2012/09/17

'கருகமணி'

"இன்றையப் பின் நவீனத்துவ வாதிகள் எழுப்பும் இலக்கியக் கூச்சலை இவர் புரியும்படி ஓசைப்படாமல் செய்து வருகிறார். இதுவே இவரது தனி முத்திரை"

- 'கருகமணி' நூலுக்கான அணிந்துரையில் சு.சமுத்திரம்


    திரு.காஸ்யபனின் எழுத்து எனக்கு அறிமுகமானதே.

தனக்கெனத் தனிப்பாணி ஏதுமில்லையென்று காஸ்யபன் சொன்னாலும், 'திடுக்கிடும் வகையில் ஆழமான கருத்துக்களைச் சொல்வது இவருக்கு நன்றாக வருகிறது' என்று நான் நினைப்பதுண்டு. இவர் அளித்தத் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் இதே கருத்தை இவரது நண்பர்கள் வெளிப்படுத்தியதாகத் தெரிந்ததும் ஆச்சரியமாக (ஆறுதலாகவும்) இருந்தது.

அவரது வலைப்பூவில் நிறைய படித்தும், பின்னூட்டங்களில் உரசியும், அவருடைய தளம் பற்றிய தெளிவான எண்ணம் எனக்கு உண்டு. இருந்தாலும் எதிர்பாராத அதிர்ச்சியை அவ்வப்போது வழங்குவது அவருடைய பாணி. சிறுகதையாகட்டும், சமூகப் பார்வையாகட்டும் இவர் எழுத்தின் நுட்பம் சாலையோரத் திருப்பத்தில் எதிரில் வந்தவர் மீது எதிர்பாராமல் இடித்துக் கொண்ட அனுபவத்தை ஒத்தது. இடித்தது வலியா இன்பமா என்பது இடிபடும் பொழுது தானே தெரியும்?
தான் கதை எழுதும் முறையை இவர் பேட்டியில் விளக்கியிருக்கிறார். சிறுகதை எழுத விரும்பும் அனைவருக்கும் உபயோகமானத் தகவல். [காஸ்யபன் ஐயா: 'வாத்தியாரைக் குழப்பும் மாணவன்' போல் கதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதில் தவறில்லை என்று நினைக்கிறேன். வாசகரின் கற்பனைக்கும் சிறிது ஈயவேண்டும் என்பது என் கருத்து].

    காஸ்யபன் அவர்களின் 'கருகமணி' சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினொறு சிறுகதைகள். அச்சும் பதிப்பு நேர்த்தியும் சுமார். படிக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனால், கதைகள் அந்தச் சிரமத்தைச் சடுதியில் மறக்கச் செய்கின்றன.

சமூக நியதிகள் - அதன் வலிமை, நேயம், வேடம், மற்றும் பொய்மைகளினால் உண்டாகும் சிக்கல்களே இவருடையச் சிறுகதைகளின் தளம் என்பேன். சரித்திர மற்றும் புராணப் பின்புலத்தில்
கூட சாதிச் சிக்கல்களைத் தொட்டிருக்கிறார், ஆதிக்க முகமூடிகளை அடையாளம் காட்டியிருக்கிறார். கடவுள் மதம் சடங்கு தொட்ட மூட நம்பிக்கைகளைச் சாடும் பொழுது இவர் எழுத்தின் உக்கிரம் முழுமையாகப் புரிகிறது. சிலிர்க்க வைக்கிறது. சாதி பற்றிய மூட நம்பிக்கைகளைச் சாடுகையில் மட்டும் ஏனோ அரை கிணறு தாண்டுவதாக நினைக்கிறேன். 'ஒடுக்கப்பட்டச் சாதிகளுக்குச் சலுகைகளும் உதவிகளும் வழங்கப்பட வேண்டும்' என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறார். இது முற்போக்கா என்பதில் எனக்குக் குழப்பம் உண்டு. "தம்பி, நீ தாழ்த்தப்பட்டவன், அதனால் இந்தா உனக்கு அதிகமாக ஐந்து ரூபாய்" என்று தருவது உதவியா, உபத்திரவமா? சலுகைகளை வளர்ப்பது, சாதிகளை வளர்ப்பது போலாகாதோ? (சாதி அடிப்படையிலான சலுகைகளைப் பற்றிய என் கருத்தைப் பின்னூட்டத்திலோ இன்னொரு பதிவிலோ பகிர்ந்து கொள்கிறேன். தொகுப்புக்கு வருகிறேன் :-)).

