கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2013/09/21

கலவை



    கூடியிருக்கும் புராண வித்தகர்களுக்கு ஒரு புதிரான புதிர்.
1. குபேரனுடைய 'அழிவில்லாத' செல்வத்தை ஒரு பகலில் அழித்தவர் யார்?
    அ)அகத்தியர் ஆ)வினாயகர் இ)பார்வதி ஈ)ராவணன்
2. 'சிரஞ்சீவி'யான அனுமானை ஒரு முறை கொன்றது யார்?
    அ)சூரியன் ஆ)இந்திரன் இ)கருடர் ஈ)கார்த்திகேயர்
3. ஒரு யானை பலம் கொண்ட பீமனுக்கு ஆயிரம் யானை பலம் கொடுத்தது யார்?
    அ)வாயு ஆ)அனுமான் இ)பரமசிவன் ஈ)நாகராணி


    மீபத்தில் ரசித்த பாடல், காட்சி. சுசீலா கொஞ்சுகிறார். சரோஜாதேவி கெஞ்சுகிறார். சிவாஜி ம்ம்.. கிறார்.


    "ஹலோ.. நல்லா இருக்கீங்களா..? நான் தான் பேசுறேன்" என்று பெயர் சொன்னதும், அரை நொடி தயங்கி முகத்தில் அடித்தாற் போல் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மனதில் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. ஒருவேளை லைன் கட்டாகியிருக்குமோ? ஒரு வேளை ராங்க் நம்பரோ? பிறகு சமாதானமாகி, "வேண்டுமென்றே தான் துண்டித்திருக்கிறார்கள்" என்ற உணர்வு வந்ததும் மேலும் சில எண்ணங்கள். ஏன்? 'நல்லா இருக்கீங்களா?' என்றுதானே கேட்கிறோம்? எதிரியாக இருந்தால் கூட ஒரு கண்ணியத்துக்காகவோ அல்லது கோபத்தினாலோ "பேச விருப்பமில்லை.." என்றோ, "கட்டையிலே போறவனே.. இனி போன் செய்தால் செருப்பாலடிப்பேன்" என்றோ சொல்லும் நேர்மை கூட இல்லாமல் போனதேன்? அல்லது, "ஹலோ.. ஹலோ.." என்று வேண்டுமென்றே காதில் விழாதது போல் இழுத்தடிப்பது பொறுக்காமல் நாமாகவே துண்டித்து மீண்டும் அழைக்கையில், "தற்சமயம பிஸியாக.." என்றோ "சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது" என்றோ.. செய்திக்குப் பின் தப்பிக்கும் கயமைத்தனம் கூட தோன்றாமல் போனதேன்? "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவரிடமா இப்படிப் பண்பில்லாமல் நடந்து கொள்வது? இன்னும் நிறைய எண்ணங்கள் தோன்றி சற்றே வதைத்து வாட்டுகின்றன.

உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

நண்பர் அரசனுக்கு இந்த நிலை ஒரு முறை ஏற்பட்டது. என்னிடம் விவரங்களைச் சொன்னார்.

"கீழ்த்தரமானவங்க அப்படித்தான் இருப்பாங்க" என்றேன்.

"ஏன் அப்படிச் சொல்லுறே?" என்றார்.

"பின்னே என்ன சார்? ஒருத்தரை வெறுக்கிறோம்னா அதை வெளிப்படையா சொல்லலாமே? அந்த நேர்மை கூட இல்லாம... நீங்க என்ன தொந்தரவு கொடுக்கவா போன் செஞ்சீங்க? அப்படியே இருந்தாலும் நல்லா இருக்கீங்களானு கேட்ட உடனே இப்படியா நடந்துக்குவாங்க.. ப்ரூட்"

அரசன் புன்னகைத்தார். "என்னைக்கும் மனசுல பட்டதை சொல்லி இப்படியே இருடா என் ராசா" என்றார். பிறகு, "இதுல அவங்க செஞ்சது ஒண்ணும் கீழ்த்தரம் இல்லை அய்யா.. பிழை என் பேரில் தான்" என்றார்.

அரசனிடம் இந்தக் கெட்டப் பழக்கம் இருந்தது. எல்லாவற்றையும் சமன் தூக்கிப் பார்ப்பது. கேள்வியோடு பார்த்தேன்.

"இல்லய்யா.. அவங்களுக்கு நான் போன் செஞ்சது பிடிக்கலே.. பிடிக்காதவங்க போன் செஞ்சா நீ சொல்லுறாப்புல நாசமாப்போறவனேனு திட்டியோ.. இல்லே பலமா எச்சரிக்கை செஞ்சோ.. அவங்க பேசியிருக்கலாம்தான். ஆனா அப்படி எதுவும் செய்யாமே சட்டுனு போனை முகத்திலடிக்குறாப்புல வைக்குற கீழ்த்தரம் அவங்களுக்கு வந்ததுக்கு நான் தானே.. என்னுடைய குரல் தானே.. என்னுடைய பெயர் தானே காரணம்? அவங்க என்னை மறந்து இருந்த நேரத்துல என்னை நானே அவங்க நினைவுல நுழைச்சு அவங்க மனதுல வெறுப்பைத் தூவினது.. நான் தானே? அதனால அவங்க கீழ்த்தரமா நடந்துக்கிட்டாங்களேன்றதை விட, நான் அவங்களைக் கீழ்த்தரமா நடக்க வச்சுட்டனேனு எனக்கு வருத்தமா இருக்கப்பா.. அவங்களோட அன்றைய தின வாழ்க்கையிலே கீழ்த்தரமான பண்பற்ற நடத்தை வெளிப்பட நான் காரணமாயிட்டனேனு வருத்தம்"

"உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலே ஐயா" என்றேன்.

"ஒரு நாள் புரிஞ்சுக்குவே.. புரியாத போனாலும் பரவாயில்லே" என்றார்.

நண்பர் அரசனின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது. "புரிந்து கொண்டேன் நண்பரே" என்று சொல்ல வேண்டும்.

ஒரு சிக்கலை, சிக்கலின் வேர் புரியாமல், என்னுடைய கோணத்திலேயே பார்த்து அடுத்தவர்களைப் பாதிக்குபடியான முடிவெடுக்கும் பழக்கத்திலிருந்து என்று விடுபடுவேன்?

நல்ல ஆசான்களை இழப்பது கொடுமையானது.


    'கோர்பரெட் ஸ்ட்ரேடஜி' பற்றி அவரவர் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்கள். கிழிக்க எதுவும் இல்லையென்றால் கிழிந்ததை இன்னும் நையக் கிழித்திருக்கிறார்கள். என்னாலேயே நம்பமுடியவில்லை எனினும், நானும் இந்த வகையில் கொஞ்சம் கிழித்திருக்கிறேன்.

இது ரொம்ப சுளுவான விஷயம், யார் வேண்டுமானாலும் தங்கள் எண்ணங்களைச் சொல்லலாம். செயல்பாட்டில் தானே இருக்குது சூட்சுமம்? செயலில் இறங்க வேண்டியத் தேவையில்லாத வரையில், சொல் சித்தர்களுக்குக் குறைவே இல்லை. உதாரணத்துக்கு.. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போவதைத் தடுக்க எத்தனை பேர் என்னிடம் ஸ்ட்ரேடஜி சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? (ஏழாம் வாய்ப்பாட்டின் கீழ் வரிசையில் வருகிறது விடை).

எழுபதுகளில் ஜபேன், ஜெர்மனி, கேடர்பில்லர், கோமாட்சூ என்றார்கள். எண்பதுகளில் சைனா, ஆப்பில், மோடரோலா, என்றார்கள். தொண்ணூறுகளில் ஆப்பிலை வெறுத்தார்கள். நோகியா, மைக்ரோசாப்ட், இன்டெல், நெட்ஸ்கேப், அமெரிக்க ஐக்கிய சபை, கோர்பசேவ் என்றார்கள். முதல் பத்தில் டெல், மறுபடி ஆப்பில், கூகுல் என்றார்கள். பின் பத்தில் இதுவரை மீண்டும் சைனா, இஸ்ரேல், பேஸ்புக், வால்மார்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பத்தில் ஆப்பில், பேஸ்புக் எல்லாம் காணாமல் போகும்.. சைனா கூட தடுமாறலாம்.

எல்லாமே அந்தக் கணத்தின் அறிவை ஒட்டிப் பிறக்கும் சிந்தனைகள். பத்தே நிமிடங்களில் புஸ்வாணமாகும் சிந்தனைகள். அதனால் பெரும்பாலான ஸ்ட்ரேடஜி புத்தகங்களை நான் படிப்பதே இல்லை. முன்போல் ஓசியில் நிறைய புத்தகங்கள் கிடைப்பதில்லை. எப்பவாவது கிடைத்தாலும் சிரித்துக் கொண்டே அவசியம் படிப்பதாகப் பொய் சொல்லி அடுத்த வாரமே யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன்.

சமீபத்தில் படித்த புத்தகம் - தலைப்பு காரணமா, இல்லை இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய முன்பின் அறியாத பக்கத்து இருக்கையில் என்னுடன் பறந்த பயணியின் அறிவுக் களை காரணமா, தெரியவில்லை, படிக்கத் தோன்றியது, படித்தேன். அட! என் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று எண்ண வைத்தது. கால் ஹேமரிக் மற்றும் ரிசர்ட் லூயிஸ் இணைந்து எழுதியிருக்கும் மேலாண்மைத் தந்திரம் பற்றிய புத்தகம் "Fish can't see water". இந்தப் புத்தகம் இன்னும் அமெரிக்காவிலேயே பரவலாக வெளிவரவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட போது ப.இ.பயணிக்கு மனதார நன்றி சொன்னேன்.

தானிருக்கும் நீர் நிலையைப் பற்றி அதில் நீந்தும் மீனுக்குத் தெரிய வாய்ப்பில்லை (என்று வைத்துக் கொள்வோம்). அதே போல் ஒரு வளரும்/வளர்ந்த நிறுவனத்துக்கு, அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த (ஊழியர்களின்) பண்பு கலாசாரம் போன்றவற்றைப் பற்றிய பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். ஒரு தந்திரம் பலன் தருமா தராதா என்பதைத் தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்ற துணிச்சலான கருத்தை உலகத்தின் பல நிறுவனங்களின் வரலாற்றை ஒட்டி எழுதியிருக்கிறார்கள். ஆசிரியரின் சொந்தக் கண்டுபிடுப்பான 'cultural dynamic model' என்னும் குழப்படிக் கருவியை வைத்து ஆறுவித கோர்பரேட் கலாசாரங்களை ஆராயும் சுவையான புத்தகம். ஒரு நிறுவனத்தின் உலகளாவிய வெற்றி தோல்விகளை அதனுள் நிரவியிருக்கும் கலாசாரக் கடலின் போக்கே தீர்மானிக்கிறது என்று நம்பும்படி சொல்லியிருக்கிறார்கள்.

எம்பிஏ படிப்பவர்களும் மேலாண்மைக் கலையில் விருப்பமுள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக, பங்குச் சந்தையில் விளையாடுவோர், கம்பெனிகள் வாங்க விற்க என்று எல்.ஆர்.சுவாமி (இன்னும் இருக்கிறதா?) பாணியில் அலையும் இன்வெஸ்ட்மென்ட் ஆசாமிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அவர்களைத் தவிர நம்மைப் போல - சரி, உங்களைச் சேர்க்கவில்லை - என் போல, பொழுது போகாதவர்களும் படிக்க வேண்டிய பு.


    லர்சட்டைக்காக வைத்திருந்தேன். இங்கேயே வம்படித்து விடுகிறேன்.

1. ஹெர்பர்ட்-கேதரின் தம்பதியரின் முதல் குழந்தை 2009ல் இறந்தது. அதற்காகப் பெற்றோர்களுக்குத் தண்டனை கிடைத்தது. ஏன்? சளி, பசி, காய்ச்சலில் கிடந்த பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் கடவுளிடம், அதாவது கடவுள் அருளை நம்பி, சர்ச்சில் விட்டார்களாம். தினசரி பைபிலும் தோத்திரங்களும் படித்தார்களாம். பிள்ளை இறந்ததும் அது இறைவனின் ஆணை என்று இருந்தார்களாம். சும்மா விடுமா பிலடெல்பியா சட்டம்? பிடித்துத் தண்டித்தார்கள்.

அறிவு வந்ததோ ஆத்திகருக்கு? இல்லை. போன வருடம் இரண்டாவது குழந்தையும் இதே போல் இறந்தது.

கேட்டால் அதையே சொன்னார்கள் மறுபடி. பிணியும் மருந்தும் இறைவனின் ஆணை என்றார்கள். "பிடிச்சு உள்ளே போடுங்கடா ரெண்டு கேனக்.." என்றது பிலடெல்பியா அரசு.

"நிறுத்துங்கள் அரசே!" என்று ஒரு கொடி. 'தேரா மன்னா!' என்பவர் யாரென்று பார்த்தால்... மைத்ரி ஜெயராமன்! அட, நம்ம ஊர்க்கார லாயரு! என்ன சொல்றாரு? "ஆடாப்ஸி விவரங்கள் கிடைக்கும் வரை பெற்றோர்களை எதுவும் செய்யக்கூடாது" என்கிறார். ஓகே. பட்சவங்க இல்லியா? அப்பால தான் வளுக்குறாங்க தமிழம்மா. இன்னா சொல்றாங்க? "இந்தப் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பெரும் அன்பும் கனிவும் செலுத்தி வந்திருக்கிறார்கள்.. இவர்கள் குற்றவாளிகள் அல்ல". ம்ம்ம்.. யம்மா மைத்ரி.. காய்ச்சலான கொளந்தையை ஒரு தபா கூட டாக்டராண்ட இட்டுகினு போவலியாமே அவங்க? அதுங்களையா பெரும் அன்பும் கனிவும்னு சொல்றே? இன்னாம்மே நீ?

ஹெர்பர்ட் கேதரினுடன் மைத்ரியையும் உள்ளே தள்ள வேண்டும். முட்டாள்தனம் சட்டப்படி குற்றமாகாமல் போனதே, என்ன செய்ய?!

இவர்களின் சர்ச்சான 'first gospel church of philadelphia'வின் இணைய தளத்தில் "மருந்து மாத்திரைகளை நம்புவது பாவம்; யேசுவே குணமளிப்பவர், அவரை நம்புவது மட்டுமே உண்மையான ஆத்திகம்' என்று மே மாதம் வரை இருந்ததாம். (அடச்சே! ஒரு சான்சு போச்சே!)

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.

2. சமீபத்தில் நடந்து முடிந்த வினாயக சதுர்த்தியின் விளைவாக நிறைய ஆத்திகர்கள் திருடர்களாக மாறியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இன்டியாவில் வந்திருக்கும் செய்திப்படி நிறைய இடங்களில் ஆத்திகர்கள் எத்தனையோ ஆயிரம் வாட் கணக்கில் பொது மின்சாரம் திருடி வினாயகப் பெம்மானைக் கோலாகலமாக வழிபட்டிருக்கிறார்கள். திருட்டில் வினாயகருக்கும் பங்களித்திருக்கிறாகள் என்பது தெரிந்து செய்திருக்கிறார்களா? இல்லை 'வினாயகர் தானே,, நேரிலா வரப்போகிறார்?' என்ற சமாதானத்துடன் செய்தார்களா? ஆக மொத்தம் நாட்டுக்கு நஷ்டம்.

விடுங்க, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதை மோடி பாத்துக்குவாரு. இப்பத்திக்கு வினாயகரை நல்லா லைட் வச்சு கூட்டிக்கிட்டுப் போய் கடல்லே கரைச்சா போதும். என்னா சொல்றீங்க?

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில்..
கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?


    மோடி என்றதும் நினைவுக்கு வந்தது. நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிறார்கள். ந.மோடி வருவதால் இந்தியா "எங்கியோ போவப் போவுது" என்கிறார்கள். "என்ன செய்வார் மோடி?" என்று சிலரிடம் கேட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் (குஜராத்?) அப்படி இப்படி சொல்கிறார்களே தவிர, காங்கிரசை விட மோடி எந்த விதத்தில் மேலான ஆட்சியைக் கொண்டு வருவார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஊழலை ஒழிப்பதிலிருந்து இஸ்லாமியரை விரட்டுவது வரை ஆளாளுக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்.

'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு.


    பாமா சிரியா பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை வைத்துப் பார்க்கையில் அமெரிக்காவை மட்டம் தட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது. ஒபாமா உதவாக்கரை என்பதைச் சொல்ல வந்தேன்.. அவருக்கு ஓட்டுப் போட்டதை வைத்து அமெரிக்காவை எடை போடுவது சரியாகத் தோன்றவில்லை. சிரியா பிரச்சினை பற்றிய என் கருத்தை விரிவாகப் பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு சுருக்கம்: அசாத்தை ஒரு அரபு நாட்டுக்கும் பிடிக்கவில்லை. நேரடியாக எதுவும் சொல்ல/செய்ய முடியாத நிலையில், அமெரிக்காவின் பின்னால் நின்று போராடுகிறார்கள். இது தான் பிரச்சினை. இதை அமெரிக்கா எந்த அளவுக்குத் தனதாக்கிக் கொள்கிறது என்பதில் தான் சிக்கல்.

சரியான தலைமையில்லாமல் அதை அணுகுவதில் இருக்கிறது ஆபத்து.


    ஸ்திரேலியாவில் ஒரு பெண்மணி கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயித்திருக்கிறார். வேலை விஷயமாக வெளியூரில் தங்கியிருந்தாராம். படுத்துக் கொண்டிருந்த போது மேலே விளக்கு விழுந்து அடிபட்டதால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார். வேலை நேரத்துக்கு அப்பால் விபத்து நடந்ததாகச் சொல்லி அவருடைய கம்பெனியும் இன்சூரன்சு கம்பெனியான காம்கேரும் மறுத்துவிட்டதால் வழக்கு தொடர்ந்தார். ஐந்து வருடங்கள் வழக்காடி ஜெயித்தார்.

என்ன பெரிய விசேஷம்? விளக்கு விழுந்த போது பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் மேல் இன்னொருவரும் படுத்துக் கொண்டிருந்தாராம். ஹிஹி.


    புதிரான புதிருக்கு விடை: ஆ, ஆ, ஈ. (சுவாரசியமான கதைகள்)

2013/03/31

எழுத்தின் தலை



முன்னுரை [-]

    சில தேர்வுகளின் நியாயங்கள் புரிவதேயில்லை.

ஒரே செடியில் பூத்திருக்கும் அழகு ரோஜாக்களில், சில தேவனை அலங்கரிக்கவும் சில பிணங்களை அலங்கரிக்கவும் தேர்வாகின்றன. சில காற்றில் சிதறிச் சாக்கடைச் சேற்றில் சேர்கின்றன. சில எங்கும் சேராமல் வாடி மடிகின்றன.

இங்கே ரோஜாவின் தேர்வு என்று எதுவும் இல்லை. ரோஜாவின் தவறு என்றும் எதையும் சொல்ல முடியவில்லை. ஒருவேளை.. ஒருவேளை.. தொன்மைச் சித்தாந்தங்கள் தழுவிய மேற்தட்டு நம்பிக்கைகளினூடாய்.. எல்லாம் வல்ல தீனதயாபரனின் தீர்க்கத்திட்ட ஆழ்கடலில், இந்த ரோஜாக்களின் நிலையும் அலைத்துளியென ஏற்கப்போமோ?

வில்சன் சகோதரர்கள் இருவர் - ஆல்பர்ட் வில்சன், ராஜர் வில்சன்.

ரோஜா என்ற முகப்புடன் தொடங்கியதன் பொருட்டு இங்கே வில்சன் சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணம் நெல்லளவும் தோன்றுமுன் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

சகோதரர்கள் இருவரும் கயவர்கள். அக்கிரமக்காரர்கள். திருடர்கள். பாதகர்கள். கொலைகாரர்கள். குடும்ப மானத்தை, பொதுக் கண்ணியத்தை, மனித நேயத்தை, வேரறுக்க வந்த வஞ்சக்கோடறிகள். தணலில் தள்ளி முள் சாட்டையால் அடிக்கப்பட வேண்டிய அரக்கர்கள். இரும்புச் செருப்பணிந்த இரண்டுக் கால்களாலும் உதைத்து மிதித்துத் தேய்த்து நசுக்கப்பட வேண்டிய நச்சுப்பாம்புகள். விஷம் பருகக்கொடுத்து, நெஞ்சிலே சுட்டு, பின் பலமுறைத் தூக்கிலிட்டுச் சாகடிக்கப்பட வேண்டிய மூர்க்கர்கள்..

கருவான நல்லெண்ணம் ஏதும் கலைந்திருக்கும்.

எனினும்.. இதை முழுதும் படித்ததும்.. ஏதோ ஒரு வசந்தத்தின் கள்ளமறியாக் கவர்ச்சியில், வில்சன் மொட்டுக்கள் புதிதாய் மலரவும் பொதுவாய் மணக்கவும் காத்திருந்தன என்பது மட்டும்.. என் போல் பகுதிநேரச் சிந்தனையாளர்கள் உள்ளிட்டச் சமூக உணர்வுள்ளோர் அனைவரையும்.. மணல் கலந்த மூச்சுக்காற்றாய்த் திணற அடிக்கும் என்பதை நீங்கள் உணரக்கூடும். நடுங்கக்கூடும்.



விபரீதம் [-]

    ர்ட் வில்சன் ஒரு விவசாயி. அமெரிக்கா வந்த வில்ப்ரெட் வில்சனின் மூன்றாம் தலைமுறைச் சந்ததி.

மூன்றுத் தலைமுறைகளாகப் பஞ்சமும் குற்றமும் கலந்தப் பாமரத்தனம் மட்டுமே இந்த நாடோடிப் பரம்பரையின் அடையாளமாக இருந்தது. பர்ட் அதை மாற்ற விரும்பினார். ஆண்டவனின் எழுத்தை அழித்தெழுத விரும்பினார்.

நெப்ரேஸ்கா மாநில அரசு வழங்கிய மானிய நிலத்தில் சோளப் பயிர் செய்து சம்பாதித்து, தன் பரம்பரையின் விதியை மாற்ற விரும்பி உழைத்தார். பக்கத்து ஊரின் விவசாயக் குடும்பத்து அழகான பெண் கேதரினைக் காதலித்து மணந்தார். மேரிமாதா மனமவுந்து அளித்தக் காணி நிலத்திடையே ஒரு குடிசை, ஓரமாய்க் கேணியருகே நான்கு பர்ச், பனிரெண்டு ஆப்பிள் மரங்கள் அமைத்துக் குடி புகுந்தார். நல்முத்துச் சுடர் போல் நிலவொளி முன்வர, கத்துங் குயிலோசை காதில் விழ, சித்தங் குளிர்ந்து வாழ்ந்தனர் தம்பதியர் சில காலம். பாடிக் கலந்திட்ட அவர்தம் கூட்டுக் களிப்பு கொணர்ந்ததோ ஆறு கவிதைகள். படிக்கப்படாமலே தொலைந்தவை இரண்டு. பிறகு பிறந்தவள் பானி. சில வருடங்களுக்குப் பின் ஆல்பர்ட் பிறந்தான். பிறகு ராஜர். கடைசியில் விக்டர்.

பிள்ளைகளைச் செழுமையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற முனைப்பில் கடுமையாக உழைத்தனர் பெற்றோர். பரம்பரை வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே இடத்தில் பத்து வருடங்கள் நிலைத்துச் சாதனை புரிந்தார் பர்ட். பானியைத் தினம் தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவதில் பர்டுக்குப் பெருமை. இதன் காரணமாகவேனும் கல்வித்தளத்தில் காலடி பதிக்கும் வாய்ப்பு கிடைத்த நிறைவுடன், பள்ளித் தேவாலயத் தேவன் காலடியில் தினமொரு ரோஜாவை வைத்து நன்றியுடன் வணங்கி வந்தார்.

அந்த வருடம், கடும் பனி தொடர்ந்து இனக் கலவரம் தொடர்ந்து வறட்சி அவர்களை வாட்டியது. கடும்பனியில் பயிரை இழந்தார்கள். இனக் கலவரத்தில் நிலத்தை இழந்தார்கள். வறட்சியில் சேமிப்பை இழந்தார்கள். "இவை இறைவனின் நல்லொழுக்கச் சோதனை" என்ற பர்ட், நகருக்குச் சென்று வேலை தேடத் தீர்மானித்தார். குடும்பத்தாரை அழைத்து விவரம் சொல்லி விடைபெற்றார்.

    இருநூறு மைல் தொலைவிலிருந்த சிகாகோ நகருக்கு எப்படியோ வந்து சேர்ந்தார் பர்ட். வந்த நாளே யூனியன் ரயில் நிலையத்தில் கூலி வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து ரயில் நிலைய அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் வேலை, இரவில் கடைகளைச் சுத்தம் செய்து காவல் காக்கும் வேலை, என மேலதிகமாக உழைத்துத் தினம் பதினைந்து இருபது டாலர் வரை சம்பாதிக்கத் தொடங்கினார். தன் செலவுக்கு மூன்று டாலர் எடுத்துக் கொண்டு, வீட்டுச் செலவுக்குப் பத்து டாலர் அனுப்புவார். மிஞ்சியதை பிள்ளைகளின் கல்லூரிப் படிப்புக்காகச் சேமித்தார்.

ரயில் நிலையத்திலேயே தூங்கிய பர்ட், வங்கிக் கணக்கு எதுவும் இல்லாததால் தனக்கு மட்டுமே தெரிந்ததாக எண்ணிய ரகசியப் பொந்து ஒன்றில் சேமிப்பை மறைத்து வந்தார். ஆறாம் மாதம் அவருடைய சேமிப்பெல்லாம் கத்தி முனையில் களவு போனது.

அடுத்த வாரம் கேதரினிடமிருந்து கடிதம் வந்தது. கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் இன்னொருவரைத் திருமணம் புரிவதாகவும், நான்கு பிள்ளைகளையும் அழைத்துப் போகச் சொன்னது கடிதம். உடன் விவாகரத்து மனு.

கெனால் தெரு அடிவாரத்தில் புறம்போக்குக் குடிசை ஒன்றை அரை டாலர் தினவாடகைக்குப் பிடித்தார் பர்ட். உடனே பிள்ளைகளை அழைத்து வந்தார். பானியையும் ஆல்பர்டையும் மேட்டுத் திருச்சபைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்.

    வீட்டில் ஆல்பர்ட் தினம் பானியை அடிக்கத் தொடங்கினான். ராஜர் அதைப் பார்த்துச் சிரிப்பான். தடுக்கப்போன விக்டர் அடிபட்டுக் கிடப்பான். வீடு திரும்பிய பர்ட் தினம் சமாதானம் செய்து பிள்ளைகளுக்கு படிப்பினைக் கதைகள் சொல்லி, கிடைத்த கூலியில் வாங்கி வந்த சோற்றை ஊட்டித் தூங்கச் செய்வார்.

சில வாரங்கள் பொறுத்து பானியின் ஆசிரியர் சிஸ்டர் கரீன், பர்ட்டைத் தேடி வந்தார். "பானி ஏன் தினம் பள்ளிக்குக் காயங்களுடன் வருகிறாள்?" என்று விவரம் கேட்டார். தன் சகோதரன் அடித்ததாக பானி சொல்லியிருந்தாலும் அதை நம்பவில்லை கரீன். வீட்டில் உண்மையைத் தெரிந்து கொண்டதும், "பானியை எங்கள் சர்ச்சில் வளர விடுங்களேன்?" என்றார். கூட்டிக் கழித்துப் பார்த்த பர்ட் சம்மதித்தார். தானும் பானியுடன் போவதாக விக்டர் அடம்பிடிக்க, கரீனும் சம்மதிக்க, இருவரையும் அனுப்பி வைத்தார். இறைவனுக்கு நன்றி சொல்லி, ஒரு வருடத்துக்கான தேவாலய மெழுகுவர்த்திச் செலவை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

சில மாதங்களில் எதிர்க்குடிசையில் இளைய சகோதரி மரியாவுடன் வாழ்ந்து வந்த லீலாவின் நட்பு கிடைத்தது. லீலா சாராயத்துடன் சுகத்தையும் வியாபாரம் செய்து வந்தது பர்டுக்குப் பிடிக்கவில்லையெனினும் இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காதலானது. லீலா தொழிலை விடமுடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னாள். காலப்போக்கில் அவள் மாறலாம் என்ற எண்ணத்துடன் பர்ட் லீலாவை மணந்து கொண்டார். பிள்ளைகளுடன் லீலா வீட்டில் குடியேறினார்.

    இறைவன் உருட்டியப் பகடைகளாய் ஓடின வருடங்கள்.

திருத்த எண்ணிய பர்ட் லீலாவுடன் சேர்ந்து கொண்டார்.

ஒன்பது வயதில் லீலாவுக்கு அடியாளானான் ஆல்பர்ட். அடியார்க்கடியாளான லீலா, அவனை மெச்சி நிழல்வேலை நுட்பம் பல அருளினாள். அதன் பலனாய் பத்து வயதில் சில்லறைத் திருட்டுக்கள் செய்தான். பனிரெண்டு வயதில் தம்பி ராஜரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டான். இருவரும் கார் பேட்டரி, பெட்ரோல், சக்கரங்கள் என்று திருடி விற்றார்கள். சின்னம்மா லீலாவுக்கு அவ்வப்போது பணம் வசூலித்தார்கள், ஆள் பிடித்தார்கள். பதினாலு வயதில் ஆல்பர்ட் முதல் முறையாக கத்தியால் ஒருவரைக் குத்திவிட்டுத் தலைமறைவானான்.

லீலாவின் சாராய வினியோக வேலைகளை இப்போது ராஜர் கவனிக்கத் தொடங்கினான். சிகாகோ ரவுடிக் கூட்டங்களின் நட்பு கிடைத்தது. கொலராடோவிலிருந்து கஞ்சா கடத்தி சிகாகோ கூட்டத்திடம் கொடுத்து வந்ததில், பணமும் பருவப் பெண்களின் நட்பும் கிடைத்தது. அவர்களுக்காக நிழல் வேலைகள் செய்யத் தொடங்கினான். டிசம்பர் விழா நாட்களில் ஒரு போலீஸ்காரரின் நட்பும் கிடைக்க, சிசரோ வட்டக் காவல் நிலையத்துக்கு மறைவாக மது, மாது போதைப் பொருள் சப்ளை செய்யத் தொடங்கினான். சிசரோ வட்டத் திருட்டுக்கள் அட்டூழியங்களில் ராஜருக்குப் பெரும் பங்கிருந்தது.

ஒரு வருடம் பொறுத்துத் திரும்பிய ஆல்பர்ட், லீலாவின் வட்டத்தில் தம்பி நிலையானதைக் கவனித்தான். மேற்கே போவதாகவும் தன்னுடன் வருமாறும் அழைத்தான். ராஜர் மறுத்துவிட, ஆல்பர்ட் கலிபோர்னியா பயணமானான்.

    சில வருடங்கள் ஓடின. வாலிப ஆல்பர்டும் ராஜரும் விசித்திர சூழ்நிலையில் ஒன்று சேர நேர்ந்தது.

வளர்ந்த பானி, பிரபல சமூகச்சேவைக் குழுமத்தில் துணை மேலாளராகப் பணிபுரிந்தபடி தேவாலயக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

தன் பிள்ளைகளின் செயல்கள் எதையும் தடுக்க இயலாதிருந்த பர்ட், திடீரென்று லீலாவை விவாகரத்து செய்தார். சாராய வியாபாரத்திலிருந்து விடுபட்டார். பழையபடி தன் கூலிவேலையில் கவனம் செலுத்தி வந்தார். விவரிக்க இயலாத சூழ்நிலையில் பானியின் வீட்டெதிரே ஒரு நாள் பிணமாகக் கிடந்தார்.

பர்ட் மரணம் பற்றி எதையும் தீர்மானிக்க இயலாமல் ஆறு மாதங்களில் வழக்கை மூடிவிட்டது போலீஸ். பர்ட் பெயரில் லட்சம் டாலர் காப்பீட்டுத் தொகை இருப்பதை அறிந்த சிசரோ போலீஸ்காரர், அதை ராஜரிடம் தெரிவித்தார். அந்தப் பணம் பானிக்குச் சேர வேண்டும் என்று சில மாதங்கள் முன்பு பர்ட் சத்தியப் பிரமாணம் செய்து எழுதிக் கொடுத்ததைத் தெரிவித்து, பானியிடம் பணத்தைக் கொடுப்பதாக அறிவித்தது இன்சூரன்சுக் கம்பெனி.

பானியுடன் பணத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருந்த ராஜருக்கு ஆல்பர்ட் திடீரென்று தோன்றியது வியப்பாக இருந்தது. லீலாவின் தங்கை மரியாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் ஆல்பர்டுக்கு விஷயம் தெரிந்த விவரம் புரிந்து கொண்ட ராஜர், அண்ணனுடன் சேர்ந்து கொண்டான். அப்பாவின் பணம் பிள்ளைகளுக்குச் சொந்தம் என்றும், பணத்தைத் தராவிட்டால் கொலை செய்வதாகவும் பானியை இருவரும் மிரட்டினார்கள்.

சமரசம் செய்ய விரும்பிய பானி ஒரு நிபந்தனை விதித்தாள். பணத்தில் தனக்கு ஒரு சென்ட் கூட வேண்டாமென்றும், சகோதரர்கள் இருவருக்கும் தலைக்குப் பத்தாயிரம் டாலர் உடனே தருவதாகவும், தீய வழியை விட்டுத் தன்னுடன் ஐந்து வருடங்கள் தேவாலயத் தொண்டாற்றினால் மிச்சப்பணம் முழுதையும் இருவருக்குமே பகிர்ந்தளிப்பதாகவும் சொன்னாள். தன் சகோதரர்களை எப்படியாவது நல்வழிக்குத் திருப்ப விரும்பினாள். தங்கள் தந்தை குடும்பத்துக்காகப் பட்டக் கஷ்டங்களையும் அவருடையக் கனவுகளையும் எடுத்துச் சொல்லி உருக்கமாக வேண்டினாள்.

வசியமாகப் பேசி ஆல்பர்டிடம் வழக்குப் போடத் தூண்டினாள் மரியா. பிள்ளைகள் அனைவருக்கும் இருபத்தொரு வயதாகிவிட்டதால், தனக்கு மணமாகாத நிலையில் பர்ட் யாருக்கு வேண்டுமானாலும் இன்சூரன்சு பணத்தை எழுதி வைக்கலாம், வழக்கு செல்லாது, என்றார் வக்கீல்.

சகோதரர்கள் வேறொரு திட்டமிட்டனர்.

இளைய சகோதரன் விக்டர், தன் பரம்பரை தொடர்பே வேண்டாமென்று உயர்நிலைக் கல்வி முடித்ததும் புகழ்பெற்ற கிழக்கத்திய கல்லூரியில் தகுதிசார் உதவித்தொகை பெற்றுப் படித்து வந்தான். தன் குடும்ப விவரங்களை மறைத்து, மறந்து, படிப்பில் கவனமாக இருந்தான். பானிக்கு மட்டுமே விக்டரின் இருப்பிடம் மற்றும் வாழ்முறை விவரங்கள் தெரியும்.

பானியின் வீட்டை அவளறியாமல் தேடிய ஆல்பர்ட் ராஜர் சகோதரர்களுக்கு, விக்டர் பற்றிய விவரங்கள் கிடைத்தன. பணம் முழுதையும் தராவிட்டால் விக்டரைக் கொன்று விடுவதாகப் பானியிடம் சொல்ல, அவள் நடுங்கினாள். தந்தை பர்ட் குடும்பத்துக்காகப் பட்ட கஷ்டங்களைச் சொல்லி அழுதாள். இரக்கமில்லாமல் நடந்து கொண்ட சகோதரர்களிடம் எத்தனை முறையிட்டும் பயனில்லாத நிலையில் மறுநாள் பணம் முழுதையும் எடுத்துக் கொடுத்தாள்.

தகவல் சொன்னதற்காகப் பங்கு கேட்டு மரியாவும் போலீஸ்காரரும் சகோதரர்களைத் தொந்தரவு செயதனர். துரோகம் செய்த வெறுப்பில் இருந்த மரியாவின் கணவர் டேனியை அணுகினார்கள் சகோதரர்கள். மரியா, போலீஸ்காரர் இருவரையும் கொலை செய்தால் பத்தாயிரம் டாலர் தருவதாகச் சொன்னார்கள்.

இன்சூரன்சுப் பணம் கிடைத்ததைக் கொண்டாடலாம் என்று அனைவரையும் மரியாவின் வீட்டுக்கு அழைத்திருந்தான் ஆல்பர்ட். எல்லோருக்கும் போதை ஏறியதும் டேனி மரியாவையும் போலீஸ்காரரையும் சுட்டுக் கொல்வதாகத் திட்டம். ஆனால் போலீஸ்காரர் திடீரென்று எழுந்து ஆல்பர்ட்டின் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தினார். பணம் முழுதையும் எடுத்துவருமாறு ராஜரிடம் சொன்னார். டேனியைத் துணைக்குப் போகச்சொன்னார். சிரித்துக் கொண்டே ராஜரை நெட்டித் தள்ளினான் டேனி.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சகோதரர்கள் கொதித்தார்கள். போகிற போக்கில் ராஜர் திடீரென்று ஒரு கத்தியை வீச, போலீஸ்காரர் தடுமாறினார். உடனே எழுந்த ஆல்பர்ட், போலீஸ்காரரை அடித்து வீழ்த்தினான். போலீஸ்காரரின் துப்பாக்கியால் டேனியைச் சுட்டான். விரைந்த ராஜர், கத்தியால் போலீஸ்காரரின் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்தான். சகோதரர்கள் இருவரும் மரியாவை ஒரு மூலைக்குத் தள்ளினார்கள். ரத்தம் பெருகத் துடித்தப் போலீஸ்காரரின் கண் ஓட்டையில் துணியடைத்தார்கள். டேனியை ஒரு நாற்காலியோடு கட்டினார்கள். மரியாவின் வாயில் பஞ்சடைத்து அவளை நிர்வாணமாக்கினார்கள். போதையின் உச்சியில் இரண்டு சகோதரர்களும் டேனியின் கண் முன்னே நிர்வாண மரியாவுடன் தொடர்ந்து வெறியுறவு கொண்டார்கள். பிறகு மரியாவின் அல்குல் கிழியும் அளவுக்கு கண்ணில் பட்ட சிறு பொருட்கள், காய்கறிகளைத் திணித்தார்கள்.

குக் மருத்துவமனை முன்னே விழுந்து கிடந்த தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம், வழக்கமான காவல் சுற்று வந்தபோது முகமறியாத யாரோ தன்னைக் காயப்படுத்தியதாகப் பொய் சொன்ன போலீஸ்காரர் அடங்கிப் போனார். டேனியைக் காணவேயில்லை. மரியாவின் பிணத்தை நாலைந்து நாட்களுக்குப் பின் அழுகிப் போயிருந்த நிலையில் கண்டெடுத்தார்கள். குற்றமோ குற்றவாளியோ விளங்காமல் வழக்கு மூடப்பட்டது. பானியிடம் பெற்றப் பணத்தைப் பகிர்ந்து கொண்ட சகோதரர்கள் பிரிந்தனர். ஆல்பர்ட் மேற்கே போக, ராஜர் வழக்கம் போல் சிகாகோவில் புழங்கினான்.

    சகோதரர்கள் மீண்டும் சந்திக்க நேரிட்டது.

மேற்கே போன ஆல்பர்ட் ஏனோ வழியெல்லாம் மரியாவின் நினைவில் வாடினான். பீனிக்ஸ் நகரில் மரியாவைப் போலவே இருந்த ஒரு மெக்சிகன் விதவையைப் பார்த்ததும் அங்கே தங்க முடிவு செய்தான். மெக்சிகன் விதவையுடன் பழகத் தொடங்கினான். தன்னைப் பற்றிய விவரங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டான். அவனைத் திருத்துவதாகச் சொல்லி அவள் ஆல்பர்ட்டை மணக்கச் சம்மதித்தாள். அவளுடன் வாழ்ந்த இரண்டு வருடங்களில் ஆல்பர்ட் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஒரு பெட்ரோல் பம்பில் ஒழுங்காக வேலை பார்த்தான். இருவருக்கும் ஒரு மகன் பிறக்க, தனக்கும் ஒரு குடும்பம் அமைந்ததே என்றக் களிப்பில் இருந்தான் ஆல்பர்ட்.

மகன் பிறந்த சில வாரங்களில் பழைய நண்பன் ஒருவனைச் சந்தித்தான் ஆல்பர்ட். பெட்ரோல் நிரப்ப வந்த நண்பன் ஆல்பர்ட்டிடம் பேசத் தொடங்கினான். ஓமகாவில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கப் போவதாகவும் உடன் வரச் சம்மதமென்றால் கணிசமான பணம் கிடைக்கும் என்றும் சொன்னான். குடும்பம் பற்றி ஒரு கணம் சிந்தித்த ஆல்பர்ட், குடும்பத்தைத் துறந்து வேலையை அப்படியே விட்டு நண்பனுடன் ஓமகா சென்றான்.

வங்கியைக் கொள்ளையடித்த இருவரும் டென்வருக்குத் தப்பியோடிச் சிறிய ஹோட்டல் ஒன்றில் தங்கினார்கள். காலையில் பயணத்தைத் தொடர எண்ணினர். தப்பி வந்த வண்டியை எல்லையிலே விட்டதால் இன்னொரு வண்டி தேவைப்பட்டது. அதிகாலையில் எழுந்து இன்னொரு வண்டியைத் திருடும் பொழுது வண்டிக்குச் சொந்தக்காரர் வந்துவிட, ஆல்பர்டும் நண்பனும் துப்பாக்கி முனையில் அவரை வண்டியின் பின்கிடங்கில் திணித்துப் பூட்டி வண்டியோடு கிளம்பினார்கள். வழியெங்கும் இடித்து ஓசை செய்து வந்ததால் பெருவழியில் யாருமற்ற இடமாகப் பார்த்து ஒதுங்கினர். கிடங்கைத் திறந்து வண்டிக்காரரை எழவிடாமல் சுட்டுத் தள்ளினார்கள். பிணத்தை தெருவில் உருட்டிவிட்டு ஓடினார்கள். பெட்ரோல் வற்றியதைக் கவனிக்காமல் ஓட்டியதால் வண்டியை வழியில் நிறுத்த வேண்டியதாயிற்று. எதிர்பாராமல் வந்த போலீஸிடம் பிடிபட்டு ஒன்றிலிருந்து ஒன்றாக விவரங்கள் வெளிவந்து சிறையிலடைக்கப்பட்டனர். கொள்ளை, கொலை வழக்கு நடந்து இருவருக்கும் முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கொலைக் குற்றம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படாததால் திருத்தப்பட்டு முப்பதாண்டுக் கடுங்காவல் தண்டனையானது.

தம்பி ராஜருக்கு சாராயத் தொழிலின் முடக்கமும் கஞ்சா வியாபாரத்தின் போட்டியும் வேறு பாதைகளை வகுத்தன. இளம் பெண்களைக் கடத்தி மெக்சிகோவிலும் லாஸ்வேகசிலும் ஹானலூலுவிலும் விற்கத் தொடங்கினான்.

கடத்தல் பொருட்டு லாஸ்வேகஸ் போகும் வழியில் டென்வரில் ஒரு நிர்வாண நடன அரங்கில் குடித்துவிட்டுத் தொடங்கிய சிறு தகராறு வளர்ந்து கொலையில் முடிந்தது. அவன் வண்டியில் இருந்த இளம் பெண்கள் தப்பியோடிப் போலீசில் சொல்ல, ராஜர் மேல் கொலை பலாத்காரக் கடத்தல் குற்றங்கள் பேரில் வழக்கு நடந்தது. நாற்பதாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

கொலராடோ கடுங்காவல் சிறையில் அடைக்கப்பட்ட சகோதரரகள் இருவரும் எதிர்பாராமல் சந்தித்தார்கள்.

சகோதரர்கள் மனதில் இன்னொரு திட்டம் உருவானது. ஆல்பர்டின் நண்பனுடன் சிறையிலிருந்துத் தப்பிக்க முடிவு செய்தார்கள்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சிறையில் காவல் சற்று மெலிந்திருப்பதை அறிந்தார்கள். ஞாயிறன்று சிறையில் தோத்திரமும் வேதமும் சொல்லும் பாதிரிகளையும் அவர்களுடன் காவலாக வரும் வார்டனையும் கொல்லத் தீர்மானித்தார்கள். வேதபோதனை முடிந்ததும் பாவமன்னிப்புக்காகப் பாதிரிகள் அரை மணி போல் தங்குவார்கள். அந்த ஞாயிறன்று போதனை முடிந்ததும் சகோதர்கள் இருவரும் ஆல்பர்டின் நண்பனும் பாவமன்னிப்புக்குத் தங்குவதாகச் சொல்லி மண்டியிட்டுக் காத்திருந்தார்கள். பிற கைதிகளைத் துணை வார்டனுடன் அனுப்பிய வார்டன் பின் தங்கினார். மண்டியிட்டு வணங்கும் பெஞ்சுப் பலகைக் கட்டையால் மூவரும் பாதிரிகளையும் வார்டனையும் அடித்துக் கொன்றார்கள். அவசரமாக பிணங்களின் ஆடைகளை எடுத்தணிந்தார்கள். பிணங்களை பெஞ்சுகளின் இடையே அமுக்கித் தள்ளிவிட்டு, மூவரும் சிறையிலிருந்து தப்பித்து வெளியேறினர்.

வெளியே வந்த சில நொடிகளில் ஒரு காவலனுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் பின்னே கூவிக்கொண்டு வர, அவசரத்தில் அந்தக் காவலனை ஆல்பர்டின் நண்பன் சுட, பிற காவலர்களும் வெளியே வந்து சுடத் தொடங்கினர். ஆல்பர்ட் தப்பி ஓடினான். நண்பன் சுடப்பட்டு இறந்தான். ராஜர் பிடிபட்டான்.

சிறைச்சாலைக் கொலைகள், டென்வர் கொலை, பெண்கள் கடத்தல் என்று தொடங்கிய வழக்கு மெள்ள விரிந்து ராஜரின் சிகாகோ வாழ்வை சந்திக்குக் கொண்டு வந்தது. கண்ணிழந்த போலீஸ்காரர் இப்போது சாட்சி சொல்ல வந்தார். மரியாவின் கொலையும் சேர்ந்தது. பிற கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் என்று எண்ணற்றக் குற்றங்கள் எழும்பி, ராஜர் மீதான வழக்கு பல மாநில அரசுகளின் பல நாள் தேடலுக்கான தீர்வாக அமைந்தது. வழக்கும் பல வருடங்கள் நடந்தது.

சமூக நல இயக்கங்களின் சார்பில் ஆயுள் தண்டனை வழங்கும்படி அவனுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீலையும், அவரை அழைத்து வந்த சகோதரி பானியையும், கோர்ட்டிலேயே திட்டினான். லீலாவிடம் காசு வாங்கிக்கொண்டு பர்ட்டை, சொந்தத் தந்தையை, கம்பிவலையால் கழுத்தை நெறித்துக் கொன்றதாகச் சொன்னதும் கோர்ட்டே அதிர்ந்தது.

மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது கொலராடோ நீதிமன்றம்.

இது நடந்தது 1989ல். மரண தண்டனையை அனுமதிக்க மறுத்த மாநிலங்கள் காரணமாகவும், குற்றங்கள் நடந்த இடங்கள் காரணமாகவும், பதிமூன்று வருடங்களாக இழுபறியாகி 2002ல் ராஜர் தூக்கிலிடப்பட்டான்.

    தப்பித்த ஆல்பர்ட் அங்கிங்கு நாடோடி போல் சுற்றிச் சிறு திருட்டுக்கள், குற்றங்கள் செய்து வந்தான். இருபது வருடங்களுக்குத் தலைமறைவாக இருந்தவன், தான் முன்பு வாழ்ந்த அரிசோனாவின் பீனிக்ஸ் நகருக்கு வந்தான். ஏதோ உந்துதலால் இரண்டாண்டுகள் வாழ்ந்த இடத்தைக் காணச் சென்றான். தன் மனைவியும் மகனும் இன்னும் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்ந்தான். பாதிரி வேடமிட்டு அவர்களைச் சந்தித்தான். தனக்கு ஒரு பேரக்குழந்தை இருப்பதை அறிந்து மகிழ்ந்தான். சந்தோஷமாகப் பேசினான். வெளியேறுகையில் போலீசில் பிடிபட்டான். அவனை அடையாளம் கண்ட மனைவி ரகசியமாகப் போலீசை அழைத்தது அவனுக்குத் தெரியாது.

ஆல்பர்ட் மேல் வழக்கு தொடங்கியது. அவனுடைய தனிப்பட்டக் குற்றங்களுக்கு மேல், தம்பி ராஜருடன் சேர்ந்து செய்தக் குற்றங்களும் பதிவாகி இன்னும் பரவலான, குழப்பமான வழக்கானது.

நீதி, சமூகம், கல்வி, பொதுநலம், காவல், குற்றவியல், உளவியல் எனப் பல்துறை விற்பன்னர்களையும் வில்சன் சகோதரர்கள் புரிந்தக் குற்றங்களின் ஆழ அகல காலப் பரிமாணங்கள் ஈர்த்தன. ஆல்பர்டின் சார்பில் அவனுடைய அக்கா பானி மீண்டும் நல்ல வக்கீல்களை நியமித்தார். சமூக அமைப்புகளைத் துணைக்கு அழைத்து வந்தார். ஆல்பர்டின் மனைவியும் தன் கணவனைக் காட்டிக் கொடுத்தது சமூக உணர்வே ஒழிய, கணவனாக இருந்த இரண்டு வருடங்களும் குற்றமில்லாத நடத்தைக்குச் சாட்சியாகப் பேசினார். மரண தண்டனை வழங்க வேண்டாமென்று ஆல்பர்ட் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கருணை மனுக்கள் தரப்பட்டன.

தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை ஏற்று ஆல்பர்ட் நீதிமன்றத்தில் பேசினான்.

"என் பரம்பரையில் எல்லாருமே நாடோடிகள். என்னை அந்த மரபிலிருந்து விலக்கித் தனிமைப்படுத்த முனைந்தது என் தந்தையின் தவறு. எனினும், நான் செய்த குற்றங்களுக்கு வேதனை அடைகிறேன். மனித நாகரீகம் தெரியாமல் வளர்ந்து விட்டேன். அறிவற்ற முடிவுகளை எடுத்தேன். அவை அறிவற்ற முடிவுகள் என்று உணர, கண நேர விழிப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. உங்களைப் படைத்த தேவனே என்னையும் படைத்தார். என்னைத் தூக்கிலிடாதீர்கள். உங்களிடமும் என் தெய்வத்திடமும் மன்னிப்புக் கேட்கிறேன்" என்றப் பொருள்பட ஒவ்வொரு குற்றமாகச் சொல்லி மன்னிப்பு கேட்டு அழுதான்.

இது நடந்தது 2007ல்.

    இப்போது மார்ச் 2013. ஆல்பர்டுக்கு 77 வயது.

எதிர்மனுக்களால் இழுத்தடிக்கப்பட்ட ஆல்பர்டின் தண்டனை வரும் மே மாதம் நிறைவேறும் என்கிறார்கள். இதுவரை தனக்கு வழி காட்டிய ஆண்டவனிடம் சேரத் தயாராக இருப்பதாகச் சொல்கிறான் ஆல்பர்ட். தன் தம்பி ராஜர் இப்போது குற்றம் களைந்தத் தூதனாக இருப்பதாகவும் சொல்கிறான்.

இடையே, கஞ்சா வைத்திருந்த காரணத்துக்காக ஆல்பர்டின் மகன் சென்ற வாரம் அரிசோனாவில் பிடிபட்டிருக்கிறான்.



என்னுரை [-]

    டித்து முடித்ததும் இதயப்பகுதியை ஈரத்துணியாகப் பிழிவது போலிருந்தால், சற்று முயற்சி செய்து நிமிர்ந்து பாருங்கள். உங்களுக்கு எதிரே நெஞ்சைப் பிசைந்து கொண்டிருக்கும் உருவம் நானாக இருக்கலாம்.

இது உண்மைக்கதை(?). சமூக அக்கறை தோய்ந்தப் பெருங்குற்ற வழக்குகளில் ஒன்று. சில இடம், பெயர், கால, குற்ற விவரங்களை மாற்றியிருக்கிறேன். சமூக அக்கறைப் பரிமாணங்களைப் பார்க்குமுன் (புலம்புமுன்) சில புள்ளிவிவரங்கள்.

இரண்டு சகோதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தது அமெரிக்க வரலாற்றில் இதுவே இரண்டாவது முறை. அடுத்துப் பிறந்த சகோதரர்களுக்கு மரண தண்டனை வழங்கியது உலகிலேயே முதல் தடவை என்கிறார்கள். வில்சன் சகோதரர்கள் தனித்தும் இணைந்தும் செய்த குற்றங்கள்: 17 கொலைகள், 1280க்கு மேற்பட்ட சில்லறைத் திருட்டுக்கள், 36 தீவைப்பு மற்றும் வன்முறைகள், 11 கொள்ளைகள், 285 பாலியல் மீறல்கள், 13 கற்பழிப்புகள், சுமார் 60000 கிலோ போதைப் பொருள் (!) வியாபாரம், 7 இடங்களில் விபசாரம், 500க்கு மேற்பட்ட கார் திருட்டுக்கள்.. பட்டியல் நீளுகிறது. எழுபதாண்டுச் சராசரி வாழ்நாள் அடிப்படையில் இவர்களின் குற்றப்பட்டியலை ஆய்ந்தவர்கள் சொன்னது: 'தினம் ஒரு கிலோ போதைப்பொருள் வியாபாரம், வாரம் ஒரு திருட்டு, மாதம் ஒரு பாலியல் குற்றம், வருடம் ஒரு கொலை அல்லது வன்முறை...' அதிர்ச்சியில் அயரவைக்கும் உழைப்பு! "சிந்திக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு விரைவானத் தொடர் குற்றவாளிகள்" என்றார் ஒரு குற்றவியல் நிபுணர்.

குற்றம் புரிவதில் இணையான மனப்பாங்குடன் செயல்பட்டச் சகோதரர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை வெவ்வேறு விதமாக அணுகினார்கள்.

ராஜர் எதற்கும் மன்னிப்பு கேட்கவில்லை. வருந்தவுமில்லை. தூக்கிலிடுமுன் ராஜரிடம் தேவச்செய்தி சொல்ல வந்த பாதிரியைக் கூட தலையால் முட்டிக் காயப்படுத்தினான் என்கிறார்கள். தேவனின் ராஜ்ஜியத்தில் இருப்பவர்களையும் ஒரு கை பார்ப்பதாகச் சொன்னான் என்கிறார்கள்.

ஆல்பர்ட் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிர ஆத்திகனாக மாறியுள்ளான். சகோதரி பானியை அடிக்கடி சந்திக்கிறான். குற்றங்களுக்கு மன்னிப்புக் கோரி, சிறையில் தினம் முகமறியா நபர்களுக்குக் கடிதங்கள் எழுதுகிறானாம்.

    இரு சகோதரர்களின் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மனுக்கள் தாக்குதல் செய்யப்பட்டன, சமூக அமைப்புகள் பிரசாரங்கள் செய்தன, என்றாலும் ஆல்பர்டின் வழக்கின் போது அதிகச் சமூக அக்கறையும் ஈடுபாடும் இருந்தது. சமூக அமைப்புகள் சகோதரர் வாழ்க்கையை அலசத் தொடங்கின. அக்கா பானி ஒரு உயர்ந்த சமூக நிலையில் இருக்க, சகோதரர்கள் இப்படிக் கொடியவர்களானதன் சமூகப் பொருளாதார அரசியல் சட்டக் காரணிகளை ஆராய்ந்தார்கள். ஆல்பர்டின் தாய் தந்தை மூதாதையர் பற்றிப் பேசினார்கள். ஆல்பர்டின் விதி, மூதாதையரின் குற்றம் கலந்த நாடோடி வாழ்க்கையினால் நியமிக்கப்பட்டதா? பர்ட் வில்சன் அத்தனை முயன்றும் பிள்ளைகள் இருவரும் குற்றம் தழுவிய நாடோடிகளாகத் தானே வாழ முடிந்தது? சமூக வளர்ச்சியினால் அந்த விதியை மாற்ற முடியவில்லையா? இனி ஆல்பர்டுகள் உருவாகாதிருக்க என்ன செய்ய வேண்டும்?' என்று விவாதித்தார்கள். ஆல்பர்டுடன் பேசி குற்ற உணர்வு, தூண்டுதல், வன்முறை எண்ணங்கள் பற்றி அறிந்தார்கள். "மரியாவின் மீது இவர்கள் காட்டிய மிருக வன்மத்துக்கு என்ன காரணம்? இதற்குச் சமூகம் எந்த விதத்தில் பொறுப்பேற்க வேண்டும்?" என்று ஒரு சமூக ஆர்வலர் தீர்ப்புக்கு எதிரான வழக்குகளில் பேசினார்.

"இத்தனை வயதுக்கு மேல் இவரைத் தூக்கிலிட்டு என்ன பயன்? தண்டனை வழங்கினால் இவரைச் சமூகம் விரைவில் மறந்து விடும். அதற்குப் பதிலாக இவரை இளைஞர் சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் சென்று பேசச் செய்யலாம். சமூக நல அமைப்புகளுடன் இணைந்து வெறிக்குற்றங்கள் தடுப்புக்கான பிரசாரங்கள் செய்யலாம்" என்று ஒரு கூட்டம் ஆல்பர்ட் வழக்கில் விடாமல் பிரசாரம் செய்து வருகிறது. "சமீபமாகத் தோன்றியிருக்கும் ஆத்திகப் பழக்கம் இவரைக் கடவுள் மன்னித்துவிட்டதன் ஆதாரம். கடவுள் மன்னித்த ஒருவனை மனிதர்கள் தண்டிக்கலாமா?" என்று ஒரு மதம் சார்ந்த சமூக நலக்குழு வாதாடி வருகிறது.

விக்டர் பற்றிய மர்மமும் வம்பும் இந்த வழக்கின் உபரி சுவாரசியங்கள். சமூக, மத மற்றும் பல்துறை விற்பன்னர் ஆர்வத்தைத் தூண்டியதும், வக்கீல்களையும் சலுகை ஆய்வாளர்களையும் நியமிக்க பானிக்குப் பண உதவி மிகச் செய்ததும், விக்டர் என்கிறார்கள். இன்று அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குடைய, பண்புக்கும் கண்ணியத்துக்கும் அடையாளமாக விளங்கும், ஒரு வணிகரை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் தான் விக்டர் என்கிறார்கள். சிறு வயதிலேயே ஊர் பெயர் எல்லாம் மாற்றிக் கொண்ட விக்டர் யாரென்று பானிக்கு மட்டுமே தெரியும்.

திருமணமே செய்து கொள்ளாத பானிக்கு எண்பது வயதுக்கு மேல் ஆகிறது. தன் சகோதரர்களின் வழக்கைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் நிறையப் பேசுகிறார். சகோதரர்களின் நலனுக்காகவும் பாவ மன்னிப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். தன் சொத்துக்கள் அத்தனையும் ஆல்பர்டின் பேரனுக்கு எழுதி வைத்திருக்கிறார்.

பர்ட் வில்சனின் கனவு இனியேனும் பலிக்குமா என்றக் கேள்வி இந்த வழக்கில் அடிக்கடி கேட்கப்பட்டது. பானியும் 'முகமில்லா' விக்டரும் தான் வில்சனின் கனவு என்கிறார்கள் சிலர். எனினும், பர்ட் வில்சனின் பரம்பரை ஆல்பர்டின் சந்ததி வழியாக மட்டுமே தழைத்திருப்பதை சமூக ஆய்வாளர்கள் மிகுந்த வியப்புடனும் எதிர்பார்ப்புடனும் கவனிக்கிறார்கள்.

கலர் சட்டைக்காக எழுதியது. சுழிக்குப் பொருந்துவதால் இங்கே பதிவிட்டேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.



2012/09/21

கடவுள் கிடையாது பாப்பா

டவுள் கிடையாது பாப்பா இதைநீ
    கருத்தினில் வைத்திடு பாப்பா - தெய்வப்
படங்கள் சிலைகளெல்லாம் பாப்பா முன்னோர்
    மடமையென் றறிந்திடு பாப்பா.

மதங்கள் அத்தனையும் பாப்பா முன்னோர்
    மதிகெட்ட வினையாகும் பாப்பா - தீங்கின்
விதங்கள் பலவாகும் பாப்பா அதில்
    முதலிடம் மதமாகும் பாப்பா.

அல்லாவும் யேசுவும் பாப்பா அதுபோல
    ராமனும் சக்தியும் பாப்பா - எல்லாம்
இல்லாத கடவுளின் வடிவாய் முன்னோர்
    இட்டுக் கட்டியதாம் பாப்பா.

எம்முன்னோர் பொய்களைப் பாப்பா ஏற்று
    மூடராய் நாசமானோம் பாப்பா - எங்கள்
நம்பிக்கை பொய்யான தாகும் இதை
    நீயேனும் புரிந்துகொள் பாப்பா.

பாவப் புண்ணியங்கள் போலி பின்னும்
    சொர்க்க நரகமெம் பிதற்றல் - பொய்யால்
ஆவ தேதுமுண்டோ பாப்பா எமைநம்பி
    அறிவை இழக்காதே பாப்பா.

கண்ணால் காண்பதும் பொய்யாம் அறிந்தும்
    காணாததை மெய்யென்றோம் பாப்பா - நம்பிக்
கண்மூடிக் கருத்தழிந்த நாங்கள் நாளும்
    கண்திறந்தக் குருடரானோம் பாப்பா.

கற்றும் அறிவிலார் எம்மை உனக்
    கடையாளம் காட்டுகிறேன் பாப்பா - உன்
பெற்றோர் உறவினர்போல் இருப்போம் பொய்யைப்
    பூசுவதில் பொல்லாதவர் பாப்பா.

கருணையே வடிவான தென்போம் கோபத்தில்
    கண்குத்திக் கழுவிலேற்று மென்போம் - முரணை
ஒருவரும் அறியாத வரையில் நாங்கள்
    ஊரை ஏமாற்றுவோம் பாப்பா.

பக்தியென்றும் முக்தியென்றும் சொல்வோம் மதம்
    முக்கிய மானதென்போம் பாப்பா - மறுத்தால்
சக்தியுள்ள தெய்வமுன்னைப் பாப்பா வாழ்வுடன்
    சாவிலும் வாட்டுமென்போம் பாப்பா.

அரிமுகம் அவதாரம் என்போம் சிலரை
    ஆண்டவனின் தூதரென்போம் பாப்பா - எமக்குப்
புரியாதப் பொய்தினம் சொல்வோம் நீமட்டும்
    பொய்யுரைக்க லாகாது என்போம்.

விரதமுடன் வேதங்கள் சொல்வோம் நாங்கள்
    வேளைக்கொரு வழிபாடு செய்வோம் - பிறகப்
பரம்பொருள் பெயர்சொல்லிப் பாப்பா எம்முள்
    பைத்தியமாய் அடித்துக் கொல்வோம்.

