2011/10/12

தந்தைசொல்
    "அப்பா.. நீயும் அம்மாவும் திடீர்னு செத்துப் போயிட்டா எங்க கதி என்ன ஆகும்?"

இரவின் தனிமையில் கார் ஓட்டிக் கொண்டிருந்த ரகுவுக்கு, பதிமூன்று வயது வேதாவின் கேள்வி நினைவுக்கு வந்துத் தாக்கியது.

வருமான வரி இலாகாவிற்கு எதிரான வழக்கில் கம்பெனிக்கு ஆதரவாக வெளிவந்தத் தீர்ப்பைக் கொண்டாடும் வகையில், மாலை டின்னரின் போது ரகுவை எல்லோரும் பாராட்டிப் புகழ, வழக்கத்தை விட அதிகமாகக் குடித்திருந்தான். விருப்பமான ஸ்டர்லிங் கேபர்னே. நறுமணமும், சுவையும் சரியாகக் கலந்த 1998ம் வருட அறுவடையின் திராட்சை மது. உடன் வேலை பார்த்த வக்கீல்களுக்கும் மற்றவருக்கும் நன்றி சொல்லி, க்ரீன்விச்சிலிருந்து விடைபெற்றுக் கிளம்பும் போது மாலை மணி ஏழுக்கு மேலாகிவிட்டது. தானியங்கி வேகக் கட்டுப்பாட்டு விசையை ஐம்பத்தேழு மைலுக்குப் பொருத்திவிட்டு, காரை நிதானமாகச் செலுத்திக்கொண்டிருந்தான். காரின் எம்பி3 இணைப்பிலிருந்து அசரீரியாய் வந்தப் பழைய தமிழ்ப்பாடல் இதமாய் நெஞ்சைப் பிடித்துவிட்டது. இரவின் அமைதி, தனிமை, மதுவின் போதை எல்லாம் கலந்த நிலையில் பழைய சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது ரகுவுக்கு உலகமே மறந்துவிடும். என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும் இன்பநிலை வெகு தூரமில்லை...

இந்த வேகத்தில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாஸ்டன் போய்விடலாம். அவசரமே இல்லை. வார விடுமுறைக்கு மூன்று குழந்தைகளையும் நேன்டகட் தீவுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லியிருந்தான். அவர்களைப் பற்றி நினைத்தபோது, மூத்தவள் வேதா முதல் நாளிரவு கேட்டக் கேள்வி மீண்டும் நினைவுக்கு வந்து வாட்டியது.

பதிமூன்று வயதுச் சிறுமி கேட்கும் கேள்வியா இது? அது போல் தனக்கு ஏன் தோன்றவில்லை பதிமூன்று வயதில்?

இதே கேள்வியை அவன் கேட்டிருந்தால் அப்பா என்ன செய்திருப்பார் என்று நினைத்துக்கொண்டான். "அதிகப் பிரசங்கி" என்று கன்னத்திலும் முதுகிலும் இரண்டு விழுந்திருக்கும். ஏதோ உந்துதலில் கன்னத்தைத் தடவிக் கொண்டான். வேதா கேட்ட கேள்வி அவனை உறுத்தினாலும், தன்னால் அப்படி அதிகப்பிரசங்கி என்று சொல்லிக் கண்டிக்க முடியாமல் போனது அவனுக்கு வியப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது.

தனிமையில் கார் ஓட்டிச் செல்லும் போது வேண்டாத எண்ணங்கள் இப்படித் தோன்றி வாட்டும். தலையைக் குலுக்கி எண்ணங்களை உதறினான். பெட்ரோல் குறைந்திருப்பதைக் கவனித்து, அடுத்து வந்த பிரிவில் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஷெல் பயணிகள் நிலையத்த்துள் நுழைந்தான். எதிரே ஒரு பதினெட்டு சக்கர மேக் டிரக் வேகமாக வந்து அவனைத் தாண்டிச் சென்றது.

காபி சாப்பிடலாமென்று ஷெல் நிலையத்துள் இருந்த டங்கின் டோனட்ஸ் கடைக்குள் நுழைந்தபோது முதல் முறையாக அவரைப் பார்த்தான்.

அப்பாவா? இங்கேயா? ரகுவால் நம்ப முடியவில்லை. இதெப்படி சாத்தியம்? அவனுடைய அப்பா விபத்தில் இறந்து போய் முப்பது வருடங்களுக்கு மேலாகியிருந்தது.

அப்பா இறந்த போது ரகுவுக்கு வருத்தமேற்படவில்லை. இனிமேல் அடி, உதை கிடையாது என்கிற மிகையான விடுதலை உணர்ச்சி கலந்த, எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, ஒருவித மகிழ்ச்சி இருந்ததே தவிர, வருத்தம் கொஞ்சம் கூட இல்லை.

அப்பா இறந்த செய்தி கிடைத்த அன்று இரவு,
    இந்த வருடத்தின்
    இரண்டாவது சுதந்திர தினம்
என்று தன் கவிதை நோட்டுப் புத்தகத்துக்குள் தேதியிட்டு எழுதி வைத்தான்.

ஆடாப்சி முடிந்து, பாதுகாப்புக்காக எம்பாம் செய்யப்பட்டு, தலையிலிருந்து கால்வரை துணிச்சுற்றிக் கட்டிவந்த உடலில் ஒன்றும் சரியாகத் தெரியாததால், அப்பா ஒருவேளை இறக்கவில்லையோ என்று அவனுக்கு அடிக்கடி தோன்றும். விபத்தை சுயநலத்துக்கு உபயோகித்து அவர்களைவிட்டு ஓடிப் போன ஒரு கோழை என்றுகூட அப்பாவைப் பற்றிப் பலநாள் நினைத்திருந்தான். அவன் வாங்கிய அடி உதை மட்டும் நினைவுகளில் தேங்கியிருந்ததே தவிர, அப்பாவைப் பெரும்பாலும் மறந்து விட்டிருந்தான்.

காபி வாங்க நகர்ந்தபோது மறுபடியும் பார்த்தான். மூலையில் உட்கார்ந்திருந்தவர் அவனுடைய அப்பாவே தான்! சந்தேகமில்லை.

அப்பாவைப் பார்த்ததும் குலை நடுங்கியது என்றாலும், வயதாகி விட்ட தைரியத்தில் அவரைக் கவனித்தான். உண்மையாகவே அப்பாதானா பார்த்துவிடலாம் என்று எண்ணி, காபி வாங்காமலே அவரெதிரில் சென்று உட்கார்ந்தான். அவனை ஏறிட்டுப் பார்த்தவர், எழுந்து, இடத்தை விட்டு நகர்ந்தார். அடையாளம் தெரியவில்லையா, இல்லை நடிக்கிறாரா? முப்பது வருஷமாகிறதே, ஒரு வேளை அடையாளம் தெரியவில்லையோ என்னவோ... அவரை மட்டும் எனக்கு நினைவிருக்கிறதே?

ஒன்றிரண்டு முறை திரும்பிப் பார்த்தபடி, கடையை விட்டு வெளியேறியவரைக் கவனித்துக் கொண்டிருந்தான் ரகு. அவரைப் பின்தொடர்ந்து பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தான். அப்பா சிகரெட் கடைக்குள் நுழைவதைக் கண்டு வேகமாகப் பின்தொடர்ந்தான்.

அவனுக்குப் பனிரெண்டு வயது இருக்கும் போது, வேலையை விட்டு வீட்டிலிருந்த அப்பா, தன்னைப் பல்லாவரம் போய் அவருக்கு வழக்கமான கடையில் சிகரெட்டும் கால்புட்டி விஸ்கியும் வாங்கிவரச் சொன்னது நினைவுக்கு வந்தது.

"ரொம்ப தூரம்பா, ட்ரெயின் ஏறிப் போகணும்"

"போடா நாயே. போய் வாங்கிட்டு வா"

"சரி, பைசா குடுப்பா" என்றான் பொங்கிவந்த கண்ணீரை அடக்கியபடி.

"கணக்குல எழுதிக்கச் சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லி வாங்கிட்டு வா"

"கடைக்காரன் தர முடியாதுனு சொன்னா?" என்று அவன் முடிக்குமுன் கன்னத்தில் விழுந்தது அறை. "எதிர்த்தா பேசறே?" என்றார் அப்பா. "போடா, சிகரெட்டும் விஸ்கியும் இல்லாம இந்தப் பக்கம் வராதே"

அழுதுகொண்டே சமையலறையிலிருந்த அம்மாவிடம் போனான். "ஏம்மா, பார்த்துக்கிட்டே இருக்கியே, தடுக்கத்தான் முடியலை, ஏதாவது சொல்லக் கூடாதா? கடனுக்கு விஸ்கியும் சிகரெட்டும் வாங்கிட்டு வரச்சொல்லி, பனிரெண்டு வயசுப் பையனை அனுப்புறாரே, இதைப் பார்த்துக்கிட்டு உன்னால சும்மா எப்படி இருக்க முடியுது?" என்று அவனால் கேட்க முடியவில்லை. "அப்பா பல்லாவரம் போய் சிகரெட்டும் விஸ்கியும் வாங்கிட்டு வரச்சொன்னார்" என்றான். அலமாரியில் லட்சுமி விக்கிரகக் குங்கும அர்ச்சனைத் தட்டிலிருந்து எட்டணா சில்லறையைத் தேடி எடுத்துத் துடைத்துக் கொடுத்தார் அம்மா. டிக்கெட் வாங்கக் காசு. "கவனமா போய் வா" என்றார்.
தெருக்கோடியின் பள்ளிக்கூட பஸ் நிறுத்தத்திற்குக்கூட வேதாவைத் தனியாக அனுப்பிய நினைவில்லை. ஒரு முறை ஷாஸ் சூபர் மார்கெட்டில் மளிகை வாங்கச் சென்ற போது, இரண்டு கையிலும் நாலைந்து பைகள் இருந்ததால், வேதாவிடம் ஒரு டாலர் கொடுத்து சில்லறை வாங்கி வா என்று சொல்லி, கண் பார்வையிலேயே நின்றுகொண்டிருந்தவனை எல்லார் முன்னிலையிலும் கடிந்து கொண்ட மனைவியின் வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. "அவ குழந்தையில்லையா? உன் கைல நாலு பை இருந்தா என்ன? கீழே வச்சுட்டுப் போக வேண்டியது தானே? அவளைப் போய் வேலை வாங்கறியே, வாட்ஸ் ராங் வித் யூ?"

