2011/10/24

மெல்லிசை நினைவுகள்

வெத்து வேலை


                சினிமா-12 | 2011/10/24 | மெல்லிசை நினைவுகள்
சில பாடல்களின் ஒளி/ஒலிக் குறைகளுக்கு மன்னிக்கவும்
     
    பிடித்தக் காதல் டூயட் தேர்வுகளை எழுதியனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி. (ஸ்ரீராம் கவனிக்க :)

(அறிந்திருந்தாலும்) நான் இதுவரை கேட்டிராத பாடல், 'இதய வானின் உதய நிலவே'. நம்பவே முடியவில்லை. வேதா இப்படி இசையமைத்திருக்கிறாரா? Rafiயின் சுகானி ராத்? குலாம் முகமது, நௌஷத் பாணியை நினைவுபடுத்தும் மெட்டும் இசையும் அற்புதம். இந்தப் பாடலின் இசை மிக மிக இனிமை. சுசீலா கொஞ்சுகிறார். நன்றி, ஸ்ரீராமின் உறவினருக்கு. (பாட்டுக்காக பார்த்திபன் கனவு படத்தையே இப்போது பார்த்தேன்).

'என்னப் பார்வை' - அருமையான இசையுடன் கூடிய காதல் டூயட். இந்தப் பாடலில் வரும் சேக்ஸபோன் பிட், குளுமை. ஜேசுதாசின் தூக்கக் கலக்கக் காதல் தொனிக்கு ஏற்ற மாதிரி காஞ்சனாவின் முகத்தில் காதல் ரசம் சொட்டுகிறது. பாடலின் இறுதியில் வரும் படகுக்கார் ஊர்வலம் பொருந்தவில்லை. அதுவும், 'ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்' வரிகளைக் காரோட்டம் அமுக்கிவிட்டது அநியாயம். எம்ஜிஆருக்குக் கிடைத்திருக்க வேண்டிய வரிகள்? பொதுவாக ஸ்ரீதரின் பாடல் படப்பிடிப்பு அருமையாக இருக்கும். இந்தப் பாடலை அப்படிச் சேர்த்துச்சொல்ல முடியவில்லை. அதே போல், தேன் தேன் என்று இனிமை சொட்டும் 'நிலவும் மலரும் பாடுதே' பாடலின் படப்பிடிப்பும் சுமார் சுமார்.

ரசமான இன்னொரு தூக்கக் கலக்கக் காதல் பாடகர் பிபிஸ்ரீ (அடிக்க வராதீங்க). 'போகப் போகத் தெரியும்' பாடலில் சுசீலாவின் கெஞ்சல் கொஞ்சல் புரட்டலுக்கு இடையே பிபிஸ்ரீ தாக்குப் பிடிக்கிறார் என்று சொல்ல வேண்டும். பாடலின் இடையில் வரும் குழல்-வயலின் துள்ளல் பிட் கேட்கையில் ஒன்றையொன்றுத் துரத்திச் செல்லும் கடல் அலைகள் போலவே இல்லை? கடல் அலைகளுக்கேற்ப விஜயாவின் மூவ்மென்டை அமைத்தது ரசிக்க முடிகிறது. 'பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்' - அசல் காதல் வரி. சுசீலா துணையுடன் விஜயா விளையாடுகிறார். இந்தப் பாடலும் 'குயிலாக நானிருந்தென்ன' பாடலும் ஒரே கடற்கரையில் எடுத்திருப்பது, சற்றுக் கவனித்தால் புரியும். மெரினாவோ, கோவளமோ, என்னவோ. 'குயிலாக' பாடலில் கும்மியடிக்கிறார்கள். நடுவே ஜெய்சங்கர் நடனமாடுகிறாரா அல்லது 'ரைட்டா கொய்ட்டா' விளையாடுகிறாரா தெரியவில்லை. ஜெய்சங்கர்-ராஜஸ்ரீ-இயக்குநர் காம்பினேஷனில் முத்தான பாடல் சித்திரவதைப்படுகிறது.

சித்திரவதை என்றதும், எம்ஜிஆருக்குக் கிடைத்திருக்க வேண்டிய இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது. 'மதன மாளிகையில்' பாடலும் இசையும், காதல் காதல் என்று அடித்துக் கொள்ள வைக்கும். படமாக்கம், கஷ்டம் கஷ்டம் என்று கதற வைக்கும். கதாநாயகி, சிவாஜியைப் பார்க்கும் பார்வையில் இருப்பது என்னவோ தெரியாது, நிச்சயம் காதல் இல்லை. 'மதன மாளிகையில்' அருமையான காதல் டூயட். டிஎம்எஸ்-சுசீலா எப்படிக் கொஞ்சுகிறார்கள்! காதல் பாட்டு என்றால் இவர்களை அடித்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். 'என் கேள்விக்கென்ன பதில்' பாட்டில் சொக்குப்பொடி தூவுவார்கள், கேளுங்கள்.

