2011/08/06

ததாஸ்துக் களிம்பு



1 2 ◀◀முன்கதை

   ப்யாரம்பத்திலே, என்னோட தாமசத்துக்கு ரொம்ப மன்னிப்புக் கேட்டுக்கறேன்.

'என்னடா அசுவத்தாமா இத்தனைத் தாமசம்?'னு கேட்டேள்னா, பத்து நாள் மிந்தி என் ஷட்டகர் ஆத்துக் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். ஆத்து மனுஷா நெறைய வரலே. சமிதாதானம் செஞ்ச பரம்பரைல வந்த பொண்ணு, பாருங்கோ, இப்போ அமெரிக்கால ஒரு வெள்ளைக்காரக் கிறுஸ்தவப் பையனோட பழகிட்டு, பண்ணிண்டா அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கூத்துக்கட்டியடிச்சு, பையனாத்துகாராளையும் சேத்து இங்கயே கூட்டிண்டு வந்துட்டா. இந்தக் காலத்துப் பொண்ணோல்லியோ, ஸ்த்ரீ ஸ்வதந்திரத்தைத் தோள்ல போட்டுண்டுத் திரியறா. அதுக்காக, நம்மாத்துப் பொண்ணாச்சே? விட்டுக் குடுக்க முடியுமோ? "ஷட்டகரே! பையனுக்கு ஒம்ம பொண் மேலே ரொம்பத்தான் ஆசை, பாருங்கோ நம்ம எதிர்க்கயே அவ இடுப்ல தடவறான். போறது விடுங்கோ"னேன். "அசுவத்தாமா, அவாள்ளாம் கோமாம்சம் சாப்டுவாளே?"னார் ஷட்டகர். "அதுக்கென்ன, நாமளும் பிள்ளைக்கறினு நரமாம்சம் சாப்பிட்ட வம்சாவளி தானே, கெடக்கறது விடுங்கோ"னுட்டு கல்யாணத்தை ரசிச்சேன். வெள்ளைக்காரக் கிறுஸ்தவா குடும்பத்தை இப்பத்தான் நேரா இத்தனைப் பக்கத்துல பாத்தேன்.

'இதுக்கா அசுவத்தாமா தாமசம்?'னா, நடந்ததைக் கேளுங்கோ. த்ருஷ்டி மாதிரி ஆயிடுத்து. ரிசப்ஷனுக்கு ஜகஜ்ஜோதியா அலங்காரம் பண்ணியிருந்தா. விஸ்கி லுஸ்கினு மத்யசார பானகம் வெள்ளமா ஓடிண்டிருந்துது. அவாவா ரெண்டு கப்பு எடுத்துக் குடிச்சுட்டு, சிரிச்சுண்டே தையா தையானு டான்சாடறாளா, நான் தேமேனு ஓரமா நின்னு பாத்துண்டிருந்தேன். திடீர்னு சாம்பு சாம்பு சாம்புனு ஒரே சத்தம். யாருடா சாம்புனு பாத்தா, சாம்பும் இல்லே, வேம்பும் இல்லே, இன்னொரு மத்யசார பானகம். சாம்பேனு பேரு, அவ்ளோதான். அந்த சாம்பே பாட்டிலைத் தொறக்கறதே பெரிய வித்யைனு பேசிண்டா. எல்லாமே அதீதமா இருந்துதா, அப்படி என்னதான் விஸ்வகர்மா கலைனு பாப்போமேனுட்டு, பக்கத்துல போய் நின்னுண்டேன். சாம்பே பாட்டிலைத் தொறந்ததும் அதுல காக்குங்கறா பாருங்கோ, அது ஆர்யபட்டா மாதிரி ஆகாசத்துல பறந்து, என்னோட ப்ராரப்தம், அர்ஜுனாஸ்த்ரமா குறிதவறாம என் கண்ணுக்குள்ளே இடிச்சு குத்தி விழுந்து தொலச்சுது. பொன்னுக்கு வீங்கியாட்டம் நேக்கு கண்ணு மூஞ்சியெல்லாம் வீங்கி... அப்புறம் ஆஸ்பத்திரி அவரோகணம்னு போய்... கண்ணைக் கட்டி எங்காத்துல விட்டாப்ல ஆயிடுத்து. நெஜமாத்தான். இந்தச் சாம்பே சங்காத்தமெல்லாம் போறுண்டா சங்கரானு கெடந்தேன். ரெண்டு நாளாச்சு, இப்பத்தான் சித்தத் தேவலை.

ஆத்துல அகர்மன்னா மந்தமா ஒக்காந்துண்டிருக்கச்சே நெறைய பேர் போன் பண்ணா. கதைய முடிக்கலியோன்னா. செலபேர் இந்த மாதிரி நடக்குமானு அசந்து போனா. செலபேர் ரஜினிகாந்த் சினிமாவாட்டம் பேத்தலா இருக்கேன்னா. இருந்தாலும், களிம்பு எங்கே கெடைக்கும்னு கேட்டவா எத்தனை பேருங்கறேள்? அனேகம். அமேரிக்காலேந்து ஒரு மாமி பாருங்கோ, நேக்கு விடாமப் போன் பண்ணி, ரொம்பப் புலம்பி, இந்தக் க்ஷணமே ததாஸ்து களிம்பு வேணும், என்ன செலவானாலும் பரவாயில்லைனு கேட்டா. அவாம்படையானுக்கு வேணும்னு அழுதா. "என்னடீம்மா பண்றது, ஒங்காத்துக்காரருக்கு?"னு சாரிச்சேன்.

