2012/06/09
தைவாதர்சனம்
    ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.
இந்த காலத்து குழந்தைகளுக்கெல்லாம் தெய்வ நம்பிக்கை பக்தி எதுவுமில்லே, கோவிலுக்குப் போச்சொன்னா வக்ரம் பேசறானு சொல்றோமே தவிர, பாருங்கோ, பதினஞ்சு பதினாறு வயசானாப் போறும், பொண்களும் சரி, பையன்களும் சரி, பக்தி வந்து துடிச்சுப் போயிடறா. வாரத்துல நாலு நாள் கோவிலுக்குப் போறான்னா, விஷயமிருக்கணுமே? ஒரு விக்கிரகம் விடாம பிரதக்ஷணம் பண்ணி, பக்தியோட அவா இருக்கறதப் பாத்தா, இவாளப் போய் குத்தம் சொன்னோமேன்னு நமக்கே அத்யானமா போயிடறது.
போன மாசம் பாருங்கோ, சைதாப்பேட்டைல காரணீஸ்வரர் கோவிலுக்கு போயிருந்தேன். சித்திரை மாசம் பிரம்மோத்சவம், நாலு நாள் தெய்வ சந்தேசம் சொல்லிட்டு போங்கோன்னா. அதுக்காகப் போயிருந்தேன். ஆதிகாரண மூர்த்தியும் ஸ்வர்ணாம்பிகையும் ஜகப் பிரசித்தியாச்சே, அப்படியே அவாளையும் பாத்துட்டு வருவோம்னு போனேன். போனா, கோவில்ல நிக்கக்கூட இடமில்லை. வயசுப் பொண்களும் பையன்களும் கோவிலைச் சுத்தி சுத்தி வரா, அவாளப் பாத்தே நேக்கு ஜன்ம சாபல்யமான மாதிரி ஆயிடுத்துன்னா பாருங்கோ.
பக்கத்துல நின்னுண்டிருந்தவர்ட்ட கேட்டேன்: "இந்த மாதிரி யுவக்கூட்டம் எல்லாம் தெய்வ பக்தியோட இருக்கறதனால தானே, லோகத்துல சன்மார்க்க சித்தம் நெலச்சு நிக்கறது?"
அதுக்கு அவர் சொன்னார்: "நீங்க வேறே, இவாள்ளாம் சாமி கும்பிடவா வந்திருக்கா? பையன்கள்ளாம் பொண்களை சைட் அடிக்க வந்திருக்கா. பொண்களோ சைட் அடிக்கறத அனுபவிக்கறதுக்கு வந்திருக்கா"
பக்கத்துல நின்னுண்டிருந்த அவாத்து மாமி சேந்துண்டா: "சரிதான். இவாளுக்கெல்லாம் உண்மைலயே பக்தி இருந்தா, நாட்டுல கரன்டு கஷ்டம் தீந்து போயிருக்காதோ?".
"தைவாதர்சனம்"னேன்.
"என்ன சொல்றேள், எங்க தெய்வ தரிசனம்?"னா மாமி.
"தர்சனமில்லே, அதர்சனம். சம்ஸ்க்ருதம். தைவ அதர்சனம்னு பிரிக்கணும். அத்ர்ஸ்யம்னா கண்ணுக்குத் தெரியாததுன்னு அர்த்தம். இவாள்ளாம் பாக்கறது, கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தை"னு சொன்னேன்.
"தைவாதர்சனமா, என்ன கூத்துடாது!"னு நெனச்சாளோ என்னவோ, ரெண்டு பேரும் என்னை ஒரு தினுசா பாத்துண்டே, டாக்கு டாக்குனு நடராஜா சர்வீஸ்ல கிளம்பிட்டா.
கோவில்ங்கறது எதுக்கு இருக்கு? கீதா மாமியைக் கேட்டா சிலாகிச்சு சொல்லுவார். கிராமத்துக் கோவிலையெல்லாம் எடுத்து நடத்தணும்னு ரொம்ப ஸ்ரத்தையா எழுதுறா மாமி. பக்திமார்க்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். கோவில்னு இருக்கறதே, நாலு பேர் சேர்ந்து பழகறதுக்குத் தானே? சித்தம் ஸ்ரேஷ்ட தேவஸ்தானம்னு சொல்லியிருக்காளே? பகவானை மட்டும் பிரார்த்தனை பண்ணனும்னா, மனசுலயே பண்ணலாமில்லையோ? கோவிலுக்கு பின்ன எதுக்கு வருவா? அப்படி இப்படி பாத்துக்கத்தான். நாம்ப மட்டுமில்ல, நாமள்ளாம் கும்பிடுற முப்பத்து முக்கோடி தேவதாங்கறாளே, அவாளும் இப்படித்தான்.
இதுக்குப் பூர்வீகம் உண்டு, தெரியுமோ?
    ஆதி நாள்ல இப்ப மாதிரி இல்லை, ரெண்டே ஜாதி தான். தேவ ஜாதி, மனுஷ ஜாதி. அப்படின்னா அசுர ஜாதி எங்கனு கேக்கலாம். அசுர ஜாதியும் தேவ ஜாதிதான். எல்லாருமே காஸ்யபர் கொழந்தைகள் தானே?
கதையைக் கேளுங்கோ, தேவ ஜாதியும் மனுஷ ஜாதியும் ஒண்ணா இருந்தா. அப்பல்லாம் தேவாள் கண்ணுக்குத் தெரிஞ்சுண்டிருந்தா.
கடைத்தெருவுல "என்ன ஓய், சுப்ரமண்யரே, எப்படி இருக்கீர்? ஆத்துல செகந்ட் ஒய்ஃப் சௌக்கியமா? என்ன தளிகை?"னு குசலம் சாரிக்கலாம். "ஒம்ம ப்ராதா.. அதான் கஜமுகன் கணேசன்.. யாருக்காவது எதாவது விக்னம் உண்டாக்கறதே ஸ்வபாவமா போயிடுத்துங்காணும் அவருக்கு. அப்புறம் மோதகம் கொண்டா கதலிபலம் கொண்டானு லஞ்சம் வாங்கிண்டு நிவர்த்தி பண்றாராமே? யாருக்கு என்ன கார்யம் ஆகணும்னாலும் இவருக்கு மொதல்ல சம்திங் வெட்டணுமாமே? கேப்பாரில்லையோ? ஜ்யேஷ்டரா இருந்துண்டு பொறுப்பா இருக்க வேண்டாமோ? பகவானே லஞ்சம் வாங்கினா, பாமரன் என்ன பண்றது?"னு சப்ஜாடா கேக்கலாம். தேவாளும் நம்மளோட சுமுகமா பேசிண்டிருந்தா. தோப்பனார் பார்யாள் ஸ்த்ரீலோலப் ப்ரச்னையெல்லாம் நம்பகிட்டே சொல்லியழுவா.
தேவாளும் மனுஷாளும் பழகிண்டாலும் பேசிண்டாலும், பேதம் இருக்கத்தான் செஞ்சுது. தேவாளுக்கும் மனுஷாளுக்கும் தனித்தனி ஜாகை. ஆனா, கோவில்ல மட்டும் நிஜமாவே க்ருஷ்ணரையும், ராமரையும், மணிகண்டனையும், மகேஸ்வரனையும் பாக்கலாம். ராஜராஜேஸ்வரியையும், மீனாக்ஷியையும், சரஸ்வதியையும் சாக்ஷாத்தா பாக்கலாம். சாயந்தரத்துல தேவாளும் மனுஷாளும் கோவில்லக் கூடிப் பேசுவா. கோலாட்டம் ஆடுவா. பாட்டு பாடுவா. தேவ தேஜஸ் படட்டுமேனு மனுஷா அத்தனைபேரும் வருவா.
"என்ன ஓய், எரனூறு மில்லி மெக்டாவல் அடிச்சுட்டு வந்திருக்கீரா?"னு நீங்க கேக்கலாம்.
அப்படியெல்லாம் இல்லைண்ணா. சபைல பொய் சொன்னா, நாக்கழிஞ்சு போகாதோ? நான் சொல்றதெல்லாம் அந்த சரஸ்வதி சாட்சியா சத்ய வாக்காக்கும். அம்பது மில்லிக்கே ஆட்டம் போடறதுண்ணா.
"அப்றம் எப்படி எல்லாம் கல்லா மாறிப் போச்சு?"ன்னு கேக்கறேளா?
வாஸ்தவமான கேள்வி. தேவா மனுஷா சகபாவம், சகஜீவிதம் எல்லாம்... ஒரு நாள் சடால்னு மாறிப் போச்சு.
ஏன் மாறிப் போச்சுன்னா? அதுக்குக் காரணம் இருக்கு. அனுராகம். மதனசந்தேசம். ப்ரேமை. அதாண்ணா லவ்வுங்கறாளே, அதே தான். அழகா காதல்னு சொல்லலாம், லவ்வு ஜிவ்வுன்னு இழுத்துண்டும் சொல்லலாம். அந்தக் கதையத்தான் சொல்லப் போறேன். சித்தே இருங்கோ, ஒரு சிட்டிகை. நல்ல பட்டணம் பொடில்லாம் இப்ப கெடைக்கறதே இல்லை...நன்னா விர்ர்ர்னு ஏர்றது...சரி, கதைக்கு வரேன்.
இப்பல்லாம் பார்லிமென்ட்ரி கமிட்டி பொருளங்கா உருண்டை ஆபரேடிங்க் கமிட்டி ஆமவடைனு என்னென்னமோ சொல்றாளே, அதே மாதிரி ஆதி நாள்லயும் உண்டு.
    ஒரு நாள் சதஸ்ல தேவாள்ளாம் ஒக்காந்துண்டு இருக்கா. சதஸ் எல்லாம் கோவில்ல தான். இதானே தேவ ஜாகை? சிவ சபை, விஷ்ணு சபை, பிரம்ம சபை மூணும் சேந்து கூடியிருக்கு. லோகத்து விஷயமெல்லாம் விசாரிக்கப் போறா. என்ன நடக்கப்போறது, அதுக்கு எப்படி எதிர் நடவடிக்கை எடுக்கலாம், யாருக்கு எப்படி சங்கடம் கொடுக்கலாம், எவ்வளவு பரிகாரம் வசூல்னு பைவ் இயர் ப்ளான் போடறா. லோக பராமரிப்புக்கு, தேவாளோட ஐந்தாண்டு திட்டம்.
"அப்பா, நமஸ்காரம்"னு விஷ்ணுவுக்கு ஒரு கும்பிடு போட்டு பேச ஆரம்பிக்கறார் பிரம்மா. அவர்தான் த்ரிசபை சதசுக்கு ஸ்பீக்கர். நம்ம ஊர் ஜெயகுமார் மெய்ராகுமார் மாதிரி. சதசை ஆரம்பிச்சு வச்சுட்டு பிரம்மா சொல்றார்:
"இன்னிக்கு ஒரு முக்ய விவாதம் நடக்கப்போறது. என்னோட ஆபீஸ்ல, ஸ்ருஷ்டிக்கே எல்லாருக்கும் டயம் சரியா இருக்கு. விஷ்ணு சபைலயோ, திரிலோக பரிபாலனத்துக்கே டயம் சரியா இருக்கு. சிவ சதஸ்லயோ சம்காரம், ரக்ஷணம்னு ஓயாம வேல பாத்துண்டு இருக்கா.
மனுஷாள் என்னடான்னா நாளுக்கு நாள் பெத்துண்டே போறா. அது போறாம ஒத்தருக்கொருத்தர் அடிச்சுண்டு சாகறா. இந்தப்பக்கம் பெத்துண்டே போறா. அந்தப்பக்கம் செத்துண்டே போறா.
என்னோட டிபார்ட்மென்டுல எல்லாரும் ஒவர் டைம் பாக்கறா. எனக்கு ஓஞ்சு போறது. ஒரு நாள் லீவ் போட்டுட்டு கல்யாணியோட ஜாலியா இருக்கலாம்னா முடியல. இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு வேணும்"
"பிரம்மா சொல்றது ரொம்ப சரி. நீங்க மூணு பேரும் பிசியா இருக்கேள். நாங்கள்ளாம் உங்களுக்கு ஸ்ருஷ்டி, சம்ரக்ஷணம், நாசம்னு எல்லா வேலைலயும் உதவியா இருக்கோம், எங்களுக்கும் டயமில்லை"னு கோரசா சொல்றா பஞ்ச பூதங்களும், மத்த தேவாளும். "இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டாகணும் இன்னைக்கு".
"பிரச்னை என்ன, சொல்லுங்கோ"ங்கறார் மகாதேவர்.
'தன்னாட்டம் துடுக்கில்லை, சிவன் சித்தே மெதுக்கு'னு விஷ்ணுவுக்குக் கொஞ்சம் அகங்காரம் உண்டு. "அதாகப்பட்டது, நமசிவாய.."னு விஷ்ணு பேசறார். "நாம்ப ஏற்கனவே ஒழச்சு ஓடாப் போயிண்டிருக்கோம். மத்த தேவாளும் தேஞ்சு போயிண்டிருக்கா. வேலையை பாக்க வேண்டியது தான், இல்லைங்கல, ஆனா பாருங்கோ, நம்ம மூணு பேர் வேலையை முடிச்சப்புறமும் நிறைய வேலை இருக்கே? நம்ம லோக பரிபாலன ஸ்ட்ரேடஜில ஒண்ண மறந்துட்டோம். செத்துப் போனவாளை யார் கவனிக்கறது? அவாளையெல்லாம் வகை வகையா பிரிச்சு ஸ்வர்க்கம், நரகம், அவாந்த்ரம்னு ஒவ்வொரு இடத்துக்கா அனுப்பிச்சு, தர்ம பரிபாலனம், தண்டகம் கொடுத்து எல்லாம் மேனேஜ் பண்ண ஆளில்லை."
"இருக்கிற தேவ கூட்டத்துல ஒத்தருக்கு குடுக்க வேண்டியது தானே?"ங்கறார் நடராஜர்.
"ஒத்தருக்கும் இந்த வேலைல இஷ்டமில்லை. தர்மராஜனுக்கு இந்த உத்யோகம் பிடிக்கலே. நோட்டீஸ் குடுத்து யுகமாப்போறது. நரக லோகத்லயும், அவாந்த்ர லோகத்லயும், ஆபீஸ் வச்சுண்டிருக்கணுமே? ஒத்தருக்கும் பிடிக்கலை"னார் பிரம்மா.
"பாயிண்டு"ங்கறார் சிவபெருமான்.
"அதான் பிரச்னை!"ங்கறார் தசாவதாரப் பெருமாள்.
"இது வெறும் லேபர் பிராப்ளம்"னுட்டு தொண்டைய கனச்சுண்டார் நீலகண்டர். "இனிமே இது நாலாவது தேவதொழிலா இன்னிலேந்து முக்யத்வம் கொடுத்தாக வேண்டியது. இந்த வேலையைச் செய்யறவருக்கு மும்மூர்த்திகளுக்கு ஈடான பவரும் ரைட்டும் உண்டு. ம்ருத்யூ பத்தின முழு பிராபிட் அன்ட் லாஸ் பொறுப்புண்டு. த்ரிலோக பரிபாலன எக்சகியூடிவ் மேனேஜ்மென்ட்ல அவா ஒத்தர். இப்படி ஒரு வேகன்சி நோட்டீஸ் போடுங்கோ"னு பிரம்மாகிட்டே சொல்றார். "ஆம்பிளை தேவாள்ளாம் அப்ளை பண்ணலாம்".
"அருமையான ஐடியா"னார் விஷ்ணு. அவருக்கு ஆத்துக்குப் போகணும்.
"சரி, இப்பவாவது யாராவது எடுத்துக்கறாளான்னு பாப்போம்"னு சொல்லிட்டு பிரம்மா எழுந்துண்டார். "சபை இன்னிக்கு முடிஞ்சுது"னு அவர் சொன்னதும், முப்பது முக்கோடி தேவர்கள்ள ரெண்டு கோடி பேர், ஆபீஸ் நோட்டீஸ் போர்டுக்கு ஓடறா. புது வேகன்சிக்கு அப்ளை பண்ணலாம்னு. மும்மூர்த்திக்கு இணையான ஜோலின்னா ஆசை வராதா?
அப்படி ஓடிப் போய் பாத்தவாள்ள, என்னடாது தேவாள்ளாம் எங்க ஓடறானு பாத்து ஸ்தம்பிச்சுப் போன மனுஷ்யன் ஒருத்தனும் இருந்தான். அவனைப் பத்தி சொல்றதுக்கு நெறய இல்லைன்னாலும், அப்புறம் சொல்றேன். கோவில்ல வெயிலுக்காக ஒதுங்கினவன், 'என்னடா எல்லா தேவாளும் எங்கே ஓடறானு போய் பாத்துட்டு வருவோம்'னு அவா பின்னாடியே ஓடினான்.
தேவராஜ்ய சபைல இப்படி இருக்கறச்சே, மனுஷ்ய ராஜ்யத்துக்கு வருவோம்.
    பிரதாபன், பிரதாபன்னு ஒரு ராஜா. மனுஷ்ய ராஜா. அவனோட வீரமும் தீரமும் இந்திரனுக்கு இணையாக்கும். புத்திலயோ மகாவிஷ்ணு. தர்ம பரிபாலனம் பண்றதுல சிவ சமானம். நாட்டு மனுஷாள்ளாம் பிரதாபன் மாதிரி ஒரு ராஜா, ரகு குலத்துல கூட இல்லம்பா. அத்தனை பிரசித்தம், அத்தனை ராஜவ்ருதம்.
இந்த பிரதாப மகாராஜாவுக்கு ஒரே ஒரு குறை. தானும் ஒரு தேவனா இல்லையேன்னு.
கோவில்ல தேவர்களோட பேசும்போதும் விளையாடும் போதும், அவா தேஜஸப் பாத்துட்டு மனுஷ ராஜனுக்கு ரொம்ப நாளா ஆதங்கம். தான் ஏன் ஒரு தேவனாகக் கூடாதுன்னு. வயசும் ஏறிண்டே போறது, ஆனா தேவாள மாதிரி நித்யத்வமில்லைன்னு தெரிஞ்சு, நொந்து போயிடறான். டயம் கிடைச்சப்பல்லாம் தேவாள் கிட்டயும், ஒரு சமயம் மகாவிஷ்ணு கிட்டயும், கேட்டுப் பாத்துட்டான். அவா என்னடான்னா, "தேவனாறது, மனுஷ ஜன்மத்துலந்து ப்ரொமோஷன் மாதிரி கிடையாதுப்பா.. உனக்கு வாச்சது அவ்ளோதான்!"னுட்டா.
இந்தப் பிரதாபனுக்கு, பிரதாபகுமாரன் பிரதாபகுமாரன்னு ஒரு புத்ரன். யுவராஜன். அவனுக்கு இருபது வயசாறது. பாக்கறதுக்கு மும்மூர்த்திகளையும் சேத்து வச்சா மாதிரி அப்படி ஒரு களை. நல்ல ஒயரம், தோள் ரெண்டும் மேரு மலை மாதிரி இருக்கு. கண்ணில தீட்சண்யம், பாக்கறவாளையெல்லாம் கட்டிப் போடறது. பேசினா அத்தனை ம்ருது, அத்தனை ஞானம். வீரம்னா, தேவாள் கூட அவன் பக்கம் வர மாட்டா, அத்தனை வீரம்.
வயசாயிடுத்து, பையனை ராஜாவாக்கிட்டு வீஆர்எஸ் வாங்கிப்போம்னு பிரதாபராஜா நினைக்கறார். மந்திரிகளையெல்லாம் கூப்பிட்டுக் கேக்கறார். எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். "மொதல்ல பிள்ளையாரைப் பாத்துப் பேசிட்டு வந்துடுங்கோ, பட்டாபிஷேகத்தை ஆரம்பிச்சுடலாம்"னு எல்லாரும் சொல்றா.
உடனே பிரதாப ராஜா, பிள்ளையாரோட செகரடரிக்கு அபாயின்ட்மென்ட் கேட்டு ஒரு சந்தேசம் அனுப்பிச்சுட்டு குமாரனோடயும், தன்னோட பரிவாரத்தோடயும், கோவிலைப் பாக்கக் கிளம்பினார்.
கோவில்ல வந்து இறங்கினா, பிள்ளையார் ஏதோ மீட்டிங்க்ல இருக்கார். சொன்ன டயத்தைத் தாண்டி பிரதாபராஜா காத்துண்டிருக்கார்.
பொறுமை போன பிரதாபகுமாரன், "அப்பா, நான் சுத்திப் பாத்துட்டு வரேன்"னு கிளம்பறான். ஒவ்வொரு பிராகாரமா சுத்திண்டிருக்கான். பர்ணசாலை, யாகசாலையெல்லாம் தாண்டி ந்ருத்யசாலைல சப்தம் கேக்கறது. ஜல், ஜல்னு சலங்கை சத்தம். யாரோ ஆடறா மாதிரி தோணறது அவனுக்கு. மொள்ள நுழைஞ்சு பாக்கறான். அங்க ஒரு தேவ பொண்ணு தன்ன மறந்து நாட்யமாடிண்டிருக்கா.
அவளைப் பாத்ததும் அவன் மனசு, எலக்ட்ரிக் ட்ரெயின் ஓடற மாதிரி அடிச்சுக்கறது. அத்தனை அப்சரஸ்களையும் அவ கால்ல கட்டிப் போடலாம், அத்தனை அழகா இருக்கா. அவளோட கண் ரெண்டும் அஸ்திரம் மாதிரி அங்கேயும் இங்கேயும் பாயறது. பாயறச்சே இவனைப் பாத்துட்டு சிலையா நிக்கறது.
பிரதாபகுமாரன் ஒண்ணும் நோஞ்சானோ நொள்ளையோ இல்லையே? அவனும் அவளுக்கேத்த புருஷோத்தமன் மாதிரி கம்பீரமா சிம்மராஜனாட்டம் நின்னுண்டிருக்கான்.
அவ என்னடான்னா, இடுப்பில செருகிண்டிருந்த கச்சையும், தாவணியும் விழுந்தது தெரியாம, இவனைப் பாத்துட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நிக்கறா. ஒண்ணும் பேச்சே காணோம்.
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இலனு தாடிக்காரப் பொலவர் சொல்லலியோ?
நேரம் போனதே தெரியலே... நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.
மிச்ச கதை ➤
வகை
அசுவத்தாமன் கதைகள்,
காதல்,
நெடுங்கதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அதகளம்...
பதிலளிநீக்குரொம்ப பிடிச்ச சப்ஜெக்டாச்சே( வாருவதற்கு)... கலக்கிட்டிங்க ...
பதிலளிநீக்குஇவ்வளவு வெக்காபலரிக்கு நிறைய பயிற்சி வேணுமே... ஸ்டேட்ஸ்ல மாறுவேஷத்தில பண்ணிட்டிருக்கிங்களோ என்னவோ..:))))). அதுக்கும் அங்க நல்ல கிராக்கின்னு சொல்றாங்களே....
கோவிலிலே காத்துண்ட்ருக்கோம். சீக்கிரம் வந்து ப்ரவசனத்தை ஆரம்பிங்கோ!
பதிலளிநீக்குஅக்கடான்னு எத்தனை நாழிவேணா கேட்டுண்ட்ருக்கலாம். அப்படியாக்கும் நடை:-)
கோவிலேயே காத்திருக்கிறேன்... சீக்கிரம் வாங்கோ ஸ்வாமி....
பதிலளிநீக்குஅடக்கடவுளே..
பதிலளிநீக்குஆதெள கீர்த்தனாரம்பத்துலருந்து படிச்சுட்டேன். ப்ரவசனம் ஜோராப் போயிண்டிருக்கு. காத்துண்டிருக்கோம். ஆமா... சுண்டல் தருவேளோல்லியோ?
பதிலளிநீக்குகிளம்பிட்டாருய்யா! இன்னமும் ஒரு ரவுண்டு சிரிக்க வேணும்.. காரணீஸ்வரர் கோவில் நல்ல ஜாயிண்ட்டுங்க. உம்ம்...
பதிலளிநீக்குசீக்கிரமா அடுத்ததையும் போடும். நேக்கு பிரதோஷம் வந்துடுத்த்ன்னா டயம் கிடைக்காது. பிரகாரம் சுத்தணமோல்லியோ!
:))
பதிலளிநீக்குபின்னூட்டங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஹிஹி பத்மநாபன்.. இந்தியா திரும்பினா பொழப்புக்கு ஒரு வழியிருக்கு போலிருக்கே?
கோவில்ங்கறது எதுக்கு இருக்கு? கீதா மாமியைக் கேட்டா சிலாகிச்சு சொல்லுவார். கிராமத்துக் கோவிலையெல்லாம் எடுத்து நடத்தணும்னு ரொம்ப ஸ்ரத்தையா எழுதுறா மாமி//
பதிலளிநீக்குசிரிச்சுச் சிரிச்சு வயித்து வலி. நல்ல நடை, யார் கிட்டே பயிற்சி? தினமும் சேங்காலியோட காசெட் போட்டுக் கேட்பீங்களோ!
ஆனால் பாருங்க இதிலேயும் உண்டியல் இல்லை. போனதரமே சொன்னேன். அப்புறம் எப்படிப் பிழைக்கறதாம்? )))))
ஹிஹிஹி, நான் இன்னும் மெயின் சப்ஜெக்ட் எழுதவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே அதை வைச்சு ஒரு பதிவு போட்டாச்சு. செம ஃபாஸ்ட்! :)))))
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குநேரம் போனதே தெரியலே... நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.
//
இந்தப் பாகத்தை முடித்த விதம் அருமை. இரசித்தேன்
இடுப்பிலே செருகிண்டிருந்த கச்சை..?
பதிலளிநீக்குஅட்டகாசமான நடையில ரொம்ப சீக்கிரம் முடிஞ்சா மாதிரி ஆச்சு சார்!
பதிலளிநீக்குஎதிர்த்தார்ப்போல உட்கர்ந்து உபன்யாசம் பண்றா மாதிரி இருந்தது.
பத்துஜிக்கு என்ன சொன்னீங்க.. இந்தியா வந்தா ஒரு பொழப்பு இருக்கா... இதை அங்கேயே பண்ணினீங்கன்னா டாலர்ல வாங்கலாம் ஓய்!! :-))
நேத்தே வந்தேன் , பிரசங்கத்துல பாதியிலேயே போயிட்டேன் - ஜோலியைப் பாக்க. ஆனா நெனப்பு முழுக்க அந்த தேவ பொண்ணு நாட்டியம் தான்.
பதிலளிநீக்குஅடிக்கடி தேவலோகம் விசிட் அடிச்சுட்டு வருவீங்களோ?