நினைத்துக் கொண்டிருக்கையில் அப்பா கடையிலிருந்து வெளியே வந்தார். அவனைப் பார்த்தும் பாராதது போல் நடந்து, ஷெல் நிலையம் தாண்டி, வென்டீஸ் உணவகம் தாண்டி, பின்னாலிருந்த ஹாலிடே இன் ஹோட்டலுக்குள் நுழைவதைப் பார்த்தான். விரைந்தான்.

ஹோட்டல் வரவேற்பறையில் யாருமில்லை. சிறிது நேரம் காத்திருந்து விட்டு, பொறுமையிழந்து உள்ளே நடந்தான். வரவேற்பறையைத் தொடர்ந்து சாப்பாட்டுக்கூடம், அதைத் தொடர்ந்து உடற்பயிற்சியறை, சிறுவர்களுக்கான விளையாட்டறை, நீச்சல்குளம். எங்கேயும் காணவில்லை. எங்கே போயிருப்பார்? வரவேற்பறையில் விசாரிக்கலாமென்று திரும்பி வந்தவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

சாப்பாட்டுக்கூட மையத்தில் சப்பளமாக உட்கார்ந்திருந்திருந்த அப்பா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். "நீ என்னைப் பின்தொடர்வது எனக்குத் தெரியும்" என்றார்.

ரகுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இறந்து போய்விட்டாரென்று நினைத்த ஒரு மனிதரை சரியாக முப்பத்தாறு வருடங்களுக்குப் பின் பார்த்தால், என்ன கேட்பது? நல்லா இருக்கீங்களா என்றா? இத்தனை வருடங்களுக்குப்பின் முதன் முறையாகக் கேட்ட அந்தக் குரல், அவனைத் தலை முதல் கால் வரை உபரி வோல்டெஜ் மின்சாரமெனத் தாக்கியது. என்ன பதில் சொல்வது? அன்றிருந்த வேகமும் ஆத்திரமும் அவர் குரலில் இல்லாதது போல் தோன்றியதற்குக் காரணம், உண்மையிலேயே அவர் குரலில் ஆத்திரமும் வேகமும் மறைந்திருந்ததாலா, அல்லது அவன் வளர்ந்து விட்டதாலா? நெஞ்சிலும் வயிற்றிலும் சூடு போட்டாற்போல் வலி. அப்பா! இத்தனை வருடம் பொறுத்துச் சந்திக்கிறோம், ஏன் சுமுகமில்லை? ஒன்றும் சொல்லத் தோன்றாமல், "அப்பா" என்றான்.

"நானேதான்!" என்றார். "என்னை எதிர்பார்க்கவில்லை இல்லையா நீ? ஆனால், நான் உன்னை எப்போதாவது சந்திப்போம்னு எதிர்பார்த்துட்டுத் தான் இருக்கேன்"

நலமா என்று கேட்கவில்லை. வளர்ந்துவிட்டாயே.. திருமணமாகிவிட்டதா, குழந்தைகள் உண்டா.. அட... அம்மா எப்படி இருக்கிறாள் என்று கூட விசாரிக்கவில்லை. நேரே விஷயத்துக்கு வருகிறாரே? உன்னை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். எதற்கு? "எப்படி இருக்கே, அப்பா?" என்றான், மிகவும் தயங்கி.

"எப்படி இருந்தா என்ன இப்போ? ஒருத்தரை ஒருத்தர் பார்த்திருக்கக் கூடாது. பார்த்துட்டோம். இனி நடக்க வேண்டியதைக் கவனிப்போம். உன்னால எனக்கு எத்தனை கஷ்டம்னு புரிஞ்சா சரிதான்"

அவனுக்கு எரிச்சல் வந்தது. என்னால் இவருக்கென்ன கஷ்டம்? என்னுடைய வசனத்தை இவர் பேசுவானேன்? "என்ன சொல்றே நீ? புரியலையே?"

"நாளைக்குச் சொல்றேன். இன்னிக்கு நீ தயாராயில்லை. இதே இடத்துக்கு வா" என்றார்.

"சரிப்பா". பழகிவிட்ட பதில். அவரைக் கடந்து சென்றதற்குத் தன் மீதே ஆத்திரம் வந்தது ரகுவுக்கு. யார் இந்த ஆள், இன்று போய் நாளை வா என்று என்னிடம் சொல்ல? திரும்பினான். "நாளைக்கு எல்லாம் வர முடியாது. எனக்கு வேறே வேலை இருக்கு. இப்பவே சொல்லு, என்னால் உனக்கு என்ன கஷ்டம்?" என்றான் கடுமையாக.

"சொன்னாக் கேளுடா, நாளைக்குப் பேசலாம். போடா. நான் இங்கேயே உனக்காகக் காத்துட்டு இருப்பேன்" என்றார்.

மறுபடியுமா?

ரகுவுக்குப் பத்து வயதிருக்கும். ஒரு நாள் இரவு படுத்துக் கொண்டிருந்தவனை எழுப்பி, "டேய், கடைக்குப்போய் தலைவலித் தைலம் வாங்கிக்கிட்டு வாடா" என்றார் அப்பா.

"கண்ணன் கடை மூடியிருக்கும்பா, மணி பத்தாச்சு" என்றான் ரகு.

"வேறே எங்கேயாவது போய் வாங்கிக்கிட்டு வா, போடா. எனக்கு விக்ஸ் இல்லாமத் தூக்கம் வராது"

"ராதாநகர் போகணும்பா, நாயெல்லாம் துரத்தும்பா" என்றான். சொல்லியிருக்கக் கூடாது.

"நாய் துரத்துமா? உனக்கு என்ன வயசாகுது? ப்லேக்கார்ட், எழுந்திருடா. பெத்த அப்பன் தூக்கம் இல்லாம கஷ்டப்படுறான், உனக்கு நாய் துரத்துமேனு கவலையா? போய் வாங்கிட்டு வா, போடா" என்று முதுகில் ஓங்கி அறைந்தார். எழுந்து கொண்டிருந்த ரகு, குப்புற விழுந்தான். அடுத்த அடி விழுமுன் எழவேண்டுமென்று பயிற்சி சொன்னாலும், முயற்சி தோற்றது. ரகு எழுமுன் மறுபடியும் அறைந்தார் அப்பா. அவன் முகத்தில் ஒரு ரூபாயை வீசியெறிந்து, "இன்னொரு அறை விழுறத்துக்குள்ள இங்கேயிருந்து கிளம்பிடு" என்றார்.

அழுதால் இன்னும் அடித்துவிடப் போகிறாரென்று அழுகையை அடக்கிக்கொண்டு எழுந்தான். "அப்பா, எனக்கு பயமா இருக்குப்பா. லெதர் பேக்டரி மைதானத்துல வெறி நாயெல்லாம் இருக்குபா" என்றான்.

"இன்னுமா நின்னுட்டிருக்கே?" என்று கையை ஓங்கியவரைப் பார்த்ததும் ஓடினான். "வேணாம்பா, அடிக்காதே. நான் போறேன்"

"இருடா, நானும் வரேன்" என்றார் அம்மா. அவனுக்கு ஆச்சரியமும், உள்ளுக்குள் நிம்மதியும் ஏற்பட்டது.

"அவன்தான் போகணும்னு நான் சொல்லலை?"

"நான் அவன் கூட போயிட்டு வரேன். வழியில் ஏதாவது ஆச்சுனா அவனுக்கும் கஷ்டம், உங்களுக்கும் தைலம் கிடைக்காது" என்ற அம்மாவை அந்த நிமிடம் வணங்கத் தோன்றியது ரகுவுக்கு.

என்ன தோன்றியதோ அப்பாவுக்கு, "சரி சரி, நானே துணைக்கு வரேன், இரு" என்றார். அவனுடன் தெருமுனை வரை வந்தவர், நின்றார். "என்னடா, நாய்னா பயமா?"

"ஆமாம்பா. இங்கேயிருந்து ஜிஎஸ்டி ரோட் வரைக்கும் தெரு நாயா இருக்கும்பா"

அப்பா திடீரென்று, "நான் இங்கேயே உனக்காகக் காத்துக்கிட்டு இருப்பேன், நீ போய் வாங்கிட்டு வா" என்றார்.

அதிர்ந்து போனான். "அப்பா" என்றவனைப் புறக்கணித்து, "போடா. போறியா, இல்லை ஒரு கல்லடிச்சு அந்த நாய்க் கூட்டத்தைக் கலைக்கட்டுமா?" என்றார்.

