடிபோதை, அதனால் விளைந்த ஹைபாக்சிக் ஹைபாக்சியா, இலக்ட்ரோலைட் பற்றாக்குறை.. அதுக்கு மேலே நாற்பது மைல் வேகத்தில் தூக்கியெறியப்பட்டு அடிபட்டது... எல்லாமே காரணமென்று நினைக்கிறோம். யூர் ஓகே நௌ. எங்க எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. உங்க மனைவிக்கு தலைகால் புரியவில்லை. நீங்க அதிர்ஷ்டசாலி. சாவை முத்தமிட்டு வந்திருக்கீங்க" என்ற டாக்டர் தாசுடன் மற்ற அனைவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவன் கண்களை மூடி அப்பாவை நினைத்துக் கொண்டான். "வாழ்வை முத்தமிட வந்திருக்கேன் டாக்டர்".

"அவருக்கு சரியாயிடுச்சா? இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கவேண்டும்?" என்று மாயா டாக்டரிடம் கேட்டது, கேட்டது.

"நன்றாகத் தேறி வருகிறார். டிபிஐ இன்னும் அனலைஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். ஜிசிஎஸ் மற்றும் ஆர்-லேஸ்.. அதாவது அவர் கோமாவில் விழுந்து மீண்ட அளவுகளைக் கண்காணிச்சிட்டிருக்கோம். மூளையின் அதிர்ச்சி பயப்படும்படி இல்லை. அவருடைய இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் அளவு சரியாகி விட்டதால் இனிமேல் கவலையில்லை.. இஞ்சுரி அன்ட் இன்டாக்சிகேஷன் இன்டியூஸ்ட் கோமடோஸ். அவருக்குச் சரியாகிவிடும். இன்னும் இரண்டு வாரம் பொறுத்து டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யலாம்" என்ற டாக்டர் தாசுடைய வார்த்தைகள் முடியுமுன் தூங்கி விட்டான்.

    ஒரு மாதம் கழித்து வீடு திரும்பியவன், வேலையை விட்டான். "ஏன்" என்ற மாயாவிடமும் வேதாவிடமும் "இனிமேல் வீட்டிலிருந்தபடி ஏதாவது வேலை பார்க்கப் போகிறேன். உங்களோடு அதிக நேரம் இருக்கலாம்னு தான்" என்றான்.

"வீட்டிலிருந்தா உனக்கு போரடிக்குமே டாடி. அப்புறம் எங்களைப் போட்டு போரடிக்காதே டாடி" என்ற மீராவைச் செல்லமாகத் தலையில் தட்டினான். "டீல் வித் இட், யங் லேடி".

உள்ளேயிருந்து எடுத்துத் தூசுதட்டி, புதிதாக மாட்டியிருந்த அப்பாவின் படத்தைப் பார்த்துக் கேட்ட தாரா, "யாரிது?" என்றாள்.

"உங்க தாத்தா. இப்ப உயிரோட இல்லை" என்றான்.

"உயிரோட இருந்தா, அவருக்கு எங்களைப் பிடிக்குமா டாடி?"

"கண்டிப்பா"

"எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு டாடி. டூ யூ மிஸ் ஹிம்?". தாராவின் அடுத்த கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. 'அப்பா.. என்னால் நீ அடுத்த நிலைக்கு போகிறாயோ இல்லையோ, என் குழந்தைகளால் நீ கண்டிப்பாக அடுத்த நிலைக்குப் போவாய்' என்று நினைத்துக்கொண்டான். அதற்குள் பத்து கேள்விகள் கேட்டு எதற்கும் பதில் வராததால் கேள்வி கேட்பதை நிறுத்தி, அவனைக் கட்டிப்பிடித்து மடியில் ஏறியமர்ந்து கொண்ட தாரா, "ஐ லவ் யூ டாடி..யூ ஆர் த பெஸ்ட் டேடி இன் த வர்ல்ட்" என்றாள்.

