2017/09/28

நோற்றான்        ன் எதிரே இருந்த இருவரின் பார்வையில் தெரிந்தது என்ன? விடை அ)வெறுப்பு ஆ)கோபம் இ)ஆத்திரம் ஈ)கனிவு - என்ற கேள்வியை என்னிடம் யாராவது கேட்டால் விடை சொல்வது கடினம்.

விடை ஈ)கனிவு அல்ல என்பது மட்டும் நிச்சயம். வெறுப்பு, ஆத்திரம், கோபம், அருவருப்பு, இயலாமை எல்லாம் கலந்த பார்வையை என்னை நோக்கி தாராளமாக வீசினார்கள் இருவரும்.

"எப்படி உங்களுக்கு இது போலக் கேட்கத் தோணுது சார்?" என்றார் இளையவர். அவரை அடக்கிய மூத்த பெண்மணி, "கொஞ்சம் இருங்க ராதிகா, நான் பேசுறேன்" என்று என்னைப் பார்த்தார். "சார்.. தயவு செய்து இங்கருந்து போயிடுங்க.. போய் கோர்ட் ஆர்டரோட வாங்க.. இதுக்கு மேலே உங்களோட பேச எங்களுக்கு விருப்பம் இல்லே".

நான் விடவில்லை. "மேடம்.. எனக்குச் சேரவேண்டியதைக் குடுத்து நீங்க போகச் சொன்னா தாராளமா போயிருவேன்.. ஆனா எனக்குச் சொந்தமானதை நீங்க எடுத்து வச்சுக்கிட்டு தர மறுக்குறீங்க.. கேட்டா சட்டம் பேசுறீங்க.. சட்டமே என் பக்கத்துல இருக்குதுனு ஆதாரத்தோட வந்திருக்கேன்.. அப்பவும் என்னவோ உங்க சொத்தை நான் கேக்குற மாதிரி பேசுறீங்க.. பீ தொடச்ச துணியாட்டம் என்னைப் பாக்குறீங்க.. போவுது.. உங்க பார்வையைப் பத்தியெல்லாம் எனக்கு அக்கறையில்லே.. என் சொத்தை.. எனக்கு உரிமையானதை எங்கிட்ட கொடுத்துடுங்க.. நான் போயிட்டே இருக்கேன்.. இங்க தங்கி உங்க ரெண்டு பேத்தையும் பாத்துட்டு இருக்க எனக்கு மட்டும் முடையா என்ன?"

ராதிகாவுக்கு கோபம் வந்துவிட்டது. "சார்.. நீங்க கிளம்புறீங்களா.. இல்லை போலீசை கூப்பிடவா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசுறீங்களே? நீங்கள்ளாம்.."

"நீங்கள்ளாம் மனுசனானு கேக்கப்போறீங்களா? கேளுங்க. நீங்களும் மனுசன் தான். நானும் மனுசன் தான். என்ன நம்ம நிறம் வேறே அவ்வளவு தான். தகாதது அப்படி என்ன கேட்டுட்டதா கடுப்பாறீங்க. நாலு வருசத்துக்கு முந்தி நீங்க எடுத்துக்கிட்டுப் போன என் பிள்ளையைத் திருப்பிக் குடுங்கனு கேக்குறேன்.. அந்தப் பிள்ளைக்கு அப்பன் நான் தான், எனக்குப் பொறந்தது தான் அந்தப் பிள்ளைனு அத்தாட்சியோட வந்திருக்கேன்.. என் பிள்ளையை எங்கிட்ட குடுங்கனு கேட்டா மனசாட்சி மாங்கா இஞ்சின்றீங்களே?"

"மிஸ்டர்.. நாங்க உங்க பிள்ளையை எடுத்துக்கிட்டமா?" என்றார் மூத்தவர்.

"ஆமாம் மேடம்.. இந்தம்மா தானே சொன்னாங்க.. என் பிள்ளையை போலீஸ் ஸ்டேசன்லந்து கூட்டியாந்து இங்கே வளக்குறதா?"

