2010/05/14

ராம கணக்கு

போக்கற்ற சிந்தனைனக்குப் பிடித்தப் புத்தகங்களுள் ஒன்று ராமாயணம். இந்திய, இந்தோனேசிய, தாய்லந்து, மற்றும் ஆங்கில,ஜெர்மன், தமிழ், வடமொழி, தெலுங்கு, மராத்தி, வங்காள ராமாயண வடிவங்களைப் படித்திருக்கிறேன். ஒன்றிரண்டைச் சேர்த்தும் வைத்திருக்கிறேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் எனக்கொரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார். "எப்பேற்ப்பட்ட கலாசாரம், எப்பேற்ப்பட்ட இதிகாசம், எத்தனை தொன்மையான.. எத்தனை ஆழமான இலக்கிய வட்டம்" என்று நண்பர் புகழ்ந்து தள்ளினார். 'ஹிஹி' என்று ஆமோதித்து நண்பரும் நடுநிலைப்பள்ளி வரலாறு ஆசிரியருமான டேனியல் ஜீன்மோர்கனுக்கு நன்றி சொல்லி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன். வெட்டிக்கொண்ட என் வேர்களை ஆழம் பார்க்கும் ஆயிரமாவது வெளியாள்.

புத்தகத்துக்கு வருகிறேன். ராமாயணக் கதைச் சுருக்கமும் (200 பக்கக் கதைச் சுருக்கம்!) தொடர்ந்து, ராமாயணம் இந்தியக் கலாச்சாரத்தை எப்படி பாதித்திருக்கிறது (கொண்டிருக்கிறது) என்ற நீண்ட ஆய்வும், படிக்க மிகச் சுவையாக இருந்தது.

ராமன் கடவுளென்றோ கடவுளின் அவதாரமென்றோ எனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், ராமாயணம் எனும் உண்மைக்கதையின் சாத்தியத்தை என்றைக்குமே நம்பியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் ராமாயணக் காலத்தையும் ராமாயண விவரங்களையும் தோராயமாகவோ சில இடங்களில் தேதி வாரியாகவோ விளக்கி இருக்கிறார்கள். விண்ணியல் விதிகளைப் பயன்படுத்தி நட்சத்திரங்களின் பெயர்ச்சியையும் பாதையையும் வைத்து, காலக்கணக்கையும் தேதிகளையும் விவரித்திருக்கிறார்கள். (astronomy என்று ஆங்கிலத்திலும் வான சாஸ்திரம் என்று கழகங்களுக்கு முற்பட்ட தமிழ் வழக்கிலும் சொல்வார்களே, அதே)

விண்ணியற் கணிதம் எனக்குப் புரியவில்லை. ஆனால் விவரங்கள் புரிகின்றன. (ரத்தக்கறை படிந்த கர்சீபுன்னதும் நாக்கைத் தொங்கப் போட்டுண்டு படிக்கிற நேக்கு, அஸ்ட்ரானமி புஸ்ட்ரானமில்லாம் எங்கேந்து புரியப்போறது மாமி? நீங்களே சொல்லுங்கோ?)

உண்மை நிகழ்ச்சிகளைச் சாகசப்படுத்தி எழுதப்பட்டக் கதை ராமாயணம் என்பதற்கான சாத்தியம் இன்னும் வலுப்படுகிறது. நான் ரசித்த விவரங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். அறிவுப் பார்வையோ ஆன்மீகப் பார்வையோ - கண்ணோட்டம் உங்கள் வசதிக்குட்பட்டது.

ராமாயணக் காலம்
மகாபாரதம் நூலில் ராமாயணத்தை ஒட்டியப் பல குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாலும், ராமாயணத்தில் மகாபாரதத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாததாலும், ராமாயணம் மகாபாரதத்துக்கு முற்பட்டதாகவே இருக்க வேண்டும். மகாபாரதம் எழுதப்பட்டக் காலம் கி.மு 6000 - கி.மு 5000 என்று மேக்ஸ் ம்யுல்லர் உள்ளிட்ட பல அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இவர்களுள் குறிப்பிடத்தக்க வகையில், டாக்டர் வார்தக் எனும் மராத்திய ஆய்வாளர் எழுதிய 'சுயம்பு' என்ற ஆய்வு நூலில் மகாபாரதத்தின் காலம் கி.மு.5561ம் ஆண்டு என்று திண்ணமாகத் தெரிவித்திருக்கிறார். மேக்ஸ் ம்யுல்லரையும் வார்தக்கையும் ஏற்றுக் கொண்டால், ராமாயணக் காலம் கி.மு 6000க்கும் முற்பட்டது என்று புரிகிறது. டாக்டர் வார்தக்கை ஏன் குறிப்பிடத்தக்க வகை என்றேன்? நம்ம நாட்டுக்காரராச்சே, விட்டுக் கொடுக்கலாமா?

மகாபாரதத்தில் விசுவாமித்திரரைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது (ஆதி பர்வம்). நம்ம வியாசர் விருந்துக்கும் மகாபாரதத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் போல. உதாரணத்துக்குச் சொல்லப் போனால், வியாசர் விருந்து புரிகிறது. பூமத்திய ரேகையைச் சூரியன் கடக்கும் தினங்களை அறிவோம். (equinox - இதற்கு எளிமையான தமிழ்ச்சொல் இருக்கிறதா?) பூரேசூகதி அடிப்படையில் நட்சத்திர நிலையையும் பாதையையும் வைத்துக் காலத்தைக் கணக்கிடும் வித்தையைச் சொல்லிக் கொடுத்தது விசுவாமித்திரர் தானாம். அவர்தான் முதன் முதலாக வேனில் காலத்து பூரேசூகதியை மையமாக வைத்து, நட்சத்திரப் பாதையைக் கவனித்து, காலக்கணிப்பு வித்தையைச் சொன்னவர். கடக, மகர ரேகைகளுக்கு நேராகச் சூரியன் இருக்கும் தினங்களை வைத்து (solstice), முறையே தட்சிணாயண மற்றும் உத்தராயண புண்ணியக் காலங்களை (ஹிஹி) எடுத்துச் சொன்னவரும் விசுவாமித்திரர் தான். இன்றைக்கும் இது உபயோகிக்கப்படுகிறது. இவரைப் பற்றித் தெரியாமல் போய்விட்டதே? அடுத்த partyன் போது பேசிக்கொள்ள ஒரு விஷயம் கிடைத்து விட்டது.

இந்த விசுவாமித்திரர் சொல்லிக் கொடுத்த வித்தையை வைத்து ராமாயணக் காலவாக்கு கி.மு.7600 என்று கண்டுபிடிக்க முடிகிறது. எப்படி? இங்கே தான் கணக்கு எனக்கு பிணக்கு அது ஆமணக்கு விவகாரம் தொடங்குகிறது.

மகர சங்கிரமணப் பொழுதில் (winter solstice), அதாகப்பட்டது உத்தராயணப் புண்ணியகாலப் பொழுதில், அசுவினி நட்சத்திரத்துக்கு நேரே சூரியன் இருந்ததாக ராமாயண யுத்தக்காண்டத்தில் விவரிக்கப்ப்பட்டிருக்கிறது. ஒரு நட்சத்திரப் பாதையிலிருந்து இன்னொரு நட்சத்திரத்துக்கு சுத்தமாகப் பெயர ஏறக்குறைய 960-980 ஆண்டுகள் பிடிக்கும். இன்றைய மூல நட்சத்திரத்திலிருந்து பின்னோக்கி அன்றைய அசுவினி வரைக் கணக்கிட்டால் பத்து பெயர்ச்சிகள், அதாவது, 9600-9800 ஆண்டுகள் பிடித்திருக்க வேண்டும். அதனால், கி.மு.7500-7300 வாக்கில் ராமாயணம் நடந்ததாகச் சொல்ல முடிகிறது. ஜோ ஜிம்பிள்!

எப்படி வித்தை?

மரங்களின் குறுக்களவில் இருக்கும் வட்டங்களை வைத்து மரத்தின் வயதையறிவதைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஒரு புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பை வைத்துப் புத்தகத்தின் காலக்கட்டத்தை அறிய முடியும் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் இத்தனைத் திட்டவட்டமாகவா? அதற்காகத்தான் எழுதும் பொழுது இப்படிப்பட்டக் குறிகளை வைத்தார்களா? வால்மீகியின் கற்பனையென்றே வைத்துக் கொண்டாலும் பிரமிக்க வைக்கிறது.

இந்தப் புத்தகத்தில் 'precession of equinox' என்னும் விண்ணியற்கணித முறையை ஒட்டி நிறைய ராமாயணத் தேதிகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அங்கங்கே வார்தக்குக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். Precession of Equinoxஐத் தமிழில் விளக்க முடியுமா பார்ப்போம் என்று புத்தகத்தின் பின்னட்டவணையில் இருந்த விளக்கத்தைப் படித்தேன். "The earlier occurrence of the equinoxes in each successive sidereal year because of a slow retrograde motion of the equinoctial points along the ecliptic, due to a gradual change in the direction of the earth's axis caused by the gravitational pull of the sun and moon on the mass of matter accumulated about the earth's equator" என்று போட்டிருக்கிறது. முடி ஏன் கொட்டாது என்கிறேன்!

கணிதத்தை விட்டு, கதைக்கு வருகிறேன். இந்தப் புத்தகத்திலிருந்து சில ராமாயண நிகழ்வுகளுக்கான தேதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ராமாயணத் தேதிகள்
ராமன் பிறந்த நாள்: கி.மு. டிசம்பர் 4, 7323 (ராமநவமி ஏப்ரலில் அல்லவா கொண்டாடப்படுகிறது?)
ராமன்-சீதை திருமண நாள்: கி.மு. ஏப்ரல் 7, 7307
ராமன் வனவாசம் புறப்பட்ட நாள்: கி.மு. நவம்பர் 29, 7306
ராவணனுடன் போர் தொடங்கிய நாள்: கி.மு. நவம்பர் 3, 7292
அயோத்தி திரும்பிய நாள்: கி.மு. டிசம்பர் 2, 7292
ராம பட்டாபிஷேக நாள்: கி.மு. டிசம்பர் 14, 7292

பயனுள்ள செய்தியோ இல்லையோ, இதை ஆய்வு செய்து தலையணை சைசில் புத்தகம் எழுதியவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. விண்ணியல் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்சம் தான். அதற்கே தா தீ தோழரே.


பிற்சேர்க்கை: நியோவுக்காக

28 கருத்துகள்:

 1. //** சமீபத்தில் நண்பர் ஒருவர் எனக்கொரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார் **//
  //** ஜீன்மோர்கனுக்கு நன்றி சொல்லி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன் **//
  //** புத்தகத்துக்கு வருகிறேன் **//
  //** இந்தப் புத்தகத்தில் **//
  //** இந்தப் புத்தகத்தில் **//
  //** இந்தப் புத்தகத்திலிருந்து **//
  //** இதை ஆய்வு செய்து தலையணை சைசில் புத்தகம் எழுதியவர்களைப்... **//

  உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே இந்த சஸ்பென்ஸ் தான் ...

  பாருங்க ... கடைசி வரைக்கும் ......

  பின்னூட்ட உத்தி ?!

  பதிலளிநீக்கு
 2. சஸ்பென்சு ஒண்ணுமில்லிங்க, நியோ. என் நண்பர் ஒருத்தரு 'The Indian Clerk' கணித மேதை நம்ம் ஊரு ராமானுஜரைப் பத்தின ஆங்கிலப் புத்தகத்தைப் பத்தி முன் அனுமதி பெறாம எழுதியதைக் காரணம் காட்டி, கோவணைத்தைக் கூட கழட்டிக்கிட்டுத் தான் அவரை விட்டாங்க. அந்த பயம் தான். இருந்தாலும் உங்களுக்காகப் புத்தகத்தின் அட்டைப்படத்தை எடுத்துப் போட்டிருக்கேன்.

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப நன்றி அப்பா துரை சார் ...

  அதுவும்
  'நியோவுக்காக'
  என்கிற வார்த்தை .....

  ரொம்ப சந்தோசம் தோழரே !

  பதிலளிநீக்கு
 4. நல்ல பதிவு! நீங்களும் படிச்சுட்டு, எங்களுக்கு சில சுவாரசியமான தகவல்களை சொல்றதுக்கு உங்களுக்கு என் பாராட்டும், நன்றியும்! நீங்கள் இந்த புத்தகத்தை பற்றி சுவாரசியமாக எழுதி இருப்பது போதாதா! புத்தகத்தை பற்றிய ஆசிரியர் விளக்கமெல்லாம் எதுக்கு அப்பாதுரை? எங்க முடி கொட்டறதுக்கா?

  //ராமன் பிறந்த நாள்: கி.மு. டிசம்பர் 4, 7323 (ராமநவமி ஏப்ரலில் அல்லவா கொண்டாடப்படுகிறது?)//
  நாம கொண்டாடறது நட்சத்திர பிறந்த நாளா இருக்கலாம். ஆனா இவ்வளவு நாள் வித்யாசம் வருதே? சில பேர் ராம நவமியை மார்ச் மாதமே கொண்டாடிடறா. இதென்ன கணக்கோ?

  பதிலளிநீக்கு
 5. உங்க profile picture-la கண்ணு பாக்க பயமா இருக்கு!

  பதிலளிநீக்கு
 6. interesting தகவல்கள். இந்த புத்தகத்தையெல்லாம் பொறுமையாகப் படித்து, புரிந்துகொண்டு அதன் gist மட்டும் எங்களுக்குப் புரியும் வகையில் சொல்வதற்காக உன்னைப் பாராட்டியே ஆகவேண்டும். --கீதா

  பதிலளிநீக்கு
 7. ராமன் பிறந்த நாள்: கி.மு. டிசம்பர் 4, 7323 (ராமநவமி ஏப்ரலில் அல்லவா கொண்டாடப்படுகிறது?//

  கலைஞர் பார்க்காமல் இருக்க வேண்டும் இதை...

  பதிலளிநீக்கு
 8. |ஸ்ரீராம் கூறியது... கலைஞர் பார்க்காமல் இருக்க வேண்டும் இதை...||


  :-)

  இதே முறையை வைத்து மகாபாரதத் தேதிகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாருங்கள், தென்-மத்திய ஆசியாவின் புராணங்கள் என்று போட்டுவிட்டு ராமாயணம், மகாபாரதம் இரண்டைத் தவிர எதையும் காணோம். கிரேக்கப் புராணங்கள், இந்தியப் புராணங்கள்... அம்புட்டுதேன்! என் நண்பர் சொன்னது போல் தொன்மையின் உண்மையைப் புரிந்து கொண்டேன். நீங்கள் முன்பு சொன்னது போல் தெரிந்த விஷயத்தை இன்னொருவர் எடுத்துச் சொல்லும் போது கொஞ்சம் தைத்தாலும் சிறப்பாகப் புரிகிறது.

  இந்தியப் புராணங்கள் போல் கிரேக்கப் புராணங்களில் தேதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள். இந்தியப் புராணங்கள் அளவுக்கு தொன்மையும் செறிவும் கொண்ட வேறு புராணங்கள் ஆசிய நாடுகளில் இல்லை என்றும் எழுதியிருக்கிறார்கள். தசரதனை உலக அரசனென்றும், நின்று போன ராம பட்டாபிஷேகத்துக்கு சீன நாட்டரசர்கள் வந்ததாகக் கம்ப ராமாயணத்தில் சொல்லப்படுகிறது இந்தப் புத்தகத்தைப் படித்த போது நினைவுக்கு வந்தது.

  புத்தகத்தில் இந்த நட்சத்திரம் இத்தனை டிகிரி, அந்தக் கோள் அத்தனை டிகிரி என்று பலவற்றை உபயோகித்து ஒரு கணிதமுறைக்குள் கொண்டு வந்து தேதிகளை விடை போல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால்,வானத்தை வைத்துக் காலத்தை நிர்ணயிக்கும் முறை கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியருக்கு தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பு. எனக்கு இன்னும் கடிகாரம் பார்க்கத் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 9. // "The earlier occurrence of the equinoxes in each successive sidereal year because of a slow retrograde motion of the equinoctial points along the ecliptic, due to a gradual change in the direction of the earth's axis caused by the gravitational pull of the sun and moon on the mass of matter accumulated about the earth's equator" என்று போட்டிருக்கிறது. முடி ஏன் கொட்டாது என்கிறேன்! //

  இதுக்குத்தான் நான் புத்தகங்கள் படிப்பதில்லை. நான் சாகும் வரை சவுரி விற்கும் அளவு முடி இருக்கும் என்ற நம்பிக்கை அதனால் தான் !!

  மேலே சொன்ன ஒன்றை படித்தே கண்ணை சுத்துதே, நீ எப்படி துரை.

  //ராவணனுடன் போர் தொடங்கிய நாள்: கி.மு. நவம்பர் 3, 7292 ; அயோத்தி திரும்பிய நாள்: கி.மு. டிசம்பர் 2, 7292 //

  ஒரு மாதத்தில் முடிந்துவிட்டதா போர் ? அப்படியே என்றாலும் திரும்பி ராமர் / சீதை "ஜோயங்கின்று அனுமாருடன் இலங்கையிலிருந்து அயோத்தி வந்தார்களா ?" வாகன வசதி எப்படி - உதைக்குதே ?

  பதினெண் புராணங்கள் எங்கள் வீட்டில் விட்ட மாதிரி இந்த புத்தகத்தை என் வீட்டில் விட எண்ணமில்லையே ?

  சும்மா சொன்னேன். அதை படிக்க எண்ணம் உள்ளது. நேரம் தான் கை கூடி வரவில்லை !

  பதிலளிநீக்கு
 10. //"ஆனால்,வானத்தை வைத்துக் காலத்தை நிர்ணயிக்கும் முறை கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியருக்கு தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பு"//

  உண்மை ...
  நீங்கள் படிக்கும் அளவு புத்தகங்கள் படிப்பதில்லை. எனவே நீங்கள் படித்தவற்றை எளிமையாக (எனக்கும் புரியும் வண்ணம்) எழுதும்போது அட, அப்படியா என்று தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. இரவு அரை மணி நேரமாவது படித்து விட்டுதான் படுப்பேன் என்று சொல்லி இருந்தீர்கள்...நானும் முயற்சிக்கிறேன்...தூக்கம்தான் வருகிறது..!

  பதிலளிநீக்கு
 11. //பயனுள்ள செய்தியோ இல்லையோ,இதை ஆய்வு செய்து தலையணை சைசில் புத்தகம் எழுதியவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.விண்ணியல் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது.கொஞ்சம் தான்.அதற்கே தா தீ தோழரே.//

  நானும் இதைத்தான் சொல்கிறேன்.
  தொகுத்துத் தந்து உங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. |சாய்ராம் கோபாலன் கூறியது... அயோத்தி வந்தார்களா ?" வாகன வசதி எப்படி - உதைக்குதே ? ||

  போர் முடிந்து விபீஷணன் பட்டம் கட்டிய மறுநாளே பரதன் தீக்குளிக்கப் போறானேயென்று அடித்துக் கொண்டு புறப்பட்டதாக ராமாயணத்தில் எழுதியிருக்கிறது. குபேரனிடமிருந்து ராவணன் சுட்ட புஷ்பக விமானத்தைக் கடன் வாங்கிக் கொண்டு ராமன் சீதை லட்சுமணன் அங்கதன் இன்னும் சிலர் என்று ஒரு சிறிய பட்டாளமே கிளம்பி நான் ஸ்டாப் ப்ளைட்டில் வந்ததாக எழுதியிருக்கிறார்கள். அனுமானை மட்டும் முதலில் அனுப்பி பரதனைக் கொஞ்சம் வெயிட் பண்ணச் சொன்னதாக எழுதியிருக்கிறது - அந்த நாளிலும் ஏர் ட்ரேபிக் தொல்லை போலும். புஷ்பக விமானத்தைத் திருப்பிக் கொடுத்தார்களா தெரியவில்லை.