'இயற்கையென்னும் இளைய கன்னி' எஸ்பிபியின் முதல் தமிழ்ப்பாடல் என்றும், வெளிவந்தது அடிமைப்பெண் படப்பாடல் என்றும் சொல்வார்கள். சரியாகத் தெரியவில்லை. காதல் வரிகளை உணர்ந்து பாடியிருக்கிறாரா அல்லது கடமைக்காகப் பாடியிருக்கிறாரா என்பது, ஹ்ம்ம்ம்ம்ம்..., 'பாரதி கண்ணம்மா' பாட்டைக் கேட்டால் தெரிந்துவிடும். பாரதி கண்ணம்மாவில் எஸ்பிபி கொஞ்சல் இல்லையென்றால் கேட்கச் சிரமமாக இருந்திருக்கும். 'இயற்கையென்னும்' பாட்டில் ஜெமினி, கடைசியில் காஞ்சனாவை அலட்சியமாகத் தூக்கிச் சுற்றுகிறாரே? டூப்பா? சமீபத்தில் நான் இதுபோல் தூக்கப்போய்.. வேறு கதை.

'எங்கிருந்தோ ஆசைகள்' ரொம்ப நாள் கழித்துக் கேட்ட பாடல். ஜெயலலிதா எத்தனை அழகாக இருக்கிறார்! ரமணியின் நினைவு வருகிறது. அவனுடைய favorite கதாநாயகி. காதல் பாட்டு என்றில்லை, பொதுவாகப் பாடல் காட்சிகளில் எம்ஜிஆர் படங்களில் மட்டும் முழு frameஐயும் பயன்படுத்துகிறார்கள். எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா அல்லது மற்றவர்கள் frameன் வலது பக்கத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்களா? 'இதுவரை நீங்கள்' பாட்டிலும் முழு frameஐப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'இதுவரை' பாட்டு, காதல்ரச நீச்சல்குளம். டிஎம்எஸ்-சுசீலாவின் குரலில் இன்னொரு தேன்குடம். சரோஜாதேவி அழகாக இருப்பார் பாடலில். 'மழையில் படமெடுக்கிறோமே, இப்படி மேக்கப்போடு பளபளவென்று இருந்தால் பொருந்துமா?' என்று யாருமே நினைக்கவில்லை :) மீனாக்ஷிக்குப் பிடித்த பாடகர்கள் யார் என என்னால் உடனே சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

'பௌர்ணமி நிலவில்' பாடலின் தொடக்கத்தில் வரும் லொட்டு லொட்டு ஒலி. கடிகார ஒலி என்பதைக் கடைசியில் அறிக. பாடலில் நிர்மலா கஞ்சா அடித்துவிட்டு நடித்திருப்பாரோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. சிவகுமார் அழகாக இருக்கிறார். நெருக்கமான காதல் காட்சியில் சிரமப்படுவது கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்தது.

'நான் பேச நினைப்பதெல்லாம்' எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை - எனக்கு. காட்சி அமைப்பா, சிவாஜி கெட்டப்பா என்னவோ தெரியவில்லை, இந்தப் பாடலை ரசித்துக் கேட்டாலும் பிரமாத காதல் உணர்வோடு கூடிய பாட்டென்று சொல்லமுடியவில்லை. 'ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இலை' என்று ஆறுதல் அளித்துக் கொள்ளும் ஜோடியைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பொறாமை வருகிறது. காதலைவிட நிம்மதி வெளிப்படும் காட்சி என்று நினைக்கிறேன். 'சொல்லென்றும் பொருளென்றும்' வரிகளை ரசிக்காத நாளில்லை. இந்தப் படத்தை இந்தியில் எடுத்த போது, இசையமைப்பாளர் மிகவும் சிரமப்பட்டு எம்எஸ்வியிடமே அறிவுரை கேட்டதாகப் படித்திருக்கிறேன்.