வாழ்த்துவதற்கு காரணம் தேடாத மழலையின் நேர்மையில் உருகிப்போனான் ரகு. 'உனக்கு என் கதி வராது.. வரவிடமாட்டேன்' என்ற அப்பாவின் சத்தியம் நினைவுக்கு வந்தது.

2011/10/03

குருமா

போக்கற்ற சிந்தனை



                          ப்போதெல்லாம் இருபது வினாடிகளுக்குள் என்னால் முடிவெட்டிக் கொள்ள முடிகிறது. இது வசதியா வருத்தமா? முடிவெட்ட இருபது வினாடியானாலும் பத்து நிமிடமானாலும் ஒரே ரேட். பதினைந்து டாலர். இப்பொழுது சொல்லுங்கள், வசதியா வருத்தமா? முடியைப் பற்றி முடிக்குமுன், இன்னொன்று. சமீபத்தில் முடியலங்காரப் பரேட் ஒன்று நடந்தது. பொதுவாக ந்யூயோர்க், பேரிஸ், மிலான் நகரங்களில் நடப்பது, யார் செய்த பாவமோ சிகாகோவில் நடந்தது. முடியிருப்பவர்கள் மட்டுமே போவார்கள் என்று நான் ஒதுங்கி நின்றாலும் சில படங்களையும் விடியோக்களையும் பார்த்தபோது ஐயோ என்றிருந்தது. இரண்டாவது முடியலங்காரப் படத்தைப் பார்த்தும் முதலில் அதிர்ந்தேன். பின்புறத்தில் இத்தனை முடியா? நல்லவேளை, மயில்தோகை.

ஒன்று நிச்சயம். என்ன பிடுங்கிக் கொண்டிருந்தாய் என்று இவர்களை யாரும் கேட்க முடியாது.

                                                                  பிடுங்குவதைப் பொருத்த வரையில் ரிபப்லிகன் கட்சிக்காரர்களை அடித்துக் கொள்ள முடியாது. தங்கள் கட்சியில் வெற்றி பெறக்கூடிய, தகுதி வாய்ந்த, எவரையும் தேட முடியவில்லையா? அல்லது, பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலேய ஆளுமை மனப்பான்மையா? அல்லது இரண்டுமா தெரியவில்லை. ஓசைப்படாமல் டிக் சேனி அதிர்வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் டெமோக்ரேட்களை குப்பையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் பாணியில் சொல்லிக்கொண்டிருந்தவர், திடீரென்று ஹிலெரி க்லின்டன் ஒபாமாவை விட சிறந்த அதிபராக விளங்கியிருப்பார் என்கிறார். என்றைக்கோ அறிந்த விஷயம். ஒபாமாவுக்கு எதிராக ஹிலெரியை ஆதரித்த என் போன்ற எத்தனையோ பேருக்குத் தெரிந்த விஷயம். இருந்தாலும் சேனியின் விஷமம் இந்த நேரத்தில் வெளிப்படும் சூட்சுமத்தை டெமோக்ரேட் வாக்காளர்கள் புரிந்து கொண்டால் சரிதான். இரண்டு உண்மைகள் இதிலிருந்து புரிகின்றன. ஒன்று: ஒபாமா மட்டையா இல்லையா என்ற சந்தேகம் தோன்றினாலும், டிக் சேனி குட்டை என்பது சந்தேகமறப் புரிகிறது. இரண்டு: கொஞ்சம் யோசித்ததில், ஒபாமா மட்டை என்பதும் புரிகிறது. ஹ்ம்ம்ம்.. மட்டை மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார் போலிருக்கிறது.

ஏழரை நாட்டு சனி, எட்டு வருடம் என்பார்கள். சாதனைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தவன், இப்பொழுது சனியையும் நம்பத் தொடங்கிவிடுவேன் போலிருக்கிறதே?

