2010/05/27

மெல்லிசை நினைவுகள்
எங்கள் பிளாக்கில் வாசகர் பேராதரவுடன் வெற்றிகரமாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வரும் 'படைப்பாளர் பயிற்சி' பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். விவாதித்து என்றால் - நான் கேட்டுக் கொண்டிருந்தேன், சொல்பவர் என்னைப் பேச விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார். (என்னடா இது கக்கூஸ் படத்துக்கு மாதவன் இப்படி ஆதங்கப்படுறாரேனு பேசிக்கிட்டிருந்தோம். செல்லமாத்தான் மாதவன், கோவிச்சுக்காதீங்க). ஒரே நேரத்தில் பலருக்கு ஒரே எண்ணம் தோன்றுவது மிகச்சாதாரண சாத்தியம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உளவியல் நண்பர் ஹேமாவுக்குத் தெரியும். விட்டால் ரோர்சேக் முறையைப் பற்றிப் பதிவெழுதக் கிளம்பிவிடுவார். (விட்டுத்தான் பார்ப்போமே? ஆளையே காணோமே?)

இந்தப் பதிவு அதைப்பற்றியல்ல. ரோஜாவையும் பேரிக்காயையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், 'என்ன, மெல்லிசை நினைவுகள் எதையும் காணோமே? மெல்லிசையில்லையா? நினைவில்லையா?' என்று நக்கலடித்தார். என்ன பதிவு போடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு ஐடியா கொடுத்து விட்டார். எம்எஸ்வி பாடல்களை வைத்து நாலு வருடம் ஓட்டி விடலாம் என்பதெல்லாம் மறந்தே விட்டது! (ஆனா நீங்க சொன்ன பாட்டைத் தேடிப்பிடிச்சு இன்னொரு பதிவுல எழுதுறேன், மன்னிச்சுருங்க).

புதுத் தமிழ்ப்படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பாடல் காட்சிகள் சகிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் பத்து பேருடன் குத்து பாடுகிறார்கள். மென்மையான, இனிமையான, வித்தியாசமான பாடல்களோ காட்சிகளோ காண முடிவதில்லை.

மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான். சந்தேகமிருந்தால் அடுத்த வரியைப் பத்து முறை படிக்கவும். மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான்.

பழைய படங்களில் பாடல்கள் பலவற்றுக்குக் காட்சிக்கேற்றபடியோ (அபூர்வ ராகங்கள்: அதிசய ராகம், பூவா தலையா: பாலாடை மேனி), அல்லது மெட்டை முதலில் சிந்தித்து விட்டு அதற்கேற்றபடி பாடல் காட்சியையோ (சாந்தி: நெஞ்சத்திலே நீ, ஊட்டிவரை உறவு: தேடினேன் வந்தது) அமைப்பது வழக்கமாக இருந்தது. இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்களும் படத்தில் ஈடுபட முடிந்தது. பாடல் காட்சிகள் வித்தியாசமாக சிந்திக்கப்பட்டு அதற்கேற்றபடி பாட்டெழுதி இசையமைத்த காலம் இனி வருமா தெரியவில்லை.

பாடல் காட்சியை அமைக்க ஐடியா கொடுத்த இசையமைப்பாளர்களில் எம்எஸ்வி முதல் தட்டுக்காரர் என்று நம்புகிறேன். இது என் கருத்து மட்டுமல்ல, சிவாஜி எம்ஜிஆர் கண்ணதாசன் ஸ்ரீதர் பாலசந்தர் முதலியவர்கள் எம்எஸ்வியைப் பற்றி அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். (நம் நாடு படத்தின் 'நினைத்ததை நடத்தியே', 'நான் ஏழு வயசுலே எளனி வித்தவ' பாடல் காட்சிகளைப் பற்றி ஜெயலலிதா பழைய குமுதத்தில் நிறைய சொல்லியிருக்கிறார். எம்எஸ்வியின் இசை அந்தப் படத்தின் பாடல் காட்சிகளை எந்த அளவுக்குப் பாதித்தது என்பது அவருடைய பேட்டியிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. நம் நாடு படம் ஸ்ரீதரின் சிவந்த மண் படத்தை மண்ணைக் கவ்வ வைத்தது, வேறு கதை. பாடல்கள் அருமையாக இருந்தாலும் சிவந்த மண் படு தோல்வியடைந்ததற்குக் காரணம் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, மற்றும் நம் நாடு படத்தின் இரண்டு பாடல்கள்: ஆடை முழுதும் நனைய நனைய, நினைத்ததை நடத்தியே முடிப்பவன்.)

சரி, பதிவுக்கு வருவோம்.