தமிழ்ச் சினிமாவின் சிறந்த ஊடல் பாட்டு, 'கண்ணில் கண்டதெல்லாம்' என்று நினைக்கிறேன். 'என் பெண்மைக்கு லாபம்' என்று விஜயா காலை உயர்த்தும் காட்சி அன்றைக்கும் சிரிப்பைக் கொடுத்தது. மெரினா நீச்சல்குளம் போல் தெரிகிறது. அங்கே நீச்சலென்று கூத்தடித்தப் பதின்ம நினைவுகள் ஏராளம். விஜயா அட்டகாசமாக நீந்துகிறார். ஜெய் அட்டகாசமாக நீந்துவது போல மோசமாக நடிக்கிறார். சுகமான மெட்டு. கௌதமரா கொக்கா?

'ராகம் தன்னை மூடிவைத்த வீணை அவள் சின்னம்' - இளவயதில் நினைத்து நினைத்துப் பிரமித்த வரி. படமாக்கத் தெரியாமல் கழுத்தறுத்துவிட்டார் கேபி. எத்தனை அருமையான பாடல்! பாலராஜன்கீதா பரமரசிகர்.

இந்தப் பாடலில் கழுத்தறுத்தார் என்றால் சேர்த்துவைத்து பின்னிவிட்டார் கேபி இன்னொரு பாட்டில். பாரதி கண்ணம்மா. ஸ்டில் ஷாட்களை பாட்டில் இணைத்திருப்பதை இன்றைக்கும் ரசிக்கிறேன். அருமையான இசை. அருமையான படப்பிடிப்பு. கமலகாசன் (ஹ்க்கும்) ஜெயப்ரதா (ஆகா!) ஜோடியைப் பலமுறை பார்க்கவைத்தது, படத்தின் இசை. மிகச் சாதாரண பாடல் வரிகள். கவியரசுக்கு ஒழியவில்லையோ என்னவோ.

ஒன்றைக் கவனித்தேன். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், சிவகுமார், ஜெய்சங்கர், கமல்காசன்... அட என்ன இது? சூப்பரைக் காணோமே? சிகரெட் தூக்கிப் போடுவதோடு சரியோ?

தேர்வுகளை அனுப்பியதற்கு மீண்டும் நன்றி. உங்கள் தயவில் நல்ல பாடல்களை நானும் கேட்டு நினைவுகளை மெல்ல முடிந்தது.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.20 கருத்துகள்:

 1. எல்லோருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  பாடல்களை அழகாக இரசித்திருக்கின்றீர்கள். நான் சொன்ன பாடலை மட்டும் வேறு கோணத்தில் பார்த்து (?) கடவுளே --- கடவுளே!

  சூப்பர் ஸ்டார் பாடல்கள் யாவும் தனிப பாடல்கள்தான் இரசிக்கப் படுபவை. டூயட் எல்லாம் குத்தாட்டம் என்றுதான் ஞாபகம். ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, காதலின் தீபம் ஒன்று .... ஆகிய பாடல்கள் நினைவுக்கு நிற்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. சொட்டுச் சொட்டாய் ரசித்த பாடல்கள்.நினைவில் நின்றவை கேட்ட திருப்தி.திரும்பத் திரும்பக் கேட்க நினைக்கிறது.இரவு வந்தும் கேட்பேன்.காதுக்குள் இசை ஓடிக்கொண்டேயிருக்கிறது.எந்தப் பாடலென்றுதான் தெரியவில்லை.
  நன்றி அப்பாஜி !

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாஅக்டோபர் 24, 2011

  super star padalgal ellam thani ragam thaan enna sir poombaavai aambal aambal; sahaana thooral thoovoudhoo;aagaya gangai ;alazhu nee sirithaal siripalazhu, maasi maasam aalaana ponnu endru solli adaagaaatha list irukku

  பதிலளிநீக்கு
 4. மதன மாளிகையில் எனக்குப் பிடித்தபாடல்.நீங்கள் சொல்வது உன்மைதான்.டி.எம்.எஸ்-சுசீலா இணை unbeatable!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் சார்!