                                                                  சாமாவைத் தீர்த்துக் கட்டியது ஒரு சாதனை. ஹிலெரி அந்த முடிவை எடுத்திருப்பாரா என்பது சந்தேகமே. திருவாளர் மட்டையின் துணிச்சலைப் பாராட்ட விரும்பும் அதே நேரத்தில், எப்படி இருந்தாலும் அந்த முடிவைச் செயல்படுத்தியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இதை வைத்துக்கொண்டே அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைத்த மட்டைக்கு, அடிவயிறு கொஞ்சம் கலங்கத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. நாலு வருடங்களாக நாட்டுக்குத் தேவையான ஒன்றையும் பிடுங்கவில்லை. அமெரிகாவின் இன்றைய தேவை வேலைவாய்ப்பு என்று திடீர்ப்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறார், திருவாளர் மட்டை. 'ஆகா, ஓகோ, என்ன அறிவு!' என்று இடதுசாரி மீடியா மொத்தமும் மட்டைக்கு சிவப்புக்கம்பளம் விரித்து ரோஜாப்பூப் பாராட்டுக்களைத் தூவிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் க்ரெடிட் ரேடிங் குறைந்து போகும் அளவுக்கு உள்நாட்டு வெளிநாட்டு வணிகமும் பொருளாதாரமும் வளர்ச்சியும் கேடுகெட்டுப் போனதற்கு இந்த ஆட்சி பொறுப்பில்லையாம், முந்தைய ஆட்சியின் தவறுகள் இன்னும் பாதிக்கின்றனவாம். மட்டையின் திருவாய்மொழி. அதையும் இந்த நவராத்திரி நன்னாளில் அத்தனை மீடியாவும் ஆமோதித்து சுண்டல் போல் வினியோகித்துக் கொண்டிருக்கின்றன. மட்டைக்கு பாராட்டு மலர்களைத் தூவிக்கொண்டிருக்கின்றன.

உங்கள் நாக்கையும் நீட்டுங்கள், சேர்த்துப் பிடுங்கிக் கொள்கிறேன். ரொம்பத் தூவாதீங்கடா. தூ!

                                                                  மீபச் சனிக்கிழமையொன்றில் சினிமா பார்த்தேன். பெரிய விஷயம் இல்லை. எனினும், பிள்ளைகளுக்காக சில படங்கள் போவேனேயொழிய, எனக்காகத் தியேடர் போய் திரைப்படம் பார்ப்பது அபூர்வம். வருடத்தில் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அதிசயம். சென்ற சனிக்கிழமை பார்த்தது, killer elite என்ற ஆங்கிலப்படம். (ஹிஹி.. இங்கிலிஷ் டைட்டிலோட இப்பல்லாம் தமிழ்ப்படம் கூட வருதுங்க, அதான் :). ராபர்ட் டி நிரோவுக்காகப் பார்த்தேன். ஸ்டேதமும் ஒவனும் அடித்து நொறுக்கும் பொழுது, டி நிரோ வன்முறையை வார்த்தைகளால் காட்டுவதைப் பார்த்து ரசித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அடிதடிக் காட்சிகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், உடனடியாக யாரையாவது அடித்து நொறுக்க வேண்டும் போல..கை காலெல்லாம் அப்படிப் பற்றிக் கொண்டு வந்தது. படம் சுமார். தமிழ்ப்படமே மேல் என்று தோன்றியது. (ஒரு பேச்சுக்காகச் சொன்னேன் :)

இந்தப்படம் தமிழில் வந்தே தீரும் அபாயம் உண்டு. கமலகாசன் நடிக்கலாம். பிறகு, பதினைந்து வருடங்களாக இந்தக் கதையைத் தன் மனதில் உருட்டிக் கொண்டிருந்ததாகக் கூசாமல் உண்மை பேசலாம்.

                                                                  சென்ற வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து இன்று திங்கள் மாலை வரை எங்கள் குடியிருப்பில் மின்சாரம் தொலைந்தது.

வெள்ளிக்கிழமை மாலை வீடு சேரும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தேன் எனலாம். என்னைப் போல் ஒரு கையால் காரோட்டியவர்கள் எல்லாருமே மறு கையில் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது. சிகாகோவில் சாதாரணமாகவே காற்று பிய்த்துக் கொண்டு போகும். windy city என்றப் பெயர்க்காரணம். வெள்ளிக்கிழமை மாலை, மழையுடன் சேர்ந்து நாற்பது மைல் வேகத்தில் அசாத்தியக் காற்று, ஓடும் வாகனங்களைக்கூட அசைத்து நகர்த்தியது. திகில். போதாக்குறைக்கு மாலைச்சூரியனின் வெண்மை. கருமேகமில்லாத வானத்திலிருந்து மழை பொழிவதை இப்போதுதான் முதல் முறை பார்த்தேன். மாலைச்சூரியனின் செம்மை தொலைந்து, உச்சிவேளை சூரியன் போல் வெள்ளை வெளேறென்று horizonல் கண்ணைக் கூசுவதையும் இப்போதுதான் மு மு பா. திகிலோ திகில். ஜப்பான், கொரியக் கார்கள் எல்லாம் விழி பிதுங்கி ரோட்டோரமாக ஒதுங்கி நிற்க, அமெரிக்க ஜெர்மனியக் கார்கள் மட்டும் சுகப்பிரயாணம் செய்ததையும் இ தா மு மு பா. எல்லாம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்தால்... இருள். மின்சாரம் இல்லை. ஏறக்குறைய இருபது வருடங்களில் இதுதான் முதல் மின்சாரவெட்டு. பிள்ளைகளுக்கு ஆச்சரியம். பிறந்ததிலிருந்து இன்றுவரை மின்சாரவெட்டோ குறையோ பழகாதவர்களுக்கு, இருள் விசித்திரமாக இருந்தது. 'ஐபாட் சார்ஜ்' செய்ய மறந்த என் பெண் முதலில் கொஞ்சம் புலம்பினாலும், மெழுகு விளக்கு, பேட்டரி விளக்கு ஒளியுடன் டிவி இல்லாத "அந்தக்கால" வாழ்க்கை வாழ்ந்தாள். என்றைக்குமே இல்லாத அளவுக்கு "குடும்ப" உணர்வோடு இரண்டு நாட்களைக் கழித்தோம். "இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே?" என்ற என்னிடம், "dad, எதையும் கிடைக்கும் பொழுது அனுபவித்துக் கொள்ள வேண்டும். நிலைக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்" என்று நான் வேறு எதற்கோ எப்போதோ அவளிடம் சொன்னதை நினைவில் வைத்துத் திருப்பிச் சொன்னாள்.

touche!

                                                                  சிலர் பதிவெழுதுகிறார்கள். சிலர் படிக்கிறார்கள். சிலர் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். சிலர் எழுதாமல் படிக்க மட்டும் செய்கிறார்கள். சிலர், தான் பெற்ற இன்பம் வையம் பெறப் பகிர்ந்து கொள்கிறார்கள். 'படித்ததில் பிடித்தது' என்று நண்பர் பாலராஜன்கீதா அவ்வப்போது பதிவு digest அனுப்புகிறார். அட்டகாசம். எழுதுவதை நிறுத்திவிட்டு இவருடைய இமெயிலை மட்டும் படித்தால் போதும் என்று தோன்றும். அவர் அனுப்பிய சில ஜோக் பதிவுகளை நினைத்து முடிவெட்டிக் கொள்ளும் போதோ நடுத்தெருவில் நிற்கும் போதோ பலமாகச் சிரித்துக் கொண்டிருப்பேன். மிரண்டு போய் காதை வெட்டிவிடுவார் முடிவெட்டி. அல்லது நடுத்தெருவில் ஐந்து காசு பத்து காசு போடுவார்கள்.
     :அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
     :அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்

சிரிக்க வைக்கும் பாலராஜன்கீதா வாழ்க.