  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தேதிகள் மட்டுமில்லை, ராமாயணக் கதையில் எத்தனையோ இடங்களில் இடிக்கிறது. ராவணனுக்குப் பத்து தலை உட்பட. இன்னொரு இடத்தில் விராதன் எனும் அசுரனைப் பற்றி எழுதியிருக்கிறது - இந்த அசுரனை அறிமுகப் படுத்திய விதம் கம்பனின் க்ளேசிக். கபாப் பாத்திருக்கீங்களே கபாப் - அதான், ஒரு நீள குச்சியிலே மாமிசம் மற்றும் காய்கறித் துண்டுகளைக் கோத்து தீயில் வறுத்துச் சாப்பிடுறோமே அதே அதே கபாபதே - இந்த விராடனும் ராம லட்சுமணரைச் சந்திக்கும் போது கையில் கபாபுடன் தான் வந்தானாம். கொஞ்சம் வித்தியாசமான கபாப். பத்து யானை, பத்து யாளி, பத்து சிங்கம், பத்து புலி என்று மிருகக்கணக்கில் பத்து பத்தாக அடுக்கிக் கோர்த்து ஒரு கையால் சாப்பிட்டுக் கொண்டே வந்தானாம். இன்னொரு கையில், ஒவ்வொரு கை விரல் இடுக்கிலும் ஒரு யானையை வைத்துக் கொண்டு வந்தானாம். கடிச்சுக்க நைனா. கொலஸ்டிரால் தொல்லை எதுவுமில்லை போலிருக்கு.

  எதற்குச் சொல்கிறேனென்றால் இது போன்ற வர்ணனைகள் எல்லாம் ரொம்பவே இடிக்கிறது. அதுவும் இருபது வயது 'மனிதர்கள்' எதிரில் இப்படியெல்லாம் வந்தால் 'எடுரா வில்லை' என்று சொல்வார்கள் என்று நம்பமுடியவில்லை. தன்னை வளர்த்துக் கொண்டு ஒரே எட்டில் கடல் தாண்டி இலங்கையை அடைந்தான் அனுமான் என்றதும் - அதுவும் குரங்கு - அய்யா சாமி கடவுளே என்று வடைமாலை சாத்தவில்லையா? கேள்வியா கேட்கிறோம்? - அதுபோலத் தான்.

  கண்மூடித்தனம் என்றால் அளவில்லாத கண்மூடித்தனம் - கற்பனைச் சாகசங்களை கடவுளென்று ஜாடியிலிட்டு விற்கும் மதங்களும் மதகுருக்களும் இருக்கும் வரை - ஜாடியை வாங்கிச் சப்புக் கொட்டும் ஜனங்கள் இருக்கும் வரை - இடித்தாலும் பிடிக்கும் நமக்கு. i digress.

  பதிலளிநீக்கு
 13. |ஸ்ரீராம் கூறியது... நானும் முயற்சிக்கிறேன்...தூக்கம்தான் வருகிறது..!||

  நான் மட்டும் எதற்குப் படிக்கிறேன் என்று நினைத்தீர்கள்? பத்துப் பக்கம் படிப்பதற்குள் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வருமே, அடடா.. என்ன இனபமான உணர்ச்சி! அதற்காகவே படிக்கணும்.

  பதிலளிநீக்கு
 14. |ஹேமா கூறியது... நானும் இதைத்தான் சொல்கிறேன். ||

  வாங்க ஹேமா... நீங்களும் கணக்குல புலியா என்னைப் போல?

  பதிலளிநீக்கு
 15. priya schaefferமே 15, 2010

  //வெட்டிக்கொண்ட என் வேர்களை ஆழம் பார்க்கும் ஆயிரமாவது வெளியாள்.//

  echoes our feelings.

  raama aandal enna ravana aandal enna - my mom used to say. my reaction to your article :-).

  பதிலளிநீக்கு
 16. Equinox = சமராத்திரம், பகலிராச் சம நாள்.

  பதிலளிநீக்கு
 17. தேதி குறித்த தகவல்களைப் பார்க்கும்பொழுது எனக்கு ஒரு சிறிய விஷயம் கவனத்திற்கு வருகிறது. ஒரு வெப்சைட்டில் என் பிறந்த தேதி விவரங்களைக் கொடுக்கும் பொழுது 1.12 என்று கொடுத்திருந்தேன். வாரா வாரம் ஏதோ ஜோஸ்யம் வந்துகொண்டு இருந்தது. பாதி நடந்தது, பாதி நடக்கவில்லை. ஒரு வருடம் கழித்து அங்கே இருந்து வந்த மெயில் ஒன்றைப் பார்த்த பிறகு உண்மை விளங்கியது. நான் கூறிய டிசம்பர் ஒன்று அவர்களின் வழக்கப் படி அவர்களுக்கு முதல் மாதம் பன்னிரெண்டாம் தேதியாகக் காட்சி அளிக்க, அவர்கள் என் பிறந்த தேதி ஜனவரி பன்னிரண்டு என்று நினைத்து ஜாதகம் கணித்து, பலன் அனுப்பிக் கொண்டு இருதிருக்கிறார்கள்!
  அது போல இங்கே கூட,வெளிநாட்டு ஆசிரியர் எழுதிய புத்தகமாக உள்ளதால் ஏப்ரல் பன்னிரண்டை டிசம்பர் நான்காக எடுத்துக் கொண்டுவிட்டாரோ என்னவோ?