"வேணாம்பா, நான் போறேன்" என்ற ரகு, கெஞ்சினான். "நீ இங்கேயே இருப்பா, ப்ளீஸ்".

பத்தடி நடந்திருப்பான், திரும்பிப் பார்த்தால் அப்பாவைக் காணவில்லை. தனிமையில் போனால் நாய் கடி சாத்தியம். வெறும் கையுடன் திரும்பினால் அப்பா அடி சத்தியம். எதற்கு பயப்படுவது?

நாய் மேல் நம்பிக்கை மேலோங்க, வேகமாக நடந்தான். தைலம் வாங்கிக்கொண்டு ஓட்டமாகத் திரும்பி வந்தபோது, மூன்று நாய்கள் அவனை வழியில் விட்டுவிட்டுத் துரத்த, "முருகா, முருகா" என்று உரக்கச் சொல்லிக் கொண்டே மூச்சு வாங்கப் பத்து நிமிடத்துக்கு மேல் ஓடியவன், வீட்டு வாசல் வந்தபின் நின்றான். "ஏம்பா, சின்னப் பையனா இருக்கே, உங்க வீட்லந்து யாரும் வரக்கூடாதா? கவனமாப் போ, இருட்டுல" என்ற கடைக்காரரின் வார்த்தைகள் இன்னும் எதிரொலிக்க, அடக்க முடியாமல் அழுதான். கடவுளே, எனக்கு ஏன் இந்த மாதிரி ஒரு அப்பாவைக் கொடுத்தாய்?

"வேண்டாம், நீ எனக்காகக் காத்திருந்த கதை பத்து வயசுலயே தெரிஞ்சு போச்சு. என்ன விஷயம்? இப்பவே சொல்லு. நான் போகணும், எனக்கு வேலை இருக்கு" என்றான்.

"உன் கோபமும் ஆத்திரமும் அடங்கினாத்தான் உன்னுடன் பேச முடியும். நாளைக்குப் பேசலாம், சொன்னா கேளு"

"உன் மேலே இருக்கிற கோபமும் ஆத்திரமும் இந்தப் பிறவியில் அடங்காது" என்ற ரகுவை நிதானமாகவும் தீவிரமாகவும் பார்த்தார் அப்பா.

ரகுவுக்குத் தன் உடல் முழுவதும் ஒரே நேரத்தில் திடீரென்று தீப்பற்றினாற் போலிருந்தது.

"அதனால் தான் சொன்னேன், உன் கோபமும் ஆத்திரமும் அடங்கினாத்தான் நான் உன்னுடன் பேசுவேன்" என்றவரை முதல் முறையாக வேறு கோணத்தில் பார்த்தான். "எங்கே வந்திருக்கேனு நல்லா புரிஞ்சுக்க முதலில். நாளைக்குப் பேசலாம்" என்றபடி பொசுக்கென்று மறைந்துவிட்டார் அப்பா.

கை, கால், தலை, உடல் என்று தொட்டுப் பார்த்துத் தெளியத் தொடங்கினான். நானும் இறந்து விட்டேனா? எப்படி? என் குடும்பத்தை ஏமாற்றி விட்டேனா? அப்பனைப் போல் அல்பாயுசா? சே! ஏன்? நான் ஏன் இறக்க வேண்டும்?

    தனக்கு நேர்ந்த அநியாயத்திற்கு யார் பொறுப்பென்று புரியாமல் குழம்பி, ஆத்திரத்தில் புலம்பினான் ரகு. என் குழந்தைகள், மனைவி... இவர்களெல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்? எனக்கு ஏன் மரணம் அதற்குள்? ஐயோ, சின்னவளுக்கு எட்டு வயது கூட முடியவில்லையே! சாவு சொல்லிக்கொண்டு வராதுதான், அதற்காக இப்படியா? எத்தனை கடன், எத்தனை தொல்லை, எத்தனை பிரச்னைகள்... மனைவியும் குழந்தைகளும் எப்படிக் கடையேறப் போகிறார்கள்? காப்பீட்டிலிருந்தும், கம்பெனியிலிருந்தும், சேமிப்பிலிருந்தும் எத்தனை தேறும்? உயில் கூட எழுதவில்லையே நான்? இத்தனை வயதுக்குப் பிறகு அம்மாவுக்கு ஏன் இந்த தலையிடி? அம்மா? அம்மாவை நினைத்ததும் பொறுக்க முடியாமல், நெஞ்சுவலி வந்தது போல் துடித்தான்.

எத்தனை நேரம் புலம்பினானென்றோ, எப்பொழுது அமைதியானானென்றோ தெரியாமல், எதிரே மறுபடி அப்பா வந்து நின்றதும் ஒன்றும் பேசாமலிருந்தான்.

"எப்படி இருக்கே?" என்றார் அப்பா. "செத்த பிறகு கேட்கிறேனேனு பார்க்காதே. இங்கே நான்தான் உனக்குத் துணை. நீ எனக்குத் துணை".

"பொழுது விடிஞ்சுடிச்சா?" என்றான்.

"நாளாவது பொழுதாவது?" சிரித்தார் அப்பா. "முதலில் அப்படித்தான் இருக்கும். இனிமேல் நேரம், பொழுது, நாள், காலம் எதற்கும் அர்த்தமில்லைனு சீக்கிரமே புரிஞ்சுக்குவே. அடுத்த நிலைக்குத் தயாராகும் வரை அகோரமான தனிமையும்... நீ செய்த காரியங்களைப் பத்தி.. விடாமல் நினைத்துப் பார்கக நேரமும் தான் இனிமேல் உன்னிடம்".

"நீ... ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. என் முகத்திலே விழிக்க வேண்டாம்.. உன் துணை எனக்குத் தேவையில்லை.. இப்படியாகி விட்டதே என் நிலை!" என்று ஆத்திரத்தில் அருவியாய் அழுதான் ரகு. தேற்ற முனைந்த அப்பாவிடம் திடீரென்று ஆத்திரம் தாங்காமல், "எல்லாம் உன்னால் வந்த வினைதான். உன்னைப் பத்தி நினைச்சுக்கிட்டு வண்டியோட்டினதால வந்த விபரீதம்... என்னைக் கொஞ்ச நஞ்சமாவா சித்திரவதை செஞ்சிருக்கே? அப்பனா நீ? என் வாழ்க்கையைக் கெடுத்தப் பாவி. உன் மேலே இருக்குற கோபம் இன்னும் பத்து ஜென்மம் எடுத்தாலும் தீராது... வாழும்போது கொடுமைப்படுத்தினே... போதாதுனு செத்தப் பிறகுமா என்னை வாட்டணும்? நீ உருப்படுவியா? இன்னும் எத்தனை பிறவி எடுத்து நீ கஷ்டப்படுவியோ.." என்று சபிக்கத் தொடங்கியவன் நிறுத்தினான்.

எதிரே அப்பா ஆயிரம் கோணலாகிக் கடுமையான சித்திரவதைக்குட்பட்டுத் துடித்தார்.

பழைய நிலைமைக்கு வர நீண்ட நேரமானது.

சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. "இது மாதிரி அடிக்கடி நேருமா?" என்றான் மெள்ள. "ரொம்பத் துடிச்சது போல தோணிச்சு"

"அதை விடு. நான் செத்துப் போன நாளிலிருந்து ஒரு நாளைக்கு ரெண்டு மூணு முறையாவது நடந்துட்டிருக்கு. நீ மனசு வச்சு உதவி செஞ்சா நிறுத்தலாம்" என்றார்.

ரகுவுக்கு மீண்டும் எரிச்சல் வந்தது. "நான் ஏன் உனக்கு உதவி செய்யணும்? நீ எனக்கு என்ன உதவி செய்திருக்கே? உண்மையைச் சொல்லணும்னா, நீ செத்துப்போனது தான் பெரிய உதவி. உன் பிள்ளையாய்ப் பிறந்த பாவத்திற்கு இன்னும் என்னென்ன கொடுமையை நான் அனுபவிக்கணுமோ? நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன இனிமேல்? நாசமாய்ப் போ" என்று அவன் தொடர்ந்து நிந்திக்க, மறுபடியும் அப்பா இனம் புரியாத சித்திரவதைக்கு ஆளாகிக் கடூரமாக அலறினார். அவருடைய உருவம் சிதறிச் சிதறிச் சேர்ந்தது. ஆந்தையும் ஓனாயும் கோட்டானும் கலந்த அலறல், ரகுவை நடுங்க வைத்தது.

எத்தனை நேரமானதோ தெரியவில்லை, பழைய நிலைமைக்கு வந்த அப்பா அழுது கொண்டிருந்தார். அவர் கண்களில் பீதி. அப்பாவை அழுது பார்த்ததும் ரகுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. "அப்பா" என்று பேசத் தொடங்கியவனை நிறுத்தி, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். "வேணும்னா உன் காலில் விழறேண்டா, தயவு செய்து என் மேல் ஆத்திரமோ கோபமோ படாமல் இருக்க முயற்சி செய்.. தாங்க முடியலைடா, இந்தச் சித்திரவதை" என்றார்.

"இது..புரியலையே" என்றான்.

"புரிவது கஷ்டம்தான். செத்தபிறகு அடுத்த நிலை தீர்மானமாகிப் போவதற்கு முன்னால், இப்படி இந்த நிலைமையில் இருப்போம்"

"அடுத்த நிலையா? அப்படினா?"

"சொர்க்கமோ, நரகமோ, இன்னொரு பிறவியோ என்னவோ.. தெரியாது. ஆனா அந்த அடுத்த நிலைக்குப் போகும் வரைக்கும் இப்படித்தான் அலைஞ்சிட்டிருக்கணும். அடுத்த நிலைக்குப் போக அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும் போது தாவிடணும்"

"அப்போ, நீ ஏன் இத்தனை நாளா அடுத்த நிலைக்குப் போகவில்லை?"

"இன்னும் தயாராகவில்லை. இந்த நிலையிலிருக்குறப்போ நீ விட்டு வந்த தொடர்புகளில் யாராவது மனதார உன்னை வாழ்த்திக்கிட்டே இருந்தா, சீக்கிரம் அடுத்த நிலைக்குப் போகத் தயாராகலாம். மனசார வெறுத்திக்கிட்டிருந்தா இங்கேயே சித்திரவதை தான். எத்தனை கோவில் சுத்தினாலும், எத்தனை பூஜை செஞ்சாலும் உன்னோட வாழ்ந்தவங்க வாழ்த்தலைனா அதோகதி தான். அடுத்த நிலைக்குத் தயாராகக் கூட வழியில்லாம போயிடும்"

"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை" என்றான் ரகு.

"சதை எலும்போட இருந்தப்போ எனக்கு என்னைத் தவிர எதிலுமே நம்பிக்கை இருந்ததில்லை" என்றார் அப்பா.

"அப்ப உன் நிலைமைக்கு நான்தான் காரணம்னு சொல்றியா?"

"ஆமாம்டா. தயவு செய்து கோபப்படாதே. நான் இறந்து போன நாளிலிருந்து, நீ விடாமல் ஆத்திரமும் வெறுப்பும் கலந்து என்னை நினைக்கிற போதெல்லாம், நான் இப்படித்தான் சித்திரவதை அனுபவிக்கிறேன். இந்தச் சித்திரவதைகளுக்கு ஆளாகி, நான் அடுத்த நிலைக்குத் தயாராகவே இல்லை. நான் உனக்கு, நீ விரும்பினபடி நல்ல தகப்பனாக இல்லாமல் போனது தவறுதான்...என்னை மன்னிக்கக் கூடாதா? இந்தப் பிறவியில் உனக்கு அப்பாவாயிருந்த பனிரெண்டு வருசத்துல என்னைப் பற்றிய ஒரு நல்ல நினைப்பு கூட இல்லையா? இல்லாவிட்டாலும் உன்னால் என்னை வெறுக்காமல் இருக்க முடியாதா?"

அமைதியாயிருந்த ரகுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு மறுபடி அழுதார் அப்பா. "தினமும் இதே கொடுமைதான்டா. நீ என்னை இத்தனை வெறுத்ததற்குக் காரணமெல்லாம் கேட்டு உன்னை அவமதிக்க மாட்டேன். என்னுடைய அடுத்த நிலையில் எனக்கு நரகமோ, சொர்க்கமோ, இல்லை இன்னொரு பிறவியோ எதுவாக இருந்தாலும், நான் யாரோ நீ யாரோ தானே? நீ சொன்னது போல் நம்ம இரண்டு பேருக்குமிடையே இனி எந்தப் பிறவியிலும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக்கூடாது என்றுதான் எனக்கு முடிந்த போதெல்லாம் வேண்டிக்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்டா.. யாருக்கோ செய்த உதவியா நினைச்சு, எனக்கு இந்த உதவியைச் செய்யக்கூடாதா? இந்தச் சித்திரவதையை என்னால தாங்க முடியலைடா"

இன்னும் அமைதியாயிருந்தான் ரகு.

அப்பா தொடர்ந்தார். "என்னைப் பத்தின ஒரு சில நல்ல எண்ணங்கள் போதும்.. முடியுமாடா? நான் செத்துப் போனது மட்டுமே நல்லதுனு நெனச்சா, அதையே வாழ்த்தா சொல்லிட்டுப் போயேன்.. முடியாதா உன்னால?"

அவனுடைய கைகளை விட்டு, கீழே உட்கார்ந்தபடி அப்பா தொடர்ந்தார். "நீ மட்டுந்தான் என்னை விடாமல் வெறுத்துக்கிட்டு வரே. மத்தவங்க எல்லாம் என்னை எப்பவோ மறந்துட்டாங்கடா.. அப்படியே நினைத்தாலும் நல்ல நினைப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை" என்ற அப்பா திடீரென்று, "ரகு.. ரகு... எனக்குப் பயமாயிருக்குடா" என்று நடுங்கத் தொடங்கினார்.

"என்ன பயம்?" என்றான் ரகு. அவனுக்கு அப்பாவின் மேலிருந்த வெறுப்பை விடத் தன் மேல் வெறுப்பு அதிகமாகத் தொடங்கியது.

"ரகு.. உன் மனைவி, அம்மா, குழந்தைகளுக்கு நீ செய்த நல்ல காரியங்களுக்கு அவங்க உன்னை தினம் வாழ்த்திக்கிட்டிருந்தா, நீ சீக்கிரமே அடுத்த நிலைக்குத் தயாராகி வாய்ப்பு வரும்போது போய்விடுவாய். அடுத்த நிலைக்குத் தயார் செய்யக்கூட நல்லதோ கெட்டதோ இனி என்னைப் பத்தி நினைப்பாரில்லாமல் போய்டுமோனு பயமா இருக்குடா. செத்த பிறகும் சுயநலம் பார்க்கிறேனென்று நினைக்காதே. எனக்கு இந்தப் பிறவியின் கொடுமை போதும்டா, அடுத்த நிலையில் நரகமென்றாலும் பரவாயில்லை" என்றார். வலி வந்து சொல்லத் தெரியாதக் குழந்தை போல் அழுதார். மெள்ள அவனிடமிருந்து விலகிச் சென்றார்.

ரகுவின் மனதில் அப்பாவின் வார்த்தைகள் இடியாய் ஒலித்துக் கொண்டிருந்தன.

    அப்பா விலகிச் சென்றதைக் கவனிக்கவில்லை ரகு. பலவகை எண்ணங்களில் தன்னை மறந்திருந்தான். என்னுடைய அடுத்த நிலை என்ன? என் மனைவி, குழந்தைகள் என்னை வாழ்த்துவார்களா, வெறுப்பார்களா? நான் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் என்னென்ன கொடுமைகள் செய்தேன்? என் குடும்பத்தை முறையாகக் கவனித்தேனா? அடுத்த நிலைக்குப் போக வாய்ப்பு எப்போது வரும்? அடிக்கடி வரும் என்றாரே அப்பா? நான் அடுத்த நிலைக்குத் தயாரா? அப்பாவின் கதிதானா எனக்கும்? பலவாறாகச் சிந்தித்தவனுக்கு முதன் முறையாக அப்பாவின் மேல் பரிதாபம் வந்தது.

"இன்னும் இங்கேதான் இருக்கியா?" என்ற அப்பாவின் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்த ரகு புன்னகை செய்ய முயற்சித்தான். "ஆமாம்... நீ சொன்னதையே நினைச்சுட்டிருந்தேன். நீ சுயநலமாகச் சொன்னது போல் தோன்றினாலும், உன் கதி எனக்கு வரக்கூடும் என்கிற பயத்தை ஏற்படுத்தின உன் சாமர்த்தியத்தைப் பாராட்டணும்" என்றான்.

"நீ புத்திசாலி என்பது எனக்கு எப்பவுமே தெரியும்" என்றார். சிறிது அமைதிக்குப் பின், "உன் மனைவி, பிள்ளைகளைப் பற்றிச் சொல்லேன்" என்றார்.

"கல்லூரி முடிஞ்சதுமே அமெரிக்கா ஓடிட்டேன். அங்கேயே சந்திச்சுப் பழகின ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மாயா. அழகான, அறிவுள்ள, விவேகமான பெண். அற்புதமான தாய். நான் வக்கீல் வேலையில் பாதி நாள் வீட்டுக்கே வரமாட்டேன். மாயா மூணு குழந்தைகளையும் பாத்துக்கிட்டு, டீச்சர் வேலையும் பாத்துக்கிட்டு, என்னுடைய தவறுகளைப் பொருட்படுத்தாமல்.. அவளை மாதிரி யாராலும் முடியாது"

அப்பா அவன் தோள்களை இதமாகத் தொட்டார்.

"மூணும் பெண் குழந்தைங்க. மூத்தவ வேதா உன்னைப் போல் அழகாகப் படம் வரைவாள்."

"அப்படியா?"

"இரண்டாமவள் மீரா. எதுக்கெடுத்தாலும் கோபம். நினைச்சுப் பார்க்கிறப்போ அவளும் உன்னை மாதிரிதான், நினைத்த உடனே எல்லாம் நடந்தாக வேண்டும். இல்லையென்றால் விருட்விருட்னு கோபம். அபரிமிதமான மூளை. அழகான அழகு, பள்ளிக்கூடத்து ஆம்பிளைப் பசங்களையெல்லாம் இன்னும் நாலு வருஷத்துல பாடா படுத்தப்போறா."

"வேணாம்டா, என்னோட கோபம் என்னைக் கெடுத்தது. என்னோட போகட்டும். கோபம் எல்லாம் போய் நல்லா இருக்கட்டும்டா அவள். நல்லா இருப்பா, பாரு" என்ற அப்பாவின் குரலில் நடுக்கத்தை உணர்ந்தான் ரகு.

"சின்னவள் தாரா. எப்பப் பார்த்தாலும் ஏதாவது படிச்சிக்கிட்டே இருப்பா. புது காமிக்ஸ் கதைப்புத்தகம் எது வந்தாலும் முதலில் படிப்பது அவதான். நீ எனக்கு ஒரு தடவை கதைப் புத்தகம் ஒன்று வாங்கிக் கொடுத்தது ஞாபகம் வருது..எனக்கு அப்பாவா நீ வாங்கிக் கொடுத்தது ஒரே ஒரு புக் தான்" என்றான்.

"அப்படியா?"

"ஆமாம். நாடி கோஸ் டு லன்டன். இன்னும் ஞாபகம் இருக்கு. பக்கத்து வீட்டு மலர் கிட்டே புத்தகம் கொடுனு கெஞ்சிட்டிருந்ததைப் பார்த்து உனக்கு என்ன தோணிச்சோ, என்னைக் கூட்டிப் போய் புத்தகம் வாங்கிக் கொடுத்து, சினிமாவுக்கும் கூட்டிப் போனே. வீட்டுக்கு வந்து உதைப்பியோனு பயந்தாலும் உன் கூட செலவழித்த அந்த இரண்டு மணி நேரம் நல்ல அனுபவம" என்று சிரித்தான்.

அமைதியாக இருந்தவரைப் பார்த்து, "சாரி.. உதைப்பியோனு வெறுப்பில் சொல்லலை.." என்றவன் தொடர்ந்தான். "சின்னவ என்னை மாதிரி... பேச்சுப் போட்டியில் வெளுத்து வாங்குறா. எட்டு வயசு கூட முடியலை, பதினாலு பதினஞ்சு வயசுப் பசங்க கூட போட்டி போடுறா."

"உன் பொண்ணுதானே, அப்படித்தான் இருப்பா" என்றார் அப்பா.

"இல்லைபா. நீ எனக்கு எழுதிக் கொடுத்த மாதிரியே அவளுக்கு நான் நிறைய எழுதி கொடுக்கிறேன். ஆனா, அது இல்லாமலே சில சமயம் நல்லாத்தான் பேசுறா. வயசுக்கு மீறின கருத்துகளை வச்சு நீ எனக்கு எழுதிக் கொடுப்பியே, நினைவிருக்கா?"

"நீ ஒரு பேச்சுப் போட்டில கூட முதல் பரிசைத் தவிர எதையும் வாங்கியதில்லைனும் ஞாபகம் இருக்கு" என்றார் அப்பா.

"உன் மேலே வெறுப்பா இருந்தாலும், உன்னை நான் நிறையவே பின்பற்றி இருக்கேன்னு இப்பத்தான் தோணுது. உன்னை மாதிரியே உடை, உன்னை மாதிரியே பேச்சு, உன்னை மாதிரியே குழந்தைகளுக்கு விகாரமான பேய்க்கதை சொல்வது, உன்னை மாதிரியே உலகத்தை வெல்லும் உருளைக்கிழங்கு கறி செய்வது..." ரகு சிரித்தான். "அப்பா, உன்னோட சுமுகமா, சமாதானமா பேசுவேனென்று நினைச்சது கூடக் கிடையாது" என்றவன், திடீரென்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதான்.

"எதுக்கு அழறே?" என்றார் அப்பா.

"இந்த மாதிரி பேச்சுப் போட்டி, காமிக்ஸ் புக், உருளைக்கிழங்கு கறியை விட்டா உன்னை வாழ்த்திச் சொல்ற மாதிரி எனக்கு எதுவுமே தோணலையே அப்பா? உன்னை மனமார வாழ்த்தாவிட்டாலும் வெறுக்காமலிருந்திருப்பேனே? என்னை மன்னிச்சுடு அப்பா"

"பரவாயில்லை... இதுவே நீ எனக்கு செய்த பெரிய உதவிதான்" என்றார் அப்பா.

"அப்போ, அடுத்த நிலைக்குப் போயிடுவியா?" என்றான்.

"தெரியாது. வாய்ப்பு வரும் போதுதான் தெரியும்" என்றார்.

"அப்பா... எனக்கும் உன் கதி வந்துடுமோனு பயமா இருக்கு" என்றான்.

அப்பா முதல் முறையாக அவன் தோள்களை அணைத்துப் பிடித்தபடி "கவலைப்படாதே. உன்னைப் பத்தி நல்லதா நினைக்கிறவங்க அதிகம். அப்படி இல்லாவிட்டாலும், உனக்கு என் கதி வராது. உயிரோடு இருக்கும் போது செய்யாத சத்தியம் இப்போ செய்யறேன்... உனக்கு என் கதி ..உனக்கு என் கதி வராது.. வரவிடமாட்டேன்" என்று அவன் தோள்களை இறுக்கி லேசாய் உலுக்கினார். முதல் முறையாகக் கிடைத்த அப்பாவின் ஆதரவான அணைப்பை, கண்களை மூடி இதமாய் அனுபவித்தான். கண் திறந்த போது அப்பா அங்கே இல்லை.

    "ஹலோ மிஸ்டர் ரகு..எப்படி இருக்கீங்க? என் பெயர் டாக்டர் தாஸ்" என்றப் பெண்ணை அடையாளம் தெரியாது விழித்தான் ரகு. மெதுவாக அறையைச் சுற்றிப் பார்த்தான். பக்கத்தில் இருந்த மாயாவின் கண்களில் அருவி. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவள், வாய் மூடி ஆயிரம் வார்த்தைகள் பேசினாள்.

அதற்குள் டாக்டர் தாசுடன் வந்தவர்கள் அவனைச் சுற்றி நின்றனர். டாக்டர் தாஸ் பேசினார். "இவங்க டாக்டர் ஷ்னைடர், நியூராலஜிஸ்ட். அவங்க டாக்டர் வில்சன், சைகியேட்ரிஸ்ட். அவங்க டாக்டர் உமர், டாக்டர் அரவிந்த்.. இரண்டு பேரும் மூளை அதிர்ச்சி பற்றி ஆய்வு செய்யறவங்க"

ரகுவின் கைகளை ஆதரவாகத் தொட்டுப் பேசினார் டாக்டர் ஷ்னைடர். "ரெண்டு வாரம் முன்னால், வூஸ்டர் பக்கத்தில் ஒரு விபத்தில் நீங்க சிக்கிக்கிட்டீங்க. வேகமாக வந்த மேக் டிரக் உங்க வண்டியை இருபதடி தூக்கிப்போட்டு.. அடிபட்டு.. நீங்க பிழைத்தது அதிசயம். ஒரு வாரமா கோமாவில் இருந்த நீங்க.. திரும்பி மெள்ள நிதான நிலைமைக்கு வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்" என்றார்.

"இன்னும் ஆய்வு பண்ணிட்டு இருக்கோம். உங்க கோமாவுக்குக் காரணம் மூளை அதிர்ச்சி. குடிபோதை, அதனால் விளைந்த ஹைபாக்சிக் ஹைபாக்சியா, இலக்ட்ரோலைட் பற்றாக்குறை.. அதுக்கு மேலே நாற்பது மைல் வேகத்தில் தூக்கியெறியப்பட்டு அடிபட்டது... எல்லாமே காரணமென்று நினைக்கிறோம். யூர் ஓகே நௌ. எங்க எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. உங்க மனைவிக்கு தலைகால் புரியவில்லை. நீங்க அதிர்ஷ்டசாலி. சாவை முத்தமிட்டு வந்திருக்கீங்க" என்ற டாக்டர் தாசுடன் மற்ற அனைவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவன் கண்களை மூடி அப்பாவை நினைத்துக் கொண்டான். "வாழ்வை முத்தமிட வந்திருக்கேன் டாக்டர்".

"அவருக்கு சரியாயிடுச்சா? இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கவேண்டும்?" என்று மாயா டாக்டரிடம் கேட்டது, கேட்டது.

"நன்றாகத் தேறி வருகிறார். டிபிஐ இன்னும் அனலைஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். ஜிசிஎஸ் மற்றும் ஆர்-லேஸ்.. அதாவது அவர் கோமாவில் விழுந்து மீண்ட அளவுகளைக் கண்காணிச்சிட்டிருக்கோம். மூளையின் அதிர்ச்சி பயப்படும்படி இல்லை. அவருடைய இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் அளவு சரியாகி விட்டதால் இனிமேல் கவலையில்லை.. இஞ்சுரி அன்ட் இன்டாக்சிகேஷன் இன்டியூஸ்ட் கோமடோஸ். அவருக்குச் சரியாகிவிடும். இன்னும் இரண்டு வாரம் பொறுத்து டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யலாம்" என்ற டாக்டர் தாசுடைய வார்த்தைகள் முடியுமுன் தூங்கி விட்டான்.

    ஒரு மாதம் கழித்து வீடு திரும்பியவன், வேலையை விட்டான். "ஏன்" என்ற மாயாவிடமும் வேதாவிடமும் "இனிமேல் வீட்டிலிருந்தபடி ஏதாவது வேலை பார்க்கப் போகிறேன். உங்களோடு அதிக நேரம் இருக்கலாம்னு தான்" என்றான்.

"வீட்டிலிருந்தா உனக்கு போரடிக்குமே டாடி. அப்புறம் எங்களைப் போட்டு போரடிக்காதே டாடி" என்ற மீராவைச் செல்லமாகத் தலையில் தட்டினான். "டீல் வித் இட், யங் லேடி".

உள்ளேயிருந்து எடுத்துத் தூசுதட்டி, புதிதாக மாட்டியிருந்த அப்பாவின் படத்தைப் பார்த்துக் கேட்ட தாரா, "யாரிது?" என்றாள்.

"உங்க தாத்தா. இப்ப உயிரோட இல்லை" என்றான்.

"உயிரோட இருந்தா, அவருக்கு எங்களைப் பிடிக்குமா டாடி?"

"கண்டிப்பா"

"எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு டாடி. டூ யூ மிஸ் ஹிம்?". தாராவின் அடுத்த கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. 'அப்பா.. என்னால் நீ அடுத்த நிலைக்கு போகிறாயோ இல்லையோ, என் குழந்தைகளால் நீ கண்டிப்பாக அடுத்த நிலைக்குப் போவாய்' என்று நினைத்துக்கொண்டான். அதற்குள் பத்து கேள்விகள் கேட்டு எதற்கும் பதில் வராததால் கேள்வி கேட்பதை நிறுத்தி, அவனைக் கட்டிப்பிடித்து மடியில் ஏறியமர்ந்து கொண்ட தாரா, "ஐ லவ் யூ டாடி..யூ ஆர் த பெஸ்ட் டேடி இன் த வர்ல்ட்" என்றாள்.

வாழ்த்துவதற்கு காரணம் தேடாத மழலையின் நேர்மையில் உருகிப்போனான் ரகு. 'உனக்கு என் கதி வராது.. வரவிடமாட்டேன்' என்ற அப்பாவின் சத்தியம் நினைவுக்கு வந்தது.

47 கருத்துகள்:

 1. எப்படிங்க இப்படி எல்லாம்! பிரமாதம். கொன்னுட்டீங்க (ரகுவின் அப்பாவை). என்னுடைய கனவில் வருகின்ற என்னுடைய அப்பா ஒன்றுமே பேசுவதில்லை. ஆனால் சோகப் பார்வை பார்க்கின்றார். நாளை என்னுடைய அப்பாவின் நூற்று நான்காவது (?1908)பிறந்த தினம். நாளைக்குள் அவரைப் பற்றி நன்றாக நிறைய நினைத்து, அவரை அடுத்த கட்டத்திற்குக் கரையேற்ற முயற்சிக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. மிக மிக உயரத்தைத் தொட்டுவிட்டது இந்தக் கதை. மன்னித்தல் தெய்வீகம் தான். அதற்கு வேண்டிய பக்குவத்தைக் காலம் கொடுக்கணும். உங்கள் கதை எனக்கு ஒரு நல்லபாடம். நன்றி துரை.

  பதிலளிநீக்கு
 3. கதை என்னை மிகவும் பாதித்தது. நல்ல கதை. தீங்கிழைக்கப்பட்டவன் மன்னிக்காத வரையில், தீங்கிழைத்தவனை இறைவன் மன்னிப்பதில்லை; இறந்தபின்னரான சொர்க்கம், நரகம்; போன்றவற்றையும் வலியுறுத்தும்விதமாக அமைந்திருக்கிறது (என் பார்வையில்).

  பதிலளிநீக்கு
 4. சிறுகதையில் தனி முத்திரை பதிக்கிறிர்கள். ரெம்ப நல்ல சிறுகதை சார்.

  பதிலளிநீக்கு
 5. மிக மிக அருமையான கதை
  இதை படிப்பவர்கள் எல்லோரும் ஒருமுறை
  அந்த உலகம் போய்தான் திரும்புவார்கள்
  கதையின் பாதிப்பு எவ்வளவுமோசமானவராக இருந்தாலும்
  இரண்டு நாட்களுக்காவது இருந்துதான் போகும்
  அருமையான படைப்பு தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. துரை, கொன்னுட்டீங்க. பல வரிகள் மனதைப் பாதித்தன. நீண்ட நாட்கள் இந்த கதையையும் கதையின் வரிகளும் மனதைவிட்டு அகலாது.

  பதிலளிநீக்கு
 7. எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க அப்பாதுரை?simply brillianat.

  பதிலளிநீக்கு
 8. ரகுவின் வெறுப்பில் அவன் அப்பா ஆயிரம் கோணலாய் சித்திரவதைப் படுவது நல்ல கற்பனை. பயமுறுத்துகிறது. நானும் என்னைப் பற்றி யோசிக்கத் தொடங்கி விட்டேன். நிறைய யோசனைகளை, சிந்தனைகளைக் கிளப்பி விட்டது கதை. பல உயரங்களைத் தொடுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 9. எழுதறக்காகவே பிறந்திருக்கிங்களா அப்பாதுரை... ஆச்சர்யத்திலிருந்து மீளவில்லை...

  சாவு அது சாவுமில்லை ,பிழைப்பு அது பிழைப்பும் இல்லை..

  கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டதில்லை..

  அது எப்படிங்க..இப்படி ஒரு சாத்தியத்திற்குள் நுழைய முடிஞ்சது…..

  இறந்து பார்த்து வாழ்வை மாற்றிக்கொள்ளுங்கள் என மிக அழுத்தமாக பதித்துவீட்டீர்கள்…
  இப்படி ஒரு வாழ்வியல் மேலாண்மை வல்லுநர் கிடைத்தது தமிழுக்கு தமிழ் வாசிப்புலகத்துக்கு கிடைத்த பரிசு….

  பதிலளிநீக்கு
 10. மனம் நெகிழ்ந்து விட்டது அப்பாதுரை. இப்படி ஒரு கதை எழுத முடியுமா என்று பிரமிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள். கதையை நீங்கள் எழுதி இருக்கும் விதம் simply superb! கண் கலங்கி விட்டது. தொடர்ந்து இரண்டு முறை படித்து விட்டேன். வாழ்த்துக்கள்!
  ஆயிரம் கோணலாய் சித்திரவதை படுவது, ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு செல்ல உடன் வாழ்ந்தவர்கள் வெறுக்காமல் இருக்கவேண்டும் என்றெல்லாம் நீங்கள் எழுதி இருப்பது சுவாரசியமான, அசத்தலான கற்பனை. இது கற்பனைதான் என்றாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. :)

  பதிலளிநீக்கு
 11. //உன் மனைவி, அம்மா, குழந்தைகளுக்கு நீ செய்த நல்ல காரியங்களுக்கு அவங்க உன்னை தினம் வாழ்த்திக்கிட்டிருந்தா, நீ சீக்கிரமே அடுத்த நிலைக்குத் தயாராகி வாய்ப்பு வரும்போது போய்விடுவாய். //

  முன்னமேயே நீங்கள் அனுப்பி படித்து இருக்கின்றேன் அல்லது பூதுரிகையில் படித்து இருக்கின்றேன்.

  இதை பார்த்தால் நான் இழைத்த கொடுமைகளுக்கு சென்னை, பெங்களூர், யூ.எஸ் இண்டர்ஸ்டேட் என்று அலைய வேண்டியது தான் போலிருக்கு.

  என்னை வாயார வாழ்த்த ஒரு ஜீவன் தேறுமா என்று சத்தியமாக தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
 12. நீங்க அதிர்ஷ்டசாலி. சாவை முத்தமிட்டு வந்திருக்கீங்க" என்ற டாக்டர் தாசுடன் மற்ற அனைவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவன் கண்களை மூடி அப்பாவை நினைத்துக் கொண்டான். "வாழ்வை முத்தமிட வந்திருக்கேன் டாக்டர்"./

  ஆகாயத்தை விட உயரமாக மனதில் தோற்றம் காட்டும் கதை.

  பாராட்டுக்கள் பல.

  பதிலளிநீக்கு
 13. மனத்தின் ஏதோ ஒரு மூலையில் தொங்கும் ஒட்டடையில் ஒட்டியிருக்கும் ஒரு வண்டின் சிறகு போல் ஒரு கதைப் புள்ளி..... உங்கள் கண்பட்டு, கதையாய் கைப்பட்டு வானவில்லாய் வளைந்து ஜாலம் காட்டுகிறது..

  உங்களையும் வம்புக்கிழுத்து ஒரு சரித்திரக் கதை எழுத துவங்கியிருக்கிறேன்.. இதே போன்ற புள்ளி தான்.. ஒண்ணாத்தான் யோசிக்கிறோமோ?

  பதிலளிநீக்கு
 14. அப்பா துரை,
  வியப்பின் எல்லையில் இருந்து என்னால் மீள முடியவில்லை. எப்படி இப்படிப்பட்ட சிந்தனைகள் தங்களுக்குள்... சத்தியமாகச் சொல்கிறேன்.. எனக்குப் பாராட்டக்கூடத் தகுதி இல்லை. ஆன்ந்தக் கன்ணீருடன்...

  பதிலளிநீக்கு
 15. மிகவும் நன்றி kggouthaman, வல்லிசிம்ஹன், ஹுஸைனம்மா, தமிழ் உதயம், Ramani, geetha santhanam, சென்னை பித்தன், ஸ்ரீராம்., பத்மநாபன், meenakshi, சாய், இராஜராஜேஸ்வரி, மோகன்ஜி, ஆதிரா,... பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி.

  //தீங்கிழைக்கப்பட்டவன் மன்னிக்காத வரையில், தீங்கிழைத்தவனை இறைவன் மன்னிப்பதில்லை. எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஹஸைனம்மா! இன்னொரு கதையில் சேர்த்து விட அனுமதி கொடுங்கள்.

  என் வாழ்க்கைச் சம்பவங்கள் பலவற்றைக் கதைகளில் எழுதியிருக்கிறேன். இந்தக் கதையும் அப்படியே. என் சுய வெறுப்புகளை வெளியேற்ற வடிகாலாய் அமைந்த கதை. படித்து ரசித்ததற்கு நன்றி. மற்றபடி இது வெறும் கதைதான்.

  வாழ்க்கையில் நம் உற்றம் சுற்றங்களுக்கு நம் நினைவுகளை மட்டுமே விட்டுப் போகிறோம் (சிலர் பொருளும் விட்டுப்போகிறார்கள் :). பொன்னை விட்டுப் போனவர்கள் அந்தத் தலைமுறையோடு மறக்கப்படுகிறார்கள். அன்பை விட்டுப் போனவர்கள் அடுத்த சில தலைமுறைகளுக்கு மறக்கப்படுவதில்லை.

  அன்பு தொத்துக் கிருமி. உலக இயக்கத்துக்குத் தேவையானத் தொத்துக் கிருமி.

  பதிலளிநீக்கு
 16. கடைசி வரிகள் மிகவும் பாதித்தன. காரணமில்லாமல் வாழ்த்தும் பிள்ளை.. க்ளாஸ். உண்மை. வாழ்த்துவதற்கு காரணமே தேவையில்லை. வெறுக்குறதுக்குக் காரணம் தேவை. ஆனால் உல்டா பண்ணிவிட்டோம். காரணமில்லாம வெறுக்கிறோம், காரணம் கிடைச்சாலும் வாழ்த்த தெரியவதில்லை.

  எழுதுவதிலிருந்து ரிடைராவதாக இருந்தால் இந்தக் கதையோட நிறுத்திக் கொள்ளுங்கள். Super!

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. //அன்பு தொத்துக் கிருமி. உலக இயக்கத்துக்குத் தேவையானத் தொத்துக் கிருமி.//

  அருமை ...ஒரு வரியில் மீண்டும் ஒரு கதை....

  பதிலளிநீக்கு
 19. //ஹஸைனம்மா! இன்னொரு கதையில் சேர்த்து விட அனுமதி//

  அடடா, நானே அதை இன்னொரு இடத்தில் படித்துத் தெரிஞ்சுகிட்டதுதான். நல்ல விஷயங்கள் பரப்ப அனுமதி தேவையேயில்லை.

  பதிலளிநீக்கு
 20. நன்றி. உங்கள் மேற்கோளைப் படித்ததும் தான் என் தவறு தெரிந்தது. மன்னிக்க வேண்டும், ஹுஸைனம்மா.

  பதிலளிநீக்கு
 21. வந்தேன் அப்பாஜி....சுகம்தானே !

  இப்ப கதை வாசிச்சிட்டே இருக்கேன் !

  பதிலளிநீக்கு
 22. என்னமோ சில அறிவுரைகளோடு மனசை நெகிழ வைத்துவிட்டது கதை.முழுசாப் படிச்சேன் அப்பாஜி !

  பதிலளிநீக்கு
 23. :) இத்தன ஆழமான, poignant ஆன கதை - ஆனாலும், இந்த கதை படிக்கும் பொது என்னோட ரொம்ப favourite ஆன ஒரு Tom and Jerry Cartoon நினைவுக்கு வருது! "Heavenly Puss" -ங்கற cartoon ல - இதே concept தான் deal பண்ணிருபாங்க- கிட்ட தட்ட... Beautiful piece of cartoon. இத்தன கனமான விஷயத்த குழந்தைகளுக்கு இத விட எளிமையா எப்படி சொல்ல முடியும் -னு தோணும் எனக்கு, அத பாக்கும் போதெல்லாம்!
  உங்க கதைல இருக்கும் ஆழ்த்த உணர்ந்தப்ரமா இந்த cartoon எனக்கு ஜாஸ்தி பிடிக்க ஆரம்பிச்சுடுத்து!

  Pls watch it if you haven't seen it before... :) I'm sure you'll appreciate it!

  http://www.youtube.com/watch?v=IBnKjUozHjQ

  பதிலளிநீக்கு
 24. மாதங்கி, எக்ஸாட்லி!! எத்தனை தரம் பார்த்துச் சிரித்திருக்கிறேன்; ஆனால், இதை எனக்கானதாக நினைத்துப் பார்க்கத்தான் தெரிந்திருக்கவில்லை. :-(((

  இன்னொன்று, யாரும் சிரிக்கக்கூடாது. ஒரே கதை/மேட்டர், சீரியஸாகவும் காமெடியாகவும் பார்க்கும்போது ஒரு வியப்பும்.... :-)))

  பதிலளிநீக்கு
 25. அநேகமா ராத்திரி அப்பா சொப்பனத்திலே வருவாரோ?? தெரியலை; எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?

  தொய்வே இல்லாமல் போகிறது; அப்பாவைப் பார்க்கும் வரை கதையின் போக்கை அனுமானிக்க முடிந்தாலும் கடைசியில் முடிவு அனுமானம் செய்ய முடியலை. நல்லதொரு முடிவு.

  பதிலளிநீக்கு
 26. மிகவும் நன்றி ராமசுப்ரமணியன், ஹேமா, Matangi Mawley, geethasmbsvm6,...

  பதிலளிநீக்கு
 27. t&j was thoroughly enjoyable.. நன்றி, Matangi Mawley. குழந்தைங்களுக்கு எளிமையா சொல்லியிருக்காங்களா.. இல்லை ஹுஸைனம்மா கேட்டிருக்காபல பெரியவங்களுக்கானு தோணிச்சு :)

  பதிலளிநீக்கு
 28. //அநேகமா ராத்திரி அப்பா சொப்பனத்திலே வருவாரோ??

  'dream invasion day'னு நாள் வச்சு வருஷத்துல ஒரு தடவை, இறந்தவங்கள்ளாம் சொப்பனத்துல வரலாம்னு இருந்தா என்ன ஆகும்?

  உங்க கமென்ட் படிச்சதும் எனக்கு ஒரு பழைய சினிமா பாட்டு தான் சட்னு ஞாபகம் வந்தது ... நடுவுல பாலையா குரல் வரும். :)

  என்னோட அப்பா என் கனவுல வந்ததா ஞாபகமே இல்லை. ('எங்கே.. படுத்த க்ஷணமே குறட்டை விட்டா கனவாவது கினவாவது'னு குரல் கேக்குது..)

  பதிலளிநீக்கு
 29. பாடாய் படுத்தும் அப்பனிடம் கூட பேச்சு,பேய்க்கதை, உருளைக் கறி என்று சில விஷயங்கள் இருக்கிறது.

  இந்த அப்பா மேட்டரை வைத்து நீங்கள் எழுதும் இரண்டாவது கதை என்று நினைக்கிறேன்.

  முன்னால் ஒரு கதையில் அப்பா ஆட்டோவில் வருவார்.

  சரளமான நடை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்பவிடாமல் கதை முடியும் வரை இழுத்துச்சென்றது.

  தந்தைசொல் (மிக்க மந்திரமில்லை) தான் நிச்சயமாக!!

  செத்தவங்களைப் பற்றி நல்லதா நினைச்சாலே அவங்களுக்கு நற்கதின்னு சொல்றீங்க...

  If you want praise, die. அப்டீன்னு ரொம்ப நாளைக்கு முன்னாடி படிச்சது நினைவுக்கு வந்துடிச்சு சார்! :-)

  பதிலளிநீக்கு
 30. மாதங்கி.. ஹெவென்லி எக்ஸ்பிரஸ் ரிசர்வேஷன் அமர்க்களம். பொற்படிகளில் ஏறி, பொன் ரயிலேறி...... :-)

  பதிலளிநீக்கு
 31. சத்தியமாய் சொல்கிறேன் அப்பாஜி. வலைப்பக்கம் வராமல் இருந்த என் நிலையை எண்ணி எனக்கே என் மேல் கோபமாய் வருகிறது.
  இது வரை மூன்றாம் சுழியில் வெளிவந்த அனைத்தையும் படித்துவிட ஆசையாய் இருக்கிறது.
  நேரத்திற்கு எங்கே போவது தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 32. இந்தக் கதையில் நானும் என் என் அப்பாவும் இருக்கிறோம்.
  ஒரு கணம் எனக்கும் இது போல்(?!) நிகழ்ந்து என் தந்தையை சந்திக்க வேண்டும் போல் உள்ளது. நிறைய கேளிவிகள் உள்ளது அவரிடம் கேட்க -நெஞ்சு வெடிக்கும் அளவுக்கு.

  பதிலளிநீக்கு
 33. வாங்க RVS..

  //பாடாய் படுத்தும் அப்பனிடம் கூட பேச்சு,பேய்க்கதை, உருளைக் கறி என்று சில விஷயங்கள் இருக்கிறது.
  இதுக்கு ஒரு அப்பா தேவையானு கேக்கத் தோணுதே RVS?

  எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்கும் மனப்பாங்கு அவசியம் என்றாலும் உறவுகள் என்று வரும்பொழுது நல்லதை மட்டும் எடுக்க வேண்டும் என்பதை ஏற்கமுடியவில்லை. ஒரு விதத்தில் என் கதை பரவாயில்லை. பட்டுனு பூட்டான் (ர்). இன்றைக்கு சில அப்பாக்களைப் பார்க்கும் பொழுது நடுங்குகிறது: மூணு வயசுல பிஸ்கெட் வாங்கிக்கொடுத்தேனே? இத்தனை செலவு செஞ்சு படிக்க வச்சேனே? செருப்பு வாங்கிக் கொடுத்தேனே? அதைச் செஞ்சேனே இதைச் செஞ்சேனே என்று நிமிடத்துக்கு நிமிடம் பிடுங்கும் அப்பாக்களை விட முதுகில் ஒரு அடி கொடுத்து பேச்சைக் குறைத்த அப்பாக்கள் மேலோ?


  //இந்த அப்பா மேட்டரை வைத்து நீங்கள் எழுதும் இரண்டாவது கதை என்று நினைக்கிறேன்.
  இன்னொரு கதைக் குறிப்பும் எழுதி வச்சிருக்கேன் (ஆ!). கொஞ்சம் வக்கிரமான மேட்டர்ன்றதுனால எழுதலே. வயசான அப்பாவை மானாவாரிக்குக் கொடுமைப் படுத்தும் பிள்ளையின் கதை. சொல்லிடவா? :)

  பதிலளிநீக்கு
 34. நன்றி சிவகுமாரன்.. (முடியும் போது படியுங்கள்.. எங்கே போய்விடும்?)

  //இந்தக் கதையில் நானும் என் என் அப்பாவும் இருக்கிறோம்.

  இதைச் சொல்ல மிகவும் துணிச்சல் வேண்டும். பாராட்டுவதா வருத்தப்படுவதா தெரியவில்லை. நிச்சயம் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.

  நீங்கள் சொல்வது புரிகிறது. அறிவுரை என்று எடுக்க வேண்டாம் - நம்முடைய பிள்ளைகள் தம் நெஞ்சு வெடிக்க நம்மைக் கேள்விகள் கேட்க வைக்காதிருப்பதே, நம் குமுறல்களுக்கு வடிகால் என்று நினைக்கிறேன்.

  ஒவ்வொரு தலைமுறையும் மாறுபடுகிறது - இருப்பினும் மோசமான அப்பா பதவிக்கு நிறைய போட்டி, எந்தத் தலைமுறையிலும், என்றே தோன்றுகிறது.

  என் அப்பாவைப் பற்றி பெருமையாக அதிகம் சொல்ல எதுவுமில்லை (அதிகம் என்பது பின்னம் :) - என் தாத்தாவை விடப் பரவாயில்லை என்பதைத் தவிர! என் தாத்தாவின் வசனம் ஒன்று - எத்தனை பெற்றோர்கள் இதை இன்னும் உபயோக்கிறார்களோ தெரியாது - "உங்களை எல்லாம் எந்த இடத்துல எந்த டைத்துல எப்படி மடக்கணும்னு எனக்கு தெரியும்..". அவரால் எங்களுக்கு ஆக வேண்டிய அற்பச் செயல் ஏதாவது இருக்கும் - அதை செய்யாமல் கழுத்தறுப்பார் என்பதை சொல்லிக் காட்டும் ரகம். என்ன இழவு மடக்கப் போகிறாரோ என்று பயந்து கொண்டே நாளைக் கழிப்போம்! நரகம்!

  என்ன... நிறைய வளர்ந்து விட்டோம். மோசமான அப்பாக்களை மறக்க வைப்பதும் அப்பாக்கள் தான் என்பதையும் உணர்ந்து விட்டோம். அதில் தான் நிறைவு என்று நினைக்கிறேன் சிவகுமாரன்.

  நம் பிள்ளை நல்ல தகப்பனாவதும் ஒரு வகையில் நம் கையில் தானே இருக்கிறது? "என்னைப் பார்த்து எனை வெல்லவும் கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்ப்பேன்" - கவியரசு.

  பதிலளிநீக்கு
 35. இந்தக் கதைக்கு எனக்கு வந்த சில இமெயில்களில் என்னைப் பாதித்த ஒன்று. நாமறிந்த பதிவர் ஒருவர் எழுதியிருக்கிறார். அவர் வேண்டியபடி, பெயரை வெளியிடாமல் இமெயிலின் சாரம் மட்டும் இங்கே:
  "எவ்வளவு மோசமான தந்தையாக இருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தால் ..... கதை கண்ணைத் திறந்தது..... என் குடும்பத்துடன் வாரத்தில் ஒரு இரண்டு நாளாவது எதற்குமே கோபப்படுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்.... உங்கள் கதை ஒரு வழிகாட்டி.. இதைப் படித்து யாராவது திருந்தினால் உங்களுக்குப் பெருமை"

  மனமார்ந்த நன்றி நண்பரே! மிகப் பெரிய வார்த்தைகள். எனக்கு ஒரு தகுதியும் கிடையாது. இது வெறும் கதை. பொழுது போக எழுதியது.

  இருப்பினும் உங்கள் முயற்சி வெற்றி பெற எங்கள் அனைவர் சார்பிலும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. \\\நம்முடைய பிள்ளைகள் தம் நெஞ்சு வெடிக்க நம்மைக் கேள்விகள் கேட்க வைக்காதிருப்பதே, நம் குமுறல்களுக்கு வடிகால் என்று நினைக்கிறேன்.//
  -நன்றி அப்பாஜி. நல்ல தகப்பனாய் இருக்க முயல்கிறேன். இருப்பேன் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 37. முத்திரச்சிறுகதை இது பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 38. //அதற்குள் பத்து கேள்விகள் கேட்டு எதற்கும் பதில் வராததால் கேள்வி கேட்பதை நிறுத்தி, அவனைக் கட்டிப்பிடித்து மடியில் ஏறியமர்ந்து கொண்ட தாரா, "ஐ லவ் யூ டாடி..யூ ஆர் த பெஸ்ட் டேடி இன் த வர்ல்ட்" என்றாள்.

  வாழ்த்துவதற்கு காரணம் தேடாத மழலையின் நேர்மையில் உருகிப்போனான் ரகு.//
  நாங்களும் இதை அனுபவித்திருக்கிறோம் அப்பாஜி.
  அடிக்கடி இதுபோன்ற இடுகைகளைப் போட்டுத்தாக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
  :-)

  பதிலளிநீக்கு
 39. என்ன ஒரு அற்புதமான கதை! உங்கள் பதிவுகளை எப்படியோ இத்தனை நாள் பார்க்கவில்லை. எழுத்துலகில் ராட்சசனாக இருக்கிறீர்கள். இனி விடாமல் தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
 40. மிகவும் நன்றி பாலராஜன்கீதா, bandhu, ...

  பதிலளிநீக்கு
 41. பெயரில்லாஜனவரி 02, 2012

  அருமையான கதை. பெற்றோர் பிள்ளைகள் வளர்ப்பில் உணர்வுப் பூர்வமான நுணைக்கங்கள், ஆதங்கங்கள் போன்றவை இயல்பாக வைளிப்படுத்தப்பட்டுள்ளன. அருமை
  கல்பனா. சிங்கப்பூல்

  பதிலளிநீக்கு
 42. உங்கள் அபிராமி அந்தாதி இடுகைகளைத் தொடர்ந்து படித்தேன். ஆனால் உங்கள் கதைகளை இதுவரை படிக்காமல் விட்டுவிட்டேன். அண்மையில் சிறுகதைப் போட்டியில் உங்கள் சிறுகதை வென்ற போது தான் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன்.

  வைதிக மதத்தில் இறந்த பின் ஒருவர் 'ப்ரேத' நிலைக்குச் சென்று சில நாட்கள்/மாதங்கள்/ஒரு வருடம் வரையில் இருப்பார் என்றும் இரண்டாம் நாள், பத்தாம் நாள், பதிமூன்றாம் நாள், நாற்பத்தி ஐந்தாம் நாள், அமாவாஸ்யை தர்ப்பணம், வருட நிறைவு என்று செய்யும் ஒவ்வொரு சடங்குகளால் அந்த நிலையிலிருந்து 'பித்ரு' நிலைக்குச் செல்வார் என்றும் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் பின்புலத்தில் படிக்கும் போது இந்தக் கதை இன்னும் வலுவான ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 43. மிக நன்றி கல்பனா, குமரன் (சுவாரசியமான கருத்து சார்), ...

  பதிலளிநீக்கு
 44. மீண்டும் படித்தேன். யாருக்கு நாம் தீங்கு செய்கிறோமோ அவர் நம்மை மனதார மன்னிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கும் கதை! நான் ஓர் நல்ல அம்மாவாக நடந்து கொண்டிருக்கிறேனா என்பதைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறேன். அந்த அப்பாவிற்கு நற்கதி கிடைத்திருக்கும் என்றும் நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 45. மிக அருமையான கதை. மறு ஜென்மம் போன்றவற்றில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் அனுபவிக்கக்கூடிய கதையில்லை இது. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, பிறர் தன்னைப் பற்றி ரொம்ப உயர்வாகச் சிந்திக்காவிட்டாலும், அப்படி நடந்துகொள்ளாவிட்டாலும், இன்னும் ஒழியாமல் இருக்கானே என்று நினைக்காதவாறு, மற்றவர்கள் மனத்தில் வெறுப்பைத் தூவாத வாழ்க்கை வாழவேண்டும் என்பதை ரொம்ப நல்லா கொண்டுவந்திருக்கீங்க. ஒவ்வொரு தளத்திலும், இது நனவா, கனவா, எங்கு நடக்கிறது என்பதை உன்னிப்பாக உணர்ந்துபடித்தால் ரொம்ப அனுபவிக்ககூடிய கதை. Very Well Done. Extraordinary விஷயத்தை நல்லா தெளிவாச் சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 46. எதற்காக திவசம் கொடுக்கிறோம் என்று தெரிகிறது! திதி கொடுக்கும்போது நாம் கொடுப்பவை அவர்களைச்சென்று அடைகிறதோ இல்லையோ, அவர்களைப்பற்றிய நல்ல நினைவுகளை மனதில் கொண்டுவந்து நாமும் நல்லவர்களாவோம்!

  பதிலளிநீக்கு