டென்னிஸ் ஆடும் போது டூயட் பாடுவது போல் பாடல் காட்சி. எம்எஸ்வி மெட்டு போட்டுவிட்டாராம். ஆனால் பாடல் எழுத முடியவில்லை. அதனால் எம்எஸ்வியே பல்லவியும் போட்டுக் கொடுத்தாராம். பெருமையுடன் சொல்லிக் கொள்வார்: இந்தப் பாட்டுக்குப் பல்லவி கொடுத்ததே நான் தான் சார் என்று. பறக்கும் பந்து பறக்கும் என்ற பாடல். எம்ஜிஆர்-சரோஜாதேவி, டிஎம்எஸ்-சுசிலா உயிர் கொடுத்த பாடல். 'இவர் தான் கொஞ்சம் கவனி' என்று சுசீலாவும், 'இல்லை இது முல்லை' என்று டிஎம்எஸ்சும் சொக்குவதைக் கேட்கும் போதெல்லாம் கிக்கு. அருமையான பாடல். அருமையான பாடல் காட்சி. பந்தைத் தூது விட்டுக் காதல் பேசிய குளுமையான பாடல் காட்சி. மறக்க முடியவில்லை.

அதையே ரிபீட் செய்யச் சொன்னால். மறுபடி ஹிட்டாகுமா? பாடல், காட்சி என்று அதையே மறுபடி செய்யத் துணிவு வருமா? எம்எஸ்வி மட்டும் தான் இந்த மாதிரி சாதனைகளைச் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இங்கேயும் பந்து விளையாடுவது போல் டூயட். இந்தப் பாட்டிலும் இனிமையின் ஆதிக்கம். பந்து விடு தூது. எனினும் வார்த்தை விளையாட்டு வேறுவிதம். 'லவ் ஆல்' என்று நாயகனும் 'லவ் ஒன்' என்று நாயகியும் ஊடித் தொடங்கும் பாடல். கிடார், ட்ரம்ஸ், குழலுக்காகப் பலமுறை கேட்கலாம். ஜேசுதாஸ்-வாணி ஜெயராமின் முத்திரைப் பாடல்களுள் ஒன்று.

தொடக்கூடாது, முத்தம் கூடாது என்று எதற்கெடுத்தாலும் திருமணம் வரை தடை போட்ட காதல் இந்த நாளில் குறைந்து விட்டது என்றாலும், அந்த நாளில் அதுவும் ஒரு கிக். ஐந்தங்குல இடைவெளியில் உட்கார்ந்து கொண்டு வேர்கடலை கொறிப்போமே தவிர சட்டென்று உதடு இணைக்க முயன்றதில்லை. 'எண்ணுவதெல்லாம் நேரினில் காணும் புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும்' என்ற வரிகள், அந்த நாள் காதலர்களின் ட்ரேட் மார்க் வசனம். கவிஞரின் வரிகளில் நிரந்தரம்.

முதல் பாடல் மறக்க முடியாத பாடல் என்றால் இது மறந்து போகாத பாடல்.
சேர்ந்து ரசிப்போமே இன்னொரு தரம்?!
எம்எஸ்வி-6 | 2010/05/27 | செண்டு மல்லிப்பூ போல்

10 கருத்துகள்:

 1. பாடலை எழுதியது புலவர் புலமைப்பித்தன். சரிதானா. நல்லப் பாடலை ஞாபகப் படுத்தினீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. பாடல் எழுதியது புலமைப்பித்தனா? நன்றி.

  பதிலளிநீக்கு
 3. என்னடா ரொம்ப நாளா மெல்லிசை காணுமேன்னு பாத்தேன். எழுதிடீங்க, நன்றி! 'பறக்கும் பந்து பறக்கும்' பாட்டு மாதிரியே இதுவும் ரொம்ப மென்மைதான். யேசுதாஸ் அவர்களுக்கு இயற்கைலேயே மென்மையான குரல், ஆனால் டி.எம்.எஸ் அவர்கள் அந்த பாடலை மிகவும் மென்மையான குரலில் அழகாய் பாடி இருப்பார். நீங்கள் எழுதி இருக்கும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் மனம் பந்து போல் பறந்து அந்த பாடலுக்கு தாவி விடும். இரண்டு பாடலுமே அழகுதான். உங்கள் பதிவு முழுவதுமே மெல்லிசை மன்னரின் பாடலை பற்றியே இருந்தால், ஆஹா அற்புதம்தான்,
  அப்படியே ஆகுக! என்று ஒரு பெரிய கும்பிடு போடுவேன். ஆனால் நான் உங்களை அறிவு சுடர் என்று பெருமையாக எழுதியதால், சுடர் நாலாபக்கமும் பிரகாசித்தால்தான் அழகு! (எப்படி என் டயலாக்! :)) அதனால் மாதத்தில் முறையாவது மெல்லிசையை மீட்டுங்கள்.

  'எங்கள்' ப்ளாகில் மெல்லிசையை பற்றி எழுதுகிறேன், அதில் ஹிந்தி பாடலும் வரும் என்றார்கள். நானும் ஆவலுடன் எதிர்பார்கிறேன். என்ன ஆச்சுன்னு ஸ்ரீராமைதான் கேக்கணும். எங்க ஸ்ரீராம் அவர்களை காணுமே!

  பதிலளிநீக்கு
 4. எங்கள் பிளாக் கோரிக்கையை அங்கே தெரிவியுங்க மீனாக்ஷி :).

  நாலஞ்சு பாட்டு எடுத்து வச்சிருந்தேன் - மறந்தே போச்சு. வந்து ரசிச்சதுக்கு நன்றி.

  மறக்க முடியாத பாட்டுக்கும் மறந்து போகாத பாட்டுக்கும் வித்தியாசம் என்னங்கறதை உங்க கமென்டுல சொல்லியிருக்கீங்க போல. கரெக்டு தான்.

  பதிலளிநீக்கு
 5. அன்பு அப்பாதுரை சார்!

  நலம் தானே ...

  // மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான். சந்தேகமிருந்தால் அடுத்த வரியைப் பத்து முறை படிக்கவும். மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான். //
  :-) :-) :-) ஆமாம் சார் ... சந்தேகமே இல்லை ...

  எனக்கு தெரிந்த எம்எஸ்வி யின் ஒரே பாடல் சங்கமம் திரைப்படத்தில் ரகுமானின் இசையமைப்பில் அவர் பாடியது மட்டுமே ...

  அப்புறம் சார் ....
  // நான் உங்களை அறிவு சுடர் என்று பெருமையாக எழுதியதால், சுடர் நாலாபக்கமும் பிரகாசித்தால்தான் அழகு! //
  சரியா சொன்னீங்க மீனாக்ஷி ... சாத்தியப் பட்டா அப்பா சார் புதுப் பாட்டுக்கள் பற்றியும் எழுத வேண்டும் ....

  வருகிறேன் தோழர் !

  பதிலளிநீக்கு
 6. புதிய படங்களில் மெல்லிசை மிக மிகக் குறைவு. ஆனால் இல்லாமல் இல்லை.
  வரிகள் புரியும் பழைய பாடல்கள் போல இப்போது புரியும் பாடல்கள் கேட்க முடியாது..
  ஜெயலலிதா சொன்னது பற்றி... தான் நடித்த படங்கள் பற்றி அந்த அந்த நடிக, நடிகையர் பாராட்டிச் சொல்வது இயல்பு. அதை பெரிதாய் எடுத்துக் கொள்ள முடியாது.
  MSV சந்தேகம் இல்லாமல் மேதைதான்...அவர் பாடல்கள் பலவற்றை யும் அடுத்தடுத்து எழுதி ஞாபகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. எங்கள்' ப்ளாகில் மெல்லிசையை பற்றி எழுதுகிறேன், அதில் ஹிந்தி பாடலும் வரும் என்றார்கள். நானும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்..."//


  எங்கள் பிளாக் கோரிக்கையை அங்கே தெரிவியுங்க மீனாக்ஷி :)//

  குணா கமல் Fan சுத்தற சவுண்ட் பற்றி என்ன சொல்வார்...?

  பதிலளிநீக்கு
 8. அருமையான இரண்டு பாடல்கள்.மற்றைய பாட்டையும் போட்டிருக்கலாமே அப்பா.

  பதிலளிநீக்கு
 9. //குணா கமல் Fan சுத்தற சவுண்ட் பற்றி என்ன சொல்வார்...?//
  அடடா! எனக்கு தெரியாதே! எனக்கு பாக்கணும்னு தோணவே தோணாதா பல படங்களில இந்த குணாவும் ஒண்ணு. அனன்யா மஹாதேவனை கேட்டால் உடனே சொல்லி விடுவார்.
  அனன்யா 'மூன்றாம் சுழி' பக்கம் வந்து இதையும் படிச்சீங்கன்னா, கொஞ்சம் ஸ்ரீராம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்.

  பதிலளிநீக்கு
 10. சார் ...
  ரொம்ப மனசு வலிக்க ஒரு பதிவு போட்டிருக்கேன் ...
  koncham வந்துட்டு போங்க ...

  பதிலளிநீக்கு