"எங்காத்துகாரருக்கு மறை கழண்டுருத்து இல்லேன்னா யாரோ வெனை வச்சுட்டா மாமா. பாருங்கோ, வெவரம் தெரியாத மனுஷரா இருக்கார். தானும் ஒண்ணும் தெரிஞ்சுக்க மாட்டேங்கறார், அடுத்தவாள் பேச்சையும் கேக்கறது கிடையாது. எதுகெடுத்தாலும் தாட் பூட் நாட்டாமைனு எதையோ பெனாத்தி வைக்கறார். தாந்தோணியா கார்யம் பண்ணிட்டு அடுத்தவா மேல பழி போடறார். கேட்டா, எனக்கெல்லாம் தெரியும்னு டம்பம் வேறே. இப்ப ஒண்ணு சொல்லிட்டு அடுத்த நாளே அதுக்கெதுத்தா மாதிரி சொல்றார். பெரிய உத்யோகத்ல வேறே இருக்கார். ஆத்துலயும் ஆபீஸ்லயும் அக்கம்பக்கத்துல இருக்கறவாளையும் கன்னாபின்னானு பேசிட்டு இப்ப ஒருத்தர் கூட இவரை மதிக்கறதில்லே. எங்க ஸ்நேகிதாள்ளாம் என்னைப் பாவமா பாக்கறா. இவரை நம்பி ஒரு பெரிய குடும்பமே இருக்கேனு தெரிய மாட்டேங்கறது. ஆத்துலயும் ஆபீஸ்லயும் அவரை நம்பின எல்லாரும் அல்லாடிண்டிருக்காளாம். ஆத்து மனுஷாளுக்குப் பத்து காசு செலவழிக்கணும்னா பத்தாயிரம் பொலம்பல்... ஆயிரம் தடவை சொல்லிக் காட்டுவார். மனசு வராது. ஆனா, தண்டத்துக்கு நூறு காசு கோவில் உண்டியல்லயும் தெருவுலயும் தானம் பண்ணிட்டு வருவார். பொறுப்பு கிடையாது. ஒரு வெவஸ்தை கிடையாது. எதுக்கெடுத்தாலும் வரட்டு கௌரவம். கோபம். உருப்படியா ஏதாவது பண்ணுனுங்கோன்னா மழுக் மழுக்னு என்னமோ சொல்லிட்டு எங்கயோ காணாம போயிடறார். விட்டிருந்த சிகரெட் இப்போ பிடிக்க ஆரமிச்சுட்டார். போறாததுக்கு இப்போ எங்கப் பாத்தாலும் கடன். தாங்க முடியாத கஷ்டம் ஆத்துல. கேட்டா, யாரும் வாங்காத கடனையா நான் வாங்கிட்டேன்? என்னோட பூர்வீகக் கடன் என் மேலே விழலையா? என்னோட கடனை அடுத்த தலைமுறை கட்டிப்பானு உளறிண்டிருக்கார். தனக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சுண்டிருக்கே தவிர, அம்பது வயசானாலும் இது மகா அசத்து மாமா. மக்குப் பிளாஸ்திரி. மரமண்டை. மண்டூகம். அஜாமேளம். எக்கச்சக்கமா மாட்டிண்டு நாளைக்கு எங்க எல்லாரையும் ஒட்டுமொத்தமா நடுத்தெருவுல நிக்கவச்சுடுமோனு ரொம்பப் பயமா இருக்கு. ததாஸ்துக் களிம்பு தடவினா சரியாய்டும்ங்கறாளே? வாங்கித் தருவேளா? எங்க கிடைக்கும்? பெரிய மனசு பண்ணி ஒத்தாசை பண்ணுங்கோ"னு ரொம்ப நொடிச்சுப் போய்க் கேட்டா பாருங்கோ, நேக்கே தாங்கலை.

ததாஸ்துக் களிம்பை நானா கைல வச்சிண்டுருக்கேன்? "மக்குபிளாஸ்திரி மானங்கெட்டவன்னு நன்னா லக்ஷார்ச்சனை பண்றடிம்மா. ஆத்துக்காரானா சித்தே இப்படி அப்படி இருப்பா. அழாதேடீம்மா கொழந்தே. அப்படி வாச்சது ஒன்னோட அதிர்ஷ்டம்னு நெனச்சுக்கோ. நோக்கென்ன கொறை சொல்லு? வெள்ளை வெளேர்னு பெரீய வீடு, மாளிகையா மின்றது. தும்மலைப் பிடிச்சுக்க ஆள் சேவகம். நன்னா அங்கே இருந்துக்கோ. ஊரைச் சுத்து. அடுத்தவா ஏச்சுலயும் ஆத்துக்காரர் அசட்டுத்தனத்துலயும் நோக்கென்ன ஆச்சு? நாய்க்கு நிக்க ஒழியலேனு நீ உன் பாட்டைக் கவனிச்சுண்டு சந்தோஷமா இரு. நீ பொலம்பறதுலே தர்ம ஞாயமே கிடையாதுடிம்மா. ஏன்னு கேளு. நோக்கு அவனைப் பிடிக்கலேன்னா அடுத்த க்ஷணமே, 'உதவாக்கரை படவா, போய்க்கோடா, டாடா'னு நீ வெளில கெளம்பிப் போய்டலாம். ஆனா ஒங்காத்துகாரரை வச்சுண்டு இன்னும் ஒண்ணரை வருஷம் மேய்க்கணுமே மத்தவாள்ளாம்? அவா படப்போற கஷ்டத்தையெல்லாம் பாத்து நீ சந்தோஷப் பட்டுக்கோடிம்மா. ஒன் பேரென்னடீம்மா சொன்னே? மிசலா? இதுக்கெல்லாம் களிம்பு வேண்டாம் கேட்டியோ? நன்னாருடி கொழந்தே"னு சமாதனமாச் சொல்லிப் போனை வைச்சுட்டேன்.

நன்னா களிம்பு கேட்டா போங்கோ. நீங்க என்ன கேட்டேள்? ..வந்தாச்சு.. ராமலிங்கம் கதைக்குக்கு வந்தாச்சு. சித்தே இருங்கோ, கால் சிட்டிகை... பொடிப் பழக்கத்த விட முடியலை மாமி.

வக்ரதுண்டரைப் பிடிக்கப் போய் வானரமாயிடுத்தேனு ராமலிங்கம் வருத்தப்பட்டார். அவர் இப்படி நெனக்கறச்சே, அந்த சதாசிவம் மனசுல என்ன ஓடித்து? அவருக்கும் இந்த களிம்புனால ஆப்த ஸ்னேகம் அழிஞ்சு போறதேனு இருந்துது. ஆனா அது வேற மாதிரி ஆதங்கம்.

'ஒரு லெவலுக்கு மேலே போயாச்சு'னு சொல்வா பாருங்கோ, அதுமாதிரி ஆயிடுத்து இங்கே. பால்ய ஸ்னேகிதத்தினால கெடச்ச உசிதமான பலன்களை விட, அனுசிதமான பயங்கள் ஜாஸ்தியாய்டுத்து சதாசிவத்துக்கு. தன்னோட பூர்வீகம் எல்லாம் தெரிஞ்ச ராமலிங்கம், எங்கே தன்னை காமிச்சுக் கொடுத்துவானோனு ஒரு பயம் நாகசர்ப்பமாட்டம் அவர் மனசுல படமெடுத்து ஆடித்து. அதுக்கு மேலே சபலம். 'களிம்புனால இன்னும் பலனுண்டோ? எங்கே தான் மட்டும் அனுபவிப்பானோ?'ங்கற சந்தேகம். விசாரம். பொறாமை. லோபம். வித்தேகம். பேராசை.

ஒரு வியாபாரத்துனால இத்தனை நாசம் தோணுமா? தோணும். இது விசித்ர வியாபாரம் இல்லையோ?

