2009/10/11

நாகூர் 2012, கசம் சே!

2


◄◄   (1)


    கிணற்றடி வழியாக ஓட எத்தனித்து விட்டு, பிறகு வெளிவாசல் வழியாகப் போனோம். பக்கத்து வீட்டு வாசல் திண்ணையில் ஒரு குடுகுடுப்பைக்காரன் நின்று கொண்டிருந்தான். உள்கதவைப் பாதி திறந்தபடி ஷ்யாமி நின்று கொண்டிருந்தாள். உள்ளிருந்து அவளுடைய அம்மா கத்திக் கொண்டிருந்தார். "அந்தர் ஆ..ஷ்யாமி. இது என்ன தடியாம்பிளைத்தனம்? கதவைச் சாத்து. ஆம்பிளை இல்லாத வீடு. யோவ் குடுகுடுப்பை, போயா.."

குடுகுடுப்பை போவதாக இல்லை. "நல்ல காலம் பொறக்குதுனு சொன்னா பொண்ணு நம்பளை வம்புக்கு இழுக்குது. ஒரு ரூபாய் கொடு"

"ஒரு ரூபாயா? போடா தாடிக்காரா! வேணும்னா உங்கூட நானும் வரேன். எனக்கும் இந்த தில்லுமுல்லைச் சொல்லிக் கொடு. ரெண்டு பேரும் பாதி பாதி எடுத்துக்குவோம் கசம் சே" என்றாள் ஷ்யாமி.

ரகு சேர்ந்து கொண்டான். "என்னய்யா இது அக்கிரமம்? ஒரு ரூபாய்க்கு எங்கய்யா போறது? இந்தா இன்னொரு பத்து பைசா தரேன், எடுத்துக்கிட்டு போ" என்றான்.

"முடியாது. இன்னிக் காலைல மசான பூசை முடிச்சு நேரா வரான். ஞாயித்து கிழமை எரிஞ்ச மூத்த பையனோட கபால மை எடுத்து விளக்கேத்தி பவானிக்கு பூசை செஞ்சு வந்திருக்கான். நேரா இங்கே வந்து அம்மாவுக்கு நல்ல காலம் பொறக்குதுனு மை வச்சு வாக்கு சொன்னா ஒரு ரூபாய் தரணும்" என்றபடி, அவளைப் பிடிப்பது போல் கதவருகே விரைந்தான் குடுகுடுப்பை.

"என்னய்யா கதை வுடுறே? மூத்த பையன்னு உங்கிட்டே சொல்லி வச்சு எரிச்சாங்களா? மையாவது கிய்யாவது, யார் கிட்டே பயம் காட்டுறே? க்யா சம்ஜா அப்னே ஆப் கோ? கசம் சே உன்னை மாதிரி எத்தனை பேரை பாத்திருக்கேன்? போறியா இல்லை சப்பல் மாரூம் க்யா?" என்று ஒரு செருப்பை எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள் ஷ்யாமி. எனக்குக் குலை நடுக்கம். ரகு அவளைத் தடுக்கப் போனான்.

ஷ்யாமிக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "ரகு, நீயெல்லாம் ஆம்பிளையா? சும்மா பாத்துட்டு நிக்கறியே?" என்று அவனைத் திட்டத் தொடங்கி விட்டாள். என்ன வெறியோ தெரியவில்லை, செருப்பை ஓங்கித் தரையில் எறிந்து கதவை ஓங்கிச் சாத்தி விட்டு உள்ளே சென்று விட்டாள். செருப்பு ரகுவின் காலில் பட்டுத் தெறித்து குடுப்பையின் காலை உரசி அருகே விழுந்தது.

ரகு குடுகுடுப்பையிடம் மன்னிப்பு கேட்டான். இன்னொரு எட்டணா எடுத்துக் கொண்டு வருவதாகச் சொன்னான். குடுகுடுப்பையின் கண்கள் சிவந்திருந்தன. ரகு கொடுத்த நாலணாவை அவன் முகத்தில் விட்டெறிந்தான்.

குடுகுடுப்பை அடுத்து செய்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தன் கையிலிருந்த உடுக்கையின் மூடியைக் கழற்றினான். உள்ளிருந்து சிவப்பு நிறப்பொடியை எடுத்து திண்ணையின் கீழே வாசல் படியில் கபாலத்தின் படத்தை வரைந்தான். கபாலப் படத்திற்கு எதிரே தரையில் உட்கார்ந்தான். பிறகு தன் முண்டாசை அவிழ்த்தான்.

ஒரு குடுகுடுப்பை முண்டாசு அவிழ்த்து அது வரை நான் பார்த்ததே இல்லை. ஏழடி நீளத்துக்கு அவர்களுக்குக் கூந்தல் இருக்கும் என்றும் எலும்புத்துண்டை பொடித்துக் குழைத்த எண்ணை தடவிக் கூந்தலை முடிப்பார்கள் என்றும் மற்றவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவன் தலை முடி என்னவோ மற்றவரது போல் தான் இருந்தது. கூந்தலையும் காணோம் எலும்புப்பொடியையும் காணோம். ஆனால் அவனுடைய நடு மண்டையில் வட்டமாகச் சவரம் செய்யப்பட்டிருந்தது. சவரம் செய்யப்பட்ட இடத்தில் வட்டம், நட்சத்திரம், ஜன்னல் என்று கறுப்பு மையால் தீட்டப்பட்டச் சிறு சித்திரங்கள், சில எழுத்துக்கள்.

குடுகுடுப்பை தன் வலது கையை உயர்த்தி தலைக்கு மேலே நிறுத்தினான். நடுவிரலை உள்ளே அடக்கிகொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒரு குட்டி பிரமிட் போல் சேர்த்துக் கொண்டான். விரல்களின் பிரமிட் நுனியால் தன் நடு மண்டையில் இருந்த மைச்சித்திரங்களைக் கலைத்தான். பிறகு தன் கையில் பதிந்திருந்த மையைக் கபாலத்தின் மேல் பதித்தான். சிவப்பு கபாலத்தின் நெற்றியில் நான்கு கறுப்புப் பொட்டுகள். கபாலத்தையும் பொட்டுகளையும் சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன், எங்களைப் பார்த்தான். நாங்கள் இருப்பதை அவன் உணர்ந்ததாகவே தெரியவில்லை. மறுபடி கபாலத்தைப் பார்த்தபடி கண்களை மூடினான். குனிந்து, ஐயர்கள் செய்யும் நமஸ்காரம் போல் தரையில் கை ஊன்றி நீண்டான். பிறகு சட்டென்று தன் நெற்றியால் அந்த கபாலத்தின் மீது ஓங்கி ஓங்கி முட்டிக்கொண்டான். 'கிட் கிட்'டென்று தேங்காய் உடைப்பது போல் சத்தம். நெற்றி வீங்கி லேசான ரத்த காயம் உண்டானதும் ஒன்றும் சொல்லாமல் முண்டாசை எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பி விட்டான்.

இதை எழுதி முடிக்க எடுத்துக் கொண்ட நேரத்தை விட சடுதியில் எல்லாம் நடந்து விட்டது.

திடுக்கிட்டுப் போயிருந்த எங்களுக்குப் பேச்சு வரவில்லை. நான் ஒன்றுக்குப் போய்விட்டேன். கை கால் எல்லாம் நடுங்க 'பெரீம்மா' என்று கத்திக் கொண்டு ஓடினேன். பெரியம்மாவுடன் நான் திரும்ப வந்து சேர எடுத்துக் கொண்ட சில நிமிடங்களில் பக்கத்து வீட்டு வாசலில் சிறிய கூட்டம் சேர்ந்து விட்டது. எல்லோரும் கபாலத்தையும் புள்ளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஷ்யாமி திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் அம்மா அவளைத் திட்டிக் கொண்டிருந்தார்.

பெரியம்மா கபாலத்தைப் பார்த்து விட்டு நடுங்கிப் போய்விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, "கவலைப்படாதே. இதெல்லாம் சும்மா மிரட்டல், அவ்வளவு தான்" என்றார்.

"என்ன ஒரு ரூபாயைக் கொடுத்திருக்கலாம் போலிருக்கே?" என்றார் ஷ்யாமியின் அம்மா.

"எதுக்கு? அப்புறம் இதே பழக்கமாயிடும். நான் பேங்கு மேனேஜர்ட சொல்லி போலீசை வரவழைக்கிறேன். இந்தப் பக்கம் வந்தா தோலை உரிச்சுடச் சொல்றேன். ரகு, மரைக்காயர் கடைக்குப் போய் நடந்ததைச் சொல்லி ரெண்டு ஆளைக் கூட்டி வரச் சொல்லு. நீ ஒண்ணும் பயப்படாதே ஷ்யாமி" என்றார் பெரியம்மா.

அதற்குள் உள்ளேயிருந்து இரண்டு வாளி நிறைய தண்ணீர் கொண்டு வந்த வேலைக்காரி, கபாலத்தைப் பார்த்ததும் அப்படியே சிலை போல நின்றாள். "யம்மா.. வாணாம்மா. இது மந்திரிக்கணும்மா" என்றாள்.

ரகுவுக்குக் கோபம் வந்து விட்டது. "மந்திரியாவது, முந்திரியாவது. கொண்டா இங்கே" என்று ஒரு வாளி தண்ணீரை எடுத்து கபாலத்தின் மேல் கொட்டினான். எண்ணையில் கொட்டியது போல் அத்தனை நீரும் வழுக்கி ஓடியதே தவிர கபாலமோ பொட்டோ கலையக்கூட இல்லை. ஒரு சுருணையை எடுத்து வந்து இரண்டாவது வாளி நீரில் நனைத்து, ஈரத்தோடு கபாலத்தைத் 'தேய் தேய்' என்று தேய்த்தான். சோப்பு போட்டுக் கழுவினான். கபாலம் லேசாகக் கலைந்ததே தவிர அழியக் காணோம். நான்கு பொட்டுகளோ கலையவே இல்லை.

"விடு ரகு, போலீஸ் வந்து பாக்கட்டும்" என்றார் பெரியம்மா.

"என்னடீ இது, போலீசெல்லாம் வந்தா என்ன ஆறது?" என்று ஷ்யாமியின் பெரியம்மா புலம்பத் தொடங்கினார். "சரி, சரி, எல்லாரும் போங்க" என்று சேரத்தொடங்கியிருந்த சிறு கூட்டத்தைக் கலைத்தார். "நான் உள்ளே போய் அபிராமி அந்தாதி சொல்லி, யந்திர பூஜை பண்றேன். எல்லாம் சரியாயிடும்" என்றபடி உள்ளே போனார்.

கூட்டம் கலைந்தது. ஷ்யாமி இன்னும் விசும்பிக் கொண்டிருக்க, ரகு அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவன் என்னைக் கவனித்த போது தலை குனிந்தேன். கண்ணெதிரே கபாலத்தில் இப்போது கண்களைப் போல் இரண்டு வட்டங்கள் இருந்தன. "டேய் ரகு, இங்கே பாருடா" என்றேன்.

அன்று மாலைக்குள் நடந்ததை எல்லாம் அனேகமாக எல்லாரும் மறந்து விட்டார்கள். நாகப்பட்டினத்திலிருந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து பார்த்து விட்டு, "ஒண்ணும் பயப்படாதீங்க. எல்லாம் எண்ணைப் பசை. தானா போயிறும். அந்த ஆளு வந்தான்னா இன்ஸ்பெக்டர் கிட்டே சொல்லியிருக்கிறதா சொல்லுங்க. பணம் எல்லாம் கொடுத்து பழக்கப் படுத்திடாதீங்க" என்றார்.

ஆம்பிளை துணைக்கு நாங்கள் படுத்துக் கொள்கிறோம் என்று பக்கத்து வீட்டுத் திண்ணையில் ரகுவும் நானும் அன்றிரவு படுத்துக் கொண்டோம். நான் "முடியாது, பயமா இருக்கு" என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரகு என்னைக் கட்டாயப் படுத்தியிருந்தான். கதவைத் தாளிடும் சாக்கில் வெளியே வந்து ஷ்யாமி ரகுவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டுப் போனதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தார்கள். ரகுவிடம் சொன்னதும் அவனுக்கு ஒரே பெருமையாக இருந்ததே தவிர வெட்கமோ கூச்சமோ தென்படவில்லை. நாங்கள் இருவரும் கபாலத்தைப் பார்த்தபடியே தூங்கினோம்.

மறுநாள் காலை பொழுது கூட விடியவில்லை. அவர்கள் வீட்டு வாசலில் அதே குடுகுடுப்பை. மறுபடியும் முண்டாசை அவிழ்த்து உட்கார்ந்தான். "ஏய்" என்று ரகு அவனை எட்டித் தள்ள முயன்ற போது 'ஷ்!' என்று கையை வீசினான் குடுகுடுப்பை. கண்கட்டு வித்தை என்பார்களே, அது போல ரகு ஒரு கணம் சிலையாக நின்றான். ஏற்கனவே வைத்திருந்த நான்கு பொட்டுகளை மறுபடி உச்சந்தலை மையினால் டச்சப் செய்துவிட்டு எழுந்தான். ரகுவும் விழிப்பு வந்தது போல் நின்றான். குடுகுடுப்பை ரகுவிடம் "இது நாலு பொட்டு இல்லே. நாலாம் பிறை. இனிமே இந்த வீட்டுல நிம்மதி போயிடுச்சு. நாலாம் பிறை பலியெடுக்கும்" என்றான்.

"இந்தாங்க" என்றான் ரகு மரியாதையுடன். "உங்களுக்கு ஒரு ரூபாய் தானே வேணும். நான் குடுத்துடறேன். ரொம்ப கோபிக்காதீங்க. அந்தப் பொண்ணு தெரியாம ஏதோ சொல்லி.. எதுக்கு அனாவசியமா.." என்று இழுத்தான்.

"க்யா சம்ஜானு கேக்குது துஷ்டப் பொண்ணு. செருப்பு தூக்கி எறியுது. நான் மரக்காணம் குடுகுடுப்பை இல்லே. நம்பள் பாட்டன் குலம் மீரான் சாயிபு கிட்டே போவுது. அசுவத்தாமன் கிட்டே போவுது. அயோத்திலே பொறந்த குலம். நம்ம உடம்புலே பலராமன் ரத்தம் ஓடுது. பவானி ரத்தம் ஓடுது. பவானி பலி கேக்குறா. பவானி பலி கேக்குறா. நாலாம் பிறைக்கு நான் திரும்பி வருவேன்" என்று தன் முண்டாசிலிருந்து சாம்பலை எடுத்துத் தரையில் எறிந்தான். சட்டென்று காணாமல் போய்விட்டான்.

நான் வெருட்டென்று எழுந்துத் திண்ணை விளக்கைப் போட்டேன். நாற்பது வாட் பல்பொளியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை என்றாலும் எனக்கென்னவோ அரையிருட்டில் யாரோ ஓடுவது போல் தோன்றியது. "எப்படிரா மறைய முடியும்?" என்று ரகு திண்ணையைச் சுற்றித் தேடிவிட்டு வாசலுக்குச் சென்று இரண்டு பக்கமும் பார்த்து விட்டு வந்தான். ஆனால் குடுகுடுப்பையைக் காண முடியவில்லை.

அலறியடித்துக் கொண்டு கதவைத் தட்டினோம்.

தொடரும்> 3


4 கருத்துகள்:

  1. அப்பாதுரை - இது நியாயமா -- படித்து முடிவு தெரியும்வரை தூங்க விடமாட்டீங்க போலிருக்கே! நாற்காலியின் விளிம்பிலேயே நாட்கணக்கில் உட்கார்ந்திருக்க விட்டுவிடுவீர்கள் போல இருக்கே!

    பதிலளிநீக்கு
  2. கபாலம் பற்றி படித்துக் கொண்டு வரும்போதே என் கணினித் திரை ஒரு முறை அணைந்து போகிறா மாதிரி கருப்படித்து விட்டு வந்தது...இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையே... ஒன்றும் பயமில்லையே....ஜக்கம்மாவைக் கேட்டு சொல்லவும் ப்ளீஸ்...

    பதிலளிநீக்கு
  3. ஏங்க... பயமா இருக்குங்கறேன்..என்னை இங்க தனியா விட்டுட்டு பழைய இடுகையிலேயே போய் பேசிகிட்டிருந்தா எப்படிங்க... இங்க தனியா நான் அந்தக் கபாலதையே பார்த்துகிட்டு எவ்வளோ நேரம் நிக்கறது? இதோ வந்துடுவீங்க..இதோ வந்துடுவீங்க..மிச்ச கதையை சொல்வீங்கன்னு பார்த்தா..

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம், Super!!!:)

    பயப்படாம கண்ணை மூடிண்டு 'ஜெய் ஜக்கம்மா, ஜெய் ஜகம்மான்னு' சொல்லிண்டே இருங்க. உங்க பயமும் போய்டும். அதுக்குள்ள அப்பாதுரையும் மீதி கதையை எழுதிடுவார்.

    பதிலளிநீக்கு