"ஆமாங்க.. உங்க பிள்ளைக்கு அப்ப ஒரு வயசு கூட ஆவலே.. போலீஸ் ஸ்டேசன் வாசல்ல விட்டுப் போயிட்டீங்க.. அதுவும் ஒரு கை ஊனமான குழந்தை.. கொஞ்சம் கூட இரக்கமில்லாம குழந்தையை விட்டு ஓடிட்டீங்க.. இரக்கம் உள்ள ஆசாமிங்க சிலர் போலீஸ் ஸ்டேசன் வாசல்ல கிடந்த குழந்தையைப் பார்த்துட்டு போலீஸ்ல சொல்லி.. இன்ஸ்பெக்டர் கலெக்டர் வரைக்கும் போய் பிறகு எங்க கிட்டே வளர்ப்பு ஆணையோட ஒப்படைக்கப்பட்ட பிள்ளைக்குழந்தை.. இப்ப உங்களுதுனு உரிமை கொண்டாடிட்டு வரீங்களே?"

"ராதிகாதானம்மா உம் பேரு? நல்ல பேரு.. அழகா பேர் வச்சிருக்கே.. ஆனா ஆத்திரமா பேசுற.. பரவாயில்லே.. ராதிகா.. இதுல பாரும்மா.. நீ ஆணை கீணைனு நாலு வச்சிருந்தாலும் சட்டம் உரிமைனு ரெண்டு இருக்கு பாரு.. அது என் பக்கம். நீ எடுத்து வளக்குறது என்னுடைய குழந்தைன்றதுக்கு மறுக்க முடியாத கோர்ட் ஆதாரங்களைக் காட்டியிருக்கேன்.. பதினெட்டு வயசு வரைக்கும் பெற்றவருக்குத்தான் உரிமை.. நான் என் பிள்ளையை அடிக்கிறேனா கொல்றேனா..? அதுக்கு சாட்சியும் கிடையாது.. என் போறாத வேளை.. பிள்ளை பொறந்து நாலே மாசத்துல பெண்டாட்டி செத்துட்டா.. பச்சைப் பிள்ளையை நான் எப்படி காப்பாத்துவேன்னு நொந்து போயி ரொம்ப வேதனையோட மனசுருகி வேறே வழியில்லாம போலீஸ் ஸ்டேசன் வாசல்ல விட்டுப் போனேன்.. எத்தனை துக்கம் தெரியுமா.." எனக்குத் தொண்டை அடைத்தது.. கண்களில் நீர்.

"ஆமாம்.. கேள்விப்பட்டோம்.. உங்க பெண்டாட்டி தண்ணீல மூழ்கி செத்துட்டாங்களாம்.. கொலையா தற்கொலையானு போலீஸ் முடிவெடுக்க முடியாம கேஸை மூடிட்டாங்கனு சொன்னாரு இன்ஸ்பெக்டர்.. இன்சூரன்சு பணம் கிடைச்ச ஆறு மாசத்துல ஊரை விட்டே ஓடிட்டீங்க.. எல்லா விவரமும் குழந்தை ரெகார்டுல கூட இருக்கு.. போங்க சார்.. இடத்தை காலி பண்ணுங்க.. கோர்ட் ஆர்டரோட வாங்க.. நாங்களும் கோர்ட் போகத் தயாரா இருக்கோம்"

"விளையாடுறியா? அப்போ நான் எதுக்குத் தயார்னு காட்டவா?"

"சார்.. போலீஸை கூப்பிட்டிருக்கேன்.. போலீஸ் வர வரைக்கும் அமைதியா இருங்க" என்றார் மூத்தவர். சுசீலாவோ என்னவோ பெயர். நினைவுக்கு வரவில்லை. எதுவாக இருந்தால் எனக்கு என்ன? கிழம்.. பார்க்கச் சகிக்கவில்லை.

"இதென்னம்மா இது.. என் பிள்ளையை நான் கேட்டா போலீஸ் வரட்டும்ன்றீங்க? போலீஸ் வந்து என்ன புடுங்கிடப் போவுது?"

"மிஸ்டர் மரியாதையில்லாம பேசாதீங்க.. படிச்சவரா இருந்துட்டு"

"இதென்னம்மா அடாவடியா இருக்குதே? பெண்களாச்சேனு பாக்குறேன்.. வாயுல வந்தபடி பேசிருவேன்.. அனாதை ஆசிரமம்னு பேர்ல மத்தவங்க குழந்தைகளை திருடி வச்சுக்கிட்டு காசு பண்ணிட்டிருக்கீங்க.. உங்களுக்கு நான் எந்த விதத்துல குறைஞ்சவன்? என்ன மரியாதை வேண்டிக்கிடக்குது திருட்டு களவானிகளுக்கு? அனாதை ஆசிரமம்னு பேர் வச்சிட்டு ஊரை ஏமாத்துறீங்க ரெண்டு முண்டைகளும்.."

ராதிகா அழத்தொடங்கினார். "சார்.. அப்படியெல்லாம் பேசாதீங்க சார்.. இந்த ஆசிரமம் உயர்ந்த நோக்கம் கொண்டது சார்.. இங்க இருக்குற குழந்தைகள்ல ஒரு குழந்தைக்குக் கூட கண் முழுதும் தெரியாது.. உடல்ல வேறே ஊனம்.. ஆனா யாரும் அநாதை இல்லை சார்.. அநாதை என்கிற வார்த்தையே நாங்க பயன் படுத்துறதில்லே.. இந்த வார்த்தையெல்லாம் இங்க பேசி பிள்ளைங்களுக்கு கத்துக் குடுத்துறாதீங்க.. இந்தக் குழந்தைகளுக்கு நாங்க இருக்கோம்.. இங்க வேலை பாக்குற அத்தனை பேரும்.. எங்க ரெண்டு பேர் உள்பட.. ஒரு நயா பைசா சம்பளம் வாங்கறதில்லே.. கிடைக்கிற அரசாங்க மற்றும் தனியார் உதவி அத்தனையும் பிள்ளைங்களுக்கே போவுது.."

"என்ன சொன்னீங்க? என் பிள்ளைக்குக் கண் தெரியாதா?" என்றேன், வேறெதையும் காதில் வாங்காதது போல. இவர்கள் நயா பைசா சம்பளம் வாங்கினால் எனக்கென்ன.. அனாதைகளை அனாதையெனக் கூப்பிடாவிட்டால் எனக்கென்ன..

"தெரியாத மாதிரி பேசாதீங்க சார்.. உங்க பிள்ளைன்றீங்க..மெடிகல், பர்த் சர்டிபிகெட் எல்லாம் காட்டுனீங்க.. அதுல இரிடோகோர்னியல் டிபெக்ட் போட்டிருக்குதுனு படிக்க முடியலியா? கண் சரியா தெரியாத ஊனக் குழந்தைனு தானே விட்டு ஓடினீங்க? பெண்டாட்டி செத்தது வேறே வசதியாப் போச்சு.. இன்சூரன்சு பணம் கிடைச்சதும் செங்கல்பட்டுல யாரையோ கல்யாணம் கட்டிக்கிட்டு மும்பை ஓடிட்டதா போலீஸ்ல சொன்னாங்க.. இத்தனைக்கும் மேலே இது உங்க பிள்ளையே இல்லனு போலீஸ்லயும் கோர்டுலயும் வக்கீல மூலமா பிராக்ஸி வாக்குமூலம் கொடுத்திருக்கீங்க.. எல்லாம் ரெகார்டுல இருக்கு"

"ராதிகா.. ப்லீஸ்.. வேணாம்.. போலீஸ் வர வரைக்கும் அமைதியா இருப்போம்" என்றார் மூத்தவர். இந்த முகத்தை எத்தனை நேரம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லையே.. எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!

"இல்லே மேடம்.. எல்லா அயோக்கியத்தனமும் செஞ்சிட்டு நாலு வருசம் கழிச்சு பிள்ளையைக் கொண்டான்றாரு.. அதுக்கு மேலே நாக்குல நரம்பில்லாம.."

"சரி மேடம்.. மன்னிச்சுருங்க.. நாலு வருசத்துக்கு என்ன செலவு செஞ்சிருக்கீங்க.. அதுக்கு மேலே அம்பதாயிரம் செக் எழுதிக் கொடுத்துடறேன்.. கணக்கை தீர்த்துக்குவோம்.. சரியாப் போச்சா?"