                                                                  ப்படியோ தடுமாறிச் சில பதிவுகளில் இறங்கி, படித்ததும் பிரமித்து விலகமுடியாமல் ப்லாகின் முதல் பதிவிலிருந்து தேடிப் படித்த அனுபவமுண்டா?. இவை, இனிய வலை விபத்துக்கள் என்பேன். சமீபத்தில் அப்படி விபத்துக்குள்ளாகி விழுந்த இரண்டு பதிவுகளைப் பற்றிச் சொல்கிறேன். சமுத்ரா எனும் வலைப்பூவை எழுதுகிறவரின் கைகளைப் பிடித்து இரண்டு நாள் குலுக்க வேண்டும் போலிருக்கிறது. அண்டம், ஆன்மீகம், அறிவியல், நையாண்டி, கவிதை என்று எழுதித் தள்ளுகிறார். கவிதைகளைத் தவிர மற்றவை அருமை. இவருடைய அறிவியல் பதிவுகள், தமிழுக்கு ஒரு வரம். நான் பிரமித்துத் தொடரும் இன்னொரு ப்லாக் தமிழ் தொகுப்புகள்.

இவர்களின் பொறுமைக்கும் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் வந்தனம்.

                                                                  திவுகளைப் படிப்பது ஒருபுறம். பின்னூட்டப் படிப்பும் அதற்கு இணையான சுவாரசியம். சிலரின் பின்னூட்டங்கள் வியக்க வைக்கின்றன. மஞ்சுபாஷிணியின் பின்னூட்ட sincerity, poised to become blogworld legend என்று நினைக்கிறேன். 'அருமை', 'பயனுள்ள பதிவு' போன்றோ பதிவின் கடைசி பத்து வரிகளில் இரண்டை வெட்டி ஒட்டி 'மிகவும் கவர்ந்த வரிகள்' என்றோ canned பின்னூட்டமிடாமல், ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதுகிறார். சில சமயம் பதிவை விட நீளமாகப் பின்னூட்டமிடும் இவர், பதிவெழுதுவோரின் கனவு வாசகர். Ganpath என்றொருவர் ஜவஹரின் பதிவில் பின்னூட்டமிடுகிறார். இவருடைய பின்னூட்டங்களைப் பிற பதிவுகளில் காணோம். இவருடைய பின்னூட்டத்துக்காகவே ஜவஹர் பதிவுகளைப் படிப்பதுண்டு. ஒருவேளை ராமசுப்ரமணியன் போல, வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுகிறாரோ ganpath? எங்கள் பிலாக் ஸ்ரீராம், பின்னூட்ட நாசூக். Ganpath பின்னூட்டக் கஞ்சன் :-) என்றால், ஸ்ரீராம் பின்னூட்ட வள்ளல். எந்த ப்லாகில் பார்த்தாலும் எங்கள் ப்லாக் ஸ்ரீராமின் பின்னூட்டம் இருக்கிறது.

யாதும் ப்லாகே, யாவரும் கேளிர்.