  பதிலளிநீக்கு
 6. பாடல்களை இப்படி ரசித்து அதை ரசிக்கும்படி எழுதுவது உங்கள் தனித்திறமை. படிக்க சுவையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 7. காதல் டூயட் ரிசல்டா...இப்படி ஒன்று போடுவீர்கள் என்று சொல்லவேயில்லையே...!! ஊடலுக்கென்று வேறு பாடல் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ரஜினி பாடல்களில் காட்சியும் கானமும் சேர்ந்து அழகாயிருக்க வேண்டும் என்ற கண்டிஷனை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் சில பாடல்கள் தேறலாம். (மதனோற்சவம், கண்மணியே காதல் என்பது கற்பனையோ, அதோ வராண்டி வாராண்டி, நதியோரம் போன்ற பாடல்கள்)

  பதிலளிநீக்கு
 8. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அப்பாதுரை அவர்களே!இரண்டுமாதம் தமிழ்நாட்டில் சுற்றினேன்.பலன் நாகபுரிவந்ததும் மருத்துவமனை வாசம்.தற்பொது வீடு வந்துவிட்டேன். நசிகேதன்,மூன்றாம் சுழி முற்றும் படிக்கவில்லை .பின்னூட்டம் வரும்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ...காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 10. //(ஸ்ரீராம் கவனிக்க :)//
  ஸ்ரீராம் கவனிக்கராரோ இல்லையோ, நான் கவனிக்கறேன். பதிவு போட்ட ஆசாமியும் சரி, நம்ப கமெண்ட் சக்ரவர்த்தியும் சரி அவங்களுக்கு தமிழ் சினிமா உலகில் பிடிச்ச முதல் காதல் பாட்டு எதுன்னு இன்னும் எழுதவேயில்லை. இது நியாயமே இல்லை. :(

  பாட்டெல்லாம் படு ஜோர். பதிவும் சூப்பர். எங்கிருந்தோ ஆசைகள் பாட்டை கணக்கே இல்லாத அளவு பாத்திருக்கேன். இப்பவுமே ரெண்டு முறை பாத்தாச்சு. மதன மாளிகையில் பாடலை ஒரு முறை கேட்பதோடு என்றுமே நிறுத்திக் கொள்ள முடியாது. பாடல் காட்சியில் உஷா நந்தினியை பார்க்க முடியாது. ஆனால் சிவாஜிக்காக பார்த்தே ஆகவேண்டும் என்று தோன்றும். அதிலும் அவர் 'பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி' என்ற வரிகளை டி.எம்.எஸ். எவ்வளவு ஸ்டைலாக பாடி இருப்பாரோ அதே அளவு ஸ்டைலாக பல்லை மென்மையாக கடித்துக் கொண்டு பாடும் அழகே அழகுதான். மிகவும் ரசிப்பேன். இன்னும் எதிர்பார்த்த இரண்டு பாடல்கள் 'மெல்ல போ, மெல்ல போ', 'காதலின் பொன் வீதியில்'. இந்த பதிவு தீபாவளிக்கு ஸ்பெஷல் விருந்தா இருந்துது. நன்றி.

  அனைவருக்கு தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லாஅக்டோபர் 25, 2011

  தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 12. யூட்யூபில் / வேறெங்காவது இதுபோல ஒரு காணொளியைக் கண்டிருக்கிறீர்களா ?
  http://www.youtube.com/watch?v=eOrY54-cKxY&feature=related

  பதிலளிநீக்கு
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. //யூட்யூபில் / வேறெங்காவது இதுபோல ஒரு காணொளியைக் கண்டிருக்கிறீர்களா//

  பாலராஜன்கீதா...அபாரம். பார்த்துத் தரவிறக்கி விட்டேன். ஆனால் சில சந்தேகங்கள். நிறைய ஒரே காட்சிகளை ஒட்டியிருக்கிரார்களோ என்று...ஹிந்தியிலும் ஜெமினிதானா....

  பதிலளிநீக்கு
 15. அப்பாஜி....உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. Thamaso Maa Jyothir Gamaya...

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... :)

  பதிலளிநீக்கு
 17. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. இனிய பாடல்களின் தொகுப்பு.
  பாடல்களை இப்படி அக்கு வேறாய் ஆணி வேறாய் அலசியிருக்கிறீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 19. பிரமாதம் பாலராஜன்கீதா. யுட்யூபில் இன்னும் என்னென்ன gems இருக்கின்றனவோ!

  பதிலளிநீக்கு
 20. மூன்றாம் கோணம்
  பெருமையுடம்

  வழங்கும்
  இணைய தள
  எழுத்தாளர்கள்
  சந்திப்பு விழா
  தேதி : 06.11.11
  நேரம் : காலை 9:30

  இடம்:

  ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

  போஸ்டல் நகர்,

  க்ரோம்பேட்,

  சென்னை
  அனைவரும் வருக!
  நிகழ்ச்சி நிரல் :
  காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
  10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

  11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
  12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
  1 மணி : விருந்து

  எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
  ஆசிரியர் மூன்றாம் கோணம்

  பதிலளிநீக்கு