களிம்பை வச்சுண்டு அவா என்ன வியாபாரம் பண்ணினா? பழைய பாத்ரத்துக்கு பேரீச்சம் பழமா கொடுத்தா? இல்லையே? புதுப் பாத்ரம்னா கொடுத்தா? சுத்தாசயம், அதாவது தெளிவான மனசாட்சினா கொடுத்தா? வெள்ளைக் காகிதத்துல கன்னா பின்னானு கிறுக்கிட்டு, ஜீபூம்பானு சொன்ன உடனே வெள்ளைக் காகிதமாயிட்டா எவ்ளோ நன்னாயிருக்கும்? ஒரு திருட்டோ புரட்டோ அழிச்சாட்டியமோ பண்ணிட்டோம்; அதனால லாபம் வந்தாக் கூட மனசாட்சினு ஒண்ணு உறுத்தறதோன்னோ? சாதாரண சில்லறைத் திருடனா... பிக் பாக்கெட்டுக்காரனா இருந்தாலும் சரி, பெரிய ஸ்பெக்ட்ரம் திருடனா... புரட்டல்காரனா இருந்தாலும் சரி, அவாவா செஞ்ச நீச கார்யங்களை, பாவம் புண்ணியங்கற நம்பிக்கை இரண்டாம் பட்சம் கெடக்கு விடுங்கோ, செஞ்ச நீச கார்யத்தோட எண்ணமே வேரோட அடியப் பிடிரா பாரதபட்டானு மறந்து போயிடுத்துன்னா... அது எத்தனை நிம்மதி பாருங்கோ! மனசாட்சியோட தொந்தரவே இல்லேன்னா எத்தனை ச்ரேஷ்டம்! இல்லையா பின்னே? அதுவும் தகாத கார்யம் பண்ணினோங்கற எண்ணமே இல்லாம போனா, அந்த நிம்மதிக்கு என்ன வெலை? அதுக்கு வெலைதான் உண்டா?

அதைத்தானே வியாபாரம் பண்ணினா சதாசிவமும் ராமலிங்கமும்? அடுத்தவாளோட கச்சரமான மனசை வாங்கிண்டு பதிலுக்கு நிர்மால்யத்தை வித்தா என்னாச்சு? வித்தவாளோட நிம்மதி போயிடுத்து. கச்மலத்தைக் கழட்டித்தானு கேட்டு வாங்கிண்டவா கைல என்ன இருக்கும்? யோசிச்சுப் பாருங்கோ. இது சாதாரணமா தோணினாலும் மகா வேதாந்தமாக்கும். ஆசைக்கு விலை நிம்மதிங்கறதை நன்னாப் புரிஞ்சுண்டோம்னா, ஆண்டவனே வேண்டாம் தெரியுமோ?

ராமலிங்கத்தோட நிம்மதி எப்போ குறைய ஆரம்பிச்சுது? ஒரு பாவகார்யம் மறந்து போகணுங்கறதுக்காக மொதல் தடவையா அந்தக் களிம்பை ஆப்தனுக்குத் தடவிக்க கொடுத்தாரே, அந்தக் க்ஷணத்துல நிம்மதி தொலஞ்சு போக ஆரம்பிச்சுது. இவா ரெண்டு பேரும் லோகத்துக்கு களிம்பு தரேன் பேர்வழின்னுட்டு தங்களோட நிம்மதியையாக்கும் கூறு கூறாப் போட்டு, பணங்காசு கொடுத்தவாளுக்கு வித்தா.

ராமலிங்கமாவது பூர்வீகமா யோக்யமா இருந்தார், அமெரிகா மிசல் மாமியோட ஆத்துக்காரர் மாதிரி மூளை கெட்டுப் போய் இந்தத் திப்பிசத்துல மாட்டிண்டு முழி பிதுங்கினார்னு சொல்லலாம். சதாசிவத்தோட நிம்மதிக்கென்ன கொறச்சல்? அவர்தான் களிம்பைப் பூசிண்டு, சாயந்த்ரம் ஆபீஸ்லந்து வரச்சே சக்கரையும் ரவாவும் வாங்கிண்டு வாங்கோன்னு சொன்னா ஆத்துக்காரர் அதை மட்டும் மறந்துட்டு வரதில்லையா அதுமாதிரி, நீச கார்யத்தை மட்டும் மறந்து சந்தோஷமாத்தானே இருந்தார்? சதாசிவம் எதுக்காக பயந்தார்? உள்ளுக்குள்ள இருக்குற அழுக்கை வேணும்னா களிம்பு மறைக்கலாம். ஆனா அந்த அழுக்கு வெளிலயும் நாறுமே? அந்த நாத்தம் எங்கேந்து வரதுன்னு ராமலிங்கத்துக்குத் தெரியுமே? அதான் பயம்.

ராமலிங்கத்துக் கிட்ட பயந்த சதாசிவம், அன்னிக்கு ராத்திரி ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ராமலிங்கத்தை ஆத்துல பாத்துட்டு போயிடறதுன்னுட்டு முடிவு பண்ணிண்டார்.

ராமலிங்கத்துக்கோ தன்னோட ஆப்தன் இப்படி மாறிட்டானேன்னு ரொம்ப விசாரம். என்ன பண்றது? வானரத்துக் கைலந்து மாலையை எப்படியாவது வாங்கியாகணுமே? வருத்தமாவும் யோசனையாவும் வெளில வந்தார். பேசாம சதாசிவத்தைக் குத்திக் கொன்னுடலாமானு தோணித்து. எப்பேற்பட்ட அதிபாப சித்தம்? சட்னு மனசைக் குலுக்கி மேலே பார்த்தார். கடம்பவனேஸ்வரர் கோவில் கோபுரம் தெரிஞ்சுது. முருகன் சன்னதிக்குப் போய் எத்தனை நாளாச்சுனு நெனச்சுப் பார்த்தார். தெனம் கோவிலுக்குப் போயிண்டிருந்தவன், இப்பல்லாம் மாசத்துல ஒரு தடவை கூட போறதில்லியேனு நெனச்சுண்டார். எல்லாம் களிம்புனால வந்த சாபம்னு தலைல அடிச்சுண்டார். 'முருகா! தோ வரேன்'னுட்டு கோவிலைப் பாக்க நடந்தார். மணி நாலு கூட ஆகலை. வழில ஆத்துல கால் கை அலம்பிண்டு, நன்னா விபூதியைக் குழைச்சு மூணு வரி நெத்திலே திட்டில்லாம தீர்க்கமா இட்டுண்டார். திருப்புகழ் புஸ்தகத்தை எடுத்துண்டு வெளில வரச்சே சுலைமானைப் பாத்தார்.

"என்ன பாய்?"

"ஒண்ணுமில்லே ராம்சாயிபு. என் கடைசிப் பொண்ணு ஆலியாவுக்கு நிக்காஹ் அமைஞ்சிருக்கு தெரியுமில்லியா? நாளைக்கு காலைல பத்து மணிக்கு நிக்காஹ், பொறவு விருந்து, இன்ஷா அல்லா. அவசியம் நீங்க வந்து ஆசி வச்சுட்டுப் போவணும்"

"அதுக்கென்ன பாய், வந்தாப் போச்சு! கூப்டதுக்கு ரொம்ப சந்தோஷம்."

"சதாசாயிபு இல்லியா?"

"இல்லியே பாய்... அவன் இன்னிக்கு மெட்ராஸ் போறதா சொன்னானே? ஏதாவது உதவி வேணுமா?"

"ஒண்ணுமில்லே. இன்னிக்கு விருந்தாளிங்க வராங்க. அவர் வீட்ல இடம் தரதா சொன்னாரு அதான்.. "

"அப்படியா? மறந்து போயிருப்பான். நம்மாத்துல வேண இடம் இருக்கேப்பா? வந்துத் தங்கிக்கச் சொல்லு.. தாராளமா?"

