2011/08/24

கோமதீ



    "அரிகாதொ". வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி சொல்லிவிட்டு, பதில் நன்றி சொல்ல அவள் குனிந்த போது மார்பு தெரிகிறதா என்று பார்த்தான்.

"மடா இகிமாசு". திரும்பி வருவதாகச் சொல்லி அவள் நடந்தபோது, நடைக்கேற்றபடி அசைந்த இறுக்கி உயர்ந்த அளவான பிட்டங்களின் கவர்ச்சியில் கண்ணையும் மனதையும் செலுத்தியபடி, விசாலமான சொகுசு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். இவளை இங்கேயிருந்து கடத்திக் கொண்டு போனால் நன்றாக இருக்குமேயென்று நினைத்துக் கொண்டான்.

அமெரிகாவிலிருந்து பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து இங்கே விற்பது போல், எதிர்த்திசையிலும் செய்யலாமென்று கூட்டாளியிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்தான். மசாஜ் பெண் திரும்பி வரும்போது எப்படியும் அவளைத் தொட்டுவிட வேண்டும் என்று காத்திருந்தான்.

கைகளில் ரப்பர் கட்டை போல் ஏதோ எடுத்துக்கொண்டு திரும்பி வந்தவள், புன்னகைத்துவிட்டு, அவன் முகத்தில் நறுமணம் வீசும் துண்டைப் போர்த்தினாள். பின்னர் தலையைச் சிலிர்த்துக்கொண்டு சற்றும் எதிர்பாராவிதமாக ரப்பர் கட்டையினால் அவன் முகத்திலும் மண்டையிலும், மாற்றி மண்டையிலும் முகத்திலும், அறுபது மைல் வேகத்தில் அடித்தாள். வலியால் துடித்தாலும், அவன் வாய் திறக்க முடியாதபடி அசுரவேகம். கைகால்கள் பொம்மலாட்டம் ஆட, அரை நிமிடத்துக்குள் முகமெல்லாம் வீங்கி மூச்சு நின்றுபோய் இறந்தான், சொட்டு ரத்தம் சிந்தாமல். கத்தியினிறி ரத்தமின்றி யுத்தம்.

செப்டம்பர் 11க்கு பிறகு உலகின் பெரும்பாலான விமான நிலையங்களில் உயிர் போகிற நெருக்கடி என்றால் கூட அவசரமாக ஒன்றும் செய்ய முடியாது. நகோயா விமான நிலையத்திலும் இதே தொல்லை தான். போதாக்குறைக்கு அவன் இருந்ததோ முதல் வகுப்புப் பிரயாணிகளுக்கான தனி ஓய்வறை. இறந்து போயிருந்தால் கூட உண்மை தெரியவர நேரமாகும். அதுவும் பார்ப்பதற்கு வெளியூர் போல் தெரிந்தால் பக்கமே வரமாட்டார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து யாரோ ஒரு பயணி சந்தேகத் தகவல் சொல்லி விவரம் தெரிந்ததும், நெரிசலாய் கூட்டம். விமான நிலையக் காவல்துறை, விமானப் பணியாளர், மருத்துவ உதவிக்குழு என்று எல்லோரும் ஓடி வந்தனர். இறந்தவன் ஜப்பானியனோ, அமெரிக்கனோ, அதுவுமில்லாத வெள்ளைக்காரனோ இல்லை என்று தெரிந்ததும் சற்றுத் தயங்கினர். "இன்டியன் தெசு" என்று இழுத்தாள் ஒருத்தி. இன்னொருத்தி டி-பிப் கொண்டு வந்து உனக்காச்சு எனக்காச்சு என்று அவன் மார்பில் அடி மேல் அடியாய் அடித்தாள். அவன் நகராத அம்மியாய் இருந்தான். தற்போதைக்கு யாரென்றுத் தீர்மானமாகாத, அனாதைப்பிண அம்மி.
**

    விமான நிலையத்துக்குள் ஒன்றும் புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். எப்படி இங்கே வந்தேன் என்று மறந்து விட்டது. ஏதோ உருப்படாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சுமார் முப்பதடி தூரத்தில் அவளைப் பார்த்தேன். முகம் சரியாக விளங்காத ஒரு பெண். கூட்டத்தில் தனியாகத் தெரிந்தாள். நான் அவளைப் பார்த்தது தெரிந்தும் பார்வை விலக்காமல், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் நகர்ந்தேன். எங்கேயாவது பார்த்திருக்கிறேனா? ஏன் என்னை வெறிப்பது போல் பார்க்கிறாள்?

என்னருகே கலவரம். போலீஸ்காரர்களும் நர்ஸ், மருத்துவர் என்று பலரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்க்க நினைத்துப் பின்தொடர்ந்தேன். மறுபடி அவளைப் பார்த்தேன். எனக்கு இருபதடி தூரத்தில், என்னையே பார்த்தபடி நின்றிருந்தாள். கோபம் வந்தது. 'ஏன் இப்படி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்கலாமென அவளை நோக்கி நகரத் தொடங்கியபோது, நான் திடுக்கிடும்படி அவள் வலது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.
**

    வெளிநாட்டுப் பயணிகள் வந்திறங்கும் ஒஹேர் விமான நிலையத்தின் ஐந்தாவது நிறுத்தம். லன்டன், ப்ரேங்பர்ட், ஆம்ஸ்டர்டேம், ரோம் என்று ஐரோப்பிய நகரங்களிலிருந்து நேரத்துடனும் நேரம் கடந்தும் சொல்லிவைத்தாற்போல் ஒன்றாக வந்துத் தரைதொட்ட விமானங்களில் வந்த பயணிகள், பரிசோதனைகளை முடித்துக் கொண்டு உள்ளூர் விமானமேறவோ, சிகாகோவில் சுற்றுலாவவோ, வாடகை வண்டி பிடித்து வீடு போய்ச்சேரவோ, எலிகள் போல் கூட்டம் கூட்டமாய் வெளிவந்தனர். சூட்கேஸ் சுமக்கும் எலிகளை வரவேற்கக் காத்திருந்தது இன்னொரு எலிக் கூட்டம். இந்த நெருக்கடியில் தகாத செயல் செய்யத்துணியும் சிறுநரிக் கூட்டம். அவன் அந்தச் சிறுபான்மைச் சிறுநரிகளில் ஒருவன்.

ப்ரேங்க்பர்டிலிருந்து வந்திருந்த விமானப் பணிக்குழு வெளிவரக் காத்திருந்தான். கையில் கால் கிலோ போதைப்பொருளுடன். விக்டோரியா பவுன்டன், மிசிகன் வழி, சியர்ஸ் டவர் என்று பலவித வண்ணப்பட முகப்புடன், 'ஸ்வீட் சிகாகோ' என்ற வார்த்தைகள் செதுக்கப்பட்ட, அட்டைப்பெட்டியினுள் சிறு சாக்லெட் பொட்டலங்களில் கோகெய்ன்.

விமானப் பணிக்குழுவிலிருந்து வரும் இரண்டாவது பைலட்டிடம் பெட்டிகளைக் கொடுக்க வேண்டியது அவன் வேலை. முதல் பைலட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு வருவது கூட்டாளி மிகேலின் வேலை. தொலைவில் இரண்டாவது பைலட் வருவது தெரிந்ததும் மெள்ள நடந்து, அன்னியச் செலாவணி விற்பனைக்கூடத்தைக் கடந்து, மெக்டானல்ட்ஸ் எதிரே இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான். பைலட் வந்து சேர பத்து நிமிடமாவது ஆகும். அமரும்போது அண்மையில் நின்றிருந்த இருவரையும் பார்த்தான்.

பட்டுக்கரை வேட்டி சட்டையணிந்து நெற்றியில் விபூதி குங்குமத்துடன் கொஞ்சம் வயதானவன் போலிருந்தான் ஆண். ஓரளவுக்கு நேர்த்தியான சின்னாளப்பட்டு புடவையும், கழுத்தில் மணித்தங்கம் சேர்த்தப் புத்தம் புதிய பளிச் மஞ்சள் கயிறும், நெற்றியில் நல்ல சிவப்பில் குங்குமப்பொட்டும் அணிந்து அவனுடன் ஒட்டிக்கொண்டு, இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். இருபது கூட சொல்லமுடியாத வயதில் இத்தனை வாளிப்புடன் சாதுவாக இருக்கும் அந்தப் பெண்ணை இன்றைக்குப் போட்டால் நன்றாக இருக்குமே என்று விகாரமாய் நினைத்தான்.

அவர்களிருவரையும் இங்கிருந்தே கவனித்தவன், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் கண்கள் தற்செயலாய் இவன் பக்கம் வந்தபோது, தேடிக்கலந்து புன்னகைத்தான். மருண்டு போய் முகம் திருப்பிக்கொண்டவளின் சற்றே விலகிய முந்தானையில் தெரிந்த செழிப்பான மார்பையும் பிளவையும், கண்ணால் பார்த்து மனதால் தொட்டான். அவன் கவனிப்பது தெரிந்தோ இயல்பாகவோ மார், தலை, முகம் என்று எல்லாவற்றையும் புடவைத் தலைப்பால் சுற்றிக்கொண்டவளின் கண்களில் தெளிவான அச்சத்தைப் பார்த்தான். இரையின் மருட்சி. 'எங்கே இந்த சோதாப்பய?' என்று நினைத்தபோது எதிரில் வந்து உட்கார்ந்தான் பைலட்.

"என்ன சாப்பிடுகிறாய்?" என்று கேட்டான் பைலட்டிடம். 'பிக் மேக் அன்ட் கோக்' என்று பதில் வந்தால் பணம் சரியாக இருக்கிறது, சரக்கு தரலாம் என்று பொருள். 'பிக் மேக் அன்ட் வாடர்' என்றால் சரக்கு தர வேண்டாம் என்று பொருள். பணத்தைச் சரிபார்த்துவிட்டு மிகேல் பதில் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருப்பான்.

"பிக் மேக் அன்ட் கோக்" என்றான் பைலட்.

தன்னிடமிருந்த மூன்று அட்டைப்பெட்டிகளை அந்தப் பைலட்டுக்கு அருகேயிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு சாதாரணமாய் நடந்தான்.

திரும்பிப் போகலாமென்று நினைத்தவன், அந்தப் பெண்ணின் கபடமில்லாத அபரிமித வளைவுகளையும் விறைத்த மார்பையும் மறக்க முடியாமல் உடம்பெல்லாம் பாதரசமாய்ச் சூடேறி, துரிதமாக அவர்கள் எதிரே சென்று நின்றான். அவளைப் பார்த்து, வேண்டுமென்றே வளமான ஆங்கிலத்தில், "ஏதாவது உதவி தேவையா?" என்றான்.

"ஏங்க, ஏதோ கேக்கறாரு பாருங்க" என்றாள் அந்தப் பெண், அருகிலிருந்த ஏங்கவிடம். தேனில் தோய்த்த குரல். அவளை அப்படியே நக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. பொறுமை என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, "நீங்க தமிழா?" என்றான் செயற்கை நட்புடன்.

"ஆமாம், அண்ணே" என்றாள். தமிழ்க்குரல் கேட்டதும் அவள் மருட்சி அகன்றது போல் பட்டாலும் 'அண்ணே'யில் அழுத்தம் அதிகமாகத் தொனித்தது.

"உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?" என்றான் ஆணிடம்.

"அவருக்குக் காது கொஞ்சம் செவிடுங்க; உரக்கப் பேசுங்க" என்றவள், ஒலி கூட்டி "ஏங்க.. ஏதாவது உதவி வேணுமானு கேக்கறாரு பாருங்க" என்றாள் ஆணின் காதருகே.

ஆண் சுதாரித்து,"ரொம்ப நன்றிங்க.. நான் இந்த ஊர்ல ராமர் கோவில் கும்பாபிஷேக வேலைக்கு வந்திருக்கங்க. சிலை செதுக்கி, வண்ணம் பூசறதுங்க. தச்சு வேலையும் செய்வேன். எங்க ப்ளைட்டு ஜர்மனிலே யாரோ தீவிரவாதிங்க வந்துட்டாங்கன்னு ரொம்ப தகராறு பண்ணி அந்தப் ப்ளேன்லந்து எங்க எல்லாரையும் இறக்கிவிட்டாங்க. அடுத்த பிளைட்டுனு தினம் தினம் போய் மூணு நாளைக்கு இடம் இல்லேன்னுட்டு, இன்னிக்குத்தான் எங்களை ஏத்திவிட்டாங்க. பாசையும் தெரியாம, கைல காசும் இல்லாம ரொம்ப சிக்கலாயிருச்சுங்க. எங்களைக் கூட்டிப்போக வரவேண்டியவங்களுக்கு சேதி சொல்லவும் வழியில்லை. ப்ளேனு மாறிடுச்சுனு அனேகமா அவங்களே சேதி தெரிஞ்சுகிட்டு வருவாங்கனு பாத்துக்கிட்டு இருக்கோம். இல்லைனா ஏதாவது டாக்ஸி எடுத்துகிட்டு ராமர் கோயில் தெரியுமானு கேட்டுகிட்டே போவணும்" என்றான்.

"அரோராவா, லெமான்டா, மேற்கு சிகாகோவா? எந்தக் கோவில் சார்?"

"விலாசம் இருந்துச்சு.. இங்கே இப்படி எடுக்குறப்ப நெரிசல்லே எவனோ படுபாவி தட்டி விட்டுட்டான்"

"ஏன் சார், இது என்ன மாம்பலமா, ராமர் கோவில் எங்கேனு கேட்டுகிட்டே போக? உங்களுக்குப் பரவாயில்லைனா என் கூட கார்ல வாங்க. எங்க வீட்ல இன்னிக்கு தங்கிட்டு, நாளை ஒவ்வொரு கோவிலா காட்டி உங்களைக்கொண்டு விடறேன். இருட்டிடுச்சு பாருங்க, குளிர் காலம் வேறே"

"உங்களுக்கு ஏன் அண்ணே வீண் கஷ்டம்?" என்றாள் பெண், சந்தேகத்தைச் சாதுரியமாக மறைத்தபடி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல, தங்கச்சி" என்றான் அழுத்தமாக. "பயப்படாம வாங்க. வீட்ல எங்க அக்கா இருக்கு, எல்லாம் பாத்துக்குவா. வீட்லந்து கோயிலுக்கு போன் பண்ணி விவரமெல்லாம் கேட்டுக்கலாம்" என்றான். "வாங்க சார்" என்றான், ஆணிடம் உரக்க.

அக்கா என்றதும் சற்று அமைதியானாள். இருவரும் அவன் காரில் ஏறிக்கொண்டனர். ஏறக்குறைய உடைந்து போயிருந்த அவர்களுடைய இரண்டு பெட்டிகளையும் காரின் பின்பெட்டியில் போட்டுவிட்டு வந்தான். பின்னால் உட்கார்ந்திருந்தவர்களைக் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தபடி காரைக் கிளப்பினான். "எந்த ஊர் நீங்க?" என்றான் உரக்க.

"சீர்காழி. என் பேர் வைத்திங்க. இவ என் பெண்டாட்டி கோமதி. ஊர் சுவாமிமலை. இப்பத்தான் கல்யாணமாச்சு..ரெண்டாம் தாரம். நீங்க எந்த ஊர்? உங்க பேரென்ன, அண்ணே?"

"நான் மெட்ராஸ் பக்கம், பொழிச்சலூர். பேரு துரையப்பன்" என்றான்.

"என்ன வேலை பண்றீங்க?"

"சாக்லேட்" என்றான். "ஸ்கூல், காலேஜ்ல போய் சாக்லேட் வியாபாரம். வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கும் கொஞ்சம் தரேன்".

"இவளுக்குக் குடுங்க, எனக்கு சாக்லேட் எல்லாம் பிடிக்காது. இவளுக்குத்தான் சாக்லெட் பால் எல்லாம் பிடிக்கும். எனக்கு எல்லாம் பேதியாயிரும்" என்றார் வைத்தி.

"அதனாலதான் அப்படி தளதளனு இருக்காங்க, தக்காளி மாதிரி" என்றான், வேண்டுமென்றே மெதுவாக.

"என்ன சொன்னீங்க?" என்று திரும்பக் கேட்ட வைத்திக்கு பதில் சொல்லாமல் காரைச் செலுத்தினான்.

அரைசெவிட்டுக் கணவன் தலையாட்டுவதைக் கண்ட கோமதி, இனம் புரியாமல் கலவரப்பட்டாள். 'நவசக்தி வினாயகா, உனக்கு ஒரு தேங்கா உடைக்கிறேன், இக்கட்டு இல்லாம காப்பாத்து. அங்காள பரமேஸ்வரி, உனக்கு மாவிளக்கு ஏத்துறேன் தாயே' என்று மனதுக்குள் சொல்லத் தொடங்கினாள்.

அவனோ, 'தக்காளியை ராத்திரியே ஜூஸ் பிழிஞ்சிடறேன்' என்று மனதுள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.
**

►►


6 கருத்துகள்:

  1. பெயரில்லாஆகஸ்ட் 24, 2011

    சிறுகதைன்னு போட்டிருக்கீங்க . வளரும்னு போட்டிருக்கீங்க. ... தொடருங்க

    LK

    பதிலளிநீக்கு
  2. கதை சுவாரஸ்யமாகவும் போகிறது
    கொஞ்சம் பயமுறுத்துகிறபடியும்....
    தலைப்பு கோமதீ யா இல்லை காமத்தீ யா
    கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  3. நல்ல துவக்கம் அப்பாதுரை. ஆமாம் சிறுகதை என்று போட்டிருக்கிறீர்கள் . ஆனால் வளரும் போட்டிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஆகஸ்ட் 25, 2011

    முடிஞ்சுருமோன்னு நினைச்சேன்...தொடரும்..தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. 'நானும்' 'அவனும்' ஒன்றா....? அவனை ஏன் கொன்றார்கள்? நானுக்கு அப்புறம் வரும் அவன் கொசுவர்த்தியா...'சிறு'கதையின் அடுத்த பக்கத்துக்குக் காத்திருப்பதைத் தவிர வழியில்லை!

    பதிலளிநீக்கு
  6. வருக Ramani, எல்.கே, ரெவெரி, ஸ்ரீராம்,..

    வளரும் சிறுகதை எல்.கே (ஹிஹி)

    பதிலளிநீக்கு