2009/10/24

புலம்பல் பாதி; புடலங்காய் நீதி

போக்கற்ற சிந்தனை


    சென்ற வாரம் நடந்த கூத்தை என்னவென்று சொல்வது? கூத்து சரி, அதை விடத் தாக்கமாக வேறு ஏதாவது சொல் கிடைக்கிறதா பார்க்கிறேன். ஆறு வயதுக் குழந்தையை மாடிக்குள் பூட்டி வைத்து விட்டு, ஒரு ஹைட்ரொஜன் பலூனைப் பறக்க விட்டு குழந்தையைக் காணோம் என்று போலீசுக்கும் டிவிக்கும் தகவல் கொடுத்தார்கள் பெற்றோர்கள். அமெரிக்காவே அல்லோல கல்லோலப் பட்டது. குழந்தை ஒரு வேளை அந்த பலூனில் இருக்கிறதோ என்று நிமிடத்துக்கொரு முறை "சற்று முன் கிடைத்த தகவல்". மத்திய மாநில காவல்துறை மற்றும் அவசரப் பாதுகாப்புக் குழு, ஹெலிகாப்டர் படை என்று இழுத்தடித்து விட்டு பலூன் தரையிறங்கியதும் உள்ளே ஒன்றும் காணோம். வீட்டுக்கு வந்ததும் 'ஐஸ்பை' என்றதாம் பிள்ளை. அங்கே இங்கே என்று டிவியில் நேர்முகம். பொய் சொல்லிக் கொடுத்தாலும் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்க வேண்டாமோ? சிஎன்என் லேரி கிங் கிழத்திடம் உளறி விட்டது ஆறு வயது குழந்தை, "எங்கப்பா குதிருக்குள் இல்லை" கணக்கில். இரண்டு நாளாக அப்பனையும் அம்மையையும் கைது செய்து சிறையிலடைக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால், ரியேலிடி டிவிக்காக அவர்கள் போட்ட திட்டமாம். இதில் குழந்தையின் எதிர்காலம் தான் ரியேலிடி டிவிக்கான விஷயமாகி விட்டது. இவர்களையெல்லாம் பெற்றோர்கள் என்று எப்படி சொல்வது?

நீதி: சீனாவிலும் இந்தியாவிலும் போல் ஆறு வயது குழந்தைக்குப் படிப்பையும் பண்பையும் சொல்லிக் கொடுத்துப் பிழைத்துக் கொள்ளலாம். அமெரிக்கா போல் ஆறு வயதுக் குழந்தைக்கு பொய்யையும் புரட்டையும் சொல்லிக் கொடுத்து மாட்டிக் கொள்ளலாம்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    ந்த மாதம் ஒபாமா பாராயணம் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. ஓசியில் கிடைத்த நொபெல் பரிசு ஒரு காரணம். எந்தக் கேனக்.... நொபெல் பரிசு வழங்கத் தீர்மானித்தானோ தெரியவில்லை, வக்காலத்து வாங்க இன்னொரு கேனக்.... தயாராக வந்து விட்டான். கேட்டால் ஒபாமா புது நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறாராம். நம்பிக்கை என்றைக்கு ஐயா சாதனையானது? நாய்பாடு பேய்பாடு பட்டுப் பரிசு வாங்கிய மற்றத் துறையினர் ஒன்றும் பிடுங்காமலே இருந்திருக்கலாம். உலக அமைதிக்கான இந்த நொபெல் பரிசு வழங்கும் விவகாரமே கேள்விக்குறியாக இருந்து வந்திருக்கிறது. ஒன்றும் பிடுங்காதவர்களுக்கு இதற்கு முன்பும் பரிசு கொடுத்திருக்கிறார்கள். யாசர் அராபத், இஷ்டாக் ரபின், சிமோன் பெரெஸ் கும்பலுக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டம் இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறது. ஒரே ரத்த களம். ஜிம்மி கார்டருக்கு கொடுத்தார்கள். ஹி ஹி ஹி. அல் கோர் - இன்டர்னெட்டைக் கண்டுபிடித்ததாக மார் தட்டிய மகான் - அவருக்குக் கொடுத்தார்கள். நாளைக்கு கோள் வெப்பத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்வார். தலையாட்டி தலையாட்டி மாயும் இடதுசாரிக் கூட்டம். இன்னொரு நொபெல் கிடைத்தாலும் கிடைக்கும். சமாதானம் அமைதி என்றதும் உங்கள் நினைவுக்கு வருபவர் யார்? ம்ஹூம்... அவருக்குக் கிடைக்கவில்லை.

இந்தக் கூத்தில் ஓசைப்படாமல் சாதனை படைத்து பரிசும் வாங்கியிருக்கிறார் நம்ம நாட்டுக்காரர். ஊர்க்காரர். ஊர் பாட்டுக்காரர். வெங்கடராமன் ராமகிருஷ்ணன். ரசாயனத் துறையில் நாய்பாடு பேய்பாடு பட்டு உழைத்து அசலாகச் சாதனை புரிந்த அசல் டாக்டர். டிஎன்ஏவின் அடிப்படையான ரிபோசோம் பற்றி ஆராய்ந்து, உலகம் அறிந்து கொள்ள வழி வகுத்தமைக்குப் பரிசு பெற்ற மூவரில் ஒருவர். வெங்கடராமன் ராமகிருஷ்ணன் வாழ்க. அவர் குலம் வாழ்க.

நீதி: கெமிஸ்ட்ரி பிஎச்டி படித்து உழைத்து முன்னேறி ஆராய்ச்சி செய்து சாதனை செய்து நொபெல் பரிசு பெற்று வாழலாம்; கெக்கே பிக்கே என்று எதையாவது சொல்லி, உழைக்காமல் சாதனை செய்யாமல் நொபெல் பரிசு பெற்று வாழலாம். இரண்டும் கெட்டானாக என்னைப் போல் புலம்பிக் கொண்டும் வாழலாம்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    லிம்பிக் பந்தயங்களை உள்ளூருக்குக் கொண்டு வர சிகாகோ நகரம் முப்பது மிலியன் டாலருக்கு மேல் செலவழித்திருக்கிறது. அமெரிக்காவிலேயே மோசமான இடமாக சிகாகோ இரண்டாவது வருடமாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு வேளை ஒலிம்பிக் கமிட்டிக்கு தெரிந்து விட்டதோ என்னவோ? அமெரிக்காவிலேயே அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டம் பரவியிருக்கும் சிகாகோ நகரப் பொதுமக்களுக்கு இந்த முப்பது மிலியனைக் கொடுத்திருந்தால் சில வருடங்களுக்குப் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த முப்பது மிலியன் போதாதென்று, பெருஞ்சாதனையாளர் ஒபாமா அரசாங்க செலவில் ஒரு சுற்று போய் வந்தது தான் மிச்சம். 'சீ போயா!' என்று புறக்கணித்து விட்டார்கள் ஒலிம்பிக் தேர்வுக் குழுவினர். நொபெல் பரிசு வழங்கிய ஆட்களின் மாமா மச்சான் பேரன் பேத்தி எவரும் ஒலிம்பிக் குழுவில் இல்லை. நொபெல் பரிசு வழங்கப்பட்டதன் காரணத்தை வலியுறுத்திய புறம்போக்கு மீடியா ஒலிம்பிக் தோல்வியைப் பற்றி கப்பென்றார்கள் சிப்பென்றார்கள். ஒபாமாவை ஒன்றும் சொல்லாதது இருக்கட்டும். சென்ற நான்கு வருடங்களாக எத்தனை வேலை எத்தனை செலவு! சிகாகோவுக்கு பந்தயங்கள் வழங்கப்பட சாத்தியம் உண்டோ இல்லையோ அதைக் கூட விடுங்கள். இப்போது ஒலிம்பிக் பந்தயங்களை இங்கே கொண்டு வந்து என்ன ஆகப்போகிறது? ஒலிம்பிக் பந்தயங்களை ஒட்டி வரக்கூடிய சாத்திய வருமானம் ஒரு தூண்டுதல் என்றாலும், முதலில் கையிலிருப்பதை அசலாகச் செலவழிக்க வேண்டுமே? இதனால் பயன் பெறுபவர்கள் யார்? அரசியல்வாதிகள் தான். சிகோகோ 2001லிருந்து வறுமையை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 2002லிருந்து 2007 வரை சிகாகோ பொருளாதார வளம் 22% அழிந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்க வேண்டாமோ? இப்போது போலீசுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லையாம்.

