2013/12/06

நசி நினைவுகள்


    சிகேத வெண்பா காலம் ஒரு பொற்காலம். எத்தனை பின்னூட்டங்கள்! கணக்கிலடங்கா பின்னூட்டங்கள் என்று சொல்ல முடியாது. கருத்திலடங்கா பின்னூட்டங்கள் என்பது பொருத்தம். எத்தனை வித சிந்தனைகள்! மிகவும் சிறப்பான பரிமாற்றங்கள். புத்தகமாகும் இரண்டாம் படியில் நிற்கும் நசிகேத வெண்பாவின் தனிச்சிறப்பு, ஒவ்வொரு பதிவுக்கும் வந்த அறிவார்ந்தப் பின்னூட்டங்கள். எதையோ அறிந்து கொள்ள ஒரு குழுமமாகப் பயணித்ததின் தடங்கள்.. சிந்தனைச் சுவடுகள். இவை புத்தகத்தில் இடம் பெற வாய்ப்பில்லை என்பது என் கைகளை வெட்டியது போன்ற வலியைத் தருகிறது.

சிந்தனைச் சுவடுகளை இலவச இணைப்பாகவாவது வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். பார்ப்போம். பின்னூட்டங்களைத் தனியாகத் தொகுத்து வருகிறேன். படிக்கையில் எனக்குள் உண்டான உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடியாமல் தவிக்கிறேன். நினைவுகளைக் கிளறும் கரண்டிகளில் தான் எத்தனை வகை!

பின்வரும் கேள்வி-பதில், உரையாடல், பின்னூட்டமாடல், மடலாடல்.. ஏதோ ஒண்ணு.. நீங்கள் இவற்றை நசிகேத வெண்பாவில் படித்திருக்கக் கூடும். இல்லையெனில் இப்போது ஒரு வாய்ப்பு.

நீலவண்ணத்தில் வரும் சிந்தனை/கேள்விகளின் நாயகன் அல்லது நாயகியின் பெயர்களை நீக்கியிருக்கிறேன். யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்களேன்?

*****

"சிசுவினால் ஒரு பொறியையும் அதிகம் உபயோகிக்க இயலாது. உபயோகித்தாலும் அறிவு வளராத நிலையில் உபயோகத்தின் பலன் புரியாது" என்று கூறுகிறீர்கள். 'அறிவு' என்பதற்கு பதிலாக 'மூளை' என்று நீங்கள் கூறியிருந்தால் அதை வரவேற்றிருப்பேன்.

சில விஷயங்களை so-called "முற்போக்கு" என்று கூறப்படுகிற மேற்கத்தீய விஞ்ஞான ரீதியாக பார்த்தால் விடை கிடைப்பது கடினமே. ("பகுத்தறிவு" என்று நம்மூர் திராவிட குஞ்சுகள் கூறிக்கொண்டு திரிவது போல). என்ன செய்வது, இன்றைய யுகத்தில் 'எதுவாக இருந்தாலும் அது விக்கிபீடியாவில் இல்லை என்றால் பொய்' என்று கூறும் அளவுக்கு நமது மனம் 'பக்குவப்பட்டிருக்கிறது(tuned).

நூற்றுக்கணக்கான பசுமாட்டு கும்பலில் தனது கன்றை மட்டும் எப்படி ஒரு தாய் பசு கண்டு கொள்கிறது? இது "பகுத்தறிவு" என்பதையும் தாண்டிய‌ விஷயம் அல்லவா? அதே போல, மின்சாரம் என்கிற விஷயத்தை யாருமே கண்களால் பார்த்ததில்லை. மின்சாரத்தினால் ஓடும் மோட்டர், மின்விசிறி, விளக்கு போன்றவற்றை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் மின்சாரமே இல்லை என்று கூறிவிட முடியுமா? மின்சாரம் என்பதே கப்ஸா என்று கூற முடியுமா?

வயிற்றில் வளரும் குழந்தை கண்டிப்பாகவே தாயின் சுக/துக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறது என்று மேற்கத்திய விஞ்ஞானிகளே ஏற்றுக்கொள்ள‌ ஆரம்பித்து விட்டனர் (என்ன செய்வது, வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்மூரில் மதிப்பு, இதையே நம் வீட்டு பாட்டி சொன்னால், கிழவி உளறுகிறாள் என்போம்). ஆகையால், 'கப்ஸா' என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. அதே போல, புலன்களை அடக்கி, கூடு விட்டு கூடு பாயும் வித்தையை நமது முன்னோர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் நமது "பகுத்தறிவு" அதை ஏற்க மறுக்கிறது. என்ன செய்வது, ஆதி சங்கரர் காவி உடுத்தி விட்டாரே!


சிசுவுக்கு மூளை உண்டு; அறிவு வளர்ச்சி தான் குறை என மறுபடியும் சொல்ல அனுமதியுங்கள். மூளை என்பது உறுப்பு - பிற உறுப்புகளைப் போலவே அந்தக் கட்டத்துக்கான வளர்ச்சியைப் பெறுகிறது. உணர்வுகளை வளர்த்துத் தேக்குவது அறிவு. கருவிலிருக்கும் சிசுவுக்கு அது கிடையாது, தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

பசுமாட்டை விடுங்க, ஒரு அம்மாவுக்கு பல ஆயிரம் குழந்தைகளில் தன் குழந்தையை எப்படி அடையாளம் தெரியும்? சிதம்பர ரகசியம் சொல்கிறேன். பழக்கம்.

பிறந்த குழந்தையை ஒரு முறை கூடக் காணாத தாயை நூறு பச்சிளம் குழந்தைகள் முன்னே விட்டு தன் குழந்தையை அடையாளம் சொல்லி அணைக்க முடியுமா? முடியாது. சிலவற்றை நாம் 'மகத்துவ'க் கண்ணோட்டத்தில் கண்டு பழகி நம் dnaவில் கலந்து விட்டது. என்ன செயவது!

தற்செயலின் மறுபக்கம் மகத்துவம். பார்வை மட்டும் அவரவருக்குச் சொந்தம்.

தவறாக எண்ணாதீர்கள். கருவிலிருக்கும் குழந்தை தன் தாயின் சுக/துக்கங்களை 'பகிர்ந்து' கொள்ளவே முடியாது. அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை நான் அறிந்ததில்லை. சுகம் துக்கம் என்றால் என்னவென்றே அறிய வாய்ப்பில்லாத நிலையில் அச்சிசுவை அப்படிப் பார்ப்பது நமக்கு என்னவோ பெருமையாக இருக்கலாம், சிசுவுக்கு இல்லை. வெளியே வரும் வரை சிசு is a lump of flesh with a heartbeat. சற்று குரூரமான பார்வை எனினும் உண்மைக்கு அண்மையென்று நம்புகிறேன். கருவில் இருக்கும் சிசுவுக்குக் கொடுக்கும் மகத்துவத்தை பெற்ற பிள்ளைக்குக் கொடுத்து மதிப்புடன் நடந்து கொண்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும் :) கருவைச் சுமக்கும் தாய்க்குக் கொடுத்தால் இன்னும் மகத்தானதாக இருக்கும். கருவைச் சுமந்த காலத்தில் எத்தனை பெண்கள் தாங்கள் மதிப்புடன் அன்புடன் அதீத ஆதரவுடன் நடத்தப்பட்டதாகச் சொல்வார்கள்? நம் கலாசாரத்திலேயே இல்லையே? கருவான சில வாரங்களில் பிறந்த வீட்டுக்கு அல்லவா அனுப்புகிறோம்? இல்லாத மகத்துவத்தைப் பிடித்துக் கொண்டு அலைவதே நமக்கு வழக்கமாகிவிட்டது :)