  பதிலளிநீக்கு
 18. kgg: உங்கள் சமயோசிதத்தை மெச்ச முடிகிறது.

  பொதுவாக புத்தகம் எழுதும் போது மாதம், நாள் என்று விவரமாகத் தான் கொடுத்துப் படித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தேதிகள் derived answers. டிசம்பர், 4 என்று பெயர் போட்டுத்தான் எழுதியிருக்கிறார்கள். (இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்).

  யார் கண்டார்கள், கணக்கில் தவறிருக்கலாம். மாதப்பெயர்கள் சமீபத்தில் வந்தவை தானே? சித்திரை என்பது அந்த நாளில் டிசம்பரில் இருந்து பின்னாளில் ஏப்ரலுக்கு மாறியிருக்கலாம். தை தான் புதுவருடம் (january equivalent) ரொம்ப வருடக்கணக்காக இருந்ததென்றும் (ஆரியர் வந்து மாற்றிவிட்டார்கள்) என்றும் படித்திருக்கிறேன். குருடர்கள் உலகத்தில் கருப்பைத் தேடுவதா சிவப்பைத் தேடுவதா?

  equinox சொல்லுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. |meenakshi சொன்னது… உங்க profile picture-la கண்ணு பாக்க பயமா இருக்கு!||

  கண்ணில்லீங்க.. மூணு சுழி இருக்கு பாருங்க.

  பதிலளிநீக்கு
 20. // அதற்கே தா தீ தோழரே //
  தா தீ ன்னா என்னா சார் ?
  --------------------------------------
  advt.
  நண்பர்களே...
  தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
  http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 21. பிரபஞ்ச சாரம் என்ற பழைய நூலில் அகத்தியரின் காலமாக ஏறக் குறைய ராமனின் காலமாக இந் நூலில் குறிப்பிட்டிருக்கும் காலமே குறிப்பிடப் படுகிறது.ராமன் அகத்தியரை அவர் பர்ணசாலையில் சந்தித்திருக்கிறார்.[ராமாயணத்தின் படி]இது வெற்று ஒத்திசைவுதானா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 22. நிறையப் படிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு கல்லாதது உலகளவு என்று நினைவுபடுத்தும் போகன்... நீங்க முன் சொன்ன கச்சி சிவாச்சாரியார் கந்த புராணமும், இப்போ சொல்லும் பிரபஞ்ச சாரம் - இரண்டுமே படிச்சதில்லை. ஆவலைத் தூண்டி விட்டீர்கள். பிரபஞ்ச சாரம் யார் எழுதியது/தொகுத்தது? எங்கே கிடைக்கும்?

  பதிலளிநீக்கு
 23. நான் சொல்ல வந்தது பதினெட்டு புராணங்களில் எந்தப் புராணமும் தமிழில் தோன்றியது அல்ல.தமிழ்க் கடவுள் முருகனின் புராணம் என அறியப்படும் கந்தபுராணம் உட்பட.அது கச்சி [காஞ்சி]சிவாச்சார்யார் ஒருவரால் 12 ம் நூற்றாண்டில் ஸ்கந்த புராணத்தில் இருந்து மொழி பெயர்க்கப் பட்டது.அது இணையத்திலேயே கிடைக்கிறது.பிரபஞ்சசாரம் இப்போது பதிப்பில் இருக்கிறதா தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 24. உண்மை, போகன். நீங்கள் சொல்வது புரிகிறது.

  பதிலளிநீக்கு
 25. பெயரில்லாஆகஸ்ட் 13, 2010

  Nice post and this enter helped me alot in my college assignement. Say thank you you as your information.

  பதிலளிநீக்கு
 26. பெயரில்லாஅக்டோபர் 06, 2010

  Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.

  பதிலளிநீக்கு