2014/08/02

லுக்ரீசின் சாபம்[அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    லுக்ரீசின் சாபம் [16-18]

16
'லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
என் காதலி என் மனைவி
என் மகள் என் அன்னை
என் உறவு என் சுற்றம்
என் சொத்து என் சுகம்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
ஒரு சொல்லில் என்
உலகம் அடங்கும் எனினும்
சொல்லியடங்காச் சொல்
அல்லவா உன் பெயர்?
சிறப்பிலடங்கா உன் பெயர் சொல்லி
பிறக்கிறேன் தினமும்
இறக்கிறேன் தினமும்.
வாழ்கிறேன் கணமும்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
எங்கோ தொலைவில் இருந்தபடி
இங்கே என்னை இயக்கி வரும்
மங்கையுன் பெயருக்கு மட்டும் எத்தனை சக்தி?
கனியே, உன்னால்
மனிதனானேன் எனினும் மிருகமானேன்
தனவானானேன் எனினும் திருடனானேன்
கணவனானேன் எனினும் காதலனானேன்
வீரனானேன் எனினும் கோழையானேன்
பேரறிஞனானேன் எனினும் பேதையானேன்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
அன்னைக்கு மனையாளும் பெருமை
அரசனுக்கு உலகாளும் பெருமை
செல்வனுக்குப் பொன்னாளும் பெருமை
கவிஞனுக்குச் சொல்லாளும் பெருமை
நல்லோர் இவருக்கும் இன்னும்
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
இல்லாத பெருமை ஒன்று
செல்லாக்காசான
எனக்கு மட்டுமே உண்டு.
உன்னால் தினம் அன்னையானேன்
உன்னால் தினம் அரசனானேன்
உன்னால் தினம் செல்வனானேன்
உன்னால் தினம் கவிஞனானேன்.
குறையிலா உன் துணைதரும் தகுதியில்
இறைவனாகும் தேவை எனக்கில்லை.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
நீ பேரழகி. உன்
முகம் பளிங்கு
கண்கள் வைரம்
செவிகள் வெள்ளி
மூக்கு மரகதம்
கன்னம் பொன்
உதடுகள் பவழம்.
கூந்தல் சுரங்கத்தில்
நித்தம் நான் தேடும்
ரத்தினச் சுரங்கம் நீ.
கழுத்து வாழைக்கனி
தோளிரண்டும் பலாச்சுளை.
முலைகள் முழுமாங்கனி
மேற்காம்பிரண்டும் முழு திராட்சை.
இளவயிறு வெண் ஆப்பிள்
இடைத்தொப்புள் நாவல்கனி.
இருகை தாங்கி வரும்
அரும் பழக்கூடை நீ.
இடையோ கடவுள் போல
இனிய ஆத்திக நாத்திகக் குழப்பம்.
கனிந்தப் பேரின்ப ஞானம் தரும்
தனிப் பல்கலைக்கழகம் நீ.
தொடைகள் பெரும்பாறை
அடைபட்ட அல்குல் அருஞ்சோலை
முழங்கால் நாகப்படம்
கால்கள் கள்ளிப்பாளை
பாதமெனும் புதைமணல் தாங்கும்
போதைப் பாலைவனம் நீ.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன்
கூந்தல் கார்டினியா
முகமெங்கும் முல்லைமலர்
கன்னமிரண்டும் டெரகோடா
உதடுகள் மட்டும் ரோஜா இனம்.
கழுத்து சங்குமலர்
தோளிரண்டும் லேவன்டர்
கைகள் மக்னோலியா
கைவிரல் கனகாம்பரம்
முலையிரண்டும் வனிலா
மேற்காம்புகள் மட்டும் விஸ்டரியா வனம்.
இடை செம்பருத்தி
இளவயிறு நாகலிங்கம்
தொப்புள் டயேந்தஸ்
முதுகோ முழுத் தாமரை
பிட்டமேடு செவ்வந்தி
வல் தொடையிரண்டும் தாழம்பூ
அல்குல் மட்டும் மல்லிகை வனம்.
முழங்கால் லில்லிமலர்
காலிரண்டும் வயலட்
கால் விரல்கள் ஆலிசம்
பாதங்கள் மட்டும் பவழமல்லி இனம்.
லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
எனக்காகவென்றே நீ
தினம் மணக்கும் மலர்வனம்!9.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன்னைப் பனிக் காலமென்பதா?
பனியினும் வெண்மையன்றோ உன் தூய்மை?
நடுக்கத்தை உன் அன்பில் நான் நொடியும் கண்டதில்லை.
நீ பனிக் காலமல்ல.
உன்னை வசந்த காலமென்பதா?
வசந்தப் பூக்களை விட மென்மையன்றோ உன் மனம்?
சீற்றத்தை உன் அன்பில் நான் சிறிதும் கண்டதில்லை.
நீ வசந்தமல்ல.
உன்னைக் கோடையென்பதா?
கோடையின் கதிரைவிட ஒளியானதன்றோ உன் முகம்?
கடுமையை உன் அன்பில் நான் கணமும் கண்டதில்லை.
நீ கோடையல்ல.
உன்னை உதிர் காலமென்பதா?
உதிர்காலக் காற்றைவிட இதமல்லவா உன் அணைப்பு?
சரிவை உன் அன்பில் நான் சத்தியமாய்க் கண்டதில்லை.
நீ உதிர் காலமல்ல.
உன்னை மழைக் காலமென்பதா?
மழைச்சாரலை விட மயக்கவல்லதே உன் முத்தம்?
அழிவை உன் அன்பில் நான் அணுவும் கண்டதில்லை.
நீ மழைக் காலமல்ல.
காலங்களுடன் உன்னை ஒப்பிடுவது என் தவறே.10
காலங்களுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு.
உன் அழகுக்கு ஏது தொடக்கம்?
உன் அன்புக்கு ஏது முடிவு?
காலத்தைக் கடந்தவள் நீ.
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் அழகை?
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் அன்பை?
அளக்கவியலும் காலத்தை
அளக்கவா முடியும் உன் காதலை?
காலம் பிறந்தழியும் உன்
மேலான கற்பின் வலிமைக்கு அழிவில்லை..
கண்ணே லுக்ரீஸ்!
நீ காலத்தைக் கடந்தவள்.
மூப்பு உன்னை அண்டாது
மரணமும் ஒதுங்கி வழிவிடும்.
மனிதத்தின் இறுதி மூச்சு ஓயும் வரை
இனியாள் உன்னழகு பொலிவுடன் நிற்கும்.