ராதிகா சீறியது அழகாக இருந்தது. "வாட் நான்சென்ஸ்? உங்க பிள்ளை உயிரோட இருக்குறதுக்கு என்ன சார் விலை? செத்தா என்னனு எங்கியோ ரோட்டுல விட்டுட்டு ஓடினீங்க.. இப்ப கணக்கா கேக்குறீங்க? லஞ்சமா கொடுக்கறீங்க.."

"ராதிகா.. ப்லீஸ்.. இதோ போலீஸ் வந்துரும்"

"என்ன்ன்ன்ன்ன்னங்ங்ங்கடி.." என்று எழுந்தேன். எனக்குக் கோபம் வந்துவிட்டால் அடுத்தவர் வேட்டியை உருவிய பின்னரே நிற்பேன். இந்தப் பெண்களை என்ன செய்வது என்று பார்த்தேன். "என்னை என்ன அக்குள் மசிருனு நெனச்சிங்களா? பணிவா கேட்டேன் நயமா கேட்டேன் மசியமாட்றீங்க.. அதுவும் திருட்டுத்தனம் பண்ணி நாடகமாடறீங்க.. இன்னொருத்தர் மகவை திருடி வச்சுகிட்டு ஆசிரமம்னு கூத்தா அடிக்குறீங்க? அஞ்சு எண்றதுக்குள்ற என் பிள்ளையை இங்கே கொண்டுவாங்க.. இல்லின்னா நானே உள்ளாற வந்து ஒண்ணுக்கு ரெண்டா தூக்கிட்டுப் போயிருவேன்.. அஞ்சு எண்ணுவேன்.. புரியுதா?"

எண்ணத் தொடங்கினேன். ஐந்து எண்ணி முடிக்கையில் போலீஸ் வண்டி வந்தது. ஒரு இன்ஸ்பெக்டரும் ஏட்டும் வந்தனர். பெண் இன்ஸ்பெக்டர். போச்சுடா. பெண்ணுரிமைனு நாடு குட்டிச்சுவராயிட்டிருக்குது.

வேறு வழியில்லாமல் பெண் இன்ஸ்பெக்டரிடம் எல்லா விவரமும் சொன்னேன். "இன்ஸ்பெக்டர் மேடம்.. நான் செஞ்சது தவறு தான். பெத்த பிள்ளையை நடுத்தெருவுல அனாதையா விட்டுப் போனது பெரிய பாவம்னு உணர்ந்ததால தான் இப்ப இங்கே வந்திருக்கேன். பழைய வக்கீலை விசாரிசசு.. போலீஸ் ஸ்டேசன்ல விசாரிச்சு.. இந்த இடத்துல இருக்குறதா சொன்னாங்க.. ஆண்டவன் புண்ணியத்துல நல்ல அனாதை ஆசிரமமா கிடைச்சுதேனு சந்தோசம்.. ஆனா பாருங்க.. என் பிள்ளையை எங்கிட்டே ஒப்படைங்க.. என்ன இருந்தாலும் தாய் தகப்பன் மாதிரி வருமா? பிள்ளையக் கொடுங்கனு கேட்டா சட்டம் பேசுறாங்க.. மனசை ரொம்ப நோகடிக்கிறாங்க மேடம்" என்றேன். ஆதாரங்களைக் காட்டினேன். "இது என் பிள்ளைதான்.. பாருங்க. ஏதோ என் போறாத வேளை வாக்குமூலம் கொடுத்தேன்.. இப்ப அதை சாக்கா வச்சுக்கிட்டு என்னை ஏமாத்தப் பாக்குறாங்க"

ராதிகா குறுக்கிட்டு ஆசிரம ஆதாரங்களைக் காட்டினார். "இன்ஸ்பெக்டர்.. இவர் நல்லவரில்லே.. இந்தக் குழந்தையை மும்பைல வித்துப் பணம் செய்ய வந்திருக்காருனு எனக்கு நம்பத்தகுந்த தகவல் இருக்கு.. ப்லீஸ்.. இவரை இந்த இடத்துலந்து விலகச் சொல்லுங்க.. பிள்ளையை தர முடியாதுனு சொல்லிடுங்க"

