2011/05/27

மெல்லிசை நினைவுகள்

குருட்டு ஆய்வுசுசீலா, ஈஸ்வரி, ஜானகி என்ற பெயர்களுக்கிடையே முதல் முறையாக இவர் பெயரைக் கேட்டபோது அன்னியமாகத் தோன்றியது நினைவிருக்கிறது. நல்ல வேளை, அந்த எண்ணம் நிலைக்கவில்லை. வளரும் பருவத்தில், ஈஸ்வரி தவிர பெண்கள் பாடிய தனிப்பாடல்களை அதிகம் கேட்காமல் இருந்த நாளிலும் இவரின் 'மல்லிகை' பாடலை ரகசியமாக முணுத்திருக்கிறேன். என் உயர்நிலைப் பள்ளி திராவிட இயக்க ஆசிரியர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்திருக்கிறார்கள்.

'இளைய சாம்பார்' என்று சலித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒலித்து மனமேறிய பாடல், 'அன்பே உன் பேரென்ன ரதியோ?'. 'கண்ணே, உன் சொல்லென்ன அமுதோ? செந்தமிழ் தந்தது'.. எத்தனை ரசித்திருக்கிறேன் இந்தப் பாடலின் பல்லவியை! இந்தப் பாடலையும், 'பட்டுப் பூச்சிகள்' பாடலையும் அதிகம் கேட்டதற்கு இவர் குரலினிமையும் என் பதின்ம வயதும் ஒரு காரணம். ம்ம்ம்ம். இப்போது கேட்டாலும் நெஞ்சுக்குள் யாரோ பிசைவது போல் இருக்கிறதே!

'எங்கிருந்தோ ஒரு குரல்' பாட்டில் இவருடைய பிசிறே இல்லாத மிக நேர்த்தியான, முதிர்ந்த பிடிப்பை மிகவும் ரசிப்பேன். 'ஏழு ஸ்வரங்களுக்குள்' போன்ற பாடல்களில் இதைவிடப் பல மடங்கு நேர்த்தியான, சீரான, குரல்வளத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார் என்றாலும், இந்தப் பாடலைப் பாடியிருக்கும் விதத்தில் இடியும் உண்டு, தாலாட்டும் உண்டு - கேட்டால் தொற்றிக்கொள்ளும் அபாயமுண்டு.

இவர் பாடிய 'நீராட நேரம்' பாடலை முப்பது வருடங்கள் போலத் தொடர்ந்து கேட்டு வருகிறேன். சலிக்கவே இல்லை. சிவாஜி-ஸ்ரீதர் கூட்டணியில் ஒரு பாடாவதிப் படம். தீபாவளி ரிலீஸ் என்று நினைக்கிறேன். தாம்பரம் நேஷனல் அல்லது எம்ஆர் தியேடர். நண்பர்களுடன் போயிருந்தேன். அறுவை தாங்க முடியாமல், நண்பன் அன்புக்கரசனின் எரிச்சல் கலந்தத் திட்டுக்களைத் தாங்கியபடி எழுந்து வெளியேறிக் கொண்டிருந்தோம் ("அப்பமே சொன்னனேடா? ஐரு முட்டாக்குங்களா.. கொன்றவட்டைங்களா.. தொந்தி கணேசனைப் பாக்க வேணாம்டா, நல்ல படம் போவம்னு சொன்னா கேட்டீங்களா?"). திடீரென்று இந்தப் பாடல் ஒலித்து அப்படியே உறைந்தது நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு இந்தப் பாடலுக்காகவே பாடாவதிப் படத்தை எத்தனை முறை பார்த்தோம் என்று சொன்னால் சிரிப்பாகி விடும். நண்பன் சாம்பா சென்னையில் நடத்தும் மெல்லிசைக் கச்சேரிகளில் இன்னும் இந்தப் பாட்டைச் சேர்ப்பதாகக் கேள்வி. என்னுடைய டாப்10 பாடல்களில் ஒன்று.

'சொர்க்கத்திலே முடிவானது' பாடலின் துள்ளலில் மறைந்திருக்கும் சோகத்தை மிக அருமையாகக் கொண்டு வருகிறார். 'வாழ்கின்ற வாழ்வில் அன்பிருந்தால் வெள்ளி விழாக்களும் உண்டு'. இந்த வருடம் எங்கள் குடும்பத்தில் ஒரு தம்பதி தங்கவிழா காண்கிறார்கள். வாழ்க!

'தங்கத்தில் முகம்' பாடலில் ஜேசுதாசையும் எம்எஸ்வியையும் காப்பாற்றியது இவர்தான் என்று நினைக்கிறேன். 'பொன்மனச் செம்மல்' பாட்டை விடாமல் கேட்ட அன்றைய திமுக பிரபலத்தை அறிவேன். "என்னமா போட்டிருக்கான்யா பாட்டு! [பலான தீச்சொல்] தொப்பித்தலையனுக்கு இப்படியெல்லாம் பாட்டு போட்டு வளத்துட்டான்யா உங்க ஐயரு!" என்பார். தீவிர எம்எஸ்வி ரசிகர். கோடை நாட்களில் அவர் வீட்டில் நாங்கள் கழித்த 'எம்எஸ்வி இரவுகள்' சுவையானவை.

மாயமாக ஒரு ஒலி வந்தது, அது வாணி ஜெயராம் என்ற இனிமை.

மெல்லிசை நினைவுகள் | வாணி ஜெயராம் | 2011/5/27

8 கருத்துகள்:

 1. அந்த பாடாவதி படத்தில் இன்னொரு இனிமையான பாடல் கூட உண்டு. அது வாணி பாடியது அல்ல. டி எம் எஸ் சுசீலா கூட்டணியில் செந்தமிழ் பாடும் என்ற பாடல்! வாணி பாடல்களில் இன்னும் கூட நல்ல பாடல்கள் உண்டு. ஒரு காலத்தில் ஆடியோ கேசெட்டில் டி எம் எஸ் தனியாக பல்வேறு ஜோடிகளுடன் என்று தனித் தனியாக சேமித்து வைத்திருந்தது போல வாணி ஜெயராமுக்கு தனி கேசெட் வைத்திருந்தேன்!

  பதிலளிநீக்கு
 2. சாவித்திரி என்கிற படத்தில், வாணிஜெயராம் இரண்டு அற்புதமான பாடல் பாடி இருப்பார். ஞாபகம் உள்ளதா சார். "மழை காலமும் பனிக்காலமும் சுகமானது" மற்றும் "வாழ்ந்தால் உன்னோடு தான் வாழ்ந்திடுவேன் என்று வனம் புகுந்தால் சீதை"

  பதிலளிநீக்கு
 3. 3 ம் தரம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.நன்றி அப்பாஜி.
  வாணியம்மா இப்போ இலண்டனுக்கு வந்திருக்காங்க இசைமழை பொழிய.நாளைக்குன்னு நினைக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 4. //ஹேமா கூறியது...."வாணியம்மா இப்போ இலண்டனுக்கு வந்திருக்காங்க "//

  ஹேமா...அப்போ நீங்க இப்போ சுவிஸ்ல இல்லையா....?

  பதிலளிநீக்கு
 5. தலைவரே... வாணி-இளையராஜா ஹிட்ஸ் தெரியும். இதெல்லாம் என்னை மாதிரி வாலிபர்களுக்கு ரொம்ப பழசு... எஸ்.பி.பியோட பாடின சொர்கத்திலே முடிவானது கேட்ருக்கேன். உங்களோட தியேட்டர் நினைவுகள் சுவாரஸ்வமா இருக்கும் போலருக்கே.... ;-))

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே பாடல்களுமே அழகு. இன்னும் இதை சேர்த்திருக்கலாமே, அதை சேர்த்திருக்கலாமே என்று சொன்னால், சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். அவ்வளவு பாடல்கள் இருக்கிறது.
  அன்பே உன் பேரென்ன ரதியோ பாடலை கேட்டபோது நினைவில் வந்த இன்னொரு பாடல், 'யாரது? மன்மதன்! ஏனிது, மந்திரம். வாணி அவர்கள் எஸ்.பீ.பீ., ஜெயச்சந்திரன் இவர்களுடன் பாடிய அளவு டி.எம்.எஸ் அவர்களுடன் பாடவில்லை என்று நினைக்கிறேன்.
  MSV. Times ஆண்டு விழாவின் போது, மெல்லிசை மன்னர் முன்னிலையில் வாணி அவர்கள் சொன்னது,
  இவர் என்னை 'ஞானஸ்தி' என்றுதான் அழைப்பார், 'நீ என்னிடம் எப்போதோ வந்து சேர்ந்திருக்க வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே இருப்பார் என்று மிகவும் நெகிழ்து பேசினார். பிறகு மெல்லிசை மன்னர் இசையில் இவர் பாடிய பல பாடல்களின் பல்லவிகளை மட்டும் பாடினார். 'நீராட நேரம் நல்ல நேரம்' பாடலை மட்டும் முழுவதுமாக ஆர்கெஸ்ட்ரா எதுவுமே இல்லாமல் பாடினார். மெய் சிலிர்த்தேன், என்ன குரல் வளம், இன்றும் அதே இளமையோடு! தேவகானம் தான். மெல்லிசை மன்னர் அருகில் இருக்க, நான் என்றும் விரும்பும் இந்த பாடலை வாணி அவர்களே பாடி நான் கேட்க மிகவும் பாக்கியம் செய்திருக்கிறேன். இது என் வாழ்நாளில் நடந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சி. என்றுமே மறக்க முடியாத இனிமையான நினைவு.

  பதிலளிநீக்கு
 7. என் பள்ளியில் ஒரு பாடலாசிரியை இதே தேனினிய குரலோடு இருந்தாங்க. வாணி ஜெயராம் எனக்கு பிடித்த பாடகி என்பதைத் தவிர பாட்டுல நிறைய தெரியாதுன்னு மட்டும் சொல்லிட்டு, நான் அப்பீட்டு.

  பதிலளிநீக்கு
 8. நேற்றிலிருந்து உங்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை. என்
  வலைப்பு தந்த தொல்லையை சரிசெய்ய வெகு நேரம் பிடித்தது.. தாமதத்திற்கு உங்களிடமும் வாணி ஜெயராமிடமும் மாப்பருள தெண்டம்..

  தன் தனித் தன்மையான குரலால் மட்டுமே பெயர்பெற்ற
  இசைக்குயில்.

  அவரின் முத்துப் பாடல்களை பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்.
  ஜெயசந்தரனுடன் அவர் பாடின சில பாடல்கள் :

  -இன்றைக்கு என் இந்த ஆனந்தமே
  மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
  சாமத்தில் பூத்தமல்லி
  கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது
  முத்துரதமோ முல்லைச் சரமோ
  சிந்துநதி ஓரம்... தென்றல் விளையாடும்
  தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ

  என்னிடம் இருந்த ஜானகி,வாணி கலெக்ஷன் மொத்தமும் கம்பியூட்டரிலிருந்து மறைந்து போய் விட்டது. இனிதான் சேர்க்கவேண்டும்..

  பதிலளிநீக்கு