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
என் காதலி என் கண்மணி.
உன்னைக் கவிதையில் வடிக்க முயலும்
கவிஞரின் கர்வம் அடங்கும்.
உன்னை ஓவியமாகத் தீட்ட முயலும்
ஓவியரின் திறமை முடங்கும்.
கற்பனைகளுக்கு
புசிக்கத் தீனி தந்து
பசியால் வாடவும் வைக்கும்
உன் அழகும் கற்பும்
எனக்கு விளங்காப் புதிர்.
அரசு அழியும்
செல்வம் அழியும்
கவியும் அழியும்
உலகம் அழியும்
மரங்கள் அழியும்
காற்று அடங்கும்
காலம் முடியும்.
கண்ணே லுக்ரீஸ்!
உன் அழகுக்கு மட்டும் அழிவில்லை.
உன் கற்பின் பெருமைக்கு அழிவில்லை.
காலம் என்பதே உன் முன் கருத்தில்லாச் சொல்.11

லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
உன் அழகைக் கண்டால் என் கண்களுக்கு விருந்து.
உன்னை முத்தமிட்டாலோ என் உயிருக்கு மருந்து.
அதனால் நான் என்றும்
அழகை விட முத்தத்தை ஆராதிக்கிறேன்.
உன் பழுத்த உதட்டில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
அன்பே நான் மிருகமாகிறேன்.
உன்னைக் குதறி வெறிதணிக்க உன்மத்தம் கூடுகிறது.
உன் பருத்த மார்பில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
பெண்ணே, நான் மனிதனாகிறேன்.
உன் மென்மையும் வனப்புமென் மனதைக் கட்ட அமைதி மேவுகிறது.
உன் பரந்த வயிற்றில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
கண்ணே, நான் அரசனாகிறேன்.
எந்த அரசனுக்கும் கிடைக்காத இராஜ்ஜியம் நீ.
உன்னை முழுமையாக ஆளும் பேற்றினை பெறும் நான் பேரரசர்களின் அரசன்.
உன் செழித்த அல்குலில் முத்தமிடும் பொழுது உண்டாகும் சிலிர்ப்பில்
உயிரே, நான் இறைவனாகிறேன்.
உன் மாண்பை முன்னிறுத்தி மேலுமிதை விளக்காமல்
இத்தோடு அமைகிறேன் பித்தன் நான் உன் நினைவில்'.

17
கொலாடின் அமைந்ததும் அவையில் கண அமைதி.
தொடர்ந்து பெரும் ஆரவாரம்.

'இறைவனாகும் இரகசியமதை எனக்கு மட்டும்
மறைக்காது சொல்லப்பா' என்று அவையினர்
இடித்தனர், இமைத்தனர்.
துடிப்புடன் பாராட்டினர் கொலாடினை.
'உன் பேச்சைக் கேட்டு
என் மனைவி எனை விட்டு
உன்னோடு ஓடாதிருக்க உபாயமொன்று காண்பேனோ?'
விளையாட்டாய் சிரித்தான் சிற்றரசன் ஒருவன்.
இரகசியம் இரகசியம் என்று விரல் மடக்கி முகம் விரித்து
உரக்கச் சிரித்தனர் வீரர்கள்.
'இதன்றோ மெய்க்காதல்! இவனன்றோ பேறுடையவன்!'
குறையில்லா காதலைக் கேட்டு
மறைவாய் ஏங்கியது அவை.

ஆரவாரத்தின் இடையே
ஓரரவம் இல்லாது
சீராக வீற்றிருந்த செஸ்டசின் மனம்
பேரரசக் கனவா?
பேரரவம் புகுந்த வீடா?12

அமைதியாக இருந்த அரசனை
இமையாது பார்த்தான் கொலாடின்.

18
மெள்ள எழுந்தான் செஸ்டஸ்.
உள்ளமெல்லாம் கள்ளம் பொங்க
அள்ளினான் நண்பனை உவகையோடு.
'உன் பெருமை என் பெருமை' என்றான்
கள்ளம் விளங்கா மொழியில்.
'ஆ! கொலாடின். காதல் பேரரசன்!
இங்கே இறைவனுண்டு. ஏதோ நாடாளும் பேரரசன் உண்டு. அரசனும் உண்டு.
எங்களுக்குப் போட்டியாகத் தங்களை உருவாக்கினாளோ லுக்ரீஸ்?'
சிங்கம் போல் சிரிப்பாய்ச் சிரித்தான் செஸ்டஸ்.

நண்பனின் சிரிப்பில் பெருமை
கொண்டான் கொலாடின்.
மறை பொருள் ஏதும் காணாத
கறை படியா மனதுடையான்.

'உற்சாகம் மிகுந்த உங்கள் பேச்சில்
கற்காசேனும் உண்மை இல்லை'
என்றான் செஸ்டஸ்
முன்னின்ற மக்களிடம்.
'பெண்மையின் உண்மையினை
கண் முன்னே காணவேண்டும்.
வேறுமுகம் பூண்டு
ஊருக்குள் சொல்வோம்.
யாருடைய மனைவி அழகரசி?
யாருடைய துணைவி கற்பரசி?
துணை பிரிந்து
தனிமையில் வாடுவோர் யார்?
துணை மறந்து
இனிமையில் ஆடுவோர் யார்?
பேர் விளங்கும் பாவையர் யாரெனப்
பார்த்து வருவோம்.
சிறிதாக ஒரு கூட்டம்
புறப்படட்டும் என்னுடன்'.

மறைவிலேனும் மனைவியைக் காணும் ஆசையிலும்
குறை காணவியலா மன்னன் சொல் என்பதாலும்
மாறு வேடம் பூண்டு புறப்பட்டது குழு.
வேறு நோக்கம் கொண்டு புறப்பட்டான் செஸ்டஸ்.

லுக்ரீசின் சாபம் [19-25]


9 மயக்கும் அழகுடன் மிகவும் மணமுடைய இந்த மலர்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் காணலாம்.

10 நடுக்கம், சீற்றம், கடுமை, சரிவு, அழிவு முறையே குளிர், காற்று, வெயில், உதிர், புயல் இவற்றைக் குறிக்கின்றன.

11 சேக்ஸ்பியர் எழுதிய வேறு சில பாடல்களின் (sonnets) கருத்துக்களை, பொருத்தம் கருதி ஆங்காங்கே சேர்த்திருக்கிறேன்.

12 ஓரரவம்: சிறிய ஓசை | பேரரவம்: பெரிய நாகம்.

19 கருத்துகள்:

 1. பெயரில்லாஆகஸ்ட் 02, 2014

  புதுமைனிட்டு கன்னாபின்னானு எதை வேண்ணாலும் எழுதுறதா? கடவுள் காலடியில் பார்க்க வேண்டியதை கண்ட இடத்துல பார்ர்குற் உங்க கற்பனை வீணாகுது வருத்த படுறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலரைப் போல நான் சிப்பரியும் துங்கம் கிடையாது என்றாலும் ஒரே ஒரு expressionல் அடையாளம் கண்டதாக நினைக்கிறேன். லால்குடி.

   நீக்கு
 2. என்ன சாபமோ தெரியவில்லை, பின்னூட்டங்கள் ஏற்கப்படுவதில்லை!

  இந்த பின்னூட்டம் எப்படியோ தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பெல்லாம் பின்னூட்டம் எழுதிய பிறகு ப்லாகரில் ஒரு அடையாளம் தேர்ந்தெடுத்து பின்னூட்டமிட முடியும். comment pageலந்து sign in செய்து திரும்பவும் சமர்த்தாக comment pageக்கு வரும் அல்லது பின்னூட்டம் பதிவானதாக ஒரு செய்தியோடு திரும்பும். சமீபமாக ப்லாகரில் அடையாளத்தை முதலில் sign in செய்த பிறகே பின்னூட்டமிட முடிகிறது. முன்போல் பின்னூட்டமெழுதிய பிறகு அடையாளத்தை signin செய்தால் comment pageக்கு திரும்பி வருகையில் எழுதினதெல்லாம் கூகிலாம்பிகை காணிக்கையாகி விடுகிறது. உங்கள் அனுபவம் இதுவா வேறா?

   பின்னூட்டம் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். கூகில் சாபம்?

   நீக்கு
  2. முன்பெல்லாம் 'சைன் இன்' பண்ணாத நிலையில் கமெண்ட் போட்டால் 'கூகிள் அக்கவுண்டா' என்று கேட்கும் 'ஆம்' என்றவுடன் பிரசுரித்து விடும். அப்புறம் Follow ஆப்ஷனுக்காக மறுபடி ஒரு வரி கமெண்ட் போட வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் 'கூகிள் அக்கவுண்டா' கேள்விக்கு 'ஆம்' என்றவுடன் அப்படியே மறுபடி பெயருடன் வருகிறது. கமெண்ட் காணாமல் போவதில்லை. Follow ஆப்ஷன் க்ளிக் செய்து கமெண்ட் செய்ய முடிகிறது! இது என் அனுபவம்!

   நீக்கு
 3. \\\ லுக்ரீஸ் ஓ லுக்ரீஸ்!
  என் காதலி என் கண்மணி.
  உன்னைக் கவிதையில் வடிக்க முயலும்
  கவிஞரின் கர்வம் அடங்கும்.
  உன்னை ஓவியமாகத் தீட்ட முயலும்
  ஓவியரின் திறமை முடங்கும் \\\\\

  பெண்ணழகிற்கு உச்சபட்ச வர்ணிப்பு தரும் வரிகள். செஸ்டஸ் அவளை அடைய விரும்பியதில் தவறே இல்லை.

  பதிலளிநீக்கு
 4. மங்கையை நவரத்தினங்களுக்கும் மலர்களுக்கும் கனிகளுக்கும் ஈடாக்கிப் போற்றி மகிழும் வரிகளைப் படித்ததும் ஒவ்வொரு வர்ணனைக்குப் பின்னும் போற்றி என்று சேர்த்திருந்தால் அதுவும் ஒரு வகை பூஜை முறையாயிருந்திருக்கும். மங்கையின் அழகில் பறி கொடுக்கும் மனம் உன்மத்தம் பிடித்து அலைகிறது என்று நன்கு தெரிவித்து இருக்கிறீர்கள்,இப்படியெல்லாம் வர்ணிக்கப் படும் லூக்ரீசின் அழகைக் காண செஸ்டஸ் விரும்புவது இயற்கைதானே. காதல் காவியம் படைக்க முயற்சிக்கலாம்

  பதிலளிநீக்கு
 5. பெண்களை, அதுவும் காதலிகளை வர்ணிப்பதில் இலக்கியங்கள் என்றுமே சலித்துக் கொண்டதுமில்லை; சளைத்ததுமில்லை! ( 'மாசறு பொன்னே, வலம்புரி முத்தே' நினைவின் ஒரு மூலையில்...)

  உடல் இச்சை தான் உணர்விச்சைக்கு அழைத்துப் போகிறதா, இல்லை உணர்விச்சை உடல் இச்சையை உபயோகப்படுத்திக் கொள்கிறதா என்பது ஒன்றில் ஒன்றடங்கிய மர்மமாய்...

  தன்னைத் தான் இழக்கிற மாதிரி உணர்வை இழப்பதில் தான் உணர்விற்கு எவ்வளவு ஆசை பாருங்கள்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலக்கியங்களில் பெண் வர்ணனை ஒரு வினோதமான, கட்டுப்பாட்டு விளக்குகளற்ற, நாற்சந்தி என்று நினைக்கிறேன். வர்ணிக்கபடும் நபரின் உணர்வு, வர்ணிப்பவரின் உணர்வு, சுற்றிய கதைமாந்தரின் உணர்வு, நடத்திச்செல்லும் இலக்கிய கர்த்தாவின் உணர்வு என்ற இந்த நான்கு வெவ்வேறு வகைப் பயணிகளும் அதிவேகமாகச் செல்லும் virtual, parallel, abstract and natural reality. விபத்துக்களும் காணலாம். இமைக்கும் வேகத்தில் ஒன்றை ஒன்று குறுக்கே கடந்து போகும் ஒழுங்கின் சாகசமும் காணலாம்.

   இந்த இச்சைக்கும் அந்த இச்சைக்கும் வேறுபாடு இருக்கிறதா?

   இச்சை என்றதும் நினைவுக்கு வருகிறது. மாதவிப் பந்தல் ப்லாகில் ரவிசங்கர் எழுதிய பதிவொன்று - சுவாரசியமான டாபிக். அதில் உடல் உணர்விச்சைகளின் கீழ் மேல் தட்டுக்களை மிகச் சுலபமாகக் கடந்து சென்ற இலக்கிய வரி - வாசகரின் உணர்வுப் பார்வையிலிருந்து வெளிப்படுத்தியிருந்தார். நினைத்துக் கூட பார்த்திராத கோணம்.

   இச்சுவை தவிர யான்....அச்சுவை பெறினும் வேண்டேன்

   பிரபந்த வரிகளை உடல்/உணர்வு வியாபித்த முத்தப் பார்வையில்

   இச்சுவை தவிர யான்... அச்சுவை பெறினும் வேண்டேன்.. என்று இச்சுக்கு முன் கொடுத்த சுவாரசியமான முரணை இலக்கியம் யோசித்திருக்குமா என்ன? another place.. another context. இதான் இலக்கிய வர்ணனையின் விளக்குகளற்ற நாற்சந்தி. விபத்தா சாகசமா? பார்வையைப் பொருத்தது என்கிறீர்களா?

   விபத்துக்களை விட சாகசங்களை அதிகம் பார்த்தவன் பார்வையில் இது.


   நீக்கு
 6. பல நேரங்களில் எழுதியவனை விட அந்த எழுத்தை ரசித்தவன் தன் பார்வையை பலப்படுத்த விரும்புகிறான். அந்த எழுத்து விளைவித்த ரசனைதான் இந்த ரசிப்பு என்பது அடிபட்டுப் போகிற அளவுக்கு. அது 'எந்தக்காலத்து இலக்கியமோ' என்றால் கேட்கவே வேண்டாம். 'அந்தக் காலம்' என்பது மறக்கப்பட்டு இந்தக் காலத்து ரசனையாய் இது இருப்பதாலும், இந்தக் காலத்து ரசனையாளர்களே இவற்றையெல்லாம் தீர்மானிப்பவராய் இருப்பதாலும் எல்லா விபத்துகளும் நிகழ்கின்றன.

  நாற்சந்தி உதாரணம் மிகவும் ரசித்தேன். அந்த ஒழுங்கு இல்லையெனில் விபத்தும் சர்வ நிச்சயம்.

  பொதுவாக பார்வைக்கு தட்டுப்படும் உடல் உறுப்புகள் 'உடல்' என்று பெயர் கொள்கின்றன. உணர்வு மண்டலம் நம் வெளிப்பார்வைக்குத் தட்டுப்படாத உணரக் கூடிய ஒன்று. உணர்வு நரம்புகளால் பெறும் உணர்வு மூளைக்குக் கடத்தப்படும் என்பது உடற்கூறு சாத்திரம். எல்லா அனுபவங்களின் முதல் உணர்வு திகைப்பேற்படுத்துவதாகவும், அதே அனுபவம் இன்னொரு முறை ஏற்படும் பொழுது முன் பெற்ற அனுபவத்தின் தடத்தைப் பதித்துக் கொண்டு 'அதே மாதிரி' இல்லை, 'இது வேறு மாதிரி' என்று உணர்வு நரம்புகளால் மூளைக்கு கடத்தப்படுகின்றன. இந்த அனுபவத்தை 'ஆகுபெயராய்' உடலில் காண்கிறோம் நாம். அதாவது அந்த அனுபவத்தை உடலில் ஏற்றிச் சொல்கிறோம்.
  (உதாரணம்: உலகம் ஒரு நாள் இதை உணரும் = உலகத்திலுள்ள மக்கள் ஒரு நாள் இதை உணருவர்.)

  அதனால் ஒன்றின் ஆளுகையின் விளைவாய் பெறப்படும் உணர்வு வேறு; அந்த ஒன்று (உடல்) என்பது வேறு என்பதாய்.

  உணர்வுகள் எப்பொழுதும் ஒருவர் துய்த்தலின் அடிப்படையில் ஏற்படுவது. ஒருவரை பிரமிக்க வைப்பது இன்னொருவருக்கு வெகு சாதாரணமாய் இருக்கலாம். ஒருவருக்கு ஒன்றுமே இல்லாதது இன்னொருவருக்கு
  'ஓகோ' என்று இருக்கலாம். அதனால் ஒருவர் உணர்ந்த அதே பாதையில் பயணிப்போம் என்பது நிச்சயமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணர்வின் மகிமை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. அனுபவம் என்ற பார்வையில் பழைய புதிய என்ற உணர்வு வகை தெரியலாமே தவிர ஒரு நுகர்வு என்ற பார்வையில், உடலால் உணர்வு என்றே நம்பத் தோன்றுகிறது.
   துய்த்தலின் அடிப்படை.... உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் இருக்கும் மெல்லிய எனினும் ஆழமான வேறுபாட்டை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதை முழுதுமாக நம்புகிறேன். உணர்வை ஒதுக்கி வைத்தால் ஒழிய நுகர முடியாது. உணர்வுக்கு வளைந்து துய்க்க மற/றுப்பதும் ஒரு சோகம். கச்சேரியும் கேட்கணும் சுப்புடுவையும் கேட்டுக்கணும் என்றால் கஷ்டம்.

   நீக்கு
  2. எழுதுறதை நிறுத்தி வச்சிருக்கீங்களேனு அடித்துக் கொள்கிறது...... உணர்வு ;-)

   நீக்கு
 7. உடல் இயங்குவதற்கான ஒரு டூல் மட்டுமே; உணர்வு அதைத் தாண்டிய ஒன்று.

  இரத்த ஓட்ட இயக்கம் உடலால் தான் சாத்தியப்படுவதால் அதுவே பிர்மாண்டமாகப் பொய்தோற்றம் கொடுக்கிறது.

  உடலுக்கு மூப்பு உண்டு; உணர்வுக்கு அது இல்லை.

  உடலுக்கு அனுபவம் இல்லை; உணர்வுக்குத் தான் அனுபவம்.

  உடல் வேலையாள்; உணர்வு தான் எஜமானன்.

  உடல் நம்மைப் represent செய்வதில்லை; கூர்தீட்டப்பட்ட அனுபவ உணர்வு தான் அதைச் செய்கிறது.

  உடல் இல்லையெனில் உணர்வும் மரித்துப் போவது தான் சோகம்.

  அந்த சோகத்தை வெல்வதற்காகவே எழுத்து.

  உயிர்ப்புள்ள எழுத்து சிரஞ்சீவித்துவம் வாய்ந்து எழுதியவனுக்காக உயிர் வாழும்.

  ஷேக்ஸ்பியரின் இந்தப் பகுதியே அதற்கு உதாரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. ஒரு உணர்வு பலருக்கு ஒரே நேரத்தில் தோன்றக் கூடும். இந்த தாட் கொஞ்சம் நசிகேத வெண்பா ரூட்ல போகுற அபாயம் இருக்குது. ஆன்மாவை வளர்ப்பது உணர்வு என்று தோன்றும். கூட்டுணர்வு என்பது அற்புதமான சிந்தனைச் சாலை.. அதையே கூட்டுணர்ச்சி என்று சொல்ல முடியவில்லை (ஆபாசமாகவோ கொச்சையாகவோ தோன்றி விடுகிறது).

   இலக்கியம் உணர்ச்சியைத் தூண்டுவதால் மட்டும் ஆபாசம் ஆவதில்லை. உணர்வைத் தூண்டுவதால் மட்டும் அற்புதம் ஆவதும் இல்லை.

   இலக்கியம் காலத்தை வெல்ல, நீங்கள் சொல்லியிருக்கும் உணர்வூட்டம் வேராகிறதோ?

   நீக்கு
  2. அனுபவம் வேறு உணர்வு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
   அனுபவ உணர்வு - சுவாரசியமான கூட்டு.
   ம்.

   நீக்கு
 8. //இந்த தாட் கொஞ்சம் நசிகேத வெண்பா ரூட்ல போகுற அபாயம் இருக்குது. //

  அபாயம்?.. ஹஹ்ஹஹா.. All routes are going to Paris!

  நாம் கொஞ்சம் வழி பிரிந்து வருவோம். பிரிந்த வழியும் மீண்டும் அங்கேயே கொண்டு போய் விட்டாலும் அது நசிகேத வெண்பாவின் சிறப்பே என்று கொள்வோம். சரியா?..

  உணர்வின் க்யாதி இதோடு முடிந்ததாகத் தெரியவில்லை. உணர்வின் உராசல்கள் படிமங்களாகி நினைவுகளாய் பதிவாவது தான் அற்புதம். படிமங்கள் அடங்கிய பேழையை திறந்து வேண்டுகிற நினைவை எடுத்து நினைவுத்திரையில் ஓட்டிப் பார்த்து மறுபடியும் எடுத்த இடத்திலேயே வைத்து விடும் வசதி வேறே. பேழையை வேண்டும் பொழுதெல்லாம் திறந்து பார்ப்பதற்கான சாவியும் நம்மிடமே.

  நினைவுகளை மீட்டிப் பார்ப்பது எல்லோராலும் முடிவதில்லை. மீட்டி மீட்டி பார்த்து பயிற்சி கொள்வதே இதற்கான வழி.
  ஊசி முனை பட்டு பட்டு கிராமபோன் தட்டு தேய்ந்து இருக்குமே, அந்த மாதிரி சில நினைவுகள் அடிக்கடி மீட்டப்படுவதால் பேழையை சடுதியில் திறந்து எடுத்த மாதிரி சட்டென்று ஓடிவந்து திரையில் ஓட ஆரம்பித்து விடும்.
  விதவிதமான நினைவுகளைச் சேகரம் பண்ணி பேழைக்குள் அடுக்கி வைத்துக் கொள்வதே குறிப்பிட்ட ஒரே நினைவு
  மீண்டும் மீண்டும் வராமல் அமுக்க ஒரே வழி.

  உணர்வுகள் நுண்ணியவை ஆகாமல், அதே நேரத்தில் சேகரமும் நடக்க வேண்டும். நுண்ணியவை ஆனால் வேறொரு ஆபத்து இருக்கிறது.

  மனிதன் தனக்கென்று சேர்த்து வைத்துக் கொள்ளும் சொத்து இந்த சேகரம் தான். இது தான் வாழ்க்கைக்கு வழிகாட்டி.
  எதையும் செயல்படுத்துவதற்கான உந்து சக்தி.

  எழுத்தாளர்களின் ஆஸ்தியாய் கதாசிரியர்களின் ஜீவநாடியாகவும் இருப்பதும் இதுவே. பாவம் கதாபாத்திரங்கள்.
  இவர்களின் நினைவுச்சுமையை கதாபாத்திரங்களின் தோளில் கூலாக ஏற்றி 'தேமே'னென்று தான் கழண்டு கொண்டு விடுவார்கள். தன்னை முன்னிருத்திச் சொல்ல முடியாத சிலதுக்கு சரியான ஏற்பாடாகவும் இவை அமையும்.

  பதிலளிநீக்கு
 9. //பாவம் கதாபாத்திரங்கள்.
  பாவம் எழுத்தாளர் இல்லையோ?

  பதிலளிநீக்கு
 10. ஆளற்ற டீக்கடையில் நீங்களும் நானும் அருந்தக் கிடைத்த அமைதியான, அருமையான அனுபவம். நன்றி ஜீவி!

  நீங்கள் சொல்லியிருக்கும் 'சேகரம்' 'உணர்வுகளின் நுண்மை' - இவற்றின் manifestation என்னைக் கட்டிப் போடும் 'muse'. என்னுடைய museஐ நான் அடையாளம் கண்டது சமீபத்தில் தான். இத்தனை நாள் என்னைத் தொலைத்த வேதனையில் தவித்துக் கொண்டிருந்தது (தாள்/தான்/தார் ?)

  உணர்வுகளின் நுண்மை - தனிப்பதிவுக்கான கரு. அல்லது இன்னொரு தனி(மை) மடலாடலுக்கான கரு :-)

  பதிலளிநீக்கு