"ரொம்ப நல்லது. இப்படித் திண்ணைல படுக்கச் சொல்றேன்"

சுலைமான் கெளம்பிப் போனதும் ராமலிங்கம் வேகு வேகுனு கோவிலுக்கு நடந்தார். 'முருகா முருகா'னு நெத்தில பொடேல்னு அடிச்சுண்டார். கொலை பாதகத்தை மனசால நெனச்சுட்டேனே? நெனச்சாலே பிரம்மஹத்திதானோ? கோவிலுக்குள்ளே நுழையறப்பவே தொவண்டு போனார். சன்னதிலே முருகன் சிரிச்சுண்டிருக்கான். ராமலிங்கம் முருகனைப் பாத்ததும் அப்படியே உருகிப் போய் அழுதார். மறுபடியும் கன்னத்துல நன்னா மடேல் மடேல்னு நாலு அறை விட்டுண்டார். 'முருகா, முருகா என்னை இந்தக்ஷணமே கூட்டிண்டிருடா. உன்னோட சேவல் கொத்தற மாதிரி ஒரு புழுவா இருந்துட்டுப் போறேன். என்னை ஏத்துக்கோ'னு கதறினார். உருக உருகத் திருப்புகழ் சொன்னார்.
   'நினதுதிருவடி சத்திமயிற்கொடி நினைவு கருதிடு புத்திகொடுத்திட'
   'திறற்கருங் குழலுமையவ ளருளுறு புழைக்கை தண்கட கயமுக மிகவுள'
   'பஞ்சபாதக முறுபிறை யெயிறெரி குஞ்சிகூர்விட மதர்விழி பிலவக'
   'கூராவன் பிற்சோராநின் றக்கோயாநின் றுட்குலையாதே கோடார்செம் பொற்றோளா'

அவர் சொல்லச் சொல்ல உடம்பெல்லாம் துடிக்கறது. முகத்துல உலை கொதிக்கற மாதிரி இருக்கு. கொதிக்கற எண்ணைச்சட்டில தண்ணி பட்டுத் தெளிக்கற மாதிரி, வேர்வை அவர் முகத்துல பரபரனு பொறிக்கறது. பக்கத்துல இருந்தவாள்ளாம் பாத்துட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போனா. அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னு முருகனைப் பாத்துண்டே, சப்தமில்லாம, அக்கம்பக்கத்துல யாரையும் கவனிக்காம, திரும்பத் திரும்பத் திருப்புகழ் சொன்னார்.

எத்தனை நேரம் ஆச்சுனு தெரியலை, ராமலிங்கத்துக்கு உணர்ச்சி வந்து பாத்தப்போ யாருமே இல்லே. மேல்சட்டையெல்லாம் வேத்துக் கொட்டி தெப்பமா இருக்கு. சுத்துமுத்தும் பாத்தார். சன்னதி கூட கதவடச்சுட்டுப் போயாச்சு. அவர் பக்கத்துல தரைல ஒரு விபூதிப் பொட்டலத்தை வச்சுட்டுப் போயிருந்தார் குருக்கள். அதை எடுத்துப் பைல போட்டுண்டார். தெருவுல இறங்கி நடந்தார். ரொம்ப இருட்டிடுத்து. 'பன்னண்டு மணியிருக்கும் போலருக்கே'னு நெனச்சுண்டே நடந்து வரச்சே, எதிர்க்க டாஸ்மாக் தெருலந்து தள்ளாடிண்டே வந்த சுலைமானைப் பாத்தார்.

"என்ன சுலைமான்? இப்படிப் போட்டிருக்கே? நாளைக்கு பொண்ணு கல்யாணம்.. விருந்தாளியெல்லாம் இருப்பாங்க.. நீ என்ன பாய் இப்படி?"

ராமலிங்கத்தை உத்துப் பாத்தார் சுலைமான். அடையாளம் தெரிஞ்ச உடனே,"ராம்சாயிபு"னு அவர் கையைப் பிடிச்சுண்டு அழுதார். "ராம்சாயிபு. ஆலியா யாரோ ஒரு சிலுவைக்காரனோட ஓடிப்போயிட்டா"னுட்டு ஒரேயடியா அழுதார். நடுத்தெருவுல குந்திண்டு தலைல அடிச்சுண்டு அழுதார்.

"எழுந்திரு பாய். என்ன ஆச்சு? வா என்னோட. சித்தே நிதானமா நட பாய்"னுட்டு சுலைமானைக் கைத்தாங்கலாப் பிடிச்சுண்டு நடந்தார் ராமலிங்கம்.

"நைட்டு சாப்பிட வரலியே பொண்ணுனு உள்ளே போனா, ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப்போயிட்டா ராம்சாயிபு. திருச்சில யாரையோ உயிரா காதலிக்குதாம். இந்த நிக்காஹ்ல விருப்பம் இல்லேனு ஓடிப் போயிடுச்சு. நேரா போலீஸ்ல போய் அந்தப் பையனும் பொண்ணும் பாதுகாப்பு தேடிக்கிட்டாங்க"னு கதை கதையா சொன்னார் சுலைமான்.

"தப்பா நெனக்காத பாய். இந்த நாள் குழந்தைகள் இப்படித்தான். அவா மனசுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்க வேண்டியது தான் பெரியவங்க நம்ம பொறுப்பு. என்ன ஆனாலும் எல்லாம் நல்லத்துக்குத்தான்"னார் ராமலிங்கம்.

சுலைமானுக்கு இன்னும் துக்கம் ஏறிடுத்து. "அதெப்படி ராம்சாயிபு? அதெல்லாம் சொல்றதுக்கு சரி. யாரை வேணா கட்டிக்கனு விட்டா, நாளைக்கு அவங்க குழந்தைங்க கொழம்பிப் போய் வளருவாங்க, அதுக்கு யார் பொறுப்பு? ஒரு கலாசாரம் இல்லாமலே வளருமே அடுத்த தலைமுறை? பிள்ளைங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துகிட்ட நாமதானே அதுக்குப் பொறுப்பு? ஜாதிமத பேதம் இல்லாம கருணை காட்டலாம்; கல்யாணம் கட்ட முடியாது. கல்யாணமும் கருமாதியும் மட்டும் ஜாதிக்குள்ளதான் முடிக்கணும். எல்லாம் நல்லதுக்குத்தான்னு விட்டா நல்லதுன்னே எதுவுமில்லாமப் போயிரும்"

ராமலிங்கம் ஒண்ணும் சொல்லாம, "சரி, பாய். என் வீடு வந்தாச்சு. பேசாம ராத்திரி இங்க படு. காலம்பற எழுந்து போயிக்கலாம். நிக்கக்கூட முடியாம குடிச்சிருக்கியே பாய்?"

கதவைத் தொறந்து ரேழி நாற்காலியை இழுத்து போட்டார். "உக்காரு பாய்"னு சொல்லி அவரை ஒக்காரச் சொன்னார். மூலைல ஜமுக்காளம் விரிச்சு ஒரு தலைகாணியைத் தட்டிப் போட்டார். "படுத்து நல்லாத் தூங்கு பாய், காலைல எழுப்பறேன்"னு அவரை மொள்ளப் படுக்க வச்சார். "என்னோட போர்வை"னு சொல்லி ஒரு போர்வையை எடுத்துப் போத்தினார். சுலைமான் ரொம்ப நன்றியோட தலையாட்டிண்டே படுத்துண்டார். "நானும் படுக்க வேண்டியது தான். சட்டையைக் கழட்டிட்டு வரேன்"னுட்டு பைல இருந்த விபூதிப் பொட்டலத்தைப் பிரிச்சார். சுலைமான் கிட்டே நீட்டினார். "இட்டுக்கோ பாய். நிம்மதியைத் தேடறவா அத்தனை பேருக்கும் ஜாதி கிடையாது"னார். மனசுக்குள்ளே நாம எல்லாருமே ஒண்ணு தானே? சுலைமானும் முருகன் கோவில் விபூதியை லேசா இட்டுண்டு, "நீங்களும் படுங்க ராம்சாயிபு"னுட்டுப் போர்வையை தலை வரைக்கும் இழுத்துப் போத்திண்டார்.

ராமலிங்கம் சட்டையைக் கழட்டினாலும் கசகசன்னுத்து. ஒரு குளியல் போட்டா எதமா இருக்கும்னு தோணித்து. கிணத்தடிலே சாயந்திரம் பிடிச்சு வச்ச தண்ணி இருந்தது ஞாபகம் வந்து கொல்லப்புறம் போனார். நன்னா பச்சத் தண்ணி ஸ்னானம் பண்ணிட்டு வேஷ்டி துண்டு மாத்திண்டு, சமையல்கட்டுல வெட்டிவேர் வாசனையோட பானை ஜலம் ஒரு டம்ளர் குடிச்சார். ஒரு பாய் தலைகாணி எடுக்கறச்சே பாத்தா சுலைமான் அசந்து தூங்கின மாதிரி இருந்துது. ஆனா, பக்கத்துல யாரோ இருக்காளே?

கிட்டே வந்து பாத்து, திடுக்கிட்டுப் போனார். சதாசிவம்! பக்கத்துல தூங்கறார்னு நெனச்ச சுலைமான் செத்துக் கிடந்தார்!

"சண்டாளப்பாவி!"னு கூச்சல் போட்டார் ராமலிங்கம். "என்ன கார்யம்டா பண்ணினே? பாய் என்னடா பாவம் பண்ணினார்? துஷ்டா! துஷ்டா!"னு சதாசிவத்தை மாத்தி மாத்தி மண்டைல குத்தினார். "நன்னாருப்பியா? நன்னாருப்பியா?"னுட்டு தன்னோட முகத்துலயும் அடிச்சுண்டு அழுதார்.

அடியெல்லாம் வாங்கிண்டு சதாசிவம் ராமலிங்கத்தைப் பார்த்தார். ரொம்ப நெக்குறுகிப் போய், "ராமா! நீதான் தூங்கறேனு நெனச்சு இந்தக் கொலையப் பண்ணிட்டேண்டா. நான் மகாபாவிடா! என்னைக் கொன்னு போட்டுறு ராமா!"னு குரலே வராம அழுதார்.

ராமலிங்கத்துக்கோ கோவம் தீரவே இல்லை. "நோக்கு விமோசனமே கிடையாதுடா. ஒன்னோட பாவங்களை கரைக்க ஆகாசதுலந்து பாகீரதி வந்தாலும் போறாதுடா. உன்னைத் தொட்டு அடிச்ச பாவம் எனக்கும் வந்துடுத்து. துன்மார்க்க ராஜான்னா நீ? தூ! உன்னைக் கொன்னா கொலைக்கே அடுக்காதுடா"

"அதை விட மோசமா சொல்லு, திட்டுரா. என்னைக் கொன்னுடுறா. ராமா. என்னைக் கொன்னுடுறா"னுட்டு தன் கழுத்தைத் தானே நெறிச்சுண்டார். முழி பிதுங்க சதாசிவம் தானே நெறிச்சுண்டாலும், ராமலிங்கம் பாத்துண்டிருந்தாரே தவிர ஒண்ணும் பண்ணலை. சட்னு சதாசிவமே கையை எடுத்துட்டு, "நான் கோழைடா. நேக்கு ட்ராமா போடத்தான் வரும்"னு ராமலிங்கம் கால்ல விழுந்தார்.

என்னதான் இருந்தாலும் ஆப்தனில்லையா? ராமலிங்கம் மெள்ள அவனைச் சமாதானம் பண்ணினார். சதாசிவம் களிம்பைத் திருப்பிக் கொடுத்தார். ராமலிங்கத்தைப் பாத்து, "நேக்கு வெக்கமே கிடையாதுடா ராமா. கொலை பண்ணிட்டு உடனே களிம்பை எடுத்துத் தடவிண்டேன் பாத்துக்கோ. ஒரு எபக்டும் இல்லே. அப்புறம்தான் போர்வையை எடுத்துட்டுப் பாத்தேன். சுலைமான்! இந்தக் களிம்பு இப்போ எனக்கு வேலை செய்யலேடா. அதுவும் நல்லதுக்குத்தான். என்னை மாதிரி மிருகமெல்லாம் இப்படிக் களிம்பு தடவித் தப்பிச்சுடக் கூடாதுடா"னு அழுதார்.

"போறுண்டா களிம்பு விவகாரம். விடிஞ்சதும் கோவில்ல சேத்துடறேன். சதா, உன்னை இந்தப் பாவ மார்க்கத்துல அனுப்பினது நான்தான்டா. ஒண்ணும் அறியாத சுலைமான் சாகறதுக்கு நான் தானேடா காரணம்? அதும்லாமே நான் உன்னை விட ஒண்ணும் மோசமில்லேடா. உன்னைக் கொல்லணும்னு நானும் நெனச்சேன். ஒன்னக்காட்டிலும் துஷ்ட மிருகம் நான்தான்டா"னார் ராமலிங்கம்.

ரெண்டு பேரும் ஒத்தரை ஒத்தர் கட்டிண்டு அழுதா. தரைல களிம்புக் குப்பி தேமேனு கெடந்துது.

இதி ததாஸ்துக் களிம்பு புராணம்.

என்ன சொல்றேள் ஆர்வீஎஸ்ணா? மிச்சக் கதையை சொல்லாம டபாய்க்கறேனா? என்னமோ பாஷையெல்லாம் பேசறேள், நன்னாத்தான் இருக்கு. ம்ம்..பகவான் சங்கல்பம், சுருக்கமாச் சொல்லிடறேன்.

ராமலிங்கம் போலீசை வரவழைச்சார்.

ஆக வேண்டிய கார்யம் எல்லாம் நடந்துது. ரெண்டு பேரும் சேத்த பணத்தை எல்லாம் அனாதை ஆசிரமத்துக்கும் முருகன் கோவிலுக்கும் கொடுத்தார்.

சதாசிவம் கேஸ் நடந்திண்டுருக்கச்சே அப்பப்போ போய் ஆப்தனைப் பாத்துட்டு வந்தார். சதாசிவம் ஊமையாட்டம் இருந்தார். வாய் திறந்து பேசவேயில்லை. இப்பல்லாம் டிஎன்ஏனு என்னென்னவோ வச்சிருக்காளே, அதனால எல்லாத்தையும் நோண்ட ஆரம்பிச்சுட்டா. சதாசிவத்துக்கு ஆயுள் தண்டனை கெடைக்கும்னு சொல்றா.

ராமலிங்கம் நிலமை கொஞ்சம் வேற மாதிரி. உடம்பெல்லாம் நமநமனு பெருகி சதா அரிக்க ஆரமிச்சுடுத்து. முருகன் சன்னிதில அவாவா கொட்டற விபூதியைத் தடவினா கொஞ்சம் ஆறிப்போகும், ஆனா உடனே அரிக்க ஆரம்பிச்சுடும். எல்லாத்தையும் விட்டுட்டு முருகன் சன்னிதிக்கு வந்துண்டிருந்தார். ஆனா இப்போ அவரைப் பாத்து ஜனங்கள்ளாம் பயப்படறானுட்டு அவரை உள்ளே விடறதில்லை. அதனால, கோவில்லேந்து வரவா குடுக்கற விபூதியை கை நீட்டி வாங்கிண்டு அப்படியே பூசிண்டு திருப்புகழ் சொல்லிண்டிருக்கார். கடம்பவனேஸ்வரர் கோவில் வாசல்ல அடிக்கடி அவரை இன்னிக்கும் பாக்கலாம்.

என்ன கேட்டேள் ஸ்ரீராம்ணா? களிம்பு என்னாச்சா? ஒரு வெவரம் விடமாட்டேள் போலருக்கே?

சுலைமானோட ப்ரேதத்தையும், சதாசிவத்தையும் போலீஸ் எடுத்துண்டு போனப்புறம் ரொம்ப நாழி இடிஞ்சு போய் ஒக்காந்திருந்த ராமலிங்கம், விடிஞ்சதும் குளிச்சார். வேஷ்டி துண்டு மாத்திண்டார். களிம்பை எடுத்துண்டு போய் முருகன் சன்னிதில போட்டுட்டு வந்துடலாம்னு தொட்டு எடுத்தார் பாருங்கோ, கைல அப்படியே ஒட்டிண்டிடுத்து. பிச்சிப் பாத்தார், வீசிப் பாத்தார், வளைச்சுப் பாத்தார்..ஊஹூம்.. அப்படியே மச்சம் மாதிரி ஒட்டிண்டு குப்பி கீழே விழவே இல்லை. ஓடிப்போய் கோவில் சன்னிதில எடுத்துப் பாத்தார். குப்பி ஒட்டிண்டு வரவேயில்லை. முருகா முருகானு எத்தனை கூவினாலும் களிம்புக் குப்பி அசையக்கூட இல்லை.

ரெண்டு நாள் பாத்தார். மூணு நாள் பாத்தார். இதே கதைதான். ஆத்தை விட்டு வெளிலயே வரலை. அப்புறம் மெதுவா கழுத்துகிட்டே அரிக்க ஆரம்பிச்சுது. கை கால்னு பரவ ஆரம்பிச்சுது. மறுபடியும் முருகன் கிட்டயே ஓடினார். அங்க சிந்திக்கிடந்த விபூதில கால் பட்டதும் கொஞ்சம் இதமா இருந்தது. உடனே இடது கையால எடுத்து முகம் கை கால் கைனு வெறி வந்தாப்ல பூசிண்டார். தரைல உருண்டார்.

அப்போ கோவில்ல வைதீக கார்யமா ஒரு கோஷ்டி வந்திருந்தது. மூலவருக்கும் தாயாருக்கும் லக்ஷார்ச்சனை அபிஷேகம்னு பண்ணிண்டிருந்தா. அந்த கோஷ்டில ஒருத்தர் சுப்ரமணிய சன்னதிக்கு அகஸ்மாத்தா வந்தார். ராமலிங்கத்தை விசித்ரமா பார்த்தார். "உங்களுக்கு விபூதி வேணுமா? நான் தரேனே?"னு சொல்லிட்டு சன்னதிக்குள்ள இருந்த தட்டை எடுத்துண்டு வந்து கொடுத்தார். "அந்தக் குப்பியைக் கீழே வையுங்கோ. விபூதியை வாங்கிக்கோங்கோ"

ராமலிங்கத்துக்கு அழுகையா வந்துது. எல்லாக் கதையையும் சொன்னார். "ஐயா, எனக்கு உடம்பு அரிப்பு பரவாயில்லை. மனசு அரிப்பு இருக்கு பாருங்கோ, அந்தக் கொடுமையைத் தாங்க முடியலை. என் ஆப்த நண்பன் செஞ்ச பாவத்தை மறைச்சேன், இன்னொரு பாவத்தை செய்யத் தூண்டினேன், ஒண்ணுமே அறியாத இன்னொரு உயிர் என்னால பலியான பாவத்தையும் செஞ்சேன்... எனக்கு விமோசனமே கிடையாது.. எனக்கு அருள் பண்ணி தயவு செஞ்சு இந்தக் குப்பியை என் கைலேந்து பிடுங்கினேள்னா ரொம்ப ஒத்தாசையா இருக்கும். இது ஒட்டிண்டு இருக்கற வரைக்கும் என்னால பாவத்தை சுமந்துண்டிருக்கற மாதிரியே இருக்கு"னுட்டு அழுதார்.

வைதீகர், "முருகனை மனசுல நெனச்சுண்டு குப்பியை இங்கே வையுங்கோ"னார். ராமலிங்கமும் அவர் சொன்ன மாதிரி உண்டியல் கிட்டே குப்பியை வச்சுட்டு கையை எடுத்தார். கை மட்டும் வந்துது! ராமலிங்கத்துக்கு ஒரே சந்தோஷம். பரவசம். "ஐயா! நீங்க முருகன் தான்"னுட்டு வைதீகருக்கு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

வைதீகருக்கோ ஒண்ணும் புரியலை. "இல்லேல்லே. ஒரு பேச்சுக்காக அப்படி சொன்னேனே தவிர நீங்க வேறே. எல்லாம் முருகன் செயல்!"னுட்டு நைசா அங்கேந்து கழண்டுக்கப் பாத்தார்.

"என்னோட பாவம் போக ஒரு வழி உண்டா?"னு விடாம அவரைப் பிடிச்சுண்டார் ராமலிங்கம்.

"யாமிருக்க பயமேன்னு நின்னுண்டிருக்கான் பாருங்கோ, அவன் கிட்டே கேளுங்கோ. அவனே சூரபத்மனைக் கொன்னுட்டு பாவம் போகணும்னு இங்க வந்தவனாக்கும்"னு சொன்னார் வைதீகர்.

ராமலிங்கம் சிரிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் கீழே கிடந்த விபூதியையெல்லாம் எடுத்து எடுத்துத் தேச்சுண்டே நடக்க ஆரம்பிச்சார். வைதீகருக்கே பயம் வந்துடுத்து. அதுக்குள்ளே அவரைத் தேடிண்டு கோஷ்டிக்காரா வந்ததுனால, தம்பிரான் புண்ணியம்னு முருகனைப் பாத்து அரோகரானு கன்னத்துல போட்டுண்டார். ராமலிங்கம் இன்னும் சிரிச்சுண்டு அங்கயும் இங்கயும் நடந்துண்டிருந்தார்.

களிம்பு அங்கேயே இருக்கு. உண்டியலுக்கு முன்னாலே கண்படறாப்லயே இருக்கு. குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலுக்குப் போறவா முருகன் சன்னதிலே இன்னைக்கும் பார்க்கலாம். தைவ அனுக்ரகம் தேவைப்படறவா கண்ணுக்கு நிச்சயமா தெரியும்.

ஒடனே அப்பாதுரையாட்டம், 'அப்படின்னா களிம்பு கண்ணுக்கு தெரியாதவாளுக்கு தைவ அனுக்ரகம் தேவையில்லையா?'னு குதர்க்கமா கேக்காதீங்கோ. சபைல ஒண்ணு சொல்றேன் கேளுங்கோ. தைவ அனுக்ரகம், தைவ அனுக்ரகம்னு எல்லாரும் வாய் கிழியப் பேசறா. சொல்லுங்கோ, யாருக்கு வேணும் தைவ அனுக்ரகம்? நன்னா மூணு வேளையும் தின்னுட்டு தெனப்படிக்கு ஒரு டிரஸ், சினிமா, டிராமா, பாரின், கார், நகைனு நன்னா இருந்துண்டு, ஒரு பேஷனுக்காக.. ஒடம்புக்கு சோப்பு போடற மாதிரி.. சட்டை மாத்திக்கற மாதிரி.. ஒரு சாதாரண ஸ்மரணையில்லாத செய்கையா சாமி கும்பிடறா பாருங்கோ? அவாளுக்கு தைவ அனுக்ரகம் எதுக்கு? இருக்குற வசதியை வச்சுண்டு விவேகமா வாழ்ந்தாலே போறுமே? என்ன சொல்றேள்?

ஆனா பாருங்கோ, ஒண்ணுமே இல்லாதவா எத்தனை பேர் இருக்கா? ஒண்ணுமே இல்லாதவான்னா சாப்பாடு துணிமணியைச் சொல்லலை. வக்கே இல்லாதவா எத்தனை பேர்? எல்லாத்தையும் தொலைச்சுட்டு, நாளைக்கு பொழுது விடிஞ்சா இன்னும் புதுசா என்ன சோகம் வரப்போறதுன்னு இருக்கறவா எத்தனை பேர் இருக்கா லோகத்துல? இவாதான் தைவ அனுக்ரகம இல்லாம ஒரு க்ஷணமும் இருக்க முடியாத கூட்டம். இவாளுக்குத்தான் தைவ அனுக்ரகம் வேணும். இவாளுக்குத்தான் களிம்பு வேணும். இவா கண்ல களிம்பு நிச்சயம் படும்னு நான் சொல்றேன்.

ஒரே ஒரு விஞ்ஞாபனம். வேண்டுகோள். களிம்பை எடுத்துண்டா நல்லது நெனச்சுட்டு மறுபடியும் அங்கயே வச்சுடுங்கோ. ரேவதி மாமி அடிக்கடி சொல்ற மாதிரி எல்லாரும் நல்லாருக்கட்டும். ததாஸ்து.

"என்ன கேட்டேள் கீதா சந்தானம்? இதெல்லாம் நேக்கெப்படித் தெரியுமா?". எப்படி நறுக்னு கேக்கறா பாருங்கோ கீதா மாமி. சொல்றேன்.

வைதீகர் திரும்பிப் பாத்தார்.

"அசுவத்தாமா! எங்க போயிட்டே? ஒன்னைத் தேடிண்டு வரதுக்கே ஆள் வைக்கணும் போலருக்கு. வா, வா"னார் இன்னொரு வயசான வைதீகர். அவருக்குப் பின்னால இன்னும் ரெண்டு பேர். "வாங்கோ மாமா. எல்லாரும் காத்துண்டிருக்கா"னு வைதீகரை இழுத்துண்டு போனா. ராமலிங்கம் இன்னும் சிரிச்சுண்டே விபூதியைப் பொட்லம் மடிச்சுண்டிருந்தார்.

கதை சமாப்தம். இது அசுவத்தாமன் வாக்கு. அசத்யம் இல்லாத வாக்கு. போய்ட்டு வாங்கோ.

26 கருத்துகள்:

  1. இப்போ ஒடம்பு தேவலியா? கதைக்குள்ளே ஞானபண்டிதனை நிறைய கூப்டேளோன்னோ.. சரியாப் போய்டும் பாருங்கோ!

    கதையை நன்னாவே சொல்லியிருக்கேள்.நீதியெல்லாம் தெறிக்கறது. விஸ்தாரமா மொழக்கி சக்ரமா முடிச்சிருக்கேள். ஸ்கந்தகுரு உமக்கு ஒரு குறையும் வைக்க மாட்டான். நெரயா எழுதுங்கோ! எவ்ளோ பேர் ஆசையா படிக்கிறா.. ஆசீர்வாதம்..

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவு நேர்த்தியா கதை சொல்லிட்டு போயிட்டீங்க.
    நல்லாருக்கு இந்த மாதிரி வித்தியாசமா எழுத உங்களை விட்டா ஆளில்லை/

    பதிலளிநீக்கு
  3. அஜாமேளம், வித்தேகம் இவை இரண்டும் எனக்கு புதிய வார்த்தைகள்...

    ஆசைக்கு விலை நிம்மதி...அருமையான வார்த்தை. கஸ்மலம் கையில் ஒட்டிக்கற நீதியும் அருமை.

    அவங்க குழந்தைகள் குழம்பிப் போய் வளருவாங்க...கருணை காட்டலாம்...கல்யாணம் கட்டக் கூடாது....ப்ராக்டிகல் அப்பாதுரை பாய்!

    அஜாமேளத்தை விடுங்க....நீங்க அதகளம் பண்ணியிருக்கீங்க...கதையின் நடுவிலேயே 'தாமச' காரணம் சொல்லி, கேட்பவர்களுக்கு பதில் சொல்லி 'எங்களின் கதை இது உங்களின் கதை' என்று முடித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. அதீதம் படித்தேன். அதீதத்தில் எதாவது எழுத வேண்டும் என்ற சிந்தனையில் அந்த அதீதம் என்ற தலைப்பையே களமாக எடுத்துக் கொண்டீர்களோ என்று தோன்றுகிறது. வித்தியாசமான கதை

    பதிலளிநீக்கு
  5. விளையாட்டா எழுதினாலும் இது ஓர் நச் கதை .... எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமல் ''ததாஸ்து களிம்பை '' தேடும் உலகம் .. ...கடல் தாண்டி போய் சாதா தமிழ் பேச்சுக்கே வழியில்லாத சுழலில் , பிறளாமல் முழு அய்யர் பாஷை தமிழில் கதை ஓரு பெரிய ஆச்சர்யம்....

    பதிலளிநீக்கு
  6. அதீதத்தில் ... யார் சிரித்தால்...படித்தேன் ... குறத்தி, வக்கீல் வேஷம் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை ...
    (அங்கு ஏனோ கமண்ட்ட முடியவில்லை )

    பதிலளிநீக்கு
  7. அதென்ன அதீதம்? எப்படிப் போவது?

    பதிலளிநீக்கு
  8. வருக மோகன்ஜி (வடை வென்ற சோழன்?), சிவகுமாரன், ஸ்ரீராம், பத்மநாபன்,...

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம், அஜாமேளன் கதை பாகவதத்தில் வருகிறது. வீட்டில் 'அஜாமேளம்' அடிக்கடி விழுந்த திட்டு (?). செய்ய வேண்டியதைச் செய்யாமல் வேறு எதையாவது செய்து கொண்டிருப்பவர் அஜாமேளர்.
    இப்ப என்னை எடுத்துக்குங்க. ராத்திரி ஒண்ணரையாகப் போவுது - தூங்காம ப்ளாக் மேஞ்சிட்டிருக்கேன்.

    (க்க்க்க்ம்ம்ம்.. அசல் அஜாமேளன் செய்தது விவகாரமான விஷயம். பாருங்க, இது மாதிரி ஆளுங்களுக்கு சுலபமா களிம்பு கிடைச்சுடுது.)

    பதிலளிநீக்கு
  10. அதீதம் படித்ததற்கு நன்றி ஸ்ரீராம், பத்மநாபன். கமெந்ட் போட முடியவில்லை என்று முதலில் meenakshi சொன்னார்.

    சிவகுமாரன், அதீதம்.காம் இணைய மாதமிருமுறை. பெரிய மனதுடன் நான் எழுதுவதையும் வெளியிடுகிறார்கள். என் கதையின் சுட்டியைக் களிம்பில் இணைத்திருக்கிறேன்.

    அநியாயத்துக்கு மெதுவாக ஏறும் தளம். ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்படியோ? தளத்தில் எதையும் தேடிப் படிக்க சிரமமில்லாமலும் செய்திருக்கலாம். (சொல்வது சுலபம் என்பதால் நான் கப்சிப்).

    பதிலளிநீக்கு
  11. ஆ! ஸ்ரீராம், அது சுலைமான் சொன்னது. அப்பாதுரைக்கு மதத்தில் துளிக்கூட நம்பிக்கை நஹி.

    சிக்கலான விவாதத்தை நளினமாக (லாவகமாக?) துவக்கும் வித்தையில் உங்களுக்கு டாக்டர் பட்டம் பெறத் தகுதி உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறீர்கள்.

    உறவின் வேர்களில் ஜாதி மதத்தை விட மொழியின் தாக்கம் அதிகம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் கதை சொல்லியிருக்கும் விதம், கையாண்ட வார்த்தைகள், நடு நடுவே சொஜ்ஜியில் தூவிய முந்திரிப் பருப்பு மாதிரி நீங்கள் கூறியுள்ள பல கருத்துக்களும் அருமை. கதை? கோடம்பாக்கம் ரகம்.

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் கதை சொல்லியிருக்கும் விதம், கையாண்ட வார்த்தைகள், நடு நடுவே சொஜ்ஜியில் தூவிய முந்திரிப் பருப்பு மாதிரி நீங்கள் கூறியுள்ள பல கருத்துக்களும் அருமை. கதை? கோடம்பாக்கம் ரகம்.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. கண் வலி எப்படியிருக்கு? take care.

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. அப்பாஜி....உண்மையாவே எனக்கு என்னமோ சக்கரம் சுழலுமாப்போல இருக்கு.மெல்ல மெல்ல வாசிச்சும் பாத்தனே.ம்ஹும்...சரி ரிலாக்ஸ்.
    நல்ல பழைய பாட்டுப்போடுங்கோ அடுத்த பதிவில !

    பதிலளிநீக்கு
  18. //"பத்மநாபன். கமெந்ட் போட முடியவில்லை என்று முதலில் meenakshi சொன்னார்"/

    அங்கு மீனாக்ஷி கமெண்ட் பார்த்தேன். என் கமெண்ட்டும் இருக்கே...என் கண்ணுக்கு மட்டும் தெரிகிறதோ? அதற்கு பதில் அங்கு வருமா இங்கு வருமா?!!!

    பதிலளிநீக்கு
  19. அண்ணா விட்டுறுங்கன்னா தெரியாம படிச்சிட்டேன்.. எனக்கு சத்தியமா இதை பத்தி ஒன்னும் தெரியாதுன்னா

    பதிலளிநீக்கு
  20. கலக்கல் கதாகாலட்சேபம்! படு சுத்தமான பிராமண பாஷையில் கதை எழுதி இருக்கும் விதம் மிகவும் அருமை. பாகவதர்கள் போல கதைக்குள் கதையாய் கலந்து கட்டி சுவரசியாமாய் எழுதி அசத்தி விட்டீர்கள். மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  21. கதையை முழுவதும் படித்து முடித்து இரண்டு நாளாகிறது
    இன்றைக்கு மீண்டும் பதிவுக்கு வந்து
    உன்னை ஒன்று கேட்பேன் பாடலைக்கூட
    இரண்டுமுறை கேட்டாகிவிட்டது
    ஆனாலும் கதையின் ஊடே சாதாரணமாக சொல்லிப் போன
    ஆசைக்கு விலை நிமமதி என்கிற வார்த்தை மட்டும்
    திரும்பத் திரும்பத் கேட்டுக் கொண்டே இருக்கிறது
    தரமான பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. ரொம்ப நாளைக்கப்றம் blog பக்கம் வர இப்போ தான் time கிடைச்சுது. நம்ப களிம்பு கதை முடிவு என்னாச்சு-ன்னு தேடி பிடிச்சு ஒரு வழியா படிச்சுட்டேன். கதைய பத்தி அழகா கமெண்ட் போடலாம்-னு comments section கு வந்து படிச்சு பாத்தா- இங்க வேறொரு விஷயம் என்னை ரொம்ப attract பண்ணிடுத்து.

    "உறவின் வேர்களில் ஜாதி மதத்தை விட மொழியின் தாக்கம் அதிகம் என்று நினைக்கிறேன்"... Beautiful.

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஹேமா, Sriram, meenakshi, Ramani, Matangi Mawley, ...

    எட்டணா கதை ரெண்டு ரூபா பிரசாரம் - இதான் கதாகாலட்சேப formula. சும்மா முயற்சி பண்ணலாம்னு தொடங்கினது.. அடுத்த முயற்சில கொஞ்சம் புத்திமதியைக் குறைச்சுக்கிட்டா போச்சு. (ஆ! மறுபடியுமா?)

    படிச்ச அத்தனை பேருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. மிசஸ் ஒபாமாவை நைசா இழுத்து உங்க ஒபாமா வெறுப்பை இந்தக் கதையிலும் காண்பிச்சுட்டீங்களா? ha ha!

    பதிலளிநீக்கு
  25. பழகிப்போச்சு, ராமசுப்ரமணியன்.

    பதிலளிநீக்கு