2017/08/25

பல்கொட்டிப் பேய்



14

13◄

        லிமேடைக்கு எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். எனக்கு எதிரே ஸ்ரீராம். அவன் பின்னால் ரமேஷ். அவனைச் சுற்றி ஜாமக்கூழ் மக்கள். ரமேஷுக்குப் பின்னால் விளக்கு விசை. ஸ்ரீராமையும் ரமேஷையும் கவனித்தபடி ஏட்டு வாசலில் நின்றிருந்தார். ஸ்ரீராமின் சைகை தொடர்ந்து நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். மனதுள் இரண்டு அவசர ப்ளேஷ்பேக்.

ப்ளேஷ்பேக் ராமு: ஸ்ரீராம் எங்களைக் கூட்டிப் பேசினான் என்றேனே, இதான் விஷயம். உக்கிராசலத்தின் திடீர் மறுப்பும் ஏட்டு காதுபட அவனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லாத மாதிரி பேசியதும் நாடகம் என்றான். உக்கிராசலம் ஏற்கனவே தலைப்பல்லை பெயர்த்து வைத்துவிட்டான் என்றும் சமயம் பார்த்து ஜாமக்கூழ் கூட்டத்தில் தலைபல்லை தட்டிக்கொண்டு போகலாம் என்றும் அன்று காலையே சொல்லிவிட்டதாகச் சொன்னான். “இந்தாடா” என்று ரமேஷிடம் கொடுத்தான். மஞ்சள் குங்குமம் பூசிய பெரிய உருளைக்கிழங்கு. “உக்கிராசலம் கொடுத்தான். தலைப்பல் அபேஸ் பண்ணிட்டு அந்த இடத்துல இதை வச்சுரு” என்றான்.

“ஏன்.. நீ செய்யேண்டா?” என்றான் ரமேஷ்.

“உனக்குத்தானே பேய் பிடிக்கும் அடிக்கடி? அதனால நீ செஞ்சா நாம மாட்டிக்கிட்டாலும் சாக்கு சொல்லிடலாம்ல?”

“எவண்டா சொன்னது எனக்கு அடிக்கடி பேய் பிடிக்கும்னு?”

“உக்கிராசலம் தான். ஏட்டு கிட்ட அப்படிச் சொல்லிருக்கான்.. நீ பேய் பிடிச்சு அன்னிக்கு அவரைப் பளார்னு அறைஞ்சேனு அவர்ட்ட சொன்னதா சொன்னான்.. அட்ஜஸ்ட் பண்ணிக்க.. பல் திருட்டுக்கும் வசதியாப் போச்சு..”

“அடப்பாவிகளா.. நீங்க இருக்குறப்ப எனக்கு எதுக்குடா எதிரிங்க?”

ப்ளேஷ்பேக் சோமு: மசாலா பால் சாப்பிடும் பொழுது தலைப்பல் திருடுவது பற்றித் திட்டமிட்டோம். மேடைக்கு எதிரெதிரே உட்கார்ந்து ஒருவர் ஏட்டைக் கவனிக்க வேண்டுமென்றும், ரமேஷ் பேய் வந்தாற்போல் ஆடத்தொடங்கியதும் ஸ்ரீராம் ஐந்து நொடிகளுக்கு விளைக்கை அணைக்க வேண்டுமென்றும், நான் அந்த சந்தடியில் உருளைக்கிழங்கை வைத்துவிட்டுத் தலைப்பல்லை எடுக்க வேண்டுமென்றும் திட்டம். “நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றது பல்கொட்டி. “ஏட்டு எதுக்கும் மசியாம நம்மளைத் துரத்தவோ தடுக்கவோ வந்தா அவர் தலையில ரெண்டு போடு” என்றான் ரமேஷ் கடுப்புடன்.

“ஏ பல்கொட்டி.. பல் கிடைச்சதும் எங்களை பழி கிழி வாங்கணும்னு நினைச்சே நாங்களே செத்து வந்து உன்னைப் பழி வாங்குவோம்.. எப்பவுமே பல் இல்லாம கிடக்க வேண்டியதுதான்” என்றான் ஸ்ரீராம்.

“அய்ய்ய்ய்ய்ய்யோ.. வேணாம்.. இல்லையில்லை” என்றபடி மசாலா பால் க்ளாசைக் கீழே வைத்தது பல்கொட்டி. கல்லாக்காரர் எங்கள் பேச்சைக் கேட்டு நடுங்கினாரா அல்லது அந்தரத்தில் ஆடி வந்த பால் க்ளாசை கண்டு நடுங்கினாரா தெரியவில்லை. “பழி வாங்குற எண்ணமே இல்லே.. வயசான பேய் பாவம்பா.. கருணை காட்டுப்பா.. ஏட்டைக் கவனிக்கணும் அவ்ளோ தானே?”.