காணாததைக் கடவுளென்றோம் பாப்பா இன்றுக்
    கண்டதையும் கடவுளென்போம் பாப்பா - எமது
வீணான வெறும்பேச்சை நம்பி நீயுமப்
    படுகுழியுற் போகாதே பாப்பா.

கடவுள் கிடையாது பாப்பா இதைநீ
    கணமும் மறவாதே பாப்பா - மதங்கள்
மடமையின் சிகரம் என்பதை உன்
    மனதில் வைத்திடு பாப்பா.

அச்சமும் மடமையும் பாப்பா எம்மை
    மூடராய் முடக்கிய தென்போம் - இனி
மிச்சமுள்ள தலைமுறைக்குப் பாப்பா எங்கள்
    மனதைச் சொல்லுகிறோம் பாப்பா.

கடவுள் மதங்களில்லா உலகம் எங்கள்
    கனவின் புதையலாகும் பாப்பா - இதைத்
திடமாய் செயலிலே காட்டி நாளை
    நனவாகச் செய்திடு பாப்பா.

2012/03/03

நானும் கடவுளும்




1            2



    பின்னூட்டங்களுக்கு நன்றி. சென்ற பதிவில் judgmentalஆகப் பதித்தச் சொற்களை நீக்கிவிட்டேன். முடிந்தவரை இனி ஆங்கிலத்திலேயே, i mean, தமிழிலேயே எழுதுகிறேன். but seriously, அறிவுரைக்கு நன்றி :). இந்தப் பதிவை மதித்து மின்னஞ்சல் அனுப்பிய இருவருக்கும் மீண்டும் நன்றி. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இமெயில்களைப் பொதுப் பார்வைக்கு வைக்கிறேன். பிறகு தொடர்வோம்.
**

    நாத்திகம் என்றால் 'கடவுளுக்கு எதிரி' என்ற பார்வையிலேயே ஆத்திகர்கள் பேசுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை. நாத்திகர்களை எதிரிகளாகவேப் பார்த்துப் பழகிவிட்டதால் இருக்கலாம். எனினும், ஆத்திகத்தின் வன்முறை நாத்திகத்தில் இல்லை என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கிறது. மதத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்கள், நோயால் இறந்தவர்களை விட அதிகம் என்றால் நம்ப மறுக்கிறார்கள். நம்மூர் செருப்படி நாத்திகத்தை நேரில் கண்டவர்களுக்கு இது புரிவது இன்னும் சிரமம். எனினும், நம்மூரில் செருப்படி நாத்திகத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன். நம்புகிறேன்.

நாத்திகர்கள் கடவுளுக்கு எதிரியல்ல. கடவுள் தைரியமாக நாத்திகர்கள் நடுவில் வரலாம். நாத்திகர்களுக்குப் புரிந்தது, ஆத்திகர்களுக்குப் புரியாது போனது தற்காலிக வருத்தம். இது தற்காலிகம் என்றே நம்புகிறேன். என்றாலும் சிறு சங்கடம். நம் ஆயுட்காலம் தாண்டியத் தற்காலிகம் என்பதே.

இன்னும் இருநூறு வருடங்களில் தினசரி வாழ்வில் கடவுளுக்குப் பங்கிருக்காது. மதங்கள் பெரும்பாலும் ஒழிந்திருக்கும். இது என்னுடைய கணிப்பு. இருநூறு வருடம் கழித்து இது உண்மையாகி, என்னை நாத்திக நாஸ்ட்ரேடமஸ் என்றால் நான் பொறுப்பல்ல. இருந்தாலும் ஆசை விடவில்லை :).

பெயருக்கு ஆசைப்பட்டு ஜோசியம் போல் ஏதோ சொல்லிவிட்டுப் போக அறிவு இடம் தர மறுக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக முடியாதது இருநூறு வருடங்களில் சாத்தியமா? சிரமம் தான். எனினும், சென்ற நூறு வருடங்களின் வளர்ச்சி பெரும் நம்பிக்கையூட்டுகிறது. இது தான் catalyst. சென்ற நூறு வருடங்களின் வளர்ச்சி தான் lever. ஆத்திகத்தைப் புரட்டி அண்டத்தில் எரியக்கூடிய lever. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.

இருநூறு வருடங்களில் கடவுளும் மதமும் காணாமல் போக வேண்டுமென்றால் நிறைய உழைக்க வேண்டும். நாத்திகம் பரவப் பெருமுயற்சி எடுக்க வேண்டும். தெரிந்த உண்மைகளைத் தெளிவாகச் சொல்லி, தீர்மானங்களைக் கேட்பவர் பொறுப்பில் விடும் பக்குவம் வளரச் செய்ய வேண்டும்.

மலைப்பாக இருக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாகக் 'கண்ணைக் குத்தி' பயமுறுத்தியது மூச்சுக்காற்றோடு கலந்து விட்டது. நாத்திகத்தின் அடிப்படையே பலவீனமானது. 'கண்ணைக் குத்தாது' என்று சொன்னால் யார் மதிக்கப் போகிறார்கள்? 'அருளினால் எதுவும் வராது, உழைக்க வேண்டும்' என்றால் யார் ஏற்கப் போகிறார்கள்? 'கண்மூட வேண்டாம்' என்றால் முகத்திலேயே சிரிக்கிறார்கள். மீண்டும்.. மலைப்பாக இருக்கிறது. இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்.
**

    "சூரியனை உண்டாக்கியது ஜீசஸ் தானே டேடி?" என்றான் மகன்.

"இல்லை" என்றேன்.

"அப்ப இந்துக் கடவுள் உருவாக்கிச்சா?"

"இல்லை"

"மொகாமெட்?"

"சூரியனை யாரும் உருவாக்கவில்லை"

"டேடி.. உனக்கு எதுவும் தெரியலை. ஸ்கூல்ல நீ 'F' தான் வாங்கியிருப்பே"

"சரி. சூரியனைப் பத்தி என்ன சொன்னாங்க டீச்சர்?"

"உலகத்துல எதுவும் நடக்கணும்னா சூரியனோட சக்தி வேணும்னு சொன்னாங்க"

"சூரியன்ல என்ன இருக்கு தெரியுமா?"

"முழுக்க முழுக்க நெருப்பு. சரியா?"

"ம்ம். சூரியன்ல இருப்பது முழுக்க முழுக்க gas"

விழுந்து விழுந்துச் சிரித்தான். "குசுவா?"

"அதுவும் வாயுதான். சூரியன்ல இருப்பது ஹைட்ரஜன்.."

"அப்படின்னா?"

"ஒரு gas. இப்போதைக்கு அது போதும். இங்கே வா" என்று கணினியில் ஒரு படத்தை வரையத் தொடங்கினேன். அவன் இன்னும் விசித்திரமான ஓசைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தான்.

மேசை விளக்கை ஒரு நிமிடத்துக்கு மேல் எரியவிட்டு அணைத்தேன். "இந்தா, இதைத் தொடு" என்று பல்பைச் சுட்டினேன்.

"என்னை என்னா லூசுனு நினைச்சியா? அது சுடும். நீயே தொடு" என்றான்.

ஜூரத்துக்கு உபயோகிக்கும் டெம்பரசர் பட்டி ஒன்றைப் பிரித்து பல்பில் ஒட்டினேன். விர்ரென்று நூற்றுப் பதினைந்து பேரந்ஹைட்டைத் தொட்டுச் சுர்ரென்று இளகிச் செத்தது பட்டி. "இதோ பார், நூத்துப் பதினஞ்சு டிகிரி. சூரியனைத் தொட்டா இது போல நூறு மடங்கு சுடும். சூரியன்ல இருக்குற gas எரியும் போது சக்தி கிடைக்குது, அதுவே ஒளியாவும் சூடாவும் பூமிக்கு வருது". gas என்றதும் மறுபடி சிரிக்கத் தொடங்கியவனை நிறுத்தச் சில நிமிடங்களாயின.

"அப்ப சூரியனை யாரும் உண்டாக்கினா அவங்க கையெல்லாம் சுட்டிருக்குமே?" என்றான்.

"ஒருவேளை ultra mega super cool gloves போட்டுக்கிட்டு உண்டாக்கினாங்களோ என்னவோ?" என்றபடி கணினிப் படத்தைச் சுட்டினேன். "அண்டத்துல புழுதியும் வாயுவும் வேகமா கலந்து சுத்துறப்போ அது நட்சத்திரமா மாறிடும். நட்சத்திரம் எரியத் தொடங்குறப்போ சக்தியை வெளிவிடும். பிலியன் வருஷக்கணக்கா எரியும். சூரியனும் இதுபோல உருவான ஒரு நட்சத்திரம். எத்தனையோ பிலியன் வருஷம் எரிஞ்சு எல்லா வாயுவும் அடங்கிடும். அப்போ இந்த சூரியன் நமக்கு ஒளி தராது"

"அப்ப உலகம் அழிஞ்சிடுமா? நாமெல்லாம் செத்துருவோமா?"

"கடலுக்கடியில ரொம்ப ஆழத்துல இருக்குற சில புழுக்களும் கிருமிகளும் தவிர மிச்ச எல்லாம் செத்துரும்"

"புழு பூச்சி உயிரோட இருக்குமா? அப்ப கடவுள் நம்மை சாகடிச்சுடுவாரா? this is not fair. grandma said god loves us" என்றான்.

"இந்தச் சூரியன் அழிய இன்னும் அஞ்சு பிலியன் வருசமாவது ஆகும். இதோ பார். நடுவுல இருக்கோம். இன்னும் இவ்வளவு தூரம் எரிஞ்சு வரணும். அதனால கவலைப்படாதே"

"அப்ப அந்த டயத்துல எல்லா மனுசங்களும் செத்துடுவாங்களா? பூமிக்கு என்னாகும்? this is not fair"

"யாருக்குத் தெரியும்? சூரியன் அழியுறதுக்கு முன்னால நாம பூமியைத் தூக்கிக்கிட்டு வேறே ஏதாவது சூரியனைத் தேடிப் போகலாம்" என்றேன்.

"இப்படி அழிக்கணும்னா எதுக்காக god இதை உண்டாக்கணும்? makes no sense". அவன் இன்னும் 'not fair'ல் இருந்தான்.
**

    ளமையிலேயே கற்பிக்க வேண்டும். ஒரு புறம் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' சொல்லிக் கொடுப்பது போல இன்னொரு புறம் தெரிந்த உண்மைகளையும் சொல்லித் தர வேண்டும். "பூமியைக் கடலுக்குள் கொண்டு ஒளிப்பதா?. கடலே பூமிக்குள் தானே இருக்கிறது?" போன்ற கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். வீட்டிலும் வெளியிலும் எண்ணச் சுதந்திரம் வேண்டும். 'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்போதைக்கு என் பாட்டன் அப்பன் சொன்னது போல் கும்பிட்டுக் கிடக்கட்டும்' என்ற மனப்பாங்கு மாற வேண்டும்.

நமது கல்வித்திட்டம் ஆத்திகக் கல்வித்திட்டம். நாத்திகத்துக்கு இடமில்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சுத்தமாக ஆத்திகச் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. என்னுடைய பள்ளி நாட்களில் தான் அப்படி என்றால், இன்றைக்கும் அதே நிலைதான் போலிருக்கிறது.

2004-06 வாக்கில் அமெரிக்கக் கல்வி முறையைச் செப்பனிடுகிறேன் பேர்வழி என்று intelligent design ஆசாமிகள் கூத்தடித்தார்கள். நல்ல வேளை, Dover வழக்குகளில் தடைபட்டு நின்றுபோனது.

கொஞ்சம் பின்னோக்கிப் போனோமானால் நாத்திகம் இயல்பாகவே கல்வியாக வழங்கப்பட்டிருப்பதை அறியலாம். நான்காம் நூற்றாண்டு வாக்கில் 'சார்வகம்' எனப்படும் கடவுள்/மதம் விலக்கியத் தத்துவக்கல்வி நம் நாட்டில் இருந்தது. மெள்ள அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கும் வெகு காலம் முன்னால் கடவுள், மதம், மற்றும் மூட நம்பிக்கைகளின் எதிர்வாதமாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களையும் புராணங்களையும் பராமரிக்கும் அளவுக்கு இவற்றைப் பராமரிக்கவில்லை.

ராமாயணக் கதையில் ஜாபாலி என்று ஒரு பாத்திரம். வால்மீகியின் அயோத்தியா காண்டத்தில், ஜாபாலி என்ற ஒரு சாதாரண பிராமணன் உலக நியதியின் அடிப்படையில் ராமன் காட்டுக்குப் போவது கண்மூடித்தனம் என்று வாதாடுகிறான். ஜாபாலியின் வாதங்களுக்கு ராமனின் பதிலில் தீவிரக் கோபம் மட்டுமே காண முடிவது, தன்னிச்சையா தெரியவில்லை. ஜாபாலியின் கருத்துக்களைப் பாடமாக ஏன் வைக்கவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. பாடமோ இல்லையோ படிக்கச் சுவாரசியமானது. சிந்தனையைத் தூண்டுவது. அறத்தின் இரு பக்கமும் அறிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ராம-ஜாபாலி உரையாடலுக்கு மீண்டும் வருவோம்.

நேர்மையானக் கல்வியை வழங்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர் கடமை. ஒருதலைக் கல்வியில் முழுமையான அறிவோ பக்குவமோ வளராது என்பது நமக்கே புரியவில்லை. அரசாங்கத்துக்கு எங்கே புரியப்போகிறது? இளமையிலேயே படித்தால்.. பிடித்தால்.. இருநூறு நூறாகலாம்.
**

    மெரிக்க நாத்திகர்களுக்கான ஒரு இயக்கம் குற்றுயிராய் இயங்கி வருகிறது. 'இயக்கத்தினால் என்ன பயன்?' என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டு, பாதி நேரம் இயக்கத்தின் வளர்ச்சி தடைபட்டுப் போகிறது. இருப்பினும் தொலைநோக்கு கொண்ட ஒரு சிலரால் குற்றுயிரானாலும் பிழைத்துக் கிடக்கிறது. வரும் செப்டெம்பர்-அக்டோபர் மாதங்களில் 'கடவுளிலா அமெரிக்கா' எனும் யாத்திரை நடத்தத் திட்டமிருக்கிறது. யாத்திரையில் கலந்து கொள்ளவும் பேசவும் tentative சம்மதம் தெரிவித்திருக்கிறேன். உதைபடப் போகிறேன் என்பது நிச்சயம். இங்குள்ள மதவெறியர்கள் சுட்ட பிறகு தான் கேள்வியே கேட்கிறார்கள்.

நாத்திகர்களுக்கான சங்கங்கள் நிச்சயம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன். அமெரிக்க நாத்திக இயக்கம் பிள்ளைகளுக்கு scholarship வழங்குகிறது. அதனால் பள்ளிப் பிள்ளைகளுக்கு இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளவாவது முடிகிறது. இது போல் இந்தியாவில் ஏதாவது செய்யலாமா என்ற எண்ணம் வேர் விட்டிருக்கிறது. ஐடியா தேறுமா?
**

காவடி எடு, தேங்காய் உடை, மலைக்குப் போ என்பவை சாதாரணச் செய்திகளாகப் பாமரர்களைச் சென்றடைவது போல், 'கண்மூடித்தனத்தை விடு' என்பதும் சாதாரணச் செய்தியாகப் பாமரர்களைத் தொடும் வழியைத் தேட வேண்டும். 'கடவுளைக் கும்பிடு' 'மதத்தை மதி' என்பதன் எளிமை, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதில் இல்லை. இங்கே தான் நாத்திகம் தடுக்கி விழுந்ததாகத் தோன்றுகிறது. நாத்திகத்தின் செய்தி 'கடவுளைக் கும்பிடாதே' என்பதல்ல. இதைச் செய்தியாகக் கொண்டு வந்த செருப்படி நாத்திகம் அடையாளத்தோடு இருக்கும் வரை, சிந்தனை சார்ந்த நாத்திகம் வளர்வது கடினம் என்று தோன்றுகிறது.
**

எனக்கு வந்த முதல் கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சற்றும் எதிர்பாராத மின்னஞ்சல். போக்கற்ற என் சிந்தனைகளைக் கொட்டுவோம் என்று பதிவெழுதிய எனக்கு இதைப் படித்ததும் என்ன பதில் சொல்வது என்று உடனே தோன்றவில்லை.

சில வருடங்களாக என் மனதை வருத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

என் அப்பா எப்படிபட்டவர் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு என் மனதில் வருத்தத்தை உண்டாக்கிய விஷயத்தை கேட்க வேண்டும். தன்னுடைய பத்தாவது வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்த என் அப்பாவுக்கு தம்பி தங்கை உண்டு. என் தந்தைக்கு எந்த விதமான பரம்பரை சொத்தும் இல்லாததால், தன் பத்து வயதில் பொருட்காட்சியில் டிக்கெட் கொடுக்கும் வேலைக்கு சென்றார். பின் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பத்தாவது கூட படிக்காததால் அந்த வேலையே தக்க வைத்துக் கொள்ளவே மாடாக உழைக்க வேண்டி இருந்தது. கூடவே தங்கை, தம்பிகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும். இந்த நிலையிலும், அந்த வயதிலேயே தன் தாய் தந்தைக்கு மிகவும் ஸ்ரத்தையாக தெவசம் செய்ய துவங்கி விட்டார். கிட்டத்தட்ட அறுபது தெவசங்கள் செய்திருப்பார். அத்தனையும் ஹோமம் வளர்த்தது தான். எந்த வித கெட்ட பழக்கமும் கிடையாது. குறிப்பாக பெண்களை மிகவும் மதிக்கும் பண்புடையவர். எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் உசத்தி. அப்பா வாயிலிருந்து தப்பித்தவறி கூட ஒரு கெட்ட வார்த்தை வந்ததில்லை. தன் வாழ்நாளில் ஒரு சினிமா, வீட்டு தொலைகாட்சியில் கூட, பார்த்ததில்லை. அம்பாள் பாலதிருபுரசுந்தரி மேல் அபார பக்தி, நம்பிக்கை. நாள்தோறும் காலையில் லலிதா சஹஸ்ரநாமம், மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல தவறியதே இல்லை. இந்த அம்பாளின் படம் எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இன்று வரை எங்கள் வீட்டில் இருக்கிறது. இதற்கு frame மாற்ற வேண்டும் என்றால் தானே எடுத்து சென்று அந்த கடையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கையோடு வாங்கி வந்து விடுவார். அப்படி ஒரு பக்தி.

என் தந்தை அடுத்தவர் பணத்தில் இருந்து ஒரு நயா பைசாவை கூட விரும்பாதவர். நாங்கள் 20 வருடங்களாக குடியிருந்த வீட்டை காலி செய்ய சொல்லி மூன்று மாத தவணை கொடுத்தனர் வீட்டின் சொந்தக்காரர்கள். அக்கம் பக்கம் இருந்தவர்களும் உறவினர்ககளும் என் தந்தையிடம் இருபது வருடம் அந்த வீட்டிலேயே குடியிருந்ததால், வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒரு சிறிய தொகை கேட்க சொல்லி வற்புத்தினர். என் அப்பா எதையும் கேட்காமல் அவர்கள் கொடுத்த மூன்று மாத கால தவணைக்கும் முன்பாகவே ஒரே மாதத்தில் வீட்டை காலி செய்து கொடுத்தார்.

இப்படிப்பட்ட என் அப்பா தன் வாழ்நாள் இறுதி வரை பணக் கஷ்டம் பட்டிருக்கிறார். எந்த ஒரு சுகபோகத்தையும் அனுபவித்ததில்லை. மரணமாவது அவருக்கு உதவியதா! அதுவும் இல்லை படுத்த படுக்கையாக ஆறு மாதம். சோடியம் குறைவினால் வாய் திறக்க முடியாமல், அது சரியாவதற்குள் அப்பாவுக்கு தலை சுற்றல் இருந்ததால் அதனால் சில முறை விழுந்திருந்ததால் உண்டான கோளாறுகள் கடைசி நேரத்தில் தலை தூக்கி, அவரை மிகவும் மோசமான நிலைமைக்கு கொண்டு சென்று விட்டது.

நான் போன் செய்து பேசும்போதெல்லாம், "என்னால வலி தாங்கவே முடியவில்லை கண்ணு. அம்மா, இது எப்பேற்பட்ட வலின்னு சொல்ல வார்த்தையே இல்லம்மா, தாங்கவே முடியலைமா" என்று அழக்கூட தெம்பில்லாமல் தன் ஈன குரலில் சொன்னதை இப்போது நினைத்தாலும் நான் கதறி அழுது விடுவேன். இறக்கும் தருவாயில் இருந்த அந்த கடைசி நாட்களில் கூட இவருக்கு ஏன் எந்த தெய்வமும் உதவவில்லை? அவர் தன் உலகமாகவே நினைத்த அவர் அம்பாள் கூட அவருக்கு ஏன் அந்த கடைசி நேரத்தில் உதவவில்லை? சரி கடவுள் வேண்டாம், பித்ருக்கள் தெய்வம் என்பார்களே அவர்களாவது உதவி இருக்கலாமே? பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி, மாதக் கடைசியில் துண்டு விழும்போது ஓவர் டைம் பார்த்து, பஸ்சில் செல்லக் காசு குறைவாக இருந்த படியால் இரண்டு ஸ்டாப்பிங் முன்னமே இறங்கி, வீட்டிற்கு நடந்தே வரவேண்டிய நிலை இருந்தபோதும் ஒரு தெவசம் கூட விடாமல் தாய் தந்தையர்க்கு செய்ததற்கு என் தந்தை என்ன பலனை கண்டார்? தாய் தந்தையர்கள் கையால் இவர் சாப்பிட்டதை விட, இன்னும் சொல்லபோனால், சாப்பிடவேயில்லை, இவர் அவர்களுக்கு பிண்டம் போட்டதுதான் அதிகம்.

நாங்கள் குடும்பத்தோடு சினிமா, பீச் என்று எங்கும் சென்றதில்லை. கோவில் தான் சென்றிருக்கிறோம். பக்தி என்பது என் ரத்தத்திலும் ஊறிப் போன விஷயம்தான். அப்படிப்பட்ட நான் என்னுடைய அப்பா அவ்வளவு அவஸ்த்தை அனுபவித்து இறந்ததை பார்த்தபின் மிகவும் வெறுத்து விட்டேன். நடப்பதுதான் நடக்கும் என்றால் கடவுளை நம்புவதும், பித்துர்க்களுக்கு செய்வதும் எதற்காக? சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இன்றும் நானும் என் சகோதரனும் கஷ்டப்படுவது எதனால்?

சொந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள் வேண்டிய நேரத்தில் உதவி செய்ய தவறினால் உடனே விரோதம் செய்து கொண்டு விலகி விடும்போது, கண்ணுக்கு தெரியாத கடவுள், அவரை வேண்டினால் நிச்சயம் நிறைவேறும் என்று எண்ணி, செலவு பண்ணி பூஜைகள் செய்து, விரதம் இருந்து, கடைசியில் நடக்கவில்லை என்றால், அப்பொழுது கூட தெய்வத்தை நிந்திக்காமல், தான் செய்த பூஜையில் தவறு, தன் பூர்வ ஜென்ம பாவம் என்றெல்லாம் நினைத்து மீண்டும் அந்த தெய்வத்தின் காலிலேயே விழுவது எதனால்? எதற்காக கண்ணுக்கு தெரியாத, புலப்படாத அந்த தெய்வத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்றே தோன்றுகிறது.

பிறப்பதே ஒரு நாள் இறப்பதிற்காகத்தான். அந்த பிறப்பிலும் சுகம் இல்லை, இறப்பிலும் சுகம் இல்லை, இவை இரண்டுக்கும் நடுவில் வாழ்ந்த வாழ்கையிலும் சுகம் இல்லை. பிறந்தோம், உழைத்தோம், உண்டோம், இறந்தோம் என்று மரம், செடி கொடி போல ஆன என் தந்தையின் வாழ்வில், அவர் பக்தியால் கண்ட பலன் என்ன? பித்ருக்களுக்கு செய்ததால் கிடைத்த பலன்தான் என்ன?

இதற்கு யாராவது முடிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.
என்னை மிகவும் பாதித்தக் கேள்வி: '...மீண்டும் அந்த தெய்வத்தின் காலிலேயே விழுவது எதனால்?'. என் பதிலை அவருக்கு அனுப்பி வைத்தேன் என்றாலும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை. இதைப் படித்ததும் என்ன தோன்றுகிறது? கடிதம் எழுதியவரிடம் நீங்கள் சொல்ல விரும்புவது ஏதாவது உண்டா?
**

    றைந்த ஜோர்ஜ் கார்லின் அமெரிக்க நாத்திகர். அவரது பிரபலம் இயக்கத்துக்கு கொஞ்சமாவது உதவியது எனலாம். நகைச்சுவையோடு சிந்திக்க வைத்தவர். ஆத்திகத்தைக் கிண்டல் செய்து அவர் அடிக்கும் லூட்டிகளை யூடியில் காணலாம்.

2012/02/08

நானும் கடவுளும்




1            2



    சாந்தினிக்கு நன்றி.
**

    சென்ற டிசம்பர் மாத இறுதியில் பழைய நண்பர்கள் இருவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் முதலாமவருக்குத் திடீரென்று வேலை போய்விட்டது. எழுபதுகளில் அமெரிகா வந்து பெரிய படிப்பு படித்து, இந்வெஸ்ட்மெந்ட் பேங்கராக முப்பது வருசங்களுக்கு மேல் குப்பை கொட்டுவதால் நிறைய சேர்த்து வைத்திருக்கிறார். பணம் ஒரு பிரச்சினையில்லை. இருந்தாலும், 'type A' காரர்களின் paranoia அவரையும் பிடித்துக் கொண்டது. ஓய்வு பெற சில வருடங்களே இருக்கும் பொழுது, கிடைத்தவரைக்கும் போதும் என்று அடங்க வேண்டாமோ? தன்னை வேலையிலிருந்து நீக்கியது சரியில்லை என்று வழக்கு போட்டார். ஆயிரக்கணக்கில் செலவு செய்தார். இரண்டு வருடங்களாக வழக்கு நடந்து கொண்டிருந்தது. இடையில் மோசமான திருப்பம். பங்கு ஊழலில் கைதாகிச் சிறையிலிருக்கும் ராஜரத்தினத்தோடு கூட்டு சேர்ந்தார் என்ற திடீர் FBI குற்றச்சாட்டின் பெயரில் இவர் மேல் இன்னொரு வழக்கு. நிலை மிக மோசமாகி நாட்டை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் ஓடவேண்டியிருக்குமோ என்று ரகசியமாகத் திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தார்.

மற்றவருக்கு டிசம்பரில் வேலை போனது. இவர் சமீபத்தில் அமெரிகா வந்தவர். மனைவி, இரண்டு பிள்ளைகள் என்று சிறு குடும்பம். தன்னம்பிக்கை என்றால் என்னவென்று இவருக்கு யாரும் சொல்லித் தராததால், மிகவும் நொந்து போய் விரக்தியில் ஊரைப் பார்க்கத் திட்டம் போட்டிருந்தார். முதலாமவர் மற்றவருக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தார். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன் :) என்னுடைய முறை வந்ததும் என் துன்பங்களைச் சொல்லித் திரும்பினேன். சொல்ல மறந்து போனது, இருவரும் தீவிர தெய்வபக்தர்கள்.

ஜனவரியில் முதலாமவர் என்னுடன் தொலைபேசினார். வீட்டுக்கு அழைத்தார். தன்னுடைய சிக்கல்கள் தீர, வீட்டில் ஒரு வாரத்துக்கு தினமும் ஹோமங்கள் செய்யப் போவதாகவும், தனக்குக் கிடைத்தது போக மிச்சம் ஏதாவது பலனிருந்தால் எனக்கும் கிடைக்கலாம் என்பது போலவும், சொல்லி என்னை அவசியம் வருமாறும் வந்து இறையருளைப் பெறுமாறும் வற்புறுத்தினார். அவர் மனைவி என்ன சொல்கிறோம் கேட்கிறோம் என்று தெரியாதது போல ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் பேசுவார். எனக்குப் பரிதாபமாக இருக்கும். எனக்கு இவரின் பேச்சும் செயலும் அதிர்ச்சியாக இருக்கும். சில நேரம் பயமாக இருக்கும். அவர் அதைப்பற்றி என்றைக்குமே கவலைப்பட்டதில்லை. சொல்வதையோ செய்வதையோ தனக்குத் தோன்றியவண்ணம் தொடர்வார். அவரும் பலவித தெய்வங்கள் ஹோமங்களின் பெயரைச் சொல்லி, அத்தனை அருளும் மூட்டையாக வீட்டில் சேர்வது போலப் பேசினார். அமெரிகாவில் பசுதானம் செய்வதாகச் சொல்லி உண்மையிலேயே புல்லரித்துப் போனார்.

என் நம்பிக்கைகள் பற்றி இவர்களுக்குத் தெரியும் என்றாலும், விடாமல் வற்புறுத்தினார்கள். எரிச்சலை அடக்கிக் கொண்டு, 'அவசியம் வருகிறேன்' என்றேன்.

சென்ற ஞாயிறன்று முதலாமவர் என்னுடன் மீண்டும் தொலைபேசினார். ஹோமவிழாவுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டார். இவருடன் பேசுவதில் ஒரு வசதி. அடுத்தவரைப் பேச விடாமல் தானே பேசிக் கொண்டிருப்பார். அவருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று என்னை யோசிக்கவிடாமல் தொடர்ந்தார். "வந்திருந்தா உனக்கும் புண்ணியம் கிடைச்சிருக்குமே?" என்றார். அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசிக்கையில் அவரே தொடர்ந்தார். "துரை.. பாரு.. ஹோமம் செஞ்சு ரெண்டே வாரம். என்னோட பழைய கம்பெனியோட செடில்மெந்ட் ஆயிடுச்சு. மூணு லட்சம் டாலர் துரை.. i am so happy! FBI கேசும் ஆதாரமில்லைனு கலைச்சுட்டாங்க.." என்றார்.

"வாழ்த்துக்கள்" என்றேன். அவர் விடாமல், "இதுக்குத்தான் தெய்வ நம்பிக்கை வேணுங்கறது துரை.. பஞ்சாப் போயிடுச்சு பாரு.. கடவுள் இல்லை குரு இல்லைனு நீயும் சொல்லிட்டிருக்கே.. பத்து வருசமா கிடந்து அல்லாடுறே.." என்று என்னைப் பற்றிப் பேசினார். பத்து நிமிடம் போல் என் இன்னல்களை இளக்காரம் செய்தார். பிறகு மற்ற நண்பரைப் பற்றிப் பேசினார். நண்பர், தன் மனைவி குழந்தைகளை இந்தியா அனுப்பிவிட்டாராம். இங்கே ஒரு அப்டாமெட்ரிஸ்டிடம் மணிக்கூலிக்கு வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம். கடையிலேயே பின்னறை ஒன்றில் தங்க அனுமதி கொடுத்திருக்கிறார்களாம்.

மற்ற நண்பரை அழைத்துப் பேசினேன். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று தேவைப்படாத அறிவுரை வழங்கினேன். முதலாமவரைப் பற்றிப் பேச்சு திரும்பியது. "நீயும் எதுனா ஹோமம் செஞ்சிருக்கலாமே?" என்றேன். என்னைப் புரியாதது போல், "அவசியம் செய்யறேன் துரை. ஊர்ல என் பெண்டாட்டி அடுத்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ரெண்டு நாளும் கூழ் காச்சி ஊத்தப் போறா.. இனி அம்மன் கண் தெறக்கணும்" என்றார்.
**

    றத்தாழ மூவாயிரம் வருட வளர்ச்சிக்குப் பின்னும், அன்றைக்குப் போல் உலக மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அடிப்படை வேற்றுமை. அதற்குப் பிறகு மதம், இனம், குலம், பணம், படிப்பு என்று அடையாள அடிப்படையில் பல பிரிவினைகள். வேர் என்னவோ கடவுள் நம்பிக்கைதான் என்று தோன்றுகிறது.
**

    ன் பிள்ளைகள் கடவுள் பற்றிக் கேட்ட போது எனக்கு உண்மையென்று பட்டதைச் சொல்லிவிட்டேன். என் பிள்ளைகள் துருவித் துருவிக் கேட்பவர்கள். பிஞ்சுமனப் பிள்ளைகளுக்கான குணச்சித்திரம். அவர்களின் ஐந்து-ஏழு வயதில் என்னுடன் நடைபெற்ற வழக்கமான உரையாடல்:
"is there a god?"
"i don't know"
"do you believe there is a god?"
"no"
"does mom believe in god?"
"you should ask her"
"mom says there is no god and if there is a god, people won't be cruel to animals"
"okay.."
"should i believe in god?"
"that is up to you"
"is there a reason i should believe in god?"
"no"
"will god punish me if i don't believe in him?"
"i don't believe so"
"is god a woman?"
"i don't know"
"grandma says jesus is the only god. jesus was a man, right?"
"right"
"i think that is unfair. i mean.. why should god be a man?"
"i don't know"
"is god an animal?"
"i don't know"
"must be. look at the god pictures india grandma gave you.. are indian gods animals?"
"i don't know"
"you don't seem to know anything dad"
"sorry dear"
"then how do you know god won't punish me?"

ம்ம்ம்.

கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ மனிதர்கள் தண்டிப்பார்கள் என்ற கவலை எனக்கு உண்டு. இத்தனை வளர்ச்சிக்குப் பின்பும் கடவுள்-மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அமெரிக்கச் சமூகம் என்றில்லை, உலகச் சமூகத்திலும் இதே கதை. கடவுள் நம்பிக்கை இல்லாதவரை விசித்திரமாகப் பார்க்கும் பார்வை. எண்ணம். செயல்.

சில வருடங்கள் பொறுத்து, இந்த உரையாடல்:
"dad.. i told my teacher that i don't believe in god.. she got mad at me.. you need to now come and talk to my teacher and principal"

பள்ளிக்குச் சென்று, பிள்ளைகளின் ஆசிரியருடன் பேச்சு வார்த்தை. போராட்டம்.
"your child is challenging our allegiance.. the foundation of this country.. our constitution.."
"which is.."
"you know.. in god we trust"
"i think america was founded on 'life, liberty and pursuit of happiness'.. that is the allegiance.. liberty and justice.. you should check it out"
"yeah.. but we are one nation under god.. let's not forget it"
"okay"
"do you believe in indian god then?"
"didn't know god had a nationality or operated within borders.. but, no, we don't believe in any god"
"unwarranted sarcasm.. but seriously, there is no pursuit of happiness without god"

இவருடன் பேசி என்ன பயன் என்று தோன்றியது. ஏதோ சமாதானம் சொல்லி வெளியே வந்தேன். மாலை வீடு வந்ததும் பிள்ளைகளிடம் இனிமேல் இது போல் பள்ளியில் பிரச்சினை கிளப்ப வேண்டாம் என்றேன்.
"why?"
"because your teachers don't like your stand"
"so.. should i say i believe in god now?"
"not really.. but you don't have to say that you don't believe in god"
"isn't that the same thing?"
"no. i am not asking you to say that you don't believe in god; i am asking you not to say that you do not believe in god. they mean the same, but are different"
"whatever.."
"listen.. don't make it an issue.. your job is to be a good student and get good grades"
"so you want me to lie.."
"no"
"whatever.."
அத்துடன் அன்றைய மாலையின் நிம்மதி தொலைந்தது.
**

கடவுள் தேவையில்லை என்ற தீர்மானத்துக்கு வந்தபோது எனக்கு முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது. அந்த வயதில் எனக்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கில் அடையாளங்கள் இருந்ததால் நாத்திகம் என்னைப் பாதிக்கவில்லை. மாறாக, என் நாத்திக அடையாளம் ஒரு status symbol போல், fashionable stance போல் ஆனது, நான் சற்றும் எதிர்பாராத பலன். கடவுள் நம்பிக்கை இல்லாததால் என்னை அறிவாளி என்று ஒரு சிறுகூட்டம் நம்பத் தொடங்கியது. கடவுள் நம்பிக்கைக்கும் அல்லது நம்பிக்கையின்மைக்கும், அறிவுக்கும் தொடர்பே இல்லை. பகுத்தறிவு என்பதன் பொருள் கடவுள் மறுப்பல்ல என்று உறுதியாக நம்புகிறேன். அதைப் பற்றிய என் கருத்தை பின்னால் எழுதுகிறேன்.

எனக்கு வேறு அடையாளங்கள் இருந்ததால் நாத்திக அடையாளம் பாதிக்கவில்லை என்றேன். ஆனால் என் பிள்ளைகளைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. 'oh.. that agnostic family.." என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பள்ளியில் பிள்ளைகளைக் கிண்டல் செய்கிறார்கள். "you know why your parents don't believe? because their gods are fantasy creatures. four hands.. six faces.. and a thousand avatars. our god has one face and he looks like you and me" என்ற subliminal பிரசாரம் வேறே.

என் பிள்ளைகள் குழம்பத் தொடங்கியிருக்கிறார்கள். 'கடவுள் உண்டா?' என்று என்னிடம் கேட்ட போது, என் அம்மாவைப் போல் நானும் என் பிள்ளைகளிடம் பொய் சொல்லியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. 'சாமி கண்ணைக் குத்திடுவார்' என்று கொஞ்சம் கூட இங்கிதமோ அறிவோ இல்லாமல் பொய் சொல்லியிருக்கலாமென்று தோன்றுகிறது. சமூகம் இனி என் பிள்ளைகளை atheist என்ற லென்சுடனே பார்க்கும் என்ற எண்ணம் ஏனோ திடீரென்று அச்சமூட்டுகிறது.

இந்தக் கடலில் நான் தனித் தீவல்ல என்றும் அறிவேன். என்னைப் போல் நிறைய குடும்பங்கள் நிலைமையை உணரத் தொடங்கியுள்ளன.
**

    ருங்காலத்தில் ஒரு பெரிய போராட்டம் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன். பசி, பணம், இனம், குலம், மொழி, கலாசாரம் எனும் இந்த அடையாளங்களை மீறிய ஒரு தீவிரப் போராட்டம் காத்திருக்கிறது.
**

bruce hornsbyயின் 'preacher in the ring' பாடலிலிருந்து:



➤➤ 2