                                                                  ங்கள் ப்லாக் ஒரு முறை சித்திரப் பயிற்சி நடத்தி படம் வரைந்து அனுப்பச் சொன்னார்கள். 'pear' பழ வடிவில் ஒன்றைக் கொடுத்து அதன் அடிப்படையில் படம் வரைந்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள். என்னுடைய சைக்கிள் படத்தை வெளியிட்டவர்கள், வலதுபக்கப் படத்தை ஏனோ வெளியிடவில்லை. தணிக்கையா அல்லது தயக்கமா தெரியவில்லை. அதே போல், யாதோன் கி பாராத் படம் பற்றிய ஒரு பின்னூட்டத்தையும் நீக்கி விட்டார்கள். ஒருவேளை RVS படிக்கத் தவறியிருக்கலாம் என்பதற்காக, அந்தப் பின்னூட்டம் இதோ, நினைவிலிருந்து:
    யாதோன் படத்தை மறக்கமுடியாமல் செய்த அனுபவம் இது தான்.
    படத்தில் தர்மேந்திரா ஜீனத்திடம் "ஆப் கி நாம் க்யா ஹை?" என்பார்.
    ஜீனத் சற்று இழுத்து, "சு னீ தா" என்பார்.
    தியேடரில் ஒரு குரல்: "தந்துட்டு நான் என்னமா செய்யுறது?"

                                                                  யாதோன் படத்தை நானும் ரமணியும் இன்னும் சில பம்மல் நண்பர்களும் பார்த்தது இன்றைக்கும் நினைவிருக்கிறது. தாம்பரம் நேஷனல் தியேடர் என்று நினைக்கிறேன். தியேடரில் குரல் கேட்டதும் சிரித்துச் சிரித்து இருமல் வந்துவிட்டது ரமணிக்கு. ரமணி எந்த நேரத்திலும் அமைதியாக இருப்பான். அதிர்ந்து கூடப் பேசமாட்டான். கோபமோ ஆத்திரமோ துளிக்கூட இல்லாத ரமணி, போன மாதம் மாரடைப்பில் இறந்துவிட்டான். ரமணியின் முத்திரை பதிந்த என் விடலை நாட்களை நினைக்கும் பொழுது உள்மனம் புன்னகைக்கிறது. க்ரிகெட் விளையாட்டில் மீடியம் பேஸ், ஸ்பின்.. அப்புறம் காட்டான் சுரேசுடன் சேர்ந்து அவ்வப்போது சிக்ஸர்களை காட்டடி அடிப்பான். ஹாக்கி விளையாடும் பொழுது கோல் கீப்பர் என்று சுகமாக நின்று கொண்டுவிடுவான். ரவுடித்தனத்தில் விருப்பமில்லாவிட்டாலும், எங்களுக்காக உடன்பட்டுக் கூடவே வருவான். என் குழுவின் மற்ற நண்பர்கள் என்னுடைய புரட்டுக்களை 'பட்சவண்டா' என்று ஏற்கையில், 'உடான்ஸ்' என்று வகைப்படுத்திய உறுதி நெஞ்சக்காரன். என்னைப் போலவே ரமணிக்கும் படிக்கப் பிடிக்கும். குறிப்பாக, காதல் கதைகள் மற்றும் science fiction. ரமணியுடன் அடித்தக் கூத்துக்களில் சிலவற்றை என் சிறுகதைகளில் சேர்த்திருக்கிறேன்.

நட்பின் மரணம், தாங்கமுடியாத வலி.

                                                                  லிக்கும் காதல் கதை ஒன்று.