இன்ஸ்பெக்டர் எல்லா ஆவணங்களையும் பார்த்தார். ராதிகாவைப் பார்த்து "மேடம்.. தேவையில்லாம வதந்தி பொய் பிரசாரங்களை நம்பாதிங்க.. உண்மையான தகப்பன் உணர்வோட இவரு இங்க வந்திருக்காரா இல்லையானு இவருக்கு மட்டும் தான் தெரியும்.. தகவல்களை நம்பி நாம எந்த முடிவும் எடுக்க முடியாது" என்றவர், என்னிடம் "மிஸ்டர்.. இது உங்க பிள்ளையா இருக்கலாம்.. ஆனா சட்டப்படி இவங்க வளக்கலாம்னு கோர்ட் சொல்லியிருக்குது. அதையும் மதிக்கணும்" என்றார்.

"அதெப்படி? என் பிள்ளையை இவங்க எதுக்கு வளக்கணும்? நான் வக்கீல் கோர்ட்னு போய் லட்சம் செலவானாலும் கேஸ் போடுவேன்"

"எத்தனை செலவழிப்பிங்களோ உங்க விருப்பம்.. கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு வந்து பிள்ளையைத் தாராளமா கூட்டிப் போங்க.. நானே வந்து உதவி செய்யுறேன்.. இப்ப கிளம்புங்க.. கலாட்டா செய்யாதிங்க"

"கலாட்டா இல்லிங்க.. இவங்க தான் தாறுமாறா பேசுறாங்க.. என் பிள்ளையைக் குடுத்துட்டா நான் போயிருவேன்.. இன்ஸ்பெக்டர் நீங்க வந்து நியாயம் காட்டுவிங்கனு பார்த்தா.. என்னவோ என்னை நெருக்குறீங்க.. இவங்க செலவை நான் குடுத்துடறேன் இன்ஸ்பெக்டர்.. அதுக்கு மேலே இவங்க செய்யுற இந்த நல்ல காரியத்துக்கு நன்கொடையா ஒரு லட்சம் வேணும்னாலும்.."

"சார்.. கிளம்புங்க" என்றார் இன்ஸ்பெக்டர் என்னைத் தள்ளாத குறையாக. ஏட்டை அழைத்து ஜீப்பை ஸ்டேசனுக்கு ஓட்டிவரச் சொன்னார். என் வாடகைக் காரில் என்னுடன் ஏறிக்கொண்டு பயணம் செய்தார். போலீஸ் ஸ்டேசன் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி என்னிடம் "சார்.. கோர்ட் ஆர்டர் வாங்கிட்டு என்னை வந்து பாருங்க.. இதே போலிஸ் ஸ்டேசன்ல தான் இருப்பேன்.. கோர்ட் உத்தரவும் போலீஸ் துணையும் இல்லாம ஆசிரமம் பக்கம் போவாதிங்க.. புரியுதா?" என்றபடி இறங்கிக் கொண்டார்.

வண்டியைக் கிளப்பச் சொன்னேன். அழுது மிரட்டி பிள்ளையை வாங்கிவிடலாம் என்று வந்தால்.. இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. முதல் பெண்டாட்டி சாவு போல சுலபமாக முடியாது போலிருக்கிறதே? மும்பைக்காரனிடம் பேரம் பேசியது அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரிந்தது? சும்மா கிளப்பி விட்டாளா? என்னைப் போல் ஆசாமிகளைப் பார்த்திருக்கிறாள். விவரம் தெரிந்த பெண்ணாக இருக்கிறாள். குருட்டு ஊனப் பிள்ளைக்கு ஐந்து லட்சம் வரை தருவதாகச் சொல்லியிருந்தான் மும்பை புரோக்கர். முழுக்குருடாக இல்லாவிட்டால் நல்லது தான்.. வேறு ஏதாவது பாலியல் அடிமை வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள்.. ஒன்றுக்கும் உதவாத பிள்ளையைப் பெற்றதற்கு ஐந்து லட்சம் நல்ல லாபம் என்று நினைத்திருந்தேன். பிள்ளை கைக்கு வந்தால் அவனைக் காட்டி புரோக்கரிடம் கொஞ்சம் அதிகமாகவே கறந்து விடலாம்.. ம்ம்ம்... வேலை வைத்துவிட்டாள் ராதிகா. அவளைப் பிறகு கவனிக்கலாம். இப்போதைக்கு இந்தப் பிள்ளையைப் பிடுங்கி ஐந்து ல பார்க்கவேண்டும். கோர்ட்டுக்கு போனால் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. என்னுடைய பழைய வக்கீலும் அதைத்தான் சொல்லியிருந்தார். டிஎன்ஏ சோதனை என்று பணம் பிடுங்காமல் இருந்தால் சரி.

எப்படியிருந்தாலும் கேஸ் முடிகிற வரையில் பொறுப்புள்ள தகப்பனாக நடக்க வேண்டும். வக்கீல் செலவுக்கு எத்தனை ஆகும் என்று யோசிக்கத் தொடங்கினேன்.

26 கருத்துகள்:

 1. நல்ல கதை சார். இப்படித்தான் நிறைய நடக்குது. மனது வேதனைப்பட்டது ச்சே பாவம் அந்தக் குழந்தை...காப்பாற்றப்பட வேண்டும். பணம் பத்தும் செய்யும்.... வக்கீலும், போலீசும் அந்த ஆளுக்குத் துணை போகாமல் இருந்தால் நல்லது...

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 2. இப்படியும் சில மனுஷ ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன....

  பதிலளிநீக்கு
 3. இக்கால சமுதாயத்தின் அழகான பிரதிபலிப்பு

  பதிலளிநீக்கு
 4. அச்சச்சோ கடசிப் பராவைப் படிக்க முடியவில்லை.. அவ்ளோ மோசமான வரிகளைப் போடாமல் விட்டிருக்கலாம் மனம் என்னவோ பண்ணுது.. உண்மையில் இவ்வளவு மோசமாக மனிதர்கள் இருக்கிறார்களா... இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை.. விலங்கை விடக் கொடுமையானவர்கள்...

  ஒரு குழந்தையை 4 வயதுவரை வளர்த்தெடுப்பதுதான் கஸ்டம்.. பின்னர் ஈசியாக வளர்த்தெடுத்திடலாம்... அந்த தெக்கினிக்கி :) தெரிஞ்சுதான் வந்து நின்று போராடுறாரோ என்னமோ...

  இக்காலத்தில் நல்லவர்கள.. நல்ல தொழில் செய்பவர்களைக்கூட இப்படியானவர்கள் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.. இனிக் குழந்தை வளர்ப்பே வேண்டாம் என இல்லத்தை இழுத்து மூடி விட்டு ஓடப்பண்ணிடுவார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்வியலின் விசித்திரம் கற்பனைக்கப்பாற்பட்டது.

   நீக்கு
 5. எல்லோரும் அவரவர் செயல்களை நியாயப்படுத்துகிறார்கள் சரி என்றே நம்புகிறார்கள்

  பதிலளிநீக்கு
 6. 'நோற்றான்'-- தலைப்பைச் சுற்றியே மனம் சுழன்று கொண்டிருந்தது. அதற்குள் ஜெட் வேகத்தில் கதை பறப்பதால் 'நோற்றான்' ஆராய்ச்சியையே இது வேலைக்காகாது என்று கை கழுவினேன்.

  அப்புறம் தான் இந்த எண்ணம் தோன்றியது:

  இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு செய்து குறுக்கே வருகிறவர்களுக்கெல்லாம் வாரி வழங்கி.... ஹம்..
  மும்பைக்காரர்களின் அந்த ஐந்து லட்சம் பிச்சாத்து காசு இல்லையோ?..

  நிச்சயமாக அப்பன் என்று சொல்லிக் கொள்ளும் அவன் நோற்றான் இல்லை என்று கடைசியில் தெரிந்தது.
  பிள்ளையைப் பொறுத்த வரை பெற்றவர்கள், பெறாதவர்கள் எல்லோருக்கும் நோற்றானாகத் தென்படுவது தான் நிஜ உண்மையோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கதைக்கு முதலில் வைத்த தலைப்பு அப்பன்.
   நோற்றான் - நான் எழுதிக்கொண்டிருக்கும் இன்னொரு கதைக்கு தலைப்பாக வைத்திருந்தேன்.. இந்தக் கதையின் முரண் நோற்றானைத் தட்டிக் கொண்டது.
   ஆழ்ந்த கவனிப்புக்கு நன்றி.

   நீக்கு
 7. மனசாட்சி - மாங்கா இஞ்சி! அட!

  பதிலளிநீக்கு
 8. //பெண் இன்ஸ்பெக்டர். போச்சுடா. பெண்ணுரிமைனு நாடு குட்டிச்சுவராயிட்டிருக்குது.//

  :)))

  பதிலளிநீக்கு
 9. அப்பாதுரை டச் மிஸ்ஸிங். என்னவோ குறைகிறது. உப்பு, காரம், புளிப்பு?

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீராம்! உப்பு, காரம், புளிப்பு என்று எதை வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் அந்த இனிப்பில் மட்டும்
  துரை வஞ்சனையே பண்ண மாட்டார். ஆனா, அதுவும் அளவாத்தான் இருக்கும். இந்தக் கதையில் கூட ஸ்பூன் ஸ்பூனா பார்த்துப் பார்த்து அங்கங்கே தூவியிருக்கிறார், பாருங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹி ஸ்ரீராம்.. நன்றி ஜீவி..

   இந்தக் கதை என் கற்பனை அல்ல - நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வை வைத்தது புனையப்பட்டது. எந்த அளவுக்கு நிகழ்வைக் கதையாக்குவது என்று நான் சற்று திணறியது மெய். அது வாசிப்பில் தெரிகிறதோ என்னவோ.

   கதையைப் படித்ததும் நண்பர் என்னை அழைத்து "என்ன துரை.. ரெண்டு வரி சொன்னதை வச்சு பெரிய கதையே எழுதிட்டீங்களே?" என்றார். அவர் சொன்னது பாராட்டு போல் தோன்றினாலும், நண்பர் காயிருக்கக் கனி கவர்ந்தது அப்போது தான் உறைத்தது.

   அவரிடம் ஒரு வார்த்தை அனுமதி கேட்டு பிறகு எழுதியிருக்கலாமோ? அப்படி எழுதியிருந்தால் என் திணறல் வெளிப்பட்டிருக்காதோ?


   நீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. மிக அருமை. அதைவிடத் தலைப்பு! இப்படியும் தகப்பன்! ஆனால் இது சுடும் உண்மையும் கூட! :(

  பதிலளிநீக்கு
 13. மனம் பதறப் பதற ,ஒரு அப்பன் நடக்கும் விதமா இது.
  உங்கள் எழுத்துச் சித்திரம் அந்த யோக்கியம் இல்லாத
  மிருகத்தை விவரிக்கிறது. குழந்தை பிழைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 14. இது போன்ற மனிதர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மனதைப் பதற வைக்கும் கதை.

  பதிலளிநீக்கு
 15. செய்தியில் படித்த போது மனம் பதறியது. குழந்தைகளை கடத்தி பிச்சைஎடுக்க விற்கும் கும்பல் ஒன்று ஆந்திராவில் பிடிபட்டது என்று.
  அதை கதையாக படிக்கும் போது மனம் வேதனை படுகிறது. அதுவும் பெத்த அப்பனே பணத்திற்க்காக செய்யும் போது மனம் பதறுகிறது இப்படியும் அப்பா இருக்கிறானே!

  பதிலளிநீக்கு
 16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. மனதை கஷ்டப்படுத்திய கதை சார்...
  இது போன்ற மனித மிருகங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
  அந்தக் குழந்தை காப்பாற்றப்படுமா என்ற கவலையை முடிவு கொடுத்தது.
  கிரேட்...

  பதிலளிநீக்கு
 18. வாசிப்புக்கும் பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 19. Truth is stranger than fiction இல்லையா? பல சமயங்களில் அப்படித்தான். ஆங்காங்கே சுஜாதா தென்பட்டாலும் அழகான நடை!.

  பதிலளிநீக்கு
 20. அட அறியாமல் இருந்துவிட்டேன்.தலைப்பே யோசிக்க வைத்தது. சட்டென முடிந்துவிட்டது கதை.
  மனதை கனக்க வைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு