2012/10/15

மைத் மை டியர்


    திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]

அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.

இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.

கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.

சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.

சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.

இனி, மைத் மைடியர்.


    வேர்கடலைச் சங்கத்துக்குள் நுழைந்து தன் வழக்கமான இடத்தில் உட்கார்ந்த அன்புமல்லிக்கு முழுதுமாக வியர்த்திருந்தது. குளிர் நீரில் நனைத்துப் பிழிந்த கைத்துண்டைக் கொண்டு வந்த சிங்காரத்தை நன்றியுடன் பார்த்தார். கழுத்தையும் முகத்தையும் ஒத்தடம் கொடுத்தபடி, காலையில் வீட்டுக்கு வந்த கிளி ஜோசியக்காரனை நினைத்துக் கொண்டார். "ஐயாவுக்கு வாழ்க்கையிலே ஒரு திருப்பம் காத்திருக்குனு சொல்லுடி மங்கம்மா" என்ற ஒரு வரி ஜோசியத்தை எட்டு வரிப் பாடலில் தேக்கி வாசித்தவனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து அனுப்பியிருந்தார். வழியில் பள்ளம் குழிகளினாலும், வெட்டப்பட்டிருந்த சாலைகளினாலும், இரண்டு விபத்துகளினாலும், நெரிசலினாலும்.. ஆலந்தூரிலிருந்து திருவான்மியூர் வருவதற்குள் இருபத்தாறு திருப்பங்களை எதிர்கொண்டார். கொடுத்த இரண்டு ரூபாயைப் பிடுங்கிக்கொண்டு கிளி ஜோசியக்காரனை கூண்டுக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்று தோன்றியது.

சிங்காரம் தானாகவே கொண்டு வைத்த குளிர்ந்த ஸ்காச்சை ஆசையோடு பருகினார். உடன் கொண்டு வைத்த வறுத்த முந்திரிப்பருப்பில் இரண்டை எடுத்து மென்றபடி ஆசுவாசப் படுத்திக் கொண்டார். "சிங்காரம், என்னுயிரப்பா நீ, என் சொத்தெல்லாம் உனக்குத்தான் எழுதி வைக்கப் போறேன்" என்றார்.

"ரொம்ப நல்லதுங்கய்யா" என்றான் சிங்காரம்.

"இன்னொரு ஸ்காச் கொண்டா. இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?" என்றார்.

"தயிர்வடை, உருளைக்கிழங்கு பஜ்ஜி, பால்போளி. சரக்கு மாஸ்டர் லீவுன்றதால இன்னிக்கு எல்லாம் ரொம்ப சிம்பிள் சார்"

"சிம்பிளா இருந்தா உலகத்துக்கே நல்லது. அகலக்கால் வச்சு வச்சு எல்லாத்தையும் போட்டு கொழப்பிட்டிருக்கோம். சரி, பொடியா சீவின வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், அரிஞ்ச கொத்தமல்லி ஒரு பிடி அத்தனையும் லேசா நெய்யிலே வதக்கி, தயிர்வடைல தூவி எடுத்துட்டு வா. நான் கொஞ்சம் ஓய்வெடுக்கணும். என்னைத் தேடி யாராவது வந்தா உடனே இங்கே அனுப்பிராதே" என்ற அன்புமல்லி, மூலையில் முகம் புதைத்து அமர்ந்திருந்த வாலிபனைப் பார்த்தார். தற்செயலாக நிமிர்ந்த வாலிபன் இவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.

வழியில்லாமல் அன்புமல்லி புன்னகைத்ததும், வாலிபன் சடுதியில் அவரருகே வந்து, "என் பேர் ரகுராம் சார்.. சுருக்கமா ரகுனு கூப்பிடுவாங்க" என்றான்.

"ஏன்? சுருக்கமா ராம்னு கூப்பிட மாட்டாங்களா?" என்ற அன்புமல்லி, "அதை அங்கயிருந்தே அவசரமில்லாம சொல்லியிருக்கலாமேபா? எதுக்கு இப்படி மூச்சு வாங்க மூலைலந்து ஓடியாறே?"

"என் சோகக்கதையை யார் கிட்டயாவது சொல்லணும்னு தோணுது.. ஏன்னு தெரியலே உங்களைப் பாத்த உடனே என் கதையைச் சொல்லத்தோணிச்சு சார்.."

"காதல் சோகமா?"

"ஆமா சார்!"

"உயிர்க் காதலா?"

"அட.. பாத்தீங்களா சார்.. கரெக்டா சொல்லிட்டீங்க!"

"அதானே? சரி.. சொல்லு.. சொல்லு.. இந்தா இப்படி உக்காந்து சொல்லு"

"என்னோட வாழ்க்கை வானத்தின் வானவில் சார் அவள். ஒரே ஒரு சின்ன ஒளிக்கீத்து கூடப் போதும்னு ஏங்கிட்டிருந்த என் இருண்ட மனசுல பத்து சூரியனைப் பத்த வச்சுட்டுப் போயிட்டா சார்"

"ச்ச்சோ.. போயிட்டாளா? அடப்பாவமே?!"

"அதில்ல சார்.. அதுக்குள்ள சாவடிக்கிறீங்களே? மனுசனா சார் நீங்க?"

"அப்ப இருக்காளா? வெரி குட்.. மேலே சொல்லு.. அவ பேர் என்ன?"

"தெரியாது"

"ஊரு?"

"தெரியாது"

"அவளை நேரிலயாவது பாத்திருக்கியா?"

"இப்பத்தான் பத்து நிமிசத்துக்கு முன்னால இங்க பார்க்கிங் லாட்ல முதல் தடவையா அவளைப் பார்த்தேன் சார்"

"பத்து நிமிசத்துக்கு முன்னாலே முதல் தடவையா பாத்தேன்றே.. அதுக்குள்ள வானவில் அது இதுன்றே?"

"உயிர்க்காதலுக்கு நிமிசம் நாள் யுகமெல்லாம் ரெலெடிவ் சார். காலம்ன்றது நாம தீர்மானிக்கிற அறிவுப் பரிமாணம். ஆனா காதல்ன்றது நம்ம யாராலயும் தீர்மானிக்க முடியாத ஆன்மப் பரிமாணம். இவளை எனக்குப் பத்து ஜென்மமா தெரிஞ்சாலும் பத்து நிமிசமா தெரிஞ்சாப்புல இருக்கும்.. அதே போல பத்து நிமிசமா.."

"போதும் நிறுத்துப்பா.. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. இந்தா இதை வச்சுக்க" என்று அன்புமல்லி தன் பர்சிலிருந்து நூறு ரூபாய் நோட்டை அவன் கைகளில் திணித்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். "தத்துவம் தாங்கலப்பா".

சிங்காரம் கொண்டு வைத்த இரண்டாவது விஸ்கியை ஒரு வாய் பருகினார். "அப்பாடி!" என்றார். உற்சாகமானார். சட்டென்று ரகுவின் கைகளிலிருந்து நூறு ரூபாய் நோட்டைப் பிடுங்கிக் கொண்டார். "ஏம்பா ரகுத்தம்பி.. உயிர்க்காதல்னு சொல்றே? யுகம் யுகமா பாத்தேன்னு சொல்றே.. அப்ப பேரைத் தெரிஞ்சுக்க வேணாமா?"

பணம் வந்து போன வேகம் புரியாத ரகு, "கேட்டேன். சொல்லிட்டு சட்டுனு போயிட்டா.. ஆனா அது அவ பேரா இருக்க முடியாது சார்"

"ஏன்?"

"ஒரு அழகான பெண்ணுக்கு 'செருப்பு பிஞ்சிரும்'னு யாராவது பேர் வைப்பாங்களா?"

"வாஸ்தவம்" என்ற அன்புமல்லி, திடீரென்று எழுந்த ரகுவிடம் "ஏம்பா திடீர் மரியாதை.. உக்காரு உக்காரு" என்றார்.

"மரியாதையெல்லாம் இல்லே சார்.. அப்புறம் பேசுவோம்.. அதோ அங்க நிக்குறது அந்தப் பொண்ணு போலவே இருக்கு. இப்போ அந்த முகத்தைப் பார்த்தா எனக்கு ரொம்ப சோகமாயிடும் சார்.." என்றபடி அவர் பதிலுக்குக் காத்திராமல் பழைய மூலைக்குள் காணாமல் போனான், ரகு என்று சுருங்கிய ரகுராம்.

    தயிர்வடையும் இன்னொரு கிண்ணம் முந்திரிப்பருப்பும் கொண்டு வைத்தான் சிங்காரம். தயிர்வடையின் நிறமும் மணமும் கண்ட அன்புமல்லி, "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்று மென்மையாகப் பாடி சிங்காரத்தின் கையில் இருபது ரூபாயைத் திணித்தார். ரகுவை அகற்றிய முகம் தெரியாத பெண்ணுக்கு நன்றி சொன்னார். ஒரு முந்திரிப்பருப்பை எடுத்து மணம் பார்த்தார். "ஆகா!" என்றார். சொன்ன வேகத்தில் சுனாமி வந்தது போல் அதிர்ந்தார், "அங்கிள்" என்ற குரலைக் கேட்டு.

அதிர்ச்சியில் கை தவறிக் கீழே விழுந்த முந்திரிப்பருப்பை வருத்தத்துடன் பார்த்தபடியே, குரலுக்குச் சொந்தக்காரரை முறைத்தார். மறைந்த நண்பன் கேகேயின் பெண்! கேகே மாரடைப்பால் இறந்து போனதற்கு கொலஸ்டிரால் காரணமென்று டாக்டர்கள் சொன்னாலும், மைதிலியின் திடீர் கூக்குரல்களும் காரணமாக இருந்திருக்குமோ என்று இப்போது தோன்றியது. "அங்கிள்!" என்றாள் மறுபடி, பனிரெண்டு கட்டையில்.

ரேடியோ டிவியில் இருப்பது போல் ஒலிக்கட்டுப்பாட்டு விசை மனிதர்களுக்கு இல்லையே என்று ஒரு கணம் வருந்தினார் அன்புமல்லி. பிறகு, 'என்ன இருந்தாலும் கேகே மகள் தன்னுடைய மகள் போல்' என்று நினைத்து அவளைக் கனிவுடன் பார்த்தார். இளவயதில் தாயை இழந்து சமீபத்தில் கேகேயும் இறந்த பிறகு, தனியாக வசித்து வந்த மைதிலி மேல் அவருக்குப் பாசம் பொங்கியது. "என்னம்மா மைதிலி? எப்படி இருக்கே? முந்திரிப்பருப்பு சாப்பிடுறியா?" என்றார்.

"மைத் அங்கிள். என் பேரை கர்நாடகப் படுத்தாதீங்க"

அன்புமல்லி இன்னும் கீழே கிடந்த முந்திரிப்பருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். "திரௌபதி தெரியும்ல அங்கிள்?" என்று மறுபடி அலறிய மைத்தைத் திடுக்கிட்டு அண்ணாந்தார். முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக உயரே எறிந்து வாய் திறந்துப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

"யாருமா, உன் ப்ரென்டா?"

"இல்லே அங்கிள்" என்றபடி அடுத்த முந்திரிப்பருப்பை உயரே எறிந்தாள். "பாண்டவர் பெண்டாட்டி" என்றபடி வாயுள் பிடித்தாள்.

"ஓ, அந்த திரௌபதியா? தெரியுமே" என்றார். மைத் முந்திரிப்பருப்பு தின்னும் விதத்தை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தலை சுற்றியது. சட்டென்று அவள் கையைப் பிடித்து நிறுத்தி, "முந்திரிப்பருப்புல டென்னிஸ் விளையாடாதம்மா. தலை சுத்துது. அழகா இந்தமாதிரி ஒண்ணொண்ணா எடுத்து வாயில போட்டு சாப்பிடேன்? நல்ல பெண் இல்லே, சொன்னா கேக்கணும்" என்றார்.

"ரைட். அந்த திரௌபதியைப் பத்தி என்ன நினைக்கிறீங்க அங்கிள்?"

"திரௌபதியைப் பத்தி நான் நினைக்கறதே இல்லியே?"

மறுபடியும் கிளி ஜோசியனை நினைத்துக் கொண்டார் அன்பு. ஸ்காச்சை எடுத்தார். தயிர்வடையை மைத் பக்கம் நகர்த்தினார். "சிங்காரம், இன்னொரு ப்ளேட் கொண்டா" என்றவர் மைத்தைப் பார்த்து, "ஏன் திடீர்னு திரௌபதியைப் பத்திக் கேக்குறே? ஏதாவது பரீட்சையா?"

"இல்லே, அஞ்சு பேரைக் கல்யாணம் செஞ்சவளாச்சே பரவாயில்லையானு கேட்டேன்"

"ஏம்மா, அந்த திரௌபதி அஞ்சு பேரை கட்டினா என்ன அம்பது பேரைக் கட்டினா என்ன? அதைப் பத்தி விவாதம் செய்யவா இங்கே வந்து முந்திரிபருப்பு கேச் விளையாடுறே?"

"நான் ரெண்டு பேரைக் கல்யாணம் செஞ்சுக்கலாமானு பாக்குறேன், அதான்" என்றாள் நிதானமாக.

அப்போது விழுங்கிய விஸ்கி தொண்டையில் குத்திப் புரையேற, அன்புமல்லி இருமித் தள்ளினார். "என்னம்மா சொல்றே?"

"ஆ..மாம் அங்கிள்.." என்று கொஞ்சினாள். "நான் ரெண்டு பேரைக் காதலிக்கிறேன். ரெண்டு பேரையுமே பிடிச்சிருக்கு. அதான் என்ன செய்யுறதுனு தெரியலே"

"அவங்க ரெண்டு பேர் கிட்டேயும் இதைச் சொல்லுறது தானே?"

"என்னைப் போல பரந்த மனப்பான்மை அவங்களுக்கு இல்லின்னா? ஏடாகூடமா சொல்லி ரெண்டு பேரையும் இழந்துடக்கூடாதே? அதான் என்ன செய்யறதுனு உங்க கிட்டே ஐடியா கேக்க வந்தேன்"

அன்புமல்லியின் ரத்த அழுத்தம் 150/90ஐத் தொட்டது. மைத்தை அடித்து வளர்க்காத கேகேயை மனதுள் திட்டினார். "ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கப் போறியா? அது சட்ட விரோதமாச்சே? ஒரு பொண்ணு எப்படிம்மா ரெண்டு ஆம்பிளங்களைக் கல்யாணம் கட்டுறது?"

"பின்ன ஒரு ஆணா ரெண்டு ஆம்பிளங்களைக் கல்யாணம் கட்ட முடியும், என்ன அங்கிள் நீங்க? ஆக்சுவலி.. அதுவும் பாசிபிள் தான். வை நாட்?.."

"என்னவோமா.. என்னை மாதிரி கை நாட் ஆசாமிங்களுக்கு இந்தக் வை நாட் புரியுறது கஷ்டம் தான்.. இந்தக்காலம் ரொம்ப மாறிட்டுது"

"அந்தக்கால திரௌபதிய மறந்துட்டீங்களே அங்கிள்? மிசஸ் தருமன், மிசஸ் பீமன், மிசஸ் அர்சுனன் அப்புறம் மத்த ரெண்டு பேர் பேரு மறந்துடுச்சு.. அவங்களுக்கும் திரௌபதி தானே மிசஸ்?"

"கதைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லியா? சும்மா வெளயாடதம்மா.. ரெண்டு பேர்ல ஒருத்தனை கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா இரும்மா. குறும்புக்கா..ஆரி, வெளயாட்டைப்பாரு"

"உண்மையாத்தான் சொல்றேன் அங்கிள். நீங்கதான் எனக்கு அவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செஞ்சு வைக்கணும். இல்லின்னா காதல் சோகம் தாளாம உயிரை விட்டுறுவேன். அப்புறம் அந்தப் பாவம் உங்களுக்குத் தான் வரும்" என்றாள்.

"காதல் சோகமா?"

"ஆமாம் அங்கிள். அதும் டபுள் சோகம். ரெண்டு காதல் இல்லியா?"

"சரியா போச்சு. இந்த மாதிரி உருப்படாத வேலைக்கெல்லாம் நானா கிடைச்சேன்? ரெண்டு காதல் எல்லாம் வேண்டாம், இந்தா, என்னோட ரெண்டு தயிர்வடையும் சேத்து நிம்மதியா சாப்பிட்டு வீடு போய்ச் சேருமா" என்றார் எரிச்சலுடன்.

விசும்பினாள்.

"ஏம்மா.. தயிர்வடை காரமா? பச்சை மிளகாயக் கடிச்சிட்டியா?"

"ஹ்ம்..ஹ்ம்..ஹ்ம்.. எங்கப்பா சாவுறப்போ அவர்கிட்டே நீங்க கொடுத்த சத்தியத்தை மறந்துட்டு பேசறீங்களே அங்கிள்? எங்கப்பா ஆவி இப்போ என்ன துடி துடிக்குதோ?"

"சுச்சு போட்டாப்புல அழுவுறீங்கப்பா... என்னம்மா இது.. நிறுத்து.. பொது இடம் பாரு..."

"ஹ்ம்ம்ம்ம்ம்.. எங்கப்பா ஆத்மா சாந்தியடையாம சுத்திட்டிருக்கணும்னு நினைக்கறீங்க.." சிணுங்கினாள்.

"சரி.. சரி.. அழுகையை நிறுத்து முதல்ல"

"அப்ப என் விருப்பத்தை நிறைவேத்தி வைங்க" என்றபடி முந்திரிப்பருப்பை இரண்டிரண்டாக மேலே எறிந்து வாயில் பிடிக்கத் தொடங்கினாள்.

"ஏம்மா, ரெண்டு புருசன்னா என்ன ரெண்டு முந்திரிப்பருப்பா, இப்படி விளையாட்டா போட்டுப் பிடிக்க? வாழ்க்கைப் பிரச்சினைமா, யோசிச்சுப் பாரு. உங்கப்பா கிட்டே உன்னைக் காப்பாத்துறதா வாக்கு கொடுத்தேன் சரி, அதுக்காக நீ கிறுக்குத்தனமா என்ன செஞ்சாலும் பொறுக்கணுமா? இதெல்லாம் விளையாட்டில்லே. வினையாயிடும். வெயில்லே அதிகமா அலையாம வீட்டுக்குப் போ" என்றார்.

"அதெல்லாம் முடியாது அங்கிள். நீங்கதான் எனக்கு இப்போ அப்பா அம்மா எல்லாம். உங்க அனுமதியோட கல்யாணம் செஞ்சுக்குவேன். ரெண்டு பேர் கிட்டேயும் விவரத்தை சொல்லி ரெண்டு பேரையுமே கல்யாணம் செஞ்சு வையுங்க."

"நானா? அதெப்படி? அவங்க யாருனு கூட எனக்குத் தெரியாதே?"

"அதனால தான் ரெண்டு பேரையும் இங்கே வரச்சொல்லியிருக்கேன்.. உங்களோடப் பேசச் சொல்லியிருக்கேன்"

திடுக்கிட்டார் அன்புமல்லி. 'இதென்ன இருபத்தேழாவது திருப்பமா இருக்குதே இன்னிக்கு?' என்று நினைத்தார். "யாரவங்க, ரெண்டு பேர்? எங்க இருக்காங்க?"

"அங்கிள்... இன்னும் அரை மணி நேரத்துல வருவாங்க.. தே போத் ஆர் மை டியர் லவர்ஸ்.. நீங்கதான் எப்படியாவது என்னோட ஆசையை நிறைவேத்தணும்..அவங்களைக் காதலிக்குறதா தனித்தனியா சொல்லியிருக்கேன். ஒருத்தருக்குத் தெரியாம இன்னொருத்தனை லவ் பண்றேன். ஆனா ரெண்டுமே டிவைன் லவ் அங்கிள். நீங்களே ஏதாவது ஐடியா யோசிச்சு அவங்க கிட்டே உண்மையைச் சொல்லுங்க" என்றாள்.

தேவைக்கதிகமாகச் சுதந்திரம் கொடுத்துப் பெண்ணை வளர்த்து விட்ட நண்பன் கேகேயை மறுபடி மனதுள் திட்டினார் அன்புமல்லி. 'டேய்.. உன் ஆத்மாவுக்கு சளி பிடிக்கட்டும்'. "என்னம்மா இது, விளையாட்டு?" என்ற அன்புமல்லியின் குரலில் கோபம் தொனித்தது. "யார் அவங்கனு சொல்லித் தொலை"

"ரெண்டு பேரையும் உங்களுக்குச் சின்ன வயசுலந்தே தெரியும், அங்கிள்" என்றாள்.

"சின்ன வயசுலந்தா?"

"அதாவது அவங்களோட சின்ன வயசுலந்துனு சொன்னேன். உங்களுக்குத்தான் இப்போ போவுற வயசாயிடுச்சே அங்கிள்?" என்றாள்.

"நீ குடுத்த ஷாக்குல போனாலும் போயிருவேன்.. அதை விடு, யார் அவுங்கன்னு சொல்லு.."

"ஜோதி ஆன்ட்டி பையன் ஜே, சந்தானம் அங்கிள் மகன் வாசு" என்றாள்.

"இதென்ன.. விஸ்கியா வெயிலா வயசா.. என்ன கண்றாவியோ தெரியலே, ரெண்டு காதும் சரியா கேக்க மாட்டேங்குது" என்ற அன்புமல்லி, குடைந்து கொண்டார். "ஜோதிக்கா பையன் ஜே, சந்தானம் புள்ளை வாசுனு சொன்னாப்புல கேட்டுச்சுமா.."

"அவுங்களே தான்"

தயிர்வடையைக் கடிக்காமல் அது இருந்த நாக்கைக் கடித்துக் கொண்ட அன்புமல்லி இடிந்து உட்கார்ந்தார். கெட்டக்கனவிலிருந்து மீண்டது போல் மிரண்டு விழித்தார். வாழ்க்கையில் 'அறவே பிடிக்காதவை' வரிசையில் டி.ராஜேந்தர் திரைப்படம், இந்துஸ்தானி இசை, விளக்கெண்ணெய்க்கு அடுத்தபடி ஜோதிக்கா, சந்தானம் உறவுகளை வைத்திருந்தார். சிறு வயதில் மதுரையருகே சில வருடங்கள் வளர்ந்த போது, ஜோதியும் சந்தானமும் அவருடன் ஒரே பள்ளியில் படித்த அக்கம்பக்கப் பங்காளிகள். ஒரு முறை 'ஐ ஸ்பை' விளையாடுவதாகச் சொல்லிப் பள்ளிக்கூடக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்று, அன்புமல்லி எண்ணத் தொடங்கியதும் அவர்கள் இருவரும் சைக்கிளில் ஏறி வீடு சேர, அவர் மட்டும் தேடித்தேடி அலைந்து வீட்டுக்கு நடந்து வந்தது நினைவுக்கு வந்தது.

நடுங்கினார்.

வளர்ந்த ஜோதிக்கா சந்தானத்தின் பிள்ளைகள் அவர்களுடைய ராடசசக் குணத்தை அப்படியே கொண்டிருந்தார்கள். அன்புமல்லி லன்டனிலிருந்து திரும்பியதும் ஒரு முறை ஜோதிக்கா வீட்டுக்குப் போயிருந்தபோது அவளுடைய ஐந்து வயது மகன் ஜே, அவரை நிற்க வைத்து இங்கே அங்கே நகர முடியாமல் ஒரு மணி நேரம் போல் அவரைச் சுற்றிச் சுற்றி அதிவேகமாக ஓடியது நினைவுக்கு வந்தது. பிறகு ஜோதி வந்ததும், "அம்மா, மாமா என்னிய நல்லா முதுகுல அடிச்சுட்டாங்க" என்று பொய் சொல்லி அதிரவைத்தது நினைவுக்கு வந்தது. "ஏண்டா அப்படிப் பொய் சொல்லுறே?" என்று தனியாக அவனிடம் கேட்ட போது, "நீ தினம் எனக்கு நாலணா தந்தா சும்மா இருப்பேன். இல்லே இனிமே என்னை அடிச்சதாவும் உதைச்சதாவும் மூக்குல குத்தினதாகவும் சொல்லுவேன்" என்றபடி தன்னைத்தானே மூக்கில் குத்திக்கொண்டு "அம்மா..ஆ" என்று அலறியபடி ஜோதிக்காவைத் தேடி ஓடிய ஜேயின் சதிகாரத் துணிச்சலுக்கு அடிபணிந்தது நினைவுக்கு வந்தது.

மிக நடுங்கினார்.

சந்தானத்தின் தங்கை திருமணத்துக்காக நெய்வேலி சென்றபோது, முதல் நாள் எக்கச்சக்கமாக எதையோ சாப்பிட்டு வாயுத்தொல்லை தாளாமல் தவிக்கையில் அருகிலிருந்த சந்தானத்தின் ஐந்து வயது மகன் வாசு அவர் அருகே வந்து, மிக மெதுவான குரலில், "மாமா, நீங்க சத்தம் போடாம் குசு விடுறது எனக்குத் தெரியும்" என்றான். அதிர்ச்சியில் அசடு வழிந்த அன்புமல்லி சட்டென்று அடுத்த இருக்கைக்கு நகர்ந்தார். வாசு உடனே "அன்பு மாமா ஒவ்வொரு நாற்காலியா குசு விட்டு விட்டு எழுந்து எழுந்து போறாங்க.." என்றுச் சத்திரத்தில் இருந்த ஒவ்வொருவரிடமும் சொல்லத் தொடங்க, அந்த வரிசையிலேயே யாரும் உட்காராமல் அவரை எல்லாரும் வெறுத்து முறைக்க, வாசுவுக்குப் பயந்து சத்திரத்தை விட்டு ஓடியதும், அதற்குப் பிறகு எந்தக் குடும்பக் கல்யாணத்துக்கும் பயந்தபடி போய் வந்ததும் நினைவுக்கு வந்தது.

மிக மிக நடுங்கினார்.

"என்ன அங்கிள்.. உக்காந்துகிட்டே செல்லாத்தா மாரியாத்தா டேன்ஸ் ஆடுறீங்க?" என்றாள் மைத்.

மிச்சமிருந்த விஸ்கியை எடுத்துக் குடித்தார். முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

"அந்தச் சண்டாளனுங்க.. உனக்குக் காதலிக்க வேறே யாரும் கிடைக்கலியா? அதுவும் ரெண்டு பேத்தையும் காதலிக்கறதா சொல்றியே? நியாயமா? அவங்க எங்கே இங்கே வந்தாங்க?"

"அங்கிள், என் லவர்ஸை அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க, எனக்கு கோபம் வரும்" என்றாள் மைத் செல்லமாக. "ரெண்டு பேரும் சென்னைல தான் இருக்காங்க. விப்ரோவிலும் அக்செஞ்சரிலும் வேலை பாக்குறாங்க. இப்போ வந்துருவாங்க. பேசி ஒரு முடிவுக்கு வந்து என் கிட்டே சொல்லுங்க" என்றாள். "உங்களைத்தான் நம்பியிருக்கேன்" என்றவள், எழுந்து நொடிகளில் காணாமல் போனாள்.

அதிர்ச்சியிலிருந்து மீளக் கண்களை மூடிப் பெருமூச்சு விட்டார் அன்புமல்லி.

    கண் திறந்த போது எதிரே ரகு உட்கார்ந்திருந்தான். "என்ன சார், தியானம் செய்றீங்களா?" என்றான்.

"அது ஒண்ணு தான் குறை. ஆமா, நீ என்ன திடீர்னு காணாம போறே, திடீர்னு வர்றே.. சாமியா பூதமா?"

"இப்ப உங்ககூடப் பேசினாளே அந்தப்பொண்ணு.. அவ பேர் என்ன சார்?"

"ஏம்பா?"

"அவதான் என்னோட பார்க்கிங் லாட் பைங்கிளி. உங்களை அங்கிள்னு சொன்னாளே? எப்படியாவது என்னை அறிமுகம் செஞ்சு வைங்க சார்"

"நாங்க பேசினத ஒட்டு கேட்டியா?"

"தேவையில்லே.. அவ குரல் எத்தனை கணீர்னு ஒலிக்குது சார்!"

"கணீரா? சரியாப்போச்சு போ. டெலிபோன் கம்பெனிக்காரங்களுக்கு அவளைக் கண்டாலே ஆவாதுபா. டில்லிலே இருக்குற சித்தப்பாவோட போன் இல்லாமலே வடக்குப் பக்கமா உக்காந்து பேசுவானா பாத்துக்க.."

"ஹிஹி.. தமாஷ் சார் நீங்க.. அவ பேர் என்ன சார்?"

"மைத்" என்றார். "மைதிலி என்கிற பேரைச் சுருக்கிட்டா, உன்னைப் போலத்தான்"

"சார்!" என்று அன்புமல்லியின் காலில் விழுந்தான் ரகு. "எப்படியாவது எங்களைச் சேத்து வைங்க சார். இது ஒரு சகுனம். செய்தி. என் பேரு ரகு, அவ பேர் மைதிலி. நானும் சுருக்கிட்டேன், அவளும் சுருக். என்ன பொருத்தம் பாருங்க சார்! என்னைப் பத்தின விவரம் எல்லாம் சொல்றேன். உங்க மைதிலியை மைடியரா காப்பாத்துவேன் சார். ப்லீஸ், எங்களைச் சேர்த்து வையுங்க" என்று கெஞ்சினான்.

"எழுந்திரப்பா.. இதெல்லாம் என் கையில் இல்லை" என்ற அன்புமல்லி அவனை எழுப்பினார். "இதோ பாருப்பா ரகு, அவ ஏற்கனவே இன்னொருத்தனைக் காதலிக்கறா" என்றார்.

"ஒருத்தனை இல்லே ரெண்டு பேரை"

"எல்லாத்தையும் கேட்டியா?"

"கணீர் கணீர்"

"அப்புறம் ஏம்பா என் காலில் விழறே?"

"நீங்க மனசு வச்சா முடியும். நீ காதலிப்பவளை விட உன்னைக் காதலிப்பவளை நம்புனு பொன்மொழி இருக்கு சார்.."

"ஆட்டோல படிச்சியா?"

"ஆமா சார்"

"இதோ பாரு.. இன்னொரு தடவை பொன்மொழினு எதுனா சொன்னே, பொல்லாதவனாயிடுவேன்.."

"அட கேளுங்க சார்.. நான் அவளை யுகம் யுகமா, அட்லீஸ்ட் பத்து நிமிசத்துக்கு மேலா, காதலிக்கிறேன் சார். ஆனா அவ காதலிக்குற ரெண்டு பேரும் அவளை பத்து நொடியாவது காதலிக்குறாங்கனு எப்படிச் சொல்வீங்க?"

"நல்லா கேட்டே, ரகு" என்று அன்புமல்லி வியந்தக் கணத்தில், அவர் எதிரே இரு வாலிபர்கள் வந்தமர்ந்தனர்.


வளரும் >>


நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்புமல்லியை அழைத்து வந்திருக்கிறேன். பழைய அன்புமல்லிக் கதைகளுக்கு:
1. கடத்தல் கல்யாணம்
2. காசிருந்தால் கல்யாணம்
3. மல்லி கடாட்சம்

21 கருத்துகள்:

 1. என்னாகும்னு சஸ்பென்ஸ் வெச்சு முடிச்சுட்டீங்க. சீக்கரம் அடுத்த பாகம் எழுதுங்க சார். மைதிலி ரகு பேர் பொருத்தம் நல்லாவே இருக்கு அவனே சொன்னது போல் ..:)

  பதிலளிநீக்கு

 2. இந்த ஒரு கதையை முதலில் ஜீரணிக்க வேண்டும். பிறகு படிக்க வேண்டும் பழஒய அன்பு மல்லிக் கதைகளை. காதல் அன்பு எல்லவற்றையும் ஒரு குழப்பமான பார்வையில் அணுகுகிறீர்கள் என்று தோன்றுகிறது. எ குட் டைம் பாஸ்.

  பதிலளிநீக்கு
 3. சுவாரஸ்யம்
  இடையிடையே வரும் ஹாஸ்யம் அற்புதம்
  இன்னொருமுறை படிக்கத் துவங்குகிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. சுவாரஸ்யமாக இருந்தது... தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. அன்புமல்லி! வம்புல மாட்டிகிட்டு இருக்கார் போலவே!

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லாஅக்டோபர் 16, 2012

  அன்புமல்லி சார், வேர்கடலை சங்கம் என்றாலே சுவரசியமாதான் இருக்கும்னே படிக்க ஆரம்பிச்சேன். ரொம்ப சுவாரசியமாவும், நகைச்சுவயாவும் இருக்கு.
  சிலபேர் முகத்தை பாத்தாலே எல்லாத்தையும் சொல்ல தோணும். உங்க அன்புமல்லி சார் கேரக்டரை நிஜத்துல பாக்கணும்னு தோண வைக்கறது உங்க எழுத்து.
  அன்புமல்லி சாரும், ரகுராமும் பேசிக்கறத படிக்கறபோது எனக்கு பாலையாவும் நாகேஷும் பேசிக்கற மாதிரி இருக்கு. நிறைய வரிகள் வாய்விட்டு சிரிக்க வைத்தது.
  //"இதோ பாரு.. இன்னொரு தடவை பொன்மொழினு எதுனா சொன்னே, பொல்லாதவனாயிடுவேன்.. // நெனச்சு நெனச்சு சிரிக்க வைத்த வரி.

  கதை இனி எப்படி தொடரும்னு ரொம்ப எதிர்பார்க்க வைக்கறது. அடுத்த பதிவு வரும்போது முதல்ல முடிவை படிச்சுடணும். அப்பதான் ஒரு படபடப்பு இல்லாம கதையை நிதானமா ரசிச்சு படிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லாஅக்டோபர் 17, 2012

  கதை ஓகே. அங்காங்கே பாடல்கள் மிஸ்ஸிங்.
  மைத் இன்ரெடக்ஷ்சன் சீன்ல சாமுராய்ங்கர படத்துல வரும் "ஒரு நதி ஒரு பெளர்னமி ஒரு ஓடம் என்னிடம் உண்டு" சாங் சர்வ பொருத்தமா இருக்கும். அதுவும் நிதானா.. அய்யோ நானில்லை என்றவரிகளுக்கேற்றா மாதிரி.

  //வளர்ந்த ஜோதிக்கா சந்தானத்தின் பிள்ளைகள் அவர்களுடைய ராடசசக் குணத்தை அப்படியே கொண்டிருந்தார்கள். //
  டோன்ட் வொரி இவாளுக்கு தேவகுணத்தில் பெண்பார்க்கலாம். இவா டுயட் பாடினா "அழகான ராட்ஷஷியே"

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லாஅக்டோபர் 17, 2012

  //ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர்//
  அரைகுறை முதியோர் சங்கத்தின் சார்பாக இந்த சின்னப்பையனை வன்மையாக கண்டிக்கிறேன்.

  முப்பத்தைந்து வயதினர் சங்கத்தின் சார்பாக இந்த சின்னப்பையனை வன்மையாக கண்டிக்கிறேன்

  சீதைக்கேற்ற ராமன் கதை தெடரட்டும் வாழ்த்துக்கள்.

  கோபால் -
  கும்பகோணம்

  பதிலளிநீக்கு
 9. படிக்க ஆரம்பிச்சா அப்படியே கட்டி இழுத்துக்கிட்டு வந்து வளரும் வரை வந்துடுறீங்க... அன்புமல்லி சார் நடுங்கி நடுநடுங்கி நடுநடுநடுங்கியிருக்கிறார். என்னாவதுன்னு பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 10. இந்த வாரம் இருந்த சூழ்நிலையில் படிக்க ஆரம்பித்ததிலிருந்து வாய் விட்டு நிறைய இடங்களில் சிரிக்க முடிந்தது.

  இரண்டாவது தடவைக்குப் பின் இன்னொரு தடவையும் வாசிக்க நேர்வது அடிக்கடி நடப்பதில்லை.

  ராக்ஷஸன்யா நீர் அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 11. //காலம்ன்றது நாம தீர்மானிக்கிற அறிவுப் பரிமாணம். ஆனா காதல்ன்றது நம்ம யாராலயும் தீர்மானிக்க முடியாத ஆன்மப் பரிமாணம். //

  //என் இருண்ட மனசுல பத்து சூரியனைப் பத்த வச்சுட்டுப் போயிட்டா சார்"//

  //என்னை மாதிரி கை நாட் ஆசாமிங்களுக்கு இந்தக் வை நாட் புரியுறது கஷ்டம் தான்..//

  Wonderful!

  பதிலளிநீக்கு
 12. அன்புமல்லிக் கதைகள் என்றால் காதல், சோகம், நகைச்சுவை கலந்த கலவையாக இருக்கும். மேலும் தொடர்ந்து படிக்க ஆவல். தயிர் வடை, வறுத்த முந்திரிப்பருப்ப்பின் வர்ணனை அப்படியே சாப்பிடனும் போல் இருக்கு.

  பதிலளிநீக்கு
 13. இதெல்லாம் விளையாட்டில்லே. வினையாயிடும்

  பதிலளிநீக்கு
 14. ஜே .. வாசு குறும்பு இல்லை இல்லை குசு...ம்பு படித்து அடக்க முடியாமல் சிரித்தேன்.
  புற உலகை மறக்கச் செய்யும் எழுத்து உங்களுடையது.

  பதிலளிநீக்கு
 15. தலைப்பில் தொடங்கியது மைத் மை டியர் அப்டின்னு…. கச்சேரி களை கட்டத்தொடங்கியது அப்பத்தான்.. அப்பவே தான்…. அதெப்படி வேர்க்கடலை சங்கத்தில் அன்புமல்லி செல்வநாயகத்தை சேர்க்கத்தோன்றியது? அன்புமல்லியின் அவஸ்தைகள் ஊடே நாமும் பயணிக்கிறோம் கதை படித்தபடியே….

  ஆரம்பத்துல இருந்து கதை முழுக்க படிச்சிட்டேன்… ஆனா ரசித்து பின்னூட்டமிட அந்தந்த பகுதியிலேயே இடவேண்டும் என்று விரும்பியதால் இங்கே தொடர்கிறேன்பா….


  அசகாய சூரர் அப்பாதுரையின் ஒருமனசு கதை படிச்சு எப்படி உருகின மனதோடு அந்த தாக்கம் ரொம்ப நாட்கள் மனதில் இருந்ததோ அதேபோல எண்ட்டயர்லி டிஃபரண்ட் ட்ராக்ல மறுபடி ஒரு காதல் கதை….

  சிரிச்சு சிரிச்சு சிரிச்சு…. மாளலை அப்பாதுரை… எப்படிப்பா இப்படி எல்லாம் சிந்திக்கவும் சீரியசா சிரிக்கவும் வைக்கும்படி எழுத முடிகிறது உங்களால் மட்டும்??

  பதிலளிநீக்கு
 16. சிங்காரம் கேரக்டர் இந்த கதையின் தூண் என்று சொல்லலாம் என்னே பணிவு என்னே பணிவு….

  இன்னைக்கு ஸ்பெஷல் தயிர்வடை, உருளைக்கிழங்கு பஜ்ஜி , பால்போளி ஆஹா படிப்போருக்கும் சாப்பிடனும் போலிருக்கேன்னு சொல்லவைக்கும் டிஷஸ் அசத்தல்….
  தயிர்வடை மேலே போட இத்தனையா ஐயோ எனக்கு தெரியாம போச்சே… என்னமா இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்கிறார் மனுஷன்…. சரியான சாப்பாட்டுராமனா இருப்பாரோ?
  அன்புமல்லி கேரக்டருக்கு

  செல்வநாயகம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பொருத்தமான ஆளு… அப்பாதுரை உங்க கதை படிக்கும்போது மட்டும் எனக்கு இப்படி யோசனை வந்துட்டே இருக்குப்பா… இந்த கேரக்டருக்கு எந்த கதாநாயகன் நாயகி பொருத்தமா இருப்பார் என்று… செல்வநாயகன் தத்தக்கா பித்தக்கான்னு உளறுவதும்… அப்டியே பிரகாஷ்ராஜ் இந்த ரோலில் இருந்தால் எப்படி இருக்கும்னு நினைச்சுபார்த்து சிரிப்பு அதிகமானது….

  கிளிஜோசியக்காரன் செல்வநாயகத்தின் வாழ்க்கையில் என்ன திருப்பத்தை கொண்டு வரப்போறாரோன்னு படிக்கும் வாசகர்களுக்கும் டென்ஷனை உண்டுபண்ணுவது போல ஒரு கேரக்டர் அடிக்கடி தெரிந்து மறைவது அதாம்பா ரகு….. ரகுராம்….
  குடிகாரன் பேச்செல்லாம் விடிஞ்சா போச்சுன்னு சிங்காரத்துக்கு தெரியும்போல அதான்..

  என் சொத்தெல்லாம் உனக்கு எழுதி வைக்கப்போறேன்னு அன்புமல்லி சொன்னதும் சிங்காரன் பெரிய சந்தோஷமின்னல் எல்லாம் கண்ல காட்டாமல் சரிங்க ஐயா அப்டின்னு சொல்லிட்டு நகர்கிறார் (எத்தனைப்பேர் இப்படி சொல்லி இருப்பாங்கல்ல)

  பதிலளிநீக்கு
 17. இன்னைக்கு ஸ்பெஷல் தயிர்வடை, உருளைக்கிழங்கு பஜ்ஜி , பால்போளி ஆஹா படிப்போருக்கும் சாப்பிடனும் போலிருக்கேன்னு சொல்லவைக்கும் டிஷஸ் அசத்தல்….


  தயிர்வடை மேலே போட இத்தனையா ஐயோ எனக்கு தெரியாம போச்சே… என்னமா இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்கிறார் மனுஷன்…. சரியான சாப்பாட்டுராமனா இருப்பாரோ?
  ரசனையா ரசிச்சு ரசிச்சு ரகு சொல்றப்ப நமக்கே மனசு இழைகிறதே…. அப்ப அன்புமல்லிக்கு எப்படி இருந்திருக்கும்? பத்து சூரியனை பத்தவெச்சுட்டு போயிட்டாளாம்….

  நகைச்சுவை கூட ரசிக்கும்படி தருவது ஒரு கலை…. அது அப்பாதுரைக்கு அத்துப்படி…. “ செருப்பு பிஞ்சிடும்” நு கூட யாராவது பெயர் வைப்பாங்களா சார்? ரசிக்கவைத்தது….காலத்தை தீர்மானிக்கிறது அறிவுன்னா காதலை தீர்மானிக்கிறது ஹுஹும் காதல்னா யாராலயும் தீர்மானிக்கமுடியாத ஆன்ம பரிணாமமாமே… ரசித்தேன்பா….

  பதிலளிநீக்கு
 18. ரகுக்கு மட்டும் இருநூறு ரூபாய்…. சிங்காரத்துக்கு மட்டும் இருபது ரூபாயா? கிளிஜோசியக்காரனுக்கு படுமோசம் ரெண்டே ரூபாய் தான். என்னது இது… செல்வநாயகம் கிட்ட சொல்லனும்…

  கஷ்டப்படறவங்களுக்கு…. தானே நிறைய தரனும்… அதான் கிளிஜோசியக்காரன் சரியா மாட்டவெச்சுட்டான் மைதிலிக்கிட்ட… சாரி சாரி மைத் கிட்ட… என்னது இது… டெலிபோன் மணிபோல் சிரிப்பது இவளான்னு பாடமுடியாது மைத்தை பார்த்து…. ஏன்னா இத்தனை கணீர்னு பேசுறாளே… என்னப்பா இது அக்கப்போரா இருக்கு… வரும்போதே இப்படி ஒரு அவஸ்தையான கண்டிஷனோட வரா பொண்ணு?
  செல்வநாயகம் கதை அம்போ தான்….

  மனசுக்குள்ள பொண்ணை இப்படி அடிக்காம வளர்த்தியேன்னு திட்றது ரொம்ப ரசிக்கவைத்தது…ஹாஹா ரேடியோவில் வைத்தது போல் ஒலிக்கட்டுப்பாட்டு விசை மனிதருக்கு வைக்கலையாமே  ஹாஹா… மைத் பாடு கொண்டாட்டம். செல்வநாயகம் பாடு திண்டாட்டம்…
  என்னது இது….. திரௌபதி ஸ்வாமி… அதை வெச்சு தானும் ரெண்டு பேரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அழிச்சாட்டியம் செய்வது வேலைக்கு ஆகும் விஷயமா என்ன? மைத் பண்றது ஹுஹும் சரியில்லையே….

  ஆட்டம் இப்ப தான் களைக்கட்டுது.. இந்த அக்கப்போரில் மாட்டிக்கொண்டு தேமேன்னு இருந்த செல்வநாயகத்துக்கு பீதிய கெளப்பிவிட்டுட்டா மைத்….
  அதுவும் சின்ன வயசு வாசுவும் ஜேவும் செல்வநாயகத்தை படுத்தும் பாட்டை மனுஷன் இப்ப கூட நினைச்சு கதி கலங்குறார்னா எந்த அளவுக்கு படுத்தி இருந்திருக்கும் பிள்ளைகள்…
  சின்னவயசு குழந்தைகளின் சேஷ்டைகளை அப்படியே கொஞ்சம் கூட பிறழாமல் அவர்கள் மனநிலையில் இருந்து வடித்தது போல் இருந்தது வரிகள் அப்பாதுரை ஹாட்ஸ் ஆஃப் பா….


  மைத் பண்ணின கலாட்டாவில் அன்புமல்லி கதி என்னாகுமோன்னு படிக்கும் எங்களுக்கும் டென்ஷன் கூடுகிறது… ஹுஹும் பிபி கூடுகிறது….இந்த ரகு வேற இடை இடையே அன்புமல்லியை தொல்லைப்பண்ணிக்கிட்டு… சிங்காரம் தான் அமைதியா அன்புமல்லியின் அவஸ்தைகளை பார்த்துட்டு இருக்கார்…

  எழுத்துநடை க்ளாசிக் அப்பாதுரை… உங்க ஒரு மனசு கதை படிச்சப்பவும் இதை படமாக்கினால் எப்படி இருக்கும் அப்டின்னு நினைச்சது போலவே இந்த மைத் மை டியர் கதை படிக்கும்போதும் உணர்கிறேன்பா…

  மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரசிக்கவைத்த கதைத்தொடருக்கு….

  பதிலளிநீக்கு
 19. அப்பாதுரை! இப்படி வாய்விட்டு சிரித்து பல நாட்கள் ஆச்சு. What a flow?! லேட்டா வந்ததுல ஒரு சவுகர்யம்.. அடுத்த தொடருக்கு காத்திருக்க வேணாம் . இப்போ அங்க தான் போய்கிட்டே இருக்கேன் மாமா...

  பதிலளிநீக்கு
 20. இந்த எழுத்தை நான் மிஸ் செய்திருக்கென். இப்பவே அந்த கிளப் போயி எல்லாத்தையும் சாப்பிட ஆசை. இத்தனை பெருக்கும் பதில் கொடுக்கவில்லை யா துரை? நல்ல கற்பனை வளம் சொல்வளம்.கnnnமுன்னே முன்னே நடக்கிற மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு