2010/05/30

மெல்லிசை நினைவுகள்

குருட்டு ஆய்வுபாடல் காட்சியில் கேமரா வேலை பற்றி முன் பதிவில் கோடிட்டிருந்தேன். பின்னூட்டத்தில் பாலு மகேந்திரா பற்றியும் அவரது கேமரா கலைத்திறமை, கற்பனையற்ற காட்சிகளில் வீணானது பற்றியும் எழுதியிருந்தேன். என் நெருங்கிய நண்பர் என்னை இனிமேல் சென்னை வந்தால் பார்க்கப் போவதில்லை என்றும், சின்ன வயதில் எனக்கு அவர் கொடுத்த அதே சாக்லெட்டைத் திருப்பித் தரவேண்டும் என்றும் இமெயில் போட்டிருக்கிறார். பாலு மகேந்திரா பிரியர்.

சிறப்பாக அமைந்த பாடல் காட்சிக்கு உதாரணமாக ஒரு பாடலைப் பற்றி எழுத நினைத்ததன் விளைவு இந்த இடுகை. பதிவு போடத் தேர்வு செய்து வைத்த நான்கு பாடல்களில், கையோடு கையாக மூன்றாவது. நான் எதிர்பார்க்காமலே உதாரணமாக அமைந்து போனது.

பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் விற்பன்னர்கள் என்று இந்தியச் சினிமாக்களில் சிலரைச் சொல்லலாம். தமிழ்ப் படமென்றால் உடனே நினைவுக்கு வருபவர் ஸ்ரீதர். (நண்பருடன் இந்தப் பதிவைப் பற்றிப் பேசும் பொழுது 'ஏன், ஷங்கர் இல்லையா?' என்றார். ம்யூசிக் விடியோவுக்கும் திரைப்படப் பாடல் காட்சிக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை அவருக்குத் தொலைபேசியில் விளக்கிக் கொண்டிருக்கையில் எப்போது லைனை கட் செய்தாரென்றே தெரியவில்லை)

ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை படத்திலிருந்து இந்தப் பாடல் காட்சி. (கல்லூரி நாட்களில் பாலசந்தர்-ஸ்ரீதர் விவாதங்களில் இந்தப் பாட்டுக்கு இணையாக பாலசந்தர் ஒரு காட்சியாவது அமைக்கட்டும் பார்க்கலாம் என்று நண்பர்களிடம் அடித்துப் பேசியிருக்கிறேன். இதை விட அருமையாக ஒரு பாடல் காட்சியை பாலசந்தர் அமைத்ததையும் பின்னாளில் ஒப்புக் கொள்ள நேர்ந்தது.)

மனைவியின் நடத்தையில் சந்தேகம். நண்பனும் மனைவியும் சேர்ந்து தனக்குத் துரோகம் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை. வற்றிப் போன மண உறவு. இடையில் புது உறவு. காட்சி நாயகனுக்குப் பெருங்குழப்பம், ஆத்திரம், வெறி. நண்பனைக் கொலை செய்ய முயன்று துப்பாக்கி இயங்காமல் திரும்பி விடுகிறான். புதுத்துணையின் எதிரில் இயலாமையின் அவமானம். குடி போதையில் துணையுடன் வீட்டுக்குத் திரும்புகிறான். இதற்கிடையில் நண்பனோ நாயகன் விட்டுப்போன துப்பாக்கியில் குண்டுகள் இருப்பதை உறுதி செய்து கொண்டு இவனைக் கொன்று தீர்க்க ஓடி வருகிறான். துணையுடன் வீட்டுக்குத் திரும்பி வரும் நாயகனைக் கண்ட வீட்டிலிருக்கும் மனைவி, அவமானத்துடனும் வேதனையுடனும் வெட்கி விலகிப் போகிறாள். அடுக்கடுக்கான அதிர்ச்சியில் புதுத்துணை செய்வதறியாமல் திகைக்கிறாள். எரிச்சலில் நாயகன் அவளை ஆடச் சொல்கிறான். 'இந்த நிலையில் எப்படி ஆடுவது?' என்று தயங்கும் துணையை வற்புறுத்துகிறான். குடித்துக்கொண்டிருந்த புட்டியைத் தரையில் வீசி எறிகிறான். அவனை அமைதிப்படுத்த அவள் ஆடிப் பாடுகிறாள்.

இது தான் காட்சி.

காட்சியின் பின்னணியில் கொந்தளிப்பு இருக்கிறது. சோகம் இருக்கிறது. சோகத்தின் அடிப்படையில் காட்சி அமைக்காமல் கொந்தளிப்பை மையமாக வைத்துப் பாடல் காட்சியை எடுத்த ஸ்ரீதரை சிறந்த இயக்குனர் என்பதா வேண்டாமா? காட்சியை எப்படி அமைத்திருக்கிறார் என்று பார்ப்போம்.

காட்சிக்கான பாடல், 'நினைத்தால் போதும் பாடுவேன்'.

பாடல் காட்சியில் நாயகன்/நாயகியாக முத்துராமனும் கீதாஞ்சலியும் நடித்திருக்கிறார்கள். கீதாஞ்சலி இந்தக் காட்சிக்காகவே பிறந்தவர் போல் ஆடியிருக்கிறார். (இவரை இந்தப் படத்துக்குப் பின் பார்க்கவில்லை). 'அந்தஸ்தில்லாத' இடத்தில் காதலனையும் விட்டுக் கொடுக்காமல் ஆடிப் பாட வேண்டும் என்ற இக்கட்டான நிலையை ஆட்டத்தில் காட்டியிருக்கிறார். புயல் போல ஆடியிருக்கிறார். அவராகவே சுழல்வது போதாது என்று முத்துராமன் அவரைச் சுற்றி விடுகிறார் அடிக்கடி. காட்சியின் கொந்தளிப்பை கீதாஞ்சலியின் நடனத்தின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். கேமராக் கலைஞர் யாரென்று தெரியவில்லை - அடுத்த முறை படம் பார்க்கும் பொழுது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கேமராக்கள் வைத்து இயக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சில வரிகளை ஒரே டேக்கில் எடுத்திருப்பது புரிகிறது - பிரமிக்க வைக்கிறது. வேகம் மட்டும் போதாது என்பது போல் காமெராக் கோணங்களும் அங்கங்கே மாறுபட்டு 'fast cut' செய்திருக்கிறார்கள். 'எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல - ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல' என்ற வரிகளைப் படமாக்கியிருக்கும் விதத்தைக் கவனித்தால் நான் சொல்வது புரியும். முத்துராமன் ஒரு தூணில் சாய்வார். சாய்வதால் அவர் உடலில் இயற்கையாகத் தோன்றும் வளைவுக்குள் வருவார் கீதாஞ்சலி. பாடி விட்டு உடனே ஒரு சுற்று சுற்றி நாற்காலியில் விழுந்த முத்துராமனின் வலப்பக்கம் வந்து க்ளோசப்பில் வரிகளை முடிப்பார். முழு வட்டம். இதை ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. கீதாஞ்சலி புயல் வேகத்தில் நடனமாட, முத்துராமன் தடுமாறி மெள்ள நடப்பது முரண்பாட்டை இன்னும் அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது. இது போல நிறைய உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம்.

பாடலும் இசையும் கொந்தளிப்பைக் கொண்டு வர வேண்டுமே?

'நினைத்தால் போதும் பாடுவேன்... சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும் கண்ணை மாற்றுவேன்' எனும் அருமையான வரிகளுடன் கண்ணதாசனின் பாடல் தொடங்குகிறது. ஆடுவேன், பாடுவேன் என்று தொடங்கி 'கலங்கும் கண்ணை மாற்றுவேன்' என்று முடிக்கும் பொழுது இங்கே நடப்பது மகிழ்ச்சி நிரம்பிய நிகழ்ச்சியல்ல என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறார். கலங்கும் கண் யாருக்கு? காதலனுக்கா காதலிக்கா? கவிஞரின் கற்பனை அற்புதம். 'அணைத்தால் கையில் ஆடுவேன்' என்ற வரிகளில் கதாபாத்திரத்தின் நிலையைச் சொன்னாலும், இந்தப் பெண்ணின் மனதை 'எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல' என்ற வரிகளில் சொல்லியிருக்கிறார். சிந்திக்க வைக்கும் பாடல். '(கேள்வி) கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்' மற்றும் 'மனதை மனதாக நீ காண வேண்டும்' என்ற வரிகளில் புதைந்திருக்கும் வலிகளை விளக்கத் தனிப்பதிவு போடலாம். பாடலின் வரிகளில் கதாபாத்திரங்களின் இக்கட்டான நிலையை எவ்வளவு அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்!

இசை பாடலுக்கு மேலே ஒரு படி செல்கிறது. 'உடைந்தது புட்டியல்ல, மனம்' என்பது போல் வயலினிசையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து உச்ச ஸ்தாயியில் பல்லவி. அங்கே பிடித்த டெம்போ பாடல் முழுதும் பரவி நிற்கிறது. எடுத்த எடுப்பிலேயே இசையில் கொந்தளிப்பைக் கொண்டு வந்து விட்டார் எம்எஸ்வி. இந்தப் பாடலை ஜானகியைப் பாட வைத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும். அற்புதமான தேர்வு. ஜானகி இசையை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார் என்பேன். உச்ச ஸ்தாயியில் இவர் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார் என்றாலும் இந்தப் பாடலைப் பிசிறில்லாமல் பாடியிருக்கிறார். பாட்டு முழுமைக்கும் சீரான modulation. சலங்கை, தபலா, மிருதங்க ஒலிகள் அசுர வேகம். ஒரு மாற்று குறைந்த வேகத்தில் ஒலிக்கும் சிதார், குழல். இடையில் சிவாஜி ஓடிவரும் காட்சிகளில் சீரான வேகத்தில் வயலின். ஜானகியோ இந்த முரண்பாடுகளையெல்லாம் இணைப்பது போல் பாட வேண்டும். என்ன செய்திருக்கிறார் எம்எஸ்வி? சலங்கையும் தபலாவும் சூபர் சானிக் வேகத்தில் போய்க்கொண்டிருக்க, வயலின் சீராக ஒலித்து நிற்க அல்லது சற்றே குறைந்த டெம்போவில் சிதார், குழல் ஒலித்து முடிக்க - ஜானகியின் குரல் 'ஆ' என்று சுவரம் இழுத்து முரண்பட்ட வேகங்களை இணைத்து சரணங்களைப் பாடுகிறது. தனித்தனியாக இவற்றைப் பிரித்துக் கேட்டுப் பார்த்தால் முரண்பாடு விளங்கும். இசையில் கொந்தளிப்பைக் கொண்டு வர முடியாது என்று யார் சொன்னது? அனுபவித்துக் கேட்கலாம். அலுக்காமல் கேட்கலாம்.

எம்எஸ்வி-8 | 2010/05/30 | நினைத்தால் போதும்

10 கருத்துகள்:

 1. அப்பா...சபாஷ்.நீங்களும் ரசித்து எங்களுக்கும் அள்ளித் தருகிறீர்கள்.
  நன்றி நன்றி.அலுக்காத பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 2. இந்தப் பாடல் கேட்ட நினைவில்லை..லோடும் ஆக மாட்டேன் என்கிறது. இந்த வீடியோ இப்போது உங்களுக்கு கிடைக்காது என்கிறது. என்ன அடுத்தடுத்து ஒரே மாதிரி பதிவுகள்..? ஏற்கெனவே படித்ததுதானா என்று பார்த்து விட்டு படிக்க வேண்டி இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கும் பிடிக்குமா? நன்றி ஹேமா. இரட்டிப்பு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. விடியோ வரலையா ஸ்ரீராம்? அச்சச்சோ! :)

  பதிலளிநீக்கு
 5. என்ன, மெல்லிசை நினைவுகளா தொடர்ந்து எழுதி தூள் கிளப்பறீங்க! ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கு பதிவு. மிக்க நன்றி!
  எம்.எஸ்.வீ. இசையில் ஜானகி பாடின எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள்தான். அவங்க எவ்வளவு high pitch போனாலும், பாடல் வரிகளும் தெளிவா புரியறதும் இவர் இசையில்தான். இந்த படத்துல எல்லா பாட்டுமே ஹிட்தான். இந்த பாடலை பல முறை கேட்டிருந்தாலும், பாடல் காட்சி எப்பவோ பார்த்தது. சுத்தமா நினைவில் இல்லை. இப்ப பாத்தபோது, பாடலை காட்சியோட இன்னும் ரசிக்க முடியறது. துப்பாக்கி கைல எடுத்துண்டு தெரு தெருவா சுத்தறது அனேகமா எல்லா மொழி படங்களிலும் இருக்கு. லாஜிக் எல்லாம் யாரு பாக்கறாங்க!
  இந்த பாடலுக்கு மெட்டும் பிரமாதமா இருக்கு, ஜானகி அவங்களும் நல்லா பாடி இருக்காங்க. இருந்தாலும் காட்சிக்கு ஏற்ப, கண்ணதாசன் வரிகள்தான் மிகவும் அற்புதம்!
  'எங்கும் பறந்தோடும் இளம் தென்றல் அல்ல, ஏக்கம் வரும்போது எல்லோருக்கும் சொல்ல....'
  அம்மா,எப்படி எழுதி இருக்கார்!கவியரசர் என்றால் சும்மாவா!

  பதிலளிநீக்கு
 6. ஆஹா...வீடியோ வந்து விட்டது ...!
  இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்
  அப்போது சிதார் இசை ஒலித்தாலே எனக்கு அந்தப் பாடல் பிடித்துப் போகும்! உங்கள் வர்ணனைகள் பொருத்தம். இந்தக் காலத்தில் இப்படிக் கேட்கும் கணவனிடம் பெண்கள் இப்படி ஆடுவார்களா?

  பதிலளிநீக்கு
 7. நாம தான் ஆடணும்..ஸ்ரீராம். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரேனு..

  பதிலளிநீக்கு
 8. //இந்தக் காலத்தில் இப்படிக் கேட்கும் கணவனிடம் பெண்கள் இப்படி ஆடுவார்களா?//

  யாரு பார்க்கறது ? கேட்கறதாவது ? எதுக்கு வேனை ?

  பதிலளிநீக்கு
 9. //ஸ்ரீராம். சொன்னது… ஆஹா...வீடியோ வந்து விட்டது ...! //


  கடா வெட்டி விருந்து கொடுங்க ஸ்ரீராம் !!

  பதிலளிநீக்கு
 10. கற்பை நிரூபிக்க நெருப்பில் எல்ல்லாம் குளிக்கவேன்டாமா?சுற்றிசுற்றிவந்து கனவேகத்தில் நடனம் ஆடினால் போதுமா?பரதநாட்டியமோ ஆத்தா உன் கோயிலிலே வகை சாமியாட்டமோ தெரியாத பெண்கள் எப்படி கற்பை நிரூபிப்பது என்று தமிழ் சினிமாக்காரர்களிடம் கேட்டுச் சொல்லவும்.அவசரம்.

  பதிலளிநீக்கு