பகுத்தறிவு எல்லாருக்கும் உண்டு (shockingly, சில மிருகங்கள் உட்பட). பொதுவில் வைக்கிறேன். பயன்படுத்துகிறோமா இல்லையா என்பதும் கூட அவரவர் விருப்பம்/முனைப்பைப் பொறுத்தது. பகுத்தறிவு என்பது மேற்கோளுக்குட்பட்டக் கேலிக்குரிய சொல்லானதன் காரணம் சில கடவுள் மறுப்புக்காரர்களின் அறிவின்மை. வருந்துகிறேன்.

வழக்கம் போல காவிகளை சாடியிருக்கிறீர்கள். உண்மையிலேயே க‌டோவில் இப்ப‌டி உள்ள‌தா அல்ல‌து இது உங்க‌ளுடைய‌ க‌ருத்தா என்று தெரிய‌வில்லை! காவிக‌ளில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் உள்ளார்க‌ள் ஐயா! இதை நீங்க‌ள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது தான் நித‌ர்ச‌ன‌ம். தாடிகளின் அட்டூழியம் நீங்கள் இருக்கும் இடத்தில் தெரிய வாய்ப்பு இல்லை தான். நேரில் அனுபவப்பட்டதனால் கூறுகிறேன். அதனால் தானோ கெட்டவர்கள் அனைவருமே காவிகள் என்று பொருள்பட கூறுகிறீர்களோ!

ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே கேட்க‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆன்மா, பேரான்மா என்றெல்லாம் கூறியிருக்கிறீர்க‌ள். இதில் எம‌ன் என்ப‌வ‌ன் யார்? எம‌ன் ஆன்மாவா, பேரான்மாவா? அல்லது எமனுக்கு ஆன்மாவே கிடையாதா? எம‌ன் ஆசான் என்றால் எம‌னுக்கு ஆசான் யார்?


காவிகள் என்று வரும் இடங்களில் தாடிகள் என்று படித்துக் கொள்ளுங்களேன்?

பற்றறுப்பை ஒருதலையாகப் பேசும் பொய்யர்களை நான் சாடி என்ன பயன்? காவி என்றாலோ தாடி என்றாலோ பேதஜோதியில் கலந்து நானும் பொய்யனாவேனே? சாடுவதையே விட்டொழிக்கத்தான் இதை எழுதுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் :)

எல்லோரும் பிறப்பால் ஓரினமே. இறப்பால் ஈரினம் எனலாம்: அறிவுள்ள இனம், அறிவற்ற இனம்.

இறக்கும் பொழுது (தன்னை) அறிந்தவராக இறக்கிறோமா, அறியாதவராக இறக்கிறோமா? அது தான் கேள்வி.

மனிதத்தை அறியவொட்டாமல் இருப்பதும் தடுப்பதும் அறிவற்றவர் வேலை. இதில் தாடி என்ன காவி என்ன? தன்னை நம்பினாலும் சரி, காவியை.. க்குக்கும் தாடியை.. நம்பினாலும் சரி, இந்தக் கேள்வியைப் புறக்கணிக்கும் அத்தனை பேரிலும் தாடி காவி அங்கி லுங்கி இன்னபிற உண்டு என்று நினைக்கிறேன்.

நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை, ஒரே ஒரு வாய்ப்பை - 'ஒரே ஒரு வாய்ப்பு' என்பதில் மறைந்திருக்கும் மகத்துவம், my goodness, கோடியில் ஒருவருக்குக் கூடப் புரியாமல் போவது எத்தனை கொடுமை என்று நினைத்துப் பார்த்தால் இதன் தாக்கம் புரியும் - அப்படிப்பட்ட ஒரே ஒரு வாய்ப்பை மறந்து வாழ்நாள் முழுதும் அறியாமையில் மூழ்கியிருப்பது வறுமையிலும் பிணியிலும் கொடுமை இல்லையா? அப்படி மூழ்கியிருப்போரை மூழ்கியே இருக்க வைப்பது இன்னும் கொடுமையில்லையா? அப்படிச் செய்வோர் காவிகளாயிருந்தாலென்ன தாடிகளாயிருந்தாலென்ன நானாகவிருந்தாலென்ன நீங்களாகவிருந்தாலென்ன?

கடோவில் இந்தக் கருத்துக்கள் உள்ளதா இல்லையா என்பதைப் படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும் :) if it matters, தமிழில் எழுதியுள்ள செய்யுட்களுக்கு கடோவில் வேர் உண்டு. ஒரு சொல் விடாமல், அத்தனை விளக்கங்களுக்கும் விளக்கம் தொட்ட உரையாடல்களுக்கும் நானே பொறுப்பு. கடோவில் செங்கல் அடுக்கிய ஹோமகுண்டம் அக்னிஹோத்திரம் யாகம் பிராமணம் விராட் புருஷம் என்று வருகிறது. நான் நற்குணங்களை செங்கல் என்கிறேன். உளத்தூய்மையை வேள்வி என்கிறேன். புருஷமாவது பிராமணமாவது என்கிறேன். மற்றபடி கடோவின் சாரத்தை தமிழில் கொடுத்திருக்கிறேன்.

எமன் யார், எமனுக்கு ஆசான் யார் என்பதற்கு எனக்குப் பதில் தெரியாது. கடோ வசதியாக எமனைக் கடவுள் என்கிறது. மூச் பேச் கூடாத். எனினும், எமன் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதிலிருப்பதாக நினைக்கிறேன். எமனும் பேரலையின் அம்சம் என்பதே. இங்கே நசிகேதன் எனும் ஒரு விடாமுயற்சிச் சிற்றலையைத் தன்னுள் சேர்த்தப் பேரலையின் அம்சமாவான் எமன்.
*****

கருவிலிருக்கும் சிசுவை விடுவோம். பிறந்தபின் பகுத்தறியும் அறிவு வளர்ந்தபின் நடப்பதுதானே நம் நினைவில் நிற்கிறது? நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைப் பருவத்தில் எந்த நாள் வரை நினைவுக்குக் கொண்டுவர முடியும்?
கருப்பையிலிருந்து பிறக்கும்நாள் வருமுன்பு ஒரு விபத்தாக கை மட்டும் வெளியில் நீட்டிய குழந்தையை மறுபடி கருப்பைக்குள்ளே செலுத்த என்ன வழி என்று எல்லோரும் குழம்ப, ஒரு புகழ்பெற்ற மருத்துவர் 'சட்'டென சிகரெட்டைக் கொளுத்தி சிசுவின் கையில் வைத்ததும் அது கையை கருப்பையின் உள்ளே இழுத்துக் கொண்டது என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.