எல்லாக் கதைகளுமே வாசகரை - சிலிர்ப்போ, நடுக்கமோ, அச்சமோ, கலக்கமோ, வருத்தமோ, சோகமோ, அதிர்ச்சியோ - ஏதோ ஒரு விதத்தில் ஒன்றிரண்டு நிமிடங்களாவது பாதிக்கக்கூடியவை.

    தொகுப்பின் முதல் சிறுகதை, 'அவளும் அந்த அவளும்'. புராணத் திரௌபதியும் பாமரப் பாஞ்சாலியும் சந்தித்து உரையாடுவதே கதையின் கரு. பாஞ்சாலிக்கும் திரௌபதிக்கும் வாழ்வில் நிறைய ஒற்றுமைகள் - ஐந்து பேருடன் படுக்க நேர்ந்தது உள்பட. பேச்சு
வாக்கில் திரௌபதி தன்னுள் புதைத்து வைத்திருந்த சோகம் ஆத்திரம் கோபங்களை வெளிப்படுத்துகிறாள். கதையின் தொடக்கத்தில் இருவரும் சந்திக்கும் பொழுது, திரௌபதி என்று தெரிந்ததும் பாஞ்சாலி கேட்கிறாள், "யாரு தர்மபுத்திரன் பெஞ்சாதியா...?" என்று. திரௌபதி தயங்காமல், "...தர்மபுத்திரனிலிருந்து அவன் சித்தி மகன் சகாதேவன் வரை.." என்று பதில் சொல்கிறாள். கதையை இந்த இடத்தில் ஐந்து நிமிடமாவது அசை போட்டிருப்பேன். திரௌபதி சொல்லும் ஒரு வரி பதிலில் எத்தனை வேகம், எத்தனை ஆழம்! இந்தப் பெண்ணின் எத்தனைக் கனவுகள் குப்பையில் விழுந்திருக்க வேண்டும்! எத்தனைப் பொழுதுகள் ஊமையாக அழுதிருக்க வேண்டும்! ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைப் பொன் போல் நடத்துகையில் ஒரு புழுவைப் போல் நடத்திய, ஒன்றல்ல ஐந்து கணவர்களையும், ஆன்றோர் சான்றோர்களையும், ஏன் கடவுளெனப்படும் கண்ணனையும் நினைந்து அவள் எத்தனை எரிந்திருக்க வேண்டும் உள்ளுக்குள்! திரௌபதி-பாஞ்சாலி உரையாடலை மையமாக வைத்துத் தன்னுடைய நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். தன் மானத்தைக் கண்ணன் காப்பாற்றவில்லை, கெடுத்தான் என்கிறாள் திரௌபதி, கதையில். 'ஏன் அப்படிச் சொன்னாள்?' என்று தெரிந்து கொள்ள, கதையை
அவசியம் படிக்க வேண்டும். உச்சந்தலையில் ஏறிக் குதிகால் வரைப் பரவும் அதிர்ச்சி. ஆணாதிக்கம் பற்றிய நுட்பமானப் பார்வை, உண்மை தானோ என்று சிந்திக்க வைத்தது. எத்தனை முறை படித்தாலும் எழுச்சியூட்டும் கதையில் குறை என்னவென்றால் முடிவு தெளிவாக இல்லை, தலைப்பும் பொருந்தவில்லை.

    "நாராயணா நாராயணா.." எனும் கதை, சிரார்த்த நாட்களில் இறந்து போனவர்கள் ("பித்ருக்கள்") வந்து உணவருந்திப் போவதான கலாசாரக் கோட்பாட்டை, நம்பிக்கையைக் கொஞ்சம் உடைத்துப் பார்க்கிறது. தந்தைக்குத் திவசம் செய்யும் பிராமணப் பெரியவர், தன் வீட்டுக்கு வந்து உணவருந்திப் போகும் அழகானச் சிறுவனின் பெயர் 'தாவூது' என்று தெரிந்ததும் ஒரு கணம் அதிரும் பொழுது, நானும் அதிர்ந்தேன். அதிர்ந்த வேகத்தில் பெரியவர் அதை ஏற்று நிறைவடையும் பொழுது நானும் நிறைவை உணர்ந்தேன். இது காஸ்யபனின் எழுத்துக்கு வெற்றி.

    'பத்மா நதிக்கரையில்..' சிறுகதை நவகாளிக் கலவரங்களைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. இந்தியக் கலாசாரத்தின் முகமூடியைக் கிழிக்கும் ஒரு கதை. பெண்களை மதிக்கிறோமா மிதிக்கிறோமா என்றுச் சிந்திக்க வைக்கும் கதை.

    'படிப்பாயாசம்' கதையில் ஒரு பள்ளி ஆசிரியர், 'நன்றாகக் கட்டுரை எழுதிய மேல் சாதி மாணவனுக்குப் பரிசு வழங்குவதற்குப் பதிலாக, கல்வி என்பது மரபணுவிலும் சிதைந்து போனச் சாதாரணப் பாமர மாணவன் சிரமப்பட்டு எழுதிய சுமாரான கட்டுரைக்கு பரிசு வழங்க வேண்டும்' என்றுப் போராடித் தோற்கிறார். கதையின் செய்தி பாதித்த அளவுக்கு என்னை உலுக்கிய இன்னொரு விவரம், 'படிப்பாயாசம்' என்ற சடங்கு! பிரம்ம ராட்சசனாக இருந்த இந்திரன் சாப விமோசனம் பெற்றச் சடங்கின் தொடர்ச்சியாகக் கோவில் படிகளில் பட்டர் பாயசம் ஊற்ற, அதை ஊர்ப்பிள்ளைகள் நக்கிக் குடிப்பார்களாம்! இன்றையக் காலக்கட்டத்து இந்திய அரசியல் கொள்கைகளுக்கும் ஒத்துப் போகும் கதை. அறுபது வருடங்களுக்கு மேலாக அதே இடத்திலா நின்றுகொண்டிருக்கிறோம்? சே, என்ன மனிதர்கள் நாம்! குறுகிப் போகிறேன்.

    மதுரை 'ராஜ்ஜியத்தை' சந்தா சாகிப் அபகரித்த போது, மீனாட்சி கள்ளழகர் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுப்புறக் கோவில்களையும் சிலைகளையும் பாதுகாக்க/பராமரிக்க ஏற்பட்ட சிக்கல்களைப் பின்புலமாகக் கொண்ட, ஆதித்ய ஹ்ருதயம் சொல்லும் பக்தர் அல்லாவின் நிழலையும் உணரும் அருமையான கதை 'தேன் கலந்த நீர்!'. (அரைகிணறு தாண்டும் செய்தி :-).

    தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு சிறுகதைகள், 'ஜகதா' மற்றும் 'கருகமணி'. தொகுப்பின் சிறந்த கதையாக இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய மிகவும் சிரமப்படுகிறேன். தேர்வுத் தராசில் ஒன்று மாற்றி ஒன்று இறங்கிக் கொண்டே இருக்கிறது. எண்ணங்களை அப்படியே தருகிறேன், என் தேர்வு உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்களேன்?