        திட்டமிட்டபடி ரமேஷ் மெள்ள முனகத் தொடங்கினான். பிறகு “ஆத்தா” என்று விட்டு விட்டு உறுமத்தொடங்கியதும் கூழ்மக்கள் அவனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். எத்தனை பேயோட்டம் பார்த்திருப்பான்? அசத்தலாக நடித்தான். தோளைக் குலுக்கி ஆத்தா ஆத்தா என்று ஆடத்தொடங்கினான்.. மக்கள் கொஞ்சம் பீதியுடன் பரவி விலகத் தொடங்கினார்கள். உட்கார்ந்தபடியே நான் பீடத்தின் அருகில் சென்றேன். உருளைக்கிழங்கை கையிலெடுத்துத் தயாரானேன்.

ஸ்ரீராம் சட்டென்று விளக்கை அணைத்தான். ஐந்து நொடிகள். விளக்கு எரிந்தது. என் கையில் உருளைக்கிழங்கு இருப்பதைப் பார்த்து ரமேஷ் ஓவென்று கூச்சலிட்டு ஆடினான். ஸ்ரீராம் மறுபடி விளைக்கை அணைத்தான். ஐந்து நொடிகள். விளக்கு திரும்பியது. என் கையில் மறுபடி உருளைக்கிழங்கு. ரமேஷுக்கும் ஸ்ரீராமுக்கும் கடுப்பு. ஒரு சின்ன விஷயத்தை செய்யமுடியலியா என்று ஸ்ரீராம் என்னைக் கண்ணால் எரித்தான்.

என் கஷ்டம் எனக்குத் தானே தெரியும்? ஸ்ரீராம் சொன்னபடி உக்கிராசலம் தலைப்பல்லைப் பெயர்த்திருப்பான் என்று நம்பி அதை எடுத்தால்.. வந்தால் தானே? கை வழுக்கி வழுக்கிப் போனதே தவிர பல் அசையவில்லை. நாலைந்து முறை வழுக்கியதும் புரிந்தது. தலைப்பல்லைப் பெயர்த்து வைப்பதற்கு பதில் பீடத்தின் மேல்தட்டையே பெயர்த்து வைத்திருக்கிறான் மடையன். பீடத்தை தூக்கி எடுக்கவும் முடியவில்லை. அப்படியே எடுத்தாலும் அந்த இடத்தில் உருளைக்கிழங்கையா வைக்க முடியும்?

ரமேஷ் ஆடிக்கொண்டிருந்தான். “ஆத்தா பல்லைப் பிடுங்கித்தரச் சொல்லுதுடா பேராண்டி..” என்றான் என்னை இடித்தபடி.

நானும் ஆடத்தொடங்கினேன். “பல்லுக்குப் பதில் பீடத்தை பேத்து வச்சிருக்காண்டா பேராண்டி..”

“பீடத்தைத் தூக்கிப் பாரேண்டா பேராண்டி..”

“கிண்டலா இருக்குதாடா பேராண்டி..”

ஏட்டு அவசரமாக கூட்டத்தைப் பிரித்து உள்ளே வரத் தொடங்கியதைப் பார்த்த ரமேஷ் ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டு பக்கத்தில் இருந்தவர்களை இடித்து வேகமாக ஆடத்தொடங்கினான். ஆனால் ஏட்டு எங்கள் அருகே வந்து நின்று விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு விட்டார். பீடத்தின் தலை நகர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்தார். தன் கையிலிருந்த விசிலை எடுத்து ஊத முற்பட்டபோது திடீரென்று ஆகாயத்தில் உயர்ந்தார். பிறகு பொத்தென்று விழுந்தார். மீண்டும் ஆகாயத்தில் எழுந்தார். மறுபடி பொத்தென்று விழுந்தார்.

உக்கிராசலம் சட்டென்று கோதாவில் இறங்கி ஏட்டை ஒரு வேப்பிலைக் கொத்தால் ஓங்கி அடித்தான். “மலையேறு ஆத்தா மலையேறு.. மலையேற ஆத்தா என்னா கேக்குது?”

“பல்லு கேக்குதுடா பேராண்டி ஆத்தா பல்லு கேக்குதுடா” என்று ரமேஷ் குத்தாட்டம் ஆடினான்.

நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஏட்டு பீடத்தை அப்படியே தூக்கினார். கூட்டம் அலறி விலகியது. ரமேஷ் ஆத்தா ஆத்தா என்று உணர்ச்சிவசப்பட, ஏட்டு தரையிலிருந்து நாலடி எழும்பி பீடத்தை தூக்கிக் கொண்டு வெளியே போனார். உக்கிராசலம் வேப்பிலைக் கட்டோடு ஏட்டைத் துரத்தினான். தொடர்ந்து ரமேஷ். தொடர்ந்து நான். ரயில்பெட்டி போல் என்னைத் தொடர்ந்த மக்கள் பக்தி வெறியில் மெய்மறந்து ஆத்தா ஆத்தா என்றனர்.

பனைமரம் அருகே ஏட்டு படாலென்று பீடத்தைத் தரையில் எறிந்தார். சுக்கலாக உடைந்த பீடத்தைச் சுற்றி வந்து ஆடினார். மயங்கி விழுந்தார். ஜாமக் கூழ் மக்கள் பரவசத்தில் தங்களை மறந்தனர். ஏட்டைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

“வாங்க போவோம்” என்று பல்கொட்டி என்னை அவசரமாக இடித்தது. ரமேஷை இழுத்துக் கொண்டு கூட்டத்திலிருந்து விலகினேன். ஸ்ரீராம் ஏற்கனவே தெருமுனையிலிருந்தான்.

        “என்னடா ஆச்சு?” என்றான் ஸ்ரீராம்.

“பல்லைப் பேத்து வைடானா பீடத்தைப் பேத்து வச்சிருக்கான் பீடை” என்றான் ரமேஷ்.

“என்னால அதை நவுத்தக் கூட முடியலிடா.. ஏட்டு வேறே வந்துட்டான்.. அதான் பல் கொட்டியைக் கூப்பிட்டேன்.. அது என்னடானா ஏட்டை ஒரு அடி அடிச்சு கவுத்திடுச்சு” என்றேன்.

“நீங்க தானேப்பா சொன்னீங்க.. ஏட்டை அடிக்கணும்னு..? அதான் மொதல்ல அடிச்சேன்.. அப்புறம் தான் கவனிச்சேன் நீ என்ன சொல்றேனு.. உடனே ஏட்டு கைல பீடத்தை வச்சு அவரை அப்படியே அந்தரத்துல தூக்கிட்டு சுத்தினேன்.. உங்களை நம்பினா எனக்குப் பல் கிடைச்ச கதைதான்.. பீடத்தைப் பேத்துட்டதினால எனக்கும் சிக்கல் இல்லாம போச்சு.. வெளில போனதும் நொறுக்கிட்டேன்.. பல்லை எடுத்துக்கிட்டேன்..”

“இருந்தாலும் போலீஸை அடிக்கறதுனா பல்கொட்டிக்கு ரொம்ப இஷ்டம்..ஆளை ஒரு தட்டு தட்டச்சொன்னா இப்படியா துணி மாதிரி துவைக்கிறது? ஏட்டுக்கு மயக்கம் தெளிஞ்சதும் நம்மளைப் பிடிக்க வருவான்.. அதுக்குள்ள நாம ஓடிறணும்.. ” என்றான் ரமேஷ்.

“எதுக்கு ஓடணும்?” என்றான் ஸ்ரீராம். “பீடத்தைத் தூக்கிட்டுப் போய் உடைச்சது ஏட்டுதான்னு எல்லாரும் சாட்சி சொல்வாங்க.. பரவாயில்லே பல்கொட்டி.. உனக்கும் கொஞ்சம் மூளை இருக்குது போல. குட். காரியம் ஆயிடுச்சில்லே? நடையக் கட்டு”.

        மறுநாள் காலை நானும் ரமேஷும் மும்பை கிளம்பினோம். ஸ்ரீராம் பெங்களூர் கிளம்பினான். பல்கொட்டி எங்களை விமான நிலையத்தில் வழியனுப்பி “நான் உங்களை மறக்கவே மாட்டேன்” என்றது.

“அய்யயோ..நீ வேறே... மொதல்ல எங்களை மறந்து தொலை.. இனிமே எங்க பக்கமே திரும்பிப் பார்க்காதே” என்றான் ரமேஷ்.

என் பாஸ்போர்ட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த செக்யூரிடி திடீரென்று பாஸ்போர்ட் காற்றில் பறப்பதைப் பார்த்து அலறினான். தாவிப் பிடித்து என் கையில் கொடுத்து “மாப் கீஜியே” என்றான். விமானத்தில் கூட்டம் இல்லை. உள்ளே நுழைந்து என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தேன். பக்கத்து இருக்கை ஆசாமி அடிக்கடி நெளிந்து தன்னைத் தானே கன்னத்தில் அடித்துக் கொண்ட அதிர்ச்சியில் கலங்கிப் போயிருந்தான். நான் அவனைக் கவனிப்பது தெரிந்ததும் நெளிந்து “வயித்துவலி.. ஐ வில் கோ தேர்” என்றபடி எழுந்து பின்னால் போனான்.

பல்கொட்டி என் பக்கத்தில் இருப்பதை உணர்ந்தேன். “நீ எங்க பக்கமே வரக்கூடாதுனு சொன்னேன் இல்லே?” என்றேன். பல்கொட்டி பதில் சொல்லவில்லை.

முற்றும் - படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க!

18 கருத்துகள்:

  1. //படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க//

    நாளை நமதே. நீதிக்குத் தலை வணங்கு! தாய் சொல்லைத் தட்டாதே.

    பதிலளிநீக்கு
  2. படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க!// ஹாஹாஹாஹா...அப்ப சினிமா மாதிரி பல்கொட்டி பார்ட் 2 வருமோ!!!தமிழ்ல பேய் சினிமா பார்த்தா மாதிரி இருக்கு!! வாழ்க நு வாழ்த்திட்டு பல்கொட்டி தரிசனம் இல்லைனா??!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. முடிந்துவிட்டதா? இனி விட்டுப்போன போன பதிவையும் படித்து கருத்திடுகிறேன். எனக்கென்னவோ, சீரியஸான கதையை நகைச்சுவைக்குள் அடைத்துவிட்டது போல் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  4. “அடப்பாவிகளா.. நீங்க இருக்குறப்ப எனக்கு எதுக்குடா எதிரிங்க?”

    கடைசிவரை நதைச்சுவை குறையாமல் நகர்த்திய விதம் அருமை நண்பரே... நீங்கள் பல்லாண்டு வாழ்க.

    பதிலளிநீக்கு
  5. சத்தியத்துக்கு கட்டுப்பட்ட பேய் சொன்னதைச் செய்யும் பேய் காரியம் ஆக எது வேண்டுமானாலும் செய்யும் பேய் நம்மால் முடியாதுப்பா இப்படி எல்லாம் எழுத. சில நகைச்சுவை என்றாலும் ரசிக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  6. நல்ல நகைச்சுவை.... பல்கொட்டி பேய் பார்ட் 2 வரும் போல இருக்கே! :)

    பதிலளிநீக்கு
  7. சீரியசோ சிரியசோ இடைவெளியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

    டமாஸ் பேய்க்கதை எழுத ஆசை வந்தது. ரெண்டுங்கெட்டான் திகில் கதைகளைப் பற்றி ஸ்டீபன் கிங் இப்படிச் சொன்னதாகக் கேள்வி: அம்மை ஊசிக்கு இணையான வாசிப்பு அனுபவம்.

    பதிலளிநீக்கு
  8. ஹாஹா, பல்கொட்டி பகுதி இரண்டு ஆரம்பிக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கேன். சுவாரசியமான நகைச்சுவை உணர்வு மிகுந்த நல்ல சமத்தான பேய்! இம்மாதிரிப் பேய்கள் இருந்தால் வாழ்க்கையே சுவாரசியமா ஆயிடாதோ!

    பதிலளிநீக்கு
  9. பல்கொட்டிப் பேய் = பேய் உலகில் சீனியர் சிடிஸன்"..

    பதிலளிநீக்கு
  10. முதலிலிருந்து திரும்பி படிச்சிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  11. இன்றுதான் தங்களின் தளத்தைக் கண்டேன். தொடர்ந்து வாசிப்போம், பயணிப்போம்.

    பதிலளிநீக்கு
  12. பல்கொட்டி பேய்க்கு பல்கிடைத்ததும் பல்காட்டி பேய் ஆகிவிட்டதா?

    படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க்! அருமை.

    பதிலளிநீக்கு
  13. நிறைய புளொக்ஸ் வச்சிருக்கிறீங்க.. எது இப்போ அக்டிவா இருக்குது எனக் கண்டு பிடிச்சதிலயே மூச்சு வாங்குது.. அதனால முழுசாக் கதை படிக்க முடியாமல் போச்ச்ச்ச்:))[நம்போணும்:)]..முடிசூட்டு விழாவுக்கே வரமுடிஞ்சது என்னால்:).. ஆரம்பம் முதல் ஒழுங்காகப் படிச்சால்தான் புரியும்.. பல்கொட்டிப்பேய்க்கதை.. இப்போது முழுக்க படிக்க முடியவில்லை... “படிச்சு முடிக்காதோரும் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
  14. என்ன இது?.. ஹாஹஹா.. பேய்ச்சிரிப்பு மாதிரியா இருக்கு?
    ஒரு ஹஹ்ஹஹ்ஹா கூட இல்லேனா, எப்படி?
    பல்கொட்டிப் பேயால் முடியாது என்கிறீர்களா?..
    சிரிச்சு வேணாப் பாருங்களேன்.. பல்லே ஒட்டாத சிரிப்பு, அந்த ஹஹ்ஹஹ்ஹா...

    பதிலளிநீக்கு
  15. அருமை...
    நகைச்சுவை என்பது எல்லாருக்கும் வருவதில்லை... கலக்கல்.

    பதிலளிநீக்கு
  16. Part2 vaaaaa..... endru thaniyum intha kathai..

    பதிலளிநீக்கு