".. எந்த டாக்டர்னு தெரிஞ்சா கொஞ்சம் ஒதுங்கி நிற்கலாம். அறிவு ஜோதி நம்மளை எரிச்சுடக் கூடாது பாருங்க.

விபத்தா எல்லாம் கை வராது. வந்தாலும் சிகரெட் சுட்டா உள்ளே இழுக்காது. உள்ளே இழுத்துக்கொள்ள கருப்பை என்ன ஜன்னலா?

கருப்பை ரொம்பப் பாதுகாப்பானது. நீரணை. அணை உடைந்தால் தான் சிசு வெளியே வர வாய்ப்பே உண்டு. அப்படி (அசம்பாவிதமா) வெளியே வந்தா வந்தது தான். திரும்ப உள்ளே போக முடியாது. நல்ல வேளை, இந்த செய்தியை நான் படிக்கவில்லை - படிச்சிருந்தா அன்றிலிருந்தே நொந்திருப்பேன் :) எவ்வளவு மோசமா ஜனங்களை ஏமாத்துறாங்கனு நினைக்குறப்போ நடுக்கமா இருக்கு.

இதையெல்லாம் நம்பமாட்டாங்கனு நம்புறேன் :)
*****

(கேள்விக்கான) பதிலே சொல்லாமல் இருப்பதுதான் தப்பு. தப்பாகச் சொல்வது அதைவிட பரவாயில்லை என்று ஆசிரியராக இருக்கும் என் தோழி சொன்னது. கடோபநிஷத்தை எழுதியவர் அத்வைதத்தைப் பின்பற்றுபவரோ?

உங்கள் தோழி சொன்னது மிக அருமையான அறிவுரை. விளைவு பிழையாகிவிடுமோ என்று அஞ்சிச் செயலில் இறங்காமல் இருப்பதுதான் நம் வாழ்வின் மிகக் கொடுமையான சாபம். எல்லோருமே வாழ்வின் ஒரு அல்லது பல காலக்கட்டங்களில் இந்த சாபத்துக்கு ஆளாகிறோம்.

கடோபநிஷத்தை எழுதியவர் அத்வைதத்தைப் பின்பற்றுபவரோ..தெரியாது. நல்ல கேள்வி (பதில் தெரியாவிட்டால் உடனே கேள்வியை நல்ல கேள்வி என்று சொல்லிவிட வேண்டும்:-).

அத்வைதம் என்ற தத்துவம் எத்தனையோ காலம் தொட்டே இருந்து வந்திருந்தாலும் அதற்குப் பெயர் கொடுத்து தத்துவத்தின் ஆசிரியராகப் பரிசைத் தட்டிக் கொண்டு போனவர் ஆதிசங்கரர். (ஆக்சிஜன் கண்டுபிடித்ததாக ப்ரீஸ்ட்லி/ஷீல் சொன்னது போல).

கடோவின் காலம் சங்கரருக்கு முந்தையது. அத்வைத சிந்தனை இருந்திருக்கலாம் ஆனால் அதற்கு வேறு பெயர் இருந்திருக்க வேண்டும்.

கடோவை எழுதியவர் யாரென்று தெரியாததும் துரதிர்ஷ்டம். ஒருவரா பலரா என்று தெரியவில்லை. முதல் மூன்று பகுதிகளை எழுதியது ஒருவராக இருக்கும் என்கிறார்கள். பின் மூன்று பகுதிகள் பிற்சேர்க்கை என்கிறார்கள். முதல் மூன்று பகுதிகளிலும் பிற்சேர்க்கை இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. பல உபநிஷதுகளின் கதியும் இதே. எழுதியவர் யாரென்று எந்த விவரமும் இல்லை. ஒருவேளை பின்னால் வந்தவர்கள் நைசாக முதலில் எழுதியவர் பெயரை நீக்கிவிட்டார்களோ என்னவோ!
*****

மனித மனங்களே பெருஞ்சக்தி. முற்றிலும் உண்மை. மனிதம் என்றவுடனேயே என் மனம் கருணை, கருணை என்று உருகிவிட்டது. அடுத்து கடவுள் என்றவுடன் மனதில் தோன்றியது சில உருவங்கள்தான். கருணை என்ற உணர்வை மனம் உடனே உணர்ந்தது. ஆனால் கடவுள் என்றவுடன் உருவங்கள்தான் மனதில் தோன்றியது.

எல்லாமே அதன் இயல்பில் இருந்தால்தான் அமைதி அடையும். வாழும் வாழ்கையில் அமைதியை அடைய முடியாத மனங்கள் மரணத்தில் நிச்சயம் அமைதி அடையும். மரணம்தான் எல்லோருக்குமே நிலையான அமைதி தரும், இல்லையா!


'மனிதம்' 'கடவுள்' என்ற சொற்கள் உங்கள் மனதில் உண்டாக்கிய படிமங்கள்.. இதுவே பெரிய வெற்றியாக நினைக்கிறேன். மரணத்துக்குப் பின் அமைதி தேவையா? மரணம் அமைதியைத் தரும் என்றால் பிறவியும் அப்படித்தானே? மரணத்தில் அமைதி கிடைக்கும் என்பது அறியாமையோ? 'யாருக்கு அமைதி?' என்று எண்ணும் பொழுது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது :) ஹிட்லர் மரணத்தில்.. ஒசாமா மரணத்தில்.. சிலருக்கு அமைதி ஏற்பட்டது உண்மையே.
*****

புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு, வாலறிவு ---எங்கேயோ ஒரு நெரடல் தெரிகிறது. பளிச்சென்று பின்னூட்டமிடமுடியாத இடுகை. உங்கள் வாதத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை...

இது தான் அறிவு என்று prescribe செய்யும் அனுபவமோ தகுதியோ எனக்கு இல்லை. இது அறிவு என்று describe செய்யும் ஆசையில் எனக்குத் தோன்றியதை எழுதியதன் விளைவு, இந்தப் பதிவு.

வாலறிவு என்பது கடவுளுக்கு உரியது என்று இறையிலக்கியங்கள் சொல்லும் பொழுது, என்னைப் போல் கடவுள் நம்பிக்கையில்லாதவன் கத்தி மேல் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தனக்குள் கடவுள் என்ற படிமத்தை ஏற்றுக் கொண்டபோது, வாலறிவன் நிலை என்பது அறிவு முதிர்ச்சியில் ஒரு மைல்கல் என்று ஒரு எளிமையான கோணம் புலப்பட்டது. மெய்யறிவு என்பது தன்னை அடையாளம் காண வைக்கும் ஒரு நிலை என்பது எனக்குப் புரிந்தது. ஆனால், அதற்கு மேலும் ஒரு படி இருக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னை அறிந்து கொண்டு என்ன செய்வது? அதனால் என்ன பயன் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். புத்தன் யேசு காந்தியின் மரபணுவில் வாலறிவு ஒட்டிக்கொண்டிருப்பது போல் பட்டது.

நாலறிவு என்பது வேதங்களின் அறிவு மட்டுமே என்பதை ஏனோ என்னால் ஏற்க முடியவில்லை - இன்றைய நாளில் நான்கு வேதங்களின் அறிவு உருப்படாத அறிவு என்ற ஆணவ எண்ணம் தோன்றியது. அதே நேரம் கடோ என் கருவல்ல என்பதையும் உணர்ந்தேன். இதைப் படிக்கவும் இதைப்பற்றி எழுதவும் கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ந்து நன்றியுணர்வோடு.. அதே நேரம் என் பாணியில் சொல்ல எந்த அளவுக்குச் சுதந்திரம் எடுத்துக் கொள்வது என்ற சங்கடத்துடன் எழுதியதால் சற்று முரணாக வந்திருக்கலாம். எனக்குத் தோன்றிய இவை எல்லாவற்றையும் புரட்டி எழுதினேன். புலனறிவு...வாலறிவு எதுவுமே புதிதில்லை. பிற இறையிலக்கியங்களிலும் தத்துவ நூல்களிலும் எழுதப்பட்டவையே.

அறிவு என்பதற்கு முடிவு கிடையாது என்று நினைக்கிறேன். எனினும், ஒரு நிலையில் சாதாரண அறிவுகள் முடிந்து விடுவதால், முற்றறிவு என்பதும் பொருத்தமே.

வால் என்பதற்கு தூய்மை, வெண்மை, மிகுதி என்று பல பொருளுண்டு. அறிவுக்கு அடைமொழியாகும் பொழுது, முழுமையான, விளக்கத்திற்கப்பாற்பட்ட, தூய்மையான என்ற பொருளில் அறிவை அழகுப்படுத்திக் காட்டுகிறது. வெண்மை என்ற நிறம் சாதாரணம் என்று நினைக்கையில் சாதாரணம் தான். கண்ணுக்குப் புலப்படும் அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது என்று புரிந்ததும் வெண்மையின் அசாதாரணம் உறுத்துகிறது. அந்த வகையில் வால் என்பது பொருத்தமான அடைமொழி - தன்னறிவு வாலறிவோடு நிறைவு பெறுகிறது எனலாம்.

புலனறிவில் தொடங்கிப் படிப்படியாகப் போக வேண்டியதில்லை. ஒன்றை விட்டொழித்து இன்னொன்றைத் தக்க வைக்க வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு அறிவு நிலையில் இயங்கும் பொழுது அதற்கான வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்டு இயங்கலாம் என்பதே இங்கே செய்தி. புலனறிவை வைத்தே வெளியுலகின் தொடர்பு ஏற்படுவதால், நம் அறிவை வெளிப்படுத்த புலனறிவு ஒரு வாகனமாகிறது. மெய்யறிவு நிலையில் இயங்கும் மனிதன் புலனறிவின் உந்துதல்களை உடனே அறியத் தொடங்கி அதற்கேற்ப நடந்து கொள்ள முடியும். அப்படி நடக்காத பொழுது, புலனறிவில் மட்டுமே இயங்கும் பொழுது, அறிவில்லாதவர் போல் நடக்கத் தொடங்குகிறான்.

பலமரம் கண்ட தச்சன் ஒருமரத்தையும் அறுக்க மாட்டான் என்பார்கள். அறிவு பற்றி கீதாசாரியன் சொல்கிறான். அறிவு ஞானம் என்று விவாதிக்கும். அறிவு என்பது அனுபவத்தின் சாறு. அனுபவம்,அனுபவிப்பவன்,அனுபவிக்கப்படுவது என்ற மூன்றுமிருக்கவேண்டும்.

அனுபவிப்பவனும் நான் தான். அனுபவிக்கப்படுவதும் நான் தான்.அதனால் கிடைக்கும் அனுபவமும் நான் தான் என்கிறான் கிதாசாரியன். இது தான் உள்ளறிவா? இதுதான் வாலறிவா?

அப்பாதுரை என்று உம்மை அழைக்கிறேன். நீர் இருக்கிறீர். இருப்பதால் உம்மை அப்பாதுரை என்கிறேன். நீர் இல்லாவிட்டால் அழைக்கமாட்டேன். எது முக்கியம்? நீர் இருப்பதா? அப்பாதுரையா? நீர் மனிதர். மனிதர் என்ற பிரக்ஞை உள்ளது. யானைக்கு தான் யானை என்ற ப்ரக்ஞை இருக்குமா? இருக்கும், இருக்காது இரண்டுமே சரி தான். யானை தன் வம்ச விருத்திக்கு மற்றொரு யானையைத்தான் தேடும். மற்றப்படி...? அது தூண்டுதல் உணர்வுதானே? யானைக்கு யானை என்று பெயர் வைத்தது யார் ? மான்,புலி சிங்கம் என்று பெயர் வைத்தவன் மனிதனே. இந்தப் பாத்திரமிவனுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?

மற்ற உயிரினங்கள் இயற்கையோடு இயற்கையாக இருந்த போது மனிதன் இயற்கையோடு இருந்து கொண்டு இயற்கையிலிருந்து தனித்தும் இருக்க முற்பட்டான். he is a subject for himself and also an object for him also.. நாம் உலகத்த புரிந்து கொள்வது நம் புலனுணர்வால் மட்டுமே அதன் தீட்சண்யத்திற்கு ஏற்றபடி நம் புரிதல் சிறப்படைகிறது. உயிரினங்களில் கண்ணிலாத வொவ்வால் காதிலாத பாம்புகள் வாழ இயற்கை ஏற்பாடு செய்துள்ளது.மனிதனுக்குமட்டும் கூர்மையான புலன்கள் கிடைத்தன. காரனம் மற்ற உயிரினங்களுக்கு கிடைகாத ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் முன் கால்கள் கைகளாக மாறியது. அவன் உழைக்கலானான். இது அவனுடைய பரிணாம வளர்ச்சியில் மிகப்பெரிய பாய்ச்சலைகொடுதது. இந்த அனுபவம் அவன் அறிவை விருத்தி செய்தது. விசாலமாக்கியது. இறுதியில் ஒரு கேள்வி. Are you a being because you are a human being. Or, are you a human being because you are a being?


இதற்கான என் மறுமொழியில் எந்த சுவாரசியமும் இருப்பதாகத் தோன்றவில்லை.
*****

மெய் என்றால் என்ன? மெய்யை அறிதல் என்றால் என்ன? சுகம் என்றால் என்ன? அறியப்படுகிற மெய்யில் சுகம் அடங்கியதா இல்லையா ? இருப்பதெல்லாம் மெய் என்றால், சுகம் என்பது ....?

அடுத்து, லைப்ரரி போய் படித்து இன்பம் காணும் வாசக அன்பர்கள், எப்போது தங்கள் பரவச உணர்வை, வாவ்..ஆஹா, ஓஹோ வென, குழந்தைகள் முன் தங்கள், பரவசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்? படிப்பது சுகம் என உணர்த்துவார் யார் ? வீடியோ கேம் விளையாடும் ஒருவரின் பரவச உணர்வின் வெளிப்பாட்டுக்கு முன், நாவல் படிப்போரின் உணர்வு வெளிப்பாடு எம்மாத்திரம்? அதை பார்த்து வளரும் குழந்தைகள், எது சுகமென நினைப்பர்?


படிப்பது சுகம் என்று உணர்த்துவார் யாருமே இல்லை என்றே நினைக்கிறேன். (உரைப்பார் சிலர் உண்டு, உணர்த்துவார்?) சுகம் தேவையே; எனினும் புலன் தொட்ட சுகமும் மனம் தொட்ட சுகமும் வேறு எனும் பொழுது, ஒன்றில் காட்டும் தீவிரம் மற்றதில் இல்லாமல் போகும் போது, எப்படி திருத்துவது?

திருத்த வேண்டும் என்று நினைப்பது தவறு என்றான் என் மகன்: "if you think video games are for the stupid, then stay away daddy"

நன்மையையும் தீமையும் இல்லா இவ்வுலகில், அல்லது ஒன்றான இவ்வுலகில், நெறிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி. அவரவர் வாழ்வு அவரவர்க்கு.

உங்கள் மகனின் ஸ்மார்ட் ஆன பதில் கவர்கிறது. உண்மையில் வீடியோ கேம் விளையாட பொறுமையும், புத்திசாலித்தனமும் நமக்கில்லை என்பதே உண்மை. உங்களால் அதை அனுபவிக்க முடியாத தெரியாத தவிப்பே, அது நல்ல விஷயம் அல்ல என்ற முன்முடிவை உங்களிடம் உருவாக்குகிறது. பின்னாளில் எல்லா செயல்களுக்கும் கணினியையும், ரோபோக்களையும் பயன்படுத்தப் போகும் ஒரு தலைமுறை தன்னை இப்படித்தான் தகவமைத்துக் கொள்ள முடியும். துன்பங்கள் என கருதப்படும் எண்ண அலைகளை இன்ப உணர்வுகளாக மாற்ற சொல்லி கொடுப்பது மட்டுமே, அனுபவம் வாய்ந்த ஒரு பெற்றோரின் கடமை. குழந்தைகளின் வாழ்வில் குறுக்கிட நமக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் தன்னை பார்த்துக் கொள்ளும் வரை, வாழும் வசதிகள் செய்யலாம். வாழ்வில் குறுக்கிட முடியாது.

*****

வரம்புக்குள் அடங்காமல் வாழ்வியலை விவாதித்த காலம் அது. புத்தகம் உருவாக்கும் சாக்கில் பின்னூட்டங்களில் மீண்டும் புதைந்து போனேன். போகிறேன்.

ஏற்கனவே படித்திருக்கலாம் என்றாலும் சுவாரசியமாகத் தோன்றியதால் மீண்டும் படிப்பீர்கள் என்று பதிவிடுகிறேன். அடுத்து வரும் பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனேயே நழுவி விடுவீர்கள் என்ற அச்சமும் ஒரு காரணம் :-).

நீலவண்ணச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க முடிந்ததா?

36 கருத்துகள்:

 1. ஏற்கனவே படித்திருக்கலாம் என்றாலும் சுவாரசியமாகத் தோன்றியதால் மீண்டும் படிப்பீர்கள் என்று பதிவிடுகிறேன். //

  மிகச் சரி மீண்டும் படித்தேன்
  அசைபோட்டுவிட்டு மீண்டும் ஒருமுறை
  படிக்கவேண்டும்
  புத்தக வெளீயீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து..
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 2. நீலவண்ணமே தெரியவில்லை. எல்லாம் ஒரே நிறம். என் கணினி? குட்டு வாங்கிய அனுபவத்தில் ஒன்றை இனம் காண முடிகிறது! அதுசரி, கேள்விகளை இப்போது படித்தவுடன், அந்தக் கேள்விக்கு இப்போது உங்கள் மனதில் தோன்றும் பதில் அப்போதைய உங்கள் பதிலுடன் ஒத்துப் போகிறதா?

  பதிலளிநீக்கு
 3. தேர்ந்தெடுத்துக்கொடுத்த
  அருமையான பகுதிகள் ரசிக்கவைத்தன..!

  பதிலளிநீக்கு
 4. அப்பாதுரை அவர்களே! நசிகேத வேண்பாவின் ஜெராக்ஸ் பைண்டு தொகுப்பை பர்த்திருக்கிறேன் ! தமிழுக்கு நீர் கொடுத்த கொடை என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லுவேன் ! அது நூல் வடிவில் வந்தால் அது ஒரு வரலாற்றுச் சம்பவமாகும் ! ஞானபிட விருது, சாகித்ய அகாடமி விருது என அளிக்கப்படும் தகுதி உள்ள நூலாகும் ! ஆனால் எங்கள் ஊர் பாவிகள் அமெரிக்க பிரஜைக்கு கொடுப்பார்களா என்பது தெரியவில்லை ! ஏன் ? நோபல்விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ! சின்மயானந்தாவின் கீதைப் பேருரைகள், மார்க்ஸ் ஏஞ்சல்ஸ் ஆகியொரின் தத்துவ சிதறல்கள் பின்ணுட்டங்களில் விரவியுள்ளன ! நீர் அமெரிக்கபிரஜை என்பதால் உமது புத்தகத்தை பொட நான் நீ என்று பதிப்பகங்கள் வரும் ! கொஞ்சம் நிதானமாக நண்பர்களொடு பதிப்பக்த்தின் நமபகத்தன்மையை கணக்கில் கொண்டு புத்தகத்தை கொண்டு வாருங்கள் ! மகிழ்ச்சி தரும் செய்தி புத்தகம் வருவது ! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 5. (அதிக) சுவாரஸ்யம்... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. I have been going through this post and half way through I felt I should put a comment when I read about the doctor who burnt the hand of the child when it came out first. But I also heard from the doctor's mouth himself that usually the head should come out first followed by legs. Accidentally, if legs come out, then the doctor creates a mild burning sensation on the legs so that the child can pull it inside. How far it is medically possible I do not know but this I heard from the doctor's mouth.

  பதிலளிநீக்கு
 7. Sorry Appadurai Sir, I could not complete the reading. It is really boring may be it requires deep application of mind to understand it coupled with sound knowledge of history, which I am lacking very much.

  பதிலளிநீக்கு
 8. அருமையான தொகுப்பு...
  படிக்கக் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. அப்பாதுரை அவர்களே! என் தாயரின் தாய் மாமன் (இப்போது இருந்தால் 150 வயது ) திருவனந்தபுரத்தில் டாக்டர்! R.M.P (regiaterd medical practishaner) ! மாடு முட்டி வயிற்றில் உள்ள சிசுவின் கை வயிறிலிருந்து வேளியெதெரிய அதனை திருப்பி உள்ளே அனுப்ப கையில் துணியால் கிசுகிசு மூட்டினார் என்பார்கள் ! சென்னையில் மிகப்பிரபல டாக்டர் (இவர் சில பொது மருத்துவ மனையில் இருக்கிறதாம்) இதே போன்று சிகிச்சை செய்ததாக சொல்வார்கள் ! மேல நாட்டில் ஒரு டாக்டர் சிகரெட்டை பயன்படுத்தினார் என் பர்கள் !இயவை எல்லாமே கர்ண பரமரைக்கதைகள் இவற்றிர்க்கு மருத்துவ விஞானத்தில் சான்றுகள் இல்லை !நம்புவதற்கும் வாய்ப்பில்லை !---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 10. அப்பாதுரை அவர்களே! நசிகேத வேண்பாவின் ஜெராக்ஸ் பைண்டு தொகுப்பை பர்த்திருக்கிறேன் ! தமிழுக்கு நீர் கொடுத்த கொடை என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லுவேன் !
  ---இந்த வரிகளை நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 11. பின்னூட்டங்களுக்கு நன்றி.
  காஸ்யபன் - மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. மோகன் - விழுந்து விழுந்து சிரித்தேன். இதுக்கே இப்படி சொல்றீங்களே..? 'நானும் என் கடவுளும்'னு சுவாரசியமான ப்லாக் பெயர் கொண்டவருடன் நாங்கள்ளாம் கலந்துகிட்ட கருத்துப் பரிமாற்றம் எல்லாம் படிக்க வேண்டாங்களா? அட்ரஸ் கொடுத்தனுப்புங்க.. ப்ரின்ட் பண்ணி நாலு காபி அனுப்புறேன்.

  பதிலளிநீக்கு
 13. மோகன்..
  என் கிட்டே அந்த மாதிரி ஒரு டாக்டர் சொல்லியிருந்தா வாயிலயே ரெண்டு போட்டிருப்பேன். (டாக்டர் கலைஞர் டாக்டர் ஜெயலலிதாவா இருந்தாலொழிய.. ஒரு வேளை உங்க கிட்டே அப்படிச் சொன்னது டாக்டர் கமல்ஹாசனோ?)

  குழந்தை கருவிலிருந்து வெளிவரும் பயணத்தைத் தொடங்கி.. நீரணை உடைந்து.. இயற்கையாக வெளியே வந்த உறுப்பை எந்த வகையிலாவது திரும்பப் பெறும் வாய்ப்பு இருக்கிறதா? இதைப் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம் - சிந்திக்க விரும்பினால்.

  சமயோசிதமாக நடந்து கொள்வதில் தவறில்லை - ஆனால் அதிலும் முறை இருக்கிறது. ஏதோ டாக்டர் சொன்னார் என்பதற்காக இதையெல்லாம் நம்பினால் நமக்குத்தான் அசிங்கம் :). பிறந்த சிசுவை சுத்தம் செய்வதற்கு முன்போ பிறகோ அதன் reflex எப்படி இருக்கிறது என்று பார்க்க மெலிதான தொடல்களை மருத்துவர்கள் செய்வதுண்டு - ஆனால் குழந்தை வெளியே வருகையில்.. அதை வெளியே எடுத்தால் போதும் என்ற நிலையில் தான் இருப்பார்கள் - மருத்துவர்கள், தாய், பேராமெடிக்ஸ், நர்ஸ் அத்தனை பேரும். கொஞ்சம் யோசிப்போம்.. அந்த நிலையில் சிகரெட் பாகெட்டும் தீப்பெட்டியும் தேடும் டாக்டர்.. ரஜினிகாந்தாக இருந்தால் அது வேறு விஷயம்.

  ஒரு வேளை அந்த டாக்டர் அப்படிச் செய்திருந்தால் அது மருத்துவத் துறைக்கே இழுக்கு மட்டுமல்ல, சட்ட விரோதமும் ஆகும். அறியாத குழந்தையை சிகரெட்டால் சுட்டதற்கு தண்டனை என்னவென்று தெரியாது.

  குழந்தை பிறப்பை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெற்ற ஆண்கள் இதை நம்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். கர்ப்பிணி மனைவிகள் தடுமாறி கீழே விழுந்தால் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்கள் நிறைந்த நம் சமூகத்தில் இது போன்ற டாக்டர்களின் பொன் மொழிகள் வைரங்களாகின்றன என்பதில் வியப்பில்லை.

  சரி, பெண்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள்?. தானாக வெளியே வரும் சிசு, புறவிசைக்குக் கட்டுப்பட்டு பயணத்தை மாற்றிக் கொள்ளுமா? அப்படி மாற்றிக் கொண்டால் சிசுவுக்கும்.. குறிப்பாக தாய்க்கும்.. என்ன ஆகும்? அப்படியே.. ஒரு டாக்டர் குழந்தையை சிகரெட்டால் சுட்டால் சும்மா இருப்பார்க்ளா? (புருஷன் மா..ர் கொடுமைகளையே சர்வ சாதாரணமாகச் சகித்துக் கொள்ளும் பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம் என்கிறீர்களா.. நான் அந்தப் பக்கம் போகவில்லை. பரம ஞானி பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதைக் கேட்க வேண்டாமா?).

  பதிலளிநீக்கு
 14. //இதற்கான என் மறுமொழியில் எந்த சுவாரசியமும் இருப்பதாகத் தோன்றவில்லை.// அடித்துச் சொல்கிறேன், இந்த பதிவில் நீங்கள் தொகுத்த, நீங்கள் அளித்தம் நீங்கள் பெற்ற மறுமொழிகளில் இது தான் மிக சுவாரசியமான மறுமொழி

  நசிகேத காலத்தில் நான் வலையுலகில் பிறந்திருக்கவில்லை... வேதம் அத்வைதம் எதுவுமே புரியவில்லை, ஆனால் பின்னூட்டங்களும், பின்னூட்ட மறுமொழிகளும் ஒரு சுவாரசியமான நாவல் படிப்பது போன்று இருந்தது...

  சத்தியமாய்ச் சொல்கிறேன், வேதம் அத்வைதம், நசிகிதன் எல்லாமே எனக்குப் புதிது...

  நசிகிதம் பற்றி நீங்கள் எழுதியாதை ஒருமுறை ஸ்ரீராம் வகுப்பெடுத்தார், அப்போது முத்தால் தான் இவ்வார்த்தை எனக்குப் பரிட்ச்சியம்

  பதிலளிநீக்கு
 15. புத்தக வெளீயீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து..
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 16. நசிகேத வெண்பாவை நீங்கள் எழுதிய போது படிக்கவில்லை. புத்தகமாக வெளிவருவது குறித்து சந்தோஷம். மற்றபடி நீங்கள் எழுதி இருக்கும் பின்னூட்டங்களையும், அதற்கான பதிலையும் ரசித்தேன். மறுபடி வரேன். :)))

  ஹிஹிஹி, அங்கே போய்க் கமென்டினவங்க யாருனு தெரிஞ்சுண்டு திரும்பி வரலாம்னு தான்.

  பதிலளிநீக்கு
 17. டாக்டர் ரங்காச்சாரியைத் தான் மேலே சொன்னாப்போல் செய்ததாய்ச் சொல்வார்கள். நிஜமா, பொய்யானு எல்லாம் தெரியாது! இது சாத்தியமானு கேட்டால் இல்லைனு தான் என் பதிலும். :)))

  அப்பாடி, அப்பாதுரையோட ஒரு விஷயத்திலாவது ஒத்துப் போயிட்டேனே! ஹையா, ஜாலி!

  பதிலளிநீக்கு
 18. நான் பதிவெழுத வந்த தொடக்கத்தில் நசிகேத வெண்பாவை பாதியில் இருந்து படித்து வந்தேன். என் மனதை பாதித்தது உண்மை. நூலாக வெளிவந்த பின் முழுவதும் படிக்க ஆவல்.
  உண்மையில் போற்றப்டவேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

  பதிலளிநீக்கு
 19. நசிகேத வெண்பா புத்தக வடிவில் வருவது தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம். உங்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். பின்னூட்டங்களை படித்து பழைய நினைவலைகளை மீட்டு கொடுத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. நசிகேத வெண்பா மாதிரி கம்ப இராமாயணத்தை வெண்பா வடிவில் கொடுக்க முடியமா அப்பாதுரை? நல்ல தமிழ் படித்து நாளாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
 21. நசிகேத வெண்பா மாதிரி கம்ப இராமாயணத்தை வெண்பா வடிவில் கொடுக்க முடியமா அப்பாதுரை? நல்ல தமிழ் படித்து நாளாகிவிட்டது.//

  2013 ஆண்டு துவக்கத்தில் இல்லை அதற்கு முன்போ ந.வெ படிக்க என்னை அழைத்தபோது ,

  நான் அதன் முன்னுரை ஒன்றை படிக்க நேரிட்டது. அதில் அவர் அந்த நூலினை எப்படி அணுகினார் எனவும் சொல்லியிருப்பதை பார்த்தேன்.

  சிலவை அங்கே கண்டவை அவருக்கு சம்மதம் இல்லை என்பதால் அவைதனை சிலுவையில் அறைந்துவிட்டு,

  பின் அறிவுக்கு உகந்தவை என்பவனவற்றை ஒரு வெண்பா ஆகத் தொகுத்து இருக்கிறார் எனவே தான் நினைக்கிறேன்.

  ஆக, நசிகேத வெண்பா மூலத்தின் பிரதிபலிப்பு இல்லை. சில விடப்பட்டு இருக்கின்றன. சில சொருகப்பட்டு இருக்கின்றன. சில வலிந்து பொருள் கூறப்பட்டு இருக்கின்றன என்று நினப்பதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.
  தூய பாலில் கொழுப்பு சத்து அதிகம் என்பதால் அது சிலருக்கு ஒத்துக்கொள்வது இல்லை . பலர் அதிலிருந்து கொழுப்பை எடுத்து விட்டு நீர்த்துப்போன ஒரு திரவத்தை உபயோகிப்பார்கள். தவறில்லை. ஆயினும் இது அதே பால் தான் என சொல்லிட இயலுமா என்ற ஐயம் உள்ளது .

  உலகத்தே பல் நூற்றாண்டுகளாகக் காண்பவற்றை, படிப்பவற்றை, இருப்பதை உள்ளதை உள்ளவாறு சொல்வதை விடுத்து , தனக்கு உகந்தவாறு , தாம் ஏற்றுக்கொண்டுள்ள கருத்துகளுக்கு உகந்தவாறு பொருள் கொள்வது, அது தான் சொல்லப்பட்டும் இருக்கிறது என்று தமது மொழித் திறமையால் நம்பவைப்பது நாம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பார்ப்பதுவே.

  இத்தனை சொல்லினும்,
  அப்பாதுரை சாரின் நசிகேத வெண்பா
  நமது நாசிக்கு நறுமணம் கொணர்கிறது. ஐயமில்லை.

  புதிய வானம் புதிய பூமி, எங்கும் பனி மழை பொழிகிறது.
  ஸ்விட்சர்லாந்து போக இயலாதவர்
  கோடம்பாக்கம் ஸ்டூடியோவுக்குச் செல்லும் வாய்ப்பு.

  அனுபவி ராஜா அனுபவி.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 22. //உலகத்தே பல் நூற்றாண்டுகளாகக் காண்பவற்றை, படிப்பவற்றை, இருப்பதை உள்ளதை உள்ளவாறு சொல்வதை விடுத்து , தனக்கு உகந்தவாறு , தாம் ஏற்றுக்கொண்டுள்ள கருத்துகளுக்கு உகந்தவாறு பொருள் கொள்வது, அது தான் சொல்லப்பட்டும் இருக்கிறது என்று தமது மொழித் திறமையால் நம்பவைப்பது நாம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பார்ப்பதுவே.

  ஐம்பது வருடங்களா... மிச்ச ஆயிரக்கணக்கான வருடங்களை எங்கே தொலைச்சீங்க சூரி சார்? விஷ்ணுவோட தொப்புள் கொடி என்ன 'உள்ளது உள்ளவாறா'? அசல் கடோவில் எமதூதர்கள் நசிகேதனை அழைத்துச் செல்வது என்ன உள்ளது உள்ளவாறா? தன் அம்மா இறந்தவுடன் கொடுத்த வாக்குப்படி எங்கருந்தோ சட்டுனு வந்தார் ஆதிசங்கரர் என்கிறது உள்ளது உள்ளவாறா? மண்ணைத் தின்ன குழந்தை வாயில் அண்டசராசரம் தெரிந்தது என்பது உ உ? நான் கேட்கிறேன் சூரி அவர்களே உ உ? உ உ? உ உ? உள்ளது உள்ளவாறுனா செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணமூர்த்தியைத் தான் கேக்கணும் (அது கூட நாராயணசாமியோ?).

  கொஞ்சம் படிச்சீங்கன்னா உள்ளதை உள்ளவாறு ஏற்கவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே நசிகேத வெண்பா என்பது புரிந்துவிடும். (மொழித் திறமையா.. ஹிஹி.. ரொம்பதான் போங்க சார்)

  பதிலளிநீக்கு
 23. I am sorry U R away from the crux of what I thought. Perhaps I did not communicate enough.

  What I intend saying is that the NASIKETHA VENBA does not pretend in the least as the verbatim translation of the KATOPANISHAD. You have yourself pointed out this at the preamble.

  The inner core or crux of the Upanishad is what U thought has to be translated as you were , if I may say so, drawn towards its inner meaning, peeling away in the process the outward manifestations.

  References to God or Almighty have been, according to you, sidelined in such a way, albeit ,that the content remains in tact.

  What is suggested in my previous comments, is simple.

  YOUR WORK, VERILY A MASTER PIECE OF IMMENSE VALUE TO MODERN LITERATURE, IS NOT A TRUE OR VERBATIM TRANSLATION OF KATOPANISHAD.

  Secondly, the reference to the last fifty years is to the current spate of translations of ancient literature, such as Tirukkural etc. Several Translations are in the field true to the mindset of the scholars who translated them, though not consistent with Parimelalagar,manakkudavar,kalingar and the like. Depending upon what they thought about God , people who belonged to different denominations of religious groups, freely translated KURAL. Atheists agnostics have their own versions.

  This is not to dispute their versions, as they are true for them. There is no even faint attempt here to dispute their honesty or intellectual integrity.

  Thirdly, the second paragraph in your comments , perhaps, was the one you thought is inconsistent with the soul of what this upanishad , in your understanding, said. May I say, this lies in your realm of understanding. I am nobody to question your assumptions or finality of conclusions.

  Eno's Paradox comes to my mind. But I choose not to deliberate on it.

  BTW, who is Saroj Naranamoorthy? or Narayanasamy ? There is one MOS in PMO's office. I hope u r not referring to him.

  To conclude,
  I did read a few ( a few only ) here and there in NASIKETHA VENBA.
  I have no hesitation in reiterating the work is a MASTERPIECE of an erudite scholar. (possibly edging ahead of contemporary worldly mortals)

  I just wondered in case you happened to translate Kamban, you would adopt the same underlying principles .

  And that is why I started commenting. It appears to me, that I could have refrained from commenting, as I thought earlier.


  subbu thatha

  பதிலளிநீக்கு
 24. agreed suri sir. i wasn't challenging your comment.
  i culled out the 'உள்ளது உள்ளவாறு' expression and spun it around because i thought it was interesting observation. i know your comment had nothing to do with my version of nasiketha venba.. but it aligns with my view of we as a society normally do or have done for centuries.

  reality is never reality for us. utterly meaningless in itself. we infuse our inhibitions into a simple reality and view it through our emotions - suddenly reality becomes a kaleidoscope of contradictions and illusions. that is the reason we live with a range of punctured reality. we cannot trust our own loved ones.

  most of us not only fail to view "it is what it is" but also fall victim to our own shadow view of "it could be what it is not".

  imo, 'உள்ளது உள்ளவாறு' is never practiced.. it is one of the biggest oxymorons of civilization.

  we always imagine something where there is nothing to imagine, because we let our imagination supercede plain reality - kankalukku therivathellaam kaatchi aavathillai, arivukku (allathu muttaaL thanathukku) enna thonrukiratho athu thaan kaatchi aahirathu. existentialism leading to nihilism, strange isn't it?

  உள்ளது உள்ளவாறு never happens except when delivering news (even there we see oodles of spin). saroj narayana was a radio news reader from my teenage days.. :)

  பதிலளிநீக்கு
 25. /but it aligns with my view of we as a society normally do or have done for centuries.

  but it aligns with my view of what we as a society normally do or have done for centuries.

  பதிலளிநீக்கு
 26. உள்ளது உள்ளவாறு reminds me of a film song profoundly written by kannadasan (poorly rendered by jesudos :). oviam enraal ennavenru therindhavar illai; kurudargal ulagil kangal irundhaal athu thaan thollai.

  பதிலளிநீக்கு
 27. //கம்ப இராமாயணத்தை வெண்பா வடிவில் கொடுக்க முடியமா

  ஆசையா நம்பிக்கையா? கனவிலும் கடினம் குரு.

  சிந்தித்து வரும் ஒரு ப்ராஜக்டில் நல்ல தமிழுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன். பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 28. நல்ல தமிழை விரைவில் கொடுங்கள் அப்பாதுரை அவர்களே! (அது என்ன பிராஜெக்ட் ? ரகசியமாக எனக்கு மட்டும் சொல்லிவிடும் )---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 29. I haven't read your "Nachiketa Venba"- though occasionally might have hovered over it. I am not intending to read it- any time soon- as I am in the middle of this "experiment"- called "acting my age".
  Nice to know that it's getting published! That would be worth reading when I get there- that age and time...
  "Rationalism" and "Atheism"- when would people stop mixing them up!?

  பதிலளிநீக்கு
 30. //Rationalism" and "Atheism"- when would people stop mixing them up!?//

  Good that youngsters do have a question of this kind or nature in them.

  Did go thro '
  www.maithuli.blogspot.com

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 31. //தன் அம்மா இறந்தவுடன் கொடுத்த வாக்குப்படி எங்கருந்தோ சட்டுனு வந்தார் ஆதிசங்கரர் என்கிறது உள்ளது உள்ளவாறா?//

  அப்பாதுரை, ஆதிசங்கரர் தன் அம்மா இறந்தவுடன் வந்தார் என்பதே தவறு. அவர் சன்யாசம் வாங்கி கொள்ளும்போது அவரது தாயார் ஒரு சத்தியம் வாங்கி கொள்கிறார். அது என்னவென்றால், தான் இறக்கும் போது தனது மகனின் மடியில் தான் இறக்க வேண்டும் எனவும், தன்னை தனது மகன் தான் கொள்ளி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறார். இதற்கு ஆதிசங்கரர் ஒப்புக்கொள்கிறார். அதே போல, தனது தாய் உயிருடன் இருக்கும்போதே கடைசி காலத்தில் ஆதிசங்கரர் காலடிக்கு திரும்பி விடுகிறார். இறக்கும் தருவாயில் உள்ள தாயாரின் விருப்பப்படி ஆதிசங்கரர் கிருஷ்ணரிடம் தனது தாய்க்கு காட்சி கொடுக்கும்படி வேண்டிக்கொள்கிறார். கிருஷ்ணரும் அதற்கு இணங்கி உடனே காட்சி தருகிறார். அப்போது தான் அவரின் உயிர் பிரிகிறது. நீங்கள் கூறியது போல 'அம்மா இறந்தவுடன் கொடுத்த வாக்குப்படி எங்கருந்தோ சட்டுனு வந்தார் ஆதிசங்கரர்' என்பது தான் புருடா.

  இதை தங்களின் 'பகுத்தறிவுவாதம்' ஏற்றுக்கொள்ளாது என்பது எனக்கு தெரியும். உங்களின் 'உள்ளது உள்ளவாறு' வாதத்தின் படி 'மின்சாரத்தை கண்ணால் கண்டவர் யாரும் இல்லை. அதனால் மின்சாரம் என்று ஒன்றே கிடையாது' என்பது போல் உள்ளது. என்ன செய்வது, ஆதிசங்கரர் காவி அணிந்து விட்டாரே !

  அடுத்த வெண்பாவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 32. //when I get there- that age and time...
  Nasiketha venba retells the story of a precocious/prodigious child. is it ever easy to get back on time..? :).

  பதிலளிநீக்கு
 33. நன்றி expatguru. அப்போ 'உள்ளது உள்ளவாறு' க்ருஷ்ணர் காட்சிக்கு மாத்திட வேண்டியது தான்.

  இதுல பகுத்தறிவை எங்கருந்து பிடிச்சீங்க?

  பதிலளிநீக்கு
 34. புத்தகம் உருவாக்கும் சாக்கில் பின்னூட்டங்களில் மீண்டும் புதைந்து போனேன். போகிறேன். //
  புத்தகம் உருவாக வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 35. நசிகேத வெண்பா முடியும் தருவாயில் வாசிக்கப் புகுந்தேன் எனினும் எல்லாப் பகுதிகளையும் பின்னூட்டம் உட்பட கணினியில் சேமித்துக் கொண்டேன். முழுதுமாக இன்னும் வாசித்த பாடில்லை.இப்‌பதிவையும் இணைத்து விட்டேன். என் மகளுக்கும் மகனுக்கும் பொக்கிஷமாக.

  பதிலளிநீக்கு
 36. anbu nabare

  theevira vivadham matrum karuthu parimatram niraya vishayangalai therinthu kolla ethuvagirathu

  eenaiyorai pol puthagam kurithu kaathirukkiren

  பதிலளிநீக்கு