2013/06/14

காதில் மெல்ல..காதல் கடிதங்கள். என் பங்குக்கு நானும் பதிவிடுகிறேன் - அடுத்தவர்கள் எழுதியவற்றை.


1. ஆர்சன் வெல்ஸ் ரீடா ஹேவர்துக்கு எழுதிய கடிதம் (1943)     ன் அன்பினும் இனிய தேவதையே ரீடா,

தனிமை ஒரு கொடூரமான நோய். இந்தப் பரந்த உலகில் நம்மில் பெரும்பாலானோர் தனிமையிலே தவிக்கிறோம். 'தனிமையில் தவிக்கிறோம்' என்பதைக் கூடத் தீவிரமாகக் காதல் வயப்பட்டால் மட்டுமே புரிந்து கொள்ளமுடிகிறது, இது எப்படிப்பட்ட முரண்! காதலற்ற துணையும் கொடூரமானத் தனிமை தானோ?

தனிமைப் பிணிக்கான மருந்து, தகுதியான துணை. நீயும் நானும் சேர்ந்த பின்னரே தகுதியான துணை என்றால் என்ன என்பதே நம்மிருவருக்கும் புரிந்தது. நாம் சந்தித்த நாளிலிருந்து ஒருவரையொருவர் அறிந்துகொண்ட தருணங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, 'தகுதியான துணை' என்பதன் சிறப்பு, 'நானும் நீயும்' என்றத் தொடருக்குள் அடங்கிவிடுகிறதே?

தகுதியான துணையின்றி மனிதம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் - காதலினால் அவை அத்தனையும் வெறுமையாகி விடுகின்றன என்பதை உன்னைக் காதலிக்கத் தொடங்கிய பிறகே புரிந்து கொண்டேன். உன் துணையின்றி நான் அனுபவிக்கும் இன்பங்கள், துன்பங்களை விடக் கொடியவை கண்ணே.

பேரழகியே, என் காதலியே, சூரியனைச் சற்று விரட்டேன்? நாம் சேரும் நாளுக்கான இடைவெளி குறையட்டும்.

நீ என் வாழ்க்கை. நீ மட்டுமே என் வாழ்க்கை. நீ என் வாழ்வை எத்தனை பாதிக்கிறாய் என்பதைக் கற்பனை செய்யாதே, வேண்டாம், உன் கணிப்பு என் உணர்வின் அண்மையில் கூட வராது. நீ என் வாழ்க்கை. நீ மட்டுமே என் வாழ்க்கை. நான் உன்னை அத்தனை காதலிக்கிறேன்.

உன் காதலன் ஆர்சன்.


2. நெபோலியன் தன் மனைவி யோசபினுக்கு எழுதிய கடிதம் (1796)     பேரழகியே,

நான் உன்னைக் காதலிக்கவில்லை. சற்றும் காதலிக்கவில்லை. உன்னை மனமாற வெறுக்கிறேன். நீ ஒரு திமிர் பிடித்த, குறும்பு மிகுந்த, பண்பற்ற முட்டாள் சின்டெரல்லா.

நீ எனக்கு எழுதுவதேயில்லை. உன் கணவனான என்னை நீ காதலிப்பதில்லை. உன் கடிதங்கள் எனக்கு எத்தனை இன்பமளிக்கின்றன என்பது தெரிந்தும் எனக்காக ஆறு வரிகள் எழுத மறுக்கிறாய்.

உன் காதல் கணவனைப் பற்றி எண்ண முடியாமல் உன் பொழுதுகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் கொடூரமான அந்தப் புதிய காதலன் யார்?

ஒரு நல்லிரவில் உன் கதவுகள் உடைபட்டுத் திறக்கும், என்னைக் காண்பாய்.

உன்னை வெறுக்கும் காதல் கணவன்.


3. பிரபல நடிகர் தன் காதலிக்கு எழுதியது (1970கள்)

யார் எழுதியது, கண்டுபிடிக்க முடியுமா?
    ண்ணே,

சோம்பும் மனம் சாத்தானின் பட்டறை என்கிறார்கள்.

சாத்தானின் இந்தப் பட்டறையை உனக்கு சமர்ப்பிக்கிறேன். தயங்காமல் உடனே எடுத்துக் கொள். உன் நினைவுகளை நிரப்பி சாத்தானை விரட்டு.


4. சிட் விஷஸ் தன் காதலி நேன்சி ஸ்பஞ்சனுக்கு எழுதிய கடிதம் (1976)

(செக்ஸ் பிஸ்டல்ஸ் ராக் குழுவில் கிடார் வாசித்தவர், சிட் விஷஸ்)
    ன் நேன்சி,
நீ உலகிலேயே சிறந்தவள் என்பதற்கான பத்து காரணங்கள் இதோ:

நீ
1. அழகானவள்
2. கவர்ச்சியானவள்
3. நேர்த்தியான உடலழகைக் கொண்டவள்
4. தேர்ந்த நகைச்சுவை உணர்வு மிக்கவள்
5. சுவாரசியமான உரையாடல்களை இயல்பாகத் தொடங்குகிறவள்
6. சிரிக்க வைப்பவள்
7. அழகான கண்கள் உடையவள்
8. உடை ரசனை மிக்கவள்
9. உலகின் மிக ஈரமான அல்குலுக்குச் சொந்தக்காரி
10. உலகின் மிகச் சிறந்த அறிவாளி

ரைட். பத்தாவது சும்மா பேருக்குச் சேர்த்திருப்பாரோ? கடிதம் எழுதியக் காதலன் இரண்டு நாள் கழித்து என்ன செய்தார் தெரியுமோ? நேன்சியை கத்தியால் கண்ட இடத்தில் குத்திக் கொன்றார். ஹ்ம்ம்.. என்ன காதலோ?!


5. மார்லன் ப்ரேன்டோ விமானப் பணிப்பெண் ஒருவருக்கு எழுதியது (1966)     ன்புமிக்கப் பெண்ணே:

உன் முகத்தின் பொலிவை என்னால் விளக்க முடியவில்லை. அழகு என்ற பாரம்பரிய விளக்கத்துக்கு அப்பாற்பட்டிருக்கிறது அது. ஒய்யாரம், சிங்காரம், மென்மை, கம்பீரம், கண்ணியம் எல்லாம் கலந்த ஒரு சீர்மை, உன் முகத்தின் பொலிவானதோ?

நீ சிறுமியாக இருந்த பொழுது உன் பெற்றோரும் உற்றோரும் உன்னை சீராட்டி வளர்த்திருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு பரிணாம மாயம் உனக்கு அந்தக் குணங்களை ஆசீர்வதித்ததோ?

எது காரணமாயினும், உன் நடை உடை பாவனை பேச்சு இவை அனைத்தாலும் நீ வெளிப்படுத்தியிருக்கும் ஒழுங்கு பாங்கானது, உன்னதமானது, கௌரவமானது.

நம் தொடர்பு மிகக் குறுகிய காலமே நிலைத்ததெனினும், நம் கண்கள் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்.

அன்புடன்
மார்லன்


6. லுட்விக் பேதோவன் தன் காதலிக்கு எழுதியது (1812)

காதலி பெயரை சங்கேதமாகக் குறிப்பிட்டிருப்பதால் கள்ளத் தொடர்பாக இருக்கலாம் என்கிறர்கள். தன்னுடைய பெயரையும் 'L' என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார். My favorite.
    ன் தேவியே, என்னவளே, எனக்கு எல்லாம் ஆனவளே,

என்னால் இன்று சில வார்த்தைகளே எழுத முடியும். என் நிலமை சில நாட்கள் வரைச் சீராக வாய்ப்பில்லை.

தியாகங்கள் புரியாமல் நம் காதல் வளராதா? காதலின் அத்தனை பலன்களும் உடனே பெற வேண்டும் என்ற ஆசையினால் மட்டுமே ஏன் நம் காதல் வளரக்கூடாது? நீ முழுமையாக என்னுடையவள் அல்ல, நான் முழுமையாக உன்னுடையவன் அல்ல என்ற இந்த நிலையை உன்னால் மாற்ற முடியாதா? உன்னைச் சுற்றியிருக்கும் இயற்கையின் இயல்பினைக் கவனித்தாவது, நாம் காலத்துக்கும் இணையப் பிறந்தவர்கள் என்றத் தவிர்க்க முடியாதத் தீர்வுக்கு உன் மனதைத் தயார் படுத்திக் கொள்ளக் கூடாதா?

காதல் முழுமையை எதிர்பார்க்கிறது. காதலுக்கு சமரசங்கள் பிடிப்பதில்லை.

உன் முழுமை எனக்கு, என் முழுமை உனக்கு, நம்மைச் சுற்றியதே உலகு என்ற காதலின் அடிப்படை எதிர்பார்ப்பை நீ மிகச் சுலபமாக அடிக்கடி மறந்துவிடுகிறாய். நீ எனக்காகவும் நான் உனக்காகவும் வாழவேண்டும் எனும் இந்த ஒருமை மனப்பாங்கை, அது இயலாதெனில் உண்டாகும் கொடிய துன்பத்தை.. என்னுடன் இருக்கும் கணங்களில் நீ உணருவதில்லை. என்னுடன் இல்லாத கணங்களில் நான் உணருகிறேன்.

விரைவில் நாம் சந்திக்கக் கூடும். என்னால் அதிகமாகச் சொல்ல முடியவில்லை. சொன்ன வார்த்தைகளைக் காட்டிலும் வெளிப்படுத்தாத எண்ணங்களில் என் இதயம் கனக்கிறது. நமக்கானதை அந்தக் கடவுள் விரைவில் வழங்கட்டும்.

நீ என்னவள், நான் உன்னவன்.

என்றும் நமக்காக
L


1, 2, 6: ரீடர்ஸ் டைஜஸ்ட் 2013 வேலன்டைன் சிறப்பிதழிலிருந்து
3: குமுதத்தில் படித்த நினைவிலிருந்து. இன்னும் யார் என்று கண்டுபிடிக்கவில்லையா? கமல்ஹாசன் வாணி கணபதிக்கு எழுதியது.
4, 5: செலப்ரிடி லவ் லெடர்ஸ், டைம் பத்திரிகை ஆவணம்
காதல் கடிதம் எழுதுங்கள்

23 கருத்துகள்:

 1. ரத்தினச் சுருக்கமாகவும்
  மனதை மிகத் தெளிவாகவும்
  புரியவைக்கிற இக்காதல் கடிதங்கள்
  நிச்சயம் காவியங்களே
  பதிவாஅக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. /// சூரியனைச் சற்று விரட்டேன் /// சூப்பர்...

  /// கொடூரமான அந்தப் புதிய காதலன் யார்? /// சந்தேகம்...! or உண்மை...?

  கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை கமல்...?!!!

  உலகின் மிகச் சிறந்த அறிவாளி என்பதால் கொலையோ...?

  பதிலளிநீக்கு
 3. காதல் கடிதம் போட்டிக்கு மிகச் சரியான
  நடுவர் என்பதை நிருபித்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொன்றும் கடிதங்கள் அல்ல காவியங்கள், காலத்தால் அழியாத ஓவியங்கள்

  பதிலளிநீக்கு
 5. Love letters are ok but what about the real love. It seems love is in letter only but not in spirit. Out of six, only one seems to be true and the rest are offshoot of infatuation.

  பதிலளிநீக்கு
 6. பிரபல நடிகர் என்று சொன்னதால் நான் கமலை யோசிக்கவில்லை! :))

  பதிலளிநீக்கு
 7. சிவகுமாரோ, ரஜினியோ என நினைச்சேன். :))) கமல்ஹாசனா? எல்லாக் கடிதங்களுமே வரலாற்றுச் சிறப்பு மிக்கவை என்பதோடு அவரவர் குணத்தையும் எடுத்துச் சொல்கிறது. என் பங்குக்கு நானும் எழுதிடறேன். போட்டிக்கு எல்லாம் அனுப்பப் போறதில்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஜாலிக்கு! :)))))

  பதிலளிநீக்கு
 8. அன்பின் அப்பாதுரைக்கு, காதல் கடிதங்கள்வார்த்தை விளையாட்டல்ல. உள்ளத்தை உணர்வுகளைக் கொட்ட வேண்டும். பிரிவின் வாட்டத்தைக் கொட்டி எழுதிய ஒரு அசல் காதல்கவிதை இதோ. பாருங்கள்,

  ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து
  தேடிச் சோறு நிதம் தின்று
  வாடி அலையும் நிந்தன் கொழுநன்
  பாடிப்பகரும் அல்லலைக் கேளடி
  ஊரடங்கிப் பேயாடும் நேரம்
  போரடித்து வளைய வரும் வேலை
  சாகடித்துக் கொல்லாமல் கொல்லும்
  உன் பிரிவு நோகடிக்குதே எண்ண எண்ண

  வந்து நோக்கின் நீயிட்ட மஞ்சமில்லை
  நானிட்ட பஞ்சணையில் வீழ்ந்துபட்டால்
  நித்திரையில்லை

  சோர்ந்துபட்ட உடலுக்கு உயிரூட்டக்
  காப்பியில்லை ,டீயில்லை சோறில்லை

  மாறுபட்ட சூழ்நிலையில் வாழும் எனைக்
  காண நீயுமில்லை..என் செய்வேன் சொல்லடி...!, .

  . .

  பதிலளிநீக்கு
 9. முதல் கடிதம் நெகிழ்ச்சி.

  நான்காவது அதிர்ச்சி

  பதிலளிநீக்கு
 10. G.M.B. சார் கவிதை காதல் ரசம் ததும்புகிறது

  பதிலளிநீக்கு
 11. பின்னூட்டங்களுக்கு நன்றி.

  //but what about the real love.
  ஹா! சரியாக் கேட்டீங்க. ஒரு வேளை ஜிஎம்பி சார் சொல்லுறாப்புல அசல் காதல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதோ?

  // சந்தேகம்...! or உண்மை...?
  தெரியவில்லை தனபாலன். இது கள்ள உறவு சந்தேகம் போல் தோன்றவில்லை. தனக்கு எழுதக்கூட நேரமில்லாமல் அவள் கவனத்தைக் கவர்ந்த எதையுமே 'புதுக்காதலன்' என்பதாகக் கொள்ள வேண்டும். நெபோலியன்-யோசபின் காதல் கதை பற்றி இந்தப் பதிவு எழுதும் போதே தெரிந்து கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுது படிக்க வேண்டும்.

  // ரஜினியோ என நினைச்சேன்
  கமல்ஹாசனுக்கு தமிழ் எழுத பேச வரும் (நமக்கு புரியாத போனாலும்). ரஜினிக்கு சிகரெட் தூக்கி எறிய வரும். ரஜினி லவ் லெடரில் என்ன எழுதுவார்னு கற்பனையே நல்ல வெடிச்சிருப்பு நகைச்சுவை.

  //ஒரு அசல் காதல்கவிதை இதோ.
  அட்டகாசம் ஜிஎம்பி சார். மிகவும் ரசித்தேன்.

  நான் பதிவு செய்த கடிதங்களில் orson welles ஆங்கிலத்தில் எழுதியிருப்பது அறிவும் உணர்வும் நிறைந்தது. எனக்கு எழுதியிருந்தால் எல்லாவற்றையும் உதறி அவர் பின்னே போயிருப்பேன். என் மொழிபெயர்ப்பில் வார்த்தைகள் மட்டும் தொக்கி நிற்கிறதோ என்று ஒரு வருத்தம் இப்பொழுது.

  பதிலளிநீக்கு
 12. // உன் துணையின்றி நான் அனுபவிக்கும் இன்பங்கள், துன்பங்களை விடக் கொடியவை கண்ணே. //

  வாவ். உண்மைக் காதல், அனுபவம், ஏக்கம், எல்லாம் அந்த ஒரு வரியில்.

  கமல்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்!

  GMB ஐயாவின் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லாஜூன் 15, 2013

  Beethoven's letter was only discovered after his death. That is why it makes more romance. He was holding this letters very secretly.

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லாஜூன் 15, 2013

  பீத்தோவனின் கடிதம் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.கமலின் கடிதம் சோர்ட் அண்ட் சுவீட்

  பதிலளிநீக்கு
 15. All are boring.
  I tried to write one when I was still asleep.

  காதல் வயப்பட்டேன்.
  காலை மலர்ந்து பகல் எல்லாம் போது ஆகி
  மாலை மலரும் இ ந் நோய் என்ன என நான் உனை நடுச்
  சாலையிலே கேட்டேன். நினைவிருக்கிறதா ?

  பாலையிலே தவித்த நான் என் தாகம் தீர்க்க
  கரும்பாலையிலே உள் நுழைந்தேன். உனைக்கண்டேன்.
  வாலைக்குமரியே , உனை மாலையிட மனம் கொண்டேன்.
  நாளை. நாளை என்றாய் நம்பியுமே நான் நின்றேன்  உண்டேன். உன் இதழோரம் ஊறி வந்த கள்ளை நான்
  வண்டே போல் உனைச் சுற்றி உலகமும் நான் மறந்தேன்.
  கண்டேன் நின் கயல்விழியில் காணாத கனவுகளை
  அண்டேன் நீ இல்லாத எவ்விடமும் ஓர் சபதமிட்டேன்.

  இட்ட அடுத்த நொடி சிட்டாய் நீ மறைந்தாய்.
  அட்ட திக்கும் அலைந்தேன் எனை நீயோ மறந்து போனாய்.
  ஒட்டி நின்ற உறவெல்லாம் உபதேசம் பல தந்தும்
  எட்டி நின்ற உன்னிடமே என் எண்ணமெல்லாம் இருந்ததுவே.

  அதுவே என் காதல் அது தந்த போதையிலே
  அதுவே என் சாதல் என்றார். சோராது உள மகிழ்ந்தேன். .
  மதுவே என் துணை வரவே மற்றதெல்லாம் நான் மறந்தேன்.
  மங்கியதோர் நிலவினிலே மரித்தேன். எனை நான் மறந்தும் போனேன்.

  தென்றலே இசையாக தேனமுது சுவையாக
  இன்றும் நீ இவ்வுலகில் எத்திசையில் உள்ளாயோ ?
  வென்று சென்ற நின் காதல் உறைந்தது மே எவ்விடமோ ?
  அன்று நீ அள்ளித் தந்த அந்த சுகம் எவ்விடமோ ?
  subbu thatha

  பதிலளிநீக்கு
 16. பாலையிலே கரும்பாலையிலே.. சும்மா பின்னுறீங்களே சுப்பு சார்? டாப் க்ளாஸ்.

  பதிலளிநீக்கு
 17. சுப்பு தாத்தா சூப்பர் form-ல இருக்காரு! அசத்தல் தாத்தா!

  பதிலளிநீக்கு

 18. மீண்டும் கூறுகிறேன். காதல் கடிதங்கள் வெறும் வார்த்தை விளையாட்டல்ல. உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடே.

  பதிலளிநீக்கு
 19. திரு சூரி அவர்கள் தனது பதிவில் இரண்டாவது ஹனிமூன் என்று வெளிநாட்டிலிருந்து பல பழைய படங்களின் பாடல்களைத் தொகுத்துப் போட்டிருந்தார். 'இதைப் படித்துவிட்டு இனி யாரும் உங்களை 'சுப்புத் தாத்தா' என்று கூப்பிடமாட்டார்கள்' என்று பின்னூட்டம் இட்டிருந்தேன்.

  இந்தக் கவிதையை படித்துவிட்டு 'தாத்தா' என்ற பெயரில் மறைந்திருக்கும் 'இளைஞன்' யார் என்று கேட்கத் தோன்றுகிறது.

  காதல் கடிதப்போட்டியின் நடுவர்கள் எல்லோரும் உங்களை தேடிக் கொண்டிருக்கிறோம். உடனே உங்கள் மின்னஞ்சல் அனுப்பவும், இளைஞனே!

  பதிலளிநீக்கு
 20. காதல் கடிதம் எழுதுவது என்று வந்து விட்டால் சாதாரணனும் கவிஞனாகி விடுகிறான். வெவ்வேறு நபர்களின் காதல் கடிதங்களை மொத்தமாகப் படிக்க முடிந்தது வித்தியாச ரசனைக்கு வித்திட்டது!

  பதிலளிநீக்கு
 21. 1982 ல் எனக்கு எழுதத் தெரிந்து இந்த காதலைப் பற்றி எழுதச் சொல்லியிருந்தால் ச்சும்மா அருவி மாதிரி வந்து விழுந்திருக்கும். இப்ப அந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆகி அவங்களும் (என்னை மாதிரியே ரெட்டைப்புள்ள பெத்து) என்னோட படித்த அவங்க சாதியில் உள்ள என் சீனியர் பையனை படித்து பொள்ளாச்சியில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாராம்.

  இப்ப காதலைப் பற்றி உங்க கருத்து என்னன்னு எனக்கிட்டே கேட்டா உங்க காதை கடிச்சு வச்சுருவேன்.

  ஜாக்ரத.

  பதிலளிநீக்கு
 22. காதல் கடிதங்கள் தொகுப்பு அருமை.
  காதல் கடிதங்கள் சூரிசார், பாலசுப்பிரமணியம் சார் எல்லாம் நன்றாக எழுதி இருக்கிறார்கள்.
  பிரிவில் எழுதும் காதல் கடிதங்கள் நினைக்க நினைக்க , படிக்க படிக்க, இன்பம் தருபவை.

  பதிலளிநீக்கு
 23. விதவிதமான காதல். விதவிதமான சோகம்,கோபம்,ஆசை.

  சூரி சார் மாதிரி ரொமாண்டிக் பார்க்க முடியாது,.
  ஜிஎம்பி சார் !கவிதைக் காதல் வெகு அருமை.ஆற்றாமை.
  ஏன் துரை சார் காதல் கடிதம் எழுதவில்லை.

  பதிலளிநீக்கு