டாம் டூலியும் ஆன் பாஸ்டரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் பழகினார்கள். ஆனுக்கு ஒரு சகோதரி, மேரி. ஆனும் மேரியும் டாமும் சிறுவயது முதல் பழகினார்கள் என்றாலும், டாமும் ஆனும் நெருக்கமாகப் பழகினார்கள். காதல் மலர்ந்தது. ஆன் காதலிப்பது தெரிந்தும், மேரி டாமைக் காதலித்தாள்; ஆனால் தன் காதலைச் சொல்லவில்லை. டாமுக்கோ ஆனை மட்டுமே காதலிக்கத் தோன்றியது. காதலிக்கத் தொடங்கிய வேளையில், டாம் போருக்குப் போக நேர்ந்தது. போரில் டாம் இறந்துவிட்டான் என்று செய்தி கிடைத்ததும், ஆன் துடித்துப் போனாள். சில வருடங்களில் இன்னொருவரை மணமுடித்தாள். சொல்லி வைத்தாற் போல் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் டாம் திரும்பி வந்தான். சாகவில்லை, செய்தி பொய் என்று தெரிந்ததும் ஆன் இன்னும் துடித்துப் போனாள். ஆனால் அவள் கர்ப்பமாகியிருந்தாள். மேலும் அவளுடைய கணவனோ, அவளை உயிருக்கு மேலாக நேசித்தான். ஆனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. புதைந்து போயிருந்த காதல் உணர்வெல்லாம் மீண்டும் துளிர்விட்டது. மனமுடைந்த டாம், அவர்கள் வாழ்வில் குறுக்கிடுவதில்லை என்று ஆனின் கணவனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டுக் கிளம்ப முயன்ற போது, மேரியைச் சந்தித்தான். மேரியுடன் பழகத் தொடங்கினான். சிறுவயதுப் பழக்கம் மெள்ளக் காதலாக மலரத் தொடங்கிய நேரத்தில், டாம் தயங்கினான். தன்னால் அவ்வளவு எளிதில் ஆனை மறக்க முடியாதென்றான் மேரியிடம். அவர்களிடையே சிறு ஊடல் நடந்ததை ஊரார் பார்த்தார்கள். அன்றிரவு மேரி கொலை செய்யப்பட்டாள். கழுத்திலும் மார்பிலும் கத்திக்குத்துடன் மேரி இறந்ததும், ஊடல் சண்டையைப் பார்த்த ஊரார் டாம் கொலை செய்திருக்க வேண்டும் என்று குற்றம் சுமத்திச் சாட்சி சொன்னார்கள். வழக்கை விசாரித்து, அவனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்தார்கள். தூக்கு மேடையில் கடைசி நிமிடத்தில், "ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். சிவாஜிகணேசன் போல் தோளை உயர்த்தி கைகளை விரித்த டாம், "கட்டியணைக்கும் கைகள் இவை, கத்தியா செருகும்?" என்றான். ரைட்டோ என்று சொல்லி அவனைத் தூக்கிலிட்டார்கள். ஆன் மட்டும் அழுது கொண்டே இருந்தாள். பொறாமையினால் மேரியைக் கொன்றது ஆன் என்றும், ஆன் கொலை செய்தாள் என்று தெரிந்தும் அவள் மேலிருந்த காதலினால் டாம் தானே குற்றத்தை ஏற்றான் என்றும் பேசிக்கொண்டார்கள். 2001ல் டாம் நிரபராதி என்று தீர்ப்பளித்தார்கள். டாம் தூக்கிலிடப்பட்டது, 1868ல்.

ஒரு பிரபல நாட்டுப்புறக்கூத்து, பல பாடல்கள், சில திரைப்படங்கள் என்று இந்தக் கதையைத் திரித்துக் கொண்டே இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்தக் கதையையொட்டி ஐம்பதுகளில் வந்த ஒரு பாட்டு, பத்து வருடங்களுக்குப் பின் எம்எஸ்வி இசையில் வெளியான ஒரு முதல்தரக் காதல் பாட்டுக்கு மெட்டானது.

காதல் பாட்டு, எம்எஸ்வி... அடடா, தமிழ்ச் சினிமாவின் #1 காதல் பாட்டைப் பற்றி இன்னும் எழுதவே இல்லையே?



பிற்சேர்க்கை: bogan ஸ்பெஷல்.
    Kingston Trio ஐம்பதுகளில் பல இனிமையான பாடல்களைக் கொடுத்தார்கள். இந்த விடியோ இடம்பெறும் 1981 வருட reunion video album, சில நூலகங்களில் கிடைக்கிறது. இது நெட்டில் சுட்டது. இந்த reunion விடியோ எடுத்தபோது, இவர்களுக்கு 198 வயது - குரல் எப்படி கிண்ணெண்று இருக்கிறது!