    a. ஜகதா: தினசரிச் சிக்கல்களில் தவித்து நேரமில்லாமல் அல்லாடும் ராகவன்-லட்சுமி குடும்பத்தில் வீட்டு வேலை பார்க்கும், பள்ளிக்குப் போக வேண்டிய, அறிவுள்ள பதினொரு வயதுச் சிறுமி ஜகதா. மழை கசகசக்கும் ஒரு வாரத்தில் ஜகதா தினம் அதிகாலையில் தூக்கம் குறை காரணமாகத் தாமதமாக வருவதால், எரிந்து விழுகிறாள் லட்சுமி. லட்சுமியின் கோபத்துக்கு அஞ்சினாலும் விவரம் புரியாமல் கண்களில் கண்ணீர் தேங்க நிற்கும் சிறுமியான ஜகதா, "இரவு தினம் சினிமாவுக்குப் போனதாக"க் காரணம் சொல்கிறாள். கோப எல்லைகளைக் கடந்து, "இனி வேலைக்கு வர வேண்டாம்" என்று ஜகதாவை நிறுத்திவிடுகிறாள் லட்சுமி. தடுக்கும் கணவனை "..இப்படித் திமிரா இருக்கா.. வாரத்துல நாலு நாள் லேட்டு..அவ்வளவு வேலையும் நான் தான் செய்யணும்... என் தலை விதி! இங்கே வீட்டுலயும் சாகணும்.. அங்கே பள்ளிக்கூடத்துல பிள்ளைகளோட மாரடிக்கணும்!" என்றுப் பொருமி ஒடுக்குகிறாள். "சாயந்திரம் அம்மத்தாக் கிழவியை அழைச்சுட்டு வரச்சொல்லி, கணக்குத் தீர்த்து அனுப்பிடுங்க" என்கிறாள் கணவனிடம். மாலை ஜகதாவும் அம்மத்தாவும் வந்து லட்சுமியிடம் பேசுகிறார்கள். "இத பாரு அம்மத்தா.. நான் வேலை செஞ்சு அவளுக்கு சம்பளம் தர முடியாது" என்று லட்சுமி அவளிடமும் பொருமுகிறாள். "பாவம் தூங்கிட்டுமா.. சின்னப் புள்ள தானே?" என்கிறாள் அம்மத்தா. "தினம் ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்தா?" என்று ஆத்திரப்படுகிறாள் லட்சுமி. "ஏம்மா.. இத்தனூண்டுப் பிள்ளையைத் தினம் ராச்சினிமா அனுப்பலாமா?" என்று கேட்டு ராகவன் சேர்ந்து கொண்டதும், அம்மத்தா அடக்க முடியாமல் அழத்தொடங்குகிறாள். "நிர்த்தாட்சண்யமாக" முறைக்கும் லட்சுமியிடம் முறையிடுகிறாள் அம்மத்தா. "நான் என்ன செய்யட்டும்? பேரனுக்கு இப்பத்தான் கல்யாணமாச்சு.. குடிசைல ஒரே ஒரு மறப்புத்தா. நானும் இந்தப் பிஞ்சும் ரோட்டுல படுக்கம். மழைத்தண்ணிக்கு என்ன செய்ய? அதான் கீத்துக் கொட்டாய்க்கு அனுப்புதம்!" என்று அம்மத்தா சொல்ல, லட்சுமி விதிர்த்துப் போகிறாள்.

பதினொரு வயதுச் சிறுமியை இரவுச் சினிமா அனுப்ப வேண்டியக் காரணம் புரிந்த அதிர்ச்சியில் தொண்டை அடைத்து கண்களில் நீர் முட்ட வைத்தக் கதை, இங்கே முடியவில்லை. முடிவைச் சொல்லப் போவதில்லை. அன்று இரவு தங்கள் வீட்டின் கூரை வேய்ந்த வசதியானப் படுக்கையில் லட்சுமி-ராகவன் வெளிப்படுத்தும் எண்ணங்கள் வழியே அற்புதமாகக் கதையை முடித்திருக்கிறார் ஆசிரியர்.

இரவு விளக்கைப் போட்டதும் தலை முதல் கால் வரை பறந்து படபடக்கும் கரப்பான் பூச்சிகள் போல கதையின் கருவும் நடையும் ஒட்டிக் கொண்டு படுத்துகின்றன. அலறியடித்து விலக நினைத்தாலும் சிக்கிக் கொண்ட உணர்வு. உரைநடையின் வழக்கு கொக்கி போட்டு இழுக்கிறது. மதுரை, திருநெல்வேலி வட்டத் தமிழ்வழக்கு என்று நினைக்கிறேன். ரசித்து மாளவில்லை. (அம்மத்தா என்றால் பாட்டியா?)

தெலுங்கு, மராட்டி, வங்காளி, ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும், ."சார்க்" நாடுகளின் தொகுப்பிலும் சர்வதேசக் கதையாக வந்துள்ளது 'ஜகதா'. காஸ்யபனின் துணைவியார் திருமதி. முத்துமீனாட்சியால் சமஸ்கிருதத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தி மொழிபெயர்ப்பு, நல்லியின் "திசை எட்டும்" விருதைப் பெற்றுள்ளது. முத்துமீனாட்சி அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். கதை எழுதிய காஸ்யபனுக்குக் கோடி நன்றிகள்.

    e. கருகமணி: திருமணமான ஓராண்டுக்குப் பிறகு மாப்பிள்ளை சுப்பிரமணியனுடன், பிறந்த ஊருக்கு பம்பாயிலிருந்து வந்திருக்கும் பேத்தி வடிவைக் கண்டுத் தாத்தா பிரம்மநாயகம் பிள்ளைக்குப் பெருமிதம். இறந்து போன மனைவியை நினைவுபடுத்தும் முகம், நிறம். வடிவு அடிக்கடி முகம் கழுவிச் சீராக்கும் பழக்கத்தைப் பற்றிச் சலித்தாலும் மாப்பிள்ளை தன் பேத்தியை ஆராதிக்கிறான் என்பது தெரிந்து குளிர்ந்து நெகிழ்ந்து போகிறார் தாத்தா. தான் வாங்கிக் கொடுத்தப் பொன்னில் கோர்த்த கருகமணி மாலை பேத்தி கழுத்தில் மின்னுகிறது. மராத்தியருக்கு கருகமணி மாலை தாலி போல என்று உடனிருந்தவர் அறிவுறுத்தியதன் பேரில் வடிவு அதைக் கழற்றவேயில்லை. வடிவு எழுந்து வருகையில் "அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன் கோவில் கோமதி அம்மன் தவசுக்கு வருவது போல்" இருக்கிறது தாத்தாவுக்கு. பேத்தியைக் கண்டு "ஆத்தா! ஆத்தா!" என்று நெகிழ்ந்து போகிறார். ஒரு வாரம் ஊட்டி சென்று தங்கி வரலாம் என்று பேத்தியும் மாப்பிள்ளையும் கிளம்புகிறார்கள். சன்னலோரமாகப் பஸ் பயணம் செய்யும் இதத்தில் லயித்துப் போகிறாள் வடிவு. தோளில் சாய்ந்துத் தூங்கும் கணவனிடம், தான் கர்ப்பமுற்றிருக்கும் செய்தியை டாக்டர் உறுதி செய்ததும் சீக்கிரம் சொல்லவேண்டும் என்று உள்ளூர சந்தோஷப்படுகிறாள். கோயமுத்தூர் போகும் வழியில் சூலூரைத் தாண்டி ஒரு இடத்தில் பஸ் நிற்கிறது. அடிக்கடி முகத்தைச் சீர்படுத்திக் கொள்ளும் வழக்கத்துக்கு அடிமையான வடிவு, மேக்கப் பெட்டியை எடுத்துக் குளிர் நீரில் பஞ்சைத் தொட்டு முகம் துடைக்கத் தொடங்குகிறாள். 'வேட்டியைத் துடைக்கு மேலே மடித்துக் கட்டி பனியனும் போட்ட' சிலர் பஸ்சின் பக்கவாட்டில் தடிகளால் தாக்குகின்றனர். ஒரு கும்பல் 'போலீஸ் போலீஸ்' என்று கூவுகிறது. பல குரல்கள், கூச்சல். "ஏன்றே! பாத்துச் செய்யணும்" "மீசை இருக்காது, தாடி வச்சிருப்பான்" "பொம்பளைனா பொட்டிருக்காது, கழுத்துல கருகமணி இருக்கும்"... கூச்சல் கேட்டு வடிவு சன்னல் கதவைத் திறந்து பார்க்கிறாள். பஸ்சை நோக்கி ஒருவன் ஓடிவருவது அவளுக்குத் தெரிகிறது. அவளுடைய பொட்டில்லாத முகமும் கருகமணிக் கழுத்தும் அவனுக்குத் தெரிகிறது.

