2011/11/01

சோட்டு

முன்னோட்டம்


    ன்னமும் கற்புக் கெடாத செம்பூர்.

ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிடப் பொடி நடை தூரத்தில், பளபளக்கும் புத்தம்புது அணுசக்திக் குடியிருப்பையொட்டிய ஜட்டி நகர் (ஜனார்தன் தல்வார்கர் ஜட்டியாக மருவியதற்கும் கதைக்கும் தொடர்பில்லை என்றாலும், நாளைக்கே ஒரு ஐஏஎஸ் ஐஐஎம் ஐஐடி ஐஐயோ பரீட்சையில் கேள்வி கேட்டார்கள் என்று வையுங்கள்.. உதவும் இல்லையா?).

ஜட்டி நகர் என்று பெயரே தவிர, எண்பது வீடுகளும் இரண்டு விளையாட்டுத் திடல்களும், ஒரே ஒரு கெரசின் மற்றும் காய்கறிக் கடையும் கொண்ட குடியிருப்பு, அவ்வளவுதான். ஓ..மறந்து விட்டது. ஒரு மரத்தடி பிள்ளையார் சன்னிதியையும், எதிரில் சம்பந்தமேயில்லாமல் எலுமிச்சை செருகிய சூலம் புதைந்த இடத்தையும் ஜட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தென்னாட்டிலிருந்து வந்து அடாமிக் சென்டரில் வேலைக்குச் சேர்ந்திருந்த அத்தனை மதராசிகளும் பப்பள அணுசக்தி காலனியில் இடம் கிடைக்கும் வரையில், ஜட்டி நகரில் தண்டேரா போடுவார்கள். இரண்டு காலனிகளுக்கும் குறுக்கே மதில் சுவர் இருந்தாலும், இடையில் போகவர வசதியாக முழங்கால் நெருடும் சுழல்கதவு ஒன்று போட்டிருந்தார்கள். டர்ன்ஸ்டைலை ஒட்டி, ஒற்றையறை ஓட்டுக்கட்டிடம். வாட்ச்மேனுக்காக. அணுசக்திக்கும் ஜட்டிக்கும் பொது வாட்ச்மேன்.

அணுசக்தி அளவுக்கு அழகாக இல்லாவிட்டாலும், ஜட்டியைக் குறை சொல்ல முடியாது. home is what you make of a house, இல்லையோ? ஜட்டி, அணுசக்தியை விட உயிரோட்டமாக இயங்கும். காலை நாலு மணிக்கு வாட்ச்மேன் நூறு பேகெட் பால் வாங்கிக் கொண்டு வந்து ஒவ்வொரு பிளாட் வாசலிலும் போடுவதில் தொடங்கும் நாள், உடனே களைகட்டிவிடும். எட்டரை மணிவரை சுறுசுறுப்பாக இருக்கும். பிறகு மாலை நாலு முதல் இரவு ஒன்பது மணி வரை களைகட்டும்.

கர் என்று வழங்காத அத்தனை பேரையும் மதராசிகள் என்று அழைத்தாலும், அங்கே இருந்தப் பெரும்பாலான மதராசிகள் உண்மையிலேயே தமிழர்கள் தான்.

..ஏண்டி மைதிலி.. மைத்லீ.. என்னோட சட்டைல பட்டன் தெச்சு வைனு நேத்திக்கே சொன்னேனே?

..கந்தா என்றழைக்கவா கதிர்வேலா என்றழைக்கவா..

..ஏன்னா... உங்க பொண்ணைப் பாருங்கோ.. என்னமோ லிப்ஸ்டிக் போட்டுக்கறாளே?

..மம்மி.. பாகல் ஹோ க்யா? எல்லாரும் இப்ப லிப்ஸ்டிக் போட்டுக்கறா. ஸ்லீவ்லெஸ் போட்டுக்கத்தான் அலோ பண்ண மாட்டேங்கறே.. இதுக்குமா?

..பொங்கும் பூம்புனல்..

..வைடி சித்த... ராஜேஸ்வரி ஷண்முகம் கொரல் கேப்போம்.. சும்மா கர்னாடக சங்கீதம் பக்தி பாட்டு வச்சுண்டு.. ரேடியோல கை வச்சா பின்னிடுவேன்.. சிலோன் லேசுல கிடைக்காது..

..கடங்காரி. கீழே போடுறீ. இந்தாத்துல இருக்குற வரைக்கும் நான் சொல்றதைத்தான் கேக்கணும்.. மினுக்கி.. சூடு போட்டுறுவேன்..

..முத்துச் சிப்பி மெல்ல மெல்லத் திறந்து வரும்..

..காபிய சாப்டுங்கோ.. மெட்ராஸ்லந்து வாங்கிண்டு வந்தேன்.. லியோ காபி..க்ரிகெட் கண்றாவியைக் கேட்டீரோ ஓய்? இருங்கோ பேப்பர் எடுத்துண்டு வரச்சொல்றேன்..

..ன்னா.. சித்த அந்த கத்திரிக்காயைக் கெளறுங்கோ கருகிடப் போறது..

..சோட்டு.. அரே சோட்டூ.. இதராவ்.. நீசே ஸே அப்னா பேப்பர் லாவ்.. அரே பாபு ஓ நஹி.. அங்க்ரேசி.. ஹிண்டூ.. இதோ எடுத்துண்டு வருவான்..

..பொண்ணு பிரசவத்துக்காக பம்பாய் வந்தோமுங்க.. குழந்தை தவழ ஆரம்பிச்சிருச்சு.. ஊரைப் பாக்க போவணும்..

..அறுவது ஓவர்ல நூத்து முப்பத்ரெண்டு அடிச்சிருக்காங்க ஓய்.. நிக்க வச்சு சுடவேண்டாமோ இவாளை?

..ஏந்திருடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு..

..எல்லாம் அந்த கவாஸ்கர் உருப்படாத பய வேலை.. அறுவது ஓவர்ல முப்பத்தாறு ரன் அடிச்சிருக்கானே மகாபாவி..

..ப்பா.. அம்மா பிடாரியாட்டம் கத்தறா..யே தோ ஜங்க்லி ஹை.. முஜே பசாவ் டேடி..

..எங்கே சுவாமி? தமிழ்நாட்டுல பூணல் போட்டுண்டா பாவம்னு இல்லையா ஆயிடுத்து? படிக்கவும் முடியலே.. படிச்சா வேலையும் கிடைக்கலே..

..ஏன் அப்படி சொல்லுறீங்க?

..உங்க ஆட்கள்ளாம் வந்து எங்களை உண்டு இல்லைனு ஆக்கிடலையா பின்னே?

..பச்சைக்கிளி முத்துச்சரம்..

..இங்க்லிஷ் ஸ்கூல்ல சாய்ந்த்ரம் கேதரிங்க் வச்சிருக்கா. நம்ம ஊர்க்காரா நாலு பேருக்கு பெலிசிடேசனாம்.. அதுல பொன்னையா நாயுடுனு ஒருத்தர் முஜிபூர் ரெஹ்மானுக்கே அட்வைசரா இருந்தாராம்.. இந்திரா காந்தி அனுப்பி வச்சாளாம்..

..யாரடி பிடாரிங்கறே.. ரொம்ப இடம் கொடுத்துட்டேள்.. இன்னிக்கே இவ காலேஜ் படிப்பை நிறுத்துங்கோ சொல்றேன்..

..பூணல்னு இல்லை சார்.. துடிப்பிருந்தா யாரா இருந்தாலும் பொழச்சுக்கலாம்.. பூணல் கீணல்லாம் மனுசாளை டிபைன் பண்றதில்லை..

..அதென்ன அப்படி சொல்லிட்டீங்க? ஒரு பூணல் இன்னொரு பூணலைத் தானே கண்டுக்குது? நாங்கள்ளாம் தலையெடுக்க சன்மமாவுதில்லே?

..அணுசக்தில ப்ளாட் அலாட் ஆயிட்டா இப்படி பஸ்சுக்கு நாய் மாதிரி ஓட வேண்டாம் பாருங்கோ.. ஆத்து வாசல்ல இறக்கி விடறான்..

..இருந்தாலும் பம்பாய்ல எல்லாரும் கால்ல சக்கரம் கட்டிண்டுனா அலையறா? சாவதானமே இல்லாமப் போச்சே?

..காசு சம்பாதிக்கணும்னு பம்பாய் வந்துடறா.. அவா கொழந்தேளைப் பாத்துக்க நாமளும் வரவேண்டியிருக்கு.. ம்ம்ம்ம்..திருவையாத்துக்கு கொடுப்பினை இல்லை..

..இந்த சௌகீதார் ரெண்டு நாளா காணோம்.. கார்த்தால பால்பாகெட் வினியோகத்திலேர்ந்து எல்லாம் சோட்டு தான்..

..அப்பா.. ஷாம்கோ சினிமா போலாமா? சோட்டி ஸி பாத்னு புதுப்படம்.. ரொம்ப நல்லாருக்காம்.. ஜானே மன் ஜானே மன்..

..விசிலடிக்கறா பாருங்கோ.. விசிலடிக்கறா பாருங்கோ.. அழகா மதுராந்தகத்துல வளந்திருக்க வேண்டிய குடும்பம்.. இப்படிப் பம்பாய்ல விசிலடிச்சுக் கெட்டுண்டிருக்கே..

..மாமி.. மாமீ... மத்யானம் லேடீஸ் க்ளப் லஞ்ச் மீடிங் இருக்காம்... பூரணி மாமி வீட்டுல.. அம்மா ஞாபகப்படுத்தச் சொன்னா.. யே க்யா சீஸ் ஹை?

..மைத்லீ... நேக்கு நேரமாறதுடீ.. மாதுர் வந்துருவான் இப்போ.. இந்த சட்டை வேணாம், வேறே பட்டன் இருக்குற சட்டையா கொடேன்?

..மச்சானைப் பாத்தீங்களா..

..வைடா.. அங்கயே வை.. விஷயத்தை சொல்லியாச்சுல.. நடையை கட்டு..

..பப்பா... இந்த அம்மா தொல்லை தாங்கலை.. ஐ'ம் கோயிங்க் டு ரன் அவே.. இஸ்கோ சரா ஷாந்தி கரோ டேட்.. உன் வைப் தானே?

..வித்யா.. அம்மா சொல்றதத்தான் கேளேன் கொஞ்சம்.. துமாரி பலாயி கேலியே..

..போலாம் வரீரா? சும்மா முருகன் கோவில்னு சுத்தறதுக்கு பதிலா சாய்ந்த்ரம் இங்க போலாமே?

..வந்துட்டானா மாதுர்.. சரிதான்.. நான் கிளம்பணும்.. ஒரு ஊக்கானும் குடுறீ மைத்லீ..
இதுதான் செம்பூர் ஜட்டி நகர். கண்களை மூடிக்கொண்டால் மைலாப்பூர்.. மந்தைவெளி.. அடையாறு.

இடையில் வந்த சோட்டுவைக் கவனித்தீர்களா தெரியாது. இந்திச் சோட்டுவையும் ஜட்டித் தமிழரையும் இணைத்துப் போட்ட ஒரு விசித்திரப் பத்துநாள் புயல் பற்றியது இந்தக் கதை.


        நாயாசமாக உபநிஷதை மேற்கோள் காட்டும் Matangi Mawleyயின் 'துப்பாண்டி குடும்பத்தினர்' பதிவைப் படித்த போது தோன்றிய கரு. M&Mக்கு நன்றி. பதிவையும் அருமையான விடியோவையும் பலமுறை ரசித்தேன். விடியோவில் புலப்படும் chotuவின் haunting innocence கதையில் வெளிவருமா தெரியவில்லை. கதையின் போக்கிலிருந்து கவனம் விலகுவதைத் தடுக்க, சிறு கலாசார, காலப்பின்னணியை முன்னோட்டமாகத் தர நினைத்தேன். முழுக்கதை: 11.11.11.

16 கருத்துகள்:

 1. அறுபது ஓவர்ல முப்பத்தி ஆறு ரன் எடுத்த கவாஸ்கரை இன்னும் மறக்கல நீங்க. சிலர் ரன்கள் அடித்து சாதனை செய்வார்கள். காவஸ்கர் அடிக்காமல் சாதனை செய்துள்ளார். அந்த மேட்சில் கவாஸ்கர் சதமடித்திருந்தால் கூட மறந்திருப்பார்களே. இந்த சாதனையை மறக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 2. ட்ரெய்லரே மிரள வைக்குதே!!!!

  துப்பாண்டிக்கும் சோட்டுக்கும் உங்களால் தான் முடிச்சுப் போட முடியும் ஜி! :-)

  11.11.11க்கு 111 111 தடவை ஆசையோடு வெயிட்டிங்.