நீதி: இருக்கிற காசை சேர்த்து வைக்கலாம். இருக்கிற காசை செலவழிக்கலாம். இல்லாத காசை செலவழித்து என்னைப் போல் புலம்பலாம்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    மீபத்தில் ஒரு புள்ளிவிவரம் வெளியிட்டார்கள். கொலைக் குற்றம் சாட்ட்பட்டவர்களில் 46% குறைவாகத்தான் அதற்கான தண்டனை பெறுகிறார்களாம். அதிலும் 28% தான் முழு தண்டனையை அனுபவிக்கிறார்களாம். ஆனால் என்னருமை இலினாய் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றவர்களுள் 52% ஊழல் குற்றத்துக்கு தண்டனை பெற்றிருக்கிறார்களாம். கொலைக் குற்றம் செய்தவர்களை விட இலினாய் மாநில ஆளுநர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கும் சாத்தியம் அதிகம் என்று நிரூபித்திருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கி எறியப்பட்ட ப்ளெகெயோவிச், ஒபாமாவின் இலினாய் தொகுதிக்கு ஆளை நியமிக்கப் பேரம் பேசியவர் என்பது தெரிந்திருக்கும் - ஒலிம்பிக் பந்தயங்கள் வராததில் அவருக்கு கொஞ்சம் வருத்தம் என்றாலும் நிறைய மகிழ்ச்சி தான். பந்தயங்களை வைத்துப் பணம் பண்ணக் காத்திருந்தவர் தானே? வெளியே மகான் போல் பேசிக்கொண்டு இந்த ஆள் அடித்திருக்கும் கொள்ளையை நம் ஊர் அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி. இந்த ஆளுக்கு அடி வருடிய தென்னிந்தியக் கூட்டம் இப்போது முக்காடு போட்டுக் கொண்டு திரிகிறது.

நீதி: பட்ட காலிலே படும். தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தால் இலினாய் வாசம் கிடைக்கும்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    'ஒரே தந்திரக் குதிரைக்கன்று' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தவறு, 'one trick pony' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தாண்டிக் குதிப்பதை வெவ்வேறு விதமாக செய்து கொண்டிருக்குமாம். குதிரைக்கு ஒரு தந்திரம் தெரிவது இருக்கட்டும். பிரபல கதாசிரியர்களும் அப்படித் தான் என்று சில சமயம் தோன்றுகிறது. டேன் ப்ரௌன் எழுதிய 'Lost Symbol' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொடுமை. அடையாளக்குறி மற்றும் மதங்களை வைத்துக் கொண்டு எத்தனை உப்புமா கிளறுவார் மனிதர்?! ஒரு விவஸ்தை வேண்டாம்? Lost Symbol பணம் கொடுத்து வாங்க வேண்டியிருந்ததால் ஏமாற்றம் இன்னும் அதிகமாக வலிக்கிறது. பணத்தைத் திருப்பும்படிக் கேட்டேன். புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தால் பணம் தரமாட்டார்களாம். 'படித்துப் பெற்ற அறிவை எப்படித் திருப்பிக் கொடுப்பீர்கள்?' என்கிறார்கள் டேன் ப்ரௌன் மற்றும் வால்மார்ட் நிறுவனத்தார். 'அறிவைப் பெறவில்லை ஞான சூனியங்களே, இருந்த அறிவைப் போக்கடித்துக் கொண்டேன்' என்றேன். 'அது உங்கள் தவறு' என்றார்கள். உண்மை தான். அறிவிருந்தால், இந்தப் புத்தகத்தை வாங்கியே இருக்க மாட்டேன். வாங்கியிருந்தாலும் என் விரோதி யாருக்காவது பரிசளித்திருப்பேன். புத்தி வரும் என்கிறீர்களா? அடுத்த புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிப் படித்து புலம்புவேன்.

நீதி: அறிவுக்காகக் கஷ்டப்பட்டுப் படிக்கலாம். பகட்டுக்காகக் கஷ்டப்பட்டுப் படிக்கலாம். என்னைப்போல் பொழுது போகாமல் படித்துக் கஷ்டப்படலாம்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24


    புத்தகம் பரிசளிப்பது என்றதும் நினைவுக்கு வருபவர்கள் என் மாமாவும் என் ஆசிரிய நண்பர் அரசனும். என்னுடைய மாமா எனக்குக் கணக்கற்ற P.G.Wodehouse புத்தகங்ககளைப் பரிசளித்திருக்கிறார். எட்டு புத்தகங்கள். இருந்தாலும் அவர் மகிழ்ச்சிக்காக கணக்கற்ற என்றேன். அரசன் எனக்கு வழங்கிய தமிழ்ப் புத்தகங்கள் உண்மையிலேயே கணக்கிலடங்கா. அவர் பரிசளித்த சில புத்தகங்களைப் படித்த போது இவர் உண்மையிலேயே எனக்கு நண்பர் தானா என்று தோன்றும் - விடுங்கள், நான் தானப்பசுவின் பற்களை எண்ணிப் பார்ப்பவன். சமீபத்தில் ஸ்ரீராம் தூண்டுதலால் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' படிக்கும் ஆவல் வந்தது. அந்தப் பெயரில் ஒரு புத்தகம் இருப்பதே ஸ்ரீராம் சொல்லித்தான் தெரியும். 'கிடையவே கிடையாது, நான் முன்பே உங்களுக்குக் கொடுத்த போது இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டதாகச் சொன்னீர்கள்' என்று மீனாட்சி அடித்துச் சொன்னார் (நல்ல வேளை, தொலைவிலிருந்தேன்). எனக்குப் கௌரவப்பொய் சொல்ல வரும் என்பதைக் கண்டுபிடித்து விட்டார் மீனாட்சி. க்ரிகெட் பற்றி எழுதப்போய் சுஜாதா பிடித்த கதையாகிவிட்டது. சுஜாதா என்னுடைய அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். அவர் கருத்துக்களில் பெரும்பாலானவை இறக்குமதி என்பது பின்னாளில் தெரிந்தாலும் அவர் எழுத்தில் சொக்குப்பொடி இருந்ததை மறுக்க முடியாது. அவர் எழுதியவற்றில் நான் படித்துப் பிரமித்தது அனிதா இளம் மனைவி, காயத்ரி, விபரீதக் கோட்பாடு, மேகத்தைத் துரத்தினவன், மற்றும் பல சிறுகதைகள். அவர் எழுதிய விஞ்ஞானப் புத்தகங்கள் சுமார் தான். சிலப்பதிகாரத்தை எளிமையாக்குகிறேன் பேர்வழி என்று அவரிழைத்த ஒரு கொடுமையைத் தவிர்த்திருக்கலாம். எண்பதுகளின் தொடக்கத்தில் சுஜாதா படிப்பது விட்டுப்போனது. சிறு வயதில் எழுதத் தொடங்கிய போது சுஜாதாவைப் போல எழுத வேண்டும் என்று நினைப்பேன். நான் விரும்பிப் படித்தத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரை மீண்டும் என் வட்டத்துக்குள் கொண்டு வந்த நண்பர் கௌதமனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் பரிசளித்த மின்புத்தகத்தில் ஸ்ரீரங்கத்து தேவதைகளைத் தவிர இன்னும் நிறைய சிறுகதைகள் இருக்கின்றன. மிக்க நன்றி, கௌதமன். 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' சுமாரை விடக் குறைவு தான். அதான் என்னப் பற்றிச் சொன்னேனே, தானப்பசு, பல் ... என்று.

நீதி: தேடிப்போனாலும் வேண்டிய நண்பர்கள் சில சமயம் ஓடிப்போவார்கள். ஓடிப்போனாலும் வேண்டாத நண்பர்கள் சில சமயம் தேடிவருவார்கள். சோம்பியிருந்தாலும் சில சமயம் நண்பர்கள் தானாகவே கிடைப்பார்கள். நட்பை அனுபவிக்கும் குணமும் நன்றி சொல்லும் மனமும் இருந்தால் போதும்.
புலம்பல் பாதி; புடலங்காய் நீதி | 2009/10/24

பாட்டுக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பென்று தேட வேண்டாம். எனக்குப் பிடித்த பாடல். நாற்பது வருடங்களுக்கு மேலாகக் கேட்டும் சலிக்காத பாடல். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது இன்னும் சுவைக்கிறது. ஒரு நன்றி தான்.

    ன்றி என்றதும் இன்னொரு நினைவு. கொஞ்சம் அவமானப்பட வைத்த நிகழ்ச்சி. இணையத்தில் உலாவுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் இமெயில் படிப்பது என்றாலே தயக்கம். அதுவும் இப்போதெல்லாம் 'ஸ்பேம்' என்று குப்பையாக வரும் மின்னஞ்சல்களுக்கிடையே மாணிக்கத்தைத் தேடிப் படிக்க இன்னும் சோம்பல். பத்திரிகைகளுக்கு கதை கட்டுரை அனுப்பினால் சில சமயம் பிரசுரமாகும். பல சமயம் பதிலே வராது. பிரசுரமாகும் படைப்பைப் பற்றி முன்னறிவிப்பு தரும் ஆசிரியரை என் அனுபவத்தில் கண்டதில்லை (அப்படி ஒன்றும் பிரசுரித்துக் கிழித்து விடவில்லை என்பது வேறு விஷயம்). ஆகஸ்டு மாதம் குங்குமம் ஆசிரியர் எனக்கனுப்பிய மின்னஞ்சலை இன்று காலை பார்த்தேன். குறுகிப் போய்விட்டேன். என்னுடைய கதை ஒன்றைப் பிரசுரிப்பதாகவும், தொடர்ந்து எழுதியனுப்புமாறும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இது நாள் வரை அவர் அனுப்பிய மின்னஞ்சலைப் படிக்கக் கூட இல்லை. நன்றி சொல்லி மன்னிப்பு கேட்டேன். என்னுடைய முதல் சிறுகதை 1979 வாக்கில் குமுதத்தில் வெளியான போதும் இதே கதை தான். ரா.கி.ரங்கராஜன் எனக்கு ஊக்கமளித்து ஒரு கடிதமெழுதியிருந்தார். பதில் கூட எழுதத் தோன்றவில்லை. அது அன்றைக்கு என்று விட்டால், இன்று? நாலு கழுதை வயதாகியும் அறிவு வரவில்லையே? குங்குமத்துக்கு் நன்றியுடனும் கதைக்கு வெட்கமில்லாமலும் ஒரு plug. கதையைப் படிக்க விரும்பினால் படத்தை அழுத்துங்கள். (சொடுக்கு வேண்டாமென்றாகிவிட்டதே?:-)நீதி: சாய்ராம் போல் கணந்தவறாமல் இமெயில் படித்துப் பதிலெழுதலாம். அரசன் போல் இமெயில் வைத்துக் கொண்டு உபயோகிக்காமலே இருக்கலாம். என்னைப் போல் எப்போதாவது படித்து காலங்கடந்து விட்டதே என்று வருத்தப்படலாம்.

15 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. பாட்டுக்கள் பிரமாதம். அதனால் ஆறு மாதம் கழித்து படிக்கும் நான் பதிவு வந்த இன்றே படித்துவிட்டேன் துரை. காரணம் பாட்டுக்கள் தான் !! எப்படி அதை எம்பெட் செய்கின்றாய் நீ. என் மகனின் உளறல் ஒன்றை என் ப்ளாகில் போடவேண்டும். ப்ரஹம பயர்த்தனம் பண்ணிவிட்டேன். உங்கள் அறிவை கொஞ்சம் இலினாய் இருந்த இந்த நாய்க்கு அனுப்பவும் !!

  ஈமெயில் மட்டும் இல்லை, உன் புலம்பலையும் சில சமயம் படிப்பேன் நான் !

  - சாய்

  பதிலளிநீக்கு
 3. Enjoyed your post.
  You are not a fan of Obama it seems - too bad.
  Touching note on friendship.
  nallaaa irukkunga unga kadaai kooda.

  பதிலளிநீக்கு
 4. டான் பிரவுனின் நான்கு புத்தகங்கள் என்னிடம் உள்ளன. டா வின்சி கோட் உட்பட, நீங்க காசு கொடுத்து வாங்கியது தவிர.
  angels and demons
  deception point
  digital fortress.

  எது வேண்டும் ?

  பதிலளிநீக்கு
 5. புடலங்காய் நீதிக்கு கத்தரிக்காய் கமெண்ட். இந்த பதிவு ரொம்ப சுவாரசியாம இருக்கு.

  உங்கள் கதை 'ஜெ' படத்தோட வெளியாகி இருக்கறது சந்தோஷமா இருக்கு. கதையும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. /டான் பிரவுனின் நான்கு புத்தகங்கள் என்னிடம் உள்ளன. எது வேண்டும் ? -kggouthaman/

  இப்போ தானே சுஜாதா புக் அனுப்பினதுக்கு நண்பர்னு சொன்னேன்? அதுக்குள்ளே dan brown அனுப்புறதா சொன்னா எப்படி? ஐயா வேண்டாம் ஐயா. என்னை விரோதி என்று தீர்மானிக்காவிட்டால் சொல்லுங்க, என்னிடம் இருக்கும் Lost Symbol புத்தகத்தை உங்கள் விலாசத்துக்கு அனுப்பி வைக்கிறேன். (post carrierக்கு tipகூட கொடுத்து விடுகிறேன்; ஒழுங்காகக் கொண்டு சேர்க்க வேண்டுமே - இதையெல்லாம் தொட மாட்டேன் என்று அடம் பிடிக்கக் கூடாது பாருங்க). Seriously. i'll be happy to send it your way. In fact, sairam said he might be going to bangalore this week; i'll con him to carrying this - i'll tell him it is a s.m.a.l.l package.

  பதிலளிநீக்கு
 7. நன்றி துரை அவர்களே!
  ஆனா பாருங்க - நான் பெங்களூரில் - திட வடிவில் புத்தகம் எதுவும் வைத்துக் கொள்வதில்லை என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டுவிட்டேன். எப்பவோ ஜனவரி இரண்டாயிரத்து ஒன்பதில் சென்னை சென்ட்ரலில் எங்கள் பாவா பற்றி ஆசிரியர் விக்கிரமன் எழுதி இருக்கிறாரே - என்பதற்காக வாங்கிய அமுதசுரபியையே - இன்னும் முழுவதும் வாசிக்காமல் வெச்சிகிட்டு இருக்கேன்னா - புத்தகங்களைப் படிப்பதில் நான் எவ்வளவு சுறு சுறுப்பு என்று தெரிஞ்சிக்கலாம். உங்க நண்பர் எப்போ பெங்களூர் வர்றாரு, பெங்களூர் தெற்குப் பகுதிக்கு அருகில் எங்கும் வருகிறாரா - என்று சொல்லுங்க. என்னுடைய கை பேசி எண்ணை உங்க ஒய் மெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன். அவர் தொடர்பு கொள்ள

  பதிலளிநீக்கு
 8. அமுதசுரபி புக் வடிவில் இன்னும் வருகிறதா என்ன? கலைமகள்? கணையாழி?

  பதிலளிநீக்கு
 9. KG Gouthaman

  Thanks for asking. Bangalore is not part of this trip plan as I am just there for 4 days in India. Almost 2 days on plane for this trip. I was in Bangalore at my brother's place for a week in March 09. Bangalore South is where I used to work / live for years (Sonata Software Ltd) and still has interests there.

  Bhava, rings a nostalgic bell as my BIL is also a Kannadiga !

  My cell while in India is active just from the night that typically land in Chennai until I depart.

  This visit is from Wednesday your early AM to Sunday late night.

  My Cell is

  + onbadhu ondru - ettu pujjiyam ondru aindhu naangu ondru ezhu ettu irandu ettu !!!

  - Sairam Gopalan

  PS: Durai, small or large peg is fine but not s.m.a.l.l package !!

  பதிலளிநீக்கு
 10. Durai sir!
  remember to have seen kalaimagal in news stands. But Kanaiyaazhi not seen since the past decade.

  பதிலளிநீக்கு
 11. SG sir
  உங்க படம் பாத்தா - நக்கீரன் கோபால் படம் மாதிரி இருக்குதே --- உங்ககிட்ட போன் ல பேச கூட எனக்கு பயமா இருக்கு. பாவா என்பது 'எங்களை'ப போன்ற தெலுங்குக் குடும்பங்களிலும் வழங்கப் படும் உறவுச் சொல்.

  பதிலளிநீக்கு
 12. என்ன kgg, சாய்ராமை அப்படி சொல்லிட்டீங்க?
  அவரு சாது ஐயப்ப சாமிங்க.
  என்ன, தண்ணியடிச்சா மட்டும் கோவம் வரும்
  ஆனா, எப்பவும் தண்ணியடிக்க மாட்டாரு..

  பதிலளிநீக்கு
 13. kggouthaman சொன்னது…

  SG 12 digits? & உங்க படம் பாத்தா - நக்கீரன் கோபால் படம் மாதிரி இருக்குதே --- உங்ககிட்ட போன்ல பேச கூட எனக்கு பயமா இருக்கு.

  "அப்பாதுரை சொன்னது"… அவரு சாது ஐயப்ப சாமிங்க. என்ன, தண்ணியடிச்சா மட்டும் கோவம் வரும் ஆனா, எப்பவும் தண்ணியடிக்க மாட்டாரு..

  - யாரு தண்ணி அடிச்ச தெரியல, எனக்கு இப்போது ? KG சார். நான் சின்ன பயல், நோ சார், ப்ளீஸ்.

  I have also provided +91 for India Cell code- so you see 12 digits.

  நக்கீரன் ? நானா ? துரை மாதிரி நானும் படம் அடிக்கடி மாத்தட்டுமா ? I do that in LinkedIn but in Blog !

  Durai,

  infact Iyappa Season is starting if my shoulder supports me

  - Sairam

  பதிலளிநீக்கு
 14. நன்றி, meenakshi.
  தமிழ்ல மறுபடியும் எழுதத் தொடங்கும் போது எழுதினது. ரெண்டு வருசத்துக்கு முன்னால நீங்க படிச்ச அதே கதை.

  பதிலளிநீக்கு