இவ்வளவு தான் எழுதியிருக்கிறார். ஐந்து பக்கங்களுக்கும் குறைவான கதை எனலாம். இல்லை, ஐநூறு பக்கங்களுக்கும் மிகுந்தக் கதை எனலாம். காரணம், கதையே இதற்குப் பிறகுதான் தொடங்குவதாக நினைக்கிறேன். வாசகர் மனதில் உருவாகும் ஆழமானக் கதை.

கதை ஒரு இந்து-முஸ்லிம் கலவரக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கர்ப்பமுற்றிருக்கும் நற்செய்தியைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் இளம் மனைவி.. பிறந்த ஊரின் அமைதியையும் பாதுகாப்பையும் நாடி பம்பாயிலிருந்து வந்திருக்கும் பெண்.. கணவனுடன் இன்பச் சுற்றுலா செல்லும் நேரம்.. இவற்றையெல்லாம் அழகாக விவரிக்கிறார் ஆசிரியர். ஒரு கட்டத்தில் பேத்தியை விடப் பாட்டி, தன் மனைவி, இன்னும் சிவப்பு என்று தாத்தா நினைப்பதை இப்படி விவரிக்கிறார்:"பாட்டி வெற்றிலை போட்டால் சங்குக் கழுத்தில் சாறு இறங்குவது தெரியும்..".

அத்தனை அருமையாக எல்லாவற்றையும் விவரித்தவர், கதையின் முடிவில் (?) காரணத்தோடு எதையும் விவரிக்கவில்லை.

"பொம்பளைனா பொட்டிருக்காது, கழுத்துல கருகமணி இருக்கும்" என்ற சாதாரண வரிகள் இப்போது அச்சமூட்டுகின்றனவே? வருவோர் இந்துக்களா? முஸ்லிம்களா? வெறியர்களா? கலவரக்காரர்களா? மதப்போர்வையில் முகம் மறைக்கும் சமூக விரோதிகளா? எதற்காக பஸ்சை நிறுத்தினார்கள்? இந்தப் பாவிப்பெண் இப்போதா மேக்கப் போடத் தொடங்க வேண்டும்? ஐயோ, இவளுடைய பொட்டில்லா நெற்றியையும் கருகமணித் தாலியையும் பார்த்துவிட்டானே? முஸ்லிம் பெண் என்று நினைத்து விட்டானா? இவளைக் கொல்லப் போகிறானா? "ஏன்றே.. பாத்துச் செய்யணும்" என்றார்களே? அந்த வண்டியில் பிற முஸ்லிம்களின் கதி? இது என்ன வக்கிரக் கூட்டம்? இனக்கலவரம்? மதக்கலவரம்? இரத்த ஆறு ஓடப்போகிறதா? இவள் வயிற்றில் இருக்கும் இன்னும் தீர்மானிக்கப்படாத, அப்பனுக்குக் கூட விவரம் தெரியாத, உயிர் துடிக்கத் தொடங்கிய, கள்ளங்கபடமற்றச் சிசு.. ஐயோ.. அதற்கு என்ன ஆகும்? வடிவின் தாத்தா எப்படித் துடிப்பார்? யாராவது குறுக்கிட்டு ஒரு வேளை மனித நேயம் வெல்லுமோ? மனம் கலங்குகிறது. தவிக்கிறது.

இத்தனை உணர்வுகளை வாசகர் மனதில் கொண்டு வந்தாலும் அதற்கானப் பின்புலத்தை மட்டுமே கதையாக எழுதியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக வாசகரைத் தள்ளிக் கலவரத்தின் விளிம்பில் வைத்துவிட்டுக் காணாமல் போகிறது கதை. படித்ததும் பத்து நிமிடமாவது வடிவுக்காக "ஐயோ ஐயோ!" என்று துடிக்காத, பதறாத, மனமே இருக்காது என்று நினைக்கிறேன். பாழும் மதவெறி! என்னவெல்லாமோ நினைக்கிறது மனம். எதையும் எழுதாமல் எல்லாவற்றையும் படிக்க வைத்த காஸ்யபனின் வித்தை உண்மையில் வியக்க வைக்கிறது.

    சு.சமுத்திரத்தின் ஒற்றை வரியை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

'கருகமணி' சிறுகதைத் தொகுப்பு, பாவை பப்ளிகேஷன்ஸ் 2002 வெளியீடு, ரூ.30

23 கருத்துகள்:

 1. நிச்சயம் தொகுப்பை வாங்கிப் படித்துவிடுகிறேன்
  அருமையான விமர்சனத்திற்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 2. மிக்க‌ ந‌ன்றி ந‌ல்ல‌தொரு தொகுப்பை அடையாள‌ப்ப‌டுத்திய‌மைக்கு! வாசிப்போருக்கு வ‌ரியிடை எழுதா வ‌ரிக‌ளை புல‌ப்ப‌டுத்தும் ப‌டைப்பாளியும் அவ‌ர்த‌ம் ப‌டைப்பும் கால‌ம்ப‌ல‌ க‌ட‌ந்தும் க‌ம்பீர‌மாய் நிற்கும்!

  பதிலளிநீக்கு
 3. காணொளியில் பேச்சொலியைக் காணோம்...?

  பதிலளிநீக்கு
 4. வாங்க நிலாமகள்.
  தொடக்க ஒலியைக் கொஞ்சம் குறைவாக வைத்திருக்கிறேன் - பின்னணி ஓசையின் காரணமாக. கணினி ஒலியைக் கூட்டிப் பாருங்களேன்? (என் கணினியில் ஒளி, ஒலி இரண்டுமே இயங்குகிறது)

  பதிலளிநீக்கு
 5. வருக ரமணி. அருமையான புத்தகம். வாய்ப்பு கிடைக்கும்பொழுது படியுங்கள். நீங்கள் ரசிப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. சென்னையிலோ திருச்சியிலோ இந்த புக் எங்கே கிடைக்கும் தெரியுமா? படத்துல் பப்ளிஷர் அட்ரஸ் சரியாகத் தெரியவில்லை. க்ருஷ்ணரைப் பத்தி என்ன எழுதியிருக்காருனு படிக்கணும்:P. நிறைய பேர் இப்படிக் கடவுளை இஷ்டத்துக்கு சொல்றதுனாலத்தான் உலகத்துல அமைதியே இல்லாமப் போயிடிருக்கு. ஜகதா கதை படிச்ச ஞாபகம். உங்களுக்கும் கதாசிரியருக்கும் நல்வாழ்த்துகள்.

  இது ரெவ்யூவா ட்ரீடிசா? ரசிச்சு எழுதியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 7. சென்னை செல்லும் போது வாங்கி விடுகிறேன்....

  பதிலளிநீக்கு
 8. மீதிக் கதையை வாசகர்களின் கற்பனைக்கு விடும் கதைகள் உசத்தி. அடுத்தவர் மனதில் ஏற்படுத்த நினைக்கும் பாதிப்பை அவர்கள் பொறுப்பிலேயே விட்டு விடுவது உத்தமம். காணொளி எனக்குத் தெரிகிறது/கேட்கிறது.

  பதிலளிநீக்கு
 9. அப்பாதுரை அவர்களே! "There is no fiction" என்ற மார்க்சின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவன் நான். அது விஞ்ஞான உண்மையும்கூட.மதுரையில் என்வீட்டில் என் துணைவியாருக்கு உதவியாக இருந்த ஜகதா- என்னோடு தீக்கதிரில் பணியாற்றிய ஓய்வு பெற்ற தூனை கலெக்டர் தோழர் குத்புதீன் அவர்களின் துணைவியார் ஆகியொர் தான் ஜகதா,கருகமணி கதைகளின் விதை.எந்த கதையும் கற்பனைஎன்று கூற.முடியாது. பார்த்த ,கேட்ட ஐம் புலங்களால் உணர்ந்தவைகள் இங்கு விகசிக்க வைக்கப்பட்டுள்ளன. அவ்வளவுதான்.இருவது,ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைகளை அற்புதமாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். It is an undrstatement என்பதை புரிந்து கொண்ட பின்பும் வேறு வார்த்தை தெரியாததால் நன்றி என்று கூறி முடிக்கிறேன். முத்துமீனாட்சியும் இணைந்து கொள்கிறார்கள்---காஸ்யபன்..

