◄◄   1   2
    கோவில் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களை சிங்காரமும் ரகுவும் தொலைவிலிருந்து அளந்தனர். மைத்தைப் பார்த்ததும் ரகுவின் இதயத்துடிப்பு எழுநூறைத் தொட்டது. ஆரவாரித்த ரகுவை அடக்கினான் சிங்காரம். "தம்பி.. நீங்க இப்ப என் கூட வரக்கூடாது, நீங்க செய்ய வேண்டியது கவனமிருக்கட்டும்.. நானே போய் அந்தப் பொண்ணோட பேசுறேன்.."
"பாத்து பேசுங்க சிங்காரம்.. கொஞ்சம் வல்லினமா பேசினாலும் அவ காது நோகும்.." என்றபடி ரகு வேறு திசையில் கோவிலைச் சுற்றி நடக்கத் தொடங்கினான்.
    "அங்கிள் எங்கே சிங்காரம்? என்னை வரச்சொன்னாரே? மணி மூணாவுது, கோவில் திறக்க இன்னும் ஒரு மணியாவது ஆகும்.. இப்படிக் கழுத்தறுக்குறாரே?" என்றாள் மைத், அருகில் வந்த சிங்காரத்திடம்.
"வருவாரும்மா.. அவரு கார் டைர் பஞ்சராயிடுச்சு.. அதான் உங்களை வெயிட் பண்ணச் சொல்லியனுப்பினாரு.. கூல் ட்ரிங்ஸ் எதுனா வாங்யாரட்டுமா?"
"வேணாம்..."
"அப்ப இங்கயே இருங்க.. நான் போய் ஒரு சோடா குடிச்சுட்டு வரேன்.. தாகம் தாங்கலே" என்ற சிங்காரம் அவசரமாகக் கிளம்பி கோவிலின் பின்புறம் பீச் ரோட் பக்கமாக நடக்கத் தொடங்கினான்.
    அன்புமல்லி தன்னைத் தனியாக வரும்படி மைத் மூலம் சொல்லியனுப்பியதன் காரணத்தை அசைபோட்ட வாசு, பீச் ரோடில் இறங்கிக் கோவிலை நோக்கி நம்பிக்கையோடு நடந்தான். ஒருவேளை தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அன்புமல்லியை என்ன செய்யலாம் என்றுத் தயங்கி யோசித்தான். கையை உடைத்து வயிற்றை நசுக்குவதா அல்லது முதுகை உடைத்துப் பிறகு மூக்கை நசுக்குவதா என்று வரிசையைத் தீர்மானிக்க முடியாமல் தவித்தான். தவிப்பைக் குறைக்க அவசரமாகக் காற்றில் தை க்வான் தோ பழகினான். ஒரு குத்துக்கு இரண்டு பல் விழுந்தால் முப்பத்திரண்டு பல் விழ எத்தனைக் குத்துக்கள் தேவைப்படும் என்ற உபரிக் கணக்கு மனதில் தோன்ற, கைவசம் கேல்குலேடர் இல்லாமல் மிகவும் நொந்து போனான். அமைதிப்படுத்திக் கொள்ள மணல் தரையில் தண்டால் எடுக்கத் தொடங்கினான். பதினேழாவது முறையாக எழும் போது முகத்தில் ஈரமாக ஏதோ உணர்ந்து தலை நிமிர்ந்தான். முகத்திற்கு நேராக முகம் வைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தது ஒரு கரிய நாய். சங்கத்தில் பார்த்த அதே தினேஷ்குமார்.
அடுத்து நிகழ்ந்தவற்றை விவரிக்கப் புலவரின் தமிழ் போதாது.
நரன் ஐயோ எனவில்லை, நாய் வள் எனவில்லை. வாசுவும் நோக்க வைரவரும் நோக்க அங்கே வாய்ச்சொற்கள் பலனிலாது போயின.
கம்பன் வாசுவைப் பார்த்திருந்தால் 'எடுத்தது இற்றது' என்றெல்லாம் எழுதாமல், 'பல் கண்டனன் பாதம் கண்டனன் அன்ன' என்று வாசுவின் வேகத்துக்கு மாற்றுக் குறைவாகவே ராமனின் வில்முறித் திறனை வர்ணித்திருப்பார். புறநானூற்றுப் பட்டினிப் புலவர் யாராவது பார்த்திருந்தால், 'பரியுட னிரியும மரியதுஞ் சரியுமே' என்று புரியும்படி விவரமாகப் பாடியிருப்பார். கண்ணதாசன் பார்த்திருந்தால் 'வாசுக்கென்ன வேலி' என்று பாடியிருப்பார், அல்லது 'கண்ணெதிரே தோன்றிநாய் கடுமுகத்தைக் காட்டிநாய்' என்றும் பாடியிருக்கக் கூடும். வைரமுத்து பார்த்திருந்தால் 'கண்கள் கோப ஜன்னல், கால்கள் ராஜ மின்னல்' என்று பாடியிருப்பார். வாலி பார்த்திருந்தால் 'இட்டாலக்கடி உய்!' என்று பாடியிருப்பார்.
கற்பனைக்குக் கட்டுப்படாதவனாக ஓடத் தொடங்கினான் வாசு. இதைச் சற்றும் எதிர்பாராத நாய், சுதாரித்துப் பாய்ந்து அவனை அதே வேகத்தில் தொடர்ந்தது. ஒரு கணம் நாய் அவனை நெருங்கிக் காலைக் கவ்விடும் போலத் தோன்றும். மறு கணம் வாசு உயரத்தாண்டல் நீளத்தாண்டல் சாதனைகளை வரிசையாக முறியடித்து வாகை சூடுவான். அவன் நோக்கும் காலை நோக்கும் நாயும், நோக்காக்கால் நைசாய் உறுமிப் பாயும்.
பார்த்துக் கொண்டிருந்தப் பொதுஜனம் உற்சாகமடைந்தது. கைகள் தட்டின. உதடுகள் விசிலடித்தன. குதிரைப் பந்தயம் பழகிய ஒரு சிலக் கண்கள், 'இது போட்டோ பினிஷ்' என்று பதட்டப்பட்டன. ஒரு தாடி, 'வெறிநாய் துரத்தினா வடிவேலும் உசைன் போல்டு தான்' என்று சொறிவுக்கிடையே தத்துவம் பேசியது. அருகிலிருந்தக் காக்கிச்சட்டை, 'இதை என் ஆட்டோல எயிதிக்கவா சார்?' என்றது. ஒரு புடவை அருகிலிருந்த சல்வாரிடம், 'இந்த நாய் வாடகைக்குக் கிடைக்குமா தெரியலியே? தீபாவளிக்கு ஊர்லந்து மாமியார் வராங்க' என்று அக்கறையுடன் விசாரித்தது. ஒரு லுங்கி மற்ற லுங்கிகளிடம் 'இன்னிக்கு அந்தாளு கோயிந்தா.. இன்னான்ற நீ?.. கட்னா வெட்டு ராஜா.. கட்னா மூணுக்கு ஒண்ணு.. வெட்னா ஒண்ணுக்கு மூணு.. வை ராஜா வை' என்று உற்சாகமாக ஐந்து ரூபாய் எறிந்து பெட் கட்டியது.
இடையே, திடீரென்றுக் குறுக்கே வந்த நபர் மீது இடித்து விழுந்து புரண்டு எழுந்தான் வாசு. நபரைப் பார்த்ததும் நாயும் நின்றது.
"என்ன தம்பி, இப்படி ஓடியாறீங்க?" என்றார் நபர்.
"யோவ் சிங்காரம்.. நீதான்யா எனக்கு எமன்.. எருமைக்குப் பதிலா நாயோடு சுத்துறே.. நாய்க்கரடி என்னைத் துரத்துறதை இத்தனை நேரம் பாத்துட்டா இருந்தே? உன்னை முதல்ல சுளுக்கெடுக்கணும்"
"ஐயையோ தம்பி.. தெரியாதுங்களே.. மல்லி ஐயாவோட கார் டைரு பஞ்சராயிடுச்சுங்க.. வர லேட்டாவும்னு உங்க கிட்டேயும் மைதிலியம்மா கிட்டயும் சொல்லச் சொன்னாரு.. அவங்க கோவில்ல இருந்தாங்க.. போய் சொல்லிட்டு வரதுக்குள்ள நாய் ஓடிருச்சுங்க.. அதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு உங்களைத் துரத்தவிட்டு என் கிட்டே கொணாந்து சேர்த்ததுக்கு ரொம்ப நன்றிங்க. கஸ்டமரோட நாய்.."
"இப்ப மட்டும் ஏன்யா கரடி ரெண்டடி விட்டு செலயாட்டம் நிக்குது?"
"வசியம் தம்பி, வசியம்"
"வசியமா?"
"தம்பி.. உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். சிறுவசியம் பெருவசியம்னு ரெண்டு இருக்குங்க. நாய் துரத்துதுனு வைங்க. உடனே ஓடக்கூடாது. அதுக்குப் பதிலா நின்னு நிதானமா நாயுருவி இலை, எருக்க இலை ரெண்டையும் கசக்கி நாய் முகத்தில எறிஞ்சீங்கன்னா அந்த வாடையில நாய் அடியெடுக்க முடியாம மயங்கிரும். இது சிறுவசியம்"
"யோவ் சிங்காரம்.. உனக்கு வெங்காயம்னு பேர் வச்சிருக்கணும்யா. இந்த நாயோட பல்லைப் பாத்த பிறகும் பச்சிலை மூலிகைனு பேசுவியாய்யா நீ? அடங்கிடுமோனு உயிரையும் அவுந்துருமோனு பேன்டையும் பிடிச்சுக்கிட்டு நாய்க்குப் பயந்து நானே பேயாட்டம் ஓடுறப்ப, எருக்க இலைக்கு எங்கய்யா போவேன்? நாயுருவின்னா என்னான்னே தெரியாதேய்யா? நின்னு ரெண்டுத்தையும் கசக்கி எறியுற மட்டும், நாய் என்னா பாத்துட்டா நிக்கும்? அப்படியே நீ சொல்றாப்புல கசக்குனா, அந்த வாடையில நானே மயக்கம் போட்டுருவேன்யா. என்னய்யா ரீல் வுடுறே? ஐடியா குடுக்குற மூஞ்சியைப் பாரு. சரி, அது என்னா பெரு வசியம்?"
"இதாங்க" என்று சிங்காரம் தன் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்தான். "தம்பி.. நாய்க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாம நாயைக் கல்லால அடிக்கலாம். ஆனா நாய் நம்மளைக் கல்லால அடிக்க முடியாது. நாய் பல்லைக் காட்டினா நாம பயந்துடறோம். நாம கல்லைக் காட்டினா நாய் பயந்துரும். இந்தாங்க, சும்மா ட்ரை பண்ணுங்க" என்று வாசுவிடம் கல்லைக் கொடுத்தான் சிங்காரம். "சும்மா ஓங்குங்க சொல்றேன்.."
வாசு கல்லெறிவது போல் கை ஓங்கியதும், தினேஷ்குமார் முனகிப் பயத்துடன் அடங்கி உட்கார்ந்தது. "சிங்காரம்! பிரமாதம்யா.. என்னா தத்துவம், என்னா உண்மை, என்னா டெக்நிக்! கல்லைக் காட்டி ஓங்கினதும் அடங்கிடுச்சே? இதான் பெரு வசியமா? தெரியாமப் போச்சே? நீ பெரிய ஆள்யா"
"இதுக்கும் கேக்கலின்னா குறி வச்சு கல்லை எறிஞ்சுருங்க.. ஒண்ணு அடங்கும், இல்லே ஓடிறும். கவலையே படாதீங்க. கடவுள் ஏன் கல்லானான்? நாயை அடிக்கத்தான்" என்றபடி தன் பையிலிருந்து இரண்டு கற்களை எடுத்து வாசுவிடம் கொடுத்தான் சிங்காரம். "கவனம் தம்பி. ரொம்ப நாளா தேச்சு வழவழப்பா வச்சிருக்கேன். என் கண்ணு ரெண்டையும் உங்க கிட்டே ஒப்படைக்கிறாப்புல.. இந்தாங்க.. கைவசம் வச்சுக்குங்க. அவசியமுன்னா ஒரு கல்லை மூக்குலயும், மத்ததைக் கால்லயும் பாத்து அடிங்க. இதப் பாத்தீங்களா..? இது மூக்குல அடிக்க. இந்தா பாருங்க, தட்டையா இருக்குற இந்தக் கல்லு, கால்ல அடிக்கறதுக்காவத் தேச்சதுங்க. வீசினமுன்னா நாலு கால்ல எதுனா ஒரு கால்லயாச்சும் படுங்க.. ஆண்டவன் நாய்க்கு நாலு கால் படைச்சதும் அதுக்காவத்தான்.. இந்தாங்க, பிடிங்க. நீங்க தைரியமா கோவிலாண்ட போய் மைத்தம்மாவோட பேசிட்டிருங்க.. நான் ஐயா வராரானு பாத்துட்டிருக்கேன்"
"சிங்காரம்.. சிங்காரம்.. உன்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்ட இந்தப்பாவியை மன்னிச்சுடு சிங்காரம். நீ ஒப்பற்ற ஞானி சிங்காரம்.." என்று கண்களில் நீர் முட்ட, கற்களை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டான் வாசு. கைக்கு ஒரு கல்லாக எடுத்து இரண்டு கைகளையும் ஓங்கினான். கையிலிருந்தக் கற்களைப் பார்த்த தினேஷ்குமார், தன் வாலைச் சுருட்டி கால் கட்டி முடங்கிக் கெஞ்சலாய் முனகியது. மறுமுறை உயர்த்த, ஏறக்குறைய அழுதது. கற்களைப் பையில் போட்டு, புது நம்பிக்கையுடன் கோவிலை நோக்கி நடந்தான் வாசு.
    கோயிலருகே மைத்தைக் காணாது சுற்றுமுற்றும் பார்த்த வாசு, தொலைவில் அலையருகே மைத் தனியாக அமர்ந்திருப்பதைக் கவனித்தான். வேகமாக அருகே சென்று "மைத்.. உங்கிட்டே முக்கியமா பேசணும்" என்றான். திரும்பியவள் கண்களில் வழக்கமான காதலைக் காணாமல் கோபத்தைக் கண்டவன் நிதானித்தான். "ஏன் ஒரு மாதிரியா இருக்கே?"
"வாசு" என்று அவனைத் தழுவிக் கொண்டாள். பிறகு விலகி, "உனக்குக் குழந்தைகள் பிடிக்குமா?" என்றாள்.
"ஏன் கேக்குறே?" என்றான் வாசு திகைப்புடன்.
மைத் அப்படிக் கேட்டதன் காரணம் வாசுவுக்குத் தெரியாது. அவன் தினேஷ்குமாருடன் ஓடிக்கொண்டிருந்த போது நடந்து முடிந்த நிகழ்ச்சி.
    அவசரமாக வந்த ஜே, தனியாக நின்றுகொண்டிருந்த மைத்தை நெருங்கி "என்ன மைத், எதுக்காக வரச்சொன்னே?" என்றான்.
"நான் வரச்சொல்லலே ஜே, என் அங்கிள் தான் வரச்சொன்னாரு.. அவரைப் பாத்துப் பேசினே இல்லே?"
"ம்" என்றான். "எங்கே அந்த ஆளு? என்ன சொன்னாரு உங்கிட்டே?"
"டயர் பஞ்சராயிடுச்சுனு வர லேட்டாகுமாம். சிங்காரம் இப்பத்தான் சொல்லிட்டு போனாரு.."
"மைத்.. நானே உங்கூட பேசணும்.. அங்க வா.. அலையோரமா மேட்டுல உக்காந்து பேசுவோம்" என்று அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.
இருபது அடி நடந்திருப்பார்கள். திடீரென்று ஒரு சிறுவன் "அப்பா! அப்பா!" என்று கூவிக்கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான். ஏதும் புரியாமல் இருவரும் திரும்பிப் பார்க்க, ஓடி வந்தச் சிறுவன் சட்டென்று ஜேயைக் கட்டிக் கொண்டான். "அப்பா, என்னை விட்டு எங்கப்பா போனே? இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனியே?" என்றான்.
"என்னது? அப்பாவா? யார் அப்பா? யாருக்கப்பா? யாருப்பா நீ? விடுப்பா" என்று ஜே வலுக்கட்டாயமாகக் கால்களை உதறியதில் கீழே விழுந்தான் சிறுவன். எழுந்து மறுபடி அணுகினான். "அப்பா!"
"ஏய்.. யார்பா நீ?" என்று ஜே எரிச்சலுடன் சிறுவனைத் தடுத்தான். அக்கம்பக்கம் பார்த்தான். யாருமில்லை. "அப்பா.. அப்பா!" என்று குதித்தான் சிறுவன். மைத்தைச் சுட்டி, "இது யாருப்பா? புது அம்மாவா?" என்றான். "புது அம்மா.. ஐ.." என்று மைத்தைக் கட்டிக் கொண்டான். "நீ ரொம்ப அழகா இருக்கே, புது அம்மா"
"அடச்சீ அவளை விடுறா.." என்றான் ஜே.
"இரு ஜே. சின்னப் பையன் கிட்டே எரிஞ்சு விழாதே. தம்பி, யாருப்பா நீ?" என்றாள் மைத் அமைதியாக.
"என்னைப் பாத்தா தம்பி மாதிரியா இருக்கு? எம்பேரு மணி. எனக்குப் பத்து வயசு. இது எங்கப்பா. பீச்சுக்குக் கூட்டிவந்தாரு. இதோ வரேனு சொல்லிட்டு ஓடிட்டாரு"
"பல்லை உடைப்பேன்.. யாருடா அப்பா?"
"நீ தான். நீ தான் அப்பா"
"ஐயையோ.. இந்த வயசுலயே இப்படி அடாவடி பண்றானே? மைத்.. இந்தப் பையனை நான் பார்த்ததே இல்லை.."
"நான் ஏன் பொய் சொல்லணும்? பத்து வயசுப் பச்சைப் பிள்ளைக்கு எங்கயாவது அப்பாவைத் தெரியாம இருக்குமா? நீங்களே சொல்லுங்க புது அம்மா"
"பாத்தியா பாத்தியா.. இப்ப உன்னை அம்மான்றான்.. விடாதே இவனை"
மைத் ஜேயை ஆழமாகப் பார்த்தாள். ஜே பதறினான். "மைத்.. சத்தியமா எனக்குத் தெரியாது. அடப்பாவி.. டேய். டேய்.. யாரு பெத்த பிள்ளையோ நீ? பத்து வயசுலயே இப்படி பாதகனா இருக்கியே"
"அப்பா.. என்னை விட்டுப் போகாதப்பா.. தங்கச்சி அழுவுதுபா"
"என்ன.. தங்கச்சியா?" என்றாள் மைத்.
"ஐயோ, அது வேறேயா?" என்றான் ஜே.
"ரெண்டு தங்கச்சி. ரெட்டையாக்கும். ஷீலா மாலா"
"யாரு.. என்ன.. ரெட்டைத் தங்கச்சியா? டேய்.. டேய்.. எத்தினி பேர்டா கெளம்பியிருக்கீங்க?" என்று ஜே குதித்தான்.
"எங்கப்பா உன் தங்கச்சிங்க?" என்றாள் மைத் கனிவுடன்.
"ஷீலா ஆஸ்பத்திரில இருக்கா. நேத்து அப்பா கோவத்துல அவளை அடிச்சுட்டாரு. மண்டை வீங்கியிருக்கு. இப்பத்தான் டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப்போனாரு இந்தப்பா.."
"என்ன.. இந்தப்பாவா? பல்லை உடைப்பேன்"
"அதான் நேத்து ஷீலாவோட மண்டையை உடைச்சுட்டியேப்பா.. இன்னிக்கு என் பல்லை உடைக்கப் போறியா? ஏற்கனவே எனக்கு பல்லு கம்மி.."
"ஆ! இப்படிப் பேசுறானே? ஐயையோ.. எனக்கு எதுவுமே தெரியாது. சனியன். மூஞ்சைப் பாரு"
"உன் இன்னொரு தங்கை மாலா எங்கேப்பா?" என்றாள் மைத் அன்புடன்.
"புது அம்மா. உன் குரல் தேனாட்டம் இருக்கு.. நீ ரொம்ப நல்லவ"
"டேய்.. டேய்.. நிறுத்துடா. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுடா சில்லறை. எங்கடா உன் தங்கை? கதை வுடறான்"
"மாலா.." என்று பையன் கூச்சலிட, அண்மையில் இருந்த ஒரு சில பெண்கள் குழம்பித் திரும்பிப் பார்த்தனர். பையன் தொடர்ந்து கூப்பிட்டான். சில நிமிடங்களில் ஒரு சிறு பெண் கோவிலருகிலிருந்து ஓடி வந்தாள். ஏழெட்டு வயதிருக்கும். "அப்பா.. அப்பா" என்று ஜேயைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் குதித்தாள். "எங்கப்பா போனே? இதோ வரதா சொல்லிட்டு எங்களை அந்தக் கடை வாசல்ல.. எனக்குப் பயமா இருந்துச்சுபா"
"என்னங்கடா.. குடும்பத்தோட கிளம்பிட்டீங்களா? யாருடீ அப்பா?"
"நீ தான். நீ தான் அப்பா"
"சனியங்களா.. எனக்குக் குழந்தைங்கள்னாலே ஆவாது.. அதுவும் உங்களை மாதிரி ஊரை ஏமாத்துற.." என்ற ஜேயின் கால்களைக் கட்டிக் கொண்டாள் மாலா. "அப்பா!" என்று தன் மூக்கை உறிந்து ஜேயின் பேன்டில் துடைத்தாள்.
"ஐயையோ.. புதுப் பேன்ட்ல சளியைத் தடவுதே சனியன்.. எந்திரிடி.. யாருடி நீ?"
"ஜே.. என்ன இது?" என்றாள் மைத் கடுப்புடன்.
"ஐயையோ மைத்.. இந்த சனியனுங்க யாருனே எனக்குத் தெரியாது. இதுக்குத்தான் நான் குழந்தைங்களே வேணாம்னு இருக்கேன். குழந்தைங்களா இதுங்க... ஏய்.. அரை டிகெட்.. நவுறுடி.. உங்கண்ணனை இழுத்துக்கிட்டு எங்கனா ஓடு.. இந்தா அஞ்சு ரூவா.. ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னுங்க போங்க.. ஆளை விடுங்க.."
"அப்பான்னா அப்பா தான்" என்று ஐந்து ரூபாயைப் பிடுங்கிக் கொண்டான் பையன்.
அதற்குள் ஒரு ஜீன்ஸ் பெண் வேகமாக ஓடிவந்தாள். ஜே, மைத் இருவரையும் கும்பிட்டாள். "மன்னிச்சுருங்க.. இதுங்க ரெண்டும் என் பிள்ளைங்க. சினிமால நடிக்கிறாங்க.. குழந்தைங்களை வெறுக்குற அப்பாவோட வசனம் பேசணும்.. டயலாக் ட்யூடர் இப்படி தற்செயலா யாரையாவதுப் பார்த்துப் பேசினா தைரியமா இயல்பா நடிக்க வரும்ணு ஐடியா குடுத்தாரு.. தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்றபடி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனார்.
ஜே நிம்மதியுடன் "அஞ்சு ரூவாய சுட்டுகிட்டுப் போயிட்டான் பாத்தியா மைத்? எப்படியெல்லாம் கிளம்பிடறாங்க நாட்டுல.." என்றான்.
மைத் பதில் சொல்லவில்லை. எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தாள்.
"என்ன மைத்.. பேச மாட்டேங்குறே" என்று பத்து முறை கேட்டதும், மைத் வெடித்தாள். "குழந்தைங்க பிடிக்காதுனு சொன்னியே?"
"ஆமாம்.. என்ன இப்ப?"
"என்ன இப்பவா? உன் உண்மையான குணம் தெரிஞ்சிடுச்சு. குழந்தைங்க பிடிக்காதுன்றத ஏன் மறைச்சே? பச்சப் பிள்ளங்களை சனியன்னு திட்டறப்பவே நினைச்சேன்"
"சனியனைச் சனியன்னு திட்டாம எப்படித் திட்டுறது மைத்? அந்தக் குழந்தைங்களைத் திட்டினதால என் குணம் மோசமாயிருமா? நீ கூடத்தான் என் கிட்டே உண்மையை மறைச்சே.."
"என்ன சொல்றே?" மைத் தீர்க்கமானாள்.
"ரெண்டு பேரைக் காதலிக்கிற உண்மையை"
"அதனால?"
"ஒரு பொண்ணு.."
"ஸ்டாப் இட். என்ன சொன்னே? ஒரு பொண்ணா..? பொண்ணுன்னா அதெல்லாம் கூடாதா? ஆம்பிளங்கனா பரவாயில்லையா? ஷேம் ஆன் யூ" என்று பொரிந்தாள். "நீ சொல்றது சரிதான். உன்னையும் சேத்து காதலிச்சிருக்கக் கூடாது. ஐ டோன்ட் லவ் யூ. கெட் லாஸ்ட்"
"ஐயோ மைத்.."
"போதும் ஜே. எப்படியிருந்தாலும் நாளைக்கு இது நமக்குப் பிரச்சினையா முடிஞ்சிருக்கும். உனக்குக் குழந்தைங்களையும் பிடிக்கலே. பொண்ணுன்னாலும் கீழ்த்தட்டுல பாக்குறே. ப்லீஸ். லீவ் மீ" என்று வேகமாக அலைகளைப் பார்த்து நடந்தாள். சிறிது உலாத்திவிட்டு ஒரு மேட்டில் உட்கார்ந்தபடி அலைகளைக் கவனித்து சற்று அடங்கினாள்.
    "மைத்.. உன்னைத்தான். கேக்குறேன் இல்லே? ஏன் குழந்தைங்க பிடிக்குமானு கேட்டே?" என்று வாசு அவளை சற்றே உலுக்க, "ஒண்ணுமில்லே" என்றாள்.
"மைத்.. உங்கிட்டே ஒண்ணு கேக்கணும்.. நீ என்னையும் ஜேயையும்.." என்றபடி அவளருகே அமர்ந்தான்.
"ஓவர். ஜேயைப் பத்தி இனிமே பேசாதே" என்றாள் மைத். வாசுவின் கைகளை இழுத்துக் கொண்டாள். "எவ்வளவோ கனவுகளைத் தேக்கி வச்சிருந்தேன். ரெண்டு கணவன், நாலு குழந்தைங்க, ஆளுக்கு ஒரு நாய்.. ஹ்ம்ம். இப்ப ஒரு கணவன்னு ஆயிடுச்சு. அதான், உனக்குக் குழந்தைங்க பிடிக்குமானு கேட்டேன்"
வாசு குளிர்ந்தான். இன்றைக்கு எல்லாம் கனிந்து வருவதாக உணர்ந்தான். முதலில் நாய் வசியம். இப்போது மைத் வசியம். குளிர்ச்சியில் மைத் கேட்டதைச் சரியாகக் கவனிக்கவில்லை. மைத் பேச்சுவாக்கில் ஏதோ நாய் என்றது போல் தோன்றியது. "குழந்தைங்க தானே? அதுக்கென்ன அவசரம்?" என்றான்.
"ரைட். கல்யாணத்துக்கப்புறம் குழந்தைங்க. இப்ப முதல்ல நாய் வளப்போம். ஐ லைக் இட்" என்றாள். அவன் கைகளைப் பிணைத்துக் கொண்டாள். "நல்ல சகுனம் வாசு. நாய்னதும் பாரேன்.."
பார்த்தான். அவர்களுக்கு பத்தடி தொலைவில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கறுப்பு நாய் நின்று இவர்களைப் பார்த்தது. பல்லைக் காட்டியது. தன்னைக் கிண்டல் செய்துச் சிரித்தது போல் பட்டது வாசுவுக்கு. "தினேஷ்குமார்!" என்றான் உரக்க.
"யாரு?"
"உனக்குத் தெரியாது" என்று கைகளை விடுவிக்க முயன்றான் வாசு. "ஏன் கையை இழுக்குறே?" என்றாள் மைத்.
தினேஷ்குமார் நெருங்கியது. "உர்ர்" என்றது.
"இந்த நாய் நம்மளைக் குதறிடும் மைத். கையை விடு" என்று உதறினான் வாசு. "ஆனா நீ பயப்படாதே. நானிருக்கேன். எனக்கு நாய் வசியம் தெரியும்" என்று பையிலிருந்தக் கற்களை எடுத்து ஓங்கினான்.
"வாசு.. நிறுத்து.. வாயில்லாப் பிராணியைக் கல்லால அடிக்காதே.."
"இதா வாயில்லாப் பிராணி? இதோட பல்லைப் பாத்துட்டுப் பேசு" என்று இன்னும் ஓங்கினான்.
நாய் நிற்கவில்லை. வாலை ஆட்டியபடி வேகமாக அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.
ஒரு கல்லை நாயின் முகத்தைக் குறி வைத்து வீசினான் வாசு. கல் குறி தவறி முகத்தோரமாக உரசி விழுந்தது. லேசாக முனகிய நாய் வாலை ஆட்டியபடி இன்னும் நெருங்கியது. அடுத்தக் கல்லை எடுத்தான். காலுக்கு குறி வைத்தான்.
"வாலை ஆட்டுது வாசு.. ஸ்டாப் இட். என்ன இது? பாகெட் நிறையக் கல்லோட ரெடியா வந்திருக்கே? நாய் அடிக்குறது வழக்கமோ?"
"உனக்கு எதுவும் தெரியாது மைத். இந்த தினேஷ்குமார் சாதாரண பிராணி இல்லே.." என்று கால்களைக் குறிபார்த்து வீசினான். கல் சரியாக அதன் இடது கால்களில் பட்டுத் தெறிக்க, நாய் வலியுடன் குரைத்துத் தடுமாறி விழுந்தது. பிறகு மெள்ள எழுந்து இருவரையும் பார்த்தது. அடிபட்ட ஊனத்துடன் மெள்ளத் தேய்த்து நடந்து அவர்களருகே வந்தது. மைத்தை நெருங்கி அவள் கைகளை முகர்ந்து லேசாக நக்கியது. வாசுவை ஏக்கத்துடன் பார்த்தது.
"ஏய்.. ஓடு" என்றான் வாசு பயத்துடன்.
நாய் மறுபடி மைத்தை நக்கிவிட்டு, தடுமாறித் தடுமாறி அலைகள் அருகே சென்றது. ஒரு முறை திரும்பி அவர்களைப் பார்த்தது. புரண்டு விழுந்தது.
மைத் துடித்து எழுந்தாள். "வாசு.. யூ ப்ரூட்"
"ஐயையோ.. மைத்.. இது அத்தனையும் நடிப்பு. தேவர் பிலிம்ஸ்ல இருந்த நாய். இப்ப படம் எடுக்குறதில்லேன்றதுனால இப்படி பீச்ல சுத்திட்டு இருக்கு. சத்தியமா சொல்றேன், என்னைத் துரத்தியெடுத்த நாய்.."
"சே! என்ன மனுசன் நீ? ஆதரவில்லாத உயிரை இப்படித் துன்பப் படுத்துறியே?"
"ஐயோ மைத்.. ஆதரவாவது மண்ணாவது.. சொன்னாக் கேளு.. ஆஸ்காருக்குப் போக வேண்டிய நாய் இது.. நம்பாதே.. எல்லாம் வேஷம்". சிங்காரத்தை நினைத்துக் கொண்டான். "டேய் வெங்காயம்.. உன்னை என்ன செய்யுறேன் பாரு"
"யாரு வெங்காயம்?" என்று மைத் கேட்டு முடிப்பதற்குள் ஒரு வாலிபன் வேகமாக வந்து, கீழே கிடந்த நாயைக் குழந்தை போல் இரு கையாலும் அள்ளி எடுத்தான். அலையில் இறங்கி நாயின் முகத்தில் நீர் தெளித்தான். வெளியே கொண்டு வந்து கிடத்தித் துடித்து அழுதான். "ஐயோ.. ஒரு நிமிசம் உன்னை விட்டுப் போனா இப்படி அடிபட்டு கிடக்கிறியே!" என்று புலம்பினான். "ஏன் சார், கல்லாலயா அடிச்சீங்க? பெரிய கல்லா சார்?" என்றான் வாசுவிடம்.
"யோவ்.. என்னைத் துரத்தி எடுத்துச்சுயா உன்னோட நாய். அப்புறம் என் மேலே பாயுற மாதிரி வரப்ப நான் என்னய்யா செய்ய முடியும்? வேணும்னா ஐம்பது ரூவா நஷ்ட ஈடு குடுத்துடறேன்.. இந்தா"
மைத் அவனை நெருங்கி, "மிஸ்டர்.. ரொம்ப சாரி.. இது என் தப்பு. உடனே நாயை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போங்க.. என்ன செலவானாலும்.." என்று அவனைப் பார்த்தாள். "உங்களை எங்கியோ.."
"நேரமில்லே மேடம்.. நான் உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.. சார்.. உங்க தாராள மனசுக்கு ரொம்ப நன்றி. என்னோட நாய் குடுத்தத் தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்று நாயை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான். நாலடி ஓடிவிட்டுத் திரும்பி வந்து வாசுவின் கையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை உருவிக்கொண்டு மீண்டும் ஓடினான்.
"விட்டது சனி.. வா மைத்" என்றான் வாசு.
மைத் அவன் கைகளை உதறினாள். "நாய் மேலே கல்லெறிய உனக்கு வெட்கமாயில்லே வாசு?"
"மைத்.. விவரம் தெரியாமப் பேசாதே"
"எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன். கைல கல்லோட அலையுறதைப் பாத்தாலே தெரியுதே விவரம்? எங்கெங்கே நாய் கிடைக்கும் அடிக்கலாம்னு அலைவே போலிருக்கு. உன் முகத்திலயே இனி முழிக்க மாட்டேன்.." என்று நடந்தாள்.
"யா? உன்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு அரை டஜன் நாயுங்களுக்குத் தினம் பயந்துத் தண்டம் அழுவணும்னு எனக்கு மட்டும் தலையெழுத்தா? நானும் உன் முகத்தில முழிக்கலே" என்று வேகமாக எதிர் திசையில் நடந்தான்.
    எதிரே உட்கார்ந்திருந்த மைத்தை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அன்புமல்லி.
"போனாப் போவுது விடு மைதிலி. எனக்கு அப்பவே தெரியும் அந்தப் பசங்களைப் பத்தி. ஆனா நீ காதலிக்கறதா சொன்னதால.."
"அங்கிள். நீங்க சொன்னது ரொம்ப சரி. இனிமே யாரையுமே காதலிக்கப் போறதில்லே. ஆம்பிளைங்க எல்லாருமே ஏமாத்துக்காரங்க.."
"இப்படித்தான் என் மருமகன் ஒருத்தன் காதல் வேணாம்னு கவிதை எழுதிட்டிருந்தான்"
"என்ன அங்கிள், என் பிரச்சினைக்கு பதிலா கண்டவனைப் பத்திப் பேசுறீங்களே?"
"கண்டவன் இல்லம்மா, கபிலன். என் ஒண்ணு விட்ட அக்கா பையன்.. அவன் கதை சொல்லியிருக்கேனோ?"
"என் கதையே எப்படி முடியும்னு தெரியலே, இதுல கண்டவன்.."
"கபிலன்மா கபிலன்"
"அங்கிள்.. காதல்ன்றது இனிமே என் அகராதியிலயே கிடையாது" என்று மைத் சொல்லி முடிக்கவும், சிங்காரம் ஒரு வாலிபனுடன் அருகே வரவும் சரியாக இருந்தது.
வாலிபன் நேராக மைத்தைப் பார்த்தான். படபடவென்றுப் பேசினான். "மேடம்.. சாரி, அவசரமா ஓட வேண்டியதாப் போச்சு. என்னோட நாய்க்கு என்ன ஆச்சோனு ஒரே பயம், அதான். இப்ப ஒண்ணுமில்லேனு வெட் சொல்லிட்டாரு. கால்ல லேசாக் கட்டு போட்டிருக்காரு. ரெண்டு நாள்ல சரியாயிடும். உங்களுக்கும் உங்க ஹஸ்பென்டுக்கும் - எங்கே அவர் - தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிச்சுருங்க. அதைச் சொல்லத்தான் வந்தேன்"
"இவளுக்கு இன்னும் கல்யாணம் ஆவலே" என்றார் அன்புமல்லி.
"ஓ.. அப்ப உங்களுக்கும் உங்க காதலருக்கும்.."
"ஹி இஸ் நாட் மை லவர் ப்ரென்ட ஆர் எனிதிங்" என்றாள் மைதிலி.
"ஓ.. அப்ப உங்களுக்கு.."
"தம்பி.. யாருப்பா நீ? சும்மா பேசிட்டிருக்கியே.. உக்காரு" என்றார் அன்புமல்லி.
"நன்றி சார். எம்பேரு ரகுராம். சுருக்கமா ரகுனு கூப்பிடுவாங்க. நீங்க மேடம்?"
"என் பேர் மைதிலி"
"என் பேர் அன்புமல்லி.. சுருக்கமா"
"இருக்கட்டும் சார். மேடம், உங்களைச் சுருக்கமா மைத்னு கூப்பிடவா?"
மைத் குளிர்ந்தாள். "இதுக்கு முன்னால் உங்களை.."
"பாத்திருக்கோம் மிஸ் மைத். காலைல உங்க பேரைக் கேட்டப்ப, அழகான குரல்ல, தேன் சொட்டச் சொட்டச் செருப்பு பிஞ்சிரும்னு சொன்னீங்க. ஆனா அது உன் பேரா இருக்காதுனு அப்பவே நெனச்சேன் மைத்"
சிரித்தாள். "உங்க நாய்க்கு அடிபட நானும் ஒரு காரணம்.. ப்லீஸ் என்னை மன்னிச்சுருங்க"
"நோ நோ. அப்படி நடக்கலின்னா ரகுராம்-மைதிலி சேர்ந்திருக்க முடியுமா? ஐ மீன் நாம இப்படி அறிமுகமாகியிருக்க முடியுமா? தட்ஸ் ஆல் ரைட். பேர் பொருத்தம் எப்படி? அட்டகாசமா இல்லே?"
"நாய்னா உங்களுக்குப் பிடிக்குமா?"
"மை டியர் மைத். எனக்கு உலகத்துல ரெண்டே ரெண்டு தான் பிடிக்கும். ஓகே, மேக் இட் மூணு. ஒண்ணு காதல். இன்னொண்ணு குழந்தைங்க. மூணாவது நாய். பொதுவா எல்லாமே ப்லூரலா வேணும் எனக்கு. பல குழந்தைகள். பல நாய்கள். ஆனா காதல் மட்டும் சிங்குலர். ஒரே காதல். உனக்கு எப்படி வசதி?"
"எனக்கும்" என்ற மைதிலி சிரித்தாள். "ரொம்ப விட்டா பேசுறீங்க ரகு"
"விட்டா ரொம்ப பேசுவான் போலிருக்கே.." என்று குறுக்கிட்டார் அன்புமல்லி. "தம்பி.. உங்க ஊர் எது? அப்பா அம்மா யாரு? என்ன படிச்சிருக்கீங்க? என்ன வேலை? சும்மா காதல் நாய்க்குட்டினு பட்டாசு வெடிச்சா எப்படி? என்னா விசயம்ன்றேன்.."
"ஓல்ட் மேன். ப்லீஸ் டோன்ட் பாதர்" என்ற ரகு, மைத்தின் கையைப் பிடித்து எழுப்பினான். "மைத். இனிமே என்னை ஒருமையில கூப்பிடு. நீங்கனு கூப்பிட்டா நெருக்கமா தோணலே. வாயேன், பேசிட்டே போவோம்?" என்று அவளுடன் நடந்தான். சற்றுத் தொலைவு நடந்ததும், தலையைத் திருப்பி அன்புமல்லிக்குக் கண்களால் நன்றி சொன்னான்.
சிங்காரம் டேபிளைச் சுத்தம் செய்து, "வேறெதும் வேணுமா சார்?" என்றான்.
"சிங்காரம்.. உனக்கு சிலை வைக்க யாராவது நன்கொடை சேக்குறாங்கனா சொல்லு.. நானே முழுச் செலவையும் எடுத்துக்குறேன்"
"உங்களுக்கு உதவ முடிஞ்சதே சந்தோசம்யா.."
"விவரமெல்லாம் நான் கேட்கப் போறதில்லே.. எத்தனை செலவாச்சு சொல்லு, மேலயே கொடுத்துடறேன்"
"நாய், சினிமா எக்ஸ்ட்ரா, குழந்தைங்க.. ஐயா.. நாளைக்குக் கணக்குப் போட்டுச் சொல்றேன்யா.. அவசரம் இல்லே"
"நல்லது சிங்காரம், நல்லது" என்ற அன்புமல்லி மெள்ள அகன்றார். காரை எடுக்கும் பொழுது ரகுவும் மைத்தும் நெருக்கமாக இன்னொரு கார் மேல் அமர்ந்திருப்பதைக் கவனித்தார். 'காதல் வாழ்க' என்று வாழ்த்தியபடி வெளியேறினார்.
முற்றும்.
முகத்திற்கு நேராக முகம் வைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தது ஒரு கரிய நாய். சங்கத்தில் பார்த்த அதே தினேஷ்குமார்./
பதிலளிநீக்குஇப்படியும் ஒரு கதை !
கடைசில ரகுதான் காதலில் ஜெயிப்பார்ன்னு ஓரளவு எதிர்பார்த்ததுதான். எல்லாம் சொல்லி வெச்ச மாதிரி சரியா நடந்து கடைசில சுபம் போட்டுடீங்க. ஒரு
பதிலளிநீக்குநகைச்சுவை படம் பாத்த மாதிரி இருந்துது.
கம்பன்லேந்து வாலி வரை கற்பனை செய்து பாடியதை மிகவும் ரசிக்க முடிந்தது. தினேஷ் குமார் பேர் நாய்க்கு ரொம்ப பொருத்தம்தான். பிரமாதமா நடிச்சிருக்கு.
//கொஞ்சம் வல்லினமா பேசினாலும் அவ காது நோகும்.// அட, அடா! சூப்பர்! :)
//"எவ்வளவோ கனவுகளைத் தேக்கி வச்சிருந்தேன். ரெண்டு கணவன், நாலு குழந்தைங்க, ஆளுக்கு ஒரு நாய்.. ஹ்ம்ம்.// இந்த வரியை படிச்சுட்டு சிரிச்சு மாளல. :)
'காதல் போயின் சாதலா, இன்னோர் காதல் இல்லையா' சரிதான்.
நரன் ஐயோ எனவில்லை, நாய் வள் எனவில்லை. வாசுவும் நோக்க வைரவரும் நோக்க அங்கே வாய்ச்சொற்கள் பலனிலாது போயின. //
பதிலளிநீக்குசிரிச்சு முடியலை. எப்படிங்க இப்படில்லாம். மீனாக்ஷி ரசிச்சதா எழுதி இருக்கிறதையும் ரசிச்சுச் சிரிச்சேன். :)))))))
சூப்பர் நகைச்சுவை. நரனும் நாயும் காமெடியில் சிரித்து வாயிற்று வலி வந்துவிட்டது. அதுவும் வைரமுத்து வாலி கற்பனை அதகளம்!!.
பதிலளிநீக்குவைரமுத்து, வாலி கற்பனை அபாரம். சிம்பிளாக ஒரு சிக்கலான காதல் கதை!
பதிலளிநீக்குஆறில், 'பரியுடன்' என்று ஆரம்பிக்கும் அந்த புறநானூற்று கற்பனைப் புலவர் பாடல் தான் டாப்!
பதிலளிநீக்கு//புறநானூற்றுப் .... புலவர் யாராவது பார்த்திருந்தால், 'பரியுட னிரியும மரியதுஞ் சரியுமே' என்று புரியும்படி..//
புரிந்தது தான் வம்பாகிப் போயிற்று!
// இது சிறுவசியம்.. //
பதிலளிநீக்குஅப்போ, பெருவசியம்?.
//"என்னது? அப்பாவா? யார் அப்பா? யாருக்கப்பா? யாருப்பா நீ? விடுப்பா"//
ப்பா. ப்பா.. வைச்சு அவ்வளவு தானா?
//முதலில் நாய் வசியம். இப்போது மைத் வசியம். //
ஓஹோஹோ.. இங்ஙன வருதா, அந்த பெருவசியம்?..
சிறுவசியம் பெருவசியம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். கட்டிப் போட்டு விடுகிறீர்கள் வசியம் செய்ததைப் போல.
பதிலளிநீக்குஅருமை அப்பாஜி
பதிலளிநீக்குஇதற்குத்தான் ஸ்லாப்ஸ்டிக் காமெடி என்று பெயரா. ?எழுத்து, நடை இவற்றை ரசிக்க முடிந்த அளவு கற்பனையை ரசிக்க முடியவில்லை.குழந்தைத் தனமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ சில இடங்களைப் படிக்கும்போது இதழ்கள் முறுவலில் விரிவதைத் தடுக்க முடியவில்லை.உங்கள் திறமை இன்னும் சிறந்தது. .வீணாகக் கூடாது.
"உங்கள் இன்னும் சிறந்தது! வீணாகக் கூடாது" I agree with you GMB!--- காஸ்யபன்
பதிலளிநீக்கு"உங்கள் திறமை இன்னும் சிறந்தது! வீணாகக் கூடாது" I agree with you GMB!--- காஸ்யபன்
பதிலளிநீக்குYou are not Sir P.G. Wodehouse.
பதிலளிநீக்குபின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஅடங்கிடுமோன்னு உயிரையும், அவுந்துடுமோன்னு பேண்ட்டையும் பிடித்துக்கொண்டு....
பதிலளிநீக்குரசித்தேன்.
ஒரு சின்னக் கருவை வைத்துக் கொண்டு மூன்று பாகங்கள் எழுதிய உங்களை பாராட்டத்தான் வேண்டும்!
நீட் .. வெரி நீட்! நானும் ஒரு வோட்ஹவுஸ் பித்தன். லாயித்தேன் முழுவதுமாய்....
பதிலளிநீக்குபாராட்டுக்கள் அப்பாஜி!
மோகன்ஜி! கொஞ்சம் நகருங்க.
பதிலளிநீக்குஹா!ப்ரமாதம்.ப்ரமாதம் அப்பாதுரை.
ஒரு சின்ன மேட்டரை அனாயாசமான சுவாரஸ்யத்துடன் சொல்ல நல்ல க்ராஃப்ட் வேணும்.
மைத் மை டியர் முழுவதுமாய் அது நிரம்பி வழிகிறது.
சமீபத்தில் இப்படி ஒரு லைட் ரீடிங் வாசிக்கக் கிடைக்கவில்லை.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஒபாமாவுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்கும்னு நினைச்சேன்.அதே போல கறுந்திரை போட்டு ப்ளாகையே மூடிட்டீங்களே அப்பாதுரை!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குAppavigal Pavam.
நல்ல காமெடி. ரசித்து சிரித்தேன்... சிரித்தேன்... சிரித்தேன்................
பதிலளிநீக்கு