◀   1
    "மை ப்லஷர்.. இந்திய விருந்துச் சாப்பாடு கிடைக்குது.. என்னோட சிறந்த மாணவன் வீட்டுல.. மோரோவர் உன் ஆராய்ச்சி முடிஞ்சு ரெண்டு மாசத்துல நீ ஊர் திரும்புறே.. அபவ் ஆல், மூணு மாச ஆராய்ச்சினு கணவன் மனைவியா ட்ரெஸ்டன் வந்த நீங்க, இங்கே இரண்டு வருஷம் தங்கி ஒரு குழந்தை பெத்துட்டிருக்கீங்க.. அத்தனையும் கொண்டாட வேண்டாமா? நீ பல முறை அழைச்சப்பவே வந்திருக்கணும். இப்பத்தான் எனக்கும் வாய்ப்பு கிடைச்சுதுனு வச்சுக்குவோம். அதனால இது பெரிய விஷயமில்லே ரவி. எனக்கும் சந்தோஷம் தான். என்னை வற்புறுத்தி அழைத்து வந்ததுக்கு நன்றிகள்".
வண்டியோட்டி வந்த புரபசரிடம், "உங்களுக்கு நல்ல மனசு" என்றான் ரவி. "இரண்டாவது பிளாக்குல வலப்புறம் பொது பார்க்கிங் போர்டிகோ இருக்கு. பார்க்கிங்லந்து என் அபார்ட்மென்டுக்கு கால் மைல் நடக்கணும் சார்.. பொருட்படுத்தாம வரணும்"
"தட்ஸ் ஓகே.. சாப்பிடறதுக்கு முன்னால ஒரு எக்சர்சைஸ்னு வச்சுக்குவோம்" என்று வண்டியை நிறுத்திய புரபசர், பின்னிருக்கையிலிருந்து ஒரு கலர் பெட்டியை எடுத்துக் கொடுத்தார். "ரவி, இது உன் குழந்தைக்கான அன்பளிப்பு. இங்கயே கொடுத்துடறேன், ஸோ யு கேன் கேரி இட்" என்றுச் சிரித்தார். இறங்கி நடந்தார்கள்.
"ஊர்லந்து உங்கம்மா வந்திருக்காங்க இல்லையா? அவங்களுக்கு இங்கே பொழுது போகுதா? தெர் இஸ் நாட் மச் ஹியர்"
"அவங்களுக்கு இங்கே கொஞ்சம் கூடப் பிடிக்கலே. பிறந்த குழந்தைக்காக வந்தாங்க.. எப்ப ஊர் போவலாம்னு வெயிட்டிங்.."
"புரியுது. அவங்களோட சுதந்திரம் இங்கே கட்டுப்படுத்தப்படுது இல்லையா? ஷாப்பிங், சுத்திப் பார்க்குறது.. இதெல்லாம் சலிச்சுரும். சொந்த ஊர் போல வராது. இந்த ஊர்ல மொழி வேறே ஒரு சிக்கல்"
"எங்கம்மா நல்லா இங்லிஷ் பேசுவாங்க. படிச்சவங்க, இந்தியாவுல பெரிய வேலைல இருந்தவங்க.. ஆனா ஜெர்மன் தெரியாம வீட்டுக்குள்ள கிடந்து போரடிக்குது. டிவி சேனல்களும் போரடிக்குது"
"ஹாஹா.. வெல்கம் டு ஜெர்மனி. என்னதான் எஜுகேடடா, கெரீர்ல சக்ஸஸ்புல்லா இருந்தாலும் தன்னுடைய பிள்ளைகளை அண்டி வரப்ப வயதான பெற்றோர்கள் அனைவரும் அப்பாவியாட்டம் நடந்துக்குறாங்க இல்லையா?" என்ற புரபசர், ரவியின் தோளை விளையாட்டாக இடித்தார். "என்னப்பா இது? கால் மைல்னு சொன்னே, முக்கா மைலுக்கு மேலே இருக்கும் போலிருக்குதே நடை?"
"நாலு காம்ப்லெக்ஸ் சுத்தி வரதால தொலைவா தோணுது.. இதா வந்துடுச்சு.. வாங்க சார். ஆறாவது மாடி"
"லிப்ட் வேணாம்பா.. படியேறியே போவோம்.. ஆறு மாடி தானே?" என்ற புரபசரை வியப்புடன் தொடர்ந்தான் ரவி. ஆறு மாடிகள் ஏறுமுன் மூச்சுத் திணறியது. வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவைத் திறந்த அம்மா, "ஏண்டா இப்படி மூச்சு வாங்குது ரவி?" என்றார் பதட்டத்துடன்.
புரபசரை உள்ளே அழைத்த ரவி, "படியேறி வந்தேன்மா. எனக்கு மூச்சு வாங்குது. இவரு சின்னப் பிள்ளையாட்டம் இருக்காரு" என்றான்.
ரவியின் அம்மாவை முகம் பார்த்துச் சிரித்தபடி வணக்கம் சொன்னார் புரபசர்.
"அம்மா.. இவர் என் புரபசர் ராஜ்குமார்" என்ற ரவி, புரபசரிடம் "சார், இவங்க என் அம்மா, வந்தனா" என்றான்.
அறிமுகம் தேவையில்லாமல், பார்த்தக் கணத்திலேயே இருவரும் அதிர்ந்திருந்தார்கள்.
    வந்தனாவைப் பெண் கேட்டு நிறைவேறாமல் வெளியேறிய ராஜ்குமாரும் அம்மாவும் மிகுந்த வருத்தத்துடன் திரும்பினார்கள். ஆலந்தூர் பெண் வீட்டுக்குத் திருமணத்தில் விருப்பமில்லை என்று இங்கிதமாகச் சொல்லியனுப்பினார்கள். இரண்டு மூன்று வாரங்களில் அம்மாவின் போக்கே சரியில்லாமல் போக, ராஜ் கலங்கினான். வந்தனாவைப் பற்றி அடிக்கடி பேசினார் அம்மா.
"போகுதுமா.. வந்தனா வராத போனா என்ன? வேறே பொண்ணு பார்க்கலாம்.. எனக்கு ஒண்ணும் கல்யாணத்துக்கு அவசரமில்லே"
"உனக்கு அவசரமில்லேடா.. அந்தப் பொண்ணுக்கு அவசரம்.. அவங்கப்பா செஞ்சு வச்சுடுவாரு"
"அதனால?"
"அதனாலவா? உனக்கு எப்படியோ தெரியாது ராஜூ, என்னைப் பொறுத்தவரை வந்தனா தான் என் மருமகள். அவளை மருமகளா நினைச்ச பிறகு வேறே பெண்ணை அந்த இடத்தில அமர்த்த முடியாது"
"என்னம்மா இது.. நான் தானே கல்யாணம் செஞ்சுக்கணும்? உன் மருமகள் ஸ்தானம்னு என்னென்னவோ சொல்றியேமா?"
"ஆமாடா.. உன் மனசுல ஒருத்திய நீ நெனச்சா எப்படியோ அப்படித்தான் எனக்கும். இனி உன் விருப்பத்துக்கு யாரை வேணுமோ கல்யாணம் செய்துக்க.. வர பெண் கூட அன்பா பழகுவேன்.. ஆனா மருமகள்னு நினைக்குறப்ப வந்தனா தான்.. நான் சாகுற வரைக்கும் மாறாது"
"உனக்கு வந்தனா பைத்தியம் பிடிச்சிருக்கும்மா.. இதுக்கு வைத்தியம் கிடையாது" என்ற ராஜ் அதற்குப் பிறகு அந்தப் பேச்சை எடுக்கவில்லை.
அடுத்த ஆறு மாதங்களில் சென்னை ஐஐடி சார்பில் ஜெர்மனி சென்ற குழுவில் ராஜ்குமாருக்கு இடம் கிடைத்தது. ட்ரெஸ்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளின் குழுத்தலைவர் பொறுப்பு கிடைக்க, ஜெர்மனி-இந்தியா என்று நான்கைந்து வருடங்கள் சுற்றினான். அதன் பின் நிரந்தரமாக ட்ரெஸ்டன் பல்கலைக்கழகத்திலேயே வேலைக்குச் சேர்ந்து விட்டான். இந்தியாவில் சில வரன்களும் ஜெர்மனியில் சில உறவுகளும் தொடர்ந்து, மனதளவில் நிரந்தரமாக எதையும் ஏற்க முடியாமல் திருமணத்தைத் தவிர்த்து விட்டான். அவ்வப்போது வந்தனாவின் நினைவு வந்து போகும் என்றாலும் அதைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்ததில்லை.
    பெண் பார்த்துப் போனவர்கள் வந்தனாவைப் பிடிக்கவில்லை என்று சொல்ல, அடுத்து வந்த இரண்டு வரன்களும் அப்படியே சொல்லிவிட, வந்தனாவின் பெற்றோர்கள் கலங்கத் தொடங்கினர். இடையில் வங்கித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற வந்தனா தேசிய வங்கியில் ஆபீசர் வேலைக்குச் சேர்ந்தாள். வந்தனாவின் அப்பா மும்முரமாக வரன் தேடி, அடுத்த வருடமே வந்தனாவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். மணமான வந்தனா, கணவன் முரளியின் பண்பிலும் அன்பிலும் மூழ்கி மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தாள். வந்தனாவின் பெற்றோருக்கும் நிம்மதியாக இருந்தது.
நான்காம் வருடம் வந்தனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து வந்தனாவின் கணவனுக்கும் அவளுக்கும் வேலையில் பதவி உயர்வுக்கு மேல் உயர்வாகக் கிடைத்து வசதியும் பெருகியது. பிள்ளை ரவியை சீராட்டி வளர்த்தார்கள். வந்தனாவின் முன்னேற்றத்தில் முரளிக்கு மிகுந்த பெருமை. முரளியின் வெற்றியில் வந்தனாவுக்குக் கர்வம்.
ரவியின் எட்டாவது பிறந்த நாளுக்கு சென்னையின் பெரிய ஹோட்டலில் விழா நடத்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். எதிர்புறம் குடிபோதையில் மிக வேகமாகக் கார் ஓட்டிக்கொண்டிருந்தவர், தடுமாறி தடம் மாறி முரளியின் வண்டியை நோக்கி வந்தார். முரளி தன் பிள்ளையை மனதில் எண்ணிப் பயந்து அவசரமாக வண்டியை ஒடிக்க முயன்றும், வந்த வண்டி வேகமாக முரளியை இடித்து நின்றது. ரவியும் வந்தனாவும் அடிபடாது பிழைத்தாலும், விபத்தில் முரளிக்கு அடிபட்டது.
விபத்தினால் ஏற்பட்ட இரண்டு மாத கோமாவிலிருந்து விடுபட்ட முரளி நாளாவட்டத்தில் பேச்சிழந்து, சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் திறனிழந்தான். ஒரு வருடத்தில் வந்தனாவையும் ரவியையும் கூட அடையாளம் அறியும் நிலையிழந்தான். அவன் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததாலும், தன் வேலை பிள்ளை என்று கவனிக்க வேண்டியிருந்ததாலும், முரளியை வேலூர் அருகே தனியார் மருத்துவப் பாதுகாப்பில் விடவேண்டிய அவசியமானது. தவறாமல் வாராவாரம் ரவியுடன் சென்று முரளியைப் பார்த்து வந்தாள் வந்தனா. நாளடைவில் வந்தனாவின் பெற்றோர்களும் முரளியின் குடும்பத்தாரும் வந்தனாவை விவாகரத்து பெற்று மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினாலும், வந்தனா மறுத்துவிட்டாள்.
ரவி வளர்ந்து ஐஐடியில் சேர்ந்தபின் அடையார் வரும்பொழுதெல்லாம் வந்தனாவுக்கு ராஜ்குமாரின் நினைவு வரும். ஒதுக்கி விடுவாள். ரவியின் பட்டமளிப்பு விழாவுக்கு ஐஐடி போன போது, ராஜ்குமார் தன்னைப் பெண் கேட்டுப் போன சம்பவத்தைச் சொன்னாள். "ஒருவேளை அவர் உங்க காலேஜூல இருந்தா என்னடா செய்ய?" என்றாள் கிண்டலாக.
"ஆமாம்மா.. எப்பவோ இருவத்தஞ்சு வருசத்துக்கு முன்னால நடந்ததை இன்னும் யார் ஞாபகம் வச்சுட்டிருக்கப் போறாங்க? அதுவும் அந்தப் பெயரில் யாரும் எங்க காலேஜ்ல இல்லம்மா.. கவலைப்படாதே"
"கவலையில்லடா"
"அப்ப?" என்ற வந்தனாவை கவனமாகப் பார்த்தான் ரவி. "ஏம்மா.. அந்தாளை நினைச்சுட்டிருக்கியா?"
"சேசே.."
"அம்மா.. நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்துக்கலே?"
"பையனே அம்மாவைக் கேக்குற அளவுக்கு சமூகம் முன்னேறிடுச்சா.. பலே"
"பதில் சொல்லும்மா"
"அப்புறம் உன்னை யாரு பார்த்துப்பாங்க?"
"நோ.. அதை நான் ஏற்கமாட்டேன். என்னை தாத்தா பாட்டிங்க தான் பார்த்துக்கிட்டாங்க.. நீ பாதி நேரம் ப்ரமோசன் டெபுடேசன்னு அங்க இங்கே போய்ட்டிருந்தே"
"ஐ லவ் யுர் டேடி. அதனால தான்"
"அப்பாவுக்கு தான் யாருன்ற விவரமே தெரியலே. இதுல உன்னோட லவ்வை எப்படிப் புரிஞ்சுப்பாரு? நீயும் இதை எப்படி லவ்னு சொல்றே?"
"லவ் என்பது எப்படி வருது, எப்படி நிலைக்குது, எப்படி மறையுதுனு யாருக்குமே தெரியாதுடா. நிச்சயமா எனக்குத் தெரியாது. அந்த ராஜ்குமாரைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சுது. உங்க அப்பாவைப் பழகினதும் பிடிச்சுது. வெந்த காய்கறியா உங்கப்பா மாறினபிறகு கூட எனக்கு அவர் மேலிருந்த காதல் குறையவில்லை.. உங்கப்பாவுக்கு என்னோட காதல் புரிஞ்சா தான் அது காதலா?"
"அடுத்தவங்களுக்கு நம்ம காதல் புரிஞ்சு அவங்க அதைத் திருப்பலேன்னா அங்கே காதல் அழிஞ்சுடுதுமா. மேலும் காதலுக்கும் பரிவுக்கும் வித்தியாசம் தெரியலியாம்மா உனக்கு? அப்பா கிட்டே நீ காட்டுறது கொஞ்சம் பரிவு, கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் தியாகம், கொஞ்சம் நன்றினு கூட சொல்லலாம்.. ஆனா அது காதல் இல்லேம்மா. தெரிஞ்சே இப்படிப் பேசுறியேமா?"
"சரி அப்படியே வச்சுக்குவோம். காதலோ கருணையோ, தான் யாருனே தெரியாத பரிதாப நிலையில் நானும் அவரைக் கைவிட்டா என்னை நானே மன்னிக்க முடியாதுடா" என்ற வந்தனா, ரவியைச் சீண்டினாள். "ஆமா.. காதலைப் பத்தி உனக்கென்னடா தெரியும்? என்ன விஷயம்.. யாரையாவது லவ் பண்றியா?"
சொன்னான். "படிப்பு முடிஞ்சப் பிறகு சொன்னாப் போதும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா, அதான்" காதலியைப் பற்றிச் சொல்லிச் சிரித்தான்.
"இப்பவே உன்னை கன்ட்ரோல் செய்றாளா? இந்தப் பெண்ணை எனக்குப் பிடிக்காது போலிருக்குதே ரவி?" வந்தனாவும் சிரித்தாள்.
"நாங்க மேலே படிக்க விரும்புறோம். ஐஐடின்றதால ட்ரெஸ்டன் யூனிவர்சிடில மேற்படிப்பும் ஆராய்ச்சியும் செய்ய மூணு மாச பெலோஷிப் கொடுத்திருக்காங்க. எங்க ரெண்டு பேருக்குமே கிடைச்சிருக்கு. அங்கே போன பிறகு நிச்சயம் எக்ஸ்டன்ட் ஆவும். கல்யாணம் செஞ்சுகிட்டுப் போலாம்னு இருக்கேன்மா. நீ அவங்க வீட்ல வந்து பெண் கேட்கணும். ப்லீஸ் ப்லீஸ்மா"
திக்கென்றது வந்தனாவுக்கு. ஒருவேளை முடியாது என்று சொல்வார்களோ? தன் கணவனைப் பற்றிக் கேட்பார்களோ? கலங்கினாள். மாறாக எல்லாம் இனிதாக முடிந்ததில் நிம்மதியடைந்தாள்.
ஆனால் மகனும் மருமகளும் ஜெர்மனி போன இரண்டு வருடங்களுக்குள் தான் அங்கு போக நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. அங்கே ராஜ்குமாரை சந்திக்க நேரிடும் என்பதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
    அதிர்ந்த ராஜ்குமாரும் வந்தனாவும் சில நொடிகளில் சுதாரித்தார்கள். தங்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். தங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். திருமணம் செய்துகொள்ளாத ராஜ்குமாரை ஓரிருமுறை கிண்டல் செய்தாள் வந்தனா. பதிலுக்கு ராஜ்குமாரும் கேலி செய்தான். சாப்பாட்டிலும் நிறைவு கிடைக்க, அன்றைய மாலை கழிந்ததே தெரியவில்லை. கிளம்பும் பொழுது வந்தனாவை மறுபடி சந்திக்க விரும்புவதாகச் சொல்லி விடை பெற்றான் ராஜ்குமார். போர்டிகோ வரை உடன் நடந்து வந்த ரவியுடன் எதுவும் பேசவில்லை. காரில் ஏறுமுன் தயங்கி, "ஹௌ மச் டு யூ னோ ரவி?" என்றான்.
"சார்.. என்னை மன்னிச்சுருங்க.. எனக்கு எல்லாம் தெரியும். எங்கம்மா உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. அதனால இங்க வந்த புதுசுல உங்க பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் சில்லிட்டுச்சு. கொஞ்சம் உங்க பின்னணியை ரிசர்ச் செஞ்சேன். கடைசியில் அம்மா சொன்ன ராஜ்குமார் நீங்களாத்தான் இருக்கணும்னு வந்த நாலு மாசத்துக்குள்ள தெரிஞ்சு போச்சு.. ஐ ஜஸ்ட் வான்டட் யு டு மீட் மை மதர்.. தப்பா நினைக்காதீங்க" என்றான்.
"இல்லப்பா. என் வாழ்நாளில் மிகச் சிறந்த நாளை எனக்குக் கொடுத்த உனக்கு, நான் சொல்ல வேண்டிய நன்றிக்கு அளவே இல்லை. தேங்க் யூ" என்ற ராஜ்குமார் ரவியை இறுக அணைத்து விடைபெற்றான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் வந்தனாவைப் பார்த்து, "அம்மா.. என்னை மன்னிச்சுடுமா.. முதல்லயே சொல்ல வேணாம்னு தான்.. பட் லுக்ஸ் லைக் யு ஹேட் எ குட் டைம்" என்றான் ரவி.
"நீ இவரைக் கூட்டிவருவேனு எனக்குத் தெரியாது ரவி. சொல்லியிருக்கணும். மூட்டைகட்டிப் பூட்டி வச்சிருந்த நினைவுகளையும் உணர்வுகளையும் எதுக்குப்பா இப்படி வெளில கொண்டு வந்தே? என்ன பயன்? பழைய நினைவுகளைப் புரட்டி நாங்க ரெண்டு பேரும் கலகலப்பா பேசினோம் என்றாலும் அது ஒரு வலி தானே ரவி? நீ யோசிக்க வேணாமா?"
"அம்மா.. போதும்மா உன்னோட இல்லாஜிகல் ரீசனிங். நீ தனிமைல இருக்கேன்றது எனக்குத் தெரியாதாம்மா? அப்பாவுக்கு துரோகமா செய்யச் சொல்றேன்? தான் யாருனு கூட அவருக்குத் தெரியாது. இருவது வருசமாகப் போகுது.. இன்னும் ஹி இஸ் எ வெஜிடபில். உன்னோட வாழ்க்கையில நீ ஏன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாது?"
"நான் சந்தோஷமாத்தானே இருக்கேன்?"
"காலைல கண் முழிக்கறதுக்கு ஒரு காரணம், இரவுல கண் மூடுறதுக்கு ஒரு காரணம் - பக்கத்துல இருக்குற துணை தானேம்மா? அந்தக் காதல் துணை, அந்த சந்தோஷம் எல்லாருக்கும் கிடைக்கணும் அம்மா. வி ஆல் நீட் இட். டிசர்வ் இட். வாழுற ஒரு வாழ்க்கைல காதல் துணையின் சந்தோஷம் கூட இல்லாத போனா அது என்ன வாழ்க்கைமா? புரபசர் பைன்ஸ் பார் யு. இப்பத்தான் என்னைக் கட்டிப் பிடிச்சு தேங்க்யூனு சொல்றப்ப அவர் கண்கள்ல ஈரத்தைப் பார்த்தேன். உன்னை மறுபடி சந்திச்ச இந்த நாள், வாழ்க்கையின் இனிமையான நாள்னு சொன்னாரு. மே பி ஹி வான்ட்ஸ் டு ரெஸ்யூம் வேர் யு லெப்ட் ஆப்"
"போடா.. அதெல்லாம் நடக்காத விஷயம்"
"நடக்கக் கூடாத விஷயம்னு நீ நினைச்சா, அது நடக்காத விஷயம் ஆகுமா அம்மா? இதோ பாரும்மா. அப்பாவைக் கவனிக்குற பொறுப்பு இனிமே என்னுடையது. அந்தப் பொறுப்பிலருந்து உனக்கு நிரந்தர விடுப்பு குடுத்தாச்சு. ஐ மீன் இட். அதுக்குத்தான் நாங்க இந்தியா போகத் தீர்மானிச்சோம். இனியாவது நீ குற்ற உணர்வில்லாமல் உன் மனசு போல வாழணும் அம்மா. அதான் எனக்கும் என் குடும்பத்துக்கும் நீ தரும் ஆசீர்வாதம். உன்னோட மகிழ்ச்சி மட்டுமே எங்களை வாழ வைக்கும். உன் மனதின் எந்த ஓரத்திலயும் எந்த வலியும் உனக்கு இருக்கக் கூடாதுமா. இதான் என் விருப்பம். உங்க ரெண்டு பேருக்கு நடுவுல மறுபடி காதலை வளர்க்கத் தீர்மானிச்சீங்கன்னா, உன்னோட சங்கடங்களை நான் பார்த்துக்குறேன்மா. கையெழுத்து மட்டும் போட்டா போதும். திங்க் இட் ஓவர் ப்லீஸ்"
அன்றிரவு படுக்கையில் நிறையப் புரண்டாள் வந்தனா.
    தொடர்ந்த வாரங்களில் ராஜ்குமாரும் வந்தனாவும் தினம் சந்தித்தார்கள். எல்ப நதிக்கரையில் நிறைய நடந்தார்கள். ட்ரெஸ்டன் தியேடர்களில் நாடகங்களும் ஆபராக்களும் பார்த்தார்கள். நிறைய யோசித்தார்கள். பேசினார்கள். திட்டமிட்டார்கள்.
இரண்டு மாதங்கள் கழித்து ரவியும் அவன் மனைவியும் குழந்தையும் இந்தியா திரும்பிய பொழுது ஜோடியாக வழியனுப்பினார்கள். "உனக்கு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம் ரவி" என்று ராஜ்குமார் சொன்ன பொழுது மகனைப் பற்றிப் பெருமையாக எண்ணினாள் வந்தனா.
ராஜ்குமாருடன் கை கோர்த்து மெள்ள நடக்கையில், "என்னை மணந்து கொள்வாயா வந்தனா?" என்று மேற்கத்திய முறைப்படி ராஜ்குமார் கேட்க, வந்தனா முடியாதென்றாள்.
"ஏன்?" என்று திடுக்கிட்டான் ராஜ்.
"கொஞ்ச நாள் காதலிப்போமே?" என்றாள் குறும்புடன்.
"ரைட். நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதும் முதல்ல செய்ய வேண்டியது ஒண்ணு இருக்குது" என்ற ராஜைக் கேள்வியோடு பார்த்தாள்.
"சம்மதம்னு சொன்னால் தான். அவசரம் இல்லை" என்றான் அவனும் குறும்புடன்.
    அடுத்த சில மாதங்களில் இருவரும் சென்னை வந்தார்கள். தாம்பரம் முதியோர் நிலையத்தில் இருந்த ராஜ்குமாரின் அம்மாவைச் சந்தித்தார்கள். சக்கர நாற்காலியில் இருந்தவரைத் தள்ளிக் கொண்டு வந்த ராஜ், "அம்மா.. உன் மருமகளைக் கூட்டி வந்திருக்கேன்" என்றான்.
கைகளை நீட்டி, "வந்தனாவா?" என்றார் ராஜின் அம்மா.
சற்றும் தயங்காமல் அவர் சொன்னதைக் கேட்ட வந்தனா, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.