  பதிலளிநீக்கு
 10. கட்டாயம் படிக்கணும் என்கிற வெறி வந்துவிட்டது. லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. பர்ஸ்க்குள் அடங்கும் விலை. மனசுக்குள் அடங்காத கருத்துக்கள். நீங்கள் சொல்லியதைப் படித்ததும் அவசியம் படித்தே ஆக வேண்டும் என்கிற தீவிரம் எழுந்து விட்டது. அவசியம் வாங்கிப் படித்து விடுகிறேன் அப்பா ஸார்.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் திரு அப்பாதுரை சார்,

  அற்புதமான மதிப்புரை. இடையிடையே உங்களுடைய கருத்தும் சேர்ந்து காஸ்யபனின் கதைக்கு வலுவூட்டுகிறது.. கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது..

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 13. காணொலி விட்டுவிட்டு வந்தாலும் (இண்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருக்குமோ?) காஸ்யபன் அவர்களின் பேச்சு புரியும்படி இருக்கிறது. இதுவரை நான் கேட்டதில்லை. பகிர்விற்கு நன்றிங்க..

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 14. எதையும் எழுதாமல் எல்லாவற்றையும் படிக்க வைத்த காஸ்யபனின் வித்தை உண்மையில் வியக்க வைக்கிறது.

  அற்புதமான மதிப்புரைக்குப் பாராட்டுக்கள்..


  பதிலளிநீக்கு
 15. பெயரில்லாசெப்டம்பர் 18, 2012

  இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. கட்டாயம் படிக்க வேண்டும்என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம். கஷ்யப்பன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 17. பெயரில்லாசெப்டம்பர் 18, 2012

  நேற்றிலிருந்து இரண்டு முறை படித்தாகி விட்டது. 'அவளும் அந்த அவளும்' மனதை குடைகிறது. 'படிபாயசம்' புத்தகம் இப்பொழுது கையில் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. 'ஜகதா' கதை கண்கலங்க வைத்தது.

  கதைகளை அறிமுகபடுத்தியுள்ள விதம் அருமை. நன்றி அப்பாதுரை!

  கஷ்யப்பன் சார், மிகவும் பிரமாதம். உங்களுக்கும், உங்கள் துணைவியாருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 18. அற்புதமான அறிமுகப் பதிவு. காஸ்யபன் சாரின் எழுத்தை உங்கள் எழுத்தில் படித்ததில் நெக்குருகி நிற்கிறேன் அப்பாஜி! மிக்க நன்றி! :-)

  பதிலளிநீக்கு
 19. கட்டாயம் வாங்கி படிக்கின்றேன். காஷ்யபன் ஐயா, போன முறை இந்திய வந்து இருந்தபோது உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி.

  பால கணேஷ் கருத்து அற்புதம்.

  பதிலளிநீக்கு
 20. கண்டிப்பாய் படிக்கவேண்டும் என்ற எணணத்தைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

  பதிலளிநீக்கு
 21. ப‌திவின் முத‌ல் பின்னோட்ட‌ம், த‌ங்க‌ளின் க‌ருக‌ம‌ணியின் முடிவுரை அல்ல‌து முக‌உரை போல் கிளைத்திருக்கிற‌து.
  யாரைக் குறை சொல்ல‌?
  எளிதில் விள‌ங்கா க‌ட‌வுளை மைய‌ப்படுத்தி,விள‌‌ங்காத‌ ம‌க்க‌ளின் முட்டாள்த‌ன‌த்தை மூல‌த‌ன‌மாக்கி வியாப‌ர‌ம் ந‌ட‌த்தும் இந்த‌ வில்ல‌ங்க‌ த‌லைவ‌ர்க‌ளின் லீலைக‌ள் என்று முடியும்?

  பதிலளிநீக்கு
 22. நெகிழ்ந்து போகிறேன். புத்தகத்தை தேடிப் பிடித்து படிக்க வேண்டும்
  ஜகதா மனதை விட்டு நீங்க மறுக்கிறாள்.

  பதிலளிநீக்கு