  111 - நெல்சன்.. 222 333 வந்தால்லாம் விக்கெட் விழும்னு சொல்லுவாங்க.. ஆனா.. அதெல்லாம் கவாஸ்கர்கிட்ட எடுபடாது...

  மட்டையை தரையில போட்டு விளையாட ஆரம்பிச்சா ரெண்டு பேர் வந்து அவரை தூக்கி விடணும். டஃப் மேன். தற்போதிருக்கும் வாலுக்கு வால். :-)))
  #வால்=WALL

  பதிலளிநீக்கு
 3. அட போங்க அப்பாஜி...எங்கட ஈழத்தமிழை விட்டுப்போடீங்களே !

  பதிலளிநீக்கு
 4. ஜட்டி நகரில் நடந்த பல உரையாடல்கள் இன்று GULF, US என்று அல்லாடும் பல தாத்தா பாட்டிகளுக்குப் பொருந்தும். ஜட்டி நகரில் என்ன ஜகடா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. கலக்கல்! கதைக்கு ட்ரைலர் போட்ட முதல் எழுத்தாளர் நீங்கள்தானோ! :) ரசிக்க வைக்கும் கற்பனை. கதை ரிலீஸ் பண்ற தேதி கூட கலக்கலா இருக்கே! ட்ரைலர் எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டது. படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. பொங்கும் பூம்புனல்..

  அருமையான முன்னோட்டம்...

  பதிலளிநீக்கு
 7. அடேடே....டிரெயிலரா...எடுத்த குறிப்பெல்லாம் வீணாப் போச்சே...!வெளியிடும் தேதி சிறப்பான தேதிதான்.காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. எங்க Chotu வ பாத்த யாருக்கும் அவன பிடிக்காம இருக்கவே முடியாது! :) அவன் உங்கள ஒரு கத எழுத inspire பண்ணினது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்!

  Eagerly awaiting to read your story... :)

  பதிலளிநீக்கு
 9. கதைக் களம் சூழல் மனிதர்கள் எல்லாம்
  மனசுக்குள் தெளிவாகப் பதிந்துவிட்டது
  பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டது
  நாங்க ரெடி தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. அது வந்துங்க சென்னை பித்தன், meenakshi... 1.11.11 மற்றும் 11.11.11 ரெண்டு நாளிலயும் எதுனா எழுதணும்னு ரொம்ப ஆசை.. ஆனா சரக்கு இல்லை. அதனால கதையை ரெண்டா பிரிச்சு முன்னோட்டமாவும் கதையாவும் பதிவிடலாம்னு ஒரு குறுக்கு வழி தோணிச்சு.. அதான்.
  எழுதின கதையைப் படிச்சுப் பாத்தப்ப கதைல இந்த கலாசார டயலாக் பொருந்தாதும் ஒரு காரணம்... எழுதிட்டமே சும்மா விடலாமா?

  முன்னோட்ட stuntஐ மதித்துப் படித்த அத்தனை பேருக்கும் நன்றி.

  (தமிழ் உதயம்.. இருந்தாலும் உங்களுக்கு ரொம்பக் குறும்புங்க. கவாஸ்கர் சாதனையாமுல்ல?)

  பதிலளிநீக்கு
 11. அப்பாதுறை அவர்களே! அந்தக்காலத்தில் "காதல் " என்று ஒரு பத்திரிகை. .அறு .ராமனாதன் என்பவர் ஆசிரியர். வீட்டுக்குத்தெரியாமல் ஒளித்து ஒளித்து படிப்போம். கெட்டவார்த்தை சமாசாரமெல்லால் அப்படி ஒன்றும் அதிகம் இருக்காது. அதில் முதல் இரண்டு பக்கம் ராமனாதன் கதை வரும். முழுக்க ழுழுக்க narrative.கதைக் களம்,பின்புலம் என்று எதுவும் இருக்காது . கிடத்தட்ட அது போன்று இருந்தது உங்கள் எழுத்து பாணி .வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 12. முன்னோட்டமே கலக்கல்.
  1994வாக்கில்MScமுடித்தவுடன் BARC இன்டெர்வியுக்கு சென்றேன். ஒரு வார பாம்பே வாசம். அங்கிருந்த தமிழர்களுடன் தங்கி இருந்தேன். அருமையான நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 13. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
  இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
  கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. வெயிட்டிங் ஃபார் யுவர் கதா! இன்னிக்கு 12-11-2011

  :-